• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பத்ம புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மீண்டு வந்த மகன் கதை

துவாபர யுகத்தில் மிக சக்தி வாய்ந்த தீனநாதன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். எல்லா செல்வங்களும் நிரம்பி யிருந்தும், குழந்தைச் செல்வம் இல்லாமையால் மிக மனம் வருந்திக் காலவ முனிவரிடம் தன் குறையைச் சொல்லி வருந்தினான். அவர் நரபலி இடும் ஒரு யாகத்தைச் செய்து அதில் உறுப்பு அழகுகள் சிறிதும் குறைபாடில்லாத ஒருவனைப் பலியிடுவதானால் உனக்குக் குழந்தை பிறக்கும் என்று கூறினார். உடனே அரசனுடைய ஆணைப்படி பணியாளர்கள் நாடு முழுதும் பலியிடுவதற்குரிய ஒருவனைத் தேடிச் சென்றனர். இறுதியாக தாசபுரா என்ற இடத்தில் கிருஷ்ண தேவா - சுசீலா என்பவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்துள்ள மூன்று பேரைக் கண்டவுடன் பணியாளர் மனம் திருப்தியடைந்தது. அனைத்து அழகுகளும் உடைய மூவரையும் அரசரிடம் அழைத்துச் செல்வது என்ற முடிவுக்கு வந்தனர். தாய், தந்தையர்கள் எவ்வளவு கேட்டும் அவர்கள் இரக்கம் காட்ட மறுத்தனர். இறுதியாக, மூவரில் ஒருவனும் நடுமகனு மாகிய ஒருவனை அழைத்துச் செல்ல ஏற்பாடாயிற்று. மகனை அழைத்துக்கொண்டு பணியாளர் சென்றதும் அத்துயரம் தாங்கமாட்டாத தாய் தந்தையர் கண்களை இழந்தனர். பணியாளரும் பலிக்குரியவனும் செல்கின்ற வழியில் விசுவா மித்திரருடைய ஆசிரமம் குறுக்கிட்டது. விசுவாமித்திரர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்? மிக வருத்தத்தோடு இருக்கும் இந்த இளைஞன் யார்?' என்று கேட்டார். பணியாளர்கள் தாங்கள் வந்த காரியத்தை விளக்க மாகக் கூறினர். விசுவாமித்திரர், "இந்தப் பையனை விட்டு விட்டு அதற்கு பதிலாக என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றார். பலியிடுவதற்கு அழகான இளைஞன் தேவையே தவிர ஒரு கிழவனை அழைத்துப் போவது சரியில்லை என்று நினைத்த பணியாளர்கள் விசுவாமித்திரரை அழைத்துப் போக மறுத்துவிட்டனர். என்றாலும், விசுவாமித்திரர் அரசனிடம் சென்று நரபலி இடுவது தேவையில்லாத ஒன்று என்று விளக்கிக் கூறித் தானே ஒரு யாகத்தைச் செய்து அவனுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்க வழி செய்வதாகக் கூறினார். தான் கூறியபடியே ஒரு யாகத்தைச் செய்து முடித்தார், விசுவாமித்திரர். குழந்தை பிறந்தது. பலிக்காக அழைத்து வரப்பட்டவன் பெற்றோரிடம் திரும்பிச் சென்றான். அவன் வரவைக் கண்ட மகிழ்ச்சியில் திளைத்ததால், பெற்றோரின் கண்பார்வை மீண்டு விட்டது. விசுவாமித்திரர் ஒரு மாபெரும் முனிவர் என்பது விளங்கி விட்டது.

பத்ம புராணத்தின் இறுதிப் பகுதி பலப்பல குட்டிக் கதைகளைப் பேசுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்களைப் பேசுகிறது. இக்கதைகளில் ஒரு பொதுத்தன்மை காணப் படுகிறது. விரதம் இருப்பதின் சிறப்பை அறிந்து அதை மேற்கொண்டாலும், எதிர்பாராதவிதமாக அன்று ஏகாதசி என்று கூடத் தெரியாத நிலையில் பட்டினி இருந்தாலும், இரண்டு சாராரும் விஷ்ணுலோகம் செல்கின்றனர் என்பதே இக் கதைகளின் பொதுத்தன்மை.

அடுத்துள்ள சில கதைகள் விஷ்ணு பக்தி என்று தனியே இல்லாவிட்டாலும், விஷ்ணுவிற்கு அபிஷேகம் செய்த தண்ணீரைக் குடித்த காக்கை விஷ்ணுலோகம் சென்றது. அதிக தாகத்தினால் துளசிச் செடியில் நிறைந்திருக்கின்ற தண்ணிரைக் குடித்த சண்டாளன் விஷ்ணுலோகம் போனான் என்பன போன்ற கதைகள் அமைந்துள்ளன. இந்தக் கதைகள் துவாபர யுகத்திலும், திரேதாயுகத்திலும் நடந்தவை என்று பத்ம புராணம் கூறிச் செல்கிறது.

பத்ம புராணத்தின் முடிவுரையை அதனைத் தொடங்கிய உரோமஹர்ஷனரே எடுத்துச் சொல்கிறார். பத்ம புராணத்தின் ஒரு பாடலைப் படித்தால் அல்லது கேட்டால் ஒருநாள் செய்த பாவம் விலகும். ஒரு அத்தியாயத்தைப் படிக்கவோ, சொல்லவோ கேட்டால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். புராணம் முழுவதையும் படிக்கவோ, கேட்கவோ செய்தால் ஒர் அசுவமேத யாகம் செய்த பயன் கிட்டும் என்று உரோமஹர்ஷனர் கூறியவுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள் மிகவும் திருப்தி அடைந்து தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top