• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பத்ம புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி....

ஆதியில் ஒரே ஒரு புராணம்தான் இருந்தது. நூறு கோடி பாடல்களைக் கொண்டதாக அப்புராணம் இருந்தது. சென்ற கல்பத்தில் இப்புராணம் ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் புராணம் மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தர்ம, அர்த்த, காமம் ஆகிய மூன்றையும் பற்றிக் கூறி இவற்றைச் செம்மையாகக் கடைப்பிடித்தால் மோட்சம் என்ற விடுதலை தானே கிட்டும் என்று கூறிற்று.

இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். மிகப் பழங்காலத்தில் இருந்தே இந்தியர்களைப் பொறுத்தமட்டில் மனித வாழ்க்கை என்பது ஆன்மிகம், உலகியல் என்ற இரண்டையும் ஒரளவில் கலந்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட சமுதாயம் ஆகும் என்பதை அறியவேண்டும். பத்ம புராணம் மிகப் பெரியதாக இருந்தமையாலும், சாதாரண மக்கள் அதைப் படிப்பது என்பது மிகக் கடினமாக இருந்ததாலும், வேத வியாசர் அதைச் சுருக்கிப் பதினெட்டு அத்தியாயங்களில் நான்கு இலட்சம் பாடல்களாகத் தொகுத்தார்.

பிரம்ம புராணத்தை அடுத்து சிறப்புக் கொண்டது பத்ம புராணம் ஆகும். ஒரு காலத்தில் இந்த பூமியே ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால், இதற்குப் பத்ம புராணம் என்று பெயர் வந்தது. வேத வியாசருக்குப் பின் இப்புராணம் மேலும் சுருக்கப்பட்டு ஏழு அத்தியாயங்களையும், 55000 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது. இக் காண்டங்கள் சிருஷ்டி காண்டம்; பூமி காண்டம் சுவர்க்க காண்டம் பிரம்ம காண்டம்; பாதாள காண்டம் உத்தர காண்டம் கிரியா யோகா முதலியனவாகும்.

சிவசர்மாவின் கதை

முன்னொரு காலத்தில் பல முனிவர்கள் ஒன்றுகூடி உரோமஹர்ஷனரிடம் பத்ம புராணத்தைத் தங்களுக்குக் கூறுமாறு வேண்டினர். அந்த வேண்டுகோளுக்கிணங்கி உரோமஹர்ஷனரே சிவசர்மாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

மிகப் பழங்காலத்தில் துவாரகையில் சிவசர்மா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். வேதங்கள், அதன் அங்கங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த சிவசர்மா, மந்திர சக்தியால் பல அற்புதங்களைச் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

அவருக்கு யக்ஞசர்மா, வேதசர்மா, தர்மசர்மா, விஷ்ணு சர்மா, சோமசர்மா என்ற ஐந்து புதல்வர்கள் இருந்தனர். தம் பிள்ளைகள் தம்மிடத்தில் எவ்வளவு பணிவும், சொன்னதைச் செய்யும் திட சித்தமும் உடையவர்களாக இருந்தனர் என்பதை அறிய சிவசர்மா விரும்பினார். தம்முடைய அபூர்வ சக்தியால் தம் மனைவியைப் போல மாய மனைவியை உண்டாக்கி அவள் இறந்து போகுமாறு செய்தார். தம் மூத்த மகனாகிய யக்ஞ சர்மாவை அழைத்து, “உன் தாய் இறந்துவிட்டாள். அவள் உடம்பு வீட்டை அசுத்தம் செய்கிறது. கத்தி எடுத்து அவள் உடம்பைப் பல துண்டங்களாக வெட்டித் தூரத்தே எறிந்து விடு' என்று ஆணையிட்டார். ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் தந்தையின் கட்டளையை யக்ஞசர்மா செய்து முடித்தான். மகனுடைய பணியைக் கண்டு மகிழ்ந்த சிவசர்மா தன் மாயா சக்தியால் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணை உற்பத்தி செய்து, தன் இரண்டாவது மகனாகிய வேதசர்மாவிடம் அனுப்பினார். மகனை அழைத்து, "இந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்; அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். அந்தப் பெண் வேதசர்மாவிடம் வந்து 'உன் தந்தை மிகவும் வயதானவர், நோயுற்றுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்' என்றாள். வேதசர்மா தான் மணம் செய்து கொள்ளமுடியாது என்று கூறி, எப்படியாவது தன் தந்தையை அவள் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். உடனே அந்தப் பெண் நான் சொல்வதற்கு நீ கட்டுப்படுவதானால் உன்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
தந்தையைத் திருமணம் செய்து கொள்கிறேன்' என்றாள். அவள் என்ன விதித்தாலும் அதைச் செய்வதாக வேதசர்மா ஒப்புக்கொண்டான். அப்பெண் "உன் தலையை வெட்டி என் கையில் கொடுக்க வேண்டும். உன் தலை என் கைக்கு வந்தவுடன் உன் தந்தையை மணந்து கொள்கிறேன்' என்றாள். மறுவார்த்தை பேசாமல் வேதசர்மா . தன் தலையை வெட்டி அவள் கையில் கொடுத்தான்.

வேதசர்மாவின் வெட்டுண்ட தலையை மூன்றாவது மகனாகிய தர்மசர்மாவிடம் சிவசர்மா கொடுத்தார். அந்தத் தலையை வைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக தர்ம தேவதையை தியானம் செய்தான், தர்மசர்மா. தர்ம தேவதை நேரில் வந்தவுடன் என் அண்ணனின் உயிரைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அப்படியே அண்ணன் பிழைத்தவுடன் இருவருமாகச் சென்று தந்தையை வணங்கி நின்றனர். மகிழ்ச்சியடைந்த சிவசர்மா, நான்காவது மகனாகிய விஷ்ணுசர்மாவை அழைத்து, நீ இந்திர லோகம் சென்று இந்திரனிடம் கொஞ்சம் அமிர்தத்தை வாங்கி வா என்றார். விஷ்ணுசர்மா இந்திரலோகம் சென்று அமிர்தத்தைத் தேடுகையில் இவனுடைய எண்ணத்தை மாற்ற முயன்று இந்திரன் மேனகையை அவனிடம் அனுப்பினான். மேனகை அவனை மயக்கி, நாம் இருவரும் மணம் செய்துகொண்டால் மிகச் சிறப்பான இன்பத்தைத் தருவேன்' என்று கூறினாள். விஷ்ணுசர்மா அதற்கு இசையாமல் போகவே, துர்த்தேவதைகளை அனுப்பி விஷ்ணுசர்மாவைக் கலைக்க முயன்றான். அதற்கும் விஷ்ணுசர்மா மசியவில்லை என்றவுடன், தேவேந்திரன் ஒரு பாத்திரத்தில் அமிர்தத்தைக் கொடுத்தார். விஷ்ணுசர்மாவும் அந்த அமிர்தத்தைக் கொண்டுவந்து சிவசர்மாவிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா இந்த நான்கு பிள்ளைகளையும் நேரே விஷ்ணுலோகம் போகுமாறு அனுப்பி வைத்தார்.

எஞ்சியிருக்கும் ஐந்தாவது பிள்ளையான சோமசர்மாவை அழைத்து, “நானும் உன் தாயாரும் தீர்த்தயாத்திரை போகிறோம். அதுவரை இந்த அமிர்தத்தை கவனமாகப் பாதுகாத்து வைத்திரு” என்று கூறிவிட்டு, அமிர்தத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போனார். சிலகாலம் கழித்து சிவசர்மாவும், அவன் மனைவியும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட உடம்புடன் சோமசர்மாவிடம் வந்து சேர்ந்தனர். அவன் முகம் சுளிக்காமல் அவர்களுக்குப் பணிவிடை செய்தான். சிவசர்மா தேவை இல்லாமல் கோபித்துக் கொண்டு சோமசர்மாவை வாயில் வந்தபடி ஏசினார். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சோமசர்மா தொண்டு செய்தான்.

ஒருநாள் திடீரென்று, உன்னிடம் அமிர்தத்தைக் கொடுத்து வைத்திருந்தேனே, அதைக் கொண்டுவா’ என்றார். மகனுக்குக் கட்டளையிடுவதற்கு முன்பே சிவசர்மா அந்த அமிர்தத்தைக் காணாமல் போகுமாறு செய்தார். இதை அறியாத சோமசர்மா பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து, தன் பெருஞ் சக்தியால் அந்தப் பாத்திரம் நிறைய அமிர்தத்தை வரவழைத்துத் தந்தையிடம் கொண்டு நீட்டினான். மகனுடைய சக்தியில் மகிழ்ச்சி அடைந்த சிவசர்மா மனைவியை அழைத்துக் கொண்டு நேரே விஷ்ணு லோகம் போய்விட்டார். தனியே விடப்பட்ட சோமசர்மா ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது துர்த்தேவதைகள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் கவனத்தைத் திருப்ப முயன்றன. தேவதைகளைக் கண்டு பயத்தால் இறந்து போனான். அதனால் அடுத்த ஜென்மத்தில் ஹிரண்யன் என்ற அரக்கனுடைய மகனாகப் பிரகலாதன் என்ற பெயருடன் பிறந்தான். மிகுந்த புண்ணியம் செய்திருந்ததால் அரக்கனாகப் பிறந்தும், மிகுந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான் பிரகலாதன்.

விருத்ராசுரன் கதை

காசிப முனிவரின் மனைவியருள் திதி என்பவள் தேவர்களுக்கு விரோதிகளான தைத்தியர்களைப் பெற்றுக் கொண்டிருந்தாள். காசிபனின் மற்றொரு மனைவியும், திதியின் சகோதரியுமான அதிதி தேவர்களைப் பெற்றுக் கொண் டிருந்தாள். அவருள் இந்திரன் நான்கு கைகளுடனும், கோடி சூரியப்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பிரகாசத்துடனும் பிறந்தான். நாளாவட்டத்தில் இந்த இந்திரன் மிகுந்த பலவானாகி தேவர்களுக்குத் தலைவனாகவும் ஆகிவிட்டான். திதியின் பிள்ளைகளாகிய தைத்தியர்களை அழித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த திதி காசிப முனிவரிடம் முறையிட்டு அவர் உதவியுடன் பலி என்ற பிள்ளையைப் பெற்றாள். மிகுந்த பலசாலியாகிய இந்த பலி தேவர்களை அழிப்பதற்காகப் பெருந்தவம் செய்தான். இவன் குறிக்கோளின் ரகசியத்தை அறிந்த இந்திரன், இவன் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது வஜ்ராயுதத்தால் இவனை அழித்தான். இதை அறிந்த திதி இந்திரன் செய்த அநியாயத்தைக் காசிபரிடம் கூற, அவன் செய்தது தவறு என்று அவரும் கூறிவிட்டார்.

எப்படியாவது இந்திரனை ஒழிக்க வேண்டும் என்று விரும்பிய திதி, மறுபடியும் காசிபரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறினாள். இந்திரன்மேல் பெருஞ்சினம் கொண்ட காசிபர் தன் தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்து, பூமியில் எறிந்தார். விருத்ராசுரன் என்ற பெயருடன் அந்த முடியிலிருந்து ஒரு அசுரன் தோன்றி, "எனக்கு இடும் கட்டளை என்ன?’ என்று காசிபரிடம் கேட்டான். “எப்படியும் இந்திரனை ஒழித்துவிடு” என்று கட்டளையிட்டார். இந்த நோக்கத்துடன் புறப்பட்ட விருத்ராசுரன் போர்க்கலை பயின்று கொண்டிருந்தான். இதை அறிந்த இந்திரன் இவனைப் போர் செய்து அழிக்க முடியாது, தந்திரத்தால் தான் அழிக்க முடியும் என்று நினைத்து சப்த ரிஷிகளையும் அழைத்தான். “நீங்கள் எனக்காக விருத்ராசுரனிடம் செல்லுங்கள். தேவாசுரப் பகையை இனி வளர்க்க வேண்டாம் என் ஆட்சியில் பாதியை அவனுக்குக் கொடுக்கிறேன். நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சி செய்யலாம் என்று சொல்லி அவனை அழைத்து வாருங்கள்” என்று வேண்டிக் கொண்டான். முனிவர்கள் விருத்ராசுரனிடம் சென்று இதைச் சொல்ல, விருத்ராசுரன் அதை ஏற்றுக் கொண்டான். உடன்படிக்கைப்படியே இந்திரன் ஆட்சியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை விருத்ராசுரனிடம் கொடுத்துவிட்டான். இந்த உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க சற்றும் விரும்பாத இந்திரன், காலம் பார்த்து விருத்ராசுரனை அழிக்க நினைத்தான். இதனிடையில் நந்தன கானகம் என்ற இடத்தில் உலாவிக் கொண்டிருந்த விருத்ராசுரன் எதிரே ரம்பை என்ற தேவ கன்னிகை தோன்றினாள். அவள்மேல் ஆசைப்பட்ட விருத்ரன் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்று ஒரு கட்டளை விதித்தாள் ரம்பா. விருத்ராசுரன் அதற்கு உடன்படவே ரம்பா மணம் செய்து கொண்டாள். சில காலம் கழித்து ரம்பா விருத்ராசுரனைப் பார்த்து "இந்த அருமையான திராட்சை ரசத்தை அருந்துங்கள்” என்று கூறினாள். விருத்ரா சுரன், காசிபன் என்ற பிராமணன் மகன் நான். மது அருந்துவது பாவம்' என்று கூறினான். தனக்காக மதுவை அருந்தியே தீர வேண்டும் என்று ரம்பா பிடிவாதம் செய்ததால், விருத்ராசுரன் மதுவை அருந்தி மயக்கத்தில் வீழ்ந்து விட்டான். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திரன், விருத்ரனைக் கொலை செய்து விட்டான். ஒரு பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் இந்திரனைப் பற்றிக் கொண்டது.

(இதனை அடுத்துப் பத்ம புராணத்தில் வெனாவின் கதையும் பிருதுவின் கதையும் வருகின்றன. இவை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளன.)

ஆண், பெண் பன்றிகளின் கதை

இஷ்வாகு மன்னன் சுதேவா என்ற பெண்ணை மணந்து அயோத்தியை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டைக்குப் புறப்பட்டபோது அவன் மனைவி சுதேவாவும் உடன் சென்றாள். பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு இறுதியாக ஒர் ஆண் பன்றி, அதன் மனைவியாகிய பெண் பன்றி, அவற்றின் குட்டிகளாகிய ஆண் பெண் பன்றிகள் அனைத்தும் ஒன்றாக நின்ற இடத்திற்கு வந்தனர். இஷ்வாகுவின் வீரர் பலர் அப்பன்றிகளை எதிர்க்க பலரைத் தம் கொம்புகளால் குத்திக் கிழித்து விட்டது. வியப்படைந்த இஷ்வாகு மன்னன் தானே அந்த ஆண் பன்றியை அம்பை எய்து
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கொன்றான். உடனே பெண்பன்றி சீறிப் பாய்ந்தது. இஷ்வாகு அம்பு பட்டு அப் பெண் பன்றி குற்றுயிரும், கொலை உயிருமாக இரத்தம் வழியக் கிடந்தது. இஷ்வாகுவின் மனைவியாகிய சுதேவா இரக்கப்பட்டு அப்பன்றியின் முகத்தில் நீர் தெளித்து, குடிக்கவும் நீர் கொடுத்தாள். அப் பெண்பன்றி பேச ஆரம்பித்தவுடன் சுதேவா ஆச்சரியப்பட்டுப் போனாள். உடனே பெண் பன்றியைப் பார்த்து, நீ யார்? உன் கணவன் யார்? என்று விவரம் கேட்டவுடன் அப் பெண்பன்றி தன் கணவன் பற்றி விவரம் சொல்லலாயிற்று:

ஒரு காலத்தில் சுமேரு உச்சியில் புலஸ்தியன் என்ற முனிவர் தவம் செய்துகொண்டு இருந்தார். ரங்க வித்யாதரன் என்ற கந்தர்வன் அருகில் நின்று பாடிக்கொண்டிருந்தான். புலஸ்தியனுடைய தவம் கலையத் தொடங்கியதால், அவர் கந்தர்வனை அழைத்து, பாடல் நன்றாக இருக்கிறது. ஆனாலும் அது என் தவத்திற்கு இடையூறாக இருப்பதால் வேறு எங்காவது சென்று பாடு என்று கூறினார். அந்த கந்தர்வன் "சுமேருமலை அனைவருக்கும் சொந்தம் பாடுவது என் உரிமை. அதைக் கேட்க நீ யார்? உனக்கு இந்த இடம் பிடிக்கவில்லையானால் வேறு எங்காவது சென்று தவம் செய்' என்று கூறிவிட்டான். சில நாட்களில் புலஸ்திய முனிவர் காட்டில் வேறொரு பகுதிக்குச் சென்று தவம் செய்யத் துவங்கினார். அவர் அங்கே சென்றிருப்பதை அறிந்த கந்தர்வன் ஒரு குறும்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் ஒரு பன்றி வடிவெடுத்துக்கொண்டு புலஸ்திய முனிவர் தங்கியிருந்த பர்ணசாலையை அடுத்த பூமியைத் தோண்டத் துவங்கினான். தவம் கலைந்த புலஸ்திய முனிவர் இது சாதாரண காட்டுப் பன்றி அன்று, ரங்க வித்யாதரன் என்ற பழைய கந்தர்வன்தான் என்பதை அறிந்துகொண்டார். கடுஞ்சினம் கொண்ட புலஸ்திய முனிவர் நீ பூமியில் பன்றியாகப் பிறக்கக் கடவாய்! என்று சாபமிட்டார். சாபத்தைக் கேட்டு நடுங்கிப் போன வித்யாதரன் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். முனிவர், ‘இஷ்வாகு மன்னனுடைய அம்பு உன்னைக் கொல்லும்போது, நீ பழைய கந்தர்வ வடிவம் பெறுவாய்' என்று சாப விமோசன வழியும் தந்தார். "இப்பொழுது உன் கணவனாகிய இஷ்வாகு அம்பு பட்டு என் கணவன் உய்கதி அடைந்து விட்டான்” என்று கூறி முடிக்கவும் 'சுதேவா! உன்னுடைய கதை என்ன? என்று கேட்க, பெண் பன்றி தன் கதையைக் கூறத் துவங்கியது:

ஒரு காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஊரில் வசுதத்தா என்ற பிராமணன் வசித்து வந்தான். அவனுக்குச் சுதேவா என்ற பெண் (இஷ்வாகுவின் மனைவி சுதேவா வேறு இவள் வேறு) இருந்தாள். நல்ல கல்வி அறிவு உடையவனாயினும், தனக்கு ஒரே பெண் என்ற காரணத்தால், மகளுக்கு அளவுமீறிச் செல்லம் கொடுத்து ஒரே அகங்கார சொரூபமாக அவளை வளர்த்து வந்தான். அவளுக்கு மணப் பருவம் வந்ததும், எத்துணையோ பேர் அவளை மணக்க முன்வந்தும் வகதத்தா தன் மகளை அவர்களுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்து விட்டான். தன் ஒரே பெண்ணைப் பிரிந்திருக்க முடியாததால் அனாதையாக உள்ள ஒருவனுக்குத் தன் மகளை மண முடித்து விட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்பினான். சிவசர்மா என்ற ஏழை பிராமணனுக்குத் தன் மகளை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்டான். அகங்கார வடிவினளாகிய சுதேவா கணவனைத் துளசிபோல மதித்து நடத்தி வந்தாள். மனைவியின் கொடுமையைத் தாங்க முடியாத சிவசர்மா ஒருவருக்கும் சொல்லாமல் ஒருநாள் வீட்டை விட்டே போய்விட்டான். வசுதத்தாவின் மனைவி தன் மகளை செல்லம் கொடுத்துக் கெடுத்ததையும், அந்த மகள் கணவனைத் தூசாக மதித்து நடத்தியதையும் எடுத்துக் கூறி, இப்படிப்பட்ட பெண் வீட்டில் இருப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இவளை வீட்டைவிட்டு அனுப்பி விடுக! என்று கூறினாள். மனைவி சொல்லில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்ட வசுதத்தா தன் செல்ல மகளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். ஊர் ஊராகச் சென்று, பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்த சுதேவா கடைசியாக ஒரு ராஜ்ஜியத்தில் புகுந்து மிகுந்த செல்வம் உடைய ஒருவன் வீட்டில் பிச்சை கேட்டாள். அந்த வீட்டுக்காரன் தன் மனைவியை அழைத்து, "மங்களா! யாரோ பசி என்று கேட்கிறார்கள், வேண்டுமான உணவினைப் படைப்பாயாக!” என்று
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கூறினான். மங்களா வெளியே வந்து பார்த்துப் பசியுடன் கூடிய மெல்லிய உடலை உள்ளவளை உள்ளே அழைத்து அமரச் செய்து, இனிப்புப் பண்டங்கள் நிறையக் கொடுத்து உண்ணச் செய்தாள். இப் பெண் உண்டு கொண் டிருக்கும்போது சிவசர்மா இவளைப் பார்த்து, நீ யார்? ஏன் இந்த நிலைமைக்கு வந்தாய்? என்று கேட்டான். அவன் குரலிலிருந்து அவன் யார் என்பதைப் புரிந்து கொண்ட சுதேவா தலை குனிந்து கொண்டாள். இப்பொழுது அவளை அறிந்து கொண்ட சிவசர்மா, மங்களாவிடம் நடந்ததைக் கூறி "இவள் என் மனைவி. இவளை நன்றாகப் பாதுகாப்பாயாக!” என்று கூறினான். மங்களாவும் அப்படியே செய்தாள் என்றாலும், தான் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி சுதேவா உயிரை விட்டுவிட்டாள். நரகலோகத்தில் பல தண்டனைகளையும் அனுபவித்துப் பிறகு கரையான், பூச்சி வாழ்க்கை என்பவற்றில் பிறந்து வாழ்ந்து படிப்படியாக முன்னேறி இறுதியாகச் சுதேவா ஒரு பெண் பன்றியாகப் பிறந்தாள். அந்தப் பெண் பன்றி வேறுயாருமில்லை, நான்தான்” என்று இஷ்வாகுவின் மனைவிக்குப் பெண்பன்றி தன் பூர்வ வரலாற்றைக் கூறிப் பெண் தெய்வ வடிவை எடுத்துக் கொண்டது. உடனே தேவ கணங்கள் வந்து இந்த உயிரை விமானத்தில் ஏற்றிச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கிரிகலா - சுகலா கதை

ஒரு காலத்தில் வாரணாசியில் கிரிகலா என்ற வைசியன் வாழ்ந்து வந்தான். திடீரென்று தீர்த்த யாத்திரை போக வேண்டுமென்று மனைவியிடம் சொன்னான். சுகலா என்ற அவன் மனைவி தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள். வழியில் எத்தனையோ இடையூறுகள் ஏற்படு மென்று அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலே யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான். கணவனிடம் மிக்க அன்பு கொண்ட சுகலா உணவு, உறக்கம் என்பதை விட்டுத் தரையில் கிடந்து உறங்கத் தொடங்கினாள். அவளது உறவினர்கள் அவளிடம் "உன் கணவன் தீர்த்த யாத்திரைக்குத்தானே போயிருக்கிறார். நீ ஏன் இப்படி மனத்தைக் குழப்பிக் கொண்டு, உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்?’ என்று கூறினர். அவர்கள் கூறியதை ஏற்காத சுகலா என்னிடம் சொல்லாமல் போனதே என்னை ஒதுக்கி வைத்தது போலத் தான். ஆகவே நான் இந்த விரதங்களை அனுஷ்டிப்பது நியாயம்தான் என்று வாதாடினாள்.

ஒருமுறை இந்திரன் பணியாளன் ஒருவன் வந்து, "அம்மா! உன் கணவன் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லை. போனவனை நினைத்து அவதிப்பட்டு உன் இளமையை ஏன் பாழாக்கிக் கொள்கிறாய்? எங்கள் எஜமானர் உங்களை மணந்து கொள்ளத் தயாராக இருக்கிறார் என்று கூறியவுடன், 'உங்கள் எஜமானர் யார்?' என, இந்திரன்! என்று அவன் விடை கூறியதும், 'உன் எஜமானனை இங்கு வரச் சொல்' என்றாள். முழு அலங்காரங்களுடன் இந்திரன் அங்கு வந்தான். இந்திரனை நன்றாகக் கடிந்து கொண்டு, இப்படிப்பட்ட பாவச் செயல்களில் தேவேந்திரன் இறங்கக் கூடாது' என்று ஏசி அனுப்பி விட்டாள்.

இந்த நிலையில் தன் தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு கிரிகலா வீடு திரும்பத் தயாரானான். அப்போது ஒரு அசரீரி பின்வருமாறு கூறிற்று: 'கிரிகலா, இத்தனை தீர்த்தங்களில் நீ குளித்தும் கடுகளவு புண்ணியமும் சேரவில்லை. அதனால் உன் முன்னோர்கள் இன்றும் நரகத்தில் தான் அழுந்தி உள்ளனர் என்று கூற, கிரிகலா நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டான். அசரீரி, ‘உன்னையே நம்பி இருக்கும் உன் மனைவியை அழைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செல்லாமல், நீ மட்டும் போனதால் ஒரு பயனும் இல்லை. உடனே அவளைச் சென்று அடைவாயாக!' என்று கூறவே விரைவாக வீடு திரும்பிய கிரிகலா மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது அங்கே வந்த இந்திரன் கிரிகலாவைப் பார்த்து இப்படியொரு மனைவியை அடைய நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் மனத்தைக் கலைக்க நான் எவ்வளவோ
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முயன்றும் அது முடியவில்லை. ஆகவே உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, கிரிகலாவும் அவன் மனைவியும் “நாங்கள் நேர்மையான வழியிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும் என்றும், நாங்கள் வாழ்கின்ற இந்த இடம் நாரி தீர்த்தம் என்ற பெயருடன் புண்ணிய ஸ்தலமாக விளங்க வேண்டும்” என்றும் கேட்டனர். இந்திரனும் அவ்வாறே கொடுத்து மகிழ்ந்தான்.

பிப்பலாவின் கதை

காசிபனின் மகனாகிய பிப்பலா உலகத்தில் உள்ள யாவரையும் விடத் தான் அதிக ஆற்றலைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் தவம் செய்தான். ஊண், உறக்கம் அனைத்தையும் துறந்து, தவம் செய்த அவன் உடம்பைச் சுற்றிப் பாம்புகள், கொடிய விலங்குகள் ஆகியவை இருந்தும் அவன் தவத்திலேயே இருந்தான். அவன் உடம்பைச் சுற்றிக் கரையான் புற்று வைத்தும், அவன் தவம் கலையவில்லை. இந்த நிலையில் 3,000 ஆண்டுகள் கழிந்தன. அவனுடைய ஆற்றல் அவனைச் சுற்றி நிறைந்திருந்ததுடன் அவன் தலையைச் சுற்றி ஒரு ஒளி வளையமும் உண்டாயிற்று. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் குறிப்பாக யாரையும் நினைத்து தவம் செய்யாததால் திடீரென்று ஒரு அசரீரி கேட்டது: பிப்பலா! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்.” உடனே பிப்பலா, “இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆளும் ஆற்றலை நான் பெற வேண்டும்” என்று கூறினான். அப்படியே ஆகட்டும் என்றது அசரீரி. மகிழ்ச்சி மிகுந்த பிப்பலா, ஒரு குளக்கரையில் அமர்ந்து கொண்டு தன்னையும், தான் பெற்ற வரத்தையும் மனத்தில் நினைந்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தான். அப்பொழுது அக் குளத்தில் இருந்த ஒரு கொக்கு, "அடேய் பிப்பலா! 3,000 ஆண்டுகள் தவம் செய்து என்ன செய்துவிட்டாய்? ஒரு தவமும் செய்யாத சுகர்மா உன்னைவிட மிகப் பெரியவன். அவனைப் போய்ப் பார். நீ எவ்வளவு சாதாரணமானவன் என்பது தெரியும் என்று கூறிற்று. கொக்கு பேசிய அதிசயத்தைப் பார்த்த பிப்பலா, “நீ யார்?' என்று கேட்டான். அதையும் சுகர்மாவைக் கேட்டுத் தெரிந்து கொள் என்று கொக்கு கூறியது. சுகர்மா இருக்குமிடத்தை கொக்கு கூறவே பிப்பலா, சுகர்மா இருக்குமிடம் வந்து சேர்ந்தான். சுகர்மா தன் பெற்றோர்களை உபசரித்துக் கொண்டிருந்தான். உபசரணை முடித்த சுகர்மா வெளியே வந்தவுடன் "ஒ பிப்பலா இந்த உடம்பை வருத்தி 3,000 ஆண்டுகள் செலவு செய்து என்ன பயனைப் பெற்றாய்? நான் உன்னைப் போல் தவம் செய்ய வில்லை. வேதங்களைக் கரைத்துக் குடிக்கவில்லை. ஆனாலும் இந்திராதி தேவர்கள் நான் அழைத்தால் இங்கு வந்து நிற்பார்கள். அதுமட்டுமல்ல, உன்னிடம் பேசிய கொக்கு பிரம்மனே ஆவார். இன்னும் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புகிறாயா?” என்று கேட்டான் சுகர்மா. இந்திரன் முதலானவர்களை அங்கு வருமாறு செய்த சுகர்மா 'என்னுடைய சக்தியைக் காட்டவே இவர்களை இங்கு வரவழைத்தேன்’ என்று கூறினான். இதற்கு மேலும் உனக்கு ஒரு விளக்கம் தருவதற்கு யயாதியின் கதையைச் சொல்கிறேன், கேள்’ என்றான்.

யயாதியின் கதை

இக்கதை முன்னரே பிரம்ம புராணத்தில் சொல்லப் பட்டது. அங்குச் சொல்லப்பட்டதற்கும், இங்குச் சொல்லப் பட்டதற்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாட்டை மட்டும் இங்குக் குறிக்கலாம். பிரம்ம புராணத்தில் புரு என்ற தன் மகனிடம் தன் முதுமையைக் கொடுத்து அவன் இளமையை யயாதி வாங்கியதற்குக் காரணம், உலகைச் சுற்றிப் பார்க்க என்று கூறப்பட்டுள்ளது. இங்குள்ள கதைப்படி யயாதி தன் முதுமையை மகன் புருவிடம் கொடுத்துவிட்டு அவன், இளமையைப் பெற்றுக் கொண்டதற்குக் காரணம் ரதியின் மகளான அஷ்ருவிந்துமதியை மணந்து கொள்வதற்காக என்பதாகும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
திவ்விய தேவியின் கதை

பிருகு முனிவரின் வழியில் 'சயவனன் என்ற முனிவன் தோன்றினார். நிறைந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்று நினைத்தார். அதைப் பெறுவதற்குரிய சிறந்த வழி தீர்த்த யாத்திரை செல்வதுதான் என்ற முடிவுக்கு வந்தார். பல ஊர்கட்குச் சென்று பல தீர்த்தங்களில் நீராடி விட்டு நர்மதை ஆற்றின் தென்கரையில் உள்ள அமரகந்தகா என்ற ஊரின் எல்லையில் உள்ள ஒர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்பொழுது அம்மரத்தின் கிளைகளில் ஒரு கிளிக் குடும்பம் வசித்து வந்தது. ஆண் கிளியின் பெயர் குஞ்சலா. இக்கிளி தன் மனைவி, நான்கு மகன் கிளிகளுடன் வசித்து வந்தது. பிள்ளைகளுள் மூத்த கிளியாகிய "உஞ்வலா காலை இரை தேடச் சென்று தாய் தந்தையருக்கு வேண்டுமான இரையைத் தேடிக் கொண்டு மாலை வரும். அந்த உணவை மற்ற கிளிகள் பகிர்ந்து சாப்பிடும். சயவன முனிவர் அங்கு தங்கியிருந்த நேரத்தில் மேலே உள்ள கிளிக் குடும்பத்தில் நடந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

குஞ்சலா கிளி (தந்தை): மகனே உஞ்வலா! இன்று எங்கு இரை தேடப் போயிருந்தாய்?

உஞ்வலா: தந்தையே! பிளக்ஷத்தீவு என்ற பகுதிக்குத் தான் நான் இரைதேடச் செல்வது வழக்கம். அதை ஆள்கின்ற மன்னன் திவோதசா என்பவன் ஆவான். அவனுக்கு திவ்ய தேவி என்ற ஒரு அழகான பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்ய ரூபா நாட்டின் அரசன் சித்ரசேனனைத் தேர்ந்தெடுத்தார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்குரிய சடங்கும் நடந்தது. இது நடந்த சில நாட்களில் சித்ரசேனன் இறந்து விட்டான். அடுத்து ரூபசேனன் என்ற மன்னனை நிச்சயித்துச் சடங்குகள் நடைபெற்றன. திருமணத் தேதிக்குள் அவனும் இறந்து விட்டான். இப்படியே 21 அரசர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக நிச்சயம் செய்யப்பட அத்தனை பேரும் மடிந்து விட்டனர். அச்சமடைந்த திவ்யதேவியின் தந்தை தனித்தனியாக நிச்சயம் செய்யப்பட்டால் ஏற்படும் ஆபத்தை மனத்தில் கருதி, பெண்ணுக்கு சுயம்வரம் என்று ஒரு நாளைக் குறிப்பிட்டான். பல அரசர்களும், அரசகுமாரர் களும் வந்து கூடினர். என்ன காரணத்தாலோ சுயம்வரம் தொடங்கு முன்னரே கூடியிருந்தவர்களுள் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கொன்று கொண்டனர். அப்பா, ஏன் அந்தப் பெண்ணுக்கு இப்படி நடந்தது என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

குஞ்சலா: மகனே! அந்த ரகசியம் எனக்கு நன்றாகத் தெரியும். வாரணாசியில் சுதிரா என்றொரு வைசியன் இருந்தான். மிகவும் நல்லவனும், நல்வழி நடப்பவனுமாகிய அவனுக்கு சித்ரா என்றொரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் தீயவள். யாருடனாவது தீய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருப்பதும், சமயம் நேரும்போதெல்லாம் தன் கணவனை அவமானப்படுத்துவதும் அவள் பொழுது போக்காக இருந்தது. அவள் கொடுமை தாங்காது சுதிரா மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான். இது பொறுக்க மாட்டாமல் சித்ரா வீட்டை விட்டு ஒடிக் கொலை, கொள்ளை, களவு முதலியவற்றைச் செய்கின்ற கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டாள். தானே தலைமை வகித்துப் பலரையும் கொன்று தீர்த்தாள். காலம் வந்த பொழுது அவள் இறந்துவிட அவள் ஆன்மா எமலோகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பல தண்டனைகளை அனுபவித்த பிறகு பிளக்ஷத்தீவு மன்னனுடைய மகளாகப் பிறந்தாள். அவள் செய்த கொலைகள் காரணமாக இப்போது அவள் வாழ்க்கையை நாசப்படுத்த அவளுக்கு மணம் பேசப்பட்ட அத்தனை ராஜாக்களும் இறந்தார்கள்.

உஞ்வலா: தந்தையே! எனக்கு ஒரு சந்தேகம். இத்துணை கொலைகள் செய்து நரகவேதனை அனுபவித்த இவள் ஒரு சாதாரணப் பிறப்பு எடுக்காமல் எப்படி பிளக்ஷத்தீவு மன்னனுக்கு மகளாகப் பிறக்க முடிந்தது?

குஞ்சலா: மகனே! மிக அருமையான கேள்வியைக் கேட்டாய். இந்தக் கேள்வியை நான் உன்னிடம் எதிர் பார்த்தேன். அதற்கான காரணம் உனக்குச் சொல்வேன். இத்துணை கொலைகள் செய்து வாழ்க்கை நடத்தி யிருந்தாலும், ஒரு நாள் இவள் வீடு தேடி, உணவு கேட்டு ஒரு முனிவர்
வந்தார். தன் தீய குணங்களை எல்லாம் மறந்து விட்டு அவரை வரவேற்று பாதபூஜை செய்து அவருக்கு உணவும் தந்தாள். அந்தப் புண்ணியம்தான் அரசன் மகளாகப் பிறக்கச் செய்தது.

உஞ்வலா: தந்தையே! அந்தப் பெண்ணுக்குத் தன் பாவங்களிலிருந்து வெளியேறி நற்கதி அடைய வழி உண்டா என்பதைச் சொல்ல வேண்டுகிறேன்.

குஞ்சலா: உண்டு மகனே! அவள் எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குச் சென்று விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இயற்றினால் அவள் உய்கதி அடைய முடியும். அவளிடத்தில் அன்பு வைத்திருக்கும் நீ நாளை அங்கு செல்லும் பொழுது, அவளைக் கண்டு இதனைச் சொல்வாயாக.

நிறம் மாறிய அன்னங்கள்

ஆலமரத்தின் மேல் குடியிருந்த கிளிக் குடும்பத்தின் தலைவன் குஞ்சலா தன் இரண்டாவது பிள்ளையாகிய சமுஜ்வலாவிடம் பேசத் தொடங்கிற்று.

குஞ்சலா (தந்தை): என் இரண்டாவது மகனே, சமுஜ்வலா! நீ எப் பக்கம் இரை தேடப் போகிறாய்? நீ ஏதாவது விசேஷத்தைக் கண்டாயா?

சமுஜ்வலா (மகன்): தந்தையே! வட திசையில் இமயத்தில் இருக்கும் மானசரோவர் என்ற ஏரிக்குத்தான் இரை தேடிச் செல்கிறேன். ஒருமுறை நான் அங்கு இருந்தபொழுது முழுவதும் கருநிறம் வாய்ந்த ஒரு பெரிய அன்னப் பறவையும், அதன் பின்னர் அதே கருநிறம் பொருந்திய பல அன்னங்களும் மானசரோவருக்குள் வந்தன. சற்று நேரத்தில் உடல் முழுவதும் வெள்ளையும், மூக்கும் காலும் கருப்பாக உள்ள சில அன்னங்கள் வந்து சேர்ந்தன. இந்தப் பறவைகள் எல்லாம் ஏரியில் நீந்தி விளையாடும் பொழுது மிகப் பெரிய ஒரு ராஜ அன்னமும், 2 துணை அன்னங்களும் மானசரோவர் உள்ளேயிருந்து புறப்பட்டு வெளியே பறந்து சென்று விட்டன. சற்று நேரத்தில் பேய் வடிவுடைய 4 பெண் பூதங்கள் மானசரோவர் கரைக்கு வந்து மிகப் பெரிய குரலுடன் ஒலமிட்டுக் கொண்டே இருந்தன. இதைப் பார்த்த எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. இதுபற்றிய விளக்கங்கள் ஏதேனும் தரமுடியுமா? r

குஞ்சலா (தந்தை): மகனே! இதன் ரகசியத்தை நான் அறிவேன். இதோ உனக்குச் சொல்லுகிறேன். ஒருமுறை நாரதர் இந்திரலோகம் சென்றார். இந்திரன் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே, எங்கு சென்றிருந்தீர்கள்?’ என்று கேட்டான். நாரதர், தீர்த்த யாத்திரை சென்றிருந்தேன்’ என்றார். உடனே இந்திரன், 'ரொம்ப நல்லது. எல்லாத் தீர்த்தங்களையும் பார்த்த தாங்கள் அவற்றுள் மிக உயர்ந்தது எது என்று சொல்ல முடியுமா? என்று கேட்க, அனைத்தும் உயர்ந்ததுதான். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்திரன் விரும்பியதால் அனைத்துத் தீர்த்தங்களையும் தன்னிடம் வருமாறு ஆணை யிட்டான். இந்திர சபையில் கங்கை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, புண்யா, காவேரி ஆகிய 58 தீர்த்தங்களுக்கும் தலைவிகளாகிய பெண்களும், பிரயாகை, வாரணாசி, அவந்தி, புஷ்கரா, மதுரா முதலிய 10 நகரங்களின் தலைவிகளும் வந்து நின்றனர். இந்திரன் அவர்களைப் பார்த்துப் பெண் கொலை, சிசுக் கொலை, பிராமணக் கொலை, பசுக் கொலை முதலிய பெரும் பாவங்களைச் செய்தவர்களுள் உங்களில் யாரிடம் வந்தால் அனைத்துப் பாவங்களையும் தீர்க்க முடியும் என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றான். அவர்கள் இத்தனையும் தீர்க்கும் ஒரே தீர்த்தத்தையோ ஒரே நகரையோ எங்களால் குறிப்பிட்டுக் காட்ட முடியாது. ஒன்றை மட்டும் சொல்ல முடியும். மிகவும் தெய்வீகமானது என்று சொல்லக் கூடியவை பிரயாகை, புஷ்கரா, அர்க்ய தீர்த்தா, வாரணாசி என்பனவாகும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையும் உண்டு. பாஞ்சால நாட்டில் வாழ்ந்த விதுரன் மிக்க கோபத்தால் ஒரு பிராமணனைக் கொன்று விட்டான். அதன்பிறகு தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளத் தீர்த்த யாத்திரை புறப்பட்டான். போகும் வழியில் தன் ஆசிரியரைக் கொன்ற சந்திரசர்மா என்பவனைச் சந்தித்து இருவருமாக யாத்திரை தொடங்கினர். மணம் செய்து கொள்ளக் கூடாத பெண்ணை மணம் செய்து கொண்ட வேதசர்மா என்பவனும் இந்த இருவருடன் சேர்ந்து கொண்டான். வஞ்சுலா என்ற குடிகாரனும் இம்மூவருடன் சேர நால்வரும் தங்கள் பாவம் போக்கும் தீர்த்தத்தை நாடிச் சென்றனர். இந்த நால்வரும் வழியில் ஒரு முனிவரைச் சந்தித்துத் தங்கள் கதைகளைச் சொல்லி எந்தத் தீர்த்ததில் நீராடினால் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள முடியும்? என்று கேட்டனர். அவர் பிரயாகை, புஷ்கரா, அர்க்யதீர்த்தா, வாரணாசி என்ற நான்கையும் கூறி அங்கே சென்றால் உங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம் என்றனர். இவர்கள் நால்வரும் அங்கெல்லாம் சென்று நீராடினர். அவர்கள் பாவம் போகவில்லை. அதன் எதிராக, இவர்கள் பாவம் காரணமாக அந்த நான்கு இடங்களும் தூய்மையை இழந்தன. இந்த நான்கு தீர்த்தங்களும் கறுப்பு அன்னங்களாக வடிவெடுத்து, இந்த பாபிகளைப் பின் தொடர்ந்தன. இந்த நால்வரும் எங்கெங்கு சென்று குளித்தார்களோ அந்தத் தீர்த்தங்களெல்லாம் பாவப்பட்டுக் கறுப்பு அன்னங்களாக மாறி இவர்களைப் பின் தொடர்ந்தன. இவர்கள் நீராடாத தீர்த்தங்களும் என்ன நடக்கிறதென்று பார்க்கத் தாங்களும் அன்னப்பறவை வடிவெடுத்து இவர்களைத் தொடர்ந்தன. இவர்கள் பாவம் படாததால் அவை வெண்மையான அன்னமாக இருந்தன. இந்த முறையில் 64 தீர்த்தங்கள் கறுப்பும் வெள்ளையுமான 64 அன்னங்களாக இந்த நால்வரைத் தொடர்ந்தன.

இறுதியாக, இந்த நால்வரும் மிகப் புனிதமான மானசரோவர் நதியில் குளிக்க மானசரோவரும் தூய்மை கெட்டு அதுவும் ஒரு கரிய மிகப் பெரிய அன்னப்பறவையாக வடிவெடுத்தது. இறுதியாக இந்த நான்கு பாபிகளும் நர்மதா நதியும், ரேவா நதியும் ******* ஆகின்ற இடத்தில் குளித்தனர். உடனே அவர்கள் பாவங்கள் அவர்களை விட்டு நீங்கின. இதைப் பார்த்த கறுப்பு அன்ன வடிவில் இருந்த ஏனைய தீர்த்தங்களும் அங்குக் குளித்தவுடன் தூய்மையான நிறம் பெற்றன. மானசரோவரில் நின்று அழுது கொண்டிருந்த நான்கு பெண் பூதங்களும் இங்கு குளித்தவுடன் பாவங்கள் நீங்கி இறந்தனர். இந்த இடம் 'குப்ஜ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. மகனே! நீ பார்த்த காட்சி இதுதான் என்பதை இப்பொழுது அறிந்து கொண்டிருப்பாய். இது ஒரு உருவகக்கதை (allegory) என்பதை நீ அறிய வேண்டும்” என்று தந்தைக் கிளி கூறி முடித்தது.

மூன்றாவது கிளிக்குஞ்சு சொன்ன கதை

தந்தைக் கிளியான குஞ்சலா தனது மூன்றாவது மகனான விஞ்வலாவைப் பார்த்து, "மகனே நீ எங்கு இரை தேடப் போகிறாய்? நீ பார்த்த அதிசயம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டது.

மூன்றாவது மகன்: ஆம் தந்தையே, நான் இரை தேடுவதற்காகச் சுமேரு மலையில் அனந்த கானகம் என்ற ஒரு வனம் உள்ளது, அப்பக்கம் தினமும் செல்கிறேன். மிக அற்புதமான இடமாகிய அதில் இயற்கை எழில் பூத்துக் குலுங்குகிறது. ஒரு அற்புதமான குளமும் இருக்கிறது. அந்தக் குளத்தில் பூக்கள், அன்னப்பறவைகள் ஆகியவை நிறைந் துள்ளன. கந்தர்வர்கள், வித்தியாதரர்கள், ஏனைய தேவர்கள் ஆகிய பலரும் தினமும் அங்கு வருகிறார்கள். பொன் மயமான தேவலோகத்து விமானங்களும் அங்கு வருகின்றன. குளத்தின் பக்கத்தில் ஒரு மரத்தில் அமர்ந்து குளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று மிக ஒளி பொருந்திய விமானம் ஒன்றில் ஒரு அழகிய இளைஞனும், ஒரு பெண்ணும் வந்து இறங்கினார்கள். ஒளி படைத்த தேகமுடைய அவ்விருவரும் அக்குளத்தில் நீராடி மிக அற்புதமாக உடைகளை அணிந்து கொண்டனர். கையில் ஆளுக்கொரு பெரிய கத்தியை ஏந்திக் கொண்டனர். இந்த அமைதியான சூழ்நிலையில் கத்தி எதற்கு என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கொடுரமான காட்சியைக் கண்டேன். குளத்துக் கரையில் இரு சடலங்கள் கிடந்தன. அவர்கள் யார் என்று நான் பார்த்த பொழுது வியந்தேன். விமானத்திலிருந்து இறங்கிய அந்த இருவரின் முகம், அங்க அடையாளங்கள் அப்படியே அந்த சடலங்களில் இருந்தன. நான் ஆச்சரியப்பட்டுக்
கொண்டிருக்கும்போதே மிகக் கொடுமையான செயல் ஒன்று நடந்தது. அந்தப் பெண், பெண் சடலத்தின் சில பகுதிகளை வெட்டித் தின்று கொண்டிருந்தாள். அந்த ஆண்மகன், அந்த ஆண் சடலத்தின் சில பகுதிகளை வெட்டித் தின்று கொண்டிருந்தான். திடீரென்று இரண்டு அழகிய பெண்கள் அங்கே வந்து இவர்கள் செய்யும் செயலைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்தனர். பேய் வடிவம் கொண்ட இரு பெண்கள் ‘எங்களுக்கும் கொஞ்சம் கொடு’ என்று இவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். வெட்டிய தசையைத் தின்று முடித்தவுடன், கத்தியை வைத்து விட்டு அவ்விருவரும் விமானத்தில் சென்று விட்டனர். இந்தக் கொடுமையான நாடகம் தினமும் நடைபெறுகிறது. இதன் அடிப்படை எனக்கு ஒன்றும் புரியவில்லை. தாங்கள் இதனை விளக்க வேண்டுகிறேன்.

தந்தை: ஆம் மகனே! இதன் அர்த்தம் எனக்குத் தெரியும். நான் சொல்வதை கவனமாகக் கேள். சோழநாட்டைச் சுவாகு என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் மனைவி பெயர் தார்க்ஷி, மன்னன் தன் குருவாகிய ஜைமினி முனிவரின் உதவியுடன் பல யாகங்களைச் செய்தான். ஒருநாள் ஜைமினி முனிவர் அரசனைப் பார்த்து, இந்த யாகங்கள் செய்வதைவிட அதிக புண்ணியம் தான, தருமம் செய்வதால் கிடைக்கும். ஆகவே, இவற்றைச் செய்வதைவிட என் போன்றவர்களுக்கு தானம் கொடுப்பது மிக நல்லது என்றார். அரசன் குருவைப் பார்த்து, அவ்வாறு செய்வதால் எனக்கு என்ன பயன் கிட்டும்? என்று கேட்டான். குரு, உனக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். அப் புண்ணியத்தின் உதவியால் நீ சொர்க்கலோகம் செல்லலாம் என்றார். அரசன் அவரைப் பார்த்து, "நான் சொர்க்கலோகம் சென்றால் நிலையாக அங்கேயே இருந்துவிட முடியுமா? என்று கேட்டான். குரு, 'அது முடியாது. உன் புண்ணியம் தீர்ந்தவுடன் மறுபடியும் உலகில் பிறந்துதான் ஆகவேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட அரசன், தாற்காலிகமான பலனை அளிக்கும் இந்தப் புண்ணியம் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டான். அதன் பிறகு மன்னன் நிலையான இன்பத்தைப் பெற என்ன வழி என்பதை ஆராய்ந்து, விஷ்ணுவை தியானிப்பதுதான் நிலையான இன்பத்தைத் தரும் என்பதைக் கண்டு கொண்டான். உடனே, அரசைத் துறந்துவிட்டு அரசனும், அவன் மனைவியும் காடு சென்று விஷ்ணுவை தியானித்துக் கடுந்தவம் இயற்றினர். உரிய காலத்தில் அவர்கள் இருவரும் இந்த உடலை நீத்து 'விஷ்ணுலோகம் சென்றனர். மிக அற்புதமான அந்த உலகத்தில் வாழத் தொடங்கிய இருவருக்கும் ஒரு பெரிய பிரச்சனை உருவாயிற்று. அங்கே வாழ்ந்த மற்றவர்கள் எதையும் உண்பதுமில்லை; தண்ணிர் முதலிய வற்றைப் பருகுவதுமில்லை. காரணம் அவர்கட்குப் பசி, தாகம் என்பதில்லை. ஆனால் மன்னனையும், அவன் மனைவியையும் பசியும், தாகமும் வாட்டிற்று. செய்வதறியாது திகைத்த அவர்கள் இறுதியாக வாமதேவன் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்த பர்ணசாலையைக் கண்டு (மன்னனும், அவன் மனைவியும்) தம் பிரச்சனையை அவரிடம் கூறினர். அவர், 'நீ கடுந்தவம் இயற்றியது உண்மைதான். அதனால் விஷ்ணுலோகம் வந்தாய். ஆனால் நீ உயிருடன் இருக்கும் போது, பசியோடும் தாகத்தோடும் வந்த ஏழைகளின் பசியையோ, தாகத்தையோ போக்க மறுத்துவிட்டாய். அவ்வாறு பிற உயிர்கட்கு இவற்றைப் போக்கி இருந்தால் அந்தப் பசியும், தாகமும் இப்போது உனக்கிராது என்று கூறினார். இதை அறிந்து கொண்ட அரசன் அவரைப் பார்த்து, இப்பொழுது இது தீர என்ன வழி? என்று கேட்டான். வழி ஒன்றுமில்லை. காட்டில் நீங்கள் இருவரும் விட்டு வந்த சடலங்கள் இப்பொழுது சுமேருவில் உள்ள குளக்கரையில் உள்ளன. அங்கு சென்று உங்கள் உடலையே வெட்டி உண்டு உங்கள் பசியைத் தணித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். வேறு வழியில்லை என்பதை அறிந்த அரசன் இதற்கு எப்பொழுது விமோசனம்? என்று கேட்டான். முனிவர், என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவர் விஷ்ணுவின் மந்திரங்களை உங்கள் காதுகளில் படும்படியாகப் பாடினால், அதைக் கேட்டவுடன் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறினார். அந்த மன்னனும் மனைவியும், விஷ்ணுலோகத்தில் இருந்து தினமும் வந்து தங்கள் உடல்களைத் தாங்களே வெட்டித் தின்பதைத் தான் நீ பார்த்தாய்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
எங்களுக்குக் கொஞ்சம் தா!' என்று கேட்கும் இரண்டு பேய்களும் பசி, தாகம் என்பவையாகும். கைகொட்டிச் சிரிக்கும் இரண்டு பெண்களும் பிரக்ஞை, சிரத்தை என்பவையாகும்.

மகனே! நாளைக்கு அந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன். நீ சென்று அவர்கள் காதில் படும்படி இந்த மந்திரத்தைப் பாடி அவர்கள் துயரம் நீங்க உதவி புரிவாயாக. மறுநாள் அந்தக் குஞ்சுக்கிளி அரசன், அவன் மனைவி இருவரும் பிணத்தைத் தின்ன வரும்பொழுது அவர்கள் காதில் படும்படி அந்த மந்திரத்தைப் பாட அவர்கள் இருவரும் இக்கொடுமை யிலிருந்து மீண்டு விஷ்ணுலோகம் சென்றனர்.

அழுகையில் மலர்ந்த மலர்கள்: ஆலமரத்தில் இருந்த குஞ்சலா என்ற தந்தைக் கிளி. கபிஞ்சலா என்ற நான்காவது மகனைப் பார்த்து, மகனே! நீ எங்கேயிருந்து வருகிறாய்? ஏதாவது அதிசயத்தைப் பார்த்தாயா என்றது.

கபிஞ்சலா: ஆம் தந்தையே, நான் தினமும் கைலாச மலைக்குச் செல்கிறேன். கைலாயம் மிக அற்புதமான அழகுடன் இயற்கை எழில் கொஞ்சும் நிலையில் உள்ளது. கங்கை முதல் நூற்றுக்கணக்கான புண்ணிய நதிகள் அங்கே ஒடுகின்றன. கைலாயத்தின் ஒரு புறத்தில் ஒரு பெரிய ஏரியில் நீர் நிறைந்துள்ளது. அந்த ஏரியில் மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. அதன் ஒருபுறத்தில் ஒரு கற்பாறை உள்ளது. அதன் மேல் ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். அவள் கண்ணிர் ஏரியில் வந்து விழுந்தவுடன் தாமரை மலர் போன்ற ஒரு மலர் பூக்கின்றது. அந்தப் பாறையின் பக்கத்தில் சிவனுடைய விக்கிரகம் உள்ளது. அந்த மலர்ந்த மலரை ஒரு தவசி எடுத்துச் சிவனுக்குச் சாத்துகிறார். பல மலர்களைச் சாத்திய பிறகு பாடுகிறார்; நடனம் ஆடுகிறார். பிறகு ஓவென்று கதறி அழுகிறார். அவர் உடம்பு வெறும் எலும்புக் கூடாகத் தான் இருக்கிறது. காய்ந்து போன சருகுகளையே அவர் உண்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண் ஏன் அழுகிறாள்? அவள் கண்ணிர் ஏன் மலராக மலருகிறது? அந்தத் தவசி ஏன் அழவேண்டும்? இதன் விளக்கத்தை அறிய வேண்டுகிறேன்.

தந்தை: மகனே கபிஞ்சலா! கைலாயத்தில் மிக அற்புதமான ஒரு நந்தவனம் உண்டு. மிக அற்புதமான மரங்கள் அங்கே பூத்துக் குலுங்கும். ஒருநாள் சிவனும், பார்வதியும் அதைப் பார்க்க வந்தனர். எல்லா மரங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்த பார்வதி ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்து அதிசயித்து நின்றாள். இது என்ன மரம்?' என்று சிவனைக் கேட்டாள். சிவன், இது கற்பக மரம் என்ன வேண்டுமென்று கேட்கின்றாயோ அதைக் கொடுக்கும் என்று கூறியவுடன், பார்வதி அந்த மரத்தைப் பார்த்து, மிக அழகான பெண்ணொருத்தி வேண்டும் எனக் கேட்டாள். அந்தக் கணமே ஈடு இணையில்லா அழகுடன் ஒரு பெண் வந்து பார்வதியை வணங்கி, ‘என் பணி யாது?’ எனக் கேட்டாள். பார்வதி, 'இந்த வனத்திலேயே இருந்து வருவாயாக, நகுஷன் என்ற மன்னன் உன்னை வந்து மணம் செய்துகொள்வான்' என்று கூறிவிட்டு, அசோகசுந்தரி என்று அப்பெண்ணிற்குப் பெயரிட்டு மறைந்தாள். அசோகசுந்தரி அந்த வனத்தில் இருந்து வந்தாள்.

விப்ரசித்தி என்ற அசுரனுக்கு ஹீண்டா என்ற மகன் இருந்தான். அவன் ஒருநாள் கைலாசத்தில் உள்ள நந்தவனத் திற்குச் சென்றான். உடனே அசோகசுந்தரிமேல் காதல் கொண்டு தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு வற்புறுத்தி னான். அசோகசுந்தரி மறுக்கவே பல மந்திர தந்திரங்கள் தெரிந்த ஹீண்டா ஒரு பெண் வடிவு எடுத்து, அவளைச் சந்தித்தான். அப் பெண் வடிவை யார் என்று அசோகசுந்தரி கேட்க, அப் பெண் தான் ஒரு விதவை என்றும், தன் ஆசிரமத்தில் தவம் புரிவதாகவும் கூறிவிட்டு, அசோக சுந்தரியைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்தாள். அந்த வார்த்தை களை நம்பிக் கொண்டு அப் புதிய பெண்ணுடன் சென்ற அசோகசுந்தரிக்குப் பெரிய இடையூறு வந்தது. தன் இடம் போனதும், ஹீண்டா தன் பழைய வடிவை எடுத்துக்கொண்டு அசோகசுந்தரியை பலாத்காரம் செய்ய முயன்றான். தன் கணவன் நகுஷன் வந்து கொல்வான் என்று கூறித் தப்பித்து வந்தாள்.
இது நடைபெறுகின்ற காலத்தில் நகுஷன் பிறக்கவே இல்லை. அயு என்ற அரசனுக்கும் இந்துமதி என்ற அரசிக்கும் பிறந்தவன் நகுஷன். நகுஷன் தன்னைக் கொல்லப் பிறந்தவன் என்பதனை அறிந்த ஹீண்டா அந்த இளம் பிள்ளையைக் கடத்திச் சென்றுவிட்டான். தன் வீட்டில் சமையல் செய்யும் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்துச் சமைக்கச் சொன்னான். குழந்தைமேல் இரக்கப்பட்ட அவள் மான் கறியை சமைத்து ஹீண்டாவிற்குக் கொடுத்துவிட்டு, குழந்தையை எடுத்துச் சென்று வசிட்டரிடம் ஒப்படைத்தாள். ஒர் அரசனுக்கு வேண்டிய அனைத்துக் கலைகளையும், ஆயுதப் பிரயோகங் களையும் வசிட்டர் நகுவுனுக்குக் கற்பித்தார். எதைக் கண்டாலும் பயந்து கொண்டிருந்த குழந்தைக்கு ந + ஹூஷன் = நகுஷன் (அச்சமில்லாதவன்) என்ற பெயரைத் தந்தார். நாளாவட்டத்தில் நகுஷன் பெரியவனாக அசோகசுந்தரியைத் திருமணம் செய்துகொண்டான். அவளை அடைவதற்காகச் செய்த போரில் ஹீண்டாவைக் கொன்றுவிட்டான். நகுஷனுக்கும், அசோகசுந்தரிக்கும் பிறந்த குழந்தைதான் பிரசித்தி பெற்ற யயாதி ஆவான்.

இறந்து போன ஹீண்டாவின் மகன் விகுண்டன் பெரியவனாகி தன் தந்தையைக் கொன்ற நகுவடினைக் கொல்வதற்காக சக்தி பெற விஷ்ணுவைக் குறித்துத் தவம் புரிந்தான். அத் தவம் பலித்தால் அதனால் ஏற்படப் போகும் பெரிய பிரச்சனை கருதி விஷ்ணுவே தவத்தைக் கலைக்கப் புறப்பட்டார். ஒர் அழகிய பெண் வடிவை எடுத்துக் கொண்டு நடமாடினார். அந்தப் பெண்ணின் அழகைக் கண்ட விகுண்டன், அவள் தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டினான். அப்பெண் 'தடையொன்றுமில்லை. ஆனால் ஏழுகோடி கமோடா பூக்களைக் கொண்டு சிவனை அருச்சித்துவிட்டு அதை ஒரு மாலையாகக் கட்டி என் கையில் கொடுத்தால் உன்னை மணந்து கொள்வேன்' என்றாள். சரி என்று ஒப்புக்கொண்ட விகுண்டன் கமோடா புஷ்பங்களைத் தேடினான். காட்டில் அப்படி ஒரு பூ இல்லை என்று அறிந்து கொண்ட நிலையில், தன் குல குருவான சுக்ராச்சாரியாரை நாடினான். அவர் இது மண்ணில் பூக்கும் பூ அன்று என்று கூறிவிட்டு, 'பாற்கடல் கடைந்த பொழுது வெளிவந்தவள் கமோதா என்ற பெண். இவள் கங்கைக் கரையில் உள்ளாள். இவள் சிரித்தால், இவள் சிரிப்பிலிருந்து மஞ்சள் நிறமுடைய கமோதா பூக்கள் தோன்றும். அதைச் சிவனுக்கு அர்ச்சித்தால் நினைத்ததெல்லாம் கைகூடும். ஆனால் அப்பெண் அழுதால் மணமில்லாத சிவந்த பூக்கள் வெளிவரும். அதைத் தொடவே கூடாது என்றார்.

கங்கைக் கரையில் கமோதாவைத் தேடிச் செல்லப் புறப்பட்டான், விகுண்டன். நாரதர் எதிரே வந்து, நீ அவள் இருக்கும் இடம் தேடிச் செல்ல வேண்டாம். அவளிடமிருந்து வரும் பூக்கள் கங்கையில் மிதந்து வரும். அவற்றை எடுத்து நீ சிவனுக்கு அர்ச்சித்தால் அது போதும்! என்று கூறினார். விகுண்டன் அதை ஏற்றுக் கொண்டவுடன் நாரதர் கமோதாவிடம் சென்று 'விஷ்ணு உலகத்தில் சென்று பிறக்கப் போகிறார் என்று கூறிவிட்டார். அதைக் கேட்ட கமோதா, விஷ்ணு அவருடைய லோகத்தில் இருந்து பூலோகம் போகிறார் என்பதைக் கேட்டு, கண்ணிர் சிந்தி அழலானாள். கங்கையில் வந்த பூக்களை எடுத்து சிவ பூசை செய்யத் துவங்கிய விகுண்டன் சுக்ராச்சாரியார் சொன்னதை மறந்துவிட்டான். பூக்கள் கங்கையில் வருவதைப் பார்த்து மகிழ்ந்த அவன், இது கமோதாவின் அழுகையில் பிறந்ததா, சிரிப்பில் பிறந்ததா என்று அறிந்து கொள்ளும் அறிவை இழந்து தொடக் கூடாத இந்தப் பூக்களை எடுத்துச் சிவனுக்கு அர்ச்சிக்கத் துவங்கினான். சிவனுக்கு ஆகாத இந்தப் பூக்களை அர்ச்சித்த வுடன் பார்வதி தோன்றித் தன் சூலாயுதத்தால் விகுண்டனைக் கொன்று விட்டாள்.

தந்தை குஞ்சலாவின் கதை

ஆலமரத்தினடியில் அமர்ந்திருந்த சாயவனன், இக் கிளிகளுக்குள் நடந்த உரையாடலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போய் தந்தைக் கிளியாகிய குஞ்சலாவைப் பார்த்து, நீ யார்? எப்படி இவ்வளவு விஷயங்களை அறிந்திருக்கிறாய் என்று கேட்டவுடன் குஞ்சலா தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வித்யாதரன் என்ற பிராமணன் வாசு சர்மா, நாம சர்மா, தர்ம சர்மா என்ற தன் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான். முதலிரண்டு பிள்ளைகளும் தந்தையின் அடிச் சுவட்டைப் பின்பற்றி சாத்திரங்களைப் படித்தனர். ஆனால் மூன்றாவது பிள்ளையாகிய தர்ம சர்மாவிற்கு இதில் நாட்டம் செல்லவில்லை. சோம்பேறியாகவே பொழுதைக் கழித்து விட்டான். நாளாவட்டத்தில் மக்கள் அவனை வெறுக்கத் தொடங்கினர். மக்களின் வெறுப்புணர்ச்சி ஒரு எல்லையைக் கடந்ததால் மனம் நொந்து போன தர்ம சர்மா எப்படியாவது கல்வி கற்க வேண்டுமென நினைத்து ஒரு தக்க ஆசிரியரைத் தேடி அலைந்தான். நல்லாசிரியர் கிடைக்கவே தர்ம சாத்திரங் களைக் கற்றுக் கொண்டான். அப்பொழுது ஒரு வேடன் ஒரு கிளியைப் பிடித்துக்கொண்டு வந்து தர்ம சர்மாவிடம் கொடுத்தான். அன்பு செலுத்த யாரும் இல்லாத நிலையில் இருந்த தர்ம சர்மா, தன் அன்பு முழுவதையும் அக்கிளியிடம் செலுத்தி வளர்த்தான். துரதிருஷ்டவசமாக அக்கிளியை ஒரு பூனை கொன்று விட்டது. எல்லை மீறிய துயரம் அடைந்த தர்ம சர்மா ஒயாது கிளியையே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் சாக நேர்ந்த பொழுது கூட கிளியின் நினைவாகவே இறந்தான். கிளியின் நினைவோடு இறந்ததால் மறுபிறப்பில் கிளியாகப் பிறந்தான். அந்தக் கிளி வேறு யாருமல்ல, நான்தான் என்று தந்தைக் கிளி குஞ்சலா, சாயவனனிடம் சொல்லி முடித்தது.

விஷ்ணுலோகம் சென்ற எலியின் கதை

திரேதாயுகத்தில் ஒரு விஷ்ணுவின் கோயிலில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஊரில் வாழும் ஒரு பக்தன் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி விட்டுப் போனான். அவன் போனபிறகு திரி கொஞ்சம் மங்கி எரிந்தது. ஆனால் விளக்கில் இருந்து நெய் வாசம் வெகுதூரம் பரவியது. இந்த வாசனை யால் இழுக்கப்பட்ட எலி, மெல்ல வந்து விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க ஆரம்பித்தது. அதன் பயனாக திரி சற்று உயரத்திற்கு வர திடீரென்று அதிக வெளிச்சம் பரவியது. இந்த அதிக வெளிச்சத்தால் விஷ்ணுவின் சிலை. பளிச் சென்று தெரிய ஆரம்பித்தது. சிலையைச் சுற்றியிருந்த இருள் அகன்றது. காலாந்திரத்தில் விளக்கில் இருந்து நெய்யைக் குடித்துச் சென்று எதிர்பாராமல் திரியைத் துண்டிச் சென்ற எலியை ஒரு பாம்பு கடித்து இறந்தது. யம தூதர்கள் வந்து எலியின் ஆவியைக் கட்டி இழுத்துக்கொண்டு யம லோகம் செல்லப் புறப்பட்டனர். திடீரென்று விஷ்ணுவின் பணியாளர் பலர் அங்கே வந்தனர். எமபடர்களைப் பார்த்து, நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்! இந்த எலி ஒருநாள் கோயிலுக்குள் இருக்கும் விளக்கைத் தூண்டி, விஷ்ணுவின் சிலைக்குமேல் அதிகமாக ஒளி படரச் செய்தது. இந்தத் தொண்டினால் அது செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன. என்று கூறிவிட்டு எலியின் ஆவியை விஷ்ணுலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். பலகாலம் விஷ்ணுலோகத்தில் இருந்து மகிழ்ந்த அந்த எலி பின்னர் ஒரு அரசகுமாரியாகப் பிறந்தது. விஷ்ணு கோயிலுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் மிகப் பெரிய பயனை இக்கதை அறிவிக்கிறது.

திரேதாயுகத்தில் ஸ்ரீதரன் என்ற அரசனும், ஹேமப் பிரபாவதி என்ற அரசியும் சுகமாக வாழ்ந்து வந்தனர். எல்லா சுகம் இருந்தும் தங்கட்குப் பிள்ளை இல்லையே என்ற கவலை வாட்டி வதைத்தது. ஒருமுறை ஸ்ரீதரன் வேத வியாசரை சந்தித்துத் தனக்கு ஏன் பிள்ளை இல்லை என்று கேட்டான். உன்னுடைய பூர்வ ஜென்மத்தில் சந்திரன் என்ற பெயருடைய பிராமணனாக வாழ்ந்தாய். இப்பொழுதுள்ள உன் மனைவி, சங்கரி என்ற பெயருடைய உன் மனைவியாக வாழ்ந்தாள். நீங்கள் இருவரும் ஏதோ ஒரு காரியத்திற்காக அவசரமாகப் புறப்பட்டுச் செல்கையில் ஒரு குழந்தை தண்ணிருக்குள் மூழ்கி இறக்கும் நிலையில் இருந்தது. உங்கள் காரியமே முக்கியம் என்று சட்டை செய்யாமல் போனிர்கள். அதனால் இந்த ஜென்மத்தில் உங்களுக்குப் பிள்ளை இல்லாமல் போய் விட்டது என்றார். அதுகேட்ட ஸ்ரீதரன் இப்பொழுது என்ன செய்யலாம் என்று கேட்க, பூசணிக்காய், பொன் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் குழந்தை
பிறக்கும் என்றார். ஸ்ரீதரன் அவ்வாறே செய்து அழகிய பிள்ளை பெற்று வாழ்ந்தான். தருமத்தின் பலன் இது என்று கூறுவது இக்கதை.

லக்ஷ்மி விரதத்தின் சிறப்பு

துவாபரயுகத்தில் செளராஷ்டிரதேசத்தில் பத்ராஷ்ரவன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி பெயர் சுரதி சந்திரிகா. அவர்களுக்குச் சியாமபாலா என்ற பெண் குழந்தை இருந்தது. ஒருநாள் குழந்தை வெளியே விளையாடச் சென்றிருந்தபொழுது இலட்சுமி தேவி ஒரு வயதான பிராமணத்தி வடிவம் கொண்டு அரண்மனைக்கு வந்தாள். அரண்மனைக் காவல்காரன், 'அம்மா, நீ யார்? இங்கு வந்த காரணம் யாது?’ என்று வினவ, அரசியின் பழைய பிறப்பையும், இப்பொழுது அவள் செய்யத் தவறிய சில காரியங்களையும் அவருக்கு நினைவூட்ட வந்தேன்' என்றாள். காவல்காரன், 'அம்மா நீங்கள் சொல்வது புரியவில்லை என்று சொன்னவுடன் இலட்சுமி தேவி விவரமாகப் பின்வருமாறு கூறினாள்:

இப்பொழுது அரசியாக இருக்கும் சுரதி சந்திரிகா, முன் ஜென்மத்தில் ஒரு வைசியனின் மனைவியாக இருந்தாள். எவ்வித நற்பண்புகளும் இல்லாமல் செல்வச் செருக்காக இருந்தாள். கணவனிடம் சண்டை போட்டுக்கொண்டு அவனை விட்டுச் சென்றாள். சென்ற அவளை மனித ரூபத்தில் இருந்த லட்சுமிதேவி, துயரம் நீங்க வேண்டுமானால் இலட்சுமி விரதம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியவுடன் இந்த வைசியன் மனைவி செம்மையான முறையில் இலட்சுமி விரதம் இருந்தாள். அதன் பயனாக அவள் இறந்தவுடன் விஷ்ணு லோகம் சென்று பல காலம் அங்கே வாழ்ந்தாள். புண்ணிய பயன் தீர்ந்தவுடன் இப்பொழுது சுரதி சந்திரிகா என்ற பெயருடன் இந்த அரசனின் மனைவியாக வாழ்கிறாள். இப்பொழுதும் செல்வச் செருக்கில் எல்லாவற்றையும் மறந்து இலட்சுமி விரதம் இருப்பதையும் மறந்து விட்டாள். அதை அவளுக்கு நினைவூட்டத்தான் வந்தேன் என்ற கூறியவுடன் காவல்காரன், உடனே அரசியிடம் சென்று, இந்த பிராமண அம்மாள் சொன்னதைச் சொல்லவே, அரசி அவளை உள்ளே அழைத்து விவரமாக அனைத்தையும் கேட்டாள். இவள் கூறியதைக் கேட்டவுடன் மிகுந்த கோபம் கொண்ட அரசி அவளை அடித்துத் துரத்தி விட்டாள். அழுது கொண்டே வந்த அவளை, தெருவில் விளையாடச் சென்றிருந்த சிறுமி சியாம பாலா ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டாள். பிராமணத்தி நடந்ததைக் கூறியவுடன் குழந்தை விரதம் இருக்கும் முறையை எனக்குச் சொல்லிக் கொடுங்கள், நான் செய்கிறேன் என்றாள். இலட்சுமி விரதம் எப்படி இருக்கவேண்டும் என்பதை பிராமணத்தி சியாமபாலாவிற்குச் சொல்ல, அவளும் அதை அனுஷ்டித்து வந்தாள்.

உரிய காலத்தில் சியாமபாலா, சித்தேஷ்வரா என்பவனின் மகன் மாலதார என்பவனை மணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குப் போய்விட்டாள். குழந்தை போனவுடன் அவள் தாய் தந்தையருக்கு செல்வம் எல்லாம் அழிந்து, வறுமை வாட்டியது. ஒருமுறை அரசன் பத்ராஷ்ரவ தன் மகளைப் பார்க்கச் சென்று நடந்தவற்றைக் கூறியவுடன் மகள் தந்தைக்குச் சிறந்த உணவளித்து, அவர் புறப்படும் பொழுது பொன்னையும், மணியையும் மூட்டையாகக் கட்டிக் கொடுத்தாள். மகிழ்ச்சியோடு மகள் கொடுத்த பரிசினைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து அரசன் பார்த்தான். அனைத்தும் மண்ணாகவும் கல்லாகவும் மாறியிருந்தது. சில நாட்கள் கழித்து அரசி தன் மகளைப் பார்க்கச் சென்றாள். நல்ல வேளையாக இலட்சுமி விரதம் என்று சொல்லக்கூடிய நாளாக அது அமைந்தது. மகளின் பிடிவாதத்தில் இணங்கி அரசியும் இலட்சுமி விரதம் இருந்தாள். இதனால் அவள் இழந்த செல்வத்தை மீட்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினாள். லட்சுமி விரதத்தின் மகிமை இதுவே ஆகும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top