• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திருவானைக்காவல் கோவில் சிறப்புகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SahiMahi

புதிய முகம்
Joined
Apr 23, 2021
Messages
10
Reaction score
22
Location
Chennai
*திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் உச்சிக்கால பூஜையில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்*

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம். யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் ஜம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம்.

*51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.*

*காவிரி நீரில் சிவன்*

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது

*ஜம்புகேஸ்வரர்*

பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு ஜம்பு என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் இலிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்

*அகிலாண்டேஸ்வரி*

ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

*புடவை கட்டி வரும் அர்ச்சகர்*

உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம். அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்

*சிவன் குருவாக உபதேசித்த தலம்*

வெள்ளை நாவல் பழம் பழுக்கும் வெண் நாவல் மரமே இத்தல விருட்சம். இச் சந்நதியை தினம் 12 முறை 48 நாட்கள் வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும். அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது. சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். சிவன் குருவாக இருந்து பார்வதிக்கு உபதேசித்த தலம் என்பதால் இங்கு திருக்கல்யாணம் நடப்பதில்லை. திருமணமும் நடைபெறுவதில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top