• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நேற்று வரை இது சாத்தியமாகுமா? ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு விடுமோ என எண்ணி எண்ணியே, திருமணத்தின் முதல் நாளை, புது மணப்பெண்ணிற்கே உரிய கனவுகளோடு இல்லாமல், ஒரு வித பயத்தோடு படபடப்போடு கழித்தாள் அஞ்சலி. இதோ இன்னும் சில மணித் துளிகளில், அவள் அருகே இருக்கும் அபய், அவள் மயில் கழுத்தில் தாலிக் கட்டப் போகிறான். ஆனால் இந்தத் தருணத்தை, பயம், கவலை, மகிழ்ச்சி, படபடப்பு எனப் பலவித உணர்ச்சி கலவையோடு இருந்தாள்.
அபய் அஞ்சலியின் திருமணம், அபய் வீட்டு முறைப்படி, அந்தி மாலை பொழுதில், சுற்றமும் நட்பும் சூழ, நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் மருதாணி திருவிழா என ஒவ்வொரு நிகழ்ச்சியும், தவறாமல், குறையாமல் உற்சாகத்தோடு நடந்து கொண்டிருந்தது.
ஆனால் அஞ்சலியால் தான் நம்ப இயலவில்லை... எல்லாம் கனவோ என்ற நினைவிலேயே உழன்றாள். பின்னே இருக்காதா... பெண் பார்க்க வந்த அன்று, எவ்வளவு இறுக்கமான சூழ்நிலை இருந்தது என்று அவள் அறிவாளே!
அபயை வரவேற்க, சித்துக் கீழே கூட இறங்கி வராமல் இருக்க, அபய் அவர்கள் வீட்டு வாசலில் கால் வைத்தவன், தன் நண்பனைக் காணாது, “டேய்... சித்து... எங்கடா இருக்கு... சீக்கிரம் வா... மாப்பிள்ளே வந்துருக்கேன்ல...” எனத் தமிழிலேயே குரல் கொடுத்தான். அதைக் கேட்டவர்களுக்கு, அவனின் தமிழ் சிரிப்பை வரவழைத்தாலும், சூழ்நிலை அவர்களைச் சிரிக்க விடவில்லை.
இதனைக் கேட்ட எல்லோரும், அவன் வருகிறானா என மாடியைப் பார்க்க, வாசன் ஒரு பணியாளை அனுப்பி அவனை அழைத்து வருமாறு அனுப்பி வைத்தார்.
சாஸ்வதாவும், மாடியையே பார்த்தப் படி நிற்க, அவளைப் பார்த்த அபய், அவனை அலைபேசியில் அழைத்து “டேய்... என்னடா பண்ணுற... நான் இங்க கீழ நிக்குறேன்... போதும் உ அஞ்சலிக்கு நீ மேக் அப் போட்டது... வாடா கீழ...” என அவன் பொரிய, அதை மறுத்து அவன் ஏதோ கூற வந்தான்.
அதற்குள் “ஹலோ... இனிமே உனக்குலா நோ டெபாசிட். ஒன்லி இனக்கு தான். ஏன்னா இனி நா தா மாப்பிள்ள... மரியாடையா கீழ வா...” என்றவன், மேலும் “ஏண்டா இவ்வளவு தான் நம்ம நட்பா? எனக்காக வரமாட்ட...” எனச் சரியாய் உணர்ச்சிப் பெருக்கோடு கூறி விட்டு வைக்க, அவனும் வேறு வழியில்லாமல் கீழே வந்தான்.
வந்தவன் நேரே வாசலுக்கு விரைந்து, “சாரி டா... வா” என அபயை இறுக அணைத்து வரவேற்றான். அபயின் பின்னே ஒரு பெரும் படையே வந்திருந்தது. அபயின் பாட்டி தொட்டு, பாட்டியின் அக்கா தங்கை... அவன் அன்னையின் அண்ணன், அவர்கள் பிள்ளைகள், தந்தையின் அண்ணன், அக்கா குடும்பத்தினர் என ஆக மொத்தம் இருபது பேர் வந்திருந்தனர்.
அனைவரையும் வரவேற்று, உபசரித்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் சித்து. அவர்களுக்கு எல்லாம், பருக குளிர் பானம் வழங்கப் பட, பின் சம்பிரதாயமாய், பெண்ணை அழைத்து வர சொல்ல, அஞ்சலியும், மிதமான ஒப்பனையோடு, மெல்லிசாய் தங்க சரிகை இட்ட லாவெண்டர் நிற சேலையில் வந்தாள்.
மெல்லிடையாளாய் அழகே உருவாய் வந்தவளைக் கண்டு, அனைவரும் அசந்து தான் போயினர். ஆனாலும், எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்த தன் மனையாளையே கண்களில் நிரப்பி, காதலோடு அவள் அருகே சென்று அவளோடு ஜோடியாய் அமர்ந்தான் சித்தார்த்.
இதுவும் ஒரு வித தப்பித்தல் தான். சித்தார்த் முடிவு செய்து விட்டான், என்ன நடந்தாலும் சரி, யார் இருந்தாலும் சரி, தன் கவனம் தன் பாவையவள் மீது மட்டும் இருந்தாலே, தான் இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பி விடலாம் என யோசித்திருந்தான். இல்லையென்றால், அவனது எண்ணங்களே அவனைச் சூழ்ந்து நெருக்கி, அவனைக் குழம்ப வைத்து விடும் எனப் பயந்தான். அதனால் அதிலிருந்து தப்பிக்க இந்தக் காதல் யுக்தியைக் கையாண்டான்.
சித்தார்த், “சும்மா சொல்லக் கூடாது... இது கூட நன்றாகத் தான் இருக்கிறதே... சித்து நீ எப்போவும் ரைட் டெசிஷன் தான் டா எடுப்ப” எனத் தன் அருகில் இருந்த மனைவியிடம் இருந்து, அவளுக்கே உரிய பிரத்தேயேக மணம் வர, அதில் மயங்கி இருந்தவன் இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆனால், சாஸ்வதாவிற்குத் தான் கூச்சமாக இருந்தது. அத்தனை பேர் மத்தியில், சிறு குழந்தைகள் தங்கள் தாயின் சேலை தலைப்பையே பிடித்துக் கொண்டு திரிவார்களே அது போலத் தன் கணவன் தன் பின்னேயே சுற்றுவது அவளுக்குக் கூச்சத்தைக் கொடுத்தாலும், உள்ளுர ஒரு இன்ப படபடப்பு நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.
இதனைக் கண்ட வாசன் சித்தார்த்தை அபயின் சொந்த பந்தத்திடம் கேலி செய்து கொண்டிருக்க, சாஸ்வதாவின் பெற்றோர்களோ தங்கள் மகளின் வாழ்க்கையை எண்ணி மகிழ்ந்து தான் போனார்கள்.
இவர்களைக் கண்ட விசாலினியோ, எல்லோரையும் விட மகிழ்ந்து, தன் மருமகள் குறித்து, சந்தோஷமும், பொறாமையும் ஒருங்கே எழுந்தது. தன் மகனை எவ்வளவு பொறுப்பாய் பார்த்துக் கொண்டால், இப்படி அவள் பின்னேயே சுற்றுவான் என எண்ணி அவளை மெச்சிக் கொண்டாலும், ஆனால் தன் மகன் தன் அருகே இப்படி அமர்ந்து பேசாமல், ஏன் தன்னிடம் வராமலே இருக்கிறானே என வருத்தம் கொண்டு, மருமகளைக் கண்டு ஒரு பெருமூச்சு விட்டார்.
“டேய்... என்னடா நடக்குது இங்க... நீ என்னடான்னா உ வைஃ பின்னாடியே போற, அங்க என்னடான்னா... எ வைஃப் எங்கம்மா பின்னாடி போயிட்டா...” எனச் சித்தார்த் அருகே வந்த அபய் வயிறு எறிந்தான்.
அப்போது தான் அஞ்சலியை தேடினான். அவளோ அபயின் தாய் ஜானவியுடன் தனியே எங்கோ சென்று கொண்டிருந்தாள். உடனே சித் “என்னடா ஏன் உங்கம்மாவ கூப்பிட்டிட்டு போறா?” எனக் கேட்டான்.
“முத நீ இந்த உலகத்துல இருந்தா தான டா... எல்லாம் தெரியும்... எங்க... எல்லாம் என் நேரம்... நா இப்படி... உன்ன மாதிரி இருக்கணும்... ஆனா... எனக்குப் பிரின்ட்னு அமைஞ்ச நீயும் சரியில்ல, வைஃப்னு ஒருத்தி வரப் போறாளே அவளும் சரியில்ல...” எனப் பொய்யாய் நொந்து கொண்டான்.
ஆம், அஞ்சலி மணப்பெண்ணாய் வந்து, அனைவரையும் வணங்கிய பின்னர், தான் தன் மாமியாரோடு தனியே பேச வேண்டும் என்று சொல்ல, “இந்த மாதிரி ஒரு கொடுமை எங்கேயும் நடக்காது...” என வாய் விட்டே நொந்தவனைக் கண்டு எல்லோரும் நகைக்க, அஞ்சலியும் அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகையைச் சிந்தி விட்டு சென்றாள்.
ஜானவியைத் தனியே, தன் அறைக்கு அழைத்துச் சென்ற அஞ்சலி, தன்னைப் பற்றி அனைத்து உண்மையையும் கூற தொடங்கினாள். ஏனெனில் நாளை இல்லை பின்னர்த் தன்னைப் பற்றிய உண்மை யார் மூலமாவது தெரிந்து, குடும்பத்தில் பிரச்சனையாவதை விட, தற்போதே தன் மூலம் தெரிந்து கொள்ளட்டும், பின் அவர்கள் இந்தத் திருமணத்தை முடிவு செய்யட்டும் என எண்ணி தான் தன்னைப் பற்றி ஒப்பித்தாள்.
ஆனால் எல்லாவற்றையும் கேட்ட ஜானவி ஆத்திரம் கொள்வார், ஆதங்கப் படுவார் என எதிர்ப்பார்த்தவள், அவரோ ஒரு சாந்தமான புன்னகையோடு அவளை ஏறிட்டார்.
பின் அவளின் படபடப்பை அதிகரிக்கச் செய்யாமல், அவரே பதில் சொல்ல ஆரம்பித்தார். தனக்கு எல்லாம் தெரியும் என்றும், தான் எல்லாம் தெரிந்து தான் இந்தத் திருமணத்தை முழு மனதோடு செய்து வைக்கப் போவாதாயும் பதில் அளித்தார்.
ஆம், அஞ்சலியைக் காதலிப்பதாய் தன் அன்னையிடம் கூறி, சம்மதம் வாங்க வந்தவனிடம், ஜானவியும், அவர் கணவரும், “சரி பா... உனக்கு எந்தப் பொண்ண பிடிச்சிருந்தாலும், எங்களுக்குச் சம்மதம் தான். சித்தோட ரீலேஷன் தான அவ?” என ஜானவி விசாரிக்க, அபயோ தன் பெற்றோர்களிடம், அஞ்சலி பற்றிய விஷயங்கள் எல்லாவற்றையும் கூறினான்.
அதைக் கேட்டு அதிர்ந்த ஜானவி, அவனிடம் தன் எதிர்ப்பை தெரிவித்தார். “நம் அந்தஸ்தென்ன... கௌரவம் என்ன... அது எல்லாம் தெரியாமல் நீ தான் இப்படி அசிங்கம் செய்கிறாய் என்றால், நாங்களும் அதற்கு ஒத்துக் கொள்வோம் என எப்படி நம்புகிறாய்?” எனக் கர்ஜித்தார்.
“மாம்... பீ கூல்... அவ ஒன்னும் தப்பானவ இல்ல... சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அவளைத் தப்பான இடத்திற்கு அழைத்து வந்து விட்டது...” எனக் கூறிக் கொண்டிருந்தவனை, “இல்ல... நீ என்ன சொன்னாலும்” என இடைமறித்தவரை
“மாம்... ப்ளீஸ்... என்ன கொஞ்சம் பேச விடுங்க... நான் ஒன்னு கேட்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க... நான் எத்தன வாட்டி குடிச்சிட்டு வந்திருக்கேன்... நீங்களும் கண்டிபீங்க. இருந்தாலும் வயசு பையன்னு விட்ருவீங்க.”
மேலும் அவனே “நான் குடிச்சிட்டா... கொஞ்சம் அப்படி இப்படி நடந்துப்பேன்னு உங்களுக்கே தெரியும்... எல்லாம் தெரிஞ்சும் கூட என்ன உங்க மகன்னு இன்னும் பெருமையா தானம்மா சொல்றீங்க...” என அவன் கேட்டதும், மகன் எதைக் குறிப்பிடுகிறான் என அவருக்குத் தெரியாமல் இல்லை.
இவன் குடிப்பது தெரியும் என்றாலும், பணம் இருக்கிறது, அவனே தனியே கைக் கொள்ளாமல் சம்பாதிக்கவும் செய்கிறான், அதனால் கொஞ்சம் இந்த வயதில் இப்படித் தான் இருப்பான் என அவரே சமாதானம் செய்து, அவனைக் கொஞ்சம் கண்டிப்பதோடு சரி, விட்டு விடுவார்.
மேலும் அவன் பெண்கள் விஷயத்தில்... எப்படி என்று அவருக்குத் தெரியாது தான். ஆனால் சில நாட்கள் எல்லாம் வீட்டிற்கே வராமல், விடிகாலையில் தான் வருவான். அதுவும் அவன் வருவதும் போவதும் தெரியாது, பணியாளர்கள் மூலம் தான், அவன் இரவு வரவில்லை என்பது கூட அவருக்குத் தெரியும். ஆனால் மகனே இன்று அவன் வாய் மூலம் ஒப்புதல் தரும் போது, ஒரு பெண்ணாய் சிறிது வலிக்கத் தான் செய்தது.
ஆனாலும், அவருக்கு நம்பிக்கை இருந்தது. தன் மகன் முற்றிலும் தவறானவன் அல்ல... ஏதோ அப்படி இப்படி இருந்திருக்கிறான், இனி திருமணம் நடந்தால் சரியாகிவிடும் என உறுதியாய் நம்பினார்.
அதனால், அவன் கேட்ட கேள்விக்கு, “அது... அது வந்து நீ தப்பானவன் இல்லையே டா...” எனப் பரிதவிப்போடு சொன்னார்.
அதைக் கேட்டு சிரித்தவனோ, “ஏன்மா குற்றட்ட நானே ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் தப்பானவன் இல்ல... ஏன்னா நான் உங்கள் மகன், அதிலும் ஆண்மகன். இதே மாதிரி தப்ப அவ செய்யல, ஆனா தெரியாம அந்தத் தப்புல போய் விழுந்துட்டா... அவ தப்பானவ? ம்ஹும்... எப்படி மாம் இப்படி யோசிக்கிறீங்க?” எனக் கசப்பாய்க் கூறினான்.
அவரிடம் பதில் இல்லையென்பதால் மௌனமாய் நிற்க, அவனே “ஏன்மா... எத்தன மகளிர் சங்கத்துல உறுப்பினரா இருக்கீங்க... பெண்ணியம் பற்றி விலாவரியா மேடை மேடையா பேசுறீங்க... வாழ்க்கைல அடிப்பட்ட பொண்ண தூக்கி விட ஒரு ஆண் வந்தா, அவன பாராட்டுவீங்க புகழ்வீங்க... ஆனா இதே உங்க வீட்டு ஆணா இருந்தா தூற்றுவீங்களா? நல்லா இருக்குமா உங்க லாஜிக்” எனப் பொரிந்தவனைக் கண் கலங்க கண்டார்.
என்றுமே அவரை எதிர்த்து பேசாது, எங்குச் சென்றாலும், தன்னை மறக்காது தனக்குப் பேசுபவன், எந்த மகளிர் அமைப்பில் எங்குக் கூட்டம் நடக்கிறதோ, அங்கு எல்லாம் அழைத்துச் சென்று விடுபவன் எனத் தன் மகன் தன் கைக்குள் இருக்கிறான் என்று இத்தனை நாளும் நினைத்திருந்தவருக்கு, இப்போது இவ்வளவு ஆக்கபூர்வமாய்ப் பேசவும் வாயடைத்து நின்று விட்டார்.
“நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... இதே மாதிரி தெரியாம சாக்கடைல விழுந்துட்ட ஒரு பொண்ணு உங்க மகளா இருந்தா, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நினைப்பீங்களா? இல்ல அமையக் கூடாதுன்னு நினைப்பீங்களா?” என்று நேரிடையாகவே கேட்டான்.
மேலும், “அவள நம்ம வீட்டு பொண்ணா நினைத்து பாரு மா... அது மட்டும் இல்லாம, இந்த இரண்டு வருஷத்துல அவள பற்றி உங்களுக்கே கொஞ்சம் தெரிஞ்சிருக்குமே. இப்போ நான் உண்மைய சொல்லலேன்னா... நீங்களே ஏற்றுக் கொண்டு தானே இருப்பீங்க?” எனக் கேட்டு விட்டு சென்று விட்டான்.
பின் மறுநாள், தன் தந்தையிடம் அவரின் முடிவைப் பற்றிக் கேட்க, “எனக்குச் சம்மதம் தான் பா... ஆனா அஞ்சலிக்கா இப்படின்னு கொஞ்சம் வருத்தம், அதிர்ச்சி எல்லாம் இருக்கு. அது சரியாகக் கொஞ்ச நாள் ஆகும். அவ்வளவு தான்” எனத் தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டார்.
ஆனால் ஜானவியோ, அன்று காலை உணவை தன் கையாலேயே செய்து, ஒரு இனிப்போடு அபய்க்கு காலை உணவை பரிமாறி, சந்தோஷமாய்த் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.
இதோ இப்போது அஞ்சலி முன் நின்று, அவள் சொன்ன உண்மைகளைக் கேட்டு, உறைந்து போகாமல், எவ்வளவு நல்ல உள்ளம் இருந்தால், தன்னைப் பற்றி எல்லாவற்றையும் கூறி, அதனால் திருமணமே நின்றாலும் பரவாயில்லை என உண்மையை உரைக்கும் இவளைப் போன்ற தங்கமான மருமகள் தானே தேடினாலும், தனக்குக் கிடைக்க மாட்டாள் என உள்ளுக்குள் அவளை மெச்சி தான் போனார்.
அதை அப்படியே வசனமாய் மாற்றியும் அவளிடமே கூறி, அவளை அருகே அழைத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு, தன் நெஞ்சோடு அணைத்தப்படி, “எனக்கு உன் குணம் ரொம்பப் பிடிச்சிருக்கு அஞ்சலி. இப்படிப்பட்ட மருமக தான் எங்க வீட்டுக்கு வரணும். அத விட என் பையனுக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு... நானே வேணாம்னு சொன்னாலும், அவன் இன்னிக்கே உன்ன கல்யாணம் பண்ணிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.” எனப் புன்னகைத்தார்.
அதில் அவளும் புன்னகைக்க, “ஆன்ட்டி... இங்க பாருங்க... ஒருத்தனுக்கு இரண்டு காதுல இருந்தும்... புகை வருது....” எனச் சித்தார்த் அபயுடன் வந்தப்படி கூறினான்.
அதைக் கேட்டு சிரித்தவாறே, “ஏய்... உங்கள யாரு உள்ள விட்டது. இங்க நாங்க தனியா பேசணும்னு தான வந்தோம்” என ஜானவி பொய்யாய் இருவரையும் மிரட்டினார்.
உடனே சித் “ஆன்ட்டி... உங்களுக்கு டைம் முடிஞ்சு போச்சாம்... இப்ப அபய் அஞ்சலிகிட்ட தனியா பேசணுமாம்... அப்படின்னு நான் சொல்லல... என்ன இப்படிச் சொல்ல சொல்லி, சாஸ்வதாகிட்ட இருந்து என்ன பிரிச்சு கூட்டிட்டு வந்து அநியாயம் பண்றான். முத இவனுக்குச் சீக்கிரமே கல்யாணட்ட முடிச்சு வைக்கணும் ஆன்ட்டி...” எனக் கூறியவனைக் கண்டு பெண்கள் இருவரும் நகைக்க....
“டேய்... ஏண்டா இப்ப மட்டும் இவ்வளவு பெருசா பேசுற... என்னிக்காவது இவ்வளவு நீளமா பேசிருக்கியா... ஏண்டா கொடுமை பண்ற... ஒழுங்கா ரெண்டு பேரும் வெளியப் போய்ப் பேசுங்க டா...” என அவன் காதைக் கடித்தான் அபய்.
“அடப்பாவி இரு உன்ன... ஆன்ட்டிகிட்ட....” என அவன் முடிக்கக் கூட இல்லை, “மாம்... நானி உன்ன கூப்பிட்டாங்க... சீக்கிரம் போங்க” என அவரைக் கிளப்பி விட்டு, அஞ்சலியின் அருகே செல்ல, “டேய்... டேய்ய்ய்ய்....” எனச் சித் அழைத்தும், திரும்பி பாராமல், வேறு உலகத்தில் சஞ்சரித்தப்படி அஞ்சலியிடம் சென்றான்.
கடைசியில் சித் தான் புன்னகையோடு வெளியேறினான். பின் அன்று இரவே விருந்தை முடித்துக் கொண்டு, மாப்பிள்ளை வீட்டினர் எல்லோரும் கிளம்பி விட, அவர்களுக்குப் பின், விசாலினியும் தன் குடும்பத்தோடு கிளம்ப ஆயத்தமானார்.
வாசன் அவர்களைத் தடுக்க வகையறியாது, வருத்ததுடன் கையைப் பிசைந்தப்படி நின்றார். ஆனால், உரிமைப்பட்டவனே அவர்களைத் தங்குமாறு உபசரிக்காத போது, இவர் சொன்னால் மட்டும் நிற்கவா போகிறார்கள்.
ஆயினும், உரிமைப்பட்டவனின் துணையானவள், “மாமா... அத்தை... இன்னும் இரண்டு நாள் இருந்திட்டு போகலாமே...” எனக் கூறினாள்.
ஆனால் விசாலினியோ “இருக்கட்டும் மா... ஸ்கூல் வேலையெல்லாம் இருக்கு... இன்னொரு முறை வரும் போது, கண்டிப்பாக இருக்கிறோம் மா...” என நல்லவிதமாய் முடித்துக் கொண்டு, கிளம்பி விட்டார்.
சித்தார்த் எதுவும் சொல்லவும் இல்லை, அவர்கள் எதிரில் வரவும் இல்லை. பின்னர் மறுநாள், வாசனிடம் ருத்ரனின் தந்தை சோமசேகர், “மாமா... நான் இப்ப உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்த பேசப் போறேன்...” எனப் பீடிகையோடு ஆரம்பித்தார்.
அவரோ என்னவென்று பார்க்க, “உங்க வீட்டு பொண்ண... பெண் கேட்டு வந்திருக்கேன் மாமா... உங்களுக்குச் சம்மதமா?” என அவர் நேரிடையாய் கேட்க, அதற்கும் புரியாத ஒரு பார்வை பார்த்தார்.
“இவன் யாரை கேட்கிறான்...” என ஒரு நிமிடம் குழம்பியவர், பின் “ஓ... நம்ம நளினாவா?” என எண்ணியவராய், இருந்தாலும் அவர்கள் வாயால் சொல்லட்டுமே என அமைதி காத்தார்.
அவரும், “என்ன மாமா இன்னும் புரியலையா? நம்ம நளினாவ கேட்டு தான் வந்திருக்கோம்” என முடிக்க, வாசனோ எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாலும், அவருக்குச் சிறிது அதிர்ச்சி தான். எப்படி ஒரு குழந்தைக்குத் தாயான பெண்ணை... என எண்ணினார். இருந்தாலும் அவளுக்கு ஒரு நல்வாழ்வு அமைவது அவருக்குச் சந்தோஷமே...
மேலும் எல்லா விசயங்களும் பேசப்பட, சோமசேகர் அவளின் உண்மை நிலை அறிந்து தான் சம்பந்தம் பேச வந்தார். எல்லாம் ருத்ரனின் கைங்கரியம் தான், அவனுக்கு எல்லாம் உதவியது நம் சாஸ்வதா தான்.
ஆனால் இதில் சந்திரசேகருக்கு அவ்வளவாய் பிடித்தம் இல்லை தான். ஆனாலும் வயதில் தன்னை விட மூத்தவரை... தன் அண்ணனை அவர் எதிர்த்துப் பேசாமல், மௌனம் காத்துக் கொண்டார். ஆனால் சோமசேகரை அவரது வேலையும், பல வித இடமாற்றமும், அவரைச் சிறிது மாற்றியிருந்தது. அவரது சிந்தனையும் விரிந்து, பரந்த மனப்பான்மை உடையவராய் மாறிப் போயிருந்தார்.
இந்த நாளின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியை, விஷயம் கேள்விப்பட்ட அஞ்சலி “அதான் என்ன மட்டும் அக்கா அக்கான்னு சொல்லிட்டு, சாஸ்வதாவ பேர் சொல்லி கூப்பிட்டியா? ம்ஹும்... வருங்கால அண்ணியாரே...” எனக் கேலி செய்தவளை, வெட்கத்தோடு பார்த்தாள்.
சித்தார்த், தன் மனமார்ந்த மகிழ்ச்சியை, ருத்ரனை ஆரத் தழுவி வெளிப்படுத்தினான். பின் அவர்களும் கிளம்பி விட்டனர். இரு புதுப் பெண்களும் தங்கள் உலகில் சஞ்சரிக்க, இங்கு வாசன் தான் பாவம் அல்லாடிக் கொண்டிருந்தார்.
எதற்கு என்று நினைக்கிறீர்களா? நேரத்திற்குச் சாப்பிடாமல், எப்பொழுதும் அலைபேசியிலேயே குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர்களை அதட்டி சாப்பிட வைக்கும் வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட சித்தார்த் கூட, “தாத்தா... நீங்க நல்ல வேலைப் பார்க்குறீங்க... அங்க பாருங்க தாத்தா... அஞ்சலி உங்கள கரடின்னு சொல்லுறா...” எனத் தன்னிடம் பேசாமல், தன்னிடம் அகப்படாமல் திரிந்தவளை, தன் தாத்தாவிடம் மாட்டி விட்டான். வம்பிழுத்தது போலும் ஆயிற்று அல்லவா?
அதன் பின் மாதங்கள் கடகடவென உருண்டோட... இதோ... திருமணம் நடக்கும் நாளும் வந்து விட, அய்யர் மந்திரங்களை முடிக்க, அபய் அஞ்சலியின் கழுத்தில் அவர்கள் வகைத் தாலியை கட்டி முடித்தான். பின் ஏழு முறை சப்தபதிகளாக வலம் வந்தனர்.
இப்பொழுதும், மனைவி பின்னே அலைந்த சித்தார்த், மேடையில் மனைவியோடு ஜோடியாய் நிற்க, இருவருக்கும் தங்களின் திருமண நாள் நியாபகம் வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மௌனமாய் அர்த்தமுள்ள ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.
அதன் பின் சடங்குகள் எல்லாம் நடைப்பெற, அபயின் வீட்டிற்குச் செல்வதற்குள், அஞ்சலி தன் தாய் வீடு போல் இருந்து விட்ட, சித் வீட்டை ஒரு முறை கண்களால் சுற்றிப் பார்த்தாள். பின் காயத்ரி அம்மாவிடம் ஆசிப் பெற்று, அவரை ஆரத்தழுவியவள், வாசனைக் கண்டதும் அவரின் தோள் சாய்ந்து அழுதே விட்டாள். வாசனும் உள்ளம் நெகிழ தான் செய்தார்.
எல்லோரும் நெகிழ்ந்து போய்ப் பார்க்க, சித்தார் தான், “அப்பாடா... ஒரு தொல்ல விட்டுச்சு எங்க தாத்தாக்கு...” எனச் சொன்னவனை, “ஹும்... பாருங்க தாத்தா... இவன...” எனச் செல்லம் கொஞ்சி மேலும் அழுதவளை,
“அஞ்சலிமா... இதுக்கு எல்லாம் அழுவாங்க... இங்க பக்கத்து தெருவுக்குப் போறதுக்கு இவ்வளவு பாடா? உனக்கு எப்போ எல்லாம் அபயம் முகத்த பார்த்து... போர் அடிக்குதோ, அப்போ எல்லாம் இங்க வந்திரு... என்ன டா மா?” எனச் சிரிக்காமல் சொன்னவரைப் பார்த்து, “அபய் குட் பாமிலில இருந்து பொண்ணு எடுத்திருக்க” என அவன் மனசாட்சியே கிண்டல் செய்தது.
பின் ஒரு வழியாய், அவர்களை எல்லாம் வழியனுப்பி விட்டு வந்து படுத்த சாஸ்வதாவை, தன் கைவளைவில் அணைத்துக் கொண்டான் சித்தார்த். “என்னங்க... விடுங்க... சீக்கிரம் படுக்கணும்... நாளைக்கு இருந்து நிறைய வேலை இருக்கு... அஞ்சலிய மறுவீட்டுக்கு கூப்பிடனும், அப்புறம் எங்கண்ணா கல்யாணத்துக்குக் கிளம்பனும், எல்லாத் திங்க்ஸும் மறக்காம பாக் பண்ணனும்... உப்... எவ்வளவு வேலை...” என அவள் பெருமூச்சு விடும் போதே, அதில் மயங்கியவன் சும்மா விடுவானா என்ன?
அதுவும் அவர்களின் திருமண நாளின் நியாபகங்களைப் பசுமையாய் அசைப்போட்டுக் கொண்டிருந்தவன், “அதோட சேர்த்து... என்ன கவனிக்கிற வேலையையும் செய் பேபி...” என அவளைச் சிறிது நேரம் அலைக்கழித்து விட்டே, விட்டான். பின் தன் மேல் அவளைச் சாய்த்து, அவன் வருடிக் கொடுக்க, அதில் சுகமாய் உறங்கி விட்டாள். ஆனால் அவனுக்குத் தான் உறக்கம் வரவில்லை. அது ஏனோ?
நிஜம் இனிக்கும்.............
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top