• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி - 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சித்தார்த்தின் அன்னை உயிரோடு தான் இருக்கிறார் எனத் தெரிந்த சாஸ்வதா, “என்ன தாத்தா சொல்றீங்க... அவங்க உயிரோடு தான் இருக்காங்களா?” என அதிர்ந்து போய்க் கேட்டாள்.
ஏனெனில் இங்கு வந்த பின், கணவன் தன்னிடம் அவன் அன்னையைப் பற்றி, இலைமறை காயாகக் கூட அவன் சொன்னது இல்லை. ஏன் அவனின் இளம் பிராயம் பற்றி, பேச கூட அவன் விரும்பியதில்லை.
தன்னிடம் அவன் ஒட்டுதலாய் இருந்த போது கூட, பாவம் தாய் தந்தை இல்லாது, பணம் இருந்தும் அனாதரவாய், அன்புக்கு ஏங்கும் சிறுவனாய் இருந்திருக்கிறான் தன் கணவன், அதனால் தான், அவன் தன் சிறுவயது காலத்தைப் பற்றி நினைக்கக் கூட விரும்பியதில்லை போல என எண்ணியிருந்தாள்.
ஆனால், அவளின் எண்ணத்தைப் பொய்யாக்குவது போல், அவனின் அன்னை இருக்கிறார் என வாசன் சொன்னதும் அதிர்ந்து தான் போனாள். “இங்க வா மா... இப்படி உட்காரு... சொல்றேன்” என மெத்திருக்கையில் அவளை அமரும் படி சொல்லி விட்டு, சித்தார்த்தின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
வாசன் இங்கு வந்து தொழில் செய்து, சம்பாதித்துக் கொண்டிருந்தாலும், அவரும், அவரது மனைவி தாமரையும் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வந்தார்கள். ஏனெனில் அவருக்கிருந்த ஒரே மகனான ராமகிருஷ்ணன் தலையெடுத்து பொறுப்பேற்று, சிறப்பாய் செயல்படவும், வாசனும் திருப்தியுற நிம்மதியாய் இருந்தார்.
அதனால், முன் போல் மாதத்திற்கு ஒரு முறை தமிழ் நாட்டிற்குச் செல்லாமல், இப்போது அங்கேயே தங்கிக் கொண்டார். எப்போதேனும் தொழிலதிபர்களின் கூட்டத்திற்கு, அலுவலகக் கூட்டத்திற்கு மட்டும் வருபவர், அப்படியே இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்வார். இங்கும், அவருக்கு ஒரு வீடு இருந்தது. அதில் ராம் மட்டும் இருந்து கொண்டான்.
ராம் தனியாய் இருப்பதால், அவனுக்குப் பெண் பார்த்து, திருமணம் முடிக்க வேண்டும் எனத் தன் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, வாசன் அது சம்பந்தமாய் முயற்சியை மேற்கொண்டார். அப்போது விஷயம் கேள்விப்பட்ட அவரின் தொழில் முறை நண்பரும் மற்றும் அவர்கள் கம்பெனியின் பங்கீட்டாளருமான அலுவாலியா தனது மகள் விசாலிக்கு ராமை திருமணம் முடிக்க ஆசைப்பட்டு, வாசனிடமும் தன் விருப்பத்தை வெளியிட்டார்.
வாசனோ தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், இது அவர்கள் பிள்ளைகளின் வாழ்வு, அவர்களின் மனதிற்குப் பிடித்திருந்தால் சரி எனத் தன் முடிவை சொல்லிவிட்டார். அலுவாலியா அந்தக் காலத்திலேயே தமிழ் பெண்ணைக் காதலித்துத் திருமணம் முடித்தவர், அதனால் அவருக்கும் அவர் மனைவிக்கும் தங்கள் மகளை ராமுக்கு தர மிகுந்த விருப்பம்.
பின் பெரியோர்களின் விருப்பபடி, இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட, வாரக் கடைசியில் பூங்காவில் சந்திப்பதும், வீட்டுத் தொலைப்பேசியில் பேசிக் கொள்வதுமாய் நாட்கள் பறந்து திருமண நாளை எட்டியது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும், மணமக்களின் அழகிலும், ஜோடி பொருத்தத்திலும் அசந்து தான் போனார்கள்.
ஆம், ராமும் சரி, விசாலியும் சரி நிறத்திலும், அழகிலும் நிகராய் இருந்தார்கள். முதல் மூன்று வருடம், இருவருக்கும் திருப்திகரமான மணவாழ்க்கை, அவர்களின் சந்தோஷத்தை கூடுதலாக்க சித்தார்த்தின் வரவு என நன்றாகவே வாழ்ந்தார்கள்.
அதன் பின், தொழிலும் அபரிதமான வளர்ச்சி அடைந்து, வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்யும் அளவு சிறப்பாய் வளர்ந்திருந்தது. எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது, ராமின் இன்னொரு முகம் விசாலிக்கு தெரியும் வரை...
ஆம், வாசன் தனது கடவுளான ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியே பிறந்ததாய் எண்ணி, தன் மகனுக்கு ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டார். ஆனால், சிறு வயதிலேயே சாதித்த வெற்றியும், அதன் மூலம் வந்த பணம், புகழ் என்ற போதையில் சற்று தாரளமாகவே வாழ்க்கையை அனுபவித்தான் ராம். காணாததற்குப் பெற்றோர் இல்லாத வீடும், அவனுக்கு வசதியாய் போயிற்று.
தூங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு வருபவன், மீதி நேரம் எல்லாம், தொழில், அலுவலகம், இரவானால் பார் என இருந்தவன், அதற்கு மேலும் கெட்ட சகவாசங்களைப் பழகியிருந்தான். ஆனால் இது எல்லாம், பெற்றோருக்கு தெரியா வண்ணம் பார்த்துக் கொண்டான்.
திருமணம் முடிந்த புதிதில் அடக்கி வாசித்தவன், பின் சிறிது சிறிதாய் மீண்டும் தொடர ஆரம்பித்தான். அதுவும் மேலை நாடுகளுக்குச் செல்லும் போது, மேலும் அங்கு இருக்கும் இரவு நேர பொழுது போக்கு அம்சங்கள் அவனை வெகுவாய் கவர்ந்திழுக்க, அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தொழில் சம்மந்தமாய்ச் செல்வதாய்க் கூறி விட்டு, சுற்றுலா பயணமாய்ச் சென்று வந்தான்.
இதற்கிடையே, சித்தார்த்தை பள்ளியில் சேர்க்கும் வயது வரவும், அவனை நல்ல பள்ளியாய்... சிறந்த கான்வென்டில் சேர்த்து விட்டனர். மகன் பள்ளி செல்லவும், கணவனும் வேலைக்குச் சென்ற பின் தனிமையில் இருந்த விசாலி சில மகளிர் அமைப்பில் சேர்ந்து பொழுதைப் போக்கினாள்.
தன் விஷயம் தெரியாமல், பெற்றோர்களைச் சாமர்த்தியமாய்ச் சமாளித்தது போல் அவ்வளவாய் வெளியே வராத மனைவியையும் சாமாளித்து வந்தான் ராம். ஆனால், எப்போது விசாலி வீட்டில் இருந்து, மகளிர் அமைப்பு, அதன் மூலம் சிற்சில சேவை அமைப்புகள், பொதுநல சேவை என ஊரை சுற்றினாளோ, சிறிது சிறிதாய் ராமை பற்றி, அவனின் உண்மையான முகம் அவளுக்குத் தெரிய ஆரம்பித்தது.
இருந்தும் பொறுமையாய், இதெல்லாம் திருமணத்திற்கு முன்பு செய்திருக்கிறார், ஆனால் இப்போது அவரைத் தன் அன்பால் திருத்தி விடலாம் என எண்ணி, அவனிடமே நேரிடையாய் கேட்க, அவனும் நல்ல பிள்ளையாய் எல்லாம் முன்பு செய்தது தான் எனச் சத்தியமே செய்தான்.
பாவம் விசாலியும் நம்பினாள், ஆனால் இப்போதெல்லாம் ராமின் கெட்ட பழக்கங்கள் எல்லாம் மேலை நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணத்தின் போது தான் என அவளுக்குத் தெரியவில்லை.
ஒரு நாள், விசாலியின் தந்தைக்கு உடம்பு முடியாமல் போக, அதற்காக வெளிநாடு சென்ற கணவனை அவசரமாய் அழைத்தாள்.
அந்தப் பக்கமிருந்து ஒரு வெளிநாட்டு பெண்ணின் குரல் கேட்க, அவளோ “ராம் எங்கே?” என அவள் வினவ, அந்தப் பெண்ணோ, அதற்கு அவன் உறங்குவதாகவும், தான் அவனின் மனைவி தான் என்றும், என்ன விஷயம் என்றாலும் தன்னிடம் கூறும்படியும், அவன் விழித்ததும் தான் கூறி விடுவதாய்க் கூறினாள்.
அதைக் கேட்டதும், கணவனின் திருட்டுதனம் தெரிந்து விட, அதிர்ந்து தான் போனாள் விசாலி. ஆனால் ராமோ துளி கூடப் பயப்படவும் இல்லை, வருத்தப்படவும் இல்லை. “நான் இப்படித் தான், என்னை அட்ஜஸ்ட் செய்து கொள்” என்ற பாவனையில் இருந்தான்.
இதற்கிடையே விசாலியின் தந்தை இறந்து விட, கணவனின் துர்நடத்தையும், தனிமையும் சேர்ந்து அவள் மனதை வாட்டிய சமயம் தான், விஷ்ணு வர்தன் என்ற நாட்டிய கலைஞன், ஒரு விழா மூலம் விசாலிக்கு அறிமுகமானான்.
பின் அந்த அறிமுகத்தின் தொடர்ச்சியாய், ஒரு நாள் “நீங்க ஏன் நாட்டியம் கத்துக்கக் கூடாது? உங்க முகபாவத்துக்கு நாட்டியம் நல்லா அழகா... வரும்” எனக் கேட்டான் விஷ்ணு.
“ம்... அதெல்லாம் முந்தி கற்றுக்கிட்டேன்... இப்ப விட்டு போச்சு... ஆனாலும் இப்போ போய் நாட்டியமா? நானா?... அதுவும் இப்ப ஒரு குழந்தை பெற்றதுக்கு அப்புறமா?” என வினவினாள் விசாலி.
“சபாஷ்... அப்போ... உங்களுக்கு இன்னும் நல்லா வருமே நாட்டியம்...” எனச் சொன்னவன், மேலும் “ஏன் கற்றுக்கக் கூடாது? நாட்டியமோ கல்வியோ, ஏன் எந்தக் கலையா இருந்தாலும், வயசு ஒரு தடையே இல்ல... மனசு தான் முக்கியம்...” எனக் கூறினான்.
அடிக்கடி நாட்டிய நிகழ்ச்சியின் போது சந்திப்புகள் என மேலும் மேலும் அவர்கள் நட்பு வளர்ந்து, தங்களின் மனவருத்தங்களை, சந்தோஷங்களைப் பரிமாறி, கடைசியில் உரிமையாய், அவனே அவளை நாட்டிய வகுப்பில் சேர்த்தும் விட்டான்.
ஆனாலும், விசாலி விடுமுறைக்கு வரும் சித்தார்த்தை ஒரு தாயாய், நன்றாகத் தான் பார்த்து கொள்வாள். ராமும் சித்தார்த்தின் விடுமுறையின் போது வீட்டிலே தான் இருப்பான். ரொம்ப அவசியம் என்றால் மட்டும் வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்வான்.
விசாலி தன் மகனையும் நாட்டிய வகுப்பிற்கு அழைத்துச் செல்வாள். விஷ்ணுவிற்கும் சித்தார்த்திற்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள். சித்தார்த்தும் அந்தச் சிறு வயதில், தனக்கு வருகிறதோ இல்லையோ தன் அம்மாவோடு சேர்ந்து ஆடுவான். வகுப்பில் ஏழு வயது சிறுவனாய் அவனின் செய்கை எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்.
இப்படி ஒட்டாத இவர்கள் வாழ்வில் விரிசல் ஏற்படும் நாளும் வந்தது. “எங்கடி போயிட்டு வர? இப்படிக் கண்டவனோடு ஆடுறதுக்குத் தான் உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேனா?” என விஷ்ணுவோடு சேர்ந்து பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து விட்டு வந்தவளை, கேட்டான் ராம்.
எல்லாம் தெரிந்தே கேட்கும் கணவனிடம், பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் அமைதியாய் தன் அறைக்குச் சென்றாள் விசாலி.
அதில் மேலும் கொதித்த ராம், “கேட்டுட்டே இருக்கேன்ல... நீ இப்படித் திரிஞ்சா... இனிமே என் வீட்டுல உனக்கு இடமில்லை.” என்றான்.
தன்னைக் குறை கூறுகிறானே, ஆனால் கணவனாய் இவன் செய்த அநியாயத்தைப் பட்டியலிட்டு, நியாயம் கேட்க அவள் முன் வரவில்லை. தெரியாமல் செய்பவனுக்குத் தான் மன்னிப்பும், திருந்த வாய்ப்பும் வழங்கப்படும். ஆனால் தெரிந்தே செய்பவனுக்கு எதுவும் வழங்க அவள் முன் வரவுமில்லை என்பதை விட அவள் விரும்பவுமில்லை.
அதனால் தன் பக்க நியாயத்தைச் சொல்லி அவனிடம் மன்றாட விருப்பமும் இல்லை. முதலில் நியாயத் தர்மத்தை ஒருவரிடம் கேட்பதை விட, அதை அவரிடம் சொல்வதற்குக் கூடத் தகுதி வேண்டும் என நினைத்தவளாய், அவள் வாயை திறக்கவில்லை. அவளுக்கு இந்த நாட்டிய வாழ்க்கையே தன் தனிமையைப் போக்குவதோடு, மனதிற்கும் இனிமையைத் தருவதால், தன் மீதி வாழ்க்கை தன் மகனோடு நிம்மதியாய் இருந்தால் போதும் என முடிவு செய்தாள்.
அவளும் நல்லது என எண்ணியவளாய் “சரி, விவாகரத்து பத்திரத்துல கையெழுத்துப் போட்டு தந்திடுறேன்... நானும் என் பையனும் இங்க இருந்து போயிடுறோம்” எனத் தன் முடிவை வெளியிட்டாள்.
அவள் அழுது கரைவாள், இல்லை சண்டையிட்டு நியாயம் கேட்பாள் என ராம் எண்ணியிருக்க, இப்படி அவளே தீர்மானமாய் முடிவை வெளியிடுவாள் என அவன் நினைக்கவே இல்லை.
மீண்டும் அவன் அவளை நிறுத்தி வைக்க, “சரி, நானும் விவகாரத்துக்குச் சம்மதிக்கிறேன், ஆனா... என் பையன் என்னோட தான் இருப்பான். நான் அவன விட்டுக் கொடுக்க மாட்டேன்.” எனக் கூறினான்.
“அத கோர்ட் சொல்லட்டும்” என முடிவாய் கூறி விட்டு, தன் அறைக்குச் சென்று கதவடைத்தாள். அப்படியே கதவிலேயே சாய்ந்தவளுக்கு ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
என்ன தான் அழுத்தம் திருத்தமாய் முடிவு செய்து வெளியே தைரியமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், தன் வாழ்க்கை இப்படித் தோல்வியில் முடிந்ததை எண்ணி அவளுக்கு வேதனை மண்ட தான் செய்தது.
ஆனாலும் ஒரு தெளிவோடு தான் இருந்தாள். இனியும் தன் கணவனோடு அவள் வாழ விரும்பவில்லை. ஏன் அந்த ஆசையே அற்றுப் போயிற்று. என்று தன்னை விட்டு, வேறு ஒருத்தியோடு குடும்பம் நடத்தினானோ அதோடு அவனுடனான தன் திருமணப் பந்தம் அறுந்து விட்டதாகவே எண்ணினாள்.
இவர்கள் விவகாரம் அறிந்து, வாசனும், அவர் மனைவியும் மும்பை வந்து சேர்ந்து, இருவருக்கும் தங்களால் முடிந்த அளவு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கி பார்த்தனர். இருவரும் சேர்ந்து வாழ அழுத்தமாய் மறுத்து விட்டனர். இப்படிப்பட்ட கணவனோடு விசாலி வாழ முன் வரவில்லை. அதனால் அவளின் பிடிவாதத்தால், ராமும் ஒரு பெண்ணான அவளுக்கே இவ்வளவு வீம்பு இருக்கும் போது, தான் ஒரு ஆண் ஏன் படிந்து போக வேண்டும் என்ற எண்ணம்.
விசாலியின் அன்னையும் தன் பங்கிற்கு, மகளைச் சேர்ந்து வாழ வலியுறுத்தினார். ஆனால், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போயிற்று, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ராமின் பணபலம், சித்தார்த்தை அவனுடனே வைத்துக் கொள்ளலாம் எனத் தீர்ப்பை அவன் பக்கம் சாதகமாக்கினான்.
நீதிமன்றத்திற்கு வந்த சித்தார்த், தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு அவளோடு செல்ல முயல, ஆனால் ராம் அவனைப் பிடித்து இழுக்கவும், சித்தார்த் அழுக தயாரானான். தன் மகனின் அழுகையைக் கண்டு கூடத் தளராமல், பிடிவாதமாய் இழுக்கும் ராமைக் கண்டு அருவெருப்பாய் உணர்ந்தாள்.
அதனால், விசாலி தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, தானே தன் மகனின் கைகளை விடுவித்து, “நீ அழுகாம சமத்தா இருந்தா, அம்மா வருவேன் டா கண்ணா வீட்டுக்கு” எனச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.
பின் வீடு வந்தும் அழுது புரண்டவனை, வாசனும், தாமரையும் தான் சமாதானப்படுத்தினர். “ராமா... ஏன் இப்படி இவங்க சண்டைல, இந்தச் சின்னப் பிள்ளைய சோதிக்கிற...” என மனதுள் அழுக தான் முடிந்தது.
ஒரு பிள்ளையைப் பெற்ற மகனைக் கண்டிக்கவும் வழி தெரியாமல், இந்தச் சிறு பிஞ்சுக்கு தந்தையாவது வேண்டுமே என ராமை தண்டிக்கவும், நிந்திக்கவும் முடியாமல் இருந்தனர்.
பள்ளி சென்றும் அம்மா வேண்டும் என அழுதவனை, அவனின் நண்பன் அபய் தான் ஆறுதல் படுத்தினான்.
அதுவும் எவ்வாறு என்றால், ஒரு நாள் இரவில் விடுதியில், கனவு கண்டு “அம்மா வேண்டும்” என அழுதவனை, அவன் அழுததில் விழித்துக் கொண்ட அபய் பார்த்துக் கொண்டே இருந்தான்.
தன் வீட்டில், அவன் அம்மாவும் அப்பாவும் எங்கேனும் வெளியே சென்று விட்டால், இவன் ஓயாது அழுதாலோ இல்லை அடம் செய்தாலோ, அவர்கள் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரி, அவனைத் தன் மடியில் கிடத்தி, “என்ன உங்க அம்மாவ நினச்சுக்கோ... நான் உனக்குக் கதை சொல்லவா?” எனச் சமாதானம் செய்து, அவனைத் தூங்க செய்வாள்.
இதையே சித்தார்த்திடமும் பின்பற்றி, அபய் “என்ன உங்க அம்மாவ நினச்சுக்கோ... என் மடில படுக்குறியா?” என வெள்ளை உள்ளம் கொண்ட அந்தச் சிறுவன் வினவி, தன் நண்பனை மடியில் கிடத்தி தட்டிக் கொடுத்தான், குட்டி தாயாய் மாறிய அந்தக் குட்டி நண்பன். இப்படித் தான் மடி சாய்ந்து, ஆறுதல் கண்டு வளர்ந்தது இவர்களின் நட்பு.
விடுமுறைக்கு வந்த சித்தார்த், மீண்டும் தன் தாயை தேடி அலைந்து, வீட்டிலிருந்த தன் தாத்தா பாட்டியிடம் கேட்டு அழுதான். விஷயம் கேள்விப்பட்டு வந்த விசாலியை, ராம் பார்க்க கூட அனுமதிக்கவில்லை.
மேலும், இரவில் தனிமையில், தன்னுடன் படுக்கும் சித்தார்த்திடம் “உன் அம்மா, நம்மை விட்டு விட்டு, அந்த விஷ்ணு அங்கிளை தான் கட்டப் போகிறாள்” என்று வேறு கூறினான் ராம்.
அதற்கு “ஏன் பா... அம்மா... அப்படிலாம் பண்ண மாட்டங்க” எனத் தன் அம்மாவின் அன்பை எண்ணி கூறியவனை, “உங்க அம்மாக்கு என்ன பிடிக்கல டா”
“ஏன் பா பிடிக்கல... நீங்க எதுவும் மிஸ்டேக் பண்ணீங்களா?” எனச் சரியாய் தந்தையைப் பிடித்தான் மகன்.
“ம்ம்... அது வந்து... இல்ல டா... உங்க அம்மாக்கு அந்த விஷ்ணுவ தான் பிடிச்சிருக்கு... அதுனால என்ன... உன்ன... விட்டுட்டு போயிட்டா...” என அன்று நீதிமன்றத்தில் அவள், சித்தார்த்தின் கைகளை உருவியதை மேற்கோள் காட்டி, அதனால் தான் உன் அம்மா அப்படிச் செய்தாள் என்று மேலும் கூறி, அவன் மனதில் தன் தாயின் மீது வெறுப்பு ஏற்படச் செய்தான்.
இதற்கிடையே, தன் வேதனையை எல்லாம் மறப்பதற்காக, விசாலி முன்பை விட நாட்டியத்தில் அதிகமாய்த் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அதன் விளைவாய், அவளின் நாட்டியம் பேரும் புகழும் அடைய, மேலை நாடுகளுக்கு எல்லாம், நாட்டியம் மற்றும் கலைச் சுற்றுலா பயணம் மேற்கொண்டாள். தனக்குத் துணையாக, தன் அன்னையையும் கூடவே அழைத்துச் சென்று விடுவாள்.
இப்படியே வருடங்கள் மூன்று உருண்டோட... ராமின் ஆட்டமும் அடங்கும் நாளும் வந்தது. அன்று தொழில் சம்பந்தமாய், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு, அவன் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. அதில் இருந்த ராமும் இறந்து விட்டான். அவன் செய்த பாவங்களுக்கு எல்லாம், கை மேல் பலனாய் அவன் உயிரை விட்டதோடு, அவனின் மகனும் தாய் தந்தை இல்லாமல், பணம் இருந்தும், சிறு வயதிலேயே அனாதரவாய் வளர்ந்தான்.
ராம் இறந்த போது, விசாலி வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சியில் இருக்க, அவளுக்கு ராம் இறந்த செய்தி கூடத் தெரியவும் இல்லை, அவளுக்குத் தெரியப்படுத்த அந்தக் காலத்தில் அலைபேசியும் இல்லை. தொலைபேசி இருந்தும், என்றாவது தான் விசாலி வாசன் வீட்டு எண்ணிற்கு, தொடர்பு கொண்டு பேசுவாள்.
ஆனால் இப்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால், வாசனுக்கும் அவளைத் தொடர்பு கொள்ளத் தொலைபேசி எண்ணும் இல்லை. அப்படியே அவளுக்குத் தெரிவித்து, என்ன ஆகப் போகிறது? என நினைத்தவர், ஆனாலும் “இந்தக் குழந்தை அம்மா முகத்தைக் கண்டாலாவது ஆறுதலாய் இருக்கும்” என்று தன் பேரனை எண்ணி தான் அவளை அழைக்க நினைத்தார்.
ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன? விசாலி வராமலே ராமின் இறுதி சடங்கு நிறைவுற்றது. மேலும் விஷயம் கேள்விப்பட்டு விசாலி தன் தாயோடு வந்த போது, சித்தார்த் பள்ளிக்குச் சென்றிருந்தான். தன் மகனைக் காண எண்ணி, அங்குப் பள்ளியில் சென்று பார்க்கலாம் என முடிவு செய்து சென்றவளை, பதினோரு வயது முரட்டு சிறுவனாய் தன் தாயைக் காண வரமாட்டேன் எனப் பிடிவாதமாய், வெறுப்போடு மறுத்து விட்டான்.
எல்லாம் ராம் செய்த வேலை, “தன் தாய், தந்தையைப் பிடிக்காமல், விஷ்ணுவோடு சென்று விட்டாள்” என அவன் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்து போயிற்று.
மேலும் அதை உண்மையாக்குவது போல், விசாலியின் அன்னை உடல் நிலை முடியாமல் படுத்திருந்த போது, தன் கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த அந்தத் தாய், இந்த உலகில் நிராதரவாய் தன் மகளை விட்டு செல்ல மனமில்லாமல், தன் மகளுக்கு எப்போதும் கண்ணியமாய்ப் பக்க பலமாய் இருக்கும் விஷ்ணுவின் கையில் அவளை ஒப்புவித்துச் சென்றார்.
இவர்களின் திருமணத்தைக் கேள்விப்பட்ட தாமரைக்கு, சரி என்றும் படவில்லை தவறு என்றும் படவில்லை, ஆனால் அவரால் ஏற்கவும் முடியவில்லை. ஆனால், வாசனோ சித்தார்த்தை அவர்களிடம் ஒப்படைத்து, இனியாவது தன் பேரன் அன்னை தந்தையோடு மகிழ்ச்சியாய் இருக்கட்டும் என்றெண்ணினார். தன் மகன் செய்த தவறுக்குப் பிராயசித்தம் செய்ய, இது ஒரு வாய்ப்பாய் கருதினார்.
அதனால் அவர்கள் திருமணம் முடிந்து ஆறுமாதம் கழித்து, இது விஷயமாய் விஷ்ணுவிடம் பேசினார். ஆனால், அவர்களோ “உங்களுக்கு முன்னமே, நாங்கள் சித்தார்த்தை அழைத்துப் பார்த்து விட்டோம் பா... ஆனால் அவனுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை” என்று கூறினான் விஷ்ணு.
விசாலியோ, “நான் அவனை விட்டு சென்றதாய் நினைக்கின்றான் மாமா. மேலும் அவர் இறந்ததற்கு நான் தான் காரணம் என்று வேறு நினைக்கின்றான்... இத்தனை நாளும் அவரோடு போராடி தோற்று விட்டேன், இப்போது இவனோடு போராட என் மனதில் தெம்பில்லை மாமா.”
“அம்மாடி அவன் சின்னப் பிள்ளை மா... கொஞ்சம் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வான் மா...” என வாசன் சொல்ல,
“அவன் மனசுல எப்படி நினைக்கின்றானோ... அப்படியே இருக்கட்டும் மாமா... நான் அவனை வெறுக்கவில்லை. சிறுவயது தானே... அவன் முதலில் குழப்பமில்லாமல் படிக்கட்டும். பெரியவனான பின், அவனாய் என்னைப் புரிந்து கொண்டு வருவான் மாமா...” என நம்பிக்கையளித்து அவரை அனுப்பி வைத்தாள் விசாலி.
அவளும், தன் மனதுக்குப் பிரியாமனவர்களிடம் அடிப்பட்டு அடிப்பட்டு நொந்து போய் இருந்தாள். மேலும், மனம் நோக அவள் விரும்பவில்லை. மேலும் இப்போது அவளிடம் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது, ஆம், கணவன் மனைவி இருவரும் புதிதாய் ஒரு நாட்டிய பள்ளியை, “வித்யா கலாபவன்” என்ற பெயரில் தொடங்கி இருந்தார்கள்.
ராமிற்குப் பின் வாசன் தனது கம்பெனிகளுக்குப் பொறுப்பேற்று, நல்ல திறமையான நிர்வாகிகளை நியமித்து, தனது தொழிற்கூடங்களைத் தொய்வில்லாமல் பராமரித்து வந்தார்.
இப்படியே நாட்கள் நகர, சித்தார்த் கல்லூரி பயிலும் வயதில், அவனின் பாட்டி, இறைவனடி சேர்ந்தார். வாசன் தன் பேரனுக்காக, எல்லாத் துக்கத்தையும் மறந்து நடமாடினார். மேலும், தன் மகனை போன்று அவன் ஒழுங்கீனமாய் மாறி விடக் கூடாது எனக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு அவனைச் செல்லமாகவும், கண்டிப்போடும் வளர்த்தார்.
அவனும் தன் தாத்தாவின் அன்பை, இந்த வயதிலும் தனக்காகத் தான், அவர் இப்படிக் கவனமாய் உழைக்கிறார் எனப் புரிந்து பொறுப்பாய் இருந்தான். ஆனால் அவனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரு விஷயம், கடவுளும் அன்னையும் தான்.
சிறு வயதில் அவன் தாத்தா பேசிய... “ராமா... ஏன் தான் இப்படிச் சோதிக்கிற என் பிள்ளைய” என்ற வசனம் அவன் காதில் விழுந்து, விழுந்து, தன்னைச் சோதித்த கடவுளை அறவே வெறுத்தான். அதே போல், தன்னையும், தன் தந்தையையும் பிடிக்காமல் அந்த விஷ்ணுவை திருமணம் செய்து கொண்ட அன்னையையும் பிடிக்காமல் போனது.
ஏதோ அஞ்சலி வந்த பின் தான், பெண்களைச் சிறிது மதிக்கவாது கற்றுக் கொண்டான். இல்லை பப்புகளிலும், பார்ட்டிகளிலும் கம்பெனி கொடுக்கும் அழகிய பதுமைகள் தான் பெண்கள் என்ற எண்ணத்தில் அவர்களுடன் நன்றாக ஆடி பாடி கூத்தடிப்பானே ஒழிய, அவர்களுடன் தன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள மாட்டான். காரணம் வாசன் அவனை ஒழுக்கச் சீலனாய் வளர்த்திருந்தார்.
இவ்வாறு சித்தார்த்தின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி முடித்தார் வாசன். மேலும் சமீபமாய்ச் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் விசாலி அவனைப் பார்த்ததாக, தன் மருமகள் தன்னிடம் சொன்னதையும், சாஸ்வதாவிடம் கூறினார்.
எப்பொழுதும் சித்தார்த்திற்காக வருத்தப்படும் மனது இப்போது அவனின் தாய்க்காக வருத்தப்பட்டது. இப்போது நன்றாய் வாழ்ந்தாலும், பாவம் இப்படிப்பட்ட கணவனோடு வாழ்ந்த அவர் மனது எவ்வளவு துடித்திருக்கும், அதை விட மகனும் தவறாய் புரிந்து கொண்டு உதாசீனப் படுத்தினால்... சொல்லவே வேண்டாம் அந்தத் துயரை... என எண்ணியவள், சித்தார்த்தின் தாயை சந்திக்க ஆவல் கொண்டாள்.
அதை வாசனிடமும் சொல்ல, அவரோ “என் மருமகளுக்கும் ஆசை தான் மா... தன்னோட மருமகள பார்க்கணும்னு... ஆனா... நீ போய் விசாலியப் பார்த்தது தெரிஞ்சா... அவன் என்ன பண்ணுவானோன்னு பயமா இருக்கு மா” எனச் சித்தார்த்தின் பிடிவாதத்தையும், வெறுப்பையும் உணர்ந்து சொன்னார்.
“அதனால தான் நீ அஞ்சலிய வெறுக்கவும், அவ காணோம்கிற கோபத்துல, ஏதாவது சொல்லிருப்பான்... நீ தான் மா அவன திருத்தணும். அவனும் அவங்கம்மா மாதிரி கொஞ்சம் பிடிவாதக்காரன் தான்...” என வெளியே இருந்து மூன்றாம் மனிதர்களாய் விசாலியை பார்ப்பவர்கள் அப்படித் தான் நினைப்பார்கள், அதைத் தான் அவரும் கூறினார்.
மேலும் பேசுவதற்குள், சித்தார்த் அறைக்குள் வந்து விட, வாசன் அவனிடம் “சித்தார்த்தா... அஞ்சலி எங்க பா... கிடைச்சுட்டாளா?” என வினவினார்.
“இம்... கிடைச்சுட்டா தாத்தா... அபய் வீட்டுல இருக்கா” என்று சுருக்கமாய் முடித்துக் கொண்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
“சரி மா... சித்தார்த் கிட்ட நீ தான் பேசி புரியவைக்கணும்.” என எழுந்து சென்றார்.
பின் உணவு மேஜையில் சாஸ்வதா, சித்தார்த்திற்கு இரவு உணவு பரிமாற வர, தட்டை தன் கையால் மறைத்து அவளைத் தடுத்து விட்டான். தானே உணவை பரிமாறிக் கொண்டு சாப்பிட்டு முடித்தான். கணவனின் புறக்கணிப்பில் மனம் காய்ந்து, உணவு உண்ண விருப்பமில்லாமல், அவனைச் சமாதானப்படுத்த மேலே தங்கள் அறைக்குச் சென்றாள்.
கண்களை மூடி, தூங்குவது போல் பாசங்கு செய்தவனை, ஓரக்கண்ணால் கணக்கிட்டப்படியே, அன்று அவன் கேட்ட பர்ப்பிள் நிற சேலையைக் கப்போர்டில் இருந்து, கைப்பற்றிக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.
நிமிடத்தில் உடை மாற்றிக் கொண்டு வந்தவள், படுத்திருந்தவன் அருகே சென்று, அவள் அமர, அவனோ அவளுக்கு முதுகு காட்டி திரும்பி கொண்டான். “நாளைக்கு நான் ஊருக்கு போகணுமா?” என மெல்ல வினவினாள்.
அவனோ இறுக்கமாய் அமைதியாய் இருக்க, “உங்ககிட்ட தான் கேட்குறேன்...” எனச் சற்று குரலை உயர்த்திக் கேட்டாள்.
“ஆமா...... அதான் என் விருப்பம்” எனச் சுருக்கமாய்க் கூறியவனிடம், “உங்க விருப்பம் வேணா அதுவா இருக்கலாம். ஆனா நான் இங்க தான் இருப்பேன். நான் ஏன் போகணும்” எனக் கொடி பிடித்தாள்.
“ஹும்.... எனக்கு உன் முகத்த பார்க்க பிடிக்கல... அதான் போன்னு சொல்றேன்... நீ இங்க இருந்தா.....” என எங்கே அவள் இங்கிருந்தாள், தன்னைச் சந்தேகப்பட்டவளின் மீது கோபம் கொள்ள முடியாமல், தன்னைக் காதலில் வீழ்த்திய வதனத்தைப் பார்த்து மயங்கி விடுவோமோ என்று அச்சம் கொண்டான்.
சிறிது நேரத்திற்கு முன் தனக்குப் பரிமாறியவளை தடுக்கப் போய், அதில் அவள் முகம் வாடியதை பார்க்க பார்க்க அவனுக்குள் வலிக்கத் தான் செய்தது. அதனால் தான் அவளை, தன் கோபம் தீரும் வரை, அவள் அன்னையின் வீட்டில் விட எண்ணினான். மேலும் அஞ்சலி பத்திரமாய்க் கிடைத்ததால், சிறிது கோபம் அடங்கியவனாய் காணப்பட்டான்.
“இருந்தா... இருந்தா என்ன பண்ணுவீங்க?” என வம்பளக்க தொடங்கினாள் அவன் மனையாள்.
அவள் பழைய சாஸ்வதாவை மாறி விட்டாள், என்பதை அறியாமல், எழுந்து அமர்ந்தவன், அவள் பக்கம் திரும்பி, “என்னடி... நக்கலா? இன்னும் ரெண்டு கொடுக்கவா?” எனச் சுட்டு விரலை நீட்டி கோபமாய் முறைத்துப் பார்த்தான். அப்போது தான் அவளின் உடையை... அந்தப் பர்ப்பிள் நிற சேலையை... கண்டான்.
ஆனால் அதற்கெல்லாம் அசராமல், “ஓ... எஸ் கொடுங்களேன்... இங்க ஒன்னு... இங்க ஒன்னு...” என அவன் அருகே நகர்ந்து, தன் முகத்தைச் சாய்த்து, இரு கன்னத்தையும் திருப்பித் திருப்பிக் காட்டினாள்.
மிக அருகே... மனைவியின் நெருக்கத்தில்... பளபளக்கும் அந்தக் கன்ன மேட்டில் தடுமாறியவன், மேலும் அந்தச் சேலையை அவள் கட்டியிருந்த நாளின் நினைவு வேறு, அவன் உணர்வுகளைச் சீண்ட... “சீ... நீயெல்லாம் பொண்ணா” எனக் கட்டிலை விட்டு இறங்கினான்.
ஆனால் அவனின் தடுமாற்றத்தை உணர்ந்தவள், “என்கிட்டயேவா... நடிக்கிறீங்க...” என மனதுள் நினைத்து, குறும்பு சிரிப்பை வெளியிட்டு, “ஏன்... இத்தன நாளா தெரியலையா?” என அவளும் அவன் பக்கமாய் இறங்கினாள்.
அவனோ “ஏய்... வேண்டாம்...” என மீண்டும் மிரட்ட, “சரி... வேண்டாம்... இந்தப் பேச்ச விட்டிருவோம்...” எனக் கண்ணில் மயக்கத்தோடு அவனை நெருங்கினாள்.
“கிட்ட வராத... “ எனப் பின்னே நகர்ந்தான்.
அவளோ நிற்காமல் முன்னேறுவதைக் கண்டவன் , “நான் தான் உன்ன பார்க்க பிடிக்கலன்னு சொல்றேன்ல... பிறகு ஏன் டி... கிட்ட வர?” எனக் கூறி முகம் திருப்பினான்.
“ஏன்னா... இதுக்குத் தான்...” என அவனை நெருங்கி, அவன் கழுத்தில் தன் கையை மாலையாய் கோர்த்து போட்டு, அவனைத் தன் முகம் நோக்கி இழுத்தாள்.
அதில் வேறு வழியில்லாமல், அவள் முகத்தைப் பார்த்தவனின் கண்ணை ஆழ்ந்து பார்த்தப்படியே, மெல்லிய குரலில் அவர்கள் மட்டும் பிரத்தேயகமாய்ப் பேசும் காதல் மொழிகளைக் கூறி, வாயை சுளித்து, புருவத்தைத் தூக்கி ஒரு மர்ம புன்னகையைச் சிந்தினாள்.
அதில் குழம்பியவன், புருவத்தைச் சுருக்கி அவளின் மாற்றம் புரிந்தவனாய் கண்களை விரித்து, “சாஸ்....... பேபி...” எனச் சந்தோஷமாய் அவள் இடையை இறுக அணைத்தான்.
“ஹேய்... அப்படின்னா... உனக்கு... உனக்கு எல்லாம் நியாபகம் வந்திருச்சா...?” எனச் சந்தோஷமாய் வினவினான். அவளோ இதழில் புன்னகையோடு ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
“சாஸ்... சாஸ்... மை பேபி...” என மேலும் அவளை இறுக அணைத்தவனின் காதில், “நான் இந்தச் சேலைய மாற்றிட்டு வரும் போதே உங்களுக்குத் தெரியலையா?” என அவள் வினவினாள்.
அவனோ அவள் தோள் வளைவில் பதித்த முகத்தை நிமிர்த்தாமலே, மறுத்து தலையசைத்தவன். தான் ஆறுதல் அடைய, தன்னைப் புரிந்து கொள்ள, தன்னைக் கண்ணாய் பார்த்துக் கொள்ளத் தன் உயிரானவள் திரும்பிய சந்தோஷத்தில் அவன் தான் கவிழ்ந்த இடத்தில் இருந்து, தன் முத்திரையைப் பதிக்க ஆரம்பித்தான்.
அது அப்படியே, அவளின் முகம் முழுவதும் முத்த ஊர்வலமாய்ச் செல்ல, அவளின் இதழ் நோக்கி வந்தவனின் இதழ்களைச் சட்டென நிறுத்த, “என்னங்க... என் மேல கோபம் இல்லையா?” என வேகமாய் வினவினாள்.
அவனோ இல்லை எனத் தலையசைக்க... மோகத்தின் பிடியில் இப்படிச் சொல்கிறானோ என ஐயமுற்ற சாஸ்வதா, “இல்ல... நான் உங்க லிசாவ... வெளிய துரத்திட்டேனே...” என நியாபக படுத்தினாள்.
“இம்... ஆனா அது நீ... நீயா இருக்கும் போது... அதவாது என் மனைவியா... என் சாஸ் பேபியா இருக்கும் போது நீ செய்யலையே...” என விளக்கம் அளித்தாலும், அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை.
அப்படியென்றால், நான் பழைய சாஸ்வதாவாக இருந்திருந்தால்... அதாவது என் நினைவு திரும்பாமல் இருந்திருந்தால்... இந்நேரம் என்னிடம் வெறுப்போடு தானே நடந்திருப்பான் என இத்துணை நேரம் அவனைச் சமாதானம் செய்தவளின் மனது... இப்போது அவன் சமாதானம் ஆகவும் முரண் பட்டது.
அவளின் குழப்பமான முகத்தைக் கண்டவன், தொடர்ந்து அவனே, “அதான் பாதிக்கப்பட்ட அஞ்சலியே உன்ன மன்னிச்சுட்டாளே... அப்புறம் நான் என்ன கோபிக்கிறது?...” என்று சொன்னவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
“நீ என்ன வேணும்னேவா பண்ண... என் மேல இருக்க உரிமைல தான பண்ண... இருந்தாலும் நீ என்ன சந்தேகப்பட்டதுக்குக் கோபம் வருது... ஆனா....” என அவளின் ஆழப் பார்வையைக் கண்டு இழுத்தான்.
“ஆனா...” என அவள் எடுத்து கொடுக்க.... தயக்கம் மேலிட “உன்ன... உன்ன பார்த்தா எனக்கு மயக்கம் தான் வரும்... கோபம் வராது...” என வெட்கப்பட்டுச் சொன்னவனைக் கண்டு மயங்கி தான் போனாள்.
அதனால் தான் தன்னை, ஊருக்குப் போகச் சொன்னானா? எனக் கணவனைப் புரிந்து கொண்டவள், அதன் வெளிப்பாடாய், என்றுமே அவன் பெயர் சொல்லி கூப்பிடாதவள், “சித்தார்த்.....” எனக் குழைந்தாள்.
அதில் அவனும் உருகி போய், அவளைத் தன் கையில் ஏந்தி படுக்கைக்குச் சென்றான்.
நிஜம் இனிக்கும்........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top