பாகவத புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
இப்புராணம் பற்றி….

பதினெட்டுப் புராணங்களில் ஐந்தாவதாக உள்ள பாகவத புராணம் வைணவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியா முழுவதும் தனித் தனியாகவும், கூட்டமாகவும் இப்புராணத்தைப் படிக்கின்றனர். கிருஷ்ணன் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இப்புராணம். இப்புராணத்தின் தலையாய சிறப்பு, பக்திக்கு முதலிடம் கொடுப்பதுதான்.

வேதவியாசர் பாரதத்தையும், ஏனைய புராணங்களையும் எழுதிய பிறகுக.ட மனத்தில் அமைதி யில்லாமல் இருந்தார் என்றும், இப்புராணத்தை எழுதிய பிறகே மனநிறைவு பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. வேறு புராணங்களில் காணப்படாத அளவுக்கு பக்திக்கு பாகவத புராணம் இடம் கொடுத்திருக்கின்ற காரணத்தால், பரத கண்டத்திலேயே மிகப் பழங்காலத் திலேயே பக்திக்கு முதலிடம் கொடுத்து வளர்த்த பெருமை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு சொல்ல ஒரு முக்கியமான காரணம் உண்டு. பாகவத புராணத்தின் முதல் அத்தியாயத்தின் 48வது பாடல் சொல்லும் கருத்தையும், அதற்கு முன்புள்ள சில தகவல்களையும் இங்கு தருகிறேன்.

ஒருமுறை நாரதர் பிருந்தாவனம் செல்கிறார். அங்கே வயது முதிர்ந்த இரண்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பார்த்தவுடன், இவர்களை முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் நாரதருக்கு வருகிறது. அவர்களிடம் சென்று, நீங்கள் யார்? உங்களை முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன் என்று கேட்கிறார் நாரதர். மிகவும் வயது முதிர்ந்து கிழடு தட்டிய அந்த இரு பெண்களுள் ஒருத்தி நாரதரைப் பார்த்து பின்வருமாறு பேசுகிறார் நீங்கள் சொல்வது சரிதான். என் பெயர் பக்தி. இவர் பெயர் வைராக்கியம். நாங்கள் இருவரும் திராவிடத்தில் (தமிழகத்தில்) பிறந்து வளர்ந்தோம். அங்கே அழகும் இளமையும் உள்ளவர்களாக இருந்தோம். நாளாவட்டத்தில் அங்கிருந்து கர்நாடகத் தில் புகுந்தோம். அங்கே எங்கள் இளமைக் கோலம் குறையத் தொடங்கியது. பிறகு மகாராஷ்டிரம் வந்தோம். அங்கே முதுமை தொடங்கியது. பிறகு கூர் நகரத்திற்கு வந்தோம். இங்கு இளமை முழுவதும் அழிந்து அழகு கெட்டு முதுமை தட்டிய நிலையில் உள்ளோம்.

பாகவதத்தில் இந்தப் பாடல் மூலம், பக்தி தோன்றி வளர்ந்ததும், மிடுக்குடன் இளமைப் பொலிவுடன் திகழ்ந்ததும் தமிழகத்தில்தான் என்பதை இப்புராணம் ஏற்றுக் கொள்வதைக் காணலாம். அதனால் ஆராய்ச்சியாளர்கள் பாகவத புராணத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் அதிகத் தொடர்பு உண்டு என்று கருதுகின்றனர். பரம்பொருளின் வடிவாக இருந்த கிருஷ்ணனிடம் எல்லையற்ற அன்பும், பக்தியும் கொண்டு வாழ்ந்த சிறப்பை மிகுதியாகக் கூறுவதே பாகவத புராணத்தின் தனி அழகாகும். வேதங்கள் பரப்பிரம்மத்தை வடிவற்ற, உருவற்ற எதனோடும் தொடர்புபடாத தனித்துவம் உடையது என்று கூறுகின்றன. அது அனைத்தும் அறியும் பேராற்றல் என்றே அவை பேசின. வாழும் உயிர்களுக்குப் பரப்பிரம்மம் தொடர்பில்லாத தனிப் பொருளாக இருந்த நிலைமை போகத் தொடர்புடைய பொருளாகக் காணத் தொடங்கியது. பேராற்றல் வடிவமான இப் பரப்பிரம்மத்திடம் இருந்துதான் அனைத்தும் உதயமாகின்றன. உயிர்கள் இயங்குவதற் குரிய ஆற்றலும் அதனிடமிருந்தே இயங்குகிறது. இயக்கமற்ற ஜடப் பொருளிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. இந்தப் புராணத்தில், இந்தப் பேராற்றல் வாசுதேவன் என்ற பெயருடன் பேசப்படுகிறது. இந்தப் பேராற்றல் எங்கும் நிறைந்ததாய், எல்லாம் அறிந்ததாய், என்றுமுள்ளதாய்க் காட்சி அளிக்கிறது.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் தானே ஈஸ்வரன் என்றும், அண்டங்களைப் படைத்து, காத்து, அழிக்கும் தலைவன் என்றும் கூறுகிறார். தம்பால் அடைக்கலம் என்று முழு நம்பிக்கையுடன், பேரன்புடன் அணுகும் மனிதர்களின் குற்றங் குறைகளை மன்னித்து ஆட்கொள்பவன் அவனே ஆவான்.

பரப்பிரம்மம் நிர்க்குணமாய், வடிவற்றதாய் விளங்கி னாலும், ஈஸ்வரனாக இறங்கி வருகின்ற நிலையில் எல்லையற்ற ஆனந்த வடிவினனாய், அண்டத்தை இயக்கும் ஆற்றலின் இடையே தானே இயக்குகிறோம் என்ற நினைவுடன் தொழிற்படுகிறது. சாக்தர்கள் உண்மையான பாகவதம் இப்புராணம் அன்று, தேவி பாகவதமே உண்மையானது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் தேவி பகவதியின் தோற்றம், வரலாறு ஆகியவற்றைக் கூறும் காளிகா புராணமே உண்மை யான பாகவதம் என்று கருதுகின்றனர். இந்த இரு கட்சிக்காரர்கள் கூற்றுக்களை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. பாகவத புராணத்தில் தேவி பாகவதம் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. ஆதி சங்கரர் பாடிய கோவிந்தா அஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது.

பாகவத புராணம் 12 ஸ்காந்தங்களையும், 335 அத்தியாயங்களையும், 18,000 பாடல்களையும் உடையது. பாகவத புராணத்தின் 12 ஸ்காந்தங்களில் பத்தாவது ஸ்காந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு வளர்ப்பு அவனுடைய லீலைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது. பதினொன்றாவது ஸ்காந்தம் யாதவ குலத்தின் அழிவு, கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் ஆகியவற்றையும் பேசுகிறது.

பொதுவாக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்றும், அவற்றுள் ஒன்பது அவதாரங்கள் முடிந்துவிட்டன என்றும், கலியுகத்தின் கடைசியில் பத்தாவதாகிய கல்கி அவதாரம் தோன்றும் என்றும், பேசவும் எழுதவும் பட்டுள்ளன. பாகவத புராணம் ஒன்றுதான் விஷ்ணு எடுத்தவை இருபத்தி ஒன்று எனவும், இனி எடுக்கப் போவது கல்கி அவதாரம் என்றும், மீதி இரண்டு அவதாரங்களுக்கும் பெயரைக் குறிப்பிடாமல் அவை உண்டு என்றும் சொல்கிறது.

பாகவத புராணப்படி விஷ்ணு யாராலும், எக்காலத்தும் காணப்பட முடியாதவர். ஆயிரக்கணக்கான முகங்களும், கைகளும், கால்களும் உடையவர். இந்த ஆயிரக்கணக்கான முகங்களிலிருந்துதான் தேவை ஏற்படும் பொழுது குறிப்பிட்ட அவதாரங்கள் தோன்றுகின்றன.

நாம் அறிந்த பத்து அவதாரங்களை இடை இடையே சேர்த்துக் கொண்டு 22 அவதாரங்களை பாகவத புராணம் விரிவாகப் பேசுகிறது. அவை வருமாறு: எல்லா வகையிலும் பண்பட்ட ஒரு பிராமணனாகத் தோன்றியது முதல் அவதாரம். இரண்டாவது பன்றியாக உருவெடுத்துக் கடலுக்கடியில் மறைந்து போன பூமியைத் தோண்டி எடுத்து வந்து உரிய இடத்தில் வைத்த வராக அவதாரம். மூன்றாவது நாரதராகத் தோன்றியதாகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு பக்தியின் அவசியத்தை உலகிற்கு விளக்கினார். நான்காவது, நர-நாராயண அவதாரம். இவர்கள் இருவரும் மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டு உலகிற்கு வழிகாட்டினர். ஐந்தாவது கபில முனியாகத் தோன்றிய அவதாரம். கபில முனி மற்றொரு முனிவராகிய அசுரி என்ற முனிவருக்கு உபதேசம் செய்யும் வகையில் சாங்கிய தரிசனம் என்ற கொள்கையைப் பரப்பினார். (மூன்றாவது அவதாரம் பக்திப் பெருக்கையும், நான்காவது அவதாரம் புலன்களை அடக்கித் தவம் செய்வதையும், ஐந்தாவது அவதாரம் அறிவு வளர்ச்சி பெற்று அறிவின் துணை கொண்டு புதிய சிந்தனைகளை வளர்ப்பதைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன.)

ஆறாவதாக உள்ளது தத்தாத்ரேயர் அவதாரமாகும். அத்ரி முனிவருக்கும், அனுசுயைக்கும் பிள்ளையாகத் தோன்றிய தத்தாத்ரேயர் அலாகா, பிரகலாதா ஆகியோருக்கு உண்மையான பரம்பொருள் யாது என்பதை அறியும் அறிவைப் புகட்டினார். ஏழாவது அவதாரம் யக்ஞன் என்ற பெயருடன் தோன்றியதாகும். சுவயம்புமனு மன்வந்திரத்தில் ருச்சி, அருதி என்பவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த அவதாரம். முதல் மன்வந்திரத்தில் யக்ஞன், இந்திரன் எனப் பெயர் கொண்டிருந்தான்.

எட்டாவது அவதாரம் ரிஷபர் என்ற பெயருடன் நபிக்கும், மருதேவிக்கும் பிள்ளையாகத் தோன்றியதாகும். மிகப் பெரிய ஞானிகட்கும், கல்விக் கடலைக் கரை கண்டவர்க்கும் தியானம் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்கியதே ரிஷப அவதாரத்தின் நோக்கமாகும். முனிவர்களும், ரிஷிகளும் விஷ்ணு ஒர் அரசனாகப் பிறந்து பூமியைப் பயனுள்ள இடமாகச் செய்ய வேண்டும் என வேண்ட, பிருத்து என்ற மன்னனாகத் தோன்றிய அவதாரம் ஒன்பதாவது அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் வெறுந்தரையாக இருந்த பூமி தானியங்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் இடமாகப் பிருத்து மன்னன் செய்தார் என்பதும், அதனால் இந்த பூமிக்குப் பிருத்வி என்ற பெயர் வந்தது என்பதும் சொல்லப் பட்டுள்ளன.

பத்தாவது, மச்ச அவதாரம் ஆகும். சாக்கூச மன்வந்திரத்தில், வைவஸ்வத மனுவின் காலத்தில் ஜலப் பிரளயத்தால் பூமி முழுவதும் நீரில் மூழ்கி இருந்த பொழுது தோன்றியது மச்ச அவதாரம். இந்த மீன், வைவஸ்வத மனுவிடம், ஒரு பெரிய படகைக் கட்டி அதில் அவனும், ஏனைய மக்களும் ஏறிக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறி உலகைக் காத்தது. பதினொன்றாவது கூர்ம அவதாரம். தேவர்களும், ராட்சசர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுப்பதற் காக வாசுகியை நாணாகவும், மந்திரமலையை மத்தாகவும் பயன்படுத்த முயன்ற பொழுது, மத்தைத் தூக்கிப் பிடிக்க கூர்ம வடிவம் எடுத்துத் தன் முதுகின் மேல் அந்த மத்தைத் தாங்கினார். பன்னிரண்டாவது தன்வந்திரி அவதாரம். பாற் கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருள்களும் போகக் கடைசியாக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்திக் கொண்டு வெளிப்பட்டவர் தன்வந்திரி.

பதின்மூன்றாவது அழகிய பெண்ணாக (மோகினி) எடுத்த அவதாரம். பாற்கடலைக் கடையத் தாங்களும் உதவியதால் தங்களுக்கும் அமிர்தத்தில் பங்கு வேண்டும் என்று ராட்சசர்கள் முரண்டு செய்தனர். அவர்கள் எண்ணத்தைத் திசை திருப்ப விஷ்ணு அழகிய பெண் வடிவுடன் ராட்சசர்கள் பக்கம் செல்ல, அமிர்தத்தை மறந்துவிட்டு அவளைப் பார்ப்ப திலேயே அவர்கள் காலம் சென்று விட்டது. பதினான்காவது நரசிம்ம அவதாரம். இரண்யகசிபு என்பவனைக் கொல்ல சிங்கத்தின் தலையுடன், மனிதனின் உடம்புடன் தோன்றிய இந்த அவதாரம் இரண்யகசிபு மார்பைத் தன் நகத்தாலேயே பிளந்து விட்டது.

பதினைந்தாவது வாமன அவதாரம். தைத்திய மன்னனாகிய மகாபலியிடம் குள்ளனாகச் சென்று மூன்றடி மண் தானம் கேட்டு, அவன் தந்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து மூன்று உலகங்களையும் மூவடியால் அளந்த அவதாரம் ஆகும். பதினாறாவது பரசுராமர் அவதாரம், பரம்பரையாக அரசர் பணியை மேற்கொண்ட சத்திரியர்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றால் மதிமயங்கி மக்களுக்குத் தீமை செய்யத் துவங்கிய போது 21தலைமுறை வரை சத்திரிய மன்னர்களே இல்லாமல் செய்த அவதாரம் ஆகும் இது.

பதினேழாவது அவதாரம், வேதவியாசர் என்று காரணப் பெயர் கொண்ட அவதாரம் ஆகும். பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் கிருஷ்ண துவையம்பாயனர் என்ற இயற் பெயருடன் பிறந்த இவர், மிக விரிந்தும் பரந்தும் யாரும் கற்க முடியாத நிலையிலும் இருந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி நான்கு வேதங்களாக வகுத்தமையால் வேதவியாசர் என்ற பெயர் பெற்றார். பதினெட்டாவது இராம அவதாரம். பத்தொன்பதாவது பலராம அவதாரம். இருபதாவது கிருஷ்ண அவதாரம். பதினெட்டாவது இராம அவதாரத்தை இராமாயணத்திலும், பத்தொன்பது, இருபது அவதாரங்கள் பற்றி மகாபாரதத்திலும் விரிவாக அறியலாம்.

இருபத்திஒன்றாவது புத்தரது அவதாரம் ஆகும். இவர் புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர். இருபத்திரண்டாவது, இனி வரப்போகின்ற கல்கி அவதாரம். விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகக் கலியுகத்தின் முடிவில் தோன்றப் போகின்றவர் கல்கி ஆவார். இருபத்திமூன்று, இருபத்தி நான்கு அவதாரங்களின் பெயர்களை பாகவத புராணம் குறிப்பிடவில்லை.

வேதவியாசரின் அரும்பணி

வேதவியாசருக்குச் சுகதேவர் என்ற ஒரு மகன் இருந்தான். கற்க வேண்டிய அனைத்தையும் கற்று மாபெரும் அறிவாளி யாகிவிட்ட அவர், அதிகம் பேசாத காரணத்தால் மற்றவர்கள் அவரின் அறிவின் ஆழத்தை அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. பலர் அவரைக் கல்வி ஞானம் இல்லாதவர் என்றும், ஒர் அசடு என்றுமே கருதினர்.

இந்நிலையில் வேதவியாசர் வேதங்களை நான்காகப் பிரித்துப் பைலா என்பவருக்கு ரிக்வேதத்தையும், வைசம்பா யனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்குச் சாம வேதத் தையும், சுமந்தாவிற்கு அதர்வண வேதத்தையும் கற்பித்தார். புராணங்கள் ஐந்தாவது வேதம் என்று கருதப்படுவதால், அவற்றை மற்றொரு சீடராகிய லோமஹர்ஷனருக்குக் கற்பித்தார். லோமஹர்ஷனரின் மகனாகிய சுதா என்பவர் மற்றைய முனிவர்களுக்கு பாகவத புராணத்தைச் சொன்னார். நான்கு வேதங்களையும் தொகுக்கும் பணி, மகாபாரதத்தை எழுதும் பணி ஆகிய மிகப் பெரிய சாதனை களைப் படைத்த வேதவியாசர் தாம் இன்னும் ஏதோ செய்ய வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, ஒருநாள் சரஸ்வதி நதியில் நீராடிவிட்டுத் தம் பர்ணசாலையில் அமர்ந்திருந்தார். இவ்வளவு செய்தும் அவர் மனத்தில் ஏதோ ஒரு குறை இருந்தது. அது என்ன குறை என்று அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் நாரதர் உள்ளே நுழைந்தார். வேதவியாசரைப் பார்த்து, "மாபெரும் சாதனைகளைப் படைத்த தாங்கள் ஏன் அமைதியில்லாமல் இருக்கிறீர்கள்” என்று கேட்டார். வேதவியாசர், “காரணம் தெரியாமல்தான் கவலைப்படுகிறேன். அனைத்தையும் அறிந்த தாங்களே அதை விளக்கிச் சொல்லலாமே” என்று கூறினார். அடுத்துப் பேச ஆரம்பித்த நாரதர், வேதவியாசரே! இதுவரை தர்மத்தைப் பற்றி அளவுக்கு மிஞ்சிக் கூறிவிட்டீர்கள். அது தருமத்தின் இலக்கணத்தையும், அதன் இயல்பையும் சொல்கின்றன. ஆனால் மக்கள் மனத்தில் இவை சென்று தங்குவது கடினம். தர்மத்தின் இலக்கணங்களை எழுதுவதைக் காட்டிலும், கிருஷ்ணனுடைய லீலைகளைச் சொல்லி இருந்தால் அது மக்கள் மனத்தைச் சென்று பற்றும். அந்தச் சூழ்நிலை ஏற்படும்போது தருமத்தைப் பற்றிய கருத்துக்களும் மக்கள் மனத்தில் புகுந்து தங்கும். ஆகவே கிருஷ்ணனைப் பற்றிச் சொல்வதுதான் சிறந்த வழியாகும் என்று கூறிப் போனார்.

நாரதர் கூறியவை வியாசரின் மனத்திற்கு அமைதியும், தூண்டுதலும் தந்த காரணத்தால் பாகவத புராணத்தைப் பாடி அதைத் தம் மகனாகிய சுகதேவனுக்குக் கற்பித்தார்.

அசுவத்தாமன் பெற்ற தண்டனை

குருக்ஷேத்திரப் போரில் கெளரவர் படையிலும், பாண்டவர் படையிலும் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியாக பீமனுக்கும், துரியோதனனுக்கும் தனிப் போர் நடந்தது. பீமன், துரியோதனன் தொடையில் கதையால் தாக்கி அவன் காலை ஒடித்து விட்டான். ஒடிந்த காலுடன் துரியோதனன் யுத்தகளத்தில் படுத்திருந்தான். துரோணர் மகனாகிய அசுவத்தாமன் துரியோதனன் பக்கம் நின்று சண்டை செய்தவன். இப்போது துரியோதனன் உயிர் போகுமுன் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்க நினைத்தான். எனவே நட்ட நடுநிசியில் பாண்டவர்கள் பாசறைக்குள் ரகசியமாக நுழைந்து இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவருடைய கழுத்தையும் வெட்டி அவர் தலைகளைக் கொண்டு வந்து துரியோதனிடம் காட்டினான். திரெளபதியின் ஐந்து பிள்ளைகளும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் ஒரே கூப்பாடு போட்ட அவள், உடனே பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அருச்சுனனை நாடினாள். அருச்சுனன் அசுவத்தாமனைத் தேடிப்பிடித்து 'ஒருவருக்கொருவர் தனித்துப் போரிடலாம் என்று அறைகூவி அழைத்தான். யுத்தம் தொடங்கியது. அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். அதனால் தனக்கு அழிவு வராமல் இருக்க அருச்சுனனும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். இரண்டு அஸ்திரங்களும் தங்கள் எதிரியைத் தாக்க முடியாமையால் பூலோகத்தை அழித்துவிடும் சூழ்நிலை உருவாகியது. முனிவர்கள் பலர் வந்து இவ்விருவரையும் பார்த்து உலகம் அழிவதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. தயவு செய்து உங்கள் அஸ்திரங்களைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்

என்று வேண்டினார்கள். அருச்சுனன் தனது பிரம்மாஸ்திரத் தைத் திருப்பி அழைத்துக் கொண்டான். ஆனால் அசுவத்தாமனுக்கு அப்படையை விடத் தெரியுமே தவிர திருப்பி அழைக்கத் தெரியாது. அதனால் அருச்சுனனைக் கொல்ல முடியாத அப்படை அவன் சந்ததியைத் தாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அருச்சுனனின் மருமகளாகிய உத்ராவின் கருவுக்குள் நுழைந்தது. அக்கருவில் அருச்சுனன் மகனாகிய அபிமன்யுவின் குழந்தைக் கரு வளர்ந்து கொண்டிருந்தது. இதை அறிந்த உத்ரா, இந்த ஆபத்தைத் தடுப்பதற்காகக் கிருஷ்ணனிடம் ஒடினாள். வேறு வழியில்லாமல் கிருஷ்ணன் தானே அக்கருவினுள் நுழைந்தான். நுழைந்த கிருஷ்ணன் அக்கருவைக் காப்பாற்றியும் விட்டான். இது ஒருபுறம் நடக்கையில் அருச்சுனன் அசுவத்தாமனைக் கட்டி இழுத்து வந்து திரெளபதி முன் நிறுத்தினான். அருச்சுனன் இவனை இப்போது கொல்வது எளிது. ஆனால் நம் ஆச்சாரியரின் மகனைக் கொல்வது பாவம். இவன் சிறப்புக்கெல்லாம் காரணமாக இவன் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரத்தை எடுத்துக் கொண்டு இவனை அனுப்பி விடலாம்' என்று கூறினான். திரெளபதி இதை ஏற்றுக் கொண்டதால் முடிமணி பறிக்கப்பட்டு அவன் விரட்டப்பட்டான். உரிய காலத்தில் உத்ராவிற்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு 'விஷ்ணுரதன் என்று பெயரிட்டனர். விஷ்ணுரதன் இளமைப் பருவத்திலிருந்தே யாரைப் பார்த்தாலும், தான் கருவில் இருக்கும் பொழுது கண்ட பரம புருஷன் இவன்தானோ என்று சந்தேகப்பட்டு, காணுகின்ற ஒவ்வொருவரையும் பரிட்சித்துப் பார்த்ததால் பரிட்சித்து’ என்ற காரணப் பெயர் பெற்றான்.

கிருஷ்ணனின் துவாரகை வரவும், அவன் முடிவும்

குருக்ஷேத்திரப் போருக்குப் பின் பாண்டவர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்ட்ரன், அஸ்தினாபுரத்தில் முடிசூட்டிக் கொண்டான். சில காலம் அவர்களுடன் இருந்து விட்டுக் கிருஷ்ணன் துவாரகைக்குச் செல்ல முற்பட்டான். கிருஷ்ணன் யாதவ நாட்டிற்கு வருகிறான் என்ற செய்தி அறிந்த யாதவர்கள் பெரும் குதுகலமடைந்தனர். துவாரகை முழுவதும் விழாக் கோலம் பூண்டு அலங்கரிக்கப்பட்டது. அங்கிருக்கும் மரம், செடி, கொடிகள் கூடக் கிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைவதைப் போலப் பூத்துக் குலுங்கின.

கிருஷ்ணன் துவாரகைக்கு வந்தபின் சில மாதங்கள் கழித்து, அருச்சுனன் துவாரகைக்கு வந்தான். ஏழு மாதங் களாகியும் அவன் அஸ்தினாபுரம் திரும்பவில்லை. இதனிடையே அஸ்தினாபுரத்தில் பல தீய உற்பாதங்கள் தோன்றின. பருவங்கள் உரிய காலத்தில் வரவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, காழ்ப்புணர்ச்சியோடு போரிட்டுக் கொண்டனர். மனம் நொந்து போன யுதிஷ்டிரன் அருச்சுனன் திரும்பி வராமை கண்டு கவலை கொள்ளத் துவங்கினான். பீமனை துவாரகைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்தான். பீமன் புறப்படுவதற்குள் அருச்சுனனே வந்துவிட்டான். வந்தவன் எல்லையற்ற சோகத்தில் ஆழ்ந்த வனாய்த் தனித்திருந்து கண்ணிர் வடித்துக் கொண்டே இருந்தான். அவன் மெளனத்தைக் கலைக்க தருமன் பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை. ஒரு நாள் "அருச்சுனா நீ ஏன் பேச மறுக்கிறாய்? ஏன் கண்ணிர் வடிக்கிறாய்? துவாரகையில் நம் உறவினர்களும், கிருஷ்ணனும் நலமாக உள்ளார்களா?” என்று கேட்க, அருச்சுனன், கிருஷ்ணன் இறந்துவிட்டதையும், யாதவ குலம் முழுவதும் அழிந்து விட்டதையும் கூறிக் கதறிவிட்டான். கிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி காதில் விழுந்த உடனேயே யுதிஷ்டிரனுக்கு அரசாட்சியின் மேல் வெறுப்பு உண்டாயிற்று. பாண்டவர்களும், திரெளபதியும் இமயம் சென்று தவம் புரிய முடிவு செய்தனர். பரிட்சித்துக்கு முடிசூட்டி அரசாட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, இந்த அறுவரும் இமயம் நோக்கிப் புறப்பட்டனர்.
 
sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
பரிட்சித்து மன்னனின் கதை

பாண்டவர்கள் சென்ற பிறகு பலம் பொருந்திய பரிட்சித்து உலகை ஆளத் தொடங்கினான். அவனுக்கு ஜனமேஜெயன் முதலிய நான்கு பிள்ளைகள் இருந்தனர். தனது பராக்கிரமத் தால் பரிட்சித்து இரண்டு அசுவமேத யாகங்களை நடத்தினான். குரு வம்சத்தின் குருவாக இருந்த கிருபாச்சாரியாரே யாகத்தை முன்னின்று நடத்தினார். திடீரென்று ஒரு நாள் கலிபுருஷன் இவனுடைய நாட்டிற்குள் புகுந்து விட்டதாகக் கேள்விப் பட்டான். போர் புரிவதற்குரிய தளவாடங்களுடன் சென்று, கலியுடன் சண்டை செய்தான். கலி வெவ்வேறு வடிவமெடுத்து ஒட, இறுதியாகப் பரிட்சித்து ஒர் அபூர்வக் காட்சியைக் கண்டான். ஒரு பசுவும், ஒரு எருதும் தம்முள் பேசிக் கொண்டிருந்தன. உலகம் ரொம்பவும் கெட்டுப் போய்விட்டது என்றும், தீமைகள் மிகவும் மலியத் துவங்கி விட்டது என்றும் பேசிக் கொண்டிருந்தன. இப் பசுவும், எருதும் வேறு யாரு மில்லை. பிருத்வி பசுவாகவும், தர்ம தேவதை எருதாகவும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒரு சூத்திரன் இந்தப் பசுவையும், எருதையும் நையப் புடைத்துக் கொண்டிருந்தான். ஒடிச் சென்ற பரிட்சித்து, "அடேய்! நீ யாரென்று நினைக்கிறாய்? நீ செய்யும் அடாத காரியத்தின் விளைவை நீ அறிவாயா? இந்தப் பசுவையும் எருதையும் கொடுமைப்படுத்திய நீ சாகவேண்டியவன்” என்று கூறி, தன்னுடைய வாளை உருவினான். உடனே அந்தச் சூத்திரன் பரிட்சித்து கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கலிபுருஷன் என்ற தன் சுயரூபத்துடன் நின்றான். “அரசே! என்னைக் கொன்றுவிடாதே. உன்னுடைய பரந்த ராஜ்ஜியத்தில் ஒரு சில இடங்களை எனக்கு ஒதுக்கிக் கொடு. நான் அந்த இடத்தை விட்டு வெளிவராமல் இருந்து கொள்கிறேன்” என்று கூறினான்.

மனமிரங்கிய பரிட்சித்து, "தீயவர்கள் வாழும் இடம், கொலை புரிவோர் வாழும் இடம், சூதாடும் இடம், குடிகாரர்கள் வாழும் இடம் ஆகிய இந்த இடங்களை நீ தங்குவதற்குரிய இடமாக வைத்துக் கொள். என் ஆட்சியில் இந்த இடங்களைத் தவிர நீ எங்கும் தலைகாட்டக் கூடாது" என்று ஆணையிட்டான்.இதன் பிறகு ஒருமுறை வேட்டைக்குச் சென்ற பரிட்சித்து மன்னன், ஒரு மானைத் துரத்திக் கொண்டு மிக நீண்ட தூரம் சென்று விட்டான். பசியும், தாகமும் அவனை வாட்டின. சுற்றுமுற்றும் பார்க்கையில் ஒரு குடிசை தென்பட்டது. அங்கே தண்ணிர் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அக் குடிசைக்குள் நுழைந்தான். குடிசைக்குள் மான்தோலைப் போர்த்துக் கொண்டு, சடை ஏறிப் போன தலையுடன் ஷாமிகா என்ற முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். மன்னன் அதிகாரத் தொனியில் “குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?’ என்று கேட்டான். பதில் ஒன்றும் வராததால், தன்னை அவமதித்ததாக நினைத்த அரசன் மறுபடியும் உரத்த குரலில் கேட்டான். முனிவனின் தவம் கலையவில்லை. சினம் மிகுந்த பரிட்சித்து கவட்டைக் குச்சியால் பக்கத்தில் செத்துக் கிடந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டு விட்டுப் போய்விட்டான். அவன் போன சில நேரத்திற்குப் பின் முனிவரின் மகன் குடிசையில் நுழைந்த பொழுது " இக்கோரக் காட்சியைக் கண்டான். மகா சக்தி வாய்ந்தவனும், தவ வலிமை உடையவனுமாகிய அவன், “என் தந்தையை இவ்வாறு செய்தவன் இன்னும் ஏழு நாட்களுக்குள் தட்சன் என்ற பாம்பால் இறப்பை எய்துவான்’ என்று சாபமிட்டான். கண்விழித்த முனிவர், "மகனே! என்ன காரியம் செய்து விட்டாய்? மிக்க பராக்கிரமசாலியும், நம்மை எல்லாம் காக்கின்ற மன்னனுமாகிய பரிட்சித்துக்கு இவ்வாறு சாபம் கொடுத்து விட்டாயே, அவன் செய்த மிகச் சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனை பொருத்தமில்லாததாகும்." என்று கூறி வருந்தினார்.

இதனிடையில், அரண்மனை சென்ற பரிட்சித்து தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் முனிவர் மகன் இட்ட சாபம் அவன் காதுகளுக்கு எட்டியது. தான் இறப்பதற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன என்பதை அறிந்த அரசன். அந்த ஏழு நாட்களையும் கங்கைக் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானிப்பதில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். தன் மூத்த மகன் ஜனமேஜயனுக்கு அரசைக்
கொடுத்துவிட்டு, கங்கைக் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானிப்பதற்கு உட்கார்ந்தான். பரிட்சித்துக்குக் கிடைத்த சாபச் செய்தி எங்கும் பரவிவிட, எல்லா முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். வேதவியாசரின் மகனும், பதினைந்தே வயது நிரம்பியவருமாகிய சுகதேவமுனிவர் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டவுடன் ஏனைய முனிவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தி அவரது ஆசி பெற்றனர். சுகதேவ முனிவரை வணங்கி, பரிட்சித்து மன்னன், “முனிவரே! சாவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவன் கேட்க வேண்டிய ஒன்று எது? தயை கூர்ந்து அதனைச் சொல்லி அருள்க” என்று கூறியவுடன், சுகதேவ முனிவர் சொல்லத் தொடங்கினார்.

விஷ்ணுவின் கற்பனை கடந்த வடிவம்

உலகத்திலுள்ள மக்கள் பலரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கின்றனர். வீடு, மக்கள், செல்வம் என்ற உலகாயதப் பொருள்கள் “மாயை' என்று தெரியாமல் அவற்றையே சதம் என்று நம்பியுள்ளனர். உண்மையில் அறியப்பட வேண்டிய பொருள் எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவேயாகும். இந்த மாயையில் ஈடுபடாமல், விஷ்ணுவை தியானிக்க விரும்புபவர் களுக்கு "பாகவத புராணம்” உதவுகிறது. அந்தப் புராணத்தை இயற்றிய என் தந்தையாகிய வேதவியாசர் அதை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அதை உனக்கு இப்போது சொல்லப் போகிறேன்” என்று கூறிவிட்டு மேலே தொடங்கினார்:

சாவு வந்து கதவைத் தட்டும் பொழுது, இவ்வுலகப் பொருள்களையும், வாழ்க்கையையும் மறந்துவிட்டு ஒருவன் ஏதாவது ஒரு புண்ணிய கேடித்திரம் சென்று தியானத்தில் அமர வேண்டும். தியானம் என்பது ஓம்காரத்தை தியானிப்ப தாகும். மூச்சை அடக்கி, பிராணாயாம முறையில் இழுத்து விடுவதால் பொறி புலன்கள் ஒருமுகப்படும். அந்த நிலை யில் ஓங்காரத்தைத் திருப்பித் திருப்பி உச்சரிப்பதால் மனம் ஒருநிலைப்படும். யோகம் என்பது மனித ஆத்மாவை தெய்வீக ஆற்றலுடன் இணைவிப்பதே ஆகும். யோகிகள் என்பவர் இந்த ஆத்ம- தெய்வ ஒருங்கிணைப்பை நிலைநிறுத்த முயல்ப வர்கள் ஆவர். யோகி என்பவன் பொருத்தமான பத்மாசனம் போன்ற ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மூச்சுக் காற்றை சமனப்படுத்தும் பிராணா யாமத்தைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது விஷ்ணுவின் விஸ்வரூபத்தில் மனத்தைப் பதிய வைக்கிறது.

விஷ்ணுவின் விஸ்வரூபம் எங்கும் நிறைந்துள்ளது. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் அதுவே வியாபித்துள்ளது. ஐம்பூதங்களிலும், விஷ்ணுவின் வியாபகமே நிறைந்துள்ளது. இந்தப் பூரண வடிவுக்குள், யோகத்தின் பயனாக உள்ள சித்துப் பொருள் அமைந்துள்ளது. இந்தப் பரம்பொருளின் பாதமாக அமைந்துள்ளது பாதாள லோகம். பூமி அப்பொருளின் தொடைப் பகுதியிலும், ஆகாயம் என்பது அப்பொருளின் கொப்பூழ்ப் பகுதியிலும் உள்ளது. இந்த மாபெரும் வடிவத்தை "விஸ்வரூபம்’ என்று கூறுவர். அப்பொருளின் இருதய ஸ்தானத்தில் அமைந்திருப்பது நட்சத்திரங்கள் சூழ்ந்துள்ள சொர்க்க லோகமாகும். இதற்கு மேற்குப் பகுதியில், பிரபஞ்சத்தின் உயர்வான பகுதிகள் அமைந்துள்ளன. பிரபஞ்சம் முழுவதும் 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏழு பகுதிகள் பாதாள லோகங்கள் என்று கூறப்படும். அவையாவன: அதல, விதல, சுதல, தலாதல, மகாதல, ராசதல, பாதாள லோகங்கள் எனப்படும். மேற்பகுதியில் உள்ள 7 உலகங்கள் ஆவன: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகரலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் ஆகியவை. இந்தப் பரம்பொருளின் தொண்டைப் பகுதியில் உள்ளது மகரலோகம். வாய்ப் பகுதியில் உள்ளது. ஜனலோகம், நெற்றிப் பகுதியில் உள்ளது தபலோகம், தலைப் பகுதியில் உள்ளது சத்யலோகம்.

இந்திரன் முதலிய தேவர்கள் அப்பொருளின் கைகளாவர். நான்கு திசைகளும் அப்பொருளின் காதுகளாகும். இரண்டு அஸ்வினிகளும் அப்பொருளின் மூக்காகவும், சுடர்விடும் அக்கினியாக வாயுவும், சூரியன் அப்பொருளின் கண் ணாகவும், பகல் இரவு கண்ணின் இமைகளாகவும் உள்ளன. பரம்பொருளின் புன்சிரிப்பே மாயை எனப்படும். மலைகள் எலும்புகளாகவும், ஆறுகள் அவனுடைய நரம்புகளாகவும், மரங்கள் அவன் உடல் ரோமங்களாகவும், காற்று அவன் மூச்சாகவும், மேகங்கள் அவன் முடியாகவும் உள்ளன. ஒருவன் யோகப் பயிற்சியில் ஒருமுகப்பட்டு தியானிக்க வேண்டியது இந்த விஸ்வரூபமேயாகும்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பரிட்சித்து மன்னன், தன் மனைவி, மக்கள், அரசு ஆகியவற்றை மறந்து விஷ்ணுவின் தியானத்தில் ஈடுபடலானான். என்றாலும் இப்பரம்பொருள் கிருஷ்ணனாக அவதரித்துச் செய்தவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தவனாய், சுகமுனிவரைக் கேட்க அவர் சொல்லத் தொடங்கினார். .

படைப்பும், படைத்தவனும்

அனாதி காலத்தில் இருந்தது ஒரு மாபெரும் முட்டை யாகும். எங்கும் நீரே நிறைந்திருக்க இந்த முட்டை அதில் மிதந்து கொண்டிருந்தது. அந்த முட்டையிலிருந்து தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு விஷ்ணு தோன்றினார். ஆயிரக்கணக்கான முகங்கள், கால்கள், கைகள் என்பவற்றுடன் அவர் இருந்தார். பிரம்மாவைத் தன்னுடைய கொப்பூழிலிருந்து தோன்றிய தாமரையினின்று விஷ்ணுவே தோற்று வித்தார். தோற்றுவிக்கப்பட்ட பிரம்மனிடம் படைப்புத் தொழிலை ஒப்புவித்தார். சிவனை உண்டாக்கி அழித்தல் தொழிலை ஒப்புவித்தார். பிரம்மனும், சிவனும் விஷ்ணுவின் கட்டளைக்குட்பட்டே பணி புரிந்தனர். விஷ்ணு சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களையும் படைத்தார். அறிவும், அறிவு சார்ந்த பணிகளும் சத்துவ குணத்தின் ஆட்சிக்கு உட்பட்டன. செயல், செயல்முறை ராஜச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை. பொறி புலன்கள், ஐம்பூதங்கள் ஆகியவை தாமச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை.

உத்தவரும், விதுரரும்

மகாபாரதக் கதையில் விதுரனின் பங்கு மிக அதிகமாகும். திருதராஷ்டிரன் மகன் துரியோதனன் பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகை முதலிய பல வழிகளைக் கையாண்டு முடியாததால் பொய் சூது ஆடவைத்து அவர்கள் ராஜ்ஜியத்தை இழக்குமாறு செய்தான். இந்த நிலையில் அவர்களுக்கு உரிய ராஜ்ஜியத்தைத் திருப்பித் தருவதுதான் நியாயமானது என்று அறிந்த விதுரன் மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பல அறிவுரைகள் எடுத்துச் சொன்னான். ஆனால் துரியோதனன் மேல் கொண்ட அளவற்ற பாசத்தால் திருதராஷ்டிரன் இதைச் செய்ய முன்வரவில்லை. மன்னனை நோக்கி விதுரன் பேசுவதைப் பார்த்துக் கோபம் கொண்ட துரியோதனன் அறிவை இழந்த நிலையில் பின்வருமாறு பேசினான்: ‘'வேலைக்காரியின் மகனே! எங்கள் உப்பைத் தின்றுவிட்டுப் பாண்டவர்கள் பக்கமே உன் அன்பு இருக்கிறது. உன்னை இங்கு வைத்திருப்பதே தவறாகும்" என்று விதுரனின் மனம் புண்படப் பேசினான். துரியோதனன் எல்லை மீறிவிட்ட நிலையில் திருதராஷ்டிரன் அவனை ஒன்றும் சொல்லாததால் மனம் ஒடிந்த விதுரன் அஸ்தினாபுரத்திற்கு மீண்டும் வருவதில்லை என்ற சங்கல்பத்துடன் பாரத நாடு முழுவதும் தீர்த்த யாத்திரை என்ற காரணத்தை வைத்துச் சுற்றிவரச் சென்றார். இறுதியாக யமுனை நதியை அடைந்த பொழுது கிருஷ்ணனின் மிக நெருங்கிய நண்பனான உத்தவரைக் கண்டான். கிருஷ்ணனைப் பற்றியும், யாதவரைப் பற்றியும் விசாரித்தார். கிருஷ்ணனுடைய இளமைக் காலத்தை அறிந்தவர் உத்தவர் ஆகையால், விதுரருக்குக் கிருஷ்ணனின் இளமைக் கால லீலைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

உத்தவர், விதுரருக்குக் கூறிய கிருஷ்ணனின் இளமைப் பருவம் ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அங்கு காணப்படாத பகுதிகளை இங்கு தந்துள்ளோம்.

வராக அவதாரம்

தீர்த்த யாத்திரையில் விதுரர் மைத்ரேயி முனிவரைச் சந்தித்தார். விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி அறிய வேண்டுமென விதுரர் கேட்டபொழுது மைத்ரேயி சொல்லத் துவங்கினார். ஒரு காலத்தில் பூமியைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டார்கள் தைத்திரியர்கள். மனுவும், சத்ரூபனும் பிரம்மாவிடம் வந்து எல்லா இடங்களிலும் நீராக இருக்கிறது. தங்குவதற்கு இடமே இல்லை. பூமியோ கடலுக்கடியில் உள்ளது. என்ன செய்யலாம்?' என்றனர். பிரம்மா இது ஆராய வேண்டிய விஷயம். விஷ்ணுவை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் பிரம்மனுடைய மூக்கில் இருந்து மிக மென்மையான பன்றி வெளிப்பட்டது. பிரம்மனும், ஏனைய முனிவர்களும் அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தப் பன்றி வளர்ந்து ஒரு பெரிய யானையை விடப் பெரிதாக வடிவெடுத்தது. சற்று நேரத்தில் பன்றியின் கொம்புகள் ஜொலிக்க, அதன் கண்களிலிருந்து ஒளிவீச, அதன் பிடரி யிலிருந்து மயிர்கள் மேக மண்டலத்தை வருடத் தொடங்கின. திடீரென்று அப்பன்றி மிகப் பெரிய குரலெடுத்து உறுமத் தொடங்கியது. அந்த ஒலி எட்டுத் திசைகளையும் அதிரச் செய்தது.

சிறிது நேரத்தில் அந்த வராகம் கடலில் குதித்தது. கடலே இரண்டாகப் பிளக்குமாறு வராகம் குதிக்கவும் கடல் அலைகள் மிக உயரத்திற்குக் கிளம்பின. கடலுக்குள் குதித்த வராகம் நேரே கீழ் லோகத்திற்குச் சென்று அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பூமியைத் தன் கொம்புகளுக்கு நடுவே வைத்துக் கொண்டு மேலே புறப்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பகுதிகளில் வாழ்ந்த தைத்திரியர்களின் தலைவனான இரண்யாக்ஷன் என்பவன் வராகத்தை எதிர்க்க அவ்வடிவில் இருந்த விஷ்ணு சக்கரத்தைப் பயன்படுத்தி இரண்யாக்ஷனைக் கொன்று, பூமியை மீட்டு வந்து கடலில் மிதக்க விட்டார்.

இரண்யாக்ஷன் யார் என்று விதுரர் கேட்க, மைத்ரேயி சொல்லத் துவங்கினார்: ஒரு காலத்தில் காசிய முனிவனின் மனைவி திதியின் வயிற்றில் இரண்டு அசுரர்கள் கருவில் உதயமாயினர். நூறு ஆண்டுகள் கருவை விட்டு வெளி வராமல் திதியின் வயிற்றில் இருந்தனர். மிகக் கொடியவர்களாகிய அவர்கள் கருவில் இருக்கும் போதே பூமியில் பல பிரச்சினைகளை உண்டாக்கினர். சூரியனும், சந்திரனும் கூட ஒளியிழந்து போயினர். அந்த நிலையில் அவர்கள் யார் என்று பிரம்மா சொல்ல ஆரம்பித்தார். “முனிவர்களே! ஒரு காலத்தில் பல முனிவர்கள் விஷ்ணு இருக்கின்ற இடமாகிய வைகுண்டத்திற்குச் சென்றனர். பிரம்ம லோகத்தை விட அழகாக வைகுண்ட லோகம் இருந்ததால் அங்கே வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள் அவ்வளவு தூரம் வந்து விட்டதால் எப்படியாவது விஷ்ணுவை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். விஷ்ணுவை தரிசிக்க ஏழு வாயில் களைக் கடந்து செல்ல வேண்டும். முனிவர்கள் ஆறு வாயில் களைச் சுலபமாகக் கடந்து விட்டனர். ஏழாவது வாயிலில் ஜெய, விஜயன் என்ற இருவரும் கதாயுதத்தோடு காவல் புரிந்தனர். எக்காரணம் கொண்டும் முனிவர்கள் உள்ளே போக முடியாது என்று அவர்கள் தடை செய்து விட்டனர். கடுங்கோபம் கொண்ட முனிவர்கள் பூமியில் சென்று அரக்கர்களாகப் பிறப்பீர்கள் என சாபம் இட்டனர். அந்த இருவரும்தான் இரண்யாக்ஷன் என்றும், இரண்யகசிபு என்றும் இரு அரக்கர்களாகத் திதியின் வயிற்றில் தோன்றினர். பூமியை சுருட்டிக் கொண்டு சென்று கடலுக்கடியில் ஒளிந்து பிறகு வராகத்தால் கொல்லப்பட்டவன் இரண்யாக்ஷன். நரசிம்ம அவதாரத்தால் மார்பு பிளக்கப்பட்டு இறந்தவன் பிரகலாதனின் தந்தையாகிய இரண்யகசிபு.

கபில அவதாரம்

ஒரு காலத்தில் சுவயம்பு மனுவின் மகளாகிய தேவஹ்தியை கர்தமர் என்ற முனிவர் மணந்தார். பதினாயிரம் ஆண்டுகள் சரஸ்வதி நதிக்கரையில், விஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினார். விஷ்ணு தோன்றி 'உன் மகனாகவே நான் பிறக்கப் போகிறேன்’ என்று கூறினார். இதனிடையே முனிவருக்கும், மனைவி தேவஹ்திக்கும் ஒன்பது பெண்கள் பிறந்தனர். அவர்கள் முறையே கலா, அனுசுயா, சரத்தா, கதி, கியாதி, அருந்ததி, ஹவிர்பு, கிரியா, சாந்தி ஆகியோர். இவர்கள் மார்ச்சி, அத்ரி, அங்கீரா, புலஸ்தியா, புலஹா, கிரது, பிருகு, வசிஷ்டன், அதர்வன் ஆகியோரை மணந்தனர்.

அடுத்து விஷ்ணு பிறக்கப் போகிறார் என்பதால் கர்தம முனிவர் ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துப் பல ஆசைகளோடு வசதியாக வாழக்கூடிய விமானத்தைப் படைத்தார். அந்த விமானத்திலேயே முனிவரும், அவர் மனைவியும் தங்கினார்கள். ஒன்பது பெண்களும் பிறந்து அவர்கள் திருமணம் முடிந்த பிறகு கபிலா என்ற பெயருடன் விஷ்ணு அவதரித்தார். சிலகாலம் கழித்து முனிவர் தீர்த்த யாத்திரை சென்று விட்டார். உலக வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்த முனிவரின் மனைவி மகன் கபிலாவைப் பார்த்து “உலகப் பற்று என்னை விட்டு நீங்கிவிட்டது. உண்மையான ஞானம் எது என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள். தாய்க்கு விளக்கம் கூறும் முறையில் கபிலா ஒரு புதிய சித்தாந்தத்தை எடுத்துக் கூறினார். அதுவே சாங்கிய யோக தத்துவம்' என்று சொல்லப்படும். யோகம் என்பது ஒன்றுடன் ஒன்று பிணைவது என்ற பொருளைத் தரும். ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் இணைப்பதே யோகம் எனப்படும். யோகம் என்பது மகிழ்ச்சி, துக்கம் இரண்டையுமே வெற்றி கொள்வது. மனம் என்பது பொருள்களில் ஈடுபட்டு அவற்றோடு ஒட்டிக் கொள்கிறது. இவற்றிலிருந்து மனத்தைப் பிரிப்பது மிகக் கடினமான காரியம். யோகத்தை வளர விடாமல் தடுப்பது இப்பற்றேயாகும். இந்தப் புறப்பற்றுக்களில் இருந்து விடுபடுவதுதான் முக்கியமாகும். இதற்கடுத்தபடியாக அகங்காரம் என்னும் அகப்பற்றை வெல்ல வேண்டும். ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு இணைக்கச் செய்யும் ஒரு வழியே பக்தி எனப்படும் பரப்பிரம்மம் என்பது வடிவு, குணம், உருவம் எதுவும் இல்லாதது ஆதலின் அதை வருணிக்க முடியாது. பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் வேற்றுமை இல்லை என்பதை உணராதவர்கள் பிறந்து பிறந்து உழல வேண்டும்.

கபிலா உபதேசித்த சாங்கிய தத்துவத்தை அறிந்த அவர் தாய்க்குப் பல பற்றுகளும் நீங்கின. இந்த உடம்பு முதலியவை மாயை என்று நன்கு புரிந்தது. சரஸ்வதி நதியின் கரையில் ஒர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு தவம் செய்து வந்தார். கபிலாவின் தாய் தவம் செய்த இடமே இன்று சித்திபாதா என்ற பெயருடன் விளங்குகிறது.

மனுவிற்கு 3 பெண்கள் பிறந்தார்கள் என்றும், அவருள் தேவஹ்தி, கார்தம முனிவரை மணந்தார் என்பதையும் விதுரா நீ அறிவாய். மற்ற இரண்டு பெண்களுள் அகுதி என்பவள் ருச்சி என்ற முனிவரை மணந்து ஒரு பெண்ணையும், ஆணையும் பெற்றாள். அந்த ஆண் பிள்ளை, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இந்தப் பிள்ளையைத் தாத்தாவாகிய சுவயம்பு மனுவே வளர்த்தார். அகுதியின் மகளாகிய தட்சணாவை விஷ்ணுவே மணந்து, துஷிதாஸ்’ எனப்படும் 12 பிள்ளைகளைப் பெற்றார்.

பிரம்மனின் மகனாகிய தட்சன் மூன்றாவது பெண்ணாகிய பிரசுதியை மணந்தான். இவர்களுக்கு 16 பெண்கள் பிறந்தனர். இவர்களில் 13 பேரை தர்மராஜன் மணந்தார். ஒருத்தியை அக்னிதேவன் மணந்தான். பிதுர்களை ஒருத்தி மணந்தாள். கடைசிப் பெண் சிவனை மணந்து கொண்டாள். தர்மராஜனின் மனைவியருள் ஒருத்தியாகிய மூர்தி இரண்டு முனிவர்களைப் பெற்றாள். அவர்கள் நர, நாராயணன் எனப்படுவர். இவர்கள் இருவரும் விஷ்ணுவின் அவதாரம் எனப்படுவர். அனைவராலும் போற்றப்பட்ட இவர்கள் கந்தமாதன மலையில் தவம் இயற்றினர். தட்சனின் மகளுள் ஒருத்தியான சதி சிவனை மணந்தாள். தட்சன், சிவனை அவமானப்படுத்தியதால் உயிரை நீத்தாள்.
 
sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
தட்சன் யாகம்

முன்னொரு காலத்தில் பிரம்மனுடைய மகனாகிய தட்சன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அனைத்து முனிவர்களும், பிரம்மன், சிவன் ஆகிய அனைவரும் அங்கே கூடி இருந்தனர். திடீரென்று தட்சன் அங்கே வரவும் எல்லோரும் எழுந்து அவனுக்கு மரியாதை செய்தனர். அவ்வாறு மரியாதை செய்யாதவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் பிரம்மன், சிவன் ஆகிய இருவர் மட்டுமே. பிரம்மன் எழுந்திருக்காததில் தட்சனுக்கு வருத்தமில்லை. தந்தை எழவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் சிவன் எழுந்திருக்காதது அவனுக்கு மன உளைச்சலைத் தந்தது. கூடி இருந்தவர்களைப் பார்த்து, இந்தச் சிவனுக்கு மருமகன் என்ற முறையில் எழுந்து மரியாதை செய்யக் கூடத் தெரியவில்லை. அறிவற்றவன் என்று கூடக் கூறலாம். பயித்தியம் பிடித்தவனாகிய இவன் எலும்பு மாலைகளை அணிந்து கொண்டு பிணங்களைச் சுட்ட சாம்பலைப் பூசிக் கொள்கிறான். இவனுக்குப் பெண் கொடுத்ததே பெரிய தவறு என்று நினைக்கிறேன். என்னை அவமானப்படுத்தியதால் இன்று முதல் யார் யாகம் செய்தாலும் சிவனுக்கு அவிர் கொடுக்கக் கூடாது என்று சாபமிடுகிறேன் என்று கூறினான். சிவன் அவன் வார்த்தைகளைச் சட்டை செய்யவே இல்லை. ஆனால் சிவனுடன் வந்த நந்தி கூடியிருந்தவர்களைப் பார்த்து, 'சிவனை இப்படி அவமானம் செய்யும் பொழுது தட்சனுக்குப் புத்தி சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே இங்கிருக்கும் முனிவர் யாவரும் பூவுலகில் பிறந்து, இறந்து, பிறந்து உழல்வீர்களாக!' என்று சாபமிட்டான். இந்தச் சாபத்தைப் பொறாத முனிவர்களுள் ஒருவனாகிய பிருகு எதிர் சாபமிட்டான். இந்த சிவனைப் பின்பற்றுகின்றவர் அனைவரும் சடைப் பிடித்த தலையுடன், உடல் முழுதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, குடித்துக் கொண்டு திரிவார்களாக இத்தனைக் கூச்சல் குழப்பங்களுக்கும் இடையே வாய் திறக்காத சிவன் நந்தி முதலான கணங்களையும், தன்னைச் சேர்ந்தோரையும் அழைத்துக் கொண்டு யாகத்தினின்று புறப்பட்டுப் போய்விட்டார். சிவனில்லாமலே யாகம் 1,000 ஆண்டுகள் நடைபெற்றது.

சிவனில்லாமல் தன் முதல் யாகத்தைச் செய்த செருக்கில் தட்சன் மறுமுறை வாஜபேயம் என்ற யாகத்தை வெற்றியுடன் செய்து முடித்தான். இந்த இரு யாகங்களும் சிவனில்லாமல் நடந்து வெற்றி பெற்றதால் மூன்றாவதாக 'பிரகஸ்பதீஸ்தவ' என்றொரு யாகத்தைத் தொடங்கினான். சிவனைத் தவிர அனைவருக்கும் அழைப்புச் சென்றது. கந்தர்வர்கள் தங்கள் விமானங்களில் யாகத்திற்காக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தனர். யாகத்தையும், தட்சனையும் அவர்கள் புகழ்ந்து பேசியவுடன் சதிக்கு ஒர் ஆசை பிறந்தது. சிவனிடம் சென்று தந்தை செய்யும் பெரிய யாகத்திற்கு நாமும் போக வேண்டும் என்றாள். தங்களை யாரும் அழைக்கவில்லை என்று சிவன் கூறியதற்கு, 'மாமனார் செய்யும் யாகத்திற்கு மருமகனுக்கு அழைப்புத் தேவையா? நாம் போவதில் தவறில்லை. மேலும் என் சகோதரிகளைப் பார்த்துப் பலகாலம் ஆகிவிட்டது. என் தாயைப் பார்த்து எத்தனையோ காலம் ஆகிவிட்டது. எனவே போயே தீர வேண்டும்” என்று அடம் பிடித்தாள். சிவன், தான் வர மறுத்துத் தக்க துணையுடன் சதியை அனுப்பினார்.

சதி சென்ற பொழுது யாகம் தொடங்கிவிட்டது. அவருடைய தாயும், சகோதரிகளும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தனரே தவிர தட்சன் அவளை மதிக்கவில்லை; பேசவுமில்லை! சினம் கொண்ட சதி, தட்சனின் எதிரே வந்து நின்று, என்னுடைய கணவனை அவமானப்படுத்தினாய். ஒரு கற்புடைய பெண் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னுடைய மகள் என்ற காரணத்தால், இந்த உடம்பு நீ கொடுத்ததாகும். இவ்வுடம்போடு நான் இருக்க விரும்ப வில்லை என்று கூறிவிட்டு அக்னி குண்டத்தின் எதிரே உட்கார்ந்தாள். மூச்சை அடக்கிப் பிரமரந்தரம் என்று சொல்லப் படும் கபாலத்தின் வழியே தன் உயிர் போகுமாறு செய்தாள். உடனே அவள் உடல் தீப்பற்றி எரிந்து சாம்பலாயிற்று. வியப்பும் அதிசயமும் கொண்டு அனைவரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சதியுடன் வந்த சிவ கணங்கள் அங்குள்ள முனிவர்களை யும், பிருகு முனிவனையும் வதைத்தனர். ஆனால் மாபெரும் சக்தி படைத்த பிருகு முனிவர் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தேவ கணங்களை உருவாக்கி சிவ கணங்களோடு போராடச் செய்தார். சிவ கணங்கள் தோற்று ஒடிச் சிவனிடம் நடந்ததைக் கூறினர். பெருங் கோபம் கொண்ட சிவன், தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்து மிகுந்த உக்கிரத்துடன் அதைக் கீழே எறிந்தார். அதிலிருந்து வீரபத்திரர் என்று ஒருவர் தோன்றினார். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக இருந்த அவர் எலும்பு மாலைகளை அணிந்து கொண்டிருந்தார். ஈடு இணையற்ற திரிசூலம்’ என்ற படையைக் கையில் ஏந்தி இருந்தார். மிக்க பணிவுடன் சிவனைப் பணிந்து, எனக்கு இடும் கட்டளை என்ன? என்று கேட்டார். சிவன், நடந்ததை நீ அறிவாய் அல்லவா? தட்சனுடைய யாகத்திற்குச் சென்று, அவனைக் கொன்று யாகத்தையும் அழித்து வருவாயாக!' என்று கட்டளையிட்டார். மிக வேகமாகச் சென்ற வீரபத்திரர் தட்சனுடைய யாகத்தையும், அது நடைபெற்ற மண்டபத்தையும் அழித்தார். அவருடன் சென்ற சிவ கணங்கள் முனிவர்களைப் பிடித்து நையப் புடைத்தார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த பிருகு முனிவனை ஒரு தூணில் கட்டி அவர் தாடியைப் பிய்த்து எறிந்தார். தட்சனுடைய கழுத்தை வெட்ட முயன்றபோது அது முடிய வில்லை. உடனே அவனைப் பிடித்து யாக பலி மிருகத்தைக் கட்டப் பயன்படும் யூபம்’ என்ற தூணில் கட்டி தட்சன் தலையை வெட்டியவுடன் அந்தத் தலை யாக குண்டத்தில் விழுந்து சாம்பலாயிற்று. அனைத்தையும் வெற்றியுடன் முடித்த வீரபத்திரர் சிவனிடம் வந்தார். இதனிடையே பயந்து ஒடிச் சென்ற முனிவர்கள் பிரம்மனிடம் நடந்ததைக் கூறி 'என்ன செய்வது என்று கேட்டனர். பிரம்மன், 'சிவனை மதியாது அகம்பாவத்துடன் நீங்கள் செய்த காரியத்துக்கு இந்த தண்டனை பொறுத்தமானதே. சிவனை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் நேரே சிவனிடம் சென்று மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டார். அவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மேலும் இரண்டு வரங் களையும் வேண்டினர். ஒன்று, தட்சனைப் பிழைக்க வைப்பது. மற்றொன்று, பிருகுவின் முகத்தில் மறுபடியும் தாடி முளைக்க அருள்வது. ஏற்கெனவே சினம் அடங்கிய சிவன் அவர்களை அழைத்துக் கொண்டு தட்சனின் யாக சாலைக்கு வந்தார். தூணில் கட்டப்பட்டிருந்த பிருகுவிற்கு மறுபடியும் தாடி முளைக்குமாறு செய்தார். ஆனால், தட்சன் வெட்டுண்ட தலையாக குண்டத்தில் விழுந்து சாம்பலாகி விட்டமையின் ஒர் ஆட்டின் தலையை எடுத்து அவன் உடம்பில் பொருத்தி தட்சனுக்கு உயிர் உண்டாகுமாறு செய்தார். எழுந்த தட்சன் சிவனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். யாக குண்டத்தின் எதிரே உயிர் நீத்த சதி இமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பிறந்து சிவனையே மணம் செய்து கொண்டார். தட்சன் யாகம் தொடர்ந்தது. சிவபெருமானை வரவேற்று விஷ்ணுவே ஆச்சாரியனாக இருந்து யாகத்தை முடித்துக் கொடுத்தார்.

(பாகவத புராணத்தில் இத்தப் பகுதியில் துருவன் கதை விரிவாகப் பேசப்படுகிறது. முன்னரே விஷ்ணு புராணத்தில் இக்கதை பேசப்பட்டுள்ளதால் அதில் இடம் பெறாத பகுதி மட்டும் இங்கு தரப்பட்டுள்ளது.)

விஷ்ணுவிடம் வரம் பெற்ற துருவனுக்கு விஷ்ணு பின் வருமாறு கூறினார். “நீ இன்னும் உலகில் இருந்து திருமணம் செய்து கொண்டு மகப்பேறு பெற்று 36,000 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த சித்திகள் எல்லாம் உன்னை வந்து அடையும். எனவே நீ இப்பொழுது உன் தந்தையிடம் செல்லலாம்” என்று கூறினார். அதன்படியே ஊருக்கு மீண்ட துருவனைக் கண்டு அவனுடைய தந்தையும், தம்பி உத்தமனும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். உத்தான பாதன் அரசுப் பொறுப்பை துருவனிடம் விட்டுவிட்டுத் தவம் செய்யக் காடு சென்று விட்டான். துருவன் ஆட்சிக்காலத்தில் அவன் தம்பி உத்தமன் வேட்டையாடச் சென்ற பொழுது ஒரு யட்சனால் கொல்லப்பட்டான். சீறி எழுந்த துருவன் பெரும் படையுடன் சென்று யட்சர்களை எதிர்த்தான். மாயப் போரில் வல்ல யட்சர்களின் மாயை எல்லாம், நாராயண அஸ்திரத்தின்

துணைகொண்டு வென்றான். போர் நீடிக்கவே தேவர்களும் முனிவர்களும் துருவனைச் சமாதானப்படுத்திப் போரை நிறுத்தினர். முனிவர்கள் துருவனைப் பார்த்து விஷ்ணுவின் ஆணையால்தான் உன் தம்பி கொல்லப்பட்டான். அதுவும் அவனைக் கொன்றவன் ஒரே ஒரு யட்சன். அப்படி இருக்க ஒரு பாவமும் அறியாத அப்பாவி யட்சர்களைக் கொன்று குவிப்பது நியாயமற்றது என்று கூறினர். துருவன் அதை ஏற்றுக் கொண்டு நாடு திரும்பி இரு மனைவியரை மணந்து முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து, உலக இன்பத்தில் வெறுப்புற்று வத்ரிக சர்மா என்னும் ஆசிரமத்தில் தவத்தில் இருக்கும்பொழுது விஷ்ணு லோகத்தினின்று வந்த விமானம் அவனை அழைத்துச் சென்றது. விஷ்ணுவின் ஆணையால் சப்தரிஷி மண்டலத்தின் கீழே துருவனுக்கு என்று ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது துருவன் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

(இதை அடுத்து பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள வெனா - பிருத்துவின் கதை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் தரப்பட்டுள்ளது.)

பிரசேதர்களும் புரஞ்சனனும்

பிருத்துவின் பரம்பரையில் தோன்றியவன் பிராசீனவர்கி என்ற அரசன். அவனுக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்கள் பிரசேதாஸ் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் காட்டு வழியே தவத்தை மேற்கொண்டு செல்லும் பொழுது ஒரு பெரிய ஏரியைக் கண்டனர். தாமரை பூத்துக் குலுங்கும் தடாகத்தில் சிவன் தன் கணங்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். சிவனை வணங்கிய பிரசேதர்களுக்கு அவர் சில அறிவுரைகளைத் தந்தார். அதை ஏற்றுக் கொண்ட அவர்கள் நீருக்கடியில் தவம் செய்யச் சென்றனர்.

பிராசீனவர்கி, ஆட்சியில் இருக்கும் பொழுது நாரதர் ஒருமுறை அவனிடம் வந்தார். நாரதரைப் பார்த்து மன்னர், ‘ஐயனே! உலக இச்சையில் என் மனம் அழுந்திக் கிடக்கிறது. இந்த மாயையில் இருந்து வெளிவர நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க நாரதர், அரசே! நான் இப்பொழுது சொல்லப் போகும் புரஞ்சனன் கதையைக் கேளும். மாயையினின்று மீள்வதற்கு உமக்குத் தெளிவான வழி கிடைக்கும்." என்று கூறிக் கதையினைச் சொல்லத் துவங்கினார்.

பாஞ்சால நாட்டு மன்னன் புரஞ்சனன் என்பவன் தான் தங்கி வாழ்வதற்குரிய சிறந்த இடம் தேடி ஊர் ஊராக அலைந்தான். அவனுக்கு ஒரே ஒரு நண்பன் இருந்தான். ஆனால் அந்த நண்பனுடைய பெயரைக் கூட யாரும் அறியார்கள். புரஞ்சனன் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியாக இமயத்தின் அடிவாரத்தில் ஒர் அழகிய நகரைக் கண்டான். கோட்டை, கொத்தளம், அகழி என்பவற்றோடு இயற்கை வளம் நிறைந்த அந்த நகரத்தில் வீடுகள் எல்லாம் வெள்ளியும் மணியும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அந்த நகரைப் பார்த்து ஆசைப்பட்ட புரஞ்சனன் அதனுள்ளே செல்ல, அங்கு ஒர் அழகிய பெண்ணைப் பார்த்தான். பத்து வீரர்கள் அவளைக் காவல் காத்து நின்றனர். அவர்கள் இல்லாமல் ஒர் ஐந்தலை நாகம் அவளுக்குக் காவலாக இருந்தது. அவள்மேல் காதல் கொண்ட புரஞ்சனன் அவளை மணக்க விரும்பி அவள் சம்மதத்தைக் கேட்டான். அவள், அவன் அந்த நகரத்தை விட்டுப் போகாமல் இருப்பதானால் அவனை மணம் செய்து கொள்வதாகக் கூறினாள். மணம் நடைபெற்றது. புரஞ்சனன் நூறு ஆண்டுகள் அவளோடு வாழ்ந்தான். பல பிள்ளைகளையும் பெண்களையும் பெற்ற அவன் தளர்ந்து மூப்பு வந்ததால் இறக்கையில் கூடத் தன் அழகிய மனைவியை நினைத்துக் கொண்டே இருந்தான். நரகத்தில் சென்று துன்பங்களை அனுபவிக்கும்போது கூடப் பெண்ணை மறக்காமல் இருந்ததால், மறு ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாகப் பிறந்து மலையத் துவஜன் என்ற மன்னனை மணம் செய்து கொண்டான். மலையத்துவஜன் மூப்பு எய்தியதும் தன் மூத்த பிள்ளையிடம் அரசைக் கொடுத்துவிட்டுக் காட்டுக்குச் சென்றான். செல்லும் பொழுது அவன் மனைவியையும்

அழைத்துக் கொண்டு சென்றான். தவத்தின் முடிவில் மலையத்துவஜன் இறந்துவிட அவன் மனைவியும் அத்துயரம் தாங்காது உயிர் துறக்க முற்பட்டாள். அப்பொழுது அவ்விடத்திற்கு வந்த பிராமணன், “பெண்ணே! நில், நீ யார்? இறந்து கிடக்கும் இவன் யார்? ஏன் உயிரை விட வேண்டும்?” என்று கேட்டவுடன் அப்பெண், “பிராமணரே! தாங்கள் யார் என்று தெரியவில்லை. என்னை ஏன் தடுக்கின்றீர்கள்?” என்று வினவ, உடனே அந்த பிராமணன், “பெண்ணே! என்னைத் தெரியவில்லையா? இப்போது பெண்ணாக இருக்கும் நீ போன ஜென்மத்தில் புரஞ்சனன் என்ற பாஞ்சால நாட்டு மன்னனாக இருந்தாய். உனக்கிருந்த ஒரே ஒரு நண்பன் நான்தான். இமயமலைச் சாரலில் ஒரு பெண்ணை மணந்து பாஞ்சால நாட்டை மறந்தாய். அப்பெண்ணை மணந்து நூறு வருடங்கள் அவளோடு வாழ்ந்தும், அவளை மறக்க முடியாமல் நரகத்தில் இடர்ப்பட்டு மறுபடியும் பெண் ஜென்மம் எடுத்தாய். இப்போது மலையத்துவஜனுடன் வாழ்ந்து மறுபடியும் தற்கொலைக்கு முயல்கிறாய். உன்னுடைய உண்மையான சொரூபத்தை நீ அறிந்து கொள்ளாததால்தான் இத்தனைக் கேடுகளும் கலக்கங்களும். நீ என்பது உன்னுடைய ஆன்மா, அதற்கு யாரும் உறவுமில்லை, பகையுமில்லை” என்று கூறினான்.

கதையைக் கேட்ட பிராசீனவர்கி அதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டு ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளப் புறப்பட்டு விட்டான்.

பாரத நாடு - பெயர்க் காரணம்

ஸ்வயம்பு மனுவின் மகனாகிய பிரியவ்ரதன் துறவு மேற்கொள்ள விரும்பி உலக வாழ்க்கையை வெறுத்துப் புறப்பட்ட போது, அவன் தந்தை, குரு பிரம்மா, நாரதர் ஆகிய மூவரும் அரசனாகப் பிறந்தவன் கடமையைச் செய்ய வேண்டியது நியாயம் என்றும், அதனைச் செய்து முடித்த பிறகு துறவு மேற்கொள்வதே உத்தமம் என்றும் கூறி அவன் மனத்தை மாற்றினர். அதன்பிறகு அவன் உலகை ஆள ஒப்புக் கொண்டான். சூரியன் தினமும் மேரு மலையைச் சுற்றிவரப் பயன்படுத்திய தேர் பிரியவ்ரதன் தேரே ஆகும். தினந்தோறும் சூரியன் பூமியின் பின்புறம் செல்லும் போது முன்புறம் இருட்டாவது அனைவரும் அறிந்த ஒன்று. பிரியவ்ரதனுக்கு இது பிடிக்கவில்லை. இரண்டு வேளையும் பகலாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் தன்னுடைய நெருப்பைக் கக்கும் ரதத்தில் ஏறிக்கொண்டு மிக வேகமாக ஏழு முறை சுற்றி வந்தான். அந்த வேகத்தால் தேரின் சக்கரங்கள் ஏழு இடங்களில் மண்ணைத் தோண்டிக் கடலாக்கியது. அதன் பயனாக உலகம் ஏழு பிரிவுகளாகப் பிரிந்தது. பிரியவ்ரதன் தன் அந்திமக் காலத்தில் தன் ஏழு பிள்ளைகளையும் அழைத்து, உலகின் ஏழு பிரிவுகளையும் காட்டி ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவன் அரசனாக இருக்கட்டும் என்று கூறினான். அவர்களுள் அக்னிதரன் பங்கிற்கு ஜம்பூத்வீபம் (நாவலந்தீவு) கிடைத்தது. இந்த அக்னிதரனுக்கு 4 பிள்ளைகள் பிறந்தனர். தன் பங்கிற்குரிய ஜம்பூத்வீபத்தை ஒன்பது பங்காக்கி அவர்களை ஆளச் செய்தான். அவர்களுள் நபி என்ற மகனுக்குக் கிடைத்த ஒன்பதில் ஒரு பகுதியை அவன் ஆண்டு மகன் ரிஷபனுக்கு அதைக் கொடுத்தான். இந்திரன் மகளாகிய ஜெயந்தியை மணந்த ரிஷபனுக்கு நூறு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் மூத்தவன் பரதன் எனப்பட்டான். அவன் பெயரை வைத்துத்தான் இப்பகுதிக்கு 'பாரத நாடு என்ற பெயர் வந்தது.

ஜட பரதனின் கதை

(விஷ்ணு புராணத்தில் வந்துள்ள பகுதி போக, புதிதாக வந்துள்ளவற்றை இங்கே தந்துள்ளோம்) பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்த பரதன் தன் உடம்பு பற்றி உணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகின்ற காலத்தில் ஒரு வயலில் அமர்ந்திருந்தான். காளிக்கு பலியிடுவதற்காக ஒரு சூத்திரன் தன் ஆட்களை ஏவி ஒருவனைப் பிடித்து வரச்சொன்னான். அவர்கள் ஒரு இளைஞனைப் பிடித்துச் சூத்திரனிடம் கொண்டு செல்கையில், இரவு நேரத்தில் அந்த இளைஞன்

தப்பி ஓடிவிட்டான். என்ன செய்வது என்று அறியாது திகைத்த அப்பணியாளர்கள் பரதனைப் பார்த்தவுடன் அவனை அழைத்துச் சென்றனர். சூத்திரனிடம் கொண்டு போய் நிறுத்திய வுடன் அவனைக் குளிப்பாட்டித் தூய்மையான உடை அணிவித்து பலிக்குத் தயாராக்கினர். இத்தனை நிகழ்ந்தும் பரதன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான். பலி இடும் பூசாரி அவன் கழுத்தை வெட்டுவதற்காக அரிவாளை ஒங்கியவுடன் அது பொறுக்காத காளி தேவி வெளிப்பட்டு பலிபூசை செய்ய வந்த அனைவரையும் கொன்றுவிட்டாள். இந்த அதிசயம் கூடப் பரதனுடைய மனத்தில் எவ்வித உணர்ச்சியையும் உண்டாக்கவில்லை. தேகத்தை மறந்து வாழ்ந்த இந்த ஞானி சிறிது நேரம் அங்கிருந்து விட்டு, பழைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டான். மனிதனாக இருந்தும் உடம்பின் உணர்ச்சி (தேகப் பிரக்ஞை) இல்லாமல் ஜடப் பொருள் போல் இருந்தமையால் இவனுக்கு "ஜடபரதன்” என்ற பெயர் வழங்கலாயிற்று.

விருத்ராகரன் கதை

முன்னொரு காலத்தில் இந்திரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். சுற்றித் தேவர்கள் மற்ற இருக்கைகளில் இருந்தனர். கந்தர்வர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். இந்த இன்பத்தில் ஆழ்ந்து இந்திரன் தன்னை மறந்திருந்தான். அப்போது தேவகுருவான பிரகஸ்பதி உள்ளே நுழைந்தார். எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்தினர். இன்ப போதையில் இருந்த இந்திரன் குருவின் வரவைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆச்சார்ய பீடத்திற்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைத் தாங்காத பிரகஸ்பதி திரும்பிச் சென்று விட்டார். அவர் போன பிறகுதான் இந்திரனுக்குத் தான் செய்த மாபெரும் தவறு மனத்தில் பட்டது. இந்த அபச்சாரம் எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்த இந்திரன் அவரை எப்படியாவது தேடிப்பிடித்து அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புறப்பட்டுப் போனான். இந்திரனுடைய கர்வத்திற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த பிரகஸ்பதி தன் அதீதமான ஆற்றலைப் பயன்படுத்தி மாயமாய் மறைந்து விட்டார். குருவை எங்குத் தேடியும் காணாமையால் கிலி பிடித்த இந்திரன் தன் இருக்கைக்கு வந்து விட்டான். நாட்கள் சென்றன. தேவகுரு காணாமல் போன செய்தி எங்கும் பரவிற்று. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அசுரர்கள் தேவலோகத்தின் மீது படையெடுத்து அவர்களை நையப் புடைத்து விரட்டி விட்டார்கள். அடி பொறுக்க மாட்டாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறை யிட்டனர். பிரம்மன், அகங்காரத்தால் வந்த இந்தக் குற்றத்திற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார். தேவர்கள் தங்களுக்கு உய்கதியே இல்லை என்று அழுது வேண்ட, 'துவஷ்டா என்ற முனிவரின் மகனாகிய விசுவரூபாவையே தற்காலிக குருவாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று உபதேசம் செய்தார். தேவர்கள் விசுவரூபாவிடம் சென்று பிரம்மன் பணித்ததையும், தங்கள் வேண்டுதலையும் முன் வைத்தார்கள். விசுவரூபா அவர்களின் வேண்டுதலை ஏற்று தேவகுருவின் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. விசுவருபனின் தந்தை துவஷ்டா அசுரப் பெண்ணாகிய ஈசனாவை மணந்திருந்தார். விசுவரூபன் முனிவனாயினும், அவனுடைய சித்தி தைத்திய குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். எனவே, இந்திரனைப் பொறுத்த மட்டில் விசுவரூபாவை முழுவதும் நம்பத் தயாரில்லை. என்றாலும் விசுவரூபாவின் வருகையால் தேவர்கள் அசுரர்களை ஜெயித்து விட்டனர். விசுவரூபாவின் உதவியால்தான் தேவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றாலும், இந்திரன் விசுவரூபாவினை நம்பாமல் இருந்தான். . விசுவரூபாவிற்கு மூன்று தலைகள் இருந்தன. ஒரு தலை உண்ணவும், மற்றொரு தலை பருகவும் பயன்பட்டன. மூன்றாவது தலை யாகங்களில் கிடைக்கும் சோம ரசத்தைக் குடிப்பதற்கென்றே பயன்பட்டது. தேவர்கள் ஜெயித்த நிலையில் அந்த வெற்றிக்கு உதவிய விசுவரூபாவின் மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டி விட்டான்.
 
sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
விசுவரூபாவின் தந்தையாகிய துவஷ்டா, இந்திரனின் நன்றி கொன்ற செயலைக் கேள்விப்பட்டு, இந்திரனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் நடத்தினான். அந்த வேள்வியில், விண்ணையும் மண்ணையும் தொட்டுக் கொண்டு ஒரு பூதம் வந்தது. மலைபோன்ற மேனியும், மூன்று உலகங்களையும் விழுங்கக் கூடிய வாயும், நெருப்பை உமிழக் கூடிய கண்ணும் உடையவனாக விருத்ரா சுரன் என்ற பெயருடன் தோன்றினான். அந்த பூதம் என் பணி என்ன? என்று துவஷ்டாவைக் கேட்டது. இந்திரனையும் தேவர்களையும் ஒழித்துக் கட்டு என்று துவஷ்டா சொல்ல, விருத்ராசுரன் தைத்திய சேனையோடு புறப்பட்டான். தேவர்கள் எந்தவிதமான ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும், விருத்ராசுரன் அவை அனைத்தையும் விழுங்கி விட்டான். இந்திரன் முதலிய தேவர்கள் ஒட்டம் பிடித்தனர். இம்முறை தேவர்கள் நேரிடையாக விஷ்ணுவிடமே சென்று விட்டனர். விஷ்ணுவிடம், 'விருத்ராசுரன் இருக்கும் வரை தேவர்கள் வாழவே முடியாது என்று கூறி முறையிட்டனர். அவர்கள் ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றுப் போனதையும் விஷ்ணுவிடம் கூறினர். விஷ்ணு, 'ததிச்சி என்ற முனிவர் ஒருவர் இருக்கிறார். மாபெரும் தவசியான அவர் உடம்பிலுள்ள எலும்புகள் பெரும் சக்தி வாய்ந்தவை. அவர் எலும்பைப் பெற்றுப் புதிய ஆயுதம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டு விருத்ராசுரனுடன் போர் புரிந்தால் வெற்றி காணலாம் என்றார். ததிச்சி முனிவரிடம் ஒடிய தேவர்கள் விஷ்ணு சொன்னதை அப்படியே சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சியோடு தம் உடலை நீப்பதாகவும், தேவர்கள் அந்த எலும்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ததிச்சி கூறினார். அப்படியே உடலை நீத்தார்.

விஸ்வகர்மாவின் துணைகொண்டு வஜ்ராயுதம் தயாரிக்கப்பட்டது. புதிய ஆயுதத்துடன் இந்திரன் தேவர்களுடன் போருக்குக் கிளம்பினான். புதிய ஆயுதம் காரணமாக தைத்திய சேனை சிதறலாயிற்று. விருத்ராசுரன், கோழை களாகிய அவர்களை அழைத்து, என்றோ ஒரு நாள் சாகப் போகிறோம். போர்க்களத்தில் இவ்வாறு ஒடுவதால் அவமானம்தான் மிஞ்சும். திரும்பி வாருங்கள் என்று எவ்வளவு சொல்லியும் தைத்திரியர்கள் ஒடிவிட்டனர். விருத்ராசுரன் தனியே போர்க்களத்தில் நின்றான். வஜ்ராயுதத்துடன் ஐராவதத்தில் வந்த இந்திரனைத் தன் கையிலிருந்த சூலாயுதத்தால் தாக்கினான். ஐராவதம் இரத்தம் கக்கிக் கொண்டு நின்றது. இதே சூலாயுதத்தால் இந்திரன் கையிலிருந்த வஜ்ராயுதத்தைக் கீழே விழும்படி செய்தான். கையில் ஆயுதம் இன்றிப் பரிதாபமாக யானைமேல் அமர்ந்திருந்த இந்திரனைப் பார்த்து, "கோழை இந்திரா! ஏன் நடுங்குகிறாய்? எனக்கு உயிர்துறந்து விஷ்ணுவிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்து விட்டது. உடனே வஜ்ராயுதத்தை எடுத்து என்னைக் கொன்றுவிடு. மகிழ்ச்சியோடு இறந்து விஷ்ணுவிடம் போகப் போகிறேன்” என்றான். அவன் கூறிய படியே வஜ்ராயுதத்தை எடுத்து விருத்ராசுரனைக் கொன்று விட்டான் இந்திரன்.

இந்திரனின் பகை முடிந்தது. ஆனால் பாவம் பற்றிக் கொண்டது. விருத்ராசுரன் துவஷ்டாவினால் உண்டாக்கப் பட்ட பிராமண அசுரன். அந்த பிராமணனைக் கொன்ற 'பிரம்ம ஹத்தி தோஷம் இந்திரனைப் பற்றிக் கொண்டது. எங்கு சுற்றியும் அந்தத் தோஷத்தைப் போக்கமுடியாத இந்திரன் மானசரோவருக்குச் சென்று அங்குள்ள தாமரை மலர் ஒன்றின் தண்டில் ஒளிந்திருந்தான். தண்டில் ஒளிந்திருந்த காலத்தில நகுசன் இந்திரப் பதவியில் இருந்தான்.

சித்ரகேது

சாகும் தருவாயில் இருந்த பரிட்சித்து மன்னன் பாகவத புராணத்தைச் சொல்லிக் கொண்டிருந்த சுகதேவ முனிவரைப் பார்த்து, முனிவரே! விருத்ராசுரன் இந்திரனைப் பார்த்து என்னைச் சீக்கிரம் கொன்றுவிடு. நான் விஷ்ணுவிடம் போக வேண்டும் என்று கூறினான் என்றீர்கள். ஒர் அசுரனுக்கு இவ்வளவு விஷ்ணுபக்தி எவ்வாறு வந்தது? என வினவினான். அதுகேட்ட சுகதேவ முனிவர் ‘அரசே! விருத்ரா சுரனின் பழைய பிறப்பை அறிந்தால் உமக்கு இந்தச் சந்தேகம் வராது. அதைக் கேளுங்கள் என்று கூறி, சித்ரகேது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்

சுரசேனரால் நிர்மாணிக்கப்பட்ட மதுராபுரியை சித்ரசேனன் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். பல மனைவியரை மணந்தும் அவனுக்குப் புத்திரன் ஒருவன் இல்லாததால் பெருங்கவலையோடு இருந்தான். ஒருமுறை ஆங்கீரச முனிவர் அவன் நாட்டிற்கு வந்தார். அவரை வணங்கி உபசரித்த மன்னன் தன் குறையை எடுத்துக் கூறி ஏதாவது செய்யுமாறு வேண்டினான். ஆங்கீரச முனிவர் ஒரு யாகத்தை நடத்தி அதில் கிடைத்த பாயசத்தை மன்னனின் மூத்த மனைவி யாகிய கிருத்தயுதிக்குக் கொடுத்தார். நாளடைவில் அவள் ஒரு ஆண் மகவைப் பெற்றாள். குழந்தை பிறந்ததும் சித்ரகேதுவும், அவன் மனைவி கிருத்தயுதியும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஏனைய அரசிகளும் சந்தோஷப்படுவது போல பாவனை செய்தாலும் உள்ளுக்குள் புழுங்கினர். தங்களுக்குக் கிடைக்காத குழந்தைச் செல்வம் மூத்தவளுக்குக் கிடைத்ததால் அவள் மேலும், குழந்தை மேலும் அதுசையும், பொறாமையும் கொண்டனர். அவர்களுக்குள் சூழ்ச்சி செய்து விஷத்தைக் கொடுத்துக் குழந்தையைக் கொன்று விட்டனர். மன்னனும் அரசியும் அடைந்த துயரத்திற்கு எல்லையே இல்லை. இந்நிலையில் ஆங்கீரச முனிவரும் நாரதரும் அரசரைச் சந்தித்தனர். நாரதர், “அரசே! யாரைக் குறித்து எதற்காக நீ வருந்துகிறாய்? இந்தப் பிள்ளை பிறப்பதற்கு முன் உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? இப்பொழுது இறந்து விட்ட பிறகு உங்களிருவருக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிள்ளையின் ஆன்மா என்றும் அழியாதது. இடையிடையே பிறக்கும் போது எடுக்கின்ற உடல்கள் வெவ்வேறானவை. இந்த உடல்கள்தான் அந்த ஆத்மா என்று நினைப்பது வெறும் மாயையாகும். ஆத்மா அழிவில்லாதது என்றால், அந்த ஆத்மாவிற்கு நீ ஏன் அழவேண்டும்” என்று பலவாறு கூறித் தேற்றினார். மன்னன் ஓரளவு அமைதி அடைந்தாலும், முழுவதும் அமைதி அடைந்தான் என்று கூற முடியாது. இதை அறிந்த நாரதர், இதோ பார், உன் இறந்த மகனை எழுப்புகிறேன். அவன் என்ன சொல்கிறான் பார்! என்று சொல்லி விட்டுத் தன் சக்தியால் அக்குழந்தைக்கு உயிர் உண்டாக்கி, 'குழந்தாய்!உன் தாய் தந்தையர் பெரிதும் வருந்துகின்றார்கள். இன்னும் சிறிது காலம் இந்த பூமியில் இருந்து இந்த அரசை நீ ஏற்று ஆள வேண்டும் என்று கூறினார்.

உயிர் பெற்ற குழந்தை “நாரத முனிவரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஏதோ தாய், தந்தை என்றீர்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னைப் பொறுத்தவரை தாய் என்றோ, தந்தை என்றோ யாருமில்லை. என் ஆத்மா அழிவற்றது. இதற்கு முன்னர் இருந்த உடல் தோன்றக் காரணமான தாய் தந்தையர் வேறு. அதுபோல எத்தனையோ தாய் தந்தையரைப் பார்த்து விட்டேன். ஏதோ அரசு, செல்வம் என்றெல்லாம் கூறினர்கள். என்னைப் பொறுத்தவரை இந்த மாயைகளுக்கு என் மனத்தில் ஈடுபாடு இல்லை” என்று கூறிவிட்டு, அந்தக் குழந்தையின் ஆன்மா பிரிந்து போய்விட்டது. மன்னன் சித்ரகேது அஞ்ஞானத்தி னின்று விடுபட்டு, யமுனை நதியின் கரையில் ஒர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யத் தலைப்பட்டான். அதே சித்ரகேதுதான் விருத்ராசுரனாகத் தோன்றினான். இதற்குக் காரணம் சித்ரகேது ஒரு காலத்தில் தன் விஷ்ணு பக்தி காரணமாக சிவபெருமானை அவமதித்துப் பேசினான். சிவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பார்வதிதேவி, நீ அசுரனாகப் பிறக்கக் கடவாய்! என்று சாபமிட்டார். அந்தச் சாபம் காரணமாகவே சித்ரகேது, விருத்ரா சுரனாகத் தோன்றினார்.

(ஹிரண்ய கசிபு கதை விஷ்ணு புராணத்தில் விரிவாகத் கூறப்பட்டுள்ளது. அதே கதை இங்கேயும் விரிவாகக் கூறப் படுகிறது. இரண்டு கதையும் ஒன்றாயினும் முடிவு- அதாவது நரசிம்மத்தின் வருகை வெவ்வேறாகக் குறிக்கப்பட்டுள்ளது. பாகவத புராணப்படி தரகிம்மன் துணுக்குள் ஒளிந்திருந்தது என்பதும், விஷ்ணு துணுக்குள் இருக்கிறானா, இதை உடைக் கிறேன் பார் என்று ஹிரண்யன் சொல்வதும், துணை ஹறிரண்யன் அடிக்க நரசிம்மம் வெளிப்பட்டு அவனைக் கொன்றது என்பதும் அறியக் கிடக்கின்றன)

கஜேந்திர மோட்சம்

முன்னொரு காலத்தில் திரிகுடா என்ற பெரிய மலைத் தொடர் கடல் வரை நீண்டிருந்தது. மிக அடர்த்தியானதும், உயரமானதுமாகிய காடு. அம்மலையில் நிறைந்திருந்தது. அக்காட்டில் பல யானைகளுக்குத் தலைவனாகிய ஒர் ஆண் யானை ஆட்சி செய்து வந்தது. ஒரு நாள் அம்மலையில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றது. நீருக்குள் இருந்த முதலை இந்த யானையின் காலைப் பற்றிக்கொண்டது. எவ்வளவு முயன்றும் யானை தன் காலை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. யானையைத் தண்ணிருக்குள் இழுக்கும் சக்தி முதலைக்கு இல்லை. இந்தப் போராட்டத்தில் நெடுங்காலம் சென்றது. பலங் குறைந்த யானை விஷ்ணுவை தியானிக்கத் தொடங்கியது. உடனே விஷ்ணு தோன்றிச் சக்கரத்தால் முதலையின் வாயை அறுத்து யானைக்கு விடுதலை தந்தார். கொலையுண்ட முதலை பழம்பிறப்பில் ஹீஹீ என்ற கந்தர்வனாக இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தால் முதலையாகப் பிறந்தான். விஷ்ணுவால் சாப விமோசனம் ஏற்படும் என்று முனிவரே கூறியிருந்தார். அதுபோல் இப்பொழுது நடந்தது.

இந்த யானையும் முற்பிறப்பில் இந்திரத் தூய்மனன் என்ற மன்னனாக இருந்தவன். ஒரு முனிவரின் சாபத்தால் யானை யாகப் பிறந்திருந்தான்.

(பாற்கடல் கடைந்த கதை: இக்கதை விஷ்ணு புராணத்தில் பேசப்பட்டுள்ளபடியே இங்கும் இடம் பெறுகிறது. ஒரே ஒரு புதிய நிகழ்ச்சி பேசப்பட்டுள்ளது. விஷ்ணு புராணத்தில் விஷவாயு ஆகாயம் வரை பரவியது என்று கூறப்படுகிறது. பாகவத புராணத்தில் விஷம் ஆலகாலம் என்ற பெயருடன் தோன்றியது என்றும், இந்த விஷத்தைக் கண்டு அஞ்சி ஒடிய தேவர், அசுரர் அனைவரும் சிவபிரானிடம் சென்று முறையிட அவர் அந்த ஆலகாலத்தை எடுத்துக் குடித்து விட்டார் என்றும், அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர் கழுத்து மட்டும் நீலநிறமாகி விட்டபடியால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றும், அவர் விஷத்தைக் குடிக்கும் பொழுது சிந்திய விஷத்தைப் பாம்பு, தேள் முதலியவை தாம் எடுத்துக் கொண்டன என்றும் கூறப்படுகிறது.

அசுரர்களுக்கு மறுக்கப்பட்ட அமிர்தத்தை ராகு என்ற அசுரன் திருடி உண்ணும் பொழுது, விஷ்ணுவால் அவன் தலை துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ராகு உண்ட அமிர்தம் அவன் தலை துண்டிக்கப்பட்டதால் அவன் உடலில் இறங்கவில்லை. ஆனால் அவன் வாயில் அமிர்தம் இருந்ததால் தலைமட்டும் அமரத்துவம் பெற்றுவிட்டது. அதனை பிரம்மா கோள்களுள் சேர்த்து விட்டார்).

(மச்ச அவதாரம்: விஷ்ணு புராணத்தில் மச்ச அவதாரக் கதை சொல்லப்பட்டதற்கு மேல் இங்கு பேசப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி வேதங்களை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார்).

அம்பரீஷன் கதை

அம்பரீஷன் என்ற அரசன் எல்லாச் செல்வங்களும் பெற்று இப்பூவுலகை ஆண்டு வந்தான். பெரிய விஷ்ணு பக்தன் ஆகையால் அவன் ஆட்சியிலும், செல்வத்திலும் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தான். வைணவ சமய சம்பந்தமான சடங்குகளைச் செய்வதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். இத்தகைய ஒரு சடங்கில் மூன்று நாட்கள் முழு பட்டினி இருந்து மூன்றாம் இரவு முடிந்தவுடன் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது விதி. இதைச் செய்ய முற்பட்ட அம்பரீஷன் விரதத்தை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சற்று முன்னர் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை உண்ண அழைத்தான் அம்பரீஷன். இதோ வருகிறேன் என்று சொல்லி, வெளியே சென்றவர் விரதம் முடிக்கும் நேரத்தில் வந்து சேரவில்லை. இரவு முடியும் நேரத்தில் உடனேயே உண்ண வேண்டும் என்பது கட்டளை. ஆனால் வந்த விருந்தினரை, அதிலும் துர்வாசரை விட்டு விட்டுச் சாப்பிடுவது பெரிய அபசாரம். இத் தருமசங்கட நிலையில் மாட்டிக் கொண்ட அம்பரீஷன் இரண்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீரைப் பருகி விரதத்தை முடித்தான். விரத நேரம் கழித்து வந்த துர்வாசர் தன்னை

விட்டு விட்டு அவன் நீரைப் பருகினான் என்பதை அறிந்த வுடன் கடுங்கோபம் கொண்டார். அவர் தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்துப் போட்டு ஒரு அசுரனை உண்டாக்கினார். அந்த அசுரன் கையில் வாளுடன் அம்பரீஷனைக் கொல்வதற்காக ஒர் அடி முன் வைத்தான். மாபெரும் விஷ்ணு பக்தனாகிய அம்பரீஷனைக் காப்பாற்றுவதற்காக விஷ்ணுவின் சக்கரம் வந்து அந்த அசுரனைக் கொன்று விட்டு, துர்வாசனையும் துரத்த ஆரம்பித்தது. சக்கரத்துக்கு பயந்த துர்வாசர் எங்கெல்லாமோ ஒடிக் கடைசியாக விஷ்ணுவின் காலடியில் போய் விழுந்தார். விஷ்ணு, 'துர்வாசரை மன்னித்து, சக்கரத்திலிருந்து காப்பாற்றும் சக்தி அம்பரீஷன் ஒருவனிடம்தான் உள்ளது” என்று கூறினார். துர்வாசர் ஓடிவந்து அம்பரீஷனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அம்பரீஷன் அவரை மன்னித்து அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சக்கரத்தை வேண்டிக் கொண்டான். சக்கரம் துர்வாசரை விட்டு விஷ்ணுவிடம் சென்றுவிட்டது.

யயாதி இருவரை மணந்த கதை

அசுரர்களுக்கு அரசனான விருஷபர்வாவிற்கு சர்மிஷ்டா என்ற மகள் இருந்தாள். அசுர குருவான சுக்ராச்சாரிக்கும் தேவயானி என்றொரு பெண் இருந்தாள். இவர்கள் இருவரும் தோழிகள். ஒருமுறை இருவரும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். குளித்தபிறகு கழற்றிவைத்த உடைகளை அணியும் பொழுது, குருவின் மகளாகிய தேவயானியின் உடையை தவறுதலாக சர்மிஷ்டா அணிந்து கொண்டாள். இதைக் கண்டு பொறாத தேவயானி 'குருவின் மகளாகிய யான் உங்களைவிட உயர்ந்தவள். என்னைவிடத் தாழ்ந்தவளாகிய நீ எப்படி என் உடையை அணியலாம்? என்று கேட்டாள்.

இதைக்கேட்ட சர்மிஷ்டா. 'என் தந்தை அரசன் என்பதை மறந்து விடாதே! அரசன் போடுகிற சாப்பாட்டில்தான் குருவும் வயிறு வளர்க்கிறார். எனவே அரசன்தான் உயர்ந்தவன். உன்னைவிட நானே உயர்ந்தவள்’ என்று கூறிவிட்டு, சுக்ராச்சாரியார் மகள் தேவயானியைக் கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள். நல்ல வேளையாக அவ்வழியே வந்த யயாதி மன்னன் நீர் குடிக்கலாம் என்று கிணற்றுக்குள் பார்க்க, உள்ளே கிடந்த தேவயானியைக் காப்பாற்றி அவளை மணம் செய்துகொள்ள ஒப்புக் கொண்டான். உயிருடன் மீண்ட தேவயானி தந்தை சுக்ராச்சாரியாரிடம் நடந்தவற்றைச் சொல்ல, அவர் நாட்டை விட்டே புறப்பட ஆயத்தமானார். குரு நாட்டை விட்டுப் போவதால் ஏற்படக் கூடிய விளைவை அறிந்து நடுக்கமுற்ற விருஷபர்வா, உடனே ஒடிவந்து குருவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவன் மகள் சர்மிஷ்டா தன் மகள் தேவயானிக்குப் பணிப்பெண்ணாக இருக்க ஒப்புக் கொண்டால் நாட்டிலேயே இருப்பதாக சுக்ராச்சாரியார் ஒப்புக் கொண்டார். யயாதி இப்பெண்கள் இருவரையும் மணந்து கொண்டான். தேவயானிக்கு யாது. துர்வாசு ஆகிய இரு மகன்களும், சர்மிஷ்டாவிற்குத் துருயா, புரு ஆகிய மகன்களும் பிறந்தனர்.

துஷ்யந்தனும், சகுந்தலையும்

பரிட்சித்து மன்னன் சந்ததியில் வந்தவன் துஷ்யந்தன். காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது கன்வ முனிவர் ஆசிரமத்தில் சகுந்தலை என்ற அழகிய பெண்ணைக் கண்டு காமுற்றான். விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்தவள் அவள் என்று தெரிந்து அவளோடு கந்தர்வ மணம் செய்து கொண்டு, விரைவில் அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு நாட்டிற்கு வந்தவன், அவளை மறந்தே போனான். நீண்ட நாள் கழித்துத் தன் பிழையை உணர்ந்து ஆசிரமம் வந்து மனைவியையும், குழந்தை பரதனையும் அழைத்துச் சென்றான். துஷ்யந்தனுக்குப் பிறகு பட்டம் பெற்ற பரதன் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான்.

துவாரகையின் தோற்றம்

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் இரு மனைவிகளையும் பெற்றவன் ஜராசந்தன் என்னும் மகதப் பேரரசன். மருமகனைக் கொன்றதற்காக யாதவர்களைப் பழிவாங்க நினைத்து மாபெரும் சேனையுடன் புகுந்து பதினேழு முறை சூழ்ந்து கொண்டும், வெற்றியடைய முடியாமல் தோற்றே ஒடினான். பதினெட்டாவது முறையாகத் தான் மட்டும் படையெடுத்து யாதவர்களை அழிக்க முடியாது என்று அறிந்து கொண்ட ஜராசந்தன், காலயவனன் என்ற அரசனின் துணையை நாடினான். போர்க்களத்தில் யாராலும் தனக்குச் சாவு வரக் கூடாது என்ற பெரு வரத்தை மகாதேவனிடம் பெற்றிருந்தவன் காலயவனன். ஜராசந்தனுக்குத் துணையாகக் காலயவனன் வருகிறான் என்றறிந்த கிருஷ்ணன் மகாதேவனின் வரத்தைதான் வெல்ல முடியாது என்பதை அறிந்து கடலின் நடுவே துவாரகை என்ற அழகிய நகரை, விஸ்வகர்மா உதவியோடு ஸ்தாபித்தான். யாதவர்கள் அனைவரும் அங்கே குடியேற்றப்பட்டனர்.

ஜராசந்தன் முடிவு

குருக்ஷேத்திர சண்டைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது. இந்திரப் பிரஸ்த்தம் பாண்டவர்களுக்கு என்று திருதராஷ் டிரனால் கொடுக்கப்பட்ட பிறகு இந்திரபிரஸ்த்தத்தை ஸ்தாபித்து, யுதிஷ்டிரன் ஆட்சி செய்து வந்தான். சிலகாலம் கழித்து, கிருஷ்ணன் துவாரகையில் இருந்து இந்திரப் பிரஸ்த்தம் வந்து சேர்ந்தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் யுதிஷ்டிரன் ஒரு ராஜதுய யாகம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கிருஷ்ணனிடம் சொல்லி அவன் கருத்து என்ன என்று கேட்டான். இது நியாயமானதுதான் என்று கூறிய கிருஷ்ணன், ராஜதுய யாகம் செய்வதானால், யுதிஷ்டிரனுக்கு சமமான அரசர்கள் யாரும் இருக்கக் கூடாது. அனைவரையும் வென்று அடிமைப்படுத்திய பின்புதான் ராஜதுய யாகம் செய்யப்பட வேண்டும் என்று கூறினான் கிருஷ்ணன், 'உங்களைப் பொறுத்தவரை எதிர்த்துப் போர் புரியவேண்டிய ஒரே ஒர் அரசன்தான் இருக்கிறான். அவன் மகத நாட்டு அரசனான ஜராசந்தன். அவனைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல. ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் செய்யும் போரில்தான் அவனைக் கொல்ல முடியும் என்று கூறிய கிருஷ்ணன், சகாதேவனையும் நகுலனையும் வடக்குத் திசையில் அனுப்பிவிட்டு, கிருஷ்ணன், அருச்சுனன், பீமன் ஆகிய மூவரும் கிழக்கே மகத நாடு சென்றனர். மூவரும் பிராமணர்கள் போல் வேடம் தரித்துக் கொண்டு ஜராசந்தனிடம் யாசகம் கேட்கச் செல்வது போல் சென்றனர். பிராமணர்கள் யாசகம் கேட்டால் தவறாமல் கொடுக்க வேண்டும் என்பது அக்கால மரபு. அம்முறையில், இம் மூவரும் தங்களுக்கு ஒன்று வேண்டும் என்று ஜராசந்தனிடம் கேட்டார்கள். அவர்கள் மூவரையும் எளிதாக அடையாளம் கண்டு கொண்ட ஜராசந்தன் என்ன வேண்டும் என்று கேட்டான். எங்களில் யாராவது ஒருவருடன் நீ போர் புரிய வேண்டும். அதுதான் நாங்கள் கேட்கும் யாசகம் என்றார்கள். அதனை ஒப்புக்கொண்ட ஜராசந்தன், 'நான் கிருஷ்ணனுடன் போர் புரியமாட்டேன். அவன் கோழை. எனக்கு பயந்துகொண்டு மதுராவைக் காலி செய்து கொண்டு, துவாரகைக்கு ஒடிவிட்டான். அருச்சுனன் என்னைவிட இளையவன். பீமன் எனக்குச் சமமானவன். ஆதலால் அவனுடன் போர்புரிகின்றேன்' என்றான்.

மறுநாள் ஜராசந்தனுக்கும். பீமனுக்கும் போர் தொடங்கியது. முதலில் இருவரும் கதாயுதம் ஏந்திப் போர் புரிந்தனர். கதாயுதம் தூள் தூளாகப் போயிற்று. பிறகு அவர்கள் மற்போரில் ஈடுபட்டனர். இருபத்தியோரு நாட்கள் பகல் பொழுதெல்லாம் மற்போர் நடைபெற்றது. இரவில் சகஜமான நண்பர்களைப் போல் இருந்தனர். பீமனால் ஜராசந்தனைக் கொல்ல முடியவில்லை. இதற்கான காரணம் ஒன்று உண்டு. விருகதரதா என்ற மன்னனின் மனைவிக்குப் பிரசவ காலத்தில் குழந்தை பிறக்காமல் இரண்டு தசைப் பிண்டங்கள் பிறந்தன. வெறுத்துப்போன அவள் அந்த இரண்டு துண்டங்களையும் குப்பையில் வீசிவிட்டாள். ஜரா என்ற ராட்சசப் பெண் இந்தப் பிண்டங்களைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துக் கொண்டுபோய் இரண்டு பிண்டங்களையும் ஒன்றாகச் சேர்த்து அதற்கு உயிர் உண்டாக்கினாள். சந்தி' என்றால் இரண்டு ஒன்றாகச் சேர்வது என்பது பொருள். ஜரா வளர்த்ததனால் 'ஜராசந்தன்' என்ற பெயர் பெற்றான்.
 
sarayuvetri

ஆளுநர்
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,083
இந்தப் பிறப்பு ரகசியத்தை அறிந்திருந்த கிருஷ்ணன் பீமனுக்கு மறுநாள் போரில் ஜராசந்தனின் இருகால்களையும் பிடித்து அவனை இரண்டாகப் பிளந்து எறியச் சொன்னான். பீமன் அவ்வாறே செய்ய ஜராசந்தன் இறந்தான்.

ஜராசந்தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, ஜராசந்தனால் சிறைப்பிடிக்கப்பட்ட இருபதாயிரத்து எண்ணுறு சிற்றரசர் களை விடுதலை செய்தார்கள்.

சிசுபாலன் முடிவு

யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்ய முற்பட்ட பொழுது பல தேசத்து அரசர்களும் முனிவர்களும் அங்குக் கூடி யிருந்தனர். கூடி இருந்த அரசர்களுள் சிசுபாலனும் ஒருவன். அவன் வசுதேவரின் சகோதரியாகிய சிருத்தசர்வா' என்பவளின் மகனாவான். எனவே இவன் கிருஷ்ணனின் அத்தை மகனாவான். இந்த உறவிருந்தும், கிருஷ்ணனை யாதவன் என்றே ஏசினான். யுதிஷ்டிரன், யாருக்கு முதல் அர்க்கியம் கொடுக்க வேண்டும் என்று சபையில் உள்ள பெரியவர்களைக் கேட்டபொழுது, அவர்கள் ஒருமுகமாக “கிருஷ்ணனுக்கே முதல் மரியாதை” என்றனர். யுதிஷ்டிரன் அதனைச் செய்தவுடன், சிசுபாலன் எத்தனையோ அரசர்கள் இருக்கும் இந்த அவையில் ஒரு இடையனுக்கு முதல் மரியாதை செய்வது நியாயமில்லை என்று கூறிக் கிருஷ்ணனை வாயில் வந்தபடி ஏசத் தொடங்கினான். தன் அத்தைக்குக் கொடுத்த வாக்குப்படி சிசுபாலன் அவதூறுகளை எண்ணிக் கொண்டே வந்த கிருஷ்ணன் சக்கரத்தால் சிசுபாலன் கழுத்தை வெட்டினான்.

சால்வனின் முடிவு

சிசுபாலன் இறந்ததும் அவனுடைய நண்பனாகிய சால்வன் யாதவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒர் ஆண்டு முழுவதும் மண்ணையே தின்றுகொண்டு கடுந்தவம் புரிந்தான். இறுதியில் சிவன் எதிர்ப்பட்டதும் யாதவர்களை அழிக்கத் தனக்கு ஒரு விமானம் தேவை என்று வேண்டிக் கொண்டான். தைத்தியர்களில் ஒருவனாகிய மாயா என்பவனைக் கொண்டு இரும்பாலான ஒரு ரதத்தைச் செய்யச் சொன்னான். அதை வைத்துக்கொண்டு சால்வன் துவாரகை மீது படையெடுத்து அதன் கோட்டை, கொத்தளங்கள் நந்தவனங்கள் ஆகியவற்றை அழித்தான். கிருஷ்ணன் அப்போது அங்கில்லாததால் கிருஷ்ணனின் மகன் பிரத்யுமநன் சால்வனுடன் பெரும்போர் செய்தான். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போர் நடந்து கொண்டிருக்கும்போது கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பினான். பிரத்யுமநன் போருக்குச் செல்வதைத் தடுத்துத் தானே சென்று கதாயுதத்தால், சால்வனின் தேரை அடித்து உடைத்துவிட்டுச் சக்கரத்தால் அவனைக் கொன்றான்.

ஸ்ரீதமா (குசேலர்) கதை

கிருஷ்ணன் சாந்தீப முனிவரிடம் கல்வி கற்ற காலத்தில் உடன் கற்றவன் ஸ்ரீதமா என்ற பிராமணன். ஸ்ரீதமாவின் குடும்ப வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்தது. உண்ண உணவோ, உடுக்க உடையோ இன்றி அவர்கள் வருந்தினர். திடீரென்று ஒருநாள் ஸ்ரீதமாவின் மனைவி கணவனைப் பார்த்து, “உங்கள் பால்ய தோழனான கிருஷ்ணன் இப்பொழுது மிகுந்த வசதியுடன் இருக்கிறான் என்று கேள்விப் பட்டோமே, அவனிடம் சென்று நம் கஷ்டத்தைச் சொன்னால் நிச்சயம் அவன் உதவுவான். ஏன் நீங்கள் போகக் கூடாது?” என்று கேட்டாள். அதற்குடன்பட்ட ஸ்ரீதமா, நண்பனுக்கு ஏதாவது ஒரு பரிசினைக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்து ஒன்றும் இல்லாமையால் இரண்டு பிடி அவலை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றான். பெருமகிழ்ச்சியுடன் அவனை வரவேற்ற கிருஷ்ணன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, "இவ்வளவு நாட்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தாயே, எனக்கு என்ன

கொண்டு வந்தாய்?” என்று கேட்டான். கிருஷ்ணனின் அரண்மனை யையும், அதில் உள்ள பொருள்களையும் கண்டுவிட்டு ஸ்ரீதமா, தான் அவல் கொண்டு வந்திருப்பதைச் சொல்ல வெட்கப் பட்டுப் பேசாமல் இருந்துவிட்டான். ஆனால் கிருஷ்ணன் அவல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே அந்த இரண்டுபிடி அவலையும் தின்றுவிட்டான். இரவு நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நல்ல உடை உடுத்திக் கொண்டு அன்று இரவு ஸ்ரீதமா அங்கேயே தங்கி விட்டான். மறுநாள் காலை எதற்காக வந்தோம் என்று சொல்வதற்கே வெட்கப்பட்டுக் கொண்டு ஸ்ரீதமா ஊருக்குத் திரும்பினான். ஊரில் அவன் வீடு இருந்த இடத்தில் பெரியதொரு தோட்டம் அதன் நடுவே ஒரு மாளிகை. எல்லாவிதமான வசதிகளுடன் கூடிய வாழ்க்கையில் அவன் மனைவி இருப்பதைக் கண்டான். கிருஷ்ணன் சொல்லாமலே இத்தனையும் செய்துவிட்டான் என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.

சிவனின் தருமசங்கடம்

விருகா என்ற அசுரன் ஒருமுறை நாரதரிடம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் எளிதாக வரம் கொடுப்பார்கள் என்று கேட்டான். நாரதர் சிவன்தான் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். உடனே விருகாவும் கேதாரம் என்ற இடத்திற்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான். தன் இடுப்பு வரை நெருப்பில் நின்று ஒரு வாரம் தவம் செய்தும் சிவன் வரவில்லை. உடனே அவன் கோடரியை எடுத்துத் தன் கழுத்தை வெட்டி நெருப்பில் போட வேண்டும் என்ற நினைப்பில் கோடரியை எடுத்தவுடன் சிவன் எதிரே தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். “நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும். அப்படி ஒரு வரம் வேண்டும்” எனக் கேட்டான். சிவன், "அப்படியே தந்தேன்” என்றார். உடனே அந்த அசுரன் “உம்முடைய தலையிலேயே கை வைத்து வரம் உண்மையா என்று சோதிக்கப் போகிறேன்” என்றான். வேறு வழி இல்லாமல் சிவன் ஒடத் தொடங்கினார். நிலைமையை அறிந்த விஷ்ணு மாறுவேடத்தில் வந்து, 'விருகா, நீ எங்கே ஒடுகிறாய்? என்று கேட்டார். அவன் நடந்தவற்றைக் கூறி, "சிவன் தலையில் கையை வைத்து அவரைக் கொன்று விட்டுப் பார்வதியை மணந்து கொள்ளப் போகிறேன்” என்றான். மாறுவேடத்தில் இருந்த விஷ்ணு, அட பைத்தியக்காரா! போயும் போயும் சிவனையா நம்புகிறாய். அவர் வரம், சாபம் இரண்டும் ஒரு பலனையும் தராது. நான் சொல்லுவதில் உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே கையை வைத்துப்பார். ஒன்றுமே நடைபெறாது' என்று கூறினார். அறிவற்ற மூடனாகிய விருகா தன் தலையில் தன் கையை வைத்த உடனே இறந்து போனான்.

பிருகு செய்த சோதனை

ஒரு காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் மேம்பட்டவர்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அவர்களை மூவர் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அவர்களுள் ஒருவர் உயர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும். அது யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆராய்ச்சி செய்து கடைசியில் பிரம்மாவின் மகனான பிருகுவை இதைத் தெரிந்து வர அனுப்பினார்கள். பிருகு தந்தையாகிய பிரம்மா வரும் பொழுது எழுந்து மரியாதை செய்யாமல் உட்கார்ந்து கொண்டே இருந்தான். பிரம்மாவிற்குக் கோபம் வந்தாலும், தன் பிள்ளை என்பதால் பேசாமல் இருந்தார். சிவனிடம் சென்றார். அவர் அவரை அனைத்துக் கொள்ள வந்த பொழுது பிருகு சிவனை வாயில் வந்தபடி ஏசினார். திரிசூலத்தை எடுத்து பிருகுவின் மேல் எரியப் போகும் பொழுது பார்வதி தடுத்து விட்டாள். விஷ்ணுவிடம் அடுத்து சென்றார். விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். பிருகு அவரின் மார்பில் எட்டி உதைத்தார். விழித்த விஷ்ணு உத்தமமான பிராமணரே! தங்களுடைய பாதம் என் மார்பில் பட நான் புண்ணியம் செய்திருக்கிறேன். இந்தப்

பாதத்தின் அடையாளத்தை எப்பொழுதும் என் மார்பில் தாங்குவேன்' என்று சொன்னார். பிருகு தேவர்களிடம் வந்து நடந்தவற்றைக் கூறவும், விஷ்ணுதான் உயர்ந்தவர் என்று முடிவு செய்தனர்.

யார் குரு ?

யாதவகுலத்தின் முதல்வனாகிய யாது ஒருமுறை மிகவும் கற்றவனாகிய ஒரு இளைஞனைப் பார்த்தான். “இந்த வயதில் இவ்வளவு கற்றிருக்கிறாயே உன் குரு யார்?" என்று கேட்டான். அந்த இளைஞன் கற்றுக் கொள்வதற்குக் குறிப்பாக ஒரு குருவை நாடிச் செல்ல வேண்டும் என்ற தேவை இல்லை. இதோ பார். இந்தப் பூமியின் மேல் ஆயிரக் கணக்கானோர் தம் பாதங்களால் இந்தப் பூமியை மிதித்துக் கொண்டே இருக்கின்றனர். பொறுமையோடு அத்தனை பேரையும் மன்னித்து விடுகின்றது பூமி. பூமியிலிருந்து மன்னிக்கும் குணத்தை நாம் தெரிந்து கொள்கிறோம். காற்றைப் பார். எல்லா உயிர்களுக்கும் மூச்சுக் காற்றாக உள்சென்று வெளி வருகிறது. ஆனால் எதனோடும் ஒட்டிக் கொள்வதில்லை. இதிலிருந்து பற்றற்று வாழும் வழியை அறிந்து கொள்ளலாம். ஆகாயத்தைப் பார். மேகங்கள் மூடுகின்றன. பிறகு வெளி வருகின்றன. எதனாலும் ஆகாயம் பாதிக்கப்படுவதில்லை. எந்த ஒன்றும் நம்மை பாதிக்காமல் இருப்பதை ஆகாயத்தின் மூலம் கற்றுக் கொள்ளவேண்டும். நீரைப் பார். இது அனைத்தையும் சுத்தம் செய்ய உதவுகிறது. தண்ணிரிலிருந்து தூய்மை செய்வதன் அவசியத்தை அறிந்து கொள்ளவேண்டும். நெருப்பைப் பார். நெருப்புக்கு என்று தனியான வடிவம் இல்லை. எந்தப் பொருளைப் பற்றி நிற்கின்றதோ அந்த வடிவமாக நெருப்பு ஆகிவிடுகின்றது. பரமாத்மாவுக்குத் தனியே வடிவமில்லை. அதுபோல பரமாத்மாவும் எதைப் பற்றி நிற்கின்றதோ அந்த வடிவத்தைப் பெறுகின்றது.

சந்திரனைப் பார். அது பிறைகள் தேய்வதாகவும், வளர்வதாகவும் தெரிகிறது. உண்மையில் அப்படி ஒன்றும் நடைபெறுவதில்லை. மேல் தோற்றத்தைக் கண்டு எதையும் நம்பிவிடக் கூடாது என்பதை சந்திரனிலிருந்து அறிந்து கொள்கிறோம். ஆத்மனுக்கு எவ்விதமான மாற்றமும் ஏற்படுவ தில்லை. ஏற்படுவதாக நினைப்பது ஒரு மாயையே ஆகும்.

சூரியனைப் பார். கோடையில் சமுத்திரத்திலிருந்து எடுக்கின்ற நீரை, மழைக்காலத்தில் தந்து விடுகின்றது. கற்றவர்கள் பொறி புலன்களால் அனுபவிக்கும் அனுபவங்களைத் திருப்பித் தந்துவிடுகின்றனர். தாங்களே அதை வைத்துக் கொள்வதில்லை.

இதுபோன்ற குருமார்கள் எங்கும் நிறைந்திருப்பதால் அவ்வவற்றிலிருந்து ஒவ்வொரு பாடத்தை அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை அறிந்து கொள்வதற்குத் தனியாக ஆசிரியர் என்ற பெயரில் ஒருவர் தேவையில்லை.

பிராமணன் யார்?

மாளவ தேசத்தில் பெருஞ் செல்வத்துடன் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். வேளாண்மை, வாணிபம் என்ற இரண்டின் மூலமாகப் பெருஞ் செல்வத்தைச் சேர்த்த அவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யாத பரம உலோபியாக வாழ்ந்து வந்தான். நாளாவட்டத்தில் அவன் செல்வம் கரைந்தது. எஞ்சியதைத் திருடர்கள் கொண்டுபோய் விட்டனர். அந்தப் பிராமணன் சிந்திக்கலானான். என்னுடைய வாழ்க்கை எதைச் சாதித்தது? இந்தப் பொருட்களை எல்லாம் சதம் என்று எண்ணியது எவ்வளவு தவறு? என்ற சிந்தனையுடன், தனி ஒருவனுக்கு வேண்டிய சில பொருட்களுடன் ஒரிடம் சென்று துறவியாக வாழத் தலைப்பட்டான். பிச்சை எடுத்து வயிற்றுப் பசியைத் தணித்துக் கொண்டான். சில காலம் கழித்து அவன் வைத்திருந்த ஒன்றிரண்டு சாமான்களும் களவு போயின. அவன் பிச்சை எடுத்து வந்த உணவும் களவாடப்பட்டது. அந்த நிலையிலும் அவன் யாரையும் குறை கூறவில்லை. இப் பொருள்களில் எல்லாம் பற்று நீங்கி, பொறிபுலன்கள் அவன் வசப்பட்ட போது எதுபற்றியும் கவலைப்படாமல் இருக்கப் பழகிக்
கொண்டான். நாளடைவில் அவன் பிரம்ம ஞானத்தைப் பெற முடிந்தது. இப்படிப் பற்றற்ற வாழ்க்கை வாழும் பிராமணனே பரப்பிரம்மத்தை அறிய முடியும்.

கலியுகமும் ஆள்பவர்களும்

பாகவத புராணத்தை சுகதேவமுனிவர் சொல்லி முடிக்க கேட்டுக்கொண்டிருந்த பரிட்சித்து, கலி தொடங்கிவிட்டது என்றீர்கள். இந்த யுகத்தில் எந்தெந்தப் பரம்பரை ஆட்சி செய்யும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றான். கிருஷ்ணன் இறந்த பொழுதே கலியுகம் தொடங்கி விட்டது. அவருக்குப் பின் பிரத்யோத பரம்பரை ஆட்சிக்கு வரும். இதில் 5 அரசர்கள் நூற்றிமுப்பத்தெட்டு ஆண்டுகாலம் ஆட்சி நடத்துவர். சிசுநாக பரம்பரையில் பத்து மன்னர்கள் முந்நூற்றி அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள். நந்தா என்ற சூத்திரன் அரசாட்சி ஏற்று 100 ஆண்டுகள் ஆள்வான். அவனும் அவனது எட்டுப் பிள்ளைகளும் சாணக்கியன் என்ற பிராமணனால் அழிவை எய்துவர். சாணக்கியன் சந்திரகுப்தனை அரசனாக்குவான். இந்தப் பரம்பரையில் 10 மன்னர்கள் 137 வருடங்கள் ஆட்சி புரிவர். மெளரிய பரம்பரையில் கடைசி மன்னனான விருகதரதா, அவனுடைய சேனாதிபதி புஷ்யமித்ரா என்பவனால் கொல்லப்படுவான். இதிலிருந்து சுங்கவம்சத்தின் 10 மன்னர்கள் நூறு ஆண்டு களுக்குமேல் ஆட்சி செய்வர். கன்வர் பரம்பரை 345 ஆண்டுகள் ஆட்சி செய்யும். இதன் பிறகு 456 ஆண்டுகட்கு ஆந்திர மன்னர்கள் ஆள்வர். இதன் பிறகு பல வம்சங்களைச் சேர்ந்த பல மன்னர்கள் பல பகுதிகளைப் பிடித்து ஆள்வர். அவர்கள் அனைவரும் தீயவர்களாகவே இருப்பர். நாடு துண்டாடப்படும்.

தீமை என்பதே கலியுகத்தில் இலக்கணமாக இருக்கும். பொருட்செல்வம்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்ற எண்ணம் மக்கள் மனத்தில் புகுந்துவிடும். நேர்மையான வாழ்க்கை என்பதே அரிதாகிவிடும். உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் பதவி அளித்தல், லஞ்ச ஊழல் என்பது மலிந்துவிடும். இந்நிலையில் கல்கி அவதாரம் எடுத்துக் கலியுகத்தை ஒழித்துச் சத்திய யுகத்தைத் தோற்றுவிப்பார்.

கல்கி ஆனவர் சம்பாலா என்ற கிராமத்தில், விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகப் பிறப்பார். சுகதேவமுனிவர் பரிட்சித்து மன்னனைப் பார்த்து, 'நீ பிறந்த அன்றிலிருந்து ஆயிரத்து நூற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, மகாபத்மநந்தாவுக்கு முடிசூட்டு விழா நடைபெறும் என்று கூறினார்.

பரிட்சித்து மன்னன் முடிவு

முடிவுகாலம் நெருங்கியதும் அவன் சுகதேவ முனிவரைப் பார்த்து, 'பாகவத புராணத்தைக் கேட்டதால் தெளிவடைந்து விட்டேன். இறப்புப் பற்றிய அச்சம் ஒரு சிறிதும் இல்லை எனக்கு’ என்று கூறியவுடன் சுகதேவமுனிவர் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். பரிட்சித்தைக் கொல்ல வேண்டிய தட்சகன் என்ற பாம்பு ஒரு பிராமண வடிவம் கொண்டு பரிட்சித்தை நெருங்கிற்று. காரணம், பாம்பு வடிவத்துடன் வந்திருந்தால் யாரும் அதனை அரசன் பக்கத்தில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பிராமணர் என்ற காரணத்தால் அரசன் பக்கத்தில் செல்லத் தட்சகனுக்கு முடிந்தது. குறிப்பிட்ட நேரத்தில் பரிட்சித்தைத் தட்சகன் கடித்துக் கொன்றுவிட்டது.

பரிட்சித்து மன்னன் மகனுக்குத் தட்சகன் மேல் பெருங் கோபம் உண்டாயிற்று. தட்சகனை மட்டுமல்லாமல் பாம்புகளை பலியிடுவதற்குரிய ஒரு யாகத்தைத் தொடங்க முடிவு செய்தான். இதனை அறிந்த தட்சகன் இந்திரனிடம் ஒடிச் சென்று தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டது. தேவகுருவான பிரகஸ்பதி ஜனமேஜயனிடம் வந்து சமாதானம் சொல்லி அந்த யாகத்தை நிறுத்திவிட்டான்.

பாகவத புராணத்தின் சிறப்பு

புராணங்களில் சிறந்தது பாகவத புராணம். எல்லா நகரங்களையும்விடக் காசி சிறந்துள்ளது போலவும், எல்லா ஆறுகளையும்விட கங்கை சிறந்துள்ளது போலவும், எல்லா தெய்வங்களையும்விட விஷ்ணு சிறந்துள்ளது போலவும், எல்லாப் புராணங்களையும் விட பாகவத புராணம் சிறந்தது. விஷ்ணு பக்தர்கள் பாகவத புராணத்தைப் படித்தும், கேட்டும் பயனடைய வேண்டும்.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top