• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

செங்காந்தள் மலர்கள் - 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
இதழ் 01

பூ – நீ சூடும் வரை அது மணப்பதில்லை

கனி – நீ சுவைக்கும் வரை அது ருசிப்பதில்லை

மழை – நீ நனையும் வரை அது குளிர்வதில்லை

நான் – நீ விரும்பும் வரை அது நானில்லை’

- (உன்) செழியன்




சற்று முன் அலைபேசியில் குறுகுறுத்த குறுஞ்செய்தியால் படித்தவளின் மனதில் இதமாய் ஒரு குறுகுறுப்பு. இமைகளை அழுத்திய உறக்கம் எங்கு போனதோ தெரியவில்லை. இமைக்காமல் பாத்தவளின் விழிகள் மீண்டும் மீண்டும் படித்துக் கொள்ள, இதயமோ கல்வெட்டாய் அக்காதல் கவிதையை தனக்குள் வடித்து கொண்டது.

“ இவனென்ன இவ்ளோ தீவிரமா இருக்கான்?” சுகமாக அலுத்துக் கொண்டாள் அவள். அவன் அடைப்புக் குறிக்குள் அடக்கி வைத்திருக்கும் காதலை அவளும் மனதிற்குள் ஒளித்து வைத்திருந்தாள்.

'கரை தொட துடிக்கும் கடலலை போல் – உன்
மனம் தொட துடிக்கிறேன் கயலினி…..
கரை போல் மௌனம் கொண்டால் – எனக்கு
இல்லை ஜீவன் இனி…..’

- (உன்) செழியன்


டொக்… என இன்னொரு கவிதை திரையில் மின்ன, இம்முறை முற்றிலுமாய் வீழ்ந்திருந்தாள் கயலினி…. மற்றவர்கள் அவளை கயல்….. கயல்….. என்றே அழைத்திருக்க, அவன் மட்டும் தான் ‘கயலினி' என முழுபெயரையும் அழுத்தம் திருத்தமாக, ரசனையும் உரிமையுமாக அழைப்பான்.

அவன் காதலை உரைத்த பின் அவனோடு பேசாது கடக்கும் ஒவ்வொரு முறையும் அவளது புறக்கணிப்பு உசுப்பி விடும் கோபம் அவனது‌ இறுகிய முகபாவனையில் தெரியும். ஆனாலும் அத்தனை நிதானமாய் அவள் மௌனமாக தாண்டி செல்வதை இமைக்காமல் பார்ப்பான். அந்த கணத்தில் நெஞ்சாங்கூட்டை உடைத்து விட முயலும் இதயம் டம்…டம்… என அடித்து கொள்ளும் அவளுக்கு. அவன் பார்வை வட்டத்தை தாண்டும் வரை தான் எத்தனை பாரம் மனதிற்குள். அதன் பிறகு அப்பாரம் குமைச்சலாய் மாறி அவளை அலைகழிக்கும்.

அதே நிலையில் தான் இப்போதும் அமர்ந்திருந்தாள் கயல். அவன் மீது துளிர்த்த காதல் பொங்கி பெருகி இதயம் நிரம்பி மூச்சு முட்டியது அவளுக்கு. அந்த கனம் தாங்காமல் தன்னால் கண்ணீர் கசிந்தது.

அழகிலும், படிப்பிலும் அவனுக்கு இணையாக‌ இருந்தாலும் அந்தஸ்து? அது மலைக்கும் மடுவுக்கும் ஆன உயரமாயிற்றே… அதுவும் அவன் அரசியல்வாதியின் மகன்…

“அவனுக்கு இதுவெல்லாம் தெரியாதா?” இயலாமையில் அவளுக்கு கோபம் பூத்தது.

கலவையான உணர்ச்சிகளில் உறைந்திருந்தவளை “ கயலு….. ஏய் கயலு…” என்ற தாயின் அதட்டல் கலைத்தது. கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளித்து கொண்டு திரும்பி பார்த்தாள்.

“ ஏன்டி…. அடுப்படியிலிருந்து கயலு…கயலு… னு கரடியா கத்துறேன். எழுந்துட்டேன் மா னு சொல்றதுக்கு என்ன? நீ இன்னும் தூங்குற னு நினைச்சி கை வேலைய விட்டுட்டு வந்தேன்” என்றார் ரத்னா கடுங்கோபமாக. தாயின் வார்த்தைகள் எதுவும் அவள் மூளையில் பதியவில்லை. மலங்க மலங்க முழித்தாள். அதில் இன்னும் காண்டானவர்,” மணி ஏழே கால் ஆகுது கயல். சாவகாசமா உட்கார்ந்து போன் பார்த்துட்டு இருக்கே? இன்னைக்கு காலேஜ் போற ஐடியா இல்லயா?” என பல்லை கடித்தார்.

காலேஜ் என்றவுடன் மனத்திரையில் தெரிந்தது செழியனின் முகமும் அவனின் ஆழ்ந்த பார்வையும் தான்.

“ போகணும் மா….” சுரத்தே இல்லாமல் ஒலித்தது அவள் குரல்.

“ என்னடி…. ஏன் இப்படி என்னவோ போல இருக்குற? காலேஜ்ல ஏதும் பிரச்சனையா?” சரியாக நாடி பிடித்தார் தாய்.

“ அதெல்லாம் ஒன்றுமில்லை மா…” அவசரமாய் வந்தது பதில்.

“ அப்புறமென்ன?” என்றவாறு மகளை ஆராய்ந்தவர் கையில் அலைபேசியை பார்த்து விட்டு,” மலரு எதுவும் மெசேஜ் பண்ணாளா?”என அவரேயறியாமல் மகளுக்கு சமாளிக்கவும் எடுத்து கொடுத்தார்.

அதற்குள் சற்றே சுதாரித்திருந்தவள்” ஆமா…. மா… அங்க டெல்லி ல நல்ல குளுராம். அந்த குளுருல தான் ட்ரெய்னிங்காம். மெஸேஜ் பண்ணியிருந்தா” நேற்று அனுப்பியிருந்த செய்தியை இன்று கூறினாள்.

“ அதுக்கு நீ ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?”

“ அது…. அது…. ட்ரெயினிங் ரொம்ப ஹார்டா இருக்காம். வோர்க்க்ஷாப் வேற மிஸ் பண்ணிட்டேன்னு பீல் பண்ணா…. அத தான் யோசிச்சிட்டு இருந்தேன்.”காதல் பொய் சொல்லும் யுக்தியை கற்றுக்கொடுத்தது.

“ மலரா ட்ரெயினிங் கஷ்டமா இருக்கு னு சொன்னா? ஆச்சரியமா இருக்கே…. மல்லி கிட்ட சொல்லாத…. கவலைபடுவா‌… சரி….சரி சீக்கிரம் கிளம்பு கயல் மணியாகுது… நானும் வேலைக்கு போகணுமில்ல… குழம்புக்கு தாளிச்சிட்டேன்.இப்போ சாதம் வடிக்க போறேன். நீ குளிச்சிட்டு சாப்பாடு கட்டி, பாத்திரத்தை கழுவிடு என்ன. அதுக்குள்ள நான் ரெடியாகிடுவேன்” என மடமடவென வேலைகளை கூறிவிட்டு ரத்னா நகர, கயல் தான் மசமசவென அமர்ந்திருந்தாள்.

சற்று முன் குறுகுறுத்த அலைபேசியை அன்னையின் முன் பார்த்திடாமல் இருக்க பெரும்பாடுபட்டவள் இப்போது ஆவலோடு எடுத்து பார்த்தாள்.

“ இதழ் மலர்வாயோ கண்மணி – என்
காதல் காத்துக்கிடக்கிறது”
- ( உன்) செழியன்


போதும்…. போதும் இனியும் தாங்க மாட்டேன் நான் என இதயம் விம்ம, அத்தோடு இணையத்தை துண்டித்தவள் கல்லூரிக்கு கிளம்பினாள்.

“ இன்று உன்னால் அவன் பார்வையை கடந்துவிட முடியுமா?” மனசாட்சி கேள்வி கேட்க அதற்கு பதிலே கூறாது குளிர் நீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டாள்.

கயலின் குடும்பம் மிகவும் மிக… மிக மிகவும் சிறிய குடும்பம்.அவளும் அவளின் தாய் மட்டுமே அவளது குடும்பம். ஏழு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட கயல் பார்ப்பதெல்லாம் ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அன்னையை தான். நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று குறைந்தவர் தாம் அவர்கள். வறுமை கோட்டிற்கு மேலும் கீழுமாக வாழ்பவர்கள். சிறு ஹால், ஒரு படுக்கையறை, சின்ன சமையலறை, குட்டி குளியலறை+கழிப்பறை என்ற இந்த சிறிய கூட்டை குத்தகைக்கு எடுக்கவே ரத்னாவின் பத்தாண்டு சேமிப்பும் கரைந்து போனது. என்ன செய்வது? சென்னையின் தன்மை அப்படி…..

‘ அப்பாடா…. மாத வாடகையிலிருந்து விடுதலை என ஆசுவாசபடுவதற்குள் கயல் பனிரெண்டாம் வகுப்பை நல்ல மதிப்பெண்களோடு முடித்து, பெரிய காலேஜில் படிக்க இடமும் வாங்கியிருந்தாள், தெரிந்தவர்களின் உதவியால் சில ட்ரஸ்ட்களை அணுகி, தன் கல்வி கட்டணத்தின் முக்கால் வாசிக்கு உதவிதொகை(scholarship) வாங்கிவிட்டாள். எஞ்சிய கால்வாசி கட்டணத்தை கட்டவே ரத்னா முழி பிதுங்கி போனார். ஆனாலும் மகளின் எதிர்காலத்திற்காக மாடாய் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதோ இதோவென நான்காண்டு படிப்பும் முடியும் தருவாயில் இருக்க, மகளுக்கு நல்ல வேலை கிடைத்து தங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர போகும் நாளுக்காக அந்த தாய் காத்துக்கிடக்கிறார். காலம் என்ன வைத்திருக்கோ யார் அறிவார்?

கயலும் சளைத்தவள்ளல்ல.தாயின் சிரமம் உணர்ந்து நன்றாக படிப்பாள்.வீட்டு வேலைகளிலும் உதவுவாள். பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மானியம் பெற்றது போல கல்லூரியிலும் கேபஸ் இன்டர்வூவில் தேர்வாகி படித்து முடிக்கும் போதே வேலை கிடைத்து விட வேண்டும் அப்போது தான் தாயிக்கு ஓய்வு கொடுக்க முடியும் என வெறிதனமாக படித்துக் கொண்டிருந்தாள். இதற்கான ஒரு பயிற்சிக்காக தான் சென்ற மாதம் கல்லூரி மூலமாக ஹைதராபாத் சென்று வந்தாள். அப்போது தான் நான்கு வருடங்களாக உடன் படிக்கும் செழியன் மீது இது வரை வராத ஈர்ப்பும் ஆர்வமும் மனதில் முளைத்தது. இப்போதோ கடமைக்கும் காதலுக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருக்கிறாள் பொண். கடமையிலும் காதலிலும் ஜெயிப்பாளா கயல்?
பார்ப்போம்……

குளித்து முடித்து தயாராகி வந்த கயல் ஸிங்க்கில் கிடந்த பாத்திரங்களை கழுவி முடித்து, தனக்கும் தன் தாயுக்கும் மதிய உணவை டப்பாவில் நிரப்பியவள், தனியாக ஒரு டப்பாவில் உணவை நிரப்பினாள். பின் முன்று டப்பாக்களையும் எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வரவும், குளித்து முடித்து ரத்னா தயாராகி வரவும் சரியாக இருந்தது.

மதிய உணவை அவரவர் பைக்களில் வைத்து விட்டு காலை உணவை கொண்டு வந்தாள் கயல். சுரத்தே இல்லாமல் நடமாடும் மகள் மீது ஒரு கண்ணும், தன் தம்பியின் வரவை எதிர்பார்த்து வாயிலில் ஒரு கண்ணுமாக நின்றிருந்தார் ரத்னா.

“ போன வாரம் உன் தம்பிக்கு பொண்ணு பார்க்க போனீயே….. அமைஞ்சிச்சா ரத்னா?” எதிர்வீட்டு கலா துணிகளை காயப்போட்டவாறு கேட்டாள்.

“ ஹ்ம்…. அத ஏன் கலா கேட்குற? இந்த கால பொண்ணுங்க எல்லாம் பொண்ணுங்க மாதிரியா இருக்கு? ஒவ்வொத்தியும் ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுறாளுங்க போ….” என அலுத்து கொள்ள,

“ என்னாச்சு ரத்னா?” என்றாள்ளவள் அக்கறையாக.

“ ஒருத்தி படிச்சிருக்கனும்றா….. ஒருத்தி ஆபிஸ் வேலைக்கு போறவனா இருக்கணும்றா…. சொந்த வீடு இருக்கணுமாம் ஆனா அதுக்கு லோன் கட்டிட்டிருக்க கூடாதாம். முக்கியமா‌ மாமனார் மாமியார் யாரும் கூட இருக்ககூடாதாம்….” அங்கலாய்த்தார் ரத்னா.

“ சரியா போச்சு போ…. நம்ம காலத்துல இப்படி எல்லாம் பேச முடியுமா சொல்லு?”

“ நீ வேற…. பேசியிருந்தா நம்ம அப்பனாத்தாவே வெட்டி கூறு போட்டிருப்பாங்க….”

“ நம்ம சிவா படிக்கலனாலும் நல்ல உழைப்பாளி. ஒத்த ஆளா அம்மாவையும் கவனிச்சிட்டு வேலைக்கும் போயிட்டு வருது. அந்த புள்ளய கட்டிக்க கசக்குதாமா? ஏன் ரத்னா…. பேசாம உன் தம்பிக்கு நம்ம கயலயே முடிச்சி வைச்சா என்ன?” தீடீர் ஐடியா ஒன்றை கலா கொளுத்தி போட அதில் ஜெர்கானது ரத்னா மட்டுமல்ல கயலும் தான். சட்டென கரங்கள் வேலைநிறுத்தம் செய்ய, செவிகள் கூடுதலாய் பணியேற்றது. அது சிறிய வீடு என்பதால் வாசலில் பேசுவது உள்ளே வரை துல்லியமாக கேட்டது.

“ என்ன பேசுற கலா…. அவனுக்கும் கயலுக்கும் கிட்டத்தட்ட ஏழு வயசு வித்தியாசம்”

“ அதனால என்ன ரத்னா… ரெண்டு ‌பேருக்கும் முடிச்சு வச்சா உனக்கும் உன் அம்மாவுக்கும் நல்ல ஒத்தாசையா இருக்கும்.” கலா சொன்ன விதத்தில் கயல் வயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டது.

“ நம்ம வசதிய மட்டும் பார்த்தா போதுமா கலா. அவங்களுக்கு ஒத்து வர வேண்டாமா? கயல் பெரிய காலேஜ்ல படிக்கிறா…. நாளைக்கு பெரிய வேலைக்கு போக போறவ…. அதுவுமில்லாம சின்ன வயசுலயே அப்பாவ இழந்துட்டு கஷ்ட ஜீவனத்துல தான் வளர்ந்தா…. நாளபின்ன வாக்கப்படுற வீடாவது நல்ல பெரிய இடமா இருக்க வேணாமா…. கயல நல்ல படிச்ச வசதியான மாப்பிள்ளைக்கு தான் கொடுப்பேன் “ என ரத்னா சற்று அழுத்தமாகவே கூறியதும் கயல் மனதில் பெரும் ஆசுவாசம்.

அதே சமயம் தாய் வடித்த வர்ணணையில் மனத்திரையில் செழியனே தெரிந்தான். தனக்கும் செழியனுக்கும் திருமணம் நடந்தால் எப்படி இருக்கும் என தன் போக்கில் எண்ணிக்கொண்டிருந்தவளின் கற்பனை அவர்களை மணமக்களாய் வரித்து காட்ட, திக்கென திடுகிட்டாள் கயல். செழியனை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தால் இது என்ன கற்பனை? தன்னை தானே நொந்து கொண்டாள் கயல்.

‘ஹ்க்கும்….. ஊருல உள்ளவளுங்கள எல்லாம் குறை சொல்லிட்டு இவ மட்டும் என்னத்த பேசுறாளாம்’ என மனதுக்குள் புகைந்த கலா,” ஏதோ தோணினத எதார்த்தமா சொன்னேன் ரத்னா. எதுவும் நினைச்சிக்காத” என்று விட்டு காலி பக்கெட்டோடு உள்ளே சென்றுவிட்டாள்.

“ சாப்பிட வாம்மா….” என தாய்க்கு குரல் கொடுத்து விட்டு தனக்கு தட்டில் உணவை வைத்து கொண்டு அமர்ந்தவளுக்கு உணவு தொண்டைக்குள் இறங்கவில்லை.

உணவை அளந்து கொண்டிருந்தவளை,” ஏய் கயல்…. என்னடி ஆச்சு உனக்கு? என உலுக்கினார்.

“ ப்ச்…. ஒன்னுமில்லமா” என சலித்தாள்.

“ அப்புறம் ஏன்டி ஏதோ கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்கே? ஒழுங்கா என்னான்னு சொல்லு” என அதட்டுபவரிடம் ‘கவிழ்ந்தது கப்பல் இல்ல உங்க மக மனசு' னு யார் சொல்வது?

இப்போது தாயிடம் திடமான‌ ஒரு காரணத்தை சொல்லியே ஆக வேண்டும் என மூளையை கசக்கியவள்,” பஸ் பீஸ் கட்டணும்மா…. ஏற்கனவே ரெண்டு தடவை டைம் கேட்டுட்டேன்” என்றாள் கவலை குரலில். உண்மையிலேயே அவள் பஸ் பீஸ் கட்ட வேண்டும் தான் என்றாலும் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தாள். ஆனால் செழியன் நினைவில் அதை அன்னையிடம் கூற மறந்தே போயிருந்தாள்.
இப்போது ரத்னாவின் முகம் சுருங்கி விட,” ஒரு வாரம் பொறுத்துக்கடா அம்மா எப்படியாவது ரெடி பண்ணிடுறேன்” என்றார் கெஞ்சலாக.

“ சரி மா…. கேட்டு பார்க்கிறேன் “ என ஒரு வழியாக பேச்சை திசை மாற்றினாள் கயல்.

இவர்கள் உணவு உண்டிருக்கும் போதே ரத்னாவின் தம்பி சிவா வந்தான்.

“என்னாச்சு கயல் குட்டி முகமே சரியில்ல” என்றபடி அமர்ந்தவனை புருவம் உயர்த்தி வியப்பாய் பார்த்தாள் கயல். பின்னே பார்த்தவுடனேயே அவளின் சோர்வை கண்டுகொண்டானே…..

“ பஸ் பீஸ் கட்டணுமாம். அத தான் சொல்லிட்டு இருந்தா” ரத்னா கூறவும்,

“ எவ்ளோடா கட்டணும்” என கேட்டபடியே சட்டைபையில் கை வைக்க,” வேணாம் சிவா. அவ டைம் கேட்டிருக்கா… நானே ரெடி பண்ணி கட்டிடுவேன்” என கொடுக்கும் முன் மறுத்திருத்திருந்தார் ரத்னா. இளம் வயதிலேயே கணவரை இழந்த ரத்னாவுக்கு கணவர் வழி சொந்தமும், தாய் வழி சொந்தமும் ஆதரவு காட்டினாலும் அவர்களின் ஆறுதலையும் அரவணைப்பையும் மட்டும் பெற்றுக் கொண்டவர் பண உதவியை மட்டும் வாங்கி கொள்ளவில்லை. அப்படியே ஏதேனும் நெருக்கடியில் வாங்கினாலும் முடிந்த அளவு சீக்கிரம் திருப்பி கொடுத்துவிடுவார்.

தமக்கையின் குணம் புரிந்தவன்,” கொடுக்கவிடமாட்டியே” என சலித்தான்.

“ ஒரு வாரம் தானே சிவா? “
“அதுவரைக்கும் கயல் குட்டி சாதா பஸ்ல தானே போகணும்கா? நீ சும்மா இரு…. கயல் பீஸ் எவ்ளோ னு சொல்லுமா?” என்றான் விடாபிடியாக.

“ அய்யோ பரவாயில்ல மாமா…. அடுத்த வாரம் அம்மா கட்டிடுவாங்க… “ என கயலும் மறுத்தாள்.

“ சிவா… நீயே லோன் கட்டிட்டிருக்க? இன்னும் உனக்கு ஏன் சிரமம்? ஒரு வாரத்துக்குள்ள நா கடடிடுவேன். ஒரு வேளை அப்போ முடியலனா உன் கிட்ட கேட்கிறேன்” எனவும் “ம்…” என்று விட்டு மனதேயில்லாமல் சாப்பிட தொடங்கினான்.

ரத்னாவுக்கு உடன்பிறந்தோர் இரண்டு பேர். ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி. ரத்னாவின் தந்தை குடிப்பழக்கத்தால் குடும்பத்தை கவனிக்காமல் இருக்க, சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு சிவா மெகானிக் கடைக்கு வேலைக்கு சென்றான். அவனது சிறு ஊதியத்தில் தான் மொத்த குடும்பத்தின் ஜீவனமும் நடந்தது பெண் மக்களின் திருமணமும் நடந்தது. வருடக்கணக்கான உழைப்பில் சிவா இரு ஆண்டுகளுக்கு முன் தான் சொந்தமாக ஒரு மெகானிக் கடை வைத்தான். படுக்கையில் விழுந்து விட்ட தாயையும் அவன் தான் கவனித்து கொள்கிறான். ரத்னாவும் வேலைக்கு போவதால் அவரால் கவனிக்க முடியாது. தங்கையும் வெளியூரில் வசிப்பதால் சிவாவே தாயை பார்த்து கொள்வான்.

காலையில் தாய்க்கு மேல் துடைத்து, துணிகளை மாற்றி விட்டு, உண்ண முடியாத அவருக்கு கூழோ, கஞ்சியோ சமைத்து புகட்டிவிடுவான். தாயை கவனிக்க முடியவில்லை என்றாலும் தம்பியை கவனித்து கொள்ளுவார் ரத்னா. சிவா மூன்று வேளையும் தமக்கை வீட்டில் தான் சாப்பிடுவான்.

மூவரும் உண்டு முடித்து மதிய உணவையும்எடுத்துக் கொண்டு வெளியே வர, மல்லிகா தன் இருசக்கர வாகனத்தில் வந்து நின்றார்.

“ ரெடியா ரத்னா” எனவும்

“ ரெடி தான் மல்லி…. இதோ வீட்டை பூட்டிட்டு வந்திடுறேன்” என்றார் ரத்னா

“ அப்புறம் அக்கா….. நம்ம புலி ட்ரெயினிங் போயிருக்காம்ல… ” என கேட்டான் சிவா.

“ அட போ சிவா…. நம்ம கயல் எவ்ளோ பொறுப்பா கேபஸ் இன்டர்வூக்கு தயாராகுரா…. இந்த மலரு என்னடானா NSS கேம்ப், ஸ்பெஷல் ட்ரெயினிங் னு சுத்திகிட்டு, ஊர் வம்பை விலைக்கு வாங்கிட்டு திரியுறா” என நொந்து கொண்டார் மல்லிகா.

“ எனக்கா நீங்க… மலர் எவ்ளோ தைரியமா துணிச்சலா இருக்கா…. அத பாராட்டாம இப்படி அலுத்துக்கறீங்களே….”குறைப்பட்டான் சிவா.

“ ஆமா மல்லிமா…. மலர பத்தி காலேஜ் வந்து கேட்டு பாருங்க. அவ தான் அங்க டான் தெரியுமா? ஒரு பய வாலாட்ட முடியாது.” தோழியை புகழ்வதில் பிரசாகமாகியிருந்தாள் கயல்.

“ ம்… ஆளாளுக்கு இப்படி கொம்பு சீவி விடுறாதால தான் அவ ஊரெல்லாம் வம்பிழுத்துட்டு வர்றா….”

“ அக்கா…. நா சும்மா வாய் வார்த்தைக்கெல்லாம் சொல்லல… நீங்க வேணா பாருங்க மலர் போலீஸ் ல பெரிய ஆளா வருவா… மலர் தைரியமான பொண்ணு மட்டுமல்ல புத்திசாலி பொண்ணும் கூட. நீங்க தேவையில்லாம பயப்படாதீங்கக்கா….” உணர்ந்து சொன்னான் சிவா.

மகளை புகழ்வதில் பெற்றவளாய் மனம் நிறைந்தாலும் பெண்ணை பெற்றவராக ஒரு புறம் கலக்கமும் சூழ்ந்தது. “ என்னவோ பா…. நீங்க பேசுறதெல்லாம் கேட்கும் போது சந்தோஷமா தான் இருக்கு ஆனா இந்த காலம் பொட்ட புள்ளைய வெளிய விடுற மாதிரியா இருக்கு? ஒத்தை புள்ளய பெத்து வைச்சிருக்கேன். அவ நல்லபடியா வாழ்ந்தா அதுவே போதும்” என்றார் சராசரி அன்னையாக.

“ அதெல்லாம் அவ ஓஹோ னு வருவா. சும்மா அவள நினைச்சி விசன‌படாத மல்லி. கிளம்புவோமா” என்றபடி வந்தார் ரத்னா.

“ வா… வா… கிளம்புவோம்” எனவும் ரத்னா அவரது வாகனத்தில் ஏறிக்கொண்டார்.

“ சரி கயல் நீயும் மாமா கூட கிளம்பு” என்றுவிட்டு புறப்பட்டார்.

“ வா கயல்” என சிவாவும் தனது வண்டியை உயிர்ப்பிக்க கயலும் ஏறிக்கொண்டாள். ஐந்து நிமிடம் சந்து பொந்தில் நுழைந்து வளைந்து வளைந்து ஒட்டி பிரதான சாலைக்கு வந்தான் சிவா.
பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவளை அழைத்து,”பஸ் பீஸ் கட்ற வரைக்கும் காலேஜ் பஸ்ல போக முடியாது தானே கயல்?’ என கேட்டான்.

“ ஆமா மாமா…. கவர்மெண்ட் பஸ்ல தான் போகணும். 8.40க்கு ஒரு பஸ் இருக்கு னு என் ப்ரெண்ட் சொன்னா….” என்றபடி சாலையை எட்டி பார்த்தாள் கயல்.

“ இந்தா இத வச்சிக்கோ “சட்டென பணத்தை அவள் கைகளில் திணித்தான் சிவா.

“ அய்யோ வேண்டாம் மாமா. அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. அதுவுமில்லாம இப்போ பஸ்ல ப்ரீ தானே. பணம் லாம் வேண்டாம் மாமா” காசை நீட்டிய படியே கூறினாள் கயல்.

“ நான் பஸ் டிக்கெட்டுக்கு காசு கொடுக்கல. பஸ் பீஸ் கட்ட பணம் கொடுத்தேன். அக்காட்ட சொல்லாத. பஸ் ரொம்ப கூட்டமா இருக்கும் கயல். உனக்கு கஷ்டமா இருக்கும். அதனால இந்த பணத்துல பீஸ் கட்டிட்டு காலேஜ் பஸ்ல போ…. அக்கா காசு கொடுத்ததும் என் கிட்ட கொடுத்திடு சரியா….“என்றவன் அவளை பேச விடாமல் கிளம்பி விட்டான்.

செல்லும் அவனையே புன்னகைத்தபடி பார்த்தவள், அவன் கொடுத்த பணத்தை பையினுள் வைத்து விட்டு நிமிர, அவளை உரசுவது போல் வந்து நின்றது ஒரு சொகுசு சாம்பல் நிற மகிழ்வுந்து.

சற்றே திகைத்து இரண்டெட்டு பின்னுக்கு நகர்ந்தவளின் விழிகள் தாமரையாய் விரிந்தது அதில் இருந்தவனை கண்டு. காலை நேர வெயிலின் தாக்கம் ஏதும் இல்லாமல் ஜம்மென அமர்ந்திருந்தான் செழியன்.

அவனை கண்டாலே மத்தளம் கொட்டும் இதயம், இப்போது பறையடியாய் அலறிட விரிந்த இமைகள் படபடவென அடித்துக் கொண்டது கயலுக்கு.

அவன் எதுவும் பேசாமல் சாலையை பார்த்தவாறு அமர்ந்திருக்க, அவளை காரில் ஏற சொல்கிறான் என சொல்லாமலே புரிந்தது. அவளும் மௌனம் சாதித்தே மறுப்பு தெரிவித்தாள்.

“ காருல ஏறு கயலினி…” அவனுக்கே உரித்தான உரிமையான அழைப்பும், ஊடுருவும் பார்வையும் பாவையவளின் பாடாய்படுதிட மறுபேச்சு பேசாமல் காரில் ஏறினாள் கயலினி.

- மலரும்.....
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top