• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
View attachment 9551




அத்தியாயம் 3

“இல்லம்மா நான் இங்க இருக்கப் போவதில்லை..." என்று அழுகையுடனே ஆனால் திடமான குரலில் கூறிய மகளிடம்…
“நானும் உன்னை மதுரைக்கு அழைச்சுட்டுப் போகப் போவதில்லை...”என்றார் கமலம்.

“எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படிப் பேசுறீங்களேம்மா...” என்ற மகளிடம் ‘எல்லாம் தெரிஞ்சதால தான் இப்படிப் பேசுகிறேன்’ என்று மனதில் எண்ணிக் கொண்டார் .

“இதப்பார் மது…இங்கே வரும்போது இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்து வரல...ஆனா நடந்துருச்சு...இனிமே அத மாத்தவும் முடியாது...அந்த மாற்றத்தை ஏத்துக்கத்தான் வேணும்….. நீ படித்த பெண்...புரிஞ்சு நடந்துக்கோ…புகுந்த வீட்டில் பெற்றோருக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்காட்டாலும் பரவாயில்லை,கெட்ட பேர் வாங்கிக் குடுத்துடாதே..."என்றார் கமலம்.

வாசல்வரை சென்று பின்னர் ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்தவர் மதுமதியிடம்,"இனிமே நீ மதுரைக்கு வீட்டுக்கு வரதா இருந்தா உன் புருஷன் கூட மட்டும் தான் வரனும்...இது என் மேல சத்தியம்..." என்றுவிட்டுச் சென்றார்.

எல்லோரிடமும் தலையசைத்து விடைபெற்றவர் இறுதியாக வெற்றிவேலிடம் வந்து “வெற்றி….. என் பெண் மிகவும் மென்மையானவள்….. மேன்மையானவளும் கூட…இன்னொரு முறை அவ என் மடியில் வந்து நான் வாழ்க்கையில் தோத்துட்டேன் அம்மா என்று அழுதால் அதைத் தாங்கும் சக்தி எனக்கும் இல்லை...அவளுக்கும் இல்லை..." என்றவர் வாசல் நோக்கி நடந்து விட்டார்.

மகளிடம் கண்டிப்பாகப் பேசிவிட்டு வந்தாலும் காரில் ஏறி அமர்ந்தவுடன் கண்ணீர் பெருகுவதைக் கமலத்தால் தடுக்க முடியவில்லை...உடைந்து போய்க் கணவரின் தோளில் சாய்ந்து கதறிவிட்டார்...மனைவியின் தலையினை வருடியபடியே

“கவலைப்படாதே கமலா...மதுவின் வாழ்வு நிச்சயம் ஒரு நாள் சீராகும்… அதுக்காக நாம இந்தப் பிரிவ சகிச்சு தான் ஆகணும்…அவளோட நலவாழ்வுக்காக எதையும் தாங்கிப்போம்...என்ன ஒண்ணு இவ்வளவு கடுமையா மதுகிட்ட நீ பேசியிருக்க வேண்டியதில்ல...சரி விடு..ஒரு நாள் மது நம்மள புரிஞ்சுப்பா…”என்றவரின் குரலும் தழுதழுத்திருந்தது...தோள் மீதும் மார் மீதும் தூக்கி வளர்த்தெடுத்த செல்ல மகள் அல்லவா...

தாய் கூறிவிட்டுச் சென்றதை கிரகித்துக் கொள்ள மதுமதிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன...கார் கிளம்பும் சத்தம் கேட்டவள் சுயம் பெற்று அறையின் வாசலுக்கு வந்த போது கார் ஒரு சிறு புள்ளியாக மட்டுமே தெரிந்தது.சூழ்நிலையின் கணம் தாங்காமல் தடுமாறியவள் தள்ளாடிய படியே மயங்கினாள். அறையின் வாசலுக்கு அவள் வந்ததிலிருந்தே அவளை உற்று நோக்கிய படி இருந்த வெற்றிவேல் அவள் தள்ளாடவும் மயங்கி விழப் போகிறாள் என ஊகித்தவன்...அவள் சரியத் துவங்கும் போது அவளைத் தாங்கிப் பிடித்தான்…

“மது...பால் அடுப்புல வச்சிருக்கேன்...அதப் பாருமா…”

“மது...பொழுது சாஞ்சுருச்சு விளக்கேத்துமா…”

“மது...பிள்ளைக்கு முடியல.. ஆசுபத்திரிக்கு கூப்பிட்டு போகணும்னு ,செல்லம்மா பணம் கேட்டா எடுத்துக் குடுத்துரும்மா…”

இப்படிச் சிறு சிறு வேலைகள் கூறி குடும்பப் பொறுப்புககளுக்குள் மதுமதியை இழுத்துக் கொண்டார் அஞ்சுகம்...

கமலம் கிளம்பிச் சென்றதும் மயங்கிய மதுமதியை அன்றிலிருந்து தாயாகவே தாங்கினார் அஞ்சுகம். அதனாலேயே அவளால் தனக்கு நேர்ந்த அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் இருந்து வெளிவர முடிந்தது...அவர் மதுமதியை சிறிது சிறிதாக அந்த வீட்டுச் சூழலுக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டிருந்தார்...
“அம்மாடி மது....பத்தாயத்திலிருந்து கேப்பை எடுத்துட்டு வரணும்... செல்லம்மாட்ட சொல்லுமா…”

பத்தாயம் என்ற வார்த்தையில் மதுமதிக்கு பழைய நினைவுகள் மலர்ந்தன...
இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுமதி தேவனூர் வந்திருந்த சமயம் அது...
அஞ்சுகம் மதுமதியிடம் மது “அங்கம்மா பத்தாயத்துல நெல் இறக்கிட்டு இருக்கா...அவள நான் கூப்பிட்டதா சொல்லுமா…” என்றார் அஞ்சுகம்.

பத்தாயம் என்பது மரத்தால் ஆன தானியங்களைச் சேமிக்க உதவும் கொள்கலனாகும்.இது 10 முதல் 12 அடி வரை உயரம் கொண்டதாக இருக்கும்.இதில் நெல்,கம்பு,கேழ்வரகு போன்ற தானியங்களை விற்றவை போக மீதமானதை சேமித்து வைப்பர்.பத்தாயத்தை வீட்டில் ஒதுக்குப்புறமான அதிக வெளிச்சமில்லாத அறையில் வைத்திருப்பர்.
நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த மதுமதிக்குப் பத்தாயம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை...

அஞ்சுகம் கூறிவிட்டுச் சென்றதும் கயலிடம் சென்று பத்தாயத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று பத்தாயம் வைத்திருந்த அறை வாயிலிலேயே நின்று கொண்டு விசாரித்தாள் மதுமதி...

கயல் தன் வயதுக்கே உரிய குறும்புடன்,“ஐயோ அண்ணி...அதுக்கு ரொம்பத் தூரம் போகணுமே…” என்று கூறிவிட்டுச் சென்றாள்.அதை உண்மை என்று நம்பி வெளியே சென்றாள் மதுமதி...


வீட்டின் வெளியே வந்த மதுமதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முருகனிடம் சென்று "அங்கிள்...எனக்கு பத்தாயம்ங்கிற இடத்துக்கு எப்படிப் போகணும்னு வழி சொல்றீங்களா...“ என்றாள்.அதைக் கேட்டுக் குழம்பிய முருகன் திருதிருவென விழித்தார்…

வாசலில் மது நிற்பதைக் கவனித்த மயிலம்மை...”என்ன கண்ணு...இங்க என்ன பண்ற...இந்தப்பய ஏன் இந்த முழி முழிக்கிறான்" என்றார்.மதுமதி மிகவும் கவனமாக முகத்தை வைத்துக் கொண்டு நடந்ததைக் கூறினாள்...முருகனைத் திரும்பி பார்த்த மயிலம்மை அவரை அனுப்பி விட்டு கயலை கடிந்து கொண்டார்...

“கொழுப்பு புடிச்ச கழுத...எம்பேத்திய நக்கலாடி பண்ற…இரு இன்னைக்கு உனக்கு இருக்கு..."

விவரம் அறிந்த கயல் விழுந்து விழுந்து சிரித்ததோடல்லாமல் வீட்டிலுள்ள அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிடும் நேரம் பார்த்து இந்தப் பத்தாய விசயத்தைப் போட்டு உடைத்து விட்டாள்.

அதன்பிறகு அந்தப் பத்தாயம் வைத்திருக்கும் அறையே இடிந்து விழுந்து விடுவதைப் போல அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்...மதுமதி முதலில் கோபமாக முறைத்தவள் பின்பு அவளும் கூடச் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்...

அந்த நினைவு தந்த புன்னகை முகத்துடனே இரவு உணவை முடித்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றவள் அதிர்ச்சி அடைந்தாள்...அங்கே அவள் உடைமைகள் அடங்கியிருந்த பையினைக் காணவில்லை...அறையைச் சுற்றிலும் தேடியவள் வெளியே வந்து தயக்கத்துடன் அஞ்சுகத்திடம் சென்று,”அத்த...என்னோட திங்ஸ்... பேக்...அங்க இல்லை அத்த...” என்றாள்.

“மது...உன்னோட துணிமணி யெல்லாம் மேல வெற்றி ரூம்புல இருக்கு...இனிமே நீயும் அங்கேயே தங்கிக்க...“ அமைதியாகவே ஒரு வெடிகுண்டை வீசினார் அஞ்சுகம்.

“அத்த நான் கீழ இருக்க ரும்லயே இருந்துக்குறேன்...ப்ளீஸ் அத்த…”

“இதப் பார் மது ..மேல இருக்குறது தான் உன் ரூம்பு...கீழ இருக்குறது விருந்தாளிக வந்தா போனா தங்குற ரூம்பு...நீ இப்ப இந்த வீட்டு மருமக...விருந்தாளி இல்ல... நாளப்பின்ன எனக்கப்பறம் இந்த வீட்டு மருவாதிய கட்டிக் காக்கப் போறவ நீ...”

“ப்ளீஸ் அத்த” கெஞ்சினாள் மதுமதி.

“நீ போடுற அந்த ப்ளீ...ஸ நான் ஆயிரந்தரம் உனக்குப் போடுறேன்...மேல போ.......நா ஒண்ணும் உன்னய இன்னக்கே எம்மவன் கூட வாழச் சொல்லலை...அதே சமயம் புருஷன் பொண்டாட்டினு ஆயிட்டா...அவுக விசயம் நாலு சுவத்துக்குள்ளதேன் இருக்கணும்...விசயம் வெளிய வந்துருச்சுனா...அது நாலு பேரு வாயிக்கு அவலாப் போயிரும்...நீங்க அடிப்பீங்களோ...புடிப்பீங்களோ... இல்ல ஆளுக்கொரு தெசயா நிப்பீங்களோ...அத உங்க ரூம்புல போயி பண்ணு...இது நாலு வேலையாளு வந்து போற இடம்...பாத்து நடந்துக்க..."

மனம் கணக்கவேறு வழியின்றி அடி மேல் அடி வைத்து படியேறிச் சென்றாள் மதுமதி...

அவளை மேலே அனுப்பிவிட்டு திரும்பிய அஞ்சுகத்தின் பார்வை சட்டத்திற்குள் சிரித்துக் கொண்டிருந்த மயிலம்மையின் மேல் படிந்தது...அதனருகே சென்று,

”அத்த...இது நீங்க ஆரம்பிச்சு வச்சுட்டுப் போன வாழ்க்கை...எனக்கு தெரிஞ்ச வரை நான் அவுகள வழி நடத்துறேன்...அதுக்கு மேல நீங்கதேன் தெய்வமா இருந்து அவுகள வாழ வைக்கணும்…”மனமுருகி வேண்டிக் கொண்டார் அஞ்சுகம்.

அறைக்குள் நுழைந்ததுமே மதுமதியின் பையினைக் கண்டவன்... இது தாயின் வேலையாகத் தான் இருக்கும் என்று உணர்ந்து கொண்டான்.மதுமதியின் வரவினை எதிர்பார்த்தே இருந்தான்.அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட கொலுசொலி கேட்கவே திரும்பிப் பார்த்தவன் அங்கு மதுமதி சங்கடத்துடனும் கலக்கத்துடனும் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.

“உ...உள்ள வா மது…”என்றவன் அவள் முகத்தை நன்கு பார்த்தான்.அவளை இப்படி நெருக்கமாகப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு மனதுக்குள் என்னவோ பொங்கியது….இப்படியே அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தன்னையும் மீறி அவளை நெங்கிக் கட்டி அணைத்து விடுவோம் என்ற அச்சத்தில் அவளுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்று கொண்டான்.

“அப்பத்தா மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு எனக்குத் தெரியாது...கடைசி காலத்துல உ..உங்களை எல்லாம் பாக்கணும் ஆசப்படுதுனு தான் நினைச்சேன்...கல்யாணம் நடந்துருச்சுங்கறதுக்காக நா உன்கிட்ட எந்த உரிமையும் எதிர் பாக்க மாட்டேன்...இந்த ரும்ல உன் விருப்பமில்லாம எதுவும் நடக்காது...இதையெல்லாம் நான்…” என்றவன் நிதானித்து ‘என்னடா இது நாம இவ்வளவு பேசுறோம்...இவ ஒண்ணும் பேசாம அமைதியா இருக்கா...இவ அப்படிப்பட்ட ஆள் இல்லயே’ என்று திரும்பிப் பார்த்தவன் விழித்தான்...திரும்பவும் பேசுவதற்கு அங்கு அவள் நின்றிருந்தால் தானே…சுற்றுமுற்றும் பார்த்தவன்...படுக்கையின் மறு கோடியிலிருந்த சோபாவில் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளைக் கண்டான்…

'ராட்சசி...ராட்சசி...நல்ல வேளை யாரும் கீழ இல்ல…இல்லனா பால்கனில நின்னு நான் மட்டும் தனியா பேசிகிட்டு இருக்கேன்னு தான நினச்சு இருப்பாங்க… வந்தன்னைக்கே கிறுக்கனாக்கிட்டா… ‘ என்று புலம்பியவன்...அதுசரி நாம செஞ்சு வச்ச வேலைக்கு இவ இந்த அளவு இறங்கி வந்ததே பெரிய விஷயம்...நிச்சயமாக அவளால் தன்னை வெறுக்க இயலாது...அவள் மனம் தன்னை மன்னித்து ஏற்கும் காலம் ஒரு நாள் வரும்...'என்று எண்ணியவன் பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டுப் படுக்கச் சென்றான்.

---தொடரும்

பி.கு: சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைவருக்கும் நன்றிகள்..யுடி சின்னதா இருக்குனு சொல்றீங்க...முடிந்த வரை நீளமா கொடுக்க முயற்சி செய்றேன்..இன்னைக்கு எபி பெரியதா இருக்கும்னு நினைக்கிறேன்..இதுக்கு மேல கேட்டா மீ பாவம்...படித்துவிட்டுக் கருத்தக்களைப் பதிவிடுங்கள்..உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கும் பிரியா குமார்

 




Attachments

Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top