• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவனும் அவளும் 1
______:_;__:_________:::_=_

இன்னிக்கு கெடைச்சிருக்கற அற்புதமான சான்ஸ யூஸ் பண்ணிக்க முடியலியேங்கற ஏக்கத்தோட அவளப் பாத்தான்.. அவ புரிஞ்சவளா குறுஞ் சிரிப்போட காபி டம்ளரக் குடுக்கற சாக்குல அவங் கைய கிள்ளிட்டுப் போனா.. அந்தப் பெரிய கண்ணுல மின்னின குறும்புச் சிரிப்பும் அந்த அலாதி அழகும்.. மளிகைக் கடை கல்லாவுல உக்காந்துக்கிட்டு என்னத்த பண்ணிட முடியும்..? பெருமூச்சு விடறதத் தவிர!

கூட்டுக் குடுபம்ங்கறது பல விதத்துல நல்லதுன்னாலும் புதுசாக் கண்ணாலமான இளஞ் சோடிகளுக்கு தொல்லை தான்.. அப்பா,அம்மா, தம்பின்னு யாரோ ஒருத்தர் வீட்ல இருந்துக்கிட்டுத் தான் இருக்காங்க.. தொழிலோ மளிகைக் கடை.. அங்க வச்சு பொண்டாட்டியோட ஏதோ கொஞ்சம் பேசலாமே தவிர எக்ஸ்ட்ராவா என்ன செஞ்சுட முடியும்?

ராத்திரிலயோ இவன் ரூமுக்கு அடுத்த ரூம்ல அப்பா, அம்மா,தம்பி படுத்திருக்காங்க.. பேச்சுல, சிரிப்புல கொஞ்சம் டெஸிபலக் கூட்டினாலும் எல்லாருக்குமே தர்ம சங்கடம்.. இவனோ சிரிக்கற விசயத்துக்கு வாய் விட்டு சிரிச்சுப் பழகினவன்.. துளியூண்டு சத்தமாச் சிரிச்சாலும் அத்த,மாமா காதுல பட்டுருமோன்னு அவசரமா வாயப் பொத்தற பொண்டாட்டியப் பாத்து வேதனைப் பட்டான்.. கலியாணமாயி மூணே மாசம் ஆயிருக்கற நெலைமைல பொண்டாட்டியோட அன்பா நாலு வார்த்தை பேசிச் சிரிக்க முடியாத இந்த வெங்காயக் கூட்டுக் குடும்பம் யாருக்கு வேணும்?

இப்ப ஒரு நல்ல சான்ஸ்.. அம்மாவோட அக்கா பொண்ணு ஊர்ல தோட்டத்துச் சாமிக்கு பொங்கல் வெக்கறாங்கன்னு இவங்க ரெண்டு பேரத் தவிர மூணு பேரும் காலைலயே கவுந்தப்பாடி போயிட்டாங்க.. மக்கா நாளு மத்தியானச் சோத்துக்குத் தான் வருவாங்க.. ஒரு நாள்.. முழுசா ஒரு நாள்.. அவனும் அவளும் வீட்ல தனியா.. எவ்வளவு பொன்னான சந்தர்ப்பம்.. இத விடலாமா? அவளோட ஆடணும்,பாடணும், கிண்டல் பண்ணி சத்தமா சிரிக்கணும்னு ஏகமா திட்டம் போட்டான்..

மளிகைக் கடைங்கறதால பகல்ல ஒண்ணும் பண்ண முடியாது.. வீடு பக்கத்துலன்னாலும் 'பப்பரக்கா"ன்னு அத்தன பண்டத்த வெளிய போட்டுட்டு ஊட்டுல போயி பொண்டாட்டிய கொஞ்சிட்டிருக்க முடியாது.. நோம்பி நாளுக்கு எல்லாரும் லீவு போட்டாலும் புதுசா கடை வச்ச இவன் போட முடியாது.. ஏன்னா, அந்தன்னிக்குத் தான் நாலு காசுக்கு ஏவாரமாகறதோட மத்த கடைங்க இல்லைன்னா புதுசா நாலு வாடிக்கையாளரையும் பேசிச் சிரிச்சு உண்டாக்கலாம்..

'சரி.. இப்ப என்ன கெட்டுப் போச்சு?சாயந்திரம் அஞ்சு மணிக்காட்டம் கடையச் சாத்திட்டுப் போனா விடிகாலை அஞ்சு மணி வரைக்கும்..12மணி நேரம்.. தனியா நானும் அவளும்.. அவளும் நானும்'னு கற்பனை பண்ணி உற்சாகமானான்.. 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம்..பாடலாம்' 'உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது..'... இப்படி எம்.ஜி.ஆரோட காதல் பாட்டா மனசுக்குள்ள ஓடுது.. அவளையும் பாடச் சொல்லணும்.. பி.சுசீலா பாட்டெல்லாம் அற்புதமா பாடுவா.. சலிக்கற வரைக்கும் பேசி,பாடி, சிரிச்சுட்டு அப்புறம்..அப்புறம்..

அதுக்கு மேல ஓடின கற்பனைக்கு பைத்திய காரனாட்டம் தன்னப் போல சிரிச்சுக்கிட்டு கையத் திருப்பி கெடியாரத்தப் பாத்தான்.. அஞ்சுக்கு அஞ்சே நிமிசம்.. கடை ஷட்டருக்கு வெளிய இருந்த பண்டங்களையெல்லாம் ஒவ்வொண்ணா எடுத்து வச்சான்.. நாலு மணிக்கே சாத்தினாலும் ஒருத்தரும் கேப்பாரில்ல தான்.. ஆனா,இன்னா வரைக்கும் யாரோ ஒருத்தர் ஏதோ ஒண்ணு வாங்க வந்துக்கிட்டே இருந்தாங்க.. பொண்டாட்டிய கொஞ்சறத விட பொழப்பு முக்கியமாச்சே?

இதோ வந்துருச்சு.. காலைல இருந்து அவன் எதிர் பார்த்த அந்த தங்கத் தருணம்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவனும் அவளும் 2

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

கடையச் சாத்திட்டு ஊட்டுக்குப் போன போது வீட்டு வாசல்ல வெளிய காத்திருந்தவ குறுஞ் சிரிப்போட நக்கலா இப்படிச் சொன்னா..

"அடா அடா.. எம் பண்ணாடி அஞ்சு மணின்னா டாண்ணு அஞ்சு மணிக்கே.. கடவுளே!இந்தப் புத்தி எல்லா விசயத்துலயும் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்?..சரி..வண்டிய எடுங்க"

அவனுக்கு சுள்ளுனு கோவம் வந்துச்சு.. திட்டம் பாழாயிடக் கூடாதுன்னு அடக்கிட்டு அமைதியா கேட்டான்

"எதுக்கு?"

"கடை வீதி வரைக்கும்.."

ஆஹா.. அவம் போட்டிருந்த திட்டங்கள் என்ன.. நடக்கறதென்ன? கடுப்போட கேட்டான்

"பைக்க எடுத்துட்டு கலிபோர்னியாவுக்கா போக முடியும்? கடை வீதிக்கு எதுக்குன்னு கேட்டேன்?"

அவங் கடுப்புக்கு அவ அசரணுமே? அந்த அகலக் கண்ணுல குறும்பு மின்னலடிக்க அலாதிச் சிரிப்போட சொன்னா..

"ச்ச்சும்மாங்க பண்ணாடி.. எடுங்க சீக்கிரம்"

இது வேலைக்காவதுன்னு புரிஞ்சு போச்சு.. முண்டிப் பாக்கலாம்னா மொத்த திட்டமும் பணாயிலாயிடுமே? உட்டுப் புடிப்போம்னு முன் வாசல்ல நின்ன பைக்க எடுத்துட்டு வரும் போது சர்க்கஸ் பண்ணினான்.. பின்ன? நோம்பிக்கு ஊட்டு வாசல அடைச்சு பெரிய தாமரைக் கோலம் போட்டிருக்கே? கோலத்த மிதிக்கறது அலனுக்குப் புடிக்காது.. ஒரு பொண்ணோட பொறுமையும், அன்பும், குடும்பம் பத்தின பொறுப்பும், அவளோட அழகியலும் அதுல அடங்கியிருக்கறதா அவன் நெனப்பு.. எங்க போறம்னே தெரியாம அவள ஒதைக்க முடியாக் கொறைக்கு கிக்கர ஒதைச்சான்.. ஏறினதும் கேட்டான்..

"எங்க போயித் தொலையறது?"

"நல்ல நாளும் அதுவுமா கெளம்பைல எதுக்கு இப்படி அப சகுனமா பேசறீங்க? நால் ரோடு பூக் கடைல நிறுத்துங்க"

நல்ல நாள் தான்.. யாரு இல்லைன்னா? ஆனா, அவன் நெனைச்ச 'நல்ல' காரியம் வேறையாச்சே? கியருக்கு வந்து வேகமா திராட்டிலத் திருகி நால் ரோட்டு பாட்ஷா பாய் பூக் கடைல நிறுத்தினான்.. அவ எறங்கி அவம் பாக்கெட்ல கைய விட்டு பத்து ரூவாய எடுத்துட்டுப் போனதும் அவசரமா சிகரெட்டப் பத்த வச்சுக்கிட்டு யோசிச்சான் (இந்த மாதிரி விசயத்துல மட்டும் நுணுக்கமா யோசிக்கறதுல நம்ம ஹீரோ கில்லாடி!)

அவளுக்கு மட்டுமில்ல.. அவனுக்கும் மல்லிகைப் பூன்னா ரொம்பப் புடிக்கும்.. காதல்(!!?) உணர்வுகள அதிகமா தூண்டற சக்தி மல்லிகைக்கு இருக்கறதா ரெண்டு பேருமே நம்புனாங்க.. 'ஸோ,நெட்டக் காலியும் பக்கா பிளானிங்ல தான் மூவ் பண்றா'ன்னு தோணுனதும் நால் ரோடுன்னு கூட பாக்காம லூசுத் தனமா இளிச்சுக்கிட்டு இந்தப் பாட்ட 'ஹம்மிங்' பண்ணினான்

'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...
மல்லிகை..
ஆஹா..மல்லிகை..
ஓஹோ..மல்லிகை..' உற்சாகத்துல இவனிஷ்டத்துக்கு பாட்டக் கந்தர் கோலம் பண்ண நல்ல வேளையா அதக் காப்பாத்த அவ வந்தா.. அவசரமா கேட்டான்

'ஊட்டுக்குப் போலாமில்ல?"

"அதுக்குள்ளயா?இன்னும் எத்தன வேலைங்க இருக்கு?"

எ..த்..த..ன.. வே..லை..ங்..க..ளா..ஆஆஆஆ? மறுபடியும் கடுப்பாயிட்டான்.. இப்ப அவள ஒதைக்கறதாவே நெனச்சு ஜாவா பைக் கிக்கர ஒதச்ச்ச்ச்சு ஸ்டார்ட் பண்ணி அவ ஏறினதும் சீறி உளுந்தான்

''இப்ப எங்க.. நேரா கலிபோர்னியாவுக்கேவா?"

"நோம்பி நாளும் அதுவுமா எதுக்கு வள் வள்ளுனு உளுவறீங்க.."

'அடிப் பாவி.. நாய்னு சொல்றியா?'ன்னு நெனச்சுக்கிட்டே மறுக்காகவும் நாய் வேலையே பண்ணினான்

"ஐயன் தேரக் கண்டா ஏறிக்கற மாதிரி ஸ்டார்ட் பண்ணுனதும் ஏறிப் பேசாம உக்காந்துட்டா..?எங்க போறதுன்னு சொல்லித் தொலை"

"செல்லியம்மன் கோயிலுக்கு.."

வண்டி கெளம்புன வேகத்துக்கு வந்த சத்தம்,பொகைக்கு நால் ரோடே காதையும்,மூக்கையும் துண்டப் போட்டு பொத்தியிருப்பாங்க.. பர்ர் பர்ர்ர்ருன்னு கெளப்புனான்.. பக்கந் தான? அஞ்சே செகண்ட்ல கோயில்.. அது என்னமோ கொடி மரத்தத் தாண்டுனதுமே அவம் மனசு அமைதியாயிடுச்சு.. சுத்தி வந்து கருவறைக்குள்ள கால வெக்கும் போதே எந்தக் கனமும் இல்லாம பஞ்சாயிட்ட மாதிரி உணர்ந்தான்.. இவ பூவையும் சூடத்தையும் பூசாரி நீட்டுன தட்டத்துல வச்சுச் சொன்னா..

"இதுல பாதிப் பூவ ஆத்தா பாதத்துல வெச்சுக் குடுங்க"

ஆத்தாளக் கும்பிட்டுட்டு பிரசாதத்தையும் பூவையும் வாங்கிட்டு சித்த உக்காந்து வெளிய பைக் கிட்ட வந்து ஸ்டார்ட் பண்ணி அவ ஏறுனதும் கருவறை தந்த அமைதியில் கேட்டான்

"நேரா ஊட்டுக்குத் தான நெட்டக் காலி?"

"இல்லீங்க பண்ணாடி"

கோயில்னும் பாக்காம வந்துதே அவனுக்கு ஆத்திரம்..

(தொடரும்...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவனும் அவளும் 3

××××××××××××××××××××××××

அவ பக்கமாத் திரும்பி அந்த ஆத்திரங் கொறையாம கேட்டான்

"பின்ன எங்க... கோட்ட மேடு சுடு காட்டுக்கா?"

"செல்லியாத்தா.. உங்கள.. வீடு போயி வெச்சுக்கறேன்.. ஜோதி பவனுக்குப் போங்க"

"ஓட்டலுக்கா? வீட்ல இருக்கற சோத்தையும் கறியையும் என்ன பண்றது.. எந் தலைல கொட்டிக்கறதா?"

"அட சாமி.. எதுக்குத் தான் உங்களுக்கு ஒண்ணுமே இல்லாததுக்கு எல்லாம் இத்தன கோவம் வருதோ?"

ஒண்ணுமே இல்லாததா? ஒரு வாரமா அவம் போட்டிருந்த திட்டங்களும்,கனவுகளும்.. ஹும்.

"ஓட்டலுக்கு திங்கறதுக்குப் போகாம கல்லாப் பெட்டில இருக்கற கலக்சன வாங்கிக்கப் போறியா?"

"இதான் உங்க கிட்ட எனக்கு ரொம்பப் புடிச்ச ஒண்ணு.. கோவத்தையும், வெறுப்பையும் கூட கிண்டலா,நகைச் சுவையா வெளிப் படுத்தறது.. எம் பண்ணாடி பண்ணாடி தான்.. அடிச்சுக்க ஆள் கெடையாது"

நக்கலா?சந்தேகத்தோட திரும்புன வாக்குலயே அவ கண்ணப் பாத்தான்.. அதுல கரை காணா காதல் பொங்கி வழியறதப் பாக்கவும் மறுபடியும் ரொமான்ஸ் மூடுக்குத் தாவிட்டான்..

"சரி தங்கம்.. சொல்லு .. என்ன வாங்கணும்"

"ஸ்வீட்ஸ் ஏதாவது......"

பேரானந்தமா பைக்கக் கெளப்புனான்...ஸ்வீட்ஸ்..!!!! இனிப்பு.. மல்லிகைப் பூ.. ஆஹா.. இவ நம்மள விட பக்காவா பிளான் பண்ணி வெச்சிருக்காளேன்னு குஷியாயி வாய் விட்டே பாட ஆரம்பிச்சுட்டான்

'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்"

"ராணிய ஊட்ல போயிப் பாத்துக்கலாம்.. ரோட்டப் பாத்து ஓட்டுங்க"

செல்லமா தோளத் தட்டிச் சொன்னதும் ஜிவ்னு பறக்கற மாதிரியே ஆயிட்டான்..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வீடு.. சாப்பிட்ட பின்னால அவன் பெட்ரூம் கட்டில்ல உக்காந்து சிகரெட்ட இழுத்துக்கிட்டே அவளையே பாத்திட்டிருக்க.. அவளோ மத்தியானம் தொவைச்சுப் போட்டிருந்த துணியெல்லாம் எடுத்துட்டு வந்து அவன் உக்காந்திருந்த பெட்டு மேல போட்டு ஒவ்வொண்ணா எடுத்து ஒதறி சிரத்தையோட மடிச்சு தள்ளி இருந்த பீரோவுல வெச்சுக்கிட்டிருந்தா.. திரும்பி பெட்டு மேல கெடந்த துணிங்களப் பாத்தான்.. மலையாக் குவிஞ்சு கெடக்க.. இவ மடிக்கற வேகத்துக்கு வெடிஞ்சாலும் முடியாது போலிருக்கே? கைல இருக்கற தீப் பெட்டில ஒரு குச்சிய எடுத்து 'சொரக்'னு ஒரச்சு இந்த துணிக் கருமாந்தரத்த கொளுத்திட்டா என்னன்னு யோசிச்சான்.. அது முடியாதுன்னு தோண அலுப்பா சிகரெட்ட ஆஷ்ட்ரேயில அழுத்திட்டுக் கேட்டான்..

"இவ்வளவு தானா?"

"இன்னும் இருக்கே? பெட்ஷீட், தலையணை உறை............"

அவள முடிக்க விடாம குறுக்க பாஞ்சான்..

"இதெல்லாம் சாயந்திரமே பண்ணித் தொலச்சா என்ன?"

"சாயந்திரம்ங்கறது நாலு டு ஆறு தானே? நாலு மணிக்கு காபி வச்சு எடுத்துக்கிட்டு கடைக்கு வந்தேன்..குடுத்துட்டு உடனே கெளம்பினா .. நீங்க உட்டாத் தானே? இழுத்து உக்கார வச்சு கண்டதையும் பேசி ராவடி பண்ணிட்டு இருந்தீங்க.. உங்க கிட்ட இருந்து மீண்டு வரும் போதே மணி நாலே முக்கால்.. வந்து, கை கால் மொகங் கழுவி தலைய ஓதுக்குறப்ப மணி அஞ்சாயிடுச்சு.. அஞ்சு மணிக்கு..."

"சரி..சரி.. புராணம் போதும்.. சீக்கிரம் வா"

"ஏன்? அப்படி அவசரமா என்ன விசயம்ங்க பண்ணாடி?"

"ஒரு வெங்காயமுமில்ல"

வெறுப்பாச் சொல்லிட்டு போட்டிருந்த துணி மேல கவுந்தடிச்சுப் படுத்துக்கிட்டான்.. அவ அத லட்சியம் பண்ணாம அவன் தோளப் புடிச்சு பொரட்டி ஒதுக்கிட்டு துணிங்கள மடிச்சுக்கிட்டே இந்தப் பாட்ட சன்னக் குரல்ல பாடுனா..

'கண்ணாண கண்ணணுக்கு அவசரமா.. '

இவன் பல்லக் கடிச்சு ஆத்திரத்த அடக்கிட்டு அவளப் பாத்தான்.. அவளோ எல்லாத் துணிங்களையும் மடிச்சு வச்சுட்டு டேபிள் மேல இருந்த பூச் சரத்தையும் இனிப்பு பாக்ஸையும் எடுத்துக்கிட்டு வந்து பெட்டுக் கிட்ட நின்னு சொன்னா..

"ம்..எந்திரிங்க.."

"எதுக்கு?'

"எந் தங்கமில்லையா? எந்திரிங்க.. சொல்றேன்.."

இதுக்கு மேல முறுக்குனா 'உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா'ங்கற கதையாயிடும்னு பயந்து.. ஆனா,மூஞ்சிய இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி 'உம்'னு வெச்சுக்கிட்டு எந்திரிச்சு சம்மணம் போட்டு உக்காந்து சிகரெட் பாக்கெட்ட எடுத்துக்கிட்டே சொன்னான்..

"உம்.. சொல்லு"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவ குனிஞ்சு அவங் கைல இருந்த சிகரெட் பாக்கெட்ட 'வெடுக்'னு புடுங்கி எட்ட இருந்த டேபிள் மேல வீசிட்டு,அவங் கால இழுத்து தொங்க விட்டு அவசரமா திரும்பி அவனுக்கு முதுகு காட்டி கட்டிலுக்குக் கீழ உக்காந்து அவன் மொழங் கால்ல சாஞ்சு பின் புறமா சோத்தாங் கைல இருந்த பூவ அவங் கிட்ட நீட்டிச் சொன்னா..

"இந்தாங்க...."

"எதுக்கு.. எந் தலைல வெச்சுக்கவா? அப்ப எம் மண்டைல நாலு ஆணியாவது அடிச்சு எறக்கினா மட்டுமே அது சாத்யப் படும்"

"ஹை..பண்ணாடி கிண்டலாப் பேசறார்.. புடிங்க.. எனக்கு வெச்சு உடுங்க"

ஏறக்குறைய அதிர்ச்சியாயிட்டான்னே சொல்லலாம்.. தயங்கிட்டே கேட்டான்..

"யாரு.. நானா?"

திரும்பிப் பாத்து மொறைச்சுக்கிட்டே வேகமா கேட்டா..

"சாட்சாத் தாங்களே தான் சுவாமி... வேற எவன் எந் தலைல கை வெக்க முடியும்?"

"எனக்கு எப்படி வெக்கறதுன்னு தெரியாதே?"

"பெரிய கம்ப சூத்திரமா? நாலு முடியப் பிரிச்சு அதுல வைங்க"

அவ என்னமோ சுலபமாச் சொல்லிட.. இவனும் நாலு முடிய பிரிக்க பிரயத்தனப் பட.. ரெண்டு நிமிஷமாயும் இவன் பூவ வச்ச கதையக் காணோமேன்னு பொறுமைய இழந்து கேட்டா..

"என்னங்க பண்றீங்க?"

இவன் கொலக் குத்தம் பண்ணிட்ட மாதிரி தயங்கித் தயங்கிச் சொன்னான்..

"அந்த நாலு முடி...."

"ஐயோ கடவுளே.. நாலுன்னா நாலேவா? குத்து மதிப்பா பிரிச்சு வைங்க"

அட ஆண்டவா.. இத்தன வருசமா நாலுன்னா நாலுன்னே வாழ்ந்துட்டமேன்னு வருத்தப் பட்டுக்கிட்டே குத்து மதிப்பா முடியப் பிரிச்சுட்டு ஒரட்டாங் கைல இருந்த பூவப் பாத்ததும் உலக மகா கொழப்பமாயிட்டான்.. அவங் கைல இருந்த பூச்சரம் ஒரு மொழமிருக்கும்.. அது ரெட்டையா மடிஞ்சிருக்க அத அப்படியே வெக்கிறதா, சரி பண்ணி நீட்டமா வெக்கறதான்னு யோசிச்சு குழம்பினான்.. சரி.. நீட்டியே வெப்போம்னு அதச் சரி பண்ணைல பிரிச்சிருந்த முடிய விட்டுட்டான்.. முடிய பிரிச்சுட்டுப் பாத்தா பூச்சரம் ரெட்டையா மடங்கி... எப்படியோ போராடி அந்தப் பூவ வெக்கறதுக்குள்ள அவன் கண்ணா முழி ரெண்டும் பிதுங்கி மூக்கு நுனிக்கே வந்துட்டுது.. பின்னால தொட்டுப் பாத்துட்டு சிணுங்கிட்டே திரும்பிச் சொன்னா..

"ஐய்ய.. இப்படியா வெப்பாங்க?"

"சரி.. திரும்பு..நல்லா..."

அவன் இப்படிச் சொன்னதும் அவ கலகலன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னா..

"ஐயோ சாமி.. இப்படியே இருக்கட்டும்"

அவனும் வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே அவ முகம் பாத்துக் குனிய.. அவ நாசூக்கா அவன் நெஞ்சுல கைய வெச்சு தள்ளிட்டு .. ஒரு கன்னம் பட அவன் வலது மொழங் கால்ல சாஞ்சு ஒரட்டாங் கையால கெண்டக் கால இறுக்கிக் கட்டிகிட்டு.. சோத்தங் கைல ஒரு லட்ட எடுத்து அவன் வாய்ல திணிச்சுச் சொன்னா..

"ங்கோவ்.."

"ம்.." (முழு லட்ட அரைச்சுக்கிட்டிருக்கைல வேற என்ன சொல்லுவான்?)

"வந்து.."

"ம்.." (அரவை முடியல)

"என்னங்க.."

"ம்.."(அரவையின் கடைசிச் சுற்று)

"வந்து..."

"சொல்லு குட்டிம்மா.." (அப்பாடா..அரவை முடிஞ்சுது!)

"தள்ளிப் போயிருக்கு"

இவனுக்கு இருந்த உணர்ச்சிக் கலவையில் அவ சொன்னது 'தள்ளிப் போங்க'ன்னு காதுல உளுவ சிரிச்ச படி கேட்டான்

"நல்ல கதையா இருக்கே? நீயா வந்து எங் காலக் கட்டிப் புடிச்சு அதுல தல வெச்சுப் படுத்துக்கிட்டு என்னத் தள்ளிப் போங்கன்னா என்ன அர்த்தம்?"

"ஷ்ஷ்ஷப்ப்ப்பா... உங்களுக்குச் சொல்லிப் புரிய வெக்கறதுக்குள்ள கொழந்தையே பொறந்துடும்"

அவனுக்கு அப்பத் தான் மூளைக்குள்ள ஒறைக்க .. இன்னொரு லட்டுக்காக வாயத் தொறந்தவன் அப்படியே இமைக்காம பாக்க.. அவ சொன்னா..

"ம்...உங்க காதப் புடிச்சுத் திருக சின்னப் பண்ணாடி வரப் போறான்"

(தொடரும்...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவனும் அவளும் 4

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

வாயப் பொழந்து பாக்கறவன சன்னமா கண்ணடிச்சு அவ சிரிக்க, 'குட்டிம்மா'ன்னு நெகிழ்ச்சியா கூப்பிட்ட படி அவள நோக்கிக் குனியறான்.. அவ மறுபடியும் நாசூக்கா பின்னுக்குத் தள்ள முகஞ் சுழித்துக் கேட்டான்

"ஏன் தங்கம்?"

"ரெண்டு வாரங் கழிச்சு டாக்டர் கிட்ட கன்பார்ம் பண்ணிக்கிட்டு .. அப்புறம் டாக்டர் என்ன சொல்றாரோ அப்படித் தான் எல்லாம்"

"வெறும் கிஸ் தான தங்கம்?"

"வெறும் கிஸ்.. (சந்தோஷமா வாய் விட்டுச் சிரிக்கறா..)அதுல ஆரம்பிச்சுத் தான இப்ப இங்க வந்து நிக்குது"

"உன் வயித்துல இருக்கறது என் வாரிசு.. அது மேல எனக்கு அக்கறை இருக்காதா தங்கம்? அதுவுமில்லாம உன்ன நோகடிச்சு எனக்கொரு சந்தோஷத்த தேடுவேன்னு நெனைக்கறியா?"

அவ பதிலெதுவும் சொல்லாம சரேல்னு நிமிர்ந்து அவந் தலைய இழுத்து அவன் ஒதட்டோட ஒதட்டப் பதிச்சுட்டு அதே வேகத்துல விலகி திரும்பவும் பழைய படி படுத்துக்க இவன் கேட்டான்

"ஓ.. நீங்க மட்டும் குடுக்கலாமாக்கும்.. இது எந்த ஊரு நியாயம் தங்கம்?"

"குடுக்கலாமே..? எஙகளுக்கு எதோட நிறுத்திக்கணும்னு தெரியும்"

"சரி தான்..எங்கம்மா கிட்டச் சொல்லிட்டியா?"

"இல்லீங்க.. மொதல்ல நம்ம எல்லாருக்கும் அம்மா குல தெய்வம் செல்லியம்மன்.. அவ கிட்ட மொதல்ல ..அடுத்ததா உங்க கிட்ட சொல்லிட்டுத் தான் பெரியவங்க கிட்டச் சொல்லலாம்னு இருந்தேன்.. அதான்....."

அவனுக்கு செருப்புல அடிச்ச மாதிரி ஆயிப் போச்சு.. கருவுண்டானதச் சொல்றதுக்காக கோயிலுக்குப் போக பூ வாங்குனதையும், நல்ல செய்தி சொல்ல இனிப்பு கேட்டதையும் தான் எதுல கொண்டு போயி முடிச்சுப் போட்டோம்கறதை நெனைக்க நெனைக்க வெட்கமும் வேதனையும் புடுங்கித் திங்க அவளப் பாத்து ரெண்டு கையவும் விரிச்சு நீட்டி 'வா'ன்னான்.. அவ 'ம்கூம்'னு தலையசைக்க உறுதியாச் சொன்னான்..

"நெலம் ஜில்லுனு இருக்கு..மேல வா.. இப்ப,இந்த நேரத்துல உன்னக் கொஞ்சிச் சீராட்டணும்..கணவனா,காமுகனா கூப்பிடல தங்கம்.. வயித்துல இருக்கற குழந்தைக்கு மட்டுமில்ல..இந்த நொடி உனக்கும் தகப்பனா,தாயா இருந்து கூப்பிடறேன்.. வா..''

தாவி அவன் கைகளுக்குள்ள அடைக்கலமானாள்.. அவள் முதுக ஆதரவா வருடிக்கிட்டே மெல்ல படுக்கையில் சாய்ந்தான்..
நெஞ்சில் படுத்த படியே அவளின் கையொன்று அவன் கன்னத்தில் கோலமிட்டு மீசையைப் பிடித்து இழுத்தது.. நெஞ்சுல பட்ட வெது வெதுப்பான ஈரம் அவன அதிரச் செய்ய பதறிக் கேட்டான்

"ஏய்... தங்கம்..அழறியா என்ன?"

அவசரமா கண்ணத் தொடச்சவ முக வாய்க் கட்டைய அவன் நெஞ்சுல பதிச்சு திரும்பவும் கன்னத்துல கோலம் போட்டுக்கிட்டே கேட்டா..

"நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"மாட்டேன்.. அதும் இந்த சிட்சுவேஷன்ல நிச்சயம் கோவப் பட முடியாது.. சொல்லு'

"பிராமிஸா...?'

"அட லூசு.. உனக்கு எம் மேல நம்பிக்கையிருந்தா சத்தியமே தேவையில்ல.. அது இல்லேன்னா ஆயிரம் சத்தியம் பண்ணினாலும் பிரயோஜனமில்ல.. இஷ்டமிருந்தா சொல்லு.. இல்லாட்டி அதை மறந்துடு.. ஆமா.. சின்னப் பண்ணாடின்னியே? சின்னப் பண்ணாடிச்சியா இருந்தா ஆகாதா?"

"நா உங்க கிட்ட மூணு மாசமா ஒரு விசயத்த சொல்லாம மறைச்சிட்டேன்...ஸாரிங்க"

"சொல்லியே ஆகணுமா?"

"உறுத்திக்கிட்டே.."

"அப்ப அவுத்துடு.."

"போங்க நீங்க..."ன்னு அவசரமா எந்திரிச்சவ தலைய இறுகப் பிடிச்சு நெஞ்சுல சாச்சு வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே சொன்னான்..

"பாரத்த அவுத்துக் கொட்டிடுன்னு சொன்னந் தங்கம்"

"ம்..அது வந்து.. நம்ம கலியாணத்துக்கு முந்தின நாளு நடந்தது ஞாபகமிருக்கா?"

அவன் இன்னும் மிருதுவாகி இலகுவானான்..

"எப்படி மறக்க முடியும் கண்ணம்மா? எத்தனெத்தன மணிக்கு என்ன நடந்ததுன்னு சொல்லவா?"

"எல்லாம் வேண்டாம்.. சாயந்திரம் நாலு டூ அஞ்சு மட்டும் சொல்லுங்க.."
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"அஞ்சு மணிக்கு வர்றேன்னு லெட்டர்ல எழுதி அனுப்பிச்சவ நாலரைக்கே வந்து நின்னே.. உம் பண்ணாடி..வெடிஞ்சா உனக்குத் தாலி கட்ட வேண்டிய மாப்பிள்ளை கால முறிச்சுக்கிட்டு கட்டோட ஹாயா இதே படுக்கைல கெடந்தான்.."

"எம் பண்ணாடிய ஒருமைல பேசாதீங்க.. பண்ணாடிச்சி கோச்சுக்குவா.."

அவன் 'ஹா ஹா'ன்னு பெருங் குரலெடுத்துச் சிரிக்க அவன் முகத்தையே காதலும் தாய்மையும் பொங்கற கண்களால பாத்துக்கிட்டே சொன்னா...

"உண்மையச் சொல்றதுன்னா நான் நாலு மணிக்கே நம்ம மளிகைக் கடைக்கு வந்துட்டேங்க. அரை மணி நேரம் உங்கம்மா, பெரியம்மா,சின்னம்மா என்ன விசாரணைக் கூண்டுல நிறுத்திட்டாங்க"

அவன் முகம் மட்டுமல்ல.. குரலும் மாறியது.. கனிவு, குழைவு எல்லாம் குலைந்து உறுதியான குரலில் கேட்டான்

"ஓ..என்ன வெசாரிச்சாங்க?"

இதை எதிர் பார்த்தோ என்னவோ அவன் முகம் பார்த்தே சொல்லிக் கொண்டிருந்தவள் கனிவாய்ச் சொன்னாள்..

"பாத்தீங்களா? டென்சன் ஆகறீங்க"

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் தலையை புன்னகையுடன் நெஞ்சில் அழுத்திச் சொன்னான்

"பதட்டம் வேற.. கோவம் வேற குட்டிம்மா.. இனி நீ சொல்லி முடிக்கற வரைக்கும் குறுக்க பேச மாட்டேன்..ம்..சொல்லு.."

"பெரும் பாலும் உங்கம்மா பேசல..உங்க பெரியம்மா தான்.. மத்த கேள்விங்களையெல்லாம் விடுங்க.. 'காலு முறிஞ்சும் உன்னக் கட்டியே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கறானே? எதாச்சும் கசமுசான்னு பண்ணி மாசமா கீது இருக்கியா?'ன்னு கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி.. எனக்கு ஒடம்பெல்லாம் தீப் புடிச்சாப்ல....(மறுபடியும் அவன் நெஞ்சில் வெதுவெதுப்பான ஈரம்.. இப்ப அவன் பதறலை.. ஏன்னா,உள்ள இருக்கற அவன் இதயம் ரத்தக் கண்ணீர வடிச்சுக்கிட்டிருந்துச்சு) ஒரு பொண்ணுக்கு எதிரி இன்னொரு பொண்ணு தாங்க.. ஏன்னா, ஆம்பளையால வார்த்தையால அடிச்சு ஒருத்திய மொடக்கிட முடியாது.. பொண்ணால ரொம்ப சுலபமா அது முடியும்..

அத்தன வேதனையிலயும் தடுமாறாம 'இல்லீங்க அத்தை'ன்னு தைரியமா உறுதியாச் சொன்னேன்.. உடனே அடுத்த சாட்டையடியா இன்னொரு கேள்வி 'ஏன்?வாகான நேரமும் எடமும் அமையலையா?'ன்னு.. நானும் பொண்ணு தானே? இவங்கள வார்த்தையாலயே அடிக்கணும்னு முடிவு பண்ணினேன்.. ஏன்னா,அது உங்க பாணியாச்சே?சில சொல்லால ஆள அசத்தறது.. துளியும் தடுமாறாம சொன்னேன்.. 'சந்தர்ப்பம் எல்லாம் நெறைய அமைஞ்சுது.. உங்க மகன் உத்தமன்ங்கறதால அதப் பயன் படுத்திக்கல' உடுவாங்களா? அடுத்த சாட்டை.. 'ஓ..அவன் கேட்டிருந்தா நீ மாட்டேன்னு சொல்ல மாட்டே.. அப்படித் தானே?'ன்னு நக்கலாக் கேட்டாங்க..

நானும் இந்தக் கேள்வியத் தான எதிர் பார்த்தேன்? சூடாவே பதிலுக்குச் சொன்னேன்..'உங்க மகன் ஆசப் பட்டுக் கேட்டா சாகற கட்டத்துலயும் மாட்டேன்னு சொல்ல மாட்டேன்'னேன்.. உங்க சின்னம்மா கேட்டாங்க 'கல்யாணத்துக்கு முந்தியே அவங் கேட்டா முந்தி விரிப்பியா?"ன்னு.. இதும் எதிர் பாத்தது தானே? 'எப்ப எங் காதலச் சொன்னனோ அப்பவே இந்த ஜென்மத்துல உங்க மகன் தான் எம் புருஷன்னு முடிவு பண்ணிட்டேன்..ஆனானப் பட்ட அற்புதமான மனசையே அவுரு காலடில போட்ட பின்னால கேவலம் மண்ணுத் திங்கற ஒடம்பு.. இதக் குடுக்க மாட்டனா? அதுவுமில்லாம..'ன்னு சொல்லி சங்கடமா நிறுத்தினேன்..
இவ்வளவு நேரமா பேசாம தலையக் குனிஞ்சு உக்காந்திருந்த உங்கம்மா நிமிர்ந்து சொன்னாங்க.. 'இத்தன சொல்லிட்டு இதுக்கென்ன யோசனை..இதையும் சொல்லிடு'ன்னாங்க..

அப்புறமென்ன? தயங்காம சொன்னேன் 'இது நாஞ் சொல்றதில்லீங்க அத்தை.. உங்க மகன் தான் ஒரு லெட்டர்ல எழுதி இருந்தார்.. ஒரு பொண்ணோட கற்புங்கறது அவளோட கையளவு சமாச்சாரத்துல அடங்கிடாது.. அது எல்லையில்லா மனசோட சம்பந்தப் பட்டது'ன்னு சொல்லவும் எல்லாரும் பிரமை புடிச்சாப்ல உக்காந்துட்டாங்க.. மொதல்ல சுதாரிச்சுக்கிட்டது உங்கப்பா தான்.. எட்ட உள்ள அரிசி மூட்டை மேல உக்காந்திருந்தவர் 'எதுக்கு இந்த வேண்டாத வெசாரணையெல்லாம்? நம்ம வீட்டுக்கு வெளக்கேத்த வர்ற மருமக கிட்ட இப்படியெல்லாம் கேக்கறது நல்லாவா இருக்கு? நம்ம பையன் ஆசப் பட்டுட்டான்.. அவளும் படி தாண்டி அவனே கதின்னு வந்துட்டா.. பெரியவங்களா,லட்சணமா அவங்களுக்குத் தேவையப் பண்ணி வெக்கறதே நம்முளுக்கு அழகு.. நீ போயி அவம் பக்கத்துல இரு.. வெடியறதுக்குள்ள உங்க கலியாணம் நடக்கும்'னாரு பாருங்க.. ஓடி அவுரு கால்ல உளுந்துட்டேன்"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"ஏய் அண்டப் புளுகு.. நானெப்ப அப்படி லெட்டர்ல எழுதினேன்?"

"வார்த்தைக்கு அப்படியே இல்லைன்னாலும் என் பொறந்த நாளுக்கு ஒரு லெட்டர் அனுப்பிச்சிருந்தீங்களே?அதுல ஒரு எடத்துல இப்படி எழுதி இருந்தீங்க.. "கற்புங்கறது ஒடம்பு சம்பந்தப் பட்டதல்ல.. அது அவளோட அற்புதமான மனம் சார்ந்த விசயம்..ஆணுக்கும் இது பொருந்தும்.."இதையே உல்டா பண்ணி எங் கைச் சரக்கையும் சேத்து அங்க எடுத்து உட்டு ஷாக் குடுத்தேன்"

"புத்திசாலி தங்கம் நீ"
.
"வெறும் மண்ணுங்க நான்.. அதக் கொழச்சு அழகான சிலையாக்குனது எம் பண்ணாடியோட எழுத்தும், பேச்சும்..."

"உம் பண்ணாடியோட புராணம் போதும்..மேட்டர் அவ்வளவு தானா?"

"இனிமேத் தாங்க மேட்டரே.. அவங்க வேற அப்படிக் கேட்டுட்டாங்களா? கலியாணமான மொத மாசம் உண்டாயிடக் கூடாதுன்னு எல்லாச் சாமியவும் வேண்டிக்கிட்டேன்"

அவன் அதிர்ந்தே விட்டான்.. அவள் தொடர்ந்தாள்

"காலு முறிஞ்சு கட்டுப் போட்டிருந்தாலும் நிம்மதியா இருக்க விட்டீங்களா? பதினஞ்சு நாள் எப்படியோ தள்ளிப் போட்டேன்..ஆனா,அந்தப் பதினாறாவது நாள்.. அன்னிக்கு கரு உண்டாயிடக் கூடாதுன்னு எத்தன சாமிய வேண்டினேன் தெரியுமா? ஒவ்வொரு ராத்திரியும் நாம் பட்ட பாடு.. என்னக் கேவலமா பேசுவாங்கன்னு கவலப் படலீங்க.. என்னால உங்களுக்கு ஒரு கேவலமோ, தலைக் குனிவோ வந்துடக் கூடாதுன்னு தான்..."

அதுக்கு மேல அவளால பேச முடியாம வெடிச்சுக் கெளம்புச்சு அழுகை.. அவனுக்கோ ஒடம்பும் மனசும் ஒண்ணா நடுங்க... அவள இறுக்கி அணைச்சுச் சொன்னான்

"எங்கிட்டச் சொல்லியிருக்கலாமே கண்ணம்மா?"

"அலங்க கிட்ட சண்டைக்குப் போயிடுவீங்களோன்னு.."

"அவங்க கிட்ட சண்டைக்குப் போறனோ,இல்லையோ உங்கிட்ட நெருங்காம இருந்திருப்பனே? எந் தங்கத்துக்கு என்னால எத்தன வேதனை?"

அவனையும் மீறி அவன் கண்களிலும் கண்ணீர்.. அவசரமாய் அவளறியாமல் துடைத்தான்

"அவங்க கிட்டச் சொன்னது தாங்க.. சாகற கட்டத்துலயும் நீங்க கேட்டு மாட்டேன்னு சொல்ல மாட்டேன்"

மீண்டும் துளிர்க்க நினைத்த கண்ணீரை வலிந்து அடக்கி பேச்சை மாற்றினான்

"குட்டிம்மா.. இதக் கேளு.. நீ பூவு ஸ்வீட்ஸ் எல்லாம் வவாங்கறதப் பாத்து என்ன நெனச்சேன் தெரியுமா?........"

துளியும் மறைக்காமல் சகலமும் சொன்னான்.. அவள் கேட்கும் போதே சிரிக்க ஆரம்பித்தவள் இவன் "ஸாரிடா" என முடிக்கவும் தலை தடவிச் சொன்னாள்...

"பொண்டாட்டி கிட்ட புருசன் எதிர் பாக்கறதுல தப்பில்லையே? ஆனாலும்,இந்த ஆம்பளப் புத்தி.. என்ன சொல்றது போங்க.."

"நாஞ் சொல்றேன்.. ஆம்பளைக்கு எப்பவும் அவுக்கற புத்தி தான்.."

சொல்லிட்டு அவன் மனம் விட்டுச் சிரிக்க அதோடு அவள் சிரிப்பும் கலந்து அந்த வீடு முழுக்கப் பரவியது

(தொடரும்...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவனும் அவளும் 5

+++++++++++++++++++++++++

பி.கு..

1)ஆமாங்க.. பதிவப் பொறுத்த வரைக்கும் போன பாகத்தோட முடிஞ்சுதுங்க.. அதுக்கு மேல டைப் பண்ண முடியல.. கண்ணு வலிக்கவும் மிச்சத்த நாளைக்குப் பாத்துக்கலாம்னு அதோட முடிச்சுட்டு அவசரமா 4ம் பாகத்த எறக்கினேன்.. புரூப் திருத்தாம பதிஞ்சதால சில எழுத்துப் பிழைங்க இப்ப கண்ணுல பட திருத்திட்டு வந்தேன்..

2)வெல்... மொத பாகத்துல யூகிக்கலைன்னாலும் அடுத்தடுத்த வந்த பதிவுல யூகிச்ச உங்க யூகம் மிகச் சரியே..யெஸ்! அவனும் அவளும்..நானும் சுசியும்!! இந்தப் பதிவு யாராவது ஒருத்தர் மனசத் தொட்டிருந்தாலும் அது Rathakrishnan Krishnan மாமாவுக்கே சேரட்டும்.. ஏன்னா, அவுரு தான் 'புதுசா..முடிஞ்சா சுசியப் பத்தி ஒரு பதிவு போடுங்க மாப்ள'ன்னு ஆலோசனை சொன்னவர். எனக்கது அல்வாத் திங்கற விசயமாச்சே? வாழ்க நீ எம்மான்!! நான் மறுபடியும் சிறிது நேரம் அவளோடு வாழ்ந்து விட்டு வந்தேன்..

3)என்னால எந்த தீபாவளியவும் சந்தோசமா கொண்டாட முடியாது.. ஏன்னா, இது நடந்தது ஒரு தீபாவளியன்னிக்கு.. எங்களோட தல தீபாவளியும் கூட !அந்தக் கருவும் மூணாவது மாசத்துல.. ம்!அபார்ஷனாயிடுச்சு.. இந்த நாள்னு இல்ல.. எல்லா நாள்லயும் அவ பத்தின கதை எங்கிட்ட உண்டு.. எல்லாத்துலயும் மனசப் பிசையற ஒரு சம்பவமுண்டு.. உயிரோட இருக்றதால நிகழ் காவத்துல இருக்கேனே தவிர.. நான் வாழறதென்னவோ கடந்த காலங்கள்ல .. அவளோட மட்டும் !

நானொண்ணும் உத்தமனில்லை.. அவளுக்குப் பின்னாலும் பெண்ணுக்கான தேடல் என்னிடம் உண்டு..ஆனால்,உள்ள அவ இடத்த அசைச்சுப் பாக்கற ஒரு பொண்ண நான் இந்த நொடி வரைக்கும் சந்திக்கவே இல்ல.. உண்மையச் சொன்னா எல்லாரையும் அவளோட ஒப்பிட்டுப் பாக்கற (இது என்ன வகை மேனியா ?)அல்ப குணம் எனக்கு வந்துடுச்சு.. அது என்னை மட்டுமில்ல.. அந்தப் பொண்ணுங்க சந்தோசங்களையும் பாழடிச்சுடுச்சு.. ஒருத்தி கடுப்புல ஓப்பனா இப்படிச் சொன்னா..

'எனக்கென்னவோ அவங்களோட நீயும் செத்திருக்கலாமோன்னு தோணுது"

அவங்களச் சொல்லிக் குத்தமில்ல.. என்னப் புடிக்கும்ங்கறதுக்காக எம் பொண்டாட்டி புராணத்த அனவரதமும் கேக்க எவளால முடியும்?அதனாலயே பொண்ணுங்கன்னா விலக (அட !) ஆரம்பிச்சுட்டேன்.. இல்லாட்டி தாயா,மகளா தத்தெடுத்துக்கிட்டேன்.. ஆனா, இது எத்தன நாளைக்கு நீடிக்கும்னு தெரியல.. எங்கியோ ஒரு எடத்துல தடுமாறுவேன்னு எனக்குத் தெரியும்

4)அத விடுங்க.. எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா.. என் எழுத்து சமூகப் புரட்சிய உண்டாக்கிடும்கற கர்வமெல்லாம் எனக்கில்ல.. யாரோ ஒருத்தர் மனசுல பொண்டாட்டியவும் சக ஜீவியா மதிக்கணும்னு பதிஞ்சாப் போதும்.. நான் எழுத்துல ஜெயிச்சுட்டதா பெருமைப் படுவேன்

5)ஏறக்குறைய எல்லா உணர்ச்சிக்கும் வடிகால் தேடலாம்.. குற்ற உணர்ச்சிக்கு? இதை மறக்கப் போட்ட வேசங்களும் ஆட்டங்களும் பத்தாம..அசுர குடி வேற.. நான் இன்னும் உயிரோட இருக்கறது மகா ஆச்சரியம்..எனக்கு !! 'மன்னிப்புக் கேக்கலாமே?'ன்னு தீர்வு சொல்லுவீங்க.. கரெக்டான தீர்வு தான்..ஆனா,சம்பந்தப் பட்டவங்க செத்துப் போயிருந்தா? இதுக்கு நிவாரணம் உண்டா? மனச அரிச்சுக்கிட்டே இருக்குங்க.. அவ கிட்ட ஒரு வார்த்தை.. ரெண்டெழுத்துள்ள ஒத்தை வார்த்தை.. 'ஸாரி'ன்னு சொல்லியிருந்தா.. பாழாப் போன ஈகோ.. ஆம்பளைங்கற ஆணவம்.. அதச் சொல்லவே இல்ல.. அவ போனா பின்னால ஈகோ மட்டுமிருக்கு..ஆனா, வாழ்க்கையத் தான் தொலச்சுட்டேன்.. பொம்பளை இல்லீன்னா ஆம்பளை பூஜ்யம் கூட இல்லீங்க.. மைனஸ்.. டோட்டலா மைனஸ்..

6)இது நடந்தது 1987ல.. முப்பது வருசமாச்சு.. அவ செத்தும் 12 வருசமாச்சு.. ஸோ வாட் பேபிஸ்? காதல் எப்போதும் காதலே.. காதலர்களுக்கு மரணமுண்டே தவிர காதலுக்கல்ல..

(மகத்தான.. முற்றும்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தேவா தம்பி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top