துரியோதனனும்_கர்ணனும்:

#1
#துரியோதனனும்_கர்ணனும்:


கொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்...

கர்ணனின் கொடை வள்ளல் தன்மையை விளக்கும் குட்டிக்கதை.

வாரி வழங்குவதிலே கர்ணனுக்கு நிகர் யாருமில்லை என்பார்கள். இதன் காரணமாக யாருக்கும் இல்லாத புகழ் கர்ணனுக்கு இருந்தது.
கர்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே சென்றது. ஒரு நாள் துரியோதனனின் அமைச்சர், துரியோதனனிடம், "கர்ணன் ஒரு சிறிய நாட்டைத்தான் ஆள்கிறார். அந்த நாட்டைக் கொடுத்ததும் நீங்கள் தான். ஆனால் கர்ணனின் புகழ் தான் ஓங்கி இருக்கிறது - இது சரி தானா?" என்று குதர்க்கமாக கேள்வி கேட்டார்.
துரியோதனனுக்கு, அமைச்சர் கூறுவது சரி என்று தோன்றியது. துரியோதனன் உடனே அமைச்சரைப் பார்த்து, "நானும் கர்ணன் மாதிரி புகழ் பெற ஏதாவது ஒரு யோசனையை சொல்" என்று கேட்டார்.

"மகா பிரபுவே தாங்களும் கர்ணனைப் போல் கொடை கொடுக்கத் துவங்கிவிடுங்கள். பின்னர் தங்களுக்கு ‘கொடை வள்ளல்' என்ற பெயர் கிடைக்கும்", என்றார் அமைச்சர்.
துரியோதனனும் "சரி, அப்படியே செய்கிறேன்" என்றார்.
உடனே அமைச்சர், "அருமையான யோசனை சொன்ன எனக்கு ஏதாவது பரிசு தரக் கூடாதா?" என்று கேட்டார். அதற்கு துரியோதனன், "அதற்குத் தான் சம்பளம் தருகிறேனே" என்று கூறினார்.
மறு நாள், "துரியோதன மகாராசாவும் கொடை கொடுப்பார்", என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டவுடன், பகவான் கிருஷ்ணர் தள்ளாத முதியவர் வேடத்தில், துரியோதனனிடம் வந்து, "அய்யா, எனக்கு ஒரு பொருள், தானமாக வேண்டும்", என்று கேட்டார்.
உடனே துரியோதனன், "என்ன வேண்டும்? கேளுங்கள் தருகிறேன்" என்று கூறினார்.
அதற்கு அந்த முதியவர், "இன்னும் ஒரு மாதம் கழித்து இதே நாளில் வந்து நான் விரும்பும் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் பகவான் கிருஷ்ணர், வருண பகவானை அழைத்து, "இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து மழை பெய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தினார். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து அடைமழை பெய்தது.
மீண்டும் கிருஷ்ணர், முதியவர் வேடத்தில் துரியோதனனைப் பார்த்து, "நான் உங்களை முன்பே சந்தித்து எனக்குக் கொடையாக ஒரு பொருளைத் தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். தாங்களும், தருவதாக சொன்னீர்கள். நினைவு இருக்கிறதா?" என்று கேட்டார்.
அதற்கு துரியோதனன், "நினைவு இருக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள்" என்று கேட்டார்.
கிருஷ்ணர், "கொடை வள்ளலே என் மகளின் திருமணத்திற்காக எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும்" என்று கேட்டார்.
இதற்கு துரியோதனன், "ஒரு மாதமாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாங்களே விறகு இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். விறகு மட்டும் கேட்காதீர். வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேளுங்கள்," என்று சினத்துடன் கூறினார்.
இதற்கு பதிலளித்த கிருஷ்ணர், "தாங்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்னாவது?" என்று கேட்டார். அதற்கு துரியோதனன், "வாக்காவது, போக்காவது" என்று கூறினார்.
முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் அங்கிருந்து புறப்பட்டு கர்ண மகாராசாவின் அரண்மனைக்கு சென்றார்.
முதியவரைப் பார்த்த கர்ணன், முதியவருக்கு உடுத்திக் கொள்ள மாற்று உடையும்; துவட்டிக் கொள்ள துண்டும் அளிக்குமாறு உத்தரவிட்டார். முதியவரும் உலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டார். அவருக்கு சூடான பாலும் கொடுக்கப்பட்டது.

சற்று இளைப்பாறிய முதியவர், "அய்யா, என் மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும். அதை கொடையாக கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன்." என்றார்.
உடனே கர்ணன், "நம் நாட்டில் உள்ள பாழடைந்த அரண்மனையில் நிறைய தூண்களும் உத்திரங்களும் உள்ளன. அவை மழையில் நனையாமல் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை வண்டியில் ஏற்றி, அவை நனையாமல் இருக்க, அவற்றின் மேல் ஓலைகளை கூரை போல் வேய்ந்து, முதியவரின் ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கர்ண மகாராசாவின் உத்தரவுப்படி விறகினைப் பெற்றுக் கொண்ட முதியவர், துரியோதனன் மாளிகை வழியாக சென்றார்.
"பெரியவரே காய்ந்த விறகு கிடைத்து விட்டதா?" என்று வினவினார் அமைச்சர். அதற்கு, "கொடை வள்ளல் கர்ண மகாராசா தான் கொடுத்தார்" என்று கூறினார், அந்த முதியவர்.
கொடை கொடுக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. கொடை உள்ளமும், கூர்த்த அறிவும் வேண்டும் என்னும் உண்மை துரியோதனனுடைய அமைச்சருக்கு புரிந்தது.
கொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பிறவிக் குணம் இல்லாமல் கொடை கொடுக்கிற மனம் தானாக வராது.
அ முதல் அஃகு வரை.
படித்ததைப் பகிர்ந்தேன்
 
#7

Advertisements

Top