• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
View attachment 10074

அத்தியாயம் 9

அன்று வெற்றிவேல் வீட்டில் அனைவரும் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பியிருந்தனர்.

திருமணத்திற்குச் செல்லும் வழியெல்லாம் கண்ணாடி வழியாக மயில் கழுத்து நிற புடவையில் ஆழ்ந்த பிங்க் நிற பார்டர் கொண்ட பட்டுப்புடவை உடுத்தி….ஜர்தோஷி வேலைப்பாடுகள் நிறைந்த பிங்க் நிற ரவிக்கை அணிந்து தன் மாமியாரால் கொடுக்கப்பட்ட நகைகள் மேலும் பொலிவூட்ட….தளர்த்திப் பிண்ணிய கூந்தலில் நெருக்க கட்டிய முல்லை மலர் சரம் சூடி தேவதையாய் அமர்ந்திருந்த மதுமதியை கண்டு ரசித்தபடியே வந்தான் வெற்றி…..

ஆரம்பத்தில் கண்டுகொள்ளாவிட்டாலும் போகப் போக அவனது பார்வை அவளை நெளிய வைத்தது….’ இப்ப எதுக்கு இந்த பார்வை பாக்கணும்….பெரிய்ய்ய்ய்….ய காதல் மன்னன் …..’ அவனது ரசிப்பான பார்வைக்கு தனது பலத்த கண்டனம் பார்வைகளை அனுப்பிக் கொண்டிருந்தாள் மதுமதி.

அதற்கெல்லாம் சளைக்காதவனாய் அவன் தன் காதல் பார்வைகளை தொடர்ந்து மனைவியின் புறம் வீசிக் கொண்டே இருந்ததில் மாமியாருக்கும் கயலுக்கும் நடுவில் அமர்ந்திருந்த மதுமதி தான் தலையை திருப்பிக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததும் முதலில் அவர்கள் கண்டது அழகம்மையின் வெறுப்பான முகத்தைத் திருப்பலைத்தான் ..அவர் குணம் ஏற்கனவே அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்பதால் அவர்களால் அதனை எளிதில் கடந்து விட முடிந்தது.மகேந்திரன் மட்டும் இவர்களோடு இணைந்து கொண்டார்.பெரிய வீட்டு மனிதர்களாக குலசேகரனும் அஞ்சுகமும் தாலி எடுத்து கொடுக்க இனிதே திருமணம் நிகழ்ந்தது.



அஞ்சுகம் உறவினர்களிடம் அளவளாவ கயல் தன் வயது உறவுப் பெண்களிடம் பேசிக் கொண்டிருக்க அதிகமாக உறவுகளைப் பற்றி அறிந்திராத மதுமதிக்கு அந்தச் சூழல் சிறு சலிப்பைக் கொடுத்தது…

சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவளை குண்டுக் கன்னங்களுடனும்...முட்டைக் கண்களுடனும்...இருந்த அந்த குட்டி ரோஜாக் குவியல் ஈர்த்தது…. இவள் அதனிடம் உதட்டைக் குவித்து சத்தம் எழுப்பிச் சிரிக்கவும் அந்தக் குழந்தை இவளிடம் வருவதற்காய் தாவியது…

“யாரு அஞ்சுகம் சித்தி மருமகளா...உறவுனு தெரியப் போயி தான் உங்கிட்ட வரத் தாவுறா…” என்றவாறே குழந்தையை மதுமதியிடம் கொடுத்தாள் அதன் தாய்…

குழந்தையைக் கையில் வாங்கியதிலிருந்து அதனுடனேயே ஐக்கியமாகிப் போனாள்...மதுமதி.சாப்பிடச் சென்ற போது கூட குழந்தையை மடியிலேயே இருத்திக் கொண்டாள்...குழந்தையும் அவளோடு ஒட்டிக் கொண்டது….திடீரென்று குழந்தை சிணுங்கத் தொடங்கவே …”பசிக்கு அழறா போல” என்று அதன் தாய் குழந்தையைத் தூக்கப் போன போது கூட மதுமதியை விட்டுச் செல்ல மறுத்து அழுத குழந்தையை மதுமதியிடமிருந்து பிரித்து எடுப்பதற்குள் படாத பாடு பட்டுப் போன அந்தத் தாய் “குழந்தைக மேல இவ்வளவு ஆசையா...சீக்கிரமே பெத்துக்கோ…” என்று கூறி விட்டுச் சென்றாள்…

உணவு முடித்து கைகழுவச் சென்ற மதுமதியின் கரத்தைப் பற்றி மாடிப்படியின் கீழே இருந்த மறைவுப் பகுதிக்கு இழுத்தான் வெற்றிவேல்.திகலுடன் நிமிர்ந்து பின் தன் கணவனை உணர்ந்து கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

“ அழகாச் சேலை கட்டிக்கிட்டா மட்டும் பத்தாது….அதுக்கு ஏத்த மாதிரி கவனமா இருக்கணும் “ என்றவனது பார்வை போன திக்கைக் கண்டு விலகியிருந்த தன் புடவை மாராப்பைச் சரி செய்தாள்...அவள் முதன்முதலில் சேலை கட்டியிருந்த அன்றும் இதே வார்த்தைகளைச் சொன்னவன் தான்… ஆனால் அதில் தடுக்கி விழுந்து விடுவாளோ என்ற அக்கறை மட்டுமே இருந்தது… ஆனால் இன்றோ அதில் கண்டிப்பும்,கணவனுக்கான உரிமையும் இருந்தைக் கண்டு அவள் நாணிச் சிவந்தாள்.

குழந்தை அவளை விட்டுச் செல்ல மறுத்த போது அதனைப் அவளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியில் மதுமதியின் சேலை மாராப்பு விலகி விட்டது...அருகருகே அமர்ந்திருந்த கயலோ...அஞ்சுகமோ இதனை கவனிக்க வாய்ப்பில்லை...ஆனால் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த வெற்றிவேல் இதனை கவனித்துவிட்டுத் தான் இங்கு வந்து மதுமதியை நாணமடையச் செய்து கொண்டிருக்கிறான்…

உண்டு விட்டு வந்த கயலை
“வாம்மா...என் வீட்டு மருமகளே…” என்று வரவேற்றார் அழகம்மையின் சகோதரரான தர்மர்.

“நான் ஒன்னும் உங்க வீட்டு மருமக இல்ல….” கயலிடம் இருந்து பதில் வெடுக்கென்று வந்தது .
அதில் தருமரின்
முகம் கருத்துச் சிறுத்தது.

“இப்ப இல்லன்னா என்ன... ஒரு நாள் என் வீட்டுக்கு வர போற மருமகதான… என்னம்மா தங்கச்சி…. என்ன நான் சொல்லுறது…” கயலிடம் ஆரம்பிதது அஞ்சுகத்திடம் முடித்தார் தருமர். அதற்கு பதிலளிக்க போன கயலை அடக்கி விட்டு

“நம்ம கையில் என்னண்ணே இருக்கு….ஆண்டவன் விட்ட வழி…
அது நடக்கும்போது பார்த்துக்கலாம்..”
என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து மகளையும் மருமகளையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தார் அஞ்சுகம்.

இவர்கள் நகர்ந்ததும் வம்பரசர் தருமர் வெற்றிவேலிடம் தன் விளையாட்டைக் காட்ட எண்ணி அவனை நோக்கிச் சென்றார்…”என்னப்பா வெற்றி ஊர்ல இருக்கிற கல்யாணத்தை எல்லாம் முன்ன நின்னு நடத்தி வைக்கிற குடும்பம் உங்களுது…. கடைசியில உன் கல்யாண சாப்பாட்ட சாப்பிட விடாமல் மயிலம்ம அத்த உன் அத்தை மகளை உன் தலையில கட்டிட்டு போயிருச்சேப்பா….”என்றார்.

அவரைத் திரும்பி ஏற இறங்கப் பார்த்த வெற்றிவேல்…. “ அது என்ன மாமா தலையில கட்டிட்டு போயிருச்சுங்குறீங்க …..என் விருப்பம் இல்லாம என் வாழ்க்கையில் எதுவும் நடந்துற முடியாது…. என்னைப் பத்தி தெரியுமில்ல உங்களுக்கு….” என்றான் சற்று காட்டமாகவே.

“இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு பெறவு என்ன நேர்த்திக் கடனுக்கு நீயே வந்து நிச்சயத்த நீயே நிப்பாட்டுன….”

“ அன்னைக்கு நான் நிச்சயத்த நிறுத்துனதும் அவளுக்காத்தான்….அப்புறம் அவளை கட்டிக்கிட்டதும் அவளுக்காகத்தான் தெரிஞ்சுக்கங்க….
அது சரி என் கதையை விடுங்க…. போன மாசம் ஓடிப்போன உங்க பொண்ணு பத்தி ஏதாவது விஷயம் தெரிஞ்சுச்சா... காலாகாலத்துல உங்க பையனுக்கு ஒரு பொண்ணா பார்த்து கட்டி வச்சிருங்க... இல்லன்னா உங்க வீட்டு கல்யாணச் சாப்பாட்ட யாருமே சாப்பிட முடியாதபடி உங்க பையனே செஞ்சுருவான் …..”

அவருடைய மகன் சந்திரன் கோபியர்களைக் கொஞ்சும் ரமணன்... வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு இடங்களில் வகைதொகையாக விளையாடி இருக்கிறான் ...இப்படியே விட்டால் அவனுக்கு யாருமே பெண் கொடுக்க முன் வரமாட்டார்கள் என்று அவனது லீலா வினோதங்களை எல்லாம் அறிந்தவனாக பூடகமாக கூறியிருந்தான் வெற்றிவேல்..


அவர் எய்த அம்பைக் கைப்பற்றி அவரின் மீதே அவரைவிட வீரியமாக எய்து இருந்தான் வெற்றிவேல்.. தன் மகனை எண்ணி நொந்தபடியே கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டு விலகிச் செல்லப் பார்த்தவரை….”மாமா பேருல இருக்குற தர்மத்தை பேச்சிலயும் அப்பப்ப காட்டுங்க… எப்பவும் ஒரே மாதிரியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா….ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது...என்னப் போலவே எல்லாரும் பொறுத்துப் போவாங்களா சொல்லுங்க…” என்று கூறி அவரை ஓட விட்டிருந்தான் வெற்றிவேல்.

அஞ்சுகம் கூறியதற்கிணங்க வெற்றிவேலை அழைக்க வந்த மதுமதி அவனது கூற்றுக்களை ஒன்றுவிடாமல் கேட்டுவிட்டாள்….
‘ என்ன சொல்கிறார் இவர்…. எனக்காக இவர் நிச்சயத்தை நிறுத்தினாரா...
இது எப்படி சாத்தியம் ….இதை நம்பவும் முடியவில்லை அவளால்….ஆனால் வெற்றிவேல் பொய் சொல்பவன் அல்லவே…. அவன் தவறே செய்திருந்தாலும் ‘ ஆமா... அதுக்கு என்ன இப்ப ‘ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூறக்கூடியவன்... அப்படி இருக்கையில் தன் கணவன் கூறியதற்கான விளக்கம்தான் என்ன…

இந்த சிந்தனைகளிலேயே அவளுக்கு அந்த நாளும் அதன் பின் வந்த நாட்களும் கழிந்தன…

அன்று அஞ்சுகம்- குலசேகரன் தம்பதியினருக்கு திருமண நாள்…. பெரிதாக அவர்கள் இதனை கொண்டாட விரும்புவது இல்லை என்றாலும் கயலின் பிறந்த நாளும் அன்று தான் என்பதனால் அனைவருமாக குலதெய்வம் கோயிலுக்கு செல்வார்கள்... பின்பு மதியம் கோவிலில் கயல் பெயரில் அன்னதான விருந்து நடைபெறும்…. அவ்வளவே …. இந்த வருடம் மயிலம்மையின் மறைவால் கோவிலுக்கு மட்டுமாக சென்று வந்திருந்தனர்….

அஞ்சுகத்தையும் குலசேகரனையும் வாழ்த்திய மதுமதி…. அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க விழைந்தபோது வெற்றி வேலையும் அருகே அழைத்து ஆசீர்வதித்தனர் பெரியவர்கள்….

“காலாகாலத்தில் எங்கள அப்பத்தா தாத்தாவாக்கி விடுங்கப்பா….” என்றார் அஞ்சுகம்…. இதைக் கேட்டு வெற்றி ஆவலுடன் மதுமதியின் முகத்தை பார்க்க….அதுவோ கன்றிக் கூம்பியிருந்தது…. ‘அது சரி….இவ என்னைக்கி நம்மள காதலா பார்த்திருக்கா…’ என்று எண்ணியவன் அந்த ஏமாற்றம் விளைவித்த ஒரு பெருமூச்சுடன் மில்லுக்குக் கிளம்பி சென்றுவிட்டான்.

‘இன்று நாம் பிறந்த நாள் இன்றாவது கதிர் மாமா முகம் கொடுத்து பேசுவாரா’ என்று எதிர்பார்த்த கயலுக்கு அவன் காலையிலேயே காணாமல் போய்விட்டது ஏமாற்றத்தைத் தந்தது….


அன்று இரவு உணவை முடித்து விட்டு மாடி ஏறி சென்று மதுமதியிடம் ஒரு பெட்டியை நீட்டினான் வெற்றிவேல்..

“ என்ன இது…”

“ திறந்து பார்த்தா தெரியபோகுது…”

திறந்து பார்த்தவள் அதிலிலிருந்தைக் கண்டு விலுக்கென்று சிலிர்த்து நிமிர்ந்தாள்….

பெட்டியிலிருந்த பொருளைக் கண்டதும் அவள் முகத்தில் வெற்றிவேல் எதிர் பார்த்திருந்தது ...அவனுக்கு கிடைக்கவில்லையோ….

------தொடரும்.

சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புகளுக்கு நன்றிகள்...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கப்பா...உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கும் பிரியாகுமார்


 




Attachments

Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top