• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திகில் சிறுகதை - 5 | யட்சிணி | பகுதி 2/2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

மாலை நடைப்பயிற்சி முடித்து வந்தவர் குளித்துமுடித்துப் புத்துணர்வு பெற்று அருணா தந்த பழச்சாற்றுடன் தன் நாற்காலியில் அமர்ந்தார்.

‘எளியமுறை யாட்சண்ய வாசியம்’ கண்ணில் பட்டதுந்தான் அதை முடிக்காமலே வைத்துவிட்டது நினைவுவந்தது.

பழச்சாற்றைக் கோப்பையை மேசையில் வைத்துவிட்டுப் புத்தகத்தை எடுத்தார்.

விரல்கள் பக்கங்களைப் புரட்டிக் கடைசி அத்தியாயத்திற்குச் சென்றன-

’அத்யாயம் 15 - நீலாம்பரி’

‘எனது முப்பாதாண்டு கால மாந்தரீக அனுபவத்தில் நான் எத்தனையோ குறளைகளையும் பூதங்களையும் பைசாசங்களையும் யக்ஷ-யக்ஷிணிகளையும் ஏவல் கொண்டுள்ளேன். அவற்றிலெல்லாம் நீலாம்பரியைப் போல சக்தி பெற்ற, என் மனத்திற்குகந்த ஒன்றை நான் கண்டதில்லை. இவளைக் கைக்கொள்வதும் அத்தனை எளிதல்ல, ஸாதகனுக்கு விசேஷ ஜாதகம் வேண்டும். குல தெய்வ ஆசியும், சரியான கிரகநிலையும் வேண்டும். இவையெல்லாம் இருந்தாலும் சாதகனுக்குப் பல தோஷங்களும் கண்டங்களும் நேரும், அதையெல்லாம் தன் தவத்தினாலும் திடத்தினாலும் கடப்பவனால்தான் நீலாம்பரியை அடைய இயலும். அடைந்துவிட்டால் அவனால் சாதிக்க இயலாதது வேறொன்றில்லை!...’


ஆசிரியரின் பூர்வபீடிகை பலமாக இருப்பதாய் தோன்றியது இளங்கோவிற்கு. ’அப்படி ஒரு சக்திவாந்த யட்சிணியைக் கைப்பற்றி அவர் என்னதான் சாதித்தார்?’ என்ற ஆர்வம் எழுந்தது. புத்தகத்தில் மூழ்கினார்.

தனது சாதகத்தையும் நீலாம்பரியின் சக்திகளையும் விவரித்து முடித்த ஆசிரியர் அடுத்ததாக நீலாம்பரியின் சூக்கும உருவையும் தூல வடிவையும் வருணித்திருந்தார்.

அந்த வருணனையைப் படிக்கப் படிக்க இளங்கோவின் மனத்தில் உருவான பிம்பம் அவரை பெருவியப்பில் ஆழ்த்தியது-

அந்த மரப்பாச்சி பொம்மை!

குறிப்பாக நீலாம்பரியின் தூல வடிவத்தின் வலது உள்ளங்காலில் ஒரு மகரக்குறி இருக்கும் என்று சொல்லியிருந்தார் ஆசிரியர். அந்த மரப்பாச்சி பொம்மையின் வலது பாதத்தில் அப்படியொரு மீன்வடிவக் கீறலைப் பார்த்த நினைவு வந்தது இளங்கோவிற்கு. உடனே பரபரப்பானார். இப்போதே அந்தப் பொம்மையைப் பார்த்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று உந்தியது அவருக்கு!

புத்தகத்தைக் கவிழ்த்துவைத்துவிட்டு எழுந்து தொ.கா. அருகே சென்று பார்த்தார், அவர் வைத்த இடத்தில் அந்தப் பொம்மை இல்லை.

“அரூ... சுஜிகிட்ட அந்தப் பொம்மையக் கொடுத்துட்டியா?”

“எந்தப் பொம்மைய?”

”காலைல ஒரு மரப்பாச்சி பொம்மையக் காமிச்சேனே? டி.வி. பக்கத்துல வெக்கச் சொன்னியே?”

”ஞாபகமில்லப்பா! ஆனா சுஜிக்குட்டி இன்னிக்கு வரவே இல்ல...”

”ம்ம்...”

இளங்கோ தொ.கா. அருகே தேடிப் பார்த்தார். சுற்றியிருந்த அலமாரி, தரையிலிருந்த இடுக்குகள், அருகிலிருந்த நாற்காலி மேசைகள் என்று தோண்டித் துழாவினார்... எங்கும் பொம்மை இல்லை!

’எங்கே போயிருக்கும்!’ என்று எண்ணியபடியே வந்து நாற்காலியில் அமர்ந்தார். புத்தகத்தின் அட்டை அவரது பார்வையில் பட, அவரது கண்கள் அகல விரிந்தன-

பின்னட்டையில் அந்த மரப்பாச்சி பொம்மையின் படம்!

இதயேன் நா முன்னாடியே கவனிக்கல?

அட்டை மிக மங்கி இருந்தது. அந்தப் படம் இலேசாகத்தான் தெரிந்தது. ஆனால், தெளிவாக அது அந்த மரப்பாச்சி பொம்மைதான் என்பது தெரிந்தது!

இளங்கோ அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்...

“சாப்டலாமா?”

அருணாவின் குரல் அவரைக் கலைத்தது.

“ம்?” கனவு கலைந்தவரைப் போல அவளை ஏறிட்டுப் பார்த்தார்!

”சாப்டலாமா ப்பா?”

“ம்ம்...” என்று எழுந்துகொண்டார்.

“என்னப்பா, நேத்து புக்குல டைம் தெரியாம மூழ்கிப் போயிருந்த, அதாச்சு பரவால்ல, இன்னிக்கு வெறும் அட்டப் படத்தையே மணிக்கணக்கா பார்த்துட்டு இருக்குற! அப்படி என்ன இருக்கு அதுல?”

அருணா கிண்டலாகக் கேட்டாள்.

இவளிடம் சொல்லலாமா? என்னவென்று சொல்வது?

இளங்கோ மௌனமாகவே இரவுணவை உண்டார்.

அருணாவும் அவரைத் தொல்லை பண்ணவில்லை.

***​

இளங்கோ சவாசனம் போல கைகால்களை நீட்டி மல்லாந்து படுத்திருந்தார். அவரது கண்கள் உத்தரத்தில் மெல்லச் சுழன்ற மின்விசிறியை வெறித்துக்கொண்டிருந்தன.

அருணா இவர்ப்புறமாய்ப் படுத்துக்கொண்டு மார்பில் மெல்லத் தடவிக்கொடுத்தாள்.

“தூங்கலையா?”

“ம்ம்”

“என்ன ம்?”

இளங்கோ தலையைத் திருப்பி அவளைப் பார்த்தார், தன் கையை அவர் நீட்ட அவள் மேலும் நெருங்கி மார்பில் தலைசாய்த்துக்கொள்ள அவளை அணைத்தபடி அவள் தலையை நீவிக்கொடுத்தார்.

அவள் மெல்ல தலையை நிமிர்த்தி இளங்கோவின் இதழைக் கவ்வினாள்...

***​

இளங்கோவிற்கு விழிப்புத்தட்டியது.

அருணா அவரது மார்பில் தலைசாய்த்து நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

‘வ்வூஊ... வ்வூஊ...’

வெகு தொலைவிலிருந்து கேட்பதைப் போலக் கேட்டது அந்த நாயின் ஊளை!

இளங்கோ கண்களை இறுக்க மூடி உறங்க முயன்றார்.

‘வ்வூஊ... வ்வூஊ...’

காதருகே கேட்டது, சட்டெனக் கண்களைத் திறந்தார்-

அருகில் எதுவும் இல்லை!

அவரது உடலில் ஏற்பட்ட மெல்லிய அதிர்வில் அருணா அசைந்தாள், தூக்கத்திலே மெலிதாய் ‘என்னப்பா’ என்றவள் புரண்டு திரும்பிப் படுத்து உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

இளங்கோ மூச்சுப் பயிற்சியை முயன்றார்.

‘வ்வூஊ... வ்வூஊ...’

அந்த ஊளைச் சத்தம் அவரை என்னவோ செய்தது! அதன் தொனியில் ஏதோவொரு உணர்வு... அவரால் உறங்கமுடியவில்லை!

எழுந்து அமர்ந்தவர் அருகிலிருந்த புட்டியிலிருந்து கொஞ்சம் நீரைப் பருகினார்.

அவரது பார்வை அனிச்சையாக சன்னல் பக்கம் சென்றது. திரைச்சீலை மின்விசிறிக் காற்றில் மெலிதாய் சலசலத்துக்கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவுகள் மூடித்தான் இருந்தன.

‘வ்வூஊஊஊ... வ்வூஊஊஊ...’

மீண்டும் அந்த நாயின் ஊளை. இவர் எழுந்துவிட்டார் என்று தெரிந்து இவரை அழைப்பதைப் போல இப்போது சற்று பலமாக நீண்டு ஒலித்தது!

இளங்கோ மெல்ல எழுந்து திரைச்சீலையோடு சன்னல் கதவை அழுத்திப் பார்த்தார், கண்ணாடிக் கதவின் திடத்தை விரல்கள் உணர்ந்தன.

‘வ்வூஊஊஊ... வ்வூஊஊஊ...’

சில நொடிகள் அசையாமல் நின்றவர் சன்னல் சீலையை விலக்கினார்...

அவள்!

சாலைவிளக்கின் வெளிச்சப் பின்னணியில் அவளது நிழலுருவம் துல்லியமாகத் தெரிந்தது!

இளங்கோவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது!

இளங்கோ சீலையை மூடிவிட்டுப் படுக்கையில் விழ விரும்பினார், ஆனால், அவரை அசையவிடாமல் ஏதோ கட்டி நிறுத்தியது!

தன் பார்வையை அவள் மீதிருந்து நகர்த்த முடியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

இருளில் முழு கறுப்பாக இருந்தபோதும் அவளது முகத்தில் ஒரு புன்னகைத் தவழ்வதாய் உணர்ந்தார் இளங்கோ!

‘வ்வூஊஊஊ...’

சட்டென அருகிலிருந்து கேட்ட நாயின் ஊளையின் அதிர்ச்சியில் அவர் அசைந்தார், சடாலெனச் சன்னல் சீலையை மூடிவிட்டுப் படுக்கையில் படுத்தவரின் இதயம் நாலுகால் பாய்ச்சலில் துடித்துக்கொண்டிருந்தது!

உடலெல்லாம் வியர்த்து நனைந்திருந்தது! மூச்சிறைத்தது!

எப்போது தூங்கினோம் என்பது தெரியாமலே இளங்கோ தூங்கிப் போயிருந்தார்!

***​

காலை விழிப்புத் தட்டியபோது அவருக்கு மெல்ல இரவில் நடந்தவை நினைவிற்கு வந்தன. உடலில் பரவிய மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தார்.

வழக்கத்திற்கு மாறாய் அருணா இன்னும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்!

வாஞ்சையுடன் அவள் தலையை வருடிக்கொடுத்தார். கைப்பேசியை எடுக்க மறுபுறம் திரும்பிக் கையை நீட்டியவர் அதிர்ச்சியில் உறைந்தார்-

மரப்பாச்சி பொம்மை!

கட்டிலுக்கு அருகிலிருந்து சிறிய மேசைமேல் அவரது கைப்பேசிக்கு அருகில் அந்தப் பொம்மை நிற்க வைக்கப்பட்டிருந்தது!

சடாலெனக் கட்டிலிலிருந்து எழுந்தவர் அந்தப் பொம்மையை நடுங்கும் கையால் எடுத்தார்... அதன் பாதத்தைப் பார்க்கத் திருப்ப-

அவரது தோளில் எதோ பட்டது- தூக்கிவாரிப் போட்டது இளங்கோவிற்கு!

”என்னப்பா? ஏன் இப்படி நடுங்குற?”

அருணா அவரை கேள்வியுடன் பார்த்தாள்.

”இதோ!”

கையிலிருந்த மரப்பாச்சி பொம்மையை அவளிடம் காட்டியவர் அதன் பாதங்களைப் பார்த்தார்...

மகரக்குறி!

நான் நெனச்சது சரிதான், அதே மீன்வடிவக் கீறல் இருக்கு! இதெப்புடி இங்க வந்துச்சு?

”என்னப்பா? என்ன இருக்கு எந்தப் பொம்மைல?”

இளங்கோ அவளுக்குச் சுருக்கமாக விளக்கினார். அவளுக்குப் புரியவில்லை!

“இரு வரேன்...”

இளங்கோ விறுவிறுவென்று கூடத்திற்கு வந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் படுக்கையறைக்கு விரைந்தார்.

”இந்த புக்குல சொல்லியிருக்குற யட்சிணிதான் இந்தப் பொம்ம!”

அவரது விரல்கள் பரபரவெனப் பக்கங்களை வருடிப் பதினைந்தாவது அத்தியாத்தைப் பிரித்தன...

“தோ... தோ பாரு... நீலாம்பரி கால்ல மகரக்குறி இருக்கும்னு போட்டிருக்கா? இந்தப் பொம்மை கால்ல பாரு... தோ... மீன்குறி... மகரம்னா மீன்!”

இளங்கோ பரபரப்பாக அவளுக்கு விளக்கினார்.

அருணா புத்தகத்தில் அவர் காட்டிய வரிகளைப் படித்துவிட்டுப் பொம்மையைப் பார்த்தாள், உதட்டைப் பிதுக்கினாள்.

”எதோ கீறல் கீறலா இருக்கு... மீன் மாதிரியும் இருக்கு... ஏரோப்ளேன் மாதிரி கூட இருக்கு!”

அவளது முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை படர்ந்தது, இளங்கோவிற்கு எரிச்சல் வந்தது!

”சீரியஸ் அரு! த்தோ... இந்த புக்கோட அட்டைல கூட இதே பொம்மையோட படம் இருக்கு... பாரு...”

சட்டெனப் புத்தகத்தை மூடிப் பின்னட்டையைக் காட்டியவர் வியப்பில் சிலையானார்-

பின்னட்டையில் புகைப்படம் எதுவும் இல்லை!

ஏற்கனவே அது மங்கலாத்தான் இருந்துச்சு...

புத்தகத்தை முகத்திற்கு நேராக உயர்த்தி அட்டையை உற்றுப் பார்த்தார்-

எந்தப் படமும் தெரியவில்லை! படம் போட்டிருந்ததற்கான அறிகுறி கூட ஏதும் இல்லை!

”நீ ஒழுங்கா தூங்கமாட்டேங்குற இளங்கோ... எதையெதையோ நெனச்சுக் கவலப்பட்டுட்டே இருக்க... எல்லாம் நல்லபடியா நடக்கும்... கவலப்படாத! இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறதுனாலும் தூங்கு...”

அருணா வாஞ்சையுடன் அவரது தலையைக் கோதியபடிச் சொல்லிவிட்டு நகர எத்தனித்தாள்.

“அரு...”

இளங்கோவின் அழைப்பு அவளை நிறுத்தியது.

”முந்தாநேத்து நைட்டு என் மூஞ்சில கைலலாம் கீறல் கீறலா இருந்துச்சுல? காலைல எல்லாம் மாயமா போச்சே? அது எப்படி?”

இளங்கோ அவளைக் கூராகப் பார்த்துக் கேட்டார்.

“கீறலா? என்ன சொல்ற?”

அருணா வியப்பாகக் கேட்டபடி இளங்கோவின் அருகில் வந்து முகத்தையும் கையையும் தொட்டுப் பார்த்தாள்... பின் அவரது நெற்றியில் தன் புறங்கையை வைத்துப் பார்த்தாள்,

“உடம்பு இலேசா சுடுது ப்பா... நீ மறுபடி கொஞ்ச நேரம் தூங்கு... நான் அப்புறமா கஞ்சி போட்டுட்டு எழுப்புறேன்!”

இளங்கோ குழப்பத்தின் உச்சத்தில் இருந்தார்.

’எனக்கு ஒன்னுமில்ல’ என்று கத்த வேண்டும் போல் ஆத்திரம் வந்தது அவருக்கு. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியானார்.

”எனக்கு ஒன்னுமில்ல... நான் குளிச்சுட்டு வேலையப் பாக்குறேன்...”

“உடம்பு சுடுது இளங்கோ, வெந்நீர்ல குளி... பச்சத் தண்ணில குளிக்காத!”

நகர்ந்தவள் மீண்டும் திரும்பினாள், “தலைக்குக் குளிக்காத!”

”ம்...”

***​

இளங்கோ அன்று முழுவதும் தன்னை வேலையில் ஈடுபடுத்திக்கொண்டார். உடம்பில் இலேசாக ஒரு அசதி இருந்தது. அதை ஒத்துக்கொள்ள அவர் மனம் இடங்கொடுக்கவில்லை!

அந்தப் பொம்மையையும் புத்தகத்தையும் ஒரு புடவை அட்டைப்பெட்டிக்குள் போட்டுப் பூசையறையில் வைத்திருந்தார்.

அவர் எவ்வளவு முயன்றும் அவரது கவனம் அடிக்கடி அந்தப் பொம்மையையும் புத்தகத்தையும் நாடியது!

மாலை வழக்கம் போல நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வந்தவருக்கு அருணா சுடச்சுடக் கஷாயம் போட்டு வைத்திருந்தாள். கையில் கோப்பையுடன் நாற்காலியில் அமர்ந்தவரின் கண்கள் அனிச்சையாய் பூசையறையை நோக்கின.

கஷாயக் கோப்பையை மேசைமீது வைத்துவிட்டு, அந்த அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார்.

பெட்டியைத் திறந்து அந்த மரப்பாச்சி பொம்மையை கையில் எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தார், அது அவரைப் பார்த்து மெலிதாய்ப் புன்னகைப்பதைப் போலத் தோன்றியது. அமைதியான அழகான புன்னகை. வசீகரப் புன்னகை!

அவரது கைகள் அனிச்சையாக அந்தப் பொம்மையைத் திருப்பின, அதன் பாதங்கள் அவர் பார்வையில் படும்படி. இது வெறும் கீறலா? மகரக்குறியா? இதெல்லாம் என் கற்பனையா?

சில நொடிகள் பொம்மையைப் பார்த்தவர், அதை மீண்டும் பெட்டியில் வைத்துவிட்டுப் புத்தகத்தை எடுத்தார்.

பின்னட்டை வெறுமையாகத்தான் இருந்தது!

ஒரு பெருமூச்சுடன் புத்தகத்தைத் திறந்தார், 15வது அத்தியாயத்தின் இறுதிப் பகுதியைப் படிக்கத் தொடங்கினார்.

நீலாம்பரியை எப்படித் தியாகம் செய்வது (விட்டுவிடுவது) என்று விவரித்தது அந்தப் பகுதி.

’பூத பைசாச யக்ஷ யக்ஷிணிகளைக் கைக்கொள்ளுதலை முயலும் முன் சாதகனுக்கு அவற்றைத் தியாகம் செய்யும் முறையும் தெரிந்திருக்க வேண்டும். இவற்றைக் கட்டியாள்வதும் ஏவல்கொள்வதும் எளிதன்று, சாதகனின் தவத்தையும் திடத்தையும் மன உடல் சக்திகளையும் அட்டையாய் உறிஞ்சிக்கொள்ளும் காரியம். விடுப்பது எப்படி என்று தெரியாமல் பிடிப்பவன் நாளடைவில் தாம் அவற்றின் கட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்வான், புலிவாலைப் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவான். நீலாம்பரியைக் கைக்கொள்ளுதல் எத்துணைக் கடினமோ, அதே மட்டந்தான் அவளைத் தியாகஞ் செய்தலும். அவள் கிடைக்கமாட்டாள், கிடைத்துவிட்டால் பிரியமாட்டாள். நான் பலகால் முயன்று பலவிடம் அலைந்து குருமார் பல்லோருக்கு அடிமைசெய்து ஸ்ரீ ஸ்ரீ சதுரகிரிச் சித்தர் யஜுர்வேத ரத்னாகரர் அதோமுகஞானப் பண்டிதர் என்பாரிடம் ஐந்தாண்டுகள் பரமாணுக்கனாய் இருந்து கற்ற விச்சை இது. இது தேவரகசியங்களில் ஒன்று, எனவே இது இந்தத் தாளில் விசேஷ மையினால் அச்சிடப்படும், சரியான தவப்பயனும் ஜாதகமும் கிரகநிலையும் பெற்று, பித்ராதி தோஷங்கள் அற்ற சாதகனின் கண்களுக்கு மட்டுமே இது புலப்படும்...’

என்ற புதிரான பீடிகையோடு தொடங்கி சில சடங்குகளை வருணித்துச் சென்றது அந்த அத்தியாயம்! இளங்கோவின் கண்ணுக்கு எல்லாம் நன்றாகத்தான் தெரிந்தன. ‘விசேஷ மை’ எல்லாம் சும்மா ஒரு ஈர்ப்புக்காக அடிச்சுவிட்டது என்று அவர் எண்ணினாலும் எதற்கும் இருக்கட்டும் என்று அவர் அந்தப் பத்தியை அருணாவிடம் காட்டினார், அவளுக்கும் அது தெரிந்ததுதான்!

அதில் குறிப்பிட்டிருந்த சடங்கு சற்றுக் களேபரமானது. கோழி பலிகொடுத்தல், சூதகத்துணி, சாதகனின் நகம், இரத்தம் என்று அவை இளங்கோவின் வயிற்றைக் கொஞ்சம் கலக்கிவிட்டன!

ஒருவழியாக இளங்கோ அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்திருந்தார்.

புத்தகத்தையும் பொம்மையையும் மீண்டும் அட்டைப்பெட்டிக்குள் வைத்து பூசையறையில் வைத்துவிட்டார்.

அடுத்தடுத்த இரவுகளில் அவரது தூக்கம் தொலைந்தது. நாயின் ஊளைச் சத்தம் கேட்டுக் கண்விழிப்பார். சன்னல் வழியாகப் பார்க்க அவரது உள்ளம் துடிக்கும், சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு தூங்க முயல்வார். சில இரவுகளில் மூச்சுப் பயிற்சியும் சவாசனமும் உதவும், பல இரவுகளில் அரைகுறைத் தூக்கந்தான்! இந்தத் தொந்திரவுகள் ஓரளவுக்கு அவருக்குப் பழகிவிட்டிருந்தன.

அன்று இரவு அவருக்கு விழிப்புத் தட்டியபோது கண்விழித்தவர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தார்!

அவரது கால்மாட்டில் ஒரு பெண் உருவம்!

ஒரு பெண் நிற்கிறாளா, இல்லை அவளது நிழல் மட்டும் இருக்கிறதா என்று புரியாமல் ஒரு உருவம்!

இளங்கோ பேச முயன்றார் நா எழவில்லை, எழுந்து அமர முயன்றார் அசையக் கூட இயலவில்லை! கட்டிலோடு ஒட்டப்பட்டவர் போலக் கிடந்தார்.

காற்றில் அசையும் துணியைப் போல அந்த நிழலுருவம் மெல்ல அசைந்தது...

மிதப்பதைப் போல இளங்கோவை நெருங்கி அவரருகே குனிந்தது... அருகில் வந்தும் அது நிழலாகத்தான் இருந்தது, இருளைக் குழைத்துச் செய்த வடிவம் போல!

’மீண்டும் என்னைத் தொலைக்க முயலாதே... சிவதாஸா!’

இளங்கோவின் காதில் யாரோ கிசுகிசுப்பதைப் போலக் கேட்டன அச்சொற்கள். இவள்தானா பேசுகிறாள்? கன்னங்கரிய அந்த உருவத்தில் முகமோ, அசைவோ தெரியவில்லை... காற்றில் மிதக்கும் கரும்புகையைப் போல அவர்மீது அது மிதந்து கொண்டிருந்தது.

இளங்கோவிற்கு மூச்சு முட்டியது.

சட்டென அறையில் ஒளி பரவியது.

தன்னைக் கட்டிய கயிறு படீரென அறுந்ததைப் போல இளங்கோ துள்ளலாக எழுந்து அமர்ந்தார். மூச்சிறைத்தது. இதயம் இறைத்த இரத்தத்தின் அலைகளை முகத்தில் தலைக்குள்ளும் உணர முடிந்தது அவரால்!

”என்னப்பா?”

அருணா அவரது தோளில் கைவைத்து மெல்ல தடவிக்கொடுத்தாள்.

”ஒ- ஒன்னுமில்ல!”

அவளுக்கும் இவர்படும் இன்னல் புரிந்தது, ஆனால், இவர் சொல்வதைத்தான் நம்ப முடியவில்லை அவளால்! இரண்டு நாள்களுக்கு முன் மனநல மருத்துவரைப் பார்க்கலாமா என்று கேட்டாள், அன்று முழுவதும் இளங்கோ அவளிடம் பேசவில்லை. அதற்குப் பின் இருவரும் இதைப் பற்றி அதிகம் பேசிக்கொள்வதில்லை.

“நான் சொல்றதக் கோச்சுக்காம கேளு இளங்கோ... நாம ஒரு டாக்டரைப் பார்த்துட்டு வருவோம்... உனக்கு ஸ்ட்ரெஸ், எதையெதையோ நெனச்சுக் கவலைப்பட்டுட்டே இருக்க, சரியா தூங்கமாட்டேங்குற... இப்படியே விடக்கூடாது ப்பா...”

இளங்கோவின் கன்னங்களையும் தோளையும் வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தபடிக் குழைவாகச் சொன்னாள்.

இளங்கோ என்ன சொல்வது என்று தெரியாமல் அவளை ஆயாசமாகப் பார்த்தார். இன்னும் மூச்சு சீராகவில்லை அவருக்கு. இதயத்துடிப்பும் மெல்லச் சீராகிக்கொண்டிருந்தது.

“நாமலாம் படிச்சவங்க, நாமலே சைக்கியாட்ரிஸ்ட் கிட்டப் போறதுக்குத் தயங்கலாமா? சும்மா ஒரு விசிட், என்னதான் சொல்றார்னு பார்ப்போமே?”

தலையைக் கோதிவிட்டாள்.

அருகிலிருந்த நீர்ப் புட்டியை எடுத்துக்கொடுத்தாள். இளங்கோ ஒரு மடக்கு நீரைக் குடித்துவிட்டு “ம்ம்...” என்றார்.

***​

தன்னை அலுவல் வேலையில் முழுக்க ஆழ்த்திக்கொண்டவர், மதியம் ஒரு மணிக்கு இடைவேளை எடுத்துக்கொண்டு சாப்பிட எழுந்தார்.

உணவு மேசையில் அமர்ந்தபோது சமையலறையின் வாயிலில் தொங்கிய திரைச்சீலை காற்றில் அசைவது அவரது கண்களில் பட்டது. சட்டென அவருக்கு நேற்றைய இரவின் அனுபவம் நினைவு வந்தது. தன் செவியில் கிசுகிசுக்கப்பட்ட அந்தச் சொற்கள்... அந்தப் பெயர்...

’சிவதாஸா’

இளங்கோவின் மனத்தில் அந்தச் சொற்களும் அந்தப் பெயரும் எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

சட்டென அவருக்கு நினைவு வந்தது, சாப்பாட்டைப் பாதியில் விட்டுவிட்டு எழுந்து பூசையறைக்கு ஓடினார்.

அந்தப் புத்தகத்தைப் பெட்டிக்குள்ளிருந்து எடுத்தார். அதன் முகப்பட்டையில் நூற்பெயர் மட்டுமே இருந்தது. உள்ளே முதல் பக்கத்தில்தான் ஆசிரியர் பெயரும் அச்சிட்டிருந்தது-

பண்டிதர் ஸ்ரீ சிவதாஸர்

இளங்கோவின் பார்வை மீண்டும் அந்த அட்டைப்பெட்டிக்குச் சென்றது,

பொம்மை அதில் இல்லை!

இளங்கோவிற்கு ஏதோ புரிந்ததைப் போல ஒரு உணர்வு... அமைதியாகப் புத்தகத்தை மீண்டும் அட்டைப்பெட்டிக்குள் வைத்துவிட்டு வந்தார்.

அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை பழையபடி போனது.

இரவுகள் தொந்திரவில்லாமல் கழிந்தன... தன் வேலை, புத்தக வாசிப்பு, நடைப்பயிற்சி, மனைவி என்று இருந்தார்.

நாள்கள் செல்லச் செல்ல இளங்கோ அருணா இருவருமே இந்த நிகழ்வுகளை மறந்துவிட்டிருந்தனர்.

நான்கைந்து வாரங்களுக்குப் பின் ஒருநாள் இளங்கோ தூங்கி எழுந்தபோது அருணா குளியறையிலிருந்து கிட்டத்தட்ட ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டாள்.

முகத்திலும் கழுத்திலும் மார்பிலும் ஆவேசமாய் முத்தங்கள் பதித்துக்கொண்டிருந்தவளை நிறுத்தி என்ன என்று கேட்பதற்குள் இளங்கோ திணறிப் போய்விட்டார்!

வெட்கத்தில் சிவந்து மகிழ்ச்சியில் பூரித்த முகத்துடன் இளங்கோவின் கையை எடுத்துத் தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள் அருணா.

இளங்கோ மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனார். இப்போது ஆவேச முத்தங்கள் பதிப்பது அவர்முறையானது!

இத்தனைக்கும் இடையில் இளங்கோவின் மனத்தின் மூலையில் அந்த மரப்பாச்சி பொம்மை வந்தது.

‘நன்றி’ என்ற சொல் அவரது மனத்தில் ஓங்கி ஒலித்து எதிரொலித்தது!

***​

“வாழ்த்துகள் சார்...”

களைப்பில் கண்கள் சோர்ந்து படுத்திருந்த அருணாவின் தலையை வருடிக்கொடுத்து நெற்றியில் மெலிதாய் முத்தம் பதித்தவர், செவிலியரின் குரல் கேட்டுத் திரும்பினார்,

“பெண் குழந்தை”

முகம் நிறைந்த புன்னகையுடன் அந்தச் செவிலியர் கொடுத்த அந்தப் பிஞ்சினைக் கையில் வாங்கும்பொழுது இளங்கோவின் உடல்முழுதும் சிலிர்த்தது!

தான் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு ஸ்பரிசத்திற்காகத்தான் என்று பூரித்தார். தன் உயிரைத் தானே தன் கையில் ஏந்தும் இந்தப் பாக்கியம்... இந்த வரம்...

இளங்கோ தன் பிஞ்சு மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார், பீறிட்டு அழுத அதன் குரல் அவரது செவி வழியாக இரத்தத்தில் கலந்து உடல்முழுதும் ஓடியதைப் போன்று உணர்ந்தார்.

’மகளே... என் மகளே...’

அதன் நெற்றியில் பட்டும்படாமல் முத்தமிட்டார். அதன் பிஞ்சுக் கைகளில் முத்தமிட்டவர், கால்களிலும் முத்தமிடப் போக-

ஹோவென்று கொட்டும் அருவி சட்டென்று பனிக்கட்டியாய் உறைந்ததைப் போல உறைந்தது அவர் மனம்!

அந்தப் பிஞ்சுக் காலின் பாதத்தில் சிறியதாய் ஆனால் தெளிவாக இருந்தது-

மகரக்குறி!

(முற்றும்)​
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top