• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திருமணஞ்சேரி - துமி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

துமி

மண்டலாதிபதி
Author
Joined
Mar 15, 2022
Messages
357
Reaction score
1,273
Location
Karur
ஹாய் ப்ரெண்ட்ஸ்... காதல் மழை சிறுகதை போட்டிக்கு எனக்கு தெரிஞ்ச மாதிரி ஒரு சின்ன கதை எழுதிருக்கேன். விருப்பம் இருக்கவஙக படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க😍😍😍
 




துமி

மண்டலாதிபதி
Author
Joined
Mar 15, 2022
Messages
357
Reaction score
1,273
Location
Karur
"மங்கை நான் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வர்றேன். அதுவரைக்கும் நீ இங்கையே நில்லு..." என்ற மங்கையின் அன்னை ராணி, அவளை தனியாக விட்டுவிட்டு அர்ச்சனை கூடை வாங்க, கோவிலின் முன்பிருந்த கடையை நோக்கி சென்றார்.

பார்வதிக்கும் சிவபெருமானுக்கும், விஷ்ணுவே முன்னின்று திருமணம் நடத்திய ஸ்தலம் திருமணஞ்சேரி. அங்கு கல்யாணமாகாத பெண்களும், ஆண்களும் சென்று பரிகாரம் செய்தால், திருமணமாகும் என்பது ஐதீகம். அதனால் ராணி, மங்கைக்கு திருமணமாக வேண்டுமென்று, அவளை கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வந்திருந்தார்.

மங்கைக்கு இப்படியான பரிகாரம், நேர்த்திக்கடன் எதிலுமே விருப்பம் இல்லை. மங்கை சராசரி பெண்களின் உயரம் தான். ஆனால் போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்டிருக்க, சற்றே உயரம் குறைவாய் தோன்றுவாள்‌. அவளின் கால் பார்த்தே வரும் வரனெல்லாம் தட்டிப் போக, இப்பொழுதெல்லாம் கல்யாணப் பேச்சை எடுத்தாலே, அவளுக்கு ஏகபோகக் கடுப்பு தான். அதிலும் கோவில் கோவிலாக ராணி இவளை அழைத்துச் செல்ல, பற்றிக் கொண்டு தான் வருகிறது அவளுக்கு. என்ன செய்ய, மனதில் நினைத்தையெல்லாம் பேசிவிடும் வரம், அவளுக்கு இல்லையே!

"மச்சான் அப்பறம் இங்க வந்துட்ட, அடுத்து உடனே கல்யாணம் தான். நீயும் குடும்பஸ்தன் ஆகிடுவ!" என அழகேசனின் அத்தான் உத்தமன், அவனை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

"சும்மா இருங்க… எப்ப பாத்தாலும் அவனை போட்டு கலாய்ச்சிக்கிட்டு…" என்று அழகேசனுக்கு பரிந்துக் கொண்டு வந்தாள், அவனின் தமக்கை வினோதா.

"ஏய் குட்டச்சி… என்னை முதல்ல காலை வாரி விடுறதே நீ தான். நீ அத்தானைப் பாத்து கலாய்க்காதீங்கனு சொல்லுறியா?" என்று சிரிப்புடன் கேட்டான் அழகேசன்.

"சும்மா அம்மாவ திட்டிட்டே இருக்காத மாமா." என்று அழகேசனை தள்ளி விட்டான், அவளின் அக்கா மகன், ஐந்து வயது ஜகதீஸ்.

ஜகதீஸ் தீடீரென்று தள்ளுவானென்று நினைக்காத அழகேசன், ஒரு அடி பின்னால் நகர, அவன் கால் வைத்த இடத்தில் சிறு பள்ளம் இருக்க, நிலை தடுமாறி, பின்னே நின்றுக் கொண்டிருந்த மங்கையின் மேல் விழுந்தான்.

"அய்ய மாமா விழுந்துட்டாரு…" என்று ஜகதீஷ் சிரிக்க, வேகமாக வந்து, தன் தம்பியை தூக்கினாள் வினோதா.

"சாரிம்மா தெரியாம்ம விழுந்துட்டான்." என்று அழகேசன் மன்னிப்பு கேட்கும் முன்னே வினோதா, முந்திக் கொண்டு மங்கையிடம் மன்னிப்புக் கேட்டாள்.

தரையில் தான் விழப்போகிறோம் என்று நினைத்த அழகேசனுக்கு, விசித்திரமாய் ஓர் உணர்வு, பஞ்சின் மீது விழுந்தது போல் இருந்தது. அது என்னவென்று எழுந்த பின்பு தான் பார்த்தான்.

மெல்ல தரையில் ஒரு கையை ஊன்றி, எழுந்திருக்க முயன்றாள் மங்கை.

"நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா ம்மா?" என வினோதா வலிய வந்து உதவிக்கரம் நீட்ட,

"தேவையில்லை…" என்று மூஞ்சியலடித்தாற் போல சொன்னாள் மங்கை.

எழுந்து நின்று தன் உடையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டுக் கொண்டிருந்தாள் மங்கை. அப்பொழுது தான் அவளை அனைவரும் நன்றாகப் பார்த்தனர்.

இடுப்பை தாண்டி நெளி நெளியாய் அடர்த்தியாய் முடி இருந்தது. மஞ்சள் பூசிய முகமும், வலது பக்க ஒற்றை கல் மூக்குத்தியும் வெயில் பட்டு மின்னியது. பால் நிறத்தில் சருமம். இதுவரை அழகேசன் பார்த்த பெண்களில் இப்படி ஒரு அழகி இருந்ததில்லை!

மங்கை கீழே விழுந்ததைப் பார்த்து விட்டு, அர்ச்சனை கூடையுடன் அவ்விடத்திற்கு, வேக வேகமாக ஓடி வந்தார் ராணி‌.

"மங்கை… எதுவும் அடி படலைல?" என்று பதறினார் ராணி.

"அதெல்லாம் இல்லை மா…" ராணிக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள் மங்கை.

"கண்ணை என்ன பொடனிலையா வச்சிருக்கீங்க?" என்று ராணி ஆரம்பிக்க, "அம்மா…" என்று வேகமாக குரலெழுப்பி, ராணியை அடக்கியவள்,

"நீங்க போங்க மேடம்." என்றாள் வினோதாவிடம், பட்டும் படாத குரலில்.

மூக்கின் நுனி சிவந்து, வேகமாக சுருங்கி விரிவதிலே, அழகேசன் கண்டுக் கொண்டான், அவள் கோபமாய் இருக்கிறாளென்று. விசித்திரமாய் பெண்ணின் நுண்ணிய உணர்வுகள், ஏனோ புரிந்தது போல் இருந்தது அவனுக்கு.

கோவிலின் வாசலில் நின்று திரும்பி பார்த்தான். அவள் தன் அன்னையிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

'மங்கை' என்று அவள் பெயரை, அவன் மனம் ஒரு முறை உச்சரிக்க, சரியாக கோவில் மணியும் அடிக்க, மெய் சிலிர்த்தடங்கியது அழகேசனுக்கு.

"அழகு வாடா…" என்று அவன் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு, அவனை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள் வினோதா.

பூஜைக்கென்று வந்திருந்த அனைவரையும் நிற்க வைத்து‍, முப்பது ரூபாய் நுழைவுத் கட்டணமென்று வசூலித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

"நாங்க வெளிலையே அர்ச்சனை டிக்கெட் வாங்கிட்டோமே!" என்று டிக்கெட்டை காட்டினாள் மங்கை.

"அது வேற… இது வேறம்மா… இது நீ உள்ள போய் சாமி கும்பிடறதுக்கு. உனக்கு கல்யாணம் ஆவனும்னா முப்பது ரூபா குடுத்துட்டு போம்மா…" என்று பணத்தை வாங்கும் ஆள் கத்த, அனைவரும் மங்கையை தான் பார்த்தனர்.

திருமணம் ஆகாதது ஏதோ பெருங்குற்றம் போல், அவளை அனைவரின் முன் குன்ற செய்துவிட்டான் அந்த பாவி.

"கோவிலுக்குனு வந்தா செலவாக தான் செய்யும். நீ ஏன் டி அவன்கிட்டலாம் வாயை குடுக்கற?" என ராணி இன்னும் அவளை அதட்ட, கண்கள் குளம் கட்டியது மங்கைக்கு. இதை பார்த்துக் கொண்டிருந்த அழகேசனுக்கு பாவமாக இருந்தது மங்கையைப் பார்த்து.

முப்பது ரூபாயை கொடுத்து விட்டு, வரிசையில் நின்றாள் மங்கை.

"எல்லாரும் ரெடியா இருங்கோ… கல்யாணம் ஆகாத பையனுங்களாம் வலது பக்கம் இருக்க வரிசையில வந்து உக்காருங்கோ… கல்யாணம் ஆகாத பொண்ணுங்கோலாம் நடு வரிசையில வந்து உக்காருங்கோ… கல்யாணம் ஆன தம்பதிகள்லாம் இடது பக்கமா உக்காருங்கோ… மத்தவாலாம் தள்ளி இருங்கோ." என்று ஸ்பீக்கர் வழியே அறிவிப்பு வந்தது.

"ஏய் போனை குடுத்துட்டு போடி…" என்று ராணி, மங்கையின் போனை பிடுங்கினார்.

"என் போனை வச்சி நீ என்ன பண்ணப்போற? உனக்கு தான் அதுல ஒன்னுமே தெரியாதே!" என்று சுறுசுறுவென்று வந்த கோபத்துடன் கேட்டாள் மங்கை.

"எனக்கு எதுவும் தெரியாது தான். சாமிய ஒழுங்கா கும்பிட சொன்னா, அதை விட்டுட்டு அங்க போயும் போனையே நோண்டிட்டு இருப்ப… அதுக்கு தான் வாங்கிக்கிட்டேன். போ எல்லாரும் உள்ள போக ஆரம்பிச்சிட்டாங்க. கடைசியாக போனா சாமி தெரியாது." என்ற ராணி கிட்டத்தட்ட அவளை தள்ளி விடாத குறை தான்.

இதையும் பார்த்தும் பார்க்காதது போல இருந்த அழகேசனுக்கு, உதட்டோரம் சிரிப்பில் மீசை துடித்தது.

மூன்று வரிசையிலும் ஆண்களும் பெண்களும் சென்று அமர்ந்ததும், கோவிலின் ஸ்தல வரலாறு பற்றி ஒருவர் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க, மங்கைக்கு தூக்கம் வரும் போல இருந்தது. அதிகாலையிலே தூங்க விடாமல் எழுப்பி, கோவிலுக்கு செல்ல வேண்டுமென்று ராணி செய்த கலாட்டாக்களின் விளைவு அது.

மங்கை லேசாக தூங்கி விழ, அவள் கம்பியில் இடித்துக் கொள்ளாமல், நடுவில் கையை வைத்தான் அழகேசன். மங்கைக்கும் அழகேசனுக்கும் குறுக்கே தடுப்பு கம்பி மட்டும் தான் இருந்தது.

அழகேசன் கையின் சொரசொரப்பை உணர்ந்து கண்விழித்தவள், அவனை லேசாய் முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள். புன்னகை தாராளமாய் விரிந்தது அழகேசனுக்கு.

அனைவரும் வரிசையாய் அமரும் பொழுது, மங்கைக்கு அமர்ந்திருப்பதற்கு இரண்டு இடங்களுக்கு முன்னே தான் முதலில் அமர்ந்திருந்தான் அழகேசன். ஆனால் மனம் ஏதோ சொல்ல, உடனே அங்கிருந்து எழுந்து வந்து மங்கைக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான். மற்றவர்கள் திட்டியதும் முணுமுணுத்ததும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை அவன்.

"ஏய் உன் தம்பி அங்க என்ன டி பண்ணுறான்?" என்று உத்தமன் கேட்க, அழகேசன் செய்யும் கலாட்டாக்களை பார்த்தவாறே இருந்த வினோதாவும்,

"எனக்கும் ஒன்னும் புரியலைங்க?" என்றாள்.

"உன் தம்பிக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு போல!" என்று சொன்னான் உத்தமன்.

"ஏங்க அந்த பொண்ணுக்கு கால்…" என்று இழுத்த வினோதாவை, ஒற்றை பார்வையில் அடக்கினான் உத்தமன்.

"உன் தம்பி உனக்கு உசத்தினா, அந்த பொண்ணு அவங்க வீட்டுக்கு உசத்தி. உன் தம்பி கருப்பா இருக்கான்னு சொல்லி எத்தனை பொண்ணுங்க வேண்டாம்னுச்சு. இதெல்லாம் ஒரு குறையான்னு நீ எத்தனை வாட்டி புலம்பிருப்ப? இப்ப நீயே அதை ஒரு பொண்ணுக்கு செய்வியா?" என்று உத்தமன் நியாயம் பேச, நங்கென்று தலையில் கொட்டியது போல இருந்தது வினோதாவிற்கு.

"உன் தம்பிக்கு தான் அந்த பொண்ணை பிடிச்சிருக்கு போல… அந்த பொண்ணு இவனை திரும்பி கூட பாக்கல. அதனால வாயை வச்சிக்கிட்டு கம்முனு இரு." என்றான் உத்தமன் ஒரே போடாய். அதற்கு மேல் அங்கே நிற்க விடாமல் ஜகதீஸ் சிணுங்கிக் கொண்டே இருக்க, அவனைத் துக்கிக் கொண்டு வெளியே சென்றனர் இருவரும்‌.

சாமிக்கு வைக்க வேண்டுமென்று, பூஜை கூடைகளை வாங்கிக் கொண்டே ஒருவர் வர, அவருக்கு முன்னால், பூஜை கூடைகளை வாங்குவதற்கு கட்டணமாக முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டு ஒருவர் வந்துக் கொண்டிருந்தார். இதென்னடா புதுத் தலைவலி என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் மங்கை. ஏனென்றால் ராணி அவளின் போனுடன் பர்சையும் சேர்த்து வாங்கி வைத்துக் கொண்டிருந்தார். சரி அன்னையை அழைக்கலாமென்று திரும்பினாள், ராணி அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். மங்கையின் அழைப்பு ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்த மந்திரத்தின் முன் ராணிக்கு கேட்கவில்லை.

மங்கையின் பார்வை சென்ற வழி பார்த்த அழகேசன், அவளின் பதட்டத்தையும் ஒரு நொடியில் புரிந்துக் கொண்டான். சட்டை பாக்கெட்டில் பார்த்தான். தேவைக்கும் அதிகமாகவே பணம் இருந்தது‌.

"இந்தாங்க…" என்று மங்கையின் முன் மூன்று பத்து ரூபாய் தாள்களை நீட்டினான் அழகேசன்.

தன் முன் திடீரென்று ஒரு கரம் வந்து நீள, பயந்து போய்விட்டாள் மங்கை. சட்டென்று பின்னோக்கி வளைந்தபடியே திரும்பி பார்க்க, அழகேசன் வாங்கிக் கொள்ளுமாறு சைகை செய்தான். அவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் மங்கை. இன்னமும் அவன் கையை மடக்கவில்லை.

"ஏங்க அவரு பக்கத்துல வந்துட்டாரு பாருங்க… இப்ப என்கிட்ட வாங்கிக்கோங்க… வெளிய வந்து தந்திடுங்க." என்று அவன் சொல்ல,

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்." என்று வீராய்ப்பாய் கூறினாள் மங்கை.

அழகேசனுக்கு முன்னால் இருந்த யாரோ ஒருவர், "என்ன திரும்ப பணம் கேக்கறீங்க?" என்று பிரச்சனை செய்ய, ஏதோ அவர் தான் தவறு செய்தது போல கோவில் நிர்வாகத்தார் பேச, அதன் பின் அனைவரும், அவர்கள் கேட்ட காசை மறுபேச்சு பேசாமல் கொடுத்துவிட்டார்கள்.

"கடனா தான்ங்க வாங்கிக்க சொல்லறேன். சும்மா ஒன்னும் தரலை." என்று மீண்டும் அழகேசன் வற்புறுத்த, அதற்குள் மங்கையின் முன்பு பணம் வசூலிப்பவர் வந்து நின்றார். அவளை கேட்காமலே அழகேசனின் கையிலிருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அவர் போய் விட, அழகேசன் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

"வெ.. வெளிய… வந்து தந்திடறேங்க…" கன்றிப் போன முகத்துடன் சொன்னாள் மங்கை. அப்படியே அவள் முகத்தை இரு கைகளிலும் அள்ளி, 'வேண்டாம்டா செல்லாம்மா… இதெல்லாம் ஒரு விசயமே இல்ல டா...' என்று சொல்லி, அவள் மூக்குத்தியின் மீது முத்தமிட வேண்டுமென்ற ஆசை அலையலையாக எழுந்தது அழகேசனுக்குள். பெரு மூச்சு விட்டு அடக்கிக் கொண்டான்.

பார்த்த சிறிது நேரத்திலேயே எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது என தன்னைக் குறித்தே வியந்தான் அழகேசன்! ஆனாலும் இதற்கு எதிர்காலமில்லை என்பதை உணர்ந்தவன், முடிந்த அளவு தன் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டு, அவளுக்கு உதவியை மட்டும் செய்ய ஆரம்பித்தான்.

பூஜை பொருட்களை வாங்கி சென்றவர்கள், சிறிது நேரம் கழித்து, கற்பூர ஆரத்தி நீட்டிக் கொண்டு, அதற்கும் காசு வாங்கிக் கொண்டு வந்தனர். இம்முறையும் மங்கை முதலில் ராணியை தான் பார்த்தாள். ஆனால் ராணியோ அங்கே இல்லை. போன் பேச வேண்டுமென்று வெளியே சென்றுவிட்டார் போலும். இம்முறையும் அவள் கேட்காமலையே, பணத்தை நீட்டினான் அழகேசன். மெதுவாக இழுத்துக் கொண்டாள் சின்னதாகிவிட்ட முகத்துடன்.

"தேங்க்ஸ்ங்க…" என்றாள் சின்ன குரலில். அது அவனை சென்றடைந்திருக்குமா என்பது அவளுக்கே சந்தேகம் தான்! அவளின் உடல் மொழியை படிப்பவனுக்கு, அவளின் வாய்மொழி புரியாதா என்ன?

"பரவால விடுங்க…" என்றவன் மனதார சாமிக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான், மங்கை பார்த்தற்காக!

பூஜை எல்லாம் முடிந்து, பூஜை சாமான்களை வாங்கிக் கொண்டு செல்லும்படி அறிவிப்பு வர, நீண்ட நேரம் மடங்கியே அமர்ந்திருந்ததால் வந்த கால் வழியை நீவி விட்டுக் கொண்டே, கம்பியை பிடித்து மெல்ல எழுந்தாள் மங்கை. அப்படி அவள் எழுகையில் முன்னே வந்து விழுந்த முடிகளை, அநாசயமாக அவள் பின்னோக்கி தள்ளியதை, அழகேசனின் கண்கள் படம்பிடித்துக் கொண்டது.

'எங்க இருந்து டி வந்த இவ்வளவு அழகா என்னை கொல்லனும்னே! என் வீட்டுக்கு ராணியா நீ வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!' என்று அழகேசனின் மனம் ஏங்கியது.

பூஜை பொருட்களை வாங்கும் இடத்திலும் பணம் கொடுத்தால் மட்டுமே அவர்கள் தருவார்கள் என்பதை, அங்கே சென்றதும் தான் தெரிந்துக் கொண்டாள் மங்கை. தயக்கத்தோடே அவள் அழகேசனை கண்களால் தேட, அதை ஒரு நொடி ரசித்தவன், முன்னே வந்து அவளுக்கான பணத்தையும் சேர்த்து கொடுத்தான்.

முன்னேறி செல்ல வேண்டுமென்று கூட்டம் தள்ள, அதில் மங்கை கீழே விழப்போனாள். பூஜைப் பொருட்களை ஒரு கையிலும், மற்றொரு கையை மங்கையின் இடையில் விட்டும் பிடித்திருந்தான் அழகேசன்.

மெத்தென்ற அவளின் பூவுடலை அவன் கை தாங்கிய நொடி, அவனின் அடி மனம் கட்டுக்கடங்காமல் தறிக்கெட்டோடியது. மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவள் இடையை அழுந்த பிடிக்கப் போகும் சமயம், மங்கை எழுந்து விட்டாள்.

மங்கைக்கு சொல்ல முடியாத அளவு வியர்த்தது. பணம் கொடுத்து உதவி செய்ததால், அதிக உரிமை எடுத்துக் கொள்கிறானே என்று மங்கைக்கு தோன்றியது. முதல் வேலையாக இவன் பணத்தை திருப்பி தர வேண்டுமென்று எண்ணியவள், அவன் கையிலிருந்த கூடையை வெடுக்கென்று பிடுங்கினாள்.

மங்கை அகத்தில் நினைத்ததை அவளின் முகம், அழகேசனுக்கு காட்டிக் கொடுக்க, அதை புரிந்தவன் மனதில் சுர்ரென்று ஒரு வலி. அவளை நிமிர்ந்து பாராமல் வேகமாக நடை போட்டான். அவனது நடைக்கு பாவம் மங்கையால் ஈடு கொடுக்க முடியவில்லை.

வழியில் எல்லோரையும் செல்ல விடாமல், தடுத்து, பிராசத ஸ்டாலுக்கு செல்லுமாறு இரண்டு பேர் தள்ளிக் கொண்டிருந்தனர். ஆண்களை அவர்களால் சட்டென்று தள்ள முடியவில்லை. பெண்களை முடிந்தமட்டும் வாங்க சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

தாங்கி தாங்கி நடந்து வந்துக் கெண்டிருந்த மங்கையை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டு, பணம் தர சொல்லி கேட்க, அவள் திருதிருவென்று விழித்தாள். கையில் பணமில்லை என்று சொன்னாலும் அவர்கள் கேட்பது போல் இல்லை.

"மங்கை இங்க வா..‌. நான் ஏற்கெனவே வாங்கிட்டேன்‌." என்று ஆபத்பாந்தவனாய் வந்தான் அழகேசன்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் அருகில் வேகமாக சென்றாள் மங்கை. விட்டால் யார் மீதாவது மோதியிருப்பாள். அவள் முழங்கையை பிடித்து அவளை நிறுத்தினான் அழகேசன்.

மங்கையை பார்க்கும் ஒவ்வொரு கணமும் ஆசை அவன் நெஞ்சில் பெருக்கெடுத்தது.

அழகேசனின் கைப்பிடியில் இருந்து விலகியவள், "என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்க,

"நீங்க கீழே விழுந்தப்ப உங்க அம்மா பதறினாங்களே… அப்ப உங்க பேர் மங்கைன்னு தெரிஞ்சிது." என்றான் அழகேசன்.

"ஓ சரிங்க..‌. பணம்?" என்று அவள் தயங்க, பணம் வேண்டாமென்றால் பத்ரகாளியாகிவிடுவாள் என்பது புரிந்து, கடைசியாய் அவளை புன்னகை முகத்துடன் பார்க்க விரும்பியவன்,

"கோவில் குளக்கரைக்கிட்ட நிக்கறேங்க… அங்க வந்து குடுத்திடுங்க." என்று அவன் சொல்ல, மங்கை முகத்தில் சிறு நிம்மதி பிறந்தது.

"அப்பறம் மச்சான் தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?" என்று உத்தமன் இரட்டை அர்த்தத்தில் அழகேசனிடம் கேட்க,

"அக்கா புருசன்னு பாக்குறேன் அத்தான்." என்று அவனும் சிரித்தான்.

"என்ன பேசறீங்க ஒன்னும் புரியலையே?" என்று வினோதா கேட்க,

"யாரு உனக்கு புரியலையா? நடிக்காத டி…!" என்று உத்தமன் அவளையும் வாரினான்.

மங்கை அவள் அன்னையிடம் பணத்தை வாங்குவதை பார்த்த அழகேசன், "அத்தான் ஒரு சின்ன வேலை இருக்கு. இருங்க வந்துடறேன்." என்றுவிட்டு, குளக்கரைக்கு ஓடினான்‌.

குளத்தைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தவனை எப்படி அழைப்பதென்று தெரியாமல், "என்னங்க… என்னங்க…" என்று அழைத்தாள் மங்கை‌. அவளை பொருத்த மட்டில் அது சாதாரண அழைப்பு தான்; ஆனால் அழகேசனுக்கு அது காதல் கொண்ட ஒரு மனைவி, தன் கணவனை அழைப்பது போல காதில் விழுந்தது.

அழகேசன் திரும்பியதும், "இந்தாங்க பணம். சரியான டைம்ல ரொம்ப ஹெல்ப் பண்ணிங்க‌.‌.. ரொம்ப தேங்க்ஸ்ங்க…" என்று புன்னகையுடன் சொன்னவளை, மனதிற்குள் நிறைத்துக் கொண்டான் அழகேசன்.

"ஏங்க இந்தப்பக்கம் வாங்க… அங்கிட்டு பாம்பு போகுது." என்று அவன் சாதாரணமாக சொல்ல, அதில் கலவரமாகி, அழகேசனின் பின்னால் சென்று அவனை ஒட்டி ஒளிந்துக் கொண்டாள் மங்கை.

அழகேசன் சொன்ன பாம்பு தண்ணீரில் இறங்கி, நீந்தி மறுகரைக்கே சென்றிருக்கும்; ஆனாலும் பயத்தில் மங்கை அவன் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள். அழகேசனும் பாம்பு போய்விட்டதை சொல்லவே இல்லை. இதையெல்லாம் அழகேசனின் பின்னால் வந்த வினோதா பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு வருடம் கழித்து…

மஞ்சள் தாலி கழுத்தில் சரசரக்க, புது புடவை கொஞ்சம் கூடுதல் நகை‍, முடி நீளத்திற்கு பூ வைத்து, திருமணஞ்சேரி கோவிலுக்குள் நுழைந்தாள் மங்கை. இங்கு வந்து பரிகாரம் செய்துவிட்டு செல்பவர்கள், திருமணம் முடிந்து தன் இணையுடன் மீண்டும் இக்கோவிலுக்கு வர வேண்டுமென்பதும் ஐதீகம். அதன்படியே தன் கணவனுடன் அதே கோவிலுக்கு மீண்டும் வந்தாள் மங்கை.

"அந்த பொண்ணுக்கு காலு மட்டும் தான் குறை. மத்தபடி அவ்வளவு அழகா இருக்கு. எப்படி தான் போய் அட்டக்கரியா இருக்க அவனை கட்டிக்கிச்சோ!" கூட்டத்தில் யாரோ வியந்து பேசுவைதையெல்லாம் மங்கையும் சரி, அழகேசனும் சரி பொருட்படுத்துவதே இல்லை.

அழகேசனின் மனதை புரிந்துக் கொண்ட வினோதா, மங்கையின் அன்னையை பார்த்து விசயத்தை சொல்லாமல், மேலோட்டமாக பேசி, அவர்களின் விலாசத்தை வாங்கிக் கொண்டாள். அதிலெல்லாம் சமர்த்தி தான் வினோதா!

அழகேசனுக்கே சொல்லாமல், அவனை மங்கையை பெண் பார்க்க அழைத்து சென்றனர் வினோதாவும் உத்தமனும். பெண் பார்க்க சென்ற இடத்தில் மங்கைக்கும் அழகேசனுக்கும் அதிர்ச்சி தான்.

மங்கையிடம் அப்பொழுதே பேச வேண்டுமென்று சொல்லி தனியே அழைத்து வந்தவன், அவளிடம் தன் உள்ளத்தை பற்றி முழுமையாக சொல்லிவிட்டான்.

சிறு சிறு தேவையும் தன் முகத்தை பார்த்தே குறிப்பறிந்து நடந்துக் கொண்டவனை மறுக்க தோன்றவில்லை மங்கைக்கு. இருவருக்கும் திருமணம் இனிதே முடிந்தது.

ஆசை இல்லாலிடம் அவன் காட்டிய அன்பில், தன் குறையை மறந்தே போனாள் பெண்ணவள். காதலெனும் கடல் அவள் வாழ்க்கையை சூழ, அதில் அஸ்தமனம் இல்லா சூரியனான் அழகேசன்.

"கொண்டவன் துணை இருந்தா, பொண்டாட்டி கூரை ஏறி சண்டை போட முடியுமாம்! தெரியுமா?" என்று எதற்கோ மங்கை கேட்க,

"கூரை ஏறி என்ன? வானம் ஏறி வைகுண்டம் போய் கூட சண்டை போடு செல்லம்மா. மாமன் நான் இருக்கேன்." என்று மீசையை முறுக்கினான் அழகேசன்.

இருவரின் இல்லறம் என்றும் நல்லறமாக இருக்க, இறைவனை வேண்டி விடை பெறுவோம் மக்களே!
 




Last edited:

Ramya minion

நாட்டாமை
Joined
Mar 13, 2022
Messages
33
Reaction score
37
Location
India
#காதல்_மழை
#திருமணஞ்சேரி
#அழகேசன்_மங்கை

தடைபடும் திருமணத்திற்கு பரிகாரம் செய்ய செல்லும்போது,தன் தமக்கையின் குழந்தையால் மங்கையை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது அழகேசனுக்கு.

அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் கருநிற கார்மேக கண்ணன்.
அவளின் விழி பார்த்து தேவையும் அறிகின்றான்.
பரிகாரம் செய்து காதலையும் வளர்த்தான்.
இறுதியில் அவன் செல்லாமாவின் காதல்கணவனாய் ஆகின்றான்.
காதலில் குறைகள் நிறைகளாகவே பார்க்கப்படும்❣❣

உத்தமன் சரியான விளக்கம் கொடுத்து மனைவிக்கு புரியவைத்தது அருமை.
சூப்பர் சிறுகதை.ஒரு தொடர்கதையாய் கூட இதை எழுதி இருக்கலாம் எனத் தோன்றுகிறது‌.

காசை நல்லா வாங்குறானுங்க பரிகாரம்ங்கற பேர்ல

வாழ்த்துகள் நட்பே 💐💐

அன்புடன்
#ரம்யா.
 




Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அழகேசன் - மங்கை..... 💞

அந்த கோவில் அஹ் வந்த சீன் எல்லம் ரொம்ப அழகா இருந்துச்சு dr.... 😍😍

அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தர் மேல அன்பு வெச்சிருக்காங்க....😊
யார் என்ன சொன்ன என்ன....

லவ்லி ஸ்டோரி.... 🥰

@துமி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr.... 🤝❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top