• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமஸ்தானம் ( வரலாற்றுத் தொடர்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
1. திருவேள்பூர்

வெள்ளி பூப்பூப்பதற்கு முன்பே பொஞ்சாதி, பிள்ளையுடன் திருவேள்பூர் சந்தைக்கு வந்திருந்தான் குடம்பன். அவன் வந்தது சந்தையையும், சந்தையில் கூடிய ஜனங்களையும் சுற்றிக்காட்டத்தான் என்றாலும் அவனால், மாட்டுச்சந்தை தொழுவத்தைத் தாண்டி ஓரடி எடுத்து வைக்க முடியவில்லை.

குடம்பன் வாரம் தவறாது கையில், கம்பான் சேவலோ, கழுகுச் சேவலோ ஒன்றைப் பிடித்து கால்க்கட்டுக் கட்டி, கட்டிய கால்களுக்கிடையில் துண்டை குறுக்குவாக்கில் கொடுத்து முதுகில் கிடத்திக்கொண்டு வெட்டு நடையில் சேவல் இறக்கை உதறி கூவுவதற்குள் சந்தைக்குள் நுழைந்துவிடுகிறவன்.
திருவேள்பூர் சந்தை அவனுக்கு அத்துப்படி. சங்கு மூக்குக்குள் நூல் நுழைந்து அங்கே, இங்கேயென பாய்ந்து கச்சிதமாக வெளியேறுவதைப் போலதான் குடம்பனும். அவ்ளோ பெரிய சந்தையில் எந்த தலைப்பில் விட்டாலும் சரியாக வெளி வந்துவிடுவான். அத்தகையவனால், மாட்டுச் சந்தையைத் தாண்டி, அவனால் ஓரங்கலம் கடக்க முடியவில்லை.

சந்தையை வேடிக்கைக் காட்ட கூட்டி வந்த பொஞ்சாதிக்கு, மாட்டுச்சந்தைதான் திருவப்பூர் சந்தையெனக் காட்டி கூட்டிச் செல்லலாமா, என நினைத்தான். மாட்டுச் சந்தையை வேடிக்கைப் பார்க்குமளவிற்கு மாடுகளிடம் நிறைய சங்கதிகள் இருந்தன. காளையின் கொம்பு, திமில், தினவு, கொழுகொழுப்பு.எத்தனை சீமை மாடுகள். எத்தனை ரக காளைகள்,...

‘பேச்சி..’

அவளது இடுப்பில் ஆட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட ஈச்சங்கூடை இருந்தது. அவள் இமை தூங்க, புருசன் காலடி அரவத்தினூடே பின் தொடர்ந்தவளாக இருந்தாள். கூடை இடுப்பிலிருந்து நழுவவும், அதை இடுப்புக்கு ஏற்றவுமாக நடந்தவள், புருசன் அழைப்பைக் கேட்கவும் செவியும், கண்களும் திறந்துகொண்டன. ‘ என்னங்க...?.’

‘ மாட்டுச் சந்தய வேடிக்கப் பார்க்கலாமா புள்ள...?’

‘ என்ன சொல்றீங்க, மாட்டுச் சந்தைய வேடிக்கையா...’

‘ ஆமாம்புள்ள, அதோ பாரு, கொக்கரிக்கொம்பு மாடு ’
மாட்டின் பெயரைக் கேட்கையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘ அது என்னங்க, கொக்கரிக்கொம்பு’

‘ பாரு, ஒரு கொம்பு நேராக இருக்கு. இன்னொன்னு வளைஞ்சி இருக்குது...’
அவள் ஆமாம், என்பதைப் போல, அவள் கால் கட்டை விரலை உந்திக்கொடுத்து பார்த்தாள்.

‘ அதோ பாரு, செவலைச் செம்பரை...’

அவன் காட்டியத் திசையில் நான்கைந்து மாடுகள் நின்றன. ஒன்றையொன்று முட்டிக்கொண்டு, தள்ளிக்கொண்டு, வாலைத் தூக்கி விட்டு விட்டு மூத்தரம் பெய்யவும், சாணம் போடவுமாக இருந்தன. எதை அவர் காட்டுகிறார், அதில் எது செவலை, எது செம்பரை, ரெண்டு மாடா, ஒரே மாட்டுக்குத்தான் இவ்ளோ பெரிய பேரா...? பார்க்க வேண்டும் என்பதற்காக அவள் பார்த்தாள்.

இருவரும் மாட்டுச் சந்தையை நெருங்கியிருந்தார்கள். சந்தையில் மாடுகளின் அரவமும், மா,...ம்மா...கூப்பாடுகளும் காதுக்குள் யாரோ கத்துவதைப் போலிருந்தது.

நேற்றைய தினம் பெய்திருந்த ஒரு கொட்டு மழைக்கு, சந்தையின் கூடுவாயிலும், மாட்டுச் சந்தைக்கான இரட்டைத்தட வழியும் சகதியும், உலையுமாக குழைந்திருந்தது.

‘ இவ்வளவுண்ணா கொடுத்திரலாமா?’, ‘ மசியாதுங்க’ , ‘ இதுக்கு...’, ‘ மாட்டாது...’, ‘ இதெ, இம்புட்டேதான். இதெ வச்சி முடிங்க....’, ‘ என்ன சொல்றீங்க...?’, ‘ என்னது தட்டைக்கா, தாளுக்கா’ மாட்டுச் சந்தை சங்கேத மொழிகள் சன்னமாக காதினில் விழுந்துகொண்டிருந்தன.
பேச்சி, இடுப்புக் கூடையை மறு இடுப்புக்கு மாற்றி நிமிர்ந்து பார்த்தாள். புருசன் தோளில் உட்கார்ந்திருந்த மகள் , அவரது கழுத்தைப் பிடித்தவாறு தலையில் தலை வைத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

‘ ஏன்ங்க...?’

‘ என்ன புள்ள...?’

‘ புள்ளய எறக்கி விடுங்க... நான் கூட்டி வாறேன்...’

‘ வேணாம் புள்ள. ஜன நடமாட்ட அதிகமா இருக்கு.. வாரச் சந்த பெருஞ்சந்தையா கூடியிருக்கு. என் காலப் பார்த்து நடந்து வா, அங்கே இங்கேனு வேடிக்கைப் பார்க்காம...’

குடம்பன் மாட்டுச்சந்தையையே சுற்றிச்சுற்றி வந்தான். அவன் சந்தைக்கு வெளியே தெற்கே அரை வட்டமாக வாரி ஓடிக்கிடந்தது. மோர்சா குளம் பெருக்கெடுத்தால் வடிகால் வாரி அது.

குடம்பனுக்கு இடுப்பிலிருந்த வேட்டி கனப்பதாக இருந்தது. இப்படியாக இதற்கு முன், முழங்கால் கீழ் வரைக்கும் வேட்டியை உடுத்திக்கொண்டு வந்ததில்லை அவன். அவன் உடுத்தும் வேட்டி கீழ்த்தொடை அளவிற்கே இருக்கும். சேவல் கால்களைக் கோர்த்திருக்கும் துண்டு இடுப்புக்கு வந்துவிடும். சந்தைக்கு வந்து கையோடு கொண்டு வந்திருந்த சேவலை சட்டுப்புட்டென விற்றுவிட்டு, அம்மன் காசை இடுப்பில் சுற்றிக்கொண்டு, சந்தைக்கு போகிற, வருகிற ஆட்களுக்கு வழிக்காட்டி, அவர்கள் கொடுக்கும் தவச தானியத்தை துண்டில் முடிந்துகொண்டு நெற்றிக்கு வெயில் வருகையில் வீடு திரும்புகிறவன்தான் இந்த குடம்பன். இன்று அவன், முழங்காலுக்கும் கீழ் வரை உடுத்திய வேட்டியும், அவன் பின்னே இராஜகுமாரியைப் போல வந்திருந்த பேச்சியும், தோளிருந்து மகளும் நெஞ்சுக்குள் சுமையென கனத்தார்கள்.

‘ இதுதே இவ்ளோ நாளு நீங்க கதை அளத்த திருவப்பூரா...?’

பொஞ்சாதி கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் அதே இடத்தில் நின்று, இம் என்பதா, இல்லை என்பதா, சொல்ல முடியாதவனாய், நுனி காலால் எக்கி யாரையோ தேடுவதைப் போல பார்த்தான்.

‘ நா இங்க இருக்க, யாரத் தேடுறீரு....’

‘ நா யாரத் தேடுதே. வேடிக்கதான் பார்க்கேன்...’

‘ யாரையோ தேடுற மாதிரில பார்க்குறீக....’

அவன் தோளிலிருந்த மகளை புட்டத்திற்கு ஒரு கையும், கை அக்குளுக்கு ஒரு கையுமாகக் கொடுத்து, மகளை மறுதோளுக்கு மாற்றி மாட்டுச் சந்தையை மறுவலம் வந்தான்.

‘ ஏங்க சந்தைன்னா சந்தனம் விக்கும், குங்குமம் விக்கும், சேல, பாவாட விக்கும், கம்பு, சோள, தினை விக்கும். இங்கேயென்ன மாடுக தானே விக்குது...’ அதைச் சொல்லுகையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘இதுதே சந்தையா...? இதெப் பார்க்கத்தே இவ்ளோ தூரம் வந்தோமா...?’ இடுப்பிலிருந்த ஈச்சங்கூடைக்குள் தலையை நுழைத்து குழுங்கிச் சிரித்தாள். அவளது சிரிப்பு அவனது அடி வயிற்றை நெம்புவதாக இருந்தது.

‘ இன்னைக்கு நாம, திருவப்பூரு சந்தைக்கு போவ வேணாம் புள்ள...’

‘ ஏ...?’

‘ ஏன்னா, இந்த வாரம் குடியானவ சந்தை மட்டுந்தே...’

‘ நம்ம?’

‘ நாம சேரி புள்ள. நமக்கு காப்பு அறுத்தப் பொறகுதான் சந்தெ..’

‘ என்னய்யா சொல்ற, காப்புங்கிறே, அறுக்கணுங்கிறே...?’

‘ ஆமா புள்ள, மாரியம்மனுக்கு காப்புக் கட்டிட்டாங்க. புலயன் சாதி சனங்க சந்தையில கூடக் கூடாதென போன வாரம் தண்டோரா போட்டிருக்காங்க. நாந்தே போன சந்தைக்கு வரலையா, தெரியாமப்போச்சு ’ இதை அவள் கேட்கையில், அவளையும் அறியாமல், அரை கூடை அளவிற்கு கழிந்து கிடந்த சாணத்தில் முழு பாதத்தையும் வைத்துவிட்டாள். சாணம் கணுக்காலுக்கும் மேல் ஏறியிருந்தது.

அவள் ஒரு காலை ஊன்றி, மறுகாலை உதறு, உதறென உதறினாள்.

‘ என்ன மனுசன்யா நீ. தெக்கெ வடக்கெ போயிவந்த வழக்கம் உண்டா, இல்லய்யா உனக்கு. இதுக்கா, கண்ணுக்குத் தூங்கி, சாம ஏமத்தில எழுந்து, பாம்புனு தெரியாம,பள்ளமெனத் தெரியாம நடந்து வந்தோம். புள்ளய நீ பார்க்கிறதானே. அவளுக்குத்தான் எம்புட்டு ஆச, ஒரு மாசமாகவே சாதி சனத்துக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தா, நாங்க திருவப்பூரு சந்தைய பார்க்கப் போறோமெனு. இந்த பச்சப்பிள்ளய ஏமாத்த ஒனக்கு எப்படியா மனசு வந்துச்சு...?’

‘ என்னடி செய்யச் சொல்ற, பாரு, வேப்பல, மாந்தோரணம் கட்டியிருக்கு....’

‘ அதுக்கு...?’

‘ இப்படியே திரும்பி போயிடுவோம். பூச்சோரிப்பு முடிஞ்சு, காப்பு அறுத்தப்
பொறகு வருவோம்...’

‘ இன்னொருக்கா, இவ்ளோ தூரம், புள்ளய இழுத்துக்கிட்டு, வரணுங்கிறியா நீ...’

‘ வேற என்ன புள்ள செய்ய...’

‘ நீ போய்யா, நீதான் பார்க்க புலயன் மாதிரி இருக்கே, எனக்கு என்ன, நான் இந்த வெள்ளச் சேலையில நாளஞ்சு இடத்தில மஞ்சளக் குழச்சி அப்பிக்கிட்டு சந்தைக்குள்ளே நுழைஞ்சேனா, காப்புக் கட்டியிருக்கிற மாரியாத்தாதான், சாமியா வந்திருக்கென கைய எடுத்து கும்பிடுவாங்க... நீ அவள எறக்கி விடு. நாங்கப் போயி சந்தய சுத்திக் காட்டிட்டு வாறே...’ என்றவள் குடம்பன் தோளிலிருந்த மகனை இழுக்க, அவள் திடுக்கென விழித்து, கீழே குதிக்க, அவளை ஒரு பக்கமாக அணைத்துக்கொண்டு ‘ நீ இந்தக் கூடைய வச்சிக்கிட்டு இய்னேயே நில்லுய்யா, ஒரு தாண்டு போயி சந்தையச் சுத்திக் காட்டிட்டு, உனக்கு பறைய வேட்டியும், எனக்கு வெள்ளச் சேலையும் வாங்கிக்கிட்டு வந்திடுதே ...’ என்றவள் வெட்,வெட்டென ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த மாடுகளை அதட்டி, விரட்டி ஜனங்களோடு ஜனமாக நடந்தாள்.
 




Last edited:

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அருமையா இருக்கு பா எங்க பூர்வீகம் இந்த திருவப்பூர் தான்.... தலைப்பு பார்த்ததும் இருக்குமோனு வந்தேன் திருவேள்பூர் னு நீங்க சொல்லி தெரியுது பா ரொம்ப மகிழ்ச்சி
 




Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
அருமையா இருக்கு பா எங்க பூர்வீகம் இந்த திருவப்பூர் தான்.... தலைப்பு பார்த்ததும் இருக்குமோனு வந்தேன் திருவேள்பூர் னு நீங்க சொல்லி தெரியுது பா ரொம்ப மகிழ்ச்சி
நம்ம ஊர் கதைதான்...தொடர்ந்து வாசிங்க..நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top