• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சங்கச் சிறுகதை - பத்துப்பாட்டு | ஆலின | முல்லைப்பாட்டு கதைவடிவில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இந்தக் கதையின் ஒரே நோக்கம் ‘முல்லைப்பாட்டு’ என்ற சங்க இலக்கியத்தை அறிமுகப்படுத்தி, அதைப் படித்துச் சுவைக்கும் ஆர்வத்தை உண்டாக்குவதே ஆகும். இயன்றவரை பாடலில் பொதிந்த காட்சிகளையும், செய்திகளையும் காட்டி உள்ளேன், எனினும், சிறுகதை வடிவத்திற்கு ஏற்ப என் சொந்தக் கற்பனை கலந்தும், பாடலில் உள்ள சில செய்திகளை விடுத்தும்தான் அமைக்க முடிந்தது. எனவே நீங்கள் முல்லைப் பாட்டை படிக்க இன்னும் நிறைய காரணங்களை விட்டுவைத்திருக்கிறேன்! இந்த வடிவம் பற்றிய கருத்தைத் தவறாமல் தயங்காமல் சொல்லுங்கள்... பத்துப்பாட்டையும், சங்க இலக்கியத்தின் பிற செய்யுள்களையும் இப்படிக் கதை வடிவில் தர விழைகிறேன், உங்கள் பின்னூட்டம் எனக்கு மிக முக்கியமானது! நன்றி!
கதையைப் படிக்கையில் அடிக்குறிப்புகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், அவற்றைப் பின்னர் படித்துக்கொள்ளலாம்!


ஆலின... (முல்லைப்பாட்டு)

2000 ஆண்டுகளுக்கு முன்னால்...

பூ
ங்குழலிக்கு இப்பொழுது குளிரைவிட ஆர்வம் அதிகமாய் இருந்தது!

வாமனனாய் வந்து மாபலி மன்னனிடம் மூன்றடி வேண்டும் என்று கேட்டுவிட்டுப் பிறகு உலகையே அளந்துகொள்ள வளர்ந்த திருமாலைப் போலக் கறுத்து, வளர்ந்து, அந்தப் பகுதி முழுவதையும் போர்த்தி இருளில் மூழ்கடித்து ‘இனி பொழிவதற்கு ஒரு துளியும் மீதம் வைக்கப்போவதில்லை’ என்பதைப் போலப் பொழிந்து தள்ளிவிட்டிருந்தது மேகம்! பூங்குழலிக்கு முகுந்தனுக்கும் முகிலுக்குமான அந்த உவமை மிகப் பிடித்திருந்தது, அதை எழுதியிருந்த புலவனைக் கடுங்குளிரையும் மறந்து மெச்சிக் கொண்டிருந்தாள், ‘நானும் பெரியவளானதும் பாட்டெழுதப் போகிறேன்’.

மெல்ல இருண்டு, குளிர்ந்து, வண்டினங்களின் ‘ஙொய்ய்’ என்ற ’குரல்[1]’ இசையின் பின்னணி சுருதியுடன் மோனத்தில் இருந்த அந்த மாலைப் பொழுதின் அருந்தவத்தைக் கலைக்கவென்றே வருவதைப் போல் வந்துகொண்டிருந்தது அந்தக் கூட்டம்! நகரம் இருந்த திசையில் இருந்து வந்தது அந்தக் கூட்டம், கொம்பொலிகளைக்[2] கேட்கும் எவரும் அது அரண்மனையைச் சார்ந்த கூட்டம் என்று எளிதாய்ச் சொல்லிவிடுவர். பூங்குழலியின் ஆயர்குடியில் இருந்து மேற்கே ‘கூப்பிடு’ தொலைவில்தான் அந்த மாநகர் இருந்தது, அரசனே இருந்து நாட்டை ஆளும் தலைநகரம் என்பதை மலைத் தொடரைப் போல காட்சியளிக்கும் அதன் பெரிய அகண்ட மதில்சுவர்கள் கட்டியங்கூறும்! பூங்குழலிக்கு ஆயர்குடியையும் ஆற்றங்கரையையும் தாண்டி போக அனுமதி கிடையாது, அவள் அம்மாவின் கட்டுப்பாடு அப்படி. நகருக்குள் சென்று தயிரும் பாலும் விற்பது கூட அவளது அம்மாவோ அய்யனோதான்!

பூங்குழலிக்கு இப்பொழுது குளிரைவிட ஆர்வம் அதிகமாய் இருந்தது! அரண்மனைக் கூட்டம் என்று அறிந்ததும் எழுந்த ஆர்வம். தன் குடிலின் முன் பந்தலின் ஒரு காலைக் கட்டிக்கொண்டு நின்றபடி அவளைக் கடந்து போகும் அந்தக் கூட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினாள். கூட்டத்தில் பெரும்பாலும் பெண்களே இருந்தார்கள், அதிலும் பலருக்குக் குழலியின் ‘அம்மம்மா’ வயது இருக்கும். உருக்கி வார்த்து வழியும் வெள்ளியைப் போன்ற நரைத்த கூந்தலும், வாழ்க்கை என்ற கலப்பை உழுத அனுபவம் என்ற வரிகள் படிந்த நெற்றியுமாய் இருந்த அந்த முதுபெண்டிர் அரண்மனை வாழ்வினர் ஆகையால் ‘பெருமுதுபெண்டிர்’ எனப்பட்டனர் போலும்!

சிறு கூடைகளில் புது நெல்லும், நாழிகளில்[3] அலராத முல்லை மொட்டுகளுமாய் உடன் வந்தவர்கள் ஏந்திச் சென்றதைக் கண்டவுடன் பூங்குழலி அவர்கள் வந்திருப்பதன் காரியத்தைப் புரிந்துகொண்டாள். சில திங்களுக்கு முன் அரசர் வடக்கு நோக்கிப் போர் மேற்கொண்டு சென்றபொழுது அவரது பெரும்படை தண்டெடுத்துக் கிளம்புவதற்கு முதல் நாள் இதே போல கூட்டமாய் இங்கு வந்து ‘விரிச்சி[4]’ கேட்டனர் அன்றோ? பூங்குழலி உடனுக்குடன் நடப்பவற்றைப் புரிந்துகொள்பவள், நல்ல அறிவாளி! அவள் அவர்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில் அந்தக் கூட்டம் ஆராவரித்துக்கொண்டே அவளைக் கடந்து ஊரின் எல்லையில் இருந்த அந்தக் கோயிலை அடைந்தது, குழலியும் ஆர்வம் மேலிட நிகழ்வதைக் கவனிக்கலானாள்.

அதைக் ’கோயில்’ என்று அத்துனை உறுதியாய்ச் சொல்லிவிட இயலாதுதான்! அகண்ட பெரிய அந்தப் பழைய ஆலமரத்தின் அடியில் மரத்தைச் சுற்றி நான்கைந்து கற்சிற்பங்கள், வேரோடு வேராய் பிண்ணிப் பிணைந்து கால் பங்கு மூழ்கி முக்கால் பங்குதான் வெளியில் தெரிந்தன, பல நூறு ஆண்டுகள் பழையன அவை, எத்தனை தேய்ந்து போயிருந்த போழ்திலும் அவற்றில் இருந்த கலைத்திறம் குன்றியதாய் இல்லை! பூங்குழலி அவற்றைக் கடவுளாய் ஏற்று வழிபடுகின்றாளோ இல்லையோ, அவற்றின் நுண்ணழகில் மயங்கி அவற்றைக் கண்டு களிப்பதில் பொழுதை நிறையவே கழிப்பாள்! அந்தத் தெய்வங்கள் யார் யார் என்று கூட யாருக்கும் உறுதியாய் தெரியாது ‘அது குமரவேளா?’ ‘யானை ஊர்தி[5] முன்னால் இருக்கிறதே, அய்யனார்தான்!’ ‘இல்லை, அது வேந்து[6], அவனுக்குத்தான் யான (யானை) ஊர்தி!’ ‘அடியே, அது குமரவேளுடி பிள்ளைகளா! கையில வேல் குறி காண்கல?’

பூங்குழலி நடப்பதைக் கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தாள், கோயிலை அடைந்தவர்கள் விரைந்து செயல்பட்டனர், கண்ணிமைப் பொழுதில் சேர்ந்திருந்த இலைக் குப்பைகளை அகற்றி, அவ்விடத்தைத் தூய்மையாக்கி மெழுகி அலகிட்டுச் சிலைகளுக்குப் புதிய மாலைகள் அணிவித்து, அவற்றிற்குக் கீழே பெரிய பெரிய வாழை இலைகள் விரித்து அவற்றில் கூடையில் இருந்த நெல்லையும், நாழிகளில் இருந்த முல்லை அரும்புகளையும் பரப்பி வைத்தார்கள். இன்னும் நறுமணப் புகை, பழங்கள் என்று என்னென்னவோ வைத்தார்கள். அத்தனை வேலையும் ஒரு முதியவளின் மேற்பார்வையில் கிடுகிடுவென்று நடந்தது. எல்லாம் தயார் என்றவுடன் அந்த முதியவள் குலவைப் போட, பிற பெண்களும் அவளோடு சேர்ந்துகொள்ள, உடனே அவள் கணீர் என்ற குரலில் பாடத் தொடங்கினாள். அவ்வப்பொழுது உடனிருந்த பெண்களும் சேர்ந்து பாடினர். தமிழ்ப் பாட்டுதான் ஆனால் மிகவும் பழைய பாடலாய் இருக்க வேண்டும், அல்லது பாடியவர்களின் வயதும் குளிரும் சேர்ந்த நடுக்கம் காரணமா? குழலிக்கு ஆங்காங்கே ஓரிரண்டு சொற்கள்தான் புரிந்தன – ‘பரிபாட்டு’[7] என்று அய்யன் சொல்லுமே, அதுதானோ இது?

சட்டென்று எல்லா ஓசைகளும் எல்லா ஆராவாரங்களும் அடங்கி அங்கே அழுத்தமான ஒரு அமைதி குடிகொண்டது, தொலைதூர வண்டுகளின் ‘ஙொய்ய்’ ரீங்காரம் மட்டும் காற்றின் இரசவாதம் போல் ஒலித்தது – பூங்குழலி இப்பொழுது குளிரை முன்னைவிட மேலாய் உணர்ந்தாள், பற்கள் கிடுகிடுத்தன, தோள்கள் நடுங்கத் தொடங்கின, போர்த்தியிருந்த துணியை இன்னும் இறுக்கிக்கொண்டு, கைகளை நெஞ்சிற்குக் குறுக்காய் தோள்களை அணைத்தவண்ணம் கட்டிக்கொண்டாள்[8], இறுக்க!

’ம்ம்மாஆ...’ பசுக்கன்றின் மழலை அழைப்பு நிலவிய அமைதியைக் கொஞ்சம் வழக்கிற்கிழுத்தது, “த்தோ... த்தோ... என்னலா? நடுக்குதா? ஓ! பசிக்கோ? இந்தா அய்ய(ன்) இப்ப வந்திருவாக, உங்க ஆத்தாவையும் ஓட்டிக்கிட்டு இந்தா இப்ப வந்திருவாக...” பூங்குழலி சிறிய மெல்லிய கயிற்றினால் கட்டப்பட்டிருந்த அந்தக் கன்றின் முகத்தோடு முகம் உரசி அதைக் கொஞ்சிக் கொஞ்சிச் சொன்னாள், சற்று உறக்கவே பேசிவிட்டாள் போலும், கண்களை மூடி கோயிலில் நின்றிருந்த அனைவரும் சட்டென கண்களைத் திறந்து இவளைப் பார்த்தனர், குழலி அவர்கள் பார்வையைக் கவனித்ததும் அவள் உள்ளத்தில் அச்சம் குடிகொள்ளத் தொடங்கியது, ’வழிபாட்டைக் குலைத்துவிட்டானா?’ என்ற அச்சம், ‘அரண்மனைக் கூட்டத்தின் வழக்கில் சிக்கிக் கொண்டேனோ?’ என்ற அச்சம், கன்றை விட்டுவிட்டு அவள் தன் குடிசைக்குள் ஓடி ஒளிந்துகொண்டாள்.

கொஞ்சம் பொழுது கழித்து வாயிலில் பேச்சரவம் கேட்டது, குழலியின் தாயோடு அந்த அரண்மனைக் கூட்டதினர் சிலர் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதைக் குழலி உணர்ந்தாள், அவளுக்குப் பிடித்த அந்த உவமையின் திருமாலைப் போல அச்சம் சரசரவென வளர்ந்தது! குளிரா? அச்சமா? எதனால் என்று தெரியாமல் நடுங்கினாள்! சற்று நேரம் கழித்து “இந்தா பொண்ணே, இத உனக்குதா கொடுத்தாக!” என்று அவளது தாய் அவள் கையில் திணித்ததைப் பூங்குழலியால் நம்ப இயலவில்லை – ஒரு பொற்காசு!
* * * * * * * * *​

“எத்தனை சொன்னாலும் பயனில்லை அக்கா! மழையைவிட பெரிதாய்
இருக்கிறது அவள் பொழியும் கண்ணீர்! என்ன சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை! தூறல் தொடங்கியவுடன் கண்கலங்கத் தொடங்கிவிட்டாளே!”

“என்னவோடி யம்மா! என் கணவர் முதல் முறை போருக்குப் போன பொழுது நானும் கலங்கித்தான் போனேன், பின்னர் ஒரே படையில் மகன், கணவர், அண்ணன் என அனைவரையும் அனுப்பிவிட்டு எத்தனை திடமாய் இருந்திருக்கிறேன் தெரியுமா? இவள் சின்னப் பெண்தானே! ஏதோ கார் தொடங்கிவிட்டது, இன்னும் செய்தி கூட வரவில்லை என்று கலங்கிவிட்டாள் போலும், பேதை...”

“அதென்னக்கா, மன்னவர் விழா நடத்தவா சென்றிருக்கின்றார்? குறித்த நாளில் திரும்பிவிட? போர் என்றால் கொஞ்சமா? அதுவும் நம் பெரும்படைகள் அணிவகுத்துக் கொண்டு நமது கோட்டை வாயிலைக் கடக்கவே இரண்டு முழு நாள்கள் ஆனதே, அத்தனை பெரிய படையை ‘ம்ம், கிளம்புங்கள்’ என்றா கிளப்பிக்கொண்டு வர முடியும்?”
”அதெல்லாம் இருக்கட்டும், விரிச்சி கேட்ட செய்தியை அவளிடம் உரைத்தீர்களா? வாய்ப்புள்[9] நன்மையாகத்தானே வந்திருந்தது? பிறகும் என்ன கலக்கம்?”

“எல்லாம் சொல்லிவிட்டோம் அக்கா! அவள் காதுகளில் ஏறுவதாயில்லை! பகலெல்லாம் உண்ணக் கூட இல்லை, அழுதவண்ணமே உறங்கிவிட்டாள்...”

கார்காலம் தொடங்கியும் இன்னும் திரும்பாத மன்னவனைக் காணாத அரசியார் உண்ணாமல் உடல் சோர்ந்து உறங்கிவிட்ட தென்னவோ உண்மைதான், ஆனால், அவளது உள்ளம் சோரவில்லை, அது யாருக்கும் புலப்படாமல் தனது நாயகனைத் தேடி நேராய் அவனிருந்த பாசறைக்கே பயணித்தது...

(1/2)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
2/2

யிரமாயிரம் கிண்கிணிகளும், சிறுவர் வைத்து விளையாடும் சிறுமுரசுகளும் ஒன்றாய், ஆனால் ஒத்திசைவின்றி, இசைப்பதைப் போல மெல்லிய அழகிய ஓசையோடு ஓடிக்கொண்டிருந்தது அந்தக் காட்டாறு. அந்த ஆற்றின் பெயர் நமக்குத் தெரியாது, காட்டாற்றுக்கெல்லாம் பெயர் வைப்பார்களா? வைத்திருந்தார்கள், அங்கே குடியிருந்த வேட்டுவச் சாதியினர், ஆனால் அவர்கள் இப்பொழுது இல்லை, பூண்டோடு அழிக்கப்பட்டிருந்தனர்! ஒரு அரசனுக்குப் பணிந்து ஒத்து, அவன் நாட்டிற்குப் புறக்காவலாய் இருந்த அவர்கள் பகையரசன் படையெடுத்து வருகையில் அழிக்கப்படுவது தவிர்க்க இயலாததாகிறது, போர் முறைகளில்! போர் என்ற சொல்லிற்கு மறு பெயர் ‘அழிவு’ என்பது போலும்! வேட்டுவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்ட தணல் இன்னும் முழுதாய் அவியாமல் புகைந்துகொண்டிருந்ததன் மணம் அவ்விடம் முழுதும் பரவிக் கலந்திருந்தது, கூடவே காட்டு மலர்களின் இயல்பான மற்றும் எரிந்து அவிந்த மணமும் கலந்திருந்தன! போருக்கு ‘மணம்’ உண்டா என்று கேட்டால் இதைக் குறிப்பிடலாம் போலும்!

இயல்பிலேயே கனிந்த அரசமாதேவியின் உள்ளம் அழிவின் காட்சியில் இன்னும் கனிந்து கசிந்துகொண்டிருந்தது, ஆயினும், அது இவ்வழிவிற்குக் காரணனாய் இருக்கும் தன் தலைவனை இன்னும் அதிகமாய் நாடியது ஒரு நகைமுரணே! தலைவனை நாடும் உள்ளம் உந்த அவள் வடக்கு நோக்கி முன்னேறினாள்...

முள்ளிருக்கும் காட்டுச் செடிகளைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தொலைவுவரை நீண்டு சூழ்ந்து கட்டப்பட்டிருந்த பெரிய மதில் போன்ற வேலி தெரிகிறதா? வரிசை வரிசையாய், ஒழுங்காய் அமைக்கப்பட்டிருந்த படங்குகள்[10] தெரிகிறதா? தழைகளால் வேயப்பட்ட கூரைகளும், வில்களையும் ஈட்டிகளையும் சேர்த்துச் சேர்த்துக் கட்டி அதைத் தூணாய் நட்டு, இடையிடையில் கயிறு கொடுத்து இறுக்கிக் கட்டி, கிடுகுகளை[11] அடுக்கிவைத்துக் கட்டி அமைக்கப்பட்டிருந்த படங்குகள்!

”பகைவரின் எல்லைக்குள், காட்டின் நடுவே இத்தனை ஒழுங்கோடு இத்தனை பெரிய பாசறையா? கடல் போலல்லவா விரிந்து இருக்கிறது? எத்தனை வகையான படைகள், படைப்பிரிவுகள்? எத்தனை வகையான மக்கள்? எத்தனை நாட்டினர்? எத்தனை மொழிகள்? எத்தனை பழக்கவழக்கங்கள்? இத்தனையையும் இவர் ஒருவராக எப்படி கட்டியாள்கிறார்? எப்படி இவர்களை அழைத்து வந்து போரிட்டு வெல்கிறார்? அப்பப்பா...” என்று அரசமாதேவி தன் கணவனையும், அவனது திறனையும் வியந்து கொண்டே அந்த பாடி[12]யுள் நடந்துகொண்டிருந்தாள்... இத்தனைக்கும் நடுவில் அவள் தலைவனைத் தேட வேண்டும்!

அவளுக்கு அதிகம் தொல்லை வைக்காமல், பாசறையின் நடுநாயகமாய், அந்த இரவிலும் தனித்த ஒளியுடன் விளங்குவதுமாய், அகலத்திலும் உயரத்திலும் பெரியதுமாய் அமைக்கப்பட்டிருந்த அந்தப் படங்கு ‘இதோ, இதில்தான் பேரரசர் வதிகிறார்[13]’ என்று சொல்லாமல் சொல்லியது. அதைக் கண்டுகொண்ட உற்சாகத்தில் அதை நோக்கி விரைந்தாள் தேவி.

‘பேஏஏம்ம்ம்...’ பிளிறலைக் கேட்ட நொடி அவள் உள்ளம் நடுநடுங்கிவிட்டது! திரும்பிப் பார்த்தவளை இன்னும் நடுநடுங்க வைப்பது போல் துதிக்கையை உயர்த்தி தலையை ஒரு முறை உலுக்கியது அந்த யானை, மதம் பிடித்த யானை! நல்ல வேளையாய் அதை ஒரு நெடிய அகண்ட மரத்தின் அடிபாகத்தோடு கட்டியிருந்தனர், அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியைப் பார்த்ததும்தான் அரசிக்கு மூச்சு வந்தது! கவிந்திருந்த இருளில் அந்த யானை அசையும் குன்றைப் போல காட்சியளித்தது! அங்கங்கே இருந்த பந்தங்கள் மற்றும் விளக்குகளின் வெளிச்சத் தீற்றல்கள் அந்த யானையின் மேல் அரையும் குறையுமாய் விழுந்து அதை இன்னும் கோவமுடையதைப் போலக் காட்டின.

கரும்பையும், நெற்கதிரையும், அதிமதுரத் தழையையும் இணைத்துக் கட்டி உண்ண அளித்திருந்ததை அது உண்ணாமல், அந்தக் கட்டினைத் தன் துதிக்கையில் பிடித்துக் கொண்டு அப்படியும் இப்படியும் ஆட்டுவதும், அதனால் தன் நுதலைத்[14] துடைத்துக்கொள்வதும், பின் அதனைக் கீழே போட்டுவிட்டுத் துதிக்கையைத் தனது கூரிய தந்தத்தின் மேல் வைத்தவண்ணம் தலையை ஆட்டுவதும் என்று பலப்பலவாக செய்து போக்குக் காட்டிக்கொண்டிருந்தது அந்த யானை!

அதன் பாகரும் அது உண்ணாமல் விடுவதில்லை என்று கவைமுள் கருவியினால்[15] அதனை மிரட்டி, ‘ஆத்... ஆத்...’ ‘அப்புத் அப்புத்’ என்று யானைமொழி பேசி அந்த யானையைச் சோற்றுக் கவளத்தை உண்ண வைக்க முயன்று கொண்டிருந்தனர். ஒரு சமயம் அது ‘பேஏஏம்ம்ம்...’ என்று பிளிறிய வண்ணம் முன்னங்கால்களைத் தூக்கி அச்சமூட்டியது – எப்படி இவர்கள் சிறிதும் அச்சமின்றி அந்த மதம் பிடித்த யானையை நெருங்குகிறார்கள் என்று மிகவும் வியந்தாள்!

அதைவிட வியப்பு பாசறையில் பெண்கள் திரிந்தது! வலையோசையும் ‘க்ளுக்’ என்ற சிரிப்பொலிகளும் கேட்டுத் திரும்பியவளின் கண்கள் கூசின, ’மின்னல் கீற்றை மடியில் கட்டி இருக்கின்றனரோ!’ என்று எண்ண வைக்கும்படி தீப்பந்தங்களின் ஒளியில் தகதகவென ஒளிரும் வாள்களை மடிக்கச்சில் கட்டியவர்களாய், கையில் பந்தமும், எண்ணெய்க் குடுவையும் ஏந்தியவர்களாய், அங்கிருந்த விளக்குகளில் நெய் தீராவண்ணம் அவ்வப்பொழுது கவனித்து நிரப்பி, நெய் தீர்ந்தோ அல்லது காற்றினாலோ அணைந்து போயிருக்கும் விளக்குகளை மீண்டும் ஏற்றிக் கொண்டு இருந்தனர் சில பெண்கள்.

அவர்களைக் கடந்து அரசரின் படங்கரை நோக்கிச் சென்றவள் அங்கே நள்ளிரவிலும் உறங்காமல் குளிருக்கு இதமாய் துணிகளால் தலையையும் உடம்பையும் போர்த்திக்கொண்டு திரிந்த திருமெய்க்காப்பாளர்களைக் கவனித்தாள். பல்வேறு படைகளில் இருந்து தேர்ந்த அனுபவமும், அரசரின் நம்பிக்கையையும் பெற்றவர்கள் அவர்கள்.

கூடாரத்தை நெருங்கியதுமே அது யவனர்களால்[16] வடிவமைக்கப்ப்பட்டது என்பதை உணர்ந்துகொண்டாள், அரண்மனைக்கு வரும் யவனர்கள் சிலரை அவள் பார்த்திருக்கிறாள், உலோகத்தில் செய்தது போன்ற வலிமையான உடல்கள் கொண்டவர்கள், குதிரை பழக்குவதில் வல்லவர்கள், சிறந்த வீரர்கள் என்று அரசர் அவர்களைப் பாராட்டுவார், ஆனால், அவர்களின் பெயர்கள் கூட இவளது வாயில் நுழையாது, ‘ஆக்னாப்டஸ், மெட்டாகேனஸ், ஃபிடியஸ்’ என்று படுத்தும்! ஆனால், அரசர் தடையின்றி கிரேக்கம் பேசுவார் – அரசரைப் பற்றி நினைத்துவிட்டாளே இவளுக்குப் பெருமை பொங்கும்!

”அலைகடல் சூழ் உலகில் வெற்றிகளைத் தேடி குவிக்கும் மாமன்னரின் கன்னல்[17] காட்டும் நாழிகை நாற்பத்தி யாறு...” என்று இரவின் அமைதியைக் கிழிக்கும் நாழிகைக் கணக்கரின் தொலைவில் ஒலிக்கும் குரலைக் கேட்டபடியே அந்தக் கூடாரத்திற்குள் நுழைந்தாள் அரசி. உள்ளே சட்டை போன்ற கவசம் அணிந்த வாய்ப்பேச இயலாத வீரர்கள் உருவிய வாள்களுடன் காவல் இருந்தனர், அவர்களுக்குப் பின்னால் தெரிந்த பள்ளியறையில் சிந்தனை தோய்ந்த முகத்துடன் வீற்றிருப்பது யார்? அரசரா? ஆம், அரசரேதான்!

சரசரவென உள்ளே நுழைந்து, படுக்கையில் ஒரு கையும், தலையில் ஒரு கையுமாய் வைத்துக்கொண்டு படுத்திருந்த அரசரின் அருகில் வந்தாள் அரசமாதேவி – படைகளின் தலைவனை, நாட்டின் காவலனை, தனது கணவனை மனதாறக் கண்ணால் பருகினாள்! தான் அவரை எண்ணி வாடுவதைப் போலவே அவரும் தன்னை எண்ணி வாடுகிறார், அதுவே அவர் திருமுகத்தில் கவலைக் கலந்த சிந்தனையாய் படர்ந்துள்ளது என்று எண்ணியவளுக்கு சட்டென அவரது சிந்தனை ஓட்டத்தைப் படிக்கும் திறன் உண்டானது,

ஈட்டிகளால் தாக்குண்டு பிடியை[18] மறந்து மிகுந்த சினத்துடன் தாக்கிய யானையின் துதிக்கையை வெட்டி அதைக் கொன்று வீழ்த்தி, தான் அரசனுக்குப் பட்டிருந்த செஞ்சோற்றுக் கடனை அடைக்க தன் இன்னுயிரை களத்தில் இரையாக்கியிருந்த வீரனுக்கு அவர் சிந்தையில் இடம் இருந்தது!

காற்றெனப் பாயும் புரவி! அணிவித்திருந்த கேடங்களையும் துளைத்து உடலில் சொருகிய கூரிய அம்பின் வலி பொறுக்கமாட்டாமல் உணவு உண்ணாமல் வாடும், காதை மடக்கி நிற்கும் குதிரைக்கு அவர் சிந்தையில் இடம் இருந்தது!

நடந்த போருக்கும், நடக்க வேண்டிய போருக்கும், பகைவருக்கும் அவர் சிந்தையில் இடம் இருந்தது!

இவளுக்கு இல்லையா? ஒரு துளிகூட இல்லையா? இல்லை!

அரசமாதேவிக்குத் தலை சுற்றியது, அவள் நின்ற தரை சுற்றியது, கூடாரம் சுற்றியது, பாசறை சுற்றியது... கால்களுக்குக் கீழே நிலம் நெகிழ்ந்து உருகி உள்ளே உள்ளே விழுந்தது... அவளும் விழுந்தாள், சுற்றிச் சுற்றி, ஆழ ஆழ விழுந்தாள்...


ரண்மனைப் படுக்கையில், வியர்வையில் முழுகிக் குளித்து விதிர்விதிர்த்து

நெஞ்சு படபடக்க எழுந்து அமர்ந்தவளுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை... பிறகு மெல்ல மெல்ல புரிந்துகொண்டாள்... கண்கள் தானாய் கண்ணீர் உகுக்கத் தொடங்கிவிட்டன, முத்து முத்தாய் கண்ணீர்த்துளிகள் அவள் கன்னம் நனைத்தன... வெளியில் இன்னும் மழைத் தூறிக்கொண்டிருந்தது... அறையில் இருந்த விடிவிளக்கின் சுடர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தது... அம்பில் அடிபட்ட மயிலைப் போலத் துவண்டாள்...

ஒரு நொடி, ஒரே நொடி... அவள் ஏக்கமும், துயரமும், நடுக்கமும் பெட்டியில் அடங்கும் பாம்பாய் கட்டுக்குள் வந்தன, “வருவேன் என்றவர் வருவார்! இப்படி நிலைகுலைவதுதான் அவர் மீது நான் கொண்ட நம்பிக்கைக்கு அழகா?” என்ற எண்ணம் மின்னலைப் போல அவள் உள்ளத்தில் வெட்டியது! எங்கிருந்தோ அவளுக்கு தெம்பு ஊற்றெடுத்துப் பொங்கியது!

வெளியில் இன்னும் மழைத் தூறிக்கொண்டிருந்தது... அறையில் இருந்த விடிவிளக்கின் சுடர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தது... அரண்மனை மேல்நிலைகளில் இருந்து வழியும் மழைநீர் ஒரு அருவியைப் போல “ஹோ”வென்ற மெல்லிய இரைச்சலுடன் வழிந்துகொண்டிருந்தது, அதன் ஓசையில் மனத்தைச் செலுத்தித் தன் கவலையை மறக்க முயற்சி செய்யத் தொடங்கினாள்... எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று தெரியாது, சிலையென அமர்ந்திருந்தவளின் செவிகளையும் மனத்தையும் அந்த ஓசை நிரப்பியது – ’ஹீஈஈய்ய்ய்ய்ஹீய்ய்ய்’ என்று தொலைவிலிருந்து கேட்ட அந்த ஓசை!


மாகடல் மண்ணைக் கவ்வ நுழைந்ததைப் போன்று பேரிரைச்சலுடனும்

வெற்றிக் களிப்பின் பெரும் ஆராவாரத்துடனும் செல்லும் பெரும்படை, அதோ அந்தப் படைக்கு முன்னால், அதிலிருந்து மேலும் மேலும் பிரிந்து தனித்து விரைந்து முன்னால் செல்வது என்ன? அரசரின் நெடிய தேர்... காற்றெனச் செல்லும் புரவிகளைக் காதலியைக் காணும் ஆவலினால் இன்னும் இன்னும் என்று விரையச் சொல்லிக் கடாவும் அரசரின் நெடிய தேர்...

’ஹீஈஈய்ய்ய்ய்ஹீய்ய்ய்’ விரைந்து ஓடிய அந்தத் தேரின் குதிரைகள் ஆலின!

[முற்றும்]

_______________________________________________________________________________

[1] ’குரல்’ – ‘ஷட்ஜம்’ (’ஸ’) என்ற ஸ்வரம் (’இசை’) “யாழிசை இனவண்(டு) ஆர்ப்ப” என்பது முல்லைப்பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த வரி!

[2] கொம்பு – ஒரு இசைக்கருவி (வளைந்து நீண்டு இருக்கும்), சங்க இலக்கியங்களில் ‘வயிர்’ என்று குறிக்கப்படும்.

[3] நாழி – ஒரு அளவு பாத்திரம் (காற்படி)

[4] விரிச்சி கேட்டல் – சகுனம் பார்த்தல், ஒரு விஷயத்தை மனத்தில் எண்ணி இறைவனை வழிபட்டு நிற்கையில் சுற்றி நிகழும் செயல்களின் மூலம் எண்ணியது நிகழுமா நிகழாதா என்று அறிந்துகொள்ளல் (பண்டைய தமிழரின் வழக்கம், இன்றும் தொடர்வதுதானே?)

[5] ஊர்தி – வாகனம் (சமற்கிருதம் - வாஹனம்)

[6] வேந்தன் - பண்டைய தமிழரின் மருத நிலத் தெய்வம். வேதத்தில் குறிக்கப்படும் குறிப்பிடப்படும் இந்திரனும் இவனே.

[7] எட்டுத்தொகையுள் பரிபாடல் காண்க.

[8] ’ஆய்மகள், நடுங்கு சுவல் அசைத்த கையள்’ என்பது முல்லைப்பாட்டின் வரி. அவளது நிலையையும் சூழலின் தட்பவெட்ப நிலையையும் ஒருசேரப் படம்பிடித்துக் காட்டும் புலவரின் திறம் வியத்தற்குரியது!

[9] வாய்ப்புள் – (இதுவும்) சகுனம். அரசியைத் தேற்ற ‘மன்னர் எப்பொழுது திரும்புவார்’ என்று விரிச்சி கேட்டு நின்ற முதுபெண்களின் காதில் ஆய்மகளின் ‘இதோ இப்பொழுது வந்துவிடுவார்’ என்ற சொல் விழுந்தது நல்ல சகுனம்!

[10] படங்கு - கூடாரம்

[11] கிடுகு – படல் (தென்னம்படல்) ஓலைத்தட்டி

[12] பாடி – பாசறை. போர்க்காலங்களில் படைகள் தங்கும் இடம்.

[13] வதிதல் - வசித்தல்

[14] நுதல் – நெற்றி [மதம் பிடித்துவிட்டால் யானையின் தலையில் மதநீர் வழியும், அதை மொய்க்கும் ஈக்களை விரட்ட யானை இப்படிச் செய்கிறது]

[15] கவைமுள் கருவி – பரிக்கோல், அங்குசம்

[16] யவனர் – கிரேக்கர் (’சோனகர்’ என்றும் அறியப்படுவர்)

[17] கன்னல் – நாழிகை வட்டில். குறிப்பிட்ட அளவுடைய பாத்திரம், இதிலிருந்து நீர் வழிய ஆகும் கால அளவு ஒரு நாழிகை, அதைக் கொண்டு நேரத்தை அளந்து சொல்வார் நாழிகை கணக்கர்.

[18] பிடி - பெண்யானை
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
விசய நரசிம்மன் தம்பி
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்! இது போல குமுதம் இதழில் சங்ககால பாட்டை வைத்து கதை எழுதும் போட்டி நடந்தது,நானும் அதில் பரிசில் பெற்றேன்.. இது போல் சங்க இலக்கியங்களை எளிய முறையில் அறிமுகப்படுத்த எடுத்து முயற்சிக்கு வாழ்த்துக்கள்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Arumai thozhare vaazthugal
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top