• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தவமின்றி கிடைத்த வரமே-27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-27

டுத்த ஐந்தாவது நாள் வசுந்தராவுக்கு வீட்டிற்கு அழைக்கும் விசேஷம் வைத்திருந்தார்கள்...

ரொம்ப சிம்பிளாக வீட்டிலயே மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே வைத்து நடத்துவதாக இருந்தது...

முதலில் வசு அந்த பங்சனை பற்றி கேட்டதும் முகத்தை சுளித்து அதெல்லாம் வேண்டாம் என்க, பனிமலர் அவளை போனில் அழைத்து அந்த விசேஷத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினாள்....

“வசு குட்டி... நம்மளோட அதுவும் பெண்களோட ஒவ்வொரு வளர்ச்சியையும் எப்படி எல்லாம் கொண்டாடுகிறமோ அதே போலத்தான் இதுவும்.... நீ பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, அப்புறம் பள்ளிக்கு சென்ற முதல் நாள் னு அத்தை எத்தனை போட்டோ எடுத்து வச்சிருக்காங்க..

அந்த லிஸ்ட் ல அடுத்து நீ ஒரு மங்கையாக மலர்ந்த தருணம் இது... இதையும் கொண்டாடணும்.... அழகா ட்ரெஸ் பண்ணி விதவிதமா போட்டோ எடுத்து வச்சுக்கணும்... அப்பதான் இதையெல்லாம் பின்னால் திருப்பி பார்த்து ரசித்து சந்தோஷபடலாம்...

மற்றவங்க போட்டோவை பார்க்கிறப்போ நமக்கு இப்படி சடங்கு எதுவும் செய்யலையேனு ஏக்கம் உனக்கு வந்திடக் கூடாது... அதனால மறுக்காம இதுக்கு ஒத்துக்கோ...

அண்ணி உனக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி விடறேன்....கலக்கப் போறோம் உன் பங்சனை.... “ என்று ரொம்ப ஐஸ் வைக்க அதில் வசுவும் உருகி போனாள்....

உடனே தன் பெற்றோரிடம் சம்மதம் சொல்லிவிட்டாள்...

அதை கேட்டதும் அவர்களுக்கு ஆச்சரியம்..

பொதுவாக வசு ஒன்றை பிடித்துவிட்டால் அதில் இருந்து மாற மாட்டாள்... அவள் படிப்பே அதற்கு உதாரணம்..

அவளை மருத்துவதுறையில் கொண்டு வர, தன்னைபோலவே அவளையும் ஒரு டாக்டராக்க வசி முயற்சி செய்ய, அவளோ தனக்கு எஞ்சினியரிங் தான் வேண்டும் என்று ஒரே பிடிவாதமாக நின்று விட்டாள்...

அவன் எவ்வளவு பிரைன் வாஸ் பண்ணியும் அவள் தான் பிடித்ததிலயே நின்று விட்டாள்...

அப்படிபட்டவள் இன்று தன் மருமகள் சொன்னதும் தலை ஆட்டிவிட்டாளே என்று ஆச்சர்யமாக இருந்தது....

“எல்லாம் நம்ம மருமகளின் சாமர்த்தியம் தான்... “ என்று பெருமை பட்டுகொண்டனர் இருவரும்.....

மீனாட்சி மற்றும் சுந்தர் இருவர் பக்கமும் அத்தை, மாமா என்று யாரும் உறவினர்கள் இல்லாததால் மலரின் தந்தை சிவசங்கரே வசுந்தராவுக்கு தாய் மாமனாக முன் நின்று சடங்குகளை செய்வதாக வற்புறுத்தி கேட்டு கொண்டார்...

மீனாட்சியும் மகிழ்ந்து போய் சம்மதம் சொன்னார்...

அதன் படி அன்று மாலையில் அனைவரும் வசியின் இல்லத்திற்கு வந்திருந்தனர்...

மலர் அழகான ஒரு மெல்லிய வேலைப்பாடு மிக்க பட்டு புடவையை கட்டி கொண்டு தன் நீண்ட கூந்தலை சடை பிண்ணி மல்லிகை சரத்தை தொங்க விட்டிருந்தாள்...

இனியவனும் பார்மல் ட்ரெஸ் ல் இன் பண்ணிய புல் ஹேன்ட் சர்ட்டுடன் வந்திருந்தான்..

அவனே காரை ஓட்டி கொண்டு வந்திருக்க, காரில் இருந்து அவர்கள் இறங்கியதும் மீனாட்சியே ஓடி வந்து அவர்களை வரவேற்றார்...

மாடியில் தன் அறையின் ஜன்னலில் இருந்து அவர்களை ஆவலுடன் கண்ட வசுந்தராவின் பார்வை காரை விட்டு கடைசியாக இறங்கிய இனியவனை கண்டதும் படபடவென்று அடித்து கொண்டது...

அன்றைக்கு பார்த்ததை விட இன்று இன்னும் கம்பீரமாக இருந்தான்... பார்மல் ட்ரெஸ் அணிந்து வந்திருக்க, அவன் உயரத்துக்கும் கையை வீசி நடக்கும் அழகுக்கும் ஏனோ ஓடிச்சென்று அவனை கட்டி பிடித்து பின் அவன் கையோடு தன் கையை கோர்த்து பிடித்து கொண்டு அவனுடன் இணைந்து நடந்து வர துடித்தது அவள் இதயம்...

உடனே தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டவள் தன் மண்டையில் ஒரு கொட்டு வைத்து கொண்டு தன் மனதை கட்டி போட்டாள்...

இது இன்று மட்டுமல்ல.. கடந்த ஐந்து நாட்களாகவே, இல்லை அவனை பார்த்ததில் இருந்தே அவளுக்குள் ஒரு விதமான குறுகுறுப்பு அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது தான்...

அப்பொழுதெல்லாம் ஏதோ புதிதாக பிறந்த மாதிரி உடல் எல்லாம் புது வெள்ளம் பாய்ந்தோடும்.... அவள் மனம் என்னென்னவோ கற்பனையில் பறக்கும்...

கற்பனை உலகத்தில் சுற்றி திரிபவள் சில நிமிடங்கள் கழித்துதான் பூலோகத்திற்கு வருவாள்...

இங்கு வந்த உடனே தன்னையே நினைத்து கன்னம் சிவக்க சிரித்து கொண்டு இனிமேல் இது மாதிரி எதுவும் நினைக்க கூடாது என மானசீகமாக தலையில் ஒரு கொட்டை வைத்து கொண்டு புத்தகத்தில் கவனத்தை செலுத்த, அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் அதே எண்ணத்திற்கு வந்து நிக்கும் அவள் மனம்....

இப்பொழுதும் அவளையும் மீறி அவள் மனம் அந்த நெட்டையை கண்டதும் துள்ளி குதித்ததை கண்டவள் தன்னையே திட்டி கொண்டு சன்னலில் இருந்து பார்வையை திருப்பி கொண்டாள்...

அதற்குள் இனியவன் அங்கிருந்த தோட்டத்தை சுற்றி பார்த்து ரசித்து கொண்டிருக்க, மற்றவர்கள் வீட்டிற்குள் வந்திருந்தவர்கள் வரவேற்பறையில் அமர்ந்தனர்...

மலரும் அவர்களுடனே வந்து அமர்ந்தாலும் அவள் கண்களோ சுற்றிலும் எதையோ தேடியது....

அவள் தேடியது கிடைக்காமல் போக, ஏமாற்றமடைந்தவள் பின் வசுந்தராவை தயார் பண்ணுவதாக சொல்லி மாடிப்படியில் ஏறி வந்தாள்....

மேல வந்தவள் வசுந்தராவின் அறைகதவை தட்டினாள்.....

மற்றவர்கள் உள்ளே வந்திருக்க, தோட்டத்தில் சுற்றி கொண்டிருந்தவனையே வசுந்தரா அவளையும் மீறி ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்...

தன் அறைகதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் அவசரமாக தன் பார்வையை விலக்கி கொண்டவள் சன்னல் திரையை மூடி விட்டு வேகமாக வந்து கதவை திறந்தாள்...

பனிமலர் தான் நின்று கொண்டிருந்தாள்..அவளை கண்டதும் அசந்து நின்ற வசு

“வாவ்... அண்ணி.. செமயா இருக்கீங்க... அண்ணா மட்டும் உங்களை பார்த்தான் ஆடி மாதம் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு இங்கயே உங்களை சிறை வச்சிடுவான்.... தனியா அவன்கிட்ட மாட்டிடாதிங்க... என் கூடவே இருந்துக்கங்க.. “ என்று கண் சிமிட்டினாள் குறும்பாக சிரித்தவாறு....

அதை கேட்டு கன்னம் சிவந்தவள் ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு

“சீ.. போடி... வாலு... “ என்று தன் நாத்தனாரின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளியவாறு அவள் அறைக்கு உள்ளே வந்தாள்..

பின் தன் கையில் வைத்திருந்த கவரில் இருந்த பட்டு புடவையை எடுத்தவள்

“சரி வா.. இந்த புடவையை கட்டிக்கோ..சீக்கிரம் ரெடியாகு... எல்லாரும் வந்திடுவாங்க.... “ என்றாள் மலர்..

அதை கேட்டு அதிர்ந்த வசு,

“என்னது புடவையா?? அண்ணி.. அதெல்லாம் என்னால தூக்கிட்டு நிக்க முடியாது... என் பிரண்ட்ஸ் சொல்லி இருக்காங்க... எது எப்ப அவிழ்ந்து விழுந்திடுமோ என்று பயந்துகிட்டே இருக்கணுமாம்...

அதனால நான் புது லெகங்கா வே போட்டுக்கறேன்...ப்ளீஸ்....ப்ளீஸ்... “ என்றாள் கெஞ்சலாக

“ஹா ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னும் அவிழ்ந்து விழாது.. அந்த அளவுக்கு நான் ஸ்ட்ராங்கா கட்டி விடறேன்... நீ ஒன்னும் கவலை படாதடா வசு... “ என்று அவளை மடக்கி அவள் அணிந்திருந்த சுடிதாரை மாற்ற சொல்லி அவளுக்கு அந்த புடவையை கட்ட ஆரம்பித்தாள் மலர்....

புடவையை மடித்து வசுந்தராவின் வயிற்றில் சொருக, அவளோ கூச்சத்தில் துள்ளி குதித்தாள்...

மலரின் கை விரல் அவள் வயிற்றில் பட, அவளையும் அறியாமல் அன்று மலரின் தம்பி இனியவன் அவள் வயிற்றை பிடித்து அழுத்தியது நினைவு வந்தது....

அவளுக்கு வலிக்க கூடாது என்று எவ்வளவு அக்கறையுடன் அன்று பிடித்து விட்டான்.. இவளுக்குமே இந்த மாதிரி கூச்சம் எதுவும் அன்று இல்லை..

ஏதோ ரொம்ப தெரிந்தவன் போல, முன்பே பழகியவன் போல அவன் உரிமையுடன் நடந்து கொண்டதும் அவளுமே அதை ஏற்று கொண்டதும் அவளுக்கே இன்னும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது....

“ஹலோ.. மேடம்... என்ன அதுக்குள்ள ட்ரீம் க்கு போய்ட்டீங்க?? எந்த ராஜகுமாரனை நினைச்சு கனவு காண்கறீங்களாம்?? “ என்றாள் மலர் அவள் முன்னே கை யை நீட்டி சொடக்கு போட்டு சிரித்தவாறு...

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு அசடு வழிந்து சிரித்தாள் வசுந்தரா...

பின் கிண்டல் கேலியுடன் இருவரும் சிரித்து கொண்டே மலர் வசுந்தரா வை தயார் படுத்தி அவளின் குட்டையான கூந்தலுக்கு அவள் கொண்டு வந்திருந்த நீண்ட ஜடையை வைத்து அழகாக கட்டி அதற்கு பொருத்தமான மல்லிகை பூவை சுற்றி மெல்லியதாக அலங்காரம் செய்தாள்..

அவள் கண்ணுக்கு லேசாக மையிட்டு வசு மறுக்க மறுக்க கேட்காமல் அவள் உதட்டில் லிப்ஸ்டிக் ஐ போட்டுவிட்டாள்....

இடுப்புக்கும் ஒட்டியாணத்தை கட்டிவிட்டாள்... நெற்றியில் மெல்லிய நெற்றி சுட்டியை தொங்க விட்டு பின் அவள் கன்னத்தின் ஓரமாக திருஷ்டி பொட்டையும் வைத்தாள்...

அலங்காரம் முடிந்ததும் அவளை சுற்றிலும் மேலிருந்து கீழாக பார்த்த மலர் அசந்து நின்றாள்...

“வாவ்... யூ ஆர் லுக்கிங் சோ ப்யூட்டிபுல்... gorgeous... என் கண்ணே பட்டும் போல இருக்கு டா வசு குட்டி... நான் மட்டும் ஆம்பளையா இருந்தால் இப்பயே உன்னை தூக்கிட்டு போய்டுவேணாக்கும்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் மலர்....

அதை கேட்டு கன்னம் சிவந்தவள் உடனே அந்த நெடியவன் குதிரையில் வந்து அவளை தூக்கி குதிரையில் அவன் முன்னால் அமர வைத்து வேகமாக செல்வதை போல காட்சி விரிய, இன்னும் கன்னம் சிவந்து போனாள் வசுந்தரா....

பின் ஓரக் கண்ணால் தன்னை கண்ணாடியில் பார்க்க அவளுமே அசந்து நின்றாள்.....

“வாவ்.. சூப்பரா இருக்கேன் அண்ணி.. எனக்கே என்னை அடையாளம் தெரியலை... நானா இவ்வளவு அழகா இருக்கேன்?? அதுவும் இவ்வளவு பெரிய பிக் கேர்ள் ஆட்டம் ?? “ என்று கன்னத்தில் கை வைத்து அதிசயித்தாள் வசு..

“ஹா ஹா ஹா உனக்கென்னடி வசு.. நீதான் இந்த வீட்டுக்கு ராஜகுமாரி ஆச்சே.. எப்பவும் நீ அழகுதான் வசு குட்டி... உன்னை கொத்திகிட்டு போக எந்த ராஜகுமாரன் வரப் போகிறானோ ?? “ என்று பெருமூச்சு விட, வசுவின் கண் முன்னே இனியவன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு புன்னகையுடன் வந்து நின்றான்...

“ஹ்ம்ம்ம் எல்லாம் உங்க வீட்டு ராஜகுமாரன் தான்... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டாள் வசுந்தரா..

பின் சிறிது நேரம் இருவரும் அரட்டை அடித்து கொண்டிருக்க, நேரம் ஆவதை உணர்ந்த மலர்

“சரி இரு டா வசு.. நான் போய் கீழ எல்லாம் ரெடியா இருக்கானு பார்த்துட்டு வர்றேன்..நீ வெளில எதுவும் வந்திடாத “ என்றவள் வெளியில் வந்து அவள் அறை கதவை மூடிவிட்டு வேகமாக திரும்பியவள் வசுந்தரா அறையை பார்த்து கொண்டே முன்னால் அடி எடுத்து வைக்க, யார் மீதோ வேகமாக இடித்து கொண்டாள்...

தலையை நிமிர்ந்து யாரென்று பார்க்க, எதிரில் குறுகுறு பார்வையுடன் அவளையே ரசித்து பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவனை கண்டதும் மூச்சு நின்று போனது ஒரு வினாடி....

இதயம் 1000 ஹார்ஸ் பவரில் ஓடியது....

மலர் தன் புகுந்த வீட்டுக்கு வரும்பொழுது வெளியில் சென்றிருந்தவன் அப்பொழுது தான் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தான் வசீகரன்....

உள்ளே வந்தவன் மலர் வீட்டினரை வரவேற்று அவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் கண்கள தானாக தன்னவளை தேடியது....

அவள் எங்கும் இல்லாததால் யோசனையுடன் புருவத்தை உயர்த்தி இனியவனை பார்க்க, அவனோ தன் மாமா யாரை தேடுகிறார் என புரிந்து கொண்டு நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டே மேல கண்ணால் ஜாடை காட்டினான்...

அதை கண்டு நிம்மதியுடன் வெட்கபட்டு சிரித்து கொண்டே சிறிது நேரம் அங்கு வந்திருந்த மற்ற உறவினர்களுடன் பேசி கொண்டிருந்து விட்டு தன் அறைக்கு சென்று எதையோ எடுத்து வருவதாக சொல்லி எழுந்தான்...

மாடிப்படிகளில் ஏறி மேல வரும் பொழுதே அவன் பார்வை வசுந்தராவின் அறை பக்கமே இருந்தது.... தன்னவளின் குரலை கேட்க ஆவலாக காதை தீட்டி வைத்துக் கொண்டான்...

அவனை ஏமாற்றாமல், மலர் வசுந்தராவிடம் ஏதோ சொல்லி சிரிப்பது கேட்கவும் அவளின் சிரிப்பொலியை கேட்டு ரசித்தவாறு மேல வந்து கொண்டிருந்தான்...

அன்று அதிர்ஷ்டம் அவன் பக்கம் போல....

அவளை பார்க்கவேண்டும் என வந்தவனுக்கு அவளே அவன் மீது வந்து மோதி நிற்க, அனிச்சையாக அவள் கீழ விழாமல் அவள் இடையோடு சேர்த்து பிடித்திருந்தான்...

அவளும் திடீரென்று இடித்து கொள்ளவும் கீழ விழாமல் இருக்க, அவன் கைகளை பற்றி கொண்டு கண்ணை மூடி கொண்டு கொஞ்சம் முன்னால் வந்து அவன் மீது சாய்ந்து கொண்டாள்....

அவளை கீழ விழாமல் தடுக்க என்று அவளை பற்றிய அவன் கரங்கள் சில நொடிகளில் சமாளித்து கொண்டு ஆசையோடு அவள் இடையில் ஊர்வலம் வர, மெல்ல அவள் இடையை அழுத்தினான் தாபத்தோடு....

அவனின் வலிய மார்பில் சாய்ந்திருந்தவள் அவன் அணைப்பில் மயங்கி கிறங்கி இருக்க, தன் கணவனின் கைகள் தன் இடையில் அத்து மீறுவது தெரிந்தும் அதை தடுக்க இயலாமல் இல்லை தடுக்க விரும்பாமல் அவன் மந்திரத்துக்கு கட்டுண்டவளாக கன்னம் சிவந்தவள் அவன் மீது இன்னும் ஒன்றி கொண்டாள்....

எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவளிடம் இருந்து வந்த அந்த சம்மதமே அவனுக்கு இன்னும் கிறக்கத்தை கொடுத்தது.....

உள்ளம் துள்ளி குதிக்க, அவன் இதயம் வேகமாக அடித்து கொள்ள அவள் இடையில் இருந்த கையை விலக்கி தன் மார்பின் மீது சாய்ந்திருந்தவளின் முகத்தை கையில் ஏந்தி அவள் இதழ்களை நோக்கி குனிந்தான் காதலுடன்....

அவர்கள் நின்று கொண்டிருந்தது அந்த அறையை ஒட்டி என்பதால் கீழ இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் நின்று கொண்டு இருப்பது தெரியாது......

அந்த தைர்யத்தில் தான் தன்னை மறந்து தன் மனைவியின் இதழ்களை நோக்கி குனிந்தான் ஆசையோடு....

அவளுமே உள்ளம் படபடக்க, அவன் செய்வதற்கு எதிர்த்து எதுவும் செய்ய இயலாமல் போக, அவனின் அணைப்பில் கிறங்கி நின்றாள்....

சரியாக அவளின் செவ்விதழை நோக்கி குனிந்த நேரம் மாடியில் யாரோ ஏறி வரும் அரவம் கேட்க, அதற்குள் விழித்து கொண்ட மலர் அடுத்த நொடி துள்ளி குதித்து அவன் மார்பின் மீது கை வைத்து பின்னால் தள்ளினாள்...

இதை எதிர்பாராதவன் ஒரு நிமிடம் திகைத்து பின் சரிந்து விழப்போய் பின் சுதாரித்து கொண்டவன் ஒரு எட்டி பின்னால் நகர்ந்து நின்று கொண்டு நிமிர, அதற்குள் மீனாட்சி மேல வந்திருந்தார்....

மலரோ தலையை குனிந்தவாறு அவசரமாக கசங்கி இருந்த தன் புடவையை நீவி விட்டு கொள்ள, வசி தன் அன்னையை பார்த்து அசடு வழிந்து சிரித்தான்...

“இரண்டு பேரும் ஏன் இப்படி வெளில நின்னுகிட்டு இருக்காங்க?? “

என்று யோசித்தவர் தன் மகனின் முகத்தில் தெரிந்த அசட்டு சிரிப்பையும் தன் மருமகளின் கன்னத்தில் தெரிந்த வெட்க சிவப்பையும் கண்டு கொண்டவருக்கு என்ன நடந்திருக்கும் என புரிய, அவருமே வெட்க பட்டு நமட்டு சிரிப்புடன் தன் மகனை பார்த்தவர்

“சாரி.. கண்ணா.. பூஜை வேளை கரடியா வந்திட்டனா?? “ என்றார் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு...

“மா.... “ என்று வசி அவரை செல்லமாக முறைக்க

அவரும் சிரித்தவாறே மலரிடம் திரும்பியவர்

“மலர்... வசு ரெடியா ??.. எல்லாரும் வந்திட்டாங்க.. அவளை கீழ அழைச்சுகிட்டு வா.... அதை சொல்லத்தான் வந்தேன்... நான் கீழ போறேன்...

கண்ணா.. நீயும் கீழ வா... உன் பொண்டாட்டியை அப்புறமா கவனிச்சுக்கலாம்.. “ என்று சிரித்தவாறு கீழிறங்கி சென்றார்...

மலரும் மேலும் கன்னம் சிவக்க அவனை நிமிர்ந்து பார்க்காமல் வேகமாக வசு அறைக்குள் புகுந்து கொண்டாள்....

உள்ளே வந்தவளுக்கு இன்னுமே அவள் படபடப்பு குறையவில்லை... அவன் கண்ணில் தெரிந்த காதலும் ஏக்கமும் ஆசையும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் சிலிர்த்தது அவளுக்கு...

ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் மீனாட்சி மீண்டும் கீழிருந்து குரல் கொடுக்க,

“வசு.. வா.. கீழ போகலாம்.. “ என்று அவள் கை பிடித்து அழைத்து கொண்டு கீழ வந்தாள் மலர்...

வசியும் மலர் வேகமாக அறைக்கு உள்ளே ஓடி விட, சிரித்து கொண்டே தன் அறைக்கு சென்றவன் என்ன எடுக்க வந்தான் என மறந்திருக்க, மீண்டும் ஒரு முறை அங்கிருந்த கண்ணாடியில் பார்த்து தன் தலையை சீவி கையால் கோதி கொண்டு அவன் அணிந்திருந்த சட்டையை நேராக்கி கொண்டு கீழ இறங்கி வந்தான்....

பார்வை ஒரு முறை வசுவின் அறைக்கு சென்று மீண்டு வர, உதட்டில் உறைந்த புன்னகையுடன் துள்ளி குதித்துவாறு கீழ இறங்கி சென்றான்....

கீழ சென்று இனியவன் அருகில் அமர்ந்து கொள்ள, அப்பொழுது மலர் வசுந்தராவை கை பிடித்து அழைத்து வந்தாள்...

இனியவன் வசீகரன் உடன் பேசி கொண்டிருக்க, எதேச்சையாக நிமிர்ந்து மாடியை பார்க்க, அப்படியே ப்ரீஸ் ஆகி அமர்ந்தான்....

முதல் முறை புடவை அணிந்திருந்ததால் பெரிய பெண்ணாக தெரிந்தாள் வசுந்தரா..

அவளை முதன் முறையாக அன்று பார்த்த பொழுது குட்டை பாவாடையும் டாப்ஸ் ம் அணிந்து பள்ளி சிறுமியாக பார்த்தவள் 5 நாளில் வளர்ந்து இவ்வளவு பெரிய குமரியாக நிற்பதை போல இருந்தது அவனுக்கு...

அவள் மாடியில் இருந்து இறங்கி வரும் அழகை கண்டதும் அப்படியே ஒரு தேவதையே இறங்கி அவனை நோக்கி வருவதை போல இருந்தது....

அவன் இதயம் வேகமாக எகிறி குதித்தது...

இதுவரை எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறான்... பழகியிருக்கிறான்... அதுவும் அவன் கல்லூரியிலயே எத்தனையோ பெண்கள் அவனை நெருங்க முயன்றிருக்கிறார்கள்....

நிறைய பேர் நேரடியாக அவனிடம் புரபோஸ் பண்ணி இருக்கிறார்கள்...

ஆனால் யாரிடமும் மயங்காமல் உண்மையான நட்புடன் பழகும் பெண்களை மட்டும் இனம் கண்டு நட்பு பாராட்டி, மற்ற எல்லாரையும் ஒரு எரித்து விடும் பார்வையில் தள்ளி நிறுத்தியவனுக்கு வசுந்தராவை பார்த்ததும் ஏன் இப்படி இதயம் அடித்து கொள்கிறது என குழப்பமாக இருந்தது....

இது ஒரு புது விதமான உணர்வாக இருந்தது அவனுக்கு...

சிறு பெண்ணாக அன்று பார்த்த பொழுதே ஏதோ ரொம்ப நாள் பழகியவள் போல தோன்றத்தான் அன்று அவள் வலியை கண்டு அவன் மனம் துடித்தது...

இன்றோ இப்படி அலங்காரத்தில் புத்தம் புது மலராக மலர்ந்து நின்றவள் சேலையில் இன்னும் ஜொலிக்க, அவன் உள்ளே ஏதோ புரள்வதை போல இருந்தது.....

உச்சி முதல் பாதம் வரை அவளையே ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தான் இனியவன்...

அவன் மட்டும் அல்லாமல் அவள் அண்ணனுமே அதிசயித்து தான் போனான்....தன் செல்ல தங்கை இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாள் என்று...

புடவையில் பார்க்க கிட்டத்தட்ட 20 வயதுக்கு மேலாக தெரிய, தன் தங்கை இவ்வளவு வளர்ந்து விட்டாளா ?? என்று இருந்தது....

மீனாட்சி சுந்தருக்குமே தங்கள் மகளை கண்டு வியப்பாக இருந்தது.... அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்தனர்...

தன் தங்கையை சிறிது நேரம் ரசித்தவன் அடுத்து அவளை கை பிடித்து அழைத்து வரும் தன்னவளின் மீது சென்று நின்றது வசியின் பார்வை...

முன்பு சரியாக பார்த்திராதவன் இப்பொழுது அவளை முழுவதுமாக பார்க்க, அந்த பட்டு புடவையிலும் அவளின் மெல்லிய அலங்காரத்திலும் இன்னும் தேவதையாக ஜொலித்தாள் மலர்....

அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்தான... எதற்கோ தலையை நிமிர்ந்து வசியின் பக்கம் பார்த்தவள் அவன் பார்வையை கண்டு கொண்டவளுக்கு மீண்டும் படபடப்பாக வர, கன்னம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்....

தன் அண்ணியை ஓரக் கண்ணால் கண்டவள்

“அண்ணி.... ஆக்சுவலா இந்த பங்சன் எனக்குத்தான்... நான்தான் வெட்க பட்டு தலையை குனிந்த படி வரணும்... ஆனா நீங்க ஏன் இப்படி வெட்க பட்டு நெளிஞ்சுகிட்டே வர்றீங்க ?? “ என்று கிசுகிசுத்தாள்...

பின் தலையை லேசாக நிமிர்ந்து ஓர கண்ணால் தன் அண்ணனை காண அவனோ தன் மனைவியை விட்டு பார்வையை அகற்றாமல் இருக்க,

“ஓ.... எல்லாம் அந்த வசீகரன் பண்ணும் மாயமா?? ஹ்ம்ம்ம்ம் நீங்க நடத்துங்க... “ என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு...

அதற்குள் தன்னை சமாளித்து கொண்ட மலர்,

“ஹோய்... வாயாடி ... நீ சொன்ன மாதிரி இந்த பங்சன் உனக்குத்தான்...நான் தான் உன்னை ஓட்டணும்... நீ என்னை ஓட்டற.. எல்லாம் என் நேரம்...

அப்புறம் என்ன சொன்ன?? நான் வெட்க படறனா?? அதெல்லாம் நமக்கு வராது மா... உன் அண்ணன் வேணா என்னை பார்க்க வெட்க பட்டு தலையை குனிஞ்சிருக்கலாம்.. வேணா செக் பண்ணு... “ என்றாள் சிரித்தவாறு...

வசு பார்வையை தன் அண்ணன் பக்கம் திருப்ப, மலர் சொன்ன மாதிரி சரியாக அந்த நேரம் எதையோ எடுக்க கீழ குனிந்திருந்தான் வசீகரன்...

அதை கண்ட மலரும்

“என்ன?? நான் சொன்னது கரெக்ட் தான ?? “ என்றாள் தன் புருவங்களை உயர்த்தி மெல்லிய குரலில் குறும்பு சிரிப்புடன்....

வசுவும் அவளை செல்லமாக முறைத்தபடி இறங்கி வந்தாள்....

அதற்குள் இருவரும் கீழிறங்கி இருக்க, இப்பொழுது எல்லாரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து மெல்ல கன்னம் சிவக்க வெட்க பட்டு கொண்டே தலையை குனிந்த படி நடந்து வந்தாள் வசுந்தரா...

மலர் அவளை அழைத்து வந்து அங்கு ஹாலில் ஓரமாக போட பட்டிருந்த நாற்காலியில் அமர வைத்தாள்...

அவள் முன்னே தாய் மாமன் சீர் வரிசையாக ஒரு தட்டில் அழகான பட்டு புடவையும் அடுத்த தட்டில் ஒரு நகை பெட்டியும் மற்ற தட்டுக்களில் பழங்கள், ஸ்வீட், சோப்,சீப் கண்ணாடி மற்றும் அலங்கார பொருட்கள் ஒரு தட்டிலும், ஒரு தட்டு நிறைய சாக்லெட் என மொத்தம் 9 தட்டுக்கள் வைக்க பட்டிருந்தன...

மற்ற உறவினர்களும் அவர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை தட்டில் வைத்திருக்க அதை தாண்டி நாற்காலிகள் போடபட்டு சிலர் அமர்ந்திருக்க, மற்றவர்கள் நின்று கொண்டும், கீழ அமர்ந்து கொண்டும் அந்த வரவேற்பறையே நிறைந்து இருந்தது...

சிவசங்கர் எழுந்து வந்து அங்கிருந்த மாலையை எடுத்து வசுந்தரா கழுத்தில் போட்டு அங்கிருந்த சந்தனத்தை எடுத்து அவளுக்கு பொட்டு வைத்து அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் மன நிறைவுடன்....

பின் அந்த மாமியே தலை சுத்தலை அரம்பித்து வைக்க, ஒவ்வொருவரும் அவளுக்கு தலை சுத்தி சந்தனத்தை அவள் கன்னத்தில் பூசி நலுங்கு வைத்து அருகில் இருந்த இனிப்பை எடுத்து அவள் வாயில் ஊட்டினர்...

அவளும் வெட்க பட்டு மெல்ல இனிப்பை சாப்பிட்டாள்...

ஏதோ தோன்ற மெல்ல ஓர கண்ணால எதிரில் தன் அண்ணன் அருகில் அமர்ந்திருந்தவனை காண அவனும் இவளையே தான் ஓர கண்ணால் பார்த்திருந்தான்....

இவளின் பார்வையை கண்டு கொண்டவன் லேசாக வெட்கபட்டு பார்வையை மாற்றி கொள்ள அவனை அந்த மாதிரி காண இன்னும் ரொம்பவே பிடித்து போனது வசுவுக்கு...

அவனை அப்படியே எப்பவும் பார்த்து கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது....
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top