• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான்காம் பாகம் : இளவேனில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
4.31. தியாகம்

அந்தப் புகழ்பெற்ற வருஷத்தில் பாரத புண்ணிய பூமியில் நிகழ்ந்து வந்த அதிசயங்களைப்பற்றி முன் ஓர் அத்தியாயத்தில்
கூறினோமல்லவா? அந்த அதிசயங்களில் எல்லாம் மகா அதிசயம், பாரத நாட்டின் நாரீமணிகள் அந்த வருஷத்தில் கண் விழித்தெழுந்த அற்புதமேயாகும். அதற்கு முன்னாலும் தேசத்தில், "ஸ்திரீகளுக்குச் சுதந்திரம் வேண்டும்", "பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை வேண்டும்" என்ற கிளர்ச்சி ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், அந்த வருஷத்தில் அந்த மாதர் உரிமைக் கிளர்ச்சி ஒரு புதிய ஸ்வரூபம் பெற்றது. அதற்கு அந்தப் புதிய ஸ்வரூபத்தைக் கொடுத்தவர் காந்தி மகான் தான் என்று சொல்ல
வேண்டியதில்லையல்லவா?

அதுகாறும், பாரதத் தாயின் புதல்விகளுக்கு வழிகாட்ட முன் வந்தவர்கள், "உங்கள் சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்", "ஆண்களுடன் சம உரிமைக்காகச் சண்டை பிடியுங்கள்" என்றெல்லாம் உபதேசித்து வந்தார்கள். இந்த உபதேசங்களைக் கேட்ட பாரதப் புதல்விகள் சிலர்,

"கற்புநெறி யென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"

என்றும்,

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"

என்றும் சொல்லிப் பெண்ணுரிமைக்காகப் போராடத் தொடங்கியிருந்தார்கள்.

இத்தகைய மனப்பான்மை பரவிக் கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி தோன்றி, தேசத்துக்கு எல்லாத் துறைகளிலும் புதிய வழி காட்டினார். "உங்கள் சுதந்திரம் அப்புறம் இருக்கட்டும்; நாடு சுதந்திரம் அடையும் வழியை முதலில் பாருங்கள்" என்று அவர் சொன்னார். "தேச சேவையில் ஈடுபடுங்கள்; சிறையில் சுதந்திரத்தைக் காணுங்கள். விலங்கில் விடுதலையை அடையுங்கள்" என்று அவர் உபதேசித்தார். "தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள்; உங்கள் அடிமைத்தனம் தானே விலகிப் போகும்" என்று அவர் உறுதி கூறினார்.

காந்தி மகானுடைய போதனைக்குப் பாரத நாட்டின் பெண்குலம் செவி சாய்த்தது. தேசமெங்கும் ஆயிரக்கணக்கான ஸ்திரீகள் தாய்நாட்டின் தொண்டில் ஈடுபட்டார்கள்; அவர்களில் பலர் சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் நின்றார்கள்; சிறை புகுந்தார்கள்; இன்னும் பல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தார்கள்.

இதனால், சாதாரணமாய் நூறு வருஷத்தில் நடக்கக் கூடிய பெண்குலத்தின் முன்னேற்றம் இந்த ஒரே வருஷத்தில் ஏற்பட்டது. வேறு நாடுகளில் எத்தனையோ காலம் ஸ்திரீகள் ஆண் மக்களுடன் போராடி, சண்டை பிடித்துப் பெற்ற உரிமைகளையெல்லாம் பாரதப் பெண்கள் அநாயாசமாகப் பெற்றுவிட்டார்கள். ஆண்களுடன் சரி நிகர் சமானமாக நின்று தேச விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுக்க எவ்விதம் மறுக்க முடியும்?

கோர்ட்டில் உமாராணி - ஸ்ரீதரன் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், பொது ஜனங்களுடைய அநுதாபமெல்லாம்
உமாராணியின் பக்கம் இருந்ததற்கு முக்கிய காரணம் மேற்கூறிய தேச நிலைமையேயாகும். இது உமாராணிக்கும் தெரியாமலில்லை.
நாட்டில் நடந்து கொண்டிருந்த தேச விடுதலை இயக்கத்தைப் பற்றியும், அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்று சிறை புகுந்த வீரப் பெண்மணிகளைப் பற்றியும் உமாராணி அறிந்து தான் இருந்தாள். வழக்கில் தோற்றுப் போனால் என்ன செய்வது என்று அவளுடைய இருதய அந்தரங்கத்தில் தீர்மானம் செய்திருந்தாள்.

வேண்டாத புருஷனுடன் சேர்ந்து வாழும்படி சட்டம் நிர்ப்பந்தப்படுத்தலாம்; கோர்ட்டும் அவ்வாறே தீர்ப்பளிக்கலாம். ஆனால், அந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் அமுலுக்குக் கொண்டு வர முடியுமா? அது முடியாமல் செய்யும் வழி தனக்குத் தெரியும்! தேச சேவிகையர் படையில் சேர்ந்து சிறை புகுந்துவிட்டால், சிறைக்குள்ளே வந்து தன்னைச் சட்டம் கட்டாயப்படுத்தாதல்லவா? "சிறைக்குள்
சுதந்திரத்தைக் காணுங்கள்" என்று மகாத்மா காந்தி சொன்னது மற்றையோர் விஷயத்தில் உண்மையோ, என்னமோ, தன் விஷயத்தில் அது முற்றும் உண்மையாயிருக்கும் என்று அவள் உறுதி கொண்டாள். சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் கட்டுப்பட்டு, ஸ்ரீதரனுடன்
கூடிவாழ்ந்தால் அதுதான் அடிமை வாழ்வு; அதுதான் கொடிய சிறை வாழ்க்கை. இதற்கு மாறாக, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காகச்
சிறை புகுந்தால், அந்தச் சிறை வாழ்க்கையே உண்மையான சுதந்திர வாழ்க்கையாகும்.
----------------
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
4.32. சாந்தி


சென்னை நகரில் அப்போது அஹிம்சைப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. தேசீய பஜனை ஊர்வலமும் சாத்துவிக
மறியலும் தடை செய்யப்பட்டிருந்தன. இந்தத் தடை உத்தரவுகளை மீறி தேசத் தொண்டர்களும் தேச சேவிகளும் சிறை புகுந்து
கொண்டிருந்தார்கள்.

அன்று சிறை புகுவதற்குத் தயாராய்க் கிளம்பிய தேச சேவிகைகளுடன் சாவித்திரியும் சேர்ந்து கொண்டாள். அவர்கள் தேசியக்
கொடி பிடித்துக் கொண்டும், தேசிய பஜனை செய்து கொண்டும் சென்னை நகரின் வீதிகளில் ஊர்வலம் வந்தார்கள். கொஞ்ச
நேரத்துக்கெல்லாம் அவர்களுக்கருகில் போலீஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. வண்டியுடன் வந்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் தேச
சேவிகைகளைக் கைது செய்து வண்டியில் ஏறச் சொன்னார்கள்.

வண்டி கிளம்பிக் கொஞ்ச தூரம் சென்றதும், கடை வீதியில் இன்னொரு போலீஸ் உத்தியோகஸ்தர் கையைக் காட்டி வண்டியை
நிறுத்தினார். அந்த இடத்தில் ஜனக் கூட்டம் சேர்ந்திருந்தது. "இந்த வீதியில் தான் மறியல் நடக்கிறது" என்று கைதியான தேச
சேவிகைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

வண்டி நின்ற இடத்தில், போலீஸ்காரர்களால் சூழப்பட்டுச் சில தேசத் தொண்டர்கள் நின்றார்கள். அவர்களையும் அந்த வண்டியில்
ஏற்றிக் கொள்ள முடியுமா என்று கீழே நின்ற போலீஸ் உத்தியோகஸ்தர் கேட்டார். வண்டியோடு வந்த போலீஸ் ஸார்ஜெண்ட்,
'இடமில்லை' என்று சொல்லவே, வண்டி மறுபடியும் கிளம்பியது.

இப்படி போலீஸ் வண்டி அங்கே நின்ற ஒரு நிமிஷத்தில், சாவித்திரியின் வாழ்க்கையில் ஒரு மகத்தான சம்பவம் நடந்துவிட்டது.
வீதியில் கைது செய்யப்பட்டு நின்ற தேசத் தொண்டர்களின் மீது சாவித்திரியின் பார்வை சென்றபோது, அவர்களுக்கு மத்தியில்
ஸ்ரீதரனும் நிற்பதைக் கண்டாள். அவனுடைய உடை மாறியிருந்தது போலவே முகத்தோற்றமும் மாறியிருப்பதைப் பார்த்தாள்.
சாவித்திரியின் தேகம் புளகாங்கிதம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் துளித்தது.

அதே சமயத்தில் ஸ்ரீதரனும் போலீஸ் வண்டிக்குள் பார்த்தான். அங்கே தேச சேவிகைகளின் மத்தியில் சாவித்திரியைக் கண்டு
அளவிலாத வியப்படைந்தான்.

சொல்ல முடியாத ஆதுரத்துடன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். "பிரிந்தவர் கூடினால் பேசவும்
வேண்டுமோ?" என்ற கவியின் வாக்குக்கு அப்போது அவர்களுடைய நிலைமை மிகவும் பொருத்தமாயிருந்தது. உண்மையில்,
இத்தனை நாளும் பிரிந்திருந்தவர்கள் அந்த நிமிஷத்திலே தான் ஒன்று கூடினார்கள். அதாவது, அவர்களுடைய இருதயங்கள்
ஒன்றுபட்டன. இரண்டு ஜீவன்களுடைய இதயங்கள் ஒன்றுபட்டனவென்றால், அவர்களுடைய தேகங்கள் வட துருவத்திலும் தென்
துருவத்திலும் இருந்தால் தான் என்ன? அவர்களை யாரால் பிரித்து வைக்க முடியும்?

அந்த நிமிஷத்தில் ஸ்ரீதரனுக்கும் சாவித்திரிக்கும் புனர் விவாகம் நடந்தது என்று சொல்லலாம். ஏற்கெனவே, பெரியோர்களுடைய
வற்புறுத்தலினால் தேக சம்பந்தமான விவாகம் அவர்களுக்கு நடந்திருந்தது. இன்றைய சுபதினத்தில், அவர்களுடைய ஆத்மாக்கள்
ஒன்றையொன்று மணந்து கொண்டன. இந்த ஆத்மீக விவாகத்துக்கு பாரத மாதாவும் காந்தி மகாத்மாவுமே சாட்சிகளாயினர்.

போலீஸ் வண்டிக்குள்ளிருந்த தேச சேவிகைகள், "ஜய ஜய பாரத!" என்று கோஷித்தார்கள். வெளியில் நின்ற தேசத் தொண்டர்கள்,
"மகாத்மா காந்திகி ஜே!" என்று ஆர்ப்பரித்தார்கள்.

மறுநாள் 'வஸந்த விஹார'த்தில் குழந்தை சாரு தனியாக உட்கார்ந்து சாவித்திரியின் படத்தை வைத்துக் கொண்டு, "அம்மா!
என்னையும் நீ அழைச்சுண்டு போயிருக்கக்கூடாதா? நானும் உன்னோடே வந்து ஜெயிலிலே இருக்க மாட்டேனா?" என்று சொல்லிக்
கொண்டிருந்தாள். அவளைத் தேடி வந்த சம்பு சாஸ்திரி, குழந்தையைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, "கண்ணே சாரு! ஒரே
சமயத்தில் உனக்கு அப்பாவும் அம்மாவும் கிடைத்தார்கள். அவாள் இரண்டு பேரையும் ஒரே நாளில் இழந்துட்டே! ஆனால், நீ
இதுக்காக வருத்தப்படாதே, குழந்தை! நல்ல காரியத்துக்குத்தான் அவாள் போயிருக்கா. சீக்கிரத்திலே திரும்பி வந்துடுவா.
அதுவரைக்கும் நாம் நம்முடைய பழைய இடத்துக்கே போகலாம் வா, அம்மா! இந்தப் பங்களா எல்லாம் நமக்கு லாயக்கில்லை. சாவடிக்
குப்பம் தான் நமக்குச் சரி!" என்றார்.

தியாக பூமி முடிந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top