• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமஸ்தானம் - 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
திருசிறபுரம்

ஒரு மாதக் கால முடிசூடும் விழாவிற்கான திட்டமிடல்கள் யாவும் ஒரு நொடியில் வியர்த்தமாகின. இமை பொழுதும் சோரா வேலைகள் யாவும் ஏற்றுநீர், மடை போய் சேர்வதற்குள்ளாக, கிணறு ஊறி கிணற்றுக்குள் குந்திவிட்டத்தைப் போன்று நிலைகுலைந்தன. வெங்கப்பஅய்யர் முகம் சொடுங்கி, ஏமாற்றம் துலங்கி இடிந்துபோனார்.

அக்னி ஆற்றாங்கரையில் முடிச்சு முடிச்சாக அமர்ந்து தாயம் உருட்டிக் கொண்டிருந்தவர்களுக்கிடையில் கைகலப்பானது. தாயம் உருட்டுவதை விடுத்து, ஒருவரையொருவர் அடிக்க, சாய்க்க இருந்தார்கள். சண்டைக்கு என்ன தெரியும்...? தலைச் சிலுப்பி, இறக்கையை விரித்து, தாவிக் குதித்து, சண்டைமுடிந்துகொண்டிருந்த சண்டைச் சேவல்கள், சண்டையை அத்துடன் நிறுத்தி, குழுமி நின்ற கூட்டத்திலிருந்து பறந்து மறைந்தது. முடி சூடும் படலம் நின்றுபோனதும், முகவாய்க்கட்டைக்கு கையைக் கொடுத்து சிரித்தச் சிரிப்பில் தாவங்கொட்டை தனியே கழண்டு விழுந்துவிடுவதைப் போலிருந்தது.

முடி சூடும் விழா நடந்தேறாது என சூது கட்டிய சித்தார்த்தன், அத்தனை காசு முட்டுகளையும் வாரி அள்ளி ஒரு பெருந்துண்டில் முடிந்துகொண்டு நகர்கையில், யார் அவனை விட்டார்கள். அவனை அடித்துத் துவைத்து, கால், கைகளை முறித்து, இரத்தமும் சகதியுமாக அவனைக் கிடத்திவிட்டு அவன் அள்ளி முடிந்த காசுகளை அள்ளிக் கொண்டு குன்றுக்குக் குன்று தாவி, ஓடி மறைந்தே விட்டார்கள். முடி சூடும் விழா நடந்தேறாது என கச்சிதமாகக் கணித்து காசு கட்டிய சித்தார்த்தன் இரத்தமும் சதையுமாக குன்றிலிருந்து உருண்டு குன்றடியில் விழுந்து கிடக்க, வழிப்போக்கர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய் மருந்து தடவி, அன்னம், ஆகாரம் கொடுத்துப் பிழைக்க வைத்தார்கள்.

பதினைந்து நாள் பூஜை செய்துகொண்டிருந்த கோயில் குருமார்கள், அதற்குப் பிறகும் கோயிலுக்குள் நின்றிருக்கவில்லை. தர்பாரில் கூடியிருந்தவர்கள் குனிந்தத் தலை நிமிராது, நிற்க, களையவென இருந்தார்கள்.

‘ தொண்டைமான்ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது....’

‘ அதானே, தமிழை தெலுங்கு ஆள்வதா...?’

‘ இனி இந்த சீமை நவாப் வசமோ, நாயக்கர் வசமோ....?’

சிரிக்க, வெடிக்க, துள்ளிக்குதிக்க சிலர். சிரித்தவர்களைத் துரத்திப் பிடிக்க, அடிக்க, கைகால்களை முறிக்க சிலர். சீமையெங்கும் கபளீகரம். தொண்டைமானுக்கு எதிராக, ஆதரவாக...கையில் கிட்டும் கற்களை எடுத்து வீசவும், குறிப்பார்த்து எறியவும், கண்ணில் சிக்கும் வைகோல்போர் மீது தீ வைக்கவென இருந்தார்கள். எங்கும் புகைமூட்டம். மண் தூற்றம். கலவர நாற்றம்.

வெங்கப்பஅய்யரால் நடந்தேறும் கோலத்தை வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிந்தது. அவரது பகடையாட்டம் கைகூடவில்லை. அவர் விரித்த சதுரங்க பலகையின் மீது அவர் நினைக்கும்படியாக காய்கள் நகரவில்லை. இத்தனை நாட்கள் ஓங்கியிருந்த அவரது கைவிரல் சுடங்கிப்போயிருந்தது. கம்பீரம் தறித்த குரல் சுணங்கியிருந்தது.

முடிசூடும் விழாவிற்கு இன்னும் ஆறு மணி நேரமே இருக்கையில், இப்படியான கபளீகரத்தை வெங்கப்ப அய்யர் மட்டுமல்ல. யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்தான். அமைதியாக நடந்துகொண்டிருந்த முடிசூடும் விழா முன்னேற்பாடுகள், திருசிறபுரம் நவாப் குதிரைப் படை சீமைக்குள் நுழைந்த பிறகுதான், அமைதி கட்டுக்குலைந்தது.

நவாப் குதிரை வரும். குதிரையில் நவாப் வருவார். சீமைக்கான அடுத்த மன்னரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கச் செய்து, முடிசூட்டுவாரென்றே மக்களும், அவையும் எதிர்ப்பார்த்திருந்தார்கள். வந்தது நவாப் குதிரைதான். ஆனால் குதிரை அணிவகுத்து வரவில்லை. படை வகுத்து வந்தது. குதிரைகள் யாவும் அரண்மனைக்கோ, முடிசூடும் கோவிலுக்கோ வரவில்லை. அரண்மனை, மதில், வாசல், கோட்டை, கோவில், குளங்களை வட்டங்கட்டி நின்றது. வெங்கப்ப அய்யர் கையை உதறிக்கொண்டு ஓடி வந்தார். அவர் வருவதற்குள்ளாக, குதிரை அவர் முன் வந்து நின்றது. குதிரையின் மீது உட்கார்ந்திருந்தவன் கீழே இறங்கவில்லை. இடுப்பில் சொறுகியிருந்த மடங்கலை அவிழ்த்து வெங்கப்பர் முன் நீட்டியபடி சொன்னான், ‘ இது நவாப் உத்தரவு...’

மடங்கலை வாங்கி விரித்த வெங்கப்பர், ஒரு வீச்சில் வாசித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கையில் அவர் முன்பாக குதிரை நின்றிருக்கவில்லை. மடங்கலை அவர் வாசிப்பதற்குள்ளாகவே முடிசூடும் விழா நடக்கப்போறதில்லை என்கிற செய்தி எட்டுத்திக்கும் தீயை விடவும் வேகமாகப் பரவியது.

இசை தர்பார் சுதி மீட்காமல் பாதியில் அறுந்தன. ஆரோகணத்திற்கு ஏறியிருந்த சுதி கீழே இறங்காமல் உறைக்குள் கவிழ்ந்தன. ஒன்பது பெருங்கோவிலுக்கும், பதினெட்டு சிறுகோவிலுக்குமாக நடந்துகொண்டிருந்த அபிஷேகம், ஆராதணை பாதியோடு நின்றன. சன்னதியில் குழுமி அபிஷேகம் செய்துகொண்டிருந்த குருமார்கள் பின்தலையில் முடிச்சிட்டிருந்த குடுமியை அவிழ்த்து, திரும்பவும் முடிச்சிட்டு இடுப்பில் கட்டியிருந்த பட்டையை அவிழ்த்து மார்பின் குறுக்குவாக்கில் கிடத்திக்கொண்டு சன்னதியை விட்டு வெளியேறினார்கள். பெருக்கெடுத்த வெள்ளம், உடைபெடுத்து நாலாபுறமும் பாய்வதைப்போல கூடி, குழுமிய மக்கள் நாலாபுறமும் தெறித்து விலகி ஓடினார்கள்.

முகம் சொடுங்கி, முதுகு குனிய உட்கார்ந்திருந்தார் வெங்கப்ப அய்யர். ‘ நானொரு மூத்த அமைச்சன். என்னிடமும் ஆலோசனை கேட்டிருக்க வேண்டாமா? ஜாதகம் பாடுகிறது என்று தொண்டைமான் சீமையை சகதியில் சிக்கி நிறுத்தி விட்டீரே...’ கேட்க வேண்டியவருக்குக் கேட்கும்படியாக, அதே நேரம் இதற்குப்பிறகு நானொரு சூழ்ச்சியம் நடத்த இருக்கிறேன், என்பதைச் சொல்லாமல் சொல்லி நிறுத்தினார் முத்துக்குமரப்பிள்ளை.

வெங்கப்பஅய்யரைச் சுற்றி நின்ற அத்தனை பேரும் முத்துகுமரப் பிள்ளையின் பக்கமாக வந்து சேர்ந்தார்கள். விஜயரகுநாத தொண்டைமான்தான் அடுத்த மன்னர், என்பதாக பேசியவர்கள், பெருந்தேவி ஆயிதான் தொண்டைமான்சீமையை ராணியாக இருந்து ஆளப்போகிறார், என பேசத் தொடங்கினார்கள்.

‘ காலமான மன்னரின் மகளுக்கு அப்படியொரு விருப்பம் இருக்கிறதா...?’

‘ எப்படியொரு விருப்பம் இருக்கிறதா....?’

‘ ராணியாக, சீமையை ஆள....’

‘ ஏன் கூடாதா...?’

‘ ஒரு பெண்ணால் அது முடியுமா, ஒரு பெண் இந்த சீமையை ஆளத்தான் வேண்டுமா...?’

‘ ஏன் இராமநாதபுரத்தை ராணிமுத்து ஆச்சி ஆளவில்லை.’

‘ பெண் ஆள மழை பெய்யுமா...?’

‘ ஆண் ஆண்டால்தான் பூமி விளையுமா...?’

‘ மன்னனுக்குப் பிறகு அவரின் வாரிசு ஆள்வதுதானே முறை...’

‘ என்ன பேசுகிறாய். இதற்கு முன்பு இந்த சீமையை ஆண்டது குளத்தூர் அரண்மனையினர். அவரிடம் வாரிசு இல்லையென்றுதானே சித்தப்பாவிடம் ஒப்படைத்தார்கள்...’

‘ உன் பேச்சுக்கே வருகிறேன். அவர்களிடம் வாரிசு இல்லை, அதற்காக சித்தப்பாவிடம் ஒப்படைத்தார்கள். ரகுநாதராயர் தொண்டைமானுக்குத்தான் ஒரு பெண் வாரிசு இருக்கிறாரே, அவரையே ஆளச் சொல்வதுதானே....’

‘ நீ சொல்வது சரிதான்...’

‘ என்ன இவன் சொல்லிவிட்டேன். இவனுக்காக ஒத்தூதுகிறாய்...?’

‘ சரி, யார் ஆண்டால் என்ன, இந்த சீமையை திரும்பவும் ஆளப்போவது பாண்டியர்களோ, முத்தரையர்களோ, பல்லவராயர்களோ இல்லை. ஆளப்போவது தொண்டைமானினர் தானே? ’ என்பதாக அவரவர் போக்கில் பேச நடக்க இருந்தார்கள்.

வெங்கப்ப அய்யர் இடுப்பில் சுற்றியிருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். இமை கூடுவாயை நெற்றியின் மையத்தில் கூட்டி யோசிக்கலானார். அவரது யோசனை ராய ரகுநாத தொண்டைமான் மரணப்படுக்கையில் கிடக்கையில், நடந்தேறிய நிகழ்வுகள் கண் முன் நிழலாடின.

ராய ரகுநாத தொண்டைமான் நடை, உடை நச்சுரணையற்று படுத்த படுக்கை நாட்கொண்டே, அடுத்த மன்னருக்கான முகத்தைத் தேடலானார் வெங்கப்ப அய்யர். அவர் குளத்தூர், தென்முகம் பெரிய அரண்மனை, அறந்தாங்கி அரண்மனைக்குள் தேடவில்லை. அரண்மனைக்கும் வெளியே, சிலோனில் குடியேறியிருக்கும் ராய ரகுநாதரின் சிற்றப்பா குடும்பத்தின் மூத்த மகன் விஜய ரகுநாதரை மனதிற்குள் உருட்டுவதாக இருந்தார். அவரைக் கொண்டு தான் நினைக்கும் சமஸ்தானத்தையும், தான் விரும்பும் தர்பாரையும் அமைத்துவிட முடியும் என விரும்பினார். அதற்காக அவர் அச்சிறுவனின் வயதிற்கும், பேருக்கும், பிறந்த இராசிக்கும் பேரெடு பார்ப்பதாக இருந்தார். ஒவ்வொரு குரு பெயர்ச்சிக்கும், சனி பெயர்ச்சிக்கும் அவரது குரு, ராகு , கேது பார்வையைப் பார்க்கத் தவறியதில்லை. அவராகவே, பெரிய அரண்மனையில் நடந்தேறும் நடப்புகளை, நலம் விசாரிப்புகளுடன் விஜய ரகுநாதருக்கு மடங்கலாக எழுதி அனுப்புவதாக இருந்தார். மன்னர் ஆயுள் அந்திமத்தில் மையம் கொள்கையில், சிலோனிலிருந்து விரைந்து கிளம்பி வரச் சொல்லி தூது அனுப்பினார். சீமை திரும்புகின்ற அன்று, தனிக்கோடி வரைக்கும் சென்று ஒரு தனித் தோனியில் வந்து இறங்கிய விஜயரகுநாதரை கட்டியணைத்து, அரண்மனைக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். இப்படியான திடீர் வருகையை மன்னரைச் சுற்றி அமர்ந்திருக்கும் இராணிமார்கள் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
 




Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
ராய ரகுநாதர் தலையிடத்தில் கீரிடம் இருந்தது. மேனியில் பட்டுனாலான அங்கவஸ்திரம் போர்த்தப்பட்டிருந்தது. அவருடைய ஒரே மகவு பெருந்தேவி தகப்பனின் வலது கையை இறுகப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார். பால்வடியும் முகத்தில் கண்ணீர் சுரமென வடிந்துகொண்டிருந்தது. தந்தையின் உடம்பு மெல்ல சில்லிடுவதாக இருந்தது. யாரோ ஒருவருக்காக அந்த உயிர் தொடுக்கிக்கொண்டிருந்தது. உடம்பில் மூச்சு இருக்கிறதா, உஸ்ணம் இருக்கிறதா, இதயம் துடிக்கிறதா,.. ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பெருந்தேவி தகப்பனின் உள்ளங்கையை இறுகப் பிடிக்கவும், அவரது மார்பின் மீது ஒரு பக்க செவியை வைத்து இதயத் துடிப்பைக் கேட்கவுமாக இருந்தார்.

தொண்டைமான் குடும்பத்தின் அடுத்த மூத்த ஆண் வாரிசு விஜய ரகுநாதர், முப்பது வயது கூட தொடாத அந்த வாலிபன், சிலோனிலிருந்து கொண்டுவந்திருந்த பொதி, முடிச்சுகளை வண்டியிலேயே வைத்துவிட்டு, வெங்கப்ப அய்யரின் கால்களைப் பிடித்தபடி, அவர் முன் கண்ணீர் மல்க அமர்ந்தார். அவரது பிடியில், ஒரு காலின் கட்டை விரல் அசைவதாக இருந்தது. மெல்ல மெல்ல அறுந்துகொண்டிருந்த உயிரில் இரத்தம் பாய்ந்திருக்க வேண்டும். துடிக்க மறந்த இதயத்திற்குள் புதுரத்தம் பாய்ச்சலெடுத்திருக்க வேண்டும். சூன்யமாகியிருந்த மூளைக்குள் நினைவுகள் சுருளெடுத்திருக்க வேண்டும். இத்தனை நாட்கள் கதவடைத்திருந்த இமைகள் துடிக்கத் தொடங்கின. கண்களில் உயிர் நனைவு. கண்ணீர் சுனை. விழியின் அசைவு அவரை அருகினில் வருமாறு அழைப்பதைப் போலிருந்தது. காலிடத்திலிருந்து எழுந்து விலகி அவரது அருகின்பால் சென்றார். பெரிய தந்தையின் உள்ளங்கையைப் பிடித்தார். உதடுகள் என்னவோ சொல்ல வாயெடுத்தன. இமைகள் நடுங்கின. தலை துவழ, நிமிர, தணிய, சட்டென சரிந்தது.

வெங்கப்ப அய்யர் நினைவு சுருளிலிருந்து வெளியே வந்தார். அடுத்த மன்னராக விஜயரகுநாதரை அமர வைக்க இந்த ஒரு சம்பவம் போதாதா, அத்தனை நாட்கள் மரணப் படுக்கையில் கிடந்தவரின் உயிர் இவரது கை தீண்டியதும் ஏன் பிரிய வேண்டும்?. தனக்குப் பின்னே, மன்னரென இவரைத்தான் மன்னன் நினைத்திருக்க வேண்டும்? அவரது நினைவு நிறைவேற்றும்படியாகத்தான் நான் நாள் குறித்தேன். முடி சூடும் விழாவிற்கு ஏற்பாட்டில் இறங்கினேன். இத்தனை ஆண்டுகாலம் திறக்கவும், மூடவுமாக இருந்த கோவில்களுக்கு சிறப்பு பூஜை செய்தேன். தொண்டைமான்சீமையை பேரரசாக இருந்து ஆண்டுகொண்டிருக்கும் திருசிறபுரம் நவாப்பைச் சந்தித்து, ஒரு இலட்சம் நஸார் செலுத்தி, நவாப்பின் சம்மதத்துடன் முடிசூடும் விழாவிற்கு ஏற்பாடு செய்தேன். தொண்டைமான் குடும்ப சம்மதத்தின் பேரில்தான் இத்தனையும் செய்தேன். நவாப் குறிப்பிட்ட தேதியில்தான் வேலையை முடுக்கினேன். யார் செய்த சதி இது ? யார் விரித்த வலையில் யார் விழுந்தது? யார் சொல்லி யார் இந்த தடையை விரித்தது.? நவாப் திடீர் தடை விதிக்கக் காரணம் என்ன? ஒருவேளை முத்துக்குமரப்பிள்ளை விஜய ரகுநாதர் மன்னனாக மகுடம் சூடுவதை விரும்பவில்லையோ? நவாப்க்கு மகுடம் சூடவிருக்கும் வாலிபமன்னன் மீது சந்தேகம் வருகிறதோ?

‘ வெங்கப்பர்...?’

யாரோ அழைக்க நினைவிலிருந்து மீண்டு இயல்புக்கு வந்தார். அழைத்தவரை நிமிர்ந்து பார்த்தார். தெரிந்த முகம்தான், சட்டென யாரென்று நினைவுக்கு வராத முகம், குரல்,கண்கள்.

‘ சொல்லுங்கள்...?’

‘ இத்தனை ஏற்பாடுகள் செய்த நீர், மன்னரின் மகவு பெருந்தேவி ஆயியிடம் ஒரு வார்த்தைக் கேட்டீரா, ராணியாக இருந்து இந்த சீமையை ஆட்சிச் செய்கிறீரா என்று...’

வெங்கப்பர் அய்யரின் முகம் சிவந்து நிமிர்ந்தன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top