• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சக்கரவியூகம் 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
9​
அதிகாரம் தான் கொண்டாடப்படுகின்றது!
அதிகாரம் தான் போற்றப்படுகின்றது!
அதிகாரம் தான் தூற்றவும் படுகின்றது!
அதிகாரம் தான் ரகசியங்களை ரகசியங்களாகவே வைக்கிறது!
அதிகாரம் என்றுமே எளியவருக்கானது இல்லை என்று எப்போதுமே உறுதிப்படுத்துகின்றது!


துப்பாக்கியைப் பார்த்தவளுக்கு கைகள் நடுங்கியது... தீபாவளிக்கு வெடிக்க உபயோகப்படும் துப்பாக்கி அல்ல... உண்மையானது என்பதைக் கையில் எடுத்த மாத்திரத்திலேயே உணர்ந்தாள்... அவ்வளவு கனமாக இருந்தது அந்தப் பிஸ்டல்...
கையில் வைத்துக் கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் உள்ளுக்குள் அதிர்ந்த மனது இன்னமும் நடுக்கத்திலேயே இருந்தது...
பிஸ்டல் வைத்திருக்கும் அளவு இவனுக்கு என்ன தேவை இருக்கிறது?
அவனது பாதுகாப்புக்காகவா?
ஒரு டிரைவர் அவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருக்க முடியாது என்பதைத் திண்மையாக நம்பியது மனது...
ஒரு வேளை இவன் திருடனாகவோ கொள்ளைக்காரனாகவோ இல்லை பெண்களை...
“ஹக்...”
நினைக்கும் போதே புரையேறிக் கண்கள் நிலைக்குத்தியது... அவளது நடுக்கம் வெளிப்படையாகத் தெரிய... சப்தம் இல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எட்டிப் பார்த்தவன் பதட்டமானான்!
கையில் புகைந்துக் கொண்டிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்துவிட்டு, கையில் பிஸ்டலை வைத்துக் கொண்டு திருப்பித் திருப்பிக் கண்களில் பீதியோடு பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன், அவசரமாக அவள் புறமாக வந்தான்...
“தமிழ்... அதை அங்கேயே வைங்க...” தன் பின்னாலிருந்து வந்த குரலைக் கண்டுகொள்ளாமல் நிமிர்ந்து நின்று அவனைப் பார்த்து,
“இது எதற்கு உங்களுக்கு?” கூர்மையாக அவனைப் பார்த்துக்கேட்டாள்...
“தேவையில்லாத விஷயம் தமிழ்... இது ஒன்றும் விளையாட்டுப்பொருள் இல்லை...” அவனது வார்த்தைகளில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு...
“இது எதற்கு உங்களுக்கு ஸ்ரீதர்?” மீண்டும் அழுத்தமாக அவள் கேட்க...
“எதற்கோ? உங்களுக்கு இது தேவை இல்லாத விஷயம்...” அவளைக் காட்டிலும் அழுத்தமாக அவன் கூற...
“நீங்க நல்லவர் தான்னு நான் எப்படி நம்பறது?” அவளது கண்களில் ஏதோவொரு நிராசை... இருளில் அது மறைந்துவிட...
“நான் நல்லவனா கெட்டவனான்னு இப்ப உங்களுக்கு ஆராய்ச்சி தேவையில்லாதது... யூ ஆர் ஜஸ்ட் அ பாசர்பை...” எரிச்சலாக அவன் கூற... அந்த வார்த்தைகள் அவளை மேலும் வெகுண்டு எழச் செய்தன...
“எப்படி எப்படி? வந்ததிலிருந்து மூன்று தடவை வழியை மாத்திட்டீங்க... இப்ப எங்க இருக்கேன்னே எனக்கே தெரியல... கார் மூவ் ஆகாதுன்னு சொல்லி நிறுத்தீட்டீங்க... இத்தனை செய்த நீங்க எப்படிப்பட்டவரா இருக்கனும்ன்னு நான் ஆராயக் கூடாதா? அதுவும் இந்தப் பிஸ்டலை பார்த்ததுக்கு அப்புறமும் உங்களை நம்ப நான் என்ன முட்டாளா...”
பேசிக்கொண்டே அவள் காரைத் தாண்டிச் செல்ல... அவளைத் தொடர்ந்து வந்தவனின் முகத்தில் தீவிரமான கோபம்!
“நீ நம்பு நம்பாமல் போ... உன்னை முதலில் கொண்டு போய் மதுரையில் இறக்கி விட்டுடறேன்... இப்ப ஒழுங்கா அந்தப் பிஸ்டலை என்கிட்ட கொடு...” ட்ரிகரை அழுத்தி விடுவாளோ என்ற பயத்தில் அவளை ஒருமையில் மிரட்டியவனைப் புருவத்தை நெறித்துப் பார்த்தாள்...
“முடியாது... இது என்கிட்ட தான் இருக்கும்... என்னுடைய பாதுகாப்புக்கு... நான் இறங்கும்போது தான் கொடுக்க முடியும்...” ஒரே வார்த்தையில் அவள் முடித்து விட... அவனது கோபம் எல்லை தாண்டிக் கொண்டிருந்தது...
‘இது என்ன அவள் வைத்துக் கொண்டு விளையாடும் விளையாட்டு பொருளா... ’ என்று கடுப்பாக நினைத்தவன்...
“இங்க பார் மா... அது லோடட் பிஸ்டல்... உன் இஷ்டத்துக்கு விளையாட முடியாது... லூசு மாதிரி பேசாதே... ஒழுங்கா என்கிட்டே கொடு...”
அவளை நோக்கி அவன் முன்னேறிக்கொண்டே இருக்க... அவள் பின்னடைந்துகொண்டிருந்தாள்... கண்களில் வெகுவான பயம்...
“நோ... முடியாது... கொடுக்கமாட்டேன்...” என்றவள் அவள் அவளை மிகவும் நெருக்கமாகச் சமீபப்பதை கண்டு, மேலும் பயந்து...
“பக்கத்தில் வராதே... வேண்டாம்...” என்றவள் அவனை நோக்கிக் குறிவைக்க முயல...
சட்டென அவளை இறுக்கமாக அணைத்தான்...
அதிர்ச்சியில் அவளது மனம் திடுக்கிட்டது...
“டேய்... என்னடா பண்ற...” என்று அவள் உடலை நெளித்து அவனிடமிருந்து விடுபட முயல... அவளது முயற்சிகள் அனைத்தையும் அவன் ஊதித் தள்ளினான்...
அவளது கைகளை இறுக்கமாகப் பற்றி அவளிடமிருந்து அந்தப் பிஸ்டலை பிடுங்க அவன் முயல... அவள் தர முடியாது என்று பிடிவாதமாக அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல... அவளது இடையை தன்னோடு இறுக வளைத்துப் பிடித்து... ஒற்றைக் கையால் அவளது கையை இறுக்கமாகப் பிடித்து அந்தப் பிஸ்டலை பிடுங்கினான்.
அந்த ஒரு நிமிடத்தில் அவளது வலு சுத்தமாகக் காணாமல் போய்விட... அவளது மனம் சோர்ந்து போனது... கண்களில் கண்ணீர் கோர்த்தது...
அப்போதுதான் இருவருமே தங்களது நிலையை உணர்ந்தனர்...
தமிழ் அவனிடமிருந்து விடுபட முயல... அவளிடமிருந்து பிஸ்டலை பிடுங்கி விட்ட விடுபட்ட உணர்வில் இருந்தவனின் முகத்தில் அவளறியாத குறும்பு புன்னகை!
“டேய் என்னை விடுடா...” அவனைத் தள்ளி விட முயன்று தோற்றவள், மரியாதையை முற்றுமாகக் கைவிட்டு கத்த... இந்நேரம் வரை அவள் ஏற்றி விட்ட கோபமும் அவளது அந்தக் கோபத்தை சீண்டி பார்க்கத் தூண்டியது...
அவளது கோப முகத்தைச் சிறு சிரிப்போடு ஏறிட்டவன்,
“என்னடி மரியாதை குறையுது?” என்று கேட்க...
“என்னது டியா? என்னடா கொழுப்பா?” கடுப்பாகக் கேட்க...
“பின்ன நீ டா ன்னா நான் டி தான் சொல்வேன்...” அலட்டாமல் அவன் கூற...
“டேய்... பண்றதையும் பண்ணிட்டு இப்ப இந்த லொள்ளு வேற பேசறியா?” அவனைத் தள்ளி விட முயன்றாலும் அவனது இரும்புப் பிடியின் முன் அவள் தோற்று கொண்டே இருக்க... அவளது அந்தக் கோபமும் ஆற்றாமையும் அவனை மேலும் சிரிக்க வைத்தது...
“ஏய்... நான் என்ன பண்ணேன்?” அதிர்வது போலக் கேட்டாலும் அவனது அந்தச் சிரிப்பு அவளது கோபத்தை தான் ஏற்றி விட்டது... இன்னமும் அவனது கைகள் அவளை விடுவிக்கவில்லை...
“பிசாசே... முதலில் என்னை விடுடா...” என்று அவனது கையைப் பிரிக்கப் பிரயத்தனப்பட்டாலும் முடிந்தால் தானே? இரும்புப்பிடியாக இருந்தது.
“இங்க பார்... நானா முதலில் உன்னை வம்பிழுத்தேன்... சும்மா இருந்த என்னை நீதான் கிளப்பி விட்ட... அதனால்...” அலட்டாமல் குறுஞ்சிரிப்போடு அவன் கூற... அவனை அதிர்ந்து பார்த்தாள்...
“அதனால்...”
அவளது அதிர்ச்சியைப் பார்த்து உதடு விரியச் சிரித்தவன்...
“அதனால்...” என்று இடைவெளி விட... அவளது இதயம் படபடவென அடித்துக் கொண்டது... அவளது அந்தத் தவிப்பை எல்லாம் பார்த்து ரசித்தவன்,
“ஒரே ஒரு சாரி கேட்டுடு... என்னை வாடாப் போடான்னு சொன்னதுக்கு...” சிரிப்பைக் கட்டுப்படுத்தி கொண்டு அவன் கூற...
“என்ன...” அவள் முறைத்த முறைப்பில் அவன் எரிந்து விடாதது ஒன்றே மிச்சம்...
“என்ன? என்ன?” ஒன்றும் அறியாதவன் போல ஸ்ரீதரன் கேட்ட கேள்வியில் அவனை உலுக்க வேண்டும் என்பது போலக் கோபம் வந்தது அவளுக்கு!
“உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? என்னை இப்படி நீ...” என்று கூற வந்து தயங்கி நிறுத்தி விட்டு...” பண்றதையும் பண்ணிட்டு நான் சாரி சொல்லனுமா? ஹவ் டேர்?”
“நான் என்ன பண்ணேன் இங்க்லீஷ் ரிவர்?” அதுவரை அவளிடம் கடைப்பிடித்து வந்த தன்மை காணாமல் போய் மேலும் அவளைக் கலாய்க்க துவங்க,
“இங்க்லீஷ் ரிவரா? கர்மம்... கர்மம்...” என்று அவள் தலையிலடித்து கொள்ள...
“பின்ன உன்னுடைய பேரை ட்ரான்ஸ்லேட் பண்ணினேன்... முடிஞ்சா நீயும் பண்ணிக்க இங்க்லீஷ்...” அவளை மேலும் கடுப்பிற்குள்ளாக்க... அவனது கழுத்தை நெரிக்க வந்தாள்...
“மறுபடியும் என் பேரைக் கொலை பண்ண நான் உன்னைக் கொலை பண்ணிடுவேன்டா...”
“நீ டா டா ன்னே பேசிட்டு இருக்க... கண்டிப்பா பனிஷ்மெண்ட் அதிகமாகத்தான் போகுது...”
“இவன் பெரிய இவன்... பனிஷ்மெண்ட் கொடுக்கறானாம்... போடா போடா...” கோபத்தில் அவனைக் கன்னாபின்னாவெனத் திட்ட வேண்டும் போல இருந்தது... அவனது புன்னகை சூழ்ந்த முகம் அவளை மேலும் கடுப்பேற்றிக்கொண்டு இருந்தது...
“சரி சரி... உனக்கு அந்தப் பனிஷ்மென்ட் வேணும்ன்னு நீயா ஆசைப்படற இங்க்லீஷ்...” என்று கள்ளச்சிரிப்போடு அவளது பின்னந்தலையை பற்றிக் கொண்டு அவனது முகத்துக்கு அருகே கொண்டு வர...
அவள் மேலும் அதிர்ந்து பார்த்தாள்...
அவனது நெஞ்சில் கைவைத்து அவனைத் தள்ளிக் கொண்டே...
“ஹய்யோ... என்னை விடுடா... உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்... தனியா சிக்கற பொண்ணுங்க கிட்ட இப்படி த்தான் பீகேவ் பண்ணுவியாடா ராஸ்கல்... ஹெல்ப்... ஹெல்ப்...” என்று கத்த... அந்த அத்துவான காட்டில் அது மீண்டும் எதிரொலித்து அவளது நெஞ்சாங்கூட்டை பதற வைத்தது...
“இப்படி மாட்டிட்டு இருக்கோம்னு தெரிந்தும் இத்தனை வாயாடுற பார்த்தியா இங்க்லீஷ்...”
“அதுக்காக உனக்குப் பயந்துக்குவேனா?” அப்போதும் விடாமல் அவனிடம் அவள் மல்லுக்கு நிற்க,
“அப்படியா பயப்படலையா?”
அவன் குறும்பாகக் கூறிக்கொண்டிருந்தாலும் அவனை மீறிய மயக்கம் அந்தக் கண்களில்... இரவும் அவளது நிலவு முகமும் அவனைத் தடுமாற வைத்துக் கொண்டிருந்தது... இத்தனை நேரம் வரைக்குமே கூட அவன் கலாய்த்து கொண்டு தான் இருந்தான்... அவளைக் கலாட்டா செய்ய வேண்டுமென்பது தான் அவனது நோக்கமும்... அதைத் தாண்டி அவன் வேறு ஒன்றும் நினைக்கவில்லை...
ஆனால் மூச்சுக் காற்று படும் தூரத்தில் இருந்த அவளது முகம் அவனை மயக்கம் கொள்ள வைத்தது... அந்த உதடுகள் அவனை முத்தமிட அழைத்தது... யாரிடமும் இப்படி நடந்து கொள்பவன் அல்ல... ஆனால் ஏதோ ஒரு வகையில் தமிழ்நதி அவனைப் பாதித்தாள்...
ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மனம் மொத்தமாக வீழ்ந்ததும் அந்தக் கணத்தில் தான்!
தன்னுடைய நிலை அறிந்தே, தன்னை விழுங்கக் காத்திருக்கும் பிரச்சனைகளின் வீரியம் அறிந்தே அவளது அந்த மீன் விழிகளின் தூண்டிலில் சிக்கினான்... தானாக!
அவனது அந்தச் சற்று நேர மயக்கமும், இளகிய கைகளும் அவளுக்குப் போதுமானதாக இருந்தது... சட்டென அடிவயிற்றில் ஒரு உதை விட... அவளது செய்கையைச் சட்டென உணர்ந்தவன் சமாளிப்பதற்காகச் சற்று தள்ளிக் கொள்ள... அந்த இடைவெளியில் அவனிடமிருந்து விடுபட்டாள்...
“அடடா... என்ன ஒரு வீரம்...” கிண்டலாக அவன் கூற...
“ஹலோ... எனக்குக் கராத்தே தெரியும்...” கெத்தாக அவள் தள்ளி நின்று கொண்டு கூற...
“உனக்குக் கராத்தே தெரியும்... கராத்தேவுக்கு உன்னைத் தெரியுமா?” சிரிக்காமல் அவளைக் கிண்டலடித்தவனை முறைத்தாள்...
“போடா...” என்று எரிச்சலும் கோபமுமாகக் கூறியவள் தீவிரமாக நடக்கத் துவங்க...
“திரும்பத் திரும்பப் போடான்னு சொல்ற... வேண்டாம்டி...” என்று வேகமாக நடந்தவளின் அருகில் செல்ல... அவசரமாக அவள் வேக நடையிட்டாள்...
“இங்கிலீஷ்... என்ன இப்படியே சோழவந்தானுக்கு நடந்தே போகப் போறியா?”
அவளது கையைப் பற்றி இழுத்து தன்னோடு வைத்துக் கொண்டு அவன் கேட்க... கையை உதறிவிட்டு அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் நடந்தாள்... உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது...
தனியாக இந்த வில்லனிடம் சிக்கிவிட்ட துயரத்தில் தவித்தது அவளது மனம்... இவன் எப்படிப்பட்டவன் என்று தெரியவில்லையே... ஒரு நேரம் கிண்டலாகப் பேசுகிறான், ஒரு நேரத்தில் அறிவார்த்தமாகப் பேசுகிறான்... எதுதான் அவனது உண்மையான முகம் என்றே தெரியவில்லையே என்று குழம்பினாள்...
எப்படி இருந்தாலும் தனியாக இருக்கும் பெண்ணிடம் இந்த அளவுக்கு வம்பிழுப்பவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்?
கேள்வி கேட்டது அவளது மனம்!
இந்தக் குழப்பங்களால் அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியவில்லை...
நடந்தால் எதாவது ஒரு வாகனம் கண்ணில் பட்டுவிடாதா? அல்லது மக்கள் நடமாட்டம் சூழ்ந்த இடமாவது தென்பட்டு விடாதா என்று தான் அவள் நடக்க ஆரம்பித்ததே...
ஆனால் அவளுடனே அவனும் சேர்ந்து கொள்ள... எரிச்சலாக இருந்தது அவளுக்கு!
ஆனால் அவனோ சற்றும் கவலைப்படாமல் அவளிடம் மீண்டும் மீண்டும் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தான்...
கோபமாக அவன் புறம் திரும்பி...
“நான் சோழவந்தான் போறேன்... எங்கயோ போறேன்... அது என்னுடைய விருப்பம்... அதைப் பற்றி நீங்கப் பேச வேண்டியது இல்லை... உங்க வேலையைப் பாருங்க...” பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு நடக்க...
“சரி... உன்னுடைய விருப்பம்...” என்று தோளைக் குலுக்கி கொண்டாலும் அவளோடே நடந்தான்... பின்னால் இருந்த காரை ரிமோட் கொண்டு லாக் செய்து விட்டு!
“நீங்க எதற்கு என்னோடு வர்றீங்க?” கோபமாக அவள் கேட்க... அவனோ உள்ளுக்குள் சிரிப்பை மறைத்தபடி...
“இல்ல... இங்கிலீஷ்... எனக்கு அங்க தனியா இருக்கப் பயமா இருக்கு.. தயவுசெய்து என்னையும் உன்னோடு கூட்டிட்டு போயேன்... மதுரை வரைக்கும்...” சிரிக்காமல் அவன் கூற... திரும்பி நின்று அவனைப் பார்த்து முறைத்தாள்...
“என்ன விளையாடுறீங்களா?” என்று முறைக்க...
“ச்சே... இந்த நன்றி கெட்ட உலகத்தில் ஒருத்தரும் உதவ மாட்டேங்கறாங்களே...” சப்தமாக அவன் புலம்ப... அவனை முறைத்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்...
அந்த இருண்ட சூழ்நிலை அவனது மனதில் எச்சரிக்கை மணியை அடித்தது...
மலைப்பகுதி வேறு ஆரம்பித்து இருந்தபடியால் சாலையை தவிர இருபுறமும் பெரிய பள்ளமாக மலையின் ஆரம்பமாக இருந்தது... அடர்த்தியாகச் சூழ்ந்திருந்த மரங்கள் அந்த இடத்தை அமானுஷ்யமாக்கிக் கொண்டிருந்தன...
இந்த இடமே சரியில்லாதது போலத் தோன்ற... டீசல் இருக்கும் வரை மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு ஓட்டிச் சென்று விடலாம் என்று தோன்றியது...
இவளோ மலையேறி விட்டாளே... எப்படிக் கீழிறக்குவது என்று அவனுக்குப் புரியவில்லை...
“சரி சரி... இனிமே நான் உங்கிட்ட பேசலை... வா தமிழ் காருக்கு போகலாம்... ஏதாவது அனிமல்ஸ் வந்தா டேஞ்சர்...” என்று அவளது தோளை பற்றி அவளை அழைக்க... ஒன்றும் பேசாமல் அவன் பற்றியிருந்த தோளைத் தலைகுனிந்து உறுத்து பார்த்தாள்...
அவளது பார்வை அவனைத் தள்ளி நிற்கச் சொன்னது...
அதன் அர்த்தத்தை உணர்ந்தவன் அவனது கையை விலக்க,
“சரி... இனிமே உன்னை டச் பண்ணவே மாட்டேன்...” என்று உறுதியளிக்க... அவனைப் பார்த்து முறைத்து விட்டு மீண்டும் அவள் போக முயன்றாள்...
“இட் வாஸ் ஜஸ்ட் அ ஃபன் பேபி... ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்... ஐ வோன்ட் புல் யுவர் லெக்ஸ் ஹியர் ஆப்டர்... ஐ ப்ராமிஸ்... ப்ளீஸ்... திஸ் பிளேஸ் இஸ் நாட் அ சேபர் ஒன்...” என்று அவளது கையை இழுக்க...
“ஃபன்... வாட் டூ யூ மீன் பை இட்? ஹா... மிஸ்பிஹேவிங் வித் அ கேர்ள்... இஸ் இட் அ ஃபன் பார் யூ?” கண்ணீர் கண்களில் சூழ்ந்து கொண்டு விழவா எழவா என்று கேட்டு கொண்டிருக்க... அவள் கேட்ட தொனியில் அவனது மனம் உருகித்தான் போனது...
“சரி... நான் தான் சொல்லிட்டேன்ல... இனிமே உன்னை டச் பண்ண மாட்டேன்...” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே ஒரு வாகனம் பின்னால் வரும் சப்தம் கேட்க... இருவரும் ஆர்வமாகத் திரும்பினர்...
அது ஒரு குவாலிஸ் வண்டி... அதிவேகமாக வந்து கொண்டிருந்தது...
எப்படியாவது அதை நிறுத்திவிட்டால் இவனிடமிருந்து தப்பி விடலாம் என்று வேகமாகக் கணக்கு போட்டவள்... அந்த வண்டிக்காக கை காட்டினாள்...
அதுவோ வேகத்தைக் குறைக்காமல் அவர்கள் மேல் மோதுவது போல வரவே... சட்டென்று அவளை இழுத்து இறுக்கமாக தன்னோடு அணைத்துக் கொண்டு சற்று தள்ளி நின்றான்...
சற்று தூரத்தில் நின்ற வாகனத்திலிருந்து இறங்கினர் இருவரும்!
ஸ்ரீதரனின் மனதில் வெகு வேகமாக எச்சரிக்கை மணியடித்தது!
தமிழை விடுவித்தவனின் கைகள் அனிச்சையாக பிஸ்டலின் லாக்கை விடுவித்தது...
குவாலிஸிலிருந்து இறங்கியவன் ஸ்ரீதரனை நோக்கிச் சுட... அருகில் அவளிருப்பதை நொடியில் கணக்கிட்டவன் அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த பள்ளத்தில் சரிந்தான்...
அனைத்தும் நிமிடத்தில் நடந்து விட... விழுந்த தமிழ் வலி தாங்காமல் அம்மாவெனக் கத்த வாயெடுக்க...
ஸ்ரீதரன் அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவளது வாயை மூடினான்... குண்டு அருகில் இருந்த மரத்தில் பட்டு தெறித்து விழுந்தது...
அவனது கண்களில் மிகுந்த எச்சரிக்கை... கத்தாதே என்பது போல அவன் முணுமுணுக்க... அவளோ ஒன்றுமே புரியாமல் உடல் நடுங்க அவனைப் பார்த்தாள்...
சுட்டவன் மீண்டும் அவர்களை நோக்கிச் சுட... உடன் இன்னொருவனும் சேர்ந்து கொண்டான்...
துப்பாக்கி ரவைகள் அருகில் தெறித்து விழுந்து கொண்டிருந்தது...
ஒவ்வொரு முறை அவர்கள் சுடும் போதும் தமிழின் உடல் தூக்கி வாரிப் போட்டு கொண்டிருந்தது அதிர்வு தாங்காமல்!
“காதை மூடிக்க தமிழ்...”
“ஏன்?”
“ப்ச்... எல்லத்துக்கும் கேள்வி கேட்காத... காதை மூடு... இல்லைன்னா” எரிச்சலாக அவன் கூறியது வேலை செய்ய மறுபேச்சு பேசாமல் காதையும் கண்ணையும் கூட இறுக்கமாக மூடிக் கொண்டு மறைந்து அமர்ந்து கொண்டாள்...
பள்ளத்தில் இருந்து அவன் குறிபார்க்க... அதை அறியாமல் அவர்கள் இருளுக்குள் அவனைத் தேட... ஸ்ரீதரனின் குறி தப்பாமல் இருவரின் கையிலும் காலிலும் துளைத்தது.
“அம்மே...” என்றபடி அவர்கள் விழ... ஸ்ரீதரன் பள்ளத்திலிருந்து எழுந்து அவர்களை நோக்கி ஓடினான்...
எப்படியும் அவர்களை கையும் களவுமாகப் பிடித்து விட வேண்டுமென்று...
முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது!
அவன் கையில் துப்பாக்கியோடு வருவதைக் கண்டவர்கள் எழுந்து, விட்டால் போதுமென்று குவாலிஸில் ஏறித் தலைதெறிக்க பறந்தனர்...
“ஷிட்...” நிலத்தை உதைத்தான்...
தலையை அழுத்தமாகக் கோதி கொண்டவனைப் பார்க்கும் போது தமிழின் மனம் நடுங்கியது...
“தமிழ்...” அதே அழுத்தத்தோடு அவன் அழைக்க... மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக அவள் நடுங்கினாள்... நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கியிருக்க, முகத்தில் பதட்டத்தின் உச்சம்.
கண்முன்னே அவனது ருத்ர தாண்டவத்தைத்தான் பார்த்து இருந்தாளே... எதுவுமே அறியாத பிள்ளை போல இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்த ஸ்ரீதரன் பொய்யா?
இவன் யார்?
அவளது நெஞ்சம் நின்று விடும் போலத்தான் இருந்தது...
அவள் புறம் திரும்பி...
“போய் சீக்கிரம் கார்ல ஏறு...”
அவள் சற்று தயங்கிக் கொண்டே வர...
“சீக்கிரம் ஏறு... திரும்ப அவனுங்க இன்னும் நாலு பேரை கூட்டிட்டு வர்ற வரைக்கும் இங்கயே இருக்கனுமா?” கோபமாக அவன் கேட்க... அவள் திடுக்கிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்... உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது... அவ்வப்போது தூக்கி வாரிப் போட்டது.
கார் எடுத்தவுடனே சீறிக்கொண்டு பறந்தது... கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்...
அவன் டீசல் இல்லையென்று நிறுத்தியது எல்லாம் நினைவு இருந்தாலும் அவனிடம் வாய்விட்டுக் கேட்க பயமாக இருந்தது... அவனது முகத்தில் அவ்வளவு ரவுத்திரம்...
எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாக இருந்தானோ அதற்கு மாறாக அவனில் இந்த வன்முறையைக் கண்டது அவளுக்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது...
அவனது ஐபோனில் சுத்தமாக டவர் இல்லாததை பார்த்தவன்...
“ஷிட்... தெண்டம்... இந்த நெட்வொர்க் வேற...” கடுப்படித்து விட்டு...
“உன்னுடைய செல்லுல டவர் இருக்கா? இங்க கொடு...” அவளைப் பார்த்து கடினமாகக் கேட்க... அவள் எதையும் பேசாமல் சட்டெனச் செல்லை எடுத்து நீட்டினாள்...
அதிலும் நெட்வொர்க் சுத்தமாக இல்லாமல் இருக்க...
“ச்சை...” என்று கோபமாக அந்தச் கைப்பேசியை தூக்கி போடப்போக...
“ஐயோ... என் செல்...” பதறியபடி அவனிடமிருந்து அவசரமாக வாங்கினாள்...
“இப்ப கூட உனக்கு செல்பி எடுக்கணுமா?” கோபமாக அவன் கேட்க...
“ம்ம்ம்... லோகாம்பா என்னை வெஷம் வெச்சு கொன்னுடுவா...” அவளும் அவனது தொனியிலேயே கூற...
ஒரு நிமிடம் என்னவென்று யோசித்தவனின் மூளையில் அது அவளது தாயென்பது உரைத்தது... அவனது மனம் சமநிலையானது... தன்னைச் சூழ்நிலையின் தாக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டு,
“ஹஹஹா...” அதுவரை இருந்த மனநிலை மாறி வாய்விட்டுச் சிரித்தான்... கார் அவனது கையில் பறந்து கொண்டிருந்தது...
ஹப்பா சிரித்து விட்டானா என்று சற்று நிம்மதியாக ஸ்ரீதரை அவள் பார்க்க... அவனது கைப்பேசி அழைத்தது...
“ஓ மை காட்... டவர் கிடைச்சுருச்சு...” என்றவன்... கைப்பேசியை ப்ளுடூத்தில் ஆன் செய்ய... ஸ்பீக்கர் வழியாகக் கேட்டது... ராஜீவ் தான் அவசரமாக அழைத்திருந்தான்...
“சர்... அர்ஜன்ட்... உங்களை எப்படியாவது கனெக்ட் செய்ய நிறைய நேரமா வெய்ட் செய்தோம்...” படபடவென பேசிக்கொண்டே போக...
“எஸ் ராஜீவ்... இந்த இடத்தில் டவர் ப்ராப்ளம்... நீங்கச் சொல்ல வர்றது புரியுது... நானும் திரும்ப ஷூட் பண்ண வேண்டியதா போச்சு... இந்த சரவுண்டிங்ஸ்ல தான் இருப்பாங்க... என்னுடைய ஜிபிஎஸ் வெச்சு கோஆர்டினேட்ஸ் பாலோ பண்ணுங்க... அட் எனி காஸ்ட் விட்டுட கூடாது... இன்னமும் பொறுமையா என்னால இருக்க முடியும்ன்னு தோணலை... நான் யார்ன்னு காட்டியே தீரனும் ராஜீவ்...”
மலையாளமும் தமிழும் கலந்து அவனிடம் ரௌத்திரமாகப் பேசியவனை நெஞ்சம் துடிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்...
அவன் பேசிக்கொண்டிருந்தாலும் கார் கிட்டத்தட்ட நூற்று ஐம்பதைத் தாண்டி கொண்டிருந்தது...
ஸ்பீடோமீட்டரை பார்த்தவளுக்கு மயக்கமே வரும் போல தோன்றியது...
“ஐ ல் டேக் கேர் சர்... உங்க பாதுகாப்புக்கு ஸ்குவாட் தனியா...” என்று அவன் இழுக்க...
“எனக்கா...” என்று அவன் சிரிக்க...
“டோன்ட் வொர்ரி ராஜீவ்... எனக்கு நான் தான் பாதுகாப்பு... எப்பவுமே!” என்று முடித்து விட...
“சரி சர்...” என்று முடிக்க இருந்த அந்த ராஜீவ் தயங்க...
“என்ன ராஜீவ்...?”
“சர்... இந்த ஜர்னி வேண்டாமே... இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்...”
“ஏன் அவங்க காலில் விழ சொல்றியா?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க... ராஜீவ் பதறினான்...
“ஹய்யோ சார்... இல்ல... உங்க பாதுகாப்புக்காகத்தான் சொல்றேன்... எங்களுக்கு எங்க ஸ்ரீதரன் வெர்மா வேணும்... அந்தப் பயம் தான்... உங்களுக்கு அந்தப் பயம் இல்லையா?”
“பயமா... எனக்கா...” என்று மெலிதாக சிரித்தவன்...
“பயந்து இருந்தா நாம பிறந்தே இருக்க முடியாது ராஜீவ்... லட்சக்கணக்கான போட்டியாளர்களை தோற்கடித்துத் தான் இந்த உலகத்தையே நாம பார்த்து இருக்கோம்... இப்பவும் நாம சர்வைவ் பண்ணனும்னா ஃபிட்டா இருக்கணும்... சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்... உலகத்தில் தகுதியான ஒன்னு மட்டுமே ஜீவிக்க முடியும்... அந்தத் தகுதி நமக்கு இருக்கான்னு இந்த உலகம் நம்மை செக் பண்ணிட்டே இருக்கும்... எனக்கு அந்தத் தகுதி கிடையாதுன்னு சொல்லிட்டு என்னுடைய தோல்வியை நான் ஒப்புக்கொண்டு போக முடியாது... மூன்று நெடும் வருடங்கள்... போதும் இனியும் என்னால் தாமதிக்க முடியாது... செய்யணும் அல்லது செத்து மடியனும் ராஜீவ்...” என்று சிறு சிரிப்போடு அவன் முடிக்க...
ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திய அந்த ராஜீவ்...
“டேக் கேர் சர்...” என்று வைத்தான்...
ஸ்ரீதரின் முகம் எந்த உணர்ச்சியையோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தது...
அது கோபமா?
ஆற்றாமையா?
பழி உணர்ச்சியா?
கொலைவெறியா?
அவனையே பார்த்து கொண்டிருந்தவளின் மனதில் குளிர்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top