Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 7

#1
Blend_1_20190306112145.jpg


அத்தியாயம் 7

“கதிர் மாமா….. கதிர் மாமா…. எழுந்திரிங்க” நல்ல தூக்கத்தில் இருந்த அவன் கண்விழித்தான்…

“ பா …..பாப்பு….. இங்க என்ன பண்ற…
இந்த ராத்திரி நேரத்துல எதுக்கு இங்கே வந்த…” என்று பதறினான் .

“ஒண்ணும் பதறாதீங்க மாமா….எல்லாரும் நல்லா தூங்குறாங்க …..”

“சரி இப்ப இங்கே இந்த நேரத்துல எதுக்கு வந்த…?”

“ அங்கம்மாக்கா தான் சொல்லுச்சு... நீங்க நெறைய வேலை எல்லாம் இழுத்துப் போட்டு பார்த்துட்டு சாப்பிடாமலேயே வந்து தூங்கிட்டீங்கனு….. அதான் சாப்பாடு கொண்டு வந்தேன்….”

விவரம் அறியா வயதிலேயே தன் தாயை இழந்துவிட்ட கதிர் தன் அம்மத்தாவிற்கு பின் தன்னுடைய பசியறிந்து உணவிடும் கயலை கண் கலங்க ஏறிட்டான்.

“ சீக்கிரம் சாப்பிடுங்க மாமா …..எனக்கும் பசிக்குது ….”

“பாப்பு நீயும் இன்னுமா சாப்பிடல ….”

“ நீங்க சாப்பிடலன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்படி சாப்பிட முடியும்…” என்ற கயலை விசித்திரமாக நோக்கியவன்

“என்னய அவ்வளவு பிடிக்குமா பாப்பு….”

“ உங்களை மட்டும் தான் பிடிக்கும் மாமா…. என்றவள் கதிரின் தோளில் சாய்ந்து கொண்டாள் .அவளின் தோள் மீது கையை போட்டு தன்னோடு இறுக்கிக்கொண்டான் கதிர் .


”எனக்கும் உன்னை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் பாப்பு... “என்று கூறிக் கொண்டிருந்த போது…

” என்னடா நடக்குது இங்க….” கர்ஜனையாக ஒலித்தது சண்முகத்தின் குரல் … விதிர்விதிர்த்துப் போய் நிமிர்ந்தவன் அங்கே குலசேகரன் அஞ்சுகம் ,மயிலம்மை , வெற்றிவேல் ,மகேந்திர பாண்டியன், அழகம்மை ,ராஜபாண்டியன் என ஒட்டுமொத்த குடும்பமும் நிற்பதைக் கண்டு கயலை விட்டு வேகமாக விலகி நின்றான்.

“ஏன்டா அநாதை நாயே... உனக்கு மூணு வேளை சோறு போட்டு…. இருக்க இடமும் கொடுத்து ...வீட்டில் தங்க வச்சா... நீ எங்க வீட்டு பொண்ணு மேல கை வைக்கிறியா... எம்புட்டு தைரியம்டா உனக்கு …”

“இல்லங்க நான்….”

“ பேசாத டா …….”என்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தது..

“உனக்கு என்னடா தகுதி இருக்கு எங்க வீட்டுப் பொண்ணு கூட பேசறதுக்கு பழகுறதுக்கு ….”

“பாத்தீயளா மச்சான்….நாயக் கூப்புட்டு நடுமனையில் வச்சா.. நாயி அது புத்தியதேன் காட்டும்... இந்தா காட்டிடானுல்ல..”
மேலும் சிலபல அடிகள் கதிருக்கு விழுந்தன.

“இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இங்க நிக்க கூடாது …வெளியில போடா நாயே …. “ சண்முகத்தின் இத்தனை பேச்சுகளுக்கும் அமைதியாக நின்ற அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவனுக்கு அந்த நொடி தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது...வலி ஒரு புறம் … குற்றவுணர்ச்சி மறு புறம்... என அவனை வாட்டி வதைத்தது...தந்நிலையை எடுத்துக் கூற முயன்றவனாய் அஞ்சுகத்திடம் சென்று....

"அத்த...."

“ என் பிள்ளை கணக்கா உனக்கு சோறு போட்டு வளர்த்தேன் ….இப்படி உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணிட்டியே நீ நல்லா இருப்பியா டா ….”

“இல்லத்த...நான்”

“என் கண்ணு முன்னாடி நிக்காத போயிரு..”

குலசேகரனிடம் திரும்பியவன்….

“மாமா என்னய…”

“ஆதரவு குடுத்த இந்த கையாலயே உன் உயிர எடுக்க வச்சுராத...உன் உயிர் மேல உனக்கு ஆசையிருந்தா...இனி நீ என் கண்ணுலயே படக்கூடாது…”

“வெற்றி...நீயாவது…”


உங்கிட்ட பழகின பாவத்துக்ககா கையக் கட்டிக்கிட்டு சும்மா நிக்கிறேன்.. சின்னப் பொண்ணு மனசக் கெடுக்கப் பாத்தியேடா...சிநேகிதத்துரோகி...உன் மூஞ்சில முழிக்கிறதே பாவம்...உனக்கே தெரியும் பொறுமைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னு...என் பொறுமை எல்லயத் தாண்டுறதுக்குள்ள ஓடியே போயிரு….”

இவர்களைப் போல ஏசியிருந்தால் கூட மனம் ஆறியிருக்கும்….மயிலம்மையோ பேசவும் விருப்பமின்றி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

உதடு கிழிந்து இரத்தம் வழிய...கிழிந்த சட்டையுடனும்...கலைந்த தலையுடனும்...மனம் நிறைய வேதனையுடனும் அந்த வீட்டை விட்டு வெளியேறினான் கதிர்…

“போகாதீங்க கதிர் மாமா...கதிர் மாமா...என்ற கயலின் கூக்குரல் அவன் ஆன்மாவின் ஆழம் வரை சென்று தாக்க… அரண்டு புரண்டு எழுந்து அமர்ந்தான்…

நிகழ்ந்தவை அனைத்தும் கனவு தானென்று மனம் உணர்ந்தால் அவன் அறிவு அதனை ஏற்க மறுத்தது...ஆழ்மன எண்ணங்களின் தூண்டல்களே...அதன் விளைவே கனவாக வெளிப்படும்...கயலின் மீதான தனது நேசத்தை வெளிப்படுத்தினால் இன்று வந்த கனவு...வருங்காலத்தின் நிகழ்வாக மாறக்கூடும்.

‘நமக்கு என்ன தகுதி இருக்கிறது...கயலைக் காதலிக்க…. அவள் வயதென்ன...நம் வயதென்ன...சரி...அப்படியே அவளைத் திருமணம் செய்து கொண்டாலும் நம்மால் கயலுக்கு இன்று அவள் வாழும் வசதியான வாழ்க்கையைத் தந்துவிட முடியுமா...என்ன இருக்கிறது நம்மிடம் ...அவளை இன்பமாய் வாழ வைக்க… இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆதரவளித்து நம்மை வளர்த்து ஆளாக்கிய வீட்டிற்கு துரோகம் செய்வது போன்றதல்லவா….கயல் மீதான காதலை வளரவிடுவது…

அதோடு வெற்றிவேலின் நட்பு...பெறற்கறியது..அவனுக்கிருக்கும் செல்வாக்கிற்கும்...அந்தஸ்திற்கும் சமமாக நின்று பேசக்கூட தகுதியில்லாத நம்மிடம் கண்டநாள் முதல் தூய நட்பை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறான்...அந்த நட்பிற்கு எந்த வகையிலும் குந்தகம் விளைவிக்கக்கூடாது…கயல் நன்றாக வாழ்வதை தூரத்தில் நின்று பார்த்தால் அதுவே போதும்...என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக அன்று தான் முளை விட்டிருந்த தன் காதலை வேரோடு தன் மனதுள்ளே புதைத்து வைத்தான்...இனி கயலிடமிருந்து விலகியே நிற்க வேண்டும் என்ற நினைவே மனதில் மரண வலியைத் தந்தாலும்...வாழ்நாள் முழுவதும் அந்த வலி தன்னைத் தொடரப் போகிறது என்று தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள சங்கல்பம் செய்து கொண்டான்….அவனது அந்த விலகலே அவனுக்கு எதிராக காய் நகர்த்தப் போவதை அறியாமல்….’

கயலுக்கு கதிரைக் காண வேண்டும்...அவனோடு பேச வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது..விடியும் முன்னரே வெளியில் செல்பவன் அப்படியே கல்லூரிக்கும் சென்று விடுவான்...இரவு நேரம் தாழ்த்தியே வீட்டிற்குள் வருகிறான்..அவன் எந்நேரம் சாப்பிடுகிறான்..எந்நேரம் தூங்குகிறான் என்பது தான் கயலின் முன்னிருந்த மில்லியன் டாலர் கேள்வி..

இன்று எப்படியும் அவனிடம் பேசிவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதிலேயே அவனது அறை நோக்கி நடந்து விட்டாள்...அறையினை நெருங்க நெருங்கவே எங்கிருந்தோ வந்த தயக்கத்தையும்...நாணத்தையும்..ஒதுக்கி வைத்துவிட்டு அறையினை அடையும் வேளை கதிரே உள்ளிருந்து வெளிப்பட்டான்…

கண் நிறைந்த ஆவலோடு,”கதிர் மாமா….”
என்றவளை அங்கு சற்றும் எதிர் பாராதவன் முகத்தில் ஆச்சரியக் குறி தோன்றியது…

“என்ன… என்ன விஷயம்..”
என்றான் கவனமாக பாப்புவை என்ற அவளுக்கேயான அழைப்பைத் தவிர்த்தபடி…

கயலுக்கு சப்பென்று ஆகிவிட்டது...இவன் புதியவன்...தான் அறிந்த கதிர் மாமாவுக்கு அன்பு காட்ட மட்டுமே தெரியும்...இதோ இதைப் போல் அந்நியப் பார்வை பார்த்துக் கொண்டு இறுகிப் போய் நிற்கத் தெரியாது..என்ன ஆகிவிட்டது இவருக்கு...என்று குழம்பித் தான் போனாள்…

அன்று மட்டுமல்ல.. அடுத்து வந்த நாட்களிலும் ….அன்றிலிருந்து இன்று வரை இப்படித்தான் நடந்து கொள்கிறான்…

யாரும் வேறுபாடு அறியா வண்ணம் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டான்...வெற்றிவேலுடன் இணைந்து விவசாயத்தில் பட்டப் படிப்பை முடித்தவன்...அவன் துவங்கிய பஞ்சு நூற்பாலையிலேயே அவனுக்கு உதவியாக வேலைக்குச் சேர்ந்து விட்டான்…. வெற்றிவேலுக்கு உயிரையும் கொடுக்கும் நண்பனாக இருப்பவன்...அவன் சொந்த பந்தங்கள் வரும் போது மட்டும் நான்கடி தள்ளியே நின்று கொள்வான்…

கயலுக்கு படிப்பு வரவில்லை என்பதற்காக வெற்றிவேலிடம் சொல்லி சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்தான்...அவளுக்கு தையலிலும் எம்பிராய்டரியிலும் இருக்கும் ஆர்வத்தை அறிந்து கொண்டு அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்ப வைத்தான்..அவளுக்கு மலர்களின் மேலுள்ள அலாதிப் பிரியத்தைத் தெரிந்து கொண்டு தோட்டத்தை பூச் செடிகளால் நிரப்பினான்...ஆனால் இவையனைத்தும் மறைமுகமாகவே செய்யப்பட்டன… எந்த நேரத்திலும் கயல் மீதான அவனது காதலைக் காட்டிக் கொள்ளவே இல்லை.

அவனது அந்த விலகலே கயலை அவன் பக்கம் இழுத்தது….கயல் அவளது பழைய கதிர் மாமாவை அவனிடம் தேடிக் கொண்டிருந்தாள்….காதலின் ஈர்ப்பு விதி அங்கே வேலை செய்து கொண்டிருந்தது...கதிர் நான்கடி விலகிச் சென்றால் கயல் நாற்பதடி அவனை நோக்கி எடுத்து வைத்தாள்...நெஞ்சம் நிறைந்த காதலை வைத்திருந்தாலும் கயலை நெருங்காமல் அவளையும் நெருங்க விடாமல் தன் காதலை மனதில் அடி ஆழத்தில் புதைத்துக் கொண்டான்…

காற்றடைத்த பந்தை தண்ணீரில் எவ்வளவு தான் அமிழ்த்தி வைத்தாலும் அது எதிர்த்திசையில் எம்பிக் கொண்டு மேலே தான் வரப் பார்க்கும்.அது போல அவன் மறைத்து வைக்கும் காதல் மணம் பரப்பி வெளிப்படாமலா போய்விடும்...

-தொடரும்

சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களுக்கும் பற்பல நன்றிகள்... உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்..
 
Top