• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமஸ்தானம் -3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
மைலன்கோன்

மன்னர், ராய ரகுநாத தொண்டைமான் இறந்து, அன்றுடன் அறுபது நாட்கள் முடிந்திருந்தன. இத்தனை நாட்கள் கடந்தும், அரண்மனையும், கோட்டை, கொத்தளமும் துக்கத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வராததைக் கண்டு கவலைப் படுவதாக இருந்தால் முத்துப்பிள்ளை ஒருவரால்தான் இயலும்.

மன்னரை இழந்த துக்கத்திலிருந்து, முத்துப்பிள்ளை முழுமையாக இன்னும் மீண்டுவிடவில்லை. அவருக்கே ஆறுதல் சொல்ல இன்னும் ஆயிரம் பேர் தேவை. எத்தனை பேர் சொன்னாலும், அத்தனை எளிதில் மனம் தேறிவிடுபவர் அல்ல அவர். இத்தனை நாட்கள் மன்னனைப் பற்றியும், மன்னனின் நினைவுகளைப் பற்றியுமே நினைத்துகொண்டிருந்த முத்துப்பிள்ளைக்கு அன்றைக்குத்தான் மகாராணிகளும் , ஒரே இளவரசியும் மனைவிகளும், நினைவுக்கு வந்தார்கள்.

அவர்களை நினைக்கையில் இறைவனின் திருவிளையாட்டை நினைக்காமல் இருக்கமுடியில்லை. என்ன சித்தம், என்ன படைப்பு. எத்தகைய கர்மம். யார் செய்த பாவம்...? பாவமா, சாபமா...? நெற்றியைச் சுழித்துக்கொண்டார். நாசியின் கூடுவாயை இமையோடு சேர்த்து நீவிக்கொண்டார்.கேள்விகள் மூளைக்குள் சுருளெடுத்து, அதே மூளையைத் துளைப்பதாக இருந்தன.

‘பின்னே! மன்னருக்கு பதினொரு மனைவிகள். அத்தனை மனைவிகளுக்குமாக, ஒரே ஒரு மகள்....’ அதை நினைக்கையில் கண்கள் கட்டின. நெற்றிக்குக் கையைக் கொடுத்து, இதற்கான கேள்வியை எப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்தார். கேள்வி, கேள்விக்குள் கேள்வி.

இத்தனை நாட்கள் மன்னரையே நினைத்துக்கொண்டிருந்தவருக்கு, இன்றைக்குத்தான் அவரது ஒரே மகள் இளவரசி நினைவுக்கு வந்தாள். அவளது சாந்த முகமும், பால்வடியும் பற்களும், சிரிப்பும், அழகும் கண் முன்னே நிழலாடின.

இத்தனை நாட்கள் எப்படி அவளை மறந்தோம்...? இன்று எப்படியாம் அவளை நினைத்தோம். குழந்தாய்! அவளை முத்துப்பிள்ளை அப்படியாகத்தான் அழைப்பார்.

‘ வாருங்கள் பிள்ளை முத்து மந்திரியாரே’ பதிலுக்கு அவள் அவள் அழைப்பாள். முத்துப்பிள்ளை, பிள்ளை முத்து. ஒரு குழந்தாய், சூட்டிய பெயர் எத்தனை அழகாக இருக்கிறது. இப்போது அவளைப் பார்க்கச் சென்றால், என்னை அப்படியாகவே அழைப்பாளா? அப்படியாக அழைத்தால், அவளிடம் என்னால் உரையாற்றிட முடியுமா? அவளைப் பார்க்கையில் என்னால் குழந்தாய் என அழைக்க முடியுமா? அவளை நான் பார்க்கையில் என்னையும் அறியாமல் நான் அழுதுவிடுவேனோ, நான் அழுகையில் அவளும் அழுதுவிடுவாளோ, அவளை நான் சந்திப்பது மரணத்தைத் திரும்பவும் நினைவூட்டுவதாக இருந்துவிடுமோ, அவளை என்னால் நேருக்கு நேர் சந்திக்க இயலுமா...?

அவளை சந்திக்கத்தான் வேண்டும், அவர் அரண்மனையை நோக்கி கிளம்பினார்.

மன்னர் மரணத்திற்குப் பிறகு அவர் அரண்மனைக்கு வருவது இதுவே முதல்முறை. மன்னர் உயிருடன் இருக்கையில் கூட, மன்னரில்லாமல் ஒரு கணமும் அவர் அரண்மனைக்குள் நுழைந்ததில்லை. அரண்மனையை அவர் நெருங்க நெருங்க அவரது நெஞ்சும், குடலும் நடுங்கின.

அரண்மனைக்கும் வெளியே ஒரு காவலன் , கையில் நீண்ட ஈட்டியைத் தாங்கியவாறு தூங்கி விழுந்துகொண்டிருந்தான். முத்துப்பிள்ளை தொண்டையை கணைத்தார். இறுமிக்கொண்டார். காவலன் விழிப்பதாக இல்லை. மன்னரில்லாத அரண்மனைக்குள் காலடியை எடுத்து வைக்கையில், கால்கள் கூசச் செய்தன.


எப்படியோ, அரண்மனைக்குள்ளாக காலடியை எடுத்து வைத்தார். அரண்மனைக்குள் ஓரரவமில்லை. இதற்கு முன் இப்படியான அமைதியில் அரண்மனையைக் கண்டதில்லை. ஒரு முறை செருமிக்கொண்டார். அவரது செருமல் அவருக்குள் கேட்பதாக இருந்தது.

இல்லம் என்பதென்ன, வெறும் ஆட்களைக் கொண்டதா? அதற்குள்ளாக இன்பம், மகிழ்ச்சி, கொண்டாட்டமென பலதும் இருக்கிறதல்லவா! மகிழ்ச்சியும், இன்பமும் இல்லாத அரண்மனையைப் பார்க்க அவருக்கு ஒரு பிரமாண்ட குகையாகத் தெரிந்தது.

முத்து குமரப்பிள்ளை, எப்பொழுது அரண்மனைக்குள் நுழைந்தாலும் அவரையும் அறியாமல் சிரம் கவிழ்ந்துவிடும். தலையிலிருக்கும் பாகை, கைக்கு மாறிவிடும். அன்றைய தினமும் அப்படியாகத்தான் மாறியது.

அரண்மனையை ஒரு சுற்றுப் பார்த்தார். முற்றத்தில் சிலந்திகள் கூடு பின்னியிருந்தன. சிலந்திக்குக் கூடத் தெரிகிறது, இது துக்க இல்லமென்று. அடுத்தடுத்த முற்றங்களைப் பார்த்தார். எங்கும் தூசிகளும், துரும்புகளுமாக இருந்தன.

அவர் எப்பொழுது அரண்மனைக்குள் நுழைந்தாலும், ‘ மாமன்னர் வாழ்க...’ என்றே நுழைவார். அன்றைய தினமும் கூட அப்படியாக சொல்லவே வாயெடுத்தார். வார்த்தைக்குப் பதிலாக காற்றுதான் வந்தது. உதடுகள் விம்மி, மார்புக்கும் வயிற்றுக்கும் கீழாக விக்கல் எடுப்பதைப் போல விம்மல் முட்டியது. ‘ மா...மா...மன்னர் வாழ்..’ அவரால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை. உணவு குமட்டுவதைப்போலவே வார்த்தைகள் குமட்டின.

அரண்மனையின் மைய மண்டபத்திற்குச் செல்கையில், மேற்கு சுவரோரமாக, கிழக்குப் பார்த்த சுவரையொட்டி, ஒரு அகல் விளக்கு ஒளிர்கிற பெயரில் தூங்கிக்கொண்டிருந்தது. அரண்மனையில் யாருமில்லையென்றாலும், அரண்மனையின் சாளரங்கள் திறந்திருந்தாலும், காற்று பெருமூச்செடுத்து வீசிக்கொண்டிருந்தாலும் விளக்கு ஆடி, அசைந்து, ஒடுங்கி, ஒளிர்வதாக இருந்தது.

முத்துப்பிள்ளை விளக்கின் அருகினில் சென்றார். விளக்கு, இரு கைகள் பொத்திய, புறாவின் இறக்கையையொத்ததாக இருந்தது. நீளமாக ஒரு திரி. அதற்குள், இன்னும் ஒரு நாள் நின்று எரியும்படியாக எண்ணைய் கிடந்தது.

இந்த விளக்கு, மைலன்கோண்பட்டியில் ஒரு குயவர் கொடுத்தது. மன்னனுக்கென செய்து, நீண்ட காலம் காத்திருந்தது. கறம்பைக்குடி அரண்மனையில் வைத்துதான், மன்னனிடம் இந்த விளக்கைக் கொடுத்திருந்தார். அதை வாங்கிய மன்னன் பிரமிப்பாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த முத்துப்பிள்ளையிடம் கொடுத்தார். அந்த விளக்கை ஒரு முறைத் தொட்டுப்பார்த்தார். வெப்பத்தின் கதகதப்பு நினைவுகளைச் சுடுவதாக இருந்தது.

‘ மன்னரே, இந்த விளக்கை என்ன செய்யப் போகிறீர்கள்?’ - மன்னரின் காதிற்குள் கேட்டார்.

‘ நார்த்தாமலை மாரியம்மனுக்கு விளக்கேற்ற இருக்கிறேன்...’

‘ அரண்மனைக்குள் கலகத்தை மூட்டப் போகிறேனெனச் சொல்லுங்கள்....’

மன்னருக்கு புரிந்துவிட்டது. சிரித்தே விட்டார். மன்னன் எப்பொழுது சிரித்தாலும், மந்திரி பதிலுக்கு சிரித்துவிடுவதுண்டு.

மனைவிமார்களுக்கிடையே சண்டையை ஏன் மூட்டுவானேன், என நினைத்த மன்னர் அம்மனுக்கு தங்கத்தில் பதினொன்றும், வெள்ளியில் பதினொன்றுமாக இருபத்து இரண்டு விளக்குகளை ஏற்றிவிட்டு மைலன்கோன்பட்டி குயவர் கொடுத்த மண்விளக்கை அரண்மனையிலேயே வைத்துக்கொண்டார்.

முத்துப்பிள்ளை விளக்கை இன்னொரு முறை தடவிப்பார்த்துக்கொண்டார். விளக்கு, தூங்குவதைப்போல எரிந்தாலும், அரண்மனையின் மொத்த இருட்டையும் மெல்ல துடைத்து எடுப்பதாக எரிந்தது. விளக்கிற்கும் அருகில் ஒரு கலயம் இருந்தது. ஆங்கிலேயர் கர்னல் லாங், அவரை கடைசியாக சந்திக்க வருகையில், நினைவு பரிசாக கொடுத்தது அது. பார்க்க, வைரமும், பவளம் போன்று தெரியும் அந்த கலயம், பாரிஸ் களிமண்ணினால் செய்யப்பட்டது.

இத்தனை ஆண்டுகாலம், இரண்டும் காத்திருந்தது, இதற்காகத்தானா, அதை நினைக்கையில் கண்களில் பொங்கிய கண்ணீர்த்துளிகள் இமை மயிற்றில் நனைந்து விளக்கிற்குள்ளாக விழுந்து, விளக்கு அணைந்துவிடுவதைப்போல அணைந்தும், அணையாமலும் ஒளிர்ந்தது.

அந்த கலயத்திலிருந்த எண்ணெயை விளக்கிற்குள்ளாக ஊற்றினார். விளக்கிற்கும் பின்புறமிருந்த வெள்ளிக்குச்சியால் திரியைத் தட்டி எரியவிட்டார்.

மன்னர் குறித்து நினைக்கையில், எத்தனையோ நினைவுகள் அவருக்குள்ளாக சுருளெடுத்தன. அவர் செய்த தவறுகள், பிழைகள், போர்வெற்றிகள், சூது, ஏமாற்றம், தோல்வி, பின்னேற்றங்கள்....
அண்டை மன்னரின் மீதான போரின் மீதும், ஆங்கிலேயர்களின் உறவு மீதும் அதீத நெருக்கம் காட்டும் மன்னரிடம், இது நாட்டுக்குக் கேடென சுட்டிக்காட்ட தவறியதில்லை. ஒரு இன மக்களை நிலம், புலம் தருகிறேனென அழைத்து வந்து எங்குமாக குடி அமர்த்திய அதே மன்னர், இன்னொரு இனத்தை கஞ்சிக்கும், கூலிக்கும் அழைத்து வந்ததை பாவமென்றும், இந்தப் பாவம் பரம்பரையைச் சுற்றுமென்றும் சுட்டியதை மன்னர் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லைதான்.

இதற்காக எத்தனையோ நாட்கள் இருவருக்குமிடையில் சொற்போர் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனை இரவுகள் - பகல்கள். எத்தனையோ நாட்கள், மன்னரிடம் கோபித்துக்கொண்டு, முத்துப்பிள்ளை வெளிநடப்பு செய்திருக்கிறார். எத்தனை முறை இந்த மந்திரிப்பதவி வேண்டாமென மன்னனிடம் உதறியிருக்கிறார்.

முத்துப்பிள்ளை இல்லாமல் மன்னருக்கு ஒரு நாளும் கழிந்ததில்லை. முத்துப்பிள்ளைக்கும் மன்னரில்லாமல் ஒரு நாழிகையுமில்லை. முதல் நாள் இருவருக்குமிடையில் பிணக்கமென்றால் மறுநாள், மன்னர் ஒரு குதிரை வண்டியை அனுப்பி முத்துப்பிள்ளையை அழைத்துவர ஆணையிடுவார். முத்துப்பிள்ளையும் குதிரை வண்டி வருமென கிளம்பித் தயாராக இருப்பார். மன்னர் - முத்துப்பிள்ளை இருவருக்குமிடையேயான பந்தம் வெறும் மன்னர் - மந்திரி பந்தமல்ல. அதைத்தாண்டிய ஒரு பந்தமாகவே அவர்களுக்கிடையேயான உறவு இருந்தது.

மன்னர் வழக்காட, மந்திரி முரண்பட்டு எழுந்து செல்வதுதான் வழக்கம். முத்துப்பிள்ளையிடம் கோபித்துக்கொண்டு மன்னர் கிளம்பிச் சென்ற சம்பவம் ஒரு முறை நடந்தேறியது. அதை நினைக்கையில் முத்துப்பிள்ளை பெருங்குரலெடுத்து அழுகை வந்தது. தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டு, உடல் குலுங்கினார். மனது தொந்தோந்தோமென இருந்தது. அதை நினைக்கையில் எப்படி அவரால் குலுங்காமல், அழாமல், இருக்க முடியும்...?

.
 




Last edited:

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அரண்மனைக்கு போயாச்சு... மன்னர் எப்படி இறந்தார்.....போரிலையா... இல்லை.... மன்னன் இல்லாத அரண்மனையை அழகா சொல்லிருக்கீங்க
 




Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
அரண்மனைக்கு போயாச்சு... மன்னர் எப்படி இறந்தார்.....போரிலையா... இல்லை.... மன்னன் இல்லாத அரண்மனையை அழகா சொல்லிருக்கீங்க
உற்சாகம் மூட்டுகிறீர்கள் நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top