• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீ இட்லியா? இடியாப்பமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
337
Reaction score
800
Location
Universe
“ஏன் இப்படி சலிச்சுக்கிற?” கேட்டுக் கொண்டே இட்லித் தட்டில் மாவை ஊற்றி பாத்திரத்தில் வைத்து மூடிய அம்மாவைக் கோபமாய் முறைத்தாள் பவி.

“அம்மா, என் கஷ்டம் உனக்குச் சொன்னாலும் புரியாது. நீயெல்லாம் பல நூற்றாண்டுக்கு முன் பிறந்திருக்க வேண்டிய ஆளும்மா. உன்னைப் போல பொறுமையா என்னால் இருக்க முடியல. ஒரே போராட்டமா இருக்கு வாழ்க்கை. நான் பொண்ணா பிறந்து படுறபாடு பத்தாதுனு இப்ப எனக்கும் பொண்ணு இருக்கு. அவளும் என்னை மாதிரி நாளைக்கு கஷ்டப்படுவானு நினைக்கும்போது, எதுக்கு பொண்ணு தான் வேணும்னு வேண்டிப் பெத்துக்கிட்டேன்னு இருக்கும்மா.”

“என்னடி? இப்படி பொசுக்குனு சொல்லிட்ட? உன் மக காதில் விழுந்துச்சு நீ தொலைஞ்ச. இப்ப உன் பாரதி எங்க போனாரு? உன் பெண்ணிய பேச்சு எங்க போச்சு? இப்ப மூணு வாரத்துக்கு முந்தி தான் உன் தோழிகளோடு சேர்ந்து மகளிர் தினம் கொண்டாடின. பெண் என்பவள் சக்தினு சொன்ன. அதுக்குள்ள இப்படி புலம்புற?”

“நானே செம கடுப்பில் இருக்கேன்ம்மா. நீயென்னன்னா என்னை வச்சுக் கேலியும் கிண்டலும் பண்ணுற? நக்கல் பண்ணாம போம்மா. மகளிர் தினம் கொண்டாடும் அதே ஊருதான் இன்னைக்கி உலக இட்லி தினமும் கொண்டாடுதும்மா.”

“என்ன பவி, நீயே இப்படி பேசலாமா? உன்னையும் தம்பியையும் ஒரே மாதிரி தானே நானும் அப்பாவும் வளர்த்தோம். ஏதாவது வித்தியாசம் பார்த்தோமா? உனக்கு தேவைனு நினைச்சத படிச்ச. பிடிச்ச வேலைக்குப் போன. நீ விரும்பின ரவியை கல்யாணமும் பண்ணிக்கிட்ட. அருமையா இரண்டு குழந்தைங்க. இப்ப உனக்கு என்ன குறை சொல்லு?” இட்லி மூடியைத் திறந்து, மேல்தட்டு இட்லியை தண்ணீரில் நனைத்த ஆள்காட்டி விரலால் குத்தி வெந்து விட்டதா எனப் பதம் பார்த்தார் அம்மா.

“ஏன் கேட்க மாட்ட? நீ வீட்டில் இருக்கம்மா. நான் வேலைக்குப் போறேன். நீ தனியா அப்பா கூட இருக்கம்மா. நான் கூட்டுக் குடும்பத்தில் இருக்கேன். அப்ப என் கஷ்டம் உனக்கு புரியாதும்மா. நீ சுடுற இட்லிக்கு காட்டுற அக்கறையைக் கூட நீ பெத்த பொண்ணு எனக்கு காட்ட மாட்டேங்கிறம்மா. உங்கிட்ட புலம்புறேன் பாரு. என்னைச் சொல்லனும்.”

“எனக்கு நீயும் இட்லி மாதிரி இருந்தாதான் சந்தோசம் பவி.”

“என்னம்மா என்னை இட்லி மாதிரி இருக்க சொல்லுற? இப்பவே என்னை எல்லாரும் பிச்சுத் திங்காத குறை தான். இதுல இட்லியா ஆவியில் வேகச் சொல்றியேம்மா!?!”

“இப்ப நீ இடியாப்பம் மாதிரி இருக்க பவி. அதான் உனக்கு எல்லாமே சிக்கலா இருக்கு. நீ இட்லி மாதிரி மாறிட்டா, உங்கஷ்டம் நீ சொல்லாமலேயே ரவிக்கு புரிஞ்சிடும்.”

“இன்னைக்கி இட்லி தினம் என்பதால் இட்லியை உசத்தி பேசுனுமா என்ன? ஏம்மா இப்படி? இடியாப்பம் இட்லினு என்னை இப்படிக் குழப்புற?” அழும் குரலில் சொன்னாள் பவி.

“சரி… பொறுமையா கேளு பவி. அதுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணியக் குடி” என்று சொல்லி ஒரு குவளைத் தண்ணீரை பவியிடம் தந்தார் அம்மா.

“பவி! இட்லி, இடியாப்பம், இரண்டையும் அரிசிமாவில் செய்து ஆவியில் தான் வேக வைக்கிறோம். பவி, இட்லிக்கும் இடியாப்பத்துக்கும் இருக்கிற வித்தியாசத்தைச் சொல்லு பார்க்கலாம்.”

“இடியாப்பத்திற்கு இடிச்ச அரிசிமாவை சுலபமா பிசைஞ்சு கஷ்டப்பட்டு பிழியனும். இட்லிக்கு 5-6 மணி நேரம் ஊறவச்சு பக்குவமா ஆட்டி, புளிக்க வச்சதுக்கப்புறம் இட்லி தட்டில் ஊத்தனும்.”

அம்மா, வெந்த இட்லியை எடுத்து வேறு சூடு தாங்கும் பாத்திரத்திற்கு மாற்றினார். கை பழகிய வேலையைத் தானேச் செய்ய, அம்மா தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“சரிதான். முக்கியமான வித்தியாசம் உனக்கு இன்னும் பிடிபடலையே பவி.”

“என்னம்மா சொல்லுற?”

“ம்ம்ம்… உளுந்து. அதை மறந்துட்டியே பவி. பெண் அரிசி. ஆண் உளுந்து. இட்லிக்கு நாலு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து போடுவோம். அரிசி படும் அத்தனை கஷ்டத்தையும் உளுந்தும் படும். ஆனால் அரிசியின் பங்கு அதிகமா இருந்தா தான் இட்லிக்கு நல்லது. அது மாதிரி பெண்ணின் பங்கு அதிகமா இருந்தா தான் குடும்பத்துக்கு நல்லது.” என்று சொல்லிக் கொண்டே இட்லித் தட்டைக் கையோடு கழுவ ஆரம்பித்த அம்மாவிற்கு உதவிக்கொண்டே யோசிக்க தொடங்கினாள் பவி.

“பொண்ணுனு சொல்லி, தனியா அரிசிமாவா இருக்காத பவி. பிசையும் போது சுலபமா இருக்கும். ஆனால் இடியாப்பமாக உன்னைக் குடும்பத்துக்குப் பிழியும் போது நீ வெந்து தனியாவே கஷ்டப்படுவ. ஆனால் இட்லிக்கு எடுக்கும் அரிசி, உளுந்து இரண்டும் ஒண்ணா சேர்ந்து ஊறும், அரைபடும், வேகும். சாம்பார், தேங்காய் சட்னி, காரச் சட்னி, மீன் குழம்பு, தயிர், சக்கரை, நெய், இப்படி பல விதமான குடும்ப உறுப்பினர்கள் இட்லியை பிச்சு அவங்க சுவைக்கு ஏத்த மாதிரி மொத்தமா மாத்தும் போது அரிசி படும் கஷ்டநஷ்டம் உளுந்துக்கும் புரியுமில்ல? இப்ப சொல்லு! நீ இடியாப்பமா? இல்ல இட்லியா?”

“நீ சொல்றது கேட்க நல்லாத்தாம்மா இருக்கு. ஆனால், இடியாப்பமா இருந்தாலும், இட்லியா இருந்தாலும் பெண் தான் அதிகம் கஷ்டப்படனும் போல?”

“எல்லாத்தையும் இப்படி அளந்து பார்க்காத பவி. இட்லியின் சுவை நமக்குச் சலிக்கும் போது, உளுந்த மட்டுமே வச்சு உளுந்தங்களியும் கிண்டுவோம் தானே. ஒவ்வொரு நாளும் தாளிக்கும் போது உளுந்தும் தனியா எண்ணெயில் வறுபடத் தானே செய்யுது? இப்படி சில நேரத்தில் உளுந்து தனியா வறுபடும். அரிசிக்கானது அரிசிக்கு. உளுந்துக்கானது உளுந்துக்கு. அரிசியும் உளுந்தும் சேர்ந்து இட்லிக்கு சுவையும் ஆரோக்கியமும் சேர்த்து தரமாதிரி, நீ எங்கெல்லாம் உனக்கு உதவி தேவைனு நினைக்கிறயோ அங்கெல்லாம் ரவியையும் உங்கூடக் கூட்டுச் சேர்த்துக்கோ. ரவிக்கும் நீ சொல்லாமலே உங்கஷ்டம் புரியும்.”

இப்படிச் சொன்ன அம்மாவை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தாள் பவி. குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய்ச் சட்டினியை அரைத்தார் அம்மா.

“என் அம்மான்னா, அம்மா தான். இட்லியில கூட எப்படிம்மா இப்படித் தத்துவம் சொல்லி அசத்துற?”

“பவி, உனக்கு தெரியாத எதையும் நான் சொல்லல. எனக்கு தெரிந்ததை உன் தடுமாறிய மனம் திடமாகச் சொன்னேன். நாளைக்கி, நீ உன் பொண்ணுக்கும் பையனுக்கும் அவங்களுக்கு புரிய மாதிரி சொல்லுவ. சாப்பிடும் நேரமாயிடுச்சு. தோட்டத்தில் விளையாடுற குழந்தைகளை கை கால் கழுவி சாப்பிடக் கூப்பிட்டு வா பவி.”

“அம்மா… எனக்கும் இட்லி எடுத்து வைம்மா. எனக்குக் காரச் சட்னி வேணும்”

“உனக்கு தான் இட்லி பிடிக்காதே பவி? தோசை தரட்டுமா?” வெளியே சென்ற பவியைப் பார்த்து அக்கறையாய் கேட்டார் அம்மா.

“நான் இடியாப்பத்திலிருந்து இட்லிக்கு மாறிட்டேன்ம்மா” என்று அங்கிருந்தே சத்தமட்ட பவியின் பதிலில் அம்மா புன்னகைத்தார்.

- அனிராஜி / AniRaje
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
இட்லிக்குள்ள இத்தனை
விசயம் வாழ்க்கை பத்தி
இருக்கோ
சூப்பர், 🤔👌😛
 




AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
337
Reaction score
800
Location
Universe
இந்தச் சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டு அச்சில் தேர்வான 20 சிறுகதைகளுடன் வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கதை சிறப்புப் பரிசையும், Rs. 500 மதிப்புள்ள புத்தகங்களை சென்ற ஆண்டு ஜூன் 2021 இல் பெற்று தந்தது! இந்த ஆண்டு அச்சில் வெளிவருகிறது!
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top