• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்தொன்று


வஸந்தத் தீவில்

ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான். நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "குழந்தாய்! உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா?" என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். "இறங்குவேன் அப்பா!" என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. "ஐயோ! இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது? ஏன் உயிர் போகமாட்டேனென்கிறது? ஏன் உடம்பு அப்படியே இருக்கிறது?" என்று எண்ணி விக்கிரமன் துடிதுடிக்கிறான். திடீரென்று ஒரு குளிர்ந்த கை அவனுடைய எரியும் கரத்தைப் பற்றுகிறது; இன்னொரு குளிர்ந்த கை அவனுடைய கொதிக்கும் மார்பைத் தொடுகிறது. எரிகிற அந்தத் தீயின் நடுவில் செந்தாமரையை யொத்த குளிர்ந்த முகம் ஒன்று தோன்றி அவனைக் கருணையுடன் நோக்குகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் அத்தீயிலிருந்து வெளியே வருகிறான். தன்னை அவ்விதம் கையைப் பிடித்து அழைத்து வந்த தெய்வப் பெண்ணுக்கு நன்றி செலுத்த அவன் விரும்புகிறான். ஆனால், அத்தெய்வப் பெண்ணைக் காணவில்லை.
விக்கிரமன் புலிக்கொடி பறக்கும் பெரிய போர்க்கப்பலில் பிரயாணம் செய்கிறான். கப்பலில் நூற்றுக்கணக்கான சோழ நாட்டு வீரர்கள் அங்குமிங்கும் உலாவுகிறார்கள். கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பிய போது பார்த்திப மகாராஜாவும் அருள்மொழி ராணியும் விக்கிரமனை ஆசீர்வதித்து, "வெற்றி வீரனாய்த் திரும்பி வா!" என்று வாழ்த்தி அனுப்பிய காட்சி அவன் மனக் கண் முன்னால் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று பெரும் புயலும் மழையும் அடிக்கின்றன; கப்பல் கவிழ்கின்றது. விக்கிரமன் கடல் அலைகளுடன் தன்னந்தனியாகப் போராடுகிறான். உடம்பு ஜில்லிட்டுப் போய் விட்டது; கைகால்கள் மரத்து விட்டன. "இனித் தண்ணீரில் மூழ்கிச் சாகவேண்டியதுதான்" என்று தோன்றிய சமயத்தில் இந்திர ஜாலத்தைப் போல் ஒரு படகு எதிரே காணப்படுகிறது. படகில் பூரண சந்திரனையொத்த முகமுடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். எங்கேயோ, எப்போதோ, எந்த ஜன்மத்திலோ பார்த்த முகந்தான் அது. அந்தப் பெண் அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் விடுகிறாள். அவள் முகமெல்லாம் நனைந்திருக்கிறது. அலைத்துளிகள் தெறித்ததனாலா, கண்ணீர் பெருகியதனாலா என்று தெரியவில்லை. அவளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று விக்கிரமன் ஆசைப்படுகிறான். பேச முயற்சி செய்கிறான், ஆனால் பேச்சு வரவில்லை. தொண்டையை அடைத்துக் கொள்கிறது.
விக்கிரமன் ஒரு கொடிய பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கிறான். வெயிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. கால் ஒட்டிக் கொள்கிறது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நா வரண்டுவிட்டது, சொல்ல முடியாத தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் மரம், செடி, நிழல் என்கிற நாமதேயமே கிடையாது. எங்கேயோ வெகு தூரத்தில் தண்ணீர் நிறைந்த ஏரி மாதிரி தெரிகிறது. அதை நோக்கி விரைந்து செல்கிறான். எவ்வளவு விரைவாகச் சென்றாலும் ஏரி இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. "ஐயோ! கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா?" என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் 'இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்!' என்ற எண்ணம் உண்டாகிறது. கீழே கொதிக்கும் மணலில் விழுந்தவனை யாரோ மிருதுவான கரங்களினால் தொட்டுத் தூக்கும் உணர்ச்சி ஏற்படுகிறது. யார் என்று பார்ப்பதற்காகக் கண்ணைத் திறக்க முயற்சி செய்கிறான்.
கண்கள் திறந்துதானிருக்கின்றன - ஆனால் பார்வை மட்டும் இல்லை. "ஐயோ! இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ?" என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. "ஆகா! காவேரி நதியின் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது!" என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. 'ஆகா! எதிரில் தன் முகத்தருகில் தெரியும் அந்த முகம், மாதுளை மொட்டைப் போன்ற செவ்விதழ்களில் புன்னகை தவழ, விரிந்த கருங் கண்களினால் தன்னைக் கனிந்து பார்க்கும் அந்த முகம். தான் ஏற்கெனவே பார்த்திருக்கும் அந்த முகம்தான். எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து தன்னைத் தப்புவித்த தெய்வப் பெண்ணின் முகந்தான். அந்த இனிய முகத்தைத் தொடவேண்டுமென்ற ஆசையுடன் விக்கிரமன் தன் கையைத் தூக்க முயன்றான்; முடியவில்லை. கை இரும்பைப் போல் கனக்கிறது. மறுபடியும் கண்கள் மூடுகின்றன, நினைவு தவறுகிறது.
இப்படியெல்லாம் சுவர்க்க இன்பத்தையும், நரகத் துன்பத்தையும் மாறி மாறி அநுபவித்த பிறகு கடைசியில் ஒருநாள் விக்கிரமனுக்குப் பூரணமான அறிவுத் தெளிவு ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. காட்டாற்றங்கரையில் மகேந்திர மண்டபத்தில் அன்றிரவைத் தானும் பொன்னனும் கழித்தது வரையில் நினைவுபடுத்திக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான், ஏதோ ஏற்கனவே தெரிந்த இடம்போல் தோன்றியது. நன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்துக்கு எல்லையில்லாமற் போயிற்று. ஆமாம்; உறையூரில் காவேரித் தீவிலுள்ள வஸந்த மாளிகையில் ஒரு பகுதிதான் அவன் படுத்திருந்த இடம். "இங்கே எப்படி வந்தோம்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள்?" பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே? தாபஜ்வரத்தின் வேகத்தில் தான் கண்ட பயங்கர இன்பக் கனவுகளெல்லாம் இலேசாக ஞாபகம் வந்தன. அந்த அதிசய மாயக்கனவுகளில் அடிக்கடி தோன்றிய பெண்ணின் முகம் மட்டும் கனவன்று - உண்மை என்று அவனுக்கு உறுதி ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பாதச் சிலம்பின் ஒலி கேட்டபோது, அவள் தானா என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை; யாரோ பணிப்பெண்கள், முன்பின் பார்த்தறியாதவர்கள்.
இன்னும் வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். பணியாட்களும் பணிப்பெண்களும் அடிக்கடி வந்து வேண்டிய சிசுருஷை செய்தார்கள். ஆனால், பொன்னன் வரவில்லை; அந்தப் பெண்ணையும் காணவில்லை. பணியாட்களிடமும், பணிப்பெண்களிடமும் விவரம் எதுவும் கேட்பதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவர்களோ ஊமைகளைப் போல் வந்து அவரவர் களுடைய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவ்விதம் ஒரு பகல் சென்றது. இரவு தூக்கத்தில் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து விக்கிரமனுக்கு அங்கே படுத்திருக்க மனம் கொள்ளவில்லை. உடம்பில் நல்ல பலம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்; எழுந்து நடமாடினான். ஒருவிதக் களைப்பும் உண்டாகவில்லை, திடமாகத்தான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து தோட்டத்தில் பிரவேசித்தான். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனைத் தடுக்கவில்லை. விக்கிரமன் மேலும் நடந்தான். நதிக்கரையை நோக்கி மெதுவாக நடந்து சென்றான் பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குளிர்ந்த காவேரித் தீவைப் பார்க்கப் பார்க்க, அவன் மனம் பரவசமடைந்தது. அந்த மாமரங்களின் நிழலில் நடப்பது அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. மெள்ள மெள்ள நடந்து போய்க் காவேரிக் கரையை அடைந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனுடைய மனதில் சாந்தியும் இன்ப உணர்ச்சியும் மேலிட்டிருந்தன.
காவேரி நதியின் இனிய நீர்ப்பிரவாகத்தை விக்கிரமன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் ஒரு முகம் பிரதிபலித்தது! அது அந்தப் பழைய தெய்வப் பெண்ணின் முகந்தான். காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் தன்னைக் கருணையுடன் நோக்கிய முகந்தான். தாபஜ்வரக் கனவுகளில் தோன்றிச் சாந்தியும் குளிர்ச்சியும் அளித்த முகமும் அதுதான். அந்தப் பெண்ணை மறுபடியும் காணப் போகிறோமா என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில், அவனுக்குப் பின்புறமாக வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு குந்தவி தேவி நின்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்திரண்டு


"நிஜமாக நீதானா?"

மரத்தடியில் வந்து நின்ற குந்தவிதேவி சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள். விக்கிரமன் திரும்பிப் பார்க்கும் வழியாக இல்லை. காவேரியின் நீர்ப் பிரவாகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை. ஒரு சிறு கல்லை எடுத்து விக்கிரமனுக்கு அருகில் ஜலத்தில் போட்டாள். 'கொடக்' என்ற சத்தத்துடன் கல் அப்பிரவாகத்தில் விழுந்து முழுகிற்று. சிறு நீர்த் துளிகள் கிளம்பி விக்கிரமன் மேல் தெறித்தன. குந்தவியின் யுக்தி பலித்தது. விக்கிரமன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் அகல விரிந்தன. கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான். அவனுடைய உதடுகள் சற்றுத் திறந்தன. ஏதோ பேச யத்தனிப்பது போல். ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் காவேரியின் பிரவாகத்தை நோக்கினான். குந்தவி இன்னும் சற்று நேரம் நின்றாள். பிறகு மரத்தடியிலிருந்து வந்து நதிக்கரையில் விக்கிரமனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த பிறகு விக்கிரமனும் இரண்டு மூன்று தடவை அவள் பக்கம் திரும்பினான். ஒவ்வொரு தடவையும் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு குந்தவி, "நான் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தாள். விக்கிரமன் மிகவும் அதிசயமடைந்தவனைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்து, "நீ பேசினாயா?" என்று கேட்டான். "ஆமாம். நான் ஊமையில்லை! என்றாள் குந்தவி. குன்றாத அதிசயத்துடன் விக்கிரமன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். குந்தவி மறுபடியும் போகத் தொடங்கினாள். "ஏன் போகிறாய்?" என்றான் விக்கிரமன் தழுதழுத்த குரலில். "நீர் பேசுகிற வழியைக் காணோம். அதனால்தான் கிளம்பினேன்" என்று சொல்லிக் கொண்டே குந்தவி மறுபடியும் விக்கிரமனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். "எனக்குப் பயமாயிருந்தது!" என்றான் விக்கிரமன். "என்ன பயம்? ஒரு அபலைப் பெண்ணைக் கண்டு பயப்படுகிற நீர் தனி வழியே கிளம்பலாமா?" "உன்னைக் கண்டு பயப்படவில்லை." "பின்னே?" "நான் காண்பது கனவா அல்லது ஜுர வேகத்தில் தோன்றும் சித்தப்பிரமையோ என்று நினைத்தேன். பேசினால் ஒரு வேளை பிரமை கலைந்துவிடுமோ என்று பயந்தேன்." குந்தவி புன்னகையுடன், "இப்பொழுது என்ன தோன்றுகிறது? கனவா, பிரமையா?" என்றாள். "இன்னமும் சந்தேகமாய்த்தானிருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால்....?" "இருந்தால் என்ன?" "நிஜமாக நீதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வேன்."
இவ்விதம் சொல்லி விக்கிரமன் தன்னுடைய கையைக் குந்தவியின் கன்னத்தின் அருகே கொண்டு போனான். ஜுரக் கனவுகளில் நிகழ்ந்தது போல் அந்த முகம் உடனே மறைந்து போகவில்லை. குந்தவி தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. விக்கிரமனுடைய உள்ளங்கை, மலரின் இதழ் போல் மென்மையான குந்தவியின் கன்னத்தைத் தொட்டது. பிறகு, பிரிய விருப்பமில்லாதது போல் அங்கேயே இருந்தது. குந்தவி அந்தக் கையைப் பிடித்து அகற்றி, பழையபடி அவனுடைய மடிமீது வைத்தாள். புன்னகையுடன், "உம்முடைய சந்தேகம் தீர்ந்ததா? நிச்சயம் ஏற்பட்டதா?" என்றாள். "சந்தேகம் தீர்ந்தது! பல விஷயங்கள் நிச்சயமாயின" என்றான் விக்கிரமன். "என்னென்ன?" "நிஜமாக நீதான் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பிரமையோ கனவோ அல்ல என்பது ஒன்று." "அப்புறம்?" "நீ கையினால் தொட முடியாத தெய்வ கன்னிகையல்ல; உயிரும் உணர்ச்சியுமில்லாத தங்க விக்கிரகமும் அல்ல; சாதாரண மானிடப் பெண்தான் என்பது ஒன்று." "இன்னும் என்ன?" "இனிமேல் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம் என்பது ஒன்று."
குந்தவி வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு விக்கிரமனைப் பார்த்து, "என்னை உமக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். "ஞாபகமா? நல்ல கேள்வி கேட்டாய்! உன்னைத் தவிர வேறு எந்த ஞாபகமாவது உண்டா என்று கேட்டிருந்தால் அதிகப் பொருத்தமாயிருக்கும். பகலிலும், இரவிலும், பிரயாணத்திலும், போர்முனையிலும், கஷ்டத்திலும், சுகத்திலும் உன் முகம் என் மனத்தை விட்டு அகன்றதில்லை. மூன்று வருஷ காலமாக நான் எங்கே போனாலும், எது செய்தாலும், என் இருதய அந்தரங்கத்தில் உன் உருவம் இருந்து கொண்டுதானிருந்தது." "என்ன சொல்கிறீர்? நான் உம்மை மாமல்லபுரத்து வீதியில் சந்தித்துப் பத்து நாள்தானே ஆயிற்று? மூன்று வருஷமா?...." என்றாள் குந்தவி கள்ளச் சிரிப்புடனும் அவ நம்பிக்கையுடனும். விக்கிரமன் சற்று நேரம் திகைத்துப் போய் மௌனமாயிருந்தான். பிறகு, "ஓஹோ! பத்து நாள்தான் ஆயிற்று?" என்றான். "பின்னே, மூன்று வருஷம் ஜுரம் அடித்துக் கிடந்தீரா?" "சரிதான்; ஜுரத்தினால்தான் அத்தகைய பிரமை எனக்கு உண்டாகியிருக்கிறது. உனக்கும் எனக்கும் வருஷக்கணக்கான சிநேகிதம் என்று தோன்றுகிறது!"
"ஒரு வேளை மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்ததற்கு முன்னாலேயே எப்போதாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதோ?" என்று குந்தவி கேட்டாள். விக்கிரமன் சற்று யோசித்து, "எனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி வரவில்லை. மனம் குழம்பியிருக்கிறது, அதிலும்...." என்று தயங்கினான். "அதிலும் என்ன?" என்று கேட்டாள் குந்தவி. "அதிலும் உன்னுடைய நீண்ட கரிய விழிகளைப் பார்த்தேனானால் நினைவு அடியோடு அழிந்து போகிறது. என்னையும், நான் வந்த காரியத்தையும், இவ்வுலகத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்! வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?" "உமக்கு இன்னும் ஜுரம் குணமாகவில்லை. அதனால்தான் இப்படிப் பிதற்றுகிறீர். நீர் இங்கே தனியாக வந்திருக்கக் கூடாது?" "இல்லை; எனக்கு ஜுரமே இப்போது இல்லை. நீ வேணுமானால் என் கையைத் தொட்டுப்பார்!" என்று விக்கிரமன் கையை நீட்டினான். குந்தவி கையை லேசாகத் தொட்டுவிட்டு, "அப்பா, கொதிக்கிறதே!" என்றாள். "இருக்கலாம்; ஆனால் அது ஜுரத்தினால் அல்ல...."
"இருக்கட்டும்; கொஞ்சம் என் கண்களைப் பாராமல் வேறு பக்கம் பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லும். நீர் யார், எங்கிருந்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா? எல்லாமே மறந்து போய்விட்டதா?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம்; இங்கே வந்து நதிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டேன். செண்பகத் தீவிலிருந்து கப்பலில் வந்தேன். இரத்தின வியாபாரம் செய்வதற்காக....." "மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்த விஷயமும் ஞாபகம் இருக்கிறதல்லவா?" "இருக்கிறது." "அரண்மனைக்கு வாரும்; சக்கரவர்த்தியின் மகள் இரத்தினம் வாங்குவாள், என்று சொன்னேனே, அது நினைவிருக்கிறதா?" "இப்போது நினைவு வருகிறது." "நீர் ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர்?" விக்கிரமன் சற்று நிதானித்து "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். "இரத்தின வியாபாரிகள் எப்போதாவது உண்மையைச் சொல்லும் வழக்கம் உண்டு என்றால் நீரும் உண்மையைச் சொல்லும்."
"சத்தியமாய்ச் சொல்லுகிறேன் உன்னை இன்னொரு தடவை பார்த்தேனானால், மறுபடியும் உன்னைப் பிரிந்து வருதற்கு மனம் இடங்கொடாது என்ற காரணத்தினால்தான். அது ரொம்பவும் உண்மையான பயம் என்று இப்போது தெரிகிறது...." "செண்பகத் தீவில் இப்படியெல்லாம் புருஷர்கள் பெண்களிடம் பேசி ஏமாற்றுவது வழக்கமா? இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?" என்று குந்தவி ஏளனமாகக் கேட்டாள். "நீ ஒன்றை மறந்து விடுகிறாய். நான் செண்பகத் தீவிலிருந்து வந்தேனென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தச் சோழ நாட்டில்தான். இந்தப் புண்ணியக் காவேரி நதியின் கரையில்தான் நான் ஓடியாடி விளையாடினேன். இந்த நதியின் பிரவாகத்தில்தான் நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்த அழகிய சோழநாட்டின் குளிர்ந்த மாந்தோப்புகளிலும் தொன்னந்தோப்புகளிலும் ஆனந்தமாக எத்தனையோ நாட்கள் உலாவினேன்! ஆகா! நான் செண்பகத் தீவிலிருந்த நாட்களில் எத்தனை நாள் இந்த நாட்டை நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன்! இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன்! மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன்!... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது! உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்று விக்கிரமன் ஆர்வத்துடன் கூறினான்.
"எனக்கு நீர் நன்றி செலுத்துவதில் என்ன பிரயோஜனம்? உண்மையில் நீர் நன்றி செலுத்த வேண்டியது கோமகள் குந்தவிக்கு..." "யார்?" "சக்கரவர்த்தியின் மகள் குந்தவி தேவியைச் சொல்லுகிறேன். உம்மை இங்கே அழைத்து வருவதற்கு அவர்தானே அனுமதி தந்தார்? அவருக்குத்தான் நீர் கடமைப்பட்டிருக்கிறீர்." "அப்படியா? எனக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. என் மனம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. இந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன்; காவேரி நதிக்கரையில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுகிறேன். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. நான் எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தேன் என்பதை விவரமாய்ச் சொல்ல வேண்டும். முதலில், நீ யார் உன் பெயர் என்னவென்று தெரிவித்தால் நல்லது." "மாமல்லபுரத்தில் சொன்னேனே, ஞாபகம் இல்லையா?" "உன்னைப் பார்த்த ஞாபகம் மட்டுந்தான் இருக்கிறது; வேறொன்றும் நினைவில் இல்லை." "என் பெயர் ரோகிணி சக்கரவர்த்தித் திருமகள் குந்தவி தேவியின் தோழி நான்." உண்மையில், அந்தச் சந்திப்பின் போது குந்தவி தன் பெயர் மாதவி என்று சொன்னாள். அவசரத்தில் சொன்ன கற்பனைப் பெயர் ஆனதால் அவளுக்கே அது ஞாபகமில்லை. இப்போது தன் பெயர் 'ரோகிணி' என்றாள்.
அதைக் கேட்ட விக்கிரமன் சொன்னான்: "ரோகிணி! - என்ன அழகான பெயர்? - எத்தனையோ நாள் அந்தச் செண்பகத் தீவில் நான் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. பிறைச் சந்திரனுக்கு அருகில் ரோகிணி நட்சத்திரம் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், உன்னுடைய கண்களின் ஜொலிப்பிற்கு அந்த ரோகிணி நட்சத்திரங்களின் ஜொலிப்பு கொஞ்சமும் இணையாகாது." "உம்முடைய வேஷத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்...."என்றாள் குந்தவி. விக்கிரமன் சிறிது திடுக்கிட்டு, "வேஷமா?....' என்றான். "ஆமாம்; உண்மையில் நீர் இரத்தின வியாபாரி அல்ல, நீர் ஒரு கவி. ஊர் சுற்றும் பாணன், உம்முடைய மூட்டையில் இருந்தது இரத்தினம் என்றே நான் நம்பவில்லை!" விக்கிரமன் சற்றுப் பொறுத்துச் சொன்னான்! - "இப்போது உன்னை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. ஆனால் அந்த மூட்டையில் இருந்தவை இரத்தினங்கள்தான் என்று ஒரு நாள் உனக்கு நிரூபித்துக் காட்டுவேன். நான் கவியுமல்ல, என்னிடம் அப்படி ஏதாவது திடீரென்று கவிதா சக்தி தோன்றியிருக்குமானால், அதற்கு நீதான் காரணம். உன்னுடைய முகமாகிய சந்திரனிலிருந்து பொங்கும் அமுத கிரணங்களினால்...."
"போதும், நிறுத்தும் உம்முடைய பரிகாசத்தை இனிமேல் சகிக்க முடியாது" என்றாள் குந்தவி. "பரிகாசமா?" என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பிறகு, "உனக்குப் பிடிக்காவிட்டால் நான் பேசவில்லை. நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைச் சொன்னால் ரொம்பவும் நன்றி செலுத்துவேன்" என்றான். "காஞ்சியிலிருந்து உறையூர் வரும் பாதையில் மகேந்திர மண்டபம் ஒன்றில் ஜுர வேகத்தினால் பிரக்ஞை இழந்து நீர் கிடந்தீர். அங்கு எப்படி வந்து சேர்ந்தீர்? அதற்கு முன்னால் என்னென்ன நேர்ந்தது என்று நீர் சொன்னால், பிறகு நடந்ததை நான் சொல்லுகிறேன்." விக்கிரமன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் ஒருவாறு சுருக்கமாகச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குந்தவி தேவி கூறினாள்: "சக்கரவர்த்தியின் மூத்த குமாரர் மகேந்திரரும், குந்தவி தேவியும் காஞ்சியிலிருந்து உறையூருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். தேவியுடன் நானும் வந்தேன், அந்தக் காட்டாற்றைத் தாண்டி வந்தபோது, மகேந்திர மண்டபத்துக் குள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று அலறும் குரல் கேட்டது. நான் அம்மண்டபத்துக்குள் வந்து பார்த்தேன். மாமல்லபுரத்தில் பார்த்த இரத்தின வியாபாரி நீர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு குந்தவி தேவியிடம் உம்மையும் அழைத்து வர அனுமதி கேட்டேன். அவர் கருணை செய்து சம்மதித்தார். உமக்கு உடம்பு பூரணமாகக் குணமாகும் வரையில் இங்கேயே உம்மை வைத்திருக்கவும் அனுமதித்திருக்கிறார்."
"ஜுரக் கனவுகளில் நான் அடிக்கடி உன்னுடைய முகத்தைக் கண்டேன். அதெல்லாம் கனவல்ல; உண்மையிலேயே உன்னைத் தான் பார்த்தேன் என்று இப்போது தெரிகிறது." "இருக்கலாம்; நீர் ஜுரமடித்துக் கிடக்கையில் அடிக்கடி உம்மை நான் வந்து பார்த்தது உண்மைதான். இவ்வளவுக்கும் குந்தவி தேவியின் கருணைதான் காரணம்." விக்கிரமன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். குந்தவி கேட்டாள்: "சக்கரவர்த்தியின் மகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன். ஒரு வார்த்தையாவது நீர் நன்றி தெரிவிக்கவில்லையே? அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு?" "பல்லவ குலத்தைச் சேர்ந்த யாருக்கும் நான் நன்றி செலுத்த முடியாது!" "குந்தவி தேவியை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர். பிறகு என்னைக்கூட உடனே மறந்து விடுவீர்." "சத்தியமாய் மாட்டேன். ஆயிரம் குந்தவி தேவிகள் உனக்கு இணையாக மாட்டார்கள்! இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா?" "யார் இருவரும்?" "அண்ணனும் தங்கையும்." "யுவராஜா மகேந்திரர் இங்கே இல்லை. அவர் திரும்பவும் காஞ்சிக்குப் போய்விட்டார். சீன தேசத்திலிருந்து யாரோ ஒரு யாத்திரிகர் வந்திருக்கிறாராம். அவர் இந்தப் பாரதநாடு முழுவதும் யாத்திரை செய்து விட்டுக் காஞ்சிக்கு வருகிறாராம். 'யுவான் சுவாங்' என்ற விசித்திரமான பெயரையுடையவராம். சக்கரவர்த்திக்கு இச்சமயம் முக்கிய வேலை வந்திருப்பதால், அந்த யுவான் சுவாங்கை உபசரித்து வரவேற்பதற்காக யுவராஜா உடனே வரவேண்டுமென்று செய்தி வந்தது. இங்கு வந்த இரண்டாம் நாளே மகேந்திரர் புறப்பட்டுப் போய்விட்டார். பார்த்தீரா, எங்கள் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் கடல்களுக்கப்பால் வெகு தூரத்திலுள்ள தேசங்களில் எல்லாம் கூடப் பரவியிருப்பதை? நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி?" என்று கேட்டாள் குந்தவி.
"ஆம்; அங்கேயெல்லாம் கூடப் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் பரவித்தான் இருக்கிறது." "அப்படிப்பட்ட சக்கரவர்த்தியின் ஆளுகையில் இருப்பது இந்தச் சோழ நாட்டுக்குப் பெருமையில்லையா? இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே? அது நியாயமா? உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று குந்தவி கேட்டு விக்கிரமனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கினாள். விக்கிரமன் அவளை நிமிர்ந்து நோக்கி, "என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தச் சோழநாட்டில் அடிமையாயிருப்பதைக் காட்டிலும், செண்பகத் தீவில் சுதந்திரப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்" என்றான். "நிச்சயமாகவா? என் நிமித்தமாகக்கூட நீர் இங்கே இருக்கமாட்டீரா?" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, "அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்!" என்றான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அறிந்து கொள்ளாதது போல் நடித்தார்கள். இந்த நாடகம் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்துமூன்று


அருவிப் பாதை

உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு விசித்திரமான காட்சியாயிருந்தது. வான வெளியெங்கும் எண்ணிறைந்த பட்சிகளின் கலகல தொனி பரவி ஒலித்தது. அதனுடன் மலையிலிருந்து துள்ளிக் குதித்து ஆடிப்பாடி வந்த அருவியின் இனிய ஒலியும் சேர்ந்து வெகு மனோகரமாயிருந்தது. இந்த நேரத்தில் அந்த மலைச்சாரலுக்கு அருகில் இரண்டு உயர்ஜாதி வெண்புரவிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது ஆரோகணித்திருந்தவர்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கமுள்ளவர்களான சிவனடியாரும் பொன்னனுந்தான். அவர்கள் அந்தக் காட்டாற்றின் கரையோரமாகவே வந்து கொண்டிருந்தார்கள்; பேசிக் கொண்டு வந்தார்கள். சிவனடியார், சற்றுத் தூரத்தில் மொட்டையாக நின்ற பாறையைச் சுட்டிக் காட்டி, "பொன்னா! அந்தப் பாறையைப் பார்! அதைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார். "ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி! மொட்டைப் பாறை என்று தோன்றுகிறது. அவ்வளவுதான்."
"எனக்கு என்ன தோன்றுகிறது, தெரியுமா? காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார்!" பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே!" என்றான். "சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா! சிற்பி ஒரு பாறையைப் பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது...." பொன்னன் குறுக்கிட்டு, "சுவாமி! தாங்கள்...." என்றான். "ஆமாம்! நான் ஒரு சிற்பிதான்! உலகத்தில் வேறு எந்த வேலையைக் காட்டிலும் சிற்ப வேலையிலேதான் எனக்கும் பிரியம் அதிகம்... இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டேனானால்... இருக்கட்டும், பொன்னா! மாமல்லபுரம் நீ பார்த்திருக்கிறாயா?" என்று சுவாமியார் கேட்டார்.
"ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். சுவாமி!" "அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?" "சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது...." "ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை! நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா! ஒரு காலத்தில், பொன்னா! மாமல்லபுரம் மாதிரியே இந்தத் தமிழகம் முழுவதையும் ஆக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்...." "என்ன, தாங்களும் கனவு கண்டீர்களா?" என்றான் பொன்னன். "ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா? அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்.... பார், பொன்னா! புண்ணிய பூமியாகிய இந்தப் பரத கண்டம் வடநாடு, தென்னாடு என்று பிரிவுபட்டிருக்கிறது. கதையிலும், காவியத்திலும் இதிகாசத்திலும் வடநாடுதான் ஆதிகாலத்திலிருந்து பெயர் பெற்று விளங்குகிறது.
வடநாட்டு மன்னர்களின் பெயர்கள்தான் பிரசித்தியமடைந்திருக்கின்றன. பாடலிபுரத்துச் சந்திர குப்தன் என்ன, அசோகச் சக்கரவர்த்தி என்ன, விக்கிரமாதித்தன் என்ன! இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள்? நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா? தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன? இந்தத் தென்னாடானது ஆதிகாலம் முதல் சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்து கிடந்ததுதான், காரணம். பெரிய இராஜ்யம் இல்லாவிட்டால், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. பெரிய காரியங்களைச் சாதிக்காமல் பெரிய புகழ் பெறவும் முடியாது. வட நாட்டில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் இராஜ்யமானது. நீளத்திலும் அகலத்திலும் இருநூறு காததூரம் உள்ளதாயிருக்கிறது. இந்தத் தென்னாட்டிலோ பத்துக் காதம் போவதற்குள்ளாக மூன்று ராஜ்யத்தை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை அதாவது - தமிழகம் முழுவதும் ஒரே மகாராஜ்யமாயிருக்க வேண்டும் - தமிழகத்தின் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்று மகேந்திர பல்லவர் ஆசைப்பட்டார். நானும் அந்த மாதிரி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறலாம் என்று ஆசையுடன் நம்பியிருந்தேன். ஆனால், அந்த ஆகாசக் கோட்டையானது ஒரே ஒரு மனுஷனின் சுத்த வீரத்துக்கு முன்னால் இடிந்து, தகர்ந்து போய்விட்டது."
"சுவாமி! யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்றான் பொன்னன். "எல்லாம் உங்கள் பார்த்திப மகாராஜாவைத்தான்! ஆகா! அந்த வெண்ணாற்றங்கரைப் போர்க்களம் இப்போது கூட என் மனக்கண் முன்னால் நிற்கிறது. என்ன யுத்தம்! என்ன யுத்தம்! வெண்ணாறு அன்று இரத்த ஆறாக அல்லவா ஓடிற்று? பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது? உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்!" என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார். "ஐயோ! அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே!" என்றான் பொன்னன். "போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா! ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது! உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான்!" என்றார் சுவாமியார். "சுவாமி! வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்!" என்றான் பொன்னன். இந்த வீரப்போரைக் குறித்தும், பார்த்திப மகாராஜா அந்திம காலத்தில் சிவனடியாரிடம் கேட்ட வரத்தைப் பற்றியும் எவ்வளவு தடவை கேட்டாலும் அவனுக்கும் அலுப்பதில்லை. சிவனடியாரும் அதைச் சொல்ல அலுப்பதில்லையாதலால், அந்தக் கதையை மறுபடியும் விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.
சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள், காட்டாறானது சிற்றருவியாகி மலைமேல் ஏறத் தொடங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். இதற்குமேல் குதிரைகளின் மீது போவது இயலாத காரியம். எனவே மலைச்சாரலில் மரங்கள் அடர்த்தியாயிருந்த ஓர் இடத்தில் குதிரைகளை அவர்கள் விட்டார்கள். இவற்றை "மரத்திலே கட்ட வேண்டாமா?" என்று பொன்னன் கேட்டதற்கு "வேண்டாம்" என்றார் சிவனடியார். "இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா! உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா? இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா?" என்று கூறிவிட்டு இரண்டு குதிரைகளையும் முதுகில் தடவிக் கொடுத்தார். பிறகு இருவரும் அருவி வழியைப் பிடித்துக் கொண்டு மலை மேலே ஏறினார்கள்.
பெரிதும் சிறிதுமாய், முண்டும் முரடுமாயும் கிடந்த கற்பாறைகளை வெகு லாவகமாகத் தாண்டிக் கொண்டு சிவனடியார் சென்றார். தண்ணீரில் இறங்கி நடப்பதிலாவது ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டுவதிலாவது அவருக்கு ஒருவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவரைப் பின்தொடர்ந்து போவதற்குப் பொன்னன் திணற வேண்டியதாக இருந்தது. "சுவாமி! தங்களுக்குத் தெரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா?" என்று பொன்னன் கேட்டான். "ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா! கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்" என்றார் சிவனடியார். அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், "ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை - மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார்!" என்றார். "அதெப்படி, சுவாமி! முன்னேயும் அவ்விதம் சொன்னீர்கள்! பார்த்திப மகாராஜாவினால் உங்களுடைய காரியம் கெட்டுப் போவானேன்?" என்று கேட்டான் பொன்னன்.
"வாதாபியிலிருந்து திரும்பி வந்தபோது, தென்னாடு முழுவதையும் ஒரு பெரிய மகாராஜ்யமாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே வந்தேன். இந்தச் சின்னஞ் சிறு தமிழகத்தில் ஒரு ராஜாவுக்கு மேல் - ஒரு இராஜ்யத்துக்கு மேல் இடங்கிடையாது என்று கருதினேன். சோழ, சேர, பாண்டியர்களின் நாமதேயமே இல்லாமல் பூண்டோ டு நாசம் செய்து விட்டுத் தமிழகத்தில் பல்லவ இராஜ்யத்தை ஏகமகா ராஜ்யமாகச் செய்துவிட வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், என்ன பிரயோஜனம்? பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க - சுதந்திர வீர புருஷனாக வளர்க்க - வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது! இப்போது நினைத்தால், ஏன் அந்தப் புரட்டாசிப் பௌர்ணமி இரவில் போர்க்களத்தில் பிரவேசித்து பார்த்திபனுடைய உடலைத் தேடினோம் என்று தோன்றுகிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது."
இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் சிவனடியாரும் மேலே மேலே ஏறி சென்றார்கள். சூரியன் உச்சி வானத்தை அடைந்தபோது செங்குத்தான பாறையிலிருந்து அருவி 'ஹோ' என்ற இரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அதற்குமேல் அருவிப் பாதையில் போவதற்கு வழியில்லை என்பதைப் பொன்னன் தெரிவிக்க, சிவனடியார் சிந்தனையில் ஆழ்ந்தவராய் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினார். அருவி விழுந்தோடிய இடத்துக்கு இரு புறமும் கூர்ந்து பார்த்ததில் காட்டுவழி என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் தென்படவில்லை. இருபுறமும் செங்குத்தாகவும் முண்டும் முரடுமாகவும் மலைப்பாறைகள் உயர்ந்திருந்ததுடன், முட்களும் செடிகளும் கொடிகளும் நெருங்கி வளர்ந்து படர்ந்திருந்தன. அந்தச் செடி கொடிகளையெல்லாம் சிவனடியார் ஆங்காங்கு விலக்கிப் பார்த்துக் கொண்டு கடைசியாக அருவி விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சமீபமாக வந்தார். அருவியின் தாரை விழுந்த இடம் ஒரு சிறு குளம் போல் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது. தாரை விழுந்த வேகத்தினால் அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் குளத்தைப் பார்க்கும் போதே மனதில் திகில் உண்டாயிற்று. குளத்தின் இருபுறத்திலும் பாறைச் சுவர் செங்குத்தாக இருந்தபடியால் நீர்த்தாரை விழும் இடத்துக்கு அருகில் போவது அசாத்தியம் என்று தோன்றிற்று. ஆனால் சிவனடியார் அந்த அசாத்தியமான காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.
அந்த அருவிக் குளத்தின் ஒரு பக்கத்தில் ஓரமாக பாறைச் சுவரைக் கைகளால் பிடித்துக் கொண்டும் முண்டு முரடுகளில் காலை வைத்துத் தாண்டியும், சில இடங்களில் தண்ணீரில் இறங்கி நடந்தும் சில இடங்களில் நீந்தியும் அவர் போனார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்ற பொன்னன், கடைசியாகச் சிவனடியார் தண்ணீர் தாரைக்குப் பின்னால் மறைந்ததும், "ஐயோ!" என்று அலறிவிட்டான். "ஒருவேளை போனவர் போனவர் தானா? இனிமேல் திரும்ப மாட்டாரோ?" என்று அவன் அளவில்லாத ஏக்கத்துடனும் திகிலுடனும் நின்றான். நேரமாக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாயிற்று. சாமியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பதை நினைத்தபோது அவனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. 'அவரை விட்டு விட்டு நாம் திரும்பிப் போவதா? முடியாத காரியம். நாமும் அவர் போன இடத்துக்கே போய்ப் பிராணனை விடலாம். எது எப்படிப் போனாலும் போகட்டும்' என்று துணிந்து பொன்னனும் அந்தக் கிடுகிடு பள்ளமான குளத்தில் இறங்கினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்துநான்கு


பொன்னன் பிரிவு

பொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது, சிவனடியார் அவனைப் பார்த்து ஏதோ கூறியதுடன் சமிக்ஞையினால் "வா" என்று அழைத்தார். அருவியின் பேரோசையினால் அவர் சொன்னது என்னவென்று பொன்னன் காதில் விழவில்லை ஆனால், சமிக்ஞை புரிந்தது. முன்னால் சுவாமியார் போன மாதிரியே இவனும் குளத்தின் ஓரமாகப் பாறைகளைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிச் சென்று அவர் நின்ற இடத்தை அடைந்தான். தூரத்தில் நின்று பார்த்தபோது குறுகலாகத் தோன்றிய அருவியின் தாரை உண்மையில் முப்பது அடிக்குமேல் அகலமுள்ளது என்பதைப் பொன்னன் இப்போது கண்டான். சாமியார் அவனுடைய கையைப் பிடித்துப் பாறைச் சுவருக்கும் அருவியின் தாரைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அழைத்துச் சென்றார். இந்த இடைவெளி சுமார் ஐந்து அடி அகலமுள்ளதாயிருந்தது. மிகவும் மங்கலான வெளிச்சம்; கீழே பாறை வழுக்கல்; கொஞ்சம் கால் தவறினால் அருவியின் தாரையில் அகப்பட்டுக் கொண்டு, அந்தப் பாதாளக் குளத்திற்குள் போகவேண்டியதுதான்! ஆகவே இரண்டு பேரும் நிதானமாகக் காலை ஊன்றி வைத்து நடந்தார்கள். நாலைந்து அடி நடந்ததும் சிவனடியார் நின்று பாறைச் சுவரில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிட்டதட்ட வட்ட வடிவமாக ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அந்தத் துவாரம் சாய்வாக மேல் நோக்கிச் செல்வதாகத் தெரிந்தது. ஓர் ஆள் அதில் கஷ்டமில்லாமல் புகுந்து செல்லலாமென்று தோன்றியது. ஆனால் அந்தத் துவாரம் எங்கே போகிறது? எவ்வளவு தூரம் போகிறது? ஒன்றும் தெரியவில்லை. ஐந்தாறு அடிக்கு மேல் ஒரே இருட்டாயிருந்தது.
சிவனடியார் பொன்னனுக்குச் சைகை காட்டித் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அந்தத் துவார வழியில் ஏறத் தொடங்கினார். சாய்வான மலைப்பாறையில் ஏறுவது போல் கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி ஏறினார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறினான். இன்னதென்று தெரியாத பயத்தினால் அவனுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. சற்று ஏறியதும் ஒரே காரிருளாயிருந்த படியால் அவனுடைய பீதி அதிகமாயிற்று. ஆனால், கையினால் பிடித்துக் கொள்ளவும், காலை ஊன்றிக் கொள்ளவும் சௌகரியமாக அங்கங்கே பாறை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்த போது, கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. இவ்விதம் சிறிது நேரம் சென்ற பிறகு அந்தக் குகை வழியில் மேலேயிருந்து கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பிறகு வெளிச்சம் நன்றாய்த் தெரிந்தது. சிவனடியார் மேலே ஏறி அப்பால் நகர்ந்தார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறி, அடுத்த நிமிஷம் வெட்ட வெளியில் மலைப்பாறை மீது நின்றான். சுற்று முற்றும் பார்த்தான் ஆகா, அது என்ன அற்புதக் காட்சி!
மலை அருவி விழுந்த செங்குத்தான பாறையின் விளிம்பின் அருகில் அவர்கள் நின்றார்கள். அங்கே பாறையில் கிணறு மாதிரி வட்ட வடிவமாக ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தின் நடுமத்தியில்தான் குகை வழி ஆரம்பமாகிக் கீழே சென்றது. பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சம் தூரத்தில் அருவி 'சோ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. அருவி விழுந்த திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற் போன்ற மலைத்தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி அந்தச் சமவெளியில் கண்ணுக்கெட்டிய தூரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்றை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ! பொன்னிற பூ!
"பார்த்தாயா, பொன்னா! எப்பேர்ப்பட்ட அருமையான இடம்! இந்த இடத்தைக் கொண்டு போய்க் கடவுள் எவ்வளவு இரகசியமான இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார், பார்த்தாயா?" என்றார் சிவனடியார். "ஆமாம், சுவாமி! எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல!" என்றான் பொன்னன். சிவனடியார் குறுநகை புரிந்தார். "ஆனால் பொன்னா! பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன." "ஐயோ! சுவாமி! ஏன் அவ்விதம் சொல்கிறீர்கள்?" "ஆமாம்; வெகு நாளாய் நான் அறிய விரும்பியதை இப்போது அறிந்தேன். மகா கபால பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் நான் இங்கிருந்து திரும்பி வருவேன், நீ ...."
"நானுந்தான் சுவாமி! உங்களைத் தனியே விட்டு விட்டு நான் போய் விடுவேன் என்று நினைத்தீர்களா?" "இல்லை பொன்னா! நீ போக வேண்டும். உனக்கு வேறு காரியம் இருக்கிறது. மிகவும் முக்கியமான காரியம்...." "எங்கள் ராணியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் என்ன சுவாமி?" "அதற்குத்தானே நான் வந்திருக்கிறேன், பொன்னா! ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா? 'என் பிள்ளை எங்கே?' என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ?..."
"சக்கரவர்த்தித் திருக்குமாரியின் இஷ்டத்துக்கு விரோதமாய் என்ன நடந்துவிடும், சுவாமி?" "ஏன் நடக்காது? தேவியின் சகோதரன் மகேந்திரன் கூட உறையூரில் இல்லை, பொன்னா! மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான்? அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா?" "ஐயோ!" "அதனால்தான் நீ உடனே உறையூருக்குப் போக வேண்டும்." "ஆனால், உங்களை விட்டுவிட்டு எப்படிப் போவேன்? ஆ! அந்த மகாகபால பைரவன் உங்களைப் பலிக்குக் கொண்டு வரும்படி சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது." "என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், பொன்னா! என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்!" "என்ன சந்தேகம், சுவாமி?"
"சமயம் வரும்போது உனக்குச் சொல்வேன், பொன்னா! இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ஏதாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன்!" "தாங்கள் வராவிட்டால்....?" "அடுத்த பௌர்ணமி வரையில் பார். அதற்குள் நான் உறையூரிலாவது மாமல்லபுரத்துச் சிற்ப மண்டபத்திலாவது வந்து உங்களைச் சந்திக்காவிட்டால், நீ என்னைத் தேடிக் கொண்டு வரலாம்." "அப்படியே சுவாமி!" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரிடம் பிரியாவிடை பெற்று அந்தத் துவாரத்துக்குள் இறங்கிச் சென்றான். கீழே வந்து அருவிக் குளத்தைத் தாண்டிக் கரையேறியதும் மேலே ஏறிட்டுப் பார்த்தான். அருவிப் பாறையின் விளிம்பில் சிவனடியார் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரிக்க, அவரும் கையை நீட்டி ஆசீர்வதித்தார். பிறகு பொன்னன் விரைவாக அருவி வழியில் கீழே இறங்கிச் செல்லலுற்றான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்தைந்து


வள்ளி சொன்ன சேதி

வழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப் போயிருந்தாள். அவள் பக்தியும் மரியாதையும் வைத்திருந்த சோழ ராஜ குடும்பத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாய் நேர்ந்த விபத்துக்களெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது கொஞ்ச நாளாய்ப் பொன்னனையும் பிரிந்திருக்க நேர்ந்தபடியினால் அவள் அடியோடு உற்சாகம் இழந்திருந்தாள். எனவே, பல தினங்களுக்குப் பிறகு பொன்னனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. "வா! வா!" என்று சொல்லி அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, "இளவரசர் போனது போல் நீயும் எங்கே கப்பல் ஏறிப் போய்விட்டாயோ, அல்லது ஒருவேளை உன்னை யாராவது காளிக்குத்தான் பலிகொடுத்து விட்டார்களோ என்று பயந்து போனேன். தினம் காளியம்மன் கோயிலுக்குப் போய், 'என் உயிரை எடுத்துக் கொண்டு என் புருஷனைக் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாய் வந்தாயே! என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்? நல்ல சேதிதானே?" என்று மூச்சு விடாமல் பேசினாள். "நல்ல சேதி, கெட்ட சேதி, கலப்படமான சேதி எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சொல்ல முடியாது. பசி பிராணன் போகிறது, வள்ளி! உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது! அகப்பட்டபோது அகப்பட்டதைத் தின்று...."
"அப்படியெல்லாம் பட்டினி கிடந்ததினால்தான் இன்னும் ஒரு சுற்று அதிகமாய்ப் பெருத்துவிட்டாயாக்கும். பாவம்! கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய்?" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள். "அப்படியா சமாசாரம்? நான் பெருத்திருக்கிறேனா, என்ன? ஆனாலும் நீ ரொம்பவும் இளைத்திருக்கிறாய் வள்ளி! ரொம்பக் கவலைப்பட்டாயா, எனக்காக?" என்றான் பொன்னன். "ஆமாம்; ஆனால் என்னத்துக்காகக் கவலைப்பட்டோ ம் என்று இப்போது தோன்றுகிறது. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போய்விட்டு வந்த சேதியை முதலில் சொல்லு. சொன்னால் நானும் ஒரு முக்கியமான சேதி வைத்திருக்கிறேன்" என்றாள். "சுருக்கமாகச் சொல்லுகிறேன். நமது விக்கிரம மகாராஜா தாய்நாட்டுக்குத் திரும்பி, வந்திருக்கிறார்...." "என்ன? என்ன? நிஜமாகத்தானா?" என்று சொல்லி ஆவலுடன் கேட்டாள். "ஆமாம்; நானே இந்தக் கண்களால் அவரைப் பார்த்துப் பேசினேன்..." "இப்போது எங்கேயிருக்கிறார்...?" "அதுதான் சொல்ல மாட்டேன், இரகசியம்." "சரி, அப்புறம் சொல்லு." "ராணி உள்ள இடத்தைக் கிட்டதட்டக் கண்டு பிடித்தாகிவிட்டது. இப்போது சிவனடியார் ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்குள் அவசியம் கண்டுபிடித்திருப்பார்." "ஆகா! சிவனடியாரா?" "வள்ளி! நீ பொல்லாத கள்ளி! சிவனடியார் யார் என்று என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினாயல்லவா? அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்!" "நிஜமாகவா? யார் அவர்?" என்றாள் வள்ளி. "யாரா? வேறு யார்? செத்துப் போனானே உன் பாட்டன் வீரபத்திர ஆச்சாரி, அவன்தான்!"
வள்ளி புன்னகையுடன், "இப்படியெல்லாம் சொன்னால் போதாது, நீ இங்கேயிருந்து கிளம்பினாயே, அதிலிருந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லு, ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்" என்றாள். "நீ அடுப்பை மூட்டு" என்றான் பொன்னன். வள்ளி அடுப்பை மூட்டிச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொன்னன் தான் போய் வந்த வரலாற்றையெல்லாம் விவரமாகக் கூறினான். கடைசியில், "நீ என்னமோ சேதி சொல்லப் போகிறேன் என்றாயே, அதைச் சொல்லு!" என்றான். வள்ளி சொன்னாள்; - "நாலு நாளைக்குள் மாரப்பன் இங்கே ஐந்து தடவை வந்து விட்டான். அவன்தான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதியாம். அவனுடைய ஜம்பம் பொறுக்க முடியவில்லை. 'வஸந்த மாளிகையில் யாரோ ஒரு இரத்தின வியாபாரி வந்திருக்கிறானாமே? அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே?' என்று என்னவெல்லாமோ கேட்டு என் வாயைப் பிடுங்கிப் பார்த்தான். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்து விட்டேன். அப்புறம் இங்கே அடிக்கடி வந்து, நீ திரும்பி வந்து விட்டாயா என்று விசாரித்து விட்டு போனான். இன்றைக்கும் கூட ஒருவேளை வந்தாலும் வருவான்."
இதைக் கேட்ட பொன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, "வள்ளி! தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா! குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா?" என்று கேட்டான். "இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்?" என்றாள். "குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செலுத்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்." "ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ?" "நானும் இதையேதான் கேட்டேன். பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னமும் வேஷம் போடுவதாகச் சொல்கிறார்." பிறகு பொன்னனும், வள்ளியும் சீக்கிரத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, உறையூரிலிருந்து புறப்பட்டுக் காவேரி நதிப்பாதையில் சென்றார்கள். அவர்களுடைய குடிசையை அடைந்ததும், கதவைத் திறந்து, உள்ளே இருந்த படகை இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டுபோய் நதியில் போட்டார்கள். பொன்னன், "பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி, கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டுப் படகைச் செலுத்தினான்.
பல தினங்களுக்குப் பிறகு மறுபடியும் காவேரியில் படகு விட்டது பொன்னனுக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. ஆனாலும் பார்த்திப மகாராஜாவின் காலத்தில் இராஜ குடும்பத்துக்குப் படகு செலுத்தியது நினைவுக்கு வந்து அவனுடைய கண்களைப் பனிக்கச் செய்தது. தீவிலே இளவரசரைப் பார்ப்போமா? அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா? அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா? - இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய்ப் படகு விட்டுக் கொண்டே போனவன் திடீரென்று கரைக்கு அருகே வந்து விட்டதைக் கவனித்தான். படகு வந்த இடம் தீவில் ஒரு மூலை. ஜனசஞ்சாரம் இல்லாத இடம். அந்த இடத்தில் படகை கட்டிவிட்டுத் தீவுக்குள் ஜாக்கிரதையாகப் போய் புலன் விசாரிப்பதென்று அவன் தீர்மானித்திருந்தான். மறுதடவை அவன் தீவின் கரைப்பக்கம் பார்த்தபோது அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. அங்கே விக்கிரம மகாராஜாவே நின்று கொண்டிருந்தார். ஒரு கால் தண்ணீரிலும் ஒரு கால் கரையிலுமாக நின்று படகையும் பொன்னனையும் ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தார். பொன்னன் கோலை வாங்கிப் போட்டு இரண்டே எட்டில் படகை அவர் நின்ற இடத்துக்குச் சமீபமாகக் கொண்டு வந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்தாறு


படகு நகர்ந்தது!

படகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்கிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். "மகாராஜா! மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே!" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். விக்கிரமன், "பொன்னா! சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்.... அதோ பார், பொன்னா! படகு நகர்கிறது முதலில் அதைக் கட்டு" என்றான். பொன்னன் ஓடிப்போய்ப் படகைப் பிடித்து இழுத்துக் கரையோரமிருந்த ஒரு மரத்தின் வேரில் அதைக் கயிற்றினால் கட்டிவிட்டு வந்தான். இருவரும் ஜலக்கரையில் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். "பொன்னா! அப்புறம் என்ன செய்தி சொல்லு! அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய்? ஏன் பிரிந்து போனாய்?" என்று விக்கிரமன் கேட்டான்.
"ஐயோ, மகாராஜா; நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்து வைத்தியனை அழைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, உங்களைக் காணவில்லை, அப்போது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா?" "வைத்தியனை அழைத்துவரப் போனாயா? எப்போது? எல்லாம் விவரமாய்ச் சொல்லு, பொன்னா!" "அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா?" "ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ! அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா!" "மறுநாள் காலையில், நாம் உறையூருக்குக் கிளம்புவதென்று தீர்மானித்துக் கொண்டல்லவா படுத்தோம்? அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா? தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா? எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம்! எனக்குப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது..."
"அப்புறம் என்னதான் செய்தாய்?" என்று விக்கிரமன் கேட்டான். பொன்னன் பிறகு தான் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, குள்ளனைக் கண்டது, குந்தவிதேவி தன் பல்லக்கில் அவரை ஏற்றிக் கொண்டு போனதைத் தெரிந்து கொண்டது. பராந்தகபுரம் வரையில் தொடர்ந்து வந்து கண்ணால் பார்த்துத் திருப்தியடைந்து, பிறகு மாமல்லபுரம் போய்ச் சிவனடியாரை சந்தித்தது. அவரும் தானுமாகக் கொல்லி மலைச்சாரலுக்கு போனது. இரகசிய வழியைக் கண்டுபிடித்தது, சிவனடியாரை மலைமேல் விட்டுவிட்டுத் தான் மட்டும் உறையூர் வந்தது ஆகிய விவரங்களை விவரமாகக் கூறினான். பொன்னன் சிவனடியாரைச் சிற்ப மண்டபத்தில் சந்தித்த செய்தி விக்கிரமனுக்கு வியப்பை அளித்தது. "பொன்னா! அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன்? அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா! எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது" என்றான் விக்கிரமன். "என்ன மகாராஜா, சந்தேகம்?" "அந்த ஒற்றர் தலைவன் ஒரு வேளை நமது சிவனடியார் தானோ என்று."
"ஆம், மகாராஜா! ஒற்றர் தலைவன் வீரசேனர்தான் சிவனடியார். நான் மாமல்லபுரத்துச் சாலையிலிருந்து குறுக்குவழி திரும்பியபோது எனக்கு முன்னால் ஒரு குதிரை வீரன் போவதைப் பார்த்தேன். தாங்கள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவர்தான் வீரசேனர் என்று ஊகித்துக் கொண்டேன். அவரே சிற்ப வீட்டுக்குள் நுழைந்துவிட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தபோது ஜடாமகுடத்துடன் சிவனடியாராக வந்தார்!" "ஐயோ! அப்படியானால் நான் உண்மையில் யார் என்று பல்லவச் சக்கரவர்த்தியின் ஒற்றர் தலைவனுக்குத் தெரியும்.... ஆனால் ஆதி முதல் நமக்கு உதவி செய்து வந்திருப்பவர் அவர்தான் அல்லவா? இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா?" "ஒரு நாளும் மாட்டார், சுவாமி! அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்...." "ஆனால் என்ன, பொன்னா?"
"வேறொரு பெரும் அபாயம் இவ்விடத்தில் இருக்கிறது. மாரப்ப பூபதிதான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதி, தெரியுமல்லவா? அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா! நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்." "இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா! நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்" என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான். "அது என்ன அபாயம், மகாராஜா?" என்று கேட்டான். "ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளில் உள்ள அபாயந்தான்" என்று கூறி விக்கிரமன் காவேரி நதியைப் பார்த்தான். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு விக்கிரமன் சொன்னான்:- "உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? பொன்னா! மூன்று வருஷத்துக்கு முன்னால் என்னை இங்கிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போன போது காஞ்சி நகரின் வீதியில் பல்லக்கில் சென்ற ஒரு பெண் என்னைப் பார்த்தாள். அவளே மறுபடியும் மாமல்லபுரத்தில் நான் கப்பல் ஏறியபோதும் கடற்கரையிலே நின்று என்னைக் கனிவுடன் பார்த்தாள். செண்பகத்தீவுக்குப் போய் மூன்று வருஷ காலமான பிறகும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. அதிசயத்தைக் கேள், பொன்னா! அதே பெண்தான் மகேந்திர மண்டபத்தில் நான் ஜுரமடித்துக் கிடந்தபோது என்னைப் பார்த்து இங்கே எடுத்து வந்து காப்பாற்றினாள்."
"மகாராஜா! அப்பேர்ப்பட்ட புண்யவதி யார்? அந்தத் தேவியைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது! பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்." "பொன்னா! விஷயத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்." "ஐயோ, அது என்ன?" "மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா! கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி! அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா? அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்...!" பொன்னன் குறுக்கிட்டு, "மகாராஜா! நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்" என்றான். "சொல்லு பொன்னா? உனக்கு அனுமதி வேண்டுமா?" "விசுவாமித்திர ரிஷி மேனகையினால் கெட்டதை மட்டும் சொல்கிறீர்கள். ஆனால், பெண்களால் மேன்மையடைந்தவர்கள் இல்லையா, மகாராஜா! சீதையால் ராமர் மேன்மையடையவில்லையா? கிருஷ்ணன் போய் ருக்மணியை எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தார்? அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா? முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன்? அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா?"
"பொன்னா! சரியான கேள்விதான் கேட்கிறாய். சீதையினால் ராமரும், ருக்மணியால் கிருஷ்ணனும், சுபத்திரையினால் அர்ச்சுனனும், வள்ளியினால் முருகனும் மேன்மையடைந்தது மட்டுமல்ல. அருள்மொழி ராணியினால் பார்த்திப மகாராஜாவும், வள்ளியினால் பொன்னனும் மேன்மையடைகிறார்கள்." "அப்படிச் சொல்லுங்கள்! பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?" "கேள், பொன்னா! பெண் காதலினால் மனிதர்கள் சிலர் தேவர்களாகியிருக்கிறார்கள், அவர்கள் பாக்கியசாலிகள். ஆனால், தேவர்கள் சிலர் பெண் காதலினால் தேவத்தன்மையை இழந்து மனுஷ்யர்களிலும் கேடு கெட்டவர்களாகியிருக்கிறார்கள். நான் அத்தகைய துர்ப்பாக்கியன். என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பெண் அத்தகையவளா யிருக்கிறாள். நான் என்னுடைய தர்மத்தையும், என்னுடைய பிரதிக்ஞையையும் கைவிடுவதற்கு அவளுடைய காதல் தூண்டுகோலாயிருக்கிறது. ஜுரம் குணமானதிலிருந்து எனக்கு அந்தப் பெண்ணின் நினைவைத் தவிர வேறு நினைவேயில்லை. அவளைப் பிரிந்து ஒரு நிமிஷமாவது உயிர் வாழ முடியாதென்று தோன்றுகிறது. அவளுக்காக சுவர்க்கத்தைக்கூடத் தியாகம் செய்யலாமென்று தோன்றும் போது, சோழ நாடாவது சுதந்திரமாவது? அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன?"
பொன்னனுக்கு தூக்கி வாரிப் போட்டது. "விக்கிரமனுக்கு இது கடைசித் சோதனை" என்று சிவனடியார் கூறியது அவனுக்கு நினைவு வந்தது. "ஐயோ! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உறையூர்ச் சித்திர மண்டபத்தில் பார்த்திப மகாராஜாவிடம் தாங்கள் செய்த சபதம் ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டான். "ஞாபகம் இருக்கிறது பொன்னா! இன்னும் மறந்து போகவில்லை. ஆனால், எத்தனை நாளைக்கு ஞாபகம் இருக்குமோ, தெரியாது. தினம் தினம் என்னுடைய உறுதிகுலைந்து வருகிறது. ஆகையினால்தான் உடனே கிளம்பி விடவேண்டுமென்று சொல்கிறேன். இப்போதே உன்னுடன் வரச் சித்தமாயிருக்கிறேன்; கிளம்பலாமா?" என்றான் விக்கிரமன். "கிளம்பலாம் சுவாமி! ஆனால் இந்தத் தீவில் நமக்கு ஒரு காரியம் இருக்கிறதே! மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்...." "பார்த்தாயா! அதைக்கூட மறந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன்! இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய்?" என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான். "சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி!" "தோண்டி எடுக்க வேண்டுமல்லவா?" "முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்லிப் பொன்னன் படகின் அடியிலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் விரைவாக நடந்து அந்த அடர்ந்த மாந்தோப்புக்குள்ளே போனார்கள்.
அவர்கள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் சமீபத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து குந்தவிதேவி வெளியில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நதிக் கரையில் படகு கட்டியிருந்த இடத்துக்குச் சென்றாள். இன்னும் ஒரு கள்ளப் பார்வை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, படகை மரத்தின் வேருடன் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டாள். படகு மெதுவாக நகர்ந்தது. பிறகு வேகமாய் நகர்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெள்ளப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்டு அதிவேகமாய்ச் சுழன்று செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவியின் முகத்தில் குறுநகை பூத்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்தேழு


புதையல்

கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான். அந்த அடிக்கிளையின் பட்டையில் சிறு கத்தியினால் ஓர் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால் அது ஒரு புலியின் உருவம் என்று தெரிந்து கொள்ளலாம். பொன்னன் அதைப் பார்த்துவிட்டு நின்றான். அந்தப் புலி உருவத்துக்கடியில் தரையில் கிடந்த மாஞ் சருகுகளையெல்லாம் ஒதுக்கினான். பிறகு அங்கே தரையைத் தோண்டத் தொடங்கினான். விக்கிரமன் பரபரப்புடன் தானும் மண்வெட்டியை எடுத்த போது பொன்னன் கைமறித்து, "மகாராஜா! தங்களுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை. இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்வதற்கு இருக்கின்றன. சற்றும் நேரம் மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்" என்றான்.
அவ்விதமே விக்கிரமன் மரத்தடிக்குச் சென்று வேரின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்தன. குழந்தைப் பருவத்தில் இந்த வஸந்தத் தீவில் எவ்வளவு ஆனந்தமாக நாட்கள் கழிந்தன! இதே இடத்தில் ஒரு அன்னியப் பெண்ணின் தயவில் தங்கவேண்டிய காலமும் வந்ததல்லவா? - நல்ல வேளை, இன்றோடு அந்த அவமானம் தீர்ந்துவிடும். பெட்டியை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பிவிட வேண்டியதுதான்.... இனிமேல் ஒரு விநாடி நேரமும் இங்கே தங்கக்கூடாது... செண்பத் தீவிலிருந்தபோது இந்தத் தாய் நாட்டைப் பார்க்க வேணுமென்று தனக்கு ஏற்பட்டிருந்த ஆவலையும், இப்போது இங்கிருந்து கிளம்பினால் போதுமென்று இருப்பதையும் நினைத்தபோது விக்கிரமனுக்குச் சிரிப்பு வந்தது. "இங்கே எதற்காக வந்தோம்? என்ன பைத்தியகாரத்தனம்?" என்று தோன்றியது. பார்த்திப மகாராஜா சுதந்திரமாக ஆண்ட அந்தச் சோழ நாடு அல்ல இது. பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் மிதிபட்டுக் கிடக்கும் நாடு. தேசத் துரோகியும் குலத்துரோகியும் கோழையுமான மாரப்ப பூபதியைச் சேனாதிபதியாகப் பெற்றிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாட்டின் மண்ணை உதறிவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் போகிறோமோ, அவ்வளவுக்கு நல்லது!
"நாடு என்ன செய்யும்? - மனுஷ்யர்கள் கேடுகெட்டுப் போயிருந்தால்?" என்ற எண்ணம் தோன்றியதும் விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்புவதற்கு முன் தன்னைச் சித்திர மண்டபத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் அவருடைய கனவுச் சித்திரங்களையெல்லாம் காட்டியதை நினைத்துக் கொண்டான். அந்தக் கனவு நிறைவேறப் போகிறதா? இல்லை கனவாகத்தான் போய்விடுமோ? இங்கே எல்லாரும் பல்லவ சக்கரவர்த்தியின் புகழிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். நேற்றுத்தான் காஞ்சியிலிருந்து ஒரு ஆள் வந்தான். சீன தேசத்திலிருந்து வந்த ஒரு தூதனுக்குக் காஞ்சியில் நடந்த வரவேற்பு வைபவங்களைப் பற்றியெல்லாம் அவன் வர்ணித்தான். விக்கிரமன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்கக் கேட்க அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தச் சீன தேசத்துத் தூதன் தான் போகுமிடங்களிலெல்லாம் பல்லவ சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போவான். சீன தேசத்திலும் போய்ச் சொல்வான். சோழ நாட்டைப் பற்றியோ, சோழ நாட்டின் சுதந்திரத்துக்காக வீரப்போர் புரிந்து மரணமடைந்த பார்த்திப மகாராஜாவின் பெயரையோ யார் கேட்கப் போகிறார்கள்?
"மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டு எழுந்தான். குழியில் நின்ற பொன்னன் குனிந்தான். அவன் மறுபடி நிமிர்ந்தபோது அவனுடைய கைகளில் கெட்டியான தோலினால் சுற்றப்பட்ட பெட்டி இருந்தது. பொன்னன் அந்தத் தோலை எடுத்தெறிந்தான். பழைய ஆயுதப் பெட்டி - சித்திர வேலைப் பாடமைந்த பெட்டி காணப்பட்டது. விக்கிரமன் விரைந்து சென்று கையை நீட்டி அந்தப் பெட்டியை ஆவலுடன் வாங்கித் திறந்தான். உள்ளே சிறிதும் மலினமடையாமலிருந்த ஓலைச் சுவடியைக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு பட்டாக்கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டான். பொன்னனைப் பார்த்துச் சொன்னான்: "பொன்னா! சற்று முன்னால் என் மனத்தில் தகாத கோழை எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. இந்தச் சோழ நாட்டின் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. "இந்த நாட்டுக்கு விமோசனம் ஏது? எப்போதும் பல்லவர்களின் கீழ் அடிமைப்பட்டிருக்க வேண்டியதுதான்!" என்று எண்ணினேன். எதற்காக இவ்வளவு அபாயங்களுக்குத் துணிந்து, இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்தோம் என்று நினைத்தேன் - அந்த மயக்கம், மாயை எல்லாம் இந்தக் கத்தியைக் கண்டவுடன் மாயமாய்ப்போய் விட்டது.
பொன்னா! இந்தக் கத்தி ஒரு காலத்தில் உலகை ஆண்டது. கரிகாலச் சோழரும் நெடுமுடிக் கிள்ளியும் இந்தக் கத்தியினால் கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களையெல்லாம் வென்று சோழ மகாராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். கரிகாலச் சக்கரவர்த்தியின் காலத்தில் செண்பகத் தீவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள் தான் அந்தத் தீவில் இன்று வசிக்கிறார்கள். அத்தகைய மகாவீர புருஷர்களுடைய சந்ததியில் பிறந்தவன் நான். அவர்கள் கையில் பிடித்த வீரவாள் இது. அவர்களால் முடிந்த காரியம் என்னால் ஏன் முடியாது? பொன்னா! இந்தக் கத்தியுடனே என் தந்தை எனக்கு அளித்த இந்தத் தமிழ்மறை என்ன சொல்கிறது? 'முயற்சி திருவினையாக்கும்!' ஆகா? அந்தப் புனித வாக்கைக்கூட அல்லவா மறந்துவிட்டேன்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது என்னவோ நேர்ந்துவிட்டது. இங்கே அடிக்கும் காற்றே மனச்சோர்வு தருகிறது. இங்கே இனி ஒரு கணங்கூட நிற்கமாட்டேன். வா, போகலாம்!"
இவ்விதம் விக்கிரமன் பேசிக் கொண்டிருந்தபோது பொன்னன் அவனுடைய முகத்தைப் பார்த்தவண்ணமே பிரமித்து நின்றான். அப்போது விக்கிரமனுடைய முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த வீரதேஜஸ் அவ்விதம் அவனைப் பிரமிக்கச் செய்தது. பிறகு சட்டென்று அந்தப் பிரமையிலிருந்து நீங்கினவனாய், மளமளவென்று மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். அந்த இடத்தின் மேல் மாஞ் சருகுகளைப் பரப்பிய பிறகு இருவரும் காவேரியை நோக்கி விரைந்து சென்றார்கள். நதிக்கரையையடைந்து படகு கட்டியிருந்த இடத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் பகீர் என்றது. "இதென்ன, பொன்னா! படகு! எங்கே?" என்றான் விக்கிரமன். "ஒருவேளை இடம்மாறி வந்து விட்டோ மோ?" என்று பொன்னன் திகைப்புடன் கூறி அங்குமிங்கும் நோக்கினான். ஆனால், வேரில் கட்டிய கயிறு இருப்பதைப் பார்த்ததும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போயிற்று. கயிற்றின் முடிச்சு எப்படியோ அவிழ்ந்து படகு ஆற்றோடு போயிருக்க வேண்டுமென்றுதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. "பொன்னா! என்ன யோசிக்கிறாய்? நீந்திப் போய் விடலாமா?" என்றான் விக்கிரமன். "கொஞ்சம் பொறுங்கள், மகாராஜா! கரையோடு ஓடிப்போய் எங்கேயாவது படகு தங்கியிருக்கிறதா என்று இதோ பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் பொன்னன் நதிக்கரையோடு ஓடினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்தெட்டு


குந்தவியின் நிபந்தனை

பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள். "சோழநாட்டாரின் யோக்கியதை நன்றாய்த் தெரிந்து போய்விட்டது. இப்படித்தான் சொல்லிக் கொள்ளாமல் கூட ஓடிப் போகப் பார்ப்பார்களா?" என்றாள் குந்தவி. விக்கிரமன் மறுமொழி சொல்லாமல் சும்மா இருந்தான்." "வள்ளுவர் பெருமான், 'முயற்சி திருவினையாக்கும்' என்று மட்டுந்தானா சொல்லியிருக்கிறார்? 'நன்றி மறப்பது நன்றன்று' என்று சொல்லியிருப்பதாக எனக்குக் கேள்வியாயிற்றே?" என்று குந்தவி சொன்னபோது, விக்கிரமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. "உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ...." என்று மேலே பேசத் திணறினான். "ஆமாம்; நீங்கள் குழி தோண்டிப் புதையல் எடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லாம் கேட்டுக் கொண்டுமிருந்தேன்." "உண்மையாகவா?" "ஆமாம்; உங்கள் பொய் வேஷத்தையும் தெரிந்து கொண்டேன்."
விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியானால் நான் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போக நினைத்ததில் என்ன ஆச்சரியம்? தேசப் பிரஷ்டன் - மரண தண்டனைக்குத் துணிந்து தாய் நாட்டுக்கு வந்தவன் - சொல்லாமல் திரும்பி ஓடப் பார்ப்பது இயல்பல்லவா?" என்றான். "உயிர் இழப்பதற்குப் பயந்துதானே?" "ஆமாம்; இந்த உயிர் இன்னும் கொஞ்சகாலத்துக்கு எனக்குத் தேவையாயிருக்கிறது. என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், இந்தத் தாய்த் திருநாட்டுக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்வதற்கும் இந்த உயிர் வேண்டியிருக்கிறது...." "ஆனால் உங்களுடைய உயிர் இப்போது உங்களுடையதல்லவே? மகேந்திர மண்டபத்தில் அந்தப் பழைய உயிர் போய்விட்டது. இப்போது இருப்பது நான் கொடுத்த உயிர் அல்லவா? இது எனக்கல்லவா சொந்தம்?" என்றாள் குந்தவி. விக்கிரமன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு குந்தவியை உருக்கத்துடன் நோக்கி, "நீ சொல்லியது ஒரு விதத்தில் அல்ல; பல விதத்திலும் உண்மை. இந்த உயிர் உன்னுடையதுதான். மகேந்திர மண்டபத்தில் நீ என்னைப் பார்த்துக் காப்பாற்றியதனால் மட்டும் அல்ல; மூன்று வருஷத்துக்கு முன்பு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உன்னைப் பார்த்தபோதே என் உயிரை உன்னுடைய தாக்கிக் கொண்டாய்...." என்றான். "ஆ! இது உண்மையா?" என்றாள் குந்தவி. "ஆமாம். ஆகையினால் உன்னுடைய உயிரையே தான் நீ காப்பாற்றிக் கொண்டாய்...."
"இது உண்மையானால், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடப் பார்த்தீர்களே, அது எப்படி? என்ன நியாயத்தில் சேர்ந்தது?" என்று குந்தவி கடுமையான குரலில் கேட்டாள். "அது தவறுதான். ஆனால், காரணம் உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டால் பிரிய மனம் வராது என்ற பயந்தான் காரணம். நீ விடை கொடுக்காவிட்டால் போக முடியாதே என்ற எண்ணந்தான் காரணம்..." "என்னைப்பற்றி அவ்வளவு கேவலமாக ஏன் எண்ணினீர்கள்? நீங்கள் போவதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்களுடைய கடமையைச் செய்வதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?" "நான் எண்ணியது பிசகு என்று இப்போது தெரிகிறது. உன்னிடம் நான் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். சொல்லி உன்னுடைய உதவியைக் கோரியிருக்க வேண்டும். மறைக்க முயன்றது பிசகுதான்." "போனது போகட்டும்; இனிமேல் நடக்க வேண்டியதைப் பேசுவோம். உங்கள் படகோட்டி திரும்பிவரும் வரையில் இங்கே உட்காரலாம்" என்றாள் குந்தவி.
படகோட்டி என்றதும் விக்கிரமன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. குந்தவியைச் சிறிது வியப்புடன் நோக்கினான். "இங்கே கட்டியிருந்த படகு எங்கேயென்று தெரியுமா?" என்று கேட்டான். "தெரியும்; ஆற்றோடு போய்விட்டது. படகோட்டிக்கு வீண் அலைச்சல்தான்." "எப்படிப் போயிற்று? ஒரு வேளை நீ...." "ஆம்; நான்தான் படகின் முடிச்சை அவிழ்த்து விட்டேன். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போக நினைத்ததற்குத் தண்டனை!" விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அது தான் முன்னமே சொன்னேனே. உன்னிடம் சொல்லிக் கொண்டால், பிரிந்து போக மனம் வருமோ, என்னவோ என்று பயந்தேன்" என்றான். "அம்மாதிரியெல்லாம் பயந்து கொண்டிருந்தால் உங்கள் மூதாதையான கரிகாலசோழர் தீவாந்திரங்களையெல்லாம் வென்றிருக்க முடியுமா?" என்று குந்தவி கேட்டாள். "முடியாது. ஆகையால்தான் இப்போது தைரியமாக உன்னிடம் விடை கேட்கிறேன், உதவியும் கேட்கிறேன். இந்த நதியைத் தாண்டுவதற்குப் படகும், அப்பால் மாமல்லபுரம் போவதற்குக் குதிரையும் கொடுத்து உதவ வேண்டும்." "கொடுக்கிறேன். ஒரு நிபந்தனை இருக்கிறது." "நிபந்தனையா?" "ஆமாம் கண்டிப்பான நிபந்தனை. போன தடவையைப் போல் என்னைக் கரையில் நிறுத்திவிட்டு நீங்கள் கப்பலில் போய்விடக் கூடாது. நீங்கள் போகும் கப்பலில் என்னையும் அழைத்துப் போக வேண்டும்."
விக்கிரமனுக்கு அளவில்லாத திகைப்பு உண்டாயிற்று. குந்தவியின் மெல்லிய கரத்தைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில், "தேவி! என்ன சொன்னாய்? என் காதில் விழுந்தது உண்மையா? அவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு நான் என்ன செய்து விட்டேன்! உலகமெல்லாம் புகழ் பரவிய மகாபல்லவச் சக்கரவர்த்தியின் ஏக புதல்வியாகிய நீ இந்த தேசப்பிரஷ்டனுடன் கூடக் கடல்கடந்து வருவாயா!" என்றான். குந்தவி காவேரியின் பிரவாகத்தை நோக்கிய வண்ணம், "உங்களுக்கென்ன இவ்வளவு சந்தேகம். பெண் குலத்தைப் பற்றி நீங்கள் இழிவாக நினைக்கிறீர்கள்; அதனாலே தான் சந்தேகப்படுகிறீர்கள்" என்றாள்.
"இல்லவே இல்லை. அருள்மொழியைத் தாயாகப் பெற்ற நான் பெண் குலத்தைப் பற்றி ஒரு நாளும் இழிவாக நினைக்கமாட்டேன். ஆனால் நீ என்னுடன் வருவது எப்படிச் சாத்தியம்? உன் தந்தை.. சக்கரவர்த்தி..சம்மதிப்பாரா?" "என் தந்தை நான் கேட்டது எதையும் இதுவரை மறுத்ததில்லை. இப்போதும் மறுக்கமாட்டார்..." அப்போது, "மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அந்தக் குரல் பொன்னனுடையதுதான். அவர்கள் உலகை மறந்து பேசிக் கொண்டிருந்த சமயம் பொன்னன் மெதுவாகப் பின்புறமாக வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தான். கடைசியாக, அவர்கள் பேசிய வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன. விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "எப்பொழுது வந்தாய், பொன்னா! படகு அகப்படவில்லையே? இந்தத் தேவிதான் படகை அவிழ்த்து விட்டு விட்டாராம். நமக்கு வேறு படகு தருவதாகச் சொல்கிறார்" என்றான். "காதில் விழுந்தது, மகாராஜா! ஆனால், இவ்வளவு தொல்லையெல்லாம் என்னத்திற்கு என்று தான் தெரியவில்லை. தேவி சொல்வதை ஒரு நாளும் சக்கரவர்த்தி தட்டமாட்டார். தங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி..."
குந்தவி வீராவேசத்துடன் எழுந்து பொன்னனுக்கு எதிராக நின்றாள் "என்ன சொன்னாய், படகோட்டி! உங்கள் மகாராஜாவை மன்னித்துக் காப்பாற்றும்படி சக்கரவர்த்தியிடம் நான் சொல்லவேண்டுமா? ஒரு தடவை அந்தத் தவறு நான் செய்தேன்; இனிமேல் செய்யமாட்டேன். இவர் தமது கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் ஒரு சாண் பூமியை வென்று ராஜாவானால் அந்த சாண் பூமிக்கு நான் ராணியாயிருப்பேன். இவர் உன்னைப்போல படகோட்டிப் பிழைத்து ஒரு குடிசையில் என்னை வைத்தால், உன் மனைவி வள்ளியைப்போல் நானும் அந்தக் குடிசையில் ராணியாயிருப்பேன். இவரை மன்னிக்கும்படியோ, இவருக்குச் சோழ ராஜ்யத்தைக் கொடுக்கும்படியோ சக்கரவர்த்தியை ஒருநாளும் கேட்கமாட்டேன். எனக்காக நான் என் தந்தையிடம் பிச்சை கேட்பேன். ஆனால் இவருக்காக எதுவும் கேட்டு இவருடைய வீரத்துக்கு மாசு உண்டாக்க மாட்டேன்!" என்றாள். பொன்னன், "தேவி" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அவனைப் பேசவிடாமல், குந்தவி மீண்டும் "ஆம் இன்றைய தினம் இவருடைய வேஷம் வெளிப்பட்டு, இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டாலும் நான் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டேன்.
தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் என்னை இவருக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று மட்டும் வரம் கேட்பேன்!" என்றாள். "தேவி; தாங்கள் அவ்விதம் வரம் கேட்க வேண்டி வருமென்றே தோன்றுகிறது. அதோ பாருங்கள்! படகுகளில் வீரர்கள் வருவதை" என்றான் பொன்னன். விக்கிரமனும் குந்தவியும் துணுக்கமடைந்தவர்களாகப் பொன்னன் கை காட்டிய திசையை நோக்கினார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து நாலு படகுகள் வந்து கொண்டிருந்தன. வஸந்தத் தீவில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள் இத்தனை நேரமும் அப்படகுகளை மறைத்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் அவை ஒரு முடுக்கத்தில் திரும்பி அவர்களுடைய கண்ணுக்குத் தெரிந்தன. படகுகளில் பொன்னன் சொன்னபடியே வேல்தாங்கிய வீரர்கள் கும்பலாயிருந்தார்கள். படகுகள் கணத்துக்குக் கணம் கரையை நெருங்கி வந்து கொண்டிருந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் இருபத்தொன்பது


சக்கரவர்த்தி கட்டளை

நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! எடு வாளை!" என்று கூவினான். பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். விக்கிரமனுடைய குரல் கேட்டதும், அவன் விரைந்து விக்கிரமன் அருகில் வந்து, "மகாராஜா! எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்" என்றான். "வரங்கேட்க நல்ல சமயம் பார்த்தாய், பொன்னா! சீக்கிரம் கேட்டுவிடு. ஆனால், என்னிடம் என்ன இருக்கிறது நீ கேட்பதற்கு?" என்று சிறிது வியப்புடன் கூறினான் விக்கிரமன். "மகாராஜா! மாரப்பபூபதியின் ஆட்களுடன் தாங்கள் சண்டையிடக்கூடாது. அவர்கள் ரொம்பப் பேர், நாமோ இரண்டு பேர்தான்..." "பொன்னா! நீதானா இப்படிப் பேசுகிறாய்? உனக்கும் சோழ நாட்டு வீர வாசனை அடித்துவிட்டதா?" என்றான் விக்கிரமன். "இல்லை, மகாராஜா! என் உயிருக்கு நான் பயப்படவில்லை. இந்த அற்ப உயிரை எந்த விநாடியும் விட்டுவிடச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் வேறு காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்போது சண்டையிட்டால் எல்லாம் கெட்டுப் போய்விடும். மகாராஜா! தங்களுடைய அன்னை அருள்மொழித் தேவியைப் பார்க்க வேண்டாமா? இன்னொரு முக்கிய விஷயம். தங்களுடைய மூதாதைகளின் வீரவாளைக் கொண்டு முதன் முதலில் உங்களுடைய சொந்தக் குடிகளையா கொல்லுவீர்கள்?" என்று பொன்னன் கேட்டபோது, விக்கிரமனுடைய முகம் வாடியது.
"சரி பொன்னா! போதும், இனிமேல் ஒன்றும் சொல்ல வேண்டாம். நான் வாளைத் தொடவில்லை" என்றான். பிறகு குந்தவியைப் பார்த்து, "தேவி! இந்தப் பெட்டியைப் பத்திரமாய் வைத்திருக்க வேண்டும். மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் கொடுக்க வேண்டும்" என்றான். ஆனால் குந்தவியின் செவிகளில் அவன் கூறியது விழுந்ததோ, என்னமோ தெரியாது. அவளுடைய முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. ஆவேசம் வந்தவள் போல் நெருங்கி வந்த படகுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். படகுகள் கரையை அடைந்தன. மாரப்ப பூபதி முதலில் படகிலிருந்து குதித்தான். மரியாதையாகக் குந்தவி தேவியை அணுகி, "பெருமாட்டி! தங்கள் அனுமதியில்லாமல் இங்கே வந்ததற்காக மன்னிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக வந்தேன்" என்றான். குந்தவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "எந்தச் சக்கரவர்த்தி? என்ன கட்டளை?" என்றாள். "தங்களுடைய சகோதரர் மகேந்திர பல்லவரின் கட்டளைதான். செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் ஒற்றனைக் கைப்பற்றி ஜாக்கிரதையாகக் காஞ்சிக்கு அனுப்பும்படிக் கட்டளை இதோ பாருங்கள்!" என்று மாரப்பன் ஓர் ஓலையை நீட்டினான். அதில் மகேந்திரனின் முத்திரையுடன் மேற்கண்ட விதமான கட்டளை எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் குந்தவி, "செண்பகத்தீவின் ஒற்றன் யார்?" என்று கேட்டாள். "இதோ நிற்கிறானே, இவன் தான், தேவி!" "இல்லை; இவர் ஒற்றன் இல்லை. நீர் திரும்பிப் போகலாம்."
"தேவி! இவன் ஒற்றன் இல்லாவிட்டால் வேறு யார்? மனமுவந்து சொல்லவேண்டும்!" என்று மாரப்பன் கள்ள வணக்க ஒடுக்கத்துடன் கூறினான். "பூபதி! யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறாய்? உன்னை மறந்து விட்டாயா?" என்று கண்களில் கனல் பொறி பறக்கக் குந்தவி கேட்டாள். "இல்லை; என்னை நான் மறக்கவில்லை. எனக்கு அவ்வளவாக ஞாபக மறதி மட்டும் கிடையாது. இதோ இவனுடைய முகம்கூடப் பார்த்த முகமாக என் ஞாபகத்தில் இருக்கிறது. ஆம்; இதோ ஞாபகம் வந்துவிட்டது. தேவி! இவன், மகா மேன்மை பொருந்திய தர்ம ராஜாதிராஜ நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியினால் தேசப்பிரஷ்ட தண்டனைக்குள்ளானவன் என்பதாய் ஞாபகம் வருகிறது. இவன் ஒற்றன். இல்லையென்றால், தேசப்பிரஷ்டன்! தேசப்பிரஷ்டமானவன் திரும்பி வந்தால் என்ன தண்டனையென்று தங்களுக்கே தெரியும். தேவி! என் கடமையை நான் செய்ய வேண்டும். தர்ம ராஜாதி ராஜாவான பல்லவச் சக்கரவர்த்தி, தம் சொந்தப் புதல்வியின் வார்த்தைக்காகக்கூட நான் என் கடமையில் தவறுவதை ஒப்புக் கொள்ளமாட்டார்" என்றான். குந்தவியின் உடம்பெல்லாம் நடுங்கிற்று; அவளுடைய மார்பு விம்மிற்று.
"சேனாதிபதி! இவர் என் விருந்தினர், இவருக்கு நான் பாதுகாப்பு அளித்திருக்கிறேன். இவருக்கு ஏதாவது நேர்ந்தால்...." என்று கூறி, விக்கிரமனை மறைத்துக் கொள்பவள் போல் அவன் முன்னால் வந்து நின்றாள். மாரப்பன் கலகலவென்று சிரித்தான். "ஆகா! சோழ வம்சத்தின் பெருமையை விளங்க வைக்கப்போகும் வீரசிங்கம் ஒரு பெண்ணின் முந்தானையில் ஒளிந்து கொள்கிறான்!" என்று கூறி மீண்டும் சிரித்தான். நாணத்தினாலும் கோபத்தினாலும் விக்கிரமனுடைய கண்கள் சிவந்தன. அவன் நாலு எட்டாக நடந்து குந்தவிக்கு முன்னால் வந்து நின்று மாரப்பனைப் பார்த்து, "சித்தப்பா! இதோ நான் வரச் சித்தமாயிருக்கிறேன். அழைத்துப் போங்கள்!" என்றான். மாரப்பன் கேலிச் சிரிப்புடனே குந்தவியைப் பார்த்து, "ஏழைமேல் ஏன் இவ்வளவு கோபம்? இவனைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டுமென்றால், தங்கள் தந்தையையோ தமையனாரையோ வேண்டிக் கொண்டால் போகிறது. சக்கரவர்த்தி கருணையுள்ளவர், இவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கப்பமும் செலுத்த ஒப்புக் கொண்டால் கட்டாயம் மன்னித்து விடுவார்" என்றான். இந்த வார்த்தைகள் தான் எதிர்பார்த்தது போலவே விக்கிரமன், குந்தவி இருவருடைய முகங்களிலும் வேதனை உண்டாக்கியதை அறிந்த மாரப்பனுக்குக் குதூகலம் உண்டாயிற்று. விக்கிரமன் உடனே விரைவாகச் சென்று படகில் ஏறிக் கொண்டான்.
குந்தவி விக்கிரமனை மிகுந்த ஆவலுடன் நோக்கினான். தன்னை அவன் திரும்பிப் பார்ப்பானென்றும், தன் கண்களினால் அவனுக்குத் தைரியம் கூறலாமென்றும் அவள் எண்ணியிருக்கலாம். ஆனால் விக்கிரமன் திரும்பிப் பார்க்கவேயில்லை. மாரப்பன் இந்த நாடகத்தைச் சிறிது கவனித்து விட்டுப் பிறகு பொன்னன்மீது தன் பார்வையைச் செலுத்தினான். "அடே படகோட்டி! நீயும் வா; ஏறு படகில்" என்றான். "அவன் ஏன் வரவேண்டும்? பொன்னனைப் பிடிப்பதற்கும் கட்டளையிருக்கிறதா?" என்று குந்தவி கேட்டு மாரப்பனைக் கண்களால் எரித்து விடுபவள் போல் பார்த்தாள். மாரப்பன் அந்தப் பார்வையைச் சகிக்க முடியாமல், "கட்டளையில்லை தேவி! ஆனால், இந்த ஒற்றனுக்கு தேசப் பிரஷ்டனுக்கு இவன் ஒத்தாசை செய்திருகிறான்..." என்றான். "பொன்னன் என்னுடைய ஆள்; எனக்குப் படகோட்ட வந்திருக்கிறான். அவனைக் கொண்டு போக உனக்கு அதிகாரமில்லை, ஜாக்கிரதை!" என்றாள் குந்தவி. மாரப்பன் அவளுடைய தொனியைக் கேட்டுத் தயங்கினான். குந்தவி மறுபடியும், "தேசப் பிரஷ்டனுக்கு உதவி செய்ததற்காகப் பிடிப்பதென்றால், என்னை முதலில் பிடிக்க வேண்டும்!" என்றாள். "ஆம்; தேவி! சக்கரவர்த்தியின் கட்டளை வந்தால் அதுவும் செய்வேன்" என்றான் மாரப்பன். பிறகு அவன் படகோட்டிகளைப் பார்த்து, "விடுங்கள்" என்றான். படகுகள் உறையூரை நோக்கி விரைந்து சென்றன
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் முப்பது


நள்ளிரவில்

படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, "படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். "உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்து இரகசியமாக மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். அவரை இந்த அமாவாசையன்று செண்பகத் தீவு செல்லும் கப்பலில் ஏற்றிய பிறகுதான் நமக்கு நிம்மதி" என்றாள் குந்தவி. பொன்னன் வியப்புடன், "தேவி! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!" என்றான். "உங்கள் மகாராஜா இங்கே ஜுரம் அடித்துக் கிடந்தாரல்லவா, பொன்னா? அப்போது அவர் தம்மை அறியாமல் கூறிய மொழிகளிலிருந்து அவர் யார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு அமாவாசையன்றும் அவருக்காகச் செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து காத்திருக்கும். அடுத்த அமாவாசை வருவதற்குள்ளே அவரைத் தப்புவித்து இரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும்!" என்றாள் குந்தவி.
"அம்மணி! கோபித்துக் கொள்ளக்கூடாது. எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை, எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தங்கள் தகப்பனாருக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதாதா?" என்றான் பொன்னன். "என் தகப்பனாரை நீ சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை. பொன்னா! ஆனால் மாரப்பன் தெரிந்து கொண்டிருக்கிறான். அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்; நீதி என்றால் நீதிதான். சக்கரவர்த்திக்குத் தெரிவதற்கு முன்னால், உங்கள் மகாராஜா கப்பலில் ஏறினால்தான் தப்பலாம். நல்ல வேளையாக, என் தந்தை இப்போது காஞ்சியில் இல்லை. ஏதோ காரியமாய் மாறு வேஷத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நமக்குச் சமயம்...." இவ்விதம் குந்தவி கூறிவந்ததைக் கேட்டபோது பொன்னனுக்கு ஒரு நிமிஷம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் தான் சிவனடியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் அவர் என்ன முக்கிய நோக்கத்துடன் இம்மாதிரி இரகசியமாய்க் காரியங்கள் செய்து வருகிறாரோ, தெரியாது. அந்த நோக்கத்துக்குத் தன்னால் பங்கம் விளையக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, குந்தவியின் மொழிகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தான். கடைசியில், "தேவி! விக்கிரம மகாராஜாவின் க்ஷேமம் ஒன்றைத் தவிர எனக்கு உலகில் வேறு ஒன்றும் பொருட்டில்லை. தங்கள் கட்டளைப்படி எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான். "சந்தோஷம். நான் மாளிகைக்குப் போகிறேன். நீ முதலில் போய் வள்ளியை இங்கே அழைத்து வா!" என்றாள் குந்தவி.
குந்தவியின் கட்டளையின் பேரில் கிடைத்த படகை எடுத்துக் கொண்டு பொன்னன் அக்கரைக்குச் சென்றான். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. பொன்னனுடைய கைகள் படகைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனுடைய உள்ளம் அலைந்து கொண்டிருந்தது. உறையூர் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தவேண்டிய விக்கிரம மகாராஜா இன்று இரவு அதே உறையூரில் சிறையில் படுத்திருப்பார் என்பதை எண்ணியபோது அவனுடைய நெஞ்சு புண்ணாயிற்று. அன்றிரவே உறையூருக்குப் போய் ஊர் ஜனங்களிடமெல்லாம், "உங்கள் மகாராஜா சிறையில் இருக்கிறார்!" என்ற செய்தியைப் பரப்பி ஒரு பெரிய கலகத்தை உண்டு பண்ணலாமா என்று பொன்னன் நினைத்தான். பிறகு, அது நடக்காத காரியம் என்று அவனுக்கே தோன்றியது. சோழ நாட்டு மக்கள் இப்போது வீரமிழந்த கோழைகளாகப் போய்விட்டார்கள். அயல் மன்னனின் ஆதிபத்தியத்தை ஒப்புக் கொண்டு வாழ்கிறார்கள். மாரப்பனைப் போல் பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளைகளை அடிபணிந்து நிறைவேற்றவும் காத்திருக்கிறார்கள்.
தன்னுடைய நிலைமையும் அதுதானோ என்ற எண்ணம் பொன்னனுக்குத் தோன்றியபோது அவனுடைய உடம்பு வெட்கத்தினால் குறுகியது. சிவனடியாரின் வேஷத்தையும் அவருடைய பேச்சையும் முழுவதும் நம்பலாமா? அவர் கூறியதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை தானே ஏமாந்து போயிருக்கலாமல்லவா.... விக்கிரம மகாராஜாவிடம் உண்மையான அன்பு கொண்டு அவரைக் காப்பாற்றக் கவலை கொண்டிருப்பவர் குந்தவி தேவி என்பதில் சந்தேகமில்லை. யமன் வாயிலிருந்தே அவரை மீட்டு வரவில்லையா? - இவ்விதம் பலவாறாக யோசித்துக் கடைசியில் பொன்னன் குந்தவிதேவியின் விருப்பத்தின்படிக் காரியம் செய்வதென்று உறுதி செய்து கொண்டான். படகு அக்கரையை அடைந்ததும் பொன்னன் தன் குடிசையை அடைந்து கதவு சாத்தித் தாளிட்டிருப்பதைப் பார்த்து அதிசயத்துக் கதவைத் தட்டினான். "யார் அது?" என்று வள்ளியின் அதட்டுங் குரல் கேட்டது. பொன்னனின் குரலைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவள் கதவைத் திறந்தாள். 'கதவை அடைப்பானேன்?' என்று கேட்டபோது அவள் கூறிய விவரம் பொன்னனுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் உண்டாக்கிற்று.
பொன்னன் வருவதற்குச் சற்று முன்னால், இருட்டுகிற சமயத்தில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டு வள்ளி குடிசைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். பேச்சுக் குரல் குடிசையின் பக்கம் நெருங்கி வந்தது. ஒரு பயங்கரமான பேய்க்குரல், "நீ இங்கேயே இருந்து பூபதியை அழைத்துக் கொண்டு வா! நான் கோயிலுக்குப் போகிறேன்" என்றது. இன்னொரு குரல், "மகாப் பிரபோ! இந்தக் குடிசையில் தங்கியிருக்கலாமே!" என்றது. "நீ இருந்து அழைத்து வா!" என்று முதலில் பேசிய பயங்கரக் குரல் கூறிற்று. சற்றுப் பொறுத்து வள்ளி மெதுவாகத் திறந்து பார்த்த போது தூரத்தில் இருவர் போவது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அவர்களில் ஒருவன் நெட்டையாக வளர்ந்தவன்; அவனுக்கு ஒரு கை இல்லை என்பதைக் கண்டதும் நெஞ்சுத் துணிவுள்ள வள்ளிகூடப் பயந்து நடுங்கிவிட்டாள். காவேரி சங்கமத்தில் சூரிய கிரகணத்தின்போது அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்ற உருவம் இதுதான் என்பது அவளுக்கு நினைவு வந்ததினால் திகில் அதிகமாயிற்று. அவனுக்குப் பக்கத்திலே போனவன் ஒரு சித்திரக்குள்ளனாகத் தோன்றினான். இந்தக் குள்ளனுக்குப் பக்கத்தில் அந்த நெட்டை உருவம் இன்னும் நெடியதாய்க் காணப்பட்டது.
நெடிய ஒற்றைக்கை மனிதன் சாலையோடு கிழக்கே போய்விட்டான். குள்ளன் சாலை ஓரத்தில் ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டான். வள்ளி மறுபடியும் கதவைச் சாத்திக் கொண்டாள். இதையெல்லாம் சொல்லிவிட்டு வள்ளி சுற்றுமுற்றும் பார்த்தாள். பொன்னனுடைய கையைச் சட்டென்று பிடித்துக் கொண்டு, "அதோ பார்" என்றாள். சாலை ஓரத்து மரத்தடியில் அந்தக் குள்ள உருவம் காணப்பட்டது. அவன் குடிசைப் பக்கம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. பொன்னன் சற்று யோசித்துவிட்டு, "வள்ளி! வா! இன்று ராத்திரி உனக்கு வேலை இருக்கிறது" என்றான். "எங்கே வரச் சொல்லுகிறாய்! உறையூருக்கா?" என்று வள்ளி கேட்டாள். "இல்லை; வஸந்தத் தீவுக்குத்தான். குந்தவி தேவி உன்னை அழைத்துவரச் சொன்னார்." "அப்படியா? இளவரசர் - மகாராஜா - சௌக்கியமா? அவர் யாரென்று தேவிக்குத் தெரியுமா?" என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள். "ரொம்ப விஷயம் இருக்கிறது. எல்லாம் படகில் சொல்கிறேன் வா!" என்றான் பொன்னன்.
இரண்டு பேரும் நதிக்கரைக்குச் சென்றார்கள். பொன்னன் வேண்டுமென்றே அதிகமாகச் சத்தப்படுத்திப் படகை அவிழ்த்து விட்டதோடு, சலசலவென்று சப்திக்கும்படியாகக் கோலைப் போட்டு படகைத் தள்ளினான். படகு போவதை அந்தக் குள்ள உருவம் கவனிக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டான். நடுநிசிக்கு ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் பொன்னன் மறுபடியும் படகைத் தள்ளிக்கொண்டு காவேரியின் தென்கரைக்கு வந்தான். இப்போது அவன் தோணித் துறைக்குப் படகைக் கொண்டு வராமல் கொஞ்சம் கிழக்கே கொண்டு போய்ச் சத்தம் செய்யாமல் நிறுத்திவிட்டுக் கரையேறினான். சாலையோரத்தில் தான் முன் பார்த்த இடத்திலேயே குள்ளன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். குடிசைச் சுவரின் பக்கத்தில் தானும் உட்கார்ந்து உறையூர்ச் சாலையைக் கவனிக்கலானான். ஏதோ முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறதை எதிர்பார்த்து அவனுடைய உள்ளம் பெரிதும் பரபரப்பை அடைந்திருந்தது. 'டக் டக்' 'டக்டக்' என்ற குதிரைக் குளம்பின் சத்தத்தைக் கேட்டுப் பொன்னன் விழிப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆம், உறையூர்ப் பக்கத்திலிருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் குதிரை அருகில் வந்துவிட்டது. அதன்மேல் அமர்ந்திருப்பது சாக்ஷாத் மாரப்ப பூபதிதான் என்று நட்சத்திர வெளிச்சத்தில் பொன்னன் தெரிந்து கொண்டான். நடுச் சாலையில் நின்ற குள்ளனருகில் வந்து குதிரையும் நின்றது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top