• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழை பகுதி1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

மலர்

Guest
ஹாய் ப்ரென்ட்ஸ்,
எனது தேன் மழை எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு சொல்லுங்கள்.

தேன் மழை 1

நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க ... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

“இளவரசே ...!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!

என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!

நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,

"சொல் முத்தழகா..." என்றான் ஆதித்த கரிகாலன்.

ஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.

வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.

...............................................................................................................

"வாய்க்கால் வந்துவிட்டது."

"நானும் கவனித்தேன்."

"இதற்கு மேலும் செல்வது..." முத்தழகனின் தயக்கத்தில் லேசாகப் புன்னகைத்தான் ஆதித்த கரிகாலன். தூரத்தே தெரிந்த கழ்வராயன் மலையில் கோடை கால மின்னல் ஒன்று வெட்டி மறைந்தது போல இருந்தது அவனது புன்னகை.

மஞ்சள் வெயில் மங்கிக் கொண்டிருக்க அந்தப் பிரதேசத்தின் கோவிலிலிருந்து கிளம்பிய ஆரம்ப ஜாமத்தின் மணியோசை கிண்ணென்று காதை நிரப்பியது.

"இதற்கு மேல் சென்றால் என்ன முத்தழகா?" நகைப்போடு கேட்டான் ஆதித்த கரிகாலன்.

"இளவரசே! சோழ எல்லைக்கு வந்து விட்டோம். வாய்க்கால் தாண்டினால் இருப்பது கழ்வராயனின் பிராந்தியம். கழ்வராயன் பாண்டியனுக்குக் கப்பம் கட்டும் குறு நில மன்னன். பாண்டிய விசுவாசி. அது மட்டுமல்லாது பாண்டிய இளவலுக்குத் தன் மகளையே கொடுக்கப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறான்."

"ம்ஹூம்..."

"இந்த நேரத்தில் சோழ மன்னரின் பரம்பரை வைரியான பாண்டிய எல்லைக்குள் வருவது அத்தனை உசிதமில்லை இளவரசே."

"முத்தழகா! எதற்கு அஞ்சுகிறாய்? திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை."

பேசிய படியே கால் ஜாமம் குதிரையில் பயணித்துக் கொண்டிருக்க லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது.

"மன்னருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என் பாடு திண்டாட்டம் தான் இளவரசே." அஞ்சியபடியே சொன்னான் முத்தழகன்.

"ஹா... ஹா... முத்தழகா! உனக்குக் கூட பயம் வருமா?" கேட்டு விட்டு இடி இடியெனச் சிரித்தான் கரிகாலன். இளவரசரின் கேலியில் முத்தழகனின் முகம் லேசாகச் சிவந்து போனது.

"ஆஹா! உன்னை இப்போது இந்தக் கோலத்தில் பார்க்க என் தங்கை இல்லாமற்ப் போனாளே. எத்தனை அழகாக வெட்கப் படுகிறாய் முத்தழகா." சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான் ஆதித்த கரிகாலன். மனைவியைச் சொன்ன மாத்திரத்தில் முத்தழகனின் முகம் கனிந்து போனது.

"இளவரசே! கேலி பண்ணியது போதும். தங்கள் எண்ணம் என்னவென்று இனிமேலும் என்னிடம் சொல்லக் கூடாதா?" முத்தழகனின் இறைஞ்சலில் அமைதியானான் கரிகாலன். முகம் சிந்தனையைக் காட்டியது.

"முத்தழகா! இன்று மதியம் ஒற்றன் ஒருவன் கொண்டு வந்த செய்தி கொஞ்சம் விந்தையாக இருந்தது. அதன் நம்பகத் தன்மையைச் சோதிக்கவே நான் இங்கு புறப்பட்டு வந்தேன்."

"அப்படியா? சேதியை நானும் தெரிந்து கொள்ளலாமா இளவரசே?"

"தாராளமாக. வாய்க்கால் தாண்டியதும் இருக்கும் கழ்வராயன் எல்லைக்குள் திடீரென ஒரு சிறு படை வந்து முகாமிட்டிருப்பதாகத் தகவல் வந்தது."

"என்ன?"

"ம்... அதனால்தான் நானே கிளம்பி வந்து விட்டேன்."

"கள்வர் கூட்டமாகக் கூட இருக்கலாம் இளவரசே."

"இல்லை முத்தழகா. கள்வர் கூட்டமாய் இருந்தால் கள்ளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால் இங்கே வாள் சுழற்றவும் வேல் எறியவும் பயிற்சிகள் நடப்பதாகத் தகவல் கிடைத்தது."

"கழ்வராயனுக்கு அத்தனை தைரியம் வந்து விட்டதா இளவரசே?"

"சொல்ல முடியாது முத்தழகா. பாண்டியனின் தூண்டுதலாகக் கூட இருக்கலாம்."

"அப்படியென்றால்... யாரேனும் உபசேனாதிபதி சிறு படையோடு வந்து கூடாரமடித்துத் தங்கி இருக்கிறார்களோ?"

"இருக்கலாம், வாய்ப்புகள் உண்டு."

அதன் பிறகு முத்தழகன் எதுவும் பேசவில்லை. தன் எஜமானன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று புரிந்தவன் மௌனியாகி விட்டான்.

அந்த அராபிய வெண் புரவிகள் இரண்டையும் சோழ எல்லையின் புறமாக இருந்த வாய்க்காலில் இளைப்பாற விட்டு விட்டு கழ்வராயன் எல்லைக்குள் கால் பதித்தார்கள் இருவரும்.

ஆதித்த கரிகாலன் தன் இடைக் கச்சையில் இருந்த உடைவாளை ஒரு தரம் ஸ்பரிசித்துக் கொண்டான். அவன் கைகளுக்குப் போட்டியாக அந்த வாளும் அவன் முழங்கால்களைத் தாண்டி நீண்டிருந்தது.

"இளவரசே! வெளிச்சம் ஜெகஜ்ஜோதியாக இருக்கிறதே... நூறு பந்தங்களாவது ஏற்றப்பட்டிருக்குமோ?"

"அப்படித்தான் தெரிகிறது.‌ ஆனால் இங்கிருக்கும் அமைதியையும் ஒழுங்கையும் பார்க்கும் போது படையை நடத்தி வந்திருக்கும் படைத்தலைவனின் திறமை துல்லியமாகப் புரிகிறது."

"ஆமாம் இளவரசே." சொல்லிய படியே தலையை ஆட்டினான் அந்த ராஜ விசுவாசி.

வாய்க்காலை அண்டியிருந்த மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் பதுங்கிப் பதுங்கி இருவரும் நுழைந்து கொண்டிருந்தார்கள். தூரத்தில் தெரிந்த பந்தங்களின் ஒளியில் அந்த இடமே பட்டப் பகல் போல காட்சியளித்தது. வேறு வேறு கூடாரங்களில் வீரர்கள் வாளும் வேலும் ஏந்திப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

வாளையும் வேலையும் பார்த்த மாத்திரத்தில் புது ரத்தம் உடலில் பாய தன் திண்ணென்ற தோள்களை லேசாக அசைத்துக் கொண்ட கரிகாலன் தனக்குப் பின்னால் வந்த உருவத்தைக் கவனிக்கத் தவறி விட்டான்.

கூரிய வாளின் நுனி அவன் பிடரியைத் தீண்டிய போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது சோழ இளவரசனுக்கு.

"ம்..." லேசாக அசையப் போனவனை அதட்டியது அந்த ரீங்காரம்.

"இருவரும் வாளைக் கீழே போடுங்கள்." குரல் வந்த பிறகுதான் ஸ்மரணை திரும்பியது முத்தழகனுக்கு. அதுவரை வாட்பயிற்சியை வாய்பிளந்து பார்த்திருந்தான்.

'கெட்டது குடி.' மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஏவலுக்குப் பணிந்தார்கள் இருவரும்.

"யார் நீ?" குரலின் தன்மையிலேயே புரிந்தது கரிகாலனுக்கு. பேசுபவர் தன் சொந்தக் குரலில் பேசவில்லை என்று. பதில் சொல்லாமல் சற்றுக் காலத்தைக் கடத்த நினைத்தவனின் சாகசம் புரிந்த போது வாள் இன்னும் கொஞ்சம் அழுந்தியது.

வாள் தழுவிய இடத்தில் லேசாகக் குருதி கசிய கரிகாலன் புன்னகைத்தான்.

"நீ சொல். யாரிவர்?" கேள்வி இப்போது முத்தழகனிடம் திரும்பியது.

"எனது எஜமானன்."

"எங்கிருந்து வருகிறீர்கள்?"

"சோழ தேசத்திலிருந்து வருகிறோம்."

"கழ்வராயன் எல்லைக்குள் கால் வைத்த நோக்கம்?"

"வியாபாரம்தான்."

"பார்த்தால் அப்படித் தெரியவில்லையே?" அவர்கள் கீழே போட்டிருந்த வாளில் எதிரி கண்களைத் திருப்ப அந்த ஒரு நொடி போதுமானதாக இருந்தது கரிகாலனுக்கு.

கண்ணிமைக்கும் நேரத்தில் வாள் கைமாறி இருக்க வாளுக்குச் சொந்தக்காரனும் மாறி இருந்தான். தனக்குப் பின்னால் நின்றிருந்த எதிரியைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்திருத்தான் கரிகாலன்.

முத்தழகனின் முகத்தில் ஓர் இகழ்ச்சிப் புன்னகை தோன்ற கீழே கிடந்த வாளை எடுத்து இடையில் சொருகிக் கொண்டான்.

"பிரபு! தங்கள் வாள்..." முத்தழகனின் முற்றுப்பெறாத கேள்வியில் கைநீட்டித் தன் உடவாளைப் பெற்றுக் கொண்ட கரிகாலன் அதை இடையில் பத்திரப் படுத்திக் கொண்டான்.

தன் கைகளுக்குள் இருந்த எதிரி முகத்தை முக்கால்வாசி மூடியிருக்க சட்டென்று அந்தத் திரையை விலக்கினான் இளவரசன்.

மூடிய திரைக்குள் இருந்த முகத்தைப் பார்த்த போது இரண்டு பேரும் திக்பிரமை பிடித்தது போல் ஆனார்கள்.

"ஓ பிரம்மா!" ஆதித்த கரிகாலனின் வாய் தன்னிச்சையாக முணுமுணுத்தது. ஏனென்றால், மூடிய திரைக்குள் இருந்தது ஓர் அழகியின் வதனம்.

பிரம்மனின் அனைத்துத் திறமையையும் வழித்துத் துடைத்து எடுத்து வந்தது போல் இருந்தது அவள் எழில் ரூபம். நெற்றியில் தீட்டப்பட்டிருந்த திலகத்தைத் தவிர வேறெந்த ஆபரணங்களையும் அவள் அணிந்திருக்கவில்லை. முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அப்போதுதான் அவள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள் என்று சாட்சி கூறின.

தன் எஜமானனின் நிலை கண்ட முத்தழகன் ஒரு புன்னகையோடு புரவியை நோக்கிப் போய் விட்டான்.

அத்தனை நேரமும் அவள் சுந்தர வடிவில் திளைத்து நின்ற கரிகாலன் இயற்கையாகவே அவனிடம் உள்ள நல்ல பழக்கத்தின் காரணமாக அவளை விடுவித்தான். அது வரை பக்கத்தில் தெரிந்த அவள் உருவம் இப்போது தள்ளி நின்று அவன் மீது மோகனாஸ்திரங்களை அள்ளி வீசியது.

கூப்பிடும் தூரத்தில் தன் வீரர்கள் இருந்த போதும் தன்னைச் சிறை செய்திருக்கும் வீரனின் ஆணைக்குப் பணிந்தவள் எதிரிலிருந்த மரத்தில் சாய்ந்து கொண்டாள்.

கரிகாலனின் கண்கள் அந்த வீர மங்கையின் மேனி தடவியது. பயிற்சிக்காக அள்ளிச் செருகியிருந்த கூந்தலும் இறுகக் கட்டப்பட்டிருந்த சேலைக் கட்டும் அவளுக்கு அத்தனை அழகு சேர்த்தன. மயிலை பாய்ந்திருந்த விழிகள் கரிகாலனை நேரிடையாகப் பார்க்காமல் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. மரத்தில் சாய்ந்திருந்த அவள் தோற்றம் தேர்ந்த சிற்பியொன்று வடித்திருந்த சிலை போல் இருந்தது.

"என் கண் முன் நிற்பது வனதேவதையா?" மௌனத்தை உடைத்தான் கரிகாலன்.

"மானிடப் பெண்தான்." வீணையின் ஒற்றைத் தந்தியைச் சுண்டி விட்டது போல் வந்து விழுந்தன வார்த்தைகள்.

"பெயர் என்னவோ?"

"வண்டார் குழலி."

"யார்? கழ்வராயனின் புதல்வியா?"

"ஆமாம்."

"அந்த வீணாய்ப்போன பாண்டிய இளவலுக்கு மணம் பேசுகிறார்களே? அந்தப் பெண்ணா?" அவன் கேள்வியில் முகத்தை வெட்டி அவனைத் திரும்பிப் பார்த்தவள் பார்வையில் அத்தனை தகிப்பிருந்தது.

"ஓ... அத்தனை காதலோ?"

"ஒரு கத்தரிக்காயும் இல்லை."

"நம்பமுடியவில்லையே!"

"அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை."

"வேறு எதைப் பற்றிக் கவலை பேரழகே?" அவன் குரல் குழைந்திருந்தது.

"தாங்கள்..." கேள்வியாக நிறுத்தினாள் குழலி.

"பெரு வணிகன்."

"இதைக் குழந்தை கூட நம்பாது."

"ஏனப்படி?" கேட்டவனைத் திரும்பிப் பார்த்தவள் அவனுக்கு கம்பீரம் சேர்த்த அந்தப் புருவ வடுவை உற்று நோக்கினாள். அவள் கண்களின் போக்கைப் புரிந்து கொண்டவன் புன்னகைத்தான்.

"வாள் சுழற்றப் பயில வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனா. எங்கே... அதுதான் ஈடேறாத ஆசையாகப் போனதே." பெரு மூச்சொன்று கிளம்பியது கரிகாலனிடமிருந்து.

"குருவை மாற்றிப் பாருங்கள். கனவு ஈடேறலாம்."

"குருவுக்கு நான் எங்கே போவேன்?"

"ஏன்? பெருவணிகரின் பொருளுக்கு நீ நான் என்று போட்டி போடுவார்களே?"

"அது வாஸ்தவம் தான். ஆனாலும்... அடியேன் கொஞ்சம் அசமந்து. அத்தனை சீக்கிரத்தில் உடம்பு வளைந்து கொடுக்கவில்லை." அவன் பதிலில் அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள் பெண்.

"நம்புங்கள் தேவி."

"நாளை இதே நேரத்திற்கு இதே இடத்திற்கு வந்து சேருங்கள். பயிற்சிப் பாசறையில் உங்களையும் சேர்க்கச் சொல்கிறேன்."

"ஐயையோ!"

"ஏன்?"

"பாசறையில் நானா? என்னைக் கேவலப் படுத்த வேண்டாம் தேவி."

"இதிலென்ன கேவலம் இருக்கிறது?"

"என் வயதென்ன? இங்கே இருப்பவர்கள் வயதென்ன?"

"ஓ..." சற்று நேரம் சிந்தனை வயப்பட்டவள் அதற்குத் தீர்வு சொன்னாள்.

"சரி. நானே சொல்லிக் கொடுக்கிறேன், தனியாக."

"நான் பாக்கியசாலி தேவி. குருதட்ஷணையாக என்ன கொடுக்க வேண்டும்?" அவன் கண்களில் விஷமம் இருந்தது.

"இப்போது என்னை விடுவித்தாலே போதும்."

"தாராளமாக தேவி." அவள் முன் ஒற்றைக் காலை மடக்கி மண்டி இட்டவன் கழ்வராயன் சின்னம் பொறித்திருந்த அந்த வாளை இரு கரங்களிலும் ஏந்தி அவளிடம் நீட்டினான்.

அந்த மான் விழிகளில் ஒரு கணம் புன்னகையின் சாயல் ஒன்று தோன்றி மறைந்தது. அடுத்த கணமே அது பொய்யெனும் வண்ணம் தன்னை நிதானித்துக் கொண்டவள் வாளை இடையில் சொருகிக் கொண்டாள்.

எழிலோவியமாக நடந்து செல்லும் அந்தப் பேரழகை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஆதித்த கரிகாலன்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அருமையான தமிழ் நடை அடுத்தடுத்த உரைநடைகள் மென்மேலும் படிக்க தூண்டுகிறது யார் சொன்னது தமிழை வளர்க்க மறந்து விட்டார்கள் என்று நம் தளத்தில் வந்து பார்த்து பிறகு கருத்தை சொல்லலாம் இதற்கெல்லாம் காரணம் நம் சசி ஜி மட்டுமே????????? thanks to sasiji
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையான எழுத்து நடை.... அழகாகக் கதையை கொண்டு செல்கிறீர்கள்... வாழ்த்துகள்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top