சந்தன பூங்காற்றே....21

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
சந்தன பூங்காற்றே 21

சாதனா தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்ட பிறகு சந்தோஷும் கிளம்பிவிட்டான்.

தூரத்தில் சாதனா சென்று கொண்டிருப்பதையும் கவனித்தான்.

அவன் பார்க்கும் போதே அந்த விபத்து நேர்ந்துவிட, தன்னையும் மீறி "சாதனா...." என்று கத்தி விட்டான்.

அவன் கண் முன்னாலே சாதனா வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டாள்.

சுய நினைவற்று இரத்த வெள்ளத்தில் கிடந்தவளை பார்த்தபோது அவன் உயிர் பிரிந்து மீண்டது.

உடனே தன்னை சமாளித்துக் கொண்டு காயம்பட்ட இடத்தை இரத்தம் வராமல் இறுக்கிக் கட்டினான்.

ஆட்டோவைப் பிடித்து, அவள் உடலை கையிலேந்தி கொண்டு அருகிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தான்.

சாதனாவிற்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸ்க்கு காத்திராமல் விரைவாக மருத்துவமனை அழைத்து வந்தது அதிகமான இரத்த சேதத்தை தவிர்த்து இருந்தது. சிகிச்சையும் விரைவாக மேற்கொள்ளப் பட்டது.

இதுவரை எந்த சூழ்நிலையிலும் சந்தோஷ் இத்தனை அச்சத்தின் வயப்பட்டதில்லை.

இரத்தக்கறை படிந்த சட்டையுடன் இருந்தவன் கண்களில் வெந்நீராய் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டு இறைவனை பிராத்தித்தான். சாதனாவின் நலம் வேண்டினான்.

அவள் நிலை தன்னை முற்றிலும் பலவீனமாக்குவதை உணர்ந்தான்.

தலையிலும் கையிலும் கட்டுக்களுடன் வாடிய மலராய் விழி மூடிக் கிடந்தவளைக் காணும் போது அவன் இதயம் நழுவிச் செல்வதைப் போலிருந்தது.

இனி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொன்ன பிறகுதான் அவன் உயிரும் மீண்டிருந்தது.

சந்தோஷ் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

மாலையில் இவள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் அலட்சிப்படுத்தியது அவன் நினைவில் அலையாடியது.

'....இந்த உலகத்தில சாவு ஒண்ணும் புதுசில்ல....ஆனா உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நான் பயந்த பயம்.... உன் காயத்துக்கு எனக்கேன் வலிக்குது.... தெரியலடி....ஒருவேளை நீ என்னை புரிஞ்சிக்க சொன்ன காதல் இதுதானா....!' அவனுக்குள் பிதற்றினான்.

அவள் விரல்களை மெல்ல பற்றி தன் கையோடு சேர்த்து கொண்டவன், "....உனக்கு ஒண்ணும் ஆகாது சாதனா.... உனக்காக நான் இருக்கேன்.... எப்பவுமே உனக்கு துணையா இருப்பேன்...." என்று அவன் மெதுவாக உச்சரித்த வார்த்தைகள் நிசப்தமான அந்த அறை முழுவதும் பரவுவதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்தின.

சிறிது நேரம் விழியெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் முகத்திற்காக குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து மீண்டான்.

சாதனா கண் திறக்க முயல, அவள் முன்பு ராஜேஸ்வரி, சிவராமன், காவ்யா, கல்யாணி, சத்யா, தேவியும் குழந்தையுடன் நின்றிருந்தாள்.

அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதியுணர்வு தெரிந்தது.

அவள் தலை இரண்டாக பிளந்து விடுவது போன்ற வலி தெறிக்க, தலையை ஒரு கையால் பிடித்து கொண்டாள். மறுக்கையை அசைக்க முயல முடியாமல் அதிகமாக வலித்தது.

இப்போது தான் நடந்த விபத்தை பற்றிய நினைவு அவளுக்கு வந்தது.

"ரொம்ப வலிக்குதா சாதனா, பார்த்து கவனமாக வரக்கூடாது. நல்லவேளை உனக்கு ஒண்ணும் ஆகல" என ராஜேஸ்வரி கலக்கத்துடன் சொன்னது சாதனாவின் காதில் விழவே இல்லை.

அவள் விழிகள் அங்கும் இங்கும் அலைந்து யாரையோ தேடின. அவன், அவள் கண்ணில் படவில்லை.

ஏதோ உணர்ந்தவளாய், தன் நெற்றியை விரல்களால் தடவினாள். அவன் முத்தமிட்ட இடம் சில்லிட்டது. இனம் புரியாத இதம் அவளுக்குள் பரவியது.

சாதனாவின் அருகில் வந்த காவ்யா, "சீக்கிரமே குணமாயிடும் சாதனா. நீங்க எதை பத்தியும் கவலபடாம நல்லா ரெஸ்ட் எடுங்க" என்று பரிவுடன் கூறினாள்.

சத்யாவிடம் சாதனாவின் கைப்பை, வண்டி சாவியை காவ்யா கொடுக்க, அவற்றை வாங்கி கொண்ட சத்யா, "உங்க அண்ணன் செஞ்ச உதவியை எங்களால எப்பவுமே மறக்க முடியாது" என்று நன்றி தெரிவித்துக் கொண்டான்.

"ச..சந்ந்..தோஷ்....எங்..க...." தன் வலியையும் மீறி குரல் தடுமாற சாதனா கேட்டாள்.

கல்யாணி, "இவ்வளவு நேரமும் இங்க தான் இருந்தான். இப்ப தான் வீட்டுக்கு போயிருக்கான். கொஞ்ச நேரத்தில வந்திடுவான், நீ ஓய்வெடு சாதனா" என்று பரிவோடு கூறினாள்.

சாதனாவால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல், அவள் இமைகளை யாரோ இழுத்து மூடுவது போல் தோன்றியது.

✴️✴️✴️✴️✴️✴️

இந்த ஐந்து நாட்களில் சாதனாவின் உடல்நிலை ஓரளவு தேறியிருந்தது.

உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் வந்து நலம் விசாரித்து சென்றனர். தினமும் கல்லூரி முடிந்ததும் காவ்யா வந்து சாதனாவைப் பார்த்து சென்றாள்.

தேவராஜன், கல்யாணி கூட வந்து பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.

ஆனால், சந்தோஷ்...... இன்று வரை ஒருமுறை கூட தன்னை பார்க்க வராதது சாதனாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.

தனக்கு ஓர் ஆபத்து என்றவுடன் ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிவிட்டு, இப்போது நேரில் வராமல் அலைக்கழிப்பதின் காரணம் அவளுக்கு புரியவில்லை.

தான் அரை மயக்கத்தில் இருந்த போது தன் கரம் பிடித்து சந்தோஷ் ஏதோ சொன்னது போல் சாதனாவுக்கு நிழலாடியது.

ஆனால், அது கனவா, நிஜமா என்பதை கூட அவளால் பிரித்தறிய முடியவில்லை.

காயத்தினால் ஏற்படும் வலியை விட அவன் நினைவுகள் உண்டாக்கும் வேதனை அதிகமாக தோன்றியது.

மேலும், தாங்கமுடியாமல் அலைபேசியில் எண்களை அழுத்தினாள்.

மறுமுனையில் சந்தோஷ், "சொல்லு சாதனா, எப்படி இருக்க" என்று சாதாரணமாக விசாரித்தான்.

சாதனா அதற்கு பதில் சொல்லாமல், "....எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு சந்தோஷ், வருவியா?" அவள் குழந்தையாக வேண்ட, அவனும் "சரி வரேன்" என்று தொடர்பைத் துண்டித்தான்.

"உடம்பு எப்படி இருக்கு, இப்ப பரவாயில்லையா?" என்று சாதனாவை பார்த்து சந்தோஷ் கேட்க, ஏதோ கடமைக்காக விசாரிப்பவனை போல தோன்றியது சாதனாவுக்கு.

"கம்பேனியில நிறைய வேலை, அதனால தான் உன்னை பார்க்க வரமுடியல" என்று பட்டும் படாமல் பேசியவனை மௌனம் கலையாமல் வெறித்துக் கொண்டிருந்தாள் சாதனா.

அவளது மௌனத்தை சாதகமாக்கி கொண்டு, "நீ ரெஸ்ட் எடு, நான் கிளம்புறேன், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவன் நழுவி செல்ல முயல,

"சந்தோஷ்.... கொஞ்ச நேரம் என்கூட பேச உனக்கு நேரமில்லாம போச்சா" காதலும் ஏக்கமும் அவள் குரலில் நிறைந்திருந்தது.

ஒருமுறை ஆழ மூச்செடுத்துக் கொண்டு அவள் புறம் திரும்பினான்.

அவன் முகத்தை ஊன்றி கவனித்த சாதனா, "என்னாச்சு சந்தோஷ், ஏன் ஒரு மாதிரியா இருக்க...." எனக் கேட்க,

"நான் எப்பவும் போல தான் இருக்கேன்" அவன் பதில் அவளை திகைக்க வைத்தது.

எப்போதும் தன் கண்களை பார்த்து பேசுபவன் இன்று எங்கேயோ பார்த்து கொண்டு தன்னிடம் பேசுவது அவளுக்கு நெருடத்தான் செய்தது.

"....இல்ல, உன் முகம் வாடியிருக்கு, என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?" ஆற்றாமல் கேட்டு விட்டாள்.

சாதனா தன் மனநிலையை இத்தனை கச்சிதமாக ஊகிப்பாள் என்று சந்தோஷ் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

"பின்ன....நீ செஞ்ச காரியத்தை நினச்சு நான் சந்தோச படவா முடியும்?" அவன் பேச்சின் விதம் மாறியது.

.....!

"வண்டி ஓட்டும் போது கவனமா இருக்கணும்னு உனக்கு தெரியாது? உன் மூளையை எங்க அடகு கடையலியா வச்சிருக்க? உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் இந்நேரம்...... உன் போட்டோவுக்கு மாலை போட்டிருப்பாங்க" கோபமும் ஆதங்கமுமாய் பேசினான் அவன்.

.....!

"உனக்கு வெளியில இருந்து யாரும் செய்வினை வைக்க வேணாம், உனக்கு நீயே வச்சுப்ப, முதல்ல கல்யாணத்தில பிரச்சனைன்னு விஷம் குடிச்ச, இப்ப காதல் பிரச்சனைக்கு கார் முன்னாடி விழுந்திருக்க, உனக்கு தைரியம், தன்னம்பிக்கை எதுவுமே கிடையாதா?"

"....உன்ன மாதிரி ஒரு கோழை கூட ஃபிரண்ட்ஷிப் வச்சுகிட்டேன்னு நினைக்கும்போது எனக்கே கேவலமா இருக்கு" இறுகிய முகத்துடன் படபடவென பொரிந்து விட்டு அங்கிருந்து வேகமாக அகன்றான்.

சாதனா வாயடைத்து போய் பார்த்து இருந்தாள்.

அவனிடம் இத்தனை ஆத்திரத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் பேசி சென்றது நினைத்து ஏனோ அவளுக்கு சிரிக்கத்தான் தோன்றியது.

சந்தோஷ் தன்னிடம் உரிமையாக கோபித்து கொண்டது இவளுக்கு சுகமாகத்தான் தோன்றியது.

✴️✴️✴️✴️✴️
 

Advertisements

Top