• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சோலைமலை இளவரசி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
12. அப்பாவின் கோபம்

பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவறை உணர்ந்தவனாய்க் கரைமீது ஏறிப் பொன்னம்மாளின் அருகில் வந்தான். "பொன்னம்மா சட்டியில் என்ன சோறு கொண்டு வந்திருக்கிறாயா அப்படியானால் கொடு; நீ நன்றாயிருப்பாய் பசி பிராணன் போகிறது" என்றான். பொன்னம்மாள் அதற்குப் பதில் சொல்லாமல் "சற்று முன்னால் ஒரு பெண்பிள்ளையின் பெயர் சொன்னாயே அந்தப் பெண் யார்" என்று கேட்டாள். "என்னமோ பைத்தியக்காரத்தனமாய்த்தான் சொன்னேன். அது யாராயிருந்தால் இப்போது என்ன அந்தச் சட்டியை இப்படிக்கொடு. நான் சாப்பிட வேண்டும்" "முடியாது நீ நிஜத்தைச் சொன்னால்தான் கொடுப்பேன்; இல்லாவிட்டால் இதைத் திரும்பக் கொண்டுபோய் விடுவேன். "என்ன சொல்ல வேண்டும் என்கிறாய்" "ஏதோ ஒரு பெயர் சொன்னாயே அதுதான்" "மாணிக்கவல்லி என்று சொன்னேன்." "அவள் யார் அப்படி ஒருத்தியை ஊரிலே விட்டு விட்டு வந்திருக்கிறாயா உனக்கு கலியாணம் ஆகிவிட்டதா "

"இல்லை பொன்னம்மா இல்லை கலியாணம் என்ற பேச்சையே நான் காதில் போட்டுக் கொள்வதில்லை. சுவாமி விவேகானந்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா அவர் என்ன சொன்னார் தெரியுமா 'இந்த நாட்டில் ஒவ்வொரு மூடனும் கலியாணம் செய்து கொண்டிருக்கிறான்' என்றார். நம்முடைய தேசம் சுதந்திரம் அடையும் வரை நான் கலியாணம் செய்துகொள்ளப் போவதில்லை." "தேசம் தேசம் தேசம் உனக்குத் தேசம் நன்றாய் இருந்தால் போதும்; வேறு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை" "ஆமாம் பொன்னம்மா அது நிஜம். தேசம் நன்றாயிருந்தால் தானே நாமெல்லோரும் நன்றாயிருக்கலாம்" "தேசமும் ஆச்சு நாசமத்துப் போனதும் ஆச்சு" "சரி; அந்தச் சட்டியை இப்படிக் கொடு" "அதெல்லாம் முடியாது. நான் கேட்டதற்குப் பதில் சொன்னால்தான் தருவேன்." "எதற்குப் பதில் சொல்ல வேண்டும்" "யாரோ ஒருத்தியின் பெயரைச் சொன்னாயே இப்போது - அவள் யார் "
"பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள் - பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்
அன்னம் படைக்க மறுத்திடுவாள் - சொன்னதைச் சொன்னதைச் சொல்லிடுவாள்"​
என்று கேலிக் குரலில் பாடினான் குமாரலிங்கம். பொன்னம்மாள் கடுமையான கோபங் கொண்டவள் போல் நடித்து "அப்படியானால் நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினாள். "பொன்னம்மா உனக்குப் புண்ணியம் உண்டு. கொண்டு வந்த சோற்றைக் கொடு சாப்பிட்ட பிறகு நீ கேட்டதற்குப் பதில் நிச்சயமாகச் சொல்லுகிறேன்." "முன்னாலேயே அப்படிச் சொல்வதுதானே வீண் பொழுதுபோக்க எனக்கு இப்போது நேரம் இல்லை அப்பாவேறு ஊரிலேயிருந்து வந்துவிட்டார்" இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. "பொன்னம்மா உன் தகப்பனார் வந்து விட்டாரா அவர் எப்படியிருப்பார்" என்று கேட்டான்.

"எப்படியிருப்பார் இரண்டுகால் இரண்டுகையோடு தான் இருப்பார்" என்று சொல்லிக்கொண்டே பொன்னம்மாள் கால்வாய்க் கரையில் உட்கார்ந்து சட்டியைக் குமாரலிங்கத்திடம் நீட்டினாள். "இது சோறு இல்லை; பலகாரம். இலை கொண்டுவர மறந்து போனேன். சட்டியோடுதான் சாப்பிட வேண்டும்" என்றாள். "ஆகட்டும்; இந்த மட்டும் ஏதோ கொண்டு வந்தாயே அதுவே பெரியகாரியம்" என்று சொல்லிக் குமாரலிங்கம் சட்டியைக் கையில் வாங்கிக் கொண்டு அதிலே இருந்த பலகாரத்தைச் சாப்பிட ஆரம்பித்தான். "எங்க அப்பாவுக்கு உன்பேரில் ரொம்பக் கோபம்" என்று பொன்னம்மாள் திடீரென்று சொன்னதும் குமாரலிங்கத்துக்குப் பலகாரம் தொண்டையில் அடைத்துக் கொண்டு புரையேறிவிட்டது. பொன்னம்மாள் சிரித்துக் கொண்டே அவனுடைய தலையிலும் முதுகிலும் தடவிக்கொடுத்தாள். இருமல் நின்றதும் "நல்ல வேளை பிழைத்தாய் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள்.

"என்னை எதற்காக நம்பியிருக்கிறாய்" "எல்லாவற்றுக்குந்தான். வீட்டிலே எனக்குக் கஷ்டம் தாங்க முடியவில்லை. அப்பாவோ ரொம்பக் கோபக்காரர். சின்னாயி என்னைத் தினம் தினம் வதைத்து எடுத்து விடுகிறாள்" "ஐயோ பாவம் ஆனால் உன் அப்பாவுக்கு என்பேரில் கோபம் என்கிறாயே அது ஏன் என்னை அவருக்குத் தெரியாவே தெரியாதே" "எப்படியோ அவருக்கு உன்னைத் தெரிந்திருக்கிறது; நேற்று ராத்திரி உன் பெயரைச் சொல்லித் திட்டினார்" "இது என்ன கூத்து என்னை எதற்காகத் திட்டினார்" "ஏற்கெனவே அவருக்கு காங்கிரஸ்காரன் என்றாலே ஆகாது. 'கதர்' கட்டிய காவாலிப் பயல்கள்' என்று அடிக்கடி திட்டுவார். நேற்று ராத்திரி பேச்சுவாக்கில் அதன் காரணத்தை விசாரித்தேன். எங்க அப்பா நிலஒத்தியின் பேரில் நிறையப் பணம் கடன் கொடுத்திருந்தார். காங்கிரஸ் கவர்ன்மெண்டு நடந்தபோது கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் செய்துவிட்டார்களாமே அதனால் அப்பாவுக்கு ரொம்பப் பணம் நஷ்டம்."

"ஆமாம்; விவசாயக் கடன் சட்டம் என்று ஒரு சட்டம் வந்திருக்கிறது. அதனால் கடன் வாங்கியிருந்த எத்தனையோ விவசாயிகளுக்கு நன்மை ஏற்பட்டது. உன் தகப்பனாருக்கு மட்டும் நஷ்டம் போலிருக்கிறது." "அது மட்டுமில்லை. காங்கிரஸ்காரனுங்க கள்ளு சாராயக்கடைகளையெல்லாம் மூடணும் என்கிறார்களாமே" "ஆமாம்; அது ஜனங்களுக்கு நல்லது தானே உங்க அப்பா தண்ணி போடுகிறவராக்கும்" "இந்தக் காலத்திலே தண்ணி போடாதவங்க யார் இருக்கிறாங்க ஊரிலே முக்காலு மூணு வீசம் பேர் பொழுது சாய்ந்ததும் கள்ளுக்கடை சாராயக்கடை போறவங்கதான். அதோடு இல்லை. எங்க அப்பா ஒரு சாராயக் கடையைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்." "ஓஹோ அப்படியானால் சரிதான் கோபத்துக்குக் காரணம் இருக்கிறது. ஆனால் என் பேரில் அவருக்குத் தனிப்பட எதற்காகக் கோபம் நான் என்ன செய்தேன் "

"கேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமை எல்லாம் சேர்ந்து கொண்டது போல் ஆகியிருக்கிறது. கோர்ட்டிலே அவர் தாவாப் போட்டிருந்தாராம். சனங்கள் கோர்ட்டைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்களாம். அதனாலே அவருடைய பத்திரம் ஏதோ எரிந்து போய்விட்டதாம் உன்னாலே உன்னுடைய பிரசங்கத்தைக் கேட்டதனாலே தான் சனங்கள் அப்படி வெறிபிடித்துக் கோர்ட்டைக் கொளுத்தினாங்க என்று சொல்லிவிட்டு உன்னைத் திட்டு திட்டு என்று திட்டினார். ஆனால் நீ இங்கே இருக்கிறது அவருக்குத் தெரியாது. அவர் கையிலே மட்டும் நீ அகப்பட்டால் உன் முதுகுத் தோலை உரித்து விடப் போவதாக அவர் கத்தினபோது எனக்கு ரொம்பப் பயமாயிருந்தது. அதனாலேதான் காலங்காத்தாலே உன்னைப் பார்ப்பதற்கு வந்தேன்."

குமாரலிங்கத்துக்குப் பளிச்சென்று ஒரு காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று காலையில் அந்தப் பக்கம் போன கடுகடுப்பான முகத்தைக் கனவிலே சோலைமலை அரண்மனையிலே மட்டுமல்ல - வேறு ஓர் இடத்திலும் அவன் பார்த்ததுண்டு. அவனுடைய வீராவேசப் பிரசங்கத்தைக் கேட்டு ஜனங்கள் சிறைக் கதவை உடைத்துத் தேசபக்தர்களை விடுதலை செய்த அன்று பொதுக்கூட்டம் ஒன்று நடந்ததல்லவா கூட்டம் ஆரம்பமாகும் சமயத்தில் ஒரு சின்ன கலாட்டா நடந்தது. அதற்குக் காரணம் அன்று காலையில் அந்தப் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் போன மனிதன்தான். அவன் அன்றைக்குப் போதை மயக்கத்தில் இருந்தான். "இங்கிலீஷ்காரனுகளிடத்தில் துப்பாக்கி பீரங்கி ஏரோப்ளேன் வெடி குண்டு எல்லாம் இருக்கிறது. காங்கிரஸ்காரனுங்களிடத்தில் துருப்பிடித்த கத்தி கபடா கூடக் கிடையாது. சவரம் பண்ணுகிற கத்திகூட ஒரு பயல்கிட்டேயும் இல்லை இந்தச் சூரன்கள்தான் இங்கிலீஷ்காரனை விரட்டியடிச்சுடப் போறான்களாம் போங்கடா போக்கடாப் பயல்களா" என்று இந்த மாதிரி அவன் இரைந்து கத்தினான். பக்கத்திலிருந்தவர்கள் அவனிடம் சண்டைக்குப் போனார்கள். தொண்டர்கள் சண்டையை விலக்கிச் சமாதானம் செய்து அவனைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள். இவ்வளவும் ஒரு நிமிஷத்துக்குள் குமாரலிங்கத்துக்கு ஞாபகம் வந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
13. உல்லாச வாழ்க்கை

அன்று மத்தியானம் மறுபடியும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டுவந்தாள். இலையைப் போட்டுப் பரிமாறினாள். குமாரலிங்கம் மௌனமாகச் சாப்பிட்டான். "காலையில் கலகலப்பாக இருந்தாயே இப்போது ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்" என்று பொன்னம்மாள் கேட்டாள். "ஒன்றுமில்லை பொன்னம்மா காலையில் நீ சொன்ன விஷயங்களைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்றான் குமாரலிங்கம். "என்ன யோசித்துக் கொண்டிருந்தாய்" என்று பொன்னம்மாள் திரும்பவும் கேட்டாள். "உன் தகப்பனார் என்னிடம் இவ்வளவு கோபமாயிருக்கும் போது நான் இங்கே இருக்கலாமா என்று யோசனையாயிருக்கிறது. காலையிலே உன்னை ஒன்று கேட்கவேண்டுமென்றிருந்தேன் மறந்துவிட்டேன்..." "உனக்கு மறதி ரொம்ப அதிகம் போலிருக்கிறது" என்றாள் பொன்னம்மாள். "அப்படி ஒன்றும் நான் மறதிக்காரன் அல்ல. உன் முகத்தைப் பார்த்தால்தான் பல விஷயங்கள் மறந்து போகின்றன..." "வயிற்றுப் பசியைத் தவிர..." என்று குறுக்கிட்டுச் சொன்னாள் பொன்னம்மாள்.

"ஆமாம் வயிற்றுப் பசியைத் தவிரத்தான். 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்' என்று பெரியோர் வாக்கு இருக்கிறதே" "போகட்டும் காலையில் என்னை என்ன கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தாய்" "சூரியன் உதித்து ஒரு நாழிகைப் பொழுதுக்கு இந்தப் பக்கமாக ஒரு பெரிய மனுஷர் போனார். அவர் முகத்தைப் பார்த்தால் ரொம்பக் கோபக்காரர் என்று தோன்றியது. ஒரு வேளை அவர்தான் மணியக்காரரோ என்று கேட்க எண்ணினேன்." "இருந்தாலும் இருக்கும். அவர் பின்னோடு ஒரு நாய் வந்ததா" "ஆமாம்; பெரிய வேட்டை நாய் ஒன்று வந்தது. இங்கே வந்ததும் அது குரைத்தது; அந்தப் பெரிய மனுஷர் கையிலிருந்த தடியினால் அதன் மண்டையில் ஒரு அடி போட்டார்" "அப்படியானால் நிச்சயமாக அப்பாதான் உன்னை அவர் பார்த்துவிட்டாரோ" என்று பொன்னம்மாள் திகிலுடன் கேட்டாள்.

"இல்லை பார்க்கவில்லை அந்த மொட்டைச் சுவருக்குப் பின்னால் நான் மறைந்து கொண்டிருந்தேன். நாய்க்கு மோப்பம் தெரிந்து குரைத்திருக்கிறது. அதற்குப் பலன் தலையில் ஓங்கி அடி விழுந்தது" "நல்ல வேளை கரும்புத் தோட்டத்துக்கு இந்த வழியாகத்தான் அப்பா நிதம் போவார். தப்பித் தவறி அவர் கண்ணிலே மட்டும் நீ பட்டுவிடாதே" "அவர் கண்ணிலே படாமல் இருப்பதென்ன இந்த இடத்திலிருந்தே கிளம்பிப் போய்விட உத்தேசித்திருக்கிறேன் பொன்னம்மா" "அதுதான் சரி உடனே போய்விடு முன்பின் தெரியாத ஒரு ஆண்பிள்ளையை நான் நம்பினேனே என்னுடைய புத்தியை விறகுக் கட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும்" இவ்விதம் பொன்னம்மாள் சொன்னபோது அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிக்கும் நிலையில் இருப்பதைக் குமாரலிங்கம் கவனித்தான். சற்று முன்னால் அவன் யோசித்து முடிவு செய்திருந்த தீர்மானங்களெல்லாம் காற்றிலே பறந்து போயின. இந்தக் கள்ளங்கபடமற்ற பெண்ணை முதன் முதலில் தான் சந்தித்து இன்னும் இருபத்து நாலு மணி நேரங்கூட ஆகவில்லையென்பதை அவனால் நம்ப முடியவில்லை.

"உன்னைப் பிரிந்து போவதற்கு எனக்கும் கஷ்டமாய்த்தானிருக்கிறது. ஆனாலும் வேறு என்ன செய்யட்டும் நீதான் சொல்லேன்" என்று குமாரலிங்கம் உருக்கமான குரலில் கூறினான். "நீ இப்போது சொன்னது நெசமாயிருந்தால் என்னையும் உன்னோடு இட்டுக்கொண்டு போ" என்று மணியக்காரர் மகள் கூறிய பதில் குமாரலிங்கத்தை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. சற்று நிதானித்துவிட்டு அவன் சொன்னான்: "பொன்னம்மா உன்னையும் என்னோடு அழைத்துப் போகவல்லவா சொல்லுகிறாய் அதற்கு எனக்குப் பூரண சம்மதம். உன்னைப் பார்த்த பிறகு 'கலியாணம் செய்து கொள்ளவில்லை' என்ற தீர்மானத்தைக் கூடக் கைவிட்டு விட்டேன். ஆனால் சமய சந்தர்ப்பம் தற்போது சரியாயில்லையே நானோ போலீஸ் புலிகளிடம் அகப்படக்கூடாதென்று தப்பி ஓடிவந்தவன் என்னை நான் காப்பாற்றிக் கொள்வதே பெருங் கஷ்டம். உன்னையும் கூட அழைத்துக் கொண்டு எங்கே போக என்னத்தைச் செய்ய" "என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போவது கல்லைக் கட்டிக்கொண்டு கேணியிலே விழுகிற மாதிரி தான். அது எனக்குத் தெரியாமலில்லை. அதனாலேதான் உன்னை இங்கேயே இருக்கச் சொல்கிறேன்" என்றாள் பொன்னம்மாள்.

"அது எப்படி முடியும் நீதானே சொன்னாய் உன் அப்பா என்னைப் பார்த்துவிட்டால் கடித்து விழுங்கி விடுவார் என்று" "அது மெய்தான். ஆனால் இந்தப் பாழுங் கோட்டையிலும் இதைச் சேர்ந்த காடுகளிலும் நீ யார் கண்ணிலும் படாமல் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாமே சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பதற்கு நான் இருக்கிறேன். உனக்கு என்ன பயம் " "எனக்கு ஒரு பயமும் இல்லை பொன்னம்மா ஆனால் எத்தனை நாள் உனக்கு இம்மாதிரி சிரமம் கொடுத்துக் கொண்டிருப்பது என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தினந்தினம் நீ சாப்பாடு கொண்டு வருவாய் வேண்டாம் பொன்னம்மா நான் எங்கேயாவது போய்த் தொலைகிறேன். உனக்குக் கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை." பொன்னம்மாள் பரிகாசத்துக்கு அறிகுறியாகக் கழுத்தை வளைத்துத் தலையைத் தோளில் இடித்துக் கொண்டு கூறினாள்:

"பேச்சைப் பார் பேச்சை எனக்குக் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லையாம் நான் தான் சொன்னேனே நீ இவ்விடத்தை விட்டுப் போனால்தான் எனக்கு மனக்கஷ்டம் உண்டாகும் என்று. நானோ பெண் ஜன்மம் எடுத்தவள். உயிர் இருக்கும் வரையில் யாருக்காவது சோறு படைத்துத் தானே ஆக வேண்டும் உனக்கு சில நாள் சோறு கொண்டு வந்து கொடுப்பதில் எனக்கு என்ன கஷ்டம் ஒன்றுமில்லை. தோட்டத்தில் கரும்பு வெட்டி வெல்லம் காய்ச்சி முடிவதற்குப் பதினைந்து நாள் ஆகும். அதுவரையில் நான் இந்த வழியாக நிதநிதம் போக வேண்டியிருக்கும். அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போவேன். அப்போது உனக்கும் கொண்டு வருகிறேன்..." குமாரலிங்கம் குறுக்கிட்டு "பொன்னம்மா உன் தகப்பனாரை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. அவரை பார்க்கும்போதே முன் கோபக்காரர் என்று தோன்றுகிறது. என் பேரில் வேறே அவருக்கு விசேஷமான கோபம். அதற்குக் காரணம் இல்லாமலும் போகவில்லை. தப்பித்தவறி என்றைக்காவது ஒருநாள் நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அவர் பார்த்துவிட்டால் என்ன கதி என்னைப்பற்றியே நான் சொல்லவில்லை; உனக்காகத்தான் நான் பயப்படுகிறேன்" என்றான்.

"ஐயா எங்க அப்பா பொல்லாத மனிதர்தான். ஆனால் ஊருக்குத்தான் அவர் பொல்லாதவர். எனக்கு நல்லவர். சின்னாயி ஒருநாள் என்னைப் பாடாய்ப் படுத்தியதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். அதற்காக அவளை மொத்து மொத்து என்று மொத்திவிட்டார்..." "அதாவது உங்க அப்பாவினால் உனக்கு ஒன்றும் அபாயம் இல்லை; வந்தால் எனக்குத்தான் வரும் என்று சொல்லுகிறாயா" அந்தக் கேலியை விரும்பாத பொன்னம்மாள் முகத்தைச் சிணுக்கிக்கொண்டு சொன்னாள்: "அப்படி ஒன்றும் சொல்லவில்லை. எங்க அப்பாவுக்கு நான் செல்லப்பெண். சமயம் பார்த்துப் பேசி உன் விஷயத்தில் அவருடைய மனத்தை மாற்றிவிடலாம் என்றிருக்கிறேன்." முதல் நாளிரவு சோலைமலை மகாராஜாவும் இளவரசியும் பேசிக்கொண்டிருந்த காட்சியையும் தான் பலகணியின் அருகில் மறைந்திருந்து ஒட்டுக் கேட்ட வார்த்தைகளையும் குமாரலிங்கம் நினைவு கூர்ந்தான். "பொன்னம்மா நீ என்னதான் பிரயத்தனம் செய்தாலுங்கூட உன் தகப்பனாரின் மனத்தை மாற்ற முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை" என்றான்.

"ஏன் நீ இவ்வளவு அவநம்பிக்கைப்படுகிறாய் கொஞ்சம் பொறுத்திருந்து என்னுடைய சாமர்த்தியத்தைப் பாரேன்" என்றாள் பொன்னம்மாள். "நீ சாமர்த்தியக்காரிதான்; அதைப்பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் என் விஷயத்தில் எதற்காக நீ இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாய் இன்றைக்கோ நாளைக்கோ என்னைப் போலீஸார் வேட்டையாடிப் பிடித்து விடலாம். அப்புறம் இந்த ஜன்மத்தில் நாம் ஒருவரையொருவர் பார்க்கவே முடியாது. என் உடம்பில் இருக்கும் உயிர் ஒரு மெல்லிய கயிற்றின் முனையிலே தொங்கிக் கொண்டிருக்கிறது எந்த நிமிஷத்திலே இந்தக் கழுத்திலே சுருக்கு விழுமோ தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள என்னை நீ நம்ப வேண்டாம்; நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்" என்று குமாரலிங்கம் இரங்கிய குரலில் சொன்னான். பொன்னம்மாள் உணர்ச்சி மிகுதியினால் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் சும்மா இருந்தாள். பின்னர் கூறினாள்:

"ஐயா விதி அப்படி இருக்குமானால் அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் சோலைமலை முருகன் அருளால் அப்படி ஒரு நாளும் நடக்காது என்று எனக்குத் தைரியம் இருக்கிறது. என் தகப்பனாருடைய மனத்தை மாற்றுவதற்கு என்னுடைய சாமர்த்தியத்தை மட்டும் நான் நம்பியிருக்கவில்லை. சோலைமலை முருகனுடைய திருவருளையுந்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். 'இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. குனிந்தால் முதுகில் உட்காருவார்கள்; நிமிர்ந்தால் காலில் விழுவார்கள். இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ்காரன்களின் கையிலேயே மறுபடியும் கவர்ன்மெண்டைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். இன்றைக்குத் தலைமறைவாய் ஒளிந்து திரிகிற குமாரலிங்கம் நாளைக்கு ஒருவேளை ஜில்லாக் கலெக்டராகவோ மாகாண மந்திரியாகவோ வந்தாலும் வருவான். அப்படி வந்தால் சோலைமலை முருகன் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ்காரனுங்க மறுபடியும் அதிகாரத்துக்கு வந்தால் என்னென்ன அக்கிரமம் செய்வான்களோ தெரியாது' என்று அப்பா ரொம்ப ஆத்திரமாய்ப் பேசினார். அதோடு காங்கிரஸ¤க்கும் சர்க்காருக்கும் ஏதோ ராஜிப் பேச்சு நடக்கிறதாகக் கேள்வி என்றும் சொன்னார். ஐயா நீ ஒருவேளை மந்திரியாகவோ ஜில்லாக் கலெக்டராகவோ வந்தால் அக்கிரமம் ஒன்றும் செய்ய மாட்டாயல்லவா அப்பாவைக் கஷ்டத்துக்கு உள்ளாக்க மாட்டாயல்ல்வா" என்று பொன்னம்மாள் கண்ணில் நீர் ததும்பக் கேட்டாள்.

"மாட்டேன் பொன்னம்மா மாட்டேன் பிராணன் போய்க் கொண்டிருந்த சமயத்தில் சோறு கொண்டுவந்து போட்டு உயிர்ப் பிச்சை கொடுத்த பொன்னம்மாளின் தகப்பனாரை ஒருநாளும் கஷ்டப்படுத்த மாட்டேன். அவர்மேல் ஒரு சின்ன ஈஎறும்பு உட்கார்ந்து கடிப்பதற்குக் கூட இடங்கொடுக்க மாட்டேன்" என்றான் குமாரலிங்கம். மேலே கண்ட சம்பாஷணை நடந்த பிறகு ஏழெட்டுத் தினங்கள் வரை அந்தப் பாழடைந்த சோலைமலைக் கோட்டையிலேயே குமாரலிங்கத்தின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனந்தமாகவும் குதூகலமாகவும் சென்று கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும். மணியக்காரர் மகளிடம் அவனுடைய நட்பு நாளுக்குநாள் வளர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்த போது குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் கூடக் கொண்டு வந்தாள். பிரதி தினமும் அவளுடைய கால்மெட்டியின் சத்தத்தோடு 'கலகல'வென்ற சிரிப்பின் ஒலியும் சேர்ந்து வந்தது. எனவே அந்தப் பாழுங் கோட்டையில் ஒளிந்திருந்து கழித்த ஒவ்வொரு நாளும் ஓர் உற்சவதினமாகவே குமாரலிங்கத்துக்குச் சென்று வந்தது.

சோலைமலைக் கோட்டைக்கு அவன் வந்து சேர்ந்த அன்று பகலிலும் இரவிலும் கண்ட அதிசயக் காட்சிகளைப் பிற்பாடு அவன் காணவில்லை. அவையெல்லாம் பல இரவுகள் சேர்ந்தாற்போல் தூக்கமில்லாதிருந்த காரணத்தினால் ஏற்பட்ட உள்ளக் கோளாறுகள் என்று குமாரலிங்கம் தேறித் தெளிந்தான். ஆனால் இந்த விஷயத்தில் அவனுக்கு எவ்வளவுக் கெவ்வளவு தெளிவு ஏற்பட்டதோ அவ்வளவுக்குப் பொன்னம்மாளுக்குப் பிரமை அதிகமாகி வருவதை அவன் கண்டான். சோலைமலை இளவரசியைப் பற்றியும் மாறனேந்தல் மகாராஜாவைப் பற்றியும் குமாரலிங்கம் கனவிலே கண்ட காட்சிகளைத் திரும்பத் திரும்ப அவனைச் சொல்ல வைத்துப் பொன்னம்மாள் அடங்காத ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அதோடு அவன் கண்டதெல்லாம் வெறும் கனவல்லவென்றும் சுமார் நூறு வருஷத்துக்கு முன்னால் உண்மையாக நடந்தவையென்றும் பொன்னம்மாள் சாதித்து வந்தாள். அவள் கொண்டிருந்த இந்தக் குருட்டு நம்பிக்கைகூடக் குமாரலிங்கத்தின் உல்லாசம் அதிகமாவதற்கே காரணமாயிருந்தது. சில சமயம் அவன் "மாறனேந்தல் மகாராஜாதான் குமாரலிங்கமாகப் பிறந்திருக்கிறேன் சோலைமலை இளவரசிதான் பொன்னம்மாளாகப் பிறந்திருக்கிறாய்" என்று தமாஷாகச் சொல்லுவான். வேறு சில சமயம் பொன்னம்மாளைப் பார்த்ததும் "இளவரசி வருக" என்பான். "மாணிக்கவல்லி அரண்மனையில் எல்லாரும் சௌக்கியமா" என்று கேட்பான். குமாரலிங்கம் இப்படியெல்லாம் பரிகாசமாகப் பேசிய போதிலும் பொன்னம்மாளின் கபடமற்ற உள்ளத்தில் அவ்வளவும் ஆழ்ந்து பதிந்து கொண்டு வந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
14. ஆனந்த சுதந்திரம்

குமாரலிங்கம் அந்த இடிந்த கட்டிடங்களுக்கு மத்தியில் அவ்வளவு உற்சாகமாகவும் உல்லாசமாகவும் நாட்களைக் கழித்து வந்ததற்குப் பொன்னம்மாளின் நேசம் மட்டுமல்லாமல் வேறொரு காரணமும் இருந்தது. அரசியல் நிலைமையைப் பற்றி மணியக்காரர் சொன்னதாகப் பொன்னம்மாள் அன்றுசொன்ன செய்திதான் அது. பிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ராஜிப்பேச்சு நடந்து வருகிறது என்பதைப் பரிபூரணமாய் அவன் நம்பினான். அதைப் பற்றிச் சந்தேகிக்கவே அவனுக்குத் தோன்றவில்லை. 'அன்று தளவாய்ப் பட்டணத்தில் நடந்தது போலத்தானே இமயமலையிலிருந்து குமரிமுனை வரையில் எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் சூறாவளிப் புரட்சி நடந்திருக்கும் அந்தப் புரட்சியைப் பிரிட்டிஷ் சர்க்காரால் எப்படி எதிர்த்து நிற்க முடியும் ஜப்பான்காரனோ பர்மா எல்லைப் புறத்தில் வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறான். பிரிட்டிஷ் சர்க்கார் காங்கிரஸ¤க்குச் சரணாகதி அடையாமல் வேறு என்ன செய்ய முடியும்' என்னும் கேள்வி அடிக்கடி அவன் மனத்தில் எழுந்து கொண்டிருந்தது. தளவாய் பட்டணம் சரித்திரப் பிரசித்தி அடைந்த விசேஷ தினத்தில் அவன் காதில் விழுந்த ஒரு சம்பாஷணையும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்துகொண்டிருந்தது.

சப்ஜெயிலின் கதவுகளை உடைத்துக் கைதிகளை விடுதலை செய்துவிட்டு வீரமுழக்கத்துடன் சுதந்திர கோஷங்களுடனும் திரும்பிய ஜனங்களில் கிராமவாசிகள் இருவர் பின்வருமாறு பேசிக் கொண்டார்கள்: "ஆமாம் இந்தியா சுதந்திரம் அடைஞ்சு விட்டால்..." என்று ஒருவர் ஏதோ கேட்க ஆரம்பித்தார். "அடைஞ்சுவிட்டால் என்ன அதுதான் அடைஞ்சாகிவிட்டதே" என்றார் இன்னொருவர் வெகு உற்சாகத்துடன். "சரி இந்தியா சுதந்திரம் அடைஞ்சுட்டுது இனிமே யாரு நமக்கு ராசா என்று கேட்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேருவா நேதாஜி சுபாஷ் போசா" என்று கேட்டார் முதலில் பேசியவர். "இரண்டு பேரிலே யார் ராசாவானால் என்ன நேருஜி ராசா ஆனால் நேதாஜி மந்திரி ஆகிறாரு நேதாஜி ராசா ஆனால் நேருஜி மந்திரி ஆகிறாரு" என்றார் இரண்டாவது பேசியவர். படிப்பில்லாத பட்டிக்காட்டு ஆசாமிகளின் மேற்படி பேச்சை அன்றைக்கு குமாரலிங்கம் கேட்டபோது அவன் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஆனால் இப்போது அதைப்பற்றி எண்ணியபோது அவர்கள் பேச்சு ஏன் உண்மையாகக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திரபோஸ¤ம் இந்தியாவின் ராஜாவாகவும் மந்திரியாகவும் வராவிட்டாலும் குடியரசின் அக்கிராசனராகவும் முதன் மந்திரியாகவும் வரக்கூடுந்தானே அப்படி வரும்போது மணியக்காரர் சொன்னதுபோல் இந்தியக் குடியரசு சர்க்காரில் தனக்கும் ஒரு பதவி ஏன் கிடைக்கக்கூடாது கிடைக்காமலிருந்தால் தான் ஆச்சரியமே தவிர கிடைத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இராது

இப்படிப்பட்ட எண்ணங்கள் குமாரலிங்கத்துக்குக் குதூகலத்தை அளித்ததோடு ஓரளவு பரபரப்பையும் உண்டாக்கி வந்தன. பொன்னம்மாளைத் தினம் பார்த்தஉடனே "இன்றைகு ஏதாவது விசேஷம் உண்டா காங்கிரஸ் விஷயமாக அப்பா ஏதாவது சொன்னாரா" என்று அவன் கேட்டுக்கொண்டு வந்தான். ஆனால் முதல்நாள் சொன்ன செய்திக்குப் பிறகு பொன்னம்மாள் புதியசெய்தி எதுவும் கொண்டு வரவில்லை. "உங்கள் ஊருக்குப் பத்திரிகை வருவதில்லையா" என்று ஒருநாள் குமாரலிங்கம் கேட்டதற்கு பொன்னம்மாள் "வராமல் என்ன எங்கள் வீட்டுக்கே பத்திரிகை வந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் மகாத்மா காந்தி சொல்லிவிட்டார் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நிறுத்தி விட்டார்களாமே அதற்கப்புறந்தான் வருகிறதில்லை" என்றாள். "புரட்சித் திட்டத்தில் மற்றதெல்லாம் சரிதான் ஆனால் பத்திரிகை நிறுத்துகிற காரியம் மட்டும் சுத்தப் பிசகு" என்று குமாரலிங்கம் தன் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

குமாரலிங்கம் சோலைமலைக் கோட்டைக்கு வந்து ஒளிந்துகொண்டு பத்துநாளைக்குப் பிறகு சோலைமலைக் கிராமத்தில் ஓர் அதிசய சம்பவம் நடந்தது. அதைப் பார்த்து அந்தக் கிராமவாசிகள் எல்லாரும் திடுக்கிட்டுத் திகைத்துப் போனார்கள். கதைகளிலே அடிக்கடி எழுதுகிறார்களே அதைப்போல அவர்களால் தங்களுடைய கண்களையே நம்ப முடியவில்லை. அந்தச் சம்பவம் என்னவென்றால் காந்திக்குல்லா தரித்த இரண்டு காங்கிரஸ்காரர்கள் பகிரங்கமாகவும் தைரியமாகவும் அந்தக் கிராமத்துக்குள்ளே பிரவேசம் செய்ததுதான். காந்திக்குல்லா மட்டுந்தானா அவர்கள் தரித்திருந்தார்கள் பம்பாய்க்காரர்களைப் போல் கதர்க் கால்சட்டையும் கதர் ஜிப்பாவும் அணிந்திருந்தார்கள். கதர் ஜிப்பாவின் பேரில் ஜவாஹர் வெயிஸ்ட்கோட்டுப் போட்டிருந்தார்கள். வெயிஸ்ட் கோட்டில் ஒரு சின்னஞ் சிறு மூவர்ண தேசியக்கொடி தைக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் கையிலேயும் பெரிய மூவர்ண தேசியக்கொடி ஒன்று கொண்டு வந்திருந்தார்கள். அதைக் கிராமச்சாவடிக்கு எதிரிலேஇருந்த பிரம்மாண்டமான இலுப்ப மரத்தின் உச்சியில் கட்டிப் பறக்கவிட்டார்.

கொடி பறக்கத் தொடங்கியதும் இரண்டு பேருமாக மாற்றி மாற்றி "வந்தே மாதரம்" "பாரத மாதாவுக்கு ஜே" "புரட்சி வாழ்க" முதலிய கோஷங்களைக் கிளப்பினார்கள். இதையெல்லாம் பார்த்துச் சோலைமலைக் கிராமவாசிகள் ஒரேயடியாக ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். காங்கிரஸ் கலகத்தை வெள்ளைக்காரச் சர்க்கார் அடியோடு அடக்கிவிட்டார்கள் என்றும் சிறையில் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்றும் கலகம் நடந்த ஊர்களில் புகுந்து ஒன்றும் அறியாத ஜனங்களைக் கூட அடித்து இம்சிக்கிறார்கள் என்றும் போலீஸாரிடம் அகப்படாமல் கலகம் செய்த காங்கிரஸ்காரர்கள் பலர் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இம்மாதிரியான செய்திகளையே இதுவரையில் அந்தக் கிராமத்து ஜனங்கள் கேள்விப் பட்டிருந்தார்கள். அப்படியிருக்கும் போது இரண்டு கதர்க் குல்லாக்காரர்கள் திடீரென்று எங்கிருந்தோ வந்து பட்டப்பகலில் பகிரங்கமாகக் கதர்க்கொடியை உயர்த்திக் கோஷங்களைக் கிளப்பி கூப்பாடு போட்டதும் கிராமவாசிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்தக் காந்திக்குல்லாக்காரர்களின் அருகில் நெருங்கவே முதலில் கிராமத்தார் தயங்கினார்கள்அவரவர்கள் தத்தம் வீட்டுவாசலிலிருந்தே பயத்துடன் அவர்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கதர்க்குல்லா ஆசாமிகள் அவர்களை விடுகிற வழியாயில்லை. கிராமத்துக்குள்ளே அவர்கள் வந்து "மணியக்காரர் வீடு எது" என்று விசாரித்ததும் கிராமத்தாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. காந்தி குல்லாக்காரர்களின் அருகில் நெருங்கி அவர்கள் யார் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பதிலாகக் காந்திக் குல்லாக்காரர்கள் சொன்ன சமாசாரம் அவர்களை ஒரேயடியாக பிரமிக்கச் செய்துவிட்டது. வெள்ளைக்காரச் சர்க்கார் தோற்றுப் போய்க் காங்கிரஸிடம் இராஜ்யத்தை ஒப்புவித்து விட்டார்கள் என்றும் அந்த ஜில்லாவுக்கு மேலதிகாரிகளாகத் தங்களைக் காங்கிரஸ் நியமித்திருக்கிறதென்றும் கலெக்டர்கள் தாசில்தார்கள் எல்லாரும் இனிமேல் தங்கள் கட்டளைப்படிதான் நடக்க வேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். இதையெல்லாம் அதிசயத்தோடு கேட்டுக் கொண்டே ஜனக் கூட்டம் காந்திக் குல்லாக்காரர்களைப் பின் தொடர்ந்து சென்று மணியக்காரரின் வீட்டு வாசலை அடைந்தது.

அப்போதுதான் கரும்புத் தோட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த மணியக்காரரும் முதலில் சிறிது திகைத்துப் போனார். என்ன ஏது என்று விசாரித்தார். விஷயத்தைக் கேட்டதும் அவருக்கு நம்பிக்கைப் படவில்லை. "சரிதான் என்னிடம் எதற்காக வந்தீர்கள் ஏதாவது காரியம் உண்டா" என்று கொஞ்சம் அலட்சியமாகவே கேட்டார். "காரியம் இருக்கிறது. இல்லாமலா உங்களிடம் வருவோம். 'சுயராஜ்யம் வந்துவிட்டது. இனிமேல் காங்கிரஸ் சர்க்கார்தான் அரசாங்கம் நடத்துவார்கள்' என்பதாகச் சுற்று வட்டாரத்துக் கிராமங்களிலெல்லாம் தண்டோராப் போடவேண்டும். தலையாரியை உடனே கூப்பிட்டு விடுங்கள்" என்று வந்தவர்களில் ஒருவர் சொன்னார். மணியக்காரர் தமது அவநம்பிக்கை நன்கு வெளிப்படும்படியாக "அதெல்லாம் என்னால் முடியாது. மேலாவிலிருந்து எனக்குத் தகவல் ஒன்றும் வரவில்லை" என்றார். அதைக் கேட்ட கதர்க்குல்லாக்காரர்கள் சிரித்தார்கள்.

"இப்போது இப்படித்தான் சொல்வீர் சற்று நேரம் போனால் வேறு பாடம் படிப்பீர்" என்றார் அவர்களில் ஒருவர். இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையிலே இரண்டு போலீஸ் ஜவான்கள் அங்கு வந்து நின்று மேற்படி காந்திக் குல்லாக்காரர்களுக்கு ஸலாம் வைத்தார்கள். "எஜமான் கலெக்டர் கடிதம் கொடுத்திருக்கிறார்" என்றார் ஜவான்களில் ஒருவர். அதை வாங்கிக் கொண்டு கதர்க்குல்லாக்காரர் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு "சரி நீங்கள் போகலாம்" என்றதும் போலீஸ் ஜவான்கள் மறுபடியும் ஒரு பெரிய ஸலாம் வைத்துவிட்டுப் போனார்கள். இதைப் பார்த்த பிறகு சோலைமலைக் கிராம ஜனங்களுக்கும் மணியக்காரருக்குங்கூட நம்பிக்கை பிறந்துவிட்டது. "அதற்கென்ன தண்டோ ரா போடச் சொன்னால் போகிறது" என்றார் மணியக்காரர்.

"உடனே தலையாரியைக் கூப்பிட்டு அனுப்புங்கள். தண்டோ ரா போடும்போது இன்னொரு விஷயமும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புரட்சி வீரர் குமாரலிங்கத் தேவர் இந்தப் பக்கத்துக் காடுகளில் எங்கேயோ மறைந்திருப்பதாகத் தெரிகிறது. அவரை உடனே கண்டு பிடித்துப் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கும்படி தலைவர் ஜவஹர்லால் நேருவிடமிருந்து கட்டளை வந்திருக்கிறது. குமாரலிங்கத்தேவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லுகிறவர்களுக்கு ஆயிரம்ரூபாய் காங்கிரஸ் சர்க்கார் இனாம் கொடுப்பார்கள் என்பதையும் சேர்த்துத் தண்டோரா போடச் செய்ய வேண்டும்" என்று ஒரு காந்திக் குல்லாக்காரர் சொன்னார்.

வாசல் திண்ணையில் நடந்த இந்தப் பேச்சையெல்லாம் வீட்டு நடையில் கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த பொன்னம்மாளுக்கு அப்போது எப்படியிருந்திருக்கும் என்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். உடனே வாசற்புறம் ஓடிப்போய்க் குமாரலிங்கத் தேவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிடலாமா என்று அவள் உள்ளம் துடிதுடித்தது. ஆனால் பெண்மைக்குரிய அடக்கமும் பெரிய குலத்துக்கு உரிய பண்பும் அவ்விதம் செய்ய முடியாமல் அவளைத் தடை செய்தன. பொன்னம்மாளின் தந்தை சிறிது நேரத்துக்கெல்லாம் வீட்டுக்குள்ளே வந்தார். பொன்னம்மாளும் விரைந்து உள்ளே போய் வீட்டுக் கூடத்தின் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

"பார்த்தாயா பொன்னம்மா கடைசியில் நான் சொன்னபடிதான் ஆச்சு அந்த வெள்ளக்காரப் பய மவனுகள் கடைசியில் காங்கிரஸ்காரன் காலிலே விழுந்துட்டானுக மொத்தத்திலே மானம் ரோசம் இல்லாதவனுங்க நான் மட்டும் இங்கிலீஷ்காரனாயிருந்தால் என்ன ஆனாலும் ஆவட்டும் என்று கடைசிவரைக்கும் ஒருகை பார்த்திருப்பேன் ஜப்பான்காரன் கையிலாவது ராச்சியத்தைக் கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பேனே தவிர காங்கிரஸ்காரன் கையிலே கொடுத்திருக்க மாட்டேன் அது போனால் போவட்டும் இங்கிலீஷ்காரன் கொடுத்து வைச்சது அம்மட்டுந்தான் நாம் என்னத்துக்கு அதைப்பத்திக் கவலைப்பட வேணும் காங்கிரஸ் ராச்சியந்தான் இனிமேல் என்று ஏற்பட்டுப் போச்சு நாளைக்கு ஒரு கண்டிராக்டோ கிண்டிராக்டோ எல்லாம் இவங்களிடத்திலேதான் கேட்டு வாங்கும்படியிருக்கும். வந்திருக்கிறவங்க இரண்டு பேரும் ரொம்பப் பெரிய மனுஷங்க என்று தோணுது. நல்ல விருந்து செய்து அனுப்ப வேண்டும். உன் சின்னாயிகிட்டச் சொல்லு; இல்லாட்டி சின்னாயியை இங்கே கூப்பிடு; நானே சொல்லிடறேன்" என்று மணியக்காரர் மூச்சு விடாமல் பொழிந்து தள்ளினார். வாசல் திண்ணையிலே உட்கார்ந்திருந்த மேற்படி காந்திக் குல்லாக்காரர்களின் காதிலே விழப் போகிறதே என்று கூட மணியக்காரர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஏற்கனவே உணர்ச்சி மிகுதியால் உள்ளம் தத்தளித்துக் கொண்டிருந்த பொன்னம்மாளோ மணியக்காரர் பேசும் போது நடுவில் ஒரு வார்த்தைகூடப் பேச முடியாதவளாய் திறந்தவாய் மூடாமல் அடங்கா ஆவலுடன் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்றாள். அவர் கடைசியில் சொன்னபடி சின்னாயியைக் கூப்பிடக்கூட அவளுக்கு நா எழவில்லை. நல்ல வேளையாகப் பொன்னம்மாளின் சின்னாயி அதாவது மணியக்காரரின் இரண்டாவது மனைவி தானாகவே அப்போது அங்கு வந்துவிட்டாள். மறுபடியும் ஒரு தடவை அவளிடம் மணியக்காரர் பாடம் ஒப்புவித்துவிட்டு "ஆகையால் இன்றைக்குத் தடபுடலாக விருந்து செய்ய வேணும். இலை நிறையப் பதார்த்தம் படைக்க வேணும். தாயும் மகளுமாய்ச் சேர்ந்து உங்கள் கைவரிசையைச் சீக்கிரமாகக் காட்டுங்கள் பார்க்கலாம்" என்றார். பிறகு வாசற்பக்கம் சென்றார்.

பொன்னம்மாளின் சின்னம்மாள் அவ்விதமே சமையல் வேலை தொடங்கினாள். ஆனால் பொன்னம்மாளோ "ஆயா ஊருணியில் போய்க் குளித்துவிட்டு இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி வீட்டின் கொல்லை வாசற்படி வழியாகச் சிட்டாய்ப் பறந்து சென்றாள். அவ்வளவு விரைவாக அவள் எங்கே போனாள் என்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லையல்லவா போகும்போது பொன்னம்மாள் பூமியில் கால் வைத்தே நடக்கவில்லை; காற்று வெளியிலே மிதந்து கொண்டுதான் சென்றாள். கடைசியில் அவள் நினைத்தபடியே நடந்து விட்டதல்லவா குமாரலிங்கத்துக்கு விடுதலையும் பெரிய பதவியும் வந்துவிட்டன என்னும் எண்ணம் அவளுக்கு எல்லையில்லாக் குதூகலத்தை அளித்தது. இதோடு அவரை அந்தக் கோட்டையை விட்டுப் போகாமல் அங்கேயே இருக்கும்படி தான் வற்புறுத்தியது எவ்வளவு சரியான காரியமாய்ப் போயிற்று என்று நினைவு தோன்றி அவள் மனத்தில் பெருமிதத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணியது.

ஆனால் இந்த உற்சாகம் குதூகலம் எல்லாம் சோலைமலைக் கோட்டைக்கு வந்து சேரும் வரையிலே தான் இருந்தன. கோட்டையில் கால் வைத்தவுடனேயே அவளுடைய உள்ளத்தில் ஒரு சோர்வு உண்டாயிற்று. 'நாளைக்கு இந்நேரம் குமாரலிங்கத் தேவர் இவ்விடத்தில் இருக்க மாட்டார்' என்ற எண்ணம் அவளுக்குச் சொல்ல முடியாத மனவேதனையை உண்டாக்கிற்று. ஆனால் குமாரலிங்கமோ பொன்னம்மாளைச் சற்றுத் தூரத்தில் பார்த்ததுமே "வா பொன்னம்மா வா இன்றைக்கு ஏது இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய் வந்தது என்னமோ நல்லதுதான் வா" என்று உற்சாகமான குரலில் வரவேற்றான். பொன்னம்மாள் சற்று அருகிலே வந்ததும் "என்ன கையிலே ஒன்றையும் காணோம் பலகாரம் கிலகாரம் ஒன்றுமில்லையா போனால் போகட்டும் ஒரு வேளை சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும் அதற்காக முகத்தை இப்படி ஏன் வைத்துக் கொள்ள வேண்டும் - இங்கே வந்து உட்கார்ந்து கொள். பொன்னம்மா இன்றைக்கு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். என் வாழ்க்கையில் மட்டும் என்ன நம் இருவர் வாழ்க்கையிலும் இன்று மிக முக்கியமான தினம்" என்றான்.

பொன்னம்மாளின் முகம் அளவில்லாத அதிசயத்தைக் காட்டியது. "உனக்கு எப்படித் தெரிந்தது" என்று தடுமாற்றத்துடன் கேட்டாள். "பின்னே எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும் பாட்டு இட்டுக் கட்டியது நான் தானே" என்றான் குமாரலிங்கம். "பாட்டா என்ன பாட்டு" என்று பொன்னம்மாள் வியப்பும் குழப்பமும் கலந்த குரலில் கேட்டாள். "இங்கே வந்து என் பக்கத்தில் சற்று உட்கார்ந்து கொள்; சொல்லுகிறேன். என் பாட்டனாருக்குப் பாட்டனார் பெரிய கவிராயர் தெரியுமா பொன்னம்மா சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துக்குப் போட்டியாக அவர் சாவடிச் சிந்து பாடினாராம். தேசத்தின் அதிர்ஷ்டக் குறைவினால் அந்தச் சாவடிச் சிந்து எழுதியிருந்த ஓலைச் சுவடியைக் கடல் கொண்டு போய்விட்டதாம். அந்தக் கவிராயருடைய வம்சத்தில் பிறந்த என்னுடைய உடம்பிலும் கவியின் இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் இருந்துவிட்டு திடீரென்று அன்றைக்கு உன்னைப் பார்த்தவுடன்தான் பீறிக் கொண்டு வெளிவந்தது உன்னைப் பற்றி அன்றைக்கு ஒரு கவியில் இரண்டு இரண்டு வரியாகப் பாடிக்கொண்டு வந்து இன்றைக்குக் காலையிலேதான் பாட்டைப் பூர்த்தி செய்தேன். கவிதை ரொம்ப அற்புதமாய் அமைந்திருக்கிறது. பாடப்பாட எனக்கே அதில் புதிய புதிய நயங்கள் வெளியாகி வருகின்றன நின்று கொண்டேயிருக்கிறாயே உட்கார்ந்து கொள் பொன்னம்மா பாட்டைக்கேள்" என்றான் குமாரலிங்கம்.

'இன்றைக்கு என்ன எல்லோரும் இப்படி மூச்சு விடாமல் பேசுகிறார்கள்' என்று பொன்னம்மாள் மனத்தில் நினைத்துக் கொண்டாள்; பிறகு "பாட்டும் ஆச்சு கூத்தும் ஆச்சு எல்லாம் இன்றைக்கு ஒருநாள் வாழ்வு தானே நாளைக்கு இந்நேரம் நீ எங்கேயோ நான் எங்கேயோ எனக்கு உட்கார நேரமில்லை. வீட்டில் பெரிய விருந்து நடக்கப் போகிறது. சின்னாயிக்கு நான் ஒத்தாசை செய்ய வேண்டும்" என்றாள் பொன்னம்மாள். அப்போதுதான் குமாரலிங்கம் பொன்னம்மாளைக் கவனித்துப் பார்த்தான். அவளுடைய மனத்தில் ஏதோ பெரிய சமாசாரத்தை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் அதை அவள் சொல்லமுடியாதபடி ஏதோ தான் பிதற்றிக் கொண்டிருப்பதும் அவனுக்கு உடனே தெரிய வந்தன. "பொன்னம்மா என்ன சமாசாரம் வீட்டிலே என்ன விசேஷம் எதற்காக விருந்து நாளைக்கு நீ எங்கே போகப் போகிறாய்" என்று திடுக்கிட்ட குரலில் கேட்டான். பொன்னம்மாளின் கல்யாணம் சம்பந்தமாக யாராவது வந்திருக்கிறார்களோ அதற்காகத்தான் விருந்தோ என்னும் விபரீதமான சந்தேகம் ஒரு நொடிப் பொழுதில் தோன்றி அவன் மனத்தை அலைத்தது.

"நான் எங்கேயும் போகவில்லை. நீதான் போகப் போகிறாய். கடிதாசி உனக்குத்தான் வந்திருக்கு; ஜவஹர்லால் நேரு போட்டிருக்காரு" என்று பொன்னம்மாள் சொன்னாளோ இல்லையோ அதுவரையில் உட்கார்ந்திருந்தபடியே பேசிக்கொண்டிருந்த குமாரலிங்கம் துள்ளி குதித்து எழுந்தான். "பொன்னம்மா என்ன சொன்னாய் நன்றாய்ச் சொல்லு கடிதாசு வந்திருக்கா ஜவஹர்லால் நேரு போட்டிருக்காரா சரியாச் சொல்லு" என்று பொன்னம்மாளின் இருகரங்களையும் பற்றிக் கொண்டு மிக்க பரபரப்போடு கேட்டான். "கையை விடு சொல்லுகிறேன்" என்றாள் பொன்னம்மாள். பிறகு கதர்க்குல்லா தரித்த இரண்டு ஆட்கள் வந்திருப்பது பற்றியும் அவர்கள் தண்டோராப் போடச் சொன்னது பற்றியும் விவரமாகக் கூறினாள். "அவர்கள் சொன்னதை எங்க அப்பாகூட முதலில் நம்பவில்லை. ஆனால் இரண்டு போலீஸ் ஜவான்கள் வந்து கதர்க்குல்லாக்காரர்களுக்கு ஸலாம் போட்ட பிறகு அவர்கள் பேச்சை நம்பாமல் வேறு என்ன செய்வது அவர்களுக்கு வீட்டில் விருந்து வைக்கத் தடபுடலாக ஏற்பாடு நடக்கிறது" என்றாள். குமாரலிங்கத்துக்கு அச்சமயம் பழைய காலேஜ் நாட்களின் வாசனை எப்படியோ வந்து சேர்ந்தது. மேல் துணியை எடுத்து ஆகாசத்தில் வீசி எறிந்து "ஹிப் ஹிப் ஹ¤ர்ரே' என்று சத்தமிட்டான். பிறகு இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வந்திருப்பதைக் கேவலம் அப்படி ஒரு இங்கிலீஷ் கோஷத்தினால் கொண்டாடியது பற்றி வெட்கப் பட்டவனாய்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று​
என்னும் பாரதியார் பாடலைப் பாடி அந்த மகத்தான சம்பவத்தைக் கொண்டாடினான். மேற்படி பாரதியார் பாடல் வரிகளைத்தான் எத்தனை நூறு தடவை அவன் ஏற்கனவே பாடியிருக்கிரான் எத்தனை ஆயிரம் தடவை பிறர் பாடக் கேட்டிருக்கிறான் அப்போதெல்லாம் ஏதோ வெறும் வார்த்தைகளாயிருந்த பாட்டு இப்போது பொருள் ததும்பி விளங்கிற்று. உண்மையாகவே பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு; பங்கு கேட்பதற்குத் தனக்கு உரிமை உண்டு; சென்ற ஒருமாத காலத்திற்குள் தேசத்தின் சுதந்திரத்துக்காகத் தான் செய்திருக்கும் தொண்டானது மேற்படி உரிமையைத் தனக்கு அளித்திருக்கிறது. ஆகா வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறது தேசத்துக்கு எப்படியோ அப்படியே தனக்குந்தான்

குமாரலிங்கம் வருங்காலச் சுதந்திர வாழ்க்கையைப் பற்றி ஆனந்தக் கனவு கண்டுகொண்டிருந்த அந்தச் சில நிமிஷங்களில் பொன்னம்மாள் தன்னுடைய ஆகாசக் கோட்டையெல்லாம் தகர்ந்து துகள் துகளாகப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தாள். தன்னைச் சோலைமலை இளவரசியென்றும் குமாரலிங்கத்தை மாறனேந்தல் மகாராஜா என்றும் அவள் கற்பனை செய்து மகிழ்ந்ததெல்லாம் மாயக் கனவாகவே போய்விட்டது குமாரலிங்கம் இனி ஒரு கணமும் இங்கே தங்கப் போவதில்லை; இவ்விடத்தை விட்டுப் போனபிறகு இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கவனிக்கப் போவதுமில்லை 'சீ' இது என்ன வீண் ஆசை இந்த மாய வலையில் நாம் ஏன் சிக்கினோம் ' என்ற வைராக்கிய உணர்ச்சி அவளுக்கு அப்போது ஏற்பட்டது. வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் சின்னாயி தன்னைத் திட்டப் போகிறாளே என்பதும் நினைவு வந்தது. ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு "சரி நான் போய் வாரேன்" என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
15. கைமேலே பலன்

இத்தனை நேரமும் கனவு லோகத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருந்த குமாரலிங்கம் பொன்னம்மாள் "போய் வாரேன்" என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டதும் இவ்வுலகத்துக்குத் திடும் என்று வந்தான். "போகிறாயா எங்கே போகிறாய்" என்று கேட்டுக் கொண்டே பொன்னம்மாளின் கரங்களைப் பிடித்துக் கீழே விழுந்து கிடந்த பழைய அரண்மனைத் தூண் ஒன்றின் பேரில் அவளை உட்கார வைத்தான். "நான் சீக்கிரம் போகாவிட்டால் சின்னாயி என்னை வெட்டி அடுப்பிலே வைத்துவிடுவாள் அந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் உனக்காகக் காத்துக் கொண் டிருக்கிறார்கள். உன் பெயரைச் சொல்லி ஊரெல்லாம் தமுக்கு அடித்துத் தண்டோராப் போடுவானேன் நீயே போய் ஆஜராகிவிடு அதோ கிராமச்சாவடியும் இலுப்பமரமும் தெரிகிறதல்லவா அங்கேதான் எங்கள்வீடு இருக்கிறது நான் ஊருணியில் குளித்துவிட்டுச் சற்று நேரம் சென்ற பிறகு வருகிறேன்" என்றாள் பொன்னம்மாள். "அதெல்லாம் ரொம்ப சரி; அப்படியே செய்யலாம். ஆனால் என்னுடைய பாட்டை மட்டும் இப்போதே நீ கேட்டுவிட வேண்டும். கேட்டுவிட்டு உடனே போய் விடலாம்" என்றான் குமாரலிங்கம்."சரி படிக்கிற பாட்டைச் சீக்கிரம் படி" என்றாள் பொன்னம்மாள். குமாரலிங்கம் அவ்விதமே தான் கவனம் செய்திருந்த பாட்டைப் பாடிக் காட்ட ஆரம்பித்தான்.
பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள் - அவள் பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்
சொன்னதைச் சொல்லும் கிளியினைப் போல் - என்றும் சொன்னதையே அவள் சொல்லிடுவாள்
மன்னர் குலம் தந்த கன்னியவள் - இந்த மாநிலத்தில் நிகர் இல்லாதவள்
அன்னம் அவள் நடை அழகு கண்டால் - அது அக்கணமே தலை கவிழ்ந்திடுமே
பாடும் குயில் அவள் குரல் கேட்டால் - அது பாட்டை மறந்து பறந்திடுமே
மாடும் மரங்களும் அவளுடைய - உயர் மாட்சிமைக்கு வலம் வந்திடுமே
கூந்தல் முடிப்பிலே சொகு கடையாள் - விழிக் கோணத்திலே குறுநகையுடையாள் - அவள்
மாந்தளிர் மேனியைக் கண்டவர்கள் - அந்த மாமரம் போலவே நின்றிடுவர்
கற்பக மலர்களோ அவள் கரங்கள் - அந்தக் கண்களில்தான் என்ன மந்திரமோ
அற்புதமோ ஒரு சொப்பனமோ - இங்கு ஆர் அறிவார் அவள் நீர்மை யெல்லாம்
பொன்னம்மாள் மிகப் பொல்லாதவள் - அவள் பொய்சொல்லக் கொஞ்சமும் அஞ்சாதவள்
அன்னம் படைக்கவே வந்திடுவாள் - எனில் அமுது படைத்து மகிழ்ந்திடுவாள்
ஆனதால் என் அருந் தோழர்களே - நீங்கள் அவளை மணந்திட வந்திடாதீர்...​

இத்தனை நேரம்வரை மேற்படி பாடலை முரண்பட்ட உணர்ச்சிகளோடு கேட்டு வந்தாள் பொன்னம்மாள். பாட்டிலே இருப்பது பாராட்டா பரிகாசமா என்று அவளுக்கு நன்றாய்த் தெரியவில்லை. ஒரு சமயம் புகழ்வது போலிருந்தது; இன்னொரு சமயம் கேலி செய்வது போலவும் இருந்தது. ஆனால் கடைசி வரிகள் இரண்டையும் கேட்டதும் பாட்டு முழுவதும் பரிகாசந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டுக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. "சே போ போதும். உன் பாட்டு நிறுத்திக் கொள் எவன் என்னைக் கண்ணாலம் செய்து கொள்ள வரப்போகிறான் என்று நான் காத்துக் கிடக்கிறேனாக்கும்" என்று சீறினாள் பொன்னம்மாள். "பொன்னம்மா இன்னும் இரண்டே இரண்டு வரிதான் பாட்டில் பாக்கி இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா வேண்டாமா அதற்குள் கோபித்துக் கொண்டுவிட்டாயே" என்றான் குமாரலிங்கம். "சரி அதையுந்தான் சொல்லிவிடு" என்று பதில் வந்தது.குமாரலிங்கம் முதல் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பாட்டைச் சொல்லி முடித்தான்:
ஆனதால் என் அரும் தோழர்களே - நீங்கள் அவளை மணந்திட வந்திடாதீர்
ஏனென்று கேளுங்கள் இயம்பிடுவேன் - இங்கு யானே அவளை மணந்து கொண்டேன்​

கடைசி இரண்டு வரிகளைக் கேட்டதும் பொன்னம்மாள் தன்னையறியாமல் கலீர் என்று நகைத்தாள். உடனே வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் திரும்பவும் குமாரலிங்கத்தை ஏறிட்டு நோக்கி "மாறனேந்தல் மகாராஜாவாயிருந்தால் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னா என்று பாடுவாரா ஒரு நாளும் மாட்டார்" என்றாள். பல தடங்கல்களுக்கும் தயக்கங்களுக்கும் பிறகு பொன்னம்மாள் குமாரலிங்கத்திடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்து சென்ற போது மிக்க குதூகலத்துடனேயே சென்றாள். அந்தப் பாழடைந்த கோட்டையில் காலடி வைத்தவுடனே அவளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் பயங்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றபோது அவளை விட்டு நீங்கியிருந்தன. குமாரலிங்கத்தின் பாடலில் அவளுடைய ஞாபகத்தில் இருந்த சில வரிகளை வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே போனாள். ஊருணியில் போய்ச் சாவகாசமாகக் குளித்தாள். பின்னர் வீட்டை நோக்கிக் கிளம்பினாள். போகும்போது இத்தனை நேரம் குமாரலிங்கத் தேவர் தன் வீட்டுக்குப் போயிருப்பார்; அவரை இப்படி உபசரிப்பார்கள் அப்படி வரவேற்பார்கள் என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு சென்றாள். அவரைக் குதிரைச் சாரட்டில் வைத்து ஊர்வலம் விட்டாலும் விடுவார்கள். ரோஜாப்பூ மாலையும் செவந்தி மலர் மாலையும் பச்சை ஏலக்காய் மாலையும் அவருக்குப் போடுவார்கள். இன்று சாயங்காலம் இலுப்ப மரத்தடியில் மீட்டிங்கி நடந்தாலும் நடக்கும் என்று சிந்தனை செய்து கொண்டு உல்லாசமாக நடந்து சென்றாள்.

ஆனால் சிறிது தூரம் நடந்ததும் அவளுடைய உல்லாசம் குறைவதற்கு முகாந்தரம் ஏற்பட்டது. அவளுடைய தந்தை வேட்டை நாய் சகிதமாகச் சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டதும் அவளுக்குச் சொரேல் என்றது. வீட்டில் விருந்தாளிகளை வைத்துவிட்டு இவர் எங்கே கிளம்பிப் போகிறார் ஒரு வேளை தன்னைத் தேடிக்கொண்டுதானோ சின்னாயி கோள் சொல்லிக் கொடுத்துவிட்டாளோ நடையின் வேகத்தைப் பார்த்தால் மிக்க கோபமாய்ப் போகிறதாகத் தென்படுகிறதே அப்பாவின் கண்ணில் படாமல் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றுவிட்டு அவர் போனதும் விரைவாக வீட்டை நோக்கிச் சென்றாள். அவர் வீடு வந்து சேருவதற்குள் தான் போய்ச் சேர்ந்து நல்ல பெண்ணைப் போல் சமையல் வேலையில் ஈடுபட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு நடந்தாள். ஊருணியிலிருந்து அவளுடைய வீடு இருந்த வீதிக்குச் சென்று குறுக்குச் சந்தில் திரும்பியதும் படமெடுத்து ஆடும் பாம்பைத் திடீரென்று எதிரில் கண்டவளைப்போல் பயங்கரமும் திகைப்பும் அடைந்து நின்றாள். ஐயோ இது என்ன இவ்வளவு போலீஸ் ஜவான்கள் எதற்காக வந்தார்கள் அவர்களுக்கு மத்தியிலே இருப்பவர் யார் குமாரலிங்கம் போலிருக்கிறதே ஐயோ இது என்ன அவர் இரண்டு கையையும் சேர்த்து - கடவுளே விலங்கல்லவா போட்டிருக்கிறது இதெல்லாம் உண்மைதானா நாம் பார்க்கும் காட்சி நிஜமான காட்சிதானா அல்லது ஒரு கொடூரமான துயரக் கனவு காண்கிறோமா அந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் எங்கே ஆஹா அவர்கள் இப்போது வேறு உருவத்தில் சிவப்புத் தலைப் பாகையுடன் தோன்றுகிறார்களே ஆம் அதோ பின்னால் பேசிச் சிரித்துக் கொண்டு வருகிறவர்கள் அவர்கள் தான் சந்தேகமில்லை.

திகைத்து ஸ்தம்பித்து முன்னால் போவதா பின்னால் போவதா என்று தெரியாமல் கண்ணால் காண்பதை நம்புவதா இல்லையா என்றும் நிச்சயிக்க முடியாமல் - பொன்னம்மாள் அப்படியே நின்றாள். போலீஸ் ஜவான்களின் பேச்சில் சில வார்த்தைகள் காதிலே விழுந்தன. "எவ்வளவு ஜோராய் மாப்பிள்ளை மாதிரி நேரே வந்து சேர்ந்தான் வந்ததுமில்லாமல் 'நான் தான் புரட்சித் தொண்டன் குமாரலிங்கம் நீங்கள் எங்கே வந்தீர்கள் ' என்று கேட்டானே என்ன தைரியம் பார்த்தீர்களா" என்றார் ஒரு போலீஸ்காரர். "அந்தத் தைரியத்துக்குத்தான் கைமேல் உடனே பலன் கிடைத்து விட்டதே" என்று சொன்னார் இன்னொரு போலீஸ்காரர். குமாரலிங்கத்தின் கையில் பூட்டியிருந்த விலங்கைத் தான் அவர் அப்படிக் 'கைமேல் பலன்' என்று சிலேடையாகச் சொல்கிறார் என்று தெரிந்து கொண்டு மற்றவர்கள் 'குபீர்' என்று சிரித்தார்கள். அந்தச் சிரிப்புச் சத்தத்தினிடையே 'வீல்' என்ற ஒரு சத்தம் - இதயத்தின் அடிவாரத்திலிருந்து உடம்பின் மேலுள்ள ரோமக் கால்கள் வரையில் குலுங்கச் செய்த சொல்லமுடியாத சோகமும் பீதியும் அடங்கிய சத்தம் - கேட்டது. போலீஸ் ஜாவன்களின் பரிகாசப் பேச்சைக் கேட்டுக்கொண்டு தலை குனிந்த வண்ணம் நடந்து வந்த தொண்டன் குமாரலிங்கத்தின் காதிலும் மேற்படி சத்தம் விழுந்தது. சத்தம் வந்த திசையை நோக்கி அவன் ஏறிட்டுப் பார்த்தான். பொன்னம்மாளின் முகம் - ஏமாற்றம் துயரம் பீதி பச்சாதாபம் ஆகிய உணர்ச்சிகள் ஒன்றோடொன்று போட்டியிட்ட முகம் - மின்னல் மின்னுகின்ற நேரத்துக்கு அவன் கண் முன்னால் தெரிந்தது. அடுத்த விநாடி பொன்னம்மாள் தான் வந்த பக்கமே திரும்பினாள். அந்தக் குறுக்குச் சந்தின் வழியாக அலறிக் கொண்டு ஓடினாள்.
DD>போலீஸ் ஜவான்களின் ஒருவர் "பார்த்தீங்களா ஐயா சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்துப் பயப்படுகின்றவர்கள் இந்த உலகத்தில் இன்னும் சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த வீராதி வீரன் இருக்கிறானே இவன் மட்டும் போலீஸ¤க்குப் பயப்பட மாட்டான்; துப்பாக்கி தூக்குத் தண்டனை ஒன்றுக்கும் பயப்பட மாட்டான் எதற்கும் பயப்பட மாட்டான்" என்று சொல்லிக் கொண்டே குமாரலிங்கத்தின் கழுத்திலே கையை வைத்து ஒரு தள்ளுந் தள்ளினார். பொன்னம்மா வீறிட்டுக் கதறிய சத்தம் குமாரலிங்கத்தின் காதில் விழுந்ததோ இல்லையோ அந்தக் கணத்திலேயே அவன் நூறு வருஷங்களுக்கு முன்னால் சென்று விட்டான். இதோ அவன் எதிரில் தெரிவது போன்ற ஒரு பிரம்மாண்டமான இலுப்ப மரந்தான் அது; ஆனால் இன்னும் செழிப்பாக வளர்ந்து நாலாபுறமும் கிளைகள் தழைத்துப் படர்ந்திருந்தன. சோலைமலைக் கோட்டை வாசலுக்கு எதிரே கூப்பிடு தூரத்தில் அந்த மரம் நின்றது. மரத்தின் அடியில் இது போலவே மேடையும் இருந்தது. ஆனால் அந்த மரத்தின் கீழேயும் மரத்தின் அடிக்கிளையிலும் தோன்றிய காட்சிகள்... அம்மம்மா குமாரலிங்கம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடிக் கொண்டால் மட்டும் ஆவதென்ன அவனுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தக் காட்சிகள் தோன்றத்தான் செய்தன. இலுப்பமரத்தின் வயிரம் பாய்ந்த வலுவான அடிக்கிளையில் ஏழெட்டுக் கயிறுகள் ஒவ்வொன்றின் நுனியிலும் ஒரு சுருக்குப்போட்ட வளையத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன.

தொங்கிய வளையம் ஒவ்வொன்றின் அடியிலும் ஒவ்வொரு மனிதன் நின்று கொண்டிருந்தான். அப்படி நின்றவர்களைச் சூழ்ந்து பல சிப்பாய்கள் வட்டமிட்டு நின்றார்கள். மரத்தடி மேடையில் ஒரு வெள்ளைக்கார துரை 'ஜம்' என்று உட்கார்ந்திருந்தார். அவர் இரண்டு கையிலும் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. அவருடைய வெள்ளைமுகம் கோபவெறியினால் சிவப்பாக மாறியிருந்தது. மேடைக்கு அருகில் சோலைமலை மகாராஜா கீழே நின்று துரையிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. "அதெல்லாம் முடியாது; முடியவே முடியாது" என்று துரை மிக விறைப்பாகப் பதில் சொல்லுவது போலும் தெரிந்தது. மரக்கிளையில் தொங்கிய சுருக்குக் கயிறு ஒன்றின் கீழே மாறனேந்தல் உலகநாதத்தேவர் நின்று கொண்டிருந்தார். துரையிடம் சோலைமலை மகாராஜா ஏதோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தம்முடைய உயிரைத் தப்புவிப்பதற்காகத்தான் சோலைமலை மகாராஜா அப்படி மன்றாடுகிறாரோ என்ற சந்தேகம் இவர் மனத்தில் உதித்திருந்தது. அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கேட்டிருந்தும் அந்நிய நாட்டான் ஒருவனிடம் போய் எதற்காக உயிர்ப்பிச்சைக் கேட்க வேண்டும் அதிலும் வீரமறவர் குலத்தில் பிறந்தவர்களுக்கு அடுக்கக்கூடிய காரியமா அது சோலைமலை மகாராஜாவைக் கூப்பிட்டுச் சொல்லிவிடலாமா என்று உலகநாதத் தேவர் யோசித்துக் கொண்டிருந்த போது கோட்டைக்குள்ளே அரண்மனை அந்தப்புரத்தின் மேன்மாடம் தற்செயலாக அவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. மேன்மாடம் கவரவில்லை மேல் மாடத்திலே தோன்றிய ஒரு பெண்உருவந்தான் கவர்ந்தது. வெகு தூரத்திலிருந்தபடியால் உலகநாதத்தேவரின் கூரிய கண்களுக்குக்கூட அந்த உருவம் யாருடையது என்பது நன்றாய்த் தெரியவில்லை.

ஆனால் அவருடைய மனத்துக்கு அவள் இளவரசி மாணிக்கவல்லிதான் என்று தெரிந்து விட்டது. முதலில் இந்தக் கோரக் காட்சியைப் பார்ப்பதற்குச் சோலைமலை இளவரசி அந்தப்புரத்து மேன் மாடத்துக்கு வரவேண்டுமா என்று உலகநாதத் தேவர் எண்ணினார். பின்னர் தம்முடைய வாழ்நாளின் கடைசி நேரத்தில் இளவரசியைப் பார்க்க நேர்ந்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அடுத்த கணத்தில் "ஐயோ இந்த விவரமெல்லாம் அவளுக்குத் தெரியும்போது என்னமாய் மனந்துடிப்பாளோ" என்று எண்ணி வேதனையடைந்தார். எனினும் சோலைமலை மகாராஜா தம்மிடம் கொண்டிருந்த விரோதத்தை மாற்றிக் கொண்டது இளவரசிக்கு ஓரளவு ஆறுதல் அளிக்குமல்லவா என்ற எண்ணம் தோன்றியது. தாம் சொல்லி அனுப்பிய செய்தியை மாணிக்கவல்லியிடம் சோலைமலை மகாராஜா சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற கவலை தொடர்ந்து வந்தது. ஐயோ இதென்ன மாடி முகப்பின் மேல் நின்ற பெண் உருவம் வீல் என்று அலறும் சத்தத்துடனே கீழே விழுகிறதே கடவுளே சோலைமலை இளவரசி அல்லவா அந்தப்புரத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டாள் ஐயோ அவள் உயிர் பிழைப்பாளா சோலைமலை மகாராஜா துரையிடம் மன்றாடுவதை நிறுத்திவிட்டு "ஓ" என்று அலறிக் கொண்டு கோட்டை வாசலை நோக்கி ஓடினார். மாறனேந்தல் உலகநாதத் தேவரும் தம்முடைய நிலையை மறந்து கோட்டை வாசலை நோக்கித் தாமும் பறந்து ஓடினார். 'டும்' 'டும்' 'டுடும்' என்று துப்பாக்கி வேட்டுகள் தீர்ந்தன. போலீஸ் ஜவனால் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்ட தேசத் தொண்டன் குமாரலிங்கம் தரையிலே விழுந்து மூர்ச்சையானான்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
16. கயிறு தொங்கிற்று

இரவுக்கும் பகலுக்கும் அதிக வேற்றுமையில்லாமல் இருள் சூழ்ந்திருந்த எட்டடிச் சதுர அறையில் குமாரலிங்கம் தன்னந்தனியாக அடைக்கப்பட்டிருந்தான் இரவிலே இரும்புக் கதவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு கரியடைந்த ஹரிகேன் லாந்தர் மங்கிய சோகமான ஒளியைத் தயக்கத்துடன் வெளியிட்டுக் கொண்டிருந்தது. பகலில் அவன் அடைபட்டிருந்த அறையின் பின்புறச் சுவரில் இரண்டு ஆள்உயரத்தில் இருந்தசிறு ஜன்னல் துவாரம் வழியாக மங்கிய வெளிச்சம் வரலாமோ வரக்கூடாதோ என்று தயங்கித் தயங்கி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. குமாரலிங்கத்தின் உள்ளத்தின் நிலைமையும் ஏறக்குறைய வெளிப்புற நிலைமையை ஒத்திருந்தது. குழப்ப இருள்சூழ்ந்து எதைப்பற்றியும் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலையை அவன் மனம் அடைந்திருந்தது. பார்த்தவர்கள் அவனுக்குச் 'சித்தப் பிரமை' பிடித்திருக்கிறது என்று சொல்லும்படி தோன்றினான். ஆனாலும் இருள் சூழ்ந்த அவனுடைய உள்ளத்தில் சிற்சில சமயம் அறிவின் ஒளி இலேசாகத் தோன்றிச் சிந்திக்கும் சக்தியும் ஏற்பட்டது. அத்தகைய சமயங்களில் ஆகா அவனுடைய மனத்தில் என்னவெல்லாம் எண்ணங்கள் குமுறி அலைமோதிக் கொண்டு பாய்ந்தன

சோலைமலைக் கிராமத்தில் ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் காந்திக் குல்லாக் கதர்வேஷம் தரித்த போலீஸாரால் கைது செய்யப்பட்டதிலிருந்து அவன் கண்டும் கேட்டும் அநுபவித்தும் அறிந்த பயங்கரக் கொடுமை நிறைந்த சம்பவங்கள் அதற்கு முன்னால் சோலைமலைக் கோட்டையில் கழித்த ஆனந்தமான பத்துப் பன்னிரண்டு தினங்கள் அதற்கு முந்தித் தளவாய்க் கோட்டையில் ஒருநாள் நடந்த புரட்சிகரமான காரியங்கள் இன்னும் நூறு வருஷத்துக்கு முன்னால் சோலைமலை மாறனேந்தல் இராஜ்யங்களில் நேர்ந்த அபூர்வ நிகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகவும் சிலசமயம் சேர்ந்தார் போலவும் அவன் மனத்தில் தோன்றி அல்லோல கல்லோலம் விளைத்தன.

இத்தனைக்கும் மத்தியில் அவன் அறிவு தெளிவடைந்து சிந்தனை செய்து கொண்டிருக்கும்போதும்சரி தெளிவில்லாத பலப்பல எண்ணங்கள் போட்டியிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும்போதும்சரி சிந்தனா சக்தியை இழந்து 'பிரமை' பிடித்து அவன் உட்கார்ந்திருக்கும் போதும்சரி ஒரேஒரு விஷயம் மட்டும் அவன் மனத்திலிருந்து மறையாமல் எப்போதும் குடிகொண்டிருந்தது. அது அவன் தலைக்கு மேலே வட்டச் சுருக்கிட்ட ஒரு கயிறு அவனைத் தூக்கிலிட்டுக் கழுத்தை நெரித்துக் கொல்லப்போகிற கயிறு எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது என்னும் பிரமைதான். அந்தக் கயிற்றிலிருந்து தப்ப வேண்டுமானால் அதற்கு ஒரே ஒருவழிதான் உண்டு; முன்னொரு ஜன்மத்தில்தான் மாறனேந்தல் மகாராஜாவாகப் பிறந்திருந்தபோது எந்த முறையைப் பின்பற்றி அவன் தூக்குக்கயிற்றிலிருந்து தப்பினானோ அதே முறையையே இப்போதும் பின்பற்றியாக வேண்டும்.

அதாவது சிறைச்சாலையிலிருந்தோ போலீஸ் காவலிலிருந்தோ தப்பித்துக் கொண்டு ஓட முயல வேண்டும். ஓட முயல்வது உயிர் பிழைக்க வேண்டுமென்ற ஆசையினால் அல்ல; உயிர் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையினாலும் அல்ல. அப்படித் தப்பிஓட முயலும் போது முன்னொரு ஜன்மத்தில் நடந்தது போலவே சிறைக்காவலர்களோ போலீஸ்காரர்களோ தன்னை நோக்கிச் சுடுவார்கள். குண்டு தன் முதுகிலே பாய்ந்து மார்பின் வழியாக வெளியே வரும். அதன் பின்னால் 'குபுகுபு' வென்று இரத்தம் பெருகும். அந்த க்ஷணமே அவன் உணர்விழந்து கிழே விழுவான். அப்புறம் மரணம்; முடிவில்லாத மறதி; எல்லையற்ற அமைதி

குமாரலிங்கம் அப்போது விரும்பியதெல்லாம் இத்தகைய மரணம் தனக்குக் கிட்ட வேண்டும் என்பதுதான். அவன் மரணத்துக்கு அஞ்சவில்லை; சாகாமல் உயிரோடிருக்க வேண்டும் என்று ஆசைப்படவும் இல்லை. ஆனால் தூக்கு மரத்தில் கயிற்றிலே தொங்கிப் பிராணனை விடமட்டும் அவன் விரும்பவில்லை. அந்த எண்ணமே அவனுடைய உடம்பையும் உள்ளத்தையும் சொல்ல முடியாத வேதனைக்கு உள்ளாக்கிற்று. அவன் தூக்குமரத்தைப் பார்த்ததில்லை; தூக்குப் போடும் காட்சி எப்படியிருக்கும் என்றும் அவனுக்குத் தெரியாது. எனவே தூக்குத் தண்டனை என்று நினைத்ததும் தாழ்ந்து படர்ந்த மரக் கிளையில் முடிச்சுடன் கூடிய கயிறு தொங்கிய காட்சிதான் அவனுக்கு நினைவு வந்தது. அத்தகைய மரக்கிளை ஒன்றில் அவனுடைய உடம்பு தூக்குப் போட்டு தொங்குவது போலவும் உடம்பிலிருந்து வெளியேறிய தன்னுடைய உயிர் அந்த உடம்பைச் சுற்றிச் சுற்றி வருவதுபோலவும் அடிக்கடி அவனுக்குப் பிரமை உண்டாகும். சிலசமயம் விழித்திருக்கும்போதும் சிலசமயம் அரைத் தூக்கத்திலும் அவனுக்கு இம்மாதிரி அநுபவம் ஏற்படும்போது அது முற்றிலும் உண்மை நிகழ்ச்சி போலவே இருக்கும். அப்போது குமாரலிங்கம் "கடவுளே" என்று வாய்விட்டுக் கதறுவான். உடனே விழிப்பு உண்டாகும். அவன் உடம்பெல்லாம் சொட்ட வியர்த்து விட்டுச் சிறிது நேரம் வரையில் நடுங்கிக் கொண்டேயிருக்கும்.

இந்த மாதிரி பயங்கரம் நிறைந்த வாழ்க்கை இன்னும் எத்தனை நாளைக்கு வாழவேண்டுமோ என்று எண்ணி எண்ணி அவன் ஏங்கத் தொடங்கினான். இந்தியா தேசத்துக்குச் சுயராஜ்யம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தனக்கும் தன்னுடைய சகோதரக் கைதிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற ஆசையும் அவனுக்கு இப்போதெல்லாம் சிறிதும் இருக்கவில்லை. விசாரணைக்காகக் கோர்ட்டுகளுக்குப் போகும் போதும் திரும்பி வரும்போதும் மற்றபடி அபூர்வமாக மற்ற சகோதர அரசியல் கைதிகளைச் சந்திக்கும் போதும் "சுயராஜ்யம் சீக்கிரம் வரும்" என்று யாராவது சொல்லக் கேட்டால் அவன் புன்சிரிப்புக் கொள்வான். சிறைப்பட்ட நாளிலிருந்து அவன் புன்னகை புரிவதென்பது இந்தஒரு சந்தர்ப்பத்திலேதான் என்று சொல்லலாம்.

ஏனெனில் "சுயராஜ்யம்" என்ற வார்த்தை காதில் விழுந்ததும் அவன் சிறைப்பட்ட புதிதில் அடைந்த அநுபவங்கள் ஞாபகத்துக்கு வரும். தினம்தினம் புதிது புதிதாகத் தொண்டர்களைக் கைது செய்துகொண்டு வருவார்கள். ஒரு போலீஸ்காரர் இன்னொரு போலீஸ்காரரைப் பார்த்து "இவர் பெரிய தேசபக்தர் அப்பா இவருக்குக் கொடு சுயராஜ்யம்" என்பார். உடனே 'தப தப'வென்று சத்தம் கேட்கும். அடிவிழும் சத்தந்தான். அடி என்றால் எத்தனை விதமான அடி சில தொண்டர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருப்பார்கள். வேறு சிலர் அலறுவார்கள். ஒவ்வோர் அடிக்கும் ஒவ்வொரு 'வந்தேமாதர' கோஷம் செய்து நினைவு இழக்கும் வரையில் அடிபட்டவர்களும் உண்டு. இடையிடையே "சுயராஜ்யம் போதுமா" "சுயராஜ்யம் போதுமா" என்ற கேள்விகளும் கிளம்பும்.

இந்தப் பயங்கர அநுபவங்களைக் குமாரலிங்கம் சொந்தமாக அநுபவிக்கவில்லை. சோலைமலைக் கிராமத்தில் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும் அவன் மூர்ச்சையடைந்து விழுந்ததிலிருந்து போலீஸார் அவன் விஷயத்தில் ஜாக்கிரதையாகவே இருந்தார்கள். அதோடு ஸப் ஜெயிலில் முதன் முதலாக அவனை வந்து பார்த்த டாக்டர் அவனுக்கு இருதயம் பலவீனமாயிருக்கிறதென்றும் நாடி துடிப்பு அதிவிரைவாக இருக்கிறதென்றும் சொல்லி விட்டார். எனவே குமாரலிங்கம் மேற்படி அநுபவங்களிலிருந்து தப்பிப் பிழைத்தான். ஆனால் மற்றவர்கள் பட்ட அடியெல்லாம் அவன் மனத்தில் என்றும் மறக்க முடியாதபடி பதிந்திருந்தது. எனவே "சுயராஜ்யம் வரப் போகிறது" என்ற பேச்சைக் கேட்டாலே அவனுடைய முகத்தில் அவநம்பிக்கையோடு கூடிய துயரப் புன்னகை தோன்றுவது வழக்கமாயிற்று. மேலும் அப்படி நடவாத காரியம் நடந்து சுயராஜ்யமே வந்துவிட்டால்தான் என்ன தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சுயராஜ்ய இந்தியாவில் தான் இருந்து வாழப்போவதில்லை அது நிச்சயம் நூறு வருஷத்துக்கு முன்னால் மாறனேந்தல் உலகநாதத்தேவனுக்கு என்ன கதி நேர்ந்ததோ அதுதான் தனக்கு இந்த ஜன்மத்தில் நேரப் போகிறது அதைப்பற்றிச் சந்தேகமில்லை.

சோலைமலை மணியக்காரர் வீட்டு முன்னிலையில் குமாரலிங்கம் கைது செய்யப்பட்டதிலிருந்து அவனுக்கு மானஸிகக் காட்சியில் பரிபூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சியும் அந்த ஜன்மத்தில் நடந்தது போலவே இப்பொழுதும் நடந்து வருகிறதல்லவா கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகமும் சில நளைக்கு முன்பு சோலைமலை மணியக்காரர் அவனைச் சிறையிலே பார்த்துப் பேசியதிலிருந்து அடியோடு நீங்கி விட்டது. விதியென்னும் சக்கரம் சுழன்று வரும் விந்தையே விந்தை அதைக் காட்டிலும் பெரிய அதிசயம் இந்த உலகத்திலும் இல்லை; மறு உலகத்திலும் இருக்க முடியாது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
17. இரும்பு இளகிற்று

விதி என்கிற விந்தையான சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழலும்படிச் செய்வோம். மாறனேந்தல் உலகநாதத் தேவர் ஆங்கிலேயரைப் பழி வாங்கும் பொருட்டுத் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணிச் சோலைமலை கோட்டைச் சின்ன அரண்மனையில் ஒளிந்து கொண்டிருந்த நாட்களுக்குச் செல்வோம். ஒரு மனிதன் சாதாரணமாய்த் தன் வாழ்க்கையில் பதினைந்து வருஷங்களில் அநுபவிக்கக்கூடிய ஆனந்த குதூகலத்தையெல்லாம் பதினைந்து நாட்களில் அநுபவித்த உலகநாதத்தேவரின் அரண்மனைச் சிறைவாசம் முடியும் நாள் வந்தது. சோலை மலை மகாராஜா ஒருநாள் மாலை தம்மகள் மாணிக்கவல்லியிடம் வந்து "பார்த்தாயா மாணிக்கம் கடைசியில் நான் சொன்னதே உண்மையாயிற்று. இந்த வியவஸ்தை கெட்ட இங்கிலீஷ்காரர்கள் மாறனேந்தல் ராஜ்யத்தை உலகநாதத் தேவனுக்கே கொடுக்கப் போகிறார்களாம். அந்தப்படி மேலே கும்பெனியாரிடமிருந்து கட்டளை வந்திருக்கிறதாம். உலகநாதத் தேவனுடைய தகப்பன் கடைசிவரை போர் புரிந்து உயிரை விட்டானல்லவா தகப்பனுடைய வீரத்தை மெச்சி மகனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கப் போகிறார்களாம். அப்படித் தண்டோ ராப் போடும்படி மேஜர் துரை உத்தரவு போட்டிருக்கிறாராம். எப்படியிருக்கிறது கதை" என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் மாணிக்கவல்லியின் முகத்தில் உண்டான குதூகலக் கிளர்ச்சியையும் அவர் கவனித்தார். அதற்குப் பிறகு மாணிக்கவல்லி தான் பேசிய மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் ஒரே பரபரப்புடன் இருந்ததையும் பார்த்தார். "தூக்கம் வருகிறது அப்பா" என்று மாணிக்கவல்லி சொன்னதும் "சரி அம்மா தூக்கம் உடம்புக்கு ரொம்ப நல்லது; தூங்கு" என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் வெகுதூரம் போய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. மாணிக்கவல்லி சிறிது நேரத்துக்கெல்லாம் அரண்மனையிலிருந்து வெளியேறுவதைக் கவனித்தார். அவள் அறியாமல் அவளைத் தொடர்ந்து சென்றார். பூந்தோட்டத்தின் மத்தியிலிருந்த வஸந்த மண்டபத்தில் தம்முடைய ஜன்மத்துவேஷத்துக்குப் பாத்திரரான உலகநாதத் தேவரை மாணிக்கவல்லி சந்தித்ததைப் பார்த்தார். அந்தச் சந்திப்பில் அவர்கள் அடைந்த ஆனந்தத்தையும் பரஸ்பரம் அவர்கள் காட்டிக் கொண்ட நேசத்தையும் கவனித்தார். சற்றுமுன் தாம் மகளிடம் சொன்ன செய்தியை அவள் உலகநாதத்தேவரிடம் உற்சாகமாகத் திருப்பிக் கூறியதையும் கேட்டார்.

சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன்மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ஏககாலத்தில் கொன்றுவிட வேண்டுமென்னும் எண்ணம் முதலில் தோன்றியது. ஆனால் மகள்மேல் அவர் வைத்திருந்த அளவில்லாப் பாசம் வெற்றி கொண்டது. எனவே மாணிக்கவல்லி திரும்பி அரண்மனைக்குப் போன பிறகு உலகநாதத் தேவரை மட்டும் கொன்றுவிடுவது என்று உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். 'இவனுக்கு ராஜ்யமாம் ராஜ்யம் இந்தச் சோலைமலைக் கோட்டைக்கு வெளியே இவன் போயல்லவா ராஜ்யம் ஆளவேண்டும் ' என்று மனத்திற்குள் கறுவிக்கொண்டார். அத்தகைய தீர்மானத்துடன் அவர் மறைந்து நின்ற ஒவ்வொரு நிமிஷமும் அவருக்கு ஒரு யுகமாயிருந்தது. மாணிக்கவல்லியும் உலகநாதத்தேவரும் இலேசில் பிரிந்து போகிற வழியாகவும் இல்லை. நேரமாக ஆகச் சோலைமலை மகாராஜாவின் குரோதமும் வளர்ந்து கொழுந்து விட்டுக் கொண்டிருந்தது.

திடீரென்று மாணிக்கவல்லி விம்மும் சத்தத்தைக் கேட்டதும் அவளுடைய தந்தையின் இருதயத்தில் வேல் பாய்வது போல் இருந்தது. இது என்ன இவ்வளவு குதூகலமாகவும் ஆசையுடனும் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது ஏன் விம்மி அழுகிறாள் அந்தப் பாதகன் ஏதாவது செய்துவிட்டானா என்ன அவருடைய கையானது கத்தியை இன்னும் இறுகப் பிடித்தது; பற்கள் 'நறநற'வென்று கடித்துக் கொண்டன; உதடுகள் துடித்தன. மூச்சுக்காற்று திடீரென்று அனலாக வந்தது. ஆனால் அடுத்தாற்போல் உலகநாதத்தேவர் கூறிய வார்த்தைகளும் அதன் பின் தொடர்ந்த சம்பாஷணையும் அவருடைய கோபத்தைத் தணித்தன. அது மட்டுமல்ல; அவருடைய இரும்பு மனமும் இளகிவிட்டது. "என்கண்ணே இது என்ன இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு இப்படி விம்மி அழுகிறாயே ஏன் ஏதாவது தெரியாத்தனமாக நான் தவறான வார்த்தைகளைச் சொல்லிவிட்டேனா அப்படியானால் என்னை மன்னித்துவிடு. பிரிந்து செல்லும்போது சந்தோஷமாகவும் முகமலர்ச்சியுடனும் விடை கொடு" என்று பரிவான குரலில் சொன்னார் மாறனேந்தல் மகாராஜா.

"ஐயா தாங்கள் ஒன்றும் தவறாகப் பேசவில்லை. இந்தப் பேதையிடம் தாங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமுமில்லை. என்னுடைய தலைவிதியை நினைத்துத் தான் நான் அழுகிறேன். எதனாலோ என் மனத்தில் ஒரு பயங்கர எண்ணம் நிலைபெற்றிருக்கிறது. தங்களை நான் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்றும் இனிமேல் பார்க்கப் போவதில்லையென்றும் தோன்றுகிறது ஏதோ ஒரு பெரும் விபத்து - நான் அறியாத விபத்து - எனக்கு வரப்போகிறதென்றும் தோன்றுகிறது" என்று கூறிவிட்டு மறுபடியும் இளவரசி விம்மத் தொடங்கினாள். இதைக் கேட்ட உலகநாதத் தேவர் உறுதியான குரலில் "ஒரு நாளும் இல்லை மாணிக்கவல்லி உன்னுடைய பயத்துக்குக் கொஞ்சங்கூட ஆதாரமே இல்லை. நீ எதனால் இப்படிப் பயப்படுகிறாய் என்று எனக்குத் தெரியும். உன் தகப்பனாரைக் குறித்துத்தானே அவருக்கு என் மேலுள்ள துவேஷத்தினால் உன்னை நான் பார்க்க முடியாமல் போகும் என்றுதானே எண்ணுகிறாய்" என்றார். "ஆம் ஐயா அவருடைய மனத்தை நான் மாற்றி விடுவேன் என்று ஜம்பமாகத் தங்களிடம் கூறினேன். ஆனால் அந்தக் காரியம் என்னால் முடியவே இல்லை. என்னுடைய பிரயத்தனங்கள் எல்லாம் வீணாகவே போயின. தங்களைப் பற்றி நல்ல வார்த்தை ஏதாவது சொன்னால் அவருடைய கோபந்தான் அதிகமாகிறது. இப்போதுகூடத் தங்களுக்கு ராஜ்யம் திரும்பி வரப்போவது பற்றி அவர் வெகு கோபமாகப் பேசினார்.

தங்களைப் பற்றி பேசுவதற்கே எனக்குத் தைரியம் வரவில்லை" என்றாள் மாணிக்கவல்லி. "கண்ணே இதைப்பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டாம். உன் தந்தையிடம் நீ என்னைப்பற்றி பேச வேண்டாம். ஏனெனில் நானே பேச உத்தேசித்திருக்கிறேன். மாறனேந்தல் இராஜ்யத்தைத் திரும்ப ஒப்புக் கொண்டதும் முதல் காரியம் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா உன் தந்தையிடம் வந்து அவர் காலில் விழுந்து என் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளப் போகிறேன். உன்னை அடையும் பாக்கியத்துக்காக ஆயிரந்தடவை அவர் காலில் விழ வேண்டுமானாலும் நான் விழுவேன். ஆனால் அதுமட்டும் அல்ல; என்னுடைய குற்றத்தையும் நான் இப்போது உணர்ந்திருக்கிறேன். அவரை நான் நிந்தனை சொன்னதெல்லாம் பெருந்தவறு என்று இப்போது எனக்குத் தெரிகிறது. உண்மையில் அவர் சொன்னதுதானே சரி என்று ஏற்பட்டிருக்கிறது இங்கிலீஷ்காரர்களைப் பற்றி நான் என்னவெல்லாமோ நினைத்திருந்தேன். அவதூறு பேசினேன். அப்படிப்பட்டவர்கள் தோற்றுப் போன எதிரியின் வீரத்தை மெச்சி அவனுடைய மகனுக்கு இராஜ்யத்தைத் திருப்பிக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட உத்தம புருஷர்கள் ஆகவே உன் தந்தையிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேயாக வேண்டும். மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உன்னை எனக்கு மணம் செய்து கொடுக்கும்படியும் கேட்பேன். அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால் அவருடைய கைக்கத்தியால் என்னைக் கொன்றுவிடும்படி சொல்வேன். இது சத்தியம் அதோ வானவெளியில் மினுமினுக்கும் கோடானுகோடி நட்சத்திரங்கள் சாட்சியாக நான் சொல்வது சத்தியம்" இதை யெல்லாம் கேட்டதும் சோலைமலை மகாராஜாவின் கரையாத கல்மனமும் கரைந்து விட்டது; அவருடைய இரும்பு இதயமும் உருகிவிட்டது; கண்ணிலே கண்ணீரும் துளித்துவிட்டது. அதற்குமேல் அங்கு நிற்கக்கூடாதென்று எண்ணிச் சத்தம் செய்யாமல் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார். அன்றிரவெல்லாம் அவர் கொஞ்சங் கூடத் தூங்கவே இல்லை. சோலைமலைக் கோட்டையில் இன்னும் இரண்டு ஜீவன்களும் அன்றிரவு கண் இமைக்கவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
18. உலகம் சுழன்றது

இரண்டு தினங்களுக்குப் பிறகு மாறனேந்தல் உலகநாதத்தேவரைச் சோலைமலை மகாராஜா சந்தித்த போது அவர் முற்றும் புது மனிதராயிருந்தார். அவர்களுடைய சந்திப்பு பிரிட்டிஷ் படையின் மேஜர் துரையின் முன்னிலையில் துரையின் கூடாரத்தில் நடைபெற்றது. உலகநாதத் தேவரின் கைகள் மணிக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவரையும் இன்னும் சில இராஜாங்கத் துரோகிகளையும் என்ன செய்வது என்பது பற்றி மேலாவிலிருந்து வரவேண்டிய உத்தரவை மேற்படி மேஜர் துரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சோலைமலை மகாராஜா மேற்படி மேஜரால் தாம் ஏமாற்றப்பட்டதையும் உலகநாதத் தேவர் பிடிபட்டதற்குத் தாமே காரணம் என்பதையும் எண்ணி எண்ணி மனம் புண்ணாகியிருந்தார். எனவே உலகநாதத் தேவரைக் கண்டதும் அவருக்கு விம்மலும் கண்ணீரும் பொங்கிக் கொண்டு வந்தன. அந்த வெள்ளைக்காரன் முன்னிலையில் தம்முடைய மனத் தளர்ச்சியைக் காட்டக் கூடாதென்று தீர்மானித்துப் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டார். பேச நாஎழாமல் மகாராஜா தவிப்பதைப் பார்த்த உலகநாதத்தேவர் "மாமா தாங்களே இப்படி மனம் தளர்ந்தால் இளவரசிக்கு யார் ஆறுதல் சொல்வார்கள்" என்றார்.

தேவரின் வார்த்தைகள் சோலைமலை அரசரின் மௌனத்தைக் கலைத்தன. "ஆறுதல் சொல்வதா மாணிக்கவல்லிக்கு நான் என்ன ஆறுதல் சொல்லுவேன் அவள் முகத்தைப் பார்க்கவே எனக்குத் தைரியம் இல்லையே தம்பி ஆயிரம் வருஷம் தவம் கிடந்தாலும் உன்னைப் போன்ற ஒரு வீரன் கிடைக்க மாட்டானே மாறனேந்தல் சோலைமலை வம்சங்கள் இரண்டையும் நீ விளங்க வைத்திருப்பாயே அப்படிப்பட்டவனை மூடத்தனத்தினால் இந்தப் பாவி காட்டிக் கொடுத்துவிட்டேனே அந்த வெள்ளைக்காரப் பாதகன் என்னை ஏமாற்றிவிட்டானே அப்பனே வெள்ளைக்காரச் சாதியைப் பற்றி நான் எண்ணியதெல்லாம் பொய்யாய்ப் போயிற்றே நீ சொன்னது அவ்வளவும் மெய்யாயிற்றே எந்த வேளையில் இந்தப் படுபாவி என் கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே வந்தானோ அன்றைக்கே உன்னுடைய குலத்துக்கும் என்னுடைய குலத்துக்கும் சனியன் பிடித்து விட்டது..." மேஜர் துரை அந்தப் பக்கங்களில் பழகிப் பழகிக் கொஞ்சம் தமிழ் தெரிந்து கொண்டிருந்தான். எனவே சோலைமலை ராஜாவின் ஆத்திரமான பேச்சைக் கேட்டுச் சிரித்தான். அவனுடைய சிரிப்பு சோலைமலை மகாராஜாவுக்கு நெருப்பாயிருந்தது.

"பாவி என் அரண்மனைச் சோற்றைத் தின்றுவிட்டு எனக்கே துரோகம் செய்தாயே செய்வதையும் செய்துவிட்டு இப்போது ஹீ ஹீ என்று சிரிக்கிறாயே" என்றார் சோலைமலை மன்னர். "துர்ரோகமா என்னத் துர்ரோகம் யாருக்கு துர்ரோகம் நீர்தானே இந்த டிரெய்டரை எப்படியாவது காப்சர் செய்து ஹாங்க் பண்ணியே ஆகவேணும் என்று பிடிவாதம் செய்தீர்" என்றான் மேஜர் துரை. இதைக் கேட்டதும் சோலைமலை அரசரின் முகம் வெட்கத்தால் சிறுத்துக் கோபத்தால் கறுத்தது. அதைக் கவனித்த மாறனேந்தல் அரசர் அங்கேயே ஏதாவது விபரீதம் நடந்துவிடாமல் தடுக்க எண்ணி "மாமா நடந்தது நடந்து விட்டது இனிமேல் அதைப்பற்றி பேசி என்ன பயன் இந்த வெள்ளைக்காரன் என்னை விடப் போவதில்லை கட்டாயம் தூக்குப் போட்டுக் கொன்று விடுவான். அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை. தங்களுடைய நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றேனே அதுவே எனக்குப் போதும் மனத்திருப்தியுடன் சாவேன். தாங்கள் குமாரியிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள்; விதியை மாற்ற யாராலும் முடியாது. இளவரசி என்னை மறந்துவிட்டு வேறு நல்ல குலத்தை சேர்ந்த ராஜகுமாரனை மணந்து கொள்ளட்டும்; இது என்னுடைய விருப்பம் வேண்டுகோள் என்று சொல்லுங்கள்..." என்றார்.

அப்போது சோலைமலை மன்னர் நடுவில் குறுக்கிட்டு "தம்பி என்ன வார்த்தை சொல்லுகிறாய் என் குமாரியை யார் என்று நினைத்தாய் உன்னை எண்ணிய மனத்தினால் இன்னொருவனை எண்ணுவாளா ஒரு நாளும் மாட்டாள். இந்தப் படுபாவி உன்னை விடாமற் போனால் என் மகளும் பிழைத்திருக்க மாட்டாள். உங்கள் இருவரையும் பறிகொடுத்துவிட்டு நான் ஒருவன் மட்டும் சோலைமலைக் கோட்டையில் பேய் பிசாசைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருக்க நேரிடும். ஆனால் ஒன்று சொல்லுகிறேன் கேள்; சோலைமலை முருகன் அருளால் அப்படியொன்ரும் நேராது. நீ தைரியமாயிரு" என்றார். "ஆகட்டும் மாமா நான் தைரியமாகவேயிருக்கிறேன். தாங்களும் மனத்தைத் தளரவிடாமல் இருங்கள். இளவரசிக்கும் தைரியம் சொல்லுங்கள்" என்றார் மாறனேந்தல் அரசராகிய உலகநாதத் தேவர். மறுநாள் உலகநாதத் தேவருக்குச் சாப்பாடு கொண்டு வந்தஆள் துரை கவனியாத சமயம் பார்த்து ஓர் இரகசியச் செய்தி கூறினான். சோலைமலை மகாராஜா மேஜர் துரையிடம் கூடிய வரையில் மன்றாடிப் பார்க்கப் போவதாகவும் அப்படியும் துரை மனம் மாறாவிட்டால் தூக்குப்போடும் சமயத்தில் உலகநாதத் தேவரை விடுவிக்க வேண்டிய வீரர்களைத் தயார்படுத்தி வைத்திருப்பதகாவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தேவரும் தயராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தான்.

துரையிடம் மன்றாடுவது என்பது மாறனேந்தலுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது சொன்ன விஷயம் ரொம்பப் பிடித்திருந்தது. எனவே அது முதல் அவர் மிக்க உற்சாகமாகவே இருந்தார். சுருக்குக் கயிறுகள் வரிசையாக தொங்கிய இலுப்ப மரத்தின் கிளைக்கு அடியில் நின்ற போது கூட உலகநாதத்தேவரின் உற்சாகம் குன்றவில்லை. சோலைமலை அரசர் மேஜர் துரையிடம் மன்றாடிக் கொண்டிருந்தது மட்டும் அவருக்கு எரிச்சலை அளித்தது. எப்போது அவர்களுடைய பேச்சு முடியும் எப்போது துரை தூக்குப்போட உத்தரவு கொடுப்பான். எப்போது சோலைமலை மகாராஜா மறைவான இடத்தில் தயாராக வைத்திருந்த வீரர்கள் 'தட தட'வென்று ஓடி வருவார்கள் என்று அவர் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய எண்ணமும் சோலைமலை மகாராஜாவின் முன்னேற்பாடும் ஒன்றும் நிறைவேறாத வண்ணம் விதி குறுக்கிட்டது.

உலகநாதத் தேவர் சிறைப்பட்ட செய்தியைக் கேட்டதிலிருந்து சோகத்தில் ஆழ்ந்து படுத்த படுக்கையிலிருந்து எழுந்திராமலிருந்த மாணிக்கவல்லி சரியாக அந்தச் சமயம் பார்த்து அரண்மனை மேல் மச்சில் ஏறி உப்பரிகையின் முகப்புக்கு வந்தாள். கோட்டை வாசலுக்குச் சமீபத்தில் இலுப்ப மரத்தின் அடியில் தொங்கிய சுருக்குக் கயிற்றின் கீழே தன் காதலர் நிற்பதைப் பார்த்தாள். அவ்வளவுதான். 'ஓ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தாள். உலகம் சுழன்றது தினம் ஒரு தடவை சுழன்று வருஷத்தில் 365 தடவை சுழன்று இந்த மாதிரி நூறு வருஷகாலம் தன்னைத் தானே சுழன்று தீர்த்தது நூறு வருஷத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சி நிலைபெற்றிருந்த இந்தியாவில் இருளடைந்த ஒரு ஜில்லாச் சிறைச்சாலியின் அறையில் குமாரலிங்கம் தனியாக அடைக்கப்பட்டிருந்த போது மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி அவன் நினைவுக்கு வந்தன. நினைவுக்கு வந்ததோடு இல்லை; அந்த அநுபவங்களையெல்லாம் அவன் திரும்பத் திரும்ப அநுபவித்துக் கொண்டிருந்தான்.

இருபதாம் நூற்றாண்டில் கலாசாலையில் ஆங்கிலக் கல்வியும் விஞ்ஞான சாஸ்திரமும் கற்றுத் தேர்ந்த அறிவாளியான அவன் பல முறையும் 'இதெல்லாம் வீண் பிரமை; ஆதாரமற்ற மனப் பிராந்தி' என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டு பார்த்தான். ஆயினும் அந்தப் பிரமை நீங்குவதாக இல்லை. குமாரலிங்கம் சிறைப்பட்டுக் கீழ்க் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது வழக்கு நடத்தும் விஷயத்தில் சிறிதும் சிரத்தை இல்லாமல் இருந்தான். அவனுக்காக இலவசமாக வந்து வழக்காடிய வக்கீல் அவனுடைய அசிரத்தையைப் பற்றி அடிக்கடி கடிந்து கொண்டார். "வழக்கில் நான் ஜயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நீ இப்படி ஏனோ தானோ என்று இருந்தால் கேஸ் உருப்படாது. தூக்கு மரத்தில் நீ தொங்கியே தீர வேண்டும்" என்று சொல்லிக் கண்டிப்பார். "உன் விஷயத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய உற்றார் உறவினர் யாரும் இல்லையா" என்று கேட்பார். அவர்களைக்கொண்டு குமாரலிங்கத்துக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தலாம் என்றுதான் ஆனால் குமாரலிங்கமோ தனக்கு உற்றார் உறவினர் யாருமே இல்லையென்றும் தன் விஷயத்தில் சிரத்தையுள்ளவர்களே இல்லையென்றும் சாதித்து வந்தான்.

ஒருநாள் வக்கீல் வந்து "என்னடா அப்பா உனக்கு ஒருவருமே உறவில்லை என்று சாதித்துவிட்டாயே சோலைமலை மணியக்காரர் உனக்கு மாமாவாமே" என்றார். "இந்தப் பொய்யை உங்களுக்கு யார் சொன்னது" என்று குமாரலிங்கம் ஆத்திரத்துடன் கேட்டான். "சாக்ஷாத் சோலைமலை மணியக்காரரேதான் சொன்னார். அதோடு இல்லை உன்னுடைய கேஸை நடத்துவதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயார் என்றும் சொன்னார்." இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் மனோ நிலைமையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. அப்போதைக்கு உயிரில் ஆசையும் வாழ்க்கையில் உற்சாகமுமே ஏற்பட்டு விட்டன. பொன்னம்மாளின் நிலைமையைப் பற்றி மணியக்காரரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை அளவில்லாமல் உண்டாயிற்று. எனவே வக்கீலிடம் "நான் சொன்னது தவறுதான் ஐயா ஆனால் சோலைமலை மணியக்காரர் என் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தயவு செய்து அடுத்த தடவை தாங்கள் வரும் போது மணியக்காரரையும் அழைத்து வாருங்கள். அவருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும்" என்றான் குமாரலிங்கம்.

வக்கீலும் அதையேதான் அவனிடமிருந்து விரும்பினார். ஆதலால் உடனே "சரி" என்று சொல்லிவிட்டுப் போனார். ஒருநாள் வக்கீல் தன்னுடைய வாக்கை நிறைவேற்றினார். சோலைமலை மணியக்காரரை அழைத்துக் கொண்டு வந்தார். முன்னே பாழடைந்த கோட்டையில் வேட்டைநாய் பின்தொடரச்சென்ற மணியக்காரருக்கும் இப்போது குமாரலிங்கத்தைப் பார்க்க வந்தவருக்கும் வேற்றுமை நிரம்ப இருந்தது. கொலை குற்றவாளிகளுக்கென்று ஏற்பட்ட கடுஞ்சிறையின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் குமாரலிங்கத்தைக் கண்டதும் மணியக்காரரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. பேச முடியாமல் தொண்டையை அடித்துக் கொண்டது; அவருடைய நிலையைப் பார்த்த குமாரலிங்கம் தானே பேச்சைத் தொடங்கினான்

"ஐயா என்னுடைய வழக்கு விஷயத்தில் தாங்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக வக்கீல் ஸார் சொன்னார். அதற்காக மிக்க வந்தனம்" என்றான். "ஆமாம் தம்பி என் வீட்டுத் திணையிலே அல்லவா உன்னைக் கைது செய்துவிட்டார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தையும் அவமானத்தையும் சொல்லி முடியாது" என்றார் மணியக்காரர். "அச்சமயம் அங்கே தாங்கள் இருந்தீர்களா தங்களை நான் பார்க்கவில்லையே" என்றான் குமாரலிங்கம். "எப்படிப் பார்த்திருக்க முடியும் உன்னை நான் தேடிக்கொண்டு அந்தப் பாழாய்ப் போன கோட்டைக்குப் போனேன். அதற்குள் நீ அவசரப்பட்டுக் கொண்டு வேறு வழியாக ஊருக்குள் வந்துவிட்டாய் எல்லாம் விதியின் கொடுமைதான்" என்றார் மணியக்காரர். "என்னைத் தேடிக்கொண்டு போனீர்களா எதற்காக" என்று அடங்காத அதிசயத்தோடு ம் ஆவலோடும் குமாரலிங்கம் கேட்டான். பிறகு மணியக்காரர் எல்லாம் விவரமாகச் சொன்னார். தளவாய்ப் பட்டணத்தில் குமாரலிங்கம் பிரசங்கம் செய்த போது மணியக்காரர் தம்முடைய முரட்டுச் சுபாவங்காரணமாக இரைச்சல் போட்டுப் பேசிக் கலகம் உண்டாக்கினாரென்றாலும் உண்மையில் அவன் மேல் அப்போதே அவருக்கு மரியாதையும் அபிமானமும் உண்டாகிவிட்டன.

சோலைமலைக்கு அவர் வந்த பிறகு தம் மகள் அவனுக்குச் சாப்பாடு கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவது பற்றிச் சீக்கிரத்திலேயே தெரிந்து கொண்டார். தெரிந்தும் தெரியாதது போல் இருந்தார். போலீஸார் காந்திக்குல்லா வேஷம் தரித்து அவனைப் பிடிக்க வந்தபோது அவர் ஏமாந்துவிடவில்லை சோலைமலை மகாராஜா மேஜர் துரையின் பேச்சைக் கேட்டு ஏமாந்த பிறகு நூறு வருஷம் இந்தியாவிலே பிரிட்டிஷ் ஆட்சி நடந்திருக்கிறதல்லவா பிரிட்டிஷாரின் தந்திர மந்திரங்களையும் சூழ்ச்சித் திறன்களையும் இந்திய மக்கள் எல்லாருமே தெரிந்து கொண்டிருந்தார்கள் அல்லவா அவ்விதமே மணியக்காரரும் தெரிந்து கொண்டிருந்தார். எனவே அந்த வேஷக்காரர்களின் பேச்சை அவர் நம்புவது போல் பாசாங்கு செய்தாரே தவிர உண்மையில் அவர்களை நம்பவில்லை. அந்த வேஷம்தரித்த போலீஸ்காரர்கள் குமாரலிங்கத்தைப் பிடிப்பதற்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துத் தெரிந்து கொண்டார். எனவே அவர்களுக்கு வெகு தடபுடலாக விருந்து கொடுப்பதற்கு வீட்டுக்குள் சத்தம் போட்டுப் பேசி ஏற்பாடு செய்தார். அவ்விதம் பேசி அவர்களை ஏமாற்றிவிட்டுப் பாழடைந்த கோட்டைக்குப் போய்க் குமாரலிங்கத்தைத் தேடிப் பிடித்து அவனுக்கு எச்சரிக்கை செய்யப் புறப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் போய்ச் சேருவதற்கு முன்னாலேயே பொன்னம்மாள் போய்விட்டாள். குமாரலிங்கம் தானாகவே வந்து அகப்பட்டுக் கொண்டான்.

இதையெல்லாம் கேட்ட போது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை என் விஷயத்தில் இப்படிப் பட்ட மன மாறுதல் அடைந்ததை நினைத்து அவன் உற்சாகம் அடைந்தான். பொன்னம்மாள் அவ்வளவு அவசரப்படாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று வருந்தினான். 'பொன்னம்மாள் பேரில் என்ன பிசகு அவள் சொன்னதை உடனே நம்பி அவசரப்பட்டு ஓடிய என்பேரில் அல்லவா பிசகு ஒரு கிராம மணியக்காரருக்கு உள்ள புத்திக்கூர்மை காலேஜுப் படிப்புப் படித்த எனக்கு இல்லையே ' என்று எண்ணித் தன்னைத்தானே நொந்து கொண்டான். மணியக்காரர் சொன்னதையெல்லாம் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த பிறகு தான் ஆரம்பத்திலிருந்தே கேட்பதற்கு விரும்பித் துடிதுடித்துக் கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். "ஐயா பொன்னம்மாள் எப்படி இருக்கிறாள் சௌக்கியமாயிருக்கிறாளா" என்றான். "இது என்ன கேள்வி என்னமாக சௌக்கியமாயிருப்பாள் உன்னைப் போலீஸார் கைது செய்து கொண்டு வந்ததிலிருந்து அவளுக்கு அசௌக்கியந்தான்" என்றார் மணியக்காரர். "அசௌக்கியம் என்றால் உடம்புக்கு என்ன செய்கிறது வைத்தியம் ஏதாவது பார்த்தீர்களா" என்று குமாரலிங்கம் கவலையோடு கேட்டான்.

"என்ன வைத்தியம் பார்த்து என்ன பிரயோஜனம் வைத்தியத்தினாலும் மருந்தினாலும் தீருகிற வியாதி இல்லை. மனக் கவலைக்கு மருந்து ஏது அவளாலே தான் நீ போலீஸாரிடம் அகப்பட்டுக் கொண்டாய் என்ற எண்ணம் பொன்னம்மாள் மனத்தில் ஏற்பட்டுவிட்டது அதனால் அவள் மனத்தில் ஏற்பட்ட கவலை உடம்பையும் படுத்துகிறது." இதைக் கேட்ட குமாரலிங்கத்தின் நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. "ஐயா தாங்கள் பொன்னம்மாளுக்கு ஆறுதல் சொல்லக்கூடாதா" என்று குமாரலிங்கம் கூறிய வார்த்தைகளில் அளவு கடந்த துயரம் ததும்பியிருந்தது. "நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும் சொன்னால் தான் என்ன உபயோகம் நீ வந்து ஆறுதல் சொன்னால்தான் உண்டு ஆனால் நீ ரொம்ப அசிரத்தையாயிருக்கிறாய் என்று வக்கீல் ஐயா சொல்கிறார். அசிரத்தை கூடவே கூடாது. அப்பனே உனக்காக இல்லாவிட்டாலும் பொன்னம்மாளுக்காகச் சிரத்தை எடுத்து கேஸை நடத்த வேண்டும். வக்கீல் ஐயா சொல்கிறபடி செய்து எப்படியாவது விடுதலை அடைய வழியைப் பார்க்க வேண்டும்" என்றார் மணியக்காரர்.

கதைகளிலே சொல்வதுபோல் அப்போது குமாரலிங்கத்தின் முகத்தில் ஒரு சோகப் புன்னகை தவழ்ந்தது. மனத்திற்குள்ளே அவன் 'விடுதலை அடைவதா இந்த உடம்பிலிருந்து உயிர்போகும் போதுதான் எனக்கு விடுதலை ஆனால் இதை இவர்களிடம் சொல்லி என்ன பயன் வீணாக வருத்தப்படுவார்கள்' என்று எண்ணிக் கொண்டான். "ஆகட்டும் ஐயா என்னால் முடிந்தவரையில் சிரத்தை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் பொன்னம்மாளுக்குத் தாங்கள் தைரியம் சொல்லுங்கள். என்னை அடியோடு மறந்து விடச் சொல்லுங்கள். நல்ல அந்தஸ்திலுள்ள வாலிபன் யாருக்காவது அவளைச் சீக்கிரம் கலியாணம் செய்து கொடுங்கள்" என்று பரிவோடு குமாரலிங்கம் சொன்னான். இப்படிச் சொல்லி முடித்ததும் மாறனேந்தல் உலகநாதத் தேவர் சோலைமலை அரசருக்குச் சொன்ன வார்த்தைகளையே தானும் ஏறக்குறைய இப்போது சொன்னதை எண்ணித் திடுக்கிட்டான். அதற்கு மணியக்காரர் கூறிய பதில் மேலும் அவனைத் திடுக்கிடச் செய்தது. சோகமும் பரிகாசமும் கலந்த தொனியில் மணியக்காரர் சிரித்துவிட்டு "குமாரலிங்கம் பொன்னம்மாளை யார் என்று நினைத்தாய் உன்னை எண்ணிய மனத்தினால் அவள் இன்னொருவனை எண்ணுவாளா" என்றார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
19. விடுதலை வந்தது​

சென்ற அத்தியாயத்தில் கூறியபடி சோலைமலை மணியக்காரர் சிறைச்சாலைக்கு வந்து குமாரலிங்கத்தைப் பார்த்து ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு மேலாகிவிட்டது. இதற்கிடையில் கீழேயுள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு அதற்குமேல் ஸெஷன்ஸ் கோர்ட்டு அதற்கு மேலே ஹைக்கோர்ட்டு வரையில் வழக்கு நடந்து முடிந்தது. கடைசியாக தளவாய்ப்பட்டணம் கலகவழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் நாலு பேருக்குத் தூக்குத்தண்டனை என்றும் பதினாறு பேருக்கு ஆயுள்தண்டனை என்றும் தீர்ப்பாயிற்று. தூக்குத்தண்டனை அடைந்தவர்களில் குமாரலிங்கமும் ஒருவன் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா அதைப் பற்றி அவன் வியப்படையவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை. மரணதண்டனை அவன் எதிர்பார்த்த காரியந்தான். மேலும் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்பதை நினைத்தபோது அதைவிடத் தூக்குத்தண்டனை எவ்வளவோமேல் என்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால் தூக்குத் தண்டனை அடைந்த மற்றவர்கள் யாரும் அவ்விதம் அபிப்பிராயப்படவில்லை. அவர்களுடைய உற்றார் உறவினரும் சிநேகிதர்களும் பொதுமக்களுங்கூட அவ்வாறு கருதவில்லை. உயிர் இருந்தால் எப்படியும் ஒருநாள் விடுதலை பெறலாம். ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வரும் என்பதுதான் என்ன நிச்சயம் இந்தியா அத்தனை காலமும் விடுதலை பெறாமலா இருக்கும் இரண்டுமூன்று வருஷத்துக்குள்ளேயே ஏதாவது ஒரு சமரசம் ஏற்படலாமல்லவா இந்தியா சுயராஜ்யம் அடையலாமல்லவா எனவே தூக்குத் தண்டனை அடைந்தவர்களின் சார்பாகப் பிரீவியூ கவுன்ஸிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது. குமாரலிங்கத்துக்கு இது கட்டோ டு பிடிக்கவில்லை. அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை என்று அவன் நம்பினான். மற்றவர்களுடையகதி எப்படி ஆனாலும் தன்னுடைய தூக்குத் தண்டனை உறுதியாகத் தான் போகிறது என்று அவன் நிச்சயம் கொண்டிருந்தான். ஆயினும் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகப் பிரீவியூ கவுன்ஸில் அப்பீலுக்கு அவன் சம்மதம் கொடுத்தான்.

சம்மதம் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து தப்பி ஓடுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றிச் சிந்திக்கலானான். அதுவும் உண்மையில் உயிர் தப்பிப் பிழைப்பதற்காக அல்ல; தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித் துப்பாக்கிக் குண்டினால் மரணமடையும் உத்தேசத்துடனே தான். அதுவே தன்னுடைய தலைவிதி என்றும் அந்த விதியை மாற்ற ஒருநாளும் ஒருவராலும் முடியாது என்றும் அவன் நம்பினான். எனவே தப்பி ஓடும் முயற்சிக்குத் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பகலிலும் இரவிலும் கனவிலும் நனவிலும் அந்த எண்ணமே அவனை முழுக்க முழுக்க ஆட்கொண்டிருந்தது. சிறையிலிருந்து தான் தப்பி ஓடுவது போலும் தன் முதுகில் குண்டு பாய்ந்து மார்பின் வழியாக இரத்தம் 'குபுகுபு'வென்று பாய்வது போலும் பல தடவை அவன் கனவு கண்டு வீறிட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ஆன போதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. எத்தனையோ நாவல்களில் கதாநாயகர்கள் சிறையிலிருந்து தப்பி ஓடியதாகத் தான் படித்திருந்த சம்பவங்களை யெல்லாம் அவன் ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிப் பார்த்தான். ஆனால் அவை ஒன்றும் அவன் இருந்த நிலைமைக்குப் பொருத்தமாயில்லை.

நாளாகஆக விடுதலைவெறி அவனுக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது. என்னவெல்லாமோ சாத்தியமில்லாத யோசனைகளும் யுக்திகளும் மனத்தில் தோன்ற ஆரம்பித்தன. இதற்கிடையில் சிறைச்சாலையின் பெரிய வெளிச் சுவர்களைத் தாண்டிக் கொண்டு இடைஇடையேயுள்ள சின்னச் சுவர்களைத் தாண்டிக்கொண்டு மரண தண்டனை அடைந்த கைதிகளின் தனிக் காம்பவுண்டு சுவரையும் தாண்டிக்கொண்டு சில செய்திகள் வர ஆரம்பித்தன. காங்கிரஸ் மாபெருந் தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசப் பேச்சு நடந்து வருவது பற்றிய செய்திகள்தான். கூடிய சீக்கிரத்தில் அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை அடையக்கூடும் என்ற வதந்திகளும் வந்தன. இவற்றையெல்லாம் மற்ற அரசியல் கைதிகள் நம்பினார்கள். நம்பியதோடுகூடச் சிறையிலிருந்து வெளியேறியதும் எந்தத் தொகுதிக்குத் தேர்தலுக்கு நிற்கலாம் என்பது போன்ற யோசனைகளிலும் பலர் ஈடுபட ஆரம்பித்தார்கள் ஆனால் குமாரலிங்கத்துக்கோ விடுதலைப் பேச்சுக்களில் எல்லாம் அணுவளவும் நம்பிக்கை ஏற்படவில்லை. சிறையிலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்னும் ஓர் எண்ணத்தைத் தவிர வேறு எந்தவிதமான எண்ணத்துக்கும் அவன் மனத்தில் இடம் கிடைக்கவில்லை.

கடைசியாக அவன் அடங்கா ஆவலுடன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிட்டியது. தானே அவனைத் தேடி வந்தது என்று சொல்ல வேண்டும். ஹைகோர்ட்டில் கேஸ் முடியும் வரையில் அவனையும் அவனுடைய சகாக்களையும் வைத்திருந்த சிறையிலிருந்து அவர்களை வேறு சிறைக்கு மாற்றிக் கொண்டு போனார்கள். பலமான பந்தோபஸ்துடனே பிரயாணம் ஆரம்பமாயிற்று. எந்த ஊர்ச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆயினும் ரயிலில் போகும்போது தனக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும் என்று குமாரலிங்கம் எண்ணினான். கட்டாயம் கிடைத்தே தீரும் என்று நம்பினான். இத்தனை காலமும் மாறனேந்தல் உலகநாதத் தேவருக்கு நேர்ந்தது போலவே எல்லாச் சம்பவங்களும் தன் விஷயத்திலும் நேர்ந்திருக்கின்றன அல்லவா எனவே இறுதிச் சம்பவமும் அவ்விதம் நேர்ந்தேயாக வேண்டுமல்லவா

அவன் எண்ணியதற்குத் தகுந்தாற்போல் வழியில் ரயில் பிரயாணத்தின் போது சிற்சில சம்பவங்கள் ஏற்பட்டு வந்தன. அவனுடன் சேர்த்துக் கொண்டு வரப்பட்ட மற்றக் கைதிகளை அங்கங்கே இருந்த ஜங்ஷன்களில் பிரித்து வேறு வண்டிகளுக்குக் கொண்டு போனார்கள். கடைசியாகக் குமாரலிங்கமும் அவனுக்குக் காவலாக இரண்டே இரண்டு போலீஸ் சேவகர்களுந்தான் அந்த வண்டியில் மிஞ்சினார்கள். இரவு பத்து மணிக்குக் குமாரலிங்கம் சாப்பிடுவதற்காக அவனுடைய கை விலங்கைப் போலீஸார் எடுத்து விட்டார்கள். சாப்பிட்ட பிறகு விலங்கை மறுபடியும் பூட்டவில்லை. ஏதேதோ கதை பேசிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள் சிறிது நேரத்துக்கெல்லாம் கண் அசந்தார்கள். உட்கார்ந்தபடியே தூங்கத் தொடங்கினார்கள். ஒருவன் நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கினான்.

குமாரலிங்கம் தன்னுடைய விதியின் விசித்திர கதிதான் இது என்பதை உணர்ந்தான். விதி அத்துடன் நிற்கவில்லை; அடுத்து வந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சற்றுத் தூரத்தில் கை காட்டிக்குப் பக்கத்தில் ரயில் நிற்கும்படி செய்தது. குமாரலிங்கம் வண்டியின் கதவைத் தொட்டான். தொட்டவுடனே அக்கதவு திறந்து கொள்ளும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது. அது திறந்தபோது ஆச்சரியமாய்த்தானிருந்தது. போலீஸார் இருவரையும் மறுபடி ஒரு தடவை கவனமாகப் பார்த்தான். அவர்கள் தூங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ஒருவன் அரைக் கண்ணைத் திறந்து "இது என்ன ஸ்டேஷன் அண்ணே" என்று கேட்டுவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டான். அவ்வளவு தான்; திறந்த ரயில் கதவு வழியாகக் குமாரலிங்கம் வெளியில் இறங்கினான். ரயில்பாதையின் கிராதியைத் தாண்டிக் குதித்தான். இதெல்லாம் இவ்வளவு சுலபமாக நடந்துவிட்டது என்பதை நம்ப முடியாமல் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றான். ரயில் என்ஜின் 'வீல்' என்று கத்திற்று. உடனே ரயில் நகர்ந்தது. நகர்ந்தபோது சற்று முன்னால் திறந்த வண்டிக் கதவு மறுபடியும் தானே சாத்திக் கொண்டது.

அடுத்த கணத்தில் ஒரு பெரிய தடபுடலைக் குமாரலிங்கம் எதிர்பார்த்தான். போலீஸ் சேவகர் இருவரும் விழித்தெழுந்து கூச்சல் போடுவார்கள் என்றும் பளிச்சென்று அடித்த நிலா வெளிச்சத்தில் தன்னைப் பார்பார்கள் என்றும் உடனே அவர்களும் ரயிலிலிருந்து கீழே குதிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தான். தான் ஒரே ஓட்டமாய் ஓட அவர்கள் தம் முதுகை நோக்கிச் சுடுவார்கள் என்றும் நினைத்தான். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த உடனே கொஞ்சமும் வலிக்காது என்றும் குண்டு பாய்ந்ததே தெரியாது என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். எனவே கொஞ்ச தூரம் ஓடிய பிறகு தான் ஸ்மரணை இழந்து கீழே விழுவது வரையில் கற்பனை செய்து கொண்டான். ஆனால் அவ்வளவும் கற்பனையோடு நின்றது. நகர்ந்த ரயில் நகர்ந்ததுதான். மூடிய கதவு மூடியதுதான். ஆர்ப்பாட்டம் சத்தம் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றுமேயில்லை. அந்தக் காலத்தில் சோலைமலையில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பொன்னாம்மாவின் நினைவு குமாரலிங்கத்துக்கு வந்தது.

இது ஏதோ கடவுளின் செயல் சோலைமலை முருகனின் அருள் பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத்திக் கொள்ளாவிட்டால் தன்னை விட நிர்மூடன் உலகில் யாருமே இருக்க முடியாது. அவ்வளவுதான்; குமாரலிங்கம் நடக்கத் தொடங்கினான். வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துத் திசையைத் தெரிந்து கொண்டு விரைவாக நடக்கத் தொடங்கினான். தன் உள்ளங் கவர்ந்த பொன்னம்மாளைக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுடைய கால்களுக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு சக்தியையும் விரைவையும் அளித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
20. கதை முடிந்தது

குமாரலிங்கம் ரயிலிருந்து தப்பிய ஏழாம் நாள் சுமார் 250 மைலுக்கு மேல் கால்நடையாக நடந்து சோலைமலை மணியக்காரர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மணியக்காரர் அவனைப் பார்த்ததும் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஊர் சுற்றும் பிச்சைக்காரன் என்று நினைத்தார். "ஐயா என்னை அடையாளம் தெரியவில்லையா" என்று கேட்டதும் உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டார். "ஐயோ குமாரலிங்கமா இது என்ன கோலம் அடாடா இப்படி உருமாறிப் போய் விட்டாயே" என்று அலறினார். குமாரலிங்கம் அக்கம் பக்கம் பயத்துடன் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் "ஐயா மெதுவாகப் பேசுங்கள் என் பெயரை உரத்துச் சொல்லாதீர்கள்" என்று சொன்னான். "அப்பனே ஏன் இப்படிப் பயப்படுகிறாய் ஏன் உன் பெயரை உரத்துச் சொல்லக்கூடாது என்கிறாய்" என்று கேட்ட மணியக்காரர் மறுகணம் பெருந்திகிலுடன் "விடுதலைக்குப் பிறகு இன்னும் ஏதாவது செய்து விட்டாயா என்ன" என்று பரபரப்புடன் கேட்டார். "விடுதலையா என்ன விடுதலை" என்று ஒன்றும் புரியாத திகைப்புடன் குமாரலிங்கம் கேட்டான். "என்ன விடுதலையா உனக்குத் தெரியாதா என்ன பின் எப்படி இங்கே வந்தாய்" என்று மணியக்காரர் கேட்டது குமாரலிங்கத்தின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று.

"ஐயா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லையே என்னை சென்னைச் சிறையிலிருந்து கண்ணனூர்ச் சிறைக்கு ரயிலில் கொண்டு போனபோது வழியில் தப்பித்து ஓடி வந்தேன். இதை விடுதலை என்று சொல்ல முடியுமா விடுதலை எப்படி நான் அடைந்திருக்க முடியும் பிரீவியூ கவுன்ஸில் அப்பீல் இன்னும் தாக்கல் கூட ஆகவில்லையே அப்படி அப்பீல் தாக்கல் ஆன போதிலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. எந்தக் கோர்ட்டிலே எவ்வளவு தடவை அப்பீல் செய்தால்தான் என்ன பிரயோஜனம் தலைவிதியை மாற்ற முடியுமா" என்றான் குமாரலிங்கம்."தலை விதியாவது ஒன்றாவது அட அசட்டுப் பிள்ளை இப்படி யாராவது செய்வார்களா சர்க்காருக்கும் காங்கிரஸ¤க்கும் சமரசம் ஏற்பட்டு அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுதலை செய்துவிட்டார்களே தேசமேல்லம ஒரே கொண்டாட்டமாயிருக்கிறதே உனக்கு ஒன்றுமே தெரியாதா ரயிலிலிருந்து நீ என்றைக்குத் தப்பித்துக் கொண்டாய்" என்று பரபரப்புடன் பேசினார் மணியக்காரர். குமாரலிங்கத்தின் மனநிலை அச்சமயம் எப்படியிருந்தது என்று அவனாலேயே சொல்ல முடியாது. அதை நாம் எப்படிச் சொல்ல முடியும் அதிசயமும் ஆனந்தமும் அவமானமும் அவநம்பிக்கையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு அவன் உள்ளத்தில் கொந்தளித்தன.

"ஐயா தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது இந்த துரதிர்ஷ்டம் பிடித்தவனைத் தாங்களும் சேர்ந்து பரிகாசம் செய்கிறீர்களா" என்று கேட்டான். மணியக்காரர் அவனுடைய கேள்விக்குத் தாமே பதில் சொல்வதற்குப் பதிலாகப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பத்திரிகைகளை எடுத்துக் காட்டினார். அந்தப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த விவரங்கள் மணியக்காரர் சொன்ன விஷயங்களை எல்லாம் உறுதிப்படுத்தின. அதாவது காங்கிரஸ¤க்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதென்றும் அதன் காரணமாக அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒரு பத்திரிகையில் இருந்தது. மறுநாள் பத்திரிகையில் இன்னின்ன கேஸைச் சேர்ந்தவர்கள் விடுதலையாவார்கள் என்று கொடுக்கப்பட்டிருந்த விவரமான ஜாபிதாவில் 'தளவாய்ப் பட்டணம் கலகக் கேஸ் கைதிகள்' என்றும் குறிப்பிட்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டுக் குமாரலிங்கம் சிறிது நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். ரயிலிலிருந்து தப்பியது முதல் அவனுடைய கால்நடைப் பிரயாணத்தின் போது கண்டு கேட்டு அநுபவித்த பல சம்பவங்களுக்கு இப்போதுதான் அவனுக்குப் பொருள் விளங்கிற்று.

உதாரணமாக வழியில் பல இடங்களில் தேசீயக் கொடிகளைக் கம்பீரமாகப் பிடித்துக் கொண்டு 'வந்தேமாதரம்' 'ஜய்ஹிந்த்' முதலிய கோஷங்களைப் போட்டுக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலம் வந்த காட்சிகளை அவன் தூரத்திலிருந்து பார்த்தான். அம்மாதிரிக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் 'ஏது இவ்வளவு அடக்கு முறைக்குப் பிறகும் நாட்டில் சுதந்திர இயக்கம் பலமாக நடக்கிறதே இந்தியா தேசத்துக்குக்கூட விடுதலை உண்டு போலிருக்கிறதே' என்று அவன் எண்ணினான். உண்மையில் அந்த ஆர்ப்பட்டங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்பது இப்போதுதான் அவனுக்கு மிகவும் நன்றாய்த் தெரிந்தது. இன்னும் பல இடங்களில் போலீஸாரைக் கண்டு அவன் அவசரமாக மறைந்து ஒளிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டான். ஆயினும் அவன் பேரில் அவர்கள் சந்தேகப்படவும் இல்லை; பிடிக்க முயலவும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் மிகவும் களைத்துப் போய்ச் சாலை ஓரத்துச் சாவடி ஒன்றின் தாழ்வாரத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரென்று இரண்டு போலீஸ்காரர்கள் சமீபத்தில் வருவதைப் பார்த்துவிட்டு சட்டென்று திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுபோல் அவன் பாசாங்கு செய்தான்.

போலீஸ் ஜவான்கள் இருவரும் அவன் அருகில் நெருங்கியதும் அவர்களில் ஒருவன் "இவனைப் பார்த்தாயா குமாரலிங்கத்தின் சாயலாகத் தோன்றுகிறதல்லவா" என்றான். அதற்கு இன்னொருவன் "குமாரலிங்கம் இங்கே எதற்காக வந்து திக்கற்ற அநாதையைப் போல் சாவடியில் படுத்திருக்கிறான் மேளமும் தாளமும் தடபுடல் படாதா இத்தனை நேரம் அவனுக்கு" என்றான். இவர்களுடைய பேச்சு குமாரலிங்கத்துக்கு ஒரு மர்மப் புதிராயிருந்தது. வேறு எந்தக் குமாரலிங்கத்தைப் பற்றியோ பேசுகிறார்கள் என்று எண்ணினான். தன்னைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது உறுதிப்பட்டது. "ஐயா இந்தச் செய்தி ஒன்றும் எனக்கு உண்மையில் தெரியாதுதான் சாவதற்கு முன்னால் சோலைமலைக்கு எப்படியாவது ஒரு தடவை வரவேண்டும்; தங்களையும் தங்கள் குமாரியையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் ரயிலிலிருந்து தப்பித்து வந்தேன். போலீஸார் என்னுடைய சொந்த ஊரிலே கொண்டு போய் என்னை விட்டு விடுதலைச் செய்தியைச் சொல்ல எண்ணியிருந்தார்கள் போலிருக்கிறது. இந்த ஒரு வாரமும் நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அவ்வளவும் வீண் என்று இப்போது தெரிகிறது. என்னைப் போல் மூடன் வேறு யாரும் இருக்கமுடியாது" என்றான் குமாரலிங்கம்.

"அப்பனே போனதைப் பற்றி ஏன் வீணாகக் கவலைப்பட வேண்டும் எப்படியோ நீ இங்கு வந்து சேர்ந்தாயே அதுவே பெரிய காரியம்" என்றார் மணியக்காரர். "ஐயா பொன்னம்மாள் எங்கே அவளைப் பார்த்து விட்டு நான் போகவேண்டும்" என்றான் குமாரலிங்கம். "அவ்வளவு அவசரம் வேண்டாம் தம்பி பொன்னம்மாள் அந்த பாழடைந்த கோட்டையிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். சதாசர்வ காலமும் அங்கே தான் அவளுக்கு வாசம். குளித்துச் சாப்பிட்டுவிட்டு அவளைப் போய்ப் பார்க்கலாம்" என்று மணியக்காரர் சொன்னார். உடனே ஊர் நாவிதரையும் அங்கு அழைத்துக் கொண்டு வரும்படி செய்தார். அவர் விருப்பத்தின்படியே குமாரலிங்கம் க்ஷவரம் செய்துகொண்டு ஸ்நானம் செய்து புதிய உடை உடுத்திக் கொண்டான். அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுக் கோட்டைக்குப் புறப்பட்டான். மணியக்காரரும் அவனோடு கிளம்பிச் சென்றார். போகும்போது "அப்பா குமாரலிங்கம் உன்னைப் பிறிந்த துயரம் பொன்னம்மாளை ரொம்பவும் பீடித்திருக்கிறது திடுதிப்பென்று அவள் முன்னால் தோன்றிப் பயப்படுத்தி விடாதே படபடப்பாகப் பேசாதே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்" என்று மணியக்காரர் எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கை எல்லாம் எதற்காக என்று அப்போது குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக விளங்கவில்லை. பொன்னம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகுதான் விளங்கிற்று. மணியக்காரரும் குமாரலிங்கமும் வந்ததைப் பொன்னம்மாள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவர்களைப் பார்த்ததும் பாராதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இதைப் பொருட்படுத்தாமல் குமாரலிங்கம் அவள் அருகில் சென்று உட்கார்ந்து "ஏன் இவ்வளவு பாராமுகம் இத்தனை நாள் கழித்து வந்திருக்கிறேனே பிரியமாக வரவேற்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா ஒருவேளை என்னை மறந்து விட்டாயா அல்லது அடையாளம் தெரியவில்லையா" என்று மிக்க பரிவோடு கேட்டான். அவ்வளவு நேரமும் சும்மா இருந்த பொன்னம்மாள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து "நீங்கள் யார் அடையாளம் எனக்குத் தெரியத்தான் இல்லை" என்றாள். "நான் தான் குமாரலிங்கம். உனக்குக் கூட அடையாளம் தெரியாதபடி அவ்வளவு மாறிப்போய் விட்டேனா அல்லது உன் மனந்தான் மாறிவிட்டதா" என்றான் பொன்னம்மாளின் காதலன். "குமாரலிங்கமா அது யார் நான் அந்தப் பெயரைக் கேட்டதில்லையே" என்று பொன்னம்மாள் சொன்னபோது குமாரலிங்கத்துக்கு 'திக்' என்றது.

"பொன்னம்மா உண்மையாகத்தான் பேசுகிறாயா அல்லது விளையாட்டா குமாரலிங்கத்தை அவ்வளவு சீக்கிரமாகவா நீ மறந்துவிட்டாய்" "ஐயா குமாரலிங்கம் என்று நான் கேட்டதுமில்லை. என்பெயர் பொன்னம்மாளும் இல்லை வீணாக என்னை எதற்காகத் தொந்தரவு செய்கிறீர்கள்" குமாரலிங்கத்தின் குழம்பிய உள்ளத்தில் பளிச்சென்று ஓர் ஒளிக்கிரணம் தோன்றியது. "பொன்னம்மாள் இல்லாவிட்டால் பின்னே நீ யார்" என்று கேட்டான். "என்னைப் பார்த்தால் தெரியவில்லையா சோலைமலை இளவரசி நான்; என் பெயர் மாணிக்கவல்லி." இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு பெரும் வேதனை உதித்தது. மனத்தை திடப்படுத்திக் கொண்டு தயக்கம் தொனித்த குரலில் "மாணிக்கவல்லி நான்தான் மாறனேந்தல் இளவரசன். என்னைத் தெரியவில்லையா" என்றான். "ஆ ஏன் பொய் சொல்கிறீர் மாறனேந்தல் இளவரசர் இப்படியா இருப்பார்" என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் ஒலி குமாரலிங்கத்துக்கு உண்மையை தெளிவாக உணர்த்தியது. பொன்னம்மாளின் அறிவு பேதலித்து விட்டதென்றும் இனித் தன்னை ஒரு நாளும் அவள் அறிந்துகொள்ளப் போவதில்லையென்றும் உணர்ந்தான். அதே சமயத்தில் அவனுடைய இருதய வீணையின் ஜீவநரம்பு படீரென்று வெடித்து அறுந்தது. தமிழ்நாட்டில் உள்ள முருகனுடைய கோயில்களில் களைபொருந்திய முகத்துடன் கூடிய இளம்வயதுச் சாமியார் ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர் யார் என்று விசாரித்துப் பாருங்கள். 'சோலைமலைச் சாமியார்' என்று பதில் சொல்வார்கள். அதோடு அவர் உலகப்பற்றை அடியோடு ஒழித்த 'பாலசந்நியாசி' என்றும் 'பரமபக்த சிகாமணி' என்றும் பூர்வாசிரமத்தில் அவர் 'தேசத்தொண்டர் குமாரலிங்கம்' என்றுங்கூடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.
கல்கியின் சோலைமலை இளவரசி முற்றிற்று​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top