You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது. 11

#1
பகுதி – 11

அந்த மருத்துவமனை வளாகத்தில் முகிலன் கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான். என்னவோ தன் உலகே நொடிகளில் அழியப் போகும் பதட்டம் அவனிடம்.

வேகமாய் வரவேற்ப்பு பகுதியை நெருங்கியவன், “மேம்... இங்க சூரி.. சாரி சூர்யானு ஒரு பொண்ணை அட்மிட் பண்ணி இருக்காங்களா..?’’ என வினவ, பதிலுக்கு லேசாய் இதழ் பிரித்து புன்னகைத்த வரவேற்ப்பு பெண்மணியோ, “எஸ் சார் ரூம் நம்பர் 407’’ என்று மொழிய, அடுத்த நிமிடம் பளு தூக்கியை தவிர்த்து படிகளில் ஓடிக் கொண்டிருந்தான்.

கடந்த இரண்டரை மாதப் பிரிவின் வலி ஆற்றாமையாய் இதயத்தின் வழி வழிந்துக் கொண்டிருந்தது. ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் தானாய் எப்படி திருமணத்தை நிறுத்துவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது, இவன் செவி எட்டியது சூரி தாத்தாவின் மரணச் செய்தி.

அப்பெரியவரின் மரணச் செய்தி மனம் வருத்திய போதும், “இன்னும் ஆறு மாசத்துக்கு நல்ல காரியம் எதுவும் வீட்ல செய்ய வேண்டாம்.’’ என தன் சகோதரியின் மூலமே தூதனுப்பினான் சூரியின் வீட்டிற்கு.

அங்கு இவன் கோரிக்கை ஏற்கப்பட, அதன் பின் சூரியை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தான். அவளின் வாட்ஸ் அப் கெஞ்சல்கள், மின் அஞ்சல் கொஞ்சல்கள் எதற்கும் அவன் அசைந்துக் கொடுக்கவில்லை.

அவள் வீட்டை விட்டு புறப்படுவதை தன் வீட்டில் இருக்கும் கண்காணிப்பு கேமரா உறுதிபடுத்திய பின்பே அவன் வீட்டிற்கு கிளப்பினான். நித்திக்கு என்ன புரிந்ததோ, முடிந்த அளவு தானும் சூரியை பற்றி மாமனிடம் பேசுவதை தவிர்த்தாள்.

நவரசமும் நாட்டியம் ஆடும் அந்த அழகிய முகம், எதையோ இழந்த சோக சித்திரமாய் உருமாறிக் கொண்டிருப்பதை அனுதினமும் அவள் அறியாமல் கண்டவனின் இதயம் ஒரு புறம் அவளுக்காய் வருந்தினாலும், பிரிந்த இறுதி நாளில் அவள் உதிர்த்த வார்த்தைகளை நினைவில் கொண்டு வந்து இதயத்தை இரும்பாக்கினான்.

இதோ பத்து நிமிடங்களுக்கு முன்னால், அழைத்த ரம்யா, “அண்ணா..நம்ம சூரிக்கு.. சூரிக்கு..’’ என திக்கி திணற, முக்கிய கூட்டம் ஒன்றில் இருந்தவன், தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டே, “என்னாச்சு சூரிக்கு..’’ என ரம்யாவிடம் வினவிக் கொண்டே, அங்கிருந்தோரிடம் மன்னிப்பை வேண்டியபடி அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

ரம்யா அலைபேசியில் அவனிடம் மருத்துவமனை பெயரை மட்டுமே சொல்லி இருந்தாள். அடித்து பிடித்து அங்கே நுழைந்திருந்தான் சூரியின் முகிலன்.

அவன் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் நுழையும் போதே, கண்ணாடி தடுப்பின் வழியே தெரிந்த சூரியின் உருவம் அவனை அச்சத்தில் தள்ளியது.

தலையில் பெரிதாய் கட்டு போடப்பட்டு இருக்க, ஏதேதோ கருவிகள் அவளை சுற்றி இயங்கிக் கொண்டிருந்தன. விழிகள் உவர் நீரை வெளித் தள்ள முயல, அவன் இதழ்களோ மென்மையாய் அவள் பெயரை உச்சரித்தன.... ‘சூரி..’ என.

அதற்குள் எங்கிருந்தோ தோழியர் மூவரும் ஓடி வந்து இவனை சூழ்ந்தனர். “அண்ணா.. பாருங்கண்ணா எப்படி படுத்து இருக்கான்னு... அவளோட கடைசி ஆசையே உங்ககிட்ட ஒரே ஒரு முறை மனசார மன்னிப்பு கேக்கணும்ங்கிறது தான். ஆனா இனி அது நடக்காது போல அண்ணா. டாக்டர் சொல்றதை எல்லாம் கேட்டா ரொம்ப பயமா இருக்கு அண்ணா.’’ என்ற கார்த்தி தேம்பி தேம்பி அழுதாள்.

அதுவரை சூரியை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் வெளியே வர, முகிலன் வேகமாய் அவரை நெருங்கினான்.

“சார்...’’ என அவன் அவர் முன் தயங்கி நிற்க, தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி அவரை நிமிர்ந்து பார்த்தவன், “நீங்க என்ன வேணும் அவங்களுக்கு..?’’ என கேட்டார்.

“அவ என் பொண்டாட்டி சார்..’’ என்ற முகிலனின் பதிலில் காதல் உரத்து ஒலிக்க, தோழியர் மூவரும் விழி விரித்து அவனைப் பார்த்தனர்.

“ஓ.. ஐசி..’’ என்ற மருத்துவர், “சாரி சார்.. எங்களால ஆனா எல்லா முயற்சியும் செஞ்சிட்டோம். அவங்க உயிர் உடம்புல தங்கப் போறதும் இன்னும் கொஞ்ச நேரம் தான். முக்கியமான மூணு இடத்துல நரம்பு கட்டாகி ரத்தசேதம் அதிகாமாகி அதனால மூளை செயல் இழப்பு அடைஞ்சி இருக்கு. இனி ஆபரேசன் செஞ்சாலும் நோ யூஸ். மனசை தைரியமா வச்சிக்கோங்க. அவங்க பேமிலி மெம்பர்சுக்கு சொல்லிடுங்க.’’ என்றவர் அங்கிருந்து நடக்க, முகிலன் அந்த மருத்துவமனையின் தரையில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.

கைகள் இரண்டைக் கொண்டும் முகத்தில் அறைந்துக் கொண்டவன், “ஐயோ.. சூரி..’’ என கதறி அழத் துவங்க, மற்ற தோழியர் அவனை எப்படி தேற்றுவது எனப் புரியாமல் அவனை சூழ்ந்து நின்றனர்.

முதலில் சற்றே தெளிந்தவள் ரம்யா தான். “வாங்க அண்ணா சூரிப் பக்கத்துல போலாம்.’’ என அவன் கரம் பற்றி எழுப்பினாள்.

“இல்ல.. நான் வர மாட்டேன்.’’ என்று அவன் பின் வாங்க, இப்பொழுது ராவியும் ரம்யாவோடு சேர்ந்து அவனை எழுப்ப முயற்சித்தாள்.

“அண்ணா... அவ உங்ககிட்ட பேச ஆசைப்பட்டதை எல்லாம்... அவ போன்ல ரெக்கார்ட் பண்ணி வச்சி இருக்கா. உள்ள வாங்க அண்ணா.. அவ முகத்தை பார்த்துகிட்டே நீங்க அந்த ஆடியோவை கேட்டா தான் அவளுக்கு நிம்மதி கிடைக்கும்.’’ என்று சொல்ல முகிலன் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.

நால்வரும் அந்த அறைக்குள் நுழைந்ததும், முகிலன் உடல் முழுக்க நடுக்கம் பரவ அவள் படுக்கைக்கு அருகில் சென்று நின்றான்.

ரம்யா உடனே தன் கைகளில் இருந்த அலைபேசியை இயக்கினாள். “முகிலன்... நான் பேசுறது கேக்குதா முகிலன்..’’ என்ற சூரியின் வலி நிரம்பிய குரல் முகிலனின் செவி தொட அவன் கண்கள் அவனறியால் கலங்கியது.

“நான் பிரியனை லவ் பண்ணது உண்மை தான். அவனை பழி வாங்கணும்னு உங்கப் பின்னாடி சுத்தி அலைஞ்சதும் உண்மை தான். ஆனா அந்த சூரிக்கு உங்களைப் பிடிக்கவே பிடிக்காது முகிலன்.

உங்க விறைப்பு, நேர்மை, முறைப்பு எதுவுமே அந்த சூரிக்கு பிடிக்காது. இன்னும் சொல்லப் போனா அந்த சூரி உங்களை காதலிக்கவே இல்ல. ஏன் சின்ன ஈர்ப்பு கூட அந்த நேரத்துல உங்க மேல அவளுக்கு இல்ல.

நீங்க என் வாழ்க்கைக்கு ஒத்து வர மாட்டீங்கன்னு நான் நினச்சி விலகி போன சமயத்துல நீங்களா என்னை நெருங்கி வந்தீங்க. நித்தியோட மாமாவா உங்க இன்னொரு முகம் எனக்கு தெரிய வந்துச்சி.

உங்க சிரிப்பு, உங்க பொறுமை எல்லாமே பிடிச்சாலும் உங்ககிட்ட பழக ஒரு தயக்கம் இருந்துட்டே இருந்துச்சி. அன்னைக்கு ஒரு நாள் உங்க வீட்டு பால்கனியில வச்சி என்னை கேட்டீங்க இல்ல ஒரு கேள்வி.

ரெண்டு அனாதைகள் சேர்ந்து குடும்பமா மாறி இருக்கோம். இதுல நீயும் வந்து சேர்ந்து ஒரு முழுக் குடும்பமா மாத்த முடியுமான்னு..? அப்ப தான் எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சது முகிலன்.

தன் அம்மாவுக்காக கஷ்டப்பட்ட சின்ன வயசு முகிலனை மடியில போட்டு கொஞ்சனும் போல இருந்தது. தன் அக்கா மகளை தைரியமா தனி ஒரு மனுசனா வளக்குற முகிலனோட கன்னத்துல கோடி முத்தம் கொடுக்கணும் போல பேராசை வந்துச்சி.

உங்களை உங்களுக்காக மட்டுமே ரொம்ப பிடிச்சி போனது முகிலன். ஐ லவ் யூ முகிலன். ஒரு முறை சொன்னாலும் கோடி முறை சொன்னாலும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் மாறப்போறதில்லை.

அது மாதிரி தான் என்னோட காதலும். எப்பவும் இனி மாறப்போறதில்லை. நீங்க வெறுத்தாலும், விரும்பினாலும் நான் எப்பவும் முகிலனோட சூரி தான். இதையெல்லாம் உங்களை நேர்ல பாத்து சொல்லனும்னு ஆசை. ஆனா அதுக்கு தான் நீங்க சந்தர்ப்பமே கொடுக்க போறதில்லையே.

அதனால தான் இந்த ஆடியோ. ஒரு வேளை நான் இந்த உலகத்துல இல்லாத நாள் ஒன்னு வந்தா என் மேல இருக்க கோபம் குறைஞ்சி நூத்துல ஒரு வாய்ப்பா நீங்க இந்த ஆடியோவை கேட்கலாம் இல்லையா.

லவ் யூ முகிலன். லவ் யூ ஆல்வேஸ்...’’ என்ற குரலோடு அந்த ஆடியோ முற்றுப் பெற, “சூரி..’’ என்ற கேவலோடு முகிலன் சூரியின் பாதங்களில் விழுந்தான்.

மற்ற தோழிகளும் கதறி அழ, இதய துடிப்பை காட்டும் கருவியில் மெல்ல மெல்ல சூரியின் துடிப்பு குறைந்து அடங்கிக் கொண்டிருந்தது.

கரெக்ட் செய்யப்படுவான்.

 

Sponsored

Advertisements

Top