டேய்...உன்னை எப்படிடா கரெக்ட் பண்ணறது? 5

Riy

Author
Author
#1
P_20190612_160728.jpg

அத்தியாயம் 5

அன்று வார இறுதியாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், சென்னையின் அந்த பிரபலமான மால், மக்கள் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருந்தது. எதிரில் வருவோர், போவார் எல்லாரும் ஒருவரை ஒருவர் இடித்தபடி செல்ல வேண்டிய நிலையிலும், தன் சேட்டையை செவ்வனே செய்த படி நின்று கொண்டிருந்தாள் கனி தனது தோழியோடு....

"ஏ! கனி, இந்த கூட்டத்துல போய், K G F பார்த்து தான் ஆகனுமா?! இன்னொரு நாளைக்கி வரலாம்டீ... பாரு கூட்டத்த.." என சொன்ன தோழியின் வார்த்தையை காதில் வாங்காமல், கருமமே கண்ணாய் கையில் வைத்திருந்த பாப்கார்னை ரசித்து, சாப்பிட்ட படி சுற்றிலும் போவோர், வருவோரை பார்த்தபடி நின்றவளை கொலைவெறியோடு பார்த்தவள்,

"ஏன்டீ! உன்கிட்ட தானே பேசறேன். கண்டுக்காம யாரோ, யார்கூடவோ பேசற மாதிரி நிக்கற..யாராவது பார்த்தா தனியா லூசு, மாதிரி பேசறேன்னு நினைக்கவா..!" என கேட்க,

"இங்க பாரு, நா முடிவு பண்ணி வந்தாச்சு.. சோ! படம் பார்க்காம வரமாட்டேன்.."

"அதுக்கு வேற படமே கிடைக்கலையா?! இதுல அடிதடியா இருக்காமே.. ரத்தத்த பார்த்தாலே எனக்கு ஆகாது.. இதுல முழுக்க சண்டை தானாம். வேணாம்டீ! வேற படத்துக்கு போலாம்.." என்றதை காதில் வாங்காமல்,

"இந்த மாதிரி நல்ல ஃபைட் சீன் இருக்கற மூவில இருக்கற எனர்ஜி, வேற மூவில இருக்காது. வேற படத்துக்கு போய் தூங்கி வழிய சொல்றையா! நோ வே...! இந்த மூவி தான் போறோம்" என உறுதியாய் சொல்ல, கனியின் ரசனை தெரிந்தும், படம் பார்க்கும் ஆசையில், அவளோடு வந்த தன்னையே நொந்து கொண்டு அடுத்த காட்சி ஆரம்பிக்கும் வரை காத்திருக்க துவங்கினாள்.

அவர்கள் காத்திருந்த இடத்திற்கு, வெகு அருகாமையில் திடீரென ஏற்பட்ட சலசலப்பு, சட்டென தீவிரமாக கனி மற்றும் அவள் தோழியின் கவனம் அந்த பகுதிக்கு திரும்பியது.

அங்கு ஒரு நெடியவன், ஒரு சிறுவயது வாலிபனை போட்டு தனியாக அடித்து துவைத்துக்கொண்டிருக்க, அவனை சுற்றி நின்றிருந்த யாரும் விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்திருப்பதை, ஆர்வமாய் பார்க்க துவங்கிய கனி, முதுகு புறம் தெரிந்த அந்த நெடியவனின் அடியில், தனது தாய் மொழியாம் ஹிந்தியில், ஏதோ சொல்லி காலை பிடித்து கெஞ்சும், அந்த வாலிபனை கிஞ்சித்தும் விடாமல், தொடர்ந்து தனது கரம் கொண்டு தாக்கியவனை, காண காண கோபம் தலைக்கேற....

'ஆள பார்த்தா அய்யனாரூ மாதிரி இருந்தா, இப்படி போட்டு அடிப்பானா?! அடி வாங்கறவன பார்த்தாலே தெரியுது அப்பாவின்னு.. பாரு! குழந்த புள்ள மாதிரி இருக்கான். சுத்தி நின்னு வேடிக்கை மட்டும் நல்லா பார்க்கறாங்க.. தட்டிக்கேட்க ஆள் இல்லன்னு தானே, நா யாருன்னு காட்டறேன்...!' என மனதில் நினைத்தவள், கோபமாக தனது கரத்தில் இருந்த பாப்கார்னை அங்கிருந்த குப்பையில் அசால்ட்டாக வீசி செல்ல,


அவளின் செயலை அனுமானித்து, அவளிடமிருந்து அதை வாங்கும் முன்பு, அவள் வீசி சென்றிருந்ததை பார்த்தவள், 'அடிப்பாவி ! இருக்கறதுலையே பெரிய சைஸ் வாங்கு வாங்குன்னு, உசிர எடுத்து வாங்கிட்டு, இப்படி ஒரு வாய் கூட என்னைய சாப்பிட விடாம செஞ்சிட்டு போயிட்டாளே!' என்ற கோபத்தோடும் பாப்கார்ன் பரிபோன துக்கத்தோடு, 'வடை போச்சே!' எபெக்ட்டில், கனி செல்லும் பாதையை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது அந்த தோழியால்....

அங்கிருந்த கூட்டத்தை விலக்கி, முன்னால் முண்டியடித்துக் கொண்டு சென்ற கனிக்கு, இப்போதும் அவனின் முதுகே தெரிய, "ஏய்! மிஸ்டர்.." என அழைக்க வாய் திறந்த நேரம்,

"எவ்வளவு தைரியமிருந்தா, அந்த குழந்தைய, என் கண்ணு முன்னாடியே தூக்க பார்த்திருப்ப..!" என்ற அவன் வார்த்தையில், தனது வார்த்தையை வெளிவிடாமல், வாயினுள் அடக்கியவள், நடக்கும் நிகழ்வை கவனிக்க துவங்கினாள்.

"சார், சார் ப்ளீஸ்..! தெரியாம செஞ்சிட்டேன். வயித்து பொலப்பு சார்!" என ஹிந்தியில் சொன்னவனின், காது மடல் கிழியும் வண்ணம் மீண்டும் அறைந்திருந்தான் அந்த நெடியவன். அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றாள் கனி, 'இவனையா அப்பாவி!' என நினைத்தோம் என்று...

"ஏன்டா, ஒரு குழந்தை பெத்து, வளத்து அத உயிரா நினச்சிருக்கறவங்க கிட்ட இருந்து தூக்கிட்டு போய், அடுத்தவனுக்கு விக்கறது, குழந்தைன்னும் பார்க்காம அத சீரழிக்கறது, கை கால ஒடச்சு பிச்சை எடுக்க விடுறது, பணம் கிடைக்குமின்னா ப்ளாக்மெயில் பண்ணறதுன்னு செய்யறது, உன்னோட வயித்து பொழப்புக்கா..

பெத்தவங்க, அந்த குழந்தைய காணாம போன நேரத்துல இருந்து, அதுக்கு என்ன ஆச்சோ?! ஏதாச்சோன்னு?! பரிதவிப்போட சோறு, தண்ணி கண்ணுல காணாம, தவிக்கற, தவிப்ப பார்த்தா தான்டா தெரியும்... நாயே! உன்னையெல்லாம் லாக்கப்ல வச்சி லாடம் கட்டில, நா வெற்றி மாறன் இல்லடா ...! இனி ஒரு குழந்தைய பார்க்கற துணிச்சல் கூட உனக்கு வர கூடாது..." என சொன்னவன்,

தனது போனிலிருந்து அழைத்த, சில நிமிடத்திற்குள் அங்கு வந்த காவல் துறையை சார்ந்த சிலர், அந்த நெடியவனுக்கு சல்யூட் வைக்க, அவர்களிடம் அந்த வாலிபனை ஒப்படைத்தவன், "லாக்கப்ல வைச்சு நல்லா கவனிங்க! நா, அப்புறமா வந்து வச்சுக்கறேன், இவன..!" என மீண்டும் ஒரு உதையோடு அவர்களுடன் அனுப்ப,

அந்த நேரம், அங்கு நான்கு வயதே இருக்கும் சிறு குழந்தையோடு, வந்த ஆண் பெண் இருவரும், அவனின் கரத்தை பற்றி, "ரொம்ப தேங்க்ஸ் சார்! கொஞ்சம் அசால்ட்டா இருந்த நேரத்துல இப்படி ஆகிடுச்சு!" என்றதும், அந்த ஆணின் கன்னத்தில் யோசிக்கும் நேரத்தில் அறைந்தவன்,

"என்னது, அசால்ட்டா இருந்தையா! கொன்னுடுவேன். புள்ளைய பெத்துட்டா போதுமா?! ஒழுங்கா பாத்துக்க வேணாம். நீ பாட்டுக்கு தொலைஞ்சு போச்சுன்னு கம்பிளைன்ட் பண்ணிட்டு போயிடுவ. ராத்திரி, பகலா அலஞ்சுட்டு இருப்போம், அதுக்குள்ள அந்த குழந்தைக்கு எதாவது ஆகிடுச்சுன்னா, நீ போலீஸ் மெத்தனமா இருந்ததால எங்க பிள்ளைய பரிகொடுத்துட்டோமுன்னு பேப்பர்காரங்களுக்கு, ஒப்பாறி வச்சு பேட்டி கொடுப்ப.. அவனுங்க, டீ ஆர் பீ ஏத்த, அதையே போட்டு போலீஸ்காரங்கள வேவலமா பேசுவாங்க. பெத்த அப்பன் நீயே, அத சரியா பார்த்துக்காம போனா அப்புறம் எப்படி...?!

குழந்தை வீட்ட விட்டு வெளிய போனா, எங்க போகுது என்ன செய்யுதுன்னு பார்க்கனும். நம்ம பழகறவங்க நல்லவங்களாவே இருந்தாலும், சந்தேகத்தோடவே வாழற மாதிரி இப்ப ஆகிடுச்சு. இதுல இவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல, ஜாலியா புள்ளைய விட்டுட்டு, பராக் பார்த்துட்டு இருந்தா, தூக்கிட்டு போகாம என்ன செய்வான்?! நல்ல வேளை, அவன் மேல சந்தேகம் இருந்ததால, அவனோட நடவடிக்கைய நோட் பண்ணிட்டு இருந்தேன். இனிமே உங்க குழந்தைய, நீங்க முதல்ல சரியா பார்த்துக்கோங்க. அப்ப தான் குழந்தை கடத்தல குறைக்க முடியும்" என்று முடிக்கும் நேரம்...

"ஊய்...! ஊய்....!" என்ற விசில் சத்தம் பலமாக கேட்க, 'யாருடா, இது !' என திரும்பியவன், நிச்சயமாக அது ஒரு பெண்ணாக இருக்கும் என எதிர்பார்க்க வில்லை என்பது, அவனின் பார்வையிலேயே தெரிய, விசிலை ஊதி முடித்தவள், தனது கைகளை பலமாக தட்டியபடி,

"சபாஷ் பாஸ்! செம போங்க... கல்வெட்டுலையே பொறுச்சு வைக்கற மாதிரி சொல்லியிருக்கீங்க!" என சிரிப்போடு சொல்ல, அவளின் பாராட்டான செயல் கூட, அவளின் விளையாட்டான பேச்சு பாவனையால், நக்கலாக சொன்னதாக பட, அவளை முறைத்த படி விலகி சென்றவனின் பின்னாலேயே சென்றவள்,

"பாஸ், உங்க பேர் வெற்றி மாறனா?!" என கேட்க, நின்று, 'உனக்கெப்படி தெரியும்?!' என்பது போல பார்த்தவனின் பார்வையில் பொருளை உணர்ந்தவள், "அது.. அந்த கிட்னாப்பர.. அடிக்கும் போது சொன்னீங்களே...! பன்ச் டைலாக் ! அதுல நீங்க அந்த பேர் தான் சொன்னீங்க..!" என்றதும், மீண்டும் நடையை தொடர்ந்தவனிடம்,

"பாஸ், நீங்க போலீஸ்ஸா?!" என கேட்க,

"ஹலோ, யார் நீ ?! இப்ப, எதுக்கு என்ன இன்டர்வியூ பண்ணிட்டு இருக்க?!"

"அதுவா பாஸ், நீங்க அடிக்கும் போது பார்த்தேன், செம பாஸ். உங்க பேர் தெரிஞ்சிடுச்சு, அப்படியே மத்த டீட்டெயில்ஸ் சொன்னா...!"

"சொன்னா....!!!"

"வேற எதுக்கு பாஸ் கேட்பாங்க, உங்கள சைட் அடிக்க தான். பார்க்க நல்லா ஆறு அடியில, ஹீரோ மாதிரி இருக்கீங்க. சைட் அடிக்க ஏத்த பீஸ் தான் நீங்க...

அப்புறம் ஒத்து வந்தா லவ், அப்புறம் கல்யாணமுன்னு, ரூட் புடுச்சு போயிட்டே இருக்க தான்..." என்றவளை பார்த்தவன், 'இவ என்ன லூசா?!' என யோசிக்க,

"என்ன! இவ லூசான்னு யோசிக்கற மாதிரி இருக்கு.. நிஜமா பாஸ், எனக்கு இந்த மாதிரி ஃபைட் சீன், பன்ச் டைலாக் எல்லாமே ரொம்ப பிடிக்கும். இப்ப கூட பாருங்களேன்! நா ஃபைட் நிறைய வர்ற மூவிக்கு தான் வந்திருக்கேன்?!" என வாய் மூடாமல் பேசியவளை ,

"போடீ...! அராத்து.., லடாயீ...!" என்றபடி விலகி சென்றவனிடம், நின்ற இடத்திலிருந்தே, "டேய்! உன்ன எப்படி கரெக்ட் பண்ணறதுன்னு சொல்லிட்டு போடா!" என கத்த,

"நாளைக்கி போலீஸ் ஸ்டேஷன் வா! நல்லா….. சொல்லி தர்றேன்!" என்றபடி, முறைப்போடு சென்றவனை பார்த்த படியே,

'இவர இதுக்கு முன்னாடியே பார்த்து, பழகின மாதிரியே ஃபீல் ஆகுதே! எப்படி...?! எப்பவாவது மீட் பண்ணியிருக்கமா...?!' என யோசனையோடு நின்றவளின், இத்தனை நேர ரகளையையும், எட்ட இருந்தே பார்த்த அவளின் தோழிக்கோ, பயத்தில் நாக்கு வரண்டு போனது தான் மிச்சம்.

வெற்றி அங்கிருந்து சென்ற நொடி, அவனின் பெயரையும், போலீஸ் என்பதையும் கொண்டு கூகுள் ஆண்டவரின் துணையோடு, அவனின் மற்ற தகவல்களை சேகரிக்கும், தனது தோழியை பார்க்க பார்க்க வயிற்றுக்குள் புல்டவுசர் ஓடியது போன்று படபடக்க,

"ஏய்! என்னடீ ஏழரைய கூட்டிட்டு இருக்க... அவர பார்த்தாலே டெரரா தெரியுது, நீ இப்படி கேட்டும், கம்முன்னு போனதே பெருசு... இதுல மறுபடியும், அவர போய் பார்க்கற மாதிரியும், நீ சொன்னத செய்யற மாதிரியும் இருக்கு, இப்ப நீ பண்ணற ஆராய்ச்சியெல்லாம்...!"

"மாதிரி இல்லடீ.. உண்மையாவே அவரு தான் எனக்குன்னு மனசுல பிக்ஸ் பண்ணிட்டேன். சோ, அவரோட ஃபுல் டீட்டெயில் கலெக்ட் பண்ணிட்டு, ஸ்கெச் போட்டு தூக்கறேன்...!"

"அடியேய், என்னடீ ... அந்த புள்ள புடிக்கறவன் சொல்ற மாதிரி, ஸ்கெச்சு தூக்கறதுன்னு பயம் காட்டற... நா வரல இந்த ஆட்டத்துக்கு .. முதல்ல வா வீட்டுக்கு போகலாம்!" என பீதியில் அலற...

அவளின் பயத்தை கருத்தில் கொள்ளாமல், "அதும் கரெக்ட், எனக்கு என்னோட ரியல் ஹீரோவ பார்த்ததும், அந்த ஸ்கிரீன்ல வர்ற ஹீரோவ பார்க்க தோணல..!" என்ற படியே வெளியேறி, கனவிலேயே வீட்டிற்கு சென்றாள் அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டபடி...

மாலிலிருந்து வெளியே வந்து, தனது வாகனத்தில் ஏறிய வெற்றியின் மனமோ, 'ஆமா, உனக்கு இன்னைக்கி என்ன ஆச்சு?! அந்த புள்ள பாட்டுக்கு என்ன என்னமோ பேசுது ! இதே வேற யாராச்சும் பேசியிருந்தா, இப்ப ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகற மாதிரி, 'ரைய்யின்னு...!' ஒண்ணு விட்டுருப்ப..!

அவள, நாளைக்கி வா ன்னு சொல்லிட்டு வர்ற.. ஒருவேளை, அவ வரணுமுன்னு எதிர்பார்க்கறையோ?!' என கேட்க, 'அதானே! ஏன் கம்முன்னு வந்தேன்?! அவள அடிக்காம... அவள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?!' என யோசித்தவன், தனது மனம் போகும் போக்கை கண்டு...

'வெற்றி தேவையில்லாத வேலை பார்க்காத, பீ ஸ்டெடி...!' என சொல்லி, அவளின் நினைவை ஒதுக்கி, தனது பணியை பார்த்தவனுக்கு, 'அவளின் நினைவு மறக்க முடியாத ஒன்று' என்பதும், அவள் சொல்ல போகும் பொய் அவனை தடுமாற வைக்க போவதும் தெரியலையே....!!!


 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top