• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திகில் சிறுகதை - 3 | ‘நட்பு’

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
(இடைவெளி சற்று நீண்டுவிட்டது! கதைகள் தயார், எழுததான் நேரம் கிடைக்கவில்லை, நேரடி வகுப்புகளால் வேலைப்பளு அதிகமாகிவிட்டது! என்னையும் என் கதைகளையும் தேடிய வாசகர்களுக்கு என் நன்றிகள், உங்களின் உந்துதலே என்னை எழுத வைக்கிறது! கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தவறாமல் தயங்காமல் சொல்லுங்கள்... நன்றி!)

Big factory at night


”உங்களுக்கு எதாச்சு வேணுமாண்ணா? காப்பி?”

நரேஷ் தன் இருக்கையை விட்டு எழுந்தபடியே கேட்டான். அவன் அண்ணா என்று அழைத்த தங்கவேலு ‘வேண்டாம்’ என்று தலையை ஆட்டினார்,

“நீ திரும்ப வந்தப் பெறகு நான் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்னுட்டு இருக்கேண்டா... காப்பி கீப்பி குடிச்சா சரிப்படாது!”

நரேஷ் புரிதலோடும் புன்னகையோடும் தலையாட்டினான், அவனது கை அனிச்சையாகக் கைவிளக்கையும் நடைபேசியையும் (walkie-talkie) சரி பார்த்து அவற்றுக்குரிய இடத்தில் இடுப்புப் பட்டியில் பொருத்திக்கொண்டது. தங்கவேலுவிற்குக் கடன்சுமை, இரண்டு வேலை பார்க்கிறார். நரேஷின் துணையில் இந்த இரவுக் காவல் வேலையில் இடையிடையே சற்றுத் தூங்கி ஓய்வெடுத்துக்கொள்வார், ஐம்பது வயது மனிதர் இப்படி உழைக்க வேண்டியிருக்கிறதே என்று நரேஷும் ஒத்துழைக்கிறான்.

“சரிண்ணா, வரேன்...”

காவலர் அறையைவிட்டு வெளியில் வந்தவன் அந்தத் தொழிற்சாலையின் பரந்துவிரிந்த இடத்தையும், சீரான இடைவெளிகளில் அமைந்திருந்த நீள்சதுர தொழிற்கூடங்களையும் அலுவலகங்களையும், அவற்றைச் சுற்றி நேர்த்தியான வரிசையில் அமைந்திருந்த தூங்குமூஞ்சி மரங்களையும் நெட்டிலிங்க மரங்களையும் விளக்குத் தம்பங்களையும் இன்றுதான் முதல்முறை பார்ப்பவனைப் போல கண்கள் விரியப் பார்த்தான்.

நள்ளிரவின் இருட்டுப் படுதாவின் பின்புலத்தில், தம்பங்களின் உச்சியிலிருந்து தரை நோக்கிப் பாய்ந்த எல்.ஈ.டி. விளக்குகளின் ஒளிச்சிதறலில் அந்த கட்டடங்களும் மரங்களும் சாலையும் சொல்லுக்குள் அகப்படாத ஒரு வசீகரத்துடன் அவனை ஈர்த்தன. அத்தொழிற்சாலையின் பிரம்மாண்டம் அவனுள் ஒரு பெருமிதத்தை ஊட்டியது. தானே அதற்கு உரிமையாளன் போலப் பூரித்தான். இரவு பத்து மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை ஏறக்குறைய அது உண்மைதான். இவர்களின் இரவுக்காவல் நேரத்தில் இவர்களையும் இயந்திரங்களைப் பழுது நீக்கிப் பராமரிப்புப் பணி செய்யும் ஒரு சிலரையும் தவிர அந்த 60 ஏக்கர் இடத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். இவர்கள் இருவரின் கட்டுப்பாட்டில்தான் அந்தத் தொழிற்சாலை இருக்கும்.

முகப்பலுவலகக் கட்டடத்தை ஒட்டியிருந்த சாலையில் அவனது கால்கள் தாமாக நடந்தன.

பகலெல்லாம் பெரிதாகக் கர்ச்சித்து வேட்டையாடிவிட்டு இரவில் அமைதியாக உறங்கும் ஒரு பெரிய விலங்கைப் போல அந்த முழு தொழிற்சாலையையும் கற்பனை செய்து பார்த்தான் நரேஷ். இயந்திரப் பராமரிப்புப் பணியில் இருப்போர் உறங்கும் அந்த மிருகத்தின் திறந்த வாயில் அமர்ந்து பற்களுக்கிடையில் சிக்கிய மாமிசத்துண்டுகளைக் கொத்தும் சிறுபறவைகள் என்று அவனது கற்பனை விரிந்தது.

’உண்மைதானே?’ என்று எண்ணிச் சிரித்தபடியே சரக்கறைகள் கட்டடத்தை நோக்கித் திரும்பிய சாலையில் நடந்தான். அந்தப் பகுதியில் பகலிலேயே அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது, இரவில் கேட்க வேண்டுமா? சற்றே அதிக இடைவெளியில் இருந்த விளக்குத் தம்பங்களில் இன்னும் மாற்றப்படாத பழைய சோடியம் விளக்குகள் தமது அழுது வடியும் மஞ்சள் ஒளியைக் கசியவிட்டுக்கொண்டிருந்தன. குளிர் சற்றே அதிகரித்ததைப் போலத் தோன்றியது. நரேஷின் முதுகுத் தண்டில் ஒரு மெல்லிய சில்லிப்பு ஓடியது. தலையை இலேசாய்ச் சிலுப்பிக்கொண்டான்.

'தூங்குற மிருகம் சட்டுனு வாய மூடிக்கிச்சுனா அதன் பல்லிடுக்கக் கொத்திக்கிட்டு இருக்கும் பறவை காலி’ என்று தோன்றியது அவனுக்கு.

சட்டென அவன் மனக்கண்ணில் தோன்றிய அந்தக் காட்சி அடுத்தடுத்துச் சிந்தனைத் தொடராய் விரிந்தது.

‘இந்தத் தொழிற்சாலை கூட பல காவு வாங்கியிருக்காமே...’

மிருகத்தின் வாயில் சிக்கும் சிறுபறவையைப் போல இதன் இயந்திர வாய்க்குப் பல தொழிலாளர்கள் பலி ஆகியிருக்காங்க! இரண்டு ஆள் உயர இயந்திரங்களில் கோளாறு என்றால் சும்மாவா!

’இயந்திர விபத்து மட்டுந்தானா? ஒரு சிலர் இங்கயே தற்கொலை கூட பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே?’

நரேஷின் கண்கள் அனிச்சையாய் எதிர்ச்சாரியில் இருந்த அந்த மின்னுற்பத்தி அறையை நோக்கின. இவன் வேலைக்குச் சேர்வதற்கு ஒரு சில நாள்கள் முன்புதான் அக்கட்டடத்தின் உத்தரத்தில் ஒரு இளம் பொறியாளன் தூக்கிட்டுக்கொண்டு மடிந்திருந்தான். காதல் தோல்வி என்று பேச்சு அடிபட்டதாம். சிலர் வேறு காரணம் என்றார்களாம்.

இந்த நள்ளிரவில், அரைகுறை இருட்டில், ஆள் நடமாட்டமில்லாத இந்த இடத்திலா இதெல்லாம் இப்போது நினைவிற்கு வர வேண்டும் என்று நரேஷ் எண்ணிக் கொண்டான்!

”நரேஷ்!”

குரல் கேட்டுச் சட்டெனத் திரும்பினான்,

யாருமில்லை!

’பிரமையா? யாரோ என்ன பேர் சொல்லிக் கூப்டது மாதிரி இருந்துச்சே?’

நரேஷ் குரல் வந்ததாகத் தோன்றிய திக்கில் உற்றுப் பார்த்தான், நேராக தொழிற்சாலையின் மூடிய வாயில் வரை நீண்ட வெறிச்சோடிய தார்ச்சாலை மட்டுமே இருந்தது. சில நூறு அடிகள்வரை மங்கலான மஞ்சள் ஒளியிலும், பின்னர் பளீரென்ற வெள்ளை ஒளியிலும் கனவு போலக் காட்சியளித்தது.

நரேஷ் சட்டெனப் பயப்படும் ஆள் கிடையாது. சிறு வயது முதலே அவனுக்கு இராணுவத்தில் சேரும் விருப்பம் உண்டு. ஆனால் அந்த நள்ளிரவின் இருட்டில் அவனுக்குக் குளிர் அதிகமாவதைப் போலத் தோன்றியது.

பின்னால் யாரோ வரும் காலடி ஓசைக் கேட்டுத் திரும்பினான்,

யாருமில்லை!

அவன் திரும்பும் கணத்தில் ஓரப்பார்வையில் அந்தச் சாலைக்குக் குறுக்கே யாரோ செல்வதைப் போலத் தெரிந்தது, திரும்பிய போது யாருமில்லை.

மின்னுற்பத்திக் கட்டடத்திலிருந்து சரக்கறைக்கு யாரோ சரேலென ஓடியதைப் போலத் தோன்றியதே?

“யாருங்க? பாஸ்கர்ண்ணா?”

நரேஷ் சற்றே மிரட்டலாகக் கேட்டான். ஆனால், உள்ளுக்குள் இலேசாய் உதறியது அவனுக்கு. பாஸ்கர் என்பவர் மின்னுற்பத்தி அறையை நிர்வகிக்கும் பொறியாளர்களில் ஒருவர். அவ்வப்போது அவரை இந்த இடத்தில் இவன் சந்திப்பது வழக்கம்.

உணவுக்குழாயில் ஒரு பனிக்குச்சி இறங்குவதைப் போல ஒரு உணர்வு.

கையில் இருந்த கைவிளக்கை உசுப்பிச் சரக்கறையை நோக்கி அடித்துப் பார்த்தான். அந்தக் கட்டடத்தை ஒட்டி வரிசையாய் வளர்ந்திருந்த நெட்டிலிங்க மரங்களை நோக்கி ஒளியைப் பாய்ச்சினான். காற்றில் ஆடும் மரக்கிளைகளின் மெல்லிய அசைவைத் தவிர வேறெதுவும் இல்லை.

இடது கையில் இருந்த பிரம்பை இறுகப் பிடித்தபடி அனிச்சையாக அந்தக் கட்டடத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்,

அதைச் சூழ்ந்திருந்த இருட்டு அவனைத் தடுத்து நிறுத்தியது.

“யாருங்க?”

பிரம்பைத் தரையில் ஓங்கித் தட்டி மீண்டும் கேட்டான்,

பதிலில்லை!

சட்டென ஏதோ அசைந்தது...

மரத்திலிருந்து சரக்கறைக் கட்டடத்தை நோக்கி ஒரு கரிய உருவம் சரேலென பாய்ந்தது, நரேஷின் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது!

பூனை!

நரேஷ் சற்றே ஆசுவாசமானான். அந்தப் பூனையை அவன் அடிக்கடி பார்த்திருக்கிறான், கன்னங்கரேலென்று இருக்கும். தான் உண்ண வைத்திருக்கும் சிற்றுண்டியில் சிறிதை அதற்கு அவ்வப்போது போடுவான். பொதுவாக இவனைப் பார்த்ததும் அதுவே நெருங்கி வந்து மெல்லியதாய் ‘மியாவ்’ என்னும், இது போல இருட்டில் பாய்ந்து இவனை அச்சுறுத்தியதில்லை!

இன்று என்னவோ அது இவன் அருகில் வரவில்லை, கட்டடத்தின் சாரளத்திலிருந்து இவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.

நரேஷ் பூனை மொழி பேசி அதனைத் தன்னருகில் அழைக்க முயன்றான், அது அசையாமல் இவனையே பார்த்துக்கொண்டு நின்றது.

சட்டென நரேஷுக்கு அது உரைத்தது, பூனை இவனைப் பார்க்கவில்லை, இவனுக்குப் பின்னால் எதையோ உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது!

நரேஷின் கைகள் சில்லிட்டன, கழுத்து, பிடறி மயிர்கள் குத்திட்டு நின்றன!

மார்கழியின் அதிகாலைக் குளிரைவிட பல மடங்கான குளிரை அவன் உணர்ந்தான், இலேசாக நடுங்கும் கைகளுடன், வியர்க்கும் உள்ளங்கையின் பிசுபிசுப்பை மீறிப் பிடித்திருந்த பிரம்பை மேலும் இறுக்கியபடி நரேஷ் மெல்லத் திரும்பிப் பார்த்தான்...

இருட்டு!

மெல்ல அந்த இருட்டுக்குக் கண்கள் பழக, மின்னுற்பத்தி அறையின் நிழல் விளிம்பு தெரிந்தது...

’ஏன் அங்கே விளக்கு எரியவில்லை? நான் வந்தபோது வெளிச்சம் இருந்ததே? இருந்ததா?’

நரேஷின் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள், கேள்விகள்...

அவற்றில் ஒன்றாக அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்துவிட வேண்டும் என்பதும், ஆனால், ஏனோ அவன் கால்கள் அசைய மறுத்தன...

’மியாவ்!’

பூனையின் குரல் கேட்டுத் திரும்பியவன் மேலும் அதிர்ச்சிக்கும் குழப்பத்திற்கும் உள்ளானான்,

அங்கே அந்தப் பூனை இல்லை...

’கன்னங்கரிய பூனை, இருட்டில் தெரியவில்லை!’ என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, மேற்கொண்டு நடக்க எத்தனித்தான்,

அவனது தோளில் எதோ பட்டது,

நரேஷ் அதிர்ந்து வெலவெலத்துப் போய் திரும்பினான்-

பாஸ்கர்!

”என்ன தம்பி, இப்படி படபடப்பா இருக்க?”

“அ- அது... ஒன்னுமில்லண்ணா!”

நரேஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் சற்றே கூச்சத்துடன் திணறினான்...

‘இவர் எங்கிருந்து வந்தார்? ஓசைபடாமல் எப்படி வந்தார்?’

“நீயும் அந்தத் தங்கவேலு பயல மாதிரி ரெண்டு மூனு வேலப் பாக்குறியா என்ன? சரியா தூங்குறதில்லையா?”

“அப்படிலாம் ஒன்னுமில்லண்ணா... எதோ யோசனையா இருந்தேன், சட்டுனு நீங்க தொட்டதும் கொஞ்சம் பயந்துட்டேன்!”

’பயந்துட்டேன்’ என்று சொல்லிவிட்டோமே என்று சொன்னபின் யோசித்தான்!

பாஸ்கர் பெரிதாக நகைத்தார்,

“சின்னப் பயப்பா நீ! நாப்பது வருஷத்துக்கு முன்னாடி நா இங்க வேலைக்குச் சேர்ந்த புதுசுல இவ்ளோலாம் ரோடும் லைட்டுமா இருக்காது, தெரியுமா? அப்பவே இப்படிப் பாதி ராத்திரில தனியா வந்து ஜெனரேட்டரலாம் செக் பண்ணிட்டுப் போவேன்! நீ என்னடான்னா...”

பாஸ்கர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறவர்... கடைநிலை கம்மியராக (மெக்கானிக்) வேலைக்குச் சேர்ந்து, உழைத்தும், நிறுவனத்தின் உதவியில் படித்தும் இன்று பொறியாளர் என்ற பதவியோடு ஓய்வு பெறப் போகிறார்... அவருக்குத் தெரியாதது இந்தத் தொழிற்சாலையில் இல்லை... எல்லோருமே அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள்தான், இன்றைய முதலாளிகள் உட்பட! யாரையுமே அவர் ‘பய’ என்றோ ‘சின்னப் பய’ என்றோதான் சொல்வார், ஆனால், அதில் மரியாதைக் குறைவு இருக்காது, ஒரு வாஞ்சைதான் இருக்கும்!

தொழிலாளர்கள் இவருக்காக ஒரு இரகசிய பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியை வெகு விமர்சையாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள், நரேஷ் கூட தன் பங்கிற்கு 200 ரூபாய் கொடுத்துள்ளான்!

“அதெல்லாம் இல்லண்ணா... சும்மா...”

நரேஷ் கொஞ்சம் அசடு வழிந்தான்!

அப்போதுதான் கவனித்தான் மின்னுற்பத்தி அறையில் விளக்குகள் எரிந்துகொண்டிருப்பதை.

“ஜெனரேட்டர் ரூம்ல பவர் ஃப்ளக்சுவேஷன் இருக்காண்ணா?”

“அதெல்லாம் இல்லையேப்பா, ஏன்?”

“கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்தேன், விளக்கு எரியல, இப்ப எரியுது... அதான்?”

“இல்லயேப்பா, நான் இவ்ளோ நேரம் அங்கதான இருந்தேன், எல்லா விளக்கும் எரிஞ்சுக்கிட்டுதான இருந்துச்சு!”

சற்றுமுன் தான் பார்த்தபோது விளக்கு இல்லாமல், பின்னால் இருக்கும் சாலையின் விளக்கொளியில் அந்தக் கட்டடம் நிழலுருவாய்த் தெரிந்த காட்சி நரேஷின் மனத்தில் தெளிவாக இருந்தது, ‘இவர் விளக்கு அணையவே இல்லை என்கிறாரே!’

நரேஷ் குழப்ப உச்சத்தில் சிந்தனையில் ஆழ்ந்தான்.

“என்ன தம்பி என்ன ஆச்சு உனக்கு இன்னிக்கு? நல்லா சுறுசுறுப்பா இருக்குற பய, இப்படி உம்முனு இருக்கியே? எதாச்சு பணப் பிரச்சனையா? அண்ணன்கிட்ட சொல்லுப்பா...”

பாஸ்கர் அக்கறையுடன் கேட்டார்.

“அ- அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே... என்னவோ இன்னிக்குக் கொஞ்சம் குளிரு ஜாஸ்தி, என்னென்னவோ யோசனை-”

“எது குளிரா? ஏம்பா பகல்ல அடிச்ச வெய்யிலுல பாதி ராத்திரில கூட நசநசனு இருக்கு... பாரு ஒரு நட ஜெனரேட்டர் ரூம்குள்ள போயிட்டு வரதுக்குள்ள என் சட்டைலாம் நனஞ்சிருக்கு, உனக்கு மட்டும் குளிருதா?”

பாஸ்கர் மீண்டும் பெரிய சிரிப்புடன் கேட்டார்.

அந்த அரைகுறை வெளிச்சத்தில் அவர் சட்டை நனைந்திருப்பதாகத் தெரியவில்லை நரேஷிற்கு, சொல்லப்போனால், புதிய ஆடையைப் போலப் பளிச்சென்று கசங்கல் இல்லாமல் இருந்தது! இதை வேறு சொல்லி அவர் அதற்கும் கிண்டலாக ஏதாவது சொல்லிச் சிரிக்கப் போகிறாரே என்று நரேஷ் ஒன்றும் சொல்லமல் சும்மா இருந்தான்.

சட்டென, அவனுக்குப் பின்னாலிருந்து எதோ அரவம் கேட்க அனிச்சையாய் திரும்பினான்,

மரக்கிளைகளுக்கிடையே பாய்ந்து அந்தப் பூனை செல்வது தெரிந்தது.

‘இதுக்கு என்ன ஆச்சு இன்னிக்கு!’

என்று எண்ணியபடியே நரேஷ் மீண்டும் பாஸ்கரை நோக்கித் திரும்ப,

அவர் அங்கு இல்லை!

~நரேஷ்...~

கரகரப்பாக எழுந்த அந்த ஓசை அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது!

உறுமியது அவனது இடுப்பில் இருந்த நடைபேசிதான்!

~நரேஷ்... கம்மின்... கம்மின்... ஓவர்~

சற்றே கரகரப்பான மின்னணுக்குரலில் அவனை அழைத்தார் தங்கவேலு.

நரேஷ் நடைபேசியை எடுத்து அனுப்பல் பொத்தானை அழுத்திப் பதிலளித்தான், அவனது கண்கள் சுற்றி இருந்த அந்த இருட்டில் பாஸ்கரைத் தேடின,

“சொல்லுங்கண்ணா... ஓவர்”

~என்ன நரேஷ், ஸ்டாக் ரூம்ல எதாச்சு பிரச்சனையா? ரொம்ப நேரமா அங்கயே நிக்குற? ஓவர்~

தங்கவேலு காவலர் அறையில் இருந்தபடியே கண்காணிப்புக் கருவிகள் மூலம் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

”அதெல்லாம் ஒன்னுமில்லண்ணா... சும்மாதான்! ஓவர்”

பாஸ்கரிடம் சொன்னதைப் போல இவரிடமும் ‘பயந்துட்டேன்’ என்று உளறிவிடக் கூடாது என்று கவனமாகப் பதில் சொன்னான்!

~சரி! சீக்கிரம் வா! ஓவர்~

“தோ வரேன்... ஓவர்!”

நரேஷ் நடைபேசியை மீண்டும் இடுப்பில் வைக்கப் போக, அது மீண்டும் கரகரத்தது,

~ஆமா, யாரோடவோ பேசிட்டு இருந்தா மாதிரி தெரிஞ்சுதே... யாரு இருக்கா அங்க? ஓவர்~

தங்கவேலுவின் குரலில் இருந்த சந்தேகம் நரேஷை என்னவோ செய்தது, மீண்டும் நடைபேசியை வாய்க்கருகே கொண்டு சென்றான்,

“ந- நம்ம பாஸ்கர் அண்ணாவோடதான்! ஓவர்!”

அடுத்து தங்கவேலு சொன்னது நரேஷை மொத்தமாக உலுக்கிப் போட்டது...

~பாஸ்கரா? அவர் இன்னிக்கு லீவுல இருக்கார்னு சொன்னாங்களே? ரொம்ப சீரியஸ்னாங்க?~

“லீவா? இல்லண்ணா, அவர் வந்திருக்காரு, நீங்க கூப்டுறதுக்கு முன்னாடி அவரோடதான் பேசிட்டு இருந்தேன்!”

~ந- நரேஷ்... ரௌண்டஸ் போதும், நேரா நம்ம போஸ்ட்டுக்கு வா...~

தங்கவேலுவின் குரலில் இருந்தது அதிர்ச்சியா, குழப்பமா, கவலையா... ஏதோ ஒன்று! நரேஷையும் அது தொற்றிக்கொண்டது...

ஓட்டமும் நடையுமாய் அவன் காவலர் அறையை நோக்கிச் சென்றான்.

அந்த அரையிருளில், விளக்குத் தம்பங்களைச் சுற்றித் திப்பித் திப்பியாகப் பரவியிருந்த அரைகுறை வெளிச்சத் திட்டுகளுக்கு நடுவே ஓடுவது மனத்திற்கு ஏதோ ஒரு வகையில் சுகமாய், ஆறுதலாய் இருந்தது அவனுக்கு... நரேஷ் இராணுவத்திற்காகப் பயிற்சி எடுத்தபோது அதிகாலை இருட்டில் ஓட்டப்பயிற்சி செய்வான்...

முக்கியமாய் அவனது மனம் எதையும் சிந்திக்க இடந்தரவில்லை அந்த ஓட்டம்... வலது கால், இடது கால்... மூச்சை இழு, மூச்சை விடு...

சரக்கறைக்கும் காவலர் அறைக்கும் இடையிலிருந்த சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சாலையை ஓடிக் கடந்து, இலேசாய் மூச்சிறைக்க தங்கவேலுவின் முன் வந்து நின்றான்.

“என்னாச்சுண்ணா?”

பெருமூச்சுகளுக்கிடையே கேட்டான்.

தங்கவேலு பதில் சொல்லாமல் எதிரே இருந்த திரையைக் காட்டினார், அதில் நரேஷ் சரக்கறைக்கருகே நின்று பூனையை அழைத்துக்கொண்டிருந்தான்.

நரேஷ் சட்டெனப் பின்னால் திரும்புவதும், பின் குழப்பத்துடன் மீண்டும் சரக்கறையை நோக்கித் திரும்புவதும், பூனையை இருட்டில் தேடுவதும் திரையில் ஓடின...

’இதுக்கப்புறந்தான் பாஸ்கர் அண்ணா வந்தார்! நான் சொன்னா தங்கவேலு அண்ணா நம்பல, இப்ப சி.சி.டி.வி-லயே காட்டுவோம்...’

என்று நரேஷ் எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அதிர்ச்சியான காட்சி திரையில் விரிந்தது...

நரேஷ் மீண்டும் மின்னுற்பத்தி அறையை நோக்கி ஒரு அதிர்வுடன் திரும்புகிறான், கையை ஆட்டி ஆட்டி பேசுகிறான்... தனிமையில்!

திரையில் நரேஷ் மட்டுமே இருக்கிறான்!

“அண்- அண்ணா...”

நரேஷ் தங்கவேலுவின் தோளில் கை வைத்தான்,

“ண்ணா... பா- பாஸ்கர் அண்ணா எங்க?”

தங்கவேலு அவனைக் குழப்பத்துடனும் கலவரத்துடனும் பார்த்தார்,

“பாஸ்கர் அண்ணா இன்னிக்கு மத்யானம் இறந்துட்டாராம்! இப்பதான் ஃபோர்மென் ராஜேஷ் சார் சொல்லிட்டுப் போனாரு!”

*****​
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
பேய் கதைனால கறுப்பு பூனை தான் வருமோ???. ப்ரோ, பூனையை கலர் கலரா கொடுங்கள் கொஞ்சம் பயமாவது கம்மியாகட்டும்??. சூப்பர் ப்ரோ??.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top