நல்லதை செய்வோம்!

srinavee

Author
Author
SM Exclusive Author
#1
எங்காயினும் வரும் ஏற்றவர்க்கு இட்டது என்பது, அருணகிரிநாதர் வாக்கு. ஆத்மார்த்தமாக, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் உதவி, ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.


காளிதாசர் முதலான தெய்வீக கவிகளை, தன் அரசவையில் இருக்கச் செய்து ஆதரித்து வந்த, போஜராஜனின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது:


போஜன், அரசாண்ட காலம் அது. விவசாயி ஒருவர், தன் மகளுக்குத் திருமணம் செய்ய தீர்மானித்தார்; கையில் காசில்லை.

விவசாயியின் மனைவி, 'நம் மகாராஜா, தர்மபிரபு, என்ன கேட்டாலும் கொடுப்பார்... அவரிடம் போய், நம் நிலைமையை விளக்கிச் சொல்லுங்கள். உதவி செய்வார்...' என்றவர், தொலை துாரம் செல்ல வேண்டும் என்பதால், ரொட்டிகள் தயாரித்து கொடுத்தார்.

ரொட்டிகளை மேல் வேட்டியில் முடிந்து புறப்பட்ட விவசாயிக்கு பாதி துாரம் போனதும் பசித்தது; அங்கிருந்த குளக்கரையில் உட்கார்ந்து, ரொட்டி மூட்டையைப் பிரித்தார்.

முதல் ரொட்டியை சாப்பிட போன நேரத்தில், ஒரு நாய் வந்தது; எலும்பும் தோலுமாக இருந்த அதன் கண்களில் தெரிந்த பசியைப் பார்த்த விவசாயி, ஒரு ரொட்டியை எடுத்து நீட்டினார்; கவ்விக்கொண்டது.

விவசாயி கையை இழுப்பதற்குள், ரொட்டியை விழுங்கிய நாய், 'இன்னொன்றும் கிடைக்குமா?' என, பார்த்தது. அடுத்த ரொட்டியை நீட்ட, அதுவும் வினாடி நேரத்தில் மறைந்தது. இவ்வாறு ரொட்டிகள் அனைத்தையும், தின்று தீர்த்தது, நாய்.

'அப்பாடா... இதன் பசி தீர்ந்தது. இன்று ஒருநாள் பட்டினி கிடப்பதால், குறைந்தா போய் விடுவோம்...' என்று நினைத்த விவசாயி, பயணத்தை தொடர்ந்தார். மன்னரை வணங்கியவர், மகளின் கல்யாணத்திற்கு பொருளுதவி கேட்டார்.

'அப்படியா... சரி, நீ ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் சொல். அதை நிறுக்க, நான் ஒரு தராசு
வைத்திருக்கிறேன். உன் புண்ணியத்தின் எடைக்கு எடை, பொன் கொடுக்கிறேன்...' என்றார், மன்னர்.


'புண்ணியமா... நான் எங்கு போக... நாய்க்கு ரொட்டி கொடுத்தோமே; ஒருவேளை, அதை புண்ணிய கணக்கில் சேர்க்கலாம்...' என்று எண்ணி, 'மன்னா... நான் ஒரே ஒரு புண்ணியம் செய்திருக்கிறேன்...' என்றார்.

தராசை ஏற்பாடு செய்த மன்னர், 'சரி... நீ செய்த புண்ணியத்தை தராசின் தட்டில் வைப்பதாக கற்பனை செய்து கொள்...' என்றவர், தராசின் அடுத்த தட்டில், சில தங்க நாணயங்களை வைக்கச் சொன்னார். மேலும் மேலும் நாணயங்கள் போட்டும், புண்ணியம் வைத்திருந்த தட்டு கீழேயே நின்றது.

வியந்த மன்னர், 'தெய்வம் தான் நம்மைச் சோதிக்க, விவசாயி வடிவில் வந்திருக்கிறதோ...' என நினைத்து, 'தாங்கள் யார்... உண்மையைச் சொல்லுங்கள்... என்னை சோதிக்காதீர்...' என்றார்.

'மன்னா... நான் ஒரு சாதாரண விவசாயி. பசியாக இருந்த நாய்க்கு, ரொட்டிகளை போட்டேன். அதுவும் ஒரு வேளை தான். இது தான் நான் செய்த புண்ணியம்...' என்றார்.

'இல்லை... நீர் அளவிட முடியாத புண்ணியத்தை செய்திருக்கிறீர்... என் ராஜ்யத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார்.

மறுத்த விவசாயி, தன் மகளின் திருமணத்திற்கு தேவையானதை மட்டும் பெற்றுச் சென்றார்.
நல்லதை செய்தால், நமக்கு முன் அதுபோய் நின்று, நம்மை காக்கும் எனும் உண்மையை விளக்கும் வரலாற்று நிகழ்வு இது.


நல்லதைச் செய்வோம்; நம்மை, அது நின்று காக்கும்!
 

Advertisements

Top