• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நித்திலவல்லி - முதல் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
21. எண்ணெய் நீராட்டு

அந்தப் புதிய விருந்தினனை அறக் கோட்டத்தில் தங்க வைத்து விட்டு வந்திருந்த காராளர் இப்போது பெரியவர் மதுராபதி வித்தகர் கூறிய பரிசோதனையை அவனிடம் எவ்வாறு செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினார். வந்திருப்பவனின் மனம் புண்படாமல், தனக்கு ஆகவேண்டிய காரியமும் பழுதுபடாமல் எப்படி முடித்துக் கொள்வது என்று தெரியவில்லை. சோதனைக்குப் பின் அவன் வேண்டியவன் என்று தெரிந்து விட்டால் சோதனை செய்ததற்காகக் கூசவேண்டிய நிலை ஏற்படும். வேண்டாதவன் என்று தெரிந்துவிட்டாலோ அவனுக்குக் கோபம் வரும். அவனோ உடனே ஆத்திரப் படுகிறவனாகவும், முன் கோபக்காரனாகவும், உரத்த குரலில் சப்தம் போட்டுப் பேசுகிறவனாகவும் இருந்தான். இதையெல்லாம் விடப் பெரிய அபாயம் தன்னுடைய நீண்ட புலித்தோல் அங்கிக்குள் சற்றே மறைத்தாற்போல் உறையிட்ட வாள் ஒன்றையும் வைத்திருந்தான் அவன்.

பாண்டிய நாட்டில் தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் எதுவும் எழலாகாது என்ற கருத்தில் களப்பிரர்கள் ஆட்சியில் பொதுமக்கள் வாளும், வேலும் கொண்டு பயில்வது தடுக்கப்பட்டிருந்தும், ‘இவன் எப்படி வாளைக் கைக் கொண்டு வெளிப்பட்டுப் பழகுகிறான்?’ என்பதுதான் காராளரின் மிகப் பெரிய ஐயமாயிருந்தது.

‘ஒன்று இவன் நம்மை ஆழம் பார்க்க வந்த களப்பிரப்பூத பயங்கரப்படை ஒற்றனாக இருக்க வேண்டும்; அல்லது வருவது வரட்டும் - என்று எதற்கும் துணிந்து வாள் வைத்திருப்பனாக இருக்க வேண்டும்’ என்று தோன்றியது காராளருக்கு. இந்த இரண்டைத் தவிர வேறு எதையுமே உய்த்துணர இயலவில்லை. அவனுடைய வயதைப் பற்றிய தன்னுடைய முதல் அனுமானம் கூடத் தவறானதோ என்று இப்போது நெருங்கி நின்று கண்ட பின் நினைத்தார் அவர். வளர்ச்சியினாலும் முகத்தில் நெகிழ்ச்சியோ முறுவலோ ஒரு சிறிதும் தெரியாத குரூரத்தினாலும் வயது கூடுதலாகத் தோன்றுகிறதோ என்று இப்போது எண்ணினார் அவர். மதுராபதி வித்தகரைச் சந்தித்துவிட்டு அறக்கோட்டத்திற்குத் திரும்பிய பெரிய காராளர் அங்கே அந்த அறக் கோட்டத்தின் கூடத்தில் பசி எடுத்து இரை தேடும் புலி உலவுவதுபோல உலவிக் கொண்டிருந்த அவனை மீண்டும் மிக அருகே நெருங்கிக் கண்டபோது இவ்வாறுதான் எண்ணத் தோன்றியது.

அவன் அவரைக் கண்டதும் அடக்க முடியாத ஆவலோடு “இப்போதாவது என்னைப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் முடிவோடு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” - என்று கேட்டான்.

“அடடா பார்த்தீர்களா? பார்த்தீர்களா? மீண்டும் அரசியலுக்கு வருகிறீர்களே? நான் அதற்காக இப்போது இங்கே வரவில்லை. என்னுடைய அறக்கோட்டத்துக்கு யார் வந்தாலும் எண்ணெய் நீராடச் செய்து உணவளித்து அனுப்புவது வழக்கம். நீங்களோ நெடுந்துாரம் அலைந்து களைத்துத் தென்படுகிறீர்கள். இங்குள்ள மல்லன் ஒருவன் எண்ணெய் தேய்த்து உடம்பு பிடித்து விடுவதில் பெருந்திறமை உடையவன். அவனிடம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நீராடிவிட்டு இந்த அறக்கோட்டத்தின் உணவையும் உண்டு முடித்தீர்களா னால் எழுந்திருக்கவே மனம் வராமல் சுகமான உறக்கம் வரும்.”

“ஐயா! சுகமான உறக்கத்துக்கு உங்களிடம் நான் வழி கேட்கவில்லை. என்னுடைய இந்த உடல், தொடர்ச்சியாக ஐந்து நாள் உறக்கம் விழித்தாலும் தாங்கும். உறக்கத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ நான் அதிகம் கவலைப் படவில்லை.”

“நீங்கள் கவலைப்படவில்லை என்றாலும் உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.”

“ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படுவதற்கு நாம் இன்னும் அவ்வளவு ஆழமாக நெருங்கிப் பழகிவிட வில்லையே?”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“காரணத்தோடுதான் சொல்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பவில்லை என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் கண்காண எதிரே இரண்டு களப்பிரர்களை என்வாளால் குத்திக் கொன்று காட்டினால் தான் நம்புவீர்கள் போலிருக் கிறது” என்று தனக்கே உரிய உரத்த குரலில் அவன் இரையவும், காராளருக்கு அவனிடம் ஏன் தான் பேச்சுக் கொடுத்தோம் என்று கவலையாகி விட்டது. அவனைப் போன்று வஞ்சகமில்லாத வெள்ளை முரடனை ஒரளவு இதமாகப் பேசித்தான் வழிக்குக் கொண்டுவர முடியும் போலிருந்தது. சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்களில் முதல் உபாயத்தைத் தவிர வேறெதனாலும் அவனை வழிக்குக் கொண்டு வர முடியாது போலிருந்தது. அவனை வழிக்குக் கொண்டு வர முடியாத வரை தன் பரிசோதனையும் நிறை வேறாதென்று கருதினார் அவர். அடுத்த கணமே அவனிடம் அவருடைய உரையாடலின் தொனியும் போக்கும் மாறின.

“நம்பிக்கை என்பது ஒரே அளவில் அன்பைப் பரிமாறிக் கொள்வதுதான் என்றால், என்னுடைய அறக்கோட்டத்தில் நான் செய்யும் உபசாரங்களை நீங்கள் முதலில் நம்பி ஏற்க வேண்டும். இருபுறமும் நிறைய வேண்டிய ஒரு நம்பிக்கையை ஏதாவது ஒருபுறம்தான் முதலில் தொடங்க வேண்டியிருக்கும்...”

இதைக் கேட்டு முதலில் ஒன்றும் புரிந்து கொள்ளாதது போல காராளரை ஏறிட்டு நோக்கி விழித்த அவன் சில விநாடிகளுக்குப் பின்,

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று சூடாகத் தெரியும் ஒலி தொனிக்கக் கேட்டான். காராளர் சிரித்துக் கொண்டே இதற்கு மறு மொழி கூறினார்:

“இந்த அறக் கோட்டத்தின் உபசாரங்கள் எதையும் நீங்கள் மறுக்காமல் ஏற்க வேண்டும்.”

பதிலுக்கு அவன் முகத்தில் சிரிப்போ மலர்ச்சியோ இல்லை. இளையநம்பியின் முகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு சுமுகபாவமும் கவர்ச்சியும் உண்டோ, அவ்வளவிற்கு இவன் முகத்தில் கடுமை இருந்தது. சுமுகத்தன்மை வறண்டிருந்தது.

அவனுடைய மெளனத்தை இசைவாகப் புரிந்து கொண்டு அறக்கோட்டத்து மல்லனை எண்ணெய்ப் பேழையுடன் வரச் செய்தார் அவர். புதியவனை நீராட்ட அழைத்துச் செல்லு முன் மல்லனைத் தனியே அழைத்து இரண்டு விநாடிகள் இரகசியமாக அவனோடு ஏதோ பேசினார். அவர் கூறியதற்கு இணங்கித் தலையசைத்தான் அந்த மல்லன். காராளர் கூடத்திலேயே நின்று கொண்டார். மல்லனையும் புதியவனையும் தனியே விடக் கருதியே அவர் இதைச் செய்தார்.

ஆனால் அங்கே புதியவனோடு தனியே சென்ற மல்லனுக்கோ பயமாயிருந்தது. கையிலிருந்த வாளைக் கீழே வைக்காமலேயே எண்ணெய் பூசி நீவிவிடச் சொல்லும் முதல் மனிதனை அவன் இப்போதுதான் சந்தித்தான். அந்தச் சிறு பிள்ளைத்தனமான பாதுகாப்பு உணர்ச்சியை எண்ணி உள்ளுற நகைத்தாலும், தனக்கு என்ன நேருமோ என்ற பயம் எண்ணெய் பூசுகிறவனுக்கு இருந்தது. புலியோடு பழகுகிற மனநிலையில் இருந்தான் அவன். அரையாடையைத் தார்ப் பாய்ச்சிக் கட்டிக் கொண்டு பாறையாகப் பரந்த மார்பும் திரண்ட தோள்களுமாக எண்ணெய் பளபளக்க நின்று அந்த உடலின் வலிமையை எண்ணித்தான் ஒரு மல்லனாயிருந்தும் அந்த ஊழியனால் அஞ்சாமலிருக்க முடியவில்லை. தயங்கித் தயங்கி அவன் வேண்டினான். “அந்த வாளைக் கீழே வைத்தீர்களேயானால் எண்ணெய் பூசிவிட வாகாயிருக்கும்.”

“யாருக்கு வாளுக்கா? எனக்கா?” என்று வந்தவன் சீறியதும் மல்லன் அடங்க வேண்டியதாயிற்று. ஆனாலும் மல்லனுக்கு ஒரு மனநிறைவு இருந்தது. வந்திருப்பவனுடைய உடலில் காராளர் கண்டறியச் சொன்ன அடை யாளத்தை அவன் கண்டு விட்டான். உடனே எண்ணெய் பூசுவதை நிறுத்தி விட்டு உள்ளே ஓடிப் போய்க் காராளரிடம் அதைச் சொல்லிவிட அவன் பரபரப்பு அடைந்தாலும், வந்திருப்பவனுக்கு அது சந்தேகத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் பொறுமையோடு முழுமையாக எண்ணெய் தேய்த்து முடித்தான்.

எல்லாம் முடிந்த பின் அவன் திரும்பி வந்து காராளரிடம் “ஐயா! நீங்கள் கூறிய அடையாளம் அவருடைய வலது தோளில் பழுதின்றி இருக்கக் கண்டேன்” என்று கூறினான். அதைக் கேட்ட பின்பு வந்திருப்பவனை ஒரு தேசாந்திரி போல் கருதி அறக் கோட்டத்தில் வைத்துச் சோறிடுவதா அல்லது தன்னுடைய மாளிகைக்கு அழைத்துச் சென்று சிறப்பாக விருந்தளிப்பதா என்ற மனப்போராட்டம் எழுந்தது காராளருக்குள்ளே. உடனே காண்பிக்கப்படும் சிரத்தையை வந்திருப்பவன் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக எந்த மாறுதலும் செய்யாமல் விட்டார் அவர். உண்டு முடித்ததும் அந்தப் புதியவனைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பையும் மல்லனிடமே ஒப்படைத்தார் காராளர். அவருடைய அறக்கோட்டங்களில் பணிபுரியும் அனைவரும் பொது மக்கள்போல் பழகினாலும் அந்தரங்கத்தில் அவர்கள் அனைவரும் பாண்டிய குலத்தின் முனை எதிர் மோகர் படையினரையோ, தென்னவன் ஆபத்துதவிகளையோ சேர்ந்தவர்கள் தாம், அதனால் அவர்களை எதற்கும் நம்பலாம் என்பதைக் காராளர் நன்கு அறிந்திருந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
22. புலியும் மான்களும்

எண்ணெய் நீராடிய களைப்பில் உண்டதும் அயர்ந்து உறங்கி விட்டான் அந்தப் புதிய மனிதன். அறங் கோட்டத்து மல்லனும் காராளரின் குறிப்புப்படி உறங்கி எழுந்திருந்த பின்பே அந்தப் புதியவனைத் தன்னோடு வருமாறு அழைத்தான்.

“எங்கே அழைக்கிறாய் என்னை? பயனில்லாத காரியங்களுக்காக அலைய எனக்கு இப்போது நேரமில்லை” என்று மல்லனிடம் சீறினான் அவன். ‘ஐந்து தினங்களானாலும் நான் உறக்கத்தைத் தாங்குவேன்?’ என்று சொன்னவன் உண்ட களைப்புத் தாங்காமல் உடனே உறங்கி விட்டதைக் கண்டபோது தொடர்ந்து பல நாட்கள் அவன் உறங்க முடியாமற் கழிந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. வீரம் பேசிச் சூளுரைப்பதும் உடலின் இயலாமையால் உடனே அதற்கு முரண்டு படுவதுமாக இருந்த அவன் மனம் ஆத்திரம் அடையாதபடி,

“பயனில்லாது எங்கேயும் உங்களை அழைக்க வில்லை. எங்கே போக வழி கேட்டு வந்தீர்களோ அங்கே உங்களை அழைத்து வரச்சொல்லிக் கட்டளை கிடைத்திருக்கிறது” என்றான் மல்லன். மறுபேச்சுப் பேசாமல் உடனே மல்லனைப் பின் தொடர்ந்தான் புதியவன். மல்லனோடு நடந்து செல்லும்போது, “உங்களது அறக்கோட்டத்தைப் புரந்து வரும் அந்த வேளாளர் எங்கே?” என்று கேட்டான் அவன்.

“அவர்தான் இந்தக் கட்டளையை என்னிடம் சொல்லி விட்டுச் சென்றார்” - என்றான் மல்லன்.

“நல்லது! இவ்வளவு நேரத்துக்குப் பின்பாவது அவருக்கு என்மேல் கருணை வந்ததே? முதலிலேயே இந்தக் கருணையைக் காட்டியிருந்தாரானால் எவ்வளவோ பெரிய உதவியாயிருக்கும்.”

இப்படிக் கூறிய புதியவனுக்கு மல்லன் மறுமொழி எதுவும் கூறவில்லை. சிறிது தொலைவுவரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமலே நடந்தனர். நல்லடையாளச் சொல்லைப் பற்றி அந்தப் புதியவனுக்குக் குறிப்பிட்டு விளக்க வேண்டிய சமயம் வந்து விட்டது என்பதை உணர்ந்து, அதைப் பற்றிச் சிறிது நேர மெளன நடைக்குப் பின் சொல்லத் தொடங்கினான். புதியவனும் அதை அமைதியாவும் கவனமாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டான். நல்லடை யாளச் சொல்லைப் பற்றி விளக்கிய சில கணங்களுக்குப் பின் இருந்தாற் போலிருந்து, சற்றே தயங்கித் தயங்கி அந்தப் புதியவனை ஒரு கேள்வி கேட்டான் மல்லன்: -

“இந்த ஆட்சியில் களப்பிரர் அல்லாத பொதுமக்கள் வெளிப்படையாக வாளோ, வேலோ, ஆயுதங்களோ ஏந்திப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா ஐயா?”

“தெரியும். தெரிந்தால் என்ன? அந்தத் தடைக்கு நான் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று எந்த வேதத்தில் எழுதியிருக்கிறது?”

“வேதத்தில் எதுவும் எழுதவில்லை என்றாலும் இந்த வாளை வைத்திருப்பது உங்களுக்கு அபாயத்தைத் தேடிக் கொண்டுவரும்...”

“என்னைத் தேடிவரும் அபாயங்களை நான் சுகமாகத் திரும்பிச் செல்ல விட்டுவிட மாட்டேன். அந்த அபாயங்களையே நான் இந்த வாள் முனையில்தான் சந்திப்பேன். வருகின்ற அபாயங்கள் இந்த வாளின் கூர்மையான நுனியில் மோதிச் சாகத்தான் முடியும்.” இந்த வாக்கியங்களைக் கூறும் போது அந்தப் புதியவனின் கண்கள் நெருப்புக் கோளங்களாகச் சிவந்து மின்னின. ஒருகணம் பாயப் போகிற புலி போலவே மல்லனின் கண்களுக்குத் தோன்றினான் அவன்.

“அதிருக்கட்டும்! உங்கள் அறக்கோட்டத்தை நடத்தும் பெரிய காராள வேளாளர் தனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாதென்று முதலில் என்னைச் சந்தித்தபோது ஒரேயடியாகச் சாதித்தாரே? இப்போது எப்படி என்னை நம்பினார்?”

“நீங்கள் சந்தேகத்துக்கு உரியவர் அல்லர் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்” என்றான் மல்லன். அவர்கள் பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த ஆல மரத்தடிக்குச் செல்லுகிற வழியில் அங்கங்கே மறைந்திருந்து வழியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆபத்துதவிகள் அந்தப் புதிய மனிதனோடு தங்களில் ஒருவனான மல்லன் துணை வருவதைக் கண்டு ஐயப்பாடு தவிர்த்தனர்.

அவர்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது பெரியவர் ஆலமரத்தின் வடபகுதியில் குன்றின் கீழிருந்த புல்வெளியில் இருந்தார். அந்தப் புல்வெளியின் பசுமையில் அப்போது கண் கொள்ளாக் காட்சியாய்ச் சிறுசிறு புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. மிகவும் சிறியதும் மருண்டு மருண்டு நோக்கும் அழகிய விழிகளை உடையதும் ஆகிய ஒரு புள்ளிமானைத் தடவிக் கொடுத்தபடியே புல்வெளியில் அமர்ந்திருந்த பெரியவர் திடீரென்று தன் கைப் பிடியிலிருந்த மானைத்தவிர மற்றெல்லா மான்களும் தலைதெறிக்க ஓட்டம் எடுப்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தபோது புலித்தோல் அங்கியோடு கூடிய அந்த மனிதனுடன் மல்லன் அங்கே வந்து கொண்டிருந்தான். வந்து கொண்டிருப்பவனுடைய புலித் தோல் அங்கி மேய்ந்து கொண்டிருந்த மான்களை மருட்டி விரட்டுவதை எண்ணி உள்ளுறச் சிரித்துக் கொண்டே,

“வா! வா! ‘ஏதடா தென்னவன் மாறன் இன்று வர வேண்டுமே! இன்னும் காணவில்லையே’ என்று நானும் இவ்வளவு நேரமாக உன்னைத்தான் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னுடைய புலித்தோல் உடையே இங்கு மேய்ந்து கொண்டிருந்த மான்களை விரட்டியதுபோல் களப்பிரர்களையும் இங்கிருந்து விரட்டிவிடப் போதுமானது என்று நினைக்கிறாய் போலிருக்கிறது” என்றார் பெரியவர். மறுமொழி கூறாமல் அவர் முன்னிலையில் ஒரு புலி கிடந்து வணங்குவது போல் தரை மண் தோய வணங்கினான் ‘தென்னவன் மாறன்’ என்று குறிக்கப்பட்ட அந்த மனிதன். அப்போது மிக அருகே தென்பட்ட அவனுடைய புலித்தோல் அங்கியைக் கண்டு பெரியவர் கைகளின் தழுவலில் இருந்த அந்தப் புள்ளி மானும் மருண்டு ஒடத் திமிறியது. அவர் அதை விடுவித்தார். வலது கையை உயர்த்தி அவனை வாழ்த்தினார்.

தன்னிடம் ‘அவர்கள் இருவரும் பேசும்போது நீ அருகே இருக்க வேண்டாம்’... என்று காராளர் கூறியனுப்பியிருந்ததற்கு ஏற்ப மல்லன் விலகி நின்று கொண்டான். ஆனாலும் பெரியவரையும் அவரைக் காண வந்திருந்த புதியவனையும் தெளிவாகக் கண்காணிக்க முடிந்த தொலைவில்தான் நின்று கொண்டிருந்தான். காராளரும் மல்லனுக்கு அப்படித்தான் சொல்லியனுப்பி இருந்தார். உரத்த குரலை உடையவனாக இருந்ததால் தென்னவன் மாறன் என்னும் அந்தப் புதிய மனிதன் கூறிய மறுமொழிகள் மல்லன் நின்று கொண்டிருந்த இடம் வரையிலும் கேட்டன. ஆனால் மதுராபதி வித்தகர் அவனை வினாவிய வினாக்கள் மட்டும் அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லை. “ஐயா! தென்னவன் சிறு மலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மட்டும் ஈராயிரம் இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்திருக்கிறேன். விற்போர் வல்லமை, வேலெறியும் திறன், மற்போர் ஆண்மை ஆகிய எல்லாத் துறையிலும் தேர்ந்த அந்த ஈராயிரவர் இந்தக் கணமே நீங்கள் கட்டளையிட்டாலும் புறப்பட்டு வந்து சேரத் தயங்கமாட்டார்கள்.”

இவ்வளவு உரத்த குரலில் இந்த விஷயத்தை அவன் சொல்லியிருக்கக் கூடாது என்று பெரியவர் அவனைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும் என்று விலகி நின்ற மல்லனாலேயே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. ஏனென்றால் அடுத்த கணத்திலிருந்து தென்னவன் மாறனின் குரலும் அவனுக்குக் கேட்கவில்லை. பெரியவரிடம் அவன் ஏதோ பேசி வாதித்துக் கொண்டிருப்பதை மட்டும் மல்லன் பார்க்க முடிந்தது.

பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கியைக் கழற்றி வலது தோளின் மேற்புறத்தைப் பெரியவரிடம் காட்டி ஏதோ சொன்னான் தென்னவன் மாறன். பேச்சு வளர்ந்தது.

பேச்சின் நடுவே இருந்தாற் போலிருந்து தென்னவன் மாறன் வாளை உருவவே கண்காணித்துக் கொண்டிருந்த மல்லன் பதறிப்போய் நெருங்கிச் சென்றான். ஆனால் அடுத்த கணமே தென்னவன் மாறன் செய்த காரியத்தைக் கண்டு மல்லனுக்குப் புல்லரித்தது, மெய்சிலிர்த்தது. கூசும் மருண்ட கண்களை மூடி மூடித் திறந்தான் மல்லன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
23. தென்னவன் மாறன்

தன் உள்ளங்கையை வாளால் கீறி நேர்கோடாகப் பொங்கி மேலெழும் இரத்தத்தைக் காண்பித்து, “ஐயா! இந்த உடலில் ஒடுவது பாண்டிய மரபின் குருதிதான் என்பதைப் போர்க்களத்தில் நிரூபிக்க வேண்டிய நாள்தொலைவில் இல்லை” என்று குருதி பொங்கும் கையை முன்னால் நீட்டி அவரிடம் சூளுரைத்துக் கொண்டிருந்தான் தென்னவன் மாறன்.

திடீரென்று அவன் இருந்தாற் போலிருந்து வாளை உருவியதால் என்னவோ ஏதோ என்ற அருகில் ஓடி வந்திருந்த மல்லன் இப்போது அவர்கள் உரையாடலை நன்றாகவே கேட்க முடிந்தது.

“பகைவனைக் கருவறுத்து நிர்மூலமாக்கும் கனலை உள்ளேயே வளர்த்து வருகிற எந்தச் சாதுரியமுள்ளவனும் அந்தக் கனலின் வேர்வையைக்கூடத் தன் புற உடலில் தெரியவிடக் கூடாது. காலம் கணிகிறவரை நாம் எதற்காக வேர்க்கிறோம் என்பதைக்கூட நம் எதிரிகள் அறியலாகாது. நீயோ இரத்தத்தையே கீறிக் காண்பிக்கிறாய்.”

“உங்களிடம் தான் அதைக் காண்பிக்கிறேன். எதிரியிடமில்லை...”

“ஓர் எதிரியைச் சந்திக்கும்போதும் இதே உணர்ச்சி வேகம் உனக்கு வரமுடியாதென்பது என்ன உறுதி? நீ மான்கள் அஞ்சி ஒடும் புலித்தோல் அங்கியைத் தரித்திருக்கிறாய்! மனிதர்கள் ஐயுறவு கொள்ளும்படி வாளை உருவிக் காட்டுகிறாய். இதுவே உன்னைக் களப்பிரர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும். தென்னவன் சிறுமலையில் ஒருவன் புலித்தோல் அங்கியணிவது இயல்பு. இங்கே இந்த மருத நிலத்து ஊரிலும், நாகரிகமான கோநகரிலும் இதை மருண்டு போய்த்தான் பார்ப்பார்கள். நீ பெரிய வீரன் என்பதிலோ, உடல் வலிமையுள்ள பலவான் என்பதிலோ நான் கருத்து வேறுபடவில்லை. ஆனால், உன்னுடைய உரத்த குரலும், வஞ்சகமில்லாமல் உடனே விருப்பு வெறுப்புக்களையும், கோபதாபங்களையும் காட்டிவிடும் வெள்ளைத் தன்மையுமே உன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்றுதான் கலங்குகிறேன்.”

தென்னவன் மாறன் இதற்கு மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. குனிந்த தலைநிமிராமல் பெரியவரின் எதிரே நின்றான் அவன். எதிரே அவன் நிற்பதையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார் பெரியவர்.

அவ்வாறு நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்த பின்பு கூறலானார்:

“நீ சில நாட்களுக்கு இங்கேயே நம்முடைய திருமோகூர்ப் பெரிய காராளரோடு தங்கியிரு! நான் மீண்டும் உன்னைக் கூப்பிட்டுச் சொல்லுகிறவரை தென்னவன் சிறுமலைக்கு நீ திரும்ப வேண்டாம்! கோநகருக்குள் போகவே கூடாது.”

“உங்கள் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று கூறித் தென்னவன் மாறன் தலை வணங்கி விடை பெற இருந்த போது தொலைவில் பெரிய காராளர் பரபரப்பாக வருவது தெரிந்தது.

அங்கிருந்த மூவருமே அவருடைய எதிர்பாராத வருகையால் கவரப்பட்டார்கள். காராளர் அப்போது தன்னைத் தேடிவருகிற காரியம் புதிதாக வந்திருக்கும் தென்னவன் மாறன் முன்னிலையில் வெளிப்பட வேண்டாம் என்று கருதிய மதுராபதி வித்தகர், “மல்லா இவனை அழைத்துக் கொண்டு நீ காராளர் திரு மாளிகைக்குப் போ! காராளர் என்னிடம் பேசிவிட்டுச் சிறிது நேரத்தில் அங்கு வந்து உங்களோடு சேர்ந்து கொள்வார்” என்று சொல்லி அவர்களிருவரையும் அப்போது அங்கிருந்து மெல்லத் தவிர்த்து அனுப்பினார்.

அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்த வேளை மேற்கு வானம் பொன்மேகங்களாற் பொலியத் தொடங்கியிருந்தது. பெரியவரைத் தேடி வந்திருந்த காராளர் வழியில் தன் எதிரே திரும்பிக் கொண்டிருந்த மல்லனையும், தென்னவன் மாறனையும், “நீங்கள் இருவரும் சிறிது தொலைவு போவதற்குள் நான் பின்னாலேயே வந்து விடுவேன்” என்ற சொற்களுடன் சந்தித்து விடைகொடுத்து அனுப்பினார்.

அவர்களும் மேலே நடந்தார்கள். காராளர் அருகே வந்ததும் பெரியவருக்கு எதிரே தயங்கி நின்றார்.

“என்ன நடந்தது?”

“நேற்றிரவும் இன்று காலையிலும் இரண்டு ஒற்றர்கள் பிடிபட்டதன் காரணமாக வெள்ளியம்பலப் பகுதியிலும் பிற பகுதியிலும் அவிட்ட நாள் விழாவுக்காக வந்திருந்த யாத்திரிகர்களை வெளியேற்றி விட்டு மிகவும் பதற்றமான நிலையில் நண்பகலிலேயே களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விட்டார்களாம்.”

“இரவு உங்கள் செல்வப் பூங்கோதை யாரோ ஒற்றன் வெள்ளியம்பலத்தருகே பிடிபட்டதாகச் சொன்ன போதே நான் இதை எதிர்பார்த்தேன். உபவனத்திலுள்ள நம்மவர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்களா?”

“யானைப் பாகன் அந்துவன் காலைவரை அவர்கள் பாதுகாப்பைப் பற்றி உறுதி கூறியனுப்பியிருக்கிறான். பகலுக்கு மேல்தான் கோட்டை வாயில்கள் அடைக்கப் பட்டிருக்கின்றன.”

“பிடிபட்டிருக்கும் அந்த இருவர் மூலம் நம்மவர்கள் பல்லாயிரக் கணக்கில் யாத்திரிகர்கள் என்ற பெயரில் ஓர் உட் பூசலை எழுப்பும் நோக்குடன் கோ நகருக்குள் வந்திருந்தார்கள் என்ற இரகசியம் வெளிப்படலாம் என்னும் கவலை உங்களுக்கு இருக்கிறதா?”

“அறவே இல்லை. சித்திரவதையே செய்தாலும் நம்மவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கத் துணியவும் மாட்டார்கள்.”

“இப்படி இந்த அவிட்டநாள் விழாவன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஒர் உட்பூசலுக்கு முயலும் நோக்குடன் நம்மவர்கள் ஆயிரக் கணக்கில் அகநகரில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நாம் இளையநம்பியிடம் கூடச் சொல்லி யனுப்பாதது நல்லதுதான்!”

“அழகன் பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் அது தெரிந்திருக்கும்.”

“என் கட்டளைகளை ஒரு மாத்திரை ஒலி கூட மிகையாகவோ, குறைவாகவோ புரிந்து கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்கிறவன் அவன்! அவனிடமிருந்து பிறர் யாரும் அறிந்திருக்க முடியாது.”

“பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா! இது மாலையில் தெரிந்த செய்தி. இரவில் மேலும் தெளிவாகத் தெரியும். அவற்றையும் தெரிந்து கொண்டு நீங்கள் உலாவப் புறப்படு முன் மீண்டும் வருகிறேன்.”

“வரும்போது நீங்கள் மட்டும் தனியாகவே வாருங்கள் காராளரே! என் குறிப்புப் புரியாமல் அந்தத் தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானையும், உங்களோடு கூப்பிட்டுக் கொண்டு வந்து விடாதீர்கள்.”

“உங்கள் குறிப்பு எனக்குத் தெரியும்! நான் தனியாகவே வருவேன் என்பதை நீங்கள் நம்பலாம்” என்று காராளர் பெரியவருக்கு உறுதி கூறிவிட்டுப் புறப்பட்டார்.

மீண்டும் அவர் தன் மாளிகைக்குத் திரும்பியபோது செல்வப் பூங்கோதை, தென்னவன் மாறனுக்கும் மல்லனுக்கும் நெய் மணம் கமழும் தேன்குழல்களைக் கொடுத்து உண்ணச் சொல்லி உபசரித்துக் கொண்டிருந்தாள்.

“இவர் தேன் குழலைக் கடித்துத் தின்னும் ஒலி மதுரை வரை கேட்கும் போலிருக்கிறதே அம்மா!” என்று தென்னவன் மாறனைச் சுட்டிக் காட்டிக் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் காராளர்.

“என்ன செய்வது? களப்பிரர்களை நினைத்துக் கொண்டு தேன்குழல் தின்றால்கூடப் பல்லை நற நற வென்று தான் கடிக்க வேண்டியிருக்கிறது...” என்றான் தென்னவன் மாறன். மல்லனும், செல்வப் பூங்கோதையும், காராளரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
24. மறுமொழி வந்தது

உறங்காமல் கண் விழித்திருந்து அந்த அலங்கார மயமான கணிகை மாளிகையில் இளையநம்பி முதலியவர்கள் காத்திருந்த இரவு அவர்கள் பொறுமையைச் சோதிப்பதாயிருந்தது. நேரம் ஆக ஆகப் புதுப் புதுச் சந்தேகங்கள் தோன்றின. இரவு முடியத் தொடங்கிக் காற்றும் சூழ்நிலையும் குளிர்ச்சி அடைகிற அளவு வைகறையும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அரண்மனைக்கு முத்துப் பல்லக்கிலே சென்ற கணிகை இரத்தினமாலையும் திரும்பவில்லை. கோட்டைவாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதனால் கணிகை மாளிகைக்கு வந்து சேரக்கூடும் என்று அழகன் பெருமாள் அதுமானம் செய்து உரைத்த உபவனத்து நண்பர்களும் அங்கு வந்து சேரவில்லை. இளம்பிள்ளை பயமறியாது என்பதுபோல் ‘அவர்களைத்தேடி நகருக்குள் புறப்படலாம்’ என்றுகூட இளையநம்பி முன் வந்தான். ஆனால் அழகன் பெருமாள்தான் அதற்கு இணங்கவில்லை.

“தெளிவாக முடிகிற நன்மைகளை நீங்களாகக் குழப்பி விடாதீர்கள்” என்று மறுத்தான் அவன்.

“விடிவதற்குள்ளேயே நமக்கு ஒளி பிறக்கும்” என்று மேலும் உறுதியாகவும் பிடிவாதமாகவும் சொன்னான் அவன். இளையநம்பிக்கு அவனுடைய உறுதி வியப்பளிப்பதாக இருந்தது. ஆயினும் அவன் பொறுமையாயிருந்தான்.

அழகன் பெருமாள் நம்பியபடியே நடந்தது. சிறிது, நேரத்தில் சந்தனம் அறைக்கும் அறையில் நிலவறையின் மறுபுறம் இருந்து கல் புரட்டப்படும் ஒலி வரவே குறளன், இளையநம்பி, அழகன் பெருமாள் மூவரும் அங்கே விரைந்தனர்.

சந்தனக்கல் விலகியதும் பிறவியிலேயே சிரிப்பு மாறாத யானைப்பாகன் அந்துவனின் முகம் தெரிந்தது அங்கே. அவன் ஒரே அவசரத்திலும் பரபரப்பிலும் இருந்தான். மேலே படியேறி வராமல் தலையை மட்டும் நீட்டியே அங்கிருந்து விஷயத்தைக் கூறத் தொடங்கினான் அவன்.

“உங்களுக்குச் சில செய்திகளைக் கூறி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே நான் வழக்கமாகத் திருமஞ்சனக் குடத்தோடு வைகைத் துறைக்குப் புறப்படும் நேரத்திற்குச் சில நாழிகைகள் முன்பாகவே இன்று காலையில் புறப்பட்டேன். இன்னும் சில நாட்களுக்கு நீங்கள் யாருமே உபவனத்துக்குத் திரும்ப வேண்டாம். உபவனமும் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பில் இருக்கிறது. திருமருத முன்துறையில் யானையை நிறுத்தி விட்டு உடன் வந்த பாகனிடம் நீராடி வருவதாய்ப் பொய் சொல்லிவிட்டு நீந்தியே உபவனக்கரையில் ஏறிப் பதுங்கிப் பதுங்கி மறைந்து நிலவறையில் நுழைந்து இங்கே ஒடி வருகிறேன். விரைந்து நான் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் மற்றவன் என்னைச் சந்தேகப்படுவான்.”

அவர்களும் அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு உடனே அவனைத் திரும்பிப் போக விட்டு விட்டார்கள். அவனுடைய கடமை உணர்வை எல்லாருமே பாராட்டித் தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டனர். அவனை அங்கே தாமதப் படுத்தும் ஒவ்வொரு கணமும் அவனுயிருக்கு அபாயம் தேடுவதாகும் என்று அவர்களுக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது. யானைப்பாகன் அந்துவன் ஒரு மின்னலைப் போல் வந்து தோன்றித் திரும்பிய பின், “இந்த மாறுபட்ட நிலைமைகளால் இரத்தினமாலை திரும்பவருவது பாதிக்கப் படுமா?” என்று அழகன் பெருமாளைக் கேட்டான் இளையநம்பி.

“நாம் இப்போது கவலைப்பட வேண்டியது உபவனத்திலிருந்து காலையில் நகருக்குள் வந்திருக்கும் நம்முடைய நண்பர்களைப் பற்றியதாக இருக்க வேண்டுமே அன்றி இரத்தினமாலையைப் பற்றியதாக இருக்க வேண்டிய தில்லை!”

“ஏன்?”

“அவள் உறுதியாகவும், பயன்படுகிற வகையிலும் திரும்பி வருவாள் என்பது சர்வ நிச்சயம்” என்று அழகன் பெருமாள் நம்பிக்கையாகத் தெரிவித்தான். ‘சூழ்நிலைகளால் எங்கும் வெளியேறிச் செல்ல முடியாதபடி சில நாட்கள் தானும் பிறரும் அந்தக் கணிகை மாளிகையிலேயே தங்க நேர்ந்திருப்பதால், இரத்தினமாலை உடனே திரும்பினாலும் தான் விரைந்து செய்யப் போவது என்ன?’ என்று எண்ணித் தனக்குத்தானே பொறுமையடைந்தான் இளையநம்பி. அந்த மாளிகைப் பெண்கள் உபசரிப்பதிலும்... விருந்தினரைப் பேணுவதிலும் ஒரு கலையின் மெருகும் நளினமும் பெற்றுத் தேர்ந்தவர்களாக இருந்ததால் அங்கே ஒரு குறையும் தெரியாமல் இருக்க முடிந்தது.

அங்கேயே வைகறை நீராடி முடிந்த இளையநம்பிக்கும் அழகன் பெருமாளுக்கும் பூசிக் கொள்வதற்கு நிறையச் சந்தனம் அறைத்துக் கொடுத்தான் குறளன்.

“சந்தனம் பூசிக் கொள்ளும் மகிழ்ச்சியிலா இப்போது நாம் இருக்கிறோம்?” என்று அதை மறுத்த இளைய நம்பியிடம்

“அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! நம் குறளனால் ஒரு பணியும் செய்யாமல் வாளா இருக்க முடியாது. அவனுடைய சந்தனம் அறைக்கும் பணியை நமக்காக அவன் செய்திருக் கிறான். சந்தனத்தை வாங்கிப் பூசிக் கொள்ளுங்கள். நடக்க இருக்கும் காரியங்களைக்கூட மங்கல நிறைவுடைய தாக்கி விடும் சக்தி பொதிகை மலைச் சந்தனத்துக்கு உண்டு ஐயா!” என்று பரிவோடு கூறினான் அழகன் பெருமாள். மனத்தை அதிற் செலுத்தும் சூழ்நிலை அப்போது இல்லை என்றாலும் அந்தச் சந்தன மணம் மாளிகையையே நிறைத்துக் கொண்டிருந்தது. இளையநம்பி தயங்குவது போலத் தயங்காமல் மார்பிலும், தோள்களிலும் அழகன் பெருமாள் சந்தனத்தை வாரி வாரிப்பூசிக் கொண்டான். அறைத்துக் கொண்டு வந்து தருகிறவன் மனத்தை ஏமாற்ற விரும்பாமல் இளையநம்பியும் சிறிதளவு சந்தனத்தை ஏற்றுப் பூசிக்கொண்டான். குறளனோ தானே முன்வந்து அவனுடைய பொன்நிற முன் கைகளில் சந்தனத்தைப் பூசி விடவே தொடங்கி விட்டான்.

“இந்தச் சந்தனத்தைப் பூசு முன்பே உங்கள் கைகள் இயல்பாகவே மணக்கின்றன ஐயா! இந்தச் சந்தனத்தின் நிறத்திற்கும் உங்கள் மேனி நிறத்திற்கும் நான் வேறுபாடு காண்பது முடியாத காரியமாயிருக்கிறது” - என்றெல்லாம் குறளன் புகழ்ந்த புகழ் வார்த்தைகள இளையநம்பியை நாணப்படச் செய்தன. அழகன் பெருமாளும், இளைய நம்பியும், சந்தனக்கல் இருந்த அறையிலிருந்து மாளிகையின் கூடத்திற்கு வரவும் வெளிப்புற வாயிலில் முத்துப் பல்லக்கு வந்து சேரவும் ஒன்றாயிருந்தது. அழகன் பெருமாள் களிப்போடு கூறினான்:

“பார்த்தீர்களா நம்முடைய புகழ் பெற்ற பொதிகை மலைச் சந்தனத்தைப் பூசிக் கொண்டால், நாம் எதிர்பார்க்கிற மங்கல நிகழ்ச்சிகள் உடனே நடைபெறும் என்று நான் கூறியது எவ்வளவு பொருத்தமாய் நிகழ்கிறது.”

அப்போதுதான் துயிலெழுந்து வந்த மயில் போல் அழகாய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்தாள் இரத்தின மாலை. அவர்கள் தன்னை எதிர்கொள்ளக் கண்டு புன்முறுவல் பூத்து முக மலர்ந்தாள் அவள்.

அழகு மின்னும் இளமூங்கிலாய்த் திரண்ட அவள் தோள்களையும் கைகளையுமே பார்க்கத் தொடங்கியிருந்த இளையநம்பி அந்த உள்ளங்கைகள் பளிங்கு போல் வெண்மையாயிருந்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான். அழகன் பெருமாளுக்கும் ஏமாற்றமாயிருந்தது. சிலம்பொலி குலுங்கத் தென்றல் அசைந்து வருவது போல பணிப்பெண் பின்வர வந்து கொண்டிருந்த அவளை நோக்கி,

“என்ன இது? நீ மறுமொழியோடு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன், இரத்தினமாலை?” என்று வினாவினான் அழகன் பெருமாள்.

முதலில் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறத் தயங்கிய அவள் முகம் எதற்கோ நாணிச் சிவந்தது. சிறிது நேரத்திற்குப் பின்...

“நான் மறுமொழியோடு வரவில்லை என்பதை நீங்களாகவே எப்படி முடிவு செய்தீர்கள் அதற்குள்?” என்று அவள் அவர்கள் இருவரையும் திருப்பிக் கேட்டதும், புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு விழித்தார்கள் அவர்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
25. பாதங்களில் வந்த பதில்

கணிகை இரத்தினமாலை மறுமொழியோடு திரும்பியிருப்பதாகக் கூறினாலும் அவளுடைய உள்ளங்கைகள் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பெறாமல் பளிங்குபோல் வெறுமையாய் வெண்மையாயிருப் பதைக் கண்டு இளைய நம்பியும் அழகன் பெருமாளும் மருண்டனர்.

அவர்கள் இருவரையும் சிறிது நேரம் அப்படித் திகைக்க வைப்பதையே விரும்பியவள் போல் முத்துப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்து எதிரே நின்று இரத்தினமாலை சிரித்துக் கொண்டிருந்தாள். பின்தொடர்ந்து வந்த பணிப் பெண்ணும் அவளருகே நின்று கொண்டிருந்தாள். அழகன்பெருமாள் அவளைக் கேட்டான்:

“இரத்தினமாலை! நேற்று நீ இங்கிருந்து புறப்பட்ட போது இருந்ததைவிட இப்போது நம்மைச் சுற்றிலும் சோதனைகள் அதிகமாகி இருக்கின்றன. நீ திரும்பி வந்து தெரிவிக்கும் மறுமொழிகளாவது அந்தச் சோதனைகளை அகற்றும் என்று எதிர்பார்த்திருந்தோம். நீயும் இப்படி எங்களைச் சோதனை செய்தால் என்ன செய்வது?”

“அங்கே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் கூடச் சோதனைகள் அதிகமாக இருக்கின்றன. நான் நேற்று இரவிலேயே திரும்ப முடியாமற் போனதற்குக் காரணமே அரண்மனைச் சூழ்நிலைதான். நேற்றுப் பகலில் நான் அரண்மனைக்குப் புறப்பட்டபோதே நகரில் பரபரப்பான நிலைமை உருவாகி விட்டது. என்ன நேருமோ என்ற பயத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை உடனே அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள். அரண்மனைக்குள் போகிறவர்கள் வருகிறவர்கள் கடுமையான கண்காணிப்பிற்கு ஆளாகிக் கொண்டிருந்தபோதுதான் அங்கே நானும் போய்ச் சேர்ந்திருந்தேன்.”

“அப்புறம்...? என்ன நடந்தது?”

“என்ன நடக்கும்? இந்த இரத்தினமாலை சென்ற பின்பும் திறக்காத அரண்மனைக் கதவுகள் ஏது? இந்த விழிகளைச் சுழற்றியும் இந்தப் புன்சிரிப்பைக் காண்பித்தும் நான் எங்கும் எதற்கும் தோற்க நேர்ந்ததே இல்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?”

“ஆனால், இப்போது தோற்றுவிட்டு வந்திருக்கிறாய் என்றல்லவா தோன்றுகிறது?”

“அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்! நான் இப்போது முழு வெற்றியில் காலூன்றி நிற்கிறேன்” என்று கூறியபடியே அழகியதொரு கூத்துக்கு அபிநயம் செய்வது போல் அவள் தனது வலது பாதத்தை மேலே தூக்கினாள், என்ன ஆச்சரியம்? கைகளில் இல்லாததை அவள் உள்ளங்காலில் காண முடிந்தது. அப்போது செந்தாமரைப் பூவின் அகஇதழ்போல் வெண்சிவப்பு நிறத்தில் விளங்கிய அந்த உள்ளங்காலில் அவர்களுக்கு வேண்டிய விடை இருந்தது. சித்திரம்போல் கரந்தெழுத்துக்கள் அங்கே இருந்தன. “மூன்று ஆண்மக்களுக்குமுன் வெட்கமில்லாமல் இப்படிக் காலைத் தூக்குகிறாளே இவள்” என்று சிறிதே சினம் அடையத் தொடங்கியிருந்த இளையநம்பியின் கண்களும்கூட இப்போது வியப்பினாலும் மகிழ்ச்சியினாலும் மலர்ந்தன.

முதலில் தூக்கிய வலது பாதத்தை ஊன்றிக் கொண்டு இடது பாதத்தைத் தூக்கி அதிலிருந்த செம்பஞ்சுக் குழம்பு எழுத்துக்களையும் அவர்களுக்குக் காண்பித்தாள் அவள். ‘நான் இப்போது முழு வெற்றியில் கால் ஊன்றி நிற்கிறேன்’ என்று இரத்தினமாலை புன்னகையோடு கூறிய சொற்களின் முழுப் பொருளும் இப்போது அவர்களுக்குத் தெளிவாக விளங்கியது.

இளையநம்பி நன்றி தொனிக்கும் குரலில் அவளை நோக்கிக் கூறினான்: “கைகளில் சுமந்து சென்ற கேள்விகளுக்குக் கால்களில் விடைகள் கிடைத்திருக்கின்றன.”

“ஆம்! இந்த மாறுதலுக்குக் காரணம் இருக்கிறது. நேற்றிரவு நான் அரண்மனையில் தங்கி என்னுடைய கைகளில் இங்கிருந்து சுமந்து சென்ற எழுத்துக்களைக் காட்ட வேண்டியவர்களிடம் காட்டி அவர்கள் அறிந்து கொண்டதும் மறுமொழியை எழுதுவதற்காகக் கைகளைக் கழுவிவிட்டு மீண்டும் நீட்டினேன், அப்போது அங்கே எதிர்பாராத விதமாக அந்தப்புரத்தைச் சேர்ந்த களப்பிர நங்கை ஒருத்தி வந்து சேர்ந்து விட்டாள். வந்ததோடு மட்டுமல்லாமல் அவள் என்னருகே நெருங்கி

“நள்ளிரவுக்குமேல் ஏற்கெனவே அலங்கரித்துக் கொண்டிருந்த அலங்காரங்களை அழித்து விட்டுப் புதிதாகச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கொள்ள என்ன அவசரம் இரத்தினமாலை?” -என்று வினாவி விட்டாள். வினாவிய பின்பு அந்தக் களப்பிரப் பெண் உடனே எங்களை விட்டு அகலவில்லை. ஏதோ எங்களைச் சந்தேகப்படுகிறவள் போல் நெடுநேரம் எங்களோடு தொடர்பாகவும் தொடர்பின்றியும் எதை எதையோ உரையாடிக் கொண்டிருந்தாள். அந்த உரையாடலின் நடுவே, “அடி இரத்தினமாலை! இந்த அரண்மனையில் உன்னால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட தமிழ்ப் பணிப் பெண்கள் அனைவரும் உன்மேல் நிறைய விசுவாசம் வைத்திருக்கிறார்கள். உனக்கு அலங்கரிக்கும் போதும் உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசும்போதும் இவர்கள் அளவற்ற சிரத்தையோடு தோன்றுகிறார்கள். உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு எழுதும்போது மட்டும் உன்மேல் தங்களுக்குள்ள பக்தி விசுவாசத்தையே இவர்கள் எழுத்தாக எழுதுகிறார்களோ என்றுகூட நான் நினைப்பதுண்டு” என்பதாகக் கண்களைச் சுழற்றி என்னைப் பார்த்தபடியே சொன்னாள் அந்தக் களப்பிரப் பெண். நேற்றிரவு மட்டும் அவள் என்னிடம் பழகிய விதம், பேசிய சொற்கள் எல்லாமே சந்தேகப்படத் தக்கதாய் இருப்பது போல் தோன்றியது; அவள் என்னை ஆழம் பார்க்கிறாளோ என்று தயக்கத்தோடு நினைத்துச் சிந்தித்தேன் நான்.”

“அப்படியும் சிந்திக்க வேண்டியதுதான் இரத்தினமாலை! எதிரிகளைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கணத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை, மேலும் தொடர்ந்து கூறலானாள்:

“அந்தக் களப்பிரப் பெண்ணைப் பற்றிச் சந்தேகம் வந்தபின் அவள் கவனத்தை மாற்றுவதற்காக நான் என்ன செய்தேன் தெரியுமா? அவள் கண்காணவே என் கைகளில் எழுதியிருந்த அலங்காரங்களை அழித்தேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்தக் களப்பிரப் பெண் போய்ச் சேர்ந்தாள். அவள் போய்ச் சேர்ந்தபின் நான் அரண்மனையில் தங்கியிருந்த பகுதியின் கதவுகளை நன்றாக உட்புறம் தாழிட்டுக் கொண்டு ஊரடங்கிப் போன அந்த இரவு வேளையில் என் முழு நம்பிக்கைக்குரியவர்களும் என்னாலேயே அந்த அரண்மனையில் தொண்டுழியும் புரிவதற்குச் சேர்க்கப்பட்டவர்களும் ஆகிய பணிப் பெண்களைக் கொண்டு என் உள்ளங்கால்களில் எழுதச் செய்தேன். உள்ளங் கால்கள் ஈரம் புலர்கிறவரை காற்றாட நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்படி உட்கார்ந்து ஆடாமல் அசையாமல் இந்த எழுத்துக்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். உறக்கத்தை இழந்ததனாலும் நீண்ட நேரம் கால்களை ஒரே பக்கமாக நீட்டி அமர்ந்திருந்ததனாலும் கண்கள் எரிகின்றன. முழங்கால் எலும்புப் பூட்டுகளில் வலி தாங்க முடியவில்லை.”

“எங்களுக்கு உதவுவதற்காக உன் நளினப் பொன்னுடல் மிகவும் நலிவடைய நேர்ந்திருக்கிறது பெண்ணே! இந்த உதவிக்காக நானும், அழகன் பெருமாளும் இன்னும் அழியாமல் எஞ்சியிருக்கும் பாண்டியர் மரபும் உனக்கு எவ்வளவோ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் இரத்தினமாலை!” இளையநம்பி குறுக்கிட்டுப் பேசியபோது, இந்தப் பேச்சில் ஒன்றிற்காக மகிழ்ச்சியும் வேறொன்றிற்காகச் சினமும் கொள்ள வேண்டும் போலிருந்தது இரத்தின மாலைக்கு. நளினப் பொன்னுடல் என்று அந்தக் கம்பீரமான கட்டிளங்காளையின் வார்த்தைகளால் தன் அழகு புகழப்பட்டிருப்பதை அவள் எண்ணிப் பூரித்தாள். அதே சமயத்தில் பாண்டியர் மரபுக்கு ஆதரவான இந்த இயக்கத்தில் நினைவு தெரிந்த நாளிலிருந்து பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசியோடு ஈடுபட்டிருக்கும் தன்னை அந்நியராக வந்த யாரோ ஒரு புதியவருக்கு நன்றி சொல்லி ஒதுக்குவது போல் அவன் ஒதுக்கியது அவளுக்குச் சினம் ஊட்டியது. அந்த நன்றியின் மூலம் இளையநம்பி தன்னை அவமானப் படுத்தி விட்டது போல் உணர்ந்தாள் அவள். அழகிய பொன் நிறக் கைகளும், பரந்த மார்பும் கட்டிளமையும், ஆண்மையின் காம்பீர்யம் நிறைந்த முகமுமாக எதிரே நின்று கொண்டிருந்த இளையநம்பியைக் கோபித்துக்கொள்ள அவள் பெண்மை தயங்கினாலும் தன்மானம் வென்றது. இவள் அவனை நோக்கிக் கேட்டாள்:

“நன்றியை எதிர்பாராமல் செயல்படும் கடமைகளை நன்றிகூறி விடுவதன் மூலமாகவும்கூட அவமானப்படுத்த முடியும் என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள் ஐயா!”

“நீ இப்படிச் சொல்லக் கூடாது பெண்ணே! ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று நம் தமிழ்மறையே கூறுகிறது.”

“இளையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்று அதே வேறோர் இடத்தில் கூறியிருப்பது தங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரே காரியத்தில் ஈடுபட்டுப் பழகுகிறவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புனைவதும் புகழ்வதும் சிறுமையாகிவிடும் அல்லவா?”

இரத்தினமாலை இப்படி வினவியதும் இளையநம்பி அதிர்ச்சி அடைந்தான். இதுவரை அவளுடைய மயக்க மூட்டும் உடலழகை மட்டும் கண்டு கொண்டிருந்தவனுக்கு அதையெல்லாம் விட அழகாகவும் நாகரிகமாகவும் அவளுக்கு ஒர் இதயம் இருப்பது இப்போது புரிந்தது. பழகுகிற இருவருக்கு நடுவே கடைப்பிடிக்க வேண்டிய மிக உயர்ந்த நாகரிக நிலையைச் சுட்டிக் காட்டும் ஒரு குறளைக் கூறியதன் மூலம் தன் உள்ளத்தின் பேரழகையும் இப்போது அவனுக்குக் காண்பித்து விட்டாள் இரத்தினமாலை. அவன் இந்த மறுமொழியில் அயர்ந்து போனான். குறளனும், அழகன் பெருமாளும் அவள் பாதங்கள் மூலமாக வந்திருந்த பதிலை எழுத்துக் கூட்டிக் கண்டு பிடித்துத் தன்னிடம் சொல்வதற்கு முன்வந்த பின்பு தான் இளையநம்பி அவளைப் பற்றிய வியப்புக்களில் இருந்து விட்டுபட்டுத் தன் நினைவடைந்து இந்த உலகிற்கு மீண்டுவர முடிந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
26. அபாயச் சூழ்நிலை

கணிகை இரத்தினமாலை தன் கால்களின் வழியே கொண்டு வந்த மறுமொழியும், விடிவதற்கு முன் நிலவறை வழியே அவசர அவசரமாக வந்து யானைப்பாகன் அந்துவன் தெரிவித்து விட்டுச் சென்ற செய்திகளும் சூழ்ந்திருக்கும் அபாயங்களை நன்றாக எடுத்துக் காட்டின. இரத்தின மாலையின் இருந்த வினாக்களுக்குக் கால்களில் கிடைத்திருந்த மறுமொழிகள் ஓரளவு அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பவை யாகத்தான் இருந்தன. விடைகளுக்குப் பதில் எச்சரிக்கைகள் பெரும்பாலும் கிடைத்திருந்தன என்றாலும் அவை பயனுள்ள எச்சரிக்கைகளாகவே இருந்தன.

‘சோனகர் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு இறக்குமதியாகும் குதிரைகள் நிறைந்த கப்பல் கொற்கைத் துறைமுகத்திற்கு எப்போது வந்து சேரும்? அப்படி வந்து இறங்கும் குதிரைகளை எப்படி எப்போது கோநகருக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? கோநகருக்குக் குதிரைகளைக் கொண்டு வரும்போது களப்பிரர்கள் அதற்காகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?’ -ஆகிய வினாக்களைத் தான் இவர்கள் கேட்டிருந்தார்கள்.

‘குதிரைகளைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். கொற்கைத்துறையில் கரை இறங்கிய பின்பும் ஒரு மண்டலக் காலத்துக்கும் அதிகமாக அவற்றை அங்கே கொற்கையின் அருகிலுள்ள மணல் வெளிகளிலே பழக்கி வசப்படுத்தப் போகிறார்கள். அப்படிப் பழக்கி வசப்படுத்திய பின்புதான் அவற்றை கோநகருக்குக் கொண்டுவருவதைப் பற்றியே சிந்திப்பார்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் சிறிது காலம் மிக எச்சரிக்கையாகவும் தலைமறைவாகவும் இருக்கவேண்டியதுதான். ஒற்றர்கள் இருவர் பிடிபட்டதிலிருந்து களப்பிரர்கள் மிகக் கடுமையாகியிருக்கிறார்கள். எங்கும் எதையும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறார்கள்’ - என்பதுதான் மறுமொழியாகக் கிடைத்திருந்தது. ஏறக்குறைய இதையேதான் வேறு வார்த்தைகளில் காலையில் வந்த யானைப்பாகன் அந்துவனும் சொல்லிவிட்டுப் போயிருந்தான். தாங்கள் செய்வதற்கிருந்த காரியங்களையும், இந்த மறுமொழியையும் வைத்துச் சீர்தூக்கிச் சிந்தித்தார்கள் அவர்கள். அழகன் பெருமாள் இந்த எச்சரிக்கையையும் இதற்கு முன்பே கிடைத்திருந்த அந்துவனின் எச்சரிக்கையையும் மிகவும் பொருட்படுத்தினான். இளைய நம்பியோ இந்த எச்சரிக்கைகளைப் பற்றி ஒரளவு அலட்சியம் காண்பித்தான்.

“இந்த ஆண்மையற்ற எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தத் தொடங்கினால் நாம் நெடுங்காலம் இன்னிசையைச் செவிமடுத்துக் கொண்டும் ஆடல் அபிநயங்களை இரசித்துக் கொண்டும் இந்தக் கணிகை மாளிகையிலேயே முடங்கிக் கிடந்து நாட்களைக் கழிக்க வேண்டியதுதான். இன்னும் திரும்பி வந்து சேராத உபவனத்து நண்பர்கள் சிறைப்பட்டு விட்டார்களா, இல்லையா, அவர்கள் நிலை என்ன? என்பதையெல்லாம் கூட அறியவே முடியாது. வீரர்கள் அபாயங்களின் இடையேயும் வெளிப்பட்டு அவற்றை எதிர்கொள்வதுதான் முறை. அலை ஒய்ந்தபின் கடலாட முடியாது. அலை ஒயப் போவதும் இல்லை” என்று கோபம் வெளிப்படையாகத் தெரிகிற குரலிலேயே பேசினான் இளைய நம்பி. அழகன் பெருமாளும் இரத்தினமாலையும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. இளையநம்பி சூழ்நிலையின் அபாயங்களை நன்றாக உணரவில்லை என்றே அவர்கள் கருதினார்கள்.

அழகன் பெருமாள் சாந்தமான குரலிலேயே இளைய நம்பிக்கு மறுமொழி கூறினான்:

“ஐயா! உலகியல் அனுபவம் அதிகமுள்ளவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் சிறிது பொறுமையாகக் கேட்க வேண்டும். அபாயங்களை வெல்லவேண்டும் என்ற ஆசையில் அபாயங்களிலேயே போய்ச் சிக்கிக் கொண்டு விடக்கூடாது. அலை ஒய்ந்து நீராட முடியாதுதான், என்றாலும் நீராடுவதற்காக அலைகளிலே போய்ச் சிக்கிக் கொண்டு அழிந்துவிடக் கூடாது. அந்துவன் மூலமோ, அரண்மனையில் இருக்கும் நம்மைச் சேர்ந்த ஒற்றர்கள் மூலமோ, மீண்டும் நற்குறிப்பு அறிவிக்கப்படுகிறவரை நாம் இந்த மாளிகையில்தான் மறைந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் பல நாளாக முயன்று செய்த எல்லாச் செயல்களும் பாழாகிவிடும். நம்முடைய அந்தரங்கமான பல செய்திகள் களப்பிரர்களுக்குத் தெரிந்து விடும். நிலவறை வழிகள் கண்டு பிடிக்கப்பட்டு விடும். எல்லா நேரங்களிலும் குமுறிக் கொண்டிருப்பது மட்டும் வீரனின் அடையாளமில்லை. சில நேரங்களில் மிகவும் பொறுமையாக இருப்பதும் வீரனின் இலட்சணம் தான்.”

“அழகன் பெருமாள் இலட்சியங்களைக் காட்டிலும் இலட்சணங்களைப் பற்றியே எப்போதும் அதிகம் கவலைப் படுகிறாய் நீ.”

“உண்மைதான் ஐயா! ஒரு முதல் தரமான இலட்சியத்தை மூன்றாந்தரமான இலட்சணங்களால் அவசரப்பட்டுத் தொட என்னால் முடியாது. நான் சிலவற்றில் மிகவும் நிதானமானவன். ஆனால், பல ஆண்டுகளாக இங்கேயே கோநகரில் இருந்து களப்பிரர்களின் போக்கை நன்கு அறிந்திருப்பவன். களப்பிரர்களின் மனப்பான்மையைப் பற்றி அந்தரங்கமாகவும் நம்பிக்கையாகவும் எதை அறிய விரும்பினாலும் பெரியவர் மதுராபதி வித்தகர்கூட அதை அடியேன் மூலம்தான் கேட்டறிவது வழக்கம். அந்த நம்பிக்கை இன்று என்மேலே உங்களுக்கும் வேண்டும்...”

“நீயும் உன் நிதானமும் இங்கு தவிர்க்கப்படமுடியாமல் இருப்பது எனக்குப் புரிகிறது” என்று வேண்டா வெறுப்பாக மறுமொழி கூறினான் இளையநம்பி. அப்போது இரத்தின மாலையும் அழகன் பெருமாளோடு சேர்ந்து கொண்டாள்.

“அரண்மனைப் பெண்களிடமும் அந்தப்புரத்திலும் மிகவும் வேண்டியவள் என்று பெயரெடுத்திருக்கும் என்னிடமே நேற்றிரவு சந்தேகப்பட்டுப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்கள். தந்திரமாகவும், நுண்ணறிவுடனும் கைகளை விடுத்து யாராலும் பார்க்க முடியாதபடி உள்ளங் கால்களில் எழுதி வந்ததால்தான் நான் பிழைத்தேன். இல்லா விட்டால் என் கதியே அதோகதி ஆகியிருக்குமோ என்று பயந்திருந்தேன் நான்.”

“பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம் ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் இங்கே பரிதாபத்துக்குரிய காரியம்” என்று இளையநம்பி உடனே வெட்டியது போற் கூறியதைக் கேட்டு அழகன்பெருமாள் வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒரு கோபத்தில் வெடுக்கென்று இப்படிச் சொல்லி விட்டாலும் அடுத்த கணமே இப்படி ஏன் சொன்னோமென்று இளைய நம்பியே தனக்குள் தன் நாவின் துடுக்கைக் கடிந்து கொண்டான்.

ஆனால், இளையநம்பி கூறியதைக் கேட்டு அழகன் பெருமாள் கோபித்துக் கொண்டதைப் போல் இரத்தினமாலை கோபப்படவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள். கன்னங்கள் சிவந்து கண்களில் நீர் ததும்பும் வரை சிரித்தாள். நடனம் ஆடிவரும் மயில் போல் ஒவ்வோரடியாகப் பாதம் பெயர்த்து நடந்து வந்து அவனெதிரே அவனருகே மூச்சுக் காற்றோடு மூச்சுக் காற்று உராயும் இடைவெளியின் நெருக்கத்தில் நின்று கொண்டாள் அவள். தன்னுடைய மேனியின் மோகன நறுமணங்களை அவன் சுவாசிக்க முடிந்த அண்மையில் நின்று கொண்டு.

“ஐயா, திருக்கானப்பேர் வீரரே! நீங்கள் ஒரு விஷயத்தை முற்றிலும் மாற்றிச் சொல்கிறீர்கள். உங்கள் வாக்கியம், ‘ஆண்கள் செய்ய முடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் சாதித்து கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்றிருக்க வேண்டும். ஏதோ கோபத்தில் வார்த்தைகளை மாற்றிச் சொல்லி விட்டீர்கள்” என்று அவனை நயமாகச் சாடினாள் இரத்தினமாலை. அந்தக் கணிகையின் இந்தச் சொற்கள் மனத்தில் நன்றாக உறைந்து விட்டதன் காரணமாக இளையநம்பி கடுங்கோபமுற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிவிட முற்பட்டபோது, அதுவும் முடியவில்லை. மிகவும் விநயமாக அந்த முயற்சி தடுக்கப்பட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
27. ஊமை நாட்கள்

ஆறாக்கனல்போல் சிறி மேலெழும் அடக்க முடியாத சினத்தோடு வெளியேறுவதற்கு இருந்த இளையநம்பியைக் கைகூப்பி வழி மறித்தாள் இரத்தினமாலை. சற்று முன் அவனுக்குக் கடுமையாக மறுமொழி கூறிச் சாடி அவனைக் குத்திக் காட்டிப் பேசிய போது எவ்வளவுக்கு அவள் பெண் புலியாகக் காட்சியளித்தாளோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது ஒரு பேதையாகி இறைஞ்சி அவனை மன்றாடினாள் அவள்.

“கருணை கூர்ந்து நான் பேசியதில் ஏதாவது பிழையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். இந்த வீட்டிலோ இந்த வீதியிலோ நீங்கள் கோபப்பட்டுப் பயனில்லை. ஆண்களின் கோபமோ, பிடிவாதமோ வெற்றி பெற முடியாத வீதி இது. பெண்கள் புன்னகைகளாலும் பார்வைகளாலும், நிரந்தரமாக வென்று கொண்டிருக்கும் போர்க்களம் இது. ஒருவகைப் பிரியத்தாலும், உரிமையாலும் நான் உங்களிடம் கூறிவிட்ட சில சொற்களைப் பெரிதாக நினைத்து நீங்கள் வைரம் பாராட்டக் கூடாது. உங்கள் அடிமை அழகாகப் பேசி நன்றாக விவாதித்தால் அதில் உங்களுக்குப் பெருமை இல்லையா?”

“தலைவனாக இருப்பவன்தான் யார் யார் தன் அடிமைகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கோ அடிமைகளே தங்கள் தலைவன் யார் என்பதையும் கூட முடிவு செய்கிற அளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்...”

“தலைவன் பெருந்தன்மை உடையவனாக இருந்தால் அடிமைகளும்கூடச் சுதந்திரமாய் இருக்கமுடியுமே!” இந்தச் சொற்களைக் கேட்டு அவளைச் சுட்டெறித்து விடுவதுபோல் ஏறெடுத்துப் பார்த்தான் இளையநம்பி.

அவளை அவனால் வெறுக்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. அவன் வழியின் குறுக்கே அவள் நின்றாள். துணிவாகவும் வாதத் திறமையுடனும் நேருக்கு நேர் நின்று பேசிவிட்டாள் என்பதற்காக ஒருத்தியை வெறுப்பது நியாயமில்லை என்று அவன் மனத்திற்கே புரிந்தாலும் சுளிரென்று அறைந்தாற்போல் அவள் கூறிய வார்த்தைகளின் சூடு இன்னும் ஆறாமல் அவன் செவிகளில் இருக்கத்தான் செய்தது. அதை அவனால் மறக்கவே முடியவில்லை.

அவள் பேசியிருந்த வார்த்தைகள் அவனுடைய நெஞ்சின் மென்மையிலே இன்னும் உறுத்திக் கொண்டிருந்தன. அவள் கண்களின் பார்வையும், சிரிப்பின் நளினமும் அவனைச் சினம் அடையவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அவள் அவன்முன் மண்டியிட்டு மன்றாடத் தொடங்கியிருந்தாள்.

கடைந்தெடுத்துத் திரட்டிய வெண்ணெயாற் செய்தது போன்ற மென்மையும் குளிர்ச்சியும் வாய்ந்த இரத்தின மாலையின் கைவிரல்களைத் தன் பாதங்களின் மேல் உணர்ந்தான் அவன். வாதிடுவதில் இருந்த உறுதி வணங்குவதிலும் இருந்ததைக் கண்டு ஒரு கணம் அவன் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தயங்கினான். தன்னுடைய வார்த்தைகளுக்குப் பதில் வார்த்தைகள் சொல்லி உடனே குத்திக்காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவள் இப்படிப் பேசியிருந்தாலும், இப்படிப் பேசுவதற்கு முன் அவள் தனக்காகச் சாதித்துக் கொண்டு வந்திருந்த சாதனைகளை அவனும் மதித்தே ஆக வேண்டியிருந்தது. சாதனைகள் மறுக்க முடியாமல் இருந்தன.

இறுதியில் வெற்றி பெற்றது அவள்தான். கால்களைப் பற்றிக்கொண்டு, அவனிடம் மன்றாடி அவன் அங்கிருந்து வெளியேற முடியாதபடி தடுத்துவிட்டாள் அவள். ஒரு கணிகையிடம் இருந்தே தீரவேண்டிய திறமைகள் அவளிடம் குறைவின்றி இருப்பதை இப்போது அவனால் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

பிறரை மயக்குவதும் மனத்தை மாற்றுவதும், வசப் படுத்திக் கொள்வதும், ஆண் பிள்ளையின் பிடிவாதங்களை வெல்வதுமே ஒரு கணிகையின் திறமைகளானால் அவை அவளிடமும் இருந்தன.

தன்னை அறியாமலே தான் அவளிடம் மயங்கியிருப்பதும், மாறியிருப்பதும், வசப்பட்டிருப்பதும், பிடிவாதத்தைத் தோற்றிருப்பதும் மெல்ல மெல்ல அவனுக்கே புரியத் தொடங்கியது. ஒரு கணிகையின் மாளிகையில் ஒருநாள் தங்கியதிலேயே இப்படியாகுமானால், இன்னும் நாட்கணக்கில் இங்கே மறைந்து வசிக்க நேரிடுகையில் என்னென்ன ஆகுமோ என்று தயக்கமாக இருந்தது அவனுக்கு அன்று பிற்பகல் வரை இளையநம்பி அழகன் பெருமாளுடனோ, குறளனுடனோ கூடப் பேசவில்லை. அவர்களும் அவனிடம் எதையும் கேட்க வரவில்லை. இரத்தினமாலை மட்டும் அவனை அளவுக்கும் அதிகமாகவே விநயமும் விருப்பமும் தெரிய ஒடியாடி உபசரித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முகமலர்ச்சி யையோ, பாராட்டையோ பெறாத ஒருதலைப் பட்சத்துக்குக் கைக்கிளைப் பிரியமாயிருந்தன அந்த உபசாரங்கள். அந்த கைக்கிளைப் பிரியத்தையே இரு பக்கத்து அன்பும் கலக்கும் பிரியமாக மாற்றலாம் என்ற நம்பிக்கை இரத்தினமாலைக்கு இருப்பதாகத் தோன்றியது. அவள் அயராமல் உபசரித்தாள்.

இதே நிலைமையில் சில தினங்கள் கழிந்தன. எவ்வளவு தான் உபசாரங்கள் இருந்தாலும் சிறை வைக்கப்பட்டு விட்டதுபோல் ஒரு மாளிகையின் உள்ளே இருக்க நேர்ந்தது குறையாகவே தோன்றியது அவனுக்கு.

‘இப்படி முடங்கிக் கிடப்பதற்காகவா திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தேன்? களப்பிரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாண்டிய நாட்டை மீட்டுக் கொள்வதற்குச் செயலாற்ற முடியாமல், யாழிசையையும் அபிநயங்களையும், சந்தன நறுமணத்தையும் அனுபவித்துக் கொண்டு, கூடல் மாநகரின் கணிகையர் வீதியில் ஒர் இல்லத்தில் இப்படி அகப்பட்டுப் போகவா என் தலையில் எழுதியிருக்கிறது? எதற்காக, யாருக்காக பயந்து நான் இங்கே அடைந்து கிடக்கவேண்டும்? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இந்த நாட்டுப் பண்பாடு, சாவை வாழ்வின் முடிவாக ஒப்புக் கொள்வதில்லை. ஒரு வாழ்வின் முடிவுதான் மரணம் என்றால், இன்னொரு வாழ்வின் தொடக்கம்தான் சாவு. உடலும் ஆன்மாவும் சேர்ந்து உலகை அனுபவிப்பது ஒருவித மான வாழ்க்கை என்றால், உடலை இழந்து ஆன்மாவினால் மட்டும் உலகை அனுபவிப்பதும்கூட மற்றொரு வகையாகத் தான் இருக்கவேண்டும் அப்படிப் பட்ட வாழ்வைக் களப்பிரர் கூட்டத்துக்குத் தரவேண்டும். முடியாவிட்டால் நானே அடையவேண்டும்’ என்று எண்ணினான் அவன். நாட்கள் கழியக் கழிய அந்த மாளிகையின் இசை ஒலி சலிப்பூட்டியது. பகலும் இரவும் அர்த்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. அழகன் பெருமாளும் அவனும் பேசுவதற்குப் பொதுவாக எந்த விஷயமும் இல்லை. அவனோடு எதைப் பேசினாலும் அது ஒரு விவாதத்துக்குத் தோற்றுவாயாகவே முடிவது வழக்கமாகி இருந்தது. குறளன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தனத்தை அரைத்துக் குவித்து அந்த மாளிகையையே மணக்கச் செய்து கொண்டிருந்தான். நாட்கள் பேச்சற்ற ஊமைகளாய் இயக்கமற்று, முடம் பட்ட பொழுதுகளை உடையவையாய்க் கழிந்து கொண்டிருந்தன. ஒருநாள் அந்த மாளிகையின் மற்றொரு பகுதியில் அடுக்கியிருந்த தமிழ் ஏட்டுச் சுவடிகளை அவனுக்குக் காண்பித்தாள் இரத்தின மாலை. பழந்தமிழ் இலக்கியங்கள் அடங்கிய அந்தச் சுவடிகளைப் பார்த்ததும் அவனுக்கு நான்மாடக்கூடல் நகரத்தின் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் நினைவு வந்தது. களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும், தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாகரிகமும், தமிழ்ச் சங்கமும் பொலிவுடனோ, புகழுடனோ இராதென்று தானே கணித்துக்கொள்ள முடிந்தாலும் கோநகரிலேயே வாழும் கணிகை இரத்தினமாலையிடம் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளக் கருதி அவளை வினவினான் இளையநம்பி:

“களப்பிரர் ஆட்சியில் தமிழ்ச் சங்கத்தாரும், சங்கமும், புலவர்களும் என்ன ஆனார்கள்? நான் கோநகருக்கு வந்த பின்பு உன்னிடமோ, அழகன் பெருமாளிடமோ சங்கத்தைப் பற்றியும் அதன் புகழ்பெற்ற புலவர்களைப் பற்றியும் இதுவரை இங்கே எதுவுமே கேள்விப்படவில்லை!”

“எதாவது இருந்தால் அல்லவா கேள்விப்படுவதற்கு? கபாடபுரத்திலும், தென் மதுரையிலும் இருந்த புகழ் பெற்ற தமிழ்ச்சங்கங்களை எல்லாம் கடல்கோள் அழித்தது என்றால், இதைக் களப்பிரர் ஆட்சியே அழித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு புலவர்கள் அமர்ந்திருந்த மண்டபங்களில் களப்பிரர்கள் இப்போது தங்கள் குதிரைகளைக் கட்டி இருக்கிறார்கள். ஏடுகளும், சுவடிகளும் குவித்திருந்த இடங்களில் எல்லாம் வாள்களையும் வேல்களையும் குவித்து விட்டார்கள். ஒலைகளில் எழுத்தாணிகள் கீறிய ஒலிகள் கேட்ட இடமெல்லாம் பாலிமொழி இன்று ஒலிக்கத் தொடங்கி விட்டது.”

“ஆயிரங்காலத்து மொழி அழியும்போது அதை ஒட்டி வளர்ந்த எல்லா நாகரிகமும் நலியத்தான் வேண்டும் போலிருக்கிறது.”

“நலிந்தாலும், வளர்ந்தாலும் அது எதிர்காலத்திற்கு வரலாறு ஆகிறது. தமிழ் நாகரிக வரலாற்றில் தங்கள் காலத்தின் அடிமை முத்திரையாகக் களப்பிரர்கள் இருளைப் பூசியிருக்கிறார்கள். ”

“இரத்தினமாலை இருளை எப்போதும் நான் முடிந்த முடிவாக ஒப்புக்கொண்டு ஏற்பதில்லை. ஒவ்வோர் இருட்டுக்குப் பின்பும் ஒரு வைகறை உண்டு என்று திடமாக நம்புகிறவன் நான்.”

“நீங்கள் மட்டு மின்றி எல்லாருமே அப்படித்தான் நம்புகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக வெளியே இரவும் பகலும் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைக் கூட அறிய முடியாமல் நாம் இங்கே முடங்க நேரிட்டதே ? யாரிடமிருந்தும் எந்தச் செய்தியும் தெரியவில்லை. காரி, கழற்சிங்கன், சாத்தன், தேனூர் மாந்திரீகன், செங்கணான் ஆகிய நம் நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரிய வில்லையே?” என்று கேட்டுக்கொண்டே சற்று முன்பு அங்கு வந்திருந்த அழகன் பெருமாள் காரியக் கவலையோடு பேசினான். அந்த மாளிகையில் கழிந்த ஊமை நாட்களில் முதன் முதலாக அழகன் பெருமாள் தன்னிடம் மெளனத்தைக் கலைத்துக்கொண்டு பேசவந்திருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. சில நாட்களாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த மனத்தாங்கல் மாறித் தன்னோடு மேலே என்ன செய்வது என்பது பற்றிப் பேச முன்வரும் நிலைமை இயல்பாக ஏற்பட்டிருப்பதை இளையநம்பி வரவேற்றான் என்றாலும் அழகன் பெருமாளின் வினா அவனுள் கோபமூட்டியது:

“காரி, கழற்சிங்கன் முதலிய நண்பர்களைத் தேடவும், உயிருக்கு ஆபத்தின்றிப் பாதுகாக்கவும் நாம் விரைந்து ஆவன செய்யவேண்டும் என்று கோட்டைக் கதவுகள் அடைக்கப் பட்டபோதிலிருந்து நான் விடாமல் உன்னிடம் வற்புறுத்தி வருகிறேன் அழகன் பெருமாள். அப்போதிருந்து நீதான் அவர்களைப் பற்றிக் கவலைக்கு இடமின்றி மறுமொழி கூறியிருக்கிறாய். ‘அவர்கள் எவ்விதத்திலும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து விடுவார்கள்’ - என்று உறுதியளித்திருக்கிறாய். உன்னுடைய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை எனக்கே வியப்பை அளித்திருக்கிறது. இப்போதோ நீயே என்னிடம் வந்து வேறுவிதமாகக் கேட்கிறாய். நான் என்ன மறுமொழி கூறுவது உனக்கு?’’ -என்று சிறிது சினத்துடனேயே அழகன் பெருமாளைக் கேட்டான் இளையநம்பி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
28. கபால மோட்சம்

அழகன் பெருமாள் மீண்டும் அதையேதான் சொன்னான். ஆனால், கோபப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் சொன்னான்: “காரி, கழற்சிங்கன் முதலிய நால்வரும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பி வந்து சேரக் கூடியவர்கள் என்பதைப் பொறுத்து இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நகரத்தின் பரபரப்பான சூழ்நிலைக்கேற்ப அவர்கள் முயற்சியையும் மீறி ஏதாவது நடந்திருக்குமோ என்றுதான் இப்போது சந்தேகப்படுகிறேன்.”

இளையநம்பி இதற்கு மறுமொழி கூறவில்லை. புன்முறுவல் பூத்தான். சிறிது நேரம் பொறுத்து அழகன் பெருமாளை நோக்கி,

“உன்னிடம் நம்பிக்கையும் இருக்கிறது! சந்தேகமும் இருக்கிறது! இந்த இரண்டில் எது எப்போது இருக்கிறது என்பதைத்தான் உன்னோடு பழகுகிறவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை” என்றான் அவன்.

“சொல்லப் போனால் வாழ்க்கையே இந்த இரண்டிற் கும் நடுவில் எங்கோதான் இருக்கிறது” - என்று அவர்களுடைய உரையாடலில் குறுக்கிட்டாள் இரத்தினமாலை. அவளுடைய இந்த வாக்கியம் தன்னையும் அழகன் பெருமாளையும் ஒன்று சேர்த்து வைக்கும் தொனி உடையதாக இருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. அவன் உள்ளுற நகைத்துக் கொண்டான். மதுராபதி வித்தகரின் பயிற்சிக்குப் பின் ஓர் இளம் கணிகையும் கூடத் தேர்ந்த அரச தந்திரியா யிருப்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. அதேசமயத்தில் முழுவேகத்துடனே குத்திக் காட்டுவது போலவோ சாடுவது போலவோ ஏதாவது பேசினால்தான் அங்கிருந்து கோபித்துக் கொண்டு போய் விடக் கூடும் என்ற எச்சரிக்கையும் அவளுடைய பேச்சுக்களில் இப்போது கலந்திருப்பதை அவன் உணர முடிந்தது. ‘இவ்வளவு பெரிய சாகஸத்துக்குரியவளை உணர்வின் வசப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ள இருந்தோமே’ - என்று இப்போது, அவனுக்கே வருத்தமாகவும் வெட்கமாகவும்கூட இருந்தது. கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட தினத்தன்று அரண்மனைக்குப் போய் விட்டு வந்தபின், இரத்தினமாலை மறுபடி அரண்மனைக்குப் போகாததால் அரண்மனை ஒற்றர்கள் மூலமும் புதிதாக எதுவும் தெரியவில்லை. உபவனத்து முனையிலும், வெள்ளியம்பல முனையிலும் யாரும் புகுந்து புறப்பட்டு வர முடியாததாலோ என்னவோ நிலவறை மூலமாகவும் செய்திகள் தெரியவில்லை. அந்த மாளிகையில் அவர்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. இப்படியே பல நாட்கள் கழிந்தன.

உணவு முடிந்த பின் அன்றிரவு முதல் முறையாக அழகன் பெருமாளும், இளையநம்பியும், இரத்தினமாலையும் மாளிகையின் நடுக்கூடத்தில் அமர்ந்து வட்டு ஆடிக் கொண்டிருந்தனர். குறளன் சந்தனம் அறைக்கும் பகுதிக்கு உறங்கப் போயிருந்தான். விளையாடத் தொடங்கியவர்கள் இரவு நெடு நேரமாகியும் நிறுத்தாமல், ஆடிக் கொண் டிருந்தார்கள். நள்ளிரவுக்கு மேலும் ஆகிவிட்டது. விளையாட்டில் தொடர்ந்து இரத்தின மாலையின் காய்களே வென்று கொண்டிருந்தன.

“ஆட்டத்தின் காய்கள்கூட அழகிய பெண்களிடம் மயங்கி விடுகின்றன” என்றான் இளையநம்பி.

“ஆனால் ஆடுபவர்கள் ஒருபோதும் மயங்கு வதில்லை” என்று உடனே மறுமொழி கூறிவிட்டு, அவனை ஒரக் கண்களால் பார்த்தாள் இரத்தினமாலை. அழகன் பெருமாள் இதைக் கேட்டுச் சிரித்தான். அப்போது யாரோ ஓடிவரும் ஓசை கேட்டு விளையாட்டில் கவனமாயிருந்த மூவருமே திடுக்கிட்டுத் தலைநிமிர்ந்தனர்.

கைகால் பதறி நடுங்கக் குறளன் தூக்கம் கலைந்து சிவந்த கண்களோடு அவர்கள் எதிரே வந்து நின்றான்.

உடனே பேசுவதற்குச் சொற்கள் வராமல் சந்தனம் அறைக்கும் பகுதியைச் சுட்டிக்காட்டிப் பயத்தோடு வார்த்தைகளை அரற்றினான் அவன். உடனே விளையாட்டை நிறுத்தி விட்டு மூவருமே எழுந்து விட்டனர். அவனோடு சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றதும் அங்கே நடுவாக இருந்த சந்தனக் கல்லருகே காதை வைத்து உற்றுக் கேட்டு விட்டு, அழகன் பெருமாளையும் கீழே படுத்தாற்போல் சாய்ந்து அதைக் கேட்கச் சொல்லிச் சைகை செய்தான் குறளன். நால்வரிடையேயும் எதையோ எதிர்பார்க்கும் பேச்சற்ற மெளனம் வந்து சூழ்ந்தது. அழகன் பெருமாள் சந்தனக் கல்லை ஒட்டிச் செவியைச் சாய்த்துக் கேட்டபின் இளையநம்பியையும் அப்படியே கேட்குமாறு குறிப்புக் காட்டினான். அவனும் அவ்வாறே செய்தான். பின்பு இரத்தினமாலையும் கீழ்ப்பக்கமாகக் குனிந்து உற்றுக் கேட்டாள்.

கீழே நிலவறைப் படிகளில் யாரோ நடக்கும் ஒலி கேட்டது. அப்படி நடப்பவர் வேண்டியவராகவோ, வழிதெரிந்தவராகவோ இருந்தால் அடையாளமாகக் கல்லைத் தூக்கிக் கொண்டு மேலே வந்துவிட முடியும். அப்படி வராமல் கீழேயே நடப்பதிலிருந்து அந்நியன் யாரேனும் வந்து விட்டானோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்தது. ஒருவனுடைய காலடி ஓசைதான் கேட்கிறது என்றாலும் பின்னால் வரிசையாகப் பல பூத பயங்கரப் படை வீரர்கள் நிற்கலாமோ என்று அழகன் பெருமாளின் கற்பனையில் ஒரு சந்தேகம் மருட்டியது. பல நாட்களாக அந்த வழியின் மூலம் அங்கே யாரும் வராததாலும், வந்திருப்பவரும் உடனே அடையாளமாக மேல் வாயிலின் மூடுகல்லைத் தூக்காமல் கீழே படிகளிலேயே தடம் தெரியாமல் நடமாடுவதாலும் அவர்கள் சந்தேகப்படுவதற்கும், தயங்குவதற்கும், பயப்படுவதற்கும் நிறைய நியாயமிருந்தது. ஒரு தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டிய நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். வருகிறவன் அந்நியனாயிருந்து அவன் இந்த வழியாக வெளியேறி இப்படி ஒரு வழி இருப்பதைக் கண்டு உயிர் பிழைத்து விடுவானாயின் அப்புறம் தாங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மின்வெட்டும் நேரத்தில் இளையநம்பி ஒரு திட்டமிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில் கருமரத்தில் செய்த இரும்புப் பூண்பிடித்த உலக்கைகள் இரண்டு இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளும்படி அழகன் பெருமாளுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு இன்னொன்றைத் தான் கையில் எடுத்துக் கொண்டு சந்தனக்கல்லை மேற்புறம் இருந்தபடியே மெல்லத் தூக்கி நகர்த்தும்படி குறுளனுக்கும் இரத்தின மாலைக்கும் சைகை செய்தான் இளையநம்பி. அவன் திட்டப்படி வந்திருப்பவனோ, வந்திருப்பவர்களோ எவ்விதமாகவும் உயிர் தப்பமுடியாது. இந்த வழி கண்டுபிடிக்கப்பட்டுக் களப்பிரர்களிடம் அகப்பட்டு விட்டால் தங்களுடைய எல்லா வழிகளும் அடைப்பட்டு விடும் என்ற இறுதிப் பாதுகாப்பு உணர்வின் எல்லையில் அவர்கள் அப்போது மிக எச்சரிக்கையோடு இருந்தார்கள். கீழே இருப்பவன் ஏதோ வலியில் அரற்றுவது போன்ற தீன ஒலிகளுடன் மூச்சு இரைக்க இரைக்க நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர்கள் வெளிப்புறம் கேட்க முடிந்தது. வந்திருப்பவன் நிலவறை வழிக்கு முற்றிலும் புதியவனாக இருந்தாலொழிய இப்படி மூச்சு இரைக்க நேருவது சாத்தியமில்லை என்றும் அநுமானம் செய்தார்கள் மேலே இருந்தவர்கள்.

எதிரெதிர்ப் பக்கங்களில் உலக்கைகளோடு அழகன் பெருமாளும், இளையநம்பியும் நின்று கொண்டபின் மேற்புறம் மூடியிருந்த சந்தனக்கல்லை மெல்ல நகர்த்தி எடுத்தார்கள் குறளனும் இரத்தினமாலையும். ஓரிரு கணங்கள் மயான அமைதி நிலவியது அங்கே. கீழே நிலவறைத் துவாரத்தின் இருளிலிருந்து யாரும் மேலே வரவில்லை. ஆனால் உட்புறம் மூச்சுவிடுகிற ஒலி கோரமாகக் கேட்டது. மேற்பக்கம் கைகளில் உலக்கைகளோடு நின்ற இருவரும் இந்த வழியாக வெளியே நீட்டப்படும் தலைக்குக் கபால மோட்சம் அளிப்பதென்ற உறுதியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோதே கீழ்ப்புறமிருந்து வெண்மையாக ஏதோ மேல் நோக்கி எழுவது தெரிந்தது. வந்திருக்கும் மனிதனின் தலைப்பாகை என்று அதை அவர்கள் நினைத்தனர். ஆனால்... என்ன கோரம் பச்சை மூங்கில் பிரம்பில் ஒரு பயங்கரமான கபாலமே மெல்ல மெல்ல மேலே வந்தது. எதிர்பாராதவிதமாக மேலே கழியில் கோத்த மண்டை ஒடு வரவே முந்திக்கொண்டு அதை அடிப்பதற்கு ஓங்கியிருந்த உலக்கைகள் திடுக்கிட்டுப் பின் வாங்கின. இருட்பிலத்திலிருந்து மேல் நோக்கி வந்து ஆடும் அந்தக் கபாலம் அவர் களை நோக்கிக் கோரமாக நகைப்பது போலிருந்தது. கீழே அந்த மூங்கில் பிரம்பைப் பிடித்திருந்தவனின் கை நடுங்கியதாலோ என்னவோ மேலே அந்தக் கபாலமும் நடுங்கி ஆடியது. பயத்தினால் இரத்தினமாலை இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள். எல்லாருக்கும் மேனி புல்லரித்திருந்தது.

தொடர்ந்து வேறெதுவும் நிகழாமல் அந்தக் கபாலமே கழியில் ஆடிக்கொண்டிருக்கவே அழகன் பெருமாள், “ஒரு தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வா” என்று மெல்லிய குரலில் குறளனிடம் கூறினான். குறளன் உள்ளே விரைந்தான். சில கணங்களில் தீப்பந்தத்தோடு அவன் திரும்பி வந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
29. தேனூர் மாந்திரிகன்

தன் கையிலிருந்த இரும்பு உலக்கையை குறளனிடம் கொடுத்து விட்டுத் தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு நிலவறைக்குள்ளே சிறிது தொலைவு ஒளி தெரியுமாறு அதை கீழே தணித்துப் பிடித்தான் இளைய நம்பி. அதே சமயத்தில் “இந்தக் கபாலத்தையும் கழியையும் பற்றி இழுத்து மேலே எறி” என்று இரத்தினமாலையிடம் கூறினான் அழகன்பெருமாள். அந்தக் கபாலத்தைக் கைகளாலே தொடுவதற்குக் கூசி அருவருப்புக் கொண்டிருந்தாலும் அவள் நடுங்கும் கைகளால் அதைக் கழியோடு பற்றி இழுத்தாள். கீழே அதைப் பிடித்துக் கொண்டிருந்தவன் அழுத்திப் பிடித்துக் கொள்ளாததாலோ அல்லது அவன் கைகள் தளர்ந்திருந்ததாலோ இரத்தினமாலை பற்றி இழுத்தவுடன் அந்தக் கழியும் கபாலமும் மேலே வந்து விழுந்து விட்டன. ஆனால், அதேசமயம் கீழே நிலவறையில் அதைப் பிடித்திருந்தவன் ஈனக்குரலில் வலி எடுத்து முனகுவது போல் கேட்கவே அவர்கள் நால்வருமே ஏக காலத்தில் வியப்படைந்து விட்டனர்.

உடனே அழகன் பெருமாளுக்கு முற்றிலும் புதிய தொரு சந்தேகம் எழுந்தது. அவன் தன் கையிலிருந்த உலக்கையை மூலையில் வைத்து விட்டுத் துணிந்து கீழே நிலவறைக்குள் இறங்கினான். கீழே இறங்கிக் கொண்டு மேற்புறம் இளையநம்பியிடம் இருந்த தீப்பந்தத்தைக் கை நீட்டி வாங்கிப் படிமேல் தளர்ந்து கிடந்தவனைப் பார்த்ததும், “ஐயோ! இதென்ன கோரம்?- உனக்கு இது எப்படி நேர்ந்தது செங்கணான்?” என்று கதறாத குறையாக உருகிய குரலில் வினாவினான் அழகன்பெருமாள். செங்கணானை மேலே தூக்கும் முயற்சிகள் உடன் மேற்கொள்ளப்பட்டன. நிலவறை வழியின் ஏதோ ஒரு முனையிலிருந்து அதைக் கண்டுபிடித்து அந்த மாளிகையைக் கைப்பற்றுவதற்காகக் களப் பிரர்கள் பூத பயங்கரப் படை வீரர்கள் சிலரை அனுப்பியிருக்கக் கூடுமோ என்ற பயத்துடனேயே அந்த விநாடி வரை கவலைப்பட்டுக் காரியங்களைச் செய்த அவர்களுக்கு, இப் போது படவேண்டிய கவலையும் வருத்தமும் வேறாக இருந்தது. தோளிலும் முன் கைகளிலும் இரணகளமாய் இரத் தம் பீறிட்டுப் பாயக் காயமுற்று வந்து சேர்ந்திருந்த தேனூர் மாந்திரீகன் செங்கணானைத் தன் கைகளால் மேலே தூக்கினான் அழகன்பெருமாள். இளையநம்பி மேற்புறமிருந்து கைத்தாங்கலாகச் செங்கணானின் உடலை வாங்கினான்.

“தேனுர் மாந்திரீகனுக்கு என்ன நேர்ந்தது? அவன் ஏன் இப்படிப் படுகாயமுற்று நிலவறை வழியே வந்து இங்கே விழுந்தான்?” என்பதை எல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவன் அப்போது இல்லை. பேசக்கூடச் சக்தியற்றுச் சோர்ந்து போயிருந்தான் அவன். மேலே அவனைத் தூக்கியதும் நிலவறை மூடப்பட்டது.

‘இவ்வளவு ஆபத்தான நிலையிலும் தேனூர் மாந்திரீகன் மூங்கில் கழியில் கபாலத்தைக் கோத்து மேல் நீட்டியது ஏன்?’ என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

உடனே காயங்களுக்கு மருந்திட்டு அவனைத் தேற்றும் முயற்சிகளை அவர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. மருந்தரைப்பதற்கும், தைலம் காய்ச்சிக் கொண்டு வரவும் பறந்தாள் இரத்தினமாலை. அவளுடைய சுறுசுறுப்பு இளையநம்பிக்கு வியப்பை அளித்தது. பெண் ஒர் அழகு என்றால் அவளுக்குக் குறிப்பறியும் தன்மையும் விரைவும் சுறுசுறுப்பும் இன்னோர் அழகு. அழகுக்கு அழகு செய்வதுபோல் இவை இரண்டுமே இரத்தின மாலையிடம் அமைந்திருந்தன.

தவிட்டைத் துணியில் கட்டிக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்துச் செங்கணானின் உடலில் ஒத்தடம் கொடுத்தார்கள் அழகன் பெருமாளும் இளையநம்பியும். செங்கணான் ஏதோ நலிந்த குரலில் சொல்ல முயன்றான். அப்போதிருந்த நிலையில் அவன் பேசுவது நல்லதில்லை என்று கருதிய இளையநம்பி, ‘அமைதியாயிருக்குமாறு’ அவனுக்குச் சைகை செய்தான்.

“இப்போது நீயிருக்கும் தளர்ந்த நிலையில் எதுவும் பேசவேண்டாம். பின்னால் நாங்களே எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்” - என்று அவனிடம் கூறி அவனை அமைதியடையச் செய்தார்கள் அவர்கள். செங்கணான் முற்றிலும் எதிர்பாராதவிதமான இந்த நிலையில் வந்து சேர்ந்ததால் அன்றிரவு அவர்கள் உறக்கத்தை இழந்து அவனுக்குப் பணி விடை செய்ய நேர்ந்தது. அந்தப் பணி விடைகளால் அவர்களில் யாரும் சோர்வடையவில்லை.

‘இந்தப் பணி இழிந்தது. இந்தப் பணி உயர்ந்தது என்று பாராமல் கணிகை இரத்தினமாலை, தன் பொன்னுடலும், பூங்கைகளும் வருந்த அன்றிரவு உழைத்ததைப் பார்த்தபோது இளையநம்பியின் மனம் அவளிடம் கருணைமயமாய் நெகிழ்ந்தது. இளகி இணைந்தது.

கோநகரில் கணிகையரின் சிரிப்புக்கும் அன்புக்கும் கூட விலை உண்டு என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் கண் காணவே என்ன கேள்விப்பட்டிருந்தானோ அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. அந்த மாளிகையில் தான் தங்கியிருந்த நாட்களில் காரணமின்றி அந்த இளம் கணிகையைச் சந்திக்கும் முன்பே, அவள் மேல் தன் மனம் கொண்டிருந்த வெறுப்பு மாறி நம்பிக்கை வரப் பெற்றிருந்தாலும் செங்கணானுக்கு உதவிய இரவில் இளையநம்பிக்கு அவள் மேல் இனம் புரியாத பாசமே உண்டாகியிருந்தது. இவளைச் சந்திக்கும் முன் ஒரு குறும்புக்காக இவளைக் குறைத்துப் பேசிய தன்னுடைய சொற்களைக் கேட்ட போதெல்லாம் அழகன் பெருமாள் ஏன் உடனே சினந்து சீறினான் என்பது இப்போது இளையநம்பிக்கு நன்றாகப் புரிந்தது.

‘ஆண்கள் செய்யவேண்டிய காரியங்களையே இங்கே பெண்கள்தான் செய்தாக வேண்டியிருக்கிறது’ - என்று இரத்தினமாலை தன்னைக் குத்திக்காட்டிப் பேசியபோது கூட அவளைத் தான் புரிந்து கொள்ளாத காரணத்தால், ‘அளவு மீறி அவளிடம் சினம் கொண்டு விட்டோமோ’ -என்று இப்போது எண்ணிக் கொண்டான் அவன். புண்பட்டு வந்திருக்கும் ஒருவனிடம் அவள் காட்டிய பரிவு, அவளிடம் அவன் பரிவு கொள்ளச் செய்வதாயிருந்தது; மிகவும் கனிவு கொள்ள வைப்பதாயிருந்தது.

மறுநாள் விடிந்ததும் தேனூர் மாந்திரீகன் ஒரளவு தெளிவடைந்திருந்தான். அவனிடமிருந்து என்னென்ன செய்திகள் தெரியப் போகின்றன என்று அறியும் ஆவலில் அவர்கள் காத்திருந்தனர். ஓரளவு அவன் பேச முடியும் என்ற அளவிற்கு நிலைமை தேறியிருந்ததை அறிந்து அழகன் பெருமாள் அவனைக் கேட்டான்.

“செங்கணான் உனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? எவரால் ஏற்பட்டது? உன்னோடிருந்த காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகியோர் என்ன ஆனார்கள்?”

“எனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதை அப்புறம் சொல்கிறேன்... காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகிய மூவரும் இங்கே வரவில்லையா? அவர்கள் மூவரும் இங்கே வந்து உங்களோடு பத்திரமாக இருக்கிறார்கள். என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? நாங்கள் நால்வருமாக உபவனத்திலிருந்து கோட்டைக்குள் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று ஆலவாய்ப் பகுதியில் நான் தனியாகப் பிரிந்து சென்றேன். அவர்கள் மூவரும் என்னிடம் விடைபெற்று வெள்ளியம்பலப் பகுதிக்குப் போனார்கள். நண்பகலுக்குச் சிறிது நேரம் இருக்கும்போது இன்னும் சிறிது நாழிகைகளில் கோட்டைக் கதவுகள் மூடப்படலாம் என்பது போன்ற பரபரப்பு ஆலவாய்ப் பகுதியிலேயே தெரிந்தது. யாத்ரீகர்கள் மூட்டை முடிச்சுகளோடு ஓடினர். பூத பயங்கரப் படை அங்கங்கே புகுந்து நெருக்கத் தலைபட்டது. உடனே ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப் போகிறது என்று புரிந்து கொண்டு நான் ஆலவாய்ப் பகுதியிலிருந்தே கிழக்குக் கோட்டை வாயிலுக்கு விரைந்து அகநகரிலிருந்து வெளியேறி விட்டேன். கோட்டைக்கு வெளியேயும் கடுமையான பாது காப்பு இருந்தது. என்னைச் சில பூத பயங்கரப்படை வீரர்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்களோ என்ற ஐயப்பாடு இருந்ததனால் உபவனத்துக்குத் திரும்பாமல் நான் நேரே தேனுருக்குச் சென்றேன்.

தேனூரிலும் என்னை அபாயம் சூழ்ந்திருந்தது. சுற்றுப்புறச் சிற்றுரர்களிலும் கோநகரின் உள்ளேயும் ஆயிரக்கணக்கானவர்கள் களப்பிரர் ஆட்சியை எதிர்த்துத் திடீரென்று கலகம் புரியக்கூடும் என்ற அநுமானத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கடுமையான பாதுகாப்புகளைச் செய்துவிட்டார்கள். நான் தேனூரில் இருந்து பல நாட்கள் வெளியேறவே முடியாமல் போயிற்று. கடைசியில் நேற்று முன் தினம் மாலை தேனுர் மயானத்தின் வன்னி மரத்தருகே தன் மனைவிக்குப் பேய் ஒட்டுவதற்காக ஒரு மறவன் வந்து கூப்பிட்டான். அதுதான் நல்ல சமயமென்று அந்த மறவனுடைய வண்டியில் மறைந்து தப்பி மயானத்துக்குப் போனேன். அன்றிரவு, மயானத்திலிருந்து நான் திரும்பவே இல்லை. ஊருக்குள்ளும் சுற்றுப்புறங்களிலும் களப்பிரர்கள் என் தலையைச் சீவி எறியக் காத்திருப்பது எனக்குப் புரிந்தது. மயானத்தில் இருந்த வன்னி மண்டபத்துப் புதரிலேயே பதுங்கியிருந்தேன். சுடுகாட்டு நரிகள் என் மேல் படை எடுத்தன. பசிச் சோர்வில் நான் சக்தியற்றிருந்தேன். நரிகளை நான் வெல்ல முடியவில்லை. அவற்றின் பசிக்கு நான் இரையாகி முடிந்துவிடாமல் தப்ப முயன்றும் நான் முழு வெற்றி அடையவில்லை.

தேனுாரிலிருந்து முன்னிரவில் புறப்பட்டு வையையின் மறுகரையில் வந்து நீந்தியே இக்கரைக்கு வந்தால் இங்கே உபவனத்திலும் பூத பயங்கரப் படை இருந்தது. பேய் ஒட்டுவதற்குக் கொண்டு வந்திருந்த என் சாதனங்களைப் பயன்படுத்தி மிகத் தந்திரமாக நடுஇரவுக்கு மேல்தான் நிலவரை வழியில் நான் இறங்க முடிந்தது. நரி கடித்த காயங்களின் வலியும், கடும் பசியும் என்னை வாட்டின. ஏறக்குறைய முக்காலும் செத்துவிட்டது போன்ற நிலையில் தான் நிலவறையில் நான் நடக்க முடிந்தது. இங்கே வந்த பின்பும் எனக்கிருந்த பயத்தில் இந்த மாளிகையும் களப்பிரர் வசப்பட்டிருக்குமோ என்று அஞ்சியே முதலில் மூங்கிற் கழியில் என் கைவசமிருந்த கபாலத்தைக் கோத்து நீட்டினேன். குரல் கொடுத்து நிலைமை அறியவும் அஞ்சினேன். நல்ல வேளையாக நீங்கள் என்னைக் காப்பாற்றினர்கள். சுடுகாட்டு நரிகள் என்னைக் கிழித்துப் பாதி கொன்று விட்டன.”

“அட பாவமே நிலைமைகள் இவ்வளவு கெட்டுப் போயிருப்பதால்தான் எங்கிருந்தும் எதுவுமே நமக்குத் தெரியவில்லை. மோகூரில் பெரியவர் எப்படி இருக்கிறாரென்று தேனூரில் ஏதாவது கேள்விப்பட்டாயா நீ?” என்று இளையநம்பி கேட்டபோது ‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் செங்கணான். அவர்கள் யாவரும் கவலையில் ஆழ்ந்தனர். அந்த நிலையில் இரத்தின மாலையே மீண்டும் உதவுவதற்கு முன்வந்தாள். இளைய நம்பியின் கண்கள் கனிவுடன் அவளை நோக்கின. அந்தக் கனிவை அங்கீகரித்துக் கொள்வதுபோல் அவளும் அவனைப் பார்த்தாள். இருவர் கண்களும் குறிப்பினாற் பேசின.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
30. சாகஸப் பேச்சு

“நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்போதும்கூட நான் ஒர் உதவி செய்யமுடியும்!... இன்று மாலையிலேயே இருந்த வளமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபாட்டைச் செய்தபின் உங்களுக்காக யானைப் பாகன் அந்துவனைக் கண்டுவர முடியும்.”

“இப்போதுள்ள நிலையில் அது அபாயகரமானது” - என்றான் அழகன் பெருமாள்.

“நீண்ட நாட்களாக இங்கே வராததிலிருந்து அந்துவனைப் பற்றியே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அவனுக்கும் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்னவோ?” என்று ஐயத்தோடு கூறினான் இளைய நம்பி. அதைக் கேட்டுக் கலீரென்று சிரித்தாள் இரத்தினமாலை. இளையநம்பி உடனே கடுமையாக அவளை நோக்கிக் கேட்டான்:

“ஏன் சிரிக்கிறாய்?”

ஒருகணம் தயங்கியபின் பருகிவிடுவது போலவும், ஆவல் நிறைந்து ததும்பும் தன் விழிகளின் ஓரங்களால் அவனுடைய முகத்தைப் பார்க்க முயன்றபடியே-

“அந்துவனைப் பற்றி நாம் இங்கிருந்து கவலைப் படுவது போல் நம்மைப் பற்றி அவனும் அங்கிருந்து கவலைப்படலாம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது” என்றாள்.

“அப்படியானால் அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கவும் அவசியமில்லை என்கிறாயா நீ?”

“சந்தேகமென்ன? நான் இப்போது சென்றாலும் யானைக் கொட்டாரத்தில் அவனைக் காண முடியும்!”

“தெய்வ வழிபாட்டுக்குப் போகிற நீ என்ன காரணத்தோடு யானைக் கொட்டாரத்தில் போய் அவனிடம் பேசிக் கொண்டு நிற்க முடியும்?”

“அது நான் படவேண்டிய கவலை. என்னால் முடியும் என்பதால்தான் நான் கவலைப்படாமல் போய்த் திரும்ப முன் வருகிறேன். ”

“இப்படி வெடுக்கென்று மறுமொழி கூறும்போதெல்லாம்தான் உன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது இரத்தினமாலை!”

“ஆகா! நிறையக் கோபித்துக் கொள்ளுங்கள். எனக்கும் அது பிடிக்கிறது. திருக்கானப்பேர்க்காரர்கள் முகங்களில் புன்சிரிப்பைவிடக் கோபம்தான் அழகாக இருக்கும் போல் தோன்றுகிறது.”

“அப்படியானால் என் கோபத்திற்கு நீ பயப்பட மாட்டாய்! அல்லவா?”

“ஆண்களின் கோபத்தை எப்படி வெற்றிகொள்வ தென்கிற இரகசியம் எனக்குத் தெரியும்?”

இதைச் சொல்லும்போது அவள் குரலில் தொனித்த இங்கிதமும் முகத்தில் ஒளிர்ந்த நாணமும் கண்களிலும் இதழ்களிலும் தோன்றி மறைந்த முறுவலும் இளைய நம்பிக்குப் புரிந்தன. அவள் ஒரு தேர்ந்த மந்திரவாதியின் சாகஸத்தோடு அவனை மயக்கினாள் அப்போது.

காரணம் புரியாத வெறுப்போடு தொடங்கிய ஒரு நட்பு இப்போது இப்படிக் காரணம் புரியாத மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியிருந்தது. அவன் மாறியிருந்தான். அவள் மாற்றியிருந்தாள். அவன் அவளுடைய இதயத்தின் யாழ் ஒலியை இன்னும் நெருங்கிக் கேட்க முடியாதபடி அழகன் பெருமாளும், குறளனும், மாந்திரீகன் செங்கணானும் அருகில் இருந்தார்கள்.

ஆயிரம் பேர் அருகிலிருந்தாலும், புரிகிறவனுக்கு மட்டும் புரிய வைக்கும் நயமான வார்த்தைகளில் பேசும் சாகஸம் அந்த இளம் கணிகையிடம் இருந்தது. சொற்களைக் கவியின் நயத்தோடு தொடுத்துத் தொடுத்து அனுப்புகிற வித்தையை அவள் கற்றிருப்பது போல் தோன்றியது. மனத்தினால் தங்களுக்கு இடையே ஏதோ புரிவது போலவும் நெருங்குவது போலவும் உணர்ந்தான் இளையநம்பி. ஒரு வெறுப்பின் முடிவு இவ்வளவு பெரிய பிரியமா என்று நினைத்த வேளையில், தான் சுலபமாகத் தோற்றது எப்போது என்று அவனுக்கே புரியவில்லை. தோற்றிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. வென்றவள் மேல் சீறவோ, சினம் கொள்ளவோ முடியாமல் இருந்ததுதான் ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. -

அன்று மாலை அவள் இருந்தவளமுடையார் கோவிலுக்குச் சென்றுவர அவர்கள் எல்லோரும் இணங்கினார்கள். அந்துவனைக் காணவும் அவனிடமிருந்து ஏதாவது தெரிந்தால் அதை அறிந்து வரவும் அவள் சென்று வருவதில் தவறில்லை என்றே இளையநம்பிக்கும் தோன்றியது இப்போது.

இரத்தினமாலை தன் வலது கையில் பூக் குடலையோடு பணிப்பெண் பின்தொடரப் புறப்பட்டபோது- “இருந்த வளமுடைய பெருமாளிடம் இன்று என்ன வரம் வேண்டுவதாக உத்தேசமோ?” - என்று அவளைக் கேட்டான் இளையநம்பி. அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து முக மலர்ந்தாள். பின்பு நிதானமாக மறுமொழி கூறினாள்:

“நேற்றுவரை ‘நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து’ காப்பாற்று என்று வேண்டுவதைத் தவிர வேறு சொந்த வரம் எதற்கும் என்னிடம் விருப்பமின்றி இருந்தது. இன்று அதற்கும் அதிகமாகச் சொந்த முறையிலும் கூட ஒருவரம் வேண்டலாம் என்று தோன்றுகிறது.”

இதன் அர்த்தத்தை உள்ளுற உணர்ந்து அவன் புன்னகை பூத்தான்.

பல்லக்கில் ஏறுவதற்கு முன் அவனை அவள் கேட்டாள்:

“இன்றும் நான் திரும்பி வந்த பின்பு நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்வீர்கள். என் மாளிகையிலிருந்து உடனே வெளியேறி விடுவதாகப் பயமுறுத்துவீர்கள்.”

“உனக்கு ஏன் மீண்டும் அப்படி ஒரு கற்பனை?”

“கற்பனையில்லை - மெய்யாகவே நீங்கள் அப்படிக் கோபித்துக் கொண்டால்தான் நான் பாக்கியம் செய்தவளாவேன்...”

“அது எப்படி?”

“நீங்கள் கோபித்துக் கொண்டால்தான் இன்றும் உங்கள் பாதங்களை தீண்டிப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொள்ள நான் வாய்ப்புப் பெறுவேன். இல்லையானால் உங்களை நான் வேறெப்படி அருகில் நெருங்கவும் வணங்கவும் தீண்டவும் முடியும்?”

அவளுடைய இந்தச் சொற்கள் அவனை மிகவும் நெகிழச் செய்தன. ஒரு புதிய உணர்வின் சிலிர்ப்பில் இந்தச் சமர்ப்பணத்தை எப்படி எந்தச் சொற்களைக் கூறி உபசரித்துத் தனக்குள் ஏற்பதென்ற சிந்தனையில் ஓரிரு கணங்கள் அவனுக்குப் பொருத்தமான பதில்களே கிடைக்கவில்லை.

பல்லக்கில் ஏறுமுன் சாகஸமான சொற்களின் உரிமைக்காரியாகிய அவள் கூடச் சொற்களின் எல்லைக்கு அப்பால் போய் விழிகளில் நீர் மல்க இருப்பதை அவனும் கண்டான். அவளுடைய அந்தக் கண்ணிரைச் சொற்களால் உபசரிப்பதா, உணர்வினால் ஏற்பதா என முடிவு செய்யவே இயலாமல் சில கணங்கள் திகைத்தான் அவன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top