சந்தன பூங்காற்றே....14

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
சந்தன பூங்காற்றே....14

அவசரமாக ஆஃபிஸுக்குள் நுழையும் போதே அவன் குறுக்கே வந்து, "சந்தோஷ்.... உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்...." என்ற சாதனாவை திகைத்து பார்த்தான்.

அவள் முகத்திலும் குரலிலும் என்றுமில்லாத உற்சாகமும் குதுகலமும் தெறித்தது.

எனினும், "சாதனா, காம் டவுன் திஸிஸ் ஆஃபிஸ், நாம ப்ரேக் டைம்ல பேசலாம்" என்று சந்தோஷ் போய்விட்டான். அவன் அலுவலகத்தில் தன் கெத்தை விட்டு தர விரும்பவில்லை.

சந்தோஷ் தன்னை கண்டு கொள்ளாமல் சென்றது சாதனாவுக்கு ஏமாற்றத்தை தந்தது.

சத்யா திரும்பி வந்துவிட்டதை அவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் வெறுமையுடன் தன் இருக்கையில் வந்தமர்ந்தாள்.

சிறிது நேரத்தில், சந்தோஷின் அழைப்பு வர, அவன் கேட்ட கோப்புகளை அவனிடம் தந்த சாதனாவின் முகத்தில் உற்சாகம் குறைந்திருப்பதை அவன் கவனிக்க தவறவில்லை.

இருப்பினும் வேலை நேரத்தில் கவனம் சிதறுவதையும் அவன் விரும்பவில்லை.

வேலை விசயமாக சந்தோஷ் வெளியே சென்றுவிட்டதால், உணவு இடைவேளையிலும் அவனை சந்திக்க முடியவில்லை.

காவ்யாவுக்கு ஃபோன் செய்து சிறிது நேரம் பேசினாள். ஆனாலும் அவள் மனம் அமைதி பெறவில்லை.

சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் போனது சாதனாவின் ஏமாற்றத்தை அதிகரித்தது. அதனால் அன்று முழுவதும் அவளுக்கு வேலையே ஓடவில்லை.

சந்தோஷ் எப்போதும் போல தன் வேலையில் கவனமாக இருந்தான். அன்று மாலை வேலை முடிவதற்கு சற்று நேரமானது.

சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தவன் தன் பையை தோளின் குறுக்கே மாட்டிய படி, வண்டி சாவியை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. வரவேற்பறையின் சோஃபாவில், சாதனா தலையை பிடித்து கொண்டு இரு கைகளையும் கால்களில் ஊன்றி கண்கள் மூடி அமர்ந்திருந்தாள்.

அவளை பார்த்த சந்தோஷ், 'ஓ.... மேடம் எனக்காக வெய்டிங் போல, ஆனா ஏன் இப்படி விசித்திரமா உக்காந்திருக்கா?!' என்று எண்ணிக் கொண்டு அருகில் போய் நின்றும் அவள் நிமிரவே இல்லை.

அவன் சற்று குனிந்து, "என்னாச்சு சாதனா தலைவலியா?" என விசாரிக்க அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

"பக்கத்துல ஒரு நல்ல மென்டல் ஆஸ்பிடல் இருக்கு, உன்ன கூட்டி போகவா?"

இப்போது சட்டென நிமிர்ந்தவள், "என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி தோணுதா" என்று பொறிந்தாள்.

ஏனோ அவனுக்கு அவளது குழந்தைத் தனமான கோபத்தை ரசிக்க வேண்டுமென தோன்றியது. பதில் பேசாமல் இதழ் மடித்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

"என்ன, அப்படி பாக்குற, என் முகத்தில பைத்தியக்காரின்னு எழுதி ஒட்டியிருக்கா?"

"ச்சே ச்சே இல்ல, கோபத்தில கூட நீ ரொம்ப அழகா இருக்க சாதனா" என்றான் தன்னை மறந்தவனாய் அவள் முகத்தில் இருந்து பார்வையை விலக்காமல்.

"என்ன சொன்ன?" என்று இருக்கையிலிருந்து மின்னலென எழுந்தாள் அவள்.

சந்தோஷ் சமாளித்து கொண்டு, "நீ இப்பெல்லாம் குழந்தை மாதிரி அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்ட, சாதனா" என்றான்.

"எல்லா உன்னால தான், எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியாதா? உன்னால"

"சரி, சாரி இப்ப சொல்லு கேக்கறேன்"

"நான் எதுவும் சொல்ல மாட்டேன், உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல" என்று வீராப்பாக சென்றவளை சந்தோஷ் கைபிடித்து நிறுத்தினான்.

அவன் முகத்தில் புன்னகை விரிந்தது. "சத்யா திரும்பி வந்தாச்சு, உங்க அப்பா அம்மாவும் அவரை மன்னிச்சு ஏத்துகிட்டாங்க, இதை தானே சொல்ல வந்த" சந்தோஷ் புருவத்தை உயர்த்தி கேட்க,

கோபத்தில் சாதனா கண்கள் சுருங்கின. "காவ்யா சொன்னாளா?"

"ம்ம் ம்ம்" அவன் மேலும் கீழும் தலையாட்டினான்.

"அப்ப எல்லாம் தெரிஞ்சிகிட்டே என்னை வெறுப்பேத்தின இல்ல" என்று சந்தோஷை அடிக்க கை ஓங்கியவள் தன்னுணர்வு தடுக்க, சட்டென கையை கீழே இறக்கி கொண்டாள்.

'சந்தோஷிடம் நான் எத்தனை உரிமையுடன் பழக ஆரம்பித்துவிட்டேன்' என்று தோன்ற சாதனாவின் இதயம் தடதடத்தது.

சந்தோஷ், "உண்மையிலேயே உன்ன நினச்சு பெருமையா இருக்கு சாதனா, உன் இடத்தில நான் இருந்திருந்தா நிச்சயம் சத்யாவை மன்னிச்சிருக்க மாட்டேன்"

"அந்த இடத்தில என்னை தெளிவான முடிவு எடுக்க வச்சது உன்னோட ப்ரண்ட் ஷிப் தான் சந்தோஷ்" அவள் அவனை கைகாட்ட,

அவன் தன் வயிற்றின் குறுக்கே கையை மடித்து வைத்து இடைவரை குனிந்து நன்றி சொல்வதைப் போல பாவனை செய்ய, இருவரும் மனம் நிறைந்த புன்னகையோடு அங்கிருந்து நடந்தனர்.

'நம்பகமான தோழமை ஒன்று இருந்தாலே போதும்.... எதற்கும் அஞ்சாமல் ஒருவனால் எதையும் சாதிக்க முடியும்' என்ற உண்மையை சாதனா இன்று சரியாகவே புரிந்துக் கொண்டாள்.

பாதுகாப்பற்ற அவளின் தனிமை உணர்வை போக்கி, அவளுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அளித்தது சந்தோஷின் நட்பு அல்லவா....!

தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த மனம் தானே நல்ல தெளிவான எண்ணங்கள் பிறக்கும் விளைநிலம்....!

பயமும் கவலையும் பொதிந்த மனதில் சீர்மை எண்ணங்கள் தோன்ற வழியே இல்லையே.....!

சந்தோஷின் நட்பு கிடைத்ததற்கு நெகிழ்ச்சியோடு மனதில் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள்.

✴️✴️✴️✴️✴️
 
Last edited:

Advertisements

Top