• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தவமின்றி கிடைத்த வரமே-40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-40

ன் கணவன் வெறுக்கும் அளவுக்கு நான் என்ன தப்பு செய்திருப்பேன்? என்று கன்னத்தில் கை வைத்தவாறு யோசித்து கொண்டிருந்தாள் மலர்..

நேற்று இரவிலிருந்து இதே யோசனைதான். ஆனால் எதுவும் சரியாக புலப்படவும் இல்லை.. யாரிடம் இதை பற்றி கேட்பது என்றும் தெரியவில்லை..

அதே சிந்தனையுடன் தன் அலுவலகம் சென்றவள் அங்கிருந்த வேலையை முடித்து விட்டு மனம் கஷ்டமாக இருக்க வீட்டிற்கு போக பிடிக்காமல் RJS மருத்துவமனைக்கு வந்திருந்தாள்..

இங்கு வந்து பாரதிக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று வந்தவள் மனம் மீண்டும் அதே சிந்தனையில் இருக்க, சுசிலாவை பார்த்து விட்டு பாரதி அறைக்கு சென்றாள் பனிமலர்...

பாரதி மற்றொரு அறையில் சில பேசன்ட்ஸ் களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கொண்டிருக்க, பாரதியின் அறையிலயே அமர்ந்து மீண்டும் ஏதேதோ யோசித்து கொண்டிருந்தாள்..

மீன்டும் அவள் மனம் அந்த புள்ளியிலயே வந்து நின்றது..

என்ன அது? என்ன அது? என்று யோசித்தவாறு மண்டையை போட்டு உருட்டி கொண்டிருந்தாள் பனிமலர்..

“ஹோய் மலர்.. அப்படி எந்த கோட்டையை பிடிக்க போகிற? இவ்வளவு தீவிரமா யோசிச்சுகிட்டிருக்க? “ என்று சிரித்து கொண்டே தன் அறைக்கு உள்ளே வந்தவள் மலரின் முதுகில் அடித்தவாறு அவள் அருகில் வந்து அமர்ந்தாள் பாரதி..!

“ஹ்ம்ம்ம் நான் எந்த கோட்டையை புடிக்க போறேன் பாரதி.. எல்லாம் இருக்கிற கோட்டையை தக்க வச்சுக்கத்தான்... “ என்று விரக்தியாக சிரித்தாள் மலர்..

“இருக்கிற கோட்டையை தக்க வைத்துக்கிறதா? என்ன டீ சொல்ற? “ என்று புரியாமல் மலரின் முகம் நோக்க, அவள் முகத்தை கண்ட பாரதி லேசாக அதிர்ந்து போனாள்... பனிமலரின் முகம் கலை இழந்து காணபட்டது..

எப்பொழுதும் சிரிக்கும் கண்களும் குறுநகை தவழும் இதழ்களும் தங்கள் வேலையை மறந்து விட்டதை போல, அவள் முகமே வாடி கிடந்தது.. அவள் முகத்தை கண்டதுமே அவளுக்கு எதுவோ பிரச்சனை என புரிந்து கொண்டாள் பாரதி..!

ஆனாலும் மலரே அதை நேரடியாக சொல்லட்டும் என்று விட்டு விட்டவள் மற்ற கதையை பேச ஆரம்பித்தாள்..

பேச்சு வாக்கில் மலர் குடும்பத்தினரை பற்றி விசாரித்தவள் இறுதியாக வசியை பற்றி விசாரிக்க, மலரின் முகத்தில் ஒரு வேதனை வந்து போனதை கண்டு கொண்டாள் பாரதி.

“ஹ்ம்ம் அப்படி என்றால் பிரச்சனை நம்ம ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் தானா ??. டாக்டர் அண்ணா இவ மேல உயிரா இருக்கறவர் ஆச்சே.. இவளும் தான் அவர் மேல பிரியமா இருக்கிறவ..

அப்படி இருக்க, இவர்களுக்குள் பிரச்சனை என்றால் அது வெளியில் இருக்கும் மூன்றாவது நபராகத்தான் இருக்கும்.. இவங்களுக்கு நடுவுல வரும் அந்த வில்லி யாரா இருக்கும்? “ என்று யோசித்தாள் பாரதி..

அதே நேரம் மலர் டேபிலில் வைத்திருந்த அவள் அலைபேசி அழைக்க, அதன் திரைக்கு எதேச்சையாக பாரதியின் பார்வை சென்றது.

அதில் மித்ரா என்று ஒளிர்ந்த பெயரை கண்டதும் ஒரு நொடி எங்கயோ இடித்தது பாரதிக்கு..

“நான் மலர் கதையின் வில்லியை பற்றி நினைத்தால் இவள் முகம் ஏன் வருகிறது? “ என்று யோசித்தாள்..

மலரோ அந்த அழைப்பை ஏற்காமல் தவிர்த்து விட, மித்ராதான் எப்பவும் ஒரு அழைப்பில் விடுபவள் இல்லையே.. மீண்டும் அழைத்தாள்.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அந்த அழைப்பை ஏற்ற மலர்

“ஆங் சொல்லு மித்ரா.. “ என்றாள் சுரத்தில்லாமல்..

“ஹாய் மலர்.. என்ன நான் நேற்று சொன்னது சக்ஸஸ் ஆ ? வசி கிட்ட சைன் வாங்கிட்டியா? “ என்றாள் ஆர்வமாக

“வந்து... இல்லை... “ என்றாள் மலர் குரலை தாழ்த்தி

அதை கேட்டவள் உற்சாகம் வடிந்து போனது மித்ராவுக்கு.. பல்லை கடித்தவள் தன் ஆத்திரத்தை மறைத்து கொண்டு தேன் ஒழுகும் குரலில்

“ஏன் என்னாச்சு மலர் ? “ என்றாள் அக்கறையுடன்

“நான் அப்புறமா விளக்கமா சொல்றேன் மித்ரா.. இப்ப போனை வைக்கிறேன்.. “ என்றவள் மறுபக்கம் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்தாள்..

மலர் போனை வைத்ததும் பாரதி அவளை பார்த்தவள்

“ஹே மலர்.. உனக்கு மித்ராவை தெரியுமா? “ என்றாள் ஆர்வமாக

“ஆங்.. தெரியும் பாரதி.. அவரோட பிரண்ட் தான்.. இப்ப எனக்கும் பிரண்ட்.. “ என்றாள் வெற்று புன்னகையுடன்..

“ஹ்ம்ம்ம் உன் கல்யாணத்தப்ப இந்த மித்ரா உன்னை அப்படி முறைச்சு கிட்டிருந்தா.. அதுக்குள்ள எப்படி இரண்டு பேரும் பிரண்ட் ஆனிங்க?.. எங்கயோ இடிக்குதே... “ என்று தன் தாடையில் கை வைத்து யோசித்தாள் பாரதி

“அதெல்லாம் இல்ல பாரதி.. மித்ரா நல்லவதான்.. பாவம் அவரை ரொம்பவும் விரும்பறா... அவரும்... “ என்று ஏதோ சொல்ல வந்தவள் தொண்டை அடைக்க வேதனையுடன் பாதியில் நிறுத்தி கொண்டாள் மலர்..

மித்ரா வசியை விரும்புவது பாரதியும் அறிந்ததுதான்.. ஆனால் வசி அதற்கு மறுத்து விட்டதும் தெரியும்...ஆனால் இப்ப எதுக்கு திடீர்னு மலர் கூட கூடி குலாவுகிறாள் என்றுதான் குழப்பமாக இருந்தது பாரதிக்கு.

அதோடு மலரின் முகத்தில் இருந்தே அவள் மகிழ்ச்சியாக இல்லை என புரிய, அவளும் மலர் தானாகவே தன் பிரச்சனையை பற்றி சொல்வாள் என்ற விதத்தில் ஏதேதோ பேசி அவளை வெளி கொண்டு வர முயற்சி செய்ய, மலரோ தன் மனதை திறக்கவில்லை...

அதற்கு மேல் பொறுமை இல்லாத பாரதி மலரை நேராக பார்த்து

“ஹோய் ஜில்லு....அப்படி என்ன பிரச்சனை உன் மண்டைக்குள்ள புகுந்து குடைஞ்சு கிட்டு இருக்கு.. நானும் வந்ததுதி இருந்து பார்த்துகிட்டே இருக்கேன். நீ பழைய மாதிரி இல்லை.. எதுனாலும் ஓபனா சொல்..

பிரச்சனையை அதுக்குள்ள இருந்தே பார்த்தால் தீர்வு கிடைக்காது.. வெளில வந்து அந்த பிரச்சனையை சுற்றி பார்க்கணும்.. என்ன புரிஞ்சுதா? என்னை உன் பிரண்ட் ஆ நினைச்சிருந்தால் உனக்கு என்ன பிரச்சனைனு என்கிட்ட சொல்.. “ என்றாள் அதட்டலுடன்..

அவளின் உரிமையான அதட்டலை கேட்டதும் அதுவரை தன்னுள் அடக்கி வைத்திருந்ததெல்லாம் மடை திறந்த வெள்ளம் போல அடித்து கொண்டு வர, தன் கையால் முகத்தை பொத்தி கொண்டு அழ ஆரம்பித்தாள் பனிமலர்..

அதை கண்ட பாரதி அதிர்ந்து போனாள்..

மலரை எப்பொழுதும் பாரதியின் மறு உருவமாக பார்ப்பாள் பாரதி.. எதையும் தைர்யமாக எதிர்கொள்ளும் விதமும் மற்றவர்களை கலாய்த்து பேசும் வாயாடி பேச்சும் என்று கிட்டதட்ட பாரதியை போன்றே இருப்பாள்..

அப்படிபட்ட தைர்யமானவள் இன்று முகத்தை பொத்தி கொண்டு அழவும் ஒன்றும் புரியாமல் திகைத்தாள் பாரதி..

வேகமாக தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் மலர் அருகில் வந்து அவளை தன் இடையோடு சேர்த்து அணைத்து அவள் முதுகை ஆதரவாக வருடி கொடுத்தாள்..

மலரும் சிறிது நேரம் அழுது முடித்து பின் தன் துப்பட்டாவின் நுனியில் கண்ணை துடைத்து கொண்டாள்.. பாரதி அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க, அதை குடிக்கவும் கொஞ்சம் ரிலாக்சாக இருந்தது மலருக்கு..

அவள் கையை ஆதரவுடன் தட்டி கொடுத்த பாரதி

“என்னாச்சு டா மலர்? “ என்றாள் அவள் தலையை ஒரு கையால் வருடியவாறு..

அவளின் அக்கறையில் மீண்டும் மலருக்கு கண்ணை கரித்து கொண்டு வர அதை கண்ட பாரதி

“ஹோய்.. சும்மா சும்மா உன் டேம் ஐ ஓபன் பண்ணாத.. அழுவறது பொம்பளைங்களுக்கு அழகல்ல.. அதுவும் நீ எவ்வளவு தைர்யமானவ.. இப்படி அழுவலாமா ?..” என்றாள் முறைத்தவாறு..

“ஆங்.. அழுவறது ஆம்பளைங்களுக்கு அழகல்ல னு தான சொல்வாங்க.. “ என்ற ரீதியில் மலர் லுக் விட

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் அப்பப்ப நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலாம்.. ஒன்னும் தப்பில்லை.. இப்ப உன் பிரச்சனைக்கு வருவோம்..

லுக் மலர்... இந்த உலகத்துல தீர்க்க முடியாத பிரச்சனை னு எதுவும் இல்லை.. சொல்லு டி.. உன் பிரச்சனை என்ன னு.. இல்லைனா நான் நேரா டாக்டர் சார் கிட்ட போன் பண்ணட்டுமா? அவர்கிட்டயே கேட்டுக்கறேன்.. “ என்றாள் பாரதி மிரட்டியவாறு

“ஐயோ.. வேண்டாம்.. பாரதி... ஏற்கனவே அவர் என்மேல கோபமா இருக்கார்.. இப்ப நான் வந்து உன்கிட்ட எங்க கதையை சொன்னேனு தெரிந்தால் இன்னும் கோப படுவார்.. வேண்டாம் . “ என்றாள் அவசரமாக

“வாட்? நம்ம டாக்டர் அண்ணா கோபமாக இருக்காரா? கிரேட் ஜோக்.. அவருக்கு அதிர்ந்து கூட பேச வராது.. எல்லாரையும் அவ்வளவு அன்பா கனிவா நடத்துவார்.. அவர் போய் கோபமா? அதுவும் உன்கிட்ட? கனவு எதுவும் கண்டியா? “ என்று நக்கலாக சிரித்தாள் பாரதி...

“ஹ்ம்ம்ம் எல்லாருக்கும் இரண்டு முகம் இருக்கும் பாரதி.. வெளில காட்டறது ஒரு முகம்.. இன்னொரு முகம் உள்ளுக்குள்ளயே இருக்குமாம்...எப்பயாவது அது வெளில தெரியுமாம்.. அந்த இன்னொரு முகத்தை இப்பதான் என் கிட்ட காட்டி இருக்கார் உன் டாக்டர் அண்ணா.. “ என்றாள் வேதனையுடன்..

“ஓ.. டாக்டரே கோபப்படறார் னா விசயம் பெருசாதான் இருக்கும்.. சரி சொல்லு.. அப்படி என்னதான் பிரச்சனை? “ என்றாள் பாரதி யோசனையுடன்

“ஹ்ம்ம் அதுதான் தெரியலையே... “ என்று கையை விரித்தாள் மலர்

“வாட்? பிரச்சனை என்னனு தெரியாத ஒரு பிரச்சனையா? என்னடி இது? என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே? “ என்றாள் பாரதி சிரித்தவாறு

அவளை முறைத்த மலர்

“ம்ம்ம் என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கு.. இதுதான் நானே நேற்றில் இருந்து என் மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டிருக்கேன்.. நான் தப்பு செய்திட்டேன் னு சொல்றார்..

ஆனால் என்ன தப்பு னு கேட்டால் அதை நீயே கண்டுபுடி.. உனக்கு நீ என்ன தப்பு செய்தேன் னு தானா தெரியணும்.. அப்படீனு சொல்லிட்டார்..

எனக்கு தெரிந்து நான் எந்த தப்பும் பண்ணலை பாரதி.. “ என்று மலர் கண்ணை கசக்க, பாரதி மீண்டும் அவளை பார்த்து முறைக்க உடனேயே தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு அசட்டு சிரிப்பை சிரித்தாள் மலர்...

“ஹ்ம்ம்ம் தப்புனா என்னவா இருக்கும் ?? “ என்று பாரதியும் யோசித்தவாறு சில கேள்விகளை கேட்டாள்.. மலர் அதற்கு பதில் அளித்து கொண்டிருக்க மித்ரா மீண்டும் அழைத்தாள்..அதை கண்ட பாரதி,

“ஆமா.. இந்த மித்ரா எதுக்கு உனக்கு அடிக்கடி போன் பண்ணிகிட்டிருக்கா? “ என்றாள் பாரதி யோசனையாக

“வந்து..... “ என்று இழுத்தாள் மலர்

“ஹோய்.. வந்து வரலை னு இழுக்காத டீ.. டக் டக்கு னு ஓபனா சொல். இப்ப எதுக்கு இவ உனக்கு கால் பண்றா? “ என்றாள் பாரதி மலரை முறைத்தவாறு..

“வந்து... டைவர்ஸ் பேப்பர் ல அவர் சைன் பண்ணிட்டாரானு கேட்கறா ? “ என்றாள் மலர் தன் வேதனையை மறைத்தவாறு.

அதை கேட்டு அதிர்ந்து தன் இருக்கையில் இருந்து எழுந்தவள்

“வாட்? டைவர்ஸ் ஆ? என்னடி உளற? “ என்றாள் பாரதி கோபமாக மலரை முறைத்தவாறு

“ஆமாம் பாரதி... பிடிக்காத வாழ்க்கையை எத்தனை நாளைக்கு வாழறது? அதான் பிரிஞ்சிடலாம்னு “

“யார்க்கு பிடிக்காத வாழ்க்கை? “ என்றாள் தன் புருவத்தை உயர்த்தி மலரை முறைத்தவாறு

“அவருக்கு தான்.. அவருக்கு தான் என்னை பிடிக்கலையே.. என் அப்பாவை காப்பாற்ற வேண்டி கடமைக்காக என்னை கல்யாணம் பண்ணிகிட்டார்.. அதுக்காக கடமைக்காக கணவனாக வாழ்ந்து கிட்டிருக்கிறார்.. “ என்றாள் மலர் மீண்டும் வேதனையுடன்

“ஆங்.. இது என்ன புது கதை? இந்த கதையை யார் உனக்கு சொன்னா? “ என்றாள் பாரதி மீண்டும் மலரை முறைத்தவாறு..

“ஆங் கதையா? இது ஒன்னும் கதை இல்ல.. நிஜம் “ என்று பாரதியை முறைத்தாள் மலர்

“பின்ன? இது கதை இல்லாம என்னானு சொல்றது.. வசி அண்ணா உன்னை புடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டாரா? கிரேட் ஜோக் அகைன்.. “ என்று சிரித்தாள்..

மலர் அவளை பார்த்து முறைத்தவாறு

“இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற பாரதி? என்னனு சொல்லிட்டு சிரி... “

“ஹா ஹா ஹா அடப் போடி முட்டாள்.. டாக்டர் சார் ஒன்னும் உன் அப்பாவுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கலை..

உன்னை புடிச்சு போய், காதலால் கசிந்துருகி, நீ வேற ஒருத்தனை மணக்கப்போறேனு தெரிந்ததும், அதை தாங்க முடியாம பைத்தியமாகி மென்டல் ஹாஸ்பிட்டல் போகாம, நீ கும்பிடற அந்த ஈஸ் அவரை காப்பாற்றி உன்னை புடிச்சு அவர் கையில கொடுத்திருக்கார்..

உன்னை புடிக்காம கடமைக்காக அவர் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டாராம்...சரியான லூசு டீ நீ .. “ என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள் பாரதி

அதை கேட்டு மேலும் குழம்பிய மலர்

“பாரதி... நீ என்ன சொல்ற? டாக்டர் என்னை காதலித்தாரா? “ என்றாள் கண்கள் விரிய

“ஹ்ம்ம்ம்.. ஆமாம் டீ லூசு பொண்ணே.. ஹே.. இரு இரு நீ சொல்றதை வச்சு பார்த்தால் , அப்ப டாக்டர் அண்ணா இன்னும் அவர் லவ் ஐ உன்கிட்ட சொல்லலையா? “ என்றாள் பாரதி சந்தேகமாக..

“ஹ்ம்ம் ஆமாம்.. உன் அண்ணா எதை சொல்லி இருக்கார்.. இதை சொல்ல? “ என்று முகத்தை நொடித்தாள் மலர்...

அதை கேட்டு ஏதோ அவசரமாக யோசித்த பாரதி

“ஹே மலர்..... முதல்ல நான் கேட்கறதுக்கு பதில் சொல். இந்த டைவர்ஸ் மேட்டர் எதுக்கு வந்தது? என்ன நடந்தது என்று ஒன்று விடாமல் என்கிட்ட சொல். “ என்றாள் பாரதி..

மலரும் தன் திருமணம் ஆன நாளில் இருந்து நடந்த கதையெல்லாம் சுருக்கமாக கூறினாள்..தற்பொழுது காரணமே இல்லாமல் தன் கணவன் அவளை விலக்கி வைத்ததையும் எடுத்து கூறினாள்.. காரணமும் சொல்ல மறுக்கிறார்.. " என்றாள் ஆயாசமாக...

அதை பொறுமையாக கேட்ட பாரதி

“எனக்கென்னவோ உங்களை வைத்து யாரோ கேம் ஆடற மாதிரி இருக்கு... ஒரு நிமிசம் இரு.. கொஞ்சம் தனித்தனியா ஆராய்ந்து பார்க்கலாம்.. " என்று யோசித்த பாரதி

"சரி.. முதல்ல இந்த டைவர்ஸ் எதுக்காக வந்தது?.. ஏன் டி ஒரு வாரம் உன் புருசன் பேசாம இருந்தால் உடனே டைவர்ஸ் பேப்பரை நீட்டிருவியா? என்ன பிரச்சனைனு கண்டு புடிச்சு அதை சால்வ் பண்றதில்லை? “ என்றாள் பாரதி மலரை முறைத்தவாறு..

"வந்து.. மித்ராதான் அந்த டைவர்ஸ் பேப்பரை கொடுத்து கையெழுத்து போட சொன்னாள்.. அப்பதான் அவர்க்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்குமாம்.. அவர்க்கு பிடித்த காதலும் கிடைக்கும்.. அவர் அப்பதான் சந்தோஷமா இருப்பார்.. அப்படி இப்படீ னு என்னை குழப்பி விட்டா... "

“இரு இரு இரு.. அது என்ன வசி அண்ணாவுக்கு நல்ல எதிர்காலம்.. இப்பவும் நல்லாதானே இருக்கார்.. இதை விட இன்னும் என்ன நல்ல எதிர்காலம்.? " என்றாள் குழப்பத்துடன்.

“அது வந்து... அவர் மித்ராவை கல்யாணம் பண்ணி கொண்டால் மித்ரா மருத்துவமனைக்கு அவர் எம்.டி ஆகி விடுவார் இல்லை.. அதுதான் அவர் கனவு ம் கூட ..

அவசரபட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்டதால அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையாமல் போயிருச்சு பாரதி.. எப்ப அவர் சம்பாரிச்சு RJS மாதிரி ஒரு பெரிய ஹாஸ்பிட்டலை கட்டறது..

அதுக்குத் தான் மித்ராவை கல்யாணம் பண்ணிகிட்டா எல்லாம் உடனே கிடைக்கும்.. அதோடு அவருக்கு பிடித்த மண வாழ்க்கையும் அமையும்.. அதனால தான்... " என்று இழுத்தாள்..

அதை கேட்டு மீண்டும் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள் பாரதி..

சிரித்து முடித்தவள்

"சரியான லூசு மலர் டீ... எவளோ ஒருத்தி அள்ளி ஊத்தின கதையெல்லாம் அப்படியே நம்பிட்டு வந்திருக்கியே.. எங்க போய் அடிச்சுக்க? "என்றாள் பாரதி தன் தலையில் அடித்த படி

"கதையா? " என்று மீண்டும் வாயை பிளந்தாள் மலர்..

"பின்ன? வசி அண்ணா ஏற்கனவே ஒரு ஹாஸ்பிட்டல் ஓட எம்.டி தான் டி.. அவர் எதுக்கு இன்னொரு ஹாஸ்பிட்டல் க்கு எம்.டி யாகணும்? " என்றாள் பாரதி சிரித்தவாறு

"ஆங்.. ..எம்.டி யா? எந்த ஹாஸ்பிட்டல் ? " என்றாள் மலர் ஆச்சர்யமாக

"ஹ்ம்ம்ம் நீ உட்கார்ந்து இருக்கியே... இந்த RJS தான்.. இது வசி அண்ணாவும் ஆதியும் ஈகுவல் சேர்..ஐ மீன் 50-50 .. இந்த மருத்துவமனையே இரண்டு பேரும் சேர்ந்து கட்டியது தான்..

என் புருசன் தொழில்ல வர்ற லாபத்தில் 25% இங்க போடுவார். வசி அண்ணா வும் அவருக்கு வர்ற சம்பளத்துல அல்மோஸ்ட் பாதியவே இந்த மருத்துவமனைக்காக கொடுத்து கிட்டிருக்கார்..

அதோட ட்ரஸ்ட் வேற இருக்கு.. அதிலயும் நிறைய பேர் உதவி செய்யறாங்க..சோ.. இது...இந்த மருத்துவமனை இரண்டு பேர் பேர்லயும்தான் இருக்கு.. சுசி அத்தையை மேற்பார்வை பார்த்துக்க சொல்லி இருக்காங்க..

நம்ம நிகிலன் மாம்ஸ் ஏற்கனவே நமது இல்லத்தை நடத்திகிட்டு வந்தாலும் அவரும் முடிந்த அளவுக்கு இந்த மருத்துவமனைக்கு ஹெல்ப் பண்ணுவார்..

வசி அண்ணாவோட டிரீம் ஏ இந்த மருத்துவமனையை இன்னும் பெரிதாக்கி நிறைய பேருக்கு இன்னும் முடிந்த அளவுக்கு இலவச சிகிச்சை அளிக்கணும் ங்கிறது தான்.. " என்றாள் பாரதி

அதை கேட்டு வியந்து தான் போனாள் மலர்..

"ஹோய்... நீ முழிக்கிறதை பார்த்தால் உன் புருசன் உன் கிட்ட எதுவும் சொல்லலை போல இருக்கு? கல்யாணம் ஆகி இத்தனை நாளா என்னதான் டி பேசுனீங்க? " என்றாள் பாரதி குறும்பாக சிரித்தவாறு..

அதை கேட்டு மலர் வெட்கத்தில் கன்னம் சிவக்க, அதை கண்டு கொண்ட பாரதி

"ஓ.. ஓ.. பொண்ணு வெட்க படறதை பார்த்தால் நைட் எல்லாம் நோ டாக்கிங்.. ஒன்லி ஆக்சன் தானா..” என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தாள் பாரதி..

“சீ.. போ பாரதி... “ என்று சிணுங்கியவள்

“ஆமா... இதெல்லாம் உனக்கு எப்படி தெரியுமாம்? ஓ .. அனுபவம் பேசுது.. அப்ப ஆதி அண்ணாவும் உன்கிட்ட மனம் விட்டு பேசலையா? ஒன்லி ஆக்சன் தானா ? “ என்று மலரும் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தாள் தன் கவலையை தற்காலிகமாக தள்ளி வைத்து..

“ஹீ ஹீ ஹீ உன் ஆதி அண்ணா மட்டும் அல்ல.. இந்த த்ரீ இடியட்ஸ் ல மூனாவது விட்டு போன நம்ம நிகிலன் IPS மாம்ஸ் ம் அதே கதைதான்.. இந்த மூனு பேரும் சொல்லி வச்ச மாதிரி பொண்டாட்டியை பார்த்தால் மத்ததெல்லாம் மறந்திடறாங்க.. “ என்று சிரித்தாள் பாரதி..

“என் புருசன் அவர் மனசுல இருக்கிறதை சொல்லாம என்னை எப்படி போட்டு படுத்தினார் தெரியுமா? அதை விட மது குட்டிதான் ரொம்ப பாவம்.. மாம்ஸ் அவர் காதலை மனசுக்குள்ளயே வச்சுகிட்டு வெளில காட்டாம அவளை போட்டு படுத்தினார்..

சரி டாக்டர் அண்ணா வாது விவரமா அவர் காதலை முன்னாடியே சொல்லி இருப்பார் னு பார்த்தால் அங்கயும் இதே கதைதான் போல..

அவர் மனசை திறக்காததால டைவர்ஸ் வரைக்கும் வந்து நிக்குது.. இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல.. “ என்று முகத்தில் கை வைத்து நொடித்தாள் பாரதி.

“ஹே.. பாரதி.. அப்ப நிஜமாகவே அவர் என்னை லவ் பண்ணினாரா? “ என்றாள் மலர் ஆர்வமாக

“ஹோய்... விடிய விடிய இராமயணம் கேட்டுட்டு விடிஞ்சதும் சீதைக்கு ராமன் சித்தப்பானு சொன்னானாம் ஒருத்தன்.. அந்த மாதிரி இவ்வளவு நேரமா நான் எதை சொல்லிகிட்டிருக்கேன்.. நீ இப்படி கேட்கற. “ என்று முறைத்தாள் பாரதி...

“ஹ்ம்ம் அவர் லவ்ஸ் ஐ அவரை பார்த்த அப்பயே நான் கண்டு புடிச்சிட்டேன் டீ .. அவர் எப்ப எப்படி உன்கிட்ட கவுந்தார் ங்கிறதையெல்லாம் நீ அவர்கிட்டயே விலாவாரியா கேட்டுக்க.. இப்ப உன் மேட்டர்க்கு வா..

சோ.. நான் சொன்னதில் இருந்தே தெரியலை.. நீ டைவர்ஸ்க்காக சொன்ன இரண்டு காரணமும் செட் ஆகலைனு.. “

“ஹ்ம்ம் அப்ப மித்ரா ஏன் அப்படி சொன்னா ? “

“எப்படி சொன்னா? “

“அவரும் அவளும் தான் லவ் பண்றாங்க.. என்னை அவர் ஒரு கடமைக்காகத்தான் அவசரபட்டு கல்யாணம் பண்ணிகிட்டார்னு...இரு இரு.. போட்டோ கூட அனுப்பி வச்சா..

ஆனா இது கொஞ்சம் பெர்சனல் பாரதி.. நீ யார்கிட்டயும சொல்ல கூடாது . “ என்று உறுதி வாங்கியவள் தன் அலைபேசியை எடுத்து அதில் மித்ரா மலருக்கு அனுப்பி இருந்த வசியும் மித்ராவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பாரதியிடம் காட்டினாள்..

பாரதியும் அதை சில விநாடிகள் உற்று பார்த்தவள் மலரிடம் திரும்பி

“நீ சரியான லூசு தான் டி.. இந்த போட்டோல பார்.. ஒன்னுலயாவது வசி அண்ணா கண்ணுல காதலோ இல்லை இப்படி அவ ஈசிகிட்டு உட்கார்ந்து இருக்காளே அவளை தப்பான ஒரு பார்வையோ பார்த்திருக்கிறாரா? அவர் கண்ணுல எவ்வளவு கண்ணியமும் நட்பும் மட்டும் தான் தெரியுது..

இதிலிருந்தே தெரியலை அவர் அவளை விரும்பலைனு ? “ என்று முறைத்தாள் பாரதி..

அதை மலர் மீண்டும் உற்று பார்த்தவள்

“ஓ.. ஆமாம் இல்ல.. சே.. நான் தான் ஆத்திரத்துல இல்ல வேதனையில் சரியா இந்த போட்டோவை பார்க்காம விட்டுட்டேன்... ஆனா... அப்ப மித்ரா எதுக்கு அப்படி சொன்னா? “

“ஹ்ம்ம் என் யூகம் சரினா அவதான் உங்க இரண்டு பேர் நடுவுலயும் கேம் ஆடியிருக்கா.. அதுவும் உன்கிட்டதான்.. அவ ஆட்டம் அண்ணாகிட்ட பழிக்கலை போல இருக்கு.. உன்னை டார்கெட் பண்ணி காயை நகர்த்தி இருக்கா..

அதான் உன்னை ப்ரெய்ன் வாஷ் பண்ணி டைவர்ஸ் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கா... “

“ஓ.................” என்று வாயை பிளந்தாள் மலர்

“ஆமா.. இப்ப வாய பொல.. எதிரியா நினைச்ச ஒருத்தி தானா தேடி வந்து உறவு பாராட்டறானா நீ அப்பயே முழிச்சுக்க வேண்டாமா?

மஹாபாரதத்துல சகுனி அதைத்தான் செய்வார்..

எதிரியாக பாவித்த பாண்டவர்களை வலிய வந்து நட்பு பாராட்டி அவர்களை விருந்து க்கு அழைத்து சென்று மகிழ்வித்து தர்மனை பகடை விளையாட வைத்து அவர்கள் நாட்டையெல்லாம் புடுங்கி கொண்டார் இல்லையா..

அந்த நிமிடம் தர்மன் கொஞ்சம் விழித்திருந்தால் அவ்வளவு பெரிய பாரத போரே நடைபெற்றிருக்காது..

அது மாதிரி வாழ்க்கையில் எப்பவும் விழிப்புடன் இருக்கணும் மலர்.. அதை விட ஹஸ்பன்ட் வைப் க்குள்ள நல்ல புரிதல் இருக்கணும்.. அப்பதான் மற்றவர்கள் என்ன சொன்னாலும் எப்படி சொல்லி குழப்பினாலும் அதை நம்பாமல் நாமலே யோசித்து ஒரு முடிவு எடுக்க முடியும்…”

“ஹ்ம்ம்ம் இப்ப புரியுது பாரதி... அப்ப நான் ஆரம்பத்துல இருந்தே அவர் காதலை புரிஞ்சுக்கலை.. என் அப்பாவுக்காத்தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டார்னு ஒரு நினைப்புலயே எல்லாத்தையும் தப்பு தப்பா பார்த்து வச்சிருக்கேன்...” என்றாள் மலர் வேதனையுடன்

“சரி அதை விடு.. இப்பயாவது புரிஞ்சுதா.. இனிமேல் இந்த மாதிரி டைவர்ஸ் னு போகாத..என்ன பிரச்சனை னாலும் ஈகோ பார்க்காம உன் புருசன் சட்டைய புடிச்சு நேரடியா கேட்டுடு.. அதை விட்டு நீயா ஒன்ன கற்பனை பண்ணிகிட்டு எந்த முடிவையும் எடுக்காதா... என்ன புரிஞ்சுதா? “

“ஹ்ம்ம் கண்டிப்பா பாரதி.. ஆனால் அவர் சொன்ன மாதிரி நான் என்ன தப்பு இதுல பண்ணினேனு இன்னும் தெரியலையே.. இவர் என்னை லவ் பண்ணினா அப்ப என்ன காரணத்துகாக என்னை வெறுக்கிறார் ? “ என்றாள் கவலையாக

“ஹ்ம்ம் கண்டு புடிக்கலாம்..எவ்வளவோ பண்றோம்.. இந்த தம்மாதுண்டு மேட்டரை கண்டு புடிக்க முடியாதா ? எனக்கு என்னவோ மித்ரா மேலதான் டவுட்..

இவதான் ஏதோ கேம் ஆடி இருக்கா. ஆனா அது என்ன கேம்னு தெரிஞ்சாதான் அதை எப்படி சரி செய்வது னு தெரியும்... சரி.. நீ மித்ரா உன்கூட பேசினாள் இல்லை.. எல்லாமே அப்படியே சொல். எங்கயாவது ஏதாவது க்ளூ இருக்கானு பார்க்கலாம்..

அதுவும் மித்ரா தானா உன்னை தேடி வந்த நாள் ல இருந்து நடந்ததை, அவள் பேசியதை எல்லாம் அப்படியே சொல்.. “ என்றாள் பாரதி

மலரும் மித்ரா தன்னிடம் முறைத்து கொண்டிருந்தவள் திடீரென்று தன்னை போனில் அழைத்து பேசியதும் அவள் வசியை பற்றி சொன்னது அவனை விட்டு கொடுப்பதாக சொன்னது அவனுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று சொல்லியது என எல்லாத்தையும் பாரதியிடம் ஒப்புவித்தாள்..

அவள் சொல்லி கொண்டு வரும் பொழுதே மலர் மூளையில் ஒரு விசயம் பளிச்சிட்டது..

“பாரதி..... அவள் அவரை பற்றி சொன்னப்போ கொஞ்ச நாளைக்கு குழந்தை பெத்துக்கறதை தள்ளி போடுங்க.. உங்க லைப் ஐ என்ஜாய் பண்ணுங்க.. அதுதான் வசிக்கு புடிக்கும்..

அதோட உங்க இரண்டு பேருக்கும் நிறைய டைம் கிடைக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க.. குழந்தை வந்து விட்டால் உங்களுக்கான நேரம் கிடைக்காது.. ஒரு வருடத்துக்காவது தள்ளி போடுங்கனு சொல்லி ஒரு டேபிலட் ஐயும் சஜஸ்ட் பண்ணினா..

அவளே ஒரு கைனிக் தான.. அதனால் அவள் என் நல்லதுக்குத்தான் சொல்லுவானு நானும் அவ சொன்ன டேபிலட் ஐ வாங்கி என் ரூம்ல வச்சிருந்தேன்..” என்று இழுத்தாள் மலர்..

அதை கேட்டு அதிர்ந்த பாரதி

“ஐயோ... லூசு லூசு.. சரியான லூசு மலர் டி..அவ சொன்னா அப்படியே கேட்டுக்குவியா? உன் புருசன் கிட்ட இதை பற்றி டிஸ்கஸ் பண்ண மாட்டியா? குழந்தை வேணுமா வேண்டாமாங்கிறது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்றது..

நீயா எப்படி அதை முடிவு பண்ணலாம்.? அப்படியே முடிவு பண்ணினியே அதை அண்ணாகிட்டயாவது சொன்னியா ? “ என்றாள் பாரதி கோபமாக

மலர் இல்லை என்று தலையை ஆட்டினாள்.. ஆனால் .. என்று ஏதோ சொல்ல வர

“நீ உன் புருசனை புரிஞ்சு வச்சுகிட்டது அவ்வளவு தானா? அவருக்கு குழந்தைங்கனா எவ்வளவு புடிக்கும் தெரியுமா? மது பொண்ணு நித்திலா குட்டி பிறந்தப்ப அவளை கையில ஆசையா தூக்கி வச்சுகிட்டு அப்பயே எப்படி ட்ரீம் அடிச்சுட்டு இருந்தார் தெரியுமா?

அவருக்கு எங்க குட்டீஸ் மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு ரொம்ப ஆசை...அவர் ஆசை ஏக்கம் எல்லாம் அப்பயே அவர் கண்ணுல தெரிஞ்சுது டீ.. அதை புரிஞ்சுக்காம முட்டாளா இருந்திருக்கியே...

ஐ திங் வசி அண்ணா அந்த மாத்திரையை பார்த்து தான் டென்ஷன் ஆய்ட்டார் போல.. அதான் உன்மேல கோபமா இருக்கார்.. கரெக்ட்.. அதான் ரீசன்.... “

“ஐயோ... இப்ப என்ன செய்ய ? எல்லாம் அந்த மித்ரா பிசாசால் வந்தது.. அவ மட்டும் அன்னைக்கு அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் நான் ஏன் அந்த கருமத்தை வாங்க போறேன்..இப்படி இல்லாத பிரச்சனையை இழுத்து விட்டுக்க போறேன்..

சே.. இப்படி கூட இருந்தே என் கழுத்தை அறுத்திட்டாளே..!! பத்தாததுக்கு என் கையாலயே என் புருசன் கிட்ட டைவர்ஸ் கேட்கற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டா... அவ மட்டும் என் கைல கிடைச்சா?” என்று பல்லை கடித்தாள் மலர்..

“ஹ்ம்ம்ம் டென்ஷன் ஆகாத மலர்... இந்த பிரச்சனையை பொறுமையாதான் ஹேண்டில் பண்ணனும்.. என் யூகம் சரினா வசி அண்ணா மித்ராகிட்டயும் அவர் உன்னை காதலிக்கறதை பற்றி சொல்லி இருக்க மாட்டார்..

அப்படி அவர் சொல்லி இருந்தால் கண்டிப்பா அவ உன்னை பிரிக்க முயற்சி செய்திருக்க மாட்டா...

அப்புறம் இன்னோரு குழப்பம்.. எனக்கு என்னவோ மித்ரா வசி அண்ணாவை லவ் பண்ணலைனு தோணுது.. “ என்றாள் பாரதி யோசனையாக

“ஆங்... அது எப்படி சொல்ற பாரதி.. அவளேதான் என்கிட்ட சொன்னாளே.. அதோடு அவருக்காகத் தானே இன்னும் கல்யாணம் பண்ணிக்காம காத்துகிட்டிருக்கா... “

“ஹ்ம்ம் நான் ஒரு சைக்காலஜிஸ்ட் ஆக்கும் மலர்..மத்தவங்க மனதை படிக்க தெரிந்தவள்..

இந்த போட்டோவில் இருக்கிற மித்ரா கண்ணை பார்.. இதை நல்லா உற்று பார்த்தால் அவளுக்கு வசி அண்ணா மேல எந்த காதலும் இல்லை.. மாறாக அவரை கூடவே வச்சுக்கணும் ன்ற ஒரு பிடிவாதம் தான் தெரியுது..

அதாவது வசி அண்ணா தன் கூடவே இருக்கணும் ங்கிறதை அவள் காதல் னு தப்பா அர்த்தம் எடுத்துகிட்டா..அது அப்படியே அவ மனசுல பதிந்து போய்விட அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேனு அவளுக்குள்ளயே பதிய வச்சுகிட்டா...

மத்தபடி இது உண்மையான காதலே அல்ல... “

“ஓ... இப்ப என்ன செய்ய? பேசாம அவர் கிட்ட மித்ரா பற்றிய உண்மையை சொல்லிவிடலாமா? “

“இல்லை மலர்.. நாம முதல்ல மித்ராவைத்தான் சரி பண்ணனும்.. நமக்கு இன்னும் அவளை பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும்.. அதுக்கு வசி அண்ணாக்கும் மித்ராவுக்கும் காமன் பிரண்ட் ஷ்யாம் சாரை பார்த்து பேசணும்..

என் யூகம் சரினா ஷ்யாம் மித்ராவை லவ் பண்றாரா இருக்கும்.. அவரும் இவளுக்காகத்தான் காத்துகிட்டிருக்கார்.. இந்த லூசு அதை புரிஞ்சுக்காம வசி அண்ணா பின்னாடி சுத்திகிட்டிருக்கு...

அவ கேரக்டர்க்கு ஷ்யாம் தான் பொருத்தமா இருப்பார்.. அதனால் நீ போய் ஷ்யாம் ஐ பார்த்து பேசு...மித்ராவை பற்றி அவருக்கு நல்லா தெரியும்.. அவரே இந்த பிரச்சனைக்கு ஒரு வழி சொல்வார் அவளை எப்படி திருத்துவது என்றும் தான்.. அதனால நீ உடனே போய் அவரை பார்... “ என்று முடித்தாள் பாரதி...

“ஹ்ம்ம் இதுவும் நல்ல ஐடியா பாரதி... அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. என்ன பிரச்சனைனே தெரியாமா நேற்று நைட் ல இருந்து மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டே இருந்தேன்..

இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆ இருக்கு.. ரொம்ப தேங்க்ஸ் பாரதி..தெய்வமா வந்து எனக்கு ஒரு நல்ல வழியை காட்டிட்ட... “ என்று பாரதியை கட்டி கொண்டாள் மலர்...

“நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் மலர்.. சீக்கிரம் உங்க பிரச்சனையை சால்வ் பண்ணு.. டாக்டர் சாரை நம்பி இந்த RJS ம் நிறைய பேசன்ட்ஸ் வேற இருக்காங்க..

அவங்க சந்தோஷம் டாக்டர் கையிலனா அவர் சந்தோஷம் உன் கையில.. அவரை எப்பவும் சந்தோஷமா வச்சுக்கிறது உன் பொறுப்பு.. அதனால சீக்கிரம் உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையை தீர்த்து அவரோடு சந்தோஷமா குடும்பம் நடத்து..

நானும் வசி அண்ணாக்கும் ஷ்யாம் சாருக்கும் கொஞ்சம் கவுன்சிலிங் கொடுக்கறேன்.. இந்த மித்ராவை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று அவர்களுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் கொடுக்கணும்..

பார்க்கலாம்.. சீக்கிரம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடும்.. உன் ஈஸ் இருக்கான் எல்லாத்தையும் நல்லபடியா முடிக்க.. “ என்று சிரித்தாள் பாரதி

“ஹ்ம்ம் சரி பாரதி.. அப்ப நான் இப்பயே போய் ஷ்யாம் அண்ணாவை பார்க்கறேன்.. “ என்றவள் முன்பு ஒரு முறை அவன் எண்ணை சேவ் பண்ணி வைத்திருந்ததால் ஷ்யாமை அழைத்து அவனை பார்க்கவேண்டும் என்று சொன்னாள் மலர்...

அவனும் அன்றைய அவனுடைய சிப்ட் அப்பொழுதுதான் முடிந்து பிரியாக இருப்பதால் உடனே வர சம்மதித்தான்..

மலர் ஒரு காபி ஷாபின் பெயரை சொல்லி அங்கு வர சொல்லியவள் பின் தன் கேண்ட் பேக்கை எடுத்து கொண்டு பாரதியிடம் விடைபெற்று துள்ளலுடன் தன் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள்...

எப்படியோ ஷ்யாமை சந்தித்தால் தன் பிரச்சனைக்கு முடிவு வந்து விடும் என்ற ஆவலுடன் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி மகிழ்ச்சியுடன் ஓட்டி கொண்டிருந்தாள் பனிமலர்.

பாவம் அவள் அறியவில்லை.. இந்த சந்திப்பு அவள் வாழ்வில் பெரும் புயலை கொண்டு வரப் போகிறது என்று..

இதுவரை சாதாரண புயலாக இருந்தது பெரும் சூறாவளியாக சுழற்றி அடிக்க போவதை அறியாதவள் உற்சாகத்துடன் தன் வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள்..

மலர் அவள் வாழ்வில் வரும் அந்த சூறாவளி புயலில் இருந்து தப்புவாளா? இல்லை புயல் விட்டு செல்லும் சேதாரத்தை போல அவள் வாழ்க்கை மாற போகிறதா? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top