Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 14

Priya kumar

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
View attachment 10381அத்தியாயம் 14


படுக்கையில் வந்து விழுந்த கமலத்திற்கு தூக்கம் தொலைதூரத்தில் இருந்தது....வெற்றி பேசிய வார்த்தைகள் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தன... அவர் மட்டும் என்ன இத்தனை வருடங்களில் மகிழ்ச்சியாகவா இருந்தார்…. தன் தாயை பிரிந்து…. உறவுகளைப் பிரிந்து….. தெரியாத ஊரில் வந்து அவர் பட்ட வேதனைகளும் வடித்த கண்ணீரும் யாருக்குத் தெரியும்…...அந்தக் காலங்களில் சுந்தரத்தின் அன்பும் அணுசரனையும் மட்டுமே அவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது எனலாம்….

அதற்காக அவரால் தன் கணவனின் தன்மானத்தை விட்டுக் கொடுத்துவிட முடியுமா…. கமலம் பிரிந்து செல்லும் போது வெற்றிக்கு ஆறு வயது இருக்கலாம். அவனுக்கு பெரிதாக விவரம் தெரியாது.’கமலா அத்தை எங்கே என்று ஏங்கியவனுக்கு...கமலா அத்தை வீட்டில் வேலை பார்த்த வரை காதல் திருமணம் புரிந்து கொண்டு சென்று விட்டார்’ என்று மட்டுமே கூறி வளர்க்கப்பட்டு இருக்கிறான். அவனுக்கு கமலமும் சுந்தரமும் பட்ட அவமானங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கமலத்தால் அத்தனையும் மறந்து விட முடியுமா….. கமலம் தாயின் நினைவு கொள்ளாத நாளே இல்லை தான்….

ஆனால் கோபித்துக் கொண்டு சென்று விட்டு வலிய திரும்பி வந்தால் வாழ்வாதாரம் தேடி வந்திருப்பதாக பேசி விட மாட்டார்களா….. அது தன் கணவரின் கௌரவத்திற்கு மேலும் இழுக்கைத் தேடித் தந்து விடாதா...ஒருநாள் தன் தாயை சந்திக்கும் காலம் கனியும் என்றிருந்தவர்... கடவுளும் கண் திறக்கவே இதோ மீண்டும் தன் தாயுடன் சேர்ந்து விட்டார்... இதையெல்லாம் ஒரு நாள் வெற்றி புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் தூங்கிப்போனார் கமலம்...


அன்று பூச்சொரிதல் விழா…. சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள மக்கள் பூக்கள் நிரம்பிய தட்டுகளை ஏந்திக் கொண்டு ஊர்வலமாக சென்று சிறப்பு அலங்காரத்தில் இருக்கும் அம்மனுக்கு மலர்மாரி பொழிந்து ஆராதனை செய்வர்...இந்த நாளில் இருந்தே திருவிழா கொண்டாட்டங்கள் துவங்க ஆரம்பிக்கும்…

மயிலம்மை வீட்டிலும் பூச்சொரிதல் விழாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்...எல்லோரும் தயாராகியும் கயல் இன்னும் வராததால் வீட்டு வாயிலில் நின்று அஞ்சுகம்…

“இந்தக் கயலு இம்புட்டு நேரம் என்ன பண்றா... கயலு வெரசா வா புள்ள…” என்றார்.

“இந்தா வாரேன்மா…” என்ற கயல் பூக்கள் நிரம்பிய தட்டினை ஏந்திக் கொண்டு வேகமாக வாயிலை நோக்கி ஓடியவள் எதிரே இருந்த மேசையில் கால் இடித்து விடவே….நிலை தடமாறி விழப் போனாள்…

“போச்சு தட்டையும் போட்டு...நாமளும் விழுந்து வக்கப் போறோம்... இன்னைக்கு எத்தன பல்லு போகப் போகுதோ...பல்லு இல்லாட்டி கதிர் மாமா என்னயக் கட்டிக்குவாரா…” என்று அந்த நிலையிலும் கதிரைப் பற்றிய சிந்தனையுடனே விழப் போனவளை ஆபத்பாந்தவனாய்த் தாங்கிப் பிடித்தான் கதிர்…

“நடக்கும் போது பாத்து நிதானமா நடக்க மாட்டியா…”என்றவனை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்...
எப்பொழுதும் பேண்ட் சட்டையிலோ...லுங்கியிலோ…
இருப்பவன் இன்று வெள்ளை வேட்டி சட்டையில் அட்டகாசமாய் இருந்தான்...அந்த உடை அவனுக்கு அத்தனை பாந்தமாய் பொருந்தியிருந்தது….

தன்னுடைய கேள்விக்கு பதில் வராமல் போகவே அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள்... அவளது கடலளவு காதலைத் தேக்கி வைத்திருந்த அவளது விழிகளைச் சந்தித்தன…. ஆழிப் பேரலையாய் தன்னைச் சுழற்றியடிக்கும் அந்த விழி வீச்சில் தொலைந்து தான் போனான் கதிர்…

“கதிர் மாமா இன்னைக்கு நீங்க இந்த வெள்ளை வேட்டி சட்டையில் ரொம்ப அழகா இருக்கீங்க….” என்று மயக்கமாய் வெளிவந்த அவள் குரலில் தானும் மயங்கினாலும் சடாரென்று சுதாரித்துக் கொண்டவன் அவளை விலக்கி நிறுத்தி விட்டு நகரப் போனவனை…

“மாமா...இங்க வாங்களேன்….. என்று அவன் தோள் பற்றி இழுத்தவள் எதுவோ கூறப் போகிறாள் என்று நம்ம்மம்ம்ம்பிக் குனிந்தவனின் கன்னத்தில் அழுந்த தன் முதல் முத்திரையைப் பதித்து விட்டு சிட்டாகப் பறந்து விட்டாள்...

இங்கே தன் கன்னத்தை தடவியபடியே….இன்பமாய் அதிர்ந்த கதிரோ…..”வர வர உனக்கு சேட்ட அதிகமாயிருச்சு பாப்பு...என்னைய ரொம்ப சோதிக்கிற…” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான்….பின்னே...அவன் காதலி கொடுத்த மருந்து அப்படி..

கயல் வந்தவுடன் அனைவரும் கோவிலுக்குச் செல்லலாயினர்...
அன்று சுற்றுப்பட்டு மக்கள் அனைவரும் திரளாகக் கூடுவதால் ஊரின் பொதுப் பிரச்சினைகள் அங்கு பேசித் தீர்த்துக் கொள்ளப்படும் …

பொறையூர் மற்றும் தேவனூருக்கு இடையே 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு குளம் இருக்கிறது...தேவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கிய குளத்தில் கட்டிட இடிபாடுகளை கொண்டு கொண்டுவந்து கொட்டுகின்றனர் பொறையூர் வாசிகள்..

இதனால் குளம் வற்றி போகும் அபாயம் ஏற்பட்டிருந்தது... பொறையூரை ஆண்ட மன்னன் வெட்டி வைத்த குளம் ஆதலால் குளத்தை சொந்தம் கொண்டாடினர் பொறையூர் மக்கள்…. இது பற்றி காவல்துறையில் புகார் அளித்தும் பயன் இல்லாமல் போய்விட்டது.. இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடினால் வழக்கு முடிவதற்குள் குளம் வற்றிக் காணாமல் போய்விடும்….

பின்னர் குளத்தை காணவில்லை என்று மற்றொரு வழக்கு தொடுக்க நேரிடும் என்பதால் இன்று இரு தரப்பினருக்குமிடையே இது பற்றிய பேச்சு வார்த்தை நடத்தினர் .அதன் முடிவில் திருவிழா முடிந்த மறுநாள் இரு ஊருக்குமிடையே சிலம்பப் போட்டி நடைபெறும் என்றும் போட்டியில் வெல்லும் ஊருக்கே குளம் சொந்தம் என்று அறிவிக்கப்படும் என்றும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது….

“நீ போட்டியில கலந்துக்க போறியா ராஜா….” குறும்பாக கேட்டாள் மதுமதி..

“யாரு நானு...நம்ம ரேஞ்சே தனி….
ஒரு கராத்தே… ஒரு ஜூடோ... ஒரு டேக்வாண்டோ...இதெல்லாம்னா எனக்கு ஓகே ….. சிலம்பமாம்…. சிலம்பம்…. இன்னும் அந்த காலத்திலேயே இருந்துகிட்டு ….
சில்லி ஓல்டு ஏஜ் பீப்புள்ஸ்…” என்றான்.

“அது என்ன சிலம்பாட்டத்தை அவ்வளவு குறைவாக எடை போட்டுட்ட ராஜா... பிரிட்டன் மியூசியத்தில தமிழர்களோட தற்காப்பு கலையின் அடையாளமா சிலம்பக் கம்பு வச்சிருக்காங்க தெரியுமா உனக்கு…” என்றாள் மதுமதி.


“அப்படிச் சொல்லு மதுக்கண்ணு... இவனுக்கு ஒண்ணும் உருப்படியா தெரியாது … ஆனா வாயை கேளு …
எட்டூருக்கு நீளும் ….. இந்த மாதிரி வீர விளையாட்டல்லாம் மறக்கப் போயித்தேன் மனுசமக்களுக்கு உடம்பெல்லாம் நோவு வந்து கிடக்காங்க... அவனப்பாரு.. ஒரு மழைக்கு தாங்கமாட்டான்….

உங்க தாத்தா அந்த காலத்துல சிலம்பை எடுத்து சுத்துனா காத்துக் கூட இடயில புகுறாது...அதப் பாத்துத்தேன் அவுகள நா கட்டிக்கிட்டேனாக்கும்….” என்றார் மயிலம்மை..
ராஜா அதற்கு மேலும் ஏன் அங்கே நிற்கப் போகிறான்...


அந்தக் காலை வேளையில் கீச்சுக்கீச்சென்ற பறவைகளின் ஒலியும் உடலை வருடும் குளிர்ந்த தென்றலும் ஓர் உன்னதமான அனுபவத்தை தரவே தோட்டத்தில் கண்மூடி அமர்ந்து இருந்தாள் மதுமதி...அவள் மனம் எங்கும் வெற்றியின் நடவடிக்கைகளே ஆட்கொண்டிருந்தது.. அன்று முதல் நாள் அவளை அவன் தவறாக புரிந்து கொண்டு அவளிடம் கத்திய போதே மதுரைக்கு பெட்டியை கட்டினாள் தான்…….

அவளிடம் இதுவரை யாரும் முகம் திருப்பிக் கூட பேசியதில்லை ….
பள்ளியிலும் படு சுட்டியான மாணவியாக இருந்ததால் ஆசிரியர்களும் அன்பாகவே நடத்தினர்...தன் தாய் தந்தையிடமும் ஒரே செல்ல மகளாக வளர்ந்து விட்ட படியால் வாழ்வில் முதல் முறையாக அவளை நோக்கி பாய்ந்த அவனது சுடு சொற்களை அவளால் தாங்க முடியவில்லை…..

“ என்ன செய்கிற மது….”என்று வந்த கமலத்தின் முகத்தில் என்றுமில்லாத ஒரு நிறைவு இருந்தது….அது தன் பிறந்த வீடு வீட்டு உறவுகளை கண்டுவிட்டதால் வந்தது என்பதை உணர்ந்தவள்.. அதனைக் கெடுக்க விரும்பாதவளாய் …

“துணிகளை அடுக்கிறேன்ம்மா..”
என்று கூறி விட்டாள்…

அதன் பின்னர் வெற்றிவேல் வீட்டில் இருந்தால் அவள் அறையிலேயே முடங்கிக் கொள்வாள்..அவன் எதிரில் கூட செல்ல விரும்பவில்லை மதுமதி….. இப்படி இருக்கையில் நேற்று மீண்டும் அவனது சொற்கள் அவளை வெகுவாக புண்படுத்தின...ஏன் நம்மிடம் மட்டும் இவன் இப்படி கடுமை காட்ட வேண்டும்... என்று வெற்றிவேலைப் பற்றிய சிந்தனைகளை ஓட விட்டுக்கொண்டிருந்த மதுமதியை குதூகலமாய் வந்த கயலின் குரல் கலைத்தது…

“அண்ணி….இங்கே வாங்க…. என்று கை பிடித்து இழுத்துச் சென்ற கயல்,

“ இங்கே பாருங்க…“என்று முளைவிட்டிருந்த முளைப்பாரியை காட்டினாள்..

திருவிழாச் சமயங்களில் பெண்கள் தத்தம் வீடுகளில் மண்சட்டியில் முளைப்பாரி வளர்த்து திருவிழாவின் இறுதி நாளில் ஊர்வலமாய் சுற்றி வருவர்.. முளைப்பாரி வளர்ந்திருப்பது போல குடும்பமும் செழிப்பாக தளைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை….

மயிலம்மை வீட்டில் கயலும் மதுமதியும் முளைப்பாரி பரப்பி இருந்தனர் ….. கயல் ஒரு வேண்டுதலோடு முளைப்பாரி பாவி இருந்தாள்….அவளுக்கு வேறு என்ன வேண்டுதல் இருக்கப்போகிறது …..கதிரைத் திருமணம் செய்துகொள்வது தானே அவளது ஆகப் பெரும் லட்சியம்…


கயலின் மகிழ்ச்சியை சிறு முறுவலுடன் நோக்கிக் கொண்டிருந்த மதுமதி
“சந்தோஷம் கயல்…” என்றாள் ….

“நீங்களும் கவலப் படாதீங்க அண்ணி...உங்க பயறும் சீக்கிரமாவே முளை விட்டுரும்…” என்றவள் இந்த மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஓடி விட்டாள்..


“அவ சந்தோசத்துக்கு நீதான் காரணம்னு தெரியாம உன்கிட்டயே அதை சொல்லிட்டு போறா பாரு…”
என்று அஞ்சுகத்தின் குரலில் திரும்பினாள் மதுமதி….

“ அத்தை…. அது வந்து…”

“ பாத்தேன்மா... எல்லாத்தையும் பார்த்தேன்“ என்றார் அஞ்சுகம்.

நேற்று கயல் மிகவும் வருத்தத்தோடு இருந்தாள். காரணம் கேட்ட மதுமதியிடம் முளைப்பாரி பரப்பி இரண்டு நாளாகியும் இன்னும் முளை விடவில்லை…. முளைப்பாரி சரியாக வளராமல் போய்விட்டாலோ அது அபசகுணமாக கருதப்படும் என்றும வேண்டுதலும் பலிக்காமல் போய்விடும் என்றும் வருத்தப்பட்டாள் கயல்…. கண்களின் ஓரம் சிறு துளி நீர் கூட தென்பட்டதோ….

அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பினாள் மதுமதி..

அதிகாலை 3 மணி அளவில் தாகம் ஏற்படவே தண்ணீர் குடிக்க எழுந்தவள் ஒரு ஆர்வத்தில் உந்துதலில் முளைப்பாரியினை சென்று பார்த்தாள்... அவள் விரும்பியது போலவே முளைவிட்டிருந்தது…ஆனால் முளைத்திருந்தது கயலுடையது அல்ல….மதுமதியினுடையது..

சிறிது நேரம் சிந்தித்த மதுமதி முளைப்பாரி சட்டியினை கயலுடைய இடத்திலிருந்ததை தன்னுடைய இடத்திற்கும்... தன்னுடைய இடத்திலிருந்துததை கயலுடைய இடத்திற்கும் மாற்றி வைத்தாள்... இதைப் பார்த்து விட்டுத்தான் கயல் தன்னுடைய முளைப்பாரி என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்..
இது யாருக்கும் தெரியாது என்று நினைத்து இருந்தவளை அஞ்சுகம் பார்த்துவிட்டது திடுக்கிட வைத்தது…

அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று தயங்கியவள்…

“அத்த….நேத்து கயல் ரொம்ப வருத்தப்பட்டா அத்த... அதுதான்... அதோட எனக்கும் பெருசா எந்த வேண்டுதலும் இல்லை…” என்று இழுத்தாள்.

“ உன்னை மாதிரி பெரிய மனசு உள்ளவங்களுக்கு அந்த ஆண்டவன் எல்லாத்தையும் கேட்காமலேயே குடுப்பான்ம்மா….” என்றார்

அவரிடம் புன்னகைத்துவிட்டு திரும்பியவளுக்கு திக்கென்றிருந்தது...

‘ஐயோ…. அதை பார்த்து இருந்தா..
அடுத்து நடந்ததையும் பார்த்து இருக்கணுமே….

நானும்…...ராஜாவும்….
பேசினது எல்லாம் கேட்டிருப்பார்களோ …. கடவுளே…. அத்தை என்னைய கோபிப்பாங்களோ…’ என்று எண்ணியவள் தயங்கியபடியே அவர் முகத்தைப் பார்த்தாள்…
அதையும் பார்த்துவிட்டேன் என்று செய்தி அவர் முகத்தில் இருந்தது..

---தொடரும்


சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள்….படித்துவிட்டுச் சொல்லுங்கப்பா...உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்

 

Attachments

Last edited:

Advertisements

Top