• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை-பவ்யா இறுதி அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்

இறுதி அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்....மாவீரனான ஆதித்த கரிகாலனின் முடிவு இதயத்தை கனக்க வைக்கும் ஒன்று...அவனின் வாழ்வு இப்படியிருந்திருந்தால் என்றதே இந்த சிறிய கதை....எத்தனையோ சாதனைகள் புரிந்து சோழ சக்கரவர்த்தியாக வாழாமல் அகால மரணமடைந்த மாவீரன் ஆதித்த கரிகாலனுக்கு இந்த தேன்மழை சமர்ப்பணம்.....






தன் எதிரில் நின்றிருந்த முத்தழகனை நிமிர்ந்துப் பார்த்தான் ஆதித்தன்.


"முத்தழகா!போன காரியம் என்னவாயிற்று?அவர் நாம் கூறியதற்கு ஒப்புக் கொண்டாரா?"


"ஆம் இளவரசே!அவர் நாம் கூறிய அனைத்திற்கும் ஒப்புக் கொண்டார்...அவருக்கே சில நாட்களாக சந்தேகம் தோன்றியிருக்கிறது என்பது அவர் பேச்சிலிருந்து அறிய முடிந்தது..."


"சரி நீ நான் முன்பு கூறியது போல் அவர்களை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும்...அதில் சிறு பிழையும் நேர்ந்து விடக் கூடாது... இந்த சந்தர்ப்பம் மறுமுறை கிடைப்பது அரிது..."


"அப்படியே இளவரசே!"என்றவன் ஆதித்தனைப் பார்த்து ஒரு விதமாக சிரித்தான்.


"முத்தழகா! சிரிக்கும் விதமாக என்ன ஆயிற்று இப்போது?"


"இளவரசர் வேட்டைக்கு சென்று திரும்பியதன் மேல் முகத்தில் ஜொலிப்பு அதிகமாகியிருக்கிறது... பேச்சிலும் நடத்தையிலும் நிதானமும் தெளிவும் கூடியிருக்கிறது.... எல்லாம் தேன்மொழி தேவியின் காதல் செய்த மாயம் என்று தோன்றுகிறது"என்று கூறிச் சிரித்தான்.


"போதும் என் மாற்றங்களை பட்டியலிட்டது...போ.... ஆக வேண்டிய வேலைகளை தலைக்கு மேல் இருக்கிறது..."குரலில் கண்டிப்பு இருந்தாலும் கண்கள் சிரிப்பைக் காட்டியது.


நந்தினியின் துரோகத்தால் எங்கே பெண்களையே வெறுத்துவிடுவாரோ என்று கவலைக் கொண்டிருந்த முத்தழகனுக்கு தேன்மொழியால் வாழ்வில் பிடிப்பும் சந்தோஷமும் அடையப் பெற்ற ஆதித்தன் அவளோடு நெடுங்காலம் சுகமாக வாழ வேண்டுமென இறைவனிடம் வேண்டியது அந்த உண்மைத் தோழனின் மனம்.


அன்று காலை கடம்பூர் அரண்மனை பரபரப்பாக புதிய விருந்தாளிகளை எதிர் நோக்கிக் காத்திருந்தது.மதிய உணவிற்கு அவர்கள் வருவதால் அறுசுவை விருந்து வேகமாக தயாரானது.அரண்மனையே விழாக் கோலம் பூண்டிருந்தாலும் அந்தபுர அறையில் சாளரத்தின் அருகே நின்றிருந்த தேன்மொழி மட்டும் சோக சிலையாக நின்றிருந்தாள்.


அவள் மனதில் பயமும் கலக்கமும் சூழ்ந்திருந்தது.ஏதேதோ கற்பனைகள் தோன்றி அவளை வதைத்தது.வர இருக்கும் சூழற் காற்று அவளின் வாழ்வை சர்வநாசம் செய்துவிடுமோ என எண்ணி அவள் தளிர் மேனி நடுங்கியது.


மெதுவாக அறைக்குள் வந்த கமலம் அவள் தோளில் கைவைத்தாள்.அதில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் தேன்மொழி.


"இளவரசி!ஏன் இந்த கலக்கம்...?"


"கமலம்!தெரிந்து தான் கேட்கிறாயா?இன்று வரப் போவது யார் என்று தெரிந்தும் நீ இந்த கேள்வியைக் கேட்கிறாயா?"


"தெரியும் இளவரசி!பெரிய பழுவேட்டரையரும் அவரின் இளையராணி நந்தினி தேவியும்"


"அந்த நந்தினி இளவரசரின் காதலுக்கு பாத்திரமானவள் என்பதை மறந்துவிட்டாயா?"


"காதலுக்கு அல்ல கவர்ச்சிக்கு பாத்திரமாக இருந்தாள்"என்று கம்பீரமாக ஒலித்தது ஆதித்தனின் குரல்.


அறை வாயிலை சிறியதாகிக் கொண்டு நின்றிருந்த ஆதித்தன் உள்ளே நுழையவும் அவனை தலைத் தாழ்த்தி வணங்கிய கமலம் வேகமாக அங்கிருந்து அகன்றாள்.


இதயத்தை ஊடுருவும் பார்வையோடு அவளை நெருங்கினான் ஆதித்தன்.அவனின் ஒவ்வொரு அடியும் அவளை சிலிர்க்க வைத்தது.அவன் பார்வையைத் தாள முடியாமல் நாணித் தலைக் குனிந்தாள் மங்கை.முச்சுக் காற்று முகத்தில் வீசும் நெருக்கத்தில் நின்றவன் தன் நெடுந்துயர்ந்த கையால் அவள் பூமுகத்தை நிமிர்த்தினான்.


"தேவி!என்னை பூரணமாக நம்புகிறாயா?"


அவன் கேள்வியில் திகைத்து அவனை நோக்கியவள்,


"இளவரசே!இது என்ன கேள்வி?!என்னைவிட அதிகமாக உங்களைத் தான் நம்புகிறேன்.."


"அது உண்மை என்றால் நந்தினியை நினைத்து ஏன் இந்த கலக்கம்?"


"அது....அது...‌நீங்கள் அவரை....காத...."


"இல்லை....அந்த வார்த்தை சொல்லாதே!காதல் புனிதமானது... இருவர் கருத்தொருமித்து கலப்பது...கஷ்டத்திலும் சுகத்திலும் துணையிருப்பது...ஆனால் வேகம் நிரம்பிய அந்த இளமைப் பருவத்தில் நான் நந்தினியிடம் கண்டது...வெறும் உடல் கவர்ச்சி...அழகான பெண்ணை எப்போதும் அருகே கண்டதும் தடுமாறியது என் மனம்.... ஆனால் அவளோ அந்த தடுமாற்றத்தை தன் சுயநலத்திற்காக நன்றாக உபயோக்கித்துக் கொண்டாள்....சோழ ராஜ்யத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சாமர்த்தியமாக என்னிடம் அறிந்துக் கொண்டாள்...அவள் வேலையானதும் உடையை மாற்றுவதுப் போல் உள்ளத்தையும் மாற்றிக் கொண்டாள்...அடுத்து அவள் குறி பழுவேட்டரையர்....பாவம் சோழர் சேவையே உயிர் மூச்சாக வாழ்ந்தவர்...இவள் மாயவலையில் எப்படியோ விழுந்துவிட்டார்....அவள் போதனையில் அவரேயறியாமல் சோழருக்கு எதிராக சதி செய்ய துணிந்து விட்டார்...ஆனால் சில நாட்களாக அந்த சதிகாரியின் உண்மை முகம் அவருக்கு சிறிதளவு தெரியத் தொடங்கியிருக்கிறது....அதை அவருக்கு முழுமையாக புரிய வைக்கத் தான் இங்கு வரவழிக்கிறேன்....இந்த திட்டத்தில் உன் உதவி எனக்கு முக்கியமாகத் தேவை...செய்வாயா?"


"இளவரசே!இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது! உங்களுக்காக உயிரைக் கூட சந்தோஷமாக கொடுக்க சித்தமாக இருப்பவள் உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்ய மாட்டேனா!கட்டளையிடுங்கள்!"


சில முக்கியமான பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்தான் ஆதித்தன்.அவளும் அதையெல்லாம் கவனமாக கேட்டவள் அதை சரிவரச் செய்வதாக வாக்களித்தாள்.


கடம்பூர் அரண்மனைக்கு பழுவேட்டரையரும் அவரின் இளையராணி நந்தினியும் வந்துவிட்டனர்.அறையில் ஓய்வாக இருந்த நந்தினியை அந்தபுர பெண்கள் அனைவரும் சென்று பேசிவிட்டு வந்தனர்.


நந்தினியின் எழிலில் தேன்மொழியே ஒரு நிமிடம் மயங்கிவிட்டாள்.அவளை பற்றி இளவரசர் ஏற்கெனவே சொல்லி எச்சரிக்காது விட்டிருந்தால் அவளின் இனிப்பானப் பேச்சில் தேன்மொழி கண்டிப்பாக ஏமாந்துவிட்டிருப்பாள்.பட்டும்படாமல் அவளிடம் பேசிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.


மறுநாள் நெடுநிலக்கிழாரைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்களில் வருவதாக கூறி பழுவேட்டரையர் தம் இளையராணியை கடம்பூரிலேயே விட்டுச் சென்று விட்டார்.அவர் போனப் பின் நந்தினி தன் அறையை விட்டு வெளிவரவேயில்லை.இளவரசன் கூறியபடி அவள் மேல் ஒரு கண்ணை வைத்தபடி இருந்தாள் தேன்மொழி.


நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் இரவு முதல் ஜாமம் முடியும் நேரம்.அந்த காரிருளில் தீபந்த ஒளியில் செல்பவர்களை பின்பற்றி சென்றுக் கொண்டிருந்தான் முத்தழகன்.முதலில் ஒருவனாக மாலையில் ஆரம்பித்த அந்த பயணம் இப்போது ஐந்து பேராகச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்கள் பயணம் முடிந்த இடம் மூங்கில் காட்டின் மத்தியிலிருந்த ஐய்யனார் கோவில்.


அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தவர்களில் ஒருவன்,


"ரவிதாஸரே!நாம் இந்த ஐய்யனார் கோவிலுக்கு இந்த சமயத்தில் எதற்காக கூடியிருக்கிறோம்....நம் தேவி இங்கே வரப் போகிறாரா?"


அந்த கூட்டத்தின் தலைவனாகப்பட்டவன்,


"சோமா!தேவி இங்கே வரப் போவதில்லை...நாம் தான் அவர் இருக்குமிடம் செல்லப் போகிறோம்...காரி...பெரிய பழுவேட்டரையர் இன்று காலை கிளம்பி விட்டார் என்று நீ கூறியது நிச்சயம் தானே?அதில் சந்தேகம் ஏதுமில்லையே?"


"இல்லை ரவிதாஸரே!அதில் சந்தேகமேயில்லை....அவர் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்றதை நான் என் கண்ணால் கண்டேன்...தேவியும் உங்களையெல்லாம் அழைதத்துக் கொண்டு ரகசிய வழியில் அழைத்து வரச் சொன்னார்..."


"நல்லது....நம் தேவியின் மேல் அந்த கிழவனாரின் மோகம் நமக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கிறது.... இரண்டாம் ஜாமம் தொடங்கிவிட்டது..."


அவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் கேட்ட முத்தழகனின் ரத்தம் கொதித்தது... அவர்களை அந்த இடத்திலேயே கொன்று குவிக்கும் ஆத்திரம் கிளம்பியது.ஆனால் இளவரசரின் திட்டம் கெட்டுவிடும் என்பதால் பொறுமை காத்தான்.


ரவிதாஸன் அங்கிருந்த சூலத்தைத் திருப்பியதும் மண் யானையும் குதிரையும் இடம்பெயர்ந்தன...அதில் ஒவ்வொருவராக இறங்கியதும் அது மூடிக் கொண்டு விட்டது.சிறிது இடைவெளி விட்டு அந்த துவாரம் இருந்த இடத்திற்கு சென்ற முத்தழகன் அதை திறக்க நினைத்து சூலத்தை திருப்பினான்.ஆனால் என்ன முயன்றும் அது திறக்கவில்லை.சதிகாரர்கள் உள்ளே பூட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றுத் தோன்றியது.நிராசையுற்ற முத்தழகன் அரண்மனை நோக்கி விரைந்தான்.


அரண்மனை அருகே இருந்த நந்தவனத்தில் முக்காடிட்ட உருவம் ஒன்றோடு தேன்மொழிக்காக காத்திருந்தான் ஆதித்தன்.சிறிது நேரத்தில் சுற்றிலும் கண்களை ஒட்டியபடி வந்தாள் தேன்மொழி.இளவரசனோடு நின்றிருந்த உருவத்தைக் கண்டு தயங்கி நின்றாள் அவள்.


"தேன்மொழி என்ன தயக்கம்...வா இங்கே!"


"சம்பூவரையரின் மகள் அல்லவா..."என்றது அந்த உருவம்.


"மூன்று நாட்களுக்கு முன்பு வரை..."


"அப்படியென்றால்...‌இப்போது?"


"என் மனைவி...."என்றான் ஆதித்தன் பெருமை பொங்கும் குரலில்.


"மனைவி.....?"


"ஆம்.... காந்தர்வ மணம்.... விரைவில் ஊரறிய திருமணம் நடைபெறும்..."


தேன்மொழி அந்த உருவத்தின் அருகில் சென்று நமஸ்கரித்தாள்.


"தீர்க்க சுமங்கலியாக கணவனோடு பல்லாண்டு வாழ் மகளே!"என்று ஆசிர்வதித்தது அந்த உருவம்.


அப்போது அந்த இருளில் இருந்து வெளிப்பட்டான் முத்தழகன்.


"வா முத்தழகா!போன வேலை என்னவாயிற்று?"


அவன் தான் கண்டது கேட்டவைகளை விவரித்தான்.
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
அப்படியானால் இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை...தேவி! வேட்டை மண்டபத்திற்கு செல்ல வேறு வழி இருக்கிறதா?"


"இருக்கிறது... வாருங்கள் என்னோடு..."என்று அவர்களை அழைத்துச் சென்று சுரங்க பாதை தொடங்கும் கதவைத் திறந்து அவள் முதலில் நுழைந்ததும் ஆதித்தனும் அந்த உருவமும் அவளைப் பின் தொடர்ந்தனர்.முத்தழகன் ஆதித்தன் அழைத்து வர சொன்னவர்களை அழைத்து வருவதற்காகச் சென்று விட்டான்.


தேன்மொழியின் கையிலிருந்த விளக்கின் ஒளியில் அந்த பாதை வளைந்தும் நெளிந்தும் சற்று கரடு முரடாக இருப்பது தெரிந்தது.மூவரும் வேக நடையில் சென்ற போது அந்த பாதை முடியுமிடம் அவர்கள் முன் தோன்றியது.கதவில் தேன்மொழி எதையோ அழுத்தியதும் கதவு மேலே எழும்பியது.மூவரும் வேட்டை மண்டபத்தில் நுழைந்த போது பக்கத்தில் நந்தினி இருந்த அறையில் விளக்கு வெளிச்சமும் பேச்சுக் குரலும் கேட்டது.


மூவரும் அந்த துவாரத்தின் அருகே சென்று நின்றனர்.இப்போது உள்ளே இருந்தவர்களின் பேச்சுத் தெளிவாகக் கேட்டது.அதில் நந்தினியின் குரலே உயர்ந்து கேட்டது.ஹாஹாவென பெருங்குரலில் சிரித்தவள்,


"ரவிதாஸா!நாளை இரவு என் சபதம் முடிந்துவிடும்...இந்த மூன்று ஆண்டுகளாக எந்த நேரத்திற்காக காத்திருந்தோமோ அது வந்தேவிட்டது....வீரபாண்டியரின் மரணத்துக்கு பழிக்கு பழி வாங்கும் வேளை வந்தேவிட்டது....அந்த ஆதித்த கரிகாலனின் மரணம் இதோ இந்த வீரவாளினால் நானே முடிப்பேன்...என் தவறுக்காக மன்னிப்பு கேட்பதற்காக அழைத்திருக்கிறேன்....அந்த முட்டாளும் அதை நம்பி வருவதாக கூறியிருக்கிறான்...‌அவனின் உயிர் வாங்க எமன் காத்திருப்பதை அறியாமல் வரப் போகிறான்...ஹா....ஹா..."
என்ற அவளின் வெறிப்பிடித்த சிரிப்பு எல்லா திக்கிலும் எதிரொலித்தது.


அவள் பேச்சில் நடுங்கும் தேன்மொழியின் கைகளை அழுத்தி தைரியமூட்டினான் ஆதித்தன்.கோபத்தில் கொந்தளித்த அந்த உருவம் அந்த துவாரத்தில் நுழைய முயன்ற போது அதை தடுத்து மேலே கேட்டுமாறு சமிக்ஞை செய்தான்.


உள்ளே அவள் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த ரவிதாஸன்,


"ராணி!என்னை மன்னித்து விடுங்கள். அந்த கிழவனார் பழுவேட்டரையரை மணந்து அவரின் இளையராணியான போது தாங்கள் எங்கே நம் சபத்தை மறந்து விடுவீர்களோ என்று சந்தேகப்பட்டு விட்டேன்..."


"பரவாயில்லை ரவிதாஸா!உன் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித் தான் நினைத்திருப்பார்கள்...ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்... நான் அந்த கரியன் ஆதித்தனை விரும்பியது போல் நடித்தது...அவன் மூலம் சோழ நாட்டின் ரகசியங்களை அறிய... அந்த கிழக் கோட்டானை மணந்தது ஆதித்த கரிகாலனை வீரபாண்டியன் மரணத்திற்கு பழி வாங்க.... இதை எப்போதும் நினைவில் வை..."


"அடிப் பாதகி!பழிகாரி!பெண்பிசாசே!உன்னை நம்பிய எனக்கு கிழக் கோட்டான் என்று நல்ல பட்டமே கொடுத்தாய்!"என்றவாறே அந்த துவாரத்தின் வழியே உள்ளே நுழைந்தார் இவ்வளவு நேரமாக முக்காடிட்டுக் கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையர்.அவர் பின்னேயே ஆதித்த கரிகாலனும் தேன்மொழியும் நுழைந்தனர்.


வெளி வாயிலை தேன்மொழி திறக்கவும் முத்தழகன் அழைத்து வந்த சம்புவரையர் கந்தமாறன் இன்னும் சில குறுநில மன்னர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்தனர்.


அனைவரையும் கண்டு நந்தினியும் அவளின் கூட்டாளிகளும் திடுக்கிட்டு விட்டனர்.தன் நடிப்பை நம்பியது போல் நடித்து ஆதித்தன் தன்னை முட்டாளடித்து விட்டான் என்பதைப் புரிந்துக் கொண்டு விட்டாள் நந்தினி.


"அடிக் கிராதகி! இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு நீ இருப்பதை அறியாது அபலை அனாதை என்று நீ கட்டிய கண்ணீர் கதையை நம்பி உன்னை மணந்து சோழ நாட்டுக்கே துரோகம் செய்து விட்டேன்... இந்த பழியை எப்படிப் போக்குவேன்...ஆம் உனக்கு தாலிக் கட்டிய பாவத்திற்கு உன்னை இதே கைகளால் கொன்று பரிகாரம் செய்வேன்....பாவி!...பாதகி!"என்று அவள் கழுத்தை நெறிக்க போனார் பழுவேட்டரையர்.


"வேண்டாம்... பழுவேட்டரையரே... வேண்டாம்..‌இந்த துரோகியை கொன்று தங்கள் கைகளை மாசுப் படுத்திக் கொள்ளாதீர்கள்... இவளுக்கு தண்டனை சக்கரவர்த்தியே தீர்மானிப்பார்...காவலர்களே இந்த சதிகாரர்களை கைது செய்யுங்கள்"


காவலர் அவளை நெருங்கும் முன் மறைவில் தான் வைத்திருந்த குறுவாளை தன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு நிலத்தில் வீழ்ந்தாள் நந்தினி.சிறிது துடித்த அவள் தேகம் பின் அடங்கியது.பார்த்திருந்த அனைவருக்கும் நந்தினியின் அந்த துர்மரணம் அதிர்ச்சி அளித்தது.மீதமிருந்த சதிகாரர்கள் கைது செய்யப் பட்டனர்.


எல்லா களோபரமும் முடிந்து மறுநாள் ஆதித்தனின் கட்டளைக்கிணங்க சம்புவரையாரின் அரசவையில் எல்லோரும் கூடியிருந்தனர்.முதலில் எழுந்து நின்ற பழுவேட்டரையர் அந்த ஒரே நாளில் தளர்ந்து முதுமை அதிகமாகித் தெரிந்தார்.


"சபையோர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்...பெண்ணாசையால் மதியிழந்து ஒரு சதிகாரியை திருமணம் செய்து பெரிய தவறை செய்து விட்டேன்...அவள் பேச்சில் மதிமயங்கி அவள் சொல்வது போல் எல்லாம் ஆடினேன்... அவளின் கெட்ட எண்ணத்திற்கு என்னை உபயோகித்துக் கொண்டாள்... ஆனால் சில நாட்களாக அவளின் நடத்தை எனக்கு சந்தேகமளித்து...அந்த நேரத்தில் தான் இளவரசர் என் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்துக் கொள்ள இங்கே வருமாறு அழைத்தார்...பராசக்தியின் அருளால் அந்த சதிகாரியின் வேடம் அவள் வாயினால் கேட்க நேர்ந்தது...அவளின் சதி அவளையேக் கொன்று விட்டது... மீண்டும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்"என்று வணங்கினார் யாருக்கும் அஞ்சா அந்த மாவீரர்.


அவர் மன்னிப்பு கேட்டதுப் பொறுக்காமல் எழுந்து நின்ற ஆதித்தன்,


"பெரிய பழுவேட்டரையரே! தாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை...தவறு மனிதனாக பிறந்த அனைவருமே செய்வது தான்...சரியான நேரத்தில் தாங்கள் விழித்துக் கொண்டு நான் கேட்டதற்கு இணங்க இங்கே வந்ததால் நல்லவேளையாக அவர்களின் சதி நோக்கம் நிறைவேறாமல் போனது.... நான் இங்கே சபைக் கூட்டியது எல்லோரும் விரும்புவது போல் பெரிய தந்தையின் மைந்தர் உத்தம சோழரே இந்த சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்துக்கு உரியவர்...நான் இன்று உங்கள் எல்லார் முன்பும் பட்டத்து இளவரசன் என்ற என் பதவியைத் துறக்கிறேன்..."


இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தனர்.அதில் ஒருவரான அன்று காலை சுந்தர சோழர் சார்பாக வந்திருந்த அநிருத்தர்,


"இளவரசே! தாங்கள் பட்டத்தைத் துறக்க நாங்கள் யாரும் ஒப்ப மாட்டோம்...."


"முக்கிய மந்திரியாரே! நான் நடந்தவைகளுக்காக இப்படி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.... எனக்கு கடல் கடந்து சென்று ராஜ்யங்களை வெல்ல வேண்டும்... அங்கெல்லாம் நம் புலிக் கொடி பறக்க வேண்டும்...இது என் பல நாள் ஆசை...இதற்கு எனக்கு தேவையான மரக்கலங்கள், வீரர்கள்,போர் தளவாடங்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் வேண்டும்...கூடிய சீக்கிரமே நான் புறப்பட வேண்டும்...அதற்கு தேவையானதை பழுவேட்டரையர் ஏற்பாடு செய்து தர வேண்டும்..."


என்றதும் அதுவரை மவுனமாக இருந்த பழுவேட்டரையர்,


"அப்படியே ஆகட்டும்...இளவரசே! தங்களுக்கு தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்கிறேன்..."


"எனக்கு இன்னொன்று வேண்டும்...சம்புவரையரிடமிருந்து..."என்றதும்.


"இளவரசர் விருப்பம் எதுவானாலும் செய்ய சித்தமாயிருக்கிறேன்..."என்றார் சம்புவரையர்.


"எனக்கு இளவரசி தேன்மொழியைத் திருமணம் செய்துக் கொடுக்க வேண்டும்"என்றதும் எல்லார் முகமும் பளீரென மலர்ந்தது.முத்தழகனும் செங்கமலமும் பொங்கியெழும் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.


"இளவரசருக்கு பெண் கொடுக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்... எங்களுக்கு பரிபூரண சம்மதம்"என்றார் சம்புவரையர்.


அடுத்து வந்த முகூர்த்த நாளில் ஆதித்த கரிகாலனுக்கும் தேன்மொழிக்கும் கோலாகலமாக நடந்தேறியது.தேன்மொழியை பிரிவதை எண்ணி கலங்கிய செங்கமலத்தை முத்தழகனுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களையும் தங்களுடனே அழைத்துச் சென்றான் ஆதித்த கரிகாலன்.


கடலை கிழித்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாகச் சென்றது இரண்டு போர் மரக்கலங்கள்.அதில் முதலில் சென்ற மரக்கலத்தில் தன் காதல் மடதியின் கண்களை தன் கைகளால் மூடியபடி எங்கோ அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தான் ஆதித்தன்.


"இளவரசே! தாங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்....எங்கே என்று சொல்லக் கூடாதா?"என்று கெஞ்சினாள் தென்னவனின் தேன்மொழியாள்.


"கொஞ்சமும் உனக்கு பொறுமையில்லை... கண்மணி!சிறிது பொறுத்திருந்தால் தெரிந்துவிட்டுப் போகிறது"


அதன் மேல் பேசாமல் வந்தாள் அவன் நெஞ்சில் மஞ்சம் கொள்ளும் பூங்கொடி.


ஒரு இடம் வரவும் நின்ற ஆதித்தன் தன் கைகளை அவள் கண்ணிலிருந்து எடுத்தான்.அங்கே அவள் எதிரில் இருந்தது அழகிய வேலைப்பாடமைந்த மரப்பெட்டி.அதை அதிசயமாக நோக்கியவள் திரும்பி தன் மணவாளனைப் பார்த்தாள்.


"திறந்து பார்!உள்ளே ஒரு ரகசியம் இருக்கிறது..."என்றான் சோழர்குலத் தோன்றல்.


"ரகசியமா?!! என்ன ரகசியம்"என்றவாறு அதை மெதுவாகத் திறந்தாள்.அதில் இருந்ததை கண்டவள் பேச்சற்ற பதுமையானாள்.அதில் இருந்தது அவள் அவனை விதவிதமாக வரைந்த ஓவியங்கள்.


"எப்படி தெரிந்தது"என்றாள் உணர்ச்சி நிரம்பிய குரலில்.


அன்று அவர்கள் கடம்பூரை விட்டு கிளம்பும் தினம்....மனைவிக்காக அவள் அறையில் காத்திருந்தான் ஆதித்தன்.ஏதோ யோசனையில் சுவரில் இருந்த மான்கொம்பில் கை வைத்தவன் அது நகரவும் அதிசயமாக அதை இன்னும் நகர்த்தினான்.அங்கிருந்த தூங்கா விளக்கைப் பிடித்தபடி அதன் உள்ளே சென்றவன் மூச்சடைக்க நின்றுவிட்டான்.அங்கிருந்த ஜீவகளை நிரம்பிய ஓவியங்கள் அனைத்திலும் இருந்தது அவனே...அது இன்று நேற்று தீட்டியவைகள் அல்ல... ஓவியக்கலையில் தேர்ந்த அவனுக்கு அது தீட்டி பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கியது.ஒவ்வொரு ஓவியத்தின் கீழேயும் தேன்மொழி என்று அவளின் கையொப்பம் இருந்தது.


'அப்படியானால் முன்பிருந்தே என்னை விரும்பியிருக்கிறாளா தேன்மொழி...'


அந்த நினைவே அவன் மனதில் தேன்மழையைப் பொழிந்தது.அவளிடம் அப்போதே தனக்கு அவள் ரகசியம் தெரியும் என்று கூற வேண்டுமென தவித்தது அவன் உள்ளம்... ஆனால் தன்னிடம் இதை மறைத்த அவளுக்கு திடிரென காட்டி அதிசயிக்க செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவன் அவர்கள் மரக்கலத்தில் ஏறியது மேல் அழைத்து வந்து காட்டினான்.


அந்த ஓவியங்களையே பார்த்திருந்தவளை தன் அருகிழுத்து அவள் பூமுகத்தை தன் கைகளில் ஏந்தியவன்,


"ஏன் கூறவில்லை...நாம் ஒன்று சேர்ந்த அன்றாவது கூறியிருக்கலாமே!"


"நான் எப்படி கூறுவேன்...அறியாத வயதில் என் மனதில் ஆழப் பதிந்தவரை விதவிதமான ஓவியங்களாகத் தீட்டி மகிழ்ந்தேன்...ஆனால் விவரம் தெரிந்த போது தாங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்து இளவரசர் என்பதைக் கேட்டு எட்டாகனியென்று என் காதலை உள்ளேயே வைத்து பூட்டினேன்..நந்தினியோடு தங்கள் காதல் வதந்தியைக் கேள்விப்பட்ட போது என் கனவுகள் துகள் துகளாக நொறுங்கியது...பின்னர் நாம் ஒன்றாகிய போதும் இந்த பாக்கியம் எனக்கு நிலைக்குமா?நான் அதற்கு தகுதியானவள் தானா?என்ற என் பயம் உண்மையை தங்களிடம் உரைக்க விடவில்லை...என் தவறை மன்னியுங்கள் இளவரசே!"என்று கண்ணில் நீர் திரள அவனை கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.


உணர்ச்சி பிழம்பில் சிக்கிய ஆதித்தன்,


"தேவி!உனக்கா தகுதியில்லை!வரண்டு பாலைவனமாகியிருந்த என் வாழ்வில் தீஞ்சுவைத் தேனைப் பொழிய வந்த தேன்மழை நீ....என் கடைசி மூச்சு வரை இந்த தேன்மழையில் நனைந்துக் கொண்டே இருக்க வேண்டுமென்பது ஒன்றே என் ஆசை"என்றவன் அவளை தன் இருக்கைகளில் ஏந்தினான்.


"இளவரசே!என்ன இது?"என்று தெரிந்தும் தெரியாதவள் போல் கேட்டாள் அந்த அத்தினி.


"ம்...இதுவா...என்னிடம் கூறாது மறைத்ததற்கு உனக்கு தண்டனை வேண்டாமா...நீதி தவறா மனுநீதி சோழனின் வம்சத்தில் வந்த நான் உன் தவறுக்கு தண்டனை வழங்கப் போகிறேன்"என்றவன் அவளை மஞ்சத்தில் விட்டவன் அந்த தீஞ்சுவைத் தேனை சுவைக்கத் தொடங்கினான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top