• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சேற்றில் மனிதர்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
18

காருக்குள் அமர்ந்திருப்பவர் யாரென்று இனம் கண்டுகொள்ள முடியாது. கறுப்பு அடித்த கண்ணாடி; பின்னால் பட்டுத்திரை.

“இன்னிக்கு நாம திருவாரூர் போலாமா காந்தி? புதுப்படம் வந்திருக்கு...”

அவனை அப்படியே கழுத்தைப் பிடித்துவிடவேண்டும் போல் இருக்கிறது. கபடமறியாது, உலகை எட்டி அளக்கக் கால்வைக்கத் துடித்த அன்றைய காந்தி இல்லை. ஆழந்தெரியாத சகதியில் முட்புதரில் சிக்கிக் கொண்டிருக்கும் மலர் அவள். வடிவு பாம்புக்கு அஞ்சாமல் முள்ளுக்கும் கூசாமல் தாழைக்குலை கொண்டு வருவான். உடையார் வீட்டில் சரோஜாவுக்கு அந்தப் பூவில் உயிர். என்ன வாசம் பாரு! பீரோத்துணில வச்சா அப்பிடியே புதிசா இருக்கும் என்று போற்றிப் போற்றி வைப்பாள்.

வரப்பில் நடக்கும்போது சேற்றில் விழக் கால் தடுமாறி விட்டால், பிறகு குளித்துக் கரையேறிவிடலாம்.

இந்தச் சேற்றிலிருந்து கரையேறுவது எப்படி?

நறுமண சோப்பு, பவுடர், பூ, பொட்டு, நல்ல சேலை, எந்த நீரினாலும் போக்கமுடியாத சேறு...

“சின்னம்மா வராங்களா?...”

“சின்னம்மாவுக்கு இப்ப வார புதுப்படம் எதுவும் புடிக்கலியாம்...”

கண்களைச் சிமிட்டுகிறான் சாலி, கோகிலத்தைப் பார்த்துக் கொண்டே. இந்தக் கிராமத்திலிருந்து அவள் ஓடிச் செல்வதைப் பற்றி நினைக்கவே முடியவில்லை. சிறிது நேரம் வாசலில் போய் நின்றால்கூட பலருடைய கண்கள் தன்மீது பதிவது போலிருக்கிறது. ஆனால் இவ்வாறு வெளியே சென்றால் தப்புவதற்கு ஏதேனும் வழியிருக்காதா?

அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் மிகவும் கிலி பிடித்துப் போயிருக்கிறாள். உள்ளூற இடிந்து விழுந்து அழுந்திவிட்ட நம்பிக்கையின் இடிபாடுகளின் ஒரு சிதிலத்தைப் பற்றிக் கொண்டுதான் அவள் இச்சேற்றிலிருந்து மீளும் வழியை யோசிக்கிறாள்.

இவள் மருண்டு போயிருப்பதைக் கண்டுகொண்ட சாலியும் களிப்பிக்கும் வகையில் அவ்வப்போது வந்து கல்லூரியில் சேருவது குறித்துப் பேசி உற்சாக மூட்டுகிறான். பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் நுழைமுகக் கல்லூரிப் பரீட்சைக்கான காகிதங்களை அவளிடம் வந்து காட்டி அவள் எந்தப் பாடம் எடுத்துக் கொள்ளலாம் என்று விவாதித்தான்.

வெகுநாட்கள் கழித்து இப்போது சினிமாவுக்கு அழைக்கிறான்.

“எங்க தங்குறோம் ராவுக்கு?”

“நான் உன்னைவிட்டே போக மாட்டேன். ஏன் பயப்படுற கண்ணு...”

அவனுடைய ஒவ்வொரு பேச்சிலும் கவடம் நெளிந்து அருவருப்பாய் வெறுப்பூட்டுகிறது. தன் மனைவியை விலைப் பொருளாக்குவதை விட வேறு ஒரு கேவலம் இருக்கமுடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

“அங்க எங்க ஃபிரண்ட் ஒரு புரொபசர் இருக்காரு. அவர உனக்கு ட்யூசனுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிடலான்னு யோசனை சொல்றாரு, அப்பா. ஏன் காந்தி?”

“ம். செய்யுங்க...”

“வா, அப்ப இன்னிக்கு சினிமா பார்த்துட்டுத் தங்கிக் காலம அவரப் பாத்து ஏற்பாடு செஞ்சுட்டு வரலாமில்ல?”

காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அட அசட்டுப் பெண்னே? இந்தக் கார் சவாரி, உயர்ந்த சேலை, அது இதெல்லாவற்றுக்கும் விலை உண்டு. இப்போ தெல்லாம் விலை போடப்படாத எந்தச் சரக்கும், எந்த இயக்கமும் உலகில் இல்லை.

ஒரு பெண்ணை, அவளது மென்மையான இயல்பில் பூக்கும் உணர்வுகளை எப்படிக் கபடத்துடன் கனிய வைத்து அதைக்கொண்டே அவளை வீழ்த்துகிறார்கள். இந்தக் கயவர்கள்!

கோகிலத்தின்பால் அவளுடைய நெஞ்சம் ஒட்டிக்கொள்கிறது. அவள் தேவதாசி மரபில் வந்தவள். இந்தச் சமுதாயம் இப்படி ஒரு மரபை அனுமதித்திருக்கிறது.

அவளுடைய கபடமற்ற அறியாமையில் பயங்கரமான இத்தகையதோர் அனுபவம் வெடித்துத் துளைத்தபின்னர் அந்தப் பொத்தல் வழியாக பல இருண்ட பகுதிகளைத் துலாம் பாரமாகப் பார்க்கமுடிகிறது.

பெண்... பெண்ணை இவ்வாறு பந்தாடுவதற்கே அவள் தன் நாவைப் பறித்து வைத்திருக்கிறார்களோ?

தனது தாயையும், பைத்தியக்கார நாகுவைப் பற்றியும் அவள் இந்நாள் வரை தீவிரமாகச் சிந்தித்ததில்லை.

தாயை போலீசுக்காரன் கற்பழித்து விட்டான் என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவள் அறிந்தாள். விலைவாசிப் போராட்டம் என்று குப்பன் சாம்பாரின் பெண் சாதி மாரியம்மாவும் கிட்டம்மாளும் போனார்கள். ஆனால் அம்மா போகவில்லை. அப்போது அப்பாவிடம் அது பற்றிப் பேசும்போது பாட்டி “ஒருக்க சூடுபட்டு, அவ சென்மம் மிச்சூடும் அனுபவிக்கிறது. பெரிய போராட்டந்தா. ஊரு நாயிங்களுக்கு என்ன தெரியும்?...” என்று பேசினாள். “துரோபத சீலயப் புடிச்சிழுத்தப்ப அவ தேவியா இருந்தா. இந்தக் கலியுகத்துல எந்தச் சாமி வருது? சாமியுந்தா கண்ணளிஞ்சி போயி இவளுக்கு இந்தத் தண்டனையைக் குடுத்திச்சி. காலங்காத்தால அந்தப் பய குரலெடுத்துக் கத்தையில, வயித்தச் சங்கட்டம் பண்ணுது...” என்று கத்தினாள். ஆனால் அப்போது “சீ இதெல்லாம் கூட்டிச் சொல்ற பேச்சு!” என்று இழிவாகவே தோன்றியது. இப்போதெல்லாம் அம்மாவின் முகம் அவள் நெஞ்சில் தோன்றும் போது சொல்லமுடியாத வேதனை தோன்றுகிறது.

ஐயா அவளை மணந்து, குடும்பம் என்ற பேராதரவு கொடுத்தது...

நெஞ்சு வெடிக்க அவர் காலடியில் வீழ்ந்து, “அப்பா நான் தெரியாம செஞ்சிட்டேன், மன்னிச்சிக்குங்க” என்று புலம்பத் தோன்றுகிறது.

அந்த வீடு, அம்சு காலையில் வீதி தெளிப்பது, வேலைக்குச் செல்லும் பெண்கள், அவர்களிடையே உள்ள கட்டுப்பாடுகள் எல்லாம் பொருள் பொதிந்ததோர் அவசியமான வாழ்வுக்காக விரிகிறது.

ஆனால், அவளால் இந்த அழிவிலிருந்து எப்படிப் போகமுடியும்?

விபசாரத் தடைச்சட்டம் என்றால் என்ன?

பெண் ஒருமுறை கற்பழிக்கப்பட்டதும் கறைபட்டு, அதே வாழ்க்கைக் குழியில் தள்ளப்பட்டு விடுகிறாள். பலமுறைகள் தனியாக இருக்கும்போது, கோகிலத்திடம் இதைப்பற்றிக் கேட்க நினைத்தாள். ஆனால், அவள் பேசுவதில்லை. சொல்லப்போனால் காந்தி, சினிமா மற்றும் கதைப்புத்தகங்கள், சாப்பாடு, உடை என்று சாலி அனுபவிக்கச் சிறைப்பட்டிருப்பது போல்தான் இருந்திருக்கிறாள். வேலைக்காரப் பெண், அல்லது பண்ணை ஆளும் கூட அவளிடம் பேசமுடியாத காவலாக அவள் இருந்திருக்கிறாள்.

ஒவ்வொரு சமயங்களில், அந்தத் தடை சட்டம் எதுவாக இருந்தாலும் ஏதேனும் காவல் நிலையத்தில் போய் இவர்கள் அக்கிரமங்களைச் சொல்லி, அல்லது எழுதிப்போட்டால் என்ன என்று தோன்றும். ஆனால் காகிதமும் கவரும் ஒருநாள் கேட்டதும் கோகிலம், “பாபுவை விட்டுக் கொண்டிட்டு வரச் சொல்றேன்...” என்றாள்.

அவன், “பேப்பர் பேனா கேட்டியாமே? யாருக்கு, லட்டர் எழுதணும்?” என்றான். பேப்பர் பென்சில் வரவில்லை. அவளுடைய கைப்பையில் சர்ட்டிபிகேட், வகையறாதான் இருந்தது. எழுதினால் அவர்களுக்குத் தெரியாமல் அனுப்ப முடியாதே?

திருவாரூர் வந்துவிட்டது புலப்படுகிறது. ஒரு பெரிய ஓட்டலின் முன் வண்டியை நிறுத்துகிறான் சாலி.

மணி ஏழு என்பதைக் கடியாரம் காட்டுகிறது.

மாலை ஆட்டம் சினிமா துவங்கி இருப்பார்கள். ஏழு மணிக்கு இங்கு வருவதன் காரணம். யாருக்கு விலை பேசவோ?

அவளுடைய தற்காப்பு உணர்வு, சக்திகளனைத்தையும் திரட்டிக்கொள்ள ஆயத்தமாகிறது.

கல்லாப்பெட்டியில் இருக்கும் தங்கச் சங்கிலி, குங்குமப் பொட்டணிந்த சிவந்த முதலாளி சாலிக்குப் புன்னகையுடன் வணக்கம் சொல்கிறான். “ரூமா” என்று கேட்பது போல் முகம் காட்டி, சற்று நேரத்தில் ஒரு சாவியை எடுத்துக் கொடுக்கிறான்.

அப்போது அந்தச் சில நிமிடங்களில், காந்தி வெளியே பார்த்து நிற்கையில், சற்று எட்டி ஒரு ஆசனத்திலிருந்து மாலை தினசரியைப் பார்த்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று அவள் மீது படிகிறது. அவளும் பார்த்துவிடுகிறாள்.

“நீயா..?”

தேவு, “நா... நான்தான்... தேவு. நான்தான்!”

இவள் அவனைப் பார்த்து தன் மன உணர்வுகளனைத்தையும் கொட்டிவிடும் பாவனையில் நிற்கிறாள்.

“...வா... வா காந்தி!...” சாலி மாடிப்படியில் நின்றழைக்கிறான். ஓட்டலின் கலகலப்பான கூட்டத்தில் அவளும் கலந்து துளியாகிவிட வேண்டும்போல் இருக்கிறது.

தேவு... தேவுக்குத் தெரிந்திருக்குமோ?

அவனுடன் அதிகமான பழக்கம்அவளுக்குக் கிடையாது. அவள் தந்தையிடம் ‘தலைவர்’ என்று வந்து நின்று குழையும் விவசாயத் தொழிலாளி அல்ல அவன். அன்று பஸ்ஸில் போகும்போது அவன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து பேசுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை.

தேவு...?

அவன் எப்படிப்பட்டவனோ?

அறைக் கதவைப் பையன் திறந்துவிடப் படியில் தாவி ஓடுகிறான்.

இவள் கால்கள் பின்னலிட அங்கேயே நிற்கிறாள்.

“...என்ன? வா, மேல...?”

அதட்டினாற்போல் அருகில் வந்து சாலி அவளை அழைத்துப் போகிறான்.

“நா வரமாட்டேன். என்ன...”

அவள் கத்த நினைக்கிறாள். குரல் எழும்பவில்லை. பயம் தொண்டையைப் பிடிக்கிறது.

“என்ன திகச்சிப்போயி அங்கேயே நின்னிட்டே?...”

“எங்கூருக்காரரு” என்ற சொல் வாயில் வந்துவிட்டது. அவசரமாக விழுங்கிக் கொள்கிறாள்.

“ஒண்ணில்ல. அவரு கையில பேப்பரில ரஜினி ஆக்ட் பண்ணின சினிமா போல படம் இருந்திச்சி. பாத்தேன்...”

“இன்னிக்கு ரஜினி படம் போகணுமா, கமலஹாசன் படம் போகணுமா?”

“இரண்டு பேருமே இல்லாத படம் ஒண்ணுகூட இல்லியா?”

“ஏ இல்லாம?. முதல்ல என்ன சாப்பிடலாம் சொல்லு, ஆர்டர் பண்ணுறேன்.”

பையன் வருகிறான்.

இவள் இரட்டைக்கட்டில், கண்ணாடி, அறையிலிருந்து வரும் ஒருவிதமான புழுக்க நெடி, இவற்றில் ஒரு பயங்கரம் புதைந்திருப்பதான உணர்வில் குழம்பி நிற்கிறாள்.

அவள் கடந்த சில நாட்களாகப் படித்திருக்கும் பத்திரிகைக் கதைகளில், மலிவுப் பதிப்புக்களில் சித்திரிக்கப்பெற்ற, கற்பழிப்புப் பெண்கள் பலரை நினைத்துப் பார்க்கிறாள். கற்பழிப்புக்காகவே கல்யாணங்கள் நடக்கின்றன. கற்பழித்தபின், அவளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள உரிமை பெற்றவன், உடையவன். இந்த அபாக்கியத்துக்கு ஆளான பெண்ணொருத்தி, கையில் குழந்தையுடன் பாண்டிச்சேரிக் கடலில் விழுந்து உயிரை முடித்துக் கொள்வதைத் தத்ரூபமாகச் சித்திரித்திருந்தாள் ஒரு பெண் கதாசிரியை.

அவள் கற்பழிப்பை நியமமாக்குகிறாளா?

“என்ன ஒரே ‘மூடி’யா இருக்கிற காந்தி? நீ சிரிச்சிட்டுச் சந்தோசமா இருக்கணும். எனக்கு உம்முனு இருக்கிறவங்களக் கண்டா பிடிக்காது...”

அவள் பளிச்சென்று சிரிக்கிறாள். பையன் இரண்டு பிளேட் அல்வா, சப்பாத்தி குருமா, எல்லாம் கொண்டு வருகிறான்.

அந்தப் பையனிடம் ஒரு சீட்டுக் கிறுக்கி ‘வாசலில் நிற்கும் தேவுவிடம் கொடு’ என்று அனுப்பலாமா?

ஆனால், இவன் காவலாக இருக்கிறான்.

அல்வாவும் குருமாவும் நெஞ்சில் குழம்ப விழுங்குகிறாள். பழைய காலக் கதைகளில் வருவதுபோல் அற்புதம் நிகழவேண்டும்!

கோட்டை மதிலுக்குமேல் ஆலமர விழுதைப் பற்றி உள்ளே கதாநாயகன் வந்திறங்குவான். அப்படி அவள் வெகுநாட்களுக்கு முன் சினிமா பார்த்திருக்கிறாள், அப்படி யார் வரப்போகிறார்கள்?

“காந்தி, அப்பா உன்னை மட்றாஸ் ஆஸ்டலில் சேர்க்கலாம்னு ஒரு எண்ணம் கேட்டாரு. இங்கன்னா உனக்கு உங்கூரு ஆளுக வருவா, போவான்னு ஒரு கூச்சம் இருக்கும்னு அவர் கருத்து. எப்படியும் இந்த வருசம் எதும் செய்யிறதுக்கில்ல. உனக்கு இஷ்டமா...”

“எங்கண்ணனுக்குக் கடிதாசி எழுதிப் போடணும்னு கவர் கேட்டேன். நீங்க காதிலியே போட்டுக்கிடல...!”

“உங்கண்ணனுக்கு நாந்தான் சேதி அனுப்பினேன். நேத்துத்தா ஒந்திரியரு பாத்தேன்னும் ரொம்ப சந்தோசம்னு சொன்னான்னும் வந்து சொன்னாரு நாந்தா உங்கிட்டச் சொல்ல மறந்து போனேன்!”

ஒன்பதரை மணிக்குக் கிளம்பு முன் குளியலறையில் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள்.

பவுடர் போட்டு மறுபடியும் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.

திருத்திக்கொண்டு அவனுடன் வருகிறாள்.

ஓட்டலில் கூட்டம் வந்துவிட்டது. அவர்கள் வருகையில் கல்லாவில் இருக்கும் முதலாளி, புன்னகை செய்கிறார்.

காரடியில் ஒரு பிச்சைக்காரக் கிழவி உட்கார்ந்திருக்கிறாள். வெற்றிலை பாக்குக் கடை வாசலில் கயிற்று நெருப்பில் பீடிக்கு ஒருவன் நெருப்புப் பற்றவைக்கிறான். தேவு... தேவுவைக் காணவில்லை.

“என்ன சினிமான்னு முடிவு பண்ணினிங்க? மீண்டும் கோகிலாவா?” வெளியில் இருப்பவருக்குக் கேட்கவேண்டும் என்ற மாதிரியில் சற்றே உரக்கவே கேட்கிறாள்.

வண்டி செல்கிறது. இரவில் அதிகமாக லாரிகள் நடமாட்டமே குறுக்கிடுகின்றன. காரின் வெளிச்சம் சாலையில் விழும்போது, எதிர் வண்டி வெளிச்சம் படும்போது, இந்த ஊரில் யாரைத் தெரியும் என்று துழாவுகிறாள். புதுக்குடி பழக்கமான இடம்; நாகைக்குப் போய் வந்த பழக்கம் உண்டு. ‘பெண்களைத் தனியாக அனுப்பக்கூடாது’ என்று பாட்டி கடுமையாக நிற்பாள். இவள் உடையார் வீட்டுக்குச் செல்வதையே ஆமோதிக்க மாட்டாள். “போயிட்டு வரட்டும். அப்பத்தான் தயிரியம் வரும்” என்பார் அப்பா.

‘என் தயிரியத்தில் அரைக்கிணறு தாண்டி இருளில் விழுந்தேன் அப்பா!’

சரேலென்று இங்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அலுவலகம் இருக்கும் என்ற நினைவு வருகிறது.

முன் காட்சிக் கூட்டம் இன்னும் வெளிவரவில்லை.

சாலி, சிகரெட்டை ஊதிக்கொண்டு, ஏ என்று போட்ட அடையாளத்தில் ஏயின் ஒரு காலோடு, உடலில் ஒன்றுமில்லாமல் முழங்காலைக் கட்டிக் கொண்டு தன் நீல விழியை அந்தரங்கமான எண்ணத்தைக் காட்டும் சாளரமாக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தவாறு நிற்கிறான்.

திடீரென்று அவள் அருகில் இருக்கிறாளா என்று பார்ப்பதுபோல திருப்பிப் புன்னகைக்கிறான்.

“காந்தி நீ ஆறு, குளத்திலே நீச்சலடிப்பேல்ல?”

“ஹும்... எனக்குத் தெரியாது...”

“உனக்கு நீச்சலுடைபோடணும்னு எனக்கு ஆசை...”

சிகரெட் சாம்பலைத் தூணில் தட்டிக் கொண்டு சிரிக்கிறான்.

“டிக்கெட் வாங்கிட்டு உள்ளாற போக நேரமாகுமா?”

“நாம பால்கனில உக்காந்துப்போம்...”

“ஹலோ, என்னப்பா சாலி ஆளயே காணம்..?”

யாரோ ஒரு விடலை தோளைக் குலுக்குகிறான்.

“மீட், மிஸ் காந்தி?...”

பரட்டைத் தலையும் யானைக் குழாய் சட்டையுமாக இருக்கும் அவன் புன்னகை செய்கிறான்.

இவளுக்கு இது ஏதேனும் முன்னேற்பாடாக இருக்குமோ என்ற திகில் பரவுகிறது. அவர்கள் பேசும்போது கூடியிருக்கும் கூட்டத்தைக் கண்களால் துழாவுகிறாள்.

அப்போது படம் முடிந்து கூட்டம் வெளியே திபுதிபுவென்று வெளிவருகிறது.


அவர்கள் சீட்டு வாங்க நிற்கையில், சரேலென்று காந்தி கூட்டத்தில் கலந்து கொள்கிறாள். விடுவிடென்று வெளியேறுகிறாள். அவளுக்கு அடுத்த சிந்தனை இல்லை.

ஒரு கிராமத்தான் போன்ற ஆணும், மனைவியும் கைக்குழந்தையுடன் முன்னே நடக்கின்றனர். தலைப் பூவைப் பிய்த்துப் போட்டுவிட்டு அவள் அவர்களுடன் விரைகிறாள்.

“தூத்தேறி” என்று காறி உமிழ்கிறாள் அந்தப் பெண்.

“என்னாளெவு? கூச்சநாச்சம் இல்லாம!...”

“அப்பிடி இருந்தாத்தா சனங்க வாரங்க...”

“நெல்லால்ல. சாமி படம், ஆதிபராசக்தி நெல்லாருந்திச்சி, திருவிளையாடல் நெல்லாருந்திச்சி...”

அவர்கள் விரைந்து நடக்கிறார்கள். இவள் அவர்களுக்கு ஈடுகொடுக்க ஓடவேண்டி இருக்கிறது.

பின்னே ரிக்சாக்கள். லாரி வெளிச்சம் விழும்போது, கார் தன்னைத் துரத்தி வருவதாகக் கிலி பிடித்து நா ஒட்டிக்கொள்ள வீழலில் ஒதுங்குகிறாள்; ஓடுகிறாள்.

“என்னாங்க...? ஒங்களுக்கு வெவசாய சங்க ஆபீசு எங்க இருக்குன்னு தெரியுமா?...”

அந்த ஆள் திரும்பிப் பார்க்கிறான்.

“ஆரும்மா நீ?...”

“இல்லிங்க... வந்து. பஸ்ஸுக்கு நானும் எங்கண்ணனும் வந்தம், அவரு பஸ்ஸுல என்ன உக்காத்தி வச்சிட்டு எதுக்க கடய்க்கு போயிட்டு இதா வந்திடறேன்னு போனாரு பஸ்ஸு அதுக்காட்டியும் எடுத்திட்டா நா அண்ணன் வரலியேன்னு எறங்கிட்டேன். பாத்தா கடயில அண்ணன் இல்ல. ஓடிப்போயி பஸ்ஸில ஏறிப் போயிடுச்சி போல இருக்கு...”

கதை ஒன்று ஒட்டுப்போடுவது சிரமமாக இருக்கிறது.

“என்னம்மா, ராநேரம் பதனமா இருந்துக்கிடாம இப்பிடி எறங்குவாங்களா?”

“எங்கிட்ட காசொண்ணுமில்ல. அண்ணன் வராம நாம் போயிட்டு டிரைவர் கேட்டா என்ன பண்ணுவே?...”

“எந்துாரு...?”

“புதுக்குடி போவணும்.”

“காலம அஞ்சரைக்குத்தா இனி பஸ்ஸு...”

“அதா, ஒங்கூட்ல வந்து தங்கிட்டு, மொத பஸ்ஸில கொஞ்சம் ஏத்திபுட்டீங்கன்னா... நா உங்களுக்கு. உங்கள என்னிக்கும் மறக்கமாட்டேன்...”

“புதுக்குடில எந்தப் பக்கம்?” அந்தப் பெண் இடைமறித்தாள்.

“ரதவீதிக்குப் போகணும்.”

“என்னாம்மா, புத்திகெட்ட பொண்ணா இருக்கிறியே? அவரு ஆம்பிள ஓடிவந்து ஏறிப்பாரு. டைவரிட்ட சொல்லி பாக்கச் சொல்லுறதில்ல?”

பெண் பிள்ளைக்கு அவளுக்கு இடம் கொடுப்பதில் விருப்பமில்லை என்று புரிகிறது.

பெண்கள் தாம் பெண்களுக்கு முதல் எதிரிகளாக இருக்கிறார்கள்.

கோகிலத்திடம் அந்தரங்கமாக இருக்க எவ்வளவு முயன்றாள்?

“நடந்து போச்சி, கொஞ்சம் எரக்கம் காட்டுங்க. எனக்குக் கார்க்காக குடுத்து ஏத்தி புதுக்குடி அனுப்பிடுங்க. நா. மறக்கவே மாட்டேம்மா...”

“இந்த வம்பெல்லாம் நமக்கு என்னாத்துக்கு” என்ற மாதிரியில் பெண் பிள்ளை நடந்து போய்க் கொண்டிருக்கிறாள்.

“நாங்க இருக்கிற எடத்துல பெரிய... குடும்பம். எல்லாம் யாரு என்னன்னு கேப்பாங்க...”

“எனக்கு ஒக்கார எடம் குடுங்கம்மா, உங்களப்போல நானும் ஒரு பொண்ணு. காலையில் நான் போயிடுவேன். உங்களுக்குச் சந்தேகம் எதும் வாணாம். புதுக்குடில... டாக்டர் வூடு இருக்கு வேண்டிய மனிசாள் இருக்காங்க. உங்களுக்கு அப்பிடி ஒரு ரூவாக் காசில சந்தேகம் இருந்திச்சின்னா, காதில போட்டிருக்கிற தோடு கழற்றித்தாரேன். வந்து வாங்கிக்குங்க...”

அந்தச் சேற்றுக் குழியிலிருந்து மீள, காலை எடுத்துவிடும் நம்பிக்கையில் அவர்களைப் பற்றிக் கொள்கிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
19

பள்ளமாக இருக்கும் பங்கிலிருக்கும் அதிகமான தேக்க நீரை, ஓர் இறைவை கட்டி மேட்டுப் பங்குக்கு மாமுண்டி இறைத்துக் கொண்டிருக்கிறான்.

அது கோவிலுக்குரிய நிலம். சம்பாப் பயிர், பகங்கொள்ளையாகக் கண்களையும் மனதையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. வரப்பு மிகக் குறுகலாக இருக்கிறது. காலை எட்டி எட்டி வைத்துச் சம்முகம் மிக விரைவாக வாய்க்காலில் இறங்கிக் கடந்து வருகிறார். பொன்னடியான் இன்று வகுப்பெடுக்க வரவேண்டும்.

பழைய கடைத்தெருக் கொட்டகையை விட்டு புதிதாக ஆற்றோரத்தில் குப்பன் சாம்பார் முதலியோருடைய குடிசைகளுக்கு அருகிலேயே ஒரு சிறு கூரைக் குடில் அமைத்திருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர் சங்கக் கொடியை நட்டு, ‘படிப்பகம்’ என்று எழுதிய அட்டையையும் மாட்டியிருக்கிறார்கள்.

முறையாகத் திறப்பு விழா என்று ஒன்றும் கொண்டாடவில்லை. பொன்னடியான் புதன் கிழமையும் சனிக்கிழமையும் வருகிறான். முக்கியமாக வடிவு, மாமுண்டி, சித்தையன் என்று ஐந்தாறு ஆண்களுடன், அம்சு, ருக்மணி, சாலாச்சி ஆகியோரும் முதல் வகுப்பில் வந்து அவன் பாடம் சொல்வதையும், பலகையில் எழுதிப் போடுவதையும் கேட்டார்கள், பார்த்தார்கள்.

சம்முகம், இளைஞர்கள், தங்கள் தொழில், பொது அறிவு, சமுதாயம், உலகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த அறிவுபெற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர், அடுத்த வகுப்புக்குப் பொன்னடியான் வந்தபோது சம்முகம் ஐயர் பூமியில் மருந்து தெளிப்புக்குப் போய்விட்டார். அதற்கு அடுத்த வகுப்பில் ஐந்தாறு பேர்கூட இல்லை. வடிவு, குப்பன் சாம்பாரைப் பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு, வேறெங்கோ உழவென்று போயிருந்தான்.

அவன் இப்போதெல்லாம் அவர் கண்களில் அதிகம் படுவதில்லை. குப்பன் சாம்பார் மட்டுமே கூடக் கூட வருகிறான். பழனிப்பயல் எப்போதேனும் இங்கு வருகிறான்.

சேத்துார் மதகை எட்டியதும் சாலையில் சைக்கிள் வருகிறதோ என்று பார்க்கிறார். பொன்னடியான் சைக்கிளிலேயே வந்து விடுகிறான். காந்தியைக் கட்டுவதுதான் நடக்கவில்லை. அந்தத் தலைகுனிவு நீங்க, இந்த அறுவடை முடிந்ததும் அம்சுவை இவனுக்கு விமரிசையாகக் கட்டிவைக்க வேண்டும் என்றதொரு வீம்பு இவருள் ஓங்கியிருக்கிறது.

“வணக்கம் காம்ரேட். பத்து நிமிசம் லேட்டாயிடுச்சி...”

சைக்கிளை விட்டிறங்கி அதை உருட்டிக்கொண்டே அவன் அவருடன் நடக்கிறான்.

பசுமையில் பூத்த வண்ணப் பூக்களாய்ப் பெண்கள் குனிந்து களை பறிக்கிறார்கள். நல்ல மழையும் வெயிலும் பசுமைக்கு வீரியம் அளிக்க, கன்னிப் பெண்ணின் மலர்ச்சிபோல ‘தூர்’ பிடித்துப் பயிர்கள் விரிந்திருக்கின்றன.

முட்செடிகளிடையே மாரியம்மா சுள்ளி பொறுக்குகிறாள்.

“மாரியம்மா, வடிவு இருக்கிறானா?...”

“அவனுக்கு ஒடம்பு நல்லால்ல. ஐயனார் குளத்து வயித்தியரிட்டப் போனா...”

“ஏ என்னாச்சி? ரொம்பக் குடிச்சிட்டானா?”

“அப்பிடியெல்லாம் வடிவு குடிக்கமாட்டா. அன்னிக்கி மழயில முச்சூடும் நனஞ்சிட்டான். சளி புடிச்சிக் காச்சலும் ஒடம்பு வலியுமா அல்லாடினா. சோறே சாப்பிடறதில்லே. பித்தமாயிருக்குன்னா...”

“சரி, பழனி இருக்கிறானா?”

“பழனி இப்ப எப்பிடி வருவான்? மிசின்ல மூட்ட வருமில்ல?”

“வகுப்ப சாயங் காலமா வச்சிக்கிறதுன்னாலும் தோதுப்படுறதில்ல. அல்லாம் குடிக்கப் போயிடறாங்க. பொம்பிளங்களுக்கு வீட்டு வேலயிருக்கு. ஆனா இப்ப நடவு உழவு இல்ல, மத்தியானம் ஓரவரு ஒதுக்கலான்னு நினைச்சி வரேன்... அதான், காம்ரேட் காலம ஏழு மணிக்கு வேல தொடங்கி, மத்தியானம் ரெண்டு மணியோட வேலய முடிச்சிடனும்ணு சில இடங்களில் அமுல் பண்றாங்க. மஞ்சக்குடிப் பக்கமெல்லாம் இதுக்கு ஒத்திட்டிருக்காங்க, இதுனாலே நாம நாலு மணிக்குப் படிப்பகம் நடத்தலாமில்ல...?”

சம்முகம் பேசாமல் நடக்கிறார்.

இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை அவரால்.

“நாம இந்தச் சங்கக் கூட்டத்துல பேசினதுதான? சேத்தில எறங்குனா ஏழு மணி நேரமும் தல நிமிராம வேலை செய்ய முடியுமா? நடுவில ஒருமணி, ரெண்டு மணி இருக்கிறது சரிதான். காலம எட்டுலேந்து பன்னண்டு. பெறகு இரண்டிலேந்து அஞ்சு, அஞ்சரைன்னு இருக்கிறதா சரி. அநேகமா பக்கத்திலேந்தா பொண்டுவ வூடுகளுக்குப் போயிட்டுக் கூட வாராங்க. புள்ளிக்கிப் பாலு கொடுக்கிறதுன்னு வேற இருக்கு... அதுமில்லாம, ரெண்டு மணிக்கே கள்ளுக் கடயில போயி உக்காந்திடுவாங்கல்ல?...”

சங்கத்து வாசலுக்கு வருகிறார்கள்.

நாலைந்து சிறுவர் சிறுமியர் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

“ஏண்டால? ஸ்கூலுக்குப் போகல நீங்க?”

பொன்னனின் பயல் முருகன் சம்முகம் கேட்டதும் மூக்கை உறிஞ்சிக்கொண்டு ஒடுகிறான்.

பொன்னடியான் குடிசைகளுக்கு முன் நின்று “யாருமில்ல?... ஏ. ராசாத்தி உங்கண்ணனெங்க...” என்று ஆள் கூட்டுகிறான்.

“எம்பேரு ராசாத்தியில்ல...”

இடையில் பாவாடை கிழிந்து தொங்க முடி அவிழ்ந்து மறைக்க அதேபோன்ற சாயலுடைய ஒரு குழந்தையை இடுக்கிக்கொண்டு நிற்கும் சிறுமி சிரிக்கிறது.

சங்கத்துக் கதவாக அமைந்த இரட்டை வரிக் கீற்றை எடுத்து வைக்கிறான். திறப்பு வைபவத்தன்று சாணி மெழுகிக் கோலமிட்டதுதான். கருமை பூசிய பலகை ஒரு முட்டுக்கட்டையின் ஆதரவில் சாய்ந்திருக்கிறது. உள்ளே ஆடு கோழி வகையறாக்கள் வந்து தங்கிய அடையாளமாகப் புழுக்கைகள், எச்சங்கள்.

“மாதர் சங்கத்துக் கிட்டாம்மாளக் காணம்! இத்த நறுவிசு பண்ணி வைக்கக்கூடாது?”

“தா... யாரங்க...? பாட்டி! கொஞ்சம் இங்க வா!...”

ஒரு கிழவி தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய அகப்படுகிறாள்.

ஒரு கீற்றைக் கொண்டு வந்து போட்டு அமர்ந்து கரும் பலகையைத் துடைத்து, கையோடு கொண்டு வந்திருக்கும் சாக்குக்கட்டியால் தேதியை எழுதிப் போடுகிறான்.

பையிலிருந்து புதிய பத்திரிகை, சிறிய துண்டுப் பிரசுரங்களை எடுத்து வைக்கிறான்.

சம்முகம் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார்.

மாடசாமி வாய்க்கார் கட்டம்போட்ட சிவப்புத் துண்டுடன் ஓடி வருகிறான்.

“முதலாளி... முதலாளி... வீரபத்திரனையும் குஞ்சிதத்தையும் போலீசில புடிச்சிட்டுப் போறாவ...!”

“என்னடா..? போலீசிலா?”

“ஆமா அக்கிரகாரத்துப் பக்கம் காலமேந்து கூட்டம் கூடிக் கெடக்குது...”

“ஏ, என்னாச்சி?”

“கோயிலில் அம்மன் நகையெல்லாம் வச்சிப் பூட்டிருந்தாங்களாம். பொட்டி ஒடச்சிருக்குதாம்...”

“அதுக்கு...? வீரபத்திரனுக்கென்ன? கோயிலுக்கு நகை இருக்கிற விசயமே நமக்குத் தெரியாது.”

“அதென்ன்மோ மூணு நா முன்னம செங்கல்பட்டு ஐயிரு, வரதராசன் எல்லாரும் வந்து பொட்டி தொறந்து அல்லா நகையும் பார்த்து வச்சிப் பூட்டினாங்களாம். இப்ப பொட்டி ஒடச்சிருக்கு தாம். சரப்பளியோ, பதக்கமோ காணாம போயிடிச்சாம். வீரபத்திரனும் குஞ்சிதமுந்தா வூட்ட ராவில இருந்தாங்களாம். கிட்டம்மா இப்பத்தா அழுதுகிட்டே போவுது, வடிவுப் பயதா கூட்டிட்டுப் போறா.”
“இதென்னடா வம்பாயிருக்கு?”

பொன்னடியான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறான்.

அக்கிரகாரத்துக் கூட்டம் இன்னமும் கரையவில்லை.

குருக்கள் வீட்டு வாசலில் ரங்கன் பயல், நடராசு சின்னத் தம்பி, விருத்தாசலத்தின் அக்கா, மூலையான் மனைவி எல்லாரும் இருக்கின்றனர்.

“என்னங்க சாமி?”

“சம்முவமா? வாப்பா. விசாரணைன்னு டேசனுக்குக் கொண்டு போயிருக்காங்க. நிலவறைக் கதவு திறந்திருக்கு. இரும்புப் பெட்டிய மறு சாவி போட்டுத் திறந்திருக்காங்க. ஒட்டியாணம், சரப்பளி மாலை, கல்லிழைச்ச பதக்கம், நாலு சங்கிலி எல்லாம் காணலியாம். மூணு நா முன்ன ஐயர் வந்து லிஸ்ட் கொண்டாந்து பாத்தாங்களாம்...”

“குஞ்சிதம், இந்தப் பொம்பிள பாவம், அத்த வேற புடிச்சிருக்காங்குறிய?”

“வீரபுத்திரன் வூட்டுலதா ராத் தங்குறானாம், காவலுக்குன்னு. தேங்கா புடுங்கிப் போட்டிருக்காங்க, சாமான் சட்டெல்லாம் இருக்கு. இந்தப் பொம்பிளதா கேக்க வேண்டாம். இவளும் இங்கதானிருந்திருக்கா. இரண்டாங்கட்டு ரூம்ல நிலவற இருக்கு...”

“ராத்திரி பூட்டிட்டுப் போனேன்னு நடராசு சொல்லுறான். அந்த ரூம் பூட்டுத் திறந்து பத்து இருபது நாளாச்சி. பாத்திரமெல்லாம் குஞ்சிதம் தேச்சி வச்சா, எனக்குத் தெரியும். அந்தப் பக்கமே நா போகலன்னு வீரபுத்திரன் அழறான், பாவம். ஆனா, நகை என்னமோ காணல. குஞ்சிதத்தின் சீலையில் சாவி இருந்ததாம். அதுதா மாத்து சாவியாம்...”

“இதென்ன சாமி, நம்பறாப்பல இல்லியே? அந்தப் பொம்பிள எதோ நாலுபேர அண்டிட்டுப் பிழச்சிட்டிருந்திச்சி. அத்தப் போயி...”

“அதா இவந் தூண்டுதலில் அவளும் சம்பந்தப் பட்டிருக்கலாம்...”

“என்னா சாமி, கேவுறில் நெய்யொழுவுதுன்னா கேக்கிறவங்களுக்கு மதி வாணாம்?”

“கோவிலுக்கு சாமி கும்புடவே போகாத ஆளுங்க, கோயில் விசயமே தெரியாது. இது அப்பட்டமான சூட்சியாயிருக்குதே?”

விருத்தாசலத்தின் அக்காள் மங்கம்மா தன் பெரிய குரலெடுத்துப் பாய்ந்து வருகிறாள்.

“கழிசடங்க. சாமி கும்பிடப் போகாத சனியங்க. இந்தக் கோயில் விழா நல்லபடியா நடக்கக்கூடாதுன்னு கச்ச கட்டிட்டு இப்பிடிப் பண்ணித் தொலச்சிருக்குங்க. குஞ்சிதமாம் குஞ்சிதம், வெளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சலம். எங்கேந்தோ வந்த பர நாயி. அத்த வூட்ட வச்சி, சோறு போட்டதுக்கு இப்பிடிக் கோயில் சொத்தக் களவாண்டிருக்கிறாளே? வீரபுத்திரன் தல தெறிச்சி நின்னான். என்னடா பேச்சு? ஒரு நிமிசத்தில துக்கி எறிஞ்சிடுவா! பண்ணக்கார பயனுவளாவா இருக்குறானுவ?”

சம்முகத்தின் நாவில் வசைகள் தெறிக்கின்றன. கொட்டிவிடாமல் பதுக்கிக் கொள்கிறார்.

“கணக்கப்புள்ள, பழயமணிகாரர் அல்லாருந்தா இருந்தாவ. அந்தக் களுத வாயத் தொறந்தாளா? இனிஸ்பெட்டரு வந்து கேக்கறாரு இவ, வாயெ தொறக்கல. இந்தச் சாவி உனக்கு எப்பிடிம்மா கெடச்சிச்சின்னு கேக்குறாரு ஒண்ணுமே பேசல. சரி டேசனுக்கு இட்டுப் போயி கேக்குறபடி கேக்குறோம்னு போயிருக்காங்க. தங்கம் விக்கிற வெலயில டேயப்பா! போயிருக்குற பொருள ஒரு லட்சத்துக்குக் காணும்...”

இந்த நகைகளை இவர்களே பதுக்கிக்கொண்டு இப்படி நாடகம் ஆடுகிறார்களா?

கோயில் திருவிழா நாடகமே இதற்குத்தானா?

ஆனால் இதையெல்லாம் எப்படிக் கேட்பது?

“நாம அப்ப அஸ்தமங்கலம் போயித்தான் பார்க்கணும். முள்ளுமேல போட்ட துணியாக நம்ம சமூக வாழ்க்கை ஆயிடுச்சி.”

சம்முகத்துக்கு நெற்றி வேர்க்கிறது. காலையிலிருந்து ஒழுங்காக ஒன்றும் சாப்பிட்டிருக்கவில்லை. சிறிது நீராகாரம் அருந்திவிட்டு விடியற்காலையில் வயலுக்குச் சென்றவர்தாம். வீட்டுக்குச் சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று தோன்றுகிறது.

“வாப்பா, பொன்னு, வீட்டுக்குப் போயிட்டு வரலாம்...”

சைக்கிளில் பின்னே அமர்ந்து கொள்கிறார். விரைவாகவே விடு திரும்பி விடுகின்றனர். சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே குனிந்து நுழைகிறார்.

வாசலில் பெட்டைக்கோழியும் ஒரு குஞ்சும் இரை பொறுக்குகின்றன.

திண்ணையில் அப்பா படுத்திருக்கிறார். இப்போதெல்லாம் இவர் படுத்தே கிடக்கிறாரே என்று தோன்றுகிறது.

வீடு திறந்திருக்கிறது. உள்ளே மனித அரவமே தெரியவில்லை.

“அம்சு!...”

கூவிக்கொண்டே நடுவிட்டில் துண்டைப் போட்டுக் கொண்டு அமருகிறார்.

தாய்தான் பின் தாழ்வரையிலிருந்து வருகிறாள்.

“உக்காரு தம்பி. எங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்கிறாங்களா?”

“காத்தான் மாமன் வந்து சொன்னா, நடவுன்னு நாளாக்கிப் பத்து ரூபாக்கிமேல செலவாவுதில்ல? போயிருக்காவ...”

“சோறிருக்குதா, எதுனாலும் இருந்தா எடுத்து வையி. ஒரே குழப்பம். இப்ப போலீஸ் டேசனப் பார்க்க போவணும்...”

இதொன்றும் கவனமில்லாதவள் போல் உள்ளே பார்க்கிறாள் கிழவி.

சமையலறை இருட்டிலிருந்து கையில் தண்ணிர் செம்புடன் வெளிப்படும் உருவம் கண்களில் முதலில் நிழலாக பின்னர் தூலமாக - உயிர் வடிவாகத் தெரிந்து பார்வையை அப்பிக் கொள்கிறது.

தண்ணிரைக் கொண்டு கீழே வைப்பவள் குனிகையில் கன்னத்தில் நெருப்புத் தழலாக விரல்கள் வீறுகின்றன. தண்ணிர் சிதறப் பாத்திரம் பிடியை விட்டு நழுவிச் சாய்கிறது.

காந்தி இதை எதிர்பார்த்தவளாகவே சுவரைப் பற்றிக் கொண்டு, கண்ணீரை விழுங்கிக்கொண்டு அவரைப் பார்க்கிறாள்.

‘இது நியாயமா’ என்று துளைப்பது போலிருக்கிறது அந்தப் பார்வை.

சிறிது நேரம் அவருக்கும் எதுவும் புரியவில்லை. பொன்னடியான் வெளியே வந்து தெருவைப் பார்க்கிறான்.

“எந்த மூஞ்சிய வச்சிட்டு நாய் மாதிரி உள்ளே நுழஞ்ச? சீச்சி! வெக்கங்கெட்டு எப்பிடி வந்து உள்ளாற நுழைஞ்சு எம்முன்ன வந்து நிக்கிற? பொட்டச் சிறுக்கி, உங்குணத்தக் காட்டிட்டியே?” அவள் அசையவேயில்லை.

அவள் எதிரொலி எழுப்பியிருந்தால் அவருடைய பொங்கலுக்கும் குமைச்சலுக்கும் வடிகாலாக இருந்திருக்கும். சிலையாக நின்றதுஎழுச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. தம்முடைய சீற்றத்தின் வேர்களை அசைப்பதாக இருக்கிறது. எனவே தமக்குச் சாதகமான வகையில் மருமகள் வெளியே நிறுத்தி வைத்தது, மகன் உதாசீனப்படுத்தியது எல்லாம் நினைவில் புரண்டு கொடுத்து அவரை வெறியனாக்குகின்றன.

“என்னடீ, நாங் கேக்குற, நிக்கற? அந்தப் பய கூட ஸ்கூட்டர்லல்ல ஊர்கோலம் போனியாமே? ஒட்டல்லே பார்த்ததாக ஒந்திரியர் சொன்னாரு எண்சாணும் ஒரு சாணாக் குறுகிப்போனேன். அப்பிடியே கெடந்து மானம் துடிச்சிச்சி. அப்பிடி ஒரு ஒடம்பு கேக்குமாடீ?... இந்தக் குடிலபெறந்து...” வசைகள் கட்டுக்கடங்கவில்லை. எழுந்து தாவுகிறார்.

கிழவி குறுக்கே மறிக்கிறாள்.

“என்னடால, உனக்குப் புத்தி பெரண்டு போச்சு? அது இந்த மட்டுக்கும் சமாளிச்சிட்டு வந்திருக்குதேன்னு ஒரு தன்ம வேணாம்? இத உம்பய கூடத்தான் போயி கட்டிக்கிட்டான். அவன் ஒரு வூட்டில கொண்டாந்து வச்சி கொளாவல?...”

“நீ இப்ப நாயம் பேச வந்திட்டியாக்கும்? அவங் கண்ணு காணாம தொலைஞ்சி போயிருக்கிறா. ஓடிப் பூடிச்சாமேன்னு கேட்டவங்க திரும்பி வந்திடிச்சி போலிருக்குன்னு சொல்லுறப்ப... மானமே போயிடுமே! யாராருக்கோ நாயஞ் சொன்னான். பொண்ண மட்டும் கூட்டி வச்சிட்டான்னு சொல்லமாட்டா? ஒரு பய என்ன மதிப்பானா?... இனிமே இவள எந்தப்பய கட்டுவா? போயித்தொலஞ்சவ அங்கியே இருக்கிறத வுட்டுட்டு ஏண்டி வந்தே?”

அவளுக்கு உதடுகள் துடிக்கின்றன. முகத்தை மூடிக்கொண்டு விம்முகிறாள்.

“ஏண்டி வந்தே? அப்பன் முகத்தில கரி பூசினாலும் சமாளிச்சிக்குவான், இருந்து அவனச் சாவ அடிக்கணும்னு திரும்பி வந்தியா? உனக்கு சூடு சொரண இருந்தாப் போயிருப்பியா, போனவ திரும்பி வந்திருப்பியா?. இதபாரு, இந்த வீட்டில இனிமே எடமில்ல. நட... எவங்கிட்ட வேணாப் போ...”

அவள் கையைப் பற்றித் தள்ளுகிறார். அவள் எதிர்ப்புக் காட்டாததால் தடுமாறி விழுகிறாள்.

“லே, சம்முகம். நீ செத்த சும்மாருடா. அது வரவே மாட்டேனுதா சொல்லிச்சாம். ஆத்துல கொளத்துல வுழுந்து பழிகொண்டு வராம வந்திச்சேன்னு எரக்கப்படு. ஆந்தக் குடியா பெத்த பயதா, படிச்சிட்டு வந்திருக்கிறான்ல. தேவு, ஐயிரு வூட்டில வந்திருச்சாம். ஐயிரு அவங்க கூட சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இதபாரு லட்டர் கூடக் குடுத்திருக்காரு...”

ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

“சம்முகத்துக்கு ஆசீர்வாதம். மகள் காந்தியைக் தேவுவுடன் அனுப்பி வைக்கிறேன். எதுவும் முரண்டாமல் ஏற்றுக்கொள். அவள் மகா தைரியசாலி. சோதனைக்குள் அகப்பட்டு அதிலிருந்து எழும்பி வருவதுதான் தீரம்.

உன்னுடைய ஊர் கெட்டு, சாதிக்கெட்டு, கொள்கைக் கெட்டு எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, மனிதாபிமானக் கண்ணோடு பாரு. புதைமணலில் கால் வைத்தவள் தெரிந்து தப்பி வந்திருக்கிறாள். இன்றைய நிலையில் பெண்ணினம் எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்பதற்கு அவள் அநுபவமே போதும். இந்த நிலையை மாற்றப் பெரிய அளவிலே எதானும் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. அவளை அடிக்காதே. புண்படுத்தாதே. விசுவநாதன்.”

சட்டென்று தெருவாசலைப் பார்க்கிறார்.

நாகு கையில் மண்ணை வைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டே நெல் துற்றுவதுபோல் இறைக்கிறான்.

சைக்கிளை, பொன்னடியானைக் காணவில்லை.

தலைவிரிகோலமாகக் கிட்டம்மாளும், தேவுவும் வருகின்றனர்.

தேவு சற்றே முகமலர வணக்கம் தெரிவிக்கிறான்.

“எங்குடில மண்ணள்ளிப் போட்டுட்டாங்க, அந்தத் ********! ஊராம் புள்ளக அத்தினி பேரயும் கொலச்சிப் போடணும்னு வந்த பரநாயி. எம்புருசனுக்கு ஒண்ணு தெரியாது. இவுருபோயி கள்ளச்சாவி கொண்டாந்தாராம். மாரியாயி! நீ பாத்துக்கிட்டுத்தான் இருக்கிற...?”

தெருவில் உள்ள பொட்டு பொடிசுகள் கூடிவிடுகின்றன. படுக்கையோடு கிடந்த கிழவன் ஏதோ கனவு கலைந்தாற் போன்று எழுந்து உட்காருகிறான்.

“நீங்க இப்ப கொஞ்சம் வாங்க. நாம போலீஸ் ஸ்டேசனுக்குப் போயி மேக்கொண்டு செய்ய வேண்டியதைப் பார்ப்போம்..” என்று தேவு நிதானமாகக் கூறுகிறான்.

“நான் காலம வந்திருந்தேன்...”

“நானும் அதான் கிளம்பினேன்... இது ஒரே அடாவடியால்ல இருக்கு. எப்படியோ கண்ணி வச்சி நாடகம் போடுறாங்க. கோவில் திருவிழான்னு வரப்பவே சம்சயமாயிருந்திச்சி...”

“இப்ப, முக்கியமா மணிகாரரு. வரதராசனெல்லாம் கூட ரொம்ப அக்கறை காட்டல. நகை என்னென்ன இருந்திச்சின்னு சரியா லிஸ்ட் குடுக்கவே ஆளுங்க இல்ல. சாவி செத்துப்போன அம்மா வாசுதேவங்கிட்டக் குடுத்து, அவரு கொண்டாந்தாராம். ஆனா, அது நிலவறச் சாவிதான்னு குருக்கள் சொல்றாரு... விருத்தாசலம், வாசுதேவன் நாலு பேருக்கு முன்ன சாவியக் காட்டித் திறந்து நகையப் பாத்துட்டு வச்சாருன்னும், பிறகு பெட்டிய நிலவறயில வச்சிப் பூட்டிட்டு அந்தச் சாவிய வூட்டில கொண்டு பீரோவில் வச்சாருன்னும் சொல்றாங்க. வீரபுத்திரன் முந்தாநா அவுருகிட்ட சாயங்காலம் காசு கேக்கப் போனானாம். கூடத்துல அவனப் பாத்ததாக அம்மா சொல்லிச்சாம். பீரோல சாவி தொங்கிச்சாம். ஒண்ணும் நம்பறாப்பல இல்ல. கோயிலுக்கு இத்தினி சொத்து, நகை இருக்கு, ஏன் எண்டோமெண்ட் போர்ட் கீழ வரலங்கிறதே பெரிய கேள்வி. முதல்ல, நாம போயி அந்தப் பொம்பிளய விடுவிச்சிட்டு வரணும். ஸ்டேஷனிலே ரா நேரத்துக்கு வச்சிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு.”

கிட்டம்மா இதைக் கேட்டதும் குமுறிப் பாய்கிறாள்.

“பொம்பிள... பொம்பிளயா அவு? எங்குடிக்கில்ல மண்ணு போட்டுட்டா! ஊராம்புள ஒருத்தன் பாக்கியில்ல. இவ போலீசுகாரனயும் வளச்சிட்டிருப்பா... ஊரு சனமறியாம, ஒடம்ப வித்து சீவிக்கிறவளுக்குப் போயி சட்டம் பேசுறிய?...”

“த, ஏனிப்படி லோலு லோலுன்னு கத்துறீங்கம்மா? ஒரு பொம்பிளக்கிப் பொம்பிளங்கற எரக்க புத்தி உங்களுக்கு இல்லாம போனதுதா எல்லாத்தயும் விட மோசம்!...”

அவர்கள் படி ஏறாமலே நிற்கின்றனர். சம்முகம் சட்டையை மாட்டிக் கொண்டு செல்கிறார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
21

அம்சு இரவுச் சோறுண்ட பின் தட்டை எடுத்துக் கொண்டு செல்கிறாள். ஒரு முழு நாளாகிறது. தாயும் கூடக் காந்தியிடம் பேசவில்லை.

காந்தி மூலையில் நின்று உள்ளூறக் குமுறுகிறாள்.

கிட்டம்மா “இடியாத் தலல வுழுந்திடிச்சுக்கா!” என்று ஓலமிட்டுக் கொண்டு வருகிறாள்.

“வாய்க்காரு புதுக்குடி போயிருக்காரு. சொல்லிட்டுப் போவலான்னு வந்தே. நேத்தெல்லாம் ஒரே அலயா அலஞ்சிட்டம். இப்பிடி இடியா வந்திரிச்சே!”

லட்சுமி நாகுவைச் சோறு தின்ன வைத்துக் கொண்டிருக்கிறாள்.

“நா நல்லூரு நாயக்கர் நெலத்திலே சம்பா நடவு. நாயக்கரம்மா கூட ரெண்டு நா கூலி வருதேன்னு போயிட்டே செலவுக்கே கட்டல. இன்னிக்கு வாரப்ப வெளக்கு வச்சிப் போச்சி. பஸ்ஸு வரும்னு நின்னு பார்த்தே வரல. மழவேற தூத்தப் போட்டுக்கிட்டே இருக்கு. கடத் தெருப்பக்கம் வாரச்சேதா காதுல வுளுந்திச்சி. குஞ்சிதத்த வேற புடிச்சிட்டுப் போயிருக்காவளாம்?”

“அவ பேச்ச எடுக்காதீங்கக்கா! என் தலக்கிக் கல்லுவுழுந்ததே அந்த நேயினாலதா. நேயி அவ புழுத்துத் தெருத் தெருவா அலஞ்சி சாவணும்! எம் வவுறு எரியிது!”

கையைச் சொடுக்கிக் கிட்டம்மா சபிக்கையில் காந்திக்கு உடல் குலுங்குகிறது.

“அவள ஏன் சாபம் போடுற? அவ அலஞ்சிட்டாப்பல உனக்கு நல்லாயிடுமா? நாமதா ஏற்கெனவே ஈனக்குடில பெறந்து நாயாப் படுறமே, பத்தாதா?”

“வூட்டோட வுழுந்து கெடங்கன்னு அடிச்சிப்பே. ஆபுரேசனப் பண்ணித் தொலச்சிடே, புள்ள வாணாமுன்னு. அந்த ஆம்புல கொணந்தெரிஞ்சும்; இப்ப கையுங்களவுமாப் புடிபட்டுச் சந்திசிரிக்கிது.”

“இப்ப இவரு புதுக்குடிக்குப் போயிருக்காரா?”

“ஆமா. பணங்காசு தோது பண்ணணும், சங்கத்துல பேசணும்னு சொல்லிட்டுப் போயிருக்காரு...”

கிழவி வாயிலிலிருந்து வந்து அருகில் உட்காருகிறாள்.

“புள்ளங்களெல்லாம் வூட்டில இருக்கா?”

“நேத்து பூரா பட்டினி. அன்னாடம் கஞ்சிக்காச்சக் கடன் வாங்குற கதியாயிருக்கு. அல்லாருக்கும் இவ வெடுக்குத் துடுக்குன்னு பேசிட்டுத் திரியிறாளேன்னு காட்டம். மாட்டி வச்சிட்டாங்க... நா என்ன பண்ணப்போற...?”

“அழுவாதடி? இதுக்குமேல எத்தினியோ வந்திருக்கு. என்னாடா, நாம தொடுற பொம்பிளய இவனும் கை வைக்கிறதான்னு கூட மாட்டிருப்பானுவ, ஒனக்குத் தெரியாது. அந்தக் களுத கோனாம் பய ஒருத்தன நம்பி ஓடி வந்தா, அவெ வுட்டுட்டுப் போயிட்டா. நாஞ் சொன்னே செவனேன்னு இங்க ஒரு பக்கம் இருந்துக்க. இல்லாட்டி இங்க நம்ம குடில ஒருத்தனச் சேத்துக்க. காக்கா குளிச்சா கொக்காயிடுமா? மேச்சாதிக்காரனுக்குப் பொண்டாயிருந்திட்டா நீ மேச்சாதின்னு சேத்துப்பாவளாடீன்னே. பொம்புளயாப் பெறந்துட்டு சாதி என்ன சாதி? அல்லாச் சாதிலியும் பொம்புள சீரழியற சாதிதே. கட்ன பொண்டாட்டிய கண்ணும் கண்ணீருமா அடிச்சிட்டு வண்டி கட்டிட்டுப் போயி ஊருமேயுற ஆம்புள இருக்கிறப்ப பொம்புளக்கி என்ன காவந்து இருக்கு? அவனுவ மேவேட்டிய போட்டுட்டு டாவுடீவுன்னு வந்திடுவா. இவ கத இப்ப என்ன ஆச்சி? தன் சனம் ஊருநாடுன்னு இல்லாம வெரட்டிட்டிங்கன்னு நமக்கு இவ ஒழுங்கா இருந்தா ஈரம் இருக்குமில்ல? இப்ப எவன் வருவான்? போலீசு டேசன்ல அந்த நாயிங்க பொம்புளயக் கண்டா சும்மா வுடுமா?”

காந்திக்கு உதடுகள் துடிக்கின்றன.

குஞ்சிதத்தை அவள் பார்த்திருக்கிறாள். குளப்படியில் அழுந்தக்கால் வைக்கவில்லை எனில் எவ்வாறு கால் வழுக்கிக் கொண்டுபோய் விடுமோ, அவ்வாறே வாழ்கையும் கவனமில்லை எனில் ஊன்ற வழியில்லாமல் போய்விடும் போலும்!

தந்தை வெறுத்து உதாசீனம் செய்தார்.

தாய். “ஏண்டி கண்ணு...” என்று ஒரு அன்புச் சொல் உதிர்க்கவில்லை. இத்தனைக்கும், வாழ்க்கையில் கரிப்பையும், கசப்பையும் அநுபவித்துக் கொண்டிருப்பவள்...

களகளவென்று கண்ணிர் ஊறுகிறது.

கிட்டம்மா அவளைப் பொருள் பொதிந்த பார்வையால் பார்த்துக்கொண்டே “வாரேன்...” என்று போகிறாள்.

“அக்கா, சாப்பிட வாயே?” என்று அம்சுதான் கூப்பிடுகிறாள்.

லட்சுமி எதுவும் பேசாமலே நாகுவைக் கை கழுவத் தள்ளிச் செல்கிறாள்.

அவன் காந்தியை அப்போதுதான் பார்ப்பவனாக முகம் மலருகிறான்.

“கா...யி...கா.யி...”

ஒரு சிரிப்பு வழிகிறது. “முயாயி... வய்யா...”

“போடால...” என்று லட்சுமி தள்ளுகிறாள்.

காந்தி முன்பெல்லாம் விடுதியிலிருந்து வரும்போது அவனுக்குக் கடலை உருண்டையோ மிட்டாயோ வாங்கி வருவாள். அந்தப் பழக்கம்.

அவனுடைய பிறப்பும் வாழ்வும் ஒரு புதிய பொருளை அவளுக்கு அறிவுறுத்துகிறது. இந்த நாகு பெண்ணாகப் பிறந்திருந்தால் மூன்று வயசிலேயே வயிறு காய்ந்து இறந்து போயிருக்கும். இத்தனை நாட்கள் உயிர் வாழவே வாய்ப்பு இருந்திருக்காது.

“ஏண்டி இப்ப என்னாத்துக்கு அழுவ?... என்னமோ, போன, வந்த இப்ப இந்தத் தலகுனிவு வந்திருக்கலன்னா, இதே கிட்டம்மா ஊரு பூராத் தமுக்கடிச்சிட்டு வருவா?”

“இப்ப மட்டும் அடிக்க மாட்டான்னு என்ன நிச்சியம்? இவ என்னாத்துக்கு இப்ப உள்ள வந்தா? ஒளவறியத்தா!" என்று முணுமுணுக்கிறாள் பாட்டி.

“உங்கப்பா பார்த்தாராடி?”

“அல்லாம் பாத்தாச்சி. அடிச்சாச்சி, முள்ளு குத்திடிச்சின்னு சொல்லுறதும் கல்லு தடுக்கிடிச்சின்னு சொல்லுறதும் போல பொண்ணுதா கெட்டுப் போவுதுன்னு ஒலகம் சொல்லும். உள்மாந்திரம் என்னன்னு அறிஞ்சு தெரிஞ்ச பொம்பளையே அத நெனக்கலன்னா?”

அம்மாளும் பாட்டியும் பேசிக்கொள்கையில் அவளுக்குக் கண்ணிர் மடையாகப் பெருகிக் கன்னங்களில் வழிகிறது.

“வூட்டில செக்குலக்க போல நா இருக்கிறன, ஏங்கிட்டச் சொல்லிட்டுப் போனியாடீ? புதுக்குடில, கன்யாஸ்திரி, அவங்கதா டீச்சர், ஏங்கிட்டக் கேக்குறாங்க. காந்தி எப்படி இருக்குன்னு. அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க, நாயக்கர் வூட்டம்மா, எல்லாம் புடுங்கி எடுத்திட்டாங்க. வரப்புல வந்து தெறிச்சிட்டா எந்தப் பயிரையும் கண்டவங்களும் முதிச்சிட்டுத்தாம் போவா. நாத்துக்கட்டுலேந்து நழுவிடிச்சின்னு ஆரு வயல்ல கொண்டு வய்ப்பானுவ? படிச்சவ, சூடுபட்ட குடும்பத்துல தலையெடுத்துவ, அச்சடக்கமா இருக்கத் தெரியாம போயிட்டியே?”

“என்ன மன்னிச்சிறது கிடக்கட்டும். எத்தினி சுமையோ செமக்கப் பிறந்திருக்கிற ஊரு உலகம் மன்னிக்காதே?”

அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

இரவில் பத்திரமான இடத்தில் படுத்திருந்தாலும் உறக்கம் வரவில்லை.

அன்று சாலியின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்த சாகசத்தை நினைத்துப் பார்க்கிறாள். இரவு தனக்கு அடைக்கலம் கொடுத்த செங்கமலத்தையும், மின் வாரிய ஆபீசிலே நாட் கூலி வேலை செய்யும் அவள் புருசனையும், குழந்தையையும் நினைக்கிறாள். அவர்களிடம் ஒரு பொய்க் கதையைச் சொல்லி இரவு தங்கினாள். காலை பஸ்ஸுக்கு தணிகாசலமே அவளைக் கூட்டிவந்து புதுக்குடியில் ரத வீதியில் விட்டான். பஸ் சில்லறை கூட வாங்கிக் கொள்ளத் தயங்கினான்.

“ஏம்மா காதுத் தோட்டக் கழட்டித் தாரங்கற? பாவம், நாங்கொண்டு உன்னப் பத்திரமா வுட்டுடறேன்!” என்று கூட வந்தான்.

“படுபாவிப் பயல்கள். இவங்க ராச்சியம் தானே இப்ப நடக்குது? படவாவ இந்தப் படி ஏற விட்டதே தப்பு: நீங்கல்லாம் இப்படித் தொட்டாச் சுருங்கியா ஊளு ஊளுன்னு அழுறது தாம் புடிக்கல எனக்கு! அஹிம்சை அஹிம்சைன்னு சொன்ன காந்தி கூட ‘பொண்ணுகள் தற்காப்புக்குக் கத்தி வச்சுக்கலாம். குத்தமில்ல’ன்னு சொல்லிருக்கார். நான் சாவித்திரிகிட்டக் கூடச் சொல்வேன்...” என்ற ஐயரின் சொற்கள் காதில் ஒலிக்கின்றன.

“விபசாரத்தடைச் சட்டம்னா என்ன மாமா...” என்று அவரிடம் தான் கேட்டாள் அவள்.

“ஏன்? நீ எதுனாலும் வெளில சொன்னா உன்ன அதுல மாட்ட வச்சிடுவேன்னு பயமுறுத்தினானா?”

“உங்களுக்கு எப்பிடி மாமா தெரிஞ்சிச்சி?” என்று ஆச்சரியப்பட்டாள்.

“இது தெரியாதா? இதபாரு, இந்த தருமம், சட்டம் எல்லாம் ஆம்பிளைக்கித் தப்பிச்சிக்கத்தா. உங்களப் பயமுறுத்துறதுக்கு கற்புங்கறது. அது போயிடிச்சின்னு இவனுவ இஷ்டப்படி வேட்டயாடுறது. உன்னப்போல இருக்கிற பொண்ணுக இனிமே அழக்குடாது. வேண்டியது அழுதுட்டீங்க. பொம்பிள சுமக்கத்தா மனுஷாபிமானம். அந்தப்பய... நா அவன ஏழெட்டு வயசில கூட்டிட்டு வந்திருந்தா, பாத்தேன். இதுமாதிரி ஒரு பிரயோசனமும் இல்லாத சுமய சொமக்க வந்திருக்கு. சட்டம், சமூகந்தா, நீங்க இந்த அநியாயங்கள் எல்லாம் மாத்த நிக்கணும். இவனுவ மாதர் சங்கம் அது இதெல்லாம் போலி. உங்க சங்கிலிகளை நீங்கதா அறுத்துக்கிட்டு ஏன்னு கேக்கணும். அன்னிக்கிருந்த எத்தனையோ அநியாயம் போயிருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் அப்படியே இருக்கு. பெண்ணடிமத்தனந்தா. இல்லாட்ட நாக்குமேல பல்லுப்போட்டு எவனாலும் நாலாயிரம் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு கேப்பானா? பழகின ஆனய விட்டுப் புது ஆனய அடிமைப்படுத்துறாப்பல, உங்களுக்கு நீங்களா விலங்கு போட்டுக்கறாப்பல தொடர்ந்து வந்திட்டிருக்கு. எங்க வூட்டில, அவ பேசுறப்ப, நா பல சமயம் ஒண்ணுஞ் சொல்லாம ரசிச்சிட்டிருப்பேன். இப்பிடிப் பேசுறாளேன்னு கோவம் வந்தாகூட அடங்கிடும். பெண்ணுக்குச் சமமா பொருளாதார சுதந்தரம், பொறுப்பில் பங்கு, மரியாதை எல்லாம் உண்டு. சட்டத்த மாத்தணும். நீங்க ஏன்னு கேட்டுக் கிளம்பிட்டீங்கன்னா ஒரு பயலுக்கு மூஞ்சி கிடையாது. கற்பு பொம்பிளைக்கித்தானா? விபசாரம் பொம்பிளயாலா வருது?...”

சாவித்திரியின் சேலையை உடுத்துக்கொண்டு ஒரு வாரம் போல் அந்த வீட்டில் அவள் அவரிடம் துணிவுப் பாடம் கேட்டாள்.

தேவு அங்கு அடிக்கடி வருகிறான் என்பதை அப்போது தான் அறிந்தாள்.

அவளை அங்கு கண்ட முதல் நாளே அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான்.

“நீங்க... இங்கதா இருக்கிறீங்களா?”

“அட்வகேட் ராமசுந்தரம் வீட்டுக்கு வருவேன். நீ... நீங்க...”

“நீங்க அன்னிக்கு ஒட்டல் வாசல்ல நின்னிங்க. ஆனா என்னால எதுவும் சொல்ல முடியல. ஆனா, உங்களக் கண்டதும் எப்படீன்னாலும் தப்பிக்கணும்னு நிச்சயமா நினைச்சிட்டு ஓடிவந்தேன்... திரும்பி வாரப்ப உங்களக் காணல...”

“இருந்தேன். தையக்கடயில உக்காந்து நீங்க போறதப் பார்த்தேன். ஆனா... எப்பிடி என்னால அனுமானிக்க முடியும்?”

“அதாண்டா சொல்லிண்டிருந்தேன். நீங்கள்ளாம் இப்ப இருக்கிற சட்டங்களை ஒத்துக்கக் கூடாது. உங்க விலங்குகளை நீங்களே உடைச்சிக்கணும்னு!” தேவு சிரித்தான்.

“சாமி, வடக்கெல்லாம் பொம்பிளய வித்து வாங்குறதுக்குச் சந்த நடக்குதாம். பொம்பிளய அடகுவச்சுக் கடன் வாங்குறாங்களாம். இப்பவும் புருசன் செத்ததும் சிதையில படுத்துக்கிறோம்னு பொம்பிளக போறாங்களாம்.”

“அவ்வளவுக்கு இல்ல, நாம்ப மேலங்கறியா? வெளயாடலடா தேவு, நீதான் தீவிரமாப் பேசுற. இந்தப் பொம்பிளகள ஒண்ணுசேக்க முடியுமா உன்னால? அதுக்கு ஒரு மூவ்மெண்ட் வேணும். பொழுது விடிஞ்சு எத்தனை பெண் அவமானச் சங்கதிகள் கேட்கிறோம்?...” என்றார் அவர்.

“ஏன் சாமி அவுங்களக் கூட்டுற மூவ்மென்டையும் ஆம்பிளதா ஆரம்பிக்கணமா?...” என்று தேவு சிரித்தான் அவளைப் பார்த்து.

“ஆமாண்டா, அவங்கதா வெளில தல நீட்டவே இப்ப பயமாயிருக்குதே? அதெல்லாம் இல்ல, உங்களுக்கு நல்லது செய்ய வாரம்னு நம்பிக்கை குடுக்கலேன்னா வருவாங்களா? அதான் சொன்னேன்!”

“ஆரம்பிச்சிட்டாப் போச்சு சாமி. இவங்க வாழ்க்கையை ஒரு சட்டம் பாதிச்சா, சமுதாயத்தின் வளமையையுந்தா பாதிக்கிது. இவங்களப் போலவங்க ஊருக்கு வந்து பொம்பிளங்க கிட்ட மனமாற்றத்தைக் கொண்டுவரணும். கிராமத்தில எதும் பேச முடியிறதில்ல?”

“ஜமாயிடா, உனக்கு இப்பவே என் நல்லாசி. அந்த காலத்துல தேவதாசி ஒழிப்புக்கு முத்துலட்சுமி ரெட்டி சட்ட சபையில அப்படி ஒரு எதிர்ப்பைச் சமாளிச்சாங்கப்பா. தேவதாசி முறை ஒழிஞ்சாச்சின்றாங்க. ஆனா, இன்னிக்கி பொண்ணுங்கள வச்சு வியாபாரம் செய்யிறது சர்வசாதாரணமாயிருக்கு. படிக்கிறது, சம்பாதிக்கிறது எதுவும் மனசை மாத்தல. இதுக்கு முதல்ல ஆம்பிளங்க மாறவேணும். இவனுவள அடிச்சித்தான் மாத்தணும். உளுத்துப்போன சாதிப்பழக்கம், சம்பிரதாயம், சமூகப் பழக்கம், சமயப் பழக்கம் எல்லாம் மாறணும். ஒரு பொம்பிளை காவலில்லாம ஒரு தனி மனிசங்கிட்ட அம்புட்டுட்டா மானங்குலைக்கிறதா? என்ன அநியாயம்டா இன்னிக்கு நடக்குது?

நள்ளிரவில் அவர் கேட்ட, உரைத்த சொற்கள் உயிருடன் ஒலிக்கின்றன.

அவர் தந்த துணிவில் அவள் தேவுவுடன் திரும்பி வந்திருக்கிறாள். வந்தவுடன் முதலில் கேட்கும் செய்தி.

“ஏண்டி தூக்கம் வரலியா, முளங்காலக் கட்டிட்டு உக்காந்திருக்கிற?”

“என்னாடி? என்னாடி? எதுனாலும் இருந்திச்சின்னா சொல்லித் தொல. தாயப்போல சீரளிய வாணாம்.”

“யம்மா, குஞ்சிதம். போலீஸ் ஸ்டேசன்ல இருப்பாளே. உன்னையும் என்னையும் போல பொம்பளைதான! இதுக்கு முடிவே கிடையாதா? அன்னிலேந்து இன்னி வரயிலும், காட்டுமிராண்டி காலத்தேந்து, இன்னிக்குச் சந்திரனுக்கு மனுசன் போற காலத்திலும் ஒரே நீதிதானா? இப்பல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பொம்பளையும் ராவில வச்சிருக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்குதாம்?”

“சட்டம் எத்தினியோதா இருக்குன்னு சொல்றாங்க. அதொண்ணும் நமக்கு உதவுறதில்லியே?”

“அம்மா, ஒதவாத சட்டத்த நாம் மட்டும் ஏன் வச்சுக்கணும்? ஒதவாத சட்டத்துக்கு நாம ஏன் அஞ்சி நடக்கணும்?...”

“அஞ்சலன்னா என்னாடி செய்ய முடியும்?”

“பொம்பளக்கிப் பொம்பளையே எதிரியா நிக்காம நம்ம எனம்னு நினைக்கணும். கிட்டம்மா குஞ்சிதத்த என்னா திட்டுத் திட்டுச்சி? குஞ்சிதம் ஏதோ ஊருலேந்து புருசன் வெரட்டி வந்திச்சின்னு பாட்டி சொல்லிச்சி. இப்பிடி வந்த உடனே அவளைக் கண்ணியமா ஆரும் வாழ விடல. கட்டின பொஞ்சாதி புள்ளகளுக்குத் துரோகம் செஞ்ச வீரபுத்திரனுக்குக் கச்ச கட்டிக்கிட்டு இப்ப எல்லாம் போராடுவாங்க. ஆனா, குஞ்சிதம்...? அவ எடுபட்ட பொம்பிள. ஆ, ஊன்னா அவ விவசாய சங்கத்துக்கு மெம்பரில்ல, மாதர் சங்கத்துல இல்ல, ஆரு செலவு செய்யிறதுன்னு கேட்டாலும் கேட்பா? நாம ஒரு பத்து நூறு பொம்பிள போயி, எண்டா பொம்பிளயை ராவில டேசன்ல அடச்சி வச்சியன்னு கேட்டா?... கேட்டா? நாங்க பூச்சிங்க இல்ல, கொட்டுற தேளுன்னு காமிச்சா?...”

இருளில் அந்தக் குரலில் புதிய முறுக்குடன் தாயின் செவிகளில் பாய்கிறது.

“ஏண்டி? போலிச நாம எதுத்துக்க முடியுமா?”

“ஒருத்தரா முடியாது. பொம்பிளன்னா, அவள. அவள எப்பிடியும் நசுக்கிடலான்னு இருக்கிறத எல்லாரும் சேந்தா மாத்த முடியாதா? அம்மா ஆம்புளக வந்து நம்ம பக்கம் இருக்க மாட்டான்னு தோணுது. தப்பித் தவறி யாரோ ஒருத்தக இருப்பாங்களா இருக்கும். நாமளே சேந்து இதுக்கு ஒரு நியாயம் கேக்க இது சந்தர்ப்பம்... நாம் இத்த நழுவ விடக்கூடாது.”
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
22

நவராத்திரி விழா தொடங்கப் போகிறது.

பெருமாள் கோயில், சிவன் கோயில் இரண்டிலும் வழக்கத்துக்கு அதிகப்படியான பூஜைகளில் குருக்கள் பரபரப்பாக இருக்கிறார்.

மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. சுதைச் சிற்பக் கோபுரம் கோபி வண்ணப் பின்புலத்தில் சிற்பங்கள் புதிய பொலிவு கொண்டு விளங்குகின்றன. சுற்றுக்குள் முன் மண்டபம் மொட்டையாக இருந்தது. அதற்குச் சிமந்துக் கூரை போட்டிருக்கிறார்கள். வெளிச்சுவரில் வெண்மையும் சிவப்புமாகப் பட்டை தீட்டித் துலங்குகிறது.

குடிசைகள் இருந்த இடம் துப்புரவாகச் சமமாக்கப் பட்டிருக்கிறது.

பெண்கள் பொங்கலிடக் ‘கோடு’ கிழித்திருக்கிறார்கள்.

கடை கண்ணிகள் வரப்போவதற்கு முன்னோடி ஒரு தொட்டி ராட்டினம் வந்திருக்கிறது. சேரிப் பிள்ளைகள் ஏக்கத்துடன் எட்ட நின்று பார்த்துக் கொண்டிருக்கையில், மற்ற சிறுவர் சிறுமியர் பத்துபைசாவும் இருபது பைசாவும் கொடுத்து அதில் சுழன்று களிக்கிறார்கள்.

ஆங்காங்கு வயல்களின் இடையே, கிராமங்களின் வெளியே ஒதுக்குப்புறங்களில் முட்டு முட்டாய் வைக்கோல் வேய்ந்ததும், வெறும் கூரையாகவும் மண் சுவர்களாகவும் விளங்கும் குடில்களில் ஒரு புதிய கிளர்ச்சி உருவாவதைத் தோற்று விக்கும் எந்த அடையாளமும் இந்தப் பகுதிகளில் தெரியவில்லை. குருக்கள் மலர் கொய்கிறார். குளத்தில் ஏட்டையாவின் வீட்டுக்குச் சொந்தமான நான்கு வாத்துக்களும், தன் உடமையாளரை விளக்கும் கம்பீரத்துடன் அன்னங்களைப்போல் உலவுகின்றன.

மாட்டு வாகடம் செய்யும் ஆசுபத்திரிக் கிழவன் இருமிக் கொண்டு ஆற்றுப் படித்துறையில் பல் துலக்குகிறான்.

மழை பெய்து சகதியாயிருப்பதால் ஆற்றோர மேட்டுப் பாதை வழுக்குமென்று பஸ்ஸை ஊருக்குள் நுழைய விடாமலே திருப்பிவிட்டான். சம்முகம் நடந்து வருகிறார். வெயில் சுள்ளென்று விழுகிறது.

இந்த வெயிலில் முதிர்ந்த மணிகள் குப்பென்று பழுக்கும். அறுவடைக்குத் தயாராகும்.

சனி, ஞாயிறு வந்துவிடுகிறது. திங்கட் கிழமைதான் சென்று வீரபுத்திரனை விடுவித்து வர முயற்சி செய்யவேண்டும். அதற்குள் பணம்... பணம் திரட்டவேண்டும்.

வடிவு... தடியை ஊன்றிக் கொண்டு ஆற்றுப் பாலம் கடந்து ஓடுவது தெரிகிறது.

சம்முகம் எதிர் வெயிலுக்குக் கண்களை சரித்துக் கொண்டு கூவுகிறார்.

“வடிவோய்...!... வடி...வோய்...?”

அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

இரவு முழுவதும் உறங்கவில்லை.

அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்று கூடிப்பேசி முடிவு எடுக்கவே நேரமாகிவிட்டது. படுத்த இடத்தில் மூட்டைப்பூச்சிகள், மண்டையைக் கொத்தும் பிரச்னைகள்.

பொன்னடியான் காந்தியைக் கட்டுவான் என்று தோன்றவில்லை. ஐயரைப் பார்க்க இப்போது நேரமில்லாமலாகிவிட்டது.

வீட்டுப்பக்கம் திரும்புமுன் ஆற்றுக்கரை மேட்டில் அம்சு நிற்பதைப் பார்க்கிறார்.

“ஏண்டி, அங்கே போயி நிற்கற?...”

வடிவு... அவனுக்காகவா?

“என்னாடி?”

“ஒண்ணில்லப்பா... நாவு... நாவு ஓடிட்டான்...”

“எங்க?”

“அம்மாளும் அக்காளும் போனாங்க. இவனும் கூடப் போறன்னு ஓடினா. ரூமில் போட்டுட்டுப் போனாங்க. ரொம்பக் கத்துனான் தொறந்துவுட்டேன்.”

“அம்மாளும் அக்காளும் எங்க போயிட்டாங்க?”

எப்படிச் சொல்வது?

“என்னாடி நிக்கற? எங்க போயிட்டாங்க?”

“கிட்டம்மா மாமி வந்து ராத்திரி அழுதிச்சி. ரெண்டு பேரும் காலம எல்லாப் பெண்டுவளயும் சேத்துட்டு, அஸ்தமங்கலம் போலீசு டேசன்ல போயி ஆர்ப்பாட்டம் செய்யப் போறாங்க...”

சம்முகம் திகைக்கிறார்.

“பாட்டியெங்க?”

“இங்கதா இந்தப் பொம்புளகளெல்லாம் சேத்துக்கிட்டுப் போகப் போவுது...”

“அட? இவளுவளுக்கு இம்புட்டுத் தயிரியம் வந்திடிச்சா? ஆம்புளக எல்லாம் தொலஞ்சிட்டாங்கன்னு இவளுவ கெளம்பிட்டாளுங்களா?”

“வேற ஆரு இங்க வந்தது! தேவு வந்தானா?”

அம்சு இல்லை என்று தலையை ஆட்டுகிறாள்.

“இதென்னடா இது!...”

அவர் வாயில் முற்றத்தில் வந்து நிற்கிறார்.

தண்ணிர் கொண்டுவரும் ருக்மணி பார்த்து விடுகிறாள்.

“அண்ணன் இத வந்திட்டாரு. என்னாங்க!... நாங்க பொண்டுவள்ளாம் போலீஸ் டேசனுக்குப் போறதுன்னா முடிவெடுத்திருக்கு. தண்ணி கொண்டாந்து வெச்சிட்டு, அல்லாம் போறம். நீங்க புள்ள குட்டியப் பாத்திட்டு வூட்ட பொறுப்பா இருங்க!”

“அட... அம்புட்டுத் தயிரியம் வந்திடுச்சா? இதெல்லாம் ஆரு கெளப்பி வுட்டது?”

“ஆரு கெளப்பி வுடணும்?... யாருன்னாலும் கெளப்பி வுடணும்னா வருமா! எப்பயும் நீங்கதா போவிய? இப்ப நாங்க போறம். பதினோரு மணி வாக்குல அல்லாம் அஸ்தமங்கலம் ரோட்டில வந்திடுங்கன்னு லட்சுமியக்கா, சொல்லிட்டுப் போச்சி. தலவரு பெஞ்சாதியாச்சே, சொன்னா கேக்கவானாம்?”

சம்முகம் உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறார்.

செவத்தையனும் கோடியான் வீட்டுத் தாத்தாவும் வெயிலில் நிற்கின்றனர்.

“இப்பத்தா வரீங்களா, மொதலாளி... அல்லாம் போலீஸ் டேஷன் வளச்சிக்கப் போறாங்களாம்? நம்ம பொம்பிளகளுக்கு எம்மாந் தெகிரியம் பாருங்க!”

“வளச்சிக்கிடட்டம், ஆனா நாம இங்க உக்காந்திருக்கிறதா?...”

அம்மா வருகிறாள். கண்களைச் சரித்துக் கொண்டு.

“அல்லாரும் ரோட்டாண்ட போறாவ. சேத்துரு மதகுக்கப்பால ஒடயாரு வூட்ட போயிச் சொல்லிட்டு வாரக் காலமேயே குப்பன் சாம்பார அனுப்பிச்சிருக்கு. இவளுவல்லாம் போனா ஒரு தவ தண்ணிவோணுமில்ல?...”

“அது சரி, ஆரு இதெல்லாம் இப்ப திடீர்னு கெளப்பி விட்டது அம்மா?”

“ஏண்டா... ஆருன்னாலும் கெளப்பணுமா? வகுத்துப்புள்ள அந்த நேரம் வந்ததும் வாராப்புலதா. என்னா அக்குரவம்; பொம்பிள எத்தினிக்குப் பொறுப்பா? காந்தி திடீர்னு ராத்திரி எந்திரிச்சிப் போலாம்னா. பொம்பிளயப் போலீஸ் டேசன்ல வைக்க அதிகாரம் இல்ல. போயி வுடச் சொல்லுவம்னா. கெளம்பிட்டாளுவ போவட்டும்னு நானுந்தா சொன்னே. தா, ஆத்துக்கப்பால மேக்கால கெளக்கால எல்லாச் சேரி சனமும் பொம்பிளயும் போங்கடான்னு சொல்லச் சொன்னே. இந்தக் கெளவனும் கொமரிப் பெண்ணும் இல்லன்னா நானுந்தா போயிருப்பேன். வந்தது வாரது, துணிஞ்சடிச்சுப் போவம்! இனிமே என்னாத்துக்குடி பயப்படணும்? இனிமே எழக்கப் போறது ஒண்ணில்லன்னு போகச் சொன்னே...”

சம்முகம் சட்டைப் பையில் கடனாகப் பெற்று வந்த ஐம்பது ரூபாயை நெருடிக் கொள்கிறார். போகாதீர்கள் என்று தடுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், காந்தியா இவ்வளவு புகை எழும்பப் பொறி இட்டிருக்கிறாள்?

வீரமங்கலத்தில் ஒரு பொதுக் கூட்டம் போட்டிருக்கிறார்கள் என்ற நினைவு வருகிறது. ஊனமுற்றோருக்கு உதவியளிக்கும் வங்கி விழா. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விளம்பரங்கள் தொங்கின. பெரிய சாலையில் புதுக்குடியில் ஆட்சியாளர்களை, அதிபர்களை வாழ்த்தும் வளைவுகளும் தோரணங்களும் அமர்க்களமாக இருந்தன.

காவல்துறை மிகக் கெடுபிடியாக இருக்கும் இந்த நேரத்தில், இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் புகுந்தால் என்ன நடக்கும்?

சம்முகம் வீட்டுக்குள் அடி வைக்காமலே குளத்தைச் சுற்றிக்கொண்டு வயல்களினூடே செல்கிறார். ஒரு ஈ காக்கை தென்படவில்லை. அந்த நேரத்துக்கு வெயிலும், கதிர் வந்து தலையசைக்கும் பயிரின் மென்மையான வாசனையும் அவருக்கு உறுத்தவில்லை.

அம்மன் கோயில் சேரியின் முன் வண்ணார் குளத்தின் பக்கம் புதியதொரு சுவரொட்டி குடிசைச் சுவரொன்றில் தெரிகிறது.

‘ஊனமுற்றோருக்கு நல்வாழ்வு சைக்கிள் வழங்கும் திட்டம்!...’

‘விதவையருக்கு மறுவாழ்வு - உதவித் தொகையளிக்கும் திட்டம்!...’

‘தொழிலாளிகளுக்குச் சாதனங்கள் அளிக்கும் திட்டம்.’

அந்தச் சுவரொட்டியைத் தவிர, வேறு எதுவும் சேரியில் புதுமையாகத் தெரியவில்லை.

வண்ணார் குளம் நாகரிகக்காரியின் அற்ப உடைபோல் பாசியாடை உடுத்துத் தன் வறட்சியை மறைத்துக் கொண்டிருக்கிறது. மேல் சாதியார் அங்கு வரமாட்டார்கள்.

அழுக்கு வண்டுகளைப் போல் சில குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் பாதையில் நடந்துவரும் அவரை முறைத்துப் பார்க்கின்றனர். மற்றபடி எந்த உற்சாக உயிர்ப்பும் இல்லை. வீடுகளெல்லாம் வறுமையினால் தன் மேனி மறைக்க இயலாத குமரி, கந்தல் கொண்டு மூடி நாணிக் கண் புதைப்பதைப் போல் கண் புதைத்துக் கிடக்கின்றன. ஒன்றில் ஒரு கிழவி, மேல் சீலைக் கிழிசலுடன் இனிமேல் எனக்கென்ன என்று உட்கார்ந்து கிடக்கிறாள்.

“ஆயா, தேவு வூடு எங்க இருக்கு?”

ஆயாவுக்குக் குரல் காட்டக்கூடச் சக்தியில்லை போலும்! கையை மட்டும் அந்தத் திசையில் அசைக்கிறாள்.

இதென்ன, ஊரே சுடுகாடா போயிட்டாப்புல ஆரயும் காணோம்...!

படலைக்குள் சில குடிசைகள், சொறி நாய்கள். ஆட்டுப் புழுக்கைகள் நிறைந்த திண்ணையில் இன்னொரு கிழம். பிறந்த மேனியில் ஒரு பயல் அழுதுகொண்டு நிற்கிறான்.

“ஏண்டா அழுவுற? அம்மால்லாம் எங்க?"

பையன் விசித்து விசித்து அழுவதிலேயே இருக்கிறான்.

நடவு, அறுவடை என்று வேலை நெருக்கும் காலங்களில் தான் குடிசைகள் இவ்வாறு வெறுமையாகக் காட்சியளிக்கும். இந்த நிலை இப்போது அசாதாரணம். மூங்கிற் பிளாச்சி போட்ட குடிசை ஒன்று நாகரிகமாகத் தெரிகிறது. பிளாச்சுக் கதவு பூட்டியிருக்கிறது.

“ஏ பயலே? இந்த வூட்டுக்காரங்கல்லாம் எங்க?”

யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.

வெயில் உச்சிக்கு ஏறுகிறது. அதற்குள் எல்லாரும் கிளம்பி இருப்பார்களா என்ன?

உள்ளுற ஒரு தோல்வி உணர்வும் எரிச்சலும் மண்டுகின்றன.

சாலையைத் தொடும் இடத்தில் சாக்கால் மூடிக்கொண்டு ஒரு சிறு கடை. அங்கும் விளம்பரத்தில் ஊனமுற்றோர் உதவி, சலவைத் தொழிலாளருக்கு அமைச்சர் இஸ்திரிப் பெட்டி வழங்குகிறார்.

ஒருகால் மாலைக் கூட்டத்துக்கு இப்போதே எல்லோரும் போயிருப்பார்களா!

சாலையில் கண்களைக் கொண்டு பார்க்கையில் சங்கக் கொடியைத் தூக்கிக்கொண்டு, நாலைந்து பேர் வருவது தெரிகிறது. இரண்டு பெண்பிள்ளைகள், மூன்று ஆண்கள். குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருகிறாள் ஒரு பெண்.

“வணக்கம் அண்ணே! நாங்க குமட்டூரிலேந்து வாரம்.”

“ஆரு சொல்லியனுப்பிச்சது?”

“செத்தமின்னதா, பளனி, குப்பன் சாம்பாரு மவ சைக்கிள்ள வந்து சொன்னா. அல்லா வாங்க அத்தமங்கலம் போலீசு டேசனாண்ட, தலவரப் புடிச்சி வச்சிருக்காவன்னா, ஒடனே ஓடியாரம்...”

ஓரத்துக் கடையில் வெற்றிலை புகையிலை வாங்கிக் கொண்டு நடக்கின்றனர்.

“நாஞ் சொன்ன, தலவர இல்ல. பொம்பிளயத்தா புடிச்சி வச்சிருக்குன்னு சொன்னான்னு, நீ இல்லன்னே!... சம்சாரத்தத்தா புடிச்சிருக்காவளா, இல்ல...”

“கிஷ்டா, மாரியம்மங் கோயில் நகையத் திருடிட்டான்னு அநியாயமா பழிபோட்டு வீரபுத்திரன்ங்கற தோழரையும், குஞ்சிதம்மாங்கற பொம்பிளயயும் நேத்துப் புடிச்சி வச்சிருக்கா. இந்த அநியாயத்தைக் கண்டிக்கத்தாம் போறோம் இப்ப.”

குருதிச் சிவப்பான கொடி ஒன்றுதான் அவர்களுடைய வித்தியாசமான தன்மையை எடுத்துரைக்கிறது. சாலையில் செல்லச் செல்ல, ஆங்காங்கு வயற்கரைகளில் ஒற்றையும் இரட்டையும் ஆணும் பெண்ணுமாக வருகின்றனர்.

இவர்கள் நடவுக்கோ, உழவுக்கோ செல்லவில்லை என்பதைக் கொடிகள் இனம் காட்டுகின்றன.

வீரமங்கலம் சாலை முகப்பில் மோரும் நீருமாகக் கரைத்து வைத்துக்கொண்டு கந்தசாமி வழங்குகிறான். குருவிச் சிவப்பு வெற்றிலை வாயும் நரைத்த முடியுமாக உடையார் நிற்கிறார்.

“வணக்கம் சாமி...”

“லே, சம்முகமா, பாத்தியாட பொம்பிளகள? அப்ப முதமுதல்ல நாம புதுக்குடிக்குக் கிளம்பினமே, நாப்பத்துமுணுல? அப்பிடி இருக்கு! முழுகம் பொம்பிளகதா. காந்தி காலம வந்திச்சி, ஆறுமணி இருக்கும். குப்பங்கூட, மாமா இப்பிடி சமாசாரம். நாங்க போகப் போறம்னிச்சி. அதுக்குள்ள இவ்வளவு கூட்டம் கூட்டணும்னா அவிங்களுக்கு எத்தினி ஆக்ரோசம் இருக்கணும்?” “மந்திரி வந்து விழாவில்ல இன்னிக்கு?... இப்ப போலீசு வந்திடாது...?”

“விழா முந்தாநாள்ள?... அது ஒரு சாங்கியம். கட்சிக்காரன் நாலு பேருக்கு வழங்கி எல்லாம் ஆயிப்போச்சே!...”

“நா தேதியக் கவனிக்கலியா? இன்னிக்கு இருபத்தெட்டில்ல, அது இருவத்தாறு...”

இவர் காந்தியையும் லட்சுமியையும் பார்க்கவில்லை. கிட்டம்மாவின் முகத்தில் சலனமில்லை. இவரைப் பார்த்து “வணக்கம் அண்ணே” என்று தெரிவிக்கிறாள். அவள் மனசுக்கு குஞ்சிதத்துக்காக இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம் செய்வது பொறுக்கவில்லை போலும்!

“எத்தினி மணிக்குக் கிளம்புறாங்களாம்?”

ஓரத்தில் அமர்ந்து ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள்.


“அதா போயிருக்காவ, மின்னாடி கொஞ்சம் பேரு. பொம்புள வச்சிருக்கக் கூடாதாமில்ல! நமக்கென்ன எளவு தெரியிது!”

“இதா எங்க கொழுந்தியா மவள இட்டுட்டுப் போயி கண்டமானியும் பேசினானுவ... எத்தினியோ!”

ஆல மரத்துக் குருவிகள் இரைவதுபோல் ஒரு கலகலப்பு.

பொழுது சாயத் தொடங்கும் நேரத்தில் இவர்கள் அணி கிளம்புகிறது.

“மாதர் ஒற்றுமை, ஒங்குக!”

“பெண்ணை இழிவு செய்யும் பேய்களே, ஒடிப்போங்கள்!”

தேவுவின் குரல் தனித்து ஒலிக்க, பல குரல்களும் முறை வைக்கின்றன.

“நிரபராதிகளை விடுதலை செய்!”

“குஞ்சிதத்தை விடுதலை செய்! காவல் நிலையங்களைக் கற்பழிப்பு நிலையங்களாக்காதீர்! மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”

காந்திக்கு எங்கிருந்து இத்தனை ஆவேசம் வருகிறது? லட்சுமி பழி தீர்க்க வந்திருக்கிறாளா? நெல் அறைவை ஆலையும், பெரிய பள்ளிக்கூடமும் இடம்பெற்ற அஸ்தமங்கலத்துக் கடை வீதியில் அண்மைக் காலங்களில் கண்டறியாத பெண்கள் கூட்டம். அந்தக் காவல் நிலையம் உயர் மதிப்புப் பெற புறக்காவல் நிலையத்திலிருந்து ஏற்றம் கண்ட பின் இத்தகைய கெளரவத்துக்கு ஆளாவது இதுவே முதல் தடவை. கூட்டத்தில், ஐந்துக்கொரு விகிதமே ஆண்கள் கலந்திருக்கின்றனர். அவர்களும் விளிம்பு கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இவர்கள் காவல் நிலையத்தை நெருங்கு முன்பே நிலையத்திலிருந்து காவலர் மறிக்கின்றனர்.

“குஞ்சிதத்தை விடுதலை செய்! காவல் நிலையம் கற்பழிப்பு நிலையமல்ல!”

சம்முகம் முன் பக்கம் செல்ல விரும்பவில்லை. கூட்டத்தின் பின்னே அவரும், வீரமங்கலத்து ராசுவும், சின்னையாவும், சேர்ந்தாற்போல் நிற்கின்றனர். வடிவு தடியுடன் நடுவில் மீசையை முறுக்கிக்கொண்டு நிற்கிறான்.

மாலை வெயில் இறங்கும் நேரம்.

“எல்லாம் திரும்பிப் போங்க! போயிடுங்க! இங்க ஒரு பொம்பிளயும் காவல் நிலையத்தில் கிடையாது!”

“பொய்! குஞ்சிதத்தையும் வீர புத்திரனையும் இங்கு கொண்டுவந்தீர்கள், குஞ்சிதத்தை விடுதலை செய்யுங்கள்?”

“இதா... ஸ்டேஷன்ல யாரும் கெடையாது. பொம்பிளய நேத்து ராவே விட்டுவிட்டோம். என்னத்துக்கு வீணா ஆர்ப்பாட்டம் பண்ணுறிங்க?”

இது ஒரு சூழ்ச்சியா? நிசமா?

“இங்கே பெண் யாரும் இல்லை. வீணாக ஆர்ப்பாட்டம் செஞ்சு கலவரம் பண்ணாதீங்க. போங்க!”

“குஞ்சிதம் இல்லை என்பதை எப்படி நம்புவது?”

“நீவாணா உள்ளாற வா...! பாரு?”

“சீ!” என்று காறி உமிழ்கிறாள் லட்சுமி.

“நாங்க அத்தினி பேரும் உள்ளாற வந்து பார்ப்போம்!”

“இதம்மா, வீண் வம்பு பண்ணாம மரியாதயாப் போயிடுங்க. பெண் பிள்ளைகளை இரவுக்கு வைப்பதில்லை. விட்டுவிடுகிறோம். காலம ஸ்டேஷன்ல வந்து அவங்க பதிவு செஞ்சிட்டுப் போயிடுவாங்க!”

“அப்ப. அந்தம்மா எங்க இருக்காங்கன்னாலும் துப்பு சொல்லணுமல்ல?” லட்சுமியும் காந்தியுமே பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

“அது நாங்க சொல்றதில்ல. வாணா காலம எட்டுமணிக்கு வருவா. வந்து பார்த்துக்குங்க!” இவர்கள் என்ன செய்வதென்று திகைக்கையில் படார் படாரென்று அதிர்வேட்டுக்களைப் போன்று ஓசை கேட்க, கூட்டத்தினிடையே இருந்து பானைத் துண்டுகள் காகிதங்கள் வெடித்துச் சிதற, “ஐயோ, சுடுறான், சுடுறான்” என்று பெண்கள் அல்லோகல்லோலமாக அந்தக் குறுகிய கடைத்தெருவின் ஓரங்களில் சிதறிப் போகின்றனர். வெளியிருந்து காலிக்கும்பல் புகுந்து தள்ளுவதைப் புரிந்து கொண்ட வடிவும், பெண்களுக்குக் காவலாக வந்த வேறு சில ஆடவர்களும் கைத்தடிகளாலும், கொடிக் கம்புகளாலும் தாக்கத் தொடங்குகின்றனர்.

“சட்டிக்குள்ள பட்டாசு வெடிய வச்சிக் கொளுத்திருக்கிறானுவ... நம்ம ஆளுவ அமைதியா இருங்க. தோழரெல்லாம் அமைதியாக இருங்க!”

கற்கள் வந்து விழுகின்றன. சம்முகத்தின் நெற்றியை ஒரு கூரான கல் பதம் பார்க்கிறது. லட்சுமிக்குத் தோளில் அடி விழுகிறது. ஒரு நடுத்தர வயசுக்காரி மோதப்பட்டுக் கீழே விழுகிறாள். காவலரின் குண்டாந்தடி சுழன்று குழப்பத்தை அடக்க அகப்பட்டவர் மண்டையை உடைத்து விடுகிறது.

ஒன்றிரண்டு வேடிக்கை பார்த்தவர்கள்கூட அவசரமாகக் கடைகளை மூடிவிட்டனர்.

வடிவுவின் தோள்பட்டையில் விழுந்த அடி, அவனைத் தரையில் வீழ்த்தி விடுகிறது. மீண்டும் எழுந்து பெண்பிள்ளைகள் தலைகளில் அடி விழக்கூடாதென்று தடுக்கிறான்.

கைகளில் ஓங்கி அடி விழுகிறது.

காந்தி இத்தகைய கலவரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சிறுபிள்ளை உற்சாகத்துடன் முன் வரிசையில் நின்ற அவளுக்கு நெஞ்சு பதைக்கிறது. தேவு வடிவுவைத் தூக்கி நிறுத்தித் தோளில் கை கொடுத்துச் செல்கிறான்.

கீழே விழுந்த பெண்ணின் முகத்தில் தண்ணிரைத் தெளித்து முதலுதவி செய்யச் சிலர் விரைகின்றனர். அந்திநேரத்தில் பொல்லென்று மலர்ந்த புதரனைத்தும் மிதிபட்டுச் சிதைந்து மண்ணோடு புரண்டாற்போன்று அவர்களுடைய நம்பிக்கை உற்சாகங்கள் சிதைந்து போகின்றன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352

23

அம்சுவுக்கு உள்ளே அடி வைக்கவே தோன்றவில்லை. சிறிது நேரம் கொல்லை ஆற்றுக் கரை மேட்டிலிருந்து எதிர்ச் சாரியில் செல்லும் ஆட்களைப் பார்க்கிறாள். இன்னும் சிறிது நேரம் வாசலில் இறங்கி, கிழக்கே குளக்கரை வரையிலும் சென்று வாய்க்கால் கடந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறாள்.

அவர்களெல்லாம் அஸ்தமங்கலம் போனால், போலீஸ் டேஷன் ஆர்ப்பாட்டம் என்றால் எப்போது வருவார்களோ?

மூக்கனும் அவன் மாமியார்க் கிழவியும் திண்ணையில் குந்தியிருக்கிறார்கள்.

“நாவுவ உள்ளே போட்டிருக்கியா அம்சு?”

“இல்ல பாட்டி. அவனத்தா தேடுறே, காலம ஒடிப் போயிட்டா...”

“அங்க கோயிலாண்ட ராட்டினம் வந்திருக்கில்ல? எல்லாம் ஓடிப்போயிருக்குங்க...”

வீட்டுக்குள் ஒடி வருகிறாள். பாட்டி தாத்தாவுக்கு சோறும் நீருமாக உப்புப்போட்டு மிளகாய்த் துவையலுடன் வைத்துக் கொடுக்கிறாள்.

“சோறு சமச்சி வைக்கிறாயாடி?... எதுனாலும் போட்டு ஒரு குளம்பும் காச்சி வய்யி. அந்தப்பய எங்க இருக்கிறானோ?”

“காணம் பாட்டி..!”

“ஓடிப் போயிட்டு வருவா. என்னமோ கப்பலே முழுவுறாப்பல இருக்கு, அவனப்பத்தி என்ன இப்ப?”

அம்சுவுக்கு உள்ளூற ஏதோ ஓர் அச்சம் ஆட்கொள்ளுகிறது. சோற்றை வடித்து வைத்து, ஒரு காரக் குழம்பைக் கூட்டி வைக்கிறாள். வீடுபெருக்கி, மாடுகளுக்குத் தண்ணிர் காட்டி, எல்லா வேலையையும் முடித்தாயிற்று. வெயில் பின் முற்றத்துச் சுவரில் ஓடிவிட்டது.

காந்தி மணிக்கணக்காகப் புத்தகம் படிப்பாள். படங்கள் கத்திரிப்பாள். ஒட்டுவாள். ஏதேனும் வீட்டுக்குள் செய்வாள். அம்சுவுக்கு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கவே பொருந்தாது.

நாகு இத்தனை நேரம் எங்கும் போய் வராமலிருந்ததில்லை. ஒருமுறை மருள் நீக்கி வரையிலும் போய்விட்டான். அவனை அந்தப் பக்கத்தில் எல்லாருக்கும் தெரியும். கொண்டு வந்து விட்டு விடுவார்கள். அவனுக்குத் தண்ணிரைக் கண்டால் பயம். ஆறு குளத்தில் நிச்சயமாக இறங்கமாட்டான்.
நெருப்புப்பெட்டி கிடைத்தால் கொளுத்துவான். பீடி குடிக்கவேண்டும் என்று சாடை காட்டுவான். வெளியே யாரேனும் குடித்துக் கொண்டிருந்தால் போய்க் கேட்பான். கோடித் தாத்தா அவனுக்குப் பீடி குடிக்கக் கொடுப்பார். அவள் அம்மா திட்டுவாள்...

“என்னாடி? அம்சு? இங்க வந்து நிக்கிற?”

“நாயக்கர் வூட்டம்மா!”

“வாங்கம்மா... வாங்கம்மா!...”

“என்னாடி? எல்லாம் பேசிக்கிறாவ? உங்கக்கா வந்திட்டாளாமே?”

“வாங்கம்மா, பாட்டி இருக்கு...”


“கேட்டதுக்குப் பதிலக் காணல?...”

“ஆமாம்மா. அல்லாரும் இன்னிக்கு அஸ்தமங்கலம் போயிருக்காவ...”

“என்னா விசேசம்?”

“வீரபுத்திரன் மாமாவப் போலீசில புடிச்சி வச்சிருக்காவல்ல? அதுக்குத்தா?”

நாயக்கரம்மா புருவத்தைச் சுளிக்கிறாள்.

“அதுக்கு இவங்கெல்லாம் போயி என்ன செய்யப் போறாங்கடி?”

“எனக்குத் தெரியாதுங்க, பாட்டிகிட்ட கேளுங்க...”

“சாதுரியக் காரியாச்சே நீ! ஏண்டி! கோயில் விழாவுக்கு இப்ப ஆரும் மகில் எடுத்திட்டுப் போயிக் கும்பிடுறதில்லைன்னு தீந்திடிச்சா?”

“அதப்பத்தி எல்லாம் பேசிக்கலிங்க. வூட்டுப்பக்கம் வாங்கம்மா, பாட்டி இருக்கு...”

“மூட்டு வலிக்கிதுடி கொஞ்சம் வாத மடக்கி எல கொண்டான்னு ஒங்கிட்டச் சொல்லச் சொல்லி அசந்துட்டே. கோமதி சொன்னா, மூலையா வுட்டுக் கொல்லையில இருக்குன்னு. அதுவர வந்தமே கோயில்ல என்னமோ வர்ணமெல்லாம் அடிச்சிருக்காவன்னாங்களே, பாத்திட்டுப் போவம்னு வந்தே. நீ இங்க மேட்டுல நிக்கிறியே? ஏன்னு கேட்டேன். உள்ள போடி! காலம் கெட்டுக் கிடக்குது!”

மாலை குறுகி மஞ்சள் முறுகிக் கருமை பரவுகிறது.

வெளியில் கட்டிய மாட்டை உள்ளே கட்டிச் சாணியை எருக்குழியில் போட்டாயிற்று. அம்சுவுக்குப் பொழுதைப் பிடித்துத் தள்ளினாலும் போகவில்லை. தாழ்வரையிலுள்ள அறை நாகுவில்லாமல் திறந்து விறிச்சிட்டுக் கிடக்கிறது. அக்கரையில் கள்ளுக்கடையில் பளிச்சென்று பெட்ரோமாக்ஸ் லைட் தெரிகிறது. கீழே பாம்பாய் நெளியும் ஆறு. முதுகில் வரிப்பாலம். அதன் மீது நிழலுருவங்கள் சொட்டாய்ச் சொட்டும் பனித்துளிப்போல் ஒவ்வொன்றாக நகர்ந்து வருகின்றன.

கொசுக்கள் ஙொய்யென்று செவிகளில் பாடுகின்றன.

மாரியம்மாவின் குரல் கேட்டது.

“புள்ள வந்திச்சா?”

“ஆரு அப்பாவயா கேக்குறிங்க? அவரு காலம வந்திட்டுப் போயிட்டாரு...”

“அவங்கல்லாம் இப்ப எங்க வருவாங்க? நாவு... அரச மரத்தடில குந்திட்டு பீடி குடிச்சிட்டிருக்கு. புள்ளங்கள்ளாம் கூடிச் சிரிச்சிச் சீட்டுதுங்க. இது புக வுட்டுட்டு இருந்திச்சு. வூட்டுக்குத் தெரியுமோ, தெரியாதோன்னு ஓடியாந்தே. சோறு வச்சீங்களா?...”

“வச்சே! நீங்க சாப்பிடுறீங்களா?...”

வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வேண்டாம் என்று மாரியம்மா கைகாட்டுகிறாள்.

“நாம் போறேன். பதனமா இருந்துக்க. அந்தப் பயல முடுக்கி வுட்டுட்டுப் போறேன். ரெண்டு வெறவு இருந்தா தாயே?”

முட்சுள்ளியை ஒடித்துக் கூடையில் வைத்துக் கொண்டு செல்கிறாள். இவர்களுக்கே விறகு தீர்ந்துவிட்டது. மூங்கிற் காட்டில் போய் கொஞ்சம் சேகரித்து வரவேண்டும்.

கொல்லைப்படலை இழுத்துக் கட்டிவிட்டு வாசற்பக்கம் வருகிறாள்.

“சோறு சாப்பிட்டுட்டுப் படுத்துக்கடீ. நா மூக்கனப் போயிப் பாத்துட்டு வரச் சொல்லுற.”

கிழவர் எழுந்து கேட்கிறார். “எல்லாம் எங்க போயிட்டாவ?”

“முன்ன போனமே புதுக்குடிக்கு அப்படி எல்லாம் போயிருக்காவ.”

“கூலித் தவராறா?...”

“இல்ல... பொம்பிளயப் போலீசில கூட்டிட்டுப் போயிருக்கிறானா...”

ஒரு வசையை உதிர்த்து விட்டுச் சாராயத்தைப் பருகுகிறார்.

லொக் லொக்கென்று இருமல் வருகிறது.

தெருவில் பிள்ளைகள் குஞ்சுகள் போகும் அரவங்கள்.

யார் வீட்டிலோ பிள்ளை அழுகிறது.

மாடத்தில் முணுக் முணுக்கென்று சிம்னி விளக்கு எரிகிறது.

நடுவிட்டில் அம்சு விரிப்பை விரித்துப் படுக்கிறாள். பாட்டி அருகில் வந்து சுருங்கிய கையை அவள் தலையில் இதமாக வைக்கிறாள்.

“சோறு தின்னியா கண்ணு?...”

“அவுங்கல்லாம் வரட்டுமே!...”

இருளில் மூங்கில் தோகைகள் சரசரப்பதுபோல் ஓசை கேட்கிறது.

“பாட்டி! நாவு... நாவு வந்திருக்கிறா...?”

“நீ இரு. நாம் போயிப் பாக்கிறே...”

பாட்டி பின்பக்கக் கதவைத் திறக்கிறாள்.

பின்பக்கம் யார் யாரோ ஒடிவரும் அரவங்கள். கிழவிக்கு நெஞ்சு திக்கென்று குலுங்குகிறது. நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. அவள் உள்ளே வந்து கதவை அழுத்தமாகத் தாளிடுகிறாள்.

அம்சு விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு வாயிற்பக்கம் நாகு வந்திருக்கிறானோ என்று பார்க்கப் போகிறாள்.

அடுத்த கணம் வாசலில் வெள்ளையும் சள்ளையுமாக இருளில் உருவங்கள். ஒரு மொட்டை பனியன், “டேய், சிறுக்கி துணிய அவுங்கடா வசமாச் சிக்கிட்டா” என்று கொக்கரிக்கிறது இரட்டைத் தொண்டையில்.

கிழவிக்கு எப்படிப் புலனாயிற்றோ?

அடுத்த நிமிஷம் உலக்கை அவன் கையில் விழுகிறது.

“டே மாடா, மூக்கா, அமாசி...! எல்லாம் வாங்க!...”

பாட்டி அம்சுவை உள்ளே இழுத்து வந்து நடுவீட்டுக் கதவுகள் இரண்டையும் தாழிட்டு விடுகிறாள்.

கிழவர் திடுக்கிட்டு எழுந்தாற்போல் திண்ணையில் வசை பொழிகிறார். ஈக்கூட்டம் போல் வாயிலில் கூடிவிடுகிறது. செவத்தையனும் மூக்கனும் மாடசாமியும் கையில் கதிரரிவாள், தடி சகிதம் வந்து எதிர்த்தாக்குதல் தொடுக்கின்றனர்.

துணியை உருவிச் சட்டையைக் கிழிக்கிறார்கள்.

“ஏண்டா இப்பிடித் திமிருபுடிச்சி மனிச ரத்தத்துக்குப் பேயா அலயுறீங்க?”

“அந்தக் கெளவன உதச்சி எறியுங்கடா! சாமி கோயில் பந்தல்ல நெருப்பு வச்சிருக்கானுவல்ல?...”

“பந்தலெறியிதா? எரியட்டும்! எங்க வவுத்தெரிச்சல் அதுவா பத்திட்டு எரிறது!...”

“பாத்திங்களா? இவனுவதா வச்சிருக்கானுவ! எலே நெருப்புக் குச்சியக் கிளிச்சிப் போடுங்க! இவனுவளும் எரியட்டும்!”

செவத்தையனும் மாடசாமியும் ரங்கனைப் பிடித்துக் குமுக்குகின்றனர். உழவோட்டி தூக்கி அடித்து சுமந்த உரம் வாய்ந்த உடல்கள். காலிக்கும்பலை எதிர்க்க அவர்கள் அனைவரும் திரண்டு ஆற்றுக்கரை மேடு, குளப்பக்கம் என்று அரண் நிற்கின்றனர்.

அம்சுவைத் திண்ணையில் பதுங்கச் செய்துவிட்டுக் கிழவியும் வெளியே உலக்கையைக் கையிலெடுத்துக்கொண்டு வருகிறாள்.

இரவு நெடிய இரவாக ஊர்ந்து செல்கிறது. குஞ்சு குழந்தைகள் கிழவர்கள் யாருமே உறங்கவில்லை.

மறுநாட் காலையில் இருள் விலகும்போது கோயிலும் சுற்றுப்புறங்களும் முழுமையாக மலரவில்லை.

பந்தல் கரிந்து மூளியும் மொக்கையுமாகக் கிடக்கிறது. உடம்பில் ஒரு துண்டு துணிகூட இல்லாமல் குஞ்சிதத்தின் உடல் காவாய்க்கரையில் கிடக்கிறது...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
24

தங்கம் உருக்கித் தழல் குழைத்த தேனாக வரும் கதிரவன் கண்டு மகிழும் அறுவடை இல்லை. அவ்வப்போது வான் கருமை காட்டி, ஆதவனின் ஆட்சி அதற்குள் மலருவதற்கில்லை என்று அச்சுறுத்தும் நாட்களின் அறுவடை.

யாருக்குத் துயரமானால் என்ன? எங்கு ரத்தம் சிந்தினால் என்ன? எங்கு தீக்கருகினால் என்ன? உழைப்பைத் தந்தவர்களுக்குத் துரோகம் செய்யாத அன்னையே சத்தியம் என்று கதிர்கள் பழுத்துச் சாய்ந்திருக்கின்றன.

உழைப்பே எங்கள் சத்தியம் என்று ஒட்டிய உடலும் சுருங்கிய முகமுமாகக் குப்பன் சாம்பாரும், பொன்னையனும் மற்றவரும் குளிர் இறங்கும் அந்த விடியலில் களத்திலிறங்கி அரிகளைக் கொய்து வைக்கிறார்கள்.

இனி பெண்கள் வந்து அரிக்கற்றைகளை அடுக்கிக் கட்டுவார்கள். ஆண்களின் தலையில் கட்டுக்களைத் தூக்கிவிட்டு, நட்டுவைத்த பயிர்கள் எங்கள் கை மகத்துவம்தான் என்று நிறைவெய்துவார்கள்.

களத்தில் கட்டுக்களை அடித்த மணிகளையும் வைக்கோலையும் வேறாக்கும் போது உடனிருப்பார்கள்.

“இன்னும் நாலு நாப் போனா களம் கெடக்காது. நாயக்கர் களத்துக்குக் கொண்டிட்டுப் போயிடலாம்!”

“வானாம், அத்தினி தூரம் எதுக்குப் போவனும் முதலாளி? இதா, காவா தாண்டி ரோட்டோரம் பலவக் கல்லு போட்டு வச்சிருக்கு. நாலெட்டு, அடிச்சிரலாம்!”

செவத்தையன் கூறுகிறான்.

சம்முகத்துக்கு வேலை செய்வது பழக்கம் விட்டுப் போய் விட்டதால் தானோ வியர்வை இப்படி ஊற்றுகிறது? உள்ளுற ஒரு சூடு பரவித் தகிக்கிறது. மூச்சு வாங்குகிறது.

சற்றே நிமிர்ந்து ஆசுவாசம் பெறுகிறார்.

“நீங்க கரையேறிடுங்க. இத ஆச்சி, ஒரு நிமிட்டு.”

குப்பன் சாம்பார் அவரை விரட்டுகிறான்.

“அடே பழனி, கோட்டுப் பழுதய இப்பிடி வீசுடா..?”

தொலைவில் பெண்கள் காவாயைக் கடந்து வருவது தெரிகிறது. சிவப்பும் பச்சையும் நீலமுமாகப் புள்ளிகளாய் நகர்ந்து வருகின்றனர். எத்தனை பேர் இந்த நான்கு மா நிலத்துக்கு என்று கணக்கிட்டுப் பயனில்லை. இது பஞ்சத்து அறுவடை. ஆட்கள் அதோ இதோ என்று வந்து நெருங்குவார்கள். அத்தனை பேரும் பங்கிட்டுக் கொள்ளக் கொடுக்க வேண்டும்.

சாலையோரத்துக் கட்டாந்தரையில், முதன் முதலாக இந்தக் குறுவைக் கதிர்களை அடிக்கப் போகிறார்கள். பொன்னம்மா கூட்டிப் பெருக்குகிறாள்.

சாய்வாக வைத்திருக்கும் ஆறு பலகைக் கற்களிலும் பனி ஈரமா மழைத் துாற்றல் ஈரமா என்று வேறுபடுத்த இயலாத வகையில் ஈரம் படிந்திருக்கிறது.

களத்தில் அறுத்து வைத்துவிட்டுக் குப்பன் சாம்பாரும் செவத்தையனும் அமாவாசியும் தலைத்துண்டை உதறிக்கொண்டு விடாயாறப் போய்விட்டார்கள். வானில் இன்று வெயில் கிடையாது என்பதைப்போல் மேகம் கூடியிருக்கிறது. ‘கருமேக மில்லை’ என்று சம்முகம் திடம் கொள்கிறார்.

மாரியம்மா தன் கிழக்குரலைக் கிளப்பிக் குலவை இட்டுக்கொண்டு வருகிறாள்.

அது குலவையொலியா, நெஞ்சு பிளந்துவரும் ஒப்பாரியா என்பது புரியாமல் சம்முகத்துக்குச் சங்கடம் பிசைகிறது.

மரபுகளிலும் சடங்குகளிலும் ஊறிப்போன பெண் குலம்.

வாழ்க்கையின் அலைப்புக்களில் பாறைகளோடும், அத்துவானங்களுடனும் மோதுண்டாலும் இன்னமும் நம்பிக்கையை விடாத மூதாட்டி...

சிவந்த கண்களில் அவளுக்கு ஈரம் பசைக்கிறது.

அவள் அரிக்கற்களை ஆக்கையில் வைத்துப் பிணிக்கையில் அவள் அருகில் நின்று சுமட்டைத் தன் தலையில் ஏற்றிக் கொள்கிறார்.

“மொதலாளி! நீங்க போங்க. நாங் கொண்டிட்டுப் போறே...” என்று பழனிப் பயல் வந்து மறுக்கிறான்.

இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தில் உழைக்காமல் மேற்பார்வை செய்யும் ஒருவர் என்ற பெருமையைக் கொடுப்பதில் ஒரு கெளரவம்! ஆனால் அவர் கட்டைச் சுமந்துகொண்டு வரப்பில் நடக்கிறார். முன்பெல்லாம் இவ்வாறு ஓடி நடந்ததுண்டு. சங்கத் தலைவர் என்று ஆனபின், பெயருக்குக் கதிர் கொய்வாரே ஒழிய, அதிகமாக உழைப்புக் கொடுக்க இறங்குவதில்லை.

இப்போது, ‘உங்களைப்போல், உங்களில் ஒருத்தன் நான்’ என்று சொல்லிக்கொண்டு பாரம் சுமந்து வருகிறார்.

அம்சு, கைதேர்ந்த விரைவுடன் அரியை தலை கால் மாற்றிப் பார்த்து வைத்துக் கட்டுகிறாள்.

கல்லின் பக்கம் சாம்பாரும் செவத்தையனும், அமாவாசியும் கட்டுக்களைப் பிரித்து மும்மூன்று அரிகளாக எடுத்து மாற்றிக் கல்லில் ஓங்கி அடிக்கின்றனர், நெல்மணிகள் நிலத்தில் சிதறி வீழ்கின்றன.

சம்பா நெலுக்கு இத்துணை அவசரமும் உழைப்புமில்லை. நன்றாகப் பருத்துவிட்ட மணிகளை வெறுந்தரைத் தட்டலிலேயே உதிர்த்துவிடலாம்.

திடீரென்று வானக்கதிர் இந்த நிறைவுக் காட்சியைப் பார்க்கும் ஆவலில் மேகத்தினிடையே தலை நீட்டுகிறது.

அந்த ஒளியில், சாம்பாரின் தளர்ந்த மேனி, சத்தியத்தின் வடிவாக மின்னுகிறது. சம்முகம் நெஞ்சு நெகிழக் கற்றைச் சுமையை இறக்கிவிட்டு நிற்கிறார்.

இந்த சத்திய ஒளி பிறர் பங்கைத் திருடுவதாக இருந்தால் கிடைக்காது. இந்தச் சத்தியம், அவன் இப்போது குடித்துவிட்டு வந்திருப்பதால் மூளியாக மழுங்கி விடவில்லை.

அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் சம்முகத்துக்கு இப்படி ஓர் அழகிய வடிவம் தமக்கு இருக்குமா என்ற ஐயம் தோன்றுகிறது.

இவர்கள் எப்போதும் யாருக்கும் அடிமைகளில்லை. உயிர்க்குலத்துக்கு உணவளிக்கும் இத்தொண்டு மனிதத் தொண்டு. இதுவே பரிபூரணத்துவத்தின் விளக்கங்கள். மனைவிகள், தாயர், குமாரிகள் மானம் குலைக்கப்பட்டாலும், தலை மகன்கள் குற்றம் சாட்டப்பட்டுக் காவல் சாவடிகளில் சிறையிருந்தாலும், பொட்டு பொடிசுகள் தொண்டை நனைக்கும் உயிர்ப்பாலின்றி அழுது வாடினாலும், முதிய தாய் தந்தையர் பராமரிப்பவரின்றி முடங்கிச் சோர்ந்து நைந்து கரைந்தாலும் இந்த நேரத்தின் முக்கியத் துவத்துக்குச் சமானமில்லை.

குனிந்தும் நிமிர்ந்தும் நிமிர்ந்தும் குனிந்தும் மாற்றி மாற்றிக் களியில் விளைந்ததைக் கல்லில் அடித்து, மனிதனுக்கும் மாட்டுக்கும் என்று பிரித்துப் போடுகிறார்கள் மண்ணின் மைந்தர்கள். இவர்கள் தங்கள் குருதியை மண்மாதாவுக்கு உழைப்பாக்கி அவள் உயிர்ச் சூட்டை அமுதமாக்கும் இரசவாதம் புரிபவர்கள்.

இது பச்சை நெல்... இது ஒழுங்காகக் காய்ந்து வியாபாரியின் சாக்கை நிறைத்துக் கடனடைய வேண்டும்.

“என்ன சம்முவம்?. அறுப்பு வச்சிட்டியா? ரெண்டு நா போவட்டும்னியே?”

உடையார் சைக்கிளில் வந்து இறங்குகிறார்.

“ஆமா. நாலுநாளா வெயில் காஞ்சிருக்கு. நேத்து புதிர்பாத்தே, அறுத்துடலான்னு தோணிச்சி. வெலதா என்னமாருக்கும்னு புரியல...”

உடையார் உதட்டைப் பிதுக்குகிறார்.

“ஒண்ணும் சொகமில்ல. கட்டுப்படியே ஆவாது. அறுவதுக்குங் கீள தா கேக்குறாங்க...”

சம்முகத்துக்கு நா எழவில்லை. இந்தக் குறுவை அறுப்பை எதிர்பார்த்து எத்தனை கடன்கள் வாய் பிளந்து நிற்கின்றன! அன்றாட உப்புப் புளி சாமான்களிலிருந்து, வாழ்வா சாவா என்று நெருக்கும் போராட்டங்கள், அடிதடிகள், வம்பு வழக்குகள் ஆகிய எல்லாச் செலவுகளுக்கும் இந்த ஒரே சந்தர்ப்பத்தில் தான் ஆதாரம் காண முடியும்!

“நா. புதுக்குடி போறேன். காந்தி ஐயர் வீட்டில்தான இருக்கா?”

“ஆமாய்யா... இந்தப் போராட்டம் இப்ப அவங்க கிட்டத்தா முனைப்பா இருக்கு. பெண்களுக்குத்தான் எல்லாப் படியிலும் அநியாயங்கள் நடக்குது. இதுக்கு ஒரு பெரிய இயக்கம் செயல்பட வைக்கணும். அதுதான் எனக்கு வாழ்க்கையிலேயே லட்சியம்னு அது ஒரே பிடியா இருக்கு. ஐயர் கூட இப்ப இவங்களுக்காக அந்தக் காலத்தைப் போல அவ்வளவு ஆக்ரோசமா நிக்கிறாரு...”

“செய்யட்டும். நானும் அமைச்சர் வரார்னாங்க, பாத்து விசாரணைக் கோரிக்கை குடுக்கலான்னு போறேன். வடிவுக்கு சாமீன் கிடைச்சிடும். வீரபுத்திரனுக்கும் கிடைக்கும். தேவு விசயந்தா ஒண்ணும் செய்ய முடியாதோன்னு தோணுது...”

“கூட்டத்துல சட்டில பட்டாசை வச்சு இவனுவளே கொளுத்திக்கறானுவ. இதெல்லாம் திட்டமிட்டுச் செஞ்சிருக்கானுவய்யா. தேவு வெடிகுண்டு வச்சிருந்தான், தீவிரவாதிங்கற லிஸ்டில சேக்கிறாங்கன்னு வக்கீலையா அன்னிக்கே சொன்னாரு...”

“இங்க இருக்குற குண்டருகள வச்சிட்டே எல்லாக் காரியத்தையும் செஞ்சிட்டு இப்புடிப் பழியப் போடுறதும் இப்ப நடந்துட்டுத்தானிருக்கு. அந்தப் பொம்புளதா பந்தலுக்கு நெருப்பு வச்சான்னும், ஒடுறப்ப தடுக்கி வுழுந்து கல்லுல மண்ட தட்டிச் செத்திட்டான்னும் எவ்வளவு சாதுரியமாக் காரியத்தை முடிச்சி, ஒரு விசாரணயில்லாமக் கொளுத்திட்டானுவ?”

“காந்தி அதைத்தான் இப்பப் புடிச்சிட்டிருக்கு. குஞ்சிதத்துக்கு இவங்க செஞ்ச அக்கிரமம் எதோ தெரிஞ்சிருக்கு. அவளப் போலீசுல புடிச்சிக் குடுக்கிறாப்புல குடுத்து, இவனுவளே கூட்டியாந்து பயமுறுத்தி இருக்கிறாங்க. மசியல, தீத்துக் கட்டியிருக்கிறானுவ. காலம நாங்க ஓடிவந்து மறிக்கிறதுக்கு முன்ன, பொணத்த எடுத்திட்டாங்களே? காலம விடியறச்சே கொடியான் நாவுவத் தேடிட்டுப் போயிருக்கிறான். பொணம் கெடந்திருக்கு. பாத்திருக்கிறான். துணியில்லாம கெடந்திச்சி, பாத்தேன்னுறான். இவனுக்குப் பயம் புடிச்சி ஓடியாந்து வந்து சொல்லியிருக்கிறான். தேவு, வடிவு உள்பட பத்துப் பேரயில்ல போலீசுல புடிச்சி வச்சிருந்தான்? நா இங்க வாரதுக்குள்ள விசாரண முடிச்சி அவள எரிச்சிட்டானுவ!”

“அதான், எல்லாம் விவரமா விசாரண செய்யணும். அன்னக்கி ராத்திரி சேரில வந்து ஆடுகளைத் தாக்கியிருக்கிறாங்க. காந்தியும் மெட்ராஸில், மாதர் சங்கங்கள் பக்கம் இதை எடுத்துகிடணும்னு எழுதிப் போட்டிருக்கு. புதுக்குடியில இப்ப ஐயிருமக சாவித்திரியும், காந்தியும் ஒரு இளைஞர்மாதர் அணியே சேத்திருக்கிறாங்க. இந்தமாதிரி பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட மேல் படிப்பு, கல்யாணம்னு எதேதோ நினைச்சேன். ஆனா, அன்னிக்கு சொந்த வாழ்க்கையை விட நம் சமுதாய விடுதலைதான் முக்கியம்னு போராட வந்தோமே, அதே ஒரு வேகம் அவங்க கிட்ட இப்ப வந்திருக்கு.”

“வரட்டும். பட்டி தொட்டிலேந்து பட்டணம் வரயிலும் இன்னிக்குப் பொம்பிள வியாபாரம் நடந்துட்டுத்தானிருக்கு. அப்ப. நீ நாளக்கி வரியா?...”

“இந்த அறுப்பு இல்லன்னா நானும் வருவேன், அமைச்சரைப் பார்க்கும்போது நானும் இருக்கணும்தா. பணத்தட்டு வேற, வந்த வெலக்கு நெல்ல விக்கணும். ஆனா நான் விடுறதில்லன்னு வச்சிட்டேன். வீடு வாசல் போனாலும் போகட்டும்னு வச்சிட்டேன்...”

“இன்னிக்கு ஆளுறவங்க, அரிசனனுக்கு எல்லாம் செய்யணும்னு சொல்லிட்டாத்தான் கதை ஓடும். அந்தவகையில் ஒரு நியாயம் தோணியிருக்கிறதுதான் அன்னிக்கும் இன்னிக்கும் வித்தியாசம். அன்னிக்கு இந்த மேச்சாதிக்காரன் ‘கூலின்னாலும் குடுத்திடுவம். இவன் நமக்குச் சமமா நம்ம தெருவில நடக்கிறதா, மானம் போயிட்டுதே’ன்னு நெனச்சுத்தான் ஊரவுட்டுப் போனான். இன்னிக்கு எந்த மேச்சாதியானும் இப்படி வெளிப்படயாச் சொல்லமாட்டான். இல்லியா?”

“...கோயில்ல நெருப்பு வச்சுது பத்தி... எதுனாலும் குறிப்பு நீங்க காட்டணுமில்ல, அவுங்க குற்றச்சாட்டை மறுக்கறாப்பல...?”

“அதான் நீ வரணும்னு பாத்தேன்...”

“காந்திகிட்ட சொல்லிருக்கையா... அம்சு, எங்கம்மா எல்லாருமே இதுக்கு முக்கிய சாட்சிகளா வருவாங்க. நெருப்புக் கொளுத்திப் போட்டது நாவுவா இருக்கணும். இல்லேன்னா, அவுங்களே கொளுத்திருக்கணும். நாவு அன்னிக்குப் பீடி கொளுத்தி வச்சிட்டிருந்தான்னு மாரியம்மா சொல்லி இருக்கிறா. நெருப்புக்குச்சி கிடச்சா விளக்குமாத்துக் குச்சிய ஒவ்வொண்ணா எடுத்து எரியவுடுவான். உபயோகமத்த பயல இப்படிச் சோறூட்டிக் காப்பாத்துறாளேன்னு நா நினைச்சிப்பேன். இத்தன கலவரத்தில அந்தப் பயலுக்கு ஒரு கேடு வரல பாருங்க! பெருமா கோவில் வாசல்ல மண்ணள்ளிப் போட்டுட்டிருந்தான்னு யாரோ சொல்லி எங்கம்மா போயி கூட்டியாந்தாங்க. குஞ்சிதம் நெருப்பு வச்சிட்டுத் தானே வுளுந்தாங்கறது பச்சப் பொய்யி?”

“அப்ப நான் வரேன்.”

“வாங்கையா... கடசீவரய்க்குமில்ல, நம்பிக்கைய எப்பவும் வுடுறதில்ல. நமக்கு அடுத்த தலைமுறையும் நியாயத்துக்குப் போராடியே ஆகணும்னிருக்கு...”

சம்முகம் கண்ணீரைத் தேக்கிக் கொள்ளும் வகையில் வானைப் பார்க்கிறார். வானில் கருமை அச்சுறுத்தக் குவிகிறது.

கீழே விழுந்த பச்சை நெல்லைக் குவித்துச் சாக்கில் போட்டுக் கட்டி வைக்கிறார்.

பகலுணவுக்குக்கூட ஓய்வு கொள்ள இயலாதபடி வான் கருமை குவிந்து தூற்றல் விழுகிறது.

புகையிலையில் ஊறிய எச்சிலைத் துப்புவதற்கும் கூட ஓடாமல் மணிகளை வேறாக்க, அரிக்கற்றைகளை ஓங்கி ஓங்கி அடிக்கிறார்கள்.

திருக்கை மீன் வாலினால் செய்த சாட்டையடியும், முரட்டுக்காலணி உதைகளும் பட்ட சாம்பாரின் மேனி, தளர்ந்து குலுங்குகிறது. அதைப் பார்க்கையில், தலைமகனுக்கும் அதே அநுபவங்கள் தொடருகின்றனவே என்று நெஞ்சம் இறுகுகிறது. ஆண்டானும் அடிமையும் இல்லை என்று சட்டப்படி தீர்ந்துவிட்ட பின்னரும் விடிவு காலம் வரவில்லை. நெஞ்சைக் குறுக வைக்கும் இழி சொற்களும், உடல் வாதையில் துடிதுடிக்க இம்சைகளுக்கும் ஆளாக இவர்கள் என்ன தவறைச் செய்திருக்கிறார்கள்?...

“மழ கொட்டும்போல இருக்கு முதலாளி. போயி வண்டி கொண்டிட்டு வாங்க...!”

வியாபாரிகள் உள்ளுரில் இருக்கிறார்கள். கேள்விப்பட்டு இந்த நெல்லை வாங்க வருபவர்கள் யாரும் இல்லை. மழை என்றால் வியாபாரிகளுக்குக் கை மேலாகிவிடும். ஆழும்பாழுமாகப் போகும்போது இன்னும் விலையைக் குறைப்பார்கள்.

வடிவு இல்லாதது கை ஒடிந்தாற்போல் இருக்கிறது. இன்னும் கட்டுக்களைச் சுமந்து வரப்போடு நடந்து, மடைகளில் இறங்கிக் கடந்து, கொண்டுவந்து போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சம்முகம் ஒடிச்சென்று வண்டி பிடித்து வருகிறார்.

சேகரித்த மணிகளை அள்ளிக்கட்டிய மூட்டைகளை வண்டியில் ஏற்றுகையில் துாற்றல் மழையாக வலுக்கிறது.

“சாம்பாரே, வண்டில குந்திட்டு நீங்க போங்க மைத்தத நாங்க பாத்துக்கறோம். எனக்குச் சங்கட்டமாயிருக்கு.”

“அட ஒண்ணில்ல, இதெல்லாம் புதுசா? மழை இன்னும் பெரிசா கொட்டுறதுக்குமுன்ன அடிச்சிப் போட்டுடலாம்.”

சம்முகம் கையைப் பற்றி நிறுத்துகிறார்.

“நீங்க நில்லுங்க. பழனி அடிக்கட்டும்...”

முதியவனின் கண்கள் கலங்குகின்றன;

புளிய மரத்தடியில ஒதுங்கி நிற்கிறார்.

“இன்னைக்குப் புதிசா? மழ இப்பிடிப் பயமுறுத்தும். பொறவு செத்த வுட்டுடிச்சின்னா அடிச்சிப் போட்டு வாரிட்டுப் போறதுதா. ஆனா. இந்த மனசுல இப்ப உஜாரா எதுமில்ல... இந்தப் பத்து வருசமா, அந்தப் பயதா புதுர் கொண்டுவருவா. நாயக்கர் ஊடோ, ஐயிரு பங்கோ, எதுன்னாலும் அவந்தா. நான் பாக்காத போலிசா? இப்ப உச்ச வரம்பு நெல்லபடியா அமுல்படுத்தணும்னு போராட்டம் போகலியா? லத்தியெடுத்துப் பொம்புளக பக்கம் அடிக்கிறானேன்னு குறுக்க பூந்தே, வெறட்டினானுவ ஆத்துலியே வுழுந்தோம். ஆனா... பய இருக்கறான். இதுக்குன்னே தலையெழுத்திட்டா. அவன் கையி மண்ணுல பேசுற கையின்னு மதிப்பா இருந்தே, அவங் கைய அடிச்சிக் கூழாக்கிட்டானுவளே அதுதா தாளலப்பா!”

குத்திக் கொடுத்தாற்போல் துயரம் பெருக, குலுங்கி அழுகிறான் சாம்பார். “அதெல்லாம் ஒண்ணில்லிங்க. பொம்பிள தலையில அடி வுழுந்திடும்னுதா கையவச்சு அவனே வாங்கிட்டி ருக்கிறான். ஆனா, டாக்டரிட்ட நான் கேட்டேன், பாத்தேன், நல்லாப்பூடும்னு காரண்டி குடுத்திருக்காரு, இல்லேன்னாலும் ஐயிரு அண்ணன் மவ, ரொம்பக் கைராசி. எங்காலு நடக்க முடியும்னு நெனச்சனா? அவங்க நமக்குன்னா எல்லா ஒதவியும் செய்வாங்க. கொண்டு காட்டி நல்லபடியாக்கிடலாம், நீங்க ஏன் வருத்தப்படறீங்க? செத்த வூட்டப்போயி இருங்க. அதா முக்காலும் முடிஞ்சிரிச்சே?”

“அவனுக்கு, தான் முன்ன நின்னு கூட்டம் நடத்தணும், போராட்டம் போவணும்னு ஒரே புடி. ராவுல ஐயனார் கொளத்துக்குப் போயி சொல்லிட்டு வந்திருக்கிறா! பஞ்சமியும் சோலையும் நாங்க கெளம்புறப்ப வாறாங்க. ‘ஏண்டால, சம்முவ வாய்க்காரக் கேக்காம நீயா என்னடா இது’ன்னு கேட்டேன். மொகங் குடுத்தானா?. அந்த வெடப்பய தேவு, அவம் பேச்சக் கேட்டுக்கிட்டு, பொம்பிளயள எறக்கினா ஒங்க மக. அது என்ன மாரியாத்தா ஆவேசம் வந்தப்பல ஒரே புயலால்ல பேசிச்சி? இப்ப என்ன ஆச்சி! அவனுவ அநியாயத்துக்கு நூறாயிரம் சாட்சி கொண்டாருவானுவ. நாம எங்க போவம் சாட்சிக்கு?”

“அப்படி எல்லாம் இல்ல சாம்பாரே, நமக்கு சாட்சி இருக்கு. சத்தியம் எப்பவுமே அநாதயாயிராது!”

“குந்தக் குச்சில்லன்னு இருக்கிறோம். எப்பிடிக் கேசு நடத்தி எப்பிடி மீளப்போறம்? கண்ட கனாவெல்லாம் கதிர் முத்துறப்ப பொகையான் வுழுந்தாப்பல பாழாயிடிச்சே!”

“சாம்பாரே, நீங்க என்னாத்துக்கு இப்பத் தனியா பிரிச்சுப் பேசுறீங்க? இது ஒங்க மகனோட ஒரு தனிப்பட்ட விவகாரமும் வழக்குமுமில்ல. இந்த உலகம் முச்சூடும் உள்ள சமுதாயப் பிரச்சினையோட வழக்கு. சமுதாயம் உசிர்வாழ, ஆதித் தொழில் இது. மண் ஒரு தனிப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் சொந்தமில்லங்கறது தீரணும். காத்து, சூரியன், சந்திரன் இதெல்லாமும் போல மண்ணும் தண்ணியும்னு தீரணும். நாம இதுக்காகப் போராடுறோம்னு நினச்சிக்குங்க. நீங்க என்னாத்துக்கு அதைரியப்படணும்? நாம செய்யிற தொழில் இல்லேன்னா. எதுவுமே இல்லே!”

வீட்டருகில் வண்டி வந்து நின்றதும், ஓட்டிவந்த செவத்தையனே மூட்டைகளை இறக்கித் திண்ணையில் போடுகிறான். அம்சுவும் லட்சுமியும் கூட்டி ஒழுங்காக்கி வைத்திருக்கிறார்கள். இதற்குள் சங்கிலி, கருப்பன் எல்லோரும் வருகிறார்கள்.

டீத்துள் போட்டு நீர் காய்ச்சி இறக்கி வெல்லம் போட்டு அம்சு எல்லோருக்கும் வழங்குகிறாள்.

“சம்முவம் களத்து மேட்டுல இருக்கிறானாடா சங்கிலி?”

பாட்டிக்கு மகனைப் பற்றிக் கவலை.

“பாழாப்போன மழ இன்னும் ரெண்டவுரு பொறுத்திருக்காது? அவுரு நாயக்கர் வூட்டுக்குத் தார்ப்பாயி வாங்கியாரப் போயிருக்காரு!”

நாகு வண்டியைப் பார்த்ததும் ஹைஹை என்று ஓடி வருகிறான்.

“போட...ல... போ!”

மூட்டைகளை அடுக்கியபின் எல்லோரும் அங்கேயே காத்திருக்கின்றனர். இருள் வருவது தெரியாமலே கவிந்திருக்கிறது.

திண்ணையிலிருக்கும் கிழவர் சட்டென்று விழித்துப் பார்க்கிறார்.

“மழையா பெய்யிது?”

“ஆமா. குடிக்கிற நேரம் வந்திரிச்சின்னா எந்திரிப்பே” பாட்டி அதட்டுகிறாள்.

அம்சு மாடத்தில் விளக்கேற்றிக்கொண்டு வந்து வைக்கிறாள்.

“அறுப்புவுட்டு, மழ புடிச்சிக்கிச்சே, பாதி நெல்லு வூட்டுக்கு வரலியே, எங்க கெடந்து அல்லாடுறாங்களோன்னு தவிக்கிது மனசு...”

“மள பெய்யிது. வாமடல துணியக்கட்டி வச்சா மீனு வுளும். எனக்குதா கண்ணு சுத்தமாத் தெரில. ஒருக்க பாரு...” என்று ஆரம்பித்துத் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளவும், பாட்டி மீண்டும் அதட்டுகிறாள்.

“தாத்தா அந்த காலத்துலியே இருக்காரு” என்று குந்தி இருந்து பீடி குடிக்கும் சங்கிலி சிரிக்கிறான்.

அப்போது, தன் பையினால் தலை முகத்துக்கு காப்புச் செய்துகொண்டு காந்தி விரைந்து வருகிறாள். தொடர்ந்து முழுதாக நனைந்த கோலத்தில் லட்சுமியும் சம்முவமும் வந்து படியேறுகின்றனர்.

“அட... காந்தி? நீ எப்ப வந்த?...”

“வந்திட்டே இருக்கிறேன். பஸ்ஸ அன்னாண்டயே நிறுத்திட்டான். அறுப்பு வுட்டிருக்கீங்களாப்பா இன்னிக்கி? நா நெனச்சிட்டே வந்தேன். நாகபட்டணத்துக் காப்பால காற்றழுத்த மண்டலம் உருவாகிறதுன்னு ரேடியோவிலே நேத்தே சொன்னான்...”

“ஒடயாரப் பாத்தியா?...”

“அங்க வந்திருக்கிறாரா?... நா இன்னும் பார்க்கல அப்பா. கால பஸ்ஸில போறேன். ஒரு முக்கியமான சங்கதி, நம்ம தங்கசாமி சொன்னாரு மட்றாசில, சங்கம் கட்சின்னு இல்லாம, பலதரப்பட்ட பொண்ணுகளும் சேந்து, பெண்களை இழிவு செய்யும் விளம்பரம், பத்திரிகை, புத்தகம் இதெல்லாம் தடுக்கணும்னு பெரிய கூட்டம், ஊர்வலம் நடத்தறாங்களாம். பெண்களுக்கெதிரா அடக்குமுறை அட்டூழியம் நடப்பதை எல்லாங் கண்டிச்சுப் பேசுவாங்களாம். நான் போயிக் கலந்துக்கறேன்னிருக்கிறேன், சாவித்திரி எங்கூட வருது. புதுக்குடில இருந்து இன்னும் ஒரு அம்மா கூட வராங்க. என்ன அக்கிரமம் அப்பா? பொண்ணுகளக் கடத்திட்டுப் போயி, அரபு நாடுகளுக்கு விக்கற வேலயே நடக்குதாம்! இதுதானா நம்ம பெருமையா சொல்லிட்டிருக்கிற பாரத நாட்டுப் பண்பு, கலாசாரம்! நெனச்சா வயிறெறியிது! மண்ணத் தனிப்பட்டவன் அடிமையா வச்சிட்டு அதன் சாரத்தைக் கறந்து, சுயநலம் பெருக்கிக்கிறான். அப்பிடிப் பெண்ணையும் அடிமையாக்கி விக்கிறான்; இதை - இந்த அக்கிரமங்களைக் காட்டி, வேசம் போடுறவங்களக் கொண்டு வந்து நிறுத்தணும்! இதுக்கு முடிவு கொண்டு வரணும்!”

“நான் பட்டணம் போறப்பா நாளக்கி!”

லட்சுமிக்கு நெஞ்சு விம்முகிறது.

அவள் தலையில் ஆதரவாகக் கை வைத்து, “முதல்ல ஈரத் துணிய மாத்திக்க காந்தி... போவலாம்...” என்று அழைக்கிறாள்.

சம்முகத்துக்கு நா எழவில்லை.

“ஆரு இருக்கா களத்து மேட்டுல?”

குப்பன் சாம்பாரின் தளர்ந்த குரல்.

“ஆரு இருக்கா...? ஆரு இருக்கா...?”

அந்தக் கேள்வி சம்முகத்தின் உள்ளச்சுவரை மோதி எதிரொலிக்கிறது.

தார்ப்பாயைப் போட்டு மூடிவிட்டு வந்திருக்கிறார்கள். நியாயமாக உழைக்கிறவன் பங்கில் இருக்கவேண்டிய மானமே இன்னிக்கின்னு இப்பிடிக் கொட்டுது. நாம அநியாயம் கேக்கலங்கிற சத்தியந்தான் இப்பக் காவல், அம்சு இந்தச் சட்டய வாங்கி உள்ள கொடில போட்டுட்டுப் பைய எடுத்திட்டு வா; இவங்கல்லாம் காத்திருக்காங்க எந்நேரமா?”

அம்சு பணப்பையைக் கொண்டு வந்து சம்முகத்திடம் கொடுக்கிறாள்.

“கண்டு முதல் ஒண்ணும் இப்ப பாக்குறாப்பல இல்ல. வெளவு நல்லாத்தா கண்டிருக்கு எதுக்கும் இருக்கட்டும்னு பணம் கொஞ்சம் கேட்டு வாங்கி வச்சிருக்கிறேன். இப்ப பத்துப்பத்து ரூபா தாரேன். விடிந்து கணக்குப் பாத்துக்கலாம்.”

இதற்காகவே காத்திருந்தவர்கள் கள்ளுக்கடைக்குத்தான் ஓடுவார்கள்!

“சாம்பாரே, நீங்க இப்ப எங்க வூட்டுக்குப் போறது? இங்க இருங்க?”


காந்தியை உறுத்துப் பார்க்கிறான் சாம்பார்.

“வடிவு நாளைக்கி வந்திருவா...”

“கையி எப்பிடி இருக்கு?”

“கையெல்லா நல்லாப் போயிடும்... வீரபுத்திரன் கூட வந்திடுவா, கேசுதா நடத்தணும்... ஆனா... தேவு அவுருக்குத்தா நா இப்ப மட்றாக போறதுகூட, அது முக்கியமான காரணம். நியாயம்னு உரக்கக் குரல் எழுப்பினா இப்பிடி ஒரு ஆபத்துக் கட்சின்னு போடுறது ஒரு தந்திரமா வச்சிறாங்க. இருக்கிற அக்கிரமத்தை எல்லாம் நல்ல வேசம் போடுறவந்தான் செய்யிறான். ஏன்னு கேட்டா, அவன் ஆகாதவன். தேவுவப்போல இருக்கிறவங்களுக்கும் நாம போராட வேண்டிருக்கு...”

காந்தியின் ஆழ்ந்த குரலும் மங்கலான ஒளியும் அவர்கள் சமுதாயத்தின் குரலாகவே ஒலிப்பது போன்ற சிலிர்ப்பைத் தோற்றுவிக்கிறது சம்முகத்துக்கு.

தலைத்துணியை அவிழ்த்துத் தோளில் போட்டுக் கொண்டு சாம்பார் திரும்புகிறான்.

“இப்ப என்னாத்துக்குப் போவனும்? மருமவ சோறாக்கி வச்சிருக்கா. இருந்து பேசிட்டுப் போவுறது?”

சம்முகம் அவன் பின்னே வந்து அழைக்கிறார்.

“இருக்கட்டும்பா! நா இப்பப் போற வூட்டுக்கு பொம்புள அப்பவே வூட்டுக்குப் போயிட்டா. சோறாக்கி எதுனாலும் கசக்கிக் கொளம்பும் வச்சிருப்பா!”

அவன் படியிறங்கிப் போகிறான். இருட்டிலும் அந்த உருவம் சத்திய வடிவமாகத் துல்லியமாகப் புலனாகிறது.

இருளோடு அவன் மறைந்த பின்னரும், உயிர்க்குலம் வாழும் உழைப்பைக் கொடுக்கும் அந்த மனிதனின் பிம்பம் மிக அழகாக மிகப் பெரியதாக வளர்ந்து வளர்ந்து ஆணென்றும் பெண்ணென்றும் இனம் பிரிக்கமுடியாத ஓர் ஆற்றலாக அவர் கருத்தை நிறைக்கிறது.

“அப்பா! உள்ளாற வந்து எதுனாலும் சாப்பிடுங்க!”

வாயிற்படியில் படச்சித்திரம்போல் தோன்றும் அம்சு அழைக்கிறாள். உடல் சிலிர்த்து அவர் திரும்புகிறார்.

(முற்றும்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top