• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 2 - 'புயல்'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்தொன்றாம் அத்தியாயம்

ரஜினிபூர் பைத்தியக்காரி

போலீஸார் வந்த பிறகு சற்று நேரம் வாசலிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். சில நிமிஷங்களுக்கெல்லாம் ராகவனும் ஒரு போலீஸ் உத்தியோகஸ்தரும் உள்ளே வந்தார்கள். ராகவன் தாரிணியைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பெண்மணிதான் " என்று சொன்னான். "முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது, ரொம்பவும் பயந்து போயிருக்கிறார். பயப்படக் காரணம் இல்லையென்று நான் சொல்லவில்லை. இருந்தாலும்.. கையிலே இரத்தக் கறையைக் கூட இன்னும் கழுவவில்லை போலிருக்கிறதே!" என்று போலீஸ் அதிகாரி கூறினார். "கழுவலாமோ, கூடாதோ என்று சந்தேகமாயிருந்தது. நீங்கள் வருவதற்குத்தான் காத்திருந்தேன்" என்றாள் தாரிணி. "குரல் எப்படி நடுங்குகிறது பார்த்தீர்களா? இந்தப் பெண்மணியை உத்தேசித்துத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரே கார் ஓட்டிக்கொண்டு வரவில்லை. எப்படியாவது இவருடைய பெயரைச் சம்பந்தப்படுத்தாமல் இருந்தால் நல்லது." "என்னால் முடிந்த வரையில் பார்க்கிறேன். இவருடைய விலாசம் தெரியுமல்லவா? ஒருவேளை இவருடைய சாட்சியம் அவசியம் தேவையாயிருந்தால்...?" "தேவையாயிருந்தால், எப்போது சொன்னாலும் நானே அழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் பார்த்துக்கொண்டால் நல்லது." "பார்க்கலாம்! நீ ஒன்றும் பயப்படாதே, அம்மா! போய்க் கைகளைச் சுத்தமாய் அலம்பிக்கொள். இந்த மாதிரிக் காரியங்களில் ஸ்திரீகள் தலையிடவே கூடாது. இது உனக்கு ஒரு பாடமாயிருக்கட்டும் இந்தச் சம்பவத்தைப்பற்றி யாரிடமும் பேசாதே! உனக்குத் தெரியும் என்பதாகவே காட்டிக் கொள்ளாதே!"

இவ்விதம் தாரிணியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போலீஸ் அதிகாரி ராகவனைப் பார்த்து, "நாம் போகலாம் வாருங்கள்! இப்போதே ஒருவேளை, 'டூலேட்' ஆகிப் போயிருக்கலாம்!" என்று சொன்னார். "சீதா! நான் போய் வருகிறேன் தாரிணி இன்றைக்கு இங்கேயே இருக்கட்டும்!" என்றான். போலீஸ் உத்தியோகஸ்தர் தாரிணியிடம் பேசியதும் சீதாவுக்கு அரை குறையாகத்தான் புரிந்தது. தாரிணியை மட்டும் காப்பாற்றிவிட்டுத் தன்னுடைய கணவன் ஏதோ ஆபத்துக்கு உட்படப் போவதாக அவளுக்குத் தோன்றியது. "எங்கே போகப் போகிறீர்கள்? நானும் உங்களுடன் வருகிறேன்!" என்று நடுங்கிய குரலில் கூறினாள். போலீஸ் உத்தியோகஸ்தர் இதற்குள் அவளுடைய பயத்துக்குக் காரணத்தைத் தெரிந்து கொண்டார். "இவர்தான் உங்கள் மனைவியா...? பயப்பட வேண்டாம் அம்மா! உன் புருஷனைக் கைது செய்து கொண்டு போகவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு வாக்குமூலம் எழுதி வைக்க வேண்டும் அவ்வளவுதான். அரை மணி நேரத்தில் திரும்பி வந்து விடுவார்!" என்றார். அது உண்மைதானா என்று அறிந்துகொள்ள வேண்டிச் சீதா ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவன் சிறிது முக மலர்ச்சியுடனேயே, "ஆமாம், சீதா! எனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. நானும் சூரியாவும் அரை மணியில் திரும்பி வந்து விடுவோம். தாரிணி! சீதாவிடம் எல்லாம் சொல்லிவிடு. அவள் வீண் பீதி அடைந்திருக்கிறாள்!" என்று சொல்லிப் போலீஸ் அதிகாரியைத் தொடர்ந்தான்.

சில நிமிஷத்துக்கெல்லாம் வாசலிலிருந்து மோட்டாரும் மோட்டார் சைக்கிளும் புறப்பட்டுச் சென்றன. சீதா வாசற் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்தாள். "இனிமேல் நான் இந்தக் காரில் ஏறவே மாட்டேன். என் குழந்தையையும் ஏறவிடமாட்டேன். காரை உடனே விற்றுவிட்டு வேறு வாங்க வேண்டியதுதான்" என்றாள். "ஆமாம்; இந்தக் காரில் என்னை ஏறச் சொன்னால் கூட இனிமேல் ஏறமாட்டேன். நீ இவ்வளவு தைரியமாயிருப்பதே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றாள் தாரிணி. "என் மாமியார் இந்தச் சமயம் இங்கே இருந்திருந்தால் ஒரே ரகளையாகப் போயிருக்கும். அவருக்கு வேறே வைத்தியம் செய்யும்படி ஆகியிருக்கும். நல்லவேளையாகக் குழந்தை வஸந்தியும் தூங்கிப் போய்விட்டாள்." "சீதா! உன் குழந்தையைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது. முதலில் கைகளைக் கழுவிக் கொள்கிறேன். கை அலம்புவது மட்டும் என்ன? ஸ்நானமே செய்தாலும் நல்லது தான். குழாய்த் தண்ணீரில் ஸ்நானம் செய்தால் மட்டும் போதாது. கங்கைக்குப் போய் ஸ்நானம் செய்ய வேண்டும்!" என்று சொன்னாள். "இப்போதைக்குக் குழாயில் ஸ்நானம் செய்து வையுங்கள். கங்கா ஸ்நானம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என்று சீதா சொல்லி, வீட்டின் முன்புறத்தில் இருந்த ஸ்நான அறைக்கு அழைத்துச் சென்றாள். வீட்டின் பின்பக்கம் போவதற்கே அவளுக்குத் தைரியம் வரவில்லை.

ராகவனும் சூரியாவும் திரும்பி வந்தபோது சீதாவும் தாரிணியும் சமையலறையில் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களுக்கு இந்தக் காட்சி மிகவும் சந்தோஷம் அளித்தது. "பசியே இல்லை" என்று அவர்கள் சத்தியம் செய்துவிட்டு, "நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு ரொட்டி தயாரித்திருப்பதால் கொஞ்சம் சாப்பிடுகிறோம்" என்றார்கள். தாரிணி குளித்திருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களும் குளித்து வரச் சென்றார்கள். சூரியா கொல்லைப் பக்கத்து ஸ்நான அறைக்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்தான். "அத்தங்கா, ஸ்நான அறைக்கு எதிரே ஒரு அறை பூட்டிக் கிடக்கிறதே? அதில் என்ன இருக்கிறது? ஏதோ சத்தம் கேட்டது?" என்றான். சீதா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, "பெருச்சாளி ஓடியிருக்கும்" என்றாள். "இல்லை; உள்ளேயிருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது" என்றான் சூரியா. "ஒருவேளை பூனை பிராண்டியிருக்கும்" என்றாள் சீதா. "தாரிணி! ஸ்நான அறையில் உங்கள் கைக்குட்டையைப் போட்டுவிட்டு வந்தீர்கள் போலிருக்கிறது, ஒரே இரத்தக் கறையாயிருந்தது! அதை நான் நன்றாக அலம்பி உலர்த்தினேன்?" என்று சொன்னான் சூரியா. "இல்லையே! நான் போடவில்லையே!" என்று சொல்லித் தாரிணி சீதாவின் முகத்தைப் பார்த்தாள். சீதாவும் தாரிணியின் முகத்தைப் பார்த்தாள். "ஞாபக மறதியாய்ச் சொல்கிறீர்கள்?" என்றான் சூரியா. சீதா பேச்சை மாற்ற விரும்பி, "இந்தக் காரை விற்றுவிட வேண்டும்; தெரியுமா? இனிமேல் நான் இந்தக் காரில் ஏற மாட்டேன்" என்றாள். "நான் அப்போதே தீர்மானித்துவிட்டேன். நாளைக்கு முதல் காரியம் காரை விற்கப் போகிறேன்.. இரண்டாவது, ரிவால்வர் லைசென்ஸ் வாங்கப் போகிறேன். காலம் எப்படிக் கெட்டுப் போய்விட்டது! சாலையோடு போகிறவனைக் குத்திக் கொல்வது என்றால்?...அதுவும் இந்தப் புது டில்லியில்?" என்றான் ராகவன்.

பிறகு எல்லோரும் வட்டமான மேஜையைச் சுற்றிச் சாப்பிடுவதற்கு உட்கார்ந்தார்கள். "சீதா! உன் அம்மாஞ்சி இருக்கிறானே? அவன் மகா தைரியசாலி. காரிலே இருந்தபோது அவனுக்குக் கைகால் நடுங்கிக் கொண்டிருந்தது. கீழே இறங்கியதும் பேச்சுப் பிரமாதம்!" என்றான் ராகவன். "நான் பயப்பட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் உங்களைப்போல் தெருவில் ஒருவன் மரண காயம் பட்டுக் கிடக்கும்போது 'நமக்கென்ன' என்று போகமாட்டேன்?" என்றான் சூரியா. "போதும், போதும், இந்தப் பேச்சு! வேறு ஏதாவது பேசுங்கள்!" என்றாள் சீதா. "வேறு என்ன பேசுவது? நீதான் பேசேன்!" என்றான் ராகவன். "இவர்கள் இரண்டு பேரும் இத்தனை நாளாக ஏன் நம்முடைய வீட்டை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்று கேளுங்கள்." "எனக்கு ரொம்ப வேலை இருந்தது அத்தங்கா! மன்னித்துக் கொள்! இனிமேல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளைக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால்...?" "நீ வருவதில் எனக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும் சூரியா! நொண்டிச் சாக்குச் சொல்கிறாயா?" "அப்படிக் கேளுங்கள் நன்றாய்! சூரியா! நீ வருவதில் மாப்பிள்ளைக்கு எதற்காக ஆட்சேபம்? வேலையாம் வேலை! இந்த அக்காவைப் பார்க்கப் போவதற்கு மட்டும் வேலை ஒழிந்ததோ?"

"அத்தங்கா! இவரும் நானும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகையால் வேலை நிமித்தமாகவே நாங்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது." "அது என்ன கட்சியோ காட்சியோ எனக்குத் தெரியாது. நீங்கள் இரண்டு பேரும் இனிமேலாவது இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். "நான் வந்திருப்பேன், சீதா! உண்மைக் காரணத்தை இப்போது சொல்லி விடுகிறேன். உன் மாமியாருக்குப் பயந்து கொண்டுதான் வரவில்லை?" என்று தாரிணி கூறினாள். "என் மாமியாரைக் கண்டு, எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? நானே பயப்படுவதில்லையே? அவரைப் பற்றிச் சூரியா ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லியிருக்கிறான் போலிருக்கிறது! என் மாமியாரைப் போன்ற நல்ல மாமியாரே இந்தப் பூவுலகத்திலேயே காண முடியாது. பெற்ற பெண்ணுக்கு மேலாக என்னிடம் பிரியமாயிருக்கிறார்!" அந்தச் சமயம் சீதாவிடம் ராகவனுடைய அன்பு பூரணமடைந்தது. அன்பு மட்டுமா நன்றியுங்கூடத்தான். 'இப்போது என்ன சொல்கிறாய்?' என்ற பாவனையாகத் தாரிணியை ராகவன் பார்த்தான்; தாரிணியும் ராகவனைப் பார்த்தாள். அவர்கள் கண்களின் மூலமாகப் பேசிக்கொண்டதைச் சீதா கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அந்த நயன பாஷையின் பொருள் அவளுக்கு விளங்கியிராது. சாப்பிட்டு முடிந்து எல்லோரும் முன் அறைக்கு வந்ததற்கும் டெலிபோன் மணி அடித்ததற்கும் சரியாயிருந்தது. ராகவன் ரிஸீவரை எடுத்துக்கொண்டு பேசினான்.

"ஓகோ? உயிர் போய்விட்டதா? அடடா...'கத்திக் காயத்தினால் மரணம்' என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாரா! ரொம்ப சரி! யார்? வினாயகராவ் மதோங்கரா...உலகத்துக்கு ஒரு நஷ்டமுமில்லை!... ஆனாலும் கொலை, கொலைதானே? யாராயிருக்கும்? ஏதாவது ஊகம்.... ரஜினிபூர் பைத்தியக்காரியா?... கேள்விப்பட்டதில்லையே?... சரி சரி நான் பார்த்துக் கொள்கிறேன், ரொம்ப வந்தனம்!" டெலிபோன் ரிஸீவரை ராகவன் வைத்ததும் ஏககாலத்தில் மூன்று பேரும் "என்ன, என்ன?" என்று பரபரப்புடன் கேட்டார்கள். "அந்த விஷயமாகத்தான் சீதா பேசவே கூடாது என்கிறாளே?" "பரவாயில்லை; சொல்லுங்கள் சாப்பிடும்போது அந்தப் பேச்சு வேண்டாம் என்று சொன்னேன்" என்றாள் சீதா. "அப்படியானால் கேட்டுக்கொள் ஆஸ்பத்திரியில் நாங்கள் கொண்டு போய்விட்ட அரைமணிக்குள் உயிர் போய்விட்டதாம், கத்திக்குத்தினால் சாவு என்று டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாராம். கொலையுண்டு செத்துப் போனவனின் பெயர் விநாயகராவ் மதோங்கர். ரஜினிபூரில், பழைய ரஜினிபூர் மகாராஜாவின் துர்மந்திரி என்று சொன்னேனே, அவன்தான். கொஞ்ச நாளாக இந்த ஊரில் இருந்தானாம். கிளப்பில் ரொம்பப் பேருக்கு அவனைத் தெரியுமாம்; குடித்துவிட்டு ரகளை செய்வானாம். ரஜினிபூர் பைத்தியக்காரி என்று பெயர் பெற்ற ஸ்திரீ அவனைச் சில நாளாக அடிக்கடி தொடர்ந்து போய் கொண்டிருந்தாளாம். போலீஸில் கூட மதோங்கர் புகார் செய்திருந்தானாம்.

ஏற்கெனவே ரஜினிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சித்தவளாம். இவனைக் கொன்றவளும் அவளாய்த்தான் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறதாம். போதுமா? எத்தனையோ துப்பறியும் கதைகள் படித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இந்த உண்மைச் சம்பவம் தோற்கடித்து விடுகிறதா, இல்லையா? ஏன் எல்லோரும் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள்? சீதா, உனக்கு துப்பறியும் கதைகள் ரொம்பப் பிடிக்குமோ?" ரஜினிபூர் பைத்தியக்காரி என்றதும் சீதாவும் தாரிணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு பேருடைய பார்வையும் பயங்கரத்தையும் பரிதாபத்தையும் வெளியிட்டன. சீதாவைக் கூப்பிட்டு ராகவன் குறிப்பாகக் கேட்டதும், "இந்த மாதிரி விஷயமெல்லாம் கதையோடு இருந்தால் நன்றாயிருக்கும்! உண்மையில் நடக்கக் கூடாது!" என்றாள். "எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? ரஜினிபூர் பைத்தியக்காரியைப் போல் இன்னும் பலர் தோன்ற வேண்டும். அப்போதுதான் நம் நாட்டுச் சுதேச ராஜாக்களுக்கும் அவர்களுடைய துர்மந்திரிகளுக்கும் புத்தி வரும்!" என்றான் சூரியா. "சுதேச ராஜாக்களிடம் உனக்கு என்னடா அப்பா, அவ்வளவு கோபம்?" என்றான் ராகவன்.

அவர்களுக்குள் விவாதம் நடந்தபோது சீதாவின் மனமெல்லாம் கொல்லைப்புறத்துப் பூட்டிய அறையிலே இருந்தது. 'ரஜினிபூர் பைத்தியக்காரி' என்பவள் அந்த வீட்டிலேயே அப்போது இருக்கிறாள்! தான் அதை அங்குள்ளவர்கள் யாரிடமாவது சொல்ல வேண்டுமோ? சொன்னால் என்ன விபரீதம் வருமோ? சொல்லாவிட்டால் என்ன விபரீதம் நேருமோ? தாரிணியின் சொந்தத் தாயாரோ அல்லது வளர்ப்புத் தாயாரோ அவள்! தன் தாயார் கொலைகாரி என்பது தாரிணிக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? ஒருவேளை தெரிந்தேயிருக்குமோ? அவளைப் பார்த்துத் தன் பெற்றோர்கள் யார் என்பதைத் தாரிணி தெரிந்து கொள்ள விரும்பினாள் அல்லவா? அதற்கு இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்குமா? தாரிணியின் தாயார், உண்மையில் அந்தப் பைத்தியக்காரிதான்! இப்படிப்பட்ட காரியம் செய்ய உத்தேசித்திருந்தபடியினால் தாரிணியின் மனம் நோகாமலிருக்கும் பொருட்டு வளர்ப்புத் தாயார் என்று பொய் சொல்லி யிருப்பாள்.... சட்டென்று இன்னொரு விஷயம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அந்தப் பைத்தியக்காரி தன்னிடமும் தன் தாயாரிடமும் எதற்காக அவ்வளவு அபிமானம் காட்டினாள்? எதற்காகத் தனக்கு ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்தாள்? இதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை சீதாவின் மனதில் மற்ற எல்லா எண்ணங்களையும் அடக்கிக் கொண்டு மேலெழுந்தது. அதோடு அந்தக் கொலைகாரி அளித்த ரத்தின மாலையை இனிமேல் அணிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணமும் உதித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்திரண்டாம் அத்தியாயம்

கதவு திறந்தது!

நள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்தது சீதா 'ஒன்று இரண்டு, மூன்று' என்று எண்ணி வந்தாள். பன்னிரண்டு அடித்ததும், "சரி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது; அது வரையில் தூங்காமலிருக்க வேண்டும்!" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அப்படியொன்றும் தூங்கிப் போய் விடுவோம் என்கிற பயம் கிடையாது அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பிறகு அவ்வளவு சுலபமாகத் தூக்கம் வந்து விடுமா என்ன? வராதுதான். அன்றிரவு தூங்கினால் பயங்கரமான சொப்பனங்கள் காணுவோமோ, என்னவோ? இராத்திரி பூராவும் தூங்காமல் இருந்து விட்டாலும் நல்லதுதான். ஆனால் அது மாதிரியே மற்றவர்களும் தூங்காமலிருந்தால் என்னத்தைச் செய்வது? அவர்களுக்கும் தூக்கம் வருவது கஷ்டமாகத்தான் இருக்கும். அடுத்த அறையில் படுத்திருக்கும் இவரும் அம்மாஞ்சியும் இன்னும் ஏதோ பேசுகிறார்கள். பன்னிரண்டு மணிக்கு மேலே பேச்சு என்ன வந்தது? பேசாமல் தூங்கக் கூடாதோ?... இதோ பக்கத்தில் படுத்திருக்கும் தாரிணியும் தூக்கம் வராமல் படுக்கையில் புரளுகிறாள்.

நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. இப்படியெல்லாம் கதைகளில் நடக்கும் என்று படித்திருக்கிறோம். உண்மை யிலேயே நடக்குமென்று யார் நினைத்தார்கள்! மகள் இங்கே படுத்திருப்பது தெரியாமல், தாயார் கொல்லைப்புறத்து அறையில் படுத்திருக்கிறாள். தாயார் இதே வீட்டில் இருப்பது தெரியாமல் மகள் தூங்குகிறாள். ஒருவேளை தெரிந்து விட்டால்?... அதுவும் தாயார் கையில் இரத்தக் கரையுள்ள கத்தியுடன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்று மகளுக்குத் தெரிந்தால்? இதெல்லாம் தனக்கு தெரிந்திருக்கும்போது சொல்லாமல் வைத்திருப்பது சரியா? ஆனால் எப்படிச் சொல்ல முடியும்? தன்னுடைய புருஷன் மட்டும் தனியாக இருந்தாலும் சொல்லலாம். மற்ற இருவர் இருக்கும்போது எப்படிச் சொல்வது? அவள் தான் கொலைகாரி என்பது என்ன நிச்சயம்? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல் இருக்கலாமல்லவா? பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதாக அவள் சொன்னது ஏன் உண்மையாயிருக்கக்கூடாது?... ஆனால் எதற்காக அப்படி இரகசியமாக அவள் வந்திருக்க வேண்டும்? தன்னை எப்படி பயப்படுத்திவிட்டாள்?...

அடாடா! லலிதாவுக்கு எழுதிய கடிதத்தை ஆபீஸ் அறை மேஜை மேலேயே வைத்திருக்கிறோமே? எடுத்து வைக்க மறந்து விட்டோமே? அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பார்த்தால் இவர்தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய கடிதங் களையோ, எனக்கு வரும் கடிதங்களையோ இவர் பார்ப்பதேயில்லை! எவ்வளவு உயர்ந்த குணம்? தவறிக் கண்ணிலே பட்டிருந் தாலும், 'லலிதா' என்ற பெயரைப் பார்த்ததும் மேலே படிக்க மாட்டார். அதை நினைத்தால் வேடிக்கையாகத்தானிருக்கிறது. இவரை லலிதா கல்யாணம் செய்து கொண்டு இந்த வீட்டில் இப்போது குடித்தனம் பண்ண வேண்டியது. அவள் இருக்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு என்ன செய்யலாம்? அவரவர்களுக்குக் கடவுள் விதித்திருக்கிறபடிதானே நடக்கும்...? இதென்ன? கண்ணை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறதே? தூங்கக் கூடாது; இன்றைக்குத் தூங்கக் கூடாது... 'டிணிங்', 'டிணிங்' இரண்டு மணி அடித்ததைக் கேட்டுச் சீதா விழித்துக் கொண்டாள். கடவுளே! தூங்கிப் போய் விட்டோம் போலிருக்கிறதே! இரண்டு மணி தான் ஆயிற்றா? சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைச் சீதா பார்த்தாள். இரவு நேரத்துக்கென்று போட்டிருந்த மிக மங்கலான சிவப்பு பல்பின் வெளிச்சத்தில் கடிகாரம் இரண்டு மணி காட்டுவது தெரிந்தது.

இவ்வளவுதானே? இப்போது கூட அந்த அறைக்குப் போகலாம் ஆனால் தடபுடல் செய்யக்கூடாது. சத்தமில்லாமல் எழுந்திருக்க வேண்டும். அடுத்த அறையில் புருஷர்களும் இந்த அறையில் தாரிணியும் நன்றாகத் தூங்குகிறார்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது என்ன சத்தம்? கதவு திறக்கிற சத்தம் போலிருக்கிறதே! இந்த நேரத்தில் எந்தக் கதவு திறக்கிறது? ஒருவேளை... இல்லை, இல்லை; அடுத்த வீட்டுக் கதவாயிருக்கும்; அல்லது சத்தம் கேட்டதே வெறும் பிரமையாயிருக்கும். இருந்தாலும் சற்றுப் பொறுத்து எழுந்திருக்கலாம், மறுபடியும் தூங்கிவிட கூடாது. இதோ தாரிணி படுக்கையில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு நன்றாய்த் தூங்குகிறாள். தூங்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டியது. ஐயோ! இது என்ன? அதோ அந்த நிலைக்கண்ணாடியில் மங்கலாகத் தெரியும் உருவம்! பயங்கரமாயிருக்கிறதே? முகத்திலே தாடி! தலையிலே துருக்கிக் குல்லா! கண்களில் நெருப்புத் தணல்... சீதாவின் உடம்பில் ஒரு நிமிஷம் இரத்த ஓட்டம் அடியோடு நின்று போயிற்று. கை கால் வெலவெலத்து அசைவற்றுப் போயின. ஆகா! இந்த உருவத்தை இப்போது காணவில்லை! ஏதோ ஒரு கை மட்டும் இருட்டிலிருந்து தனியாக வெளிப்பட்டு அந்த உருவத்தைத் தொட்டு அழைத்துக் கொண்டு போன மாதிரி தோன்றியது. எப்படியோ, அந்த உருவம் போய்விட்டது! சீச்சீ! எல்லாம் வெறும் பிரமை!

சீதா படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு எதிர்ச் சுவரில் பதிந்திருந்த நிலைக்கண்ணாடி யிலே பார்த்தாள். திரும்பி, திறந்த ஜன்னலையும் பார்த்தாள்; ஒன்றுமேயில்லை வெறும் பிரமைதான்! அடுத்த அறையில் சத்தமேயில்லை நன்றாகத் தூங்குகிறார்கள். தாரிணியும் தூங்குகிறாள் இதுதான் சமயம், ரஸியாபேகத்தைப் பார்ப்பதற்கு. அவளுக்கு எச்சரிக்கை செய்து விட வேண்டியது அவசியம். பொழுது விடிந்த பிறகு அவள் இங்கே இருக்கக் கூடாது. தலையணையின் அடியில் சீதா, கையை விட்டுத் துழாவி அங்கேயிருந்த சாவியை எடுத்துக்கொண்டாள் சிறிது கூடச் சத்தம் செய்யாமல் படுக்கையிலிருந்து எழுந்தாள். எதிர்ப்பக்கச் சுவரில் ஒரு கதவு இருந்தது. அந்த வழியாகச் சென்றாள் இவரும் சூரியாவும் படுத்திருக்கும் அறை இருக்கிறது. வலது பக்கம் இருந்த வாசற்படி வழியாகப் போனால் சாப்பாட்டு அறைக்குள் போய் அங்கிருந்து கொல்லைப் பக்கம் போகலாம் யாருக்கும் தெரியாது... வலது பக்கத்துச் சுவரண்டை சென்று அங்கிருந்த கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். ஜாக்கிரதைக்கு ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள். தாரிணி தூங்கிக் கொண்டுதானிருக்கிறாள் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று.

தன்னுடைய காலடிச் சத்தம் தன் காதுக்குக் கூடக் கேளாதபடி சீதா மெள்ள மெள்ள அடி எடுத்து வைத்து நடந்து போனாள். கடைசியாக அந்தத் தட்டுமுட்டுச் சாமான் அறை வந்ததும் இருட்டில் கையினால் தடவிப் பூட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாள். சாவியைப் பூட்டுக்குள் செலுத்தப் பார்த்தாள். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இது என்ன சங்கடம்? விளக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. போட்டால் என்ன? இங்கே யார் வரப் போகிறார்கள்? வெளிச்சம் கொஞ்சம் இருந்தால்தான் நல்லது. இருட்டில் திடீரென்று கதவு திறந்ததும், அந்த ஸ்திரீ.. ரஜினிபூர் பைத்தியக்காரி... அலறிக்கொண்டு எழுந்தால்? அவள் கையில் கத்திவேறே இருக்கிறது! கையினால் தேடி மின்சார விளக்கின் ஸ்விச் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விளக்கைப் போட்டாள்... அது என்ன சத்தம்? யாரோ நடக்கும் காலடிச் சத்தம் மாதிரி கேட்டதே!.. ஒருவேளை அந்த ஸ்திரீ அறையின் உள்ளே எழுந்து நடமாடுகிறாள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்; அவளைத் தொட்டு எழுப்ப வேண்டிய அவசியமில்லை. இருட்டில் பூட்டைத் திறக்கச் செய்த முயற்சியில் தான் செய்த தவறு சீதாவுக்குத் தெரிந்தது. பூட்டின் முன் பக்கத்தில் சாவியைப் போடுவதற்குப் பதிலாகப் பின்புறத்தில் போட முயன்றிருக்கிறாள். அது எப்படித் திறக்கும்? அதை நினைத்த போது சீதாவுக்குச் சிரிப்புக் கூட வந்தது.

இதோ பூட்டுத் திறந்தது! கதவும் திறந்தது! சீதா மெதுவாக உள்ளே ஒரு காலை வைத்து எட்டிப் பார்த்தாள். இது என்ன! அறைக்குள்ளே யாரும் இல்லையே! ஒருவரும் நடமாடவில்லையே! ஒரு சத்தமும் கேட்கவில்லையே! இன்னொரு காலையும் உள்ளே வைத்து நாலுபுறமும் நன்றாகப் பார்த்தாள் அறை காலியாக இருந்தது. இது என்ன விந்தை! முன்னிரவில் நடந்ததெல்லாம் உண்மையில் கனவில் நடந்ததோ? அந்த ஸ்திரீ ஸ்நான அறைக்குள் இருந்தது, அப்புறம் இந்த அறைக்குள் சென்றது. வெளிப்பக்கம் கதவைப் பூட்டச் சொன்னது எல்லாம் தன்னுடைய மனப்பிராந்தியா? இல்லவே இல்லை, எல்லாம் உண்மையாக நடந்தவைதான். பின்னே, அந்த ஸ்திரீ எப்படி அங்கிருந்து மாயமாய் மறைந்து போனாள்? அப்போது அந்த அறையிலிருந்து பின் பக்கம் திறந்த கதவு சீதாவின் கண்ணில் பட்டது. அந்தக் கதவின் தாழ்ப்பாள் அகற்றப்பட்டிருந்தது; சீதாவுக்கு உண்மை புலனாயிற்று. அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவள் வெளியே போயிருக்கிறாள். போலீஸ்காரர்கள் வந்து தடபுடல் செய்தது ரஸியாபேகத்தின் காதில் பட்டிருக்க வேண்டும். சந்தடி அடங்கியதும் புறப்பட்டிருக்கிறாள். தான் தெரிந்து கொள்ள விரும்பியதை அவளிடம் தெரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது! ஆயினும் பாதகமில்லை. எப்படியாவது அவள் அந்த வீட்டிலிருந்து பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தாளே, அதுவே போதும்! இனிமேல் இங்கு எப்படிப்போனாலும் சரிதான், அதையெல்லாம் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகவேண்டும். இவரும் குழந்தை வஸந்தியும் நன்றாயிருந்து, வாழ்க்கை நிம்மதியாக நடந்தால், அதுவே போதும். இன்றைக்கு அனுபவித்தது போன்ற பயங்கரங்கள் இனிமேல் வேண்டவே வேண்டாம்.

இப்படி எண்ணிக்கொண்டே சீதா அறைக்கு வெளியில் வந்து முன்போலக் கதவைப் பூட்டத் தொடங்கினாள். திடீரென்று ஓர் உணர்ச்சி... தான் செய்யும் காரியத்தை இரண்டு கண்கள் உற்றுப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சாப்பாட்டு அறையின் வாசற்படியண்டை தாரிணி நின்று கொண்டிருந்தாள். காரணமில்லாத பீதியுடன் சீதா சிறிது நேரம் தாரிணியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையிலே இருந்த சாவியினால் பூட்டைப் பூட்டுவதற்குக் கூடச் சக்தி இல்லாமல் நின்றாள். இதைப் பார்த்த தாரிணி புன்னகை பூத்த முகத்துடன் அவள் அருகில் நெருங்கி வந்து, "சீதா எதற்காகப் பயப்படுகிறாய்? நீ யாரைப் பார்ப்பதற்காக வந்தாயோ, அவளைப் பார்க்கத்தான் நானும் வந்தேன். அவள் விஷயத்தில் உன்னைக் காட்டிலும் எனக்கு அதிகமான சிரத்தை இருக்கக் கூடியது இயற்கை அல்லவா?" என்றாள். வியப்பினால் விரிந்த கண்களினால் சீதா தாரிணியைப் பார்த்து, "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள். "ஊகித்துத்தான் தெரிந்து கொண்டேன், சீதா! உன்னுடைய நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் எல்லாம் என் மனதில் ஒருவாறு சந்தேகத்தை உண்டாக்கின. ஸ்நான அறையில் என்னுடைய கைக்குட்டை இருந்ததாகச் சூரியா சொன்னதும் சந்தேகம் உறுதிப்பட்டது. அப்புறம்..." என்று தாரிணி தயங்கினாள். "அப்புறம் என்ன, அக்கா?"

"செய்யக்கூடாத ஒரு காரியம் செய்தேன், சீதா! அதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். உன்னுடைய குழந்தையைப் பார்ப்பதற்காக உன் கணவருடைய ஆபீஸ் அறைக்குள் போயிருந்தேனல்லவா? அப்போது மேஜையில் நீ பாதி எழுதி வைத்திருந்த கடிதம் கண்ணில் பட்டது. என்னை அறியாத ஒரு ஆவலினால் அதைப் படித்தேன்; அந்தக் கடிதத்தின் கடைசியில்..." "அக்கா! இதுதானா உங்களுக்குத் தெரிந்த இலட்சணம்? பிறத்தியார் கடிதத்தைப் படிக்கலாமா? இவர் கூட என் கடிதங்களைப் படிக்கிற தில்லையே?" "அதற்காகத் தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டேனே, சீதா!" என்று இரக்கமான குரலில் கூறினாள் தாரிணி. "போனால் போகட்டும், நான் எழுந்து வந்தது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தூங்கவில்லையா?" "எனக்கு எப்படித் தூக்கம் வரும், சீதா! இவ்வளவு பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கும் போது? நீ என்னைத் தூங்கப் பண்ணுவதில் அதிக சிரத்தை காட்டினாய். நான் தூங்கிய பிறகு ஏதோ நீ செய்யப் போகிறாய் என்று எதிர்பார்த்தேன். ஆகையால் தூங்குகிறதுபோலப் பாசாங்கு செய்தேன். நீயே தூங்கிப் போய்விட்டதாகத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கடிகாரம் மணி இரண்டு அடித்து உன்னை எழுப்பி விட்டது.

நீ எழுந்து சாவியை எடுத்துக்கொண்டு மெள்ள நடந்து வந்தாய். நானும் பின்னால் உனக்குத் தெரியாதபடி வந்தேன். சட்டென்று நீ விளக்குப் போட்டதும் ஒருவேளை என்னைப் பார்த்து விடுவாயோ என்று பயந்து போனேன். ஆனால் நீ பார்க்கவில்லை கதவைத் திறந்து கொண்டு அந்த அறைக்குள் போனாய். யாரையோ தேடி ஏமாற்றமடைந்தாய் ஆனால் நான் ஏமாற்றமடையவில்லை..." "நீங்கள் ஏன் ஏமாற்றமடையவில்லை? இங்கே ஒருவரும் இல்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" "மணி இரண்டு அடித்து உன்னை எழுப்புவதற்குச் சற்று முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ போனதைப் பார்த்தேன்! சீதா இந்த அறையில் இருந்தது ஒருவரா, இருவரா?" "ஒருவர்தான்! நீங்கள் ரஸியாபேகம் என்று சொன்னீர்களே, இந்த அம்மாள்தான் இங்கே இருந்தாள். ஒருவரா, இரண்டு பேரா என்று எதற்காகக் கேட்டீர்கள்?" "இரண்டு பேர் போனதை நான் பார்த்தேன், சீதா! வேறு ஒருவர் வந்து ரஸியாபேகத்தை அழைத்துப் போயிருக்க வேண்டும்." சீதாவுக்குத் தான் நிலைக்கண்ணாடியில் கண்ட காட்சி நினைவுக்கு வந்ததும் பரபரப்புடன், "அக்கா! அந்த இன்னொருவர் யார்?" என்று கேட்டாள். "எனக்குத் தெரியாது தாடியும் துருக்கிக் குல்லாவும் செக்கச் செவந்த கண்களும் உள்ள முகம் ஒன்றைப் பார்த்தேன். யோசித்துப் பார்க்கும்போது எங்கேயோ, எப்போதோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது" என்றாள் தாரிணி. "எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்று சீதா கூறினாள். "உனக்கும் தோன்றுகிறதா? நீ பார்த்தாயா, என்ன?"

"மணி இரண்டு அடித்துக் கண்ணை விழித்ததும், எதிரில் நிலைக்கண்ணாடியில் ஒரு முகம் தோன்றியது உடனே அது மறைந்து விட்டது. ஒருவேளை மனப்பிராந்தியாயிருக்கலாம் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதிலிருந்து அது நிஜ முகம் என்று ஏற்படுகிறது." "அம்மா மட்டும் போவதைப் பார்த்திருந்தால், என்னால் பொறுக்க முடிந்திராது! 'அம்மா!' என்று கத்தியிருப்பேன்? பின்னோடு இன்னொருவரும் இருந்தபடியால், பேசாதிருந்தேன்." "அந்த ஸ்திரீ உண்மையில் உங்கள் தாயார்தானா? என்னால் நம்பவே முடியவில்லையே!... நாம் எதற்காக இங்கேயே நின்று கொண்டு பேசவேண்டும்? குழந்தை விழித்துக் கொண்டு அழுதாலும் அழுவாள். புருஷர்கள் விழித்துக்கொண்டால் நமக்கு என்னமோ நேர்ந்துவிட்டது என்று காபரா அடைவார்கள். உள்ளே போய்ப்படுத்துக் கொண் டே பேசலாம். எனக்கு இனிமேல் தூக்கமே வராது. உங்களைப் பற்றிய எல்லா விவரமும் சொல்லிவிட வேண்டும்!" என்றாள் சீதா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்து மூன்றாம் அத்தியாயம்

தாரிணியின் கதை

இருவரும் அவரவர்களுடைய படுக்கையில் உட்கார்ந்திருந்தார்கள். தாரிணி கேட்டுக் கொண்டபடி அன்று முன்னிரவில் நடந்ததையெல்லாம் சீதா தனக்குத் தெரிந்த வரையில் சொல்லியாகி விட்டது. இப்போது தாரிணியின் முறை வந்திருந்தது. தாரிணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னதாவது:- பழைய காலத்துக் கதைகளில் தங்களுடைய கதைகளைத் தாங்களே சொல்லும் கதாநாயகிகள், 'நான் பிறந்த கதையைச் சொல்லவா? வளர்ந்த கதையைச் சொல்லவா?' என்று ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் பிறந்த கதையை நான் சொல்ல முடியாது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் ரஸியாபேகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடைசியாக, அவளைக் கண்டுபிடித்து விட்டதாக எண்ணிய சமயத்தில் கை நழுவிப் போய் விட்டாள் அதுவும் நல்லதுதான். இப்பேர்ப்பட்ட பயங்கரச் சம்பவம் நடந்திருக்கும் சமயத்தில் நான் என்ன கேட்க முடியும்! அவள்தான் என்னத்தைச் சொல்ல முடியும்!" "அவள் உண்மையில் முஸ்லிம் ஸ்திரீதானா? அக்கா! அவளுடைய உண்மைப் பெயர் ரஸியாபேகம்தானா?" என்று சீதா கேட்டாள்.

"இல்லை அந்த விஷயத்தை அப்புறம் சொல்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அவளைத்தான் என்னுடைய தாயார் என்று நினைத்திருந்தேன். உலகத்திலேயே எந்தத் தாயாரும் அவ்வளவு அன்பாக மகளை வளர்த்திருக்க முடியாது. அப்படி என்னை உயிருக்குயிராக எண்ணிப் பாதுகாத்து வந்தாள். ஆனால் உலகத்திலுள்ள பெண்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய சிறு பிராயத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது. என்னுடைய தாயார் உலகத்திலேயே மற்ற ஸ்திரீகளைப் போல் புருஷருடன் வாழ்ந்து குடித்தனம் செய்யவில்லை. யாருக்கோ பயந்து கொண்டு மறைந்து ஒளிந்து வாழ்வதாகத் தெரிந்தது. அடிக்கடி என் தாயாரைப் பார்க்க ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அவரை நான் 'அப்பா' என்று கூப்பிடுவது வழக்கம். இந்த வழக்கம் எப்படி வந்தது, தானாக வந்ததா அல்லது யாராவது சொல்லிக் கொடுத்து வந்ததா என்று எனக்குத் தெரியாது. என் நினைவு தெரிந்தது முதல் அவரை 'அப்பா' என்றே நான் அழைத்து வந்தேன். அவரும் அம்மாவும் சில சமயம் ஒருவருக்கொருவர் ரொம்பப் பிரியமாயிருப்பார்கள். சில சமயம் புலி கரடிகளைப் போலச் சண்டை போட்டுக் கொள்வார்கள். அவர்கள் உலகத்தில் எல்லாரையும் போலக் கலியாணம் செய்து கொண்ட கணவனும் மனைவியும் அல்ல என்று எனக்குத் தெரிந்திருந்தது.

ஆனாலும் அவர் தான் என்னுடைய தகப்பனார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டு பேரும் அடிக்கடி சண்டையிட்ட போதிலும் ஒரு விஷயத்தில் ரொம்பவும் ஒற்றுமையாயிருந்தார்கள். அதாவது என்னிடம் பிரியமாயிருக்கும் விஷயத்தில் தான். நான் ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்று சொல்லிவிட்டால் போதும், உடனே அது வந்து சேர்ந்துவிடும். எனக்கு ஏதாவது கொஞ்சம் உடம்பு சரிப்படாவிட்டால் போதும். இரண்டு பேரும் எனக்காக உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள். என்னை வளர்ப்பதற்கும் படிக்க வைப்பதற்கும் கூசாமல் பணம் செலவு செய்தார்கள். இத்தனைக்கும் அவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கவில்லை. நான் சிறுமியாயிருந்த போது என் தாயாரிடம் விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏராளமாக இருந்தன. அவை எப்படி வந்தன என்று எனக்குத் தெரியாது; கேட்கவும் எனக்கு மனம் வராது. அந்த நகைகளையெல்லாம் என் தாயார் ஒவ்வொன்றாக என் தகப்பனாரிடம் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்வாள். சில சமயம் அப்பாவும் பணம் கொண்டு வருவார். அதை வாங்கிக் கொள்ள முடியாது என்று அம்மா பிடிவாதம் பிடிப்பாள். ஏனெனில் அப்பாவுக்கு வருமானம் அதிகம் இல்லை என்றும் அவர் காப்பாற்ற வேறொரு குடும்பம் இருந்ததென்றும் அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. சில சமயம் அம்மாவுக்குத் தெரியாமல் அப்பா எனக்குத் துணிமணி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார். தெரிந்த பிறகு அம்மா அவரைச் சண்டை பிடிப்பாள்.

இந்த விதமாக என்னுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. கான்வெண்ட் பள்ளிக்கூடத்தில் படித்தபோது நிருபமா என்ற பெண் எனக்குச் சிநேகிதி ஆனாள். என்னுடைய பிறப்பு வளர்ப்பைக் குறித்து நினைத்து நான் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போதெல்லாம் நிருபமாவின் சிநேகந்தான் எனக்கு ஒருவாறு உற்சாகம் ஊட்டி வந்தது...." "ஆக்ராவில் பார்த்தோமே, அவர்தானே? எனக்கு அவரை ரொம்பவும் பிடித்திருந்தது. சிநேகம் என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்?" என்று குறுக்கிட்டுச் சொன்னாள் சீதா. "ஆம், அவள்தான்! எங்கள் இருவருக்கும் ஒரே வயது. எங்களுக்கும் வயதாக ஆக வருங்கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தோம். ஒருவருக்கொருவர் அந்தரங்கத்தை வெளியிட்டுக் கொண்டோம். இரண்டு பேரும் கலியாணமே செய்து கொள்வதில்லையென்றும் தேச சேவைக்கே எங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்வது என்றும் தீர்மானம் செய்தோம். ஆனால் நிருபமா அந்தத் தீர்மானத்திலிருந்து மாறிவிட்டாள். சீதா! நீதான் பார்த்தாயே? அவளை அவ்வளவு இலட்சணமானவள் என்று உலகத்தார் சொல்ல மாட்டார்கள். இதை நிருபமா உணர்ந்திருந்தபடியால் தனக்குக் கலியாணமே வேண்டாமென்று சொல்லி வந்தாள். ஆனால் வெளி அழகை மட்டும் பாராமல் அகத்தின் அழகைத் தெரிந்து பாராட்டக் கூடிய ஒருவர் வந்து சேர்ந்தார். அவரை நிருபமா கலியாணம் செய்துகொண்டு இப்போது சந்தோஷமாயிருக்கிறாள் அவள் பாக்கியசாலி."

தாரிணியின் கண்களில் அப்போது கண்ணீர் துளிர்த்ததைச் சீதா பார்த்தாள் அவளுடைய மனம் கனிந்தது. "அக்கா! நிருபமாவைப் போல் நீங்களும் ஒரு நாள் பாக்கியசாலியாவீர்கள்" என்றாள். "அவளுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு, சீதா! என்னுடைய குறை என்னுடைய பிறப்பைப் பற்றியது. தாயாரும் தகப்பனாரும் இன்னார் என்று தெரியாத என்னைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டிய புருஷன் இந்த நாட்டில் எங்கே இருக்கிறான்? அப்படி ஒருவன் இருந்து சம்மதித்தாலும், அவனுடைய பந்துக்கள் சம்மதிக்க வேண்டும்? நம்முடைய தேசத்தில் கலியாணம் நடப்பது பந்துக்களின் சம்மதத்தைப் பொறுத்தல்லவா இருக்கிறது? அது போகட்டும், எனக்குக் கலியாணத்தில் இஷ்டம் இல்லை. இப்போது மில்லை; எப்போதும் இருக்கவில்லை. தேச சேவையில் உண்மையாகவே ஆர்வம் இருந்தது. பம்பாய் உப்பு சத்தியாக்கிரஹ இயக்கம் நடந்தபோது நிருபமாவும் நானும் அதிலே சேர்ந்தோம். எங்களுடைய சிறு பிராயத்தை முன்னிட்டு எங்களைச் சிறைக்கு அனுப்பவில்லை. நகரத்துக்கு வெளியே பல தடவை கொண்டு விட்டார்கள். ஒவ்வொரு தடவையும் நானும் நிருபமாவும் சேர்ந்தே இருந்தபடியால் எங்களுக்குப் பெரிய தமாஷாயிருந்தது. அந்த இயக்கம் முடிவடைந்ததும் கராச்சி காங்கிரஸுக்குப் போனோம்..."

இவ்விடத்தில் தாரிணி நிறுத்தி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு மேலே கூறினாள்:- "பிறகு இந்தப் புண்ணிய பாரத பூமியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. காஷ்மீரம் முதல் சென்னை வரையில், கராச்சியிலிருந்து கல்கத்தா வரையில் ஊர் ஊராகச் சென்று பார்த்தோம். பிற்பாடு பீஹார் பூகம்பத்தைப் பற்றிய பயங்கரச் செய்திகள் வந்து இந்தத் தேசத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டன. பம்பாயிலிருந்து பூகம்ப சேவை செய்வதற்குப் புறப்பட்ட தொண்டர் படையில் நானும் நிருபமாவும் சேர்ந்து சென்றோம். பூகம்பத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் இருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. நிருபமா வேணிப்பிரஸாதைச் சந்தித்தாள்; சில காலத்துக்குப் பிறகு அவரைத் தன் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டாள்!" என்று தாரிணி நிறுத்தினாள். "அக்கா! மேலே சொல்லுங்கள் முக்கியமான இடத்தில் கதையை நிறுத்தி விட்டீர்களே! நிருபமா தேவியின் வாழ்க்கையில் திருமணம் நிகழ்ந்தது; உங்களுடைய வாழ்க்கையில் என்ன முக்கிய சம்பவம் நடந்தது?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள்.

"நிருபமாவுக்கு மணம் நிகழ்ந்தது; எனக்கு மரணம் நிகழ்ந்தது! ஏதோ பிதற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம். சீதா! எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் நான் செத்துப் போனவள் ஆனேன். அப்படி எல்லோரும் என்னை அடியோடு மறந்துவிட வேண்டுமென விரும்பினேன். ஆகையால், நான் இறந்துவிட்டதாக என்னுடன் சேவை செய்தவர்கள் நம்பும்படி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். இதற்குக் காரணம் நீ பத்திரிகையில் எந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு என் தாயார் பேரில் சந்தேகப்பட்டாயோ, அதே செய்திதான். என் தாயார் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள் என்கிற செய்தி அப்படி என் மனதைக் குழப்பி விட்டது. இந்த உலகத்திலேயே என்னுடைய பூரண அன்புக்கு உரியவளாயிருந்தவள் என் தாயார்தான். என் தகப்பனார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனே, அவர் பேரில் எனக்கு எப்போதும் அவ்வளவு பிரியம் ஏற்பட்டதில்லை. ஆனால் தாயார் மீது உயிருக்குயிரான நேசம் நான் வைத்திருந்தேன். அவளுடைய நடத்தையைப் பற்றி எவ்வளவு குறைகள் மனதில் தோன்றினாலும் அவ்வளவையும் மீறி அவள் மீதுள்ள பிரியம் மேலோங்கி நின்றது. சில வருஷமாக அடிக்கடி அவளைப் பிரிந்து நான் நாடு சுற்றிய போதிலும் அவள் மீது எனக்கிருந்த பாசம் சிறிதும் குன்றவில்லை. அவளுக்கு இந்த அபகீர்த்தி இந்தக் கஷ்டம், நேர்ந்ததை என்னால் சகிக்க முடியவில்லை.

ஒரு மகாராஜாவை அவள் கொல்ல முயற்சித்தது ஏன் என்பதை எண்ணிப் பார்த்தபோது என்னவெல்லாமோ உருப்படியில்லாத சந்தேகங்கள் தோன்றின. அப்படிப்பட்ட நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் என் தகப்பனாரைச் சந்தித்தேன். அதுவரையில் என்னுடைய தகப்பனார் என்று நினைத்துக் கொண்டிருந்த மனிதரைத்தான். அவர் எனக்கு ஆறுதலாக இருக்கட்டுமென்று சில செய்திகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று என்ன தெரியுமா? அதுவரையில் என்னுடைய தாயார் என்று நான் நினைத்திருந்தவள், உண்மையில் என் தாயார் அல்ல என்றுதான். இது எனக்கு ஆறுதல் அளிப்பதற்குப் பதிலாகச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தது. இருள் நிறைந்த என் வாழ்க்கையில் ஒரே ஒரு தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது; அதுவும் இப்போது அணைந்து போய்விட்டது. அவள் என் தாயார் இல்லையென்றால் இவரும் என் தகப்பனார் இல்லை. பின் நான் யாருடைய மகள்? என் தாய் யார்? தகப்பன் யார்? சீதா! என் வளர்ப்புத் தாய் அவ்வப்போது ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருந்த சில வார்த்தைகளுக்கு இப்போது பொருள் நன்றாகத் தெரிந்தது. அதிலிருந்து யாரோ ஒரு சுதேச சமஸ்தான ராஜாவின் மகள் நான் என்ற சந்தேகம் உதித்தது. என் வளர்ப்புத் தாய் அடிக்கடி ஜாகை மாற்றிக் கொண்டிருந்தது, ரமாமணி என்ற பெயரை மாற்றி ரஸியாபேகம் என்று வைத்துக் கொண்டது இதற்கெல்லாம் ஒருவாறு காரணம் தெரிந்தது.

என் வளர்ப்புத் தந்தை இன்னொரு விஷயமும் சொன்னார். என் தாயார் 'ரஸியாபேகம்' என்று வைத்துக்கொண்டதுடன், 'நான் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்துவிடப் போகிறேன். அப்போதுதான் ஆண் மக்களுடைய தொல்லையில்லாமல் தைரியமாக வாழ முடியும்!' என்று சொல்லிக் கொண்டிருப்பாள். கொலை செய்ய முயன்றதற்குச் சில நாளைக்கு முன்னால் உண்மையாகவே அவள் முஸ்லிம் மதத்திலே சேர்ந்து விட்டதாக என் வளர்ப்புத் தந்தை தெரிவித்தார். இதனாலெல்லாம் நான் அடைந்த மன வேதனையை என் வளர்ப்புத் தந்தை தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு வேறொரு முக்கியமான காரியம் இருந்தது. எனக்குத் தைரியம் சொல்லிவிட்டு, தன்னை மறுபடியும் சந்திப்பதற்கு இடமும் தேதியும் குறிப்பிட்டுவிட்டு அவர் போனார். ஆனால் அவரை நான் விடுதலை அடையும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட தேதியில் சிறை வாசலுக்குப் போனேன். ஆனால் அன்று எந்த ஸ்திரீயும் விடுதலை அடையவில்லை. விசாரித்ததில், சிறைக்குள்ளேயும் ரஸீயாபேகம் யாரையோ குத்திக் கொல்ல முயற்சித்ததாகவும், அவளைப் பைத்தியம் என்று சந்தேகித்துப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு மாற்றிவிட்டதாகவும் தெரிந்தது. பைத்தியக்கார ஆஸ்பத்திரியை விசாரித்துக் கொண்டு அங்கே போனேன். அங்கே பைத்தியம் தெளிந்து அவள் விடுதலையாகிப் போய்விட்டதாகத் தெரிந்தது. அன்று முதல் ரஸியாபேகத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். சீதா! அதற்காகவேதான் ரஜினிபூருக்கு நான் வந்தேன்.

'ரஜினிபூர் பைத்தியம்' என்று ஒரு ஸ்திரீ டில்லியில் சுற்றி அலைந்து கொண்டிருப்பதாக அங்கே கேள்விப்பட்டேன். அதன் பேரில் டில்லியிலும் தேடிக்கொண்டிருந்தேன். கடைசியாக அவளைச் சந்தித்திருக்கக்கூடிய தினத்தில் இம்மாதிரி பயங்கர சம்பவம் நடந்துவிட்டது!..." அந்த அறையில் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சீதா, "ரஸியாபேகம் உண்மையில் பைத்தியம் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?" என்று கேட்டாள். "எனக்கு எப்படித் தெரியும், சீதா! நான் அவளைப் பார்த்து நாலு வருஷத்துக்கு மேல் ஆயிற்று. ஒருவேளை அவள் பைத்தியமாக இருந்தாலும் இருக்கலாம். அவளுடைய மனதில் ஏதோ ஒரு பெரிய துவேஷம் குடிகொண்டிருந்தது மட்டும் எனக்குத் தெரியும். துவேஷம் முற்றினால் வெறி, அப்புறம் பைத்தியந்தானே? பைத்தியம் என்று ஏற்பட்டால் ஒரு வகையில் நல்லதுதான். போலீஸாரிடம் அவள் அகப்பட்டால் இன்று நடந்த சம்பவத்துக்காகத் தூக்கு போடமாட்டார்கள். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார்கள்!" இதைக் கேட்ட சீதா அன்றைய தினம் எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம் என்று எண்ணிக்கொண்டாள். வெறியும் பைத்தியமும் ஒருவேளை தன் பேரிலும் திரும்பியிருக் கலாமல்லவா? அதிலும் இராத்திரி இரண்டு மணிக்குத் தனியாகச் சென்று அறையைத் திறந்தபோது அவள் திடுக்கிட்டிருந்தால்? கடவுள் தன்னைக் காப்பாற்றினார் குழந்தை வஸந்தி செய்த அதிர்ஷ்டந்தான்!

சற்றுப் பொறுத்து சீதா, "இன்னும் ஒரே ஒரு கேள்வி, அக்கா நான் அணிந்திருந்த ரத்தின மாலையைப் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? அதை ரஸியாபேகம் எனக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்?" என்றாள். "ஆமாம்; அதை உறுதிப் படுத்திக் கொள்ளத்தான் கேட்டேன். என்னை வளர்த்த தாயார் ஒவ்வொன்றாகப் பல நகைகளை விற்ற பிறகு கடைசியாக மிஞ்சியிருந்த நகை அதுதான்." "அந்த ரத்தின மாலையையும் அதோடு இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் அவள் எதற்காக எனக்குக் கொடுத்தாள்?" "என்னை ஏன் கேட்கிறாய் சீதா? என் வாயினால் சொல்ல வேண்டுமா; நீயே ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?" என்றாள் தாரிணி. சீதாவின் உள்ளம் அதை ஊகித்துத் தெரிந்து கொண்டுதானிருந்தது. இப்போது ஊகம் ஊர்ஜிதமாயிற்று; தாரிணி நினைவு வந்த நாளிலிருந்து 'அப்பா' என்று அழைத்துக் கொண்டிருந்த மனிதர் சீதாவின் தந்தையாக இருக்கவேண்டும். தன்னுடைய குழந்தைப் பிராயத்தில் வீட்டில் தரித்திரம் பிடுங்கித் தின்றதன் காரணமும் தன் தாயார் அடிக்கடி சோகக் கடலில் மூழ்கியிருந்த காரணமும் அதுவேதான்.

அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகவே அந்த ஸ்திரீ மர்மமாக வந்து இரத்தின மாலையை கொடுத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். தன்னுடைய கலியாணத்துக்கு முன்னால் தன் தகப்பனார் டில்லிக்குப் போயிருந்த விஷயம் சீதாவுக்கு நினைவு வந்தது. தாரிணியைப் பார்க்கத்தான் அவர் போயிருக்க வேண்டும். இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ? தான் பார்த்துப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. தாரிணியும் அவரைப் பார்க்கவில்லை. அவர் உயிரோடிருக்கிறாரோ என்னமோ? இருந்தால் பெற்ற மகளை ஒரு தடவையாவது வந்து பாராமலா இருப்பார். இப்படியெல்லாம் யோசித்துவிட்டுச் சீதா, "அக்கா! எது எப்படியிருந்தாலும் சரிதான்; எப்போதும் நீங்கள் எனக்குத் தமக்கையாகவே இருக்க வேண்டும்!" என்றாள். கடிகாரத்தில் மணி நாலு அடித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்து நான்காம் அத்தியாயம்

நல்ல மாமியார்

திடீரென்று ஒருநாள் தாமாவும் பாமாவும் சீதாவின் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடைய வரவு சீதாவுக்கு மிக்க குதூகலம் அளித்தது.பேச்சும் சிரிப்பும் பரிகாசமுமாக வீடு ஒரே கலகலப்பாயிருந்தது. யோக க்ஷேமங்களை விசாரித்துக் குழந்தை வஸந்தியை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சிய பிறகு, "மிஸ்டர் ராகவன் எங்கே? அவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணத்தான் முக்கியமாக நாங்கள் இன்றைக்கு வந்தோம்!" என்றாள் பாமா. "என் மாமியார் இன்றைக்கு ஊரிலிருந்து வருகிறார். அவரை அழைத்து வருவதற்கு இவர் இரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார்!" என்று சொன்னாள் சீதா. "ஐயோ! மாமியார் வருகிறாளா? எனக்குப் பயமா யிருகிறதே!" என்றாள் பாமா. "உனக்குத் தெரியுமா, சீதா? கலியாணம் பண்ணிக் கொண்டால் மாமியார் வந்து சேர்வாளே என்ற பயத்தினால் தான் நாங்கள் இரண்டு பேரும் கலியாணமே செய்து கொள்ளவில்லை!" என்று தாமா சொல்லிவிட்டு 'ஹஹ்ஹஹ்ஹா!' என்று சிரித்தாள், பாமாவும் கூடச் சிரித்தாள்.

சீதாவும் கொஞ்சம் சிரித்துவிட்டு, "ஆனால் எனக்கு வந்திருக்கும் மாமியார் அப்படிப்பட்டவர் இல்லை! ரொம்ப நல்ல மனுஷி, அவரிடம் எனக்குப் பயமில்லை!" என்றாள். "உன்னைக் கண்டு உன்னுடைய மாமியார்தான் பயப்படுகிற வழக்கமோ?" என்று பாமா சொல்லிவிட்டு 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று நகைத்தாள். "அதுவும் கிடையாது!" என்று சீதா சொல்லிவிட்டு, "ஏன், பாமா! இங்கிலீஷ்காரர் களுக்குள்ளே நாட்டுப் பெண்கள் மாமியாருக்குப் பயப்பட மாட்டார்களாமே? மாப்பிள்ளைகள் தான் மாமியார்களைக் கண்டு பயப்படுகிற வழக்கமாமே?" என்று கேட்டாள். "அதெல்லாம் ஹாஸ்ய ஆசிரியர்கள் பரிகாசமாக எழுதுகிற விஷயம். நகைச்சுவை இல்லாத நம்முடைய ஊர்க்காரர்கள் அதை உண்மை என்று எண்ணிக் கொண்டு இங்கிலீஷ் நாகரிகத்தைக் கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள்!" என்றாள் தாமா. "இவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணவேண்டும் என்கிறீர்களே! எதற்காக?" என்று சீதா கேட்டாள்.

"ராகவன் சீமைக்குப் போய்ட்டு வந்தவரானபடியால்தான், அவருக்கு அப்பேர்ப்பட்ட தைரியம் வந்தது. நம் ஊர்க்காரர் களாயிருந்தால், தெருவிலே யாராவது விழுந்து கிடந்தால் 'நமக்கென்னத்திற்கு வம்பு?' என்று ஒதுங்கிப்போய் விடுவார்கள். ராகவன் சீமைக்குப் போனவரான படியால் சாலையில் குத்துப்பட்டுக் கிடந்தவனை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போய்ப் போலீஸிலும் தெரியப்படுத்தினார். இந்த மாதிரி கடமை உணர்ச்சியுடன் உன் கணவர் காரியம் செய்தது பற்றி எங்கள் தகப்பனார் ரொம்பப் பாராட்டினார், சீதா! இதை உன்னுடைய கணவரிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் முக்கியமாக வந்தோம்!" என்றாள் பாமா. அன்றிரவு உண்மையில் நடந்தது என்ன என்பது சீதாவுக்கு நன்றாக நினைவில் இருந்தது. சீமைக்குப் போய் வந்த தன் கணவர், "நமக்கென்னத்திற்கு வம்பு? வண்டியை ஒதுக்கிவிட்டுக் கொண்டு போய்விடலாம்!" என்று சொன்னார். சூரியாவும் தாரிணியுந்தான் குத்துப்பட்ட உடலைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து ராகவன், "உங்களுடைய பிடிவாதத்தினாலேதான் இந்தத் தொந்தரவெல்லாம் வந்தது!" என்று இரண்டு மூன்று தடவை சொன்னது சீதாவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. ஆனாலும் சீதா அந்த விஷயத்தை இப்போது உடைத்துச் சொல்ல விரும்பவில்லை. தன் கணவனுக்குத் தாமாவும் பாமாவும் அளித்த கௌரவத்தை நான் ஏன் மறுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு சும்மா இருந்தாள்.

பிறகு ஏதோ நினைவு வந்து கேட்பவளைப்போல், "பாவம்! செத்துப்போன மனிதன் உங்கள் ஊர்க்காரனாமே? அது வாஸ்தவமா?" என்றாள். "ஆமாம்; அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எங்களூர் என்றால் ரஜினிபூர், ஆனால் அவனுக்காகப் 'பாவம்' என்று இரக்கப்பட வேண்டியதில்லை; ரொம்பப் பொல்லாத மனிதன். பழைய ராஜா இருந்தபோது இவனுடைய அக்கிரமங்களைச் சகிக்க முடியாதாம். எங்கள் அப்பா திவானாக வந்த பிறகு கொஞ்சம் பயந்து கொண்டு சும்மாயிருந்தான். முக்கால்வாசி டில்லியிலேதான் இருப்பான். இங்கே என்ன வத்தி வைத்துக் கொண்டிருக்கிறானோ, யார் குடியைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறானோ என்று அப்பா வுக்குக் கூடக் கவலையாகத்தான் இருந்தது. அவன் செத்துப் போனது உலகத்துக்குப் பெரிய நஷ்டமில்லைதான் ஆனாலும் சட்டம் சட்டமல்லவா? அவனைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் அப்பா ரொம்பப் பிரயத்தனம் செய்து இந்த ஊர்ப் போலீஸ் காரர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். டில்லியில் போலீஸ் சுத்த ஊழல் என்று உனக்குத் தெரியுமோ இல்லையோ?"

சீதாவுக்கு ரஜினிபூர் திவான் மீது கோபமாய் வந்தது. அவர் எதற்காக இந்த விஷயத்தில் சிரத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றியது. "அப்படியானால் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க வில்லையா!" என்று கேட்டாள். "எங்கே கண்டுபிடிக்கப் போகிறார்கள்? மூன்று வருஷம் தேடிவிட்டுக் கடைசியில் 'கொலையே நடைபெறவில்லை' என்று சொல்லி விடுவார்கள்! இந்தப் புது டில்லிப் போலீசாரின் இலட்சணம் அப்படி !" என்றாள் தாமா. சீதா தன் மனதிற்குள் 'அப்படியே நடந்துவிட்டால் நல்லது' என்று நினைத்துக் கொண்டாள். ஒரு கொலைகாரி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிரத்தையை நினைக்க அவளுக்கே வியப்பாயிருந்தது. "ஒருவர் பேரிலும் சந்தேகங்கூட இல்லையா?" என்றாள். "யாரோ 'ரஜினிபூர் பைத்தியம்' என்று ஒரு ஸ்திரீ, அந்த மதோங்கரைச் சில நாளாகத் தொடர்ந்து கொண்டிருந்தாளாம். அவளாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக் கிறார்கள். ஆனால் அப்படியிராது என்று எனக்குத் தோன்றுகிறது. பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி அவ்வளவு துணிச்சலான குற்றத்தைச் செய்ய முடியுமா?" என்றாள் பாமா. இதற்குத் தாமா, "ஏன் முடியாது? ஏன் துணிச்சல் வராது? ஸ்திரீகளுக்குள்ளே எத்தனையோ ராட்சஸிகள் இருக்கிறார்கள், இராமாயணத்திலே சொல்லியிருக்கிறதே? மேலும் இந்த மதோங்கர் என்கிறவன் என்ன அக்கிரமம் பண்ணினானோ, அவன் பேரில் இவளுக்கு என்னவிதமான கோபமோ, அது யாருக்குத் தெரியும்?" என்றாள்.

இந்த சமயத்தில் டெலிபோன் மணி கிணுகிணுவென்று அடித்தது. சீதா ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்து, "யார்?" என்று கேட்டாள். பேசியது சூரியா; தானும் தாரிணியும் சீதாவின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னான். "சந்தோஷம்! உன்னைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று உடனே புறப்பட்டு வா!" என்றாள் சீதா. பிறகு, வரப்போவது யார் என்பதைத் தாமா - பாமாவிடம் சொன்னாள். அவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். "உன் அகத்துக்காரரைத்தான் பார்க்க முடியவில்லை. தாரிணியை யாவது பார்த்துவிட்டுப் போகிறோம்!" என்றார்கள் பாமாவும் தாமாவும். "அவரும் வருகிற சமயந்தான்; அநேகமாக அரைமணிக் குள்ளே வந்துவிடுவார். நீங்கள் இருந்து அவரையும் பார்த்து விட்டுப் போகலாம்!" என்றாள் சீதா. சீதாவுக்குச் சூரியாவைப் பார்க்க விருப்பமாயிருந்தது; தாரிணியைப் பார்க்கவும் ஆசையாயிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. இதுவிஷயமாக ராகவன் புகார் கூறியது சீதாவின் மனதில் பதிந்திருந்தது. "சூரியாவும் தாரிணியும் அடிக்கடிஒன்றாய்ச் சேர்ந்து போகிறார்களாம்; பகிரங்கமாக ஊர் சுற்றுகிறார்களாம் கொஞ்சம் கூட நன்றாயில்லை. சூரியாவுக்கு ஏன் இப்படிப் புத்தி போக வேண்டும்? அவன் தாயார் தகப்பனாருக்குத் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்?" என்று ராகவன்சொல்லியிருந்தான்.

அது பிசகான காரியம் என்றுதான் சீதாவுக்கும் தோன்றியது. ஆனால் ராகவன் சூரியாவின் பேரில் பழியைப் போட்டான். சீதாவோ தன் மனத்திற்குள் தாரிணியைக் குறை கூறினாள். "சூரியா கிராமத்திலிருந்து வந்த அறியாப் பையன்; அவனை உலக அனுபவமுள்ள தாரிணிதான் கெடுத்துக் கொண்டிருக்கிறாள்" என்று எண்ணினாள். சூரியாவைத் தனியாகச் சந்திக்கும்போது 'தாரிணியின் வலையில் விழ வேண்டாம்!' என்று எச்சரிக்கை செய்யவும் உத்தேசித்திருந்தாள். தாரிணியின் விஷயத்தில் சீதாவின் மனோபாவம் இரண்டு விதமாக இருந்தது. அவளை நேருக்குநேர் சந்திக்கும் போதெல்லாம் தன்னை மீறிய அன்பும் அபிமானமும் அவள் பேரில் ஏற்பட்டது. அவள் தன்னுடைய தமக்கை அதாவது மாற்றாந்தாயின் மகள் என்பதாக ஏற்பட்டிருந்தால் அவளுக்குச் சந்தோஷமாகவே இருந்திருக்கும். அவ்விதம் இல்லாமற் போயிற்றே என்று சீதாவுக்கு ஏமாற்றமாயிருந்தது. ஆனால் தாரிணி இல்லாத சமயத்திலோ, அவள் பேரில் அகாரணமாகக் கோபம் வந்தது. குழந்தை வயதில் தன்னுடைய வீட்டில் குடிகொண்டிருந்த வறுமைக்கும் தன்னுடைய தாயார் துயரத்திற்கும் அகால மரணத்துக்கும் கூட அவளே காரணம் என்று தோன்றியது. அப்புறம் தன்னுடைய கணவரை ஏற்கெனவே தெரிந்தவளாயும் அவருடன் கூச்சமின்றிப் பழகக் கூடியவளாயும் இருக்கிறாள்.

இப்போதோ சூரியாவை அடியோடு பைத்தியமாக அடித்திருக்கிறாள். இந்தியப் பெண் குலத்தின் பண்புக்குத் தகுந்த நடவடிக்கைகளா இவை? தாரிணியை நினைக்கும்போது, தாமாவும் பாமாவும் எவ்வளவு நல்லவர்கள்? அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியிருந்தாலும், அதனால் என்ன? அவர்களுடைய நடத்தை எவ்வளவு மேலானது? ஒரு கொள்கையை உத்தேசித்து அவர்கள் இன்னும் கலியாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களே? அது எவ்வளவு மேலான காரியம்? நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, இந்தச் சகோதரிகளின் நடை உடை பாவனைகள் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் இவர்களுடன் நன்றாக சிநேகம் செய்து கொண்டு அதிகமாகப் பழகி இவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். வைஸ்ராய் மாளிகைத் தோட்டத்தில் நடந்த 'பார்ட்டி'யில் இவர்கள் எவ்வளவு சகஜமாக எல்லாருடனும் பேசிப் பழகினார்கள்? அப்படிப் பழகுவதற்குத் தானும் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு என்னமோ இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான். ஆனால் கணவருக்குப் பிடிக்கிற காரியங்களே தனக்கும் பிடிக்குமாறு செய்து கொள்ளவேண்டும் அல்லவா? இப்படித்தானே தன் மாமியார் கூட அடிக்கடி போதனை செய்து கொண்டு வருகிறார்? தாமாவும் பாமாவும் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் மிகவும் சௌகரியமாயிருக்கும்....

இத்தகைய மனோநிலையை அடைந்திருந்த சீதா, தாமாவையும் பாமாவையும் பார்த்து, "நீங்கள் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். எனக்கு இங்கே சிநேகிதமேயில்லை பொழுது போவது கஷ்டமாயிருக்கிறது!" என்று சொன்னாள். "ஒருவேளை சீக்கிரம் இந்த ஊருக்கு வந்தாலும் வந்து விடுவோம் சீதா! அப்பாவுக்கு இந்திய சர்க்காரில் பெரிய உத்தியோகம் ஆகும் போலிருக்கிறது! அழைப்பு வந்துவிட்டது. அப்பாதான் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கிறார்!" என்றாள் பாமா. "உனக்குச் சிநேகிதத்துக்கு என்ன குறைவு, சீதா! தாரிணி தான் இருக்கிறாளே!" என்றாள் தாமா. "தாரிணி சிநேகமாயிருப்பதும் ஒன்றுதான்; சிநேகிதம் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். அவள் வந்தால் ஏதாவது சோஷலிஷம், காங்கிரஸ், புரட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு அதெல்லாம் பிடிப்பதேயில்லை" என்றாள் சீதா. "அப்படியா சொல்கிறாய்? உனக்கும் கொஞ்சம் அந்த மாதிரி விஷயத்தில் கிறுக்கு உண்டு என்றல்லவா நினைத்தேன்?" "கிடையவே கிடையாது எனக்குக் காந்தி மகாத்மாவிடம் கொஞ்சம் பக்தி உண்டு. அவரை யாராவது குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது. என் அகத்துக்காரர் காந்தியைப்பற்றிக் குறை சொன்னால் கூட அவருடன் சண்டை பிடிப்பேன்!" என்றாள் சீதா.

"காந்தி பெரிய மாகான்தான்; சந்தேகமேயில்லை. ஆனால் அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் சுத்த மோசம். அவர் சொல்கிறபடி எல்லாரும் கேட்டால் இந்தியா இரண்டாயிரம் வருஷம் பின்னால் போய்விடும்!" என்றாள் தாமா. "ரயில், மோட்டார், எலக்டிரிக் விளக்கு இதெல்லாம் இல்லாமல் இனிமேல் நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா?" என்றாள் பாமா. "அடடா! அன்றைக்கு வைஸ்ராய்த் தோட்டப் பார்ட்டிக்கு என்னை அழைத்துக்கொண்டு போனீர்களே அங்கே செடிகளுக்குள்ளே விளக்குப் போட்டிருந்தது எவ்வளவு அழகாயிருந்தது! 'இதுதான் கந்தர்வ லோகமோ' என்று எனக்குத் தோன்றிவிட்டது!" "நீ பார்த்த பார்ட்டி என்ன பிரமாதம், சீதா! அடடா! வில்லிங்டன் வைஸ்ராயாக இருந்தபோது நீ பார்த்திருக்க வேண்டும். அப்போது வைஸ்ராய் மாளிகையில் பார்ட்டி என்றால், 'கந்தர்வ லோகமா?' என்று சந்தேகப்பட வேண்டியிராது! நிஜமான கந்தர்வ லோகமாகவே இருக்கும். இந்தக் காளை மாட்டு வைஸ்ராய் வந்த பிறகு, முன்மாதிரி அவ்வளவு ஜோர் இல்லை. பார்ட்டிகளும் அடிக்கடி நடப்பதில்லை. லார்ட் லின்லித்கோவுக்குக் 'காளை மாட்டு வைஸ்ராய்' என்பதாகப் பெயர் ஏற்பட்டிருக்கிறதே அது உனக்குத் தெரியுமா, இல்லையா?" என்று தாமா கேட்டாள்.

"தெரியாமல் என்ன? எல்லாருந்தான் அதைப்பற்றிப் பரிகாசம் செய்கிறார்களே?" என்றாள் சீதா. "வர வரக் காலம் கெட்டுப் போய்விட்டது. சீமையில் காளை மாடு வளர்க்கிறவர்கள், பன்றி மந்தை வளர்க்கிறவர்கள் எல்லாரையும் பிடித்து இந்தியாவுக்குக் கவர்னர்களாகவும், வைஸ்ராய்களாகவும் அனுப்பி விடுகிறார்கள்" என்று பாமா சொல்வதற்குள் தாமா குறுக்கிட்டு, "இப்போதாவது இந்த மட்டில் இருக்கிறது. இங்கிலாந்தில் லேபர் கவர்ன்மெண்ட் வந்து விட்டால் ரயில்வே போர்ட்டர்களையும் தபால் பியூன்களையும் பிடித்துக் கவர்னர்களாக அனுப்பி விடுவார்கள். அவர்களுக்கு நம்முடைய தேசத்து மகாராஜாக்களும் நவாப்புகளும் சலாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்!" என்றாள். அதற்குப் பாமா, 'சீமையிலிருந்து போர்ட்டர்களும் தபால் பியூன்களும் வருவது என்ன? நம் தேசத்துக் காங்கிரஸ்காரர்களும் சோஷலிஸ்டுகளும் சொல்கிறபடி நடந்தால் நம் ஊர் ரெயில்வே போர்ட்டர்களும் தபால் பியூன்களுமே கவர்னர்களாக வந்து விடுவார்கள்! எது உனக்குத் தேவலை' சீதா?" என்று கேட்டாள். சீதாவுக்கு ராஜம்பேட்டைக் கிராமமும், ராஜம்பேட்டைத் தபால் சாவடியும் நினைவுக்கு வந்தன! தபால்காரன் பாலகிருஷ்ணன் கவர்னர் வேலைக்கு வந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று தனக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டு சிரித்தாள்.

இந்திய தேசத்தில் சர்க்காரும், சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் இப்போது நடக்கிறபடியே நடப்பதுதான் நல்லது என்று தோன்றியது. இந்தச் சமயத்தில் சூரியாவும் தாரிணியும் உள்ளே வந்தார்கள். தாமாவும் பாமாவும், "ஹலோ! மை டியர்!" என்று தாரிணியைக் கட்டிக்கொண்டும் கையைப் பிடித்துக் குலுக்கியும் முகமன் கூறினார்கள். சீதா சூரியாவைக் கொஞ்சம் தனியாக அழைத்துப் போய், "அம்மாஞ்சி! உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். தாரிணியிடம் உனக்கு என்ன இவ்வளவு சிநேகம்? உன் அப்பா அம்மா கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்? வீணாகப் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே! நான் பார்த்து உனக்கு நல்ல பெண்ணாகக் கூடிய சீக்கிரம் கலியாணம் செய்து வைக்கிறேன்?" என்றாள். சூரியா புன்னகையுடன், "நல்ல பெண் எங்கே பார்த்து வைத்திருக்கிறாய்! இவர்கள் இரண்டு பேரில் ஒருவரையா?" என்று கேட்டு, பாமா தாமா இருந்த பக்கம் பார்த்தான். "சீச்சீ! இவர்கள் இரண்டு பேருக்கும் உன்னைவிட அதிக வயதிருக்கும். இவர்களுடைய நவநாகரிகத்துக்கும் உன் அம்மாவின் கர்நாடகத்துக்கும் ஒரு நிமிஷங்கூடப் பொருந்தாது, வேறு நல்ல இடம் பார்க்கலாம். நீ மட்டும் தாரிணியின் வலையில் விழாமல் இரு!" என்றாள் சீதா.

"அத்தங்கா! இந்த மாதிரியெல்லாம் பேச யாரிடம் கற்றுக் கொண்டாய்? தாரிணியைப் பார்த்து உன் மனதில் களங்கம் எதுவும் வேண்டாம்! நான் தான் முன்னமே சொன்னேனே? நாங்கள் இரண்டு பேரும் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது. இரண்டு பேரும் சீக்கிரத்தில் லாகூருக்குப் போவதாகக் கூட உத்தேசித்திருக்கிறோம்..." இதற்குள் தாமா, "சீதா! அம்மாஞ்சியுடன் என்ன இரகசியம் பேசுகிறாய்? எங்களுக்கு அவரை 'இண்ட்ரட்யூஸ்' பண்ணக் கூடாது என்ற எண்ணமா? நாங்கள் அவரைக் கடித்து விழுங்கி விடமாட்டோம். இங்கே அழைத்துக்கொண்டு வா!" என்று கீச்சுக் குரலில் கத்தினாள். இதைக் கேட்ட சீதாவும் சூரியாவும் மற்றவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்

"சுட்டு விடுவேன்!"

சூரியாவைத் தாமாவுக்கும் பாமாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தவுடனே, "நாங்கள் வந்தபோது ஏதோ மகாராஜாக்களையும் கவர்னர்களையும் போர்ட்டர்களையும் பியூன்களையும் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்ததே! அது என்ன விஷயம்?" என்று சூரியா கேட்டான். சீதா விஷயத்தை சொன்னாள்; "அப்படியெல்லாம் ஒருநாள் வரத்தான் போகிறது. ரயில்வே போர்ட்டர் கவர்னர் ஆவார். தொழிற்சாலை மேஸ்திரி கவர்னர் ஜெனரல் ஆவார். தபால்காரர் பிரதம மந்திரியாவார். இதற்கெல்லாம் நாம் தயாராயிருக்க வேண்டும். இங்கிலீஷ் படித்தவர்களும் பெரிய மனிதர்களுமே எப்போதும் பெரிய உத்தியோகங்களில் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்று ஜெர்மனியைக் கண்டு உலகமே நடுங்கும்படி செய்திருக்கும் ஹிட்லர் யார்? சுவருக்குச் சுண்ணாம்பு வர்ணம் பூசிக் கொண்டிருந்தவன். ஜெர்மனியில் ஆயிரம் வருஷமாக அரசு புரிந்து வந்த ஆளும் இனத்தார் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ருஷியா தேசத்தின் விஷயம் என்ன...?" என்று சூரியா பேசிக் கொண்டே போனான். "அடே அப்பா! இவர் என்ன நெருப்புக் கக்கும் சோஷலிஸ்ட் போல் இருக்கிறதே!" என்றாள் பாமா.

"ஆமாம்; அம்மாஞ்சி பெரிய தீவிரவாதி; கிராமத்திலுள்ள நில விஷயத்தில் குடியானவர்கள் கட்சி பேசி, அப்பாவுடனும் அண்ணாவுடனும் சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டான்! பொதுக் கூட்டங்களில் பிரமாத ஆவேசத்துடன் பேசுவானாம்! ஆனால் நான் இதுவரையில் கேட்டதில்லை" என்றாள் சீதா. "என்னை நெருப்பைக் கக்கும் சோஷலிஸ்ட் என்றுதானே சொன்னீர்கள்? அது உண்மைதான். எங்கள் கட்சி மூட்டும் நெருப்பு இந்தியா தேசத்திலுள்ள மகாராஜாக்கள், திவான்கள், ஜமீன்தார்கள், ஜாகீர்தார்கள், ஏழைப் பாட்டாளிகளைப் பிழிந்தெடுத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் முதலாளிகள் எல்லோரையும் கொளுத்திப் பொசுக்கிக் கூண்டோடு கைலாசம் அனுப்பி வைக்கப் போகிறது, கொஞ்ச நாளில் பாருங்கள்!" என்றான் சூரியா. "மகாராஜாக்களும் ஜமீன்தார்களும் போனால் போகட்டும்! பாவம், ஏழைத் திவான்களைச் சும்மா விட்டு விடுங்கள் பிழைத்துப் போகட்டும்!" என்று பரிகாசக் குரலில் கூறினாள் பாமா. "இவ்வளவெல்லாம் பேசுகிறீர்களே? உங்களுடைய எரிமலை கக்கும் நெருப்பினால் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கங்கூட எரிந்து போய்விடுமா?" என்று பாமா கேட்டாள். "பிரிட்டிஷ் அரசாங்கமும் ஒருநாள் அழியத்தான் போகிறது. இப்போதைக்கு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் 'அஸ்பெஸ்டாஸ்' கவசம் போட்டுத் தப்பித்துக் கொண்டு வருகிறது. ஆனால் இது வெகு காலம் நிற்காது. கூடிய சீக்கிரத்தில் இந்தியா அதிகார வர்க்கத்துக்கும் காலம் வரும்!" என்றான் சூரியா.

"அது என்ன 'அஸ்பெஸ்டாஸ்' கவசம்? இதுவரையில் நான் கேட்டதில்லையே?" என்றாள் சீதா. "அஸ்பெஸ்டாஸ் என்று ஒரு புதிய செயற்கைப் பொருளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை நெருப்பு எரிக்காது; நெருப்பே பிடிக்காது, பிரிட்டிஷார் அத்தகைய அஸ்பெஸ்டாஸ் கவசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? அது தான் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வேற்றுமை. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைத்துத்தான் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள்." "அந்தப் பிளவு எப்படி நீங்கும்?" என்று தாமா கேட்டாள். "பிளவு நீங்குவதற்கு வழி பொருளாதாரப் புரட்சி தான். ஏழைகளில் இந்து ஏழை என்றும் முஸ்லிம் ஏழை என்றும் கிடையாது பாட்டாளிகளிலும் அப்படியே. இந்த விஷயத்தை இரண்டு சமூகங்களையும் சேர்ந்த ஏழைகளுக்கும் பாட்டாளிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டால், அவர்கள் விழித்துக் கொண்டு விடுவார்கள். பதவிப் பித்துக்கொண்ட அரசியல்வாதிகளும் பிரிட்டிஷ் இராஜ தந்திரிகளும் தங்களை உபயோகித்துக் கொள்ள இடங்கொடுக்க மாட்டார்கள்" என்றான் சூரியா.

பெரியவர்களுடைய பேச்சையெல்லாம் விஷயம் புரியாவிட்டாலும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்த வஸந்தி, "அப்பா வந்துத்தா! அப்பா வந்துத்தா! பாத்தியை அச்சிண்டு வந்துத்தா!" என்று சொல்லிக் குதித்துக் கொண்டே வாசற்பக்கம் ஓடினாள். சீதா, "ஆமாம்; இவர்தான் வந்துவிட்டார் போலிருக்கிறது. நீங்கள் சற்றுப் பேசிக் கொண்டிருங்கள் நான் போய் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வாசற்பக்கம் விரைந்து சென்றாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டின் முகப்புத் தாழ்வாரத்தில் நின்றாள். வண்டி வந்து வீட்டு வாசலில் நின்றது. தாயார் இறங்குவதற்கு முன்னாலே ராகவன் அவசரமாக இறங்கி வந்தான். முகப்புத் தாழ்வாரத்தில் நின்ற சீதாவை நெருங்கி, "சீதா! ஊருக்கு எதற்காக அப்படிக் கடிதம் எழுதினாய்! ஒருநாளைக்கு உன்னை நன்றாய் அறைந்துவிடப் போகிறேன். திமிர் அதிகமாகிவிட்டது! தடிக் கழுதை!" என்று சீறும் குரலில் கூறினான். "ஐயோ! இது என்ன? நான் ஒன்றும் எழுதவில்லையே" என்றாள் சீதா. பொங்கி வந்த அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டாள். இவ்வளவு கோபமாகவும் ஆபாசமாகவும் ராகவன் சீதாவைத் திட்டியது இதுதான் முதல் தடவை. "நீ எழுதவில்லையா? பொய் சொல்லாதே? ரஜினிபூர் ஏரியில் உன்னை நான் படகிலிருந்து பிடித்துத் தள்ளிவிட்டதாகக் கடிதம் எழுதவில்லையா உன் சிநேகிதி லலிதாவுக்கு?..." சீதாவுக்கு உண்மை புலனாயிற்று; சூரியா லலிதாவுக்கு எழுதிய விஷயம் எப்படி இவர் காதுக்கு எட்டியிருக்கிறது.

யாரோ தன் மாமியாரிடம் ஊரில் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். ரயிலிலிருந்து இறங்கியதும் இறங்காததுமாக மாமியார் அதை இவரிடம் சொல்லி இருக்கிறார்! முதல் முதலாக, சீதாவுக்கு அப்போதுதான் தன் மாமியார் மீது கோபம் உண்டாயிற்று. "ஏன் பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டு நிற்கிறாய்? எழுதினாயா? இல்லையா?" என்றான் ராகவன். ஒரு கணநேரம் சீதா யோசனை செய்தாள். தான் எழுதவில்லை என்றும் தாரிணி கூறியதைக் கேட்டுச் சூரியா எழுதினான் என்றும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் சூரியா மீது இவருக்கு அசாத்தியக் கோபம் வரும். அதைக் காட்டிலும் தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுவதே நல்லது. "நான் அப்படி யெல்லாம் ஒன்றும் எழுதவில்லை..." என்று சமாதானம் சொல்ல ஆரம்பித்தாள். "அப்படி எழுதவில்லை... இப்படி எழுதினாயாக்கும்! உன்னுடைய துஷ்டத்தனம் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. ஒருநாளைக்கு உன்னை நிஜமாகவே ஏரியில் பிடித்துத் தள்ளி விடுகிறேன் பார்." "வேண்டாம்! வேண்டாம்! இரைந்து பேசாதீர்கள்! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். குழந்தை என்னமோ ஏதோ என்று திக்பிரமை அடைந்திருக்கிறாள். உள்ளே யார் யாரோ வந்திருக்கிறார்கள்?" என்றாள் சீதா. ராகவனுக்குச் சட்டென்று புத்தி தெளிந்தது "உள்ளே யார் வந்திருக்கிறார்கள்?" என்று கேட்டான்.

"தாரிணி வந்திருக்கிறாள்.." "ஓஹோ!" என்றான் ராகவன் உடனே அவன் முகத்தில் மாறுதல் காணப்பட்டது. "தாமாவும் பாமாவும் வந்திருக்கிறார்கள்...." "அந்தச் சனியன்களும் வந்திருக்கிறார்களா?... அது தான் இவ்வளவு கொம்மளம் போலிருக்கிறது! வந்திருப்பவர்கள் அவ்வளவுதானா? இன்னும் யாராவது உண்டா?" என்று ராகவன் கேட்டான். "சூரியாவும் வந்திருக்கிறான்..." "அந்த ராஸ்கல் இங்கு எதற்காக வந்தான்? ஒருநாளைக்கு அவனை ரிவால்வரால் சுட்டுக் கொன்று விடப் போகிறேன்!" என்று முணுமுணுத் தான் ராகவன். சீதா அடைந்த மன வேதனைக்கு அளவேயில்லை. திடீரென்று இத்தகைய ராட்சஸ சுபாவம் இவருக்கு எங்கே இருந்து வந்தது என்று திகைத்தாள். இந்தச் சமயத்தில் காரிலிருந்து சாவகாசமாக இறங்கிய வேலைக்காரன் சாமான்களை யெல்லாம் எடுத்து விட்டானா என்று பார்த்த பிறகு, வீட்டுப் படி ஏறிவந்த காமாட்சி அம்மாள், "ராகவா; இது என்ன? நான் வந்ததும் வராததுமாய் நீங்கள் சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்? உங்களுடைய சண்டையைப் பார்த்து விட்டு நான் திரும்பிப் போய் விட வேண்டுமென்ற எண்ணமா? அதெல்லாம் நான் போக மாட்டேன் என் பேத்தியை விட்டுவிட்டு, வஸந்தி! இங்கே வா, அம்மா!" என்றாள். அப்பா - அம்மா சண்டையைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்த வஸந்தி பாட்டியிடம் தாவிச் சென்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்து ஆறாம் அத்தியாயம்

பேச்சு யுத்தம்

வீட்டு வாசலிலே நின்ற ராகவனுக்கும் வீட்டுக்குள்ளே வந்த ராகவனுக்கும் மிக்க வித்தியாசம் காணப்பட்டது. ராட்சத சுபாவம் எங்கேயோ போய்விட்டது. முகத்திலும் பேச்சிலும் இனிமை ததும்பியது. இந்த மாறுதலைப் பார்த்துச் சீதா சந்தோஷம் அடைந்தாள். கோபமோ தாபமோ நம்மிடம் எது இருந்தாலும் மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளாமல் நடந்து கொள்கிறாரே என்று சந்தோஷப் பட்டாள். முதலில் தாமாவையும் பாமாவையும் வரவேற்று ராகவன், குதூகலமாகப் பேசினான். பிறகு தாரிணியைப் பார்த்து "ஏது ஏது? உங்களைப் பார்ப்பது மூன்றாம் பிறை பார்ப்பது போலாகி விட்டதே!" என்றான். "பூரண சந்திரன் சில சமயம் பிறையாக மாறுவது இயல்பு தானே!" என்றாள் தாரிணி. "பூரண சந்திரன் எப்போதும் பூரண சந்திரன் தான்! நம்முடைய பார்வைக்குச் சில சமயம் பூரண சந்திரனாகத் தோன்றுகிறது; சில சமயம் பிறையாகத் தோன்றுகிறது!" என்றான் ராகவன். தாரிணி பதில் சொல்லு வதற்குள்ளே, "ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; சூரியனோடு சேர்ந்தால் சந்திரன் அடியோடு மறைந்து தான் போகும்!" என்று சொல்லிவிட்டுச் சூரியாவைப் பார்த்தான். "நீ எப்போது அப்பா, வந்தாய்?" என்று கேட்டான்.

சூரியனையும் சந்திரனையும் பற்றி ராகவன் சிலேடையாகப் பேசியது கேட்டுச் சூரியாவினுடைய முகம் சிவந்து போயிருந்தது. தன்னுடைய மனக் குழப்பத்தைக் காட்டிக் கொள்ளாமல், "வந்து அரை மணி நேரம் ஆயிற்று, மாப்பிள்ளை ஸார்! நானும் தாரிணி தேவியும் சேர்ந்து தான் வந்தோம்?" என்றான். தாமாவும் பாமாவும் இப்போது பேச்சில் குறுக்கிட்டு, ராகவன் அன்றிரவு சாலையில் கிடந்த உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றது பற்றி அவனைப் பாராட்டிப் பேசினார்கள். அதற்கு ராகவன், "இது என்ன பிரமாத விஷயம்? யாரும் செய்ய வேண்டிய கடமைதானே? வேறு விஷயம் பேசுங்கள்!" என்றான். தாமா, "உங்களுக்குப் பிரமாத மில்லை எங்களுக்கெல்லாம் பிரமாதமாகத்தான் தோன்றுகிறது. பாவம், அன்றைக்கு உங்கள் மனைவி ரொம்பக் கலவரமடைந்திருக்க வேண்டுமே!" என்றாள். "ஆமாம்; அன்றைக்கு அப்புறம் இவளைத் தனியாக வீட்டில் விட்டுப் போகவே முடியவில்லை. அதற்காகத் தான் என் தாயாருக்கு உடனே கடிதம் எழுதி வரவழைத்தேன்." "உங்கள் தாயார் ரொம்ப 'ஸ்வீட் லேடி' என்று கேள்வி. சீதா சொல்லியிருக்கிறாள், எங்களுக்கு அவரை நீங்கள் அறிமுகம் செய்து வைக்கப் போவதில்லையா?"

"இப்போதுதானே இரண்டு நாள் ரயில் பிரயாணம் செய்து விட்டு வந்திருக்கிறாள்? என் தாயார் கொஞ்சம் கர்நாடகம், வழியில் சாப்பிடவே இல்லையாம். ஸ்நான பானம் எல்லாம் செய்து முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும்" என்றான் ராகவன். "எப்படியும் உங்கள் தாயாரைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் போகப் போகிறோம்!" என்று தாமாவும் பாமாவும் ஒரே மூச்சில் சொன்னார்கள். "அம்மா! உங்களைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் போகப் போகிறார்களாம்!" என்று உள்ளே போய்ச் சொன்னாள் சீதா. "ஏண்டி, பெண்ணே! இந்தப் பிசாசுகள் எல்லாம் இங்கே எதற்காக வருகின்றன? நீயும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக் கிறாயே? இப்படித் துப்புக் கெட்டவளை நான் பார்த்ததேயில்லை!" என்றாள் காமாட்சி அம்மாள். "அம்மா! இவர்கள் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்கிறார்களே தவிர உண்மையில் ரொம்ப நல்லவர்கள்!" என்றாள் சீதா. "நல்லவர்களாவது, பொல்லாதவர் களாவது? இவர் களை யெல்லாம் வீட்டுக்குள்ளே வரவிடக் கூடாது! நான் ரொம்பக் களைப்பாயிருக்கிறேன். இன்னொரு நாளைக்குப் பார்க்கிறேன் என்று சொல்லிவிடு!" என்றாள் காமாட்சி அம்மாள். சீதா டிராயிங் அறைக்குத் திரும்பிச் சென்று, "அம்மாவுக்குத் தலைவலியா யிருக்கிறதாம், இன்னொரு நாளைக்கு எல்லாரையும் சாவகாசமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதாகச் சொல்லுகிறார்" என்றாள்.

இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது ராகவன் போய் ரிஸீவரை எடுத்துப் பேசினான். "என்ன? ஓஹோ! மதோங்கர் விஷயமா? குற்றவாளியைப் பிடித்து விட்டார்களா? யார் அது? அடடே! என்ன துணிச்சல்? ரொம்ப சரி! - எனக்குத் தெரிந்ததைச் சாட்சி சொல்ல நான் எப்போதும் தயார்!... இல்லை எங்கும் போக வில்லை! ஊரிலேதான் இருப்பேன்! ரைட் ஓ!" தாரிணியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருடைய கண்களிலும் கவலைக் குறியும் பயமும் தென்பட்டன. ராகவன் டெலிபோன் பேசிவிட்டுத் திரும்பி வந்ததும், "என்ன? என்ன?" என்று ஒரே மூச்சாக எல்லோரும் கேட்டார்கள். "மாதோங்கரைக் கொன்ற குற்றவாளியைப் போலீஸார் கண்டுபிடித்து விட்டார்களாம் மதோங்கரிடம் வெகு காலமாக வேலை பார்த்து வந்த வேலைக்காரன் தான் கொலை செய்தானாம். அவனே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டானாம்..." என்று ராகவன் சொல்லி வந்தபோது, சீதா குறுகிட்டு, "அது எப்படி இருக்க முடியும்?" என்றாள். அப்போது "சீதா!" என்று தாரிணியின் குரல் கேட்டது. சீதா அவள் முகத்தைப் பார்த்தாள் தாரிணியின் கண்களில் தோன்றிய எச்சரிக்கையை உணர்ந்து கொண்டாள். "சீதா! நீ எதற்காக இதில் தலையிட்டு அபிப்பிராயம் சொல்கிறாய்? பெண் பிள்ளைகளாகிய நமக்குப் போலீஸ் விஷயமெல்லாம் என்ன தெரியும்?" என்றாள் தாரிணி. "சீதாவுக்குத் தெரியாத விஷயத்தில் அபிப்பிராயம் சொல்வதில் ஒரு திருப்தி" என்றான் ராகவன்.

சீதா மெதுவாகச் சுதாரித்துக் கொண்டு, "ஆமாம்; எனக்கென்ன தெரியும் அதைப் பற்றி? ஏதோ வார்த்தைக்குச் சொன்னேன். சாட்சி, சம்மன் என்று ஏதோ சொன்னீர்களே? அது என்ன?" என்றாள். "சாட்சி என்றால், சாட்சி என்று அர்த்தம்!" என்றான் ராகவன். "நீங்கள் எதற்குச் சாட்சி சொல்ல வேண்டும்?" "தெருவிலே கிடந்த உடலைக் கண்டுபிடித்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதற்குச் சாட்சி..." "அப்படியானால் சூரியாவும் சாட்சி சொல்ல வேண்டும் அல்லவா?" "ஆமாம்; அவனுக்கும் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் வரும்." "அதுதான் கேட்டேன் லாகூருக்குப் பயணம் வைத்திருக்கிறான். போக வேண்டாமென்று நீங்கள் சொல்லுங்கள்" என்றாள் சீதா. "ஓகோ! லாகூருக்குப் பயணமா? வேண்டாமென்று நாம் எதற்காகச் சொல்ல வேண்டும்! சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை. மேலும், கேஸ் விசாரணை நாளைக்கே ஆரம்பித்து விடாது! ரொம்ப நாள் பிடிக்கும்!" என்றான் ராகவன். உடனே புது ஞாபகம் ஏதோ வந்தவனாக, "சூரியா மட்டும் போகப் போகிறானா? வேறு யாராவது துணை உண்டா?" என்று கேட்டான். "தாரிணி அக்காவும் கூடப் போகிறார்களாம்!" என்றாள் சீதா. "தாரிணி! இது உண்மையா? லாகூரில் இப்போது என்ன விசேஷம்?" என்று ராகவன் கவலை நிறைந்த குரலில் கேட்டான்.

"அதைப்பற்றித்தான் இவ்வளவு நேரம் நாங்கள் விவாதம் செய்து கொண்டிருந்தோம். நீங்களே கேளுங்கள், மிஸ்டர் ராகவன். இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமாம்! சுதந்திரம் அடைந்ததும் சுதேச ராஜாக்கள், ராணிகள், திவான்கள், திவான்களுடைய பெண்கள் எல்லாரையும் ஒரேயடியாகத் துவம்ஸம் செய்துவிட வேண்டுமாம்! பெரிய உத்தியோகங்களையெல்லாம் தொலைத்துவிட வேண்டுமாம்... அதற்காக இவர்கள் லாகூர் போகிறார்களாம்! எப்படியிருக்கிறது கதை?" என்று சொல்லிவிட்டுத் தாமா இடி இடி என்று சிரித்தாள் பாமாவும் கூடச் சேர்ந்து சிரித்தாள். "சரி! ஆனால் லாகூருக்கு எதற்காகப் போக வேண்டும்? இந்தியாவின் சுதந்திரத்தை லாகூரிலே யாராவது ஒளித்து வைத்திருக்கிறார்களா?" என்று ராகவன் கேட்டதும், மறுபடியும் ஒரு பெரும் சிரிப்பு எழுந்தது. "விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமலே 'ஓஹோ' என்று சிரிக்கிறீர்கள். அதில் என்ன பிரயோஜனம்? வெற்றுச் சிரிப்புச் சிரித்து விட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விட்டதா!" என்றான் சூரியா. "எல்லோரும் கொஞ்சம் பேசாமலிருங்கள் சிரிக்கவே கூடாது. கப்சிப்!... விஷயம் இன்னதென்று மிஸ்டர் சூரியா விளக்கமாகச் சொல்லட்டும்.

அப்படியும் நம்முடைய மூளையில் விஷயம் ஏறாவிட்டால் குதுப்மினார் உச்சியில் ஏறித் தலைகீழாக விழுந்து உயிரை விடுவோம்!" என்றாள் பாமா. "இனிமேல் யாராவது சிரித்தால் சூரியா கையில் அகப்பட்டதை எடுத்து எறிந்து மண்டையை உடைத்து விடுவார்! ஜாக்கிரதை" என்றாள் தாமா. தாஜ்மகாலில் அவன் பொம்மையை எடுத்தெறிந்து தாரிணியைக் காயப்படுத்தியது பற்றியே இவ்விதம் தாமா குறிப்பிட்டாள். சூரியா அதனால் தனக்கு ஏற்பட்ட அவமான உணர்ச்சியை அடக்கிக் கொண்டு மேலே சொன்னான்: "ஆமாம்! சில சமயம் அவ்வாறு கோபம் வரத்தான் செய்கிறது; ஜனங்கள் இப்படிக் கொஞ்சங்கூடச் சிந்தனா சக்தி இல்லாமலிருக் கிறார்களே என்று. இங்கிலீஷ் கல்வி முறை அப்படி நம்முடைய மூளையைக் கெடுத்திருக்கிறது. இரண்டாவது ஹென்றி விவாகம் செய்து கொண்ட தேதியும், ஏழாவது ஹென்றி விவாகரத்து செய்து கொண்ட தேதியும், முதலாவது சார்லஸ் பட்டமிழந்த தேதியும், மூன்றாவது ஜார்ஜுக்குப் பைத்தியம் பிடித்த தேதியும் இப்படிப்பட்ட விஷயங்களையே மூளையில் போட்டுத் திணித்து விட்டால், சிந்தனை செய்யும் சக்தி நமக்கு எப்படி இருக்கும்?

'லாகூரில் யாராவது சுதந்திரத்தை ஒளித்து வைத்திருக்கிறார்களா?' என்று ராகவன் கேட்டார். எங்கேயும் யாரும் சுதந்திரத்தை ஒளித்து வைக்கவில்லை. அது தம் கண் முன்னே ஜோதிமயமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. நாம் தான் பார்க்கும் சக்தியில் லாத குருடர்களாகப் போய் விட்டோம். இந்தியாவின் சுதந்திரத்துக்கு இப்போது முக்கிய தடையாயிருப்பது இந்து - முஸ்லிம் பிளவு. நாளுக்கு நாள் இந்தப் பிளவு அதிகமாகி வருகிறது. பஞ்சாபிலே சிலர், 'முஸ்லிம்களுக்குத் தனி ராஜ்யம் வேண்டும்' என்று கூடக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் பிரிட்டிஷாரின் ராஜ தந்திர சூழ்ச்சி. இந்தச் சூழ்ச்சிக்குப் பதில் சூழ்ச்சி கண்டுபிடிக் கத்தான் லாகூரில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடை பெறுகிறது. இந்து முஸ்லிம் பிளவு பிரசாரத்துக்கு விதை பஞ்சாபிலே தான் போட்டிருக்கிறார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி இனம் என்று பிரசாரம் செய்யத் தாடங்கியிருக்கிறார்கள். ஆதலால் நாங்களும் அங்கே போய்க் கூட்டம் போட்டு யோசனை செய்யப் போகிறோம்..."

"ஓகோ! இனிமேல் தான் யோசிக்கப் போகிறீர்களோ!" என்று ஏளனக் குரலில் கூறினான் ராகவன். "யோசனையெல்லாம் தயாராயிருக்கிறது அதைக் காரியத்தில் நிறைவேற்றத் திட்டம் போட வேண்டியது தான் பாக்கி. இந்து - முஸ்லிம் பிளவை இப்போது வளர்த்து வருகிறவர்கள், பதவி மோகம் கொண்ட அரசியல்வாதிகளும், அதிகார மோகம் கொண்ட சர்க்கார் த்தியோகஸ்தர்களுந்தான்..." "உத்தியோகஸ்தர்களைப் பற்றி ஏதாவது குறை சொல்லாவிட்டால், அன்றைக்கு உனக்கு இராத் தூக்கம் வராது போலிருக்கிறது!" என்றான் சௌந்தரராகவன். "சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் தான் இந்தியாவிலேயே படிப்புள்ள அறிவாளிகள்.அவர்கள் அன்னிய ஆட்சியை இங்கே நிலை நாட்டுவதில் தங்களுடைய படிப்பையும் அறிவையும் செலவழித்து வருகிறார்கள். அவர்களைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?" "நன்றாகக் குற்றம் சொல், வேண்டாம் என்று சொல்லவில்லை. உன்னுடைய குற்றச்சாட்டுக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியும்!... உன்னுடைய அபாரமான யோசனை என்னவென்று சொல்!"

சமூக வேற்றுமையும் துவேஷமும் மேல் வகுப்பாரிடையே தான் உற்பத்தியாகின்றன. அவர்களுடைய பிரசாரத்தினால் பாமர ஜனங்களும் கெட்டுப் போகிறார்கள். பாட்டாளி மக்கள், கிராமத்துக் குடியானவர்கள் முதலியவர்களிடையில் துவேஷம் இன்னும் பரவவில்லை. துவேஷத்துக்குக் காரணமும் கிடையாது. ஏழை முஸ்லிமும் ஏழை இந்துவும் ஓர் இனம்; பாட்டாளி முஸ்லிமும் பாட்டாளி இந்துவும் ஒரே சாதி; அம்மாதிரியே முதலாளி முஸ்லிமும், முதலாளி இந்துவும் ஒரே சாதி; இதை எடுத்துக் காட்டி முஸ்லிம் பாமர மக்களிடையே தீவிரப் பிரசாரம் செய்யப் போகிறோம்..." "கொக்கின் தலையிலே வெண்ணெய் வைத்துப் பிடிக்கிற கதைத் தான். சண்டை என்று வரும்போது ஏழை முஸ்லிமும் பணக்கார முஸ்லிமும், தொழிலாளி முஸ்லிமும், முதலாளி முஸ்லிமும் சப்ராஸி முஸ்லிமும் ஐ.சி.எஸ். முஸ்லிமும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். ஒருநாளும் ஏழை முஸ்லிம்கள் ஏழை இந்துக்களுடன் சேரமாட்டார்கள். ஆகையால் நீயும் உன்னுடைய சகாக்களும் சுதந்திரத்தைப் பிடிப்பதற்கு இந்த வழியை மட்டும் நம்பியிருக்கும் வரையில், எங்கள் உத்தியோகங்களுக்கு ஆபத்தில்லை...

உங்கள் அப்பாவின் திவான் வேலைக்கும் ஆபத்தில்லை!" என்று தாமா பாமாவைப் பார்த்துச் சொன்னான் ராகவன். அப்போது சூரியா, "நீங்கள் சொல்வது சரியென்றே வைத்துக் கொள்வோம்! ஆனால் அந்த ஒரு வழியை மட்டும் நாங்கள் நம்பியிருக்கவில்லை. இவையெல்லாம் உபகாரணங்கள் தான். ஆனாலும் இந்திய தேசம் வெகு சீக்கிரத்தில் சுதந்திரம் அடையப் போவது என்னமோ நிச்சயம். அதற்கு அருமையான சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப்போகிறது. ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் ஏமாந்துவிடக் கூடாது. நல்ல வேளையாகத் தீர்க்க திருஷ்டியுடன் நமக்கு வழி காட்டக்கூடிய தலைவர் ஒருவர் கிடைத்திருக்கிறார். இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப் போகும் தலைவர் ஸ்ரீ சுபாஸ் சந்திர போஸ் தான். ஹரிபுரா காங்கிரஸில் எங்களைப் போன்ற இளைஞர்களையெல்லாம் தனியாகக் கூட்டி அவர் பேசினார். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் அவர் நேரிலே பார்த்துவிட்டு வந்த விஷயங்களை எடுத்துக் கூறினார். 'வெகு சீக்கிரத்தில் உலக யுத்தம் வரப்போவது நிச்சயம்; அப்போது தான் இந்தியாவின் சந்தர்ப்பம், என்று சொன்னார். அதற்கு இப்போதிருந்தே நாம் தயாராக வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறினார். "ஒருநாளும் உலக யுத்தம் வரப்போவதில்லை. நானும் தான் ஐரோப்பாவுக்குப் போய்விட்டு வந்திருக்கிறேன். இங்கிலாந்தில் பிரிட்டிஷார் யுத்தத்திற்குத் தயாராயில்லை ஆகையால் யுத்தம் வராது. ஹிட்லரும் முஸோலினியும் வெறும் மிரட்டலினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்குத் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டு போவார்கள்!" என்று சொன்னான் சௌந்தரராகவன். இந்தச் சமயத்தில் தாரிணி சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "இவர்களுடைய பேச்சு யுத்தம் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது. சீதா உன்னிடம் எனக்கு ஒரு காரியம் இருக்கிறது, வா!" என்று சொல்லி வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்து ஏழாம் அத்தியாயம்


பிரயாணக் காரணம்

அவர்கள் தனிமையை அடைந்ததும், "சீதா! குற்றவாளி பிடிபட்டான் என்கிற செய்தியைக் கேட்டாயல்லவா!" என்றாள் தாரிணி. "ஆம், அக்கா! ஆச்சரியமாயிருக்கிறதே! நான் கூடத் தெரியாத்தனமாய் ரஸியாபேகத்தைப்பற்றிப் பேச்சு எடுத்து விட்டேன். நல்ல சமயத்தில் நீங்கள் தடுத்தீர்கள்!" என்றாள் சீதா. "சகோதரி! அந்த ஒரு விஷயம் நம் இருவருக்கு மட்டும் தெரிந்த இரகசியமாய் இருக்கட்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன் புருஷரிடம் கூடச் சொல்லாதே! அவர் பதட்ட சுபாவமுள்ளவர் என்பதை இதற்குள் தெரிந்து கொண்டிருப்பாய். விஷயத்தைச் சொன்னால், 'ஏன் உடனே சொல்லவில்லை?' என்று உன் பேரிலேயே திரும்பிக் கொண்டாலும் திரும்பிக் கொள்வார்." "அது வாஸ்தவந்தான், நான் இனிமேல் சர்வ ஜாக்கிரதையாயிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது. அக்கா! போலீஸ்காரர்கள் சொன்ன விஷயம் உண்மையாயிருக்குமா?" "நமக்கென்ன தெரியும், சீதா; அது உண்மையாகவே இருக்கலாம். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்ததுபோல் ரஸியாபேகத்தைச் சந்தேகித்தது பிசகாயிருக்கலாம் .அவளோ உன்னிடம் ஒன்றும் விவரமாகச் சொல்லவில்லை. எவ்வளவு தேடியும் நானும் அவளைச் சந்திக்க முடியவில்லை. அன்றிரவு நடந்த சம்பவத்தை நாம் இருவரும் மறந்து விடுவதுதான் நல்லது."

"அன்றிரவு நான் அனாவசியமாக அடைந்த பீதியையும் கலக்கத்தையும் நினைத்தால் இப்போது வேடிக்கையாயிருக்கிறது, அது போனால் போகட்டும். நீங்கள் எங்கேயோ லாகூருக்குப் போகிறேன் என்கிறீர்களே? அதை நினைத்தால் தான் எனக்குக் கவலையாயிருக்கிறது. நீங்களும் சூரியாவும் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருந்தால் எனக்கு உற்சாகமாயிருக்கும். நீங்கள் வந்தால் இவர் கூட உற்சாகமாயிருக்கிறார்..." "சீதா! நான் இங்கே அடிக்கடி வருகிறதென்பது இனிமேல் இயலாத காரியம். உன் மாமியாருக்கு நான் வருவது விருப்பமாயிராது.." "என் மாமியாரைப்பற்றித் தவறாக எண்ணுகிறீர்கள், அவர் ரொம்ப நல்லவர். ஒரு தடவை பழகிவிட்டால் தெரிந்து கொள்வீர்கள். பாமாவையும் தாமாவையும் போலிருந்தால் ஒருவேளை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. உங்களை நிச்சயமாக அவருக்குப் பிடித்துவிடும்." "அப்படியானால் இப்போதே அவரை நான் பார்த்து விடுகிறேன்! பிறகு எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னமோ? உன் மாமியாரின் வாக்கை நீ தட்ட வேண்டாம். டிராயிங் அறைக்கு நீ போய் எல்லாருடனும் பேசிக் கொண்டிரு. நானே தற்செயலாகப் பார்த்ததுபோல் பார்த்துப் பேசிக்கொள்கிறேன்." "அதுதான் சரி; நீங்கள் என் மாமியாரை ஐந்து நிமிஷத்தில் மயக்கி விடுவீர்கள்!" என்று சொல்லிவிட்டு சீதா சென்றாள்.

பூஜை அறையில் காமாட்சி அம்மாள் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்திருந்தார். "அம்மா! என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று சொல்லிக் கொண்டே தாரிணி அவளுக்கு நமஸ்காரம் செய்தாள். காமாட்சி அம்மாள் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள். தாரிணி என்று தெரிந்து கொண்டதும், " பெண்ணே? நீ நன்றாயிருக்க வேண்டும். இந்த ஊரிலே தான் இருக்கிறாயா?" என்று கேட்டாள். "இந்த ஊரில் கொஞ்ச நாளாக இருந்தேன் சீக்கிரத்தில் இந்த ஊரை விட்டுப் போகப் போகிறேன் "."அப்படியா?" என்று காமாட்சி அம்மாள் கூறிய குரலில், 'நல்லவேளை!' என்பதும் தொனித்தது. "அம்மா! உங்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றினேன் அல்லவா? இனிமேலும் நிறைவேற்றுவேன்! நீங்கள் கவலைப்பட வேண்டாம்!" "எனக்கு ஒரு கவலையும் இல்லையடி அம்மா! எப்படியாவது எல்லாரும் நன்றாயிருக்க வேணும், அவ்வளவுதான்! இதைத் தான் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்; என்னுடைய மூத்த பிள்ளை எனக்கு உதவாதவனாகப் போய்விட்டான். ராகவனை நம்பித் தான் நான் இந்த உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு உன்னாலே ஒரு கெடுதலும் வரக்கூடாது அவ்வளவு தான்."

"ஒரு நாளும் வராது அம்மா! உங்கள் குடும்பத்துக்கே என்னால் ஒரு கெடுதலும் வராது. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன!" என்றாள் தாரிணி. இரண்டு தினங்களுக்குப் பிறகு சௌந்தரராகவன் தாரிணியின் அறைக்குச் சென்றான். அங்கே அச்சமயம் சூரியாவும் இருந்தான். இருவரும் பிரயாணம் கிளம்புவதற்குத் தயார் செய்து கொண்டிருந்ததை ராகவன் கவனித்தான். "அப்படியானால் உங்களுடைய லாகூர்ப் பிரயாணம் நிச்சயந்தான் போலிருக்கிறது" என்றான். "ஆமாம், இன்று இரவு வண்டியில் புறப்படுகிறோம்" என்று தாரிணி சொன்னாள். ராகவன் சூரியாவைப் பார்த்து, "இதோ பார், சூரியா! நீ லாகூருக்குப் போ, அல்லது ராவல்பிண்டிக்கு வேணுமானாலும் போ! அதற்கும் அப்பால் காபூலுக்குப் போனாலும் சரிதான். மத்திய ஆசியாவின் பாலைவனங் களுக்குப் போவது இன்னும் பொருத்தமாயிருக்கும். சோஷலிஸம், கம்யூனிஸம் முதலிய கானல் நீரைத் தேடுவதற்குப் பாலைவனங் கள்தானே ஏற்ற இடம்? ஆனால் தாரிணியை உன்னுடன் அழைத்துக்கொண்டு போகாதே! அதனால் உனக்கும் நன்மையில்லை! அவளுக்கும் நன்மையில்லை!" என்றான்.

சூரியா மலர்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "மாப்பிள்ளை, ஸார்! கடைசியில் சொன்னீர்களே அதிலே தான் தவறு செய்கிறீர்கள். தாரிணி தேவியை நான் அழைத்துப் போகவில்லை. அவர்தான் என்னை வற்புறுத்தி அழைத்துப் போகிறார்!" என்று சொன்னான். "தாரிணி! இது சரிதானா?" என்று ராகவன் கேட்டான். "ஆம்; நான் சரித்திர ஆராய்ச்சி செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அதற்காகப் பஞ்சாபுக்கும் போக வேண்டியிருக்கிறது..." "போதும், போதும்! உன்னுடைய சரித்திர ஆராய்ச்சியையெல்லாம் நீயே வைத்துக்கொள். பாரத நாட்டில் இந்து தர்மத்தின் தூய்மையைப் பெண்கள் தான் பாதுகாத்து வந்தார்கள். அதற்கும் ஆபத்து வந்துவிட்டது! போகட்டும். அதைப்பற்றி விவாதிக்க இப்போது அவகாசம் இல்லை. தாரிணி! உன்னிடம் நான் தனிமையில் சில வார்த்தைகள் பேச வேண்டும்" என்றான் ராகவன். அவனுடைய முகத்தில் ஏற்பட்டிருந்த கிளர்ச்சியையும் பரபரப்பையும் பார்த்த தாரிணி, "உங்களுடைய கொள்கையின்படி ஸ்திரீகளிடம் புருஷர்கள் தனிமையில் பேசலாமா? அது தர்மத்துக்கு விரோதமில்லையா?" என்று கேட்டாள்.



ஒரு கணம் ராகவன் திகைத்திருந்துவிட்டு, "உனக்குத் தான் அதில் ஆட்சேபம் இல்லையே? அதனால் எனக்கும் ஆட்சேபம் இல்லை. இது விளையாட்டு இல்லை தாரிணி! ரொம்பவும் முக்கியமான விஷயம்" என்றான். இச்சமயம் சூரியா, "எனக்கும் புறப்படுவதற்கு முன்னால் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன. நான் போய் வருகிறேன் தாரிணிதேவி! பிரயாணத் திட்டத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால், உடனே சொல்லி அனுப்புங்கள்!" என்று கூறிவிட்டு வெளியேறினான். சூரியா போன பிறகு சற்று நேரம் அறையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. ராகவனே பேச்சை ஆரம்பிப்பான் என்று எதிர்பார்த்த தாரிணி அது நடவாதென்று கண்டு, "தனிமையில் பேச வேண்டிய முக்கியமான விஷயம் என்ன?" என்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபத்து எட்டாம் அத்தியாயம்

கடல் பொங்கிற்று

ராகவன் அந்த அறையில் வாசற்படி வரையில் சென்று கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். மச்சுப் படிகளில் சூரியா நிற்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டான். பிறகு ஜன்னல் வழியாக வீதியில் எட்டிப் பார்த்தான். சூரியா வீதியில் போய்க் கொண்டிருக்க கண்டான். திரும்பி வந்து தாரிணியின் முன்னால் நாடக பாத்திரத்தைப் போல் நின்று கொண்டு, "தாரிணி! உன்னிடம் தனிமையில் நான் என்ன சொல்ல விரும்பினேன் என்பது உனக்குத் தெரியவில்லையா? உண்மையாகவே என் மனோ நிலையை நீ அறிந்து கொள்ளவில்லையா? அல்லது தெரிந்திருந்தும் தெரியாததுபோல் பாசாங்கு செய்கிறாயா?" என்று கேட்டான். "தங்களுடைய மனோ நிலை எனக்குத் தெரிந்திருந்ததானால், என்னுடைய மனமும் தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி யென்றால், பேச்சுக்கு அவசியமில்லையே? சொல்லுவதற்கும் கேட்பதற்கும் ஒன்றும் இராதே?" என்றாள் தாரிணி. "இல்லை; உன்னுடைய மனதை நான் அறியக்கூடவில்லை. தாரிணி! அப்படி ஒரு காலம் இருந்தது. உன்னுடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றுவதற்குள்ளே என்னுடைய மனதில் அது பிரதிபலித்தது. அவ்விதமே என் மனமும் உனக்குத் தெரிந்திருந்தது, நான் நினைப்பேன்; அதை நீ சொல்லுவாய். நீ நினைப்பாய்; அந்த க்ஷணமே அதை நான் காரியத்தில் செய்வேன். இப்போது அப்படி இல்லை, உன் மனதை நான் அறிய முடியவில்லை. ஏதோ ஒரு மாயத் திரை என் மனதை மூடிக் கொண்டிருக்கிறது. அது உன் மனதில் உள்ளதை நான் காண முடியாமல் தடை செய்கிறது. உனக்கும் எனக்கும் மத்தியில் அந்தத் திரையைத் தொங்கவிட்ட சண்டாளப் பாதகன் யார் என்று மட்டும் தெரிந்தால்..." என்று ராகவன் சீறினான்.

"ஐயா! அந்த மாயத் திரையை வேறு யாரும் தொங்கவிடவில்லை. தாங்களே தான் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிறீர்கள். வேறு யாரோ என்று எண்ணிக் கோபித்துக் கொள்வதில் என்ன பயன்? பிரயாணம் கிளம்புவதற்கு முன்னால் எனக்கும் சில காரியங்கள் பாக்கி இருக்கின்றன. தயவு செய்து தாங்கள் சொல்ல விரும்பியதைச் சீக்கிரம் சொல்லி விட்டால் நல்லது." "சொல்லுகிறேன்; பேஷாகச் சொல்லுகிறேன். சொல்லுவதற்குத் தான் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். சுற்றி வளைத்து மூக்கைத் தொட நான் விரும்பவில்லை. மனதிலிருப்பதை அப்படியே பட்டவர்த்தனமாய்ச் சொல்லி விடுகிறேன். தாரிணி! நீ இல்லாமல் இனிமேல் ஒரு நிமிஷமும் என்னால் உயிர் வாழ முடியாது. மூன்று மாதத்திற்கு முன்னால் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் உன்னை நான் பார்த்ததிலிருந்து என்னுடைய மனது என் வசத்தில் இல்லை. தாஜ்மகாலில் உன்னைப் பார்த்து இரண்டு மூன்று நாள் சேர்ந்து வசித்தது முதல் பித்துப்பிடித்தவன் போலாகிவிட்டேன். இந்த மூன்று மாத காலமாக எனக்கு எந்த வேலையிலும் மனம் செல்வதில்லை. ஆபீஸிலும் சரியாக வேலை செய்கிறதில்லை. என் பேரில் அளவில்லாத அபிமானம் கொண்ட துரை கூட அடிக்கடி என் பேரில் குற்றம் கூறுகிறார். 'உனக்கு என்ன வந்து விட்டது?' என்று கேட்கிறார். சிம்லாப் பயணத்தைக் கூட உனக்காகவே நான் நிறுத்தி விட்டேன். நீ டில்லியில் இருக்கும் போது சிம்லாவுக்குப் போய் என்ன சந்தோஷத்தைக் காண போகிறேன் என்று எண்ணித் தான் போகவில்லை. சிம்லாவுக்குப் போனால் என்ன? காஷ்மீருக்குப் போனால் என்ன? நீ இல்லாமல் எங்கே போனாலும் எனக்கு எந்தவித சந்தோஷமும் கிட்டப் போவதில்லை. உனக்கு ஞாபகம் இருக்கிறதா, தாரிணி நாம் கலியாணம் செய்து கொண்டதும் 'ஹனிமூன்' கொண்டாடக் காஷ்மீருக்குப் போவதாகத் திட்டம் போட்டிருந்தோமே, அது ஞாபகம் இருக்கிறதா?..."

"நண்பரே! தங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து அந்தப் பழைய கதைகளை இப்போது சொல்ல வேண்டாம். அதையெல்லாம் ஒரு பழைய கனவு என்று எண்ணி மறந்து விடுங்கள்." "நீ மறந்து விட்டாய் தாரிணி! அது நன்றாய் தெரிகிறது. நீ அதிர்ஷ்டக்காரி; அதனால் மறந்துவிட்டாய், ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. அந்தப் பழைய நினைவுகள் என் மனதை ஓயாமல் அரித்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த நினைவுகள் எனக்கு இன்பத்தை அளிக்கின்றனவா, துன்பத்தை அளிக்கின்றனவா என்றே சொல்ல முடியவில்லை. பம்பாயில் ஒரு நாள் நாம் சௌபாத்தி கடற்கரையில் உலாவிவிட்டு மலபார் குன்றிலுள்ள தொங்கும் தோட்டத்துக்குப் போனோமே, அது உனக்கு நினைவிருக்கிறதா, தாரிணி? அதைக் கூட மறந்து விட்டாயா? தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு கொடி வீட்டின் கீழே கிடந்த பெஞ்சிப் பலகையில் உட்கார்ந்தோம். அந்தக் கொடி வீட்டின் மீது படர்ந்திருந்த கொடிகளிலே பல வர்ண இலைகளும் தளிர்களும் அடர்ந்து தழைத்திருந்தன. அந்த இலைகள், தளிர்கள், மலர்களோடு கலந்து பல வர்ணப் பட்டுப் பூச்சிகள் காணப்பட்டன. அந்தப் பட்டுப் பூச்சிகள் படபடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு எழுந்து ஒரு நிமிஷம் பறப்பதும் மறுபடியும் உட்காருவதுமாயிருந்தன. பட்டுப் பூச்சிகளில் ஒன்று உன்னுடைய தோளின் மீது உட்கார்ந்தது. அதைப் பார்த்த நான், 'தாரிணி! இந்தப் பட்டுப் பூச்சியைப் பார்! உன்னை ஒரு பூங்கொடி என்று எண்ணிக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறது. ஆனால் அது அவ்வளவு பெரிய தவறு செய்து விட்டதாகச் சொல்ல மாட்டேன்!' என்றேன்.

உடனே நீ உன்னுடைய உடம்பைச் சிலிர்த்தாய், பட்டுப் பூச்சி பறந்து போயிற்று. 'பூங்கொடி என்பது ரொம்பப் பொருத்தம். இப்போது நீ உடம்பைச் சிலிர்த்தபோது தென்றல் காற்றில் பூங்கொடி அசைவது போலவே இருந்தது' என்றேன். அதற்கு நீ 'தென்றல் காற்றோடு போயிற்றே? புயற் காற்றாயிருந்தால் கொடியின்பாடு ஆபத்து தான். கவிஞர்கள் பெண்களைக் 'கொடி' என்று வர்ணிப்பது ஒன்றும் எனக்குப் பிடிப்பதில்லை. கொடியைப் போல் அவ்வளவு பலவீனமாக இருந்துவிட்டால் இந்த உலகத்தில் பெண்கள் எப்படிச் சுதந்திரமாக வாழ முடியும்?' என்று கேட்டாய். 'பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது தான். ஆனால் பெண்களுக்குச் சுதந்திரம் எதற்காக? கொடியைத் தாங்குவதற்கு மரம் இருக்கும் போது கொடி எதற்காக தனித்து நிற்க வேண்டும்?' என்று நான் சொன்னேன். அதற்கு நீ 'என்னை வேணுமானால் கொடி என்று சொல்லுங்கள்; செடி என்று வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் உங்களை மரம் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம்' என்றாய். 'உன்னைப் போன்ற ஒரு கொடியைத் தாங்கும் பாக்கியம் கிடைத்தால் நான் இந்த நிமிஷமே மரமாகி விடத் தயார் என்ன சொல்கிறாய்?' என்றேன் நான். 'ஜாக்கிரதை! அருகில் நெருங்க வேண்டாம்; உங்களை மரமாகும்படி சபித்து விடுவேன்!' என்றாய் நீ. 'எங்கே! சபித்து விடு! உன் சக்தியைப் பார்க்கலாம்!' என்று நான் கூறினேன். நீ கோபம் கொண்டதாகப் பாசாங்கு செய்து என் முகத்தை உற்று நோக்கினாய். நானும் அசையாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந் தோம். நேரமாக ஆக, நம்முடைய முகங்கள் நெருங்கி வந்தன. முகத்தை முகம் பார்ப்பதற்குப் பதிலாகக் கண்களைக் கண்கள் வெகு சமீபத்தில் நின்று உற்றுப் பார்த்தன, கடைசியாக நீ தோல்வியுற்றாய்.சட்டென்று எழுந்துநின்று, 'இந்த மரம் பொல்லாத மரமாயிருக்கிறது. நின்ற இடத்தில் நிற்காமல் நெருங்கி நெருங்கி வருகிறது' என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாய்.


இருவரும் கை கோத்துக்கொண்டு அவ்விடமிருந்து கிளம்பினோம். மலபார் குன்றின் தோட்டத்திலிருந்து சாலையில் இறங்கியபோது அஸ்தமித்து விட்டது. கீழே பம்பாய் நகரின் லட்சக்கணக்கான தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு ஜொலித்தன. உலகமே இன்பமயமாகத் திகழ்ந்தது. அச்சமயத்தில் பக்கத்திலிருந்த ஒரு மாளிகையிலிருந்து கிராமபோன் கீதம் ஒன்று வந்தது. 'பிரேம் நகர்மே பனாவூங்கி கர்', என்னும் பாட்டு அது. சினிமா நடிகர் ஸைகல் பாடியது. 'இந்தப் பாட்டு நமக்காகத்தான் பாடப்பட்டது போலிருக்கிறது. பிரேமை என்னும் நகரத்திலேயே நாமும் நம்முடைய வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்' என்றேன் நான். தாரிணி! இதெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா? நான் இப்போது சொன்ன பிறகாவது நினைவு வருகிறதா! அல்லது என்னமோ பைத்தியக்காரன் உளறுகிறான் என்று அலட்சியம் செய்து வேறு எதையாவது பற்றி எண்ணிக் கொண்டிருந்தாயா?" இந்த நெடிய பேச்சைக் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு வந்த தாரிணியின் உள்ளம் கனிந்து போயிற்றோ என்னவோ, தெரியாது. பளிச்சென்று அவளால் பதில் சொல்ல முடியவில்லை. தயங்கித் தடுமாறிக் கூறினாள்; "நீங்கள் சொல்லுவதையெல்லாம் கவனமாகக் கேட்டு வந்தேன். அவ்வளவும் எனக்கும் நினைவு இருக்கிறது ஒன்றும் மறந்து போகவில்லை. ஆனால் அப்போது நாம் இருவரும் செய்த தவறு இப்போது எனக்குத் தெரிகிறது. பிரேம நகரம் என்பதாக உண்மையில் ஒன்று கிடையாது. அது வெறும் மாயா நகரம், கவிகளின் கற்பனைச் சித்திரம். பிரேம நகரம் என்பது உண்மையாக இருந்தாலும் அந்த நகரத்தில் வீடு கட்டிக் கொள்ள இப்போது நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாகச் சேவா நகரத்தில் வீடு கட்டிக் கொண்டு வாழ விரும்புகிறேன்.

ராகவன், நான் பார்த்ததையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தால், என்னுடைய அனுபவமெல்லாம் உங்களுக்கும் ஏற்பட்டிருந்தால், என்னைப் போலவே நீங்களும் நினைப்பீர்கள். பிரேமை காதல் என்னும் பிரமைகளில் மனதைச் செலுத்த மாட்டீர்கள். இந்த உலகத்தில் வாழும் மக்களின் துன்பத்தை ஒரு அணுவளவேனும் நம்மால் குறைக்க முடியுமா என்று என்னைப் போலவே அல்லும் பகலும் சிந்திப்பீர்கள்." "தாரிணி! இது என்னப் பேச்சுப் பேசுகிறாய்? உலகத்து மக்களின் துன்பத்தை உன்னாலும் என்னாலும் குறைத்து விட முடியுமா? நீயும் நானும் கடவுளைவிடச் சக்தி வாய்ந்தவர்களா? கடவுளுடைய நியதியால் மனிதர்கள் இன்பமோ துன்பமோ அடைகிறார்கள். அவரவர்களுக்குத் தனித்தனியே கடவுள் வழி வகுத்துவிட்டிருக்கிறார். அந்தந்த வழியில் அவரவர்களும் போய்த் தானே ஆகவேண்டும்? உலகத்தை நாம் சீர்திருத்திவிட முடியும் - உலகத்து மாந்தரின் துன்பத்தைக் குறைத்து விட முடியும் இன்பத்தைப் பெருக்கிவிட முடியும் என்று நினைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய அகம்பாவம்? அந்த மடையன் சூரியாவைப்போல் நீயும் பேசுகிறாயே? அவனிடந்தான் கற்றுக் கொண்டாயா?" என்று நிதானத்தை இழந்து பதட்டமாகப் பேசினான் ராகவன்.

ஆனால் தாரிணி நிதானம் இழக்கவில்லை; பதட்டம் அடையவும் இல்லை. "ஐயா! எதற்காக இவ்வளவு படபடப்பாய்ப் பேசுகிறீர்கள்? சூரியாவின் பெயரை இதில் இழுக்க வேண்டியதேயில்லை. நான் அவரைச் சந்திப்பதற்குப் பல நாளைக்கு முன்பே சில அனுபவங்களைப் பெற்றேன்; சில முடிவுகளுக்கு வந்தேன். கடவுள் சிருஷ்டித்த உலகத்தை அபிவிருத்தி செய்து விடலாம் என்ற அகம்பாவத்தினாலோ, விதியை மாற்றி விடலாம் என்ற அசட்டு நம்பிக்கையினாலோ நான் தொண்டு வாழ்க்கையை மற்கொள்ளவில்லை. துன்புற்றவர்களுக்குத் தொண்டு செய்வதிலேதான் என் மனம் இன்பத்தை அடைகிறது; நிம்மதியைக் காண்கிறது. வேறுவித வாழ்க்கையில் என் மனம் செல்லவில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? கடவுள் அவரவர்களுக்குத் தனித்தனியே வழி வகுத்து விட்டிருக்கிறார் என்று தாங்களே சற்று முன் சொன்னீர்கள். தங்களுக்கு வேறு வழியும் எனக்கு வேறு வழியும் ஆண்டவன் வகுத்திருக்கிறார். அவரவர்களுடைய வழியில்தானே அவரவர்கள் போக வேண்டும்? நம்முடைய வழிகள் வெவ்வேறு என்பதைத் தங்களை முதன் முதலில் சந்தித்த காலத்தில் நான் தெரிந்து கொள்ளவில்லை. அந்த நாளிலே ஏதோ ஒரு மாயத்திரை என் அறிவை மூடியிருந்தது திரை விலகியதும் உண்மையைக் கண்டேன். தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்னை என் வழியில் போக விடுங்கள்."

"ஒரு நாளும் முடியாது உன்னை இப்போது தான் மாயை வந்து மூடியிருக்கிறது. அந்த நாளில் நீ கண்டது தான் உண்மை. உன்னுடைய வழி வேறு, என்னுடைய வழி வேறு என்பதும் தவறு. இந்து தர்மத்திலே புருஷனுடைய வழி தான் ஸ்திரீயின் வழி, ஸ்திரீக்குத் தனி வழி கிடையாது." "அவ்விதம் பரிபூரணமாய் நம்பித் தங்களைத் தெய்வத்துக்கும் மேலாக மதித்துப் போற்றுகிற ஒரு பெண்ணைத் தாங்கள் மனைவியாகப் பெற்றிருக்கிறீர்கள் அது தங்களுடைய பாக்கியம். ராகவன்! கொஞ்சம் யோசித்துப் பார்த்துச் சொல்லுங்கள். என்னிடம் காதலைப்பற்றி பேசும்போது தங்களுக்குச் சீதாவின் நினைவே கிடையாதா? நிர்க்கதியாகத் தங்களையே நம்பி வந்திருக்கும் அந்தப் பேதைப் பெண் மீது உங்களுக்கு இரக்கம் கொஞ்சமும் இல்லையா? அவளுக்குத் துரோகம் செய்ய எப்படி உங்க ளுக்கு மனம் வருகிறது?" "ஆ! துரோகத்தைப் பற்றியா பேசுகிறாய்? துரோகம் யாருக்குயார் செய்தார்கள்? எனக்கும் சீதாவுக்கும் சேர்ந்து நீ துரோகம் செய்தாய். தாரிணி! உன்னைப் பரிபூரணமாக நம்பியிருந்த என்னை நட்டாற்றில் விட்டுவிட்டுச் சென்னை யிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனாய். தப்பர்த்தத்துக்கு இடமாயிருந்த ஒரு முட்டாள் கடிதத்தையும் விட்டுவிட்டுப் போனாய்.

அதுவும் வேண்டுமென்று நீ செய்த சூழ்ச்சிதானோ என்னமோ, தெரியாது. அதோடு உன் துரோகம் முடிந்ததா? இல்லை! அப்புறம் பீஹாரிலிருந்து பூகம்பத்தின் பிளவில் விழுந்து மாண்டாய் என்று நான் நம்பும்படியாகக் கடிதம் எழுதப் பண்ணினாய். இம்மாதிரியெல்லாம் நீ செய்த துரோகங்களினாலே தான் நான் சீதாவை மணக்கும்படி நேர்ந்தது..." "நான் செய்தது துரோகமாக வேயிருக்கட்டும். தக்க காரணத்தோடு நான் அவ்விதம் செய்தேன். ஆனால் சீதாவையும் தாங்கள் மற்றவர்களைப் போல் சாதாரணமாய்க் கலியாணம் செய்து கொண்டு விடவில்லையே? வேறு ஒரு பெண்ணைப் பார்க்கப் போன இடத்தில் சீதாவைப் பார்த்து..." "ஆமாம்; இவளைப் பார்த்து மோகித்துக் கலியாணம் செய்து கொண்டு விட்டேன்; அப்படி உன்னிடம் சீதா பெருமை அடித்துக்காண்டா ளாக்கும்! இதிலிருந்து அவளுடைய பட்டிக்காட்டுத்தனத்தை நீயே தெரிந்துகொள்ளலாம். தாரிணி! சில சமயம் சீதாவை நான் வைஸ்ராய் மாளிகைப் பார்ட்டிகளுக்கும் மற்றும் பெரிய உத்தியோகஸ்தர்கள் கொடுக்கும் பார்ட்டிகளுக்கும் அழைத்துப் போகிறேன். அழைத்துப் போய் விட்டு ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எந்தச் சமயத்தில் அவள் என்ன தவறு செய்வாளோ? பிளேட்டைக் கீழே போட்டு உடைத்து விடுவாளோ, மேலே டீயைக் கொட்டிக் கொண்டு விடுவாளோ, யாரிடம் என்ன உளறிவிடுவாளோ என்று ஒவ்வொரு நிமிஷமும் எனக்குக் கதிகலக்கமாகவேயிருக்கும். அப்போதெல்லாம் உன்னை நினைத்துக் கொள்வேன். நீ மட்டும் என்னோடு புது டில்லிப் பார்ட்டிகளுக்கு வந்தால்..." "நீங்கள் நினைப்பது முற்றும் தவறு பார்ட்டிகளில் நடந்து கொள்வதில், சீதாவைவிட நான் மோசமாயிருப்பேன். நாகரிக நடை உடை பாவனை ஒன்றுமே எனக்குத் தெரியாது...."

"உன் விஷயம் வேறு, தாரிணி! பார்ட்டிகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரே நாளில் உனக்கு நான் கற்றுக் கொடுத்து விடுவேன். அப்படியே நீ ஏதாவது தவறு செய்தாலும் அதனால் எனக்கு அவமானம் ஒன்றும் ஏற்படாது. சீதா ஏதேனும் தவறு செய்தால் அதைப் பார்த்து நாலு பேர் சிரிப்பார்கள். நீ செய்தால் அதுதான் புது நாகரிகம் என்று நினைத்துக் கொள்வார்கள். காதில் அணிந்துகொள்ளும் போலக்கை நீ மூக்கில் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு நாள் வந்தால் மறுநாள் எல்லோரும் அப்படியே செய்வார்கள். நீ புடவைத் தலைப்பில் டீயைக் கொட்டிக் கொண்டால், அதைப் பார்த்து அவ்வளவு பேரும் டீயைக் கொட்டிக் கொள்வார்கள். இதெல்லாம் அவரவர்களுக்கு இறைவன் அளித்த பாக்கியம்; ஒருவரைப் பார்த்து ஒருவர்..." "அதைத்தான் நானும் சொல்கிறேன், சீதா தாங்கள் இழுத்த இழுப்புக்கு வருகிறாள், பார்ட்டிகளுக்கும் வருகிறாள். நானோ பார்ட்டிகளுக்கே வரமாட்டேன். இத்தனைக்குப் பிறகும் என்னுடைய இயல்பை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆனாலும் நாம் சேர்ந்து வாழ முடியும் என்று சொல்கிறீர்கள்." "தாரிணி! அப்படி நீ பிடிவாதம் பிடித்தால் நான் பின்வாங்கி விடுவேன், என்று நினையாதே. 'இந்த உத்தியோகத்தை விட்டு விடுங்கள்; ஏதோ ஒரு ஆசிரமத்துக்குப் போவோம், வாருங்கள்!' என்று சொல்லு. அடுத்த நிமிஷம் விட்டுவிட்டு வரத் தயாராயிருக்கிறேன். என்னுடைய காதலின் ஆழத்தை நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உனக்காக எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்ய நான் தயார்! எனக்கு நீ என்ன சோதனை வேணுமானாலும் வைத்துப் பார்க்கலாம்."

"தங்களுக்கு நான் ஏற்படுத்தக் கூடிய சோதனை ஒன்றே ஒன்று தான். என் பேரில் தங்களுக்கு அபிமானம் உண்டு என்பதில் லவலேசமும் உண்மையிருந்தால் தங்கள் மனைவி சீதாவை அன்புடன் ஆதரித்துக் காப்பாற்றுங்கள். அந்தப் பேதைப் பெண்ணைக் கைவிட்டு விடாதீர்கள்." "அவளைக் கை விடுவதாக யார் சொன்னார்கள்? அந்த எண்ணம் எனக்கு லவலேசமும் இல்லை அவளும் இருந்து விட்டுப் போகட்டும்." "வைதிக காரியங்களுக்குத் தாலி கட்டிய மனைவி இருந்து விட்டுப் போகட்டும்; நான் ஆசைநாயகியாயிருக்கட்டும் என்கிறீர்களாக்கும்." "சீச்சீ! என்ன வார்த்தை சொன்னாய்? அவ்வளவு கீழ் மகன் நான் அல்ல தாரிணி! உன்னையும் நான் கலியாணம் செய்து கொள்ளத் தயாராயிருக்கிறேன். அதனால் என்ன ஏச்சு வந்தாலும், என்ன பேச்சுப் புறப்பட்டாலும், எவ்வளவு அவமானத்துக்கு நான் உட்பட வேண்டியிருந்தாலும் பாதகமில்லை. "என்ன? என்ன? தயவு செய்து இன்னொரு தடவை சொல்லுங்கள்!" என்று அடங்கா வியப்புடன் கேட்டாள் தாரிணி. "உன்னையும் அக்கினி சாட்சியாகக் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொல்கிறேன். இந்த நிமிஷம் நீ உன்னுடைய சம்மதத்தைச் சொல்ல வேண்டியது தான்; அடுத்த நிமிஷத்தில் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்" என்றான் ராகவன்.

"ராகவன்! இது விஷயத்தில் உங்களுடைய முதல் மனைவியின் அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று யோசித்தீர்களா?" என்றாள் தாரிணி. அவளுடைய பேச்சில் இப்போது கடுமை தொனித்தது. போகப் போக அந்தக் கடுந்தொனி அதிகமாயிற்று. "அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒருவருக்காக இன்னொருவர் தன்னுடைய வாழ்க்கை இன்பத்தையே பறிகொடுத்து விட முடியுமா? மேலும் அவளை நான் அடியோடு வேண்டாம் என்று சொல்லிவிடவில்லையே? அவளும் இருந்துவிட்டுப் போகட்டும்!" என்றான் ராகவன். "ஐயோ! பாவம்! ரொம்பப் பெரிய மனது செய்து சொல்கிறீர்கள். இன்னொரு விதமாக யோசனை செய்து பாருங்கள். உங்களைப் போல் சீதா இன்னொரு புருஷனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினால், நீங்கள் சம்மதிப்பீர்களா?" "சீச்சீ! என்ன வார்த்தை சொல்கிறாய், தாரிணி; அது இந்து தர்மத்துக்கு விரோதமான காரியம்." "புருஷர்களை மட்டும் இந்து தர்மம் இஷ்டப்படி செய்யலாம் என்று தண்ணீர் தெளித்து விட்டிருக்கிறதா?" "ஆமாம்; நீயே யோசித்துப் பாரேன்! இந்து தர்மம் புருஷர்கள் பலதார மணம் செய்ய இடம் கொடுத்திருக்கவில்லையா? மகாவிஷ்ணுவுக்கும் பரமசிவனுக்கும் சுப்பிரமணியருக்கும் இரண்டு இரண்டு மனைவிகள் உண்டல்லவா? கிருஷ்ண பகவானோ எட்டுப் பேரை மணந்து கொண்டார்...."

"ராகவன்! அவர்கள் தெய்வங்கள்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கிருஷ்ண பகவான் எட்டுப் பேரை மணந்தார் என்பது உண்மை தான். ஆனால் அதே கிருஷ்ணன் துரியோதனனுக்கு முன்னால் விசுவ ரூபத்தைக் காட்டினார். சக்ராயுதத்தினால் சூரியனையே மறைத்தார், இதெல்லாம் உங்களால் முடியுமா? இராமாவதாரத்தைப் பாருங்கள், இராமாவதாரத்தில் பகவான் மனிதர்களைப் போல நடந்து காட்டினார். இராமர் சீதை ஒருத்தியைத்தானே மணந்தார். தங்களுடைய பெயர் ராகவன்; தங்கள் மனைவியின் பெயர் சீதா. ராமர் சீதையைக் காப்பாற்றியது போல் உங்கள் சீதாவை நீங்கள் காப்பாற்றுங்கள். இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லுகிறேன். உங்கள் மனைவி எப்பேர்ப்பட்டவள் என்பதை நீங்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உலகமெல்லாம் தேடினாலும் அவளைப் போன்ற பெண் கிடைப்பது துர்லபம். உங்களிடம் அவளுக்குள்ள அன்பு இமயமலையைக் காட்டிலும் பெரியது. சப்த சமுத்திரங்களைவிட விசாலமானது. அவளை அன்புடன் பேணி ஆதரியுங்கள் அதுதான் உங்களுடைய வாழ்க்கை தர்மம்; உங்களுக்கு நன்மை தருவதும் அதுதான்."

"இந்த தர்மோபதேசமெல்லாம் எனக்கு வேண்டாம். ஒன்று சொல்கிறேன், கேள்! சீதாவை விவாகரத்துச் செய்து அவளுக்கு இஷ்டமிருந்தால் வேறு யாரையாவது கலியாணம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறேன். அப்போது நீ என்னை மணக்கச் சம்மதிப்பாயா?" "சீதா உங்களை விட்டுப் போக மாட்டாள். உங்கள் காலடியிலேயே விழுந்து கிடப்பாள் என்ற தைரியத்தினால் இப்படிச் சொல்கிறீர்கள். சீதா விஷயம் இருக்கட்டும்; உங்கள் தாயாரிடம் ஒரு சமயம் நீங்கள் பயபக்தியோடு இருந்தீர்கள். அவர் தங்களுடைய காரியத்தைப் பற்றி என்ன நினைப்பார் என்று யோசித்தீர்களா?" "என் தாயார் தனக்குப் பணிவுள்ள சாதுவான நாட்டுப்பெண் வேண்டும் என்று சொன்னாள். அத்தகைய நாட்டுப் பெண் அவளுக்குக் கிடைத்து விட்டாள். இன்னும் என்ன அவளுக்கு வேண்டும்? என் தாயாரிடம் எனக்கும் பக்தி உண்டு தான். அதற்காக அவள் என்னை எப்போதும் அடிமையாக்கி வைத்திருக்க முடியாது. என்னுடைய வாழ்க்கையை அடியோடு பாழாக்க அவளுக்கு உரிமை கிடையாது. தாரிணி! கடைசியாக நான் ஒன்று சொல்கிறேன் அதைக் கேள். நாளைக்கு நீ லாகூருக்குப் புறப்படுவதை நிறுத்திவிடு. நம்முடைய விஷயத்தைப் பற்றி இன்னும் நன்றாய் யோசித்து முடிவு செய். பிரயாணம் கிளம்புவதாயிருந்தால் நாம் இருவரும் கிளம்பலாம். உன்னை நான் காஷ்மீருக்கும் டேராடூனுக்கும் டார்ஜிலிங்குக்கும் உதகமண்டலத்துக்கும் அழைத்துப் போகிறேன். அப்புறம் லண்டனுக்கும் பாரிஸூக்கும் வியன்னாவுக்கும் நேபிள்ஸுக்கும் அழைத்துப் போகிறேன். ஐரோப்பாவைச் சுற்றிப் பார்த்த பிறகு அமெரிக்காவுக்கும் போவோம். ஸான்பிரான்ஸிஸ்கோ, நியூயார்க், வாஷிங்டன், லாஸேஞ்செலஸ் முதலிய இடங்களுக்கெல்லாம் போகலாம் என்ன சொல்கிறாய், தாரிணி!"

"ஆரம்பத்தில் நான் சொன்னதைத் தான் திரும்பச் சொல்கிறேன். தங்களுடைய வாழ்க்கை இலட்சியம் வேறு; என்னுடைய வாழ்க்கை இலட்சியம் வேறு. ஒருநாளும் நம்முடைய இலட்சியங்கள் ஒன்று சேர முடியாது. தாங்கள் குறிப்பிட்ட இடங்களுக் கெல்லாம் சீதாவை அழைத்துக் கொண்டு போங்கள். அதுதான் நியாயம்; அதுதான் உங்களுக்கு க்ஷேமம்" என்றாள் தாரிணி. ராகவன் சிறிது நேரம் திகைப்புடன் தாரிணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவனைப்போல் ஒரு கோபச் சிரிப்புச் சிரித்தான். "தாரிணி! நீ ஏன் இப்படிப் பேசுகிறாய் என்பது எனக்குத் தெரியும். யாருடைய மோக வலையிலே சிக்கி என்னை நீ நிராகரிக்கிறாய் என்பதையும் அறிவேன். அந்த ராஸ்கல் சூரியாவின் வேலை தான் இவ்வளவும். எனக்கு ரிவால்வர் லைசென்ஸ் சில நாளைக்கு முன் கிடைத்திருக்கிறது..." "ராகவன்! வீண் அவதூறு பேசி உங்கள் நாவை அசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். என்னைப் பயமுறுத்தவும் முயல வேண்டாம். பீகார் பூகம்பத்தைப் பார்த்த பிறகு எனக்குச் சாவு என்றால் பயமே கிடையாது." "மறுபடியும் நான் சொன்னதை நீ தவறாக எடுத்துக் கொண்டாய். உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாக நான் சொல்லவில்லை. என்னை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகப் போவதாகச் சொல்ல எண்ணினேன்." "என்னுடைய சாவைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை; மற்றவர்களுடைய சாவைப்பற்றியும் நான் கவலைப்படப்போவதில்லை. பகவத்கீதை என்ன சொல்கிறது? உடம்பைத் தான் கொல்லலாமே தவிர ஆத்மாவைக் கொல்ல முடியாது எப்பேர்ப்பட்ட வஜ்ராயுதத்தினாலும் முடியாது." "தாரிணி! உன்னை இப்போது தான் எனக்குத் தெரிகிறது. நீ பெண் அல்ல; ராட்சஸி உன்னுடைய அழகு சூர்ப்பனகையின் அழகைப் போன்றது... இருக்கட்டும், பார்த்துக் கொள்கிறேன். நீயும் சூரியாவும் நாளைக்கு ரயில் ஏறிப் போவதைப் பார்த்து விடுகிறேன்!" என்று சபதம் கூறிவிட்டு ராகவன் வெளியேறினான். அவன் அப்பால் போனதும் தாரிணியின் கண்களில் அதுகாறும் குமுறிக் கொண்டிருந்த கண்ணீர்க் கடல் பொங்கிப் பெருகியது.

இரண்டாம் பாகம் - 'புயல்' - முற்றிற்று
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top