நாரத புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
இப்புராணம் பற்றி….

இப்புராணம் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி நாரதருக்குக் கூறப்பட்டதாகும். 2ஆம் பகுதி மாந்தாதா என்ற மாமன்னனுக்குக் கூறப்பட்டதாகும்.

முதற்பகுதியில் வர்ணாஸ்ரம தர்மம், ஆசாரம், சிரத்தை பிராயசித்தம் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. மேலும் வேத அங்கங்கள் ஆறு பற்றியும், சர்வதர்ஷன சங்கரகம் என்ற பெயருள்ள தத்துவங்களின் தொகுப்புப் பற்றியும் கூறுகிறது. அன்றியும் இராமன், கிருஷ்ணன், சிவன், காளி அனுமன் ஆகியவர்களின் மந்திரங்கள் பற்றியும் பேசுகிறது.

இரண்டாவது பகுதி ருக்மாங்கதன் வரலாறு, பாஞ்சராத்ரா ஆகம அடிப்படையில் வைணவர்கள் மேற்கெள்ள வேண்டிய அனுஷ்டானங்கள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது.

பல்வேறு சாத்திரங்களின் உட்பொருளைக் கூறுவதால் இந்தப் புராணம் மிக முக்கியமானதாகும். புராணங்களின் வளர்ச்சி, வரலாற்றை அறிவதற்கும், இப்புராணம் பயன்படுகிறது. மற்ற புராணங்களின் பாடல்களின் சுருக்கமான வரலாற்றை இப்புராணம் விரித்துரைக்கிறது. இதனால் அந்தந்தப் புராணங்களில் எவ்வளவு இடைச்செருகல்கள் பிற்காலத்தில் புகுந்துள்ளன என்பதை அறிய இப்புராணம் உதவுகிறது. நாரத, அக்னி, கருட புராணங்கள் மூன்றும் ஒரு களஞ்சியம் போல் பற்பல விஷயங்களையும் அறிய உதவுகின்றன. பல்வேறு சடங்குகளைச் செய்யும் முறை இப்புராணங்களில் விரித்துப் பேசப்படுகிறது. இப் புராணம் விஷ்ணுவே சிவம் என்றும், சக்தி என்றும் பேசுவதால் குறுகிய நோக்கம் உள்ள சமய நூல் அன்று என்று தெளிய உதவுகிறது.

நாரதர் பிரம்மனின் மனத்தில் பிறந்த மகனாவார். ஒயாது நாராயணனின் பெருமையைப் பாடிக்கொண்டு உலகம் சுற்றுபவராகப் பேசப்படுகிறார். கீர்த்தனைகள் என்று இன்று வழங்கப்படும் பாடல் முறையை முதலில் தோற்றுவித்தவர் நாரதரே ஆவார். எல்லா தெய்வங்கள் பற்றியும் அவர் தோற்றம், இயல்பு செயல்கள் என்பவை பற்றிக் கீர்த்தனை வடிவில் நாரதர் பாடுவதாகப் பல பாடல்கள் உள்ளன. கீர்த்தனை என்பது ஒரு தனி மனிதனின் இசைக் கச்சேரியாகும். இதன் பயன் சொல்லப்பட்ட விஷயங்கள் பொது மக்களை ஈர்க்கும் வகையில் அமைவதாகும். நாரத புராணத்தில் உள்ள கீர்த்தனைகள் பிற்காலத்தில் பவ கீர்த்தனைக்காரர் களை உருவாக்கிற்று. எழுத்தறிவில்லாதவர்கள் கூடக் கீர்த்தனைகளை இயற்றவும், செவி வழியாகக் கேட்ட கீர்த்தனைகளைப் பாடவும் பழகி இருந்தனர். கிராமம் கிராமமாகச் சென்று இறைவன் புகழ்பாடும் கிர்த்தனை களைப் பாடிப் பொதுமக்களைக் கவர்ந்தனர். இப்படிப் பாடும் இவர்களில் தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கூடப் பலர் இருந்தனர். இவ்வாறு பாடும் இவர்களுக்கு நாரதர்கள் என்ற பெயர் வழங்கிற்று. இதில் ஒரு வியப்பென்னவென்றால், நாரதர்கள் என்ற பெயருடன் இவர்கள் பாடும்பொழுது பிராமணர்கள் உள்பட பலரும் இவர்களை வணங்கி வரவேற்றனர். வியாசர் வால்மீகி, சுகர் ஆகிய மகான்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு இந்த நாரதர்களிடையே இருந்து வந்தது. ஆதிநாரதர், வேதங்கள் முதலானவற்றின் உட்பொருளை எல்லாம் கீர்த்தனை வடிவில் வெளியிட்டதுடன் இறையன்பு, இறைபக்தி முதலியவற்றை மக்கள் மனத்தில் தோற்றுவிக்கும் பெரிய ஆசிரியராக இருந்தார். நாரத பாஞ்சராத்திரம் என்ற நூல் இறைவனுக்கு செய்யும் தொண்டைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அத்தகைய நூலின் ஆசிரியர் நாரதர் என்று சொல்லப்படுகிறது. உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பெருமுயற்சி செய்து தாங்கள் விரும்பும் பொருளை அடைய விரும்புகிறார்கள். இந்த முயற்சியின் பயன், 'பொருளை அடைவது என்றே பலரும் கருதினர். நாரத பாஞ்சராத்திரம் அடைகின்ற பயனைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனிடத்து அன்பு செலுத்துவதையே பெரிதாகக் கூறுகிறது. பொருளை அடைய விரும்பி முயற்சி செய்பவர்கள் அந்த முயற்சிக்குப் பலன் கிட்டாதபோது பெரும் வருத்தமும், ஏமாற்றமும் அடைகிறார்கள், முயற்சியையே கூட விட்டு விடுகிறார்கள். இதன் எதிராக பலனைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்களைச் செய்தால், ஏமாற்றத்திற்கு வழியே இல்லை. மனமகிழ்ச்சியும் குறையப் போவதில்லை. இதனையே நாரதர் உபதேசிக்கிறார்.
பிரம்மனின் மானசீக புத்திரராகிய நாரதர் எல்லோரையும் போலத் திருமணம் செய்துகொண்டு சந்ததியை வளர்க்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் நாரதர் அதற்கு இடம் கொடாமல், வினை போன்று ஒர் வாத்தியத்தைக் கையில் வைத்துக் கொண்டு இறைவன் சம்பந்தமான புகழைக் கேட்பவர் நெஞ்சுருகப் பாடிக் கொண்டு பல இடங்களிலும் சுற்றி வரலானார். பொறி புலன்களின் மூலம் பெறும் இன்பம் அப்போதைக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அது நிலை பெற்று இருப்பதில்லை. அந்த மகிழ்ச்சி முடிந்தவுடன் ஏக்கத்தையும், துன்பத்தையுமே தருகிறது. இதன் எதிராக, முடிவில்லாத ஆனந்தத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு இறைவன் புகழைப் பாடுவதுதான் சிறந்த வழி என்று நாரதர் சுட்டிக்காட்டினார். பொறி புலன்கள் மூலம் பெறும் இன்பம் உண்மையான இன்பமல்ல, அது மாயையே ஆகும்.

நாரதீய சம்ஹிதை நாரதீய மகாபுராணம், நாரதிய பக்தி சூத்திரம் என்பன போன்ற பல நூல்களை இவர் இயற்றினார் என்று கூறுகிறார்கள். அவருடைய வாழ்க்கையின் கொள்கை, ஒருவன் எவ்வித சந்தேகத் திற்கும் இடம் கொடாமல் முழு நம்பிக்கையுடன் இறைவன் புகழை மனமுருகிப் பாட வேண்டும், எனபதாகும.

முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில், ஒரு மாபெரும் முனிவர்கள் சபை கூடியது. பிரசித்தி பெற்ற இருபத்து ஐயாயிரம் முனிவர்களுக்கு மேல் அங்குக் கூடினார்கள். இவர்களை அல்லாமல் இவர்கள் சீடர்கள் பலரும் இக்கூட்டத்தில் இருந்தனர். பரப்பிரம்மத்தைப் பற்றி ஆராய்வதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பெற்றது. கூட்டம் தொடங்குகையில் செளனகர் எழுந்து, 'நாம் கூடியிருக்கும் இடத்திற்கு அருகாமையில் மற்றொரு ஆசிரமம் இருக்கிறது. அந்த ஆசிரமத்தில் லோமஹர்ஷனர் மகன் சுதா என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேதவியாசரிடம் பயின்றவர். புராணங்களைப் பற்றி நன்கு அறிந்தவர். நாம் அவரிடம் சென்றால் ஏதோ ஒரு புராணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறியதை ஏற்றுக் கொண்ட முனிவர்கள் அனைவரும் முனிவர் சுதாவின் ஆசிரமத்தை நாடிச் சென்றனர்.

சுதா முனிவர் இவர்களை வரவேற்றார். விருந்தினர்களாகிய தங்களுக்கு வேண்டியதை முனிவர் தரவேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர். என்ன வேண்டும் என்று சுதா முனிவர் கேட்க, 'வியாசரிடம் கற்ற நீங்கள், புராணங்களின் உண்மையான ஞானத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். முனிவரும் அதற்கு இசைந்தார். நாரதர், சனத்குமார முனிவருக்குச் சொல்லியது தான் இந்த நாரத புராணம். புராணங்களைக் கேட்பதால் ஒருவன் செய்த பாவம் போகும். நாரத புராணத்தில் ஒரு பாடலைக் கேட்டால் கூட அன்று செய்த பாவம் போய்விடும். எனவே, நாரத புராணத்தைக் கேட்பது மிகப் பயனுடையது” என்று கூறத் தொடங்கினார்.

நாரத புராணத் தொடக்கம்

பிரம்மாவின் பிள்ளைகளாகிய சனகர், சனந்தனர், சனத்குமாரர். சனாதனர் ஆகிய நால்வரும் ஞானத்தைத் தேடித் தவம் மேற்கொண்டிருந்தனர். ஒருமுறை பிரம்ம லோகத்தில் கங்கையின் உபநதியாகிய சீதா என்ற ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நாரதர் அங்கே வந்து சேர்ந்தார். இவர்கள் நால்வரும் அவரை வணங்கி, "நாரதரே! தாங்கள் எங்கும் உள்ளவர், எல்லா இடங்கட்கும் சென்று சுற்றி வருபவர். எல்லா இடங்களிலும் நடைபெறும் எல்லாக் காரியங் களையும் பார்த்தவர். ஆகவே விஷ்ணு பக்தராகிய தாங்கள். விஷ்ணுவை நாங்கள் எவ்வாறு தியானிக்க வேண்டும், எவ்வாறு பூசிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று கூறினார்கள். உடனே நாரதர், நாரத புராணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
நாரத புராணம்

ஆதியில் பரப்பிரம்மம் ஒன்று மட்டுமே எங்கும் நிறைந் திருந்தது. அந்த பரப்பிரம்மம் வடிவமற்றது; உருவமற்றது; குணங்களல்லாதது; வருணனைக்கப்பாற்பட்டது. அந்த பரப்பிரம்மம் பிரபஞ்சத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்தது. உடனே தனது வலப் புறத்திலிருந்து பிரம்மனையும், நடுப் பகுதியில் இருந்து சிவனையும், இடப் பகுதியில் இருந்து விஷ்ணுவையும் தோற்றுவித்தது. படைத்தல் தொழிலை பிரம்மனும், அழித்தல் தொழிலை சிவனும், காத்தலை விஷ்ணுவும் மேற்கொண்டனர்.

மக்கள் சில சமயங்களில் மூலப் பரம்பொருளை பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று பெயர்களில் ஏதாவது ஒரு பெயராலேயே அழைக்கின்றனர். இவ்வாறு கூறுவது ஒரு மாயையாகும்.

பரம்பொருள்- பரப்பிரம்மத்தின் ஒரு பகுதியாக சக்தி இருக்கிறது. இச்சக்தி ஞானம் (வித்யா), அஞ்ஞானம் (அவித்யா) என இரு கூறுகளாக உள்ளன. அறிவிற் சிறந்த பெரியோர் பரப்பிரம்மத்தின் இந்த இயல்புகளைச் சிந்திக்கின்றனர். மெய்ஞ்ஞானம் என்பது பரப்பிரம்மத்திற்கும். பிரபஞ்சத்திற்கும் உள்ள ஒற்றுமையை அறிவதாகும். இந்த ஒற்றுமையை அறியாமல் இருப்பதே அறியாமை என்று சொல்லப்படும். இந்த அறியாமையே ஒருவனை எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாக்குவது. சக்தி ஒன்றாகவே இருப்பினும் பல பெயரிட்டு அழைக்கப்படுகிறது. விஷ்ணுவுடன் சேர்க்கும் பொழுது இலட்சுமி என்றும், சிவனுடன் சேர்த்துப் பேசும்பொழுது உமா அல்லது பார்வதி என்றும், பிரம்மனுடன் சேர்த்துப் பேசும் பொழுது சரஸ்வதி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இத்தனைப் பெயர்களைத் தாங்கியுள்ள சக்தி ஒன்றேயாகும்.

ஆக்கல் தொழிலை சரஸ்வதியும் பிரம்மனும் சேர்ந்தே செய்கின்றனர்; காத்தல் தொழிலை விஷ்ணுவும் லட்சுமியும் சேர்ந்தே செய்கின்றனர்; அழித்தல் தொழிலை சிவனும் பார்வதியும் சேர்ந்தே செய்கின்றனர். இந்த மூன்று பேர்களோடும் கூடிய இப்பெருஞ் சக்தியை 'மகாமாயா' என்றும், பிரகிருதி என்றும் சொல்கிறார்கள். இப்பிரபஞ்சம் என்பது, வித்தி (நிலம்); அப (நீர்); தேஜா (தீ); மருத் (காற்று); வியோமா (ஆகாயம்). இப்பிரபஞ்சம் பதினான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் உலகங்கள் ஏழும், கீழ் உலகங்கள் ஏழும் அப்பகுதிகளாகும். இந்தப் பதினான்கு உலகங்களும் அவ்வவற்றிற்குரிய மலைகள், காடுகள், ஆறுகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளன. நில உலகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன: ஜம்புதுவிபம், பலக்ஷதுவிபம், ஷல்மலது.விபம், குஷதுவிபம், கிரெளஞ்சதுவிபம், சகதுவிபம், புஷ்கரதுவிபம் ஆகும். பூலோகத்தில் ஏழு கடல்கள் உள்ளன. அவை: லவண. இக்சு, சுரா, சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவை ஆகும்.

பாரத வர்ஷா ஜம்புதுவிபத்தில் உள்ளது. இது தெற்குப் பகுதியில் லவணக் கடலால் சூழப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் இமயமலை உள்ளது. பாரத வர்ஷா வாழ்வதற்கு கர்மபூமி என்றால் செயல்கள் நிகழ்வதற்குரிய இடம் என்று பொருளாகும். இந்தக் கர்மபூமியில் செய்யும் காரியங்களுக்குரிய பயனை அனுபவிக்கும் இடம்தான் போக பூமி எனப்படும். இந்த பாரத வர்ஷமாகிய கர்ம பூமியில் செய்யப்படும் காரியங்கள், பலாபலன்கள் இங்கே கிடைப்பதில்லை. இங்கு செய்யப்படும் நற்காரியங்களுக்குச் சொர்க்கத்தில் சென்று இன்பத்தை அனுபவிக்கும் பயன் கிடைக்கிறது. இங்கு செய்யப்படும் தீய காரியங்களுக்கு நரகத்தில் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

பாரத பூமியில் பிறப்பதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மிகுந்த அளவில் நன்மைகளைச் செய்வதற்குரிய வாய்ப்பும் சந்தர்ப்பங்களும் பாரத பூமியில்தான் உள்ளன. இந்த நல்ல இடத்தில் பிறந்தும் நல்ல காரியங்களைச் செய்யாமல் இருப்பது ஒரு குடம் அமிர்தத் திற்குப் பதிலாக ஒரு குடம் விஷத்தை வாங்குவது போலாகும். சொர்க்கத்தில் சென்று இன்பம் அனுபவிக்க வேண்டுமானால், இந்தக் கர்ம பூமியில் ஓயாது ஒழியாது, ஊக்கத்துடன் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். இவ்வாறு சொல்லியவுடன் சொர்க்கப் பயனை அனுபவிக்க வேண்டும் என்ற பயனைக் கருதியே இங்கு நற்காரியங்கள் செய்தல் கூடாது. பலனைப் பற்றிச் சிந்திக்காமல் நற் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே சிறப்புடையதாகும். பலனில் பற்று வைக்காமல் செயல்களில் ஈடுபடுவதை நிஷ்காம கர்மம் என்று கூறுவர். செயல்களின் பயன் அனைத்தும் விஷ்ணுவிடம் உள்ளன.

மிருகண்டு முனிவரின் கதை

நம்பிக்கையும், முழு ஈடுபாடும் கொண்டு செய்யப்படும் வழிபாட்டையே விஷ்ணு ஏற்றுக் கொள்கிறார். இவை இரண்டும் இல்லாதவர்கள் எவ்வளவு நைவேத்தியம் செய்து வழிபட்டாலும் விஷ்ணு அவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. நம்பிக்கையும் ஈடுபாடும் தாய் போன்றது. குழந்தைகள் தாயிடம் சென்று அடைக்கலம் புகுவது போல, விஷ்ணு பக்தி உடையவர்கள் அடைக்கலம் புகுவது பக்தி, ஈடுபாடு என்ற இவற்றிடையேயாகும். இதைத்தான் மார்க்கண்டேயரிடம் விஷ்ணு கூறினார்.

கதை செல்லிக் கொண்டு வரும் நாரதரை இடைமறித்து, "மார்க்கண்டேயர் என்பவர் யார்? விஷ்ணு அவரிடம் என்ன சொன்னார்?' என்று சனத்குமாரர் கேட்டார். மிருகண்டு, மார்க்கண்டேயர் என்பவர்களின் கதையை நாரதர் சொல்ல ஆரம்பித்தார்.

சலகிரமா தீர்த்தக்கரையில், மிருகண்டு முனிவர் விஷ்ணுவைக் குறித்து நீண்டகாலம் தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் ஆற்றல் பெருகப் பெருக இந்திரனும் தேவர்களும் பயந்தனர். மிருகண்டு தவத்தின் முடிவில் விஷ்ணு தோன்றினால், இந்திரப் பதவி வேண்டும் என்று கேட்டு, ஆட்சியிலிருந்து தன்னைத் தள்ளிவிடுவாரோ என்று இந்திரன் பயந்தான். தேவலோகத்திலிருந்து தங்களை எல்லாம் மிருகண்டு விரட்டி விடுவாரோ என்று தேவர்கள் பயந்தனர். ஆகவே இந்திரனும் தேவர்களும், விஷ்ணுவிடம் சென்று தங்கள் பயத்தை வெளிப்படுத்தி, ஒரு வழி சொல்லுமாறு வேண்டினர். அவ்வாறு சென்று பார்க்கும்போது விஷ்ணு பஞ்ச ஆயுதங் களுடன், கோடி சூரியப் பிரகாசமுடைய உடம்புடன் தாமரை போன்ற கண்களுடன் மஞ்சள் பீதாம்பரத்துடன் காட்சி தந்தார்.

தேவர்களின் வேண்டுதலைக் கேட்டு விஷ்ணு, “உங்களுக்குக் கவலை வேண்டாம். மிருகண்டுவை நான் அறிவேன். அவர் இவற்றிற்கெல்லாம் ஆசைப்படுபவர் அல்லர். நீங்கள் கவலை இல்லாமல் போங்கள். தீயவர்கள் கடுந்தவம் இயற்றினால் நீங்கள் பயப்படுவது நியாயம். அந்தத் தவத்தின் பயனாகப் பதவி பிடிக்கும் வேட்டையில் அவர்கள் இறங்கி விடுவார்கள். ஆனால் மிருகண்டு அத்தகையவர் அல்லர்” என்று சொல்லி அனுப்பினார்.

இதன் பிறகு இதே கோலத்துடன் மிருகண்டு முனிவர் முன் விஷ்ணு தோன்றினார். இந்தக் கோலத்தை தரிசித்த மிருகண்டு முனிவர் விஷ்ணுவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். "ஐயனே! தேவர்கள் முதலானவர்கள் உன்னைத் தரிசிப்பதற்குத் தவம் கிடக்கிறார்கள். அவர்களால் காண்பதற்கரிய நீ என்னை நாடி வந்தது. என் முன்னே நிற்பது என் மிகப் பெரிய பேறாகும்” என்றார். விஷ்ணு, “முனிவரே! உன் தவத்தை மெச்சினோம். வேண்டிய வரத்தைக் கேட்பாயாக!” என்றார். முனிவர் ‘ஐயனே! தங்களை நேரே தரிசனம் செய்யும் பேறு கிடைத்த பிறகு இதைவிட மேலான ஒன்று எதுவும் இல்லை. ஆதலால் எனக்கு எந்த வரங்களும் தேவை இல்லை. தங்கள் தரிசனம் ஒன்றே போதுமானது" என்றார். விஷ்ணு, “முனிவரே! ஒரு பக்தனிடம் விஷ்ணு சென்றார், ஆனால் வரம் ஒன்றும் தரவில்லை என்ற பெயர் எனக்கு உண்டாக வேண்டாம் நீயே கேட்காவிட்டாலும், நானே ஒரு வரத்தைத் தரப்போகிறேன். உம்முடைய வம்சத்தில் நான் வந்து தோன்றப் போகிறேன். அது உம்முடைய வம்சம் செய்த பெரும் புண்ணியமாகும்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

மார்க்கண்டேயர்

விஷ்ணுவின் அருளால் மிருகண்டு முனிவரின் புத்திரனாகப் பிறந்தார். மிகவும் இளம் வயதிலேயே வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் பயின்று விற்பன்னராகிவிட்டார். மார்க்கண்டேயர் பிரளய காலத்தில் நீரின் மேல் படுத்துக் கிடக்கும் வாய்ப்பைப் பெற்றார். பல்லாயிரக்கணக்கான வருடங்கள் இப்படியே நீரில் மிதந்தமையால், நீரைக் கண்டு ஒருவித அச்சமடைந்தார். அந்நிலையில் விஷ்ணு அவர் முன் தோன்றி, "நீ என்னுடைய சிறந்த பக்தன், உன்னைக் கைவிட மாட்டேன்” என்று கூறிவிட்டு, விஷ்ணு பக்தர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று சில அடையாளங்களைக் கூறினார். விஷ்ணு பக்தர்கள் பொறாமை, காழ்ப்புணர்ச்சி என்ற இரண்டும் அற்றவர்கள். எல்லா உயிர்களையும் போற்றி அன்பு செய்பவர்கள். அவர்கள் மனம், வாக்கு, காயங்களால் மறந்தும் பிறர்க்குத் தீமையை நினைக்க மாட்டார்கள்; சொல்ல மாட்டார்கள் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சமாதான விரும்பிகள். ரிஷிகள், முனிவர்கள், பெரியோர்கள் ஆகியோரிடம் அன்பு பூண்டு பணி செய்வார்கள். அவர்கள் கோயில் கட்டுதல் என்ற நற்பணியுடன் மக்களுக்குத் தேவையான குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலைகள் அமைத்தல் ஆகிய தொண்டுகளையும் செய்வார்கள். அவர்கள் புராணங்களைப் படிப்பதுடன், அவற்றை விளக்கமாகப் பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள். உண்மையைச் சொன்னால், உண்மையான விஷ்ணு பக்தனுடைய எல்லாப் பண்புகளும் உன்னிடம் நிறைந்துள்ளன.

விஷ்ணுவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயர் சலகிரமா என்ற தீர்த்தக்கரையில் பெருந்தவம் இயற்றினார். மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்துவத்தை விஷ்ணுவிடம் பெற்றார் என்று சில புராணங்களும், பிரம்மாவிடம் பெற்றார் என்று சில புராணங்களும் கூறுகின்றன.

கங்கை - யமுனை *******

தீர்த்தங்களுள் சிறந்தது கங்கை. அடுத்த நிலையில் இருப்பது யமுனை. இவை இரண்டும் சங்கமிக்கின்ற இடம் மிக மிகப் புண்ணியமானது என்பார்கள். இந்தச் சங்கமத்தில் குளிப்பவர்கள் நோயற்ற உடம்பையும், மிக நீண்ட ஆயுளையும் பெறுவர். தேவர்கள்கூட இந்தச் சங்கமத்தில் வந்து குளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கங்கை, விஷ்ணுவின் பாதத்தில் இருந்து புறப்படுகிறது. யமுனை, சூரியனின் புத்ரி ஆகும். எனவே இவை இரண்டும் மிகப் புண்ணியமான தீர்த்தம் என்பதை அறிந்து கொள்ளலாம். கங்கையில் சென்று நீராட முடியாதவர்கள் கூட கங்கா தேவியை மனத்தினால் நினைத்தாலே அவர்கள் பாவம் போய்விடும்.

பிரயாகை என்ற இடம் கங்கைக் கரையில் உள்ளது. இந்த இடத்தில் பிரம்மரே தவம் செய்தார் என்றால், இதன் பெருமையை அறிந்து கொள்ளலாம். பல தீர்த்தங்களில் சென்று நீராடியதன் பயனைப் பிரயாகையில் உள்ள கங்கைத் தண்ணீரின் சில சொட்டுகளே தரமுடியும். இந்தச் சில சொட்டுத் தண்ணிர் ஏனைய தீர்த்தங்களில் கிடைக்கும் புண்ணியத்தைவிடப் பதினாறு பங்கு அதிகமாகும். கங்கைக் கரையில் உள்ள களிமண்ணை எடுத்துத் தலையில் பூசிக் கொள்பவர்கள் சிவனே ஆகிறார்கள். திருமாலுக்கு மூன்று பொருள்கள் மிக முக்கியம். 1. கங்கை, 2. துளசி, 3. திருமால் அடியார்களின் பாதத் துளி.

கோதாவரி, சரஸ்வதி, காளிந்தி, காவேரி, கிருஷ்ணா, ரேவா, வகுதா, துங்கபத்திரை, பீமரதி, வேத்ரவதி, தாமிரபரணி, விடத்ரு ஆகிய நதிகளிலும் கங்கை கலந்திருக்கிறாள்.
 
sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
வஹீ

விருகா என்ற மன்னனின் மகனாகிய வஹீ மிகச் சக்தி வாய்ந்த பேரரசனாவான். உலகங்களை எல்லாம் ஜெயித்துத் தன் குடைக்கீழ் கொண்டு வந்ததுடன் நில்லாமல், ஏழாகப் பிரிந்துள்ள ஒவ்வொரு துவிபத்திலும் சென்று அஸ்வமேத யாகம் புரிந்தான். தொண்ணுறாயிரம் ஆண்டுகள் அவன் ஆட்சி நேர்மையாக நடைபெற்றது. ஒருவன் அழிவிற்குக் காரணம் நான்கு என்று சொல்லப்படுகிறது. இளமை, அதிகமான செல்வம், குவிந்துவிட்ட அதிகாரம், எதிரது நோக்கும் அறிவின்மை என்ற இந்த நான்கும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆண்ட வஹீயிடம் சேர்ந்தன. ஆணவம் தலைக்கேறியது. என்னைப்போல் இதுவரை யாரும் இருந்ததில்லை. நானேதான் கடவுள் என்று எண்ணிக் கொண்டு எல்லை மீறி நடக்கத் தொடங்கினான். லட்சுமி அவனை விட்டுப் போய்விட்டாள். பகை அரசர்கள் காலம் பார்த்திருந்தார்கள். ஹைஹய மன்னனும், தலஜங்க மன்னனும், வஹியுடன் போர் செய்து தோற்கடித்தனர். அரசை இழந்த வஹீ காட்டிற்கு ஓடினான். அவனுடைய மனைவியும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

காலங் கடந்த நிலையில் வஹீ தன் பிழைகளை நினைந்து வருந்தினான். முதுமை அவனைப் பற்றிக்கொண்டது. கடைசியாக அந்த வறுமை நிலையில் வஹீ இறந்து விட்டான். அப்போது அவன் சேர்ந்திருந்த இடம் அவுர்வ முனிவரின் ஆசிரமம் ஆகும். இறந்த கணவனுடன் அக்னிப் பிரவேசம் செய்ய அவன் மனைவி முடிவு செய்தாள். ஆனால் அவுர்வ முனிவர், "மகளே! இப்பொழுது நீ கருவுற்றிருக்கிறாய். கருவுற்ற நிலையில் உடன்கட்டை ஏறுவது கொலை புரிதலை ஒத்த பாவமாகும். உன் வயிற்றில் பிறக்கப் போகும் குழந்தை பெரிய அரசனாகப் போகிறான். ஆகவே தீப்பாயும் எண்ணத்தை விட்டுவிடு' என்று கூறினார்.

அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்ட யாதவி தன் எண்ணத்தைக் கைவிட்டு வஹீவிற்கு இறுதிக் கடன்கள் செய்தாள்.

செளதசாவின் கதை

இக்கதை ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கூறப் பட்டுள்ளது. அக்கதையின் தொடர்ச்சியினை இங்கு தருகிறோம்.

சாபத்தால் ராட்சசனாகி விட்ட செளதசா அலைந்து திரியும் பொழுது, நர்மதை ஆற்றங்கரையில் ஒரு முனிவரின் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் சென்றான். உண்ணவேண்டும் என்று அவரைப் பற்றிக் கொண்டான். முனிவரின் மனைவி தன் தவ வலிமையால் இந்த அரக்கனின் பழைய வரலாற்றைக் கூறி, "நீ செளதசா என்ற மன்னன். சாபத்தால் இந்த நிலையை அடைந்தாய். என் கணவராகிய முனிவரைத் தின்று பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம். அவரை விட்டு விடு' என்று கெஞ்சினாள். அரக்கனாகிய செளதசா அவள் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அம்முனிவரைத் தின்று விட்டான். அதுகண்டு பொறாத முனிவரின் மனைவி இரண்டு சாபங்களைத் தந்தாள். முதலாவது: அரக்கனே! உன் சாபம் நீங்கி நீ செளதசாவாக ஆனபிறகும் உன் மனைவி முகத்தில் எப்பொழுது விழிக்கிறாயோ அப்பொழுதே இறந்து விடுவாய். 2. வசிட்டர் கூறிய பன்னிரண்டு வருடங்களோடு இல்லாமல், மிக நீண்டகாலம் ராட்சசனாகவே இருக்கக் கடவாய் என்பது.

முனிவர் மனைவியின் இரண்டு சாபங்களையும் கேட்ட செளதசா அரக்கன். “அம்மா! நான் உங்கள் கணவரைத் தின்று ஒரு குற்றம் புரிந்தேன். அதற்கு ஒரு சாபம் தருவது நியாயம். இரண்டாவது சாபம், காரணம் இல்லாமல் உங்கள் ஆத்திரத்தின் விளைவால் கொடுத்தீர்கள். எனவே இப்பொழுது நான் உங்களைச் சபிக்கிறேன். நீங்கள் இந்த விநாடியிலிருந்து பிசாசாக மாறி அலைவாயாக’ என்று சாபம் கொடுத்தான். உடனே முனிவரின் மனைவி பிசாசாக மாறிவிட, செளதசா அரக்கனும் முனிவரின் மனைவியாகிய பிசாசும் காட்டில் அலைந்து திரிந்தனர். இறுதியாக ஓர் ஆலமரத்தடியில் இருவரும் சென்று தங்கினர். இரண்டு புதியவர்களைப் பார்த்து அந்த ஆலமரத்தில் ஏற்கெனவே இருந்த அரக்கன் நீங்கள் இருவரும் யார்? ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்று வினவினான். செளதசா நடந்தவற்றைக் கூறிவிட்டு "அரக்கனே! நீ யார்?" என்றான். அவன் “இதற்கு முன், மகத நாட்டில் சோமதத்தா என்ற பெயருடன் ஒரு பிராமணனாக வாழ்ந்தேன். ஏதோ காரணத்தால் என் குருவை மதியாமல் அவமானப்படுத்திவிட்டேன். அதன் பயனாக அரக்கனாக மாறினேன்” என்று கூற அந்த இரு அரக்கர்களும், இந்தப் பெண் பிசாசும், மரத்திலேயே வாழ்ந்தனர்.

ஒரு நாள் கலிங்க தேசத்து கார்கா பிராமணன் ஒருவன் அம்மரத்தடியில் தங்கினான். இரு அரக்கர்களும், பெண் பிசாசும் நாக்கைச் சப்பிக் கொண்டு, நல்ல ஆகாரம் கிடைத்தது என்று கும்மாளமிட்டனர். ஆனால் பிராமணன் ஒயாமல் சிவ நாமத்தையும், விஷ்ணு நாமத்தையும் சொல்லிக் கொண்டே இருந்ததால் இவர்கள் அவன் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. இறுதியாகத் துணிவை வரவழைத்துக் கொண்டு ஒர் அரக்கன் பின்வருமாறு பேசினான். “ஒ பிராமணா! அரக்கர் களாக உள்ள நாங்கள் இருவரும், உடன் இருக்கும் பெண் பிசாசும் உன்னைக் கண்டதிலிருந்து நல்ல ஆகாரம் கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஓயாமல் சிவ விஷ்ணு நாமங்களை நீ சொல்லிக் கொண்டிருப்பதால் உன்னை நெருங்க முடியவில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த நீ இந்த நர்மதை ஆற்றின் புனித நீரை எடுத்து சிவ விஷ்ணு நாமத்தை உச்சரித்துக் கொண்டு எங்கள் மேல் தெளித்தால் நாங்கள் உய்தி அடைவோம்” என்று வேண்டிக் கொண்டது. பிசாசுகள் பேசுவதையும், நர்மதை நீரைப் புகழ்வதையும் கண்ட பிராமணன் ஒன்றும் புரியாவிட்டாலும் அப்பிசாசுகள் சொன்னவாறே தீர்த்தத்தை எடுத்து, அதனுடன் துளசி இலை கலந்து சிவ விஷ்ணு நாமங்களை உச்சரித்துக் கொண்டே இவர்கள் மூவரின் மேலும் தெளித்தான். உடனே அம் மூவரும் புதிய உடம்பு பெற்றனர். முனிவரின் மனைவியும், பிராமணனும் நேரே சொர்க்கம் சென்றனர். அரசனாக மாறிவிட்ட செளதசா, மனைவியின் முகத்தில் விழித்தால் இறக்க நேரிடும் என்ற சாபத்தை மனத்தில் இருத்தி அவளைச் சென்று பார்க்காமல் வாரணாசி சென்று, பிறகு தன் ராஜ்ஜியத்திற்குத் திரும்பினான்.

அதிதியின் தவம்

திதியின் மரபில் வந்த வலி அசுரனாக இருந்தாலும், விஷ்ணு பக்தி மிக உடையவனாக இருந்தான். மாபெரும் வலிமை உடையவன் ஆதலால் மூன்று உலகங்களையும் வென்று, தேவர்களைத் தோல்வியுறச் செய்தான். தேவர்களும் இந்திரனும் பூவுலகில் மானுட வடிவம் கொண்டு திரிய லாயினர்.

அதிதியின் மரபில் வந்த தேவர்களும் இந்திரனும் வலியிடம் தோற்று மாறுவேடத்துடன் அலைந்து திரிவதை அறிந்த அதிதி, விஷ்ணுவைக் குறித்துத் தான் தவம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தாள். இமயமலைக்குச் சென்று கைகளைத் துக்கிக் கொண்டு நின்றபடியே பல காலமும், ஒரு காலில் நின்றபடியே பல காலமும், அந்த ஒரு காலின் கட்டை விரலில் நின்றபடியே பல காலமும் தவம் செய்து வந்தாள். தவம் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே உணவு உண்பதை விட்டுவிட்டுப் பழங்களையே உண்டாள். சில காலம் கழித்து அதையும் நிறுத்திவிட்டுத் தண்ணிரை மட்டும் குடித்து வாழ்ந்தாள். பிறகு அதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் சுவாசித்து வாழ்ந்தாள்.

அதிதியின் கடுமையான தவம் பற்றி வலிக்குத் தகவல் போயிற்று. எப்படியாவது அதிதியின் தவத்தைக் கெடுக்க வேண்டுமென்று வலி முடிவு செய்தான். அவனுடைய ஏவலால் சில அசுரர்கள் தேவர்களைப் போல் உருமாறி அதிதியிடம் வந்தனர். அதிதியைப் பார்த்து, “தாயே, எங்களுக்காக நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையான தவம் செய்கிறீர்கள்?

இத் தவத்தினால் ஒருவேளை தாங்கள் இறந்து போய்விட்டால் நாங்கள் யாரிடம் சென்று முறையிட முடியும்?” என்று வேண்டிக் கொண்டார்கள் அந்தப் போலித் தேவர்கள்.

அவர்கள் வேண்டுதல் எதுவும் அதிதியின் மனத்தைக் கலைக்கவில்லை. தங்களால் அவள் மனநிலையை மாற்ற முடியவில்லை என்று கண்டுகொண்ட அந்தப் போலித் தேவர்கள், உண்மையான தங்கள் அசுர வடிவை எடுத்துக் கொண்டு பல ஆயுதங்களை அவள் மேல் ஏவினார்கள். அதிதியின் தவ வலிமையால் அந்த ஆயுதங்கள் எதுவும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. மிக்க கோபம் கொண்ட அசுரர்கள் வாயிலிருந்து நெருப்புக் கிளம்பிற்று. அந்த நெருப்பும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக அவள் தவம் செய்த வனத்தையே அந்த நெருப்பு கட்டுப் பொசுக்கிற்று. அந்த அசுரர்களையும் அதே நெருப்பு கொன்று விட்டது. இதனை அடுத்துவரும் வலி- வாமனன் கதை முன்னரே பிரம்ம புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது).

பகீரதனும் கங்கையும்

அசுரர் வழிவந்த பகீரதன் மிகவும் பலம் பொருந்திய மன்னனாக வாழ்ந்தான். நேர்மை நல்லொழுக்கம் விஷ்ணு பக்தி இவற்றை முழுவதும் பெற்றிருந்ததால் அவனுடைய ஆட்சி மிகவும் சிறப்புற்றிருந்தது.

ஒருநாள் இயமன் பகீரதனைப் பார்க்க வந்தான். பகீரதன் எழுந்து இயமனுக்கு வணக்கம் செய்து, "தெய்வங்களுள் ஒருவரான தாங்கள் என்னைப் போல ஒரு சாதாரண மனிதனைத் தேடி வந்தது என் புண்ணியமாகும். தர்மம் என்றால் என்ன? அது எப்படிச் செய்யப்பட வேண்டும்? என்பதை விரிவாகக் கூறினால் பெரும் பயன் விளையும். தயவு செய்து தர்மத்தைப் பற்றி விளக்க வேண்டுகிறேன்.” என்று கேட்டுக்கொண்டான். இயமன் சொல்ல ஆரம்பித்தான். “பொதுமக்களுக்குப் பயன்படும்படியான குளம் தோண்டுவது நல்ல தர்மம். சிவன், விஷ்ணு ஆகியவர்களுக்குக் கோயில் கட்டுவது பெரும் புண்ணியம். கல்லால் கட்டினாலும் செம்பு முதலான உலோகங்களால் கட்டினாலும் புண்ணியம். ஏழைகளுக்கு உணவு, உடை, மாடுகள், ஆடுகள் முதலிய வற்றைக் கொடுப்பதும் புண்ணியமாகும். மற்ற புண்ணியத் திற்குரிய செயல்கள் மரம் நடுதல், தோட்டம் உண்டாக்கிப் பாதுகாத்தல் ஆகியவையாகும். துளசிச் செடிகளை நட்டு வளர்ப்பது பெரும் புண்ணியம். துளசி மாலை அணிவதும் புண்ணியமாகும். சிவன் அல்லது விஷ்ணு சிலைகளுக்குப் பால், நெய், இளநீர், கரும்புச் சாறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாகும். சுக்கிலபட்சக் காலத்தில் பஞ்சமிதிதி, அஷ்டமி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தசி, பெளர்ணமி ஆகிய திதிகளில் சிவன்-விஷ்ணு சிலைகட்குப் புண்ணிய நீரால் அபிஷேகம் செய்வது நல்லது. பசி உடையவர் கட்கு உணவும் தண்ணிரும் தருவதும் நல்லது. இப்படித் தருமம் செய்பவர்கள் நரகத்தையே எட்டிப் பார்க்க மாட்டார்கள். தன்னை அடைக்கலம் என்று அடைந்தவர்கட்கு உதவுகிறவர்கள் பெரும் புண்ணியத்தை அடைகிறார்கள். ஒருவன் பெற்ற கல்வி அறிவை மற்றவர்களுக்கு போதிப்பது பெரும் புண்ணியம் தரும். பொன், வெள்ளி முதலியவற்றையும் தேவையுள்ளவர்களுக்கும் வழங்கலாம். சிவன்-விஷ்ணு சிலைகள் செய்து தானம் செய்யலாம். புண்ணியம் செய்தவர்களுக்குச் சில அடையாளங்கள் உண்டு. இதனால் அவர்களை மற்றவர்களில் இருந்து பிரித்து அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த அடையாளங்களாவன: அவர்கள் பிறரைப் பழி தூற்ற மாட்டார்கள். அவர்கள் பொறி புலன்களைக் கட்டுப்படுத்திய வர்கள் ஆவார்கள். அவர்கள் அதிகமாக உண்ணமாட்டார்கள். அவர்கள் தன் குருவையும், விருந்தினர்களையும் நன்கு உபசரிப்பார்கள். எப்பொழுதும் விஷ்ணுவையும் சிவனையும் நினைத்துக்கொண்டேயிருப்பார்கள். பாவம் என்பது நரகத்தில் ஒருவரைக் கொண்டு செலுத்தும். பிறர் பொருளைத் திருடுவது பாவம். தருமம் முதலானவற்றைச் செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டுப் பிறகு செய்யாமல் பின்வாங்குவது பாவம். அகங்காரம் அடைவதும் பாவம். மருத்துவம், சோதிடம் முதலியவற்றில் நல்ல பயிற்சி இல்லாமல் செய்வதும் சொல்வதும் பாவம். பிறர் பழி தூற்றுதல், பிறரை அவமானமாகப் பேசுதல், ஆடம்பரம், பெய் பேசுதல், பிறரை ஏமாற்றுதல், கொலை ஆகியவையும் பெரும் பாவங்களாகும். ஒரு பாவியுடன் பழகுவதும் பாவம். பாவங்களைப் போக்கத் தவம் மேற் கொள்வது நல்ல வழியாகும்.

“விஷ்ணு பாவம் போக்குகிறார். செய்யும் காரியங்களின் பலாபலன்களை விஷ்ணுவினிடமே விட்டுவிட வேண்டும். விஷ்ணு பக்தி மிக முக்கியமானதாகும். விஷ்ணு பக்தி பல வகைப்படும். அவை சத்துவ, ராஜச, தாமச குணங்களைப் பொறுத்து வேறுபடும். பிறருடைய அழிவுக்காக விஷ்ணுவை வேண்டுவது அதம-தாமச குணமாகும். விஷ்ணுவுக்கு வழிபாடு செய்வது போலப் பாசாங்கு செய்வது மத்தியமதாமச குணமாகும். மற்றவர்கள் வழிபாடு செய்வதைப் பார்த்துத் தானும் விஷ்ணுவை வழிபடுவது உத்தம-தாமச குணமாகும். விஷ்ணுவை வழிபட்டுப் பொன்னும் பொருளும் வேண்டும் என்பது அதம-ராஜச குணமாகும். பெரிய காரியங்களைச் செய்துவிட்டு அதனால் புகழடைய விரும்பு வதும் மத்தியம-ராஜச குணமாகும். மயக்கம், அஞ்ஞானம் என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பது உத்தம-ராஜச குணமாகும். தான் செய்த பாவங்களில் இருந்து விடுதலை வேண்டும் என விரும்புவது அதம-சாத்விக குணமாகும். விஷ்ணு மகிழ்ச்சி அடைவார் என்று நினைத்துப் பிரார்த்தனை செய்வது மத்தியம-சாத்விக குணமாகும். எந்த ஒன்றையும் விரும்பாமல் பிரார்த்தனையைப் பிரார்த்தனைக்காகவே செய்வது உத்தம-சாத்விக குணமாகும். இங்குக் கூறப்பட்ட ஒன்பது வகை பக்திகளுக்கும் மேலாக மற்றொரு வகை பக்தி இருக்கிறது. அது உத்தமோதம பக்தி எனப்படும். அதாவது விஷ்ணுவை தியானம் செய்யும்போது, தான் வேறு விஷ்ணு வேறு என்று நினைக்காமல் ஒன்றாகவே இருப்பது உத்தமோதம பக்தியாகும்.”

இவற்றை எல்லாம் கூறிவிட்டுக் கடைசியாக பகீரதனைப் பார்த்து இயமன் கூறியதாவது: “ஒ அரசனே! உன் கேள்விகளுக்கெல்லாம் விடை கூறிவிட்டேன். இப்பொழுது புண்ணியத்திற்கும் பாவத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந் திருப்பாய். நேர்மையாகவும், விருப்பு வெறுப்பு இல்லாமலும் நடு நிலைமையோடும் ஆட்சி செய்வாயாக. சிவன், விஷ்ணு என்ற இருவரும் ஒருவரே ஆவர். இவர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவது மிகப் பெரிய பாவமாகும். உன்னுடைய மூதாதையர்கள் இன்னும் நரகத்தில் விழுந்து கிடக்கிறார்கள். அவருடைய சாம்பலில் நீ எப்பொழுது கங்கை வந்து பாயுமாறு செய்கிறாயோ அப்பொழுதுதான் அவர்கள் மோட்சம் போவார்கள். உசிதம் போல் செய்வாயாக’ என்று கூறிவிட்டு இயமன் போய்விட்டான்.

இயமன் யோசனைப்படி பகீரதன் பெருந்தவம் மேற் கொண்டு கங்கையை பூமிக்கு வரவழைப்பதற்காகத் தவம் செய்வதற்குரிய இடத்தை நாடிச் சென்றான். கோதாவரி நதிக் கரையில் பிருகு முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அவரிடம் பின்வருமாறு பேசினான்: “முனிவரே! தாங்கள் மிகப் பெரிய தவசி. ஞானியும் கூட தருமத்தைப் பற்றியும் சத்தியத்தைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. என்னைத் தங்களுடைய மகன் போலப் பாவித்து இவற்றிற்கு விடை கூற வேண்டும்.”

“சத்தியம் என்றால் என்ன? அஹிம்சை என்றால் என்ன? நல்லவர்கள் என்பவர்கள் யார்? புண்ணியம் என்றால் என்ன? விஷ்ணுவை எவ்வாறு வழிபட வேண்டும்?”

இவ் வினாக்களைக் கேட்ட பிருகு முனிவர் விடை கூற ஆரம்பித்தார்: "சத்தியம் என்பது ஒருவனுடைய சமய அடிப்படையில் சொல்லப்பட வேண்டியவை. அந்தச் சத்தியம் அந்தச் சமயக் கொள்கைகளை மறுப்பதாக இருக்கக் கூடாது. அஹிம்சை என்பது பிற உயிர்கள் எதற்கும் எவ்விதத் தீங்கையும் இழைக்கக் கூடாது என்பதாம். தீயவர்கள் என்பவர்கள் ஒருசிலரைப் பகைவர்கள் என்று கருதி அவர்களுக்குத் துன்பம் செய்வார்கள். இவர்கள் சமயத்திற்கு மாறுபட்டவர்களாய் அறிவினர்களாய் இருப்பர். தீயவர்களுக்கு எதிரானவர்கள் நல்லவர்கள் என்று போற்றப்படுவர். அவர்கள் வேதங்களைக் கற்பதோடு அவர்கள் சமயத்தில் சொல்லப் பட்டவற்றைப் போற்றிப் பாதுகாப்பார்கள். இவர்கள் பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். இந்த நல்லவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களும், புண்ணியங்களாக மாறும். விஷ்ணுவை வழிபடுவதற்கு இதுதான் குறிப்பிட்ட வழி என்று ஒன்றும் இல்லை. விஷ்ணுவை வழிபடுவதற்குச் சிறந்த வழி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் விஷ்ணுவே நிறைந்துள்ளார் என்பதை அறிவதாகும். எல்லாப் பொருள்களையும், உயிர்களையும் விஷ்ணுவின் பல வடிவங்களாகவே கருத வேண்டும்.”

பிருகு முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்ற பகீரதன் சில காலம் அந்தக் காட்டிலே தவம் செய்து விட்டுப் பிறகு இமய மலை சென்றான். அங்கே கங்கை புறப்படும் தீர்த்தமாகிய நாதேஷ்வராவில் தவம் புரிய ஆரம்பித்தான். நாதேஷ்வராவில் தவத்தைத் தொடங்கிய பகீரதன், உணவு, தண்ணிர் முதலியவற்றைத் துறந்ததோடு, பிராணாயாமத்தின் மூலம் மூச்சையும் கட்டுப்படுத்த ஆரம்பித்தான். அவன் தவத்தின் ஆற்றலால் அவன் சுவாசமே நெருப்பாக வெளிவரத் துவங்கியது.

இப்படித் தவம் செய்பவன் இறுதியில் விஷ்ணுவிடம் வரம் பெற்றுத் தங்களையே தேவலோகத்தில் இருந்து துரத்தி விடுவான் என்று பயந்த தேவர்கள் வடகடல் கரைக்குச் சென்று விஷ்ணுவை வேண்டினர். தேவர்களின் பயத்தைப் போக்கிய விஷ்ணு, பகீரதன் முன் தோன்றி, “பகிரதா! உன் மூதாதை யர்களை நரகத்திலிருந்து விடுவிக்க கங்கையைக் கொண்டுவரத் தவம் புரிகிறாய். அதை நான் அறிவேன். இந்த நிலையில் ஒன்றை நீ அறிந்து கொள்ள வேண்டும். சிவனும், விஷ்ணு மாகிய நானும் வேறு வேறு அல்ல. நாங்கள் இருவரும் ஒருவரே. இதை நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டு இப்பொழுது சிவனை நோக்கித் தவம் செய்வாயாக!” என்று கூறிவிட்டு மறைந்தார்.

சிவனை நோக்கி பகீரதன் தவம் செய்யத் தொடங்கிய சிறிது காலத்தில் சிவன் அவன் முன் தோன்றினார். ஐந்து தலைகள், பத்து கைகள், எலும்பு மாலைகள், பாம்பு மாலைகள், யானைத் தோல் உடை முடியில் பிறைச் சந்திரன் என்ற கோலத்துடன் சிவன் காட்சி தந்து, “பகீரதா! உன் தவத்திற்கு மகிழ்ந்தேன். நீ சகல செளகரியங்களும் பெற்றுப் பல காலம் இவ்வுலகில் வாழ்வாயாக!” என்று கூறினார். பகீரதன், ‘ஐயனே! என் மூதாதையர்கள் நரகத்தில் இருந்து விடுபடத் தேவ ரூபத்தில் பாயும் கங்காதேவி இம்மண்ணிற்கு வரக் கருணை புரிய வேண்டும்” என்றான். சிவனும், "அப்படியே ஆகட்டும்!” என்று கூறி மறைந்தார். மகிழ்ச்சியடைந்த பகீரதன் புறப்பட்டவுடன் கங்காதேவியும் ஒரு பெண் வடிவு கொண்டு அவன் பின்னேயே சென்றாள். தன் மூதாதையர்கள் எரிந்து சாம்பலான இடத்தை அடைந்தான். அந்தச் சாம்பல் மேல் கங்கை பொங்கிப் பாயவே சகரர்கள் நரகிலிருந்து விடுபட்டுச் சுவர்க்கம் சென்றார்கள்.

விரதங்கள்

நாரத புராணம் பின்வரும் விரதங்கள் பற்றி விரிவாகக் கூறுகிறது.

ஏகாதசி விரதம்

மாதத்தில் சுக்கிலபட்சத்தில் ஏகாதசி திதி அன்று அனுஷ்டிக்கப்படுவது. இரவு முழுவதும் கண் விழித்திருந்து, காலையில் சாளக்கிரமத்திற்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எள்ளை அக்னியில் போடுவதுடன், நல்ல ஆகாரம் தயார் செய்து விஷ்ணுவிற்கும், லக்ஷ்மிக்கும் நிவேதனம் செய்து விஷ்ணு பக்தர்களுக்கு விருந்து செய்ய வேண்டும். துவாதசி அன்றும் இதனையே செய்ய வேண்டும். பல யாகங்கள் செய்வதைக் காட்டிலும் இந்த விரதங்களை மேற்கொள்வதால் அதிகமான புண்ணியம் கிடைக்கும்.

பெளர்ணமி விரதம்

பிராமணர் முதலிய நான்கு வர்ணத்தாரும், பெண்களும் கூட மேற்கொள்ளுகின்ற விரதமாகும். பெளர்ணமி அன்று செய்யப்படுவதால் இது பெளர்ணமி விரதம் என்று சொல்லப்படும். இந்தப் பெளர்ணமி விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கப்படலாம். பன்னிரண்டு மாதங்களிலும் விரதம் இருந்து, கார்த்திகை மாதத்தில் இது முடிக்கப்படும் போது விஷ்ணுவிற்கும், லட்சுமிக்கும் பிரசாதங்கள் படைத்து வழிபடுவதால் இது லஷ்மி நாராயண விரதம்" என்று சொல்லப்படும்
 
sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
கொடியேற்று விழா விரதம்

கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் ஏகாதசி அன்று ஒரு கொடியை ஒரு விஷ்ணு கோயிலின் கோபுரத்தின் மேலேயோ, வெளிக்கதவின் மேலேயோ ஏற்றி வைத்து விஷ்ணு பூஜை செய்ய வேண்டும். நூற்றி எட்டு கிண்ணங்களில் பாயசம், மஞ்சள், வாலரிசி, வாசனைப் பூக்கள் ஆகியவற்றை விஷ்ணுவிற்குப் படைக்க வேண்டும். இந்த விரதம் நால்வகை வருணத்தாரும், பெண்களும் மேற்கொள்ளலாம். விஷ்ணுவுடன் சேர்த்துச் சூரியன், சந்திரன், கருடன் ஆகியவர்களுக்கும் பூசை செய்யலாம்.

சுமதி - சத்யமதியின் கதை

சத்ய யுகத்தில் சுமதி என்ற மன்னன், சத்யமதி என்ற தன் மனைவியுடன் இந்த உலகின் ஏழு பிரிவுகளையும் ஆட்சி செய்து வந்தான். நேர்மை, சத்தியம், அன்பு, விருந்தோம்பல் ஆகிய நற்பண்புகளுக்கு இவர்கள் இருவரும் உதாரணமாக இருந்தனர். துவஜா ரோகண விரதத்தை (கொடியேற்று விழா விரதத்தை) இவர்கள் விடாமல் செய்தனர். அந்த விரதத்தின் போது சத்யமதி விஷ்ணு கோயிலில் நடனம் ஆடி வந்தாள்.

ஒருமுறை விபண்டக முனிவர் தன் சீடர்களோடு இவர்களைப் பார்க்க வந்தார். அரசன் செய்த உபசரிப்பில் பெருமகிழ்ச்சி அடைந்த முனிவர் "உன் உபசரிப்பில் மகிழ்ச்சி அடைந்தோம். உன்னிடம் வேண்டிப் பெற வேண்டியது எதுவும் இல்லை. என் மனத்தில் தோன்றிய இரண்டு வினாக்களுக்கு நீங்கள் விடை கூறினால் போதுமானது.

"நீங்கள் ஏன் கொடியேற்று விழா விரதத்தை விடாமல் செய்கிறீர்கள்? உன் மனைவி ஏன் விஷ்ணு கோயிலில் நாட்டியம் ஆடுகிறாள்?”

சுமதி, சத்யமதி ஆகிய இருவரும் ஜதீஸ்மராக்களாக அதாவது பழம் பிறப்பை அறியும் வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள். அதன் பயனாக மன்னன் சுமதி, முனிவரிடம் தங்கள் பழம் பிறப்பு வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தான். முற்பிறப்பில் சுமதி மாதுலி என்ற சூத்திரனாகப் பிறந்து எல்லாத் தீய பழக்கங்களுக்கும் உறைவிடமாக இருந்தான். திருட்டு முதலிய குற்றங்களைச் செய்ததால் எல்லோரும் அவனைக் கைவிட்டு விட்டனர். எனவே அவன் காட்டில் சென்று வாழ்ந்து வந்தான். அங்கே ஒர் அழகான குளமும், விஷ்ணு கோயிலும் இருக்கக் கண்டான். அந்த இடம் மிகவும் பிடித்துப் போனதால் அங்கேயே தங்கிவிட்டான். வேட்டையைத் தொழிலாகக் கொண்டு, ஒய்ந்த நேரங்களில் அந்தக் கோயிலைப் பழுதுபார்க்கத் துவங்கினான். கோயிலில் பராமரிப்பு வேலை நடைபெறுவதை அறிவிக்க, கோயிலின் வெளிவாசலில் ஒரு கொடியைக் கட்டினான். இம் முறையில் அவன் வாழ்க்கை நடைபெறும் பொழுது, எதிர்பாராத விதமாகக் கோகிலினி என்ற வேட்டுவப் பெண் அங்கே வந்து சேர்ந்தாள். வேடர் குலத்தவளாயினும் கணவனை இழந்ததால், எல்லாரும் அவளை ஒதுக்கி விட்டனர். இந்த நிலையில் வேடன் இருக்கும் இடம் வந்த அவள் அங்கேயே தங்கி விட்டாள். இருவரும் திருப்பணி செய்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் குடித்துவிட்டு ஆடினார்கள். விஷ்ணுவின் எதிரே கோகிலினி நாட்டியம் ஆடினாள்.

இம்முறையில் அவர்கள் வாழும் பொழுது அவர்கள் இருவருமே இறந்தனர். அவர்கள் இறந்தவுடன் யமபடர்கள் அவர்களை அழைத்துப் போக வந்தனர். ஆனால் விஷ்ணுவின் பணியாளர்கள் அங்கே வந்து, அவர்கள் விஷ்ணு பக்தர்கள் என்றும், அவன் துவஜா ரோகண விரதத்தைக் கடைப் பிடித்தவன் என்றும், விஷ்ணு கோயிலைப் பழுது பார்த்ததால் அவர்கள் விஷ்ணுலோகம் செல்ல வேண்டியவர்கள் என்றும் கூறினர். இறுதியில் இருவரும் விஷ்ணுலோகம் சென்று எல்லையற்ற இன்பம் அனுபவித்த பிறகு, இப்பிறவியில் சுமதியாகவும், சத்யமதியாகவும் பிறந்தனர். இதுதான் எங்கள் கதை என்று சொல்லி முடித்தான்.

பத்ரஷிலா

முன்னொரு காலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் காலவா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் பத்ரஷிலா என்பவன் ஜதிஸ்மராவாக அதாவது பழம்பிறப்பை அறியும் வல்லமை உடையவனாக இருந்தான். சிறு குழந்தையாக இருந்த பொழுது களிமண்ணில் விஷ்ணுவிற்குக் கோயில்கள் கட்டி, அதனை வணங்கி வந்தான். இதில் மகிழ்ச்சி அடைந்த காலவ முனிவர், "மகனே! நீ செய்யும் காரியங்களையும், மேற்கொள்ளும் விரதங்களையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு இளம் வயதில் யாரிடமும் கேட்காமல் எப்படி இந்த விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உண்டாயிற்று?” என்று கேட்டார். காலவ முனிவரைப் பொறுத்தவரை தம்முடைய மகனுக்கு ஜதீஸ்மரா (பழம் பிறப்பு நினைவு) ஆற்றல் உண்டு என்பது தெரியாது. எனவே தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கலானான்.

"தந்தையே! எனக்கு ஜதீஸ்மரா ஆற்றல் உண்டு. போன ஜன்மத்தில் யமனுடன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இதை அறியலானேன். அந்தப் பிறப்பில் தர்ம கீர்த்தி என்ற பெயருள்ள அரசனாக இருந்தேன். அப்பொழுது என் குருவாக வாய்த்தவர் தத்தாத்ரேய முனிவர் ஆவார். அவர் வழிகாட்டலில் ஆட்சியைத் தொடங்கிய நான், ஒன்பதினாயிரம் வருடங்கள் ஆட்சி செய்தேன். அதிகாரம், செல்வம் சேர்ந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அறவழியை விட்டுவிட்டுத் தீய வழிகளில் செல்லலானேன். நாளாவட்டத்தில் வேதங்களை மறந்து அதில் சொல்லப்பட்ட வழிகளையும் மறந்து, வாழ்க்கை நடத்திப் பாவத்தைச் சேர்க்கலானேன். அந்நிலையில் என் புண்ணிய மூட்டை குறைந்து, பாவ மூட்டை வளர்ந்து கொண்டே வந்தது. ஒர் அரசனுக்கு அந்நாட்டு மக்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கு வரியாகச் சேருகிறது அல்லவா? அதைப் போலவே என் நாட்டு மக்களும் தர்மத்தை மறந்து செய்த பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு என்னை வந்து அடைவதாயிற்று. ஆகவே என்னுடைய பாவ மூட்டை விரைவில் மிகப் பெரிதாக வளர்ந்தது. இதனிடையில் ஒரு நாள் வேட்டைக்குப் போனேன். பல மிருகங்களைத் துரத்திச் சென்றதால் பசியும் தாகமும் அதிகமாயிற்று. உண்பதற்கோ ஒன்றுமில்லை. ரேலா நதிக்கரையில் ஒர் இடத்தில் பொழுது சாய்ந்து விட்டதால், அந்நதியில் குளித்துக் கரை ஏறும் பொழுது, பல யாத்ரீகர்கள் அங்கு வருவதைக் கண்டேன். அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு ஒன்றும் உண்ணாமல் விஷ்ணுவை வழிபடக் கண்டேன். என்னைப் பொறுத்தவரை பட்டினி இருக்க வேண்டும் என்று நினைக்கா விட்டாலும், உண்பதற்கு ஒன்றுமில்லாததால் அவர்களோடு சேர்ந்து நானும் விரதம் இருந்தேன். அன்று ஏகாதசி என்று எனக்குத் தெரியாது. மறுநாள் விடியற்காலை பசியால் இறந்து விட்டேன். யமனுடைய படர்கள் யமனுடைய சந்நிதானத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். யமன் சித்ரகுப்தனிடம் என்னுடைய கணக்கைப் பார்க்குமாறு ஆணை இட்டார். சித்ரகுப்தன், "ஐயா! தர்மகீர்த்தி என்ற பெயரில் ஆட்சி செய்த இவன் மிகத் தீயவனாகப் பெரும் பாவ மூட்டையைச் சுமந்து கொண்டு வந்திருக்கிறான். ஆனால் நேற்று ஏகாதசி விரதம் இருக்கையில் இவன் இறந்து விட்டான்” என்று கூறினான். அதைக்கேட்ட யமதர்மன் என்னை அழைத்து வந்த யமபடர் களைக் கடுமையாக ஏசினான். 'ஏகாதசி விரதம் இருப்பவர் களையும், விஷ்ணு பக்தர்களையும் இங்கு அழைத்து வராதீர்கள் என்று எத்தனை முறை உங்களுக்குக் கூறி இருக்கிறேன்” என்று கூறிவிட்டு, என்னை விஷ்ணுலோகம் அனுப்பினான். பல காலம் அங்கு தங்கி, பிறகு தங்கள் மகனாக இப்பொழுது பிறந்துள்ளேன்.

'ஏகாதசி என்று தெரியாமல் அதனுடைய சிறப்புப் புரியாமல் பட்டினி கிடந்ததற்கே விஷ்ணுலோகத்தில் பல காலம் இருக்கக் கூடுமேயானால், ஏகாதசி என்று தெரிந்து விரதம் இருந்தால், எவ்வளவு சிறப்பு என்று கருதி இப்பொழுது இதனைச் செய்து வருகிறேன்” என்று பத்ரவிலா கூறவும், காலவ முனிவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஆனந்த மார்க்கம்

இந்த உலகம் துன்பமயமானது. இந்த உலக மாயையிலிருந்து எப்படி ஒருவன் விடுபடுவது, எப்படி வீடுபேற்றை அடைவது என்ற வினாக்களைச் சிந்திப்போர்க்குச் சுதா முனிவர் விடை தருகிறார்.

விஷ்ணுவே வீடுபேற்றைத் தருகிறார். விஷ்ணுவின் ஆணைக்குட்பட்டே படைத்தல் தொழிலை பிரம்மனும், அழித்தல் தொழிலைச் சிவனும் செய்கின்றனர். விஷ்ணுவிற்கு வடிவம் கிடையாது. அறத்தின் அடிப்படை அவரே ஆவார். எல்லா பூதங்களும் அவரிடம் இருந்தே தோன்றுகின்றன. அவரை வழிபடும் மனிதர்கள் தேவர்களாக மாறுகின்றனர். உண்மையான ஞானம் என்பது விஷ்ணுவே அனைத்தும் என்று அறிகின்ற ஞானம் ஆகும். இந்த வகையில் ஞானத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் உண்மையான ஆனந்தத்தைப் பெறலாம். ஞானம் என்பது நம்பிக்கை என்னும் பாறையின் மேல் எழுந்தாலொழிய நிலை பெறாது. நற்செயல்கள் விஷ்ணுவிடம் நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன. உண்மையில் ஞானத்தை அடைவதற்குச் செயல்களே (கர்மமே) அடிப்படையாகும். நேரடியாக ஞான யோகத்தில் ஈடுபடுபவர்கள் மிக மிகச் சிலரே. ஞானத்தின் முதிர்ந்த நிலையை அடையும்பொழுது எல்லாப் பொருளுடனும் விஷ்ணுவே நிறைந்திருப்பதையும், ஒருயிருக்கும், மற்றோர் உயிருக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை அறிய முடியும் எல்லாம் விஷ்ணு மயம் என்பதை அறிகின்ற நிலையே “யோகம்” என்று சொல்லப்படும்.

இந்த உயர்ந்த ஞானத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒருவனையே "முமுக்ஷீ” என்று கூறுவர். முமுக்oக் களைத் தெரிந்து கொள்வதற்குச் சில அடையாளங்கள் உண்டு. முமுக்ஷீயிடம் கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி என்பவை அறவே இராது. அவன் பொறி புலன்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்லன். எப்பொழுதும் பிறர் மேல் இரக்கம் கொள்பவன் ஆவான். அவன் மனம் எப்பொழுதும் விஷ்ணுவிடமே லயித்திருக்கும்.

யோகத்தை வேறு ஒரு வகையாகவும் விளக்கலாம். பரமாத்மன் என்று சொல்லப்படுகின்ற ஒன்றிற்கும், வெவ்வேறு உடம்புகளில், வெவ்வேறு குறிகளுடனும் அடையாளங் களுடனும், அந்த உடலுக்குரிய அகங்காரங்களுடனும் இருக்கும் ஜீவாத்மாவுடன் இருக்கும் ஒற்றுமையைக் காண முற்படுவதே யோகமாகும். ஜீவாத்மா உடம்பு என்னும் பருப்பொருளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நிற்கிறது. இந்த உடம்பு கட்டுப்பாடு என்பது, ஒரு மாயை என்று அறிவதே அந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவுக்கு மிக முக்கியமான செயலாகும். இந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்பதைத் தெளிவாக அறிந்து ஐக்கியப்படுவதே பிரம்ம ஞானம் எனப்படும்.

யோகம்

யோக மார்க்கம் என்பது எட்டுப் படிகளைக் கொண்டது. முதலாவது இயமம் எனப்படும். அஹிம்சை, உண்மை, அன்பு, பிற உயிர்களிடத்தே இரக்கம், பொறிபுலன் அடக்கம் ஆகியவற்றை மேற்கொண்டு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை ஒதுக்குவதே இயமம் என்ற படி இரண்டாவது படி நியமம். மனத்துய்மை, நாம ஜெபம், தியானம், ஞான நூல்களைக் கற்றல் ஆகியவை நியமம் என்ற இரண்டாவது படி இயமம், நியமம் ஆகிய இரண்டும் உடலையும் மனத்தையும் தூய்மைப்படுத்தி, தியானத்திற்கு வழி வகுக்கிறது. தியானத்திற்கு உரிய முறையில் உடம்பை இருக்கச் செய்ய வேண்டும். அதுவே ஆசனம் எனப்படும் மூன்றாவது படி. மூன்றாவது படியில், யோகம் பயில்பவர்களுக்கு முப்பது வகையான ஆசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நான்காவது படி பிராணாயாமம் எனப்படும் மூச்சுக் காற்றை கட்டுப்படுத்துவது தியானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. பிரத்யாகாரம் என்பது ஐந்தாவது படி. பொறிபுலன்களால் ஏற்படும் இன்ப அனுபவத்திலிருந்து மனத்தை மீட்டுக் கொண்டுவரும் படி இந்த ஐந்தாவது படியாகும். தாரணை என்பது ஆறாவது படியாகும். எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவோடு ஜீவாத்மனை ஒருமுகப்படுத்தி அந்த ஒன்றுபட்ட விஷ்ணுவின் வடிவை தியானிப்பதே தாரணை எனப்படும். தாமரை மலரில் அமர்ந்திருக்கும் விஷ்ணுவின் வடிவை இடைவிடாமல் சிந்தனையில் இருத்துவதற்கு இது உதவிபுரியும். தியானம் என்பது ஏழாவது படியாகும். இந்த வடிவத்தை இடையீடு இல்லாமல் சிந்தனையில் இருத்துவதே தியானம் எனப்படும். தியானிப்பு, தியானிக்கப்படும் பொருள். தியானம் என்ற மூன்றும் இதில் அடங்கி இருக்கக் காணலாம். சமாதி என்பது எட்டாவது படி. தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் என்ற மூன்றும் மறைந்துவிடும் நிலையே சமாதி எனப்படும். காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்றும் இந்த மூன்றைக் கூறலாம். காண்பானும் காட்சியும், காணப்படும் பொருள் ஒன்றி ஐக்கியமாவதே சமாதி எனப்படும். இந்நிலையில் பொறிபுலன்களால் ஏற்படும் அனுபவங்கள் முற்றிலும் மறைந்து, பிரம்மம் ஒன்று மட்டுமே நிற்கும். அதுவே சமாதி நிலையாகும்.

தேவமாலி

ரைவத நாட்டில் தேவமாலி என்றொரு பிராமணன் வாழ்ந்து வந்தான். ஏகப்பட்ட உறவினர்கள், பிள்ளைகள், மனைவி என்பவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்தது. ஆகவே அவன் வாணிபம் செய்யப் புறப்பட்டான். ஒரு பிராமணன் எந்தெந்தப் பொருட்களைக் கையால் கூடத் தொடக் கூடாதோ அந்தப் பொருட்களையே அவன் வியாபாரம் செய்தான். அளவற்ற செல்வத்தைக் குவித்தான். அந்த முதிர்ந்த வயதில் அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். யக்ஞமாலி, சுமாலி என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கும் இந்தத் தீண்டத் தகாத பொருட்களை எப்படி விற்றுப் பணம் சம்பாதிப்பது என்று சொல்லிக் கொடுத்தான்.

ஒருநாள் தன்னிடம் இருந்த பொன்னை எல்லாம் ஒன்றாகக் கொட்டி எண்ணத் தொடங்கினான். கோடிக் கணக்கான தங்க நாணயங்கள் தன்னிடம் இருப்பதை அறிந்தான். இவ்வளவு சேர்த்தும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவனை விட்டுப் போகவில்லை. எனவே அவன் சிந்திக்கலானான். இவ்வளவு பொருளைச் சேர்த்தும் தன்னுடைய ஆசை அடங்கவில்லை என்பதை அறிந்து கொண்ட அவன் இவ்வாறு பொருளைச் சேர்ப்பதால் தன் வாழ்வில் அமைதியைக் காணவோ இறை நாட்டம் கொள்ளவோ முடியாது என்பதை அறிந்து கொண்ட அவன் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தான்.

தன்னிடம் உள்ள பொருளை எல்லாம் நான்காகப் பங்கிட்டான். அதில் இரண்டு பங்கு எடுத்து இரண்டு பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டு, மீதமிருந்த இரண்டு பங்கைத் தான் வைத்துக் கொண்டான். தான் வைத்துக் கொண்ட பொருளிலிருந்து விஷ்ணுவிற்குக் கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலைகள் போடுதல் என்பன போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டுத் தன் செல்வத்தைச் செலவழித்தான். ஏழைகளுக்கும் வேண்டுமான அளவு கொடுத்தான். தள் செல்வம் முழுவதும் தீர்ந்த பிறகு கங்கைக் கரையிலுள்ள வத்திரிகாசிரமத்திற்குச் சென்றான். அங்குள்ள முனிவர்கள் பலரோடு சேர்ந்து யோகம் பயிலத் தொடங்கினான். அங்குள்ள ஜனந்தி என்ற முனி. யோக மார்க்கத்தின் நுணுக்கங்களை அவனுக்குக் கற்றுத் தந்தார். இந்த யோகப் பயிற்சியின் மூலம் தேவமாலி மாயையிலிருந்து விடுபட முடிந்தது.

தேவமாலியின் பிள்ளைகள்

தேவமாலியின் இரு பிள்ளைகளுக்கும் தன் சொத்தில் சரிபாதியை இரண்டாகப் பிரித்துத் தந்திருந்தான் அல்லவா? மூத்தவனாகிய யக்ஞமாலி தன் ஒரு பங்கை வைத்துக் கொண்டு நல்ல முறையில் தான தருமம் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டான். இளையவனாகிய சுமாலி பெருஞ் சொத்து கிடைத்தவுடன் தீயவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தகாத வழிகளில் தன் சொத்தைக் கரைத்தான். பணம் கையை விட்டுப் போனதும் சுற்றி இருந்த உறவினர்களும் நண்பர்களும் அவனைக் கைவிட்டுப் போயினர். இந்த நிலையில் யக்ஞமாலி அவனை அழைத்து, அவன் தகாத செயல்களை எடுத்துக் கூறி, அவன் நேர்வழிக்கு வரவேண்டும் என்று அறவுரை கூறி, தன்னிடம் மிச்சமிருந்த சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து, 'இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று தம்பிக்குத் தந்தான். ஆனால் சுமாலி பழைய வாழ்க்கை முறையை விடாமல் இருந்ததால் இந்தச் சொத்தும் அழிந்தது. இப்பொழுது தமையனைக் கொன்றுவிட்டால் அவனது பெருஞ்சொத்து தனக்கே வரும் என்று நினைத்த சுமாலி, கத்தியை எடுத்துக் கொண்டு அண்ணனைக் கொல்ல நினைத்தான். அந்நிலையில் காவலர்கள் அவனைப் பிடித்துச் சென்று அரசனிடம் வாழ்ந்து வந்தான் தேவமாலி.

நாட்டில் உள்ள யக்ஞமாலி நல்ல அறவழிகளில் தன் சொத்துக்களைச் செலவழித்து தானும் ஏழையானான். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்தும் போய்விட்ட நிலையில் ஒரு விஷ்ணு கோயிலுக்குச் சென்று அங்கேயே தங்கி தெய்வப் பணி செய்யலானான். விதியின் விளையாட்டால் சகோதரர்கள் இருவரும் ஒரே நாளில் இறந்தனர். விஷ்ணுவின் பணியாளர்கள் யக்ஞமாலியைப் பொன் விமானத்தில் ஏற்றினர். கீழே பார்த்த யக்ஞமாலிக்கு ஒர் ஆச்சரியம். கீழே அவனுடைய தம்பி சுமாலியை யமபடர்கள் கயிற்றால் கட்டி தடி, கம்பால் அடித்து யம லோகத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து மனம் நொந்து, “என்னுடைய தம்பியை விஷ்ணு லோகத்திற்கு அழைத்துக் கொள்ள ஏதாவது வழி உண்டா?” என்று கேட்டான். அவர்கள், “நீ செய்திருக்கும் புண்ணியத்தில் ஒரு பகுதியை அவனுக்குத் தந்தால் அவனும் விஷ்ணு லோகத்திற்கு வர முடியும்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட யக்ஞமாலி மிக்க சந்தோஷத்துடன் தன் புண்ணியத்தில் ஒரு பகுதியைத் தம்பிக்குத் தந்தான். அண்ணனுடைய புண்ணியம் தனக்குக் கொடுக்கப்பட்டதால் சுமாலியும் விஷ்ணு லோகத்திற்கு வந்து அந்தப் புண்ணியம் தீரும் வரை இருந்து மறுபடியும் பூமியில் போய்ப் பிறந்து விட்டான்.

கணிக்கா

விஷ்ணுவைக் கும்பிடாத வீடு சுடுகாடு போன்றது. விஷ்ணுவை வணங்காதவர்கள் உயிரோடு இருந்தும் நடமாடும் பிணமே ஆவார்கள். மக்களாகப் பிறந்தும் விஷ்ணுவை வணங்காதவர்கள் அரக்கர்களே ஆவார்கள். விஷ்ணு பக்தி தானாக வருவதில்லை. அந்த பக்தி செய்வதற்குக் கூடச் சிறிது புண்ணியம் செய்திருக்க வேண்டும். முழு மனத்தோடு இல்லாமல் ஒப்புக்கு செய்யப்படும் விஷ்ணு பக்தி கூடச் சிறிதளவு புண்ணியத்தைத் தரும். விஷ்ணு பக்தியினால் கிடைக்கும் சிறிதளவு புண்ணியம் கூட ஒருவன் செய்துள்ள பெரிய பாவத்தைப் போக்கும்.

சத்திய யுகத்தில் கணிக்கா என்னும் ஒரு வேடன் இருந்தான். பிறருக்குத் தீமை செய்வது, பிறர் பொருளைக் கொள்ளையடிப்பது, பிறரைக் கொல்வது போன்ற தீய செயல்களைச் செய்வதும், கோயில் சொத்தைத் திருடுவதும் அவனது வழக்கமாக இருந்தது.

ஒருமுறை செளபிரா என்ற நகருக்குள் வேடன் வந்தான். அங்குள்ள விஷ்ணு கோயிலுக்குள் அவன் நுழைந்தான். தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் விஷ்ணுவின் எதிரே இருப்பதைக் கண்ட வேடன், அச்சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். இரவில் கோயிலைச் சுற்றி வரும்போது யுதங்கர் என்ற முனிவர் அங்கு படுத்திருப்பதைப் பார்த்து அவரைக் காவல்காரர் என்று எண்ணி அவரைக் கொல்வதற்காக அவரது கழுத்தில் கத்தியை வைத்தான். கண்விழித்த யுதங்கர், "அப்பனே! என்னை ஏன் கொல்லப் பார்க்கிறாய்? நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? இவ்வளவு பாவம் செய்கிறாயே, உன் பாவத்தை யார் பங்கு போட்டுக்கொள்ளப் போகிறார்கள்? நீ கொள்ளை அடித்த சொத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் உன் உறவினர்கள் உன் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள மாட்டார்கள்” என்று கூறியவுடன் வேடன் அதிர்ச்சி அடைந்தான்.

உடனே முனிவரைப் பார்த்து, "முனிவரே! தாங்கள் சொல்லிய பிறகுதான் எவ்வளவு பாவங்களை நான் செய்திருக்கிறேன் என்ற பயம் உண்டாகிறது. முன் ஜென்மத்தில் செய்த பாவம்தான் இப்பொழுது வேடனாகப் பிறந்திருக் கிறேன். இந்த ஜென்மத்திலும் நான் செய்தது கணக்கிலடங்கா. இந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? யாரைச் சென்று வழிபட வேண்டும்? எவ்வாறு செய்ய வேண்டும்? எனக்கு விடுதலையே கிடைக்காதா?” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே எல்லையற்ற துயரத்தாலும், கழிவிரக்கத்தாலும் தாக்கப்பட்ட வேடன் அப்படியே இறந்து விட்டான். இறந்தவன்மேல் அதிக இரக்கம் கொண்ட முனிவர், விஷ்ணுவின் திருவடிகளுக்கு அபிஷேகம் செய்த நீர் கையில் இருந்ததால் அந்தப் புண்ணிய நீரை இறந்தவன் உடல்மேல் தெளித்தார். அப்புண்ணிய நீர் மேலே பட்டதால் வேடனுடைய ஆன்மா விஷ்ணுலோகத்தை நோக்கிச் சென்றுவிட்டது.

இங்கு நடைபெற்ற அதிசயத்தைக் கண்டு வியப்பால் வாயடைத்துப் போன யுதங்கமுனிவர் முன் விஷ்ணு தோன்றினார். விரைவில் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று மேலே செல்லக்கூடிய வரத்தை யுதங்கருக்கு அளித்தார்.
 
sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
யக்ளுத்துவஜா

யக்ளுத்துவஜா என்ற அரசன், தான் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷ்ணு கோயில் கட்டினான். ரேவா நதிக் கரையிலும் ஒரு கோயில் கட்டினான். அவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும், கோயிலைச் சுத்தம் செய்யும் பணியும், இரவில் விளக்கேற்றும் பணியும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி செய்தான். தன்னுடைய குருவாக இருந்த விதஹோத்ரா என்பவன், “அரசே! விஷ்ணு கைங்கர்யம் என்பதைப் பல வழிகளில் செய்யலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் கோயிலைத் தூய்மை செய்தல், விளக்கேற்றுதல் ஆகிய இரு காரியங்களுக்காக மட்டும் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா? அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை?” என்று கேட்டான். இதைக் கேட்ட யக்ஞத்துவஜா அந்த குருவை நோக்கிச் சொல்ல ஆரம்பித்தான்.

"குருவே! எனக்கு ஜதீஸ்மரா என்ற பழம்பிறப்பை உணரும் ஆற்றல் உண்டு. அதனால்தான் இவ்வாறு செய்கிறேன். சத்திய யுகத்தில் ரைவதா என்ற ஒரு பிராமணன் இருந்தான். எத்தனை குற்றங்கள் புரிய முடியுமோ அத்தனை யும் புரிந்தான். எந்தெந்தப் பொருள்களை பிராமணன் தொடக் கூடாதோ அவற்றையெல்லாம் வியாபாரப் பொருளாக்கி விற்றான். அவன் மனைவி பந்துமதி என்பவளும் பிராமணர்களுக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ளாமல், தன் கணவனைப் போலவே தவறான வழிகளில் காலத்தை ஒட்டினாள். அந்த பிராமணனுடைய வாழ்க்கை முறையைப் பொறுக்காத மற்ற பிராமணர்களும் ஊர்க்காரர்களும் அவனை ஊரை விட்டே விரட்டினர். அந்த பிராமணன் எல்லாவற்றையும் இழந்து உண்பதற்கு ஒன்றுமில்லாமல் மனைவிக்கும் தண்டகேது என்றொரு பிள்ளை இருந்தான். அவனும் பெற்றோர்கள் சென்ற வழிகளிலேயே சென்று பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டான். ஒரு நாள் இரவு ஒய்வெடுப்பதற்காக ஒரு விஷ்ணு கோயிலுக்குச் சென்றான். தான் படுப்பதற்கு ஒர் இடம் தேவைப்பட்டதால் தன்னுடைய உடையைக் கொண்டு கோயிலைச் சுத்தம் செய்தான். இரவில் வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதற்காக விஷ்ணுவின் எதிரே இருந்த விளக்கைத் தூண்டி விட்டான். இந்த ஏற்பாடுகளை அவன் செய்து கொண்டிருக்கும் போது, அந்த ஊர்க் காவலர்கள் அவனைத் திருடன் என்று கருதிக் கொன்று விட்டார்கள். உடனே விஷ்ணுலோகத்திலிருந்து விமானம் வந்து தண்டகேதுவை ஏற்றிச் சென்றது. விஷ்ணுலோகத்தில் சென்று இன்பம் அனுபவித்த தண்டகேது மறுபடியும் பூலோகத்தில் ஒர் அரசனாகப் பிறந்தான். பழம் பிறப்பு நினைப்புடனேயே அவன் பிறந்தான். அவன் வேறு யாருமல்ல; நான்தான்.”

கோயிலைத் துப்புறவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தான் படுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சுத்தம் செய்தான். விளக்கைத் தூண்ட வேண்டும் என்றில்லாமல் தனக்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காகத் தூண்டி விட்டான். அனிச்சையான இந்த இரண்டு செயல் களுக்காக அவன் விஷ்ணுலோகம் சென்று சில காலம் இன்பம் அனுபவித்தான் என்றால், விருப்பத்தோடு இந்தத் திருப்பணிகளைச் செய்யும் நான் எவ்வளவு புண்ணியத்தைச் சேர்ப்பேன் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? விதஹோத்ரா என்ற அந்த குரு இதைக் கேட்டு வியப்படைந்து, தானும் பெரிய விஷ்ணு பக்தனாகி விட்டான்.

இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அடையும் பெருந் துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால், விஷ்ணு பக்தி ஒன்றுதான் அதனைச் செய்யும். நேரடியாக விஷ்ணுவுக்குத் தொண்டு செய்வதைப் போல விஷ்ணு பக்தர்களுக்குத் தொண்டு செய்வதும் பெரும் புண்ணியத்தைத் தரும். விஷ்ணுவையும் இலட்சுமியையும் வழிபடுபவர்கள், விஷ்ணு பக்தர்களை வழிபடுபவர்கள் இவர்களுடைய வீடுகளில் இலட்சுமி நிரந்தரமாக இருப்பாள். துளசிச் செடி வளர்ப்பதும், இத்தகைய பெரும் புண்ணியத்தைத் தரும். சாளக்கிரமம் வைத்து வழிபடுபவர்கள் வீட்டினுள் நிரந்தரமான செல்வம் கொழிக்கும்.

முடிவுரை

நாரதர் உபதேசித்த இந்தப் புராணத்தை வேதவியாசரின் சீடரும், லோமஹர்ஷனரின் மகனுமாகிய சுதா முனிவர் இப்படிச் சொல்லி முடித்தார். மேலும் அவர் இப்புராணத்தின் ஒரு பாடலைப் படிப்பவர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர் என்றும்; ஒர் அத்தியாயத்தைப் படிப்பவர் பல யாகங்களைச் செய்த புண்ணியத்தை அடைவர் என்றும்; நாரத புராணத்தை வீட்டில் வைத்திருந்தால் அவ்வீட்டில் பேய், பிசாசுகள் அண்டாது என்றும், அவ்வீட்டில் திருட்டு நடைபெறாது என்றும் சொல்லி முடித்தார்.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top