• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நித்திலவல்லி - முதல் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
31. கனவும் நினைவும்

இரத்தினமாலையின் அந்த அன்பையும், விநயத்தையும் உடனே விரைந்து எதிர் கொண்டு உபசரிக்கும் பொருத்தமான பதங்களும், உரை யாடலும் கிடைக்காத காரணத்தால் உள்ளம் மலர்வதன் உவகையை முகத்திற் காட்டும் மிகச் சிறந்த மொழியாகிய முறுவலை அவளுக்குப் பதிலாக அளித்து விடை கொடுத்தான் இளையநம்பி. மனத்தின் களிப்பை வெளியிடும் ஆயிரம் பதங்கள் மொழியில் இருக்கலாம். ஆனால் அவை ஓர் அழகிய முகத்தின் முறுவலை இன்னோர் அழகிய முகத்தின் முறுவலால் சந்திக்கும் சுகத்துக்கு ஈடாவதில்லை என்று தோன்றியது. மனம் நெகிழ்ந்து கனிந்து பிறக்கும் ஒரு சிரிப்பை அதே நெகிழ்ச்சியும், கனிவும் உள்ள இன்னொரு சிரிப்பால் தான் உபசரிக்க முடியும் என்பதை அப்போது இளையநம்பி மிக நன்றாக உணர்ந்திருந்தான். தேர்ந்த கவியின் சொற்கள் ஒவ்வொருமுறை நினைக்கும் போதும் ஆராயும் போதும் ஒரு புது நயத்தையும், பொருளையும் தருவது போல் இரத்தின மாலையின் புன்னகை அவன் சிந்தனையில் புதுப்புது அணி நயங்களை அளித்துக்கொண்டிருந்தது. அவளை இருந்த வளமுடையார் கோவிலுக்கு* வழியனுப்பி விட்டு இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் பணிப் பெண்களும் மாளிகைக்குள்ளே திரும்பினர். பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு உடனே அந்த மாளிகையின் கதவுகள் உட்புறமாகத் தாழிட்டு அடைக்கப்பட்டன. உள்ளே திரும்பியதும் உடனே இளையநம்பியும் அழகன் பெருமாளும் தேனூர் மாந்திரீகன்படுத்த படுக்கையாகக் கிடந்த கட்டிலருகே சென்று அமர்ந்தனர். குறளன் நிலவறை முனையைக் காவல் புரிவதற்காகச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான். முதல் நாளிரவு உறக்கம் இல்லாமற் கழித்திருந்த காரணத்தால் இளைய நம்பிக்கு மிகவும் களைப்பாக இருந்தது. மாந்திரீகன் செங்கணானோடு ஆறுதலாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அங்கேயே அருகிலிருந்த மஞ்சம் ஒன்றில் போய்ச் சாய்ந்தான் இளையநம்பி. அவன் உடல் மிகவும் அயர்ந்து போயிருந்தது. படுத்த சில கணங்களிலேயே அவன் விழிகளும் நினைவும் சோர்ந்து உறங்கி விட்டான். அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த சொற்கள் அவன் செவிகளில் மயங்கி ஒலித்தன. தன்னை மறந்து உறக்கத்தில் இளைய நம்பி ஒரு கனவு கண்டான்.

* இப்போதுள்ள கூடலழகர் கோவில் இந்தக்கதை நிகழும் காலத்து மதுரையில் இருந்த வளமுடையார் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. ஆதாரம் :- சி லம்பு அரும்பதவுரை.

*****
ஒளிவீசும் முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப் பட்டதும், மகாமேரு மலையைப் போல பொன் மயமாக உயர்ந்ததுமான ஒரு பெரிய மாளிகையின் படிகளில் ஏறி உள்ளே நுழைவதற்காக வாயிலருகே நின்றுகொண்டிருந்தான் இளையநம்பி. ஏதோ ஞாபகத்தில் வாயிற் கதவுகளைக் கடந்து அந்த மாளிகைக்குள் நுழையுமுன் அவன் திரும்பிக் கீழ் முகமாகத் தான் ஏறிவந்த படிகளைப் பார்க்கிறான். பார்த்ததும் அவன் கண்களும் கால்களும் தயங்கின. கீழே கடைசிப் படியில் கணிகை இரத்தினமாலை தலைவிரி கோலமாக நிற்கிறாள். காடாய் அவிழ்ந்து தொங்கும் கருங்கூந்தலின் நடுவே அவளுடைய எழில்முகம் மேகங்களின் நடுவே நிலவு பூத்தாற்போல் வனப்பு மிகுந்து காட்சியளித்தது.

அவன் பார்த்தபின்பும் அவள் அந்த முதற்படியிலேயே தயங்கி நின்று கொண்டிருந்தாள். மைதீட்டிய அவள் விழிகளில் ஏக்கம் உலவிக் கொண்டிருப்பதை அவன் காணமுடிந்தது. அவளுடைய சிறிய அழகிய இதழ்கள் அவனிடம் ஏதோ பேசுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தன. கோவைக் கனிகளைப் போன்ற அந்தச் செவ்விதழ்கள் அவள் முகத்தில் துடிப்பது மிக மிகத் தனியானதொரு கவர்ச்சியை உடையதாயிருந்தது. அப்படியே கீழே இறங்கி ஓடிப்போய் அந்த முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டு அதன் மென்மையையும், வெம்மையையும் அளந்தரிய வேண்டும் போல அவ்வளவு ஆவலிருந்தும் தான் ஏறி வந்துவிட்ட படிகளின் உயரத்திலிருந்து மீண்டும் திரும்பிக் கீழே இறங்கிப் போக முடியாமல் ஏதோ தன்னைத் தடுப்பதையும் அவன் உணர்ந்தான். அப்படித் தன்னைத் தடுப்பது எது என்பதையும் அவனால் உடனே புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த வேளையில் கீழேயிருந்து சோகம் கன்றிய குரலில் கதறுவதுபோல் உரத்த குரலில் அவள் அவனைக் கேட்கிறாள்:

“ஐயா! நான் இன்னும் கீழே தரையில்தான் இருக்கிறேன், நீங்களோ முத்துக்களும் நவரத்தினங்களும் நிறைந்திருக்கிற எட்டமுடியாத உயரத்துக்குச் சென்று விட்டீர்கள்...”

“இல்லை! இல்லை என்னுடைய விலை மதிப்பற்ற முத்து இன்னும் தரையில்தான் இருக்கிறது. நான் ஒளி நிறைந்ததாகக் கருதும் இரத்தினம் இன்னும் பூமியில்தான் இருக்கிறது பெண்ணே!” - என்று உரத்த குரலில் தன் உயரத்திலிருந்து அவளுக்குக் கேட்கும்படிக் கதறினான் அவன். அந்தக் குரல் அவளுக்குக் கேட்டதோ இல்லையோ?

இவ்வளவில் யாரோ அவன் தோளைத் தீண்டி எழுப்பவே அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். உடல் முழுவதும் குப்பென்று வேர்த்திருந்தது.

“வாய் அரற்றுகிற அளவு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறதே!” என்று வினாவியபடியே அழகன் பெருமாள் அவனது மஞ்சத்தின் அருகில் நின்று கொண்டிருந்தான். எதிர்ப்புறம் கட்டிலில் படுத்தபடியே முகத்தைத் திருப்பி இளையநம்பியை நோக்கிப் புன்னகை பூத்தான், தேனூர் மாந்திரீகன். ‘அவர்கள் இருவரும் கேட்க நேரும்படி கனவில் அரற்றிவிட்டோமே’ என்பதை எண்ணி நாணினான். அவன் மீண்டும் விழித்த நிலையில் நினைவுகூட்ட முயன்றபோது அந்தக் கனவும் காட்சிகளும், வார்த்தைகளும் தொடர்பின்றி இருந்தன.


இளையநம்பி உறக்கத்தில் வாய் அரற்றியதும் அழகன் பெருமாள் அவனை எழுப்பிவிட்டாலும், மஞ்சத்திலிருந்து உடனே எழவில்லை அவன். கண்களை மூடியபடியே உடற் சோர்வு நீங்கி மஞ்சத்திற் சாய்ந்திருந்தான் அவன். இதைக் கண்டு அவன் மீண்டும் உறங்கிவிட்டதாக எண்ணிக்கொண்ட அழகன் பெருமாள்,

“செங்கணான்! யார் எழுப்பினாலும் எழுந்திருக்க முடியாதபடி திருக்கானப்பேர் நம்பிக்கு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறது” என்று கூறியபடியே தேனூர் மாந்திரீகனிடம் மீண்டும் உரையாடப் போய் அமர்ந்தான். இதைக் கேட்டு மஞ்சத்தில் விழிகளை மூடியவாறு படுத்திருந்த இளைய நம்பி உள்ளூற நகைத்துக் கொண்டான். தான் உறங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தது இளையநம்பிக்கு. உறங்குகிற பாவனையிலேயே தொடர்ந்து கண்களை மூடியபடி மஞ்சத்தில் கிடந்தான் அவன்.

அங்கே அழகன்பெருமாளுக்கும், செங்கணானுக்கும் உரையாடல் தொடங்கியது. முதலில் அழகன்பெருமாள் தான் செங்கணானிடம் வினாவினான்:-

“செங்கணான் காரியம் காயா, பழமா?”

“பழமாகும் என்றுதான் நினைத்தோம். ஆனால் காலம் மாறிப்போய்ச் சூழ்நிலையும் ஒத்துவராததால் அது கனிய வில்லை! வெறும் காய்தான்.”

“அப்படியானால் யாத்திரீகர்கள் என்ன ஆனார்கள்?”

“சூழ்நிலையை உணர்ந்து பெரும்பாலோர் கோட்டைக் கதவுகள் மூடப்படுவதற்கு முன்பாகவே அகநகரிலிருந்து வெளியேறி விட்டார்கள்...”

“நீ ஏன் தேனூருக்குத் திரும்பினாய்? உனக்குத் தேனூரில் என்ன வேலை இப்போது?”

“கோட்டையை விட்டு வெளியேறிய நம்மவர்களைப் பிரித்துத் தனித்தனியே செல்லவிடும் பொறுப்பு எனக்கு இருந்தது. திட்டமிட்டபடி அகநகரில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாகிய பின்பும் வெளியேறிவிட்ட யாத்திரீகர்களுக்குக் குறிப்பாக மேலே என்ன என்ன செய்யவேண்டுமென்று நெறி கூறவும், செயல் காட்டவும் வேண்டாமா?”

“திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்பது மோகூருக்குத் தெரியுமா செங்கணான்?” “ஒற்றர்கள் இருவர் அகப்பட்டுக் கொண்டதனால் கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டதையும் யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்டதையும் அந்துவன் மோகூருக்கு கூறியனுப்பியிருக்க வேண்டும். ‘நினைத்தபடி எதுவும் நடக்க முடியாது’ என்பதைப் பெரியவரும் காராளரும் இதிலிருந்தே அறிந்துகொள்ள முடியும்தானே?”

இந்தச் சமயத்தில் மஞ்சத்தில் படுத்திருந்த இளைய நம்பிக்கு அடக்கிக்கொள்ள இயலாத பெருந்தும்மல் ஒன்று வந்தது. அவன் தும்மினான். உடனே அவர்களுடைய உரையாடல் நின்றது. தொடர்ந்து சில கணங்கள் அவர் களுடைய மெளனம் நீடிக்கவே இனிமேல் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தவனாக இளையநம்பி மஞ்சத்தில் எழுந்து அமர்ந்தான்.

அவன் மனம் அப்போது மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருந்தது. நினைவிழந்து உறங்கிய உறக்கத்தின் போது கண்ட ஒரு கனவையும் அவனால் புரிந்துகொள்ள முடிய வில்லை. உறக்கம் கலைந்தபின் தன் நினைவோடு செவிமடுத்த ஓர் உரையாடலையும் அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘யாத்திரீகர்கள் பத்திரமாக வெளி யேறித் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் பிரிந்து சென்றார்களா இல்லையா என்பதில் தேனூர் மாந்திரீகனுக்கும் இந்த அழகன் பெருமாளுக்கும் ஏன் இவ்வளவு கவலை? இவர்கள் இந்த அவிட்ட நாள் திருவிழாவின் போது நகருக்குள் என்ன காரியத்தைச் சாதிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்? அதற்கு யாத்திரீகர்கள் எப்படி உதவி செய்ய இருந்தார்கள்?’ என்றெல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஐயமாக எழுந்தன.

“நல்ல உறக்கம் போலிருக்கிறது! களைப்பு மிகுதியினால் முன்னிரவிலேயே உறங்கி எழுந்து விட்டீர்கள். உறக்கத்தில் ஏதோ முத்து, இரத்தினம் என்றெல்லாம் அரற்றினர்கள்? வந்து எழுப்பினேன். மீண்டும் உறங்கி விட்டீர்கள். இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்பும் நேரம்கூட ஆயிற்று” என்றான் அழகன் பெருமாள். இந்தச் சொற்களுக்கு மறுமொழி கூறாமல் மெளனமாக அவனைப் பார்த்துச் சிரித்தான் இளையநம்பி. தன்னுடைய வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் எந்த மறுமொழியும் கூறாமல் ஒரு மெளனமான புன்னகையை மட்டும் புரிந்த இளையநம்பியைக் கண்டு தங்கள் உணர்ச்சிகளுக்கு நடுவே ஏதோ ஒரு மெல்லிய பிணக்கு இடறுவதை அழகன் பெருமாளும் புரிந்து கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
32. வித்தகர் எங்கே?

இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்புகிற வரை அங்கிருந்த அவர்கள் மூவரும் தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவே இல்லை.​

“நீண்ட நாட்களாகக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. அந்துவனைச் சந்தித்து விட்டு இரத்தினமாலை திரும்பி வந்ததும் ஏதாவது விவரம் தெரியும் என்று நம்புகிறேன்” என்று இடையே அழகன் பெருமாள் பேசியபோது கூட,

“இப்படி நமக்குள் பொதுவாக நம்பவும் செயலாற்றவும் காரியங்கள் இருப்பதால்தான் நாம் ஒரு குழுவாகச் சேர்ந்திருக்கிறோம் அழகன் பெருமாள்!” என்று மறுமொழி கூறிவிட்டு மீண்டும் சிரித்தபடியே அவன் கண்களில் மின்னும் உணர்ச்சிகளை ஆழம் பார்த்தான் இளையநம்பி. அழகன் பெருமாளும் விட்டுக் கொடுக்காமல் பதிலுக்கு முக மலர்ந்து சிரித்தானே ஒழிய இளையநம்பியின் சொற்களில் இருந்த குத்தலைப் புரிந்து கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.

இருந்த வளமுடைய விண்ணகரத்தில் அர்த்த சாம வழிபாடும் முடிந்த பின்பே இரத்தினமாலை திரும்பினாள். பல்லக்கிலிருந்து இறங்கி வந்ததும் வராததுமாக, “உன் முகம் மலர்ச்சியாயிருப்பதைப் பார்த்தால் இருந்த வளமுடைய பெருமாள் பரிபூரணமாகத் திருவருள் புரிந்திருப்பார் என்றல்லவா தோன்றுகிறது?” என்று கூறி அவளை வரவேற்றான் இளையநம்பி. அவள் முகமும் அவனை நோக்கி மலர்ந்தது. அவள் அவனிடம் கூறினாள்:

“திருவருளுக்கு எதுவும் குறைவில்லை! ஆனால் என்ன தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன் என்பது எனக்கே புரியாமல் எதையோ தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.”

“அப்படியானால் போன காரியம் ஆகவில்லையா?” என்று கேட்டான் அழகன் பெருமாள்.

“இனிமேல்தான் தெரியவேண்டும்” என்று கையோடு திரும்பக் கொண்டு வந்திருந்த பூக்குடலையைக் காண்பித்தாள் அவள். குடலை நிறைய அடர்த்தியாகத் தொடுத்த திருத் துழாய் மாலை ஒன்று பொங்கி வழிந்தது. திருத்துழாய் நறுமணம், எங்கும் கமழ்ந்தது.

அவள் கூறியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளே மேலும் தொடர்ந்து கூறலானாள்:

“அகநகரின் நிலை மிகமிகக் கடுமையாகி இருக்கிறது! என்னுடைய பணிகளைப் பாராட்டி அரண்மனை அந்தப்புர மகளிர் மூலம் நான் பெற்றிருக்கும் முத்திரை மோதிரத்தைக் கையில் அணிந்து சென்றதனால் தான் நானே பாதுகாப்பாக இருந்த வளத்துக்குச் சென்று திரும்ப முடிந்தது. எங்கும் ஒரே பரபரப்பும் பதற்றமும் நிறைந்து அகநகர வீதிகளும், சதுக்கங்களும் அமைதி இழந்திருக்கின்றன. சந்தேகப்படுகிறவர்களை எல்லாம் இழுத்துப் போய்க் களப்பிரர்கள் கழுவேற்றுகிறார்கள். எல்லாரையும் பயம் பிடித்து ஆட்டுகிறது. நான் இருந்த வளமுடையார் கோவிலுக்குப் போய் யானைக் கொட்டாரத்தை அடைந்தபோது அந்துவனைக் கொட்டாரத்தின் வாயிலிலேயே பார்த்தேன். அவன் வேறு சில யானைப்பாகர்களோடு சேர்ந்து நின்று கொண் டிருந்தான். ஆனால் என்னைப் பார்த்த பின்பும் அவன் என்னோடு பேசவோ தெரிந்தவன் போல் முகம் மலரவோ இல்லை. மற்ற யானைப் பாகர்களோடு பாலி மொழியில் சிரித்துப்பேசிக் கொண்டிருந்தான் அவன். நிலைமையை நான் விளங்கிக் கொண்டேன். எதையும் தெரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏமாற்றத்தோடு, ஆலயத்திற்குள்ளே சென்று நான் கொண்டு போயிருந்த மாலைகளைச் சாற்றச் செய்து இருந்த வளமுடையாரையும், அந்தரவானத்து எம் பெருமானையும் வழிபட்டு வணங்கித் திரும்பும்போது, மீண்டும் அந்துவனைக் காண முயன்று வெகு நேரம் காத்திருந்தேன். அர்த்தசாம வேளைகூட நெருங்கி விட்டது. என்ன முயன்றும் அந்துவனைக் காண முடியவில்லை. வந்த காரியத்தை இறைவனிடம் விட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்த மனத்துடன் குடலையும் கையுமாகப் பணிப் பெண்ணோடு நான் திரும்புவதற்கு இருந்தேன். அப்போது விண்ணகரத் திருக்கோயிலைச் சேர்ந்த நந்தவனத்து மாலை கட்டி ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கைகளில் ஒரு பெரிய திருத்துழாய் மாலையோடு என்னை நோக்கி வந்தான்.

“இருந்தவளமுடைய பெருமாளின் திருவருள் இந்த மாலையில் நிரம்பியிருக்கிறது. ‘தாங்கள் நினைப்பதை அருளும் தெய்வீகப் பயனை இந்தத் திருத்துழாய் மாலை தங்களுக்குத் தரும்’ என்று அந்துவனார் கூறினார். அவருடைய வேண்டுகோளின்படி இந்தத் திருத்துழாய் மாலையைத் தங்களிடம் சேர்க்க வந்தேன்” என்று கூறி மாலையை உடனே என் கையிலிருந்த குடலையில் திணித்துவிட்டு அந்த மாலை கட்டி விரைந்து நந்தவனப் பகுதியில் புகுந்து மறைந்து விட்டான். அவனை ஏதாவது கேட்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் மின்னலாக மறைந்து விடவே எனக்குத் திகைப்பாயிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. கோயிலிலிருந்து வெளியே வந்ததும் பல்லக்கில் அமர்ந்து மாலையைக் கை விரல்களால் நன்கு ஆராய்ந்தும் எதுவும் புலப்படவில்லை. இந்த மாலையைக் கொடுத்து அனுப்பியதன் மூலம் அந்துவன் நமக்கு என்ன தெரிவிக்கிறான் என்பதே எனக்குப் புரிய வில்லை. மாலை இதோ இருக்கிறது” என்று அந்த மாலையை அவள் எடுத்து நீட்டுவதற்கு முன்பே விரைந்து அதைத் தன் கைகளில் ஏற்றான் அழகன்பெருமாள். மாலையை மேலிருந்து கீழாகத் தொங்கவிட்டபோது ஒரு பெரிய தேங்காயளவு அதன் நுனியில் தொங்கிய திருத்துழாய்க் குஞ்சம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

அழகன்பெருமாள் நிதானமாகக் கீழே தரையில் அமர்ந்து மாலையை மடியில் வைத்துக் கொண்டு அதன் குஞ்சத்தை மெல்லப் பிரித்தான். எல்லார் விழிகளும் வியப்பால் விரிந்தன.
என்ன விந்தை? அந்தக் குஞ்சத்தின் நடுப்பகுதியில் இருந்து ஒடியாமல் சுருட்டப்பட்டு நாரால் கட்டியிருந்த ஒலைச்சுருள் ஒன்று வெளிப்பட்டது. எல்லார் கண்களிலும் மலர்ச்சி தெரிந்தது.

“பெருமாளின் திருவருள் இதோ கிடைத்து விட்டது! அந்துவன் பொய் சொல்லமாட்டான்” என்று கூறியபடியே அந்த ஒலைச்சுருளை எடுத்துப் பிரித்தான் அழகன் பெருமாள். ஒடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு முற்றிக் காய்ந்த ஓலையைப் பயன்படுத்தாமல் ஓரளவு ஈரமுள்ள பதத்து ஓலையைப் பயன்படுத்தி அதில் எழுதியிருந்ததால் எழுத்துக்கள் ஒலையில் நன்கு பதியவில்லை. கீறினாற்போல் ஏதோ மங்கலாகத் தெரிந்தது. அதை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாமல் அழகன் பெருமாள் சிரமப்பட்டான். கைத்தீபத்தின் அருகே நெருக்கமாகப் பிடித்துப் படிக்க முயன்றும் முடியவில்லை.

“என்னிடம் கொடு அழகன்பெருமாள்” என்று அதை வாங்கிக்கொண்ட இளையநம்பி இரத்தினமாலையின் பக்கம் திரும்பி, “நீ கண்ணுக்குத் தீட்டிக் கொள்ள மை சேர்த்து வைத் திருப்பாயே அந்த மைக் கூண்டைக் கொண்டு வா!” என்றான். உடனே அவள் பணிப்பெண்ணுக்குச் சைகை செய்தாள்.

பணிப்பெண் உள்ளே ஓடினாள். சிறிது நேரத்தில் மைக் கூண்டுடன் திரும்பி வந்து அதை இளையநம்பியிடம் கொடுத்தாள். ஒலையைப் பளிங்குத் தரையில் வைத்து அதன் ஒரு முனையை அழகன் பெருமாளும், மறுமுனையை இரத்தினமாலையும் கட்டை விரல்களால் அழுத்திக் கொள்ளச் செய்தபின் அது சுருண்டு விடாமல் இருந்த நிலையில் அதன்மேல் மென்மையாக மையைத் தடவினான் இளைய நம்பி. எழுத்துக்களாகக் கீறப்பட்டிருந்த இடங்கள் ஒலைப் பரப்பில் பள்ளமாகி இருந்ததால் அந்தப் பள்ளங்களில் மை ஆழப் பதிந்திருந்தது. அப்படிப் படிந்ததன் காரணமாக ஒலையில் எழுதியிருந்த வாக்கியங்கள் இப்போது தெளிவாகத் தெரியலாயின.

‘பெரியவர் மதுராபதி வித்தகர் இப்போது திருமோகூரில் இல்லை. அவரைத் தேடும் முயற்சியைச் செய்யவேண்டும்’ - என்ற அந்த முதல் பகுதி எழுத்துக்களை இளையநம்பியே வாய்விட்டுப் படித்ததும், மற்றவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் எல்லா விழிகளும் விளக்கொளியின் துணையுடன் ஒலைக்கருகே தணிந்து பார்க்க விரைந்தன. பலருடைய மூச்சுக்காற்று ஒரே திசையில் பாயவே எதிர்பாராத விதமாக அந்த விளக்கே அணைந்து போய்விட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
33. அடிமையும் கொத்தடிமையும்

தாகத்தோடு பருகுவதற்குக் கையில் எடுத்த நீரைப் பருக முடியாமல் மறித்துப் பறித்தது போல் அரிய செய்திகள் அடங்கிய ஒலையைப் படிப்பதற்குள் விளக்கு அவிந்ததன் காரணமாக அவர்களது ஆவலும் பரபரப்பும் அதிகரித்திருந்தன. பணிப்பெண் அவிந்த கைவிளக்கை உள்ளே எடுத்துச் சென்று ஏற்றி வந்தாள். விளக்கு மீண்டும் அவிந்து விடலாகாதே என்ற கவலையில் அனைவரையும் விலகி நிற்குமாறு வேண்டிய பின் ஒலையில் எழுதப்பட்டிருந்த இரண்டாவது வாக்கியத்தைப் படிக்கலானான் இளையநம்பி:

‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் சிறை மீட்க எல்லா வகையிலும் முயலுக!’

இந்த இரண்டாவது வாக்கியத்தின் பொருளை இதிலுள்ள சொற்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது என்னும் சூழ்நிலை புரியவில்லை.

மூன்றாவது வாக்கியத்தோடு அந்த ஓலையில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் முடிந்து விட்டன. மூன்றாவது வாக்கியம்: ‘திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று தன்னைப் பற்றியே இருந்ததனால் அதை அவன் வாய்விட்டுப் படிக்கவில்லை. அப்படியே ஒலையை அழகன் பெருமாளிடம் கொடுத்து விட்டான். அவன் வாக்கியங்கள் மூன்றும் முடிந்த பின் செய்திகளை நம்புவதற்கு ஒரு நல்லடையாளமாகக் கயல் என்றும் அதில் கீழே எழுதியிருந்ததை அவன் காணத் தவறவில்லை.

அந்த ஒலையை அழகன் பெருமாள் படித்த பின்பு இரத்தினமாலையிடம் கொடுத்தான். இரத்தினமாலையும் படித்த பின்பு மீண்டும் அது இளைய நம்பியின் கைகளுக்கே வந்து சேர்ந்தது. திருத்துழாய் நறுமணம் கமழும் அந்த ஒலையை இரண்டாவது முறையாகவும் படித்தான் அவன். கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டபின் பல நாட்களாக அந்தக் கணிகை மாளிகையிலேயே இருந்து விட்டதினால் ஒலையில் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலைகளை உணரவும் அநுமானம் செய்யவும் முடியாமல் இருந்தது.

‘பெரியவர் மதுராபதி வித்தகர் ஏன் இப்போது மோகூரில் இல்லை? அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் நாங்கள் ஏன் ஈடுபடலாகாது?’

‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் யார் எப்போது எதற்காகச் சிறைப் பிடித்தார்கள்?’

ஒன்றும் விளங்காமல் மனம் குழம்பினான் இளைய நம்பி. அப்போது இரத்தினமாலை சிரித்த முகத்தோடு அவனைக் கேட்டாள்:

“பார்த்தீர்களா? திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்த ஓலையும் எங்களுக்கு நினைவூட்டுகிறது. அன்றொரு நாள் கோபித்துக் கொண்டு புறப்பட்டதுபோல் இனி நீங்கள் இங்கிருந்து எங்கள் பாதுகாப்பை மீறி எங்கும் புறப்பட முடியாது!”

“என்னைப் பாதுகாப்பதில் உங்களுக்குள்ள அக்கறை பற்றி மகிழ்ச்சி. ஒருவரைப் பாதுகாப்பதற்கும் சிறை வைப்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் உங்களுக்கு நினை விருந்தால் போதும். சில சமயங்களில் நீயும் அழகன் பெருமாளும் செய்கிற காரியங்கள் மூலம் நான் பாதுகாக்கப் படுகிறேனா, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகிறது.”

“பாதுகாப்பதும் கூட ஒருவகைச் சிறைதான்! பாது காக்கிறவர், பாதுகாக்கப்படுகிறவர், இருவரில் யாருடைய அன்பு அதிகம், யாருடைய உரிமை அதிகம், என்பதைப் பொறுத்தே சிறையா இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இங்கே நாங்கள் உங்கள் மேல் உயிரையே வைத்து அன்பு செலுத்துகிறோம். நீங்கள் பதிலுக்கு எந்த அளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை எதிர்பாராமலும் கணக்கிடாமலுமே உங்கள் விருப்பம் போல் பழக உரிமைகள் அளித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் இது சிறையா அன்புப் பாதுகாப்பா?”

“அன்பு என்பது நிறுவைக்கும், அளவைக்கும் அப்பாற் பட்டது இரத்தினமாலை! இப்போது அதை நிறுக்கவும் அளக்கவும் நீ விரும்புவதாகத் தெரிகிறது...”

“அல்லவே அல்ல, செய்வதையும் செய்து விட்டுக் குற்றத்தை என் தலையில் சுமத்தாதீர்கள்! நான் பாதுகாக்கப் படுகிறேனோ, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனோ, என்று முதலில் வினாவியதே நீங்கள்தான். நீங்கள் வினாவியதற்கு நான் மறுமொழி கூறினால் என்னையே குறை சொல்கிறீர்களே?”

இரத்தினமாலையின் இந்தப் பேச்சுக்கு இளையநம்பி மறுமொழி எதுவும் கூறவில்லை என்றாலும் குறும்பாகவும் அங்கதமாகவும்* தான் கூறிய ஒரு பேச்சு அவள் மனத்தின் உணர்வுகளை இவ்வளவு பாதித்திருக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவோ, நினைக்கவோ இல்லை.

* குத்தலாகவும்

சிறிது நேர மெளனத்துக்குப் பின்னர் அவர்கள் உரையாடல், ஒலையில் கண்டிருந்த பிற செய்திகளைப் பற்றித் திரும்பியது. இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கி வினவினான்:

“இந்த ஒலையின் இரண்டாவது வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் தென்னவன் மாறனையும், திருமோகூர் மல்லனையும் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, அழகன் பெருமாள்! அவர்கள் எப்படிச் சிறைப்பட்டிருப்பார்கள், எவ்வகையில் மீட்க வேண்டும் என்றெல்லாம் நீ தான் முடிவு செய்ய வேண்டும்... செய்வாய் அல்லவா?”

“நம்மைப் போல் அவர்களும் களப்பிரர் ஆட்சியை எதிர்ப்பவர்கள். பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைக்குத் தலை வணங்குகிறவர்கள். தென்னவன் மாறன் சிறு மலைக் காட்டில் இருப்பவன். மல்லன் திரு மோகூர்ப் பெரிய காராளரின் அறக்கோட்டத்தில் இருப்பவன். எல்லோரும் நம்மவர்கள். பாண்டிய மரபு சிறப்படையப் பாடுபடுகிறவர்கள். அவர்களைச் சிறை மீட்பது பற்றிய காரியங்களை நானே செய்கிறேன். உங்கள் ஒத்துழைப்பும், உறுதுணையும் எனக்கு இருந்தால் போதும் ஐயா!” என்றான் அழகன் பெருமாள். அவ்வளவில் இரத்தினமாலை அவர்களை உண்பதற்கு அழைத் தாள். இரவு நெடுநேரமாகி யிருந்ததனால் உண்ணும் வேளை தவறியிருந்தது. நிலவறைக் காவலுக்காகச் சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்த குறளனுக்கும் இரத்தக் காயங்களுடன் கட்டிலில் கிடந்த தேனூர் மாந்திரீகனுக்கும் பணிப் பெண்கள் அங்கேயே உண்கலங்களில் உணவு எடுத்துச் சென்று படைத்தனர்.

இளையநம்பியையும், அழகன் பெருமாளையும் அமரச் செய்து இரத்தினமாலையே பரிமாறினாள். இளையநம்பி போதும் போதும் என்று கைகளை மறித்த பின்னும் நெய் அதிரசங்களை அவன் இலையில் படைத்தாள் இரத்தினமாலை.

“இரத்தினமாலை! இதென்ன காரியம் செய்கிறாய்? அதிரசங்களை நான் உண்ண வேண்டுமா? அல்லது அதிரசங்கள் என்னை உண்ண வேண்டுமா? வீரர்கள் உண்பவர்கள் மட்டும்தான்; உண்ணப்படுபவர்கள் இல்லை! வீரர்கள் வாழ்வதற்காக உண்ணுகிறார்கள். மற்றவர்களோ உண்பதற்காகவே வாழ்கிறார்கள். இந்த உலகில் உணவை உண்ணுகிறவர்களும் உண்டு; உணவால் உண்ணப்படுகிறவர்களும் உண்டு. இப்படிக் கலத்தில் மிகையாகப் படைப்பதன் மூலம் நீ என்னைப் பாராட்டுகிறாயா, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறாயா என்பது புரியவில்லை.”

“வீரர்கள் முனிவர்களைப் போல் உண்ணக் கூடாது. முனிவர்களைப் போல் பழகக் கூடாது.” அவள் இந்தச் சொற்களின் மூலம் குறிப்பாகத் தனக்கு எதையோ புலப்படுத்த முயல்வது போல் இளையநம்பிக்குத் தோன்றியது. இந்தச் சொற்களைச் சொல்லி முடிந்த உடனே அவள் முகத்தையும் கண்களையும் பார்க்க முயன்றான் அவன். அவளோ சொற்களால் கூறியதை முகத்தினாலும், கண்களாலும் அவனிடமிருந்து மறைக்க முயலுகிறவள்போல் வேறு புறம் பார்த்துக் கொண்டு நின்றாள். அழகன் பெருமாள் இந்த நாடகத்தைக் கண்டும் காணதவன்போல் உண்பதில் கவனமாயிருந்தான். உள்ளுற அவனுக்கு ஒருவகை மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ‘பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை’ என்று இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாளில் முதல் சந்திப்பின்போது எந்த இளைஞன் சினங் கொண்டு பேசியிருந்தானோ, அதே இளைஞன் இந்த வளைக்கரங்கள் ‘கிணின் கிணின்’ என்று ஒலிக்கத் தன் இலையில் பரிமாறும் அழகை இரசிப்பதை இன்று இந்தக் கணத்தில் அழகன் பெருமாள் தன் கண்களாலேயே காண முடிந்தது. இந்த மாறுதல் தனக்கும் இரத்தினமாலைக்கும் மிகப் பெரிய வெற்றி என்பது அழகன் பெருமாளுக்குப் புரிந்திருந்தாலும் அந்த வெற்றிப் பெருமிதத்தை வெளிப்படையாக்கி விட விரும்பவில்லை அவன்.

உலகில் வென்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. தோற்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. இது வென்றவர்கள் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றி வகையைச் சேர்ந்தது. தான் தோற்றுப் போயிருக்கிறோம் என்று தோற்றவனைப் புரிந்து கொள்ளவிடாமல் வென்றவர்கள் கொண்டாடும் வெற்றியில் தோற்றிருப்பவனும் கூடக் கலந்துகொள்ள முடியும். அப்படியின்றி நீ தோற்றதால் ஏற்பட்ட வெற்றிதான் இது என்று தோற்றவனுக்கும் அவன் தோல்வியைப் புரியவிடுவதால் அவன் மற்றொரு போருக்குக் கிளர்ந்தெழும் நிலைமை உருவாகி விடும் அபாயமும் ஏற்படலாம். அழகன் பெருமாளைவிட இரத்தினமாலை இந்த அபாயத்தை மிக நன்றாக உணர்ந்திருந்தாள். பெண் தன்னை வென்றவனுக்கு அடிமையாகிறாள் என்றால், அறிந்தோ அறியாமலோ தனக்குத் தோற்றவனுக்குக் கொத்தடிமையாகவே ஆகிறாள். ஆனால் தோற்றிருப்பவனுக்கு அவன் தோற்றிருக்கிறான் என்பது தோன்றவே விடாமல் பார்த்துக்கொள்ள அவள் எவ்வளவிற்குத் தேர்ந்திருக்கிறாள் என்பதைப் பொறுத்தே இந்த வெற்றியின் முடிவான பயன்களை அவள் அடைய முடியும். அவன் அந்த மாளிகைக்குள் வந்த முதல் நாளன்று அவனுடைய திரண்ட தோள்களையும், பரந்த மார்பையும் கண்டு மனம் தோற்ற கணத்தில், அவள் அவனுக்கு அடிமை யாவதற்கு மட்டுமே ஆசைப்பட்டாள். இன்றோ அவனுக்குக் கொத்தடிமையாவதற்கே ஆசைப்பட்டாள். மெல்லியபட்டு நூலிழை போன்ற இந்த வெற்றிப் பிணைப்பு அறுந்துவிடக் கூடாது என்பதில் அழகன் பெருமாளைவிட விழிப்பாயிருந் தாள் இரத்தினமாலை. ஒருமுறை ஏற்கெனவே இந்த விழிப்பு உணர்ச்சி இல்லாத காரணத்தால் தவறு செய்திருந்தாள் அவள். எனவே மறுமுறையும் அப்படித் தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதில் அவள் மிகமிகக் கவனமாயிருந்தாள். அரண்மனை அந்தப்புரத்துக்குத் தான் சென்று திரும்பியிருந்த தினத்தன்று அழகன் பெருமாளுக்கும், இளைய நம்பிக்கும், தனக்கும் நிகழ்ந்த ஒர் உரையாடலின் போது, ‘பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம், இங்கே ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் பரிதாபம்’ என்று இளையநம்பி சினங் கொண்டு கூறியவுடன், ‘ஆண்கள் செய்யமுடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது’ - என்று தான் சுடச்சுட மறுமொழி கூறியதன் மூலம் அவன் கோபித்துக் கொண்டு வெளியேறி விட இருந்ததை நினைவு கூர்ந்து இப்போதும் அப்படி நேர்ந்து விடாமல் கவனமாக இருந்தாள் இரத்தினமாலை.

உண்டு முடித்தபின் தேனூர் மாந்திரீகன் படுத்திருந்த கட்டிலருகே அமர்ந்து திருத்துழாய் மாலையில் வந்த ஒலையை வைத்துக்கொண்டு மேலே என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள் அவர்கள். நீண்ட நேரம் சிந்தித்தும் எதையும் திட்டமிட முடியவில்லை. அழகன் பெருமாள் செங்கணானின் கட்டிலருகே இருந்த மஞ்சத்தில் உறக்கச் சென்றான்.

அன்று செங்கணான் புதிதாக வந்திருந்ததனால் இளைய நம்பிக்குத் தான் எந்தக் கட்டிலில் படுத்து உறங்குவது என்ற தயக்கம் வந்தது. செங்கணானுக்கு அருகிலிருந்த கட்டிலில் அவனுக்குத் துணையாயிருக்கும் எண்ணத்தோடு அழகன் பெருமாள் படுத்துவிட்டதால் அவனை அங்கிருந்து எழுப்புவதற்கு இளைய நம்பி விரும்பவில்லை. அவனது தயக்கத்தைக் குறிப்பறிந்த இரத்தினமாலை, “இந்த மாளிகையின் மேல் மாடத்தில் ஒரு சயனக்கிருகம் இருக்கிறது, நிலாவின் தண்மையையும், தென்றல் காற்றின் சுகத்தையும் அனுபவித்த படி உறங்கலாம் அங்கே...” என்றாள். அவன் மறுக்கவில்லை... அவள் அவனை மேலே அழைத்துச் சென்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
34. மணக்கும் கைகள்

மாளிகையில் எல்லாரும் உறங்கிவிட்ட நிலையில் தனியாக இரத்தினமாலையோடு மேல் மாடத்திற்குச் சென்றான் அவன். தன்னை மேல் மாடத்திற் கொண்டு போய் விட்டுவிட்டு, அவள் உடனே திரும்பி விடுவாள் என்று நினைத்தான் இளையநம்பி. அவளோ மேல் மாடத்தில் இருந்த பள்ளியறையை ஒட்டி அமைந்த நிலா முற்றத்தில் நின்று அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள்.

“தென்றல் பொதிகை மலையில் பிறக்கிறது. ஆனால் மதுரைக்கு வரும்போது அது இன்னும் அதிகச் சிறப்படைகிறது. அதிகப் புகழ் பெற்று விடுகிறது.”

“அதாவது மதுரைத் தென்றல் தமிழ்த் தென்றலாக வீசுகிறது என்றுதானே சொல்கிறாய்? ஆம். ஒரு தென்றல் இன்னொரு தென்றலுடன் இங்கே கூடுகிறது. மொழிகளிலே தென்றலாகிய தமிழ் காற்றின் இளவரசியாகிய மந்தமாருதத்தைச் சந்திக்கும் இடம் இந்த நான்மாடக்கூடல் நகரம்தான்.”


“நீ கூறுவதை ஒப்புக் கொள்கிறேன் இரத்தினமாலை! ஆனால் ஒரு சிறு பாடபேதம். இந்த இடத்தில் இப்போது இரண்டு தென்றல்கள் இருப்பதாக நீ சொல்கிறாய். ஆனால் மூன்று தென்றல்கள் இங்கு சூழ்ந்து கொண்டு குளிர்விப்பதை இப்போது நான் காண்கிறேன்.”

“அது எப்படி?”

“பொதியமலைத் தென்றலாகிய மந்தமாருதம்! மதுரைத் தென்றலாகிய தமிழ்! அழகுத் தென்றலாகிய நீ!”

இதைக் கேட்டு அவள் தலை குனிந்தாள். அவளது வலது கால் கட்டைவிரல் தரையில் மனத்தின் உணர்வுகளைக் கோலமிட்டுப் பார்க்க முயன்றது. ‘நீ வென்று கொண்டிருக்கிறாய், வென்று கொண்டிருக்கிறாய்’ என்று அவளுடைய மனம் அவளை நோக்கி உள்ளேயே குதூகலக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘உன் வெற்றியை உன் முன் தோற்றுப் போய்க் கொண்டிருப்பவனுக்கே புரிய விடாமல் அவனே வென்றிருப்பதுபோல் உணரச் செய்!’ என்றும் அவள் உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவள் உணர்ச்சிகளால் மிகவும் நெகிழ்ந்து, மலர்ந்து, தளர்ந்து பலவீனமான அனிச்சம் பூப்போல் ஆகியிருந்தாள். தன்னால் அழகுத் தென்றல் என்று புகழப்பட்ட அந்த மந்த மாருதம் தன்னுடைய தோள்களையும் மார்பையும் தழுவி வீசிக் குளிர்விப்பதை இளையநம்பி உணர்ந்தான்.

இனிமையாக யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பட்டாற் போன்ற அவளுடைய மெல்லிய நீண்ட பொன் விரல்களைத் தன் விரல்களோடு இணைத்துக் கொண்டான் அவன். இணைப்பிற்கும் அணைப்பிற்கும் ஆளான கைகளை விட்டுவிடாமல்,

“இந்தக் கைகளில் சந்தனம் மணக்கிறது பெண்ணே!” என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே கூறினான் அவன். பொன்னாற் செய்த பேரியாழ் போன்ற அவள் உடல் இப்போது இளையநம்பியின் அரவணைப்பில் இருந்தது. அவள் இனிய குரலில் அவன் கேட்க உழற்றினாள்:-

“இந்தப் பரந்த மார்பிலும், தோள்களிலும் என் கைகளினால் அள்ளி அள்ளிச் சந்தனம் பூச வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது அன்பரே!”

“சந்தனத்திற்கு வேறெங்கும் போக வேண்டாம் இரத்தின மாலை! உன் கைகளே சந்தனத்தால் ஆகியவைதான். உன் கைகள் மணக்கின்றன. மணக்க வேண்டிய கைகள் இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது.”

“எங்கே, அந்த வார்த்தைகளை என் செவி குளிர இன்னொரு முறை சொல்லுங்களேன்.”

“மணக்கவேண்டிய கைகள் இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது!...” ஒரக் கண்களால் அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன். ‘உனக்குத் தோற்றுவிட்டேன்’ என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பு. அவன் அவளைக் கேட்கலானான்:-

“இந்த மாளிகையில் நுழைந்த முதற்கணத்திலிருந்து நீ என்னை அதிகமாகச் சோதனை செய்திருக்கிறாய் பெண்ணே! நான் உன்மேல் காரணமே புரியாத வெறுப்போடு இங்கே வந்தேன். காரணம் புரியா வெறுப்பு எல்லையற்ற அன்பாக முடிவதும், காரணம் புரியாத அன்பு எல்லையற்ற வெறுப்பாக முடிவதும், ஏனென்றே விளங்காத உலகம் இது! உன்னைப் போல் பெண்களின் விழிகளைக் கவிகள் வேல் நுனிக்கு உவமை சொல்லுவார்கள். இத்தனை ஆண்டுகளாக நான் கட்டிக் காத்த உறுதியையும், ஆணவத்தையும், ஆசாரங்களையும் உன் கண்களாகிய வேல்கள் இன்று கொலை செய்துவிட்டன.”

“நீங்கள் மட்டும் நிரம்ப நல்லவர்போல் பேசி முடித்து விடவேண்டாம்! இங்கு வந்ததிலிருந்து என்னைக் கொல்வது போன்று நீங்கள் எத்துணை வார்த்தைகளைக் குத்திக் காட்டிப் பேசியிருக்கிறீர்கள்.”

“உன் பங்குக்கு நீயும் என்னிடம் அப்படிப் பேசி யிருக்கும் சமயங்களை மறந்துவிடாதே பெண்ணே!”

“இருவருமே மறக்க வேண்டியவற்றை மறந்துவிட்டவற்றை நீங்கள்தான் இப்போது மீண்டும் எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறீர்கள்.”

“போகட்டும்! எல்லாவற்றையும் மறந்துவிடலாம். இப்போது, இந்த நிலையில் அழகன் பெருமாளோ, தேனூர் மாந்திரீகனோ, குறளனோ நம்மைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் இரத்தினமாலை?”

“எதுவும் வேறுபாடாக நினைக்கமாட்டார்கள். மனமார வாழ்த்துவார்கள். வந்த நாளிலிருந்து குறளன் அறைத்துக் குவிக்கும் சந்தனத்துக்கு இன்று பயன் கிடைக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி அடையக்கூடும். வந்த நாளிலிருந்து நீங்கள் காரணமின்றி என்னை வெறுப்பதை மன வருத்தத்தோடு கண்ட அழகன்பெருமாள் உங்கள் மன மாற்றத்தை விழாக் கண்டதுபோல வரவேற்கலாம்!”

“பொய்! அவ்வளவும் பொய்... வேண்டும் என்றே அழகன்பெருமாளைத் தேனூர் மாந்திரீகனுக்கருகே உறங்கச் செய்து நான் மேல் மாடத்தைத் தேடி உன்னோடு வரச் சதி செய்திருக்கிறாய் நீ! உண்மையா, இல்லையா?”

“காதல் சம்பந்தமான சதிகள் செய்யப்படுவதில்லை. அவை பெரும்பாலும் நேர்கின்றன.”

“செய்து திட்டமிடும் சதிக்கும், நேரும் சதிக்கும் வேறுபாடு என்ன இரத்தினமாலை?”

“திட்டமிட்டசதி இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னை வெறுக்க முயன்றது. நேரும் சதி முடிவில் நான் உங்கள் அன்பை அடைந்தது.”

“என் கட்டுப்பாட்டை நீ சதி என்று வருணிக்கிறாய்! அது தவறு.”

“தேரை வடத்தால் கட்டவேண்டும்! பூக்களை நாரால் கட்டவேண்டும்! அதுதான் முறையான கட்டுப்பாடு. நீங்களோ தேர்களை நாராலும், பூக்களை வடத்தாலும் கட்டுகிறவராயிருக்கிறீர்கள்! ‘நார் என்ற பதத்திற்குத் தமிழில் நுண்ணிய அன்பு’ என்று ஒர் அர்த்தமிருப்பதை நீங்கள் அறிந் திருப்பீர்கள்.”

“நார் எதற்கு? இந்தப் பூவைக் கைகளாலேயே கட்டலாமே!” - என்று கூறியபடியே மீண்டும் இரத்தின மாலையின் பொன்னுடலைத் தழுவினான் அவன்.

“இந்தக் கட்டுப்பாட்டில் நான் மலராகிறேன். மணக்கிறேன். மாலையாகிறேன்.”

“போதும்! உன் உடல் அழகிலேயே நான் மயங்கித் தவிக்கிறேன். சொற்களின் அழகையும் தொடுத்து என்னைக் கொல்லாதே இரத்தினமாலை! உன் பார்வையே பேசுகிறது. இதழ்களும் பேசினால் இரண்டில் நான் எதைக் கேட்பது?” என்றான் அவன்.

அவள் அவன் நெஞ்சில் மாலையாய் குழைந்து சரிந்தாள். “இப்போது இது சிறையா, பாதுகாப்பா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்...” என்று அவனை வம்புக் கிழுத்தாள். புது நிலவும் பொதிகைத் தென்றலும் மதுரைத் தென்றலும் அழகுத் தென்றலும் வீணாகாத அந்த மேன் மாடத்து நல்லிரவுக்குப் பின்விடிந்த வைகறையில் ஒரு புதிய செய்தியோடு புதிதாக அங்கு வந்து சேர்ந்திருந்தவனோடும் இளையநம்பியை எதிர்க்கொண்டான் அழகன்பெருமாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
35. இன்னும் ஒர் ஒலை

தோளிலும் மார்பிலும் சந்தனம் மணக்க, பூக்களின் வாசனை கமழ, முந்திய இரவின் நளின நினைவுகள் நெஞ்சில் இனிமை பரப்ப இளையநம்பி விழித்து எழுந்திருந்து மேன்மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அழகன் பெருமாள் திருமோகூர் வேளாளர் தெருக் கரும்பொற் கொல்லனோடு காத்திருந்தான். அவனும், கொல்லனும் இளையநம்பியின் வருகைக்காகவே காத்திருப்பது போலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்பும் தோற்றத்தின் தனித்தன்மை காரணமாக அந்தக் கரும்பொற்கொல்லனை இளையநம்பிக்கு நன்றாக நினைவிருந்தது. திருமோகூர்ப் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக வந்தபோது தான் காணநேர்ந்தது முதல் தன் மனிதன் இவனே என்ற ஞாபகத்தையும் தவிர்க்க முடியவில்லை. மலரும் முகத்தில் புன்னகையைப் புன்னகையால் எதிர்கொண்டு அந்தக் கரும்பொற்கொல்லனை வரவேற்றான் இளையநம்பி. இளையநம்பி எதிர்பார்க்கவில்லை என்றாலும் ‘கயல்’ என்று நல்லடையாளச் சொல்லைக் கூறிவிட்டே அவனை வணங்கினான் கரும் பொற்கொல்லன். சிரித்தபடியே இளையநம்பி அவனிடம் கூறினான்: “நண்பனே பயப்படவேண்டிய அவசியமில்லை! நீ அழகன் பெருமாளோடு வந்து என் எதிரே நிற்கிறாய்... நல்லடையாளச் சொல்லைக் கூறாவிட்டாலும் உன்னை நான் நம்புவேன். நீ நம்மைச் சேர்ந்தவன்.”

இப்படிக் கூறிய சுவட்டோடு இந்த வார்த்தைகளால் தான் முன்பு திருமோகூரில் நுழைந்த நாளன்று அவன் தன்னை நம்பாமல் நல்லடையாளச் சொல்லை எதிர்பார்த்துச் சோதனை செய்ததை இப்போது அவனிடம் குத்திக் காட்டத் தான் முயல்வதாக அவன் புரிந்துவிடக் கூடாதே என்று தயங்கவும் செய்தான் இளையநம்பி.

“நீ அன்று திருமோகூரில் நான் முதல் முதலாக நுழைந்த தினத்தன்று என்னிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்காத வரை எனக்கு வழி கூறாமலிருந்த பிடிவாதத்தை நான் பாராட்டுகிறேன். கட்டுப்பாடும் உறுதியும்தான் இன்று நமக்கு வேண்டும். இனிய வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்கிறவனை நண்பனும் நெகிழச் செய்யமுடியும். பகைவனும் நெகிழச் செய்துவிட முடியும். நீ அப்படி நெகிழாதவனாக இருந்ததை நான் வரவேற்கிறேன்” - என்று அந்தக் கொல்லன் தன்னுடைய முன்வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக இளையநம்பி மேலும் தொடர்ந்து அவனோடு பேசினான். ஆனால் அவனோ மிகமிக விநயம் தெரிந்தவனாக இருந்தான். அவன் பணிவாகப் பேசினான்: “ஐயா எப்படி இருந்தாலும் அன்று தங்களுக்கு மறுமொழி கூறாததற்காகத் தாங்கள் எளியேனைப் பொறுத்தருள வேண்டும். இரும்போடு பழகிப் பழகிப் பல வேளைகளில் என் மனமும் இரும்பாகி விடுகிறது.”

“அப்படி இருப்பதை நான் வரவேற்கிறேன். ஒவ்வொருவர் மனமும் இரும்பாக இல்லையே என்பதுதான் இப்போது என் வருத்தம். இரும்பைப்போல் உறுதியான மனம் நம்மவர்கள் எல்லோருக்கும் இருந்தால் என்றோ களப்பிரர்களை இந்த நாட்டிலிருந்து நாம் துரத்தியிருக்கலாம்...”

-என்று இளையநம்பி கூறிய மறுமொழி கொல்லனின் முகத்தை மலரச் செய்தது. சிறிது நேரத்தில் அந்தக் கரும்பொற்கொல்லன் எப்போது வந்தான், என்ன காரியமாக வந்தான் என்பதையெல்லாம் இளையநம்பி அழகன் பெருமாளிடம் வினாவினான்.

“நேற்று முன்தினம் இரவில் தேனூர் மாந்திரீகன் வந்தது போல்தான் இவனும் நிலவறை வழியாகப் பின்னிரவில் நேற்று இங்கே வந்தான். நாம் கலந்து பேசவும் திட்டமிடவும் நிறையச் செய்திகள் இருக்கின்றன. நீங்கள் உறங்கி எழுந்த சோர்வோடு இருப்பதாகத் தெரிகிறது. நீராடி வாருங்கள்! பேசலாம்” -என்றான் அழகன்பெருமாள். தன்னைத் தவிரப் பிறர் அனைவரும் நீராடிக் காலைக் கடன்களை எல்லாம் முடித்து ஆயத்தமாயிருப்பதைக் கண்டு இளையநம்பி நீராடுவதற்கு விரைந்தான். காலந்தாழ்ந்து எழுந்ததற்காக அன்று அவன் வெட்கப்பட்டான்.

கூடத்தில் மயில்தோகை விரித்திருப்பதுபோல் அமர்ந்து இரத்தினமாலை ஈரக் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வரக் கண்டதும் அவள் நாணத்தோடு எழுந்து நிற்க முயன்றாள்.

“நீ எழுந்து நிற்க வேண்டாம் உன் செயலைக் கவனி” என்பது போல் கையினாற் குறிப்புக் காட்டிவிட்டுப் புன்முறுவல் பூத்தபடி மேலே நடந்தான் அவன். அவள் கூந்தலின் நறுமணமும், அகிற்புகை வாசனையும் வந்து அவன் நாசியை நிறைத்துக் கிறங்கச் செய்தன. இந்த நறுமணங்கள் எல்லாம் அவள் பொன்மேனியின் நறுமணங்களை அவனுக்கு நினைவூட்டின. நீராடுவதற்குச் செல்ல இருந்தவன் தேனூர் மாந்திரீகனின் நினைவு வரப்பெற்றவனாகத் திரும்பச் சென்று அவனைக் கண்டான். இளையநம்பி காணச் சென்றபோது, அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். புண்கள் ஒரளவு ஆறியிருந்தன. இளையநம்பியைக் கண்டதும், அவன் முகம் மலர்ந்தான். அவனை அன்போடு விசாரித்த பின் சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிக் கொண்டிருந்துவிட்டுப் பின்பு நீராடச் சென்றான் இளையநம்பி, அவன் உடல் நீராடியது என்றாலும் மனம், வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லன் சொல்லப் போகும் செய்திகள் என்னவாக இருக்கும் என்று அறிவதிலேயே இருந்தது.

நீராடி முடிந்ததும் நகரின் திருவாலவாய்ப் பகுதி இருந்த திசை நோக்கி இறையனார் திருக்கோயிலை நினைத்து வணங்கினான் அவன். தமிழ்ச் சங்கத்தின் முதற்புதல்வராக அமர்ந்து பெருமைப்பட்ட கண்ணுதற் பெருங்கடவுளைக் கோயிலுக்கே சென்று வழிபடவும் வணங்கவும் முடியாதபடி இருப்பதை எண்ணி அவன் உள்ளம் வருத்தியது. ஈர உடையோடு கண்களை மூடி தியானித்து இறையனார் நினைவுடனே வழிபட்டு விழிகளைத் திறந்து கண்டால் எதிரே அவன் அணியவேண்டிய மாற்றுடைகளோடு இரத்தின மாலை நின்றாள்.

“ஒரு பெண்ணின் காதலால் எவ்வளவு கெடுதல் பார்த்தாயா இரத்தினமாலை? விழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் உறங்கிப்போய் விடுகிறோம்...”

“உறங்க வேண்டிய நேரத்தில் உறங்காவிட்டால் விழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாதுதான்.”

“அப்படியா? தயை செய்து அதற்கு யார் காரணமென்று இப்படி என் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்து மறுமொழி சொல்லேன் பார்க்கலாம். உறங்கவேண்டிய நேரத்தையும், விழிக்க வேண்டிய நேரத்தையும் மாற்றிய குற்றத்துக்குக் காரணம் யாரோ?”

இதைக் கேட்டு நாணிச் சிவக்கும் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு ஓடிவிட்டாள் அவள். இந்தப் புதிய வெட்கம், இந்தப் புதிய வேற்றுமை எல்லாம் அவனுக்கு வியப்பைத் தந்தது. உடை மாற்றிக்கொண்டு அவன் கூடத்துக்கு வந்தபோது அங்கே அழகன் பெருமாள், திருமோகூர்க் கொல்லன் கட்டிலில் அமர்ந்தபடியே தேனூர் மாந்திரீகன், இரத்தினமாலை எல்லாரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையநம்பி வந்ததும் அவர்கள் பேச்சுத் தணிந்து ஓய்ந்தது. திருமோகூர்க் கொல்லனைப் பார்த்து இளையநம்பி கேட்டான்.

“நீ உபவனத்து முனை வழியேதான் நிலவறையில் நுழைந்து வந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உபவனத்து நிலைமை எப்படி இருக்கிறது? களப்பிரர்கள் அதைக் கடுமையாகக் கண்காணிக்கிறார்களா?”

“அடியேன் முன்வாயில் வழியே நேராக உபவனத்தில் நுழைந்து வரவில்லை. இருளோடு இருளாக வையையில் குறுக்கே நீந்தி நீரைக் கடந்து மறைந்து வந்து உபவனத்து நிலவறை முனையில் இறங்கி இவ்விடத்தை அடைந்தேன். உபவனத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இப்படி ஒரு நிலவறைப் பாதை தொடங்குமென்று பூதபயங்கரப் படையினருக்குச் சந்தேகம் இருக்குமானால் வனம் முழுவதும் படைவீரர்களை நிரப்பிக் காவல் செய்திருப்பார்கள்.”

“அப்படியானால் இப்போது உபவனத்தில் கடுமையான காவல் இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லவில்லையே! அந்தக் கடுமையான காவலை நான் ஏமாறச் செய்துவிட்டு வந்திருக்கிறேன் என்பதனால் காவலே இல்லை என்று ஆகிவிடாது...” என்று கொல்லன் கூறிக் கொண்டிருக்கும் போதே -

“காவல் மிகவும் கடுமையாக இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி” -என்பதாகத் தேனூர் மாந்திரீகன் குறுக்கிட்டுச் சொன்னான். “பாதுகாப்பும், கட்டுக்காவலும் அகநகரில் வெள்ளியம்பலத்து முனையில் கடுமையாக இருக்கும். நம் தேனூர் மாந்திரீகன் செங்கணான் கூறுவதிலிருந்து பாண்டிய வேளாளர்கள் வசிக்கும் சுற்றுப்புறத்துச் சிற்றுார் களையும் களப்பிரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லாமற் போனதற்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்” - என்று அழகன்பெருமாள் கூற முற்பட்டான். புதியவன் வாயிலாக நிலைமைகளை அறிய முற்படும் தன்னிடம் செங்கணானும் அழகன்பெருமாளுமே நிலைமைகளைக் கூற முற்படவே இளையநம்பிக்கு அவர்கள் மேல் கோபமே வந்தது. அழகன்பெருமாளையும், செங்கணானையும் உறுத்துப் பார்த்தான் அவன். அந்தப் பார்வை அவர்கள் பேச்சைத் தடுத்தது. அவர்கள் பேச்சு நின்றதும், “இத்தகைய சூழ்நிலையில் உயிரைப் பொருட்படுத்தாமல், நீ இங்கே எங்களைத் தேடிவந்திருக்கிறாய் என்றால் அதற்குரிய காரியம் ஏதேனும் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்” - என்று அவன் திருமோகூர்க் கொல்லனை நோக்கிக் கேட்டவுடன் அந்தக் கொல்லன் தன் கையோடு கொண்டு வந்திருந்த தாழை ஓலையால் நெய்து, முடியும் இட்ட ஓலைக் குடலையை எடுத்துத் திறந்தான். அடுத்த சில கணங்களில் சிறிய ஓலைச் சுவடி ஒன்றைப் பத்திரமாக எடுத்து இளைய நம்பியிடம் கொடுத்தான் அவன். இளையநம்பி அதை வாங்கினான்.

அப்படிக் கொடுப்பதற்காகக் குடலையிலிருந்து சுவடியை எடுத்தபோது கையோடு வந்த மற்றோர் ஓலையை மறுபடியும் குடலையிலேயே இட்டு மூடிவிட்ட அவன் செயலை இளையநம்பி கண்டான்.

“அது என்ன ஓலை நண்பனே? என்னைத் தவிர வேறெவர்க்கும் கூட நீ ஓலை கொண்டு வந்திருக்கிறாயா?”

அந்தக் கொல்லன் மறுமொழி சொல்லத் தயங்கினான். விடாமல் மீண்டும் இளையநம்பி அவனை துளைத்தெடுப்பது போல் கேட்கவே அவன் பதிலளிக்க வேண்டியதாயிற்று.

“ஐயா! இதுவும் தங்களிடம் சேர்க்கப்பட வேண்டியது தான். ஆனால்... அவ்வளவிற்கு முதன்மையானதல்ல... தாங்கள் அந்த ஓலையை முதலில் படிக்கவேண்டும் என்பது அவ்விடத்து விருப்பம்...”

சற்றே தாமதமாகத் தன்னிடம் சேர்க்கப்படுவதற்கு இன்னோர் ஓலையும் இருக்கிறது என்று தெரிந்ததும் அதைப் பற்றிய ஆவலுடன் விரைந்து இதைப் பிரித்தான் இளைய நம்பி. சுவடியின் ஒவ்வோர் ஓலையிலும் நல்லடையாளச் சொல் பொறிக்கப்பட்டிருந்தது.

பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லை என்ற அந்துவனின் ஓலைச் செய்தி நினைவு வரவே, தன் கையிலிருந்த ஓலையைப் படிக்கு முன், -

“இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்?” -என்று கொல்லனைக் கேட்டான் இளையநம்பி,

“நான் எங்கிருந்து வருகிறேனோ அங்கிருந்து ஓலையும் வரவேண்டும் என்பதாக அனுமானித்துக் கொள்ள முடியாது” - என்றான் அவன். இளையநம்பிக்கு முதலில் அது புரிய வில்லை. ஆனால் அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கியதும் அவன் கூறிய மறுமொழியின் பொருள் புரியலாயிற்று.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
36. பெரியவர் பேசுகிறார்

“திருக்கானப்பேர் பாண்டிய குல விழுப்பரையர் தவப்பேரன் இளையநம்பி காணவிடுக்கும் ஓலை. இந்த ஓலையை நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்பதைவிட எதற்காக எழுதுகிறேன் என்பதையே இதைப் படிக்கத் தொடங்கும்போது நீ சிந்திக்க வேண்டும். இவ்வோலை உன்னை நலனோடும் திடனோடும் கூடிய நிலையில் காண வாழ்த்துகிறேன். பல நாட்களுக்கு முன்பாக யான் அந்துவன் மூலம் உனக்கு அறிவிக்கச் சொல்லியிருந்த மூன்று குறிப்புகள் இதற்குள் உனக்கு அறிவிக்கப்பட்டனவா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. களப்பிரர்களின் கொடுமை அதிகரிப்பதால் அகநகருக்கும் நமக்கும் தொடர்புகள் பெரும்பாலும் அற்றுவிட்டன. எதுவும் தெரியவில்லை. எதையும் தெரிவிக்கவும் முடியவில்லை. சிற்றூர்கள் தோறும் தங்கள் எதிரிகளைத் தேடிக் கருவறுக்கக் களப்பிரர்கள் பூதபயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள். முறையோ, நியாயமோ, நீதியோ இன்றிச் சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவும், சிறைப் பிடிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நம்மைச் சேர்ந்தவர்களில் மிகவும் சாதுரியமுள்ளவனும், உடல் வலிமை மிக்கவனும் ஆகிய திருமோகூர்க் கரும்பொற்கொல்லன் மூலமாக இந்த ஓலையை உனக்குக் கொடுத்துவிட எண்ணியுள்ளேன்.

‘நானும், காராளரும், மற்றவர்களும் நினைத்துத் திட்டமிட்டதும், எதிர்பார்த்ததும் வேறு; நடந்திருப்பது வேறு. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விட்டது. உனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று யானைப்பாகன் அந்துவன் மூலம் ஏற்கெனவே தெரிவித்தவற்றை இந்த ஓலை மூலம் மேலும் விளக்குவதுதான் என் நோக்கம். பொதுவாக நான் எழுத்தாணி பிடித்து ஓலைகள் எழுதுவதில்லை. எழுதினாலும் நீண்ட வார்த்தைகளால் பெரிதாக எழுதுவது வழக்கமில்லை. அதிக வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். திருமோகூர்ப் பெரியகாராளர் என் அருகே இல்லாததால் நானே எழுதவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிகம் எழுதவேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை.

‘அன்று பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதையின் சித்திரவண்டிகளின் பூங்குவியலில் மறைந்து நீ கோநகருக்குள் நுழைந்தபோது எல்லாம் சோதனை இன்றி முடிந்து விட்டதாகவே நீயும் பிறரும் நினைக்கிறீர்கள். அப்போது உங்கள் வண்டிகளைச் சோதித்த இரு பூதபயங்கரப்படை வீரர்களின் ஒருவனின் ஐயப்பாட்டாலும், வெள்ளியம்பலத் தருகே அடுத்தடுத்துப் பிடிபட்ட இருவராலும் எல்லாத் திட்டமும் பாழாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்ட போதே கோநகரின் கோட்டை மதில் களுக்குள்ளிருந்து நமது வலிமையும் அகற்றப்பட்டு விட்டது. பிடிபட்ட ஒற்றர்களிடம் ஆயுதங்கள் இருந்திருக்கும். களப்பிரர்கள் அவர்களை யாத்திரீகர்கள் என்று நம்புவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும் அந்த ஆயுதங்களே தடையாகியிருக்கும். புறத்தே வெளிப்பட்டுத் தெரியாததும், அங்கியிலும் இடுப்புக் கச்சையிலும் மறைந்துவிடக் கூடியதுமான சிறுசிறு வாள்கள் ஒவ்வொரு யாத்திரீகனிடமும் இருக்கலாம். நல்ல வேளை சூழ்நிலை பொருந்தி வரவில்லை என்றால் யாத்திரீ கர்களாகவே உள்ளே நுழைந்தது போல் யாத்திரீகர்களாகவே கோட்டைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு நிலைமைவரை உனக்கே தெரிய வேண்டாம் என்று நானும் காராளரும், பிறகும் நினைத்தோம். அழகன்பெருமாள்கூடச் சொல்லியிருக்க மாட்டான். ஆண்டாண்டுகளாகத் திட்டமிட்ட பூசலில் வெற்றி அடைந்தபின் அந்த வெற்றியை உனக்கு அறிவித்து உன்னை மகிழச் செய்யலாம் என்றிருந்தோம். அப்படிச் செய்ய இயலாமல் போய்விட்டது. இதற்காக அழகன் பெருமாளைக் கோபித்துக் கொள்ளாதே. அவனைப்போல் நம்பிக்கையும், பாண்டிய மரபின்மேல் அரச விசுவாசமும் உள்ள ஓர் ஊழியனை ஈரேழு பதினான்கு புவனங்களிலும் தேடினால்கூட நீகாணமுடியாது.”
இந்த இடத்தில் ஓரிரு கணங்கள் ஓலையைப் படிப்பதிலிருந்து சிந்தனை விலகி முந்தியதினம் முன்னிரவில் தான் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு அழகன் பெருமாளும், தேனுர் மாந்திரீகன் செங்கணானும் தங்களுக்குள் உரையாடிய வார்த்தைகளை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் இளையநம்பி. அந்த உரையாடலின் பொருள் இப்போது அவனுக்குத் தெளிவாக விளங்கத் தொடங்கியது. மேலே ஓலையைப் படிக்கத் தொடங்கினான் அவன்.

‘வெள்ளியம்பலத்தருகே நம்மவர்கள் பிடிபட்ட செய்தி யானைப்பாகன் அந்துவனால் எனக்குக் கூறியனுப்பப்பட்ட நாளன்றுதான் தென்னவன் சிறுமலை மாறன் என்னும் பாண்டியகுல வேளாளன் என்னைச் சந்திக்க மோகூர் வந்திருந்தான். இந்தத் தென்னவன் மாறன் யார் என்பதை நீ தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. பின்பொரு சமயம் நீ இவனைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது அதற்காகக் கவலைப்படாதே! இந்தப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்த தினத்தன்று நள்ளிரவில்தான் சோதனைகள் மோகூரிலும் வந்து சேர்ந்தன. திடீரென்று தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் போல் பலநூறு பூதபயங்கரப் படை வீரர்கள் இருளோடு இருளாகப் பெரிய காராளரின் மாளிகையையும், அறக்கோட்டத்தையும் வந்து வளைத்துக் கொண்டார்கள். பெரிய காராளரின் விருந்தினனாகத் தங்கியிருந்த தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானும், அறக் கோட்டத்து மல்லனும் தந்திரமாக நடந்து கொள்ளத் தோன்றாமல் களப்பிரப் பூதபயங்கரப் படையினரை எதிர்த்து உணர்ச்சி வசப்பட்டுப் போரிட முயன்றதால், எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். காராளரும் அவர் குடும்பத்தினரும் மாளிகையோடு சிறை வைக்கப்பட்டதுபோல் முடக்கப்பட்டு விட்டார்கள். உடனே இரவோடு இரவாக நானும் ஆபத்துதவிகளும் முனையெதிர் மோகர் படையினரும் மோகூரிலிருந்து வேறு திசையில் புறப்பட்டுக் குடிபெயர்ந்து விட்டோம். காராளரின் நிலைமைதான் இரங்கத்தக்கதாகி இருக்கிறது; பாண்டியகுலம் தலையெடுக்க உதவிய அந்த உபகாரிக்குச் சோதனை நேர்ந்திருக்கிறது. அவருடைய களஞ்சியங்களிலிருந்து அரண்மனைக்கு நெல் எடுத்துச் செல்லும் வண்டிகளைக்கூட இப்போது களப்பிரர்களே கோட்டைக்குள் ஓட்டிச் செல்கிறார்களாம். அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லனுப்புகிறவர் என்பதனால் அவர்மேல் களப்பிரர்களுக்கு இருந்த அன்பும், பிரியமும்கூட மாறிவிட்டதாம். ஆனாலும் இவ்வளவு நாள் தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வரையாமல் வாரி வழங்கிய ஒரு வள்ளலைத் திடீரென்று கடுமையாகத் தண்டிக்கவும் மனம் வராமல் மாளிகையை விட்டு வெளியேற முடியாமல் கண்காணிக்கிறார்களாம். இந்த நிலையில் எனக்கும் அவருக்கும் நடுவே அறியவும் அறிவிக்கவும் பயன்படும் ஒரே பொது மனிதன்தான் திருமோகூரில் எஞ்சியிருக்கிறான். உழவர்களின் கலப்பைக்குக் கொழு அடிக்கும் அந்தக் கொல்லன் தன்மேல் களப்பிரர்களின் கண்கள் சந்தேக முற்று விடாதபடி மிக மிகச் சாதுரியமாக இருக்கிறான். இப்போது நான் இருக்கும் புதிய இடத்திற்கு அவனை வரவழைத்து, அவனிடம் இந்த ஓலைகளைக் கொடுத்து முதலில் காராளரை இதைப் படிக்கச் செய்துவிட்டுப் பின்பு அவரிடமிருந்து மீண்டும் வாங்கி உன்னிடம் இதைக் கொண்டு வந்து சேர்க்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுத என்னால் முடியவில்லை. உன்னை விளித்து எழுதப்பட்டிருக்கும் இந்த ஓலையை நீ உரிய காலத்தில் அடைவாயானால் உனக்கு முன்பே இதைப் பெரிய காராளரும், இந்த ஓலையைக் கொண்டுவரும் கொல்லனும் படித்திருப்பார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். நீ இதனைப் படித்தபின் அழகன்பெருமாளும், இரத்தின மாலையும் இதைப் படிக்குமாறு செய்யவேண்டியதும் உன் கடமை.

‘உங்கள் அனைவருக்கும் என்னுடைய புதிய இருப்பிடத்தை அறிவிக்காமல் இதை எழுதுவதற்குக் காரணம் உண்டு. ஒருவேளை இந்த ஓலை உங்களுக்கு வந்து சேராமல் அசம்பாவிதங்கள் நேருமானால் அபாயம் எங்கள் இருப்பிடத்தையும் தேடி வராமல் தடுப்பதுதான் என் நோக்கம். என் இருப்பிடம் தெரிந்தால் ஆர்வத்தை அடக்க முடியாமல் உங்களில் யாராவது காண வந்து என்னையோ, உங்களையோ அபாயத்துக்கு ஆளாக்கிக் கொள்வதையும் இப்போதுள்ள சூழ்நிலையில் நான் விரும்பவில்லை. ஆலவாய் அண்ணல் திருவருள் இன்னும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அது கிடைக்கும் வரை நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும். குறிப்பாய் நீ மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இளையநம்பி விதை நெல்லை அழித்து விட்டால் அப்புறம் பயிரிட முடியாமற் போய்விடும். எனவே, இப்போது உங்களை என் சார்பில் தேடி வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லனை அவன் அறிந்திருக்கக் கூடும் என்ற காரணத்தினால் நான் தங்கியிருக்கும் இடத்தைக் கூறுமாறு உங்களில் எவரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. இது என் கடுமையான கட்டளை. இதை நீங்கள் மீறினால் நம்மைச் சுற்றி தப்ப முடியாத பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும்.

‘என்னுடைய மூன்று கட்டளைகளில் - அதாவது அந்துவன் மூலம் நான் தெரிவித்தவற்றில் - முதற் கட்டளை எல்லாருக்குமே பொருந்தும். என்னை நீங்கள் எல்லாருமோ, உங்களில் ஒருவரோ வந்து காணவேண்டிய காலத்தையும் இடத்தையும் நானே அறிவிப்பேன். அதுவரை நீங்கள் தேடவோ, ஆர்வம் காட்டவோ கூடாது. இரண்டாவது கட்டளையை அழகன் பெருமாளும் அவனைச் சேர்ந்தவர் களுமே நிறைவேற்ற வேண்டும். தென்னவர் மாறனையும், மல்லனையும் சிறை மீட்கும் முயற்சியில் இளையநம்பி ஈடுபடக் கூடாது. மூன்றாவது கட்டளைக்கு எல்லாருமே பொறுப்பாவார்கள். கணிகை இரத்தினமாலை, அழகன் பெருமாள், பிறர், அனைவருமே திருக்கானப்பேர் நம்பியைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை என் ஆணையாக அனைவரும் மதிக்க வேண்டுகிறேன்.” ஓலையின் ஒவ்வொரு சொல்லும் பெரியவரே எதிர் நின்று பேசுவன போலிருந்தன.

இவ்வளவில் ஓலைகள் முடிந்து அடையாள இலச்சினை பொறித்திருந்தது. அந்த ஓலைகளை அடுத்துப் படிக்க வேண்டிய முறைப்படி அழகன்பெருமாளிடம் உடனே கொடுத்து விட்டு மிகவும் ஞாபகமாக,

“எங்கே? அந்த மற்றோர் ஓலை?'-என்று கொல்லனை நோக்கிக் கை நீட்டினான் இளையநம்பி.

கொல்லன் மீண்டும் தயங்கினான். அந்த ஓலையை அவர்கள் அனைவருக்கும் நடுவில் அவன் இளையநம்பியின் கையில் எடுத்துத் தரத் தயங்குவதாகத் தெரிந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
37. கொல்லனின் சாதுரியம்

திருமோகூர்க் கொல்லன் அந்த இரண்டாவது ஓலையைத் தன்னிடம் கொடுப்பதற்கு அவ்வளவு தூரம் ஏன் தயங்குகிறான் என்பது இளைய நம்பிக்குப் புதிராயிருந்தது. ஆனாலும் அந்தத் தயக்கமே ஆவலை வளர்ப்பதாகவும் இருந்தது. தன்னைச் சுற்றி இருந்தவர்களை ஒருமுறை பார்வையால் அளந்த பின் தன்னைத் தொடர்ந்து வருமாறு அவனுக்குக் குறிப்புக் காட்டிவிட்டுச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான் இளையநம்பி. கொல்லன் பின் தொடர்ந்து வந்தான்.

ஆனால் சந்தனம் அறைக்கும் பகுதியிலும் அவர் களுக்குத் தனிமை வாய்க்கவில்லை. அங்கே நிலவறை வழிக்குக் குறளன் காவலாக இருந்தான். குறளனைச் சில கணங்கள் புறத்தே விலகி இருக்குமாறு வேண்டிக் கொண்ட பின் திருமோகூர்க் கொல்லனை உள்ளே அழைத்தான் இளைய நம்பி, உள்ளே வந்ததுமே இளையநம்பி எதிர்பார்த்ததுபோல் உடனே ஓலையை எடுத்து நீட்டி விடவில்லை அவன்.

“ஐயா! இந்த ஓலையைக் கொடுப்பதற்கு முன் நான் ஏன் இவ்வளவு எச்சரிக்கையும், பாதுகாப்பும் தேடுகிறேன் என்று நீங்கள் வியப்பு அடையலாம். இதை யார் என்னிடம் சேர்த்தார்களோ அவர்களுடைய விருப்பம் அப்படி. அந்த விருப்பத்தைக் காப்பாற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.”

“புரியும்படியாக விளக்கிச் சொல்! ‘நீ என்ன கடமைப் பட்டிருக்கிறாய்? யாருக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்?’ என்பதை எல்லாம் என்னால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.”

“அரசியற் கடமைகளைவிட அன்புக் கடமை சில வேளைகளில் நம்மை அதிகமாகக் கட்டுப்படுத்தி விடுகிறது ஐயா!”

“பாயிரமே பெரிதாகயிருக்கிறதே அப்பனே! சொல்ல வேண்டியதைச் சொன்னால் அல்லவா இவ்வளவு பெரிய பாயிரம் எதற்கென்று புரியும்?”

“கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! பெரியவரைக் காண்பதற்கு அவர் இருப்பிடம் செல்லுமுன் மாளிகையோடு மாளிகையாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் திருமோகூர்ப் பெரிய காராள வேளாளரைச் சந்திக்க முயன்றேன். பூத பயங்கரப் படையினர் முதலில் கடுமையாக மறுத்தார்கள். அந்தப் படையினரை என்னை நம்ப வைப்பதற்காக என் உலைக் களத்தில் அவர்கள் வாள், வேல்களைச் செப்பனிடும் பணிகளை மறுக்காமற் செய்திருந்தேன். மேலும் ‘காராளருடைய உழுபடைகளுக்கு எல்லாம் கலப்பைக்குக் கொழு அடிப்பவன் என்ற முறையில் அவரைப் பார்க்க வேண்டுமே தவிரச் சொந்த முறையில் அவரிடம் எனக்கு எந்த அரசியல் வேலையும் இல்லை! சந்தேகம் கொள்ளாமல் என்னை அவரைக் காணவிட வேண்டும்’ என்று அவர்களிடம் மன்றாடினேன். நான் அவ்வளவு மன்றாடியபின் ‘கால் நாழிகைப்போது அவரைக் காணலாம்’ என்று அவர்கள் இணங்கினார்கள். நான் அவ்வாறு பெரிய காராளரைச் சந்தித்தபோது அவருடைய திருக்குமாரி செல்வப் பூங்கோதையும் உடனிருந்தாள். நான் அந்த மாளிகையிலிருந்து வெளி யேறும்போது, பெரியகாராளர் மகள் என்னருகே வந்து ‘இந்த விஷயம் என் தந்தைக்கோ பெரியவருக்கோ தெரியக்கூடாது. தயைகூர்ந்து நான் தரும் ஓலையைத் திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரிடம் சேர்த்துவிட முடியும் அல்லவா?’ என்று பரம ரகசியமாக என்னிடம் உதவிக்கோரினாள். அதற்கு, ‘அம்மா! இப்போது நான் கூடல் மாநகருக்குச் செல்லப் போவதில்லை. இரவோடு இரவாகப் பயணம் செய்து பெரியவர் மதுராபதி வித்தகர் புதிதாக அஞ்ஞாத வாசம் செய்யும் இடத்திற்கு வரச் சொல்லிக் கட்டளை வந்திருக்கிறது. மீண்டும் எப்போதாவது நான் கூடல் மாநகருக்குச் செல்லவேண்டியதாக நேர்ந்தால் அப்போது உனக்கு இந்த உதவியைச் செய்வேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன். பெரியவரைச் சந்தித்த பின் அவரே தம்முடைய ஓலையை முதலில் பெரியகாராளரைப் படிக்கச் செய்த பின்புதான் மதுரை மாநகருக்கு எடுத்துச் சென்று தங்களிடம் ஓலையைக் காண்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனால் நான் மீண்டும் திருமோகூரை அடைந்து அரிய முயற்சி செய்து கட்டுக் காவலில் இருந்த பெரியகாளாரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் தந்தைக்கும் தெரியாமல் இந்த ஓலையை என்னிடம் கொடுத்து உங்களிடம் சேர்த்துவிடச் சொல்லி அந்தப் பெண் கண்களில் நீர் நெகிழ வேண்டினாள். அந்தப் பெண்ணின் கைகளால் காராளர் வீட்டில் எவ்வளவோ நாட்கள் நான் வயிறார உண்டிருக்கிறேன் ஐயா! அவள் கண்களில் நீரைப் பார்த்ததும் என் மனம் இளகிவிட்டது. அவளுடைய வேண்டு கோளை நான் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவள் கொடுத்த ஓலையையும் நான் வாங்கிக் கொண்டேன். பெரியவர் கொடுத்த ஓலை, நீங்கள், நான் காராளர், அழகன்பெருமாள் எல்லாரும் அறிந்தது. எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் இந்த ஓலை இதை எழுதியவரைத் தவிர நீங்கள் மட்டுமே அறியப்போவது. உங்களுக்கு மட்டுமே உரியது.”

சிரித்துக்கொண்டே பட்டுக்கயிறு இட்டுக்கட்டிய அந்த இரண்டாவது ஓலையை எடுத்து இளைய நம்பியிடம் நீட்டினான் அவன்.

“இவ்வளவு அரிய முயற்சிகளும், செய்திகளும் அடங்கிய ஓலையையா, அவ்வளவிற்கு முதன்மையான தல்ல என்று தொடக்கத்தில் என்னிடம் கூறினாய் நீ?” என்று வினாவியபடி கொல்லன் கொடுத்த ஓலையை வாங்கினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் தயங்காமல் உடனே அதற்கு மறுமொழி கூறினான்:

“தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஐயா! ஒரு காரணத்துக்காகத் தங்கள் நன்மையையும், பெரிய காராளரின் மகளுடைய நன்மையையும் நினைத்தே நான் முதலில் எல்லார் முன்னிலையிலும் அப்படிச் சொல்லியிருந்தேன். சுற்றி நின்று கொண்டிருந்த மற்றவர்கள் கவனம், ‘இந்த இரண்டாவது ஓலை என்னவாக இருக்கும்?’ என்று இதன் பக்கம் திரும்பக் கூடாது என்பதற்காகவே, அவ்வளவிற்கு இது முதன்மையானது அல்ல என்று எல்லாரும் கேட்கக் கூறியிருந்தேன். மற்றவர்கள் கவனம் எல்லாம் உங்களிடம் நான் முதலில் படிக்கக் கொடுத்த பெரியவரின் கட்டளை ஓலையைப் பற்றியதாக மட்டுமே இருக்கட்டும் என்பதற்காக நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். இதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்குப் பதிலாக நீங்களே குறை சொல்கிறீர்களே ஐயா?”

“இன்னும் சிறிது நேரம் உன்னைப் பேசவிட்டால் எது எதற்காக நான் உன்னைப் பாராட்ட வேண்டியிருக்குமோ அதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பே இல்லாமல் நீயாகவே உன்னைப் பாராட்டிக்கொண்டு விடுவாய் போலிருக்கிறதே? பாராட்டை எதிர்பார்க்கலாம். ஆனால் வற்புறுத்தவோ, கோரிக்கை செய்யவோ கூடாது அப்பனே!”

“இப்படிக் காரியங்களுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று முடிவு செய்த முதல் நாளிலிருந்தே அதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன் ஐயா! ஒரு விளையாட்டுக்காக அப்படி வேண்டியதை நீங்கள் என் விருப்பமென்று எடுத்துக் கொண்டு விடக் கூடாது.”

“விளையாட்டு இருக்கட்டும்! இந்த ஓலையைப் படிக்குமுன் எனக்குச் சில நிலைமைகள் தெரியவேண்டும், சொல்வாயா?”

“தாங்கள் கேட்பவற்றிற்குப் பணிவோடும் உண்மையோடும் மறுமொழி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன் ஐயா!”

“பெரியவர் இப்போது மாறிப்போய்த் தங்கியிருக்கும் ஊரையோ, இடத்தையோ எனக்கு மட்டும் சொல்லேன். உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு...”

“தங்களைவிட நான் பெரியவருக்கு இன்னும் அதிகமாகக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது என்னைக் கேட்பதுபோல்தான் பெரிய காராளரும் பெரியவருடைய ஓலையைப் படித்து முடித்ததும் என்னைக் கேட்டார். அவரிடமும் இதே மறுமொழியைத் தான் நான் கூறினேன். பெரியவரே யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கும் ஒன்றைத் தெரிந்து கொள்ள முயல்வது உங்களுக்கு அழகில்லை...”

“அது போகட்டும் நீ கருங்கல்லைப் போன்றவன். உன்னைப் போன்ற கருங்கல்லிலிருந்து நார் உரிக்க முடியாது. பெரிய காராளர் மாளிகையைக் காவலிருக்கும் பூதபயங்கரப் படை வீரர்களால் அவருக்கு ஏதேனும் கெடுதல்கள் உண்டா? இல்லை வெறும் காவல் மட்டும் தானா?”

“கெடுதல்கள் எதுவும் கிடையாது சொல்லப் போனால் காராளரை அவர்கள் இன்னும் மதிக்கவே செய்கிறார்கள் என்று தெரிகிறது. காராளர் வீட்டைச் சுற்றி அவர்கள் விரித்திருக்கும் வலை காராளருக்காக அல்ல.”

“பின் யாருக்காக என்று நினைக்கிறாய்?”

“உங்களுக்காக, எனக்காக, இன்னும் அவரைத் தேடி வந்து போகிறவர்களில் யார் யார் களப்பிரர்களுக்கு எதிரிகளோ அவர்கள் எல்லாருக்காகவும் தான்!”

“அப்படியானால் உன்னை ஏன் இன்னும் அவர்கள் ஆபத்தானவனாகக் கருதவில்லை?”

“அது என் சாதுரியத்தையும் அவர்களுடைய சாதுரியக் குறைவையும் காட்டுகிறது.”

“இனி என்னை நம்பிப் பயனில்லை என்று இப்போது உன்னை நீயே புகழ்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது அப்பனே!”

“வஞ்சப் புகழ்ச்சி எனக்கு வேண்டியதில்லை ஐயா! இன்றுவரை களப்பிரர்கள் நம்பும்படியாக நான் நடந்து கொள்கிறேன். அவர்கள் சந்தேகமும் சோதனையும் தீவிரமானால் அவர்களிடமிருந்து நானும் தப்ப முடியாது. காராளர் மகள் இன்னும் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போட மாலை வேளைகளில் போய் வருகிறாள். அவளை யாரும் தடுப்பதில்லை.”

“அப்படியானால் இந்த ஓலையைப் படித்தபின் தேவைப்படும் என்று நான் விரும்புகிற பட்சத்தில் ஒரு மறுமொழி ஓலை கொடுத்தால் நீ அதனை அவளிடம் கொண்டு போய்ச்சேர்ப்பதில் சிரமம் எதுவும் இராதல்லவா?”

“சிரமம் இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஒரு வேளை சிரமங்கள் இருந்தாலும் அதைச் செய்ய நான் பின் வாங்கவோ தயங்கவோ மாட்டேன்.”

“உன் துணிவைப் பாராட்டுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறிவிட்டு அந்த ஓலையைப் படிப்பதற்காகப் பிரிக்கலானான் இளையநம்பி. அவன் அதைப் படிப்பதற்கான தனிமையை அவனுக்கு அளிக்க வேண்டும் என்கிற நாகரிகத்தைத் தனக்குத்தானே குறிப்புணர்ந்து புரிந்து கொண்டவனாகத் திருமோகூர்க் கொல்லன் அந்தப் பகுதியிலிருந்து விலகி வந்து வெளியே நின்ற குறளனோடு சேர்த்து நின்று கொண்டான். அவன் இவ்வாறு செய்ததை இளையநம்பி உள்ளூறப் பாராட்டினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
38. மனமும் நறுமணங்களும்

அப்பகுதியில் சந்தனக் கல்லின் மேல் குறளன் அறைத்துக் குவித்திருந்த சந்தனத்தின் வாசனையையும், திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப்பூங்கோதை தன் ஓலையை பிறர் அறியாமல் பாதுகாக்க, அவள் தன் மஞ்சத்தில் தலையணையில் வைத்துப் பாதுகாத்ததாலோ என்னவோ அவள் கூந்தலின் நறுமண வசீகரங்களின் வாசனையுமாக நுகர்ந்து கொண்டே அந்த ஓலையைப் படிக்கலானான் இளையநம்பி. பள்ளி எழுந்து நீராடி வந்த உற்சாகமும், காலை நேரத்தின் உல்லாசமும், அறையின் நறுமணமும், கைக்கு வந்திருந்த ஓலையின் சுகந்தமும் அவனை மயக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கணங்களில் எல்லாக் கவலைகளையும் மறந்து மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான் அவன். அவனைச் சூழ்ந்திருந்த நறுமணங்கள் அவன் மனத்தையும் குதூகலம் கொள்ள வைத்திருந்தன.

அவள் தன் ஓலையை இணைத்துக் கட்டியிருந்த பட்டுக் கயிறும் மணந்தது. அந்தப் பட்டுக்கயிற்றை எடுத்துப் பார்த்த போது அது பெண்கள் தங்கள் கூந்தலை முடிந்து கட்டும் வகைளைச் சேர்ந்த பட்டுக் கயிறாக இருப்பதைக் கண்டு அவன் மனத்துக்குள் நகைத்துக் கொண்டான்.

அன்று காலையில் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்த இரத்தினமாலையின் அருகேயும் அப்படி ஒரு பட்டுக் கயிறும் கிடந்தது நினைவு வந்தது அவனுக்கு.

ஓலையின் வாசகங்களைப் படிக்குமுன் அந்தக் கூந்தல் பட்டுக் கயிற்றின், மனத்தைக் கிறங்கச் செய்யும் நறுமணங்களை நாசியருகே உணர்ந்தான் அவன்.

முன்பு எப்போதோ தன்னோடு கற்ற ஒரு சாலை மாணவனாகிய திருக்கானப்பேர்ப் பித்தன் பாடிய ஒரு பாடல் இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தது. பூக்களைப் பார்த்து ஓர் இளம் பருவத்துக் கவி கேட்பது போல் அமைந்திருந்தது, அந்தப் பாடலின் கருத்து. மிக அழகிய அந்தக் கற்பனையை நினைத்தான் அவன்.

‘காலையில் மலர்ந்து மாலையில் வாடும் இவ்வுலகின் பூக்களே! உங்களில் யாருக்கு வாசனையும், தோற்றப் பொலிவும் அதிகம் என்று நீங்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டுப் பயனில்லை! உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவிதமான வாசனையும் ஒருவிதமான தோற்றப் பொலிவும்தான் உண்டு. ஆனால் உங்களில் அனைவரின் வாசனைகளும் அனைவரின் தோற்றப் பொலிவும் ஒரே வடிவத்திற் சேர்ந்தே அமைந்திருக்குமானால் அந்த வடிவத்திற்கு நீங்கள் அனைவரும் தோற்றுப் போக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு வடிவத்தைப் பற்றி இன்று எனக்குத் தெரியும்.

உங்களில் மல்லிகைப் பூவுக்கு மல்லிகையின் வாசனை மட்டும் தான் உண்டு. தாழம்பூவுக்குத் தாழம்பூவின் வாசனை தான் உண்டு. சண்பகப்பூவுக்குச் சண்பகப்பூவின் வாசனை தான் உண்டு. பித்திகைப் பூவுக்கு அந்த வாசனை மட்டும்தான் உண்டு. நான் காதலிக்கும் பெண்ணின் கூந்தலிலோ அத்தனை பூக்களின் வாசனையையும் ஒரு சேர நுகர முடிகிறது. அவ ளுடைய தோற்றத்திலோ அத்தனை பூக்களின் பொலிவையும் ஒருசேரக் காண முடிகிறது. அவளோ முகத்தைத் தாமரைப் பூவாகவும், கண்களைக் குவளைப் பூக்களாகவும், இதழைச் செம்முருக்கம் பூவாகவும், நாசியை எட்பூவாகவும், கைவிரல்களைக் காந்தள்பூக்களாவும் காட்டி, ஆயிரம் பூக்களின் அழகும் ஒன்று சேர்ந்த ஒரு பெரும் பூவாக வந்து என்னைக் கவருகிறாள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணின் வடிவிலும் வாசனைகளிலும் தோற்றுப் போய் மானம் இழந்த வேதனை தாங்காமல் அல்லவா நீங்கள் ஒவ்வொரு பெண்ணின் கூந்தலிலும் வாழை நாரினால் தூக்குப் போட்டுக்கொண்டு தொங்கி வாடுகிறீர்கள்?

உங்களில் சில மலர்கள் பெண்களில் கைபட்டாலே மலர்ந்துவிடும் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. உங்களைவிட அழகும் மணமும் உள்ளவர்கள் உங்களைத் தொடப் போகிறார்களே என்று கூசி நாணி நீங்கள் தோற்பதைத் தானே அது காட்டுகிறது?’ என்று இளமையில் திருக்கானப்பேர்ப் பித்தன் காதல் மயக்கத்தில் அழகாகக் கற்பனை செய்திருக்கும் ஒரு கவிதையின் கருத்தை இளையநம்பி இப்போது நினைவு கூர்ந்தான்.

அவள் அனுப்பியிருந்த அந்தக் கற்றையில் மூன்று ஓலைகள் சுவடிபோல் இணைக்கப்பட்டிருந்தன. எழுத்துக்கள் ஓலையில் முத்து முத்தாகப் பதிந்திருந்த காரணத்தால் ஏட்டில் எழுதும் வழக்கமும் பயிற்சியும் அவளுக்கு நிறைய இருக்கவேண்டும் என்று அவனால் உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு அவள் தீட்டிய மடல் பணிவாகத் தொடங்கியது.

‘திருக்கானப்பேர் நம்பியின் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்கி அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடல் தங்களை நலத்தோடும் உறவோடும் காணட்டும்.

ஒருவேளை இந்தப் பேதையைத் தாங்கள் தங்களுடைய பல்வேறு அரச கருமங்களுக்கு நடுவே மறந்து போயிருந்தாலும் இருக்கலாம். நினைப்பதும், மறப்பதும் ஆண்களுக்குச் சுலபமான காரியங்கள். என்னைப் போல பேதைப் பெண்களுக்கு ஒன்றை நம்பிக்கையோடு நினைத்து விட்டால் அப்புறம் மறக்க முடிவதில்லை. எங்களை அறவே மறந்து போய் விடுகிறவர்களைக்கூட நாங்கள் மறக்க முடிவதில்லை. இதனால் எல்லாம் தான் பெண்களாகிய எங்களைப் பேதைகள் என்று சொல்லியிருக்கிறார்களோ என்னவோ?

மதுரை மாநகரில் தங்களைக் கொண்டுவந்து விட்டு விட்டுத் திரும்பிய நாளிலிருந்து இந்தப் பேதைக்கு ஒவ்வொரு கணமும் உங்கள் நினைவுதான். என்னிடம் நேர்ந்துவரும் சுபாவ மாறுதல்களை இப்போது என் தாய்கூடக் கவனித்து என்னை வினவுகிற அளவு உங்கள் ஞாபகம் என்னைப் பித்துப்பிடித்தவள் போல் ஆக்கி விட்டது. ‘பூப்போல் பொதிந்து கொண்டு செல்வது’ என்று வசனம் சொல்லுவார்கள். நாங்களோ உங்களைப் பூக்களிலேயே பொதிந்து கொண்டு போய்க் கோநகருக்குள் சேர்த்தோம்.

உங்களை இருந்த வளமுடையார் கோயில் நந்தவனத் தில் விட்டுவிட்டு ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு நானும் என் தாயும் திரும்புகிற வழியில் பூத பயங்கரப் படையினர் யாரையோ ஒற்றன் என்று சிறைப்பிடித்துச் செல்வதை வழியிலேயே கண்டோம். அந்த வினாடி முதல் உங்கள் நலனுக்காக நான் வேண்டிக் கொள்ளாத தெய்வங்கள் இல்லை. இங்கு எங்கள் வீட்டிற்கு நீங்கள் விருந்துண்ண வந்தபோது, என் தந்தையிடம் இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே என்று குறும்பாகச் சிரித்தபடியே வினாவியிருந்தீர்கள்.

அப்படி நான் தெய்வங்களை எல்லாம் வேண்டியது அன்று எப்படியோ? இன்று மெய்யாகவும் கண் கூடாகவும் ஆகியிருக்கிறது. கோநகருக்குள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் உங்களைக் காக்கவேண்டும் என்று இப்போது நான் எல்லாத் தெய்வங்களையும் எப்போதும் வேண்டிய வண்ணமிருக்கிறேன். ஏற்கெனவே நான் கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்குப் போடத் தொடங்கியதை ஒரு மண்டலம் முடிந்த பின்பும் நிறுத்தவில்லை. உங்களுக்காக வேண்டிக் கொண்டு தொடர்ந்து விளக்கேற்றிக் கொண்டு வருகிறேன்.

மாலை மயங்கிய வேளையில் திருமோகூர் வீதியில் நான் கொற்றவை கோயிலுக்கு விளக்கேற்றச் சென்று கொண்டிருந்த போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்து வழி கேட்டீர்கள்! ‘உங்களிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்க வில்லையே, உங்களுக்கு என்ன மறுமொழி சொல்லுவது!’ என்று நான் மறுமொழி கூறத் தயங்கிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே,

‘அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது’ என்று என் வாயைப் பேசத் துண்டினர்கள். அன்று நான் ஊமையாயில்லை. உடனே துடிப்புடன் உங்களுக்கு விரைந்து கடுமையான சொற்களால் மறுமொழி கூறினேன். ஆனால் என் அந்தரங்கத்தைப் பேசுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் யாருமில்லாத காரணத்தால் இன்று இப்போது தான் ஏறக்குறைய நான் ஊமையைப் போலாகி விட்டேன். என்னை இப்படி ஆக்கியது யார் தெரியுமா? நீங்கள்தான்!

இந்த மடலை உங்களுக்காக வரையும்போது என் ஏக்கத்தின் அளவைச் சொற்களால் உணர்த்த முடியாது. இந்த ஊரில் என் பருவத்துக்குச் சமவயதுள்ள தோழிகளிடம் பேசிப் பழகிக் கொண்டிருந்த நான் இப்பொழுதெல்லாம் அவர்களோடு பேசுவதற்கு எதுவுமே இல்லாததுபோல் ஆகி விட்டது. யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. எனக்கு நானே சிந்தித்து மாய்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் கண்களில் நீர் நெகிழப் பிரமை பிடித்தாற்போல் அப்படியே அமர்ந்து விடுகிறேன். என் கைகள் மெலிந்து வளைகள் கழன்று போய்ச் சோர்கின்றன. தோள்களும் மெலிந்து விட்டன. நான் இப்படி எல்லாம் வேதனைப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்னை நினைக்கிறீர் களா? என் வேதனைகளைப் புரிந்து கொள்கிறீர்களா? என் தாபங்களையும் தவிப்புக்களையும் கற்பனையிலாவது உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

இன்னொரு செய்தி யாருக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் தங்கள் மேல் அடியாள் கொண்டிருக்கும் இந்தப் பிரேமையைப் பற்றியும், இந்த மடலைப் பற்றியும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மட்டும் தெரியவே வேண்டாம். நெகிழ்ந்த உணர்வுகளையும், மனிதர்களுக்கு இடையேயுள்ள ஆசாபாசங்களையும் அவர் அதிகம் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சிகளை மதிக்க மாட்டார் அவர். இதனால் எனக்கு அவரிடமுள்ள பக்தியோ மதிப்போ குறைந்து விட்டது என்று பொருளில்லை. கல்லின்மேல் விழும் பூக்களைப் போல் பிறருடைய மென்மையான உணர்வுகளைத் தன் சார்பால் கடுமையாகவே ஏற்று வாடச் செய்யும் அவரது மன இறுக்கம் தான் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய இந்த அநுபவம் அவரைப் பொறுத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம், அல்லது ஏற்படாமலும் போயிருக்கலாம். ஆனால் இது நம்மோடு இருக்கட்டும் என்பதற்காகவே இதனை இங்கே எழுதினேன். மறுபடி உங்களை எப்போது காணப் போகிறேனோ? என் கண்கள் அதற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றன. தவம் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த ஓலையை உங்களிடம் எப்படி அனுப்பப் போகிறேனோ தெரியவில்லை. இது உங்களிடம் வந்து சேரு முன் திருமோகூரிலும், கோநகரிலும் என்னென்ன மாறுதல்கள் நேருமோ? அதுவும் தெரியவில்லை. உங்கள் அன்பையும் அநுக்கிரகத்தையும் எதிர்பார்த்து இங்கு ஒரு பேதை ஒவ்வொரு கணமும் தவித்துக்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும்...’

இப் பகுதியை அவன் படித்துக் கொண்டிருந்தபோது மாளிகைப் பணிப் பெண் வந்து அவசரமாகக் கூப்பிடுவதாய்க் குறளன் உள்ளே வந்து தெரிவித்தான்.

இளையநம்பி கையிலிருந்த ஓலைக் கற்றையைப் பார்த்தான். படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதமிருந்தது. அதை அப்புறம் வந்து படிக்கலாம் என்ற எண்ணத்தில் எல்லா ஓலைகளையும் அப்படியே இடைக் கச்சையில் மறைத்துக் கொண்டு பணிப் பெண்ணோடு அவள் அழைத்துச் சென்றபடியே மாளிகையின் முன் வாயிற்பகுதிக்கு விரைந்தான் அவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
39. மூன்று எதிரிகள்

இளையநம்பி தன்னை அழைத்துச் சென்ற பணிப் பெண்ணுடன் கணிகை மாளிகையின் முன் வாயிற் பக்கம் சென்றபோது ஏற்கெனவே அங்கே அழகன் பெருமாள் பதற்றத்தோடு, கைகளைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தான். வெளிப்புறம் யாராலோ கதவுகள் பலமாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இரத்தினமாலையும் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

“வெளிப்புறம் வந்து நின்று கதவைத் தட்டுவது யார்? நீ ஏன் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறாய்?” -என்று அழகன்பெருமாளை வினவினான் இளையநம்பி.

உடனே அழகன் பெருமாள் பிரம்மாண்டமான அந்த நிலைக் கதவில் இருந்த சிறிய துவாரம் ஒன்றைச் சுட்டிக் காண்பித்து. “நீங்களே பாருங்கள்; வந்திருப்பது யார் என்பது புரியும்” என்றான். கதவைத் திறப்பதற்கு முன் வெளியே வந்திருப்பவர்களைக் காண்பதற்காக ஓர் மானின் கண் அளவிற்கு அங்கே கதவில் துளை இருந்தது.

இளையநம்பி இரத்தினமாலையின் முகத்தைப் பார்த்தான்.

“நான் பார்த்தாயிற்று! நீங்கள் பார்த்தால்தான் உங்களால் நிலைமையின் அபாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்றாள் அவள்.

கதவை நெருங்கித் தன் வலது கண்ணைத் துளையருகே அணுகச் செய்து பதித்தாற்போல ஆவலையும் பரபரப்பையும் தவிர்க்க முடியாமல் வெளியே பார்த்தான் இளையநம்பி.

பூதபயங்கரப் படைவீரர் மூவர் உருவிய வாளும் கையுமாக வாயிற்படிகளில் நின்று கொண்டிருந்தனர். வெளிப்படையாக நன்கு தெரியும் பூத பயங்கரப் படையின் தோற்றத்திலேயே அவர்கள் வந்து அந்த மாளிகை வாயிற்படியில் நின்று கதவைத் தட்டுவதிலிருந்து ஏதோ தீர்மானமுற்றுச் சந்தேகத்துடனேயே அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

‘பார்த்தாயிற்று! இனி நாம் செய்யவேண்டியது என்ன?’ என்று இரத்தினமாலையும் அழகன்பெருமாளையும் வினவுகின்ற முகபாவனையோடு திரும்பிப் பார்த்தான் இளையநம்பி.

“கதவைத் திறப்பது தாமதமாகத் தாமதமாக வெளியே அவர்களுடைய சந்தேகமும், சினமும் அதிகமாகும். விரைந்து முடிவு செய்து செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம்” என்றாள் இரத்தினமாலை. அழகன்பெருமாள் இதையே வேறுவிதமாகக் கூறினான்:

“இரண்டே இரண்டு வழிகள்தான் நாம் நம்புவதற்கு மீதமிருக்கின்றன. கதவைத் திறப்பதற்குக் கால தாமதம் செய்யுமாறு இரத்தினமாலையிடம் சொல்லிவிட்டு - அவள் அப்படிக் காலதாமதம் செய்யும் அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நலிந்த நிலையில் படுத்திருக்கும் தேனுர் மாந்திரீகன் உட்பட நாமனைவரும் நிலவறை வழியே இங்கிருந்து தப்பி வெளியேறிவிட வேண்டும். அல்லது கதவை உடனே திறந்து அவர்களை உள்ளே விட்டபின் தந்திரமாக நாமனைவரும் சேர்ந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு வந்திருக்கும் மூவரையும் எதிர்த்து அழிக்க வேண்டும்.”

“அப்படியே அவர்களை அழித்துவிட்டாலும் நாம் உடனே இங்கிருந்து வெறியேறித் தப்ப வேண்டுமே தவிர தொடர்ந்து இங்கே தங்கியிருக்க முடியாது. வந்திருக்கும் மூவரைக் கொன்றுவிடுவதால் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பூதபயங்கரப்படை வீரர்கள் வந்து இந்த மாளிகையை முற்றுகையிட்டு வளைக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? அப்படியே கதவைத் திறப்பதற்குக் காலதாமதம் செய்து விட்டுத் தப்புவதானால், இரத்தினமாலை, அவள் பணிப் பெண்கள் நீங்கலாக நாமனைவரும் தப்பலாம். பூத பயங்கரப் படை வீரர்கள் மூவரையும் தந்திரமாக உள்ளே விட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களை அழித்த பின் தப்புவதானால் இரத்தினமாலையும், அவளைச் சேர்ந்தவர்களும் கூட நம்மோடு தப்பி வெளியேறத்தான் வேண்டியிருக்கும். பூதபயங்கரப் படைவீரர்கள் இந்த மாளிகை எல்லைக்குள் வைத்துக் கொல்லப்பட்ட பின்னர், இங்கே இரத்தினமாலை தங்கினாலும் அவளுக்கு அபாயம்தான். களப்பிரர்கள் இரத்தினமாலையை ஐயுறுவதற்கும் தொடர்ந்து சித்திரவதை செய்வதற்கும் அதுவே காரணமாகிவிடும். ஆகவே நாம் மட்டும் தப்புவதானால் எதிரிகள் மூவரும் உள்ளே வருவதற்கு முன்பே தப்பிவிடலாம். ஆனால் எதிரிகளை உள்ளே வர வழைத்து அழித்த பின் தப்புவதானால் வெறும் மாளிகையை மட்டுமே விடுவித்து எல்லாரும் தப்பிவிட வேண்டியதுதான் அழகன்பெருமாள்!” -என்றான் இளையநம்பி.

அழகன் பெருமாள் இதைக் கேட்டு எதற்கோ தயங்கிச் சிந்தித்தான்.

“இவர் சொல்லுவதுதான் முற்றிலும் பொருத்தமான முடிவு! வந்திருப்பவர்கள் இங்கே வைத்துக் கொல்லப்பட்டு விட்டபின் அதற்கு மேலும் களப்பிரர்களின் நம்பிக்கைக்கு உரியவளாக இந்த நகரிலோ, இந்த மாளிகையிலோ, நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து ஒற்றறிவது என்பது சாத்தியமில்லை” - என்றாள் இரத்தினமாலை.

வெளிப்புறம் கதவைத் தட்டுவது இடையறாது தொடர்ந்தது. நல்ல வைரம்பாய்ந்த கருமரத்தினால் செதுக்கி இழைத்து உருவாக்கப்பட்ட அந்தப் பூதாகாரமான கதவுகளை அவ்வளவு எளிமையாக வெளியே இருப்பவர்கள் உடைத்து விட முடியாது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

சிந்தனையில் நேரம் கடந்து கொண்டே இருந்ததனால் விரைந்து முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையில் இளையநம்பியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அழகன் பெருமாளும், இரத்தினமாலையும் உடன்பட்டனர். இளையநம்பி தன் மனத்தில் அப்போது தோன்றிய முடிவைச் சொன்னான்:

“எப்போது இந்த மாளிகையையும் இதில் தங்கியிருப்பவர்களையும் சந்தேகப்பட்டுச் சோதனையிடுவதற்குப் பூத பயங்கரப் படைவீரர்கள் முன் வந்து விட்டார்களோ அதற்கப்புறம் இனிமேல் இரத்தினமாலை இதில் தங்கினாலும் ஆபத்து வராமலிருக்க முடியாது. ஆகவே நீ, நான், குறளன், திருமோகூரிலிருந்து வந்திருக்கும் கொல்லன் ஆகிய நால்வரும் கதவருகே அணிவகுத்து நின்று வெளியேயிருந்து உள்ளே வருகிறவர்களை எதிர்க்க வேண்டும் அழகன் பெருமாள் உள்ளே வருகிறவர்களை நமனுலகுக்கு அனுப்பி விட்டுப் பின்னர் எல்லோருமே இங்கிருந்து தப்பி விடலாம் என்பது என் கருத்து. கொல்லனையும், குறளனையும் உடனே கூப்பிடுவதுடன் நம் நால்வருக்கும் நான்கு வாள்களும் வேண்டும் அழகன் பெருமாள்.”

“இந்த மாளிகையில் படைக்கலங்களை இரகசியமாக மறைத்து வைத்திருக்கும் இடம் எனக்கு மட்டுமே தெரியும். வாள்களை நான் கொண்டு வருகிறேன்” - என்று இரத்தின மாலை விரைந்தாள். குறளனையும் திருமோகூர்க் கொல்லனையும் அழைத்து வர அழகன் பெருமாள் ஓடினான். இயல்பை மீறிய பரபரப்பும் வேகமும் அப்போது அங்கே வந்து சூழ்ந்தன. ஒவ்வொரு விநாடியும் விரைவாகவும் அர்த்தத்தோடும் நகர்வது போலிருந்தது.

ஒளி மின்னும் கூரிய வாள்கள் வந்தன. கொல்லனும், குறளனும் வந்தார்கள். அழகன் பெருமாள், இளைய நம்பி, கொல்லன், குறளன் ஆகிய நால்வரும் உருவிய வாள்களுடன் நின்று கொண்டனர். கதவை இரத்தினமாலை திறக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தான் இளையநம்பி.

அவள் கதவைத் திறக்கு முன் கொல்லன் மூலம் வந்து சேர்ந்திருந்த பெரியவரின் ஓலையை, ‘அழகன்பெருமாள் வாசித்து முடித்த பின் அவள் வாசித்தாளா’ -என்பதைக் கேட்டு ‘வாசித்தேன்’... என்பதற்கு அடையாளமாக அவள் தலையசைத்த பின் ஒரு வியூகமாக அவர்கள் நால்வரும் நின்று கொண்டார்கள். அவள் திறக்கப் போகிற கதவுகளின் உட்புற மறைவில் நின்று வெளியே இருக்கும் பூதபயங்கரப்படை வீரர்கள் உள்ளே காலடி வைத்ததும் நால்வருமாகப் பாய்ந்து ஒரே சமயத்தில் தாக்குவது என்று அவர்கள் நினைத்திருந்தனர். கதவைத் திறக்கிறவள் பெண்ணாயிருப்பதைக் கண்டு வெளியே இருந்து உள்ளே புகுகின்றவர்கள் அலட்சியமாகவும், எச்சரிக்கை உணர்வு அற்றவர்களாகவும் இருக்கும்போது திடுமெனத் தாக்க வேண்டுமென்பதை அவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரத்தினமாலை மாளிகையின் உள்ளே ஏதோ காரியமாக இருந்தவள் - அப்போதுதான்கதவைத் தட்டும் ஒசை கேட்கத் திறப்பது போல் மெல்ல வாயிற் கதவைத் திறந்தாள். பக்கத்துக்கு இருவராகப் பிரிந்து உருவிய வாளுடன் நின்ற இளையநம்பி முதலியவர்கள் திறக்கப்படும் கதவின் பின்புறமாக மறைவிடம் தேடினர்.

அப்போதிருந்த மனநிலையில் திறக்கப்படுகிற கதவு கிறிச்சிடும் மர்மச்சப்தம் கூட உள்ளே நுழைகிற மூவரின் மரண ஒலத்துக்கு முன்னடையாளம் போல் இரத்தினமாலைக்குக் கேட்டது. முகத்தில் மலர்ச்சியுடனும், முறுவலுடனும் ஒரு வேறுபாடும் காட்டாமல் சுபாவமாக வரவேற்கிறவள் போல் அந்த முன்று பூதபயங்கரப் படைவீரர்களையும் அவள் எதிர் கொண்டாள்.

வந்தவர்கள் மூவரும் கடுமையான கேள்விகள் எதையும் தன்னிடம் கேட்காமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்த விதம் அவளுக்கு வியப்பை அளித்தது. ‘உருவிய வாளுக்கும், பூதபயங்கரப் படையின் உடைக்கும் தகுந்த மிடுக்கோ, சினமோ, இன்றி உள்ளே வரும் அவர்கள், ஒருவேளை இந்தக் கணிகை மாளிகையில் ஆடல் காணலாம், பாடல் கேட்கலாம் என வருகிறார்களோ’ என்று சந்தேகப் பட்டாள் அவள். அவர்கள் மூவரும் நிலைப்படியைக் கடந்து இரண்டுபாக தூரம்கூட உள்ளே வந்திருக்க மாட்டார்கள். திறக்கப்பட்ட கதவுகளின் பின் மறைவிலிருந்து இளையநம்பி முதலிய நால்வரும் உருவிய வாளோடு அவர்கள் மேல் பாயவும், இரத்தினமாலை தான் திறந்த கதவுகளையே மீண்டும் அவசர அவசரமாக அடைக்க முற்பட்டாள்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. உள்ளே வந்த மூவரும் ‘கயல்’ - என்று நல்லடையாளச் சொல்லைச் சற்றே உரத்த குரலில் கூறவும், உருவிய வாளுடன் பாய்ந்த நால்வரும் ஒன்றும் புரியாமல் தயங்கிப் பின்வாங்கினர்.

அடுத்த கணம் விரைந்து பூதபயங்கரப் படை வேடத்தைக் கலைத்துவிட்டுக் காரி, கழற்சிங்கன், சாத்தன் ஆகிய உபவனத்து நண்பர்கள் மூவரும் எதிரே நிற்பதைக் கண்டதும், அழகன்பெருமாள் முதலியவர்கள் வாளைக் கீழே எறிந்துவிட்டு ஓடிவந்து அவர்களைத் தழுவிக் கொண்டனர்.

“எங்களையே ஏமாற்றி வீட்டீர்களே? மெய்யாகவே பூதபயங்கரப் படையினர் மூவர் இங்கு சோதனைக்காகத் தேடி வந்திருக்கிறீர்களோ என்று அஞ்சி நாங்களே ஏமாறும் அளவு நடித்து விட்டீர்கள் நண்பர்களே” - என்றான் இளையநம்பி.

“இவ்வளவு செம்மையாகவும் திறமையாகவும் நடிக்கா விட்டால் வெளியே நாங்கள் உயிர் பிழைத்துத் தப்பி வந்திருக் கவே முடியாது ஐயா!” என்றான் கழற்சிங்கன். எதிர்பாராத இந்தப் புதிய திருப்பத்தைக் கண்டதும், ‘காப்பாற்றப்பட வேண்டியவர்கள் தாங்கள் மட்டுமில்லை வந்திருப்பவர்களும் கூடத்தான்’ -என்று புரிந்து கொண்டு, அடைத்த கதவையே நன்றாக அழுத்தித் தாழிட்டாள் இரத்தினமாலை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
40. மங்கலப் பொருள்

“நல்லடையாளச் சொல்லைக் கூற நாங்கள் ஒரு விநாடி காலந் தாழ்த்தியிருந்தால் எங்களைக் கொன்று நமனுலகுக்கு அனுப்பி யிருப்பீர்கள் அல்லவா?” -என்று உள்ளே வந்ததும் கழற்சிங்கன் இளையநம்பியைக் கேட்டான்.​

“இந்தப் பயம் உங்களுக்கு முன்பே இருந்திருந்தால் நீங்கள் பூதப்யங்கரப் படை வீரர்களைப் போன்ற மாறுவேடத்தில் இங்கு வந்திருக்கக் கூடாது” - என்று அதற்கு இளையநம்பியை முந்திக் கொண்டு இரத்தினமாலை மறுமொழி கூறினாள். அவர்களில், சாத்தன் அதற்கு விடை கூறினான்:

“இந்த வேடத்தைத் தவிர, வேறு எந்த மாறு வேடத்தாலும் நாங்கள் உயிர் பிழைத்து இங்கே வந்து சேர்ந்திருக்க முடியாது.”

கோநகரிலேயே வேண்டிய நண்பர்கள் பலர் வீடுகளில் மறைந்து வாழ்ந்தது முதல், கடைசியாக இன்று கணிகை மாளிகை வந்து சேர்ந்தது வரை தாங்கள் பட்ட வேதனைகளை எல்லாம் காரி சொன்னான்.

“எப்படியோ ஆலவாய்ப்பெருமாள் அருளால் இங்கே வந்து சேர்ந்து விட்டீர்கள். களப்பிரர்களிடம் சிறைப்பட்டு விட்ட நம்மவர்களான தென்னவன் மாறனையும், திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் விடுவிக்கும் பொறுப்பைப் பெரியவர் நம்மிடம் விட்டிருக்கிறார். இனி நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” - என்றான் அழகன் பெருமாள். அப்போது அந்த மூவரும் தேனூர் மாந்திரீகனைப் பற்றி விசாரிக்கவே, ‘அவன் காயமுற்று வந்து அங்கு படுத்திருக்கும் நிலைமை’யை அவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மூவரையும் அவன் இருந்த கட்டிலருகே அழைத்துச் சென்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை படைக் கலங்களை மறுபடி மறைத்து வைக்கச் சென்றாள்.

இந்நிலையில் ஏற்கெனவே தான் அரைகுறையாகப் படித்துவிட்டு வைத்திருந்த செல்வப் பூங்கோதையின் ஓலையில் படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதியிருப்பதை நினைவு கூர்ந்தவனாகச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குத் திரும்பினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் குறிப்பறிந்து அவனைப் பின்தொடர்ந்தான். தான் படிக்காமல் எஞ்சியிருந்த அவளது மூன்றாவது ஓலையில் என்னென்ன அடங்கியிருக்குமோ என்ற ஆவல் ததும்பும் மனத்துடன் இடைக் கச்சையிலிருந்து அந்த ஓலையை எடுத்து மீண்டும் படிக்கத் தொடங்கினான் இளையநம்பி.

“ஏற்கனவே நான் எழுதி வைத்துவிட்ட இந்த அன்புமடலை உங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இவ்வூர்க் கொல்லன் இங்கு வந்தபோது மன்றாடி வேண்டிக் கொண்டேன். ‘திருமோகூரிலிருந்து வேறு எங்கோ மாறிச் சென்று விட்ட பெரியவர் மதுராபதி வித்தகரைக் காணச் செல்வதாகவும் மீண்டும் எப்போதாவது கோநகருக்குச் செல்ல நேர்ந்தால் என் ஓலையை உங்களிடம் சேர்ப்பதாகவும்’ - கொல்லனிடமிருந்து எனக்கு மறுமொழி கிடைத்தது. அப்போது நாங்கள் எந்த நிலையிலிருக்கிறோம்? ஊர் எந்த நிலையிலிருக்கிறது? களப்பிரர்களின் கொடுமைகள் எப்படி உள்ளன? என்பன பற்றி எல்லாம் இந்த ஓலையை உங்களிடம் சேர்க்கும்போதே கொல்லன் விரிவாகச் சொல்லக்கூடும். அவற்றை எல்லாம் நான் விவரித்து எழுத இயலவில்லை.

ஓர் அன்பு வேண்டுகோளுடன் அடியாள் இதை முடிக்க விரும்புகிறேன். இதை நான் கொடுத்தனுப்பி, இது உங்கள் கைக்குக் கிடைத்தால் - அப்படிக் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியை நானடைவதற்காக நீங்கள் எனக்கு மாற்றம் தந்து எழுதத்தான் வேண்டும் என்பதில்லை. எழுதினால் இப்பேதை எல்லையில்லாப் பெருமகிழ்ச்சியை அடைவேன் என்றாலும் நான் உங்களிடம் இப்போது வேண்டப் போவது வேறு. உங்களுக்கு இது கிடைத்து நீங்கள் இதைப் பார்த்து விட்டதன் மாற்றாக, ஏதாவதொரு மங்கலப் பொருளை எனக்குக் கொடுத்தனுப்புங்கள். அது போதும். நீங்கள் கொடுத்தனுப்புவது எதுவாயிருந்தாலும் அந்தப் பொருள் அடியாளுக்கு மங்கலமும் சுபசகுனமும் உடையதாயிருக்கும் என்பது உறுதி. உங்கள் நினைவுகள் என்னுள்ளே மணக்கும்படி எனக்கு எதையாவது கொடுத்தனுப்புவீர்களா? உங்களுடைய பேதையின் இந்த வேண்டுகோளை நீங்கள் மறக்க வேண்டாம்” என்று முடிந்திருந்தது அவளுடைய அந்த ஓலை. எந்த மங்கலப் பண்டத்தை அவளுக்காகக் கொடுத்தனுப்புவது என்று ஒரு விநாடி தயங்கினான் இளையநம்பி. அடுத்த கணமே அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக அந்தப் பகுதியிலிருந்த பூக்குடலையிருந்து ஒரு பெரிய செந்தாழம் பூவை எடுத்தான். வாசனை நிறைந்த அதன் மடல்களிலே இரண்டை உருவி அவற்றைப் பட்டையாகத் தைத்து அதனுள் இரண்டு கழற்சிக்காய் அளவு பொதிய மலைச்சந்தனத்தை உருட்டி வைத்துக் கட்டினான். ஒரு பெண்ணுக்கு ஆண் அளிக்க முடிந்த பொருள்களில் பூவையும் சந்தனத்தையும்விட மங்கலமான பொருள்கள் வேறு எவையும் இருக்க முடியாதென்று அவனுக்குத் தோன்றியது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே யுள்ள ஞாபகங்களுக்குப் பூவும் சந்தனமுமே இனிமையான சாட்சிகள். ஒன்று பெண்ணின் கூந்தலை மணக்கச் செய்வது. மற்றொன்று அவள் உடலை மணக்கச் செய்வது. அந்த இரு மங்கலப் பொருள்களையும் ஒன்றாகப் பொதிந்து - ஒன்றில் ஒன்றை இட்டு நிறைத்து அனுப்புவதன் மூலம் அவைகளை அடைகிறவளின் மனம் எவ்வளவு மகிழ்ச்சிப் பெருக்கினால் துள்ளும் என்பதை இப்போதே கற்பனை செய்ய முயன்றான் இளையநம்பி.

தாழையையும், பூவையும், சந்தனத்தையும் ஒரு பெண்ணுக்கு அனுப்புவதில் எத்தனை குறிப்புக்களை அவள் புரிந்து கொள்ள முடியுமென்று சிந்தித்தபோது அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே மணமுள்ள பூவே ஒரு மெளனமான உரையாடல் என்றால் சந்தனம் இன்னோரு சீதப் பனிச் சொற்கோவை. அது அவளுக்கும் புரியும் என்று நம்பியவனாக, “நான் கொடுத்தேன் என்று இதைப் பெரிய காராளர் மகளிடம் சேர்த்தாலே போதுமானது” - என்று அதைத் திருமோகூர்க் கொல்லனிடம் அவனைக் கூப்பிட்டுக் கொடுத்தான் இளையநம்பி. கொல்லனும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டான். பெரியவருக்கு ஏதேனும் மறுமொழி ஓலை தரலாம் என்றால் அவர் எந்த மறுமொழி ஓலையையும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையை அறிந்து வருமாறு மட்டுமே தன்னைப் பணித்தார் என்பதாகக் கொல்லன் கூறிவிட்டான். மறுபடி நிலவறை வழியே அவன் புறப்பட்டுச் செல்ல அன்று நள்ளிரவு வரை அங்கேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. நள்ளிரவில் கொல்லன் புறப்பட்டுப் போனான். அவனை வழியனுப்பிவிட்டு அழகன்பெருமாள், இளையநம்பி முதலியவர்கள் உறங்கப் போகும்போது இரவு நடுயாமத்திற்கு மேல் ஆகிவிட்டது.

மறுநாள் அதிகாலையில் இளைய நம்பியைத் துயிலெழுப்ப அவன் கால்களினருகே மஞ்சத்தில் அமர்ந்து இரத்தினமாலை யாழ் வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த இனிய யாழொலி கேட்டு எழுந்த இளையநம்பி சிரித்துக் கொண்டே அவளை வினவினான்:

“இதென்ன புது வாத்திய உபசாரம்?”

“இப்படியெல்லாம் தங்களை நோகாமல் உறங்கச் செய்து நோகாமல் துயில் எழுப்பிப் பாதுகாக்கச் சொல்லிப் பெரியவரின் ஆணை” - என்றாள் அவள். அதற்கு மறுமொழி கூறாமல் ஏதோ நினைத்துக் கொண்டவனாக மேன் மாடத்திலிருந்து படிகளில் இறங்கி விரைந்து கீழே அழகன்பெருமாளைக் காணச் சென்றான் இளையநம்பி.

அங்கே அழகன் பெருமாள் படுத்திருந்த இடம், தேனூர் மாந்திரீகனின் கட்டில் எல்லாமே வெறுமையாயிருந்தன. வியப்போடும் சினத்தோடும் திரும்பினான் அவன்.

“அவர்கள் நால்வரும் அழகன் பெருமாளும் இப்போது இங்கு இல்லை!” என்று கூறியபடியே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இளையநம்பி அதைக் கேட்டுத் திகைப்படைந்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top