• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தாழையாம் பூமுடித்து🌺13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🏻🙏🏻🙏🏻 SM ஈஸ்வரி 🥰🥰🥰🥰🥰
IMG-20221105-WA0003.jpg

13
அதிகாலையிலேயே வந்து கதவைத் தட்டினர், மலர்க்கொடியும் சௌந்தரபாண்டியும்.

ஈஸ்வரன்‌ எழுந்து கதவைத் திறந்து விட்டான். மலர்க்கொடி வாசல் தெளிக்கப் போக, ஹாலில் படுக்கை விரித்துக் கிடப்பதைப் பார்த்த சௌந்தரபாண்டி,
"என்னடா மாப்ளே அதுக்குள்ள படுக்கை ஹாலுக்கு வந்துருச்சு. தெய்வம் தந்த வீடு... வீதியிருக்குனு, ராத்திரி எங்க வீதி வரைக்கும் பாட்டு கேட்டுச்சே... அது நீதானாடா மாப்ள?" எனக்கேட்டு சிரிக்க,
அருகில் இருந்த தலையணையை எடுத்து சௌந்தரபாண்டி மீது வீசினான்.

"அவுட்." என தலையணையை கேட்ச் செய்தவன், பேச்சியம்மாவின் அறையில் இருந்து சங்கரி வெளியே வருவதைப் பார்த்தான்.

"என்னம்மா, அம்மத்தா ராத்திரில வேல வச்சிருச்சா?"

"இல்ல ண்ணா! நான் தான் இங்க படுத்துக்கிட்டே." என்றாள்.
மறுபடியும் பேச்சியம்மா எழுந்து வந்து அலப்பறையைக் கூட்டியதில், அவரை படுக்க வைத்துவிட்டு அங்கேயே அவளும் படுத்துக் கொண்டாள்.

மலர்க்கொடி வாசல் தெளித்து, கோலம் போட்டுவிட்டு வர, சங்கரி மேலே சென்றாள்.

"என்னடா விடிஞ்சும் விடியாம வந்து கதவைத் தட்டியிருக்கீங்க."

"மலரு தான் வெள்ளனா எழுப்பி கூட்டிட்டு வந்துச்சுடா. சமையல் பண்ணி எடுத்துட்டுப் போக வேண்டாமா?" என இவர்கள் பேசிக் கொண்டிருக்க, மீண்டும் அழைப்புமணி அடித்தது. யாரென்று பார்க்க, பேக்கோடு வருண் வந்து நின்றிருந்தான். ஈஸ்வரனின் சித்தப்பா வீடும் அடுத்த வீடுதான்.

"டேய்! உன் தங்கச்சி ஒன்னும், என் தங்கச்சி மேல அக்கறப்பட்டு, உன்னைய எழுப்பி கூட்டியாரல. அங்க பாரு! யாரு வந்துருக்கான்னு, என் தம்பி மேல அக்கறைப்பட்டு கூட்டி வந்துருக்கு டா." எனக் கூறி சிரித்தான்.

"வாடா… வீட்டு வாசல மறந்து போயி, இங்க வந்துட்டியா?" என சௌந்தரபாண்டி, கிண்டலோடு வருணை வரவேற்க, அதற்குள் சூடாக அனைவருக்கும் காஃபி போட்டு எடுத்து வந்தாள் மலர்க்கொடி. வருண், பக்கத்தில் இருந்த, அவன் வீட்டிற்கு செல்லாமல் நேராக இங்குதான் வந்திருந்தான்.

"ஏன்டா! வரவர ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துட்டே வந்தியா? வந்து நிக்கமுன்னே காஃபி வருது?" என ஈஸ்வரனும் தம்பியை கேலி செய்ய,

"உங்க லெவலுக்கு இல்ல. நீங்க எல்லாம் தம்பிக்கே கல்யாணம் முடிச்சுட்டு சொன்ன ஆளாச்சே?" என வருண் கேட்க,

"சரி... சரி… நீ வந்த வேலையப் பாரு!" என நழுவினான்.

அதற்குள் சங்கரியும் குளித்து விட்டு வர, வருணை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"வாங்க வருண்!" என வரவேற்க,

"ஹாய்… சங்கரி!" என்றான். இருவருக்கும் வயது வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லை.

"டேய்! இந்த ஹாய்.. ஓய்... எல்லாம் சென்னைல வச்சுக்கோ. மரியாதையா அண்ணினு கூப்புடு." என அதட்ட,

"அப்படியே ஆகட்டும் அண்ணாரே! என்னமா புகையுது?" என கூறி சிரிக்க,

"நீ வந்த வேலையப் பார்றா? உன்னோட ஆளு அங்க இருக்கு." என மலர்க்கொடியை கை காட்டிவிட்டு, ஈஸ்வரனும் மேலே சென்றான்.

காபியைக் குடித்தவன், மலர்க்கொடியிடம் கண் ஜாடை காட்டிவிட்டு, அவனது வீட்டிற்கு சென்றான். சங்கரியும் மலரோடு அடுக்களை சென்றவள்...

"மலர், என்ன என்ன செய்யணும்னு சொல்லு. நான் ஹெல்ப் பண்றே." என்றாள். இது என்வீடு, என் குடும்பம் என்ற உரிமை வந்துவிட்டதால் மலர்க்கொடி மேல் இவளுக்கு பொறாமை வரவில்லை.

"இட்லி ஊத்தி, சட்னி, சாம்பார் வைக்கணும். சட்னிய நான் ரெடி பண்றே. நீ இட்லி மட்டும் ஊத்தி எடு சங்கரி." எனக் கூற இருவரும் சேர்ந்து, ஆளுக்கொரு வேலையாகப் பார்த்தனர். மலர்க்கொடி வேலை பார்க்கும் வேகம் பார்த்து அசந்துவிட்டாள். அவளது வளர்ப்பு அப்படி. காலையில் ஜெயந்தி வேலை ஆட்களை கவனிக்க, காட்டில் இறங்கி விட்டால், வீட்டு வேலை எல்லாம் மலர்க்கொடி தான் பார்த்துவிட்டு காலேஜ் செல்ல வேண்டும். அதனால் அவளுக்கு அடுப்படி வேலைகள் அத்துப்படி.

இவள் இட்லியை ஊற்றி வைப்பதற்குள் ஆயிரம் சந்தேகம் கேட்க, "நீ வேலைய வேடிக்கை மட்டும் பாரு. மெதுவா ஒவ்வொன்னா கத்துப்ப." என்றாள்.

"இங்க வீட்டு வேலைக்கி ஆள் வரமாட்டாங்களா?"

"இங்க... காட்டு வேல பாக்குறது கௌரவம். வீட்டு வேல பாக்குறது கௌரவக் கொறச்சல். அதுவும் இல்லாம எல்லாருமே ஒன்னுக்குள்ள ஒன்னு. யார வீட்டு வேலைக்கு வைக்க முடியும்? நமக்கு முடியலைனா அவங்களே வந்து பாத்து வச்சுட்டுப் போவாங்களே ஒழிய,‌ சிட்டியில மாதிரி வீட்டு வேலைக்கி ஆள் வரமாட்டாங்க. மாடுகளப் பாக்க மட்டும் தான் ஆளிருக்கு." எனப் பேசிக் கொண்டே இருவரும் வேலை பார்க்க,அதற்குள், பேச்சியம்மாவும் மெதுவாக எழுந்து வந்தார். அவருக்கும் காஃபியைக் கொடுத்தனர்.‌ பேத்திகளிடம் என்ன சமையல் என விவரம் கேட்டார்.

"காலைக்கி இட்லி அம்மத்தா! மதியத்துக்கு சின்ன அத்தை சாப்பாடு குடுத்துவிடுறேன்னு சொல்லிட்டாங்க. வருண் மாமா வந்துருக்காங்க." என மலர்க்கொடி கூற,

"வந்தவன் என்னையப் பாக்காம போயிருக்கான்." என சின்னப் பேரன் மீது குறைபட,

"அதெல்லாம் பாக்க வேண்டியவங்கள பாத்தாச்சு அம்மத்தா!" என சங்கரி கண்ணடித்து சிரித்தாள்.

"போ... சங்கரி! நீயும் இவங்களோட சேந்துக்கிட்டு. குளிச்சிட்டு வருவாங்க அம்மத்தா." என மலர்க்கொடி அழகாக வெட்கப்பட்டுக் கொண்டே கூற...

"பார்றா… மலருப்பிள்ளைக்கி வெக்கத்தை." என சிரித்துக் கொண்டே வேலையைப் பார்த்தனர்.

"மதியத்துக்கு சூடா சோத்த வடிச்சு, கடுகுப் பொடியும், நல்லெண்ணெயும் பிள்ளபெத்தவளுக்கு மறக்காம குடுத்து விட சொல்லுங்கடி." என்றார் பெரிய மனுஷியாக.

"சரி… அம்மத்தா." என்றவளிடம்,

"அது எதுக்கு?" என சங்கரி கேட்க,

"இதுகூட தெரியாதா? உங்க அப்பத்தா, நீ வயசுக்கு வந்தப்ப இதெல்லாம் உனக்கு செஞ்சு கொடுக்கலியா? கடுகுப் பொடிதான் வயித்த சுத்தம் பண்ணும். உளுந்தங்களியாவது உனக்கு கிண்டிப்போட்டாளுகளா இல்லையா. போட்டுருந்தா நீ ஏன் இப்படி குறுக்குல சத்து இல்லாம இருக்கப் போற? நீ எல்லாம் எப்படித்தான் பெத்து எடுக்கப்போறீயோ?" என சங்கரியை நையாண்டி பேசி,
அவள் உடம்பை மெயின்டெயின் பண்ண மெனக்கெட்டதை எல்லாம் பொசுக்கென ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டார் பேச்சியம்மா.

வயசுக்கு வந்த பிள்ளைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் கடுகுப் பொடி கொடுப்பது வழக்கம். வடச்சட்டியில கடுகை சடச்சடனு பொறியவிட்டு, அதோட ரெண்டு பட்டவத்தலும், கல்லு உப்பும் சேத்து, அம்மியில் வச்சு பொடி பண்ணும் போது, குழவிக்கல்லுக்கும், அம்மிக்கல்லுக்கும் இடையில சரசரன்னு கடுகும், மிளகாயும் அரைபடும் போதே, அந்த வாசனையிலேயே பசி எடுக்க ஆரம்பிச்சிறும். அந்தப் பொடிய சுடுசோத்துல போட்டு, நல்ல எண்ணெய்விட்டு குழந்தை பெற்றவர்கள் சாப்பிட, கர்பப் பையை கசடின்றி சுத்தம் செய்யும். புண்ணையும் ஆற்றும். அந்தக் காலத்தில் வீட்டில் பேரு காலம் ஆகும் பெண்களுக்கு கர்ப்பப்பையை சுத்தமாக்க செய்யப்படும் கைவைத்தியம் இது. எனவே தான் மறக்காமல் அதை செய்யச் சொன்னார் பேச்சியம்மா.

அதற்குள் இட்லி வெந்துவிட, மலர்க்கொடி சட்னியை அரைத்துக் கொண்டே, இவளை இட்லியை எடுக்க சொல்ல, சங்கரியும் துணிபிடித்து மூடியைத் திறந்தவள், அப்படியே இட்லித் தட்டை எடுக்க, முயன்றாள்.

"ஏய் சங்கரி! என்ன பண்ற! தண்ணி தெளிச்சு எடுக்கணும். கை சுட்டுறும். இரு வர்றே." என மிக்சியை நிறுத்தி விட்டு வந்தாள்.

"அதுல தான் துணி இருக்கே?" என்றாள். அவளுக்கு குக்கர் இட்லி பார்த்துப் பழக்கம். இங்கு… இட்லிதட்டு துணியோடு இருக்க,‌ அப்படியே எடுக்கலாம் என நினைத்துவிட்டாள்.

"வந்தவுகளுக்கு சோறு, வராதவகளுக்கு உலைனு‌ வச்சு ஆக்கிப்போட்ட குடும்பத்துல இருந்து வந்தவளுக்கு, இட்லி அவுச்சு எடுக்கத் தெரியல." என பேச்சியம்மா நொடிக்க, அதுவரை பொறுமை காத்தவள் பொங்கிவிட்டாள்.

"இங்க பாரு அம்மத்தா. நீ பிறந்த வீட்ல தான் நானும் பிறந்து வந்துருக்கே. உனக்கு இருக்குற அதே வாய் எனக்கும் இருக்கும். சும்மா நொட்ட சொல்லிக்கிட்டு, என்னையும் தேவையில்லாம பேச வைக்காதே!" என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கூற,

"இருக்கணும்ல… வெத ஒன்னு போட்டா சுறை ஒன்னா முளைக்கும். மலரு... இவள அடுப்படியில விடாதே. எதனாலும் உங்க அத்தை வந்து சொல்லிக் கொடுத்துக்குவா." என்று பேத்தியிடம் கூறிவிட்டு, சிரித்துகொண்டே வாசல் பக்கம் சென்று விட்டார்.

"அம்மத்தா அப்படித்தான் சங்கரி. கண்டுக்காதே. வா… நம்ம வேலையைப் பாப்போம்." என்றாள்.‌

நீ பிறந்த வீடுதான் நான் பிறந்த வீடும் என்றதில் பேச்சியம்மாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம். நிலை கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் இரத்த சம்பந்தம் ஆயிற்றே. பிறந்த வீட்டு பாசம் விட்டுப் போகுமா?

அதற்குள் ஆண்களும் குளித்துவிட்டு வர, அவர்களுக்கு உணவை பரிமாற, சாப்பிட்டு முடித்து, கேரியரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்ப… வருண், ராயல் என்ஃபீல்டில் வந்து வாசல் முன் நின்றான்.
"கார்ல வரலியாடா?" என இவர்கள் கேட்டுக் கொண்டிருக்க,

"அதெல்லாம் கல்யாணம் முடிச்ச உங்கள மாதிரி ஓல்டிஸ்க்கு.‌ இது எங்களுக்கு மட்டும்." என்றான். அதற்குள் மலர்க்கொடி வந்து வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தாள்.

"வந்ததுல இருந்து ரெண்டு பேரும் ஒரு வார்த்தை பேசல. இதெல்லாம் எப்படா ப்ளான் பண்ணுனீங்க." எனக் கேட்டுக் கொண்டிருக்க, இவர்களுக்கு பதில் கூற வண்டி அங்கு நின்றிருந்தால் தானே.

"சீக்கிரம் தேதி பாக்க சொல்லணும் மாப்ள. இவன் ஸ்பீடு எனக்கு சரியாப்படல." என அண்ணனாக சௌந்தரபாண்டி கவலைப்பட,

"எங்களுக்கும் இப்படித்தான்டி மாப்ள இருந்துச்சு. நீ என் தங்கச்சிய சுத்தி வர்றப்ப எல்லாம். உங்களுக்கு வந்தா ரத்தம். அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியோ."

"அடியேய் மாப்ள! நாங்க எல்லாம் உள்ளூர்ல சுத்துனோம். உன்னைய மாதிரி ஊருவிட்டு ஊரு போகல." என மச்சானை வாரிவிட,

"சரி... சரி… நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கலாம். நீ போயி கார எடுடா. நா... சொல்லிட்டு வந்துர்றே." என சிரித்தவாறே, சங்கரியிடம் கூறுவதற்காக உள்ளே சென்றான்.

அடுப்படியில் அவள் இல்லை. மேலே அறைக்கு செல்ல, அங்கே தலையைப் பிடித்தபடி ஷோபாவில் ஒரு மாதிரியாக அமர்ந்திருந்தாள்.

"சிவா… இன்னும் தலைவலி சரியாகலியா?" எனக் கேட்டுக்கொண்டே அருகில் அமர,

இவனைப் பார்க்கவும், "இன்னும் கிளம்பலியா? இது வேற வலி. உனக்கு வாட்சப் பண்ணி இருக்கே. எனக்கு அத வாங்கிட்டு வந்துரு." என்றாள்.

அவனும் ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவள் குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்தவன், "இப்பவே வேணுமா? அவசரம்னா, மலர்கிட்ட கேக்க வேண்டியது தானே. இல்லைனா தீபி கிட்ட கேளு. கால் பண்ணித் தர்றே. வீட்ல வச்சிருக்கும்." என தங்கையை ஃபோனில் அழைக்க முற்பட,

"அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டாம்." என அவசரமாக மறுத்தாள்.

"ஏன்… நீ என்ன சின்னப் பிள்ளையா. இதெல்லாம் தெரியக் கூடாதுங்கற?" என புருவம் சுருக்கி வினவ,

"இல்ல… வெளில தெரிஞ்சா, தனியா உக்காரனும். என்னால ஒரு வாரத்துக்கு எல்லாம் ஒதுங்கி உக்கார முடியாது.‌ ஏஜ் அட்டென்ட் பண்ணப்பவே தனியா உக்கார மாட்டேனு அழுததால அப்பத்தா என் கூடவே இருந்தாங்க." என இப்பொழுதும் அழுது விடுபவள் போல் கூற,

"லூசா நீயி! அதெல்லாம் எங்க அப்பத்தா காலத்துல. இப்ப யாரும் அப்படி உக்கார்றது இல்ல. சாமி ரூமுக்கும், அப்பத்தா ரூமுக்குள்ள மட்டும் போகாதே. தீபிகா கிட்ட பேசு." என தங்கையை அழைத்தவன், இவளிடம் ஃபோனை கொடுக்க, தனக்கு வேண்டியதை இவளும் கூற,

"அண்ணி, கல்யாணத்துக்குப் பின்னால எனக்கு தேவைப்படல. என்னோட ரூம்ல இருக்கும். அண்ணேங்கிட்ட சாவி வாங்கிக்கோங்க.” என கூறினாள்.

”அப்பாடா! மாசம் மாசம் தனியா உக்காரணுமோனு பயந்துட்டே.” என்றவாரு ஆசுவாசமாக அவனிடம் ஃபோனைக் கொடுக்க, இதை எண்ணி எவ்வளவு பயந்திருக்கிறாள் எனத் தெரிந்தது.

“சிவா... நீ உங்க வீட்ல இருந்த மாதிரியே இங்கேயும் இருக்கலாம். அத்தை சொன்ன மாதிரி இது கட்டுப்பெட்டியான வீடு இல்ல ம்மா. ஆனா, அப்பத்தா கிட்ட மட்டும் பாத்து பேசு. சில விஷயங்கள்ல அவங்கள மாத்த முடியாது. அந்தக் காலத்து மனுஷி. அனுசரிச்சு போ.” என ஆறுதலாக அவள் அருகில் அமர்ந்து கைபிடித்துப் பேசியவன்…

“ஆமா… இன்னும் மாசாம் மாசாம் ஒதுங்கி உக்கார்ற ஐடியா தான் இருக்கா. வேற நெனப்பு எதுவும் இல்லையா?" என இதழில் கேலி இழையோட கேட்க, அவளோ, அவன் கேட்டதன் அர்த்தம் புரியாமல்,

'லுசாப்பா நீ!' எனும் விதமாக அவனைப் பார்த்து ஒரு லுக்கு விட…

"அவனவன் இன்னைக்கு காலையில வந்து இறங்கின மாயம் தெரியல. அதுக்குள்ள பிக்அப் பண்ணிட்டு போயிட்டு இருக்கான். இங்க என்னடான்னா இன்னும் கண்ணு மொறச்சு தான் பாக்குது. இன்னுமா இந்த ஐத்த மகனப்பாத்தா ஆசையும், வெக்கமும் வரல?" என ஆசை பாதி ஏக்கம் மீதி என கேட்க, அப்பொழுது தான் அவன் கூறியதின் அர்த்தம் புரிந்தது பெண்ணிற்கு.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை, புருவம் தூக்கி என்ன என வினவ, இடம் வலமாக தலையை ஆட்டியவள், இதழில் ஏளனம் இழையோட,

"சும்மா அதையே சொல்லாதே. உனக்கு ஆசையும், வெட்கமும் வரவைக்கத் தெரியலைனு சொல்லு." என உதடு சுழித்து, அதே நக்கல் தொனியில் பட்டென கூறியவளை, அவன் அதிர்ந்து பார்க்க,

"வந்து கீ எடுத்துக் கொடுத்துட்டு, கிளம்பு. வெளியே அண்ணா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பாரு!" என கூறிவிட்டு, அவன் சுதாரிக்கும் முன் கீழே ஓடிவிட்டாள்.

"அடியேய்!!" என அவன் கத்தியது காற்றில் தான் கலந்து போனது.

********************
நிஜம் தானா… நிஜம் தானா…
இவள் பார்த்த நொடி நிஜம் தானா…

என மெய்மறந்து கண்ணாடி முன் நின்றவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

காலையில் கண்விழித்துப் பார்த்தவள், சட்டென்று விழி அகல... பார்த்தது பார்த்தபடி அப்படியே கட்டிலில் படுத்து இருந்தாள். தலைக்கு கை கொடுத்து, தன்னையே பார்த்து திரும்பிப் படுத்தவளை,

"என்ன… ஐத்த மகன் அழகா இருக்கேனா?" என கண்ணாடி வழியாகவே அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன், சட்டையின் முன்கைப் பட்டனை பூட்டியவாறே கேட்டான். வேட்டி சட்டையிலேயே பெண்ணைப் பித்தாக்கி இருந்தவன், இப்பொழுது அடர் சாம்பல் நிற பேன்ட்டும், வெள்ளை முழுக்கை சட்டையும், ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், அழகாக… அளவாக நறுக்கப்பட்ட மீசையும் என ஆண்மை மிளிற, நின்றவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவள்,

"ஆமா… நீ என்ன படிச்சிருக்க? என்ன வேலை பாக்குற? அன்னைக்கும் அப்பா கேட்டப்ப ஒழுங்கா பதில் சொல்லாம ஏதோ பூசி மொழுகின?" என்றாள் அவன் மீது வைத்த பார்வையை விலக்காமலே.

"ஏன்... மாடு மேய்க்க பேன்ட் ஷர்ட் போட்டு போகக் கூடாதா? நீ கவ்பாய் பிக்சர் எல்லாம் பாக்கல.‌ அதுல மாடு மேக்கிறவங்க… பேன்ட் ஷர்ட் தானே போட்டுருப்பாங்க."

"இப்புவும் நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லல."

"உன் புருஷன் ஒரு சீக்ரெட் ஏஜென்டு." என கூறிவிட்டு சிரித்தான்.

"எது... இந்த சீனா தானா 007 மாதிரியா?" என கேட்டு சிரித்தவளை,

"நீ ரொம்ப டேமேஜ் பண்ற. உனக்கு தான் அது ஆபத்தா முடியும்... பாத்துக்கோ." என்று திரும்பி நின்று சிரித்தவனிடம்,

"அப்புறம்... எதக் கேட்டாலும் நேரடியா பதில் சொல்லாம, சுத்தி வளச்சு மூக்கத் தொட்டா வேற எப்படி பேசுவாங்களாம?" என ஆதங்கப்பட்டாள். இன்னும் இவனைப் பற்றி முழுதாக தெரியவில்லையே என்ற ஆதங்கம் அவளது பேச்சில் தெறித்தது. அதற்கான தனிமையும் இன்னும் வாய்க்கவில்லை இவர்களுக்கு.

"நைட்டு எப்ப வந்த? சித்தப்பா ரொம்ப குடிச்சுருந்தாரா?" எனக் கேட்டுக் கொண்டே, தலையை அள்ளி முடிந்து கொண்டு எழுந்தாள்.

"நேத்து இங்க வந்து எல்லாரையும் ஒன்னா பாத்தாருல்ல. அதுல பழைய ஞாபகமெல்லாம் வந்துருக்கும் போல. அதான் கொஞ்சம் ஓவரா ஆயிருச்சு. உனக்கு வயித்தவலி எப்படி இருக்கு?" என மனைவியையும் அக்கறையாக விசாரிக்க,

"இப்ப பரவாயில்ல. இதுக்கு தான் சித்தப்பாவ, அப்பத்தா இங்க வரவிடவே மாட்டாங்க. நானும் கூடவே இருப்பேன். அதனால சென்னையில அளவாத்தான் இருப்பாரு." என எழுந்தவள் குளியலறை சென்றாள்.

தீபிகாவிற்கு குழந்தை பிறந்த மூன்றாம் நாளே, இவர்களது தொல்லை தாங்க முடியாமல் மருத்துவமனையில் இருந்து அனுப்பி விட்டனர். அன்றே முத்துவேலும் ஊர் மெச்ச சீர்வரிசைகளை கொண்டு வந்து அடுக்கினார். மச்சான் முறைக்கு ஸ்ரீ க்கும் செயினும், புதுத் துணியும் எடுத்துக் கொடுத்தனர்.

ஈஸ்வரனின் சித்திகளும் வந்து இருந்தனர். குழந்தையைப் பார்க்க சொந்த பந்தங்கள் வந்து சென்ற வண்ணம் இருக்க, போலீஸ்காரன் மகன் தனது வசூலை பிறந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டான். வசூலும் பல ஆயிரங்களைத் தாண்டி போய்க்கொண்டு இருந்தது. சமையலும், விருந்தும் நடந்த வண்ணமாக இருந்தது.

வேலை அதிகம் இருக்கும் எனத் தெரிந்து ஜெயந்தியும் அண்ணன் வீட்டிலேயே இருந்தார். உள்ளூராகவே இருந்தாலும், பேரனை விட்டுச்செல்ல மனம் வரவில்லை.

கீதாவும், சுதாவும் அங்கே இருந்தாலும், கீதா பேசிய அளவிற்கு அண்ணன் முத்துவேலிடம் சுதா பேசவில்லை. வரவேற்றதோடு சரி. பெண்கள் மூவரில் கல்லூரி வரை சென்று படித்தவர் சுதா மட்டுமே. வீட்டிற்கு கடைசிப் பெண் என்ற செல்லத்தோடு, சின்ன அண்ணனின் ஆசை தங்கச்சியும் இவர் தான். விடுமுறை என்றால் சுதாவை சென்னை அழைத்துப் போவதும்,‌ மறுபடியும் அழைத்து வந்து விடுவதும் முத்துவேல் தான்.

அண்ணனைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்கள் பொங்கியது சுதாவிற்கு. வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என எப்பொழுதும் கனவுகளோடு சுற்றியவரின், வாழ்க்கை கனவாகிப் போனதின் தாக்கம் அவரது கண்களில் தெரிந்தது. யாரும் பார்க்காமல் கண்களை துடைத்துக் கொண்டார்.

"அடுத்து என்ன... மலருக்கும் வருணுக்கும் கல்யாணம் தானே மாமா?" என சீர் கொண்டு வந்தவர், விருந்தை முடித்துக் கொண்டு தவசியிடம் விசாரிக்க,

"ஆமா முத்து! ஆனா… அதுக்கு முன்னாடி ஒரு‌ கெடாவெட்டு வச்சுறலாம்னு இருக்கே. ஈஸ்வரன் கல்யாணத்தையும் யாருக்கும் சொல்லலைல. சொந்தங்காரங்க எல்லாம் என்னப்பா செலவ மிச்சம் பண்ணிட்ட போலன்னு கேலி பேச ஆரம்புச்சுட்டாங்க." எனக் கூறிவிட்டு சிரித்தார். முத்துவேல் அமைதியாகவே இருந்தார்.

"என்ன முத்து? அமைதி ஆயிட்ட?"

"அதொன்னும் இல்ல மாமா! அப்ப... மொறப்படி எல்லாருக்கும் சொல்லனும்ல?''

"ஆமா… மொறப்படி எல்லாரையும் அழைக்கணும். இன்னும் பெரிய மாப்ள முறுக்கிக்கிட்டு தானே இருக்கான். நீ மட்டும் வந்து சீர் செஞ்சா ஆச்சா. அவங்களும் எல்லாரும் வரணும்ல."

"எல்லாரும் வர்றதைப் பத்தி பிரச்சினை இல்ல மாமா. ஏற்கனவே கெடாவெட்டுல தானே பிரச்சினையே வந்துச்சு."

"அதுக்காக கெடாவெட்டே வைக்காமலா போயிட்டோம். ஒரு நல்லுதுல பிரிஞ்சா கெட்டதுல கூடனும்... கெட்டதுல பிரிஞ்சா நல்லதுல கூடனும்னு சொல்லுவாங்க. ஆனா, நீங்க தான் அப்படியே ஒதுங்கிப் போயிட்டீங்க. இப்ப பொண்ணயும் கட்டியாச்சு. இனிமேலும் ஒதுங்கி நிக்க முடியாதுல. அதுக்கு தான் ஒரு விசேஷத்த வச்சு ஒன்னு கூடுவோம்."

"உங்க இஷ்ட்டம் மாமா. முடிவு பண்ணிட்டு சொல்லுங்க. நாங்க இன்னைக்கி சென்னைக்கு கெளம்புறோம்."

"அதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும் முத்து. குழந்தை பிறந்தவீடு, தீட்டுவீடுன்னு யாரும் சாப்புட மாட்டாங்க. முப்பது நாள் ஆன பின்னாடி தான் விசேஷம் வைக்கணும். அப்படியே இவங்க நிச்சயித்தையும் சேர்த்து வச்சுறலாம்." என பேசிக் கொண்டு இருந்தனர்.

சிறிது நேரம் மற்ற விஷயங்களையும் பேசிவிட்டு, அனைவரிடமும் சொல்லிக் கொண்டு முத்துவேலும், ஸ்ரீ மற்றும் பிரியாவும் கிளம்பினர். பிரியாவிற்கு குழந்தையை விட்டுச் செல்ல மனமில்லை. இவர்களுக்கு எல்லாம் இது தான் முதல் கைக்குழந்தை.

தன்னிடம் இன்னும் சரியாக முகம் கொடுத்துப் பேசாத தங்கை சுதாவிடம் வந்தார் முத்துவேல்.

"இன்னும் இந்த அண்ணே மேல உனக்கு கோபம் தீரலையாம்மா. அவ மேல வச்ச பாசத்துல இந்த அண்ணே மேலயும் கொஞ்சம் காமிக்கலாமே ம்மா." என தங்கையிடம் கேட்டவரின் குரல் இறைஞ்சலாக ஒலிக்க, சுதா உடைந்து அழுது விட்டார்.

"உம்மேல அப்ப கோபம் இருந்துச்சு அண்ணே. ஆனா அந்தப் பாவியாலதானே ண்ணே நீ இப்படி ஒத்த மரமா நிக்கிறே. எல்லாரும் புள்ளகுட்டியோட இருக்கும் போது நீ மட்டும் இப்படி பட்ட மரமா இருக்கறத பாக்கும் போது மனசு ஆறமாட்டேங்குது ண்ணே." என சுதா கதறிவிட, அங்கு இருந்த அனைவரது கண்களும் கலங்கி விட்டது.

அண்ணன் மீது கோபம் தான். ஆனால் அவரை இந்த மாதிரி விசேஷங்களில் தனியாய்ப் பார்க்கவும் மனம் தாளவில்லை, தங்கைக்கு. ஆற்றாமையாக வெடித்துவிட்டார்.

"ஏம்மா... எனக்கென்ன குறை.‌ உங்க பிள்ளைக எல்லாரும் என் பிள்ளைக தாம்மா." எனக் கூறி தங்கையை சமாதானம் செய்தாலும் சுதாவிற்கு மனம் ஆறவில்லை.

"அடியேய்! அவன் கெளம்பும் போது கண்ணக் கசக்காதே. யார் யார் தலையில எழுத்து என்னவோ அதுப்படி தான் நடக்கும். ஈசன் எழுதுனத யாராலும் மாத்தி எழுத முடியாது." என பேச்சியம்மா அதட்டினாலும், அவரும் அண்ணன்‌ மகனை நினைத்து உள்ளுக்குள் குமைந்து கொண்டு தான் இருந்தார்.

ஏனோ, இதுவரை இவர்களை எல்லாம் விட்டு விலகி இருந்த பொழுது, வராத நினைவுகளெல்லாம்,‌ இப்பொழுது... மூடப்பட்ட ஊற்றுக் கண்‌, தூர்வாரப் பட்டது போல, வரண்ட நெஞ்சில், பழைய நினைவுகளால் ஈரம் கசிய ஆரம்பித்தது.

இது முத்துவேலிற்கு மட்டும் அல்ல. வெகு நாட்கள் கழித்து அண்ணன், தங்கைகள், அவர்களது பிள்ளைகள் என ஒன்று கூடிய, இரண்டாம் தலைமுறையினர் அனைவருக்குமே, பழைய நினைவுகள் தான் நெஞ்சில் அலை மோதியது. அதுவும் தங்கள் பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக இருந்ததைப் பார்த்தவர்களுக்கு, தாங்களும் ஒரு காலத்தில் இப்படி தானே ஒற்றுமையாக இருந்தோம் என பழைய எண்ணங்கள் எல்லாம் மேல் எழும்பின.

முத்துவேல், அதே பழைய மோட்டர்‌ ரூமில் படுத்துக் கிடந்தார். ஒரு‌ முழு நெப்பொலியனையும் உள்ளே இறக்கி இருந்தார்.‌ நிதானம் தப்பிய நிலையிலும், நினைவில் நீங்காதவள் வந்து போனாள். கன்னக்குழி விழ கள்ளச் சிரிப்பு சிரித்துப் போனாள். ஒய்யார நடை நடந்து, ஓரப் பார்வை வீசிச் சென்றாள். கண்ணீர் மல்க கலங்கடித்தாள்.

"நீங்க தொட்ட உடம்ப இன்னொருத்தன் தொடுறதா இருந்தா, அது என்னோட பொணமாத்தான்‌ இருக்கும்." அவரது அணைப்பிற்குள் அடங்கியபடி, மார்பில் சாய்ந்து கொண்டு, கண்ணீர் மல்க, அன்று‌... அவரது சாந்தி கூறிய வார்த்தைகள் இன்னும் குத்தீட்டியாய் குத்தி வதம் செய்கிறது அவரை.

வசந்த ஊஞ்சலிலே!

அசைந்த பூங்கொடியே!

உதிர்ந்த மாயம் என்ன?

உன் இதய சோகம் என்ன?
உன் இதய சோகம் என்ன?

நூலுமில்லை! வாலுமில்லை!
வானில் பட்டம் விடுவேனா!
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா!
…….
நினைவு வெள்ளம் பெருகி வர
நெருப்பெனவே சுடுகிறது

படுக்கை விரித்து போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு

பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ! இன்னும் உயிரு

மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ?

இன்று வரை விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில்

காட்சி கோடி இன்னும் வைத்து
கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

இறைவா! கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

நிழல் உருவில் இணைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க

பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை

நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ! தேய்வதில்லை!

காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்

பாடையிலே போகையிலும்
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே!
உறவை தேடி உயிர் பறந்திடுமே!

வழக்கம் போல இன்றும், அவரது சாந்தி வெறுத்த காதல் தோல்வி பாடல்களே துணைக்கு ஒலித்துக் கொண்டு இருந்தது முத்துவேலிற்கு.
[பாட்ட முழுசா போட்டேன்னு பாக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ். வரிகள கட் பண்ண மனசு வரலீங்க🙈🙈🙈.]



பேரு காலம் பத்தி சொன்னதால, இன்னொரு கைவைத்தியமும் சொல்லிர்றே. குழந்தை பிறந்த முப்பது நாளுக்குள்ள, குழந்தை வளர்ந்து என்ன என்ன சாப்பிட வாய்ப்பிருக்கோ, அதை எல்லாம் குழந்தை பெத்தவங்க சாப்பிட்டு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துட்டோம்னா, அது குழந்தை உடம்புக்கு பழகிறும். வளந்த பின்னால அது சேரல… இது சேரலைங்கற பேச்சுக்கே இடம் வராது. ஃபுட் அலர்ஜி வராதுங்க. (ஆனா இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் காலத்துல, வளந்த பின்னாடி எதெத சாப்பிடும்னு எப்படி தெரியும். )

பூண்டும், நல்லெண்ணெயும், பேருகால லேகியமும் தான் முப்பது நாளும் தாய்க்கும் குழந்தைக்கும் வலு சேர்ப்பது. அதுவும் ஒருபல் பூண்டு தான் லேகியத்துக்கு பயன் படுத்துவாங்க. இது மத்த பூண்டு மாதிரி பல்லுபல்லா இருக்காது. ஒரே பல்ப் தான் இருக்கும். ஒருப்பூண்டுனு சொல்ற கொடைக்கானல் பூண்டு தான் மருந்துக்கு பயன்படுத்துவாங்க. நாட்டுக்கோழி குழம்புல மிதக்க மிதக்க நல்லெண்ணெய் விட்டு சுடச்சுட குடிக்க கொடுப்பாங்க. அதுவும் காலையிலயே. வீட்ல பிரசவம் பாத்த காலங்கள்ல, இடுப்பு வலி வந்ததும், கோழி தலைய திருகிருவாங்கனு, ஊர்ல பேசி கேள்விப் பட்டுருக்கோம். அந்தக்காலத்துல எத்தனை பெத்தாலும் பெண்கள் வலுவோடு இருந்ததற்கான காரணம் இது மாதிரி கைவைத்தியங்கள் தான்.
ஊர் ஊருக்கு மாறுபடலாம். இதெல்லாம் கதைல எழுதினா வயலும் வாழ்வும் மாதிரி போயிரும். 🙈🙈🙈
 




Last edited:

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
சங்கரி இன்னும் ஈஸன தெரிஞ்சுக்கல
பாட்டி கைவத்தியக் குறிப்பு
ரொம்ப நல்லா இருக்கு
எங்க வீட்டில் இது எல்லாம்
கொடுத்தாங்க
இப்ப யார் இது சாப்பிடுறாங்க
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
என்னேல்லாம் சொல்லி சங்கரியை பயப்படுத்தி உள்ளார்கள் .....
சங்கரி ஈஸ்வரனைப்பற்றி அறிய ஆவலாய் இல்லையே ......
சூப்பர் தகவல்கள் சிஸ் நன்றிகள் 😍
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
ஏது போற போக்க பாத்தா ஈஸ்வரன் - சங்கரி சைடு கேரக்டர்ஸா ஆகிருவாங்க போலயே 🧐 🧐 🧐 🧐 🧐 🧐

நல்லா இருக்கு சிஸ்டர் அப்டேட் 👍 👍 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top