• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நகர்வலம் | மகாபாரதக் காட்சி - கவிதை வடிவில் | அறுசீர் விருத்தம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
***நகர்வலம்***

(மகாபாரதத்தில் இருப்பதாய்ச் சொல்லப்படும் ஒரு காட்சி.)

[அறுசீர் விருத்தங்கள்]

அத்தினா புரியில் ஓர்நாள்
.....அழகிய காலை பொழுது,
சத்தமாய்ப் பறவை இனங்கள்
.....சங்கதி கூட்டிப் பாடும்,
புத்துணர் வோடு மக்கள்
.....புகுந்தனர் சாலை களிலே
தத்தமக் கான வேலை
.....தமைச்செய ஊக்கம் பொங்க; (1)

இளவர சான தருமன்
.....ஏகினன் தானும் நகரை
வலம்வர, நாட்டு மக்கள்
.....வாழ்வதைக் கண்டு கற்க;
களவுடை சிரிப்ப மர்ந்த
.....கண்ணனாய்க் கண்ணன் நின்று
‘கிளம்பிய தெங்கே தருமா?’
.....கேட்டனன் அவனை மறித்தே. (2)

’வந்தனம் கண்ணா! நகரை
.....வலம்வரக் கிளம்பி னேன்நான்,
சிந்தையில் உனைத்தான் கொண்டேன்
.....சிரிப்புடன் நேரில் வந்தாய்!
நந்தகோ பால மைந்தா,
.....நகர்வலம் உடன்வா ராயோ?’
சந்தமாய்க் கேட்டான் தருமன்
.....சக்கரத் தாரி சொல்வான்: (3)

’இன்றெனக் கலுவல் உளதால்
.....இன்பமாய் நகரைச் சுற்றல்
என்றனுக் காகா தன்பா!
.....எனினும்நீ எனக்காய் ஒன்றைக்
குன்றிடல் இன்றிச் செய்க
.....குந்தியின் மைந்தா!’ என்ன,
‘நன்றிவண் வினவ லேனோ?
.....நவில்கவுன் சொல்லென் ஆணை!’(4)

எனவுதிட் டிரனும் பணிய
.....இயம்பினான் யசோதை மைந்தன்
‘இனியவென் தருமா கேள்நீ,
.....இன்றைய நகர்வ லத்தில்
மனத்திலே மாசு கொண்ட
.....மனிதரைப் பார்த்தாய் என்றால்
உனக்குளே குறித்துக் கொள்க,
.....ஊர்வலம் முடிந்த பின்பு (5)

மாலையில் என்னைக் கண்டு
.....மனத்திலே கொண்ட கணக்கை
ஓலையில் எழுதிக் கொடுத்தால்
.....ஒருபெரும் நன்றி சொல்வேன்!’
’காலையே கண்ணன் ஏதோ
.....கள்ளந்தான் செய்கின் றானோ?
சாலையில் வசமாய்ச் சிக்கித்
.....தவிக்கிறான் தருமன்!’ என்று (6)

கிழக்கினில் ஏறும் பகலோன்
.....கிரணங்கள் நீட்டி நகைத்தான்!
’வழக்கென வந்தால் கண்ணன்
.....மலையெனப் பக்கல் நிற்பான்
சழக்கிலை எனக்’கென் றெண்ணித்
.....தருமனும் நடக்க லானான்,
மழைவண மாயோன் தானும்
.....மாலையை நோக்கி நின்றான். (7)

பகலவன் மேலைக் கடலில்
.....படுகையில் தருமன் தானும்
நகர்வலம் முடித்து வந்து
.....நாடினான் நாரா யணனை,
சிகரமோ தோளோ என்று
.....சிந்தையில் ஐயம் தோன்றத்
தகும்வணம் நின்ற துரியோ
.....தனனுடன் நின்றான் கண்ணன். (8)

’வந்தனம் கண்ணா! தம்பி,
.....வாழ்கநீ!’ என்று சொல்லால்
சந்தனம் தெளிக்கப் பேசித்
.....தருமனும் அருகில் வந்தான்,
வெந்தனல் வீழ்ந்த தைப்போல்
.....வியர்த்தனன் துரியோ தனனும்
நந்தகோ பாலன் இருப்பால்
.....நயத்துடன் வலிந்து சிரித்தான்! (9)

’இருவரும் உற்றீர் அதனால்
.....எளிதினி என்றன் வேலை,
தருமகேள், நேற்று துரியோ
.....தனனுமிந் நகரைச் சுற்ற
விருப்புடன் சென்றான், அவன்றன்
.....விழியினில் நல்லோர் பட்டால்
ஒருகுறி பெடுக்கச் சொன்னேன்
.....ஒருவரும் இல்லை என்றான்! (10)

பாண்டுவின் முதற்கு மார!
.....பரந்தவிந் நகரை இன்று
தாண்டிநீ வந்தாய் இங்கு,
.....தகைவிலா மாந்தர் தம்மைக்
காண்டலும் பெற்றா யோநீ?
.....கணக்கெமக் கறைக!’ என்று
பூண்டுழாய்க் கண்ணி யானும்
.....பொழிந்தனன் அவனை நோக்கி. (11)

[பூண்டுழாய் - பூண்+துழாய்; துழாய் = துளசி]

மாதவன் ஆட்டும் கூத்தை
.....மனமுணர்ந் தவனாய்த் தருமன்
‘யாதவ! எங்கும் கீழ்மை
.....யாளரைக் காணேன்’ என்றான்
தோதுடன் கைகள் கூப்பித்,
.....துரியனோ சினந்தான் சொல்வான்
‘பாதகக் கண்ணா உன்றன்
.....பார்வையில் பொம்மை நானோ? (12)

என்னிட மேவுன் லீலை
.....ஏற்றிவிட் டனையே!’ என்றான்
புன்னகை யோடு கண்ணன்
.....புகன்றனன் அவனை நோக்கி
‘இன்றுநாம் எல்லோ ருந்தான்
.....இனியதோர் பாடம் கற்றோம்,
நன்றதும் தீமை யஃதும்
.....நம்மனப் பாங்கின் தோற்றம், (13)

பிறரிடம் காணும் குணத்தின்
.....பிறப்பிடம் நம்முள் மனமே,
சிறப்பெனில் சிறப்பே தெரியும்
.....சீயெனில் கீழ்மை தானே?
மறந்திடா திதனை உளத்தில்
.....வரிக்கநீர்! நாளை நாட்டை
அறத்துடன் ஆள இதுவே
.....அடிப்படை ஆகும்’ என்றே! (14)

கண்ணனன் றிருவ ரோடும்
.....காட்டிய நாட கத்தில்
நுண்ணிய உண்மை ஒன்றை
.....நுவன்றனன்: என்றும் இந்த
மண்ணிலே வாழும் மக்கள்
.....மனமதன் பாங்கைப் பொறுத்தே
உண்டொரு நன்மை தீமை,

.....உணர்ந்திவண் வாழ்வோம் நன்றே! (15)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
புரிய எளிய (பதம் பிரித்த) வடிவில் - குறிப்புரைகளுடன்

அத்தினா புரியில் ஓர்நாள், அழகிய காலை பொழுது,
சத்தமாய்ப் பறவை இனங்கள் சங்கதி கூட்டிப் பாடும்,

(சங்கதி - கருநாடக சங்கீதத்தின் ஒரு நுட்பம்)

[அத்தினாபுரி - ’ஹஸ்தினாபுரி’ என்ற சமற்கிருத நகர்ப்பெயரின் தமிழ்வடிவம்]

புத்துணர் வோடு மக்கள் புகுந்தனர் சாலைகளிலே, [*ஊக்கம் பொங்க] தத்தமக் கான வேலைதமைச் செ[ய்]ய. [*] (1)

இளவரசான தருமன் ஏகினன் தானும் நகரை வலம்வர, [ஏகினன் - சென்றனன்]
நாட்டு மக்கள் வாழ்வதைக் கண்டு கற்க;
[நாட்டின் பல்வேறு நிலை மக்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்று கற்க!]

களவுடை சிரிப்பு அமர்ந்த கண்ணனாய்க் கண்ணன் நின்று
‘கிளம்பிய தெங்கே தருமா?’[என்று] கேட்டனன் அவனை மறித்தே. (2)


[கண்ணன் தன் கண்களில் கல்மிஷம் / குறும்பு மின்ன புன்னகையுடன் தருமனை வினவினன். ‘களவு’ - கல்மிஷம் / குறும்பு]

’வந்தனம் கண்ணா! நகரை வலம்வரக் கிளம்பினேன் நான், சிந்தையில் உனைத்தான் கொண்டேன், சிரிப்புடன் நேரில் வந்தாய்!
நந்தகோ பால மைந்தா, நகர்வலம் உடன்வா ராயோ?’சந்தமாய்க் கேட்டான் தருமன்,

சக்கரத் தாரி சொல்வான்: (3)

’இன்று எனக்கு அலுவல் உளதால் இன்பமாய் நகரைச் சுற்றல் என்றனுக்கு ஆகாது அன்பா!
எனினும் நீ எனக்காய் ஒன்றைக் குன்றிடல் இன்றிச் செய்க, குந்தியின் மைந்தா!’ என்ன,


[அலுவல் - வேலை; என்றனுக்கு - என்+தனக்கு - எனக்கு]

‘நன்று இவண் வினவல் ஏனோ? நவில்க உன் சொல் என் ஆணை!’(4)

என உதிட்டிரனும் பணிய
; [உதிட்டிரன் - ’யுதிஷ்ட்ரஹ’ என்ற சமற்கிருதப் பெயரின் தமிழ் வடிவம்]

இயம்பினான் யசோதை மைந்தன் [இயம்புதல் - சொல்லுதல்; யசோதை மைந்தன் - கண்ணன்]

‘இனிய என் தருமா கேள் நீ, இன்றைய நகர்வலத்தில் மனத்திலே மாசு கொண்ட மனிதரைப் பார்த்தாய் என்றால் உனக்குளே குறித்துக் கொள்க, ஊர்வலம் முடிந்த பின்பு (5) மாலையில் என்னைக் கண்டு மனத்திலே கொண்ட கணக்கை ஓலையில் எழுதிக் கொடுத்தால் ஒருபெரும் நன்றி சொல்வேன்!’ (என்று இயம்பினான் யசோதை மைந்தன்).

[மாசு - களங்கம், இது இங்கே மனத்தின் மாசுகளான சினம், பொறாமை, வஞ்சம் முதலியவற்றைக் குறிக்கின்றது]

’காலையே கண்ணன் ஏதோ கள்ளந்தான் செய்கின் றானோ? சாலையில் வசமாய்ச் சிக்கித் தவிக்கிறான் தருமன்!’ என்று (6) கிழக்கினில் ஏறும் பகலோன் கிரணங்கள் நீட்டி நகைத்தான்!

[இது ‘தற்குறிப்பேற்றம்’ - தருமனைக் கண்ணன் ஏதோ வம்பில் மாட்டிவிடப் போகிறான் என்று உதிக்கும் சூரியன் நகைப்பதாய் கவி (அடியேந்தான்!) தன் குறிப்பை உதயசூரியன் மேல் ஏற்றினார்! இங்கே சூரியோதயமும் வருணிக்கப்படுகிறது. தருமனும் அத்தினாபுரி மக்களும் சூரியோதயத்திற்கு முன்பே எழுந்து தத்தம் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர் என்ற குறிப்பும் கிடைக்கிறது!]

’வழக்கென வந்தால் கண்ணன் மலையெனப் பக்கல் நிற்பான், சழக்கிலை எனக்கு’என்று எண்ணித் தருமனும் நடக்க லானான்,

[கண்ணன் கேட்ட உதவியை ஒத்துக்கொண்டு தருமன் தன் நகர்வலத்தைத் தொடர்ந்தான். ‘இதில் ஏதேனும் சிக்கல் வந்தால் கண்ணன் பார்த்துக்கொள்வான்’ என்ற மனநிலையுடன் அவன் இதற்குச் சம்மதிக்கிறான்.]
[பக்கல் - பக்கம் - தனக்குச் சார்வாய்; சழக்கு - குற்றம் / தீமை]

மழைவ[ண்]ண மாயோன் தானும் மாலையை நோக்கி நின்றான். (7)

[கண்ணன் தருமனை அனுப்பிவிட்டு அவன் திரும்ப வரும் மாலையை எதிர்பார்த்து இருந்தான்; மழைவண - மழை வண்ண - மழை மேகம் போன்ற கரிய நிறமுடைய கண்ணன்]

பகலவன் மேலைக் கடலில் படுகையில் தருமன் தானும் நகர்வலம் முடித்து வந்து நாடினான் நாரா யணனை,
[மேலைக் கடல் - மேற்குக் கடல்; இது சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கிறது. மாலை வந்ததையும் குறிக்கிறது]

சிகரமோ தோளோ என்று சிந்தையில் ஐயம் தோன்றத் தகும் வ[ண்]ணம் நின்ற துரியோதனனுடன் நின்றான் கண்ணன். (8)

[மாலை கண்ணனைத் தேடி வரும் தருமன் அவன் துரியோதனனுடன் நிற்பதைக் காண்கிறான். துரியோதனின் தோள்கள் மலையைப் போல திரண்டு இருக்கின்றன. காண்பவருக்கு ‘இவை தோளா மலையா’ என்ற ஐயத்தை உண்டாக்கக் கூடியன. சிகரம் - மலை உச்சி, இது இங்கே ஆகுபெயராய் மலையைக் குறித்தது. துரியோதனனும் பீமனும் ‘கதை’ என்ற கனமான ஆயுதத்தில் வல்லவர்கள், எனவே அவர்கள் இருவருமே புஜபலமும் தோள்பலமும் மிக அதிகம் உடையவர்கள்!]

’வந்தனம் கண்ணா! தம்பி, வாழ்கநீ!’ என்று சொல்லால் சந்தனம் தெளிக்கப் பேசித் தருமனும் அருகில் வந்தான்,

[தருமன் கண்ணனை மரியாதையுடன் ‘வணக்கம்’ என்றும், துரியோதனனை அன்புடன் ‘தம்பி வாழ்க’ என்றும் ஆளுக்குத் தக வாழ்த்தினான். அவன் தன் இயல்பிற்கு ஏற்ப அன்பாய் இனிதாய் ‘சந்தனம் தெளிப்பதை’ப் போலப் பேசினான், ஆனால் அவன் மீது வஞ்சம் கொண்டிருந்த துரியோதனனுக்கு அது ‘வெந்தனல் மேலே வீழ்ந்ததைப் போல’ இருந்தது! (கீழே காண்க)]

வெந்தனல் வீழ்ந்த தைப்போல் வியர்த்தனன் துரியோதனனும், நந்தகோபாலன் இருப்பால் நயத்துடன் வலிந்து சிரித்தான்! (9)

[உளத்தின் வஞ்சத்தால் துரியோதன உடல் தருமனைக் கண்டதும் வேர்க்கின்றது, ஆனால் அருகில் கண்ணன் இருப்பதால் அவன் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாது வேண்டா வெறுப்பாய் ‘வலிந்து’ சிரிக்கின்றான்!]

’இருவரும் உற்றீர் அதனால் எளிது இனி என்றன் வேலை, தரும, கேள், நேற்று துரியோதனனும் இந்நகரைச் சுற்ற விருப்புடன் சென்றான்,
அவன்றன் விழியினில் நல்லோர் பட்டால் ஒரு குறிப்பு எடுக்கச் சொன்னேன், ஒருவரும் இல்லை என்றான்! (10) பாண்டுவின் முதல் குமார! பரந்த இந்நகரை இன்று தாண்டி நீ வந்தாய் இங்கு, தகைவிலா மாந்தர் தம்மைக் காண்டலும் பெற்றாயோ நீ? கணக்கு எமக்கு அறைக!’
என்று பூண்துழாய்க் கண்ணியானும் பொழிந்தனன் அவனை நோக்கி. (11)


[தருமன் வந்தவுடன் கண்ணன் சொல்கிறான்: தருமனிடம் நகரில் கெட்டவரைக் கண்டால் கணக்கெடுத்து வந்து சொல்க என்றதைப் போல, நேற்று நகர்வலம் சென்ற துரியோதனனிடம் நகரில் நல்லவரைக் கண்டால் கணக்கெடுத்து வந்து சொல் என்று கூறியுள்ளான் கண்ணன். அவன் திரும்பி வந்து ‘(நல்லவர்) ஒருவரும் இல்லை’ என்றானாம்! இன்று தருமரின் கணக்கு என்ன என்று கேட்கிறான் கண்ணன்.]

[உற்றீர் - இங்கு உள்ளீர்; தரும - விளி; பாண்டுவின் முதல் குமார - இது தருமனைக் குறிக்கும். (கர்ணன் முதல் குமாரன் இல்லையா எனின் அவன் குந்திக்கே முதல் புதல்வன், பாண்டு அறிந்து, தருமப்படியும் சட்டப்படியும் அவனது புதல்வராகக் கொண்டது பின் ஐவரைத்தான், அதில் மூத்தவன் தருமனே, எனவே இது தருமனையே குறிக்கும்! ‘தாண்டி நீ வந்தாய்’ என்பது நகரை முழுதும் சுற்றிவிட்டு வந்தாய் என்ற பொருளில்; ‘தகைவிலா மாந்தர்’ - தகைவு - பெருமை / சிறப்பு / நற்குணம்; அது இல்லாத மனிதரை (கெட்டவரை) பார்த்தாயோ? ‘காண்டல்’ - காணுதல்; அறைக - சொல்லுக - ‘அறைதல்’ என்றால் அறிவித்தல், ஒன்றை உறுதிபடச் சொல்லுதல் ('announce', 'declare' எனும் ஆங்கிலப் பதங்களுக்கு ஈடான சொல்!)]

[பூண்டுழாய் - பூண்+துழாய் - துழாய் - துளசி; ‘கண்ணி’ - ஆண்கள் தலையில் அணியும் அடையாளப்பூவால் ஆன மாலைக்குக் கண்ணி என்று பெயர்; கண்ணனின் அடையாளப்பூ துளசி!]

மாதவன் ஆட்டும் கூத்தை மனம் உணர்ந்தவனாய்த் தருமன்
‘யாதவ! எங்கும் கீழ்மையாளரைக் காணேன்’ என்றான், தோதுடன் கைகள் கூப்பித்,


[மாதவன், யாதவன் - கண்ணன், யாதவ - விளி; தோது - வாகு; இங்கே மரியாதையைக் குறித்தது (கண்ணனுக்கு ஏற்ற மரியாதையுடன் தருமன் கைகளைக் கூப்பினான்]

துரியனோ சினந்தான் சொல்வான் ‘பாதகக் கண்ணா உன்றன் பார்வையில் பொம்மை நானோ? (12) என்னிடமே உன் லீலை ஏற்றிவிட்டனையே!’ என்றான்

[பாதகக் கண்ணா - பழிகாரக் கண்ணா; பொம்மை நானோ - நீ ஆட்டுவிக்கும் பொம்மை என்று என்னை நினைத்தாயோ? லீலை - திருவிளையாடல்; ஏற்றிவிட்டனையே - என்னிடம் உன் விளையாட்டைக் காட்டிவிட்டாயே; ‘சொல்வான்’ ‘என்றான்’ என்று இருமுறை வந்தது முதலில் துரியோதனன் சினந்து சொல்கிறான், பின் சிந்தனையுடன் கண்ணனின் விளையாட்டை உணர்ந்தவனாய் சொல்கிறான் என்று காட்ட!]

புன்னகை யோடு கண்ணன் புகன்றனன் அவனை நோக்கி
‘இன்று நாம் எல்லோருந்தான் இனியதோர் பாடம் கற்றோம், நன்றதும் தீமை அஃதும் நம் மனப்பாங்கின் தோற்றம், (13)
பிறரிடம் காணும் குணத்தின் பிறப்பிடம் நம் உள்மனமே, ’சிறப்பு’ எனில் சிறப்பே தெரியும், ’சீ’ எனில் கீழ்மை தானே?
மறந்திடாது இதனை உளத்தில் வரிக்க நீர்! நாளை நாட்டை அறத்துடன் ஆள இதுவே அடிப்படை ஆகும்’ என்றே! (14)


[புகன்றனன் - கூறினான் - புகலல் - சொல்லுதல்; மனப்பாங்கு - மனநிலை (attitude); உள்மனம் - ஆழ்மனம்; சீ - இகழ்ச்சிக் குறிப்பு, இது இங்கே தீய குணத்தைக் குறித்தது; வரிக்க - பதித்துக்கொள்க]

கண்ணன் அன்று இருவரோடும் காட்டிய நாடகத்தில் நுண்ணிய உண்மை ஒன்றை நுவன்றனன்:
என்றும் இந்த மண்ணிலே வாழும் மக்கள் மனம் அதன் பாங்கைப் பொறுத்தே உண்டு ஒரு நன்மை தீமை, உணர்ந்து இவண் வாழ்வோம் நன்றே! (15)


[நுவன்றனன் - சொல்லினன்; ‘மனம் அதன் பாங்கு’ - மனப்பாங்கு (கவிதைக்காக இப்படிப் பிரித்துச் சொன்னேன்!); இவண் - இங்கு, இவ்வுலகில்]

[இக்கடைசி பாடல் முடிவுரை. கண்ணன் தருமனையும் துரியோதனனையும் வைத்து ஆடிய நாடகத்தின் நுட்பம் ‘இவ்வுலகில் நல்லவர் தீயவர் நன்மை தீமை என்று நாம் காணுவதெல்லாம் நமது உளப்பாங்கின் படியே, நாம் நல்லவராய் இருந்தால் நமக்கு அனைவரும் நல்லவராய்த் தெரிவர், அனைத்தும் நன்மையாய் தெரியும், இல்லாவிட்டால் நேரெதிர்’ என்ற இவ்வுண்மையை உணர்ந்து சிறப்பாய் வாழ்வோம்!]

அண்மையில் திரு. சுகி சிவம் அவர்களின் கம்பராமயண உரையில் ஒரு குறிப்பைக் கேட்டேன், அது எனக்கு இந்த என் கவிதையை நினைவுறுத்தியது!

உலகம் என்பதற்குப் பல சொற்கள் உள்ளன (அகிலம், புவி, பூமி, தரணி, தரை, நிலம், மேதினி...) அவற்றுள் ஒன்று ‘பார்’ என்பது.

‘நாம் எப்படிக் பார்க்கிறோமோ அப்படியே தெரிவதால் இது ‘பார்’ எனப்பட்டது’ என்றார். அதாவது நாம் நல்லது என்று பார்த்தால் நல்லதாய்த் தெரியும், தீயது என்று பார்த்தால் தீயதாய்த் தெரியும், எனவே பார்க்கிறபடியே தெரிவது ‘பார்’ என்றானதாம்! என்ன நுட்பம் பாருங்கள்!


இவ்வளவையும் படித்த உங்கள் பொறுமைக்கு ஒரு பெரிய நன்றி... :):)(y)(y)

-வி :cool:
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மிக அருமை சகோ?????????????????எல்லாம் நாம் பார்க்கும் பார்வை யில் உள்ளது
நன்றி சகோ... :):)(y)(y)
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
மாயக் கண்ணன் செய்யும் லீலையை ஏற்கனவே கேட்டிருந்தாலும், அழகான கவிதை நடையில் படிக்க அழகாக உள்ளது சகோ

நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்துதான்..
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மாயக் கண்ணன் செய்யும் லீலையை ஏற்கனவே கேட்டிருந்தாலும், அழகான கவிதை நடையில் படிக்க அழகாக உள்ளது சகோ

நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்துதான்..
நன்றி அக்கா... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top