சந்தன பூங்காற்றே....13

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
சந்தன பூங்காற்றே....13

நாட்கள் மிக அழகாக நகர்ந்து கொண்டிருந்தன. மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்து இருந்தது.

காவ்யா, சந்தோஷின் தோழமை தன்னிடம் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நினைக்க சாதனாவுக்கே வியப்பாக இருந்தது.

அழைப்பு மணி ஒலிக்க, தொலைக்காட்சியை அணைத்து விட்டு கதவைத் திறந்த சிவராமன் முகத்தில் வியப்பும் வெறுப்பும் கலந்து ஆத்திரமாக மாற கதவை படாரென்று சாத்தினார்.

மீண்டும் அழைப்பு மணி தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க, அவர் இருண்ட முகத்துடன் அமர்ந்திருந்தார்.

சாதனா வந்து கதவைத் திறக்க, வாசலில் நின்ற சத்யாவைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.

அவள் உள்ளத்தில் பழைய நினைவுகள் எல்லாம் புயலாய் படர்ந்தன.

"....சாதனா...." என்று சத்யா அழைத்தது கூட கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் கேட்டது.

சத்யாவை பார்த்த ராஜேஸ்வரியின் முகம் கோபத்தில் சிவக்க, அவன் கன்னத்தில் பளார்பளாரென கைகள் ஓய அறைந்தார்.

சத்யா கண்கள் கலங்கி, "...அம்மா..." என்றழைக்க,

"அந்த வார்த்தையை சொல்ற தகுதிய நீ எப்பவோ இழந்துட்ட, இப்ப எதுக்கு டா வந்த நாங்க இருக்கோமா செத்தோமான்னு பாக்க வந்தியா....?" மேலும் பேச முடியாமல் அவர் தொண்டை அடைத்தது.

"ராஜீ, இன்னும் ஏன் அவனை நிக்கவச்சு பேசிட்டிருக்க, குடும்ப மானத்தை ஊரறிய வாங்கிட்டான், இப்ப மிச்சமிருக்கிறது நம்ம உயிர் தான் அதையும் பறிக்க வந்திருக்கானா? வெளியே போகச் சொல்லு" என்ற சிவராமன் உடல் ஆத்திரத்தில் நடுங்கியது.

"இல்லப்பா... அது...." சத்யா கலங்கி மொழிந்தான்.

இத்தனைக்கும் கற்சிலையாய் சமைந்து நின்ற சாதனாவை பார்த்து, "நீயாவது நான் சொல்றதை கேளு சாதனா, நான் செஞ்சது தப்பு தான்.... ஆனா அப்ப எனக்கு வேற வழி தெரியலை....தேவிக்கும் அன்னிக்கு தான் கல்யாண ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.... தேவியை காப்பாத்தனுன்னு நினைச்சு உன் வாழ்க்கைய பாழாக்கிட்டேன், என்னை மன்னிச்சிடு சாதனா...." என்று தன் முன் கைகூப்பி நின்ற அண்ணனை பார்க்க, அவள் விழிகள் நீரைச் சொறிந்தன.

"இன்னும் என்னடா பேச்சு போடா வெளியில" என்று சிவராமன் சத்யாவின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வாசல் தாண்டி கீழே விழுந்தான்.

தேவி கையில் குழந்தையோடு ஓடி வந்து மறுகையால் சத்யாவை தூக்கி விட்டாள்.

ராஜீ கண்ணீரோடு கதவை சாத்த முயல, சத்யா குறுக்கே வந்து நின்றான்.

"அம்மா, எப்பவாவது நீங்க எங்கள மன்னிச்சு ஏத்துபீங்கன்ற நம்பிக்கையில தான் இப்ப போறோம்" என்று திரும்பியவனை, "....நில்லுண்ணா...." சாதனாவின் குரல் நிறுத்தியது.

அனைவரின் பார்வையும் சாதனாவை கேள்வியுடன் நோக்க, "ஒரு நிமிசம்" என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சற்று நேரத்தில் ஆரத்தி தட்டுடன் வந்தவளை அவர்கள் அதிர்ந்து பார்த்தனர்.

"சாதனா, என்ன செய்யற நீ" ராஜீ பதறி கேட்க,

"முதல் முறை அண்ணனும் அண்ணியும் வீட்டுக்கு வராங்க, அதான் ஆரத்தி எடுக்க போறேன்" சாதாரணமாக சொன்னவளை வியந்தார் சிவராமன்.

"உன் வாழ்க்கையை கெடுத்தவனுக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்" ஆதங்கப்பட்டார் ராஜேஸ்வரி.

"அண்ணன் தான் மன்னிப்பு கேட்டாச்சே.... இனிமேலும் நாம கோபபடறதால எந்த பயனும் இல்லம்மா, சத்யாவை நாம மன்னிக்காம வேற யார் மன்னிக்க போறாங்க!?" சாதனா பொறுமையாகச் சொல்ல,

"அவன் செஞ்சது மன்னிக்க கூடிய காரியமில்லடீ" ராஜேஸ்வரி வாதாடினார்.

"நாம மன்னிச்சா அதுவும் மன்னிக்க கூடிய காரியதாம்மா.... போனதெல்லாம் போகட்டும் எனக்கு நம்ம குடும்பத்தோட பழைய சந்தோசம் திரும்ப கிடைச்சா போதும்....எப்ப சத்யா நம்ம விட்டு போனானோ அப்பவே நம்ம குடும்ப நிம்மதியும் போயிடுச்சு..... நம்ம குடும்ப நிம்மதியும் சந்தோஷமும் வாசல்ல வந்து நிக்குது வான்னு கூப்பிடும்மா...." சாதனா பேச பேச ராஜீ வாயடைத்து நின்றாள்.

'என்னால் கூட ஏற்றுகொள்ள முடியாததை தன் மகள் இத்தனை சுலபமாக ஏற்று கொண்டாளா' என்று மலைத்து நின்றார் சிவராமன்.

".....அம்பது வயசுல எங்களுக்கு இல்லாத மனப்பக்குவம் உனக்கு எப்படிம்மா வந்தது" சிவராமன் கேட்க,

".....அனுபவம் கத்து கொடுத்துச்சுப்பா, சத்யாவை உள்ளே கூப்பிடுங்க ப்பா..." சாதனா கெஞ்ச,

சிவராமன் நெகிழ்ந்தவராய், "நீயே கூப்பிடும்மா...." என்று ஆமோதித்தார்.

சாதனா கலங்கிய கண்களும் விரிந்த புன்னகையுமாக, சத்யா, தேவியை ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்துக் கொண்டாள்.

முதல் வேலையாக, இருவரும் சிவராமன், ராஜேஸ்வரி காலில் விழுந்து மன்னிப்பு வேண்ட, அவர்கள் அரை மனதாகவே ஏற்றுக் கொண்டனர்.

சாதனா, தேவியிடமிருந்து குழந்தையை வாங்கி ஆசையோடு கொஞ்சினாள்.

புதுப்பானையில் இட்ட பசும் பாலைப் போல அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

சில சங்கடமான சூழ்நிலை ஆங்கே நிலவிய போதும் கூட.

அவள் மனதின் பெரும்பாரம் இறங்கிய உணர்வு அவளை நிறைவாய் உணரச்செய்தது.

🌾🌾🌾🌾🌾🌾
 
Last edited:

Advertisements

Top