பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,187
Reaction score
2,380
Location
USA
ஊரறிய மணந்துகொண்டவர்கள் ஊமை நாடகமாடி நாட்களை கழித்தனர். விடுப்பு எடுத்து வந்தபோதும் வேலை, மேற்படிப்பு என கவனம் செலுத்தியவனிடம் பல்லவியின் சீண்டல்களும், செல்லமான மிரட்டல்களும் செல்லாக்காசானது. மதுமிதாவை வைத்து வழிக்கு கொண்டுவர நினைத்த முயற்சிகளும் வீண்போனது.

வலுக்கட்டாயமாக திருமண செய்துகொண்டவளின் உள்நோக்கம் யூகிக்க முடியாதபோதும், அவளால் மதுமிதாவிற்கு தீங்கேதும் வாராது என்று திடமாக நம்பினான் குணா. குழந்தையை பிரித்துவைத்த அவள் அரங்கேற்றிய நாடகங்களை அவன் துளியும் பொருட்படுத்தவில்லை.

தன்மேல் பிடிமானம் வருமாறு வேறேதாவது செய்ய வேண்டுமென்று சிந்தித்தவளுக்கு சுதாவின் நினைவு வந்தது. பொய்காரணங்கள் சொல்லி தட்டிக்கழித்த அவளிடம் தங்கள் திருமணத்தைப் பற்றி அறிவிப்பதோடு குணாவின் சந்தேகங்களையும் தீர்க்க நினைத்தவள், கையோடு அவளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துமுடித்தாள்.

“குணா! நம்ம நாளைக்கு உங்க மாமா வீட்டுக்கு போகுறோம்!” ஹாலில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தன்னவன் அருகில் அமர்ந்தபடி அறிவித்தாள்.

விவரத்தை கேட்ட சாவித்ரியின் முகம் மலர, மனோகரின் முகமோ சுருங்கியது. அவர்கள் பேச்சைக் கூர்ந்து கவனித்தார்.

எப்போதும் போல குணா மறுக்கவும், அவள் எதிர்த்துப் பேசவும், மனைவி இவர்கள் உள்குத்து தெரியாமல் வெகுளியாக சமரசம் செய்வதுமென வாதம் சூடுப்பிடித்தது.

“குணா சொல்றது சரிதான் மா! உங்க கல்யாணத்திற்கு அழைக்க வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ எதுக்கு அவங்களோட உறவாட நினைக்குற?” மகனுக்கு ஆதரவாய் குறுக்கிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் மனோகர்.

முதல்முறையாக மாமனார் தன்னிடம் நேரடியாக பேசுகிறாரே என்று பிரமித்தவளின் கண்கள் அகலமாக விரிந்தது.

“அவ சரியான சுயநலவாதி பா! தன் மனசுக்கு என்ன தோணுதோ அதை அப்படியே அந்த நிமிஷமே செஞ்சிடணும்;” எட்டாவது அதிசயமாக தன்பக்கம் பேசும் தந்தைக்கு ஒத்தூதியவனின் விழிகள் பெண்மானை வீழ்த்தும் சுவாரஸ்யத்தில்,

‘சுயநலம் பற்றி யார் பேசுவது!’ தன்னை ஏளனமாய் பார்க்கும் தந்தையை கவனிக்க மறந்தது.

இத்தனை நாட்களாக பட்டும்படாமல் பழகின மாமனார் உரிமையாக கேள்வி எழுப்பியதும், அவரிடம் மனம்திறந்து பேச முன்வந்தாள் பல்லவி.

“மாமா! உங்க கேள்வி நியாயமானது!உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்றேன்….” அவள் மெல்லத் தொடங்கியதும், குணாவின் முகம் வெளிறிப்போனது.

“பல்லவி….” கசந்த குரலில் அவன் அழைக்க, தன்னவனின் உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தவள், அமைதியாக இருக்கும்படி கண்ணசைத்தாள்.

சுதா, குணா மீது வழக்கு தொடர தன்னிடம் வந்ததைப் பற்றி விவரித்தவள், “குணா ரொம்ப நல்லவர் மாமா! அவர மாதிரி மதுமிதாவ வேற யாராலையும் பார்த்துக்க முடியாது!” ஆழ்மனதிலிருந்து உரைத்தவள்,

தாழ்ந்த குரலில், “அவருடைய இந்த குணமே எனக்கு அவர்மேல காதல் வர காரணமானது!” என்றாள்.

பல்லவியின் மென்மையான பேச்சில் மனோகர் மனம் கரையவே செய்தது.

“சரி மா! உன்ன நம்பறேன்!” மருமகளின் தலையில் அன்பாய் தட்டிக்கொடுத்து, “ஆயிரம்தான் இருந்தாலும், அவங்க பொத்தி வளர்த்த மகளை இவனோட பிடிவாதத்தால பரிக்கொடுத்தவங்க;” மகனை குத்தீட்டும் பார்வையால் நோக்கியவர்,

“என்னதான் இவன் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடி இப்போ மதுமிதாவ வளர்த்தாலும், அவங்க இழப்பை சரிகட்ட முடியாது; அதனால பார்த்து பொறுமையா பேசிட்டு வாங்க!” அறிவுறுத்தினார்.

தன்னவன் வீண்பழிக்கு ஆளாகிறானே என்று அவனை பரிதாபமாய் பார்த்தாள் பல்லவி.

மொத்த குடும்பத்தையும் தனக்கு எதிராக திருப்புகிறாளே என்று முகம் சுளித்தவன், “எனக்கும் என் பொண்ணுக்கும் அவங்க உறவே வேண்டாம். எங்களவிட அவங்கதான் முக்கியம்னு உனக்கு தோணினா, நீ தாரளமா அவங்கள சந்திக்கலாம்!” என இரைந்தான்.

உரிமைக் கொண்டாடுவதை போல நடிப்பதை உணர்ந்தவள், அவன் வழியிலேயே பேசி மடக்கினாள். “நீங்களும் மதுமிதாவும் தான் எனக்கு முக்கியம் குணா! ஆனா நாளைக்கு நீங்க அங்க வரலேன்னா, நம்ம டெல்லி போகவேண்டியதா இருக்குமே!” அப்பாவியாக கண்சிமிட்ட, ‘டெல்லி’ என்ற வார்த்தை கேட்டு துணுக்குற்றான்.

பல்லவி பேச்சு புரியாமல் பெரியவர்கள் குழம்பி நிற்க, “அதுக்கில்ல அத்தை! சுதாவ பகைச்சுகிட்டா, அப்புறம் அவ எங்கமேல இருக்குற கோபத்துல டெல்லி வரை போய் சுப்ரீம் கோர்ட்டுல வழக்கு போடுவாளோன்னு பயமா இருக்கு!” அக்கறையாய் உரைத்தாள்.

சுதா அப்படி செய்யக்கூடியவள் என்று சாவித்ரி தலையசைக்க, பல்லவியின் மறைமுக மிரட்டலை உணர்ந்தவன் மௌனம் காத்தான்.

சீறும் சிங்கம் அவள் பேச்சில் நொடியில் அடங்கிப்போனதை கவனிக்கவே செய்தார் மனோகர். காதலை தாண்டி மருமகள், மகனின் மர்மங்கள் அறிந்திருப்பதை அவள் ஜாடைபேச்சு உறுதிசெய்தது. மகனின் நன்னடத்தைப் பற்றி அவள் விவரித்ததில் அவள், அவன்மீது கொண்ட நம்பிக்கையையும் உணர்த்தியது.

இனியாவது மகன் நல்வழியில் நடக்கட்டும் என எண்ணி நகர்ந்தார். பிரிந்த சொந்தங்கள் இணையப்போகும் மிதப்பில் சாவித்ரியும் கணவனை பின்தொடர்ந்தாள்.



மாமன் வீட்டின் முன் காரை நிறுத்தியதும், கம்பீரமாய் இறங்கி நடந்தாள் பல்லவி. குட்டிச்சாத்தானோடு சேர்ந்து என்ன சூழ்ச்சி செய்யப்போகிறாளோ என்று சிந்தித்தபடியே உடன்நடந்தான் குணா.

“பல்லவி! அத்தை ஒண்ணும் என்னோட அம்மா மாதிரி மிருதுவானவங்க கிடையாது. அவங்க பொண்ணு இடத்துக்கு நீ வந்திருக்கன்னு குத்திக்காட்டி உன் மனசு கஷ்டப்படுறா மாதிரி பேசுவாங்க!” அவர்கள் சகவாசம் நல்லதில்லை என்று எச்சரித்தான்.

அவளுக்கு சாதகமாக பேசினால், திரும்பிவிடுவாளோ என்ற நப்பாசை அவனுக்கு.

“என் மனசு கஷ்டப்படும்னு கூட யோசிப்பீங்களா குணா!” அவள் மென்மையாக கேட்கவும், திட்டம் வேலை செய்யும் மிதப்பில் அவன் உதடுகள் வளைந்தன.

“உங்க அக்கறைக்கு நன்றி குணா!” ஏளனமாக உரைத்தவள்,

“அவங்க மட்டும் அப்படி பேசட்டுமே; நானும் பதிலுக்கு அவங்ககிட்ட சொல்லுவேன். உங்க பொண்ணுதான் இப்படிபட்ட நல்ல புருஷனும், தேவதை மாதிரி மகளும் வேண்டாம்னு சொல்லிட்டு ஓடி போயிட்டான்னு!” அலட்டலே இல்லாமல் சொல்லி வேகமாக முன்னே நடந்தாள்.

யமுனாவை அவதூறுக பேசுபவளை, “பல்லவி!” என அரற்றியவன், அவள் மென்கரங்களை அழுந்தப் பிடித்து தடுத்தான்.

அதற்கெல்லாம் அசராதவள், “நானும் உங்கமேல இருக்குற அக்கறையில தான் குணா பேசுறேன். என் குணா நல்லவர்; நான் ஈன்றெடுக்காத என் மதுமிதா அதற்கும் ஒருபடி மேல!” அவள் அழுத்தமாய் உரிமைகொண்டாட, அவன் பிடி வலுவிழந்தது.

பல்லவியை எதிர்பார்த்து துள்ளலாக கதவு திறந்தவளின் முகம் குணாவை கண்டதும் மிரண்டுபோனது. அமெரிக்காவிலிருந்து இவன் எப்போது வந்தானென்று சுதா ஸ்தம்பித்து நிற்க, பல்லவி கணவனின் கரங்களைப் பிடித்து உரிமையோடு உள்ளே நுழைந்தாள்.

முன்தினம் சுதாவிடம் பேசிய பல்லவி, வழக்கு சம்பந்தமாக எல்லாம் தயார் நிலையில் உள்ளதென்றும், அவள் விரும்பியபடியே வழக்கு நகர்வதாகவும் நம்பிக்கை வார்த்தைகள் கூறியிருந்தாள். அது சம்பந்தமாக குடும்பத்தினரை ஒரே இடத்தில் சந்தித்தால் சௌகரியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தாள். ஆனால் அவள் குணாவை நேரில் அழைத்து வந்ததின் நோக்கம் புரியாமல் குழம்பி நின்றாள் சுதா.

குணாவை கண்ட அத்தை மாமன் முகத்திலும் அதே பதற்றம். பல்லவி சற்றுமுன் கறாராக பேசிய விதத்தில், குணாவும் அமைதிகாத்தான்.

“இவன எதுக்குமா இங்க அழைச்சிட்டு வந்திருக்க! எதுவா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்கலாம்!” மாணிக்கம் எத்தனிக்க,

“அட! அப்பா!” சிரித்த முகத்துடன் மாணிக்கத்தை அழைத்தவள், “வழக்கு போடாமலேயே உங்களுக்கு சாதகமா தீர்ப்பு முடிவாயிடுத்து!” புதிராக பேசினாள் பல்லவி.

“அப்பாவா! யாரு யாருக்கு அப்பா!” மீனாக்ஷி கொந்தளிக்க, பல்லவியின் பார்வை தன்னவனை தழுவி மீண்டது.

பெண்மான் உடைந்துவிடுவாள் என்று அவன் சிந்திக்க, அவளோ, “உங்க மருமகன் எனக்கு கணவர்னா, உங்கள நான் அம்மா அப்பான்னு கூப்பிடறது தானே முறை!” என்றவள், “என்ன சுதா! நான் சொல்றது சரிதானே!” புருவங்களை மேலும் கீழுமாய் அசைத்து வினவினாள்.

‘அதானே! இவளுக்கா பேசக் கற்றுக்கொடுக்க வேண்டும்’ மனதில் சலித்தவன், எதிரிகள் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொள்ளட்டும் என்று அமைதியாக வேடிக்கைப் பார்த்தான்.

சுதா அவள் பங்குக்கு பல்லவியை கேள்விகளால் தாக்கினாள். புத்தர் வம்சாவளியில் பிறந்தவள்போல, பல்லவி சுதாவின் தோளினை அன்பாய் அரவணைத்து பதிலளித்தாள்.

“நீதானே சுதா சொன்ன! குணா மறுமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் மதுமிதாவை அவரே வளர்க்கலாம்னு!” என்றவள், கொண்டுவந்த கோப்பிலிருந்து சுதா எழுதிக்கொடுத்த புகார் கடிதத்தை அனைவருக்கும் கேட்குமாறு எள்ளல் தோணியில் படித்தாள்.

“நீங்க சொல்லித்தானே அப்படி எழுதினேன் பல்லவி!” அவளை முழுமனதாக நம்பியதாக குமுறினாள் சுதா.

“ஆமாம்! நான் அப்படித்தான் சொல்லுவேன்!” ஒப்புக்கொண்டவள், தனக்கும் அங்கு நடப்பதற்கும் சம்பந்தமே இல்லாதது போல பேண்ட் பாக்கட்டில் கட்டைவிரல் நுழைத்து மிடுக்குடன் நிற்கும் தன்னவன் அருகில் நடந்தாள். அவன் கைவளையத்துக்குள் தன் கையை பிண்ணிக்கொண்டவள்,

“பின்ன! என் காதலன் மீது வழக்குதொடர நான் என்ன முட்டாளா?” கேட்டு தன்னவனை விழி உயர்த்தி பார்த்தாள்.

'அற்புதமாக நடிக்கிறாள்!’ என்று அவனும் பதிலுக்கு வெட்டும் பார்வையில் நோக்கினான்.

மகளை பகடைக்காய் ஆக்கி பல்லவி செய்த சூழ்ச்சியை அறிந்து கோபாவேசம் கொண்டார் மாணிக்கம்.

“நீ கவலைப்படாத மா சுதா! ஊர் உலகத்துல இவள விட்டா வேற வக்கீலே இல்லையா? வேறவொரு நல்ல வக்கீலா பார்த்து, இவ மேலையும் சேர்த்து மோசடி கேஸ் போடலாம்.” என்று சவால் விட்டார்.

அரிதாக கிடைக்கும் தன்னவனின் அருகாமையில் மூழ்கி இருந்தவளுக்கு அவர் பேசியது எதுவும் காதில் விழவில்லை.

“ஆமாம் பா!” தந்தை முடிவை ஆமோதித்தவள், அவர்கள் அன்யோனியத்தை சகித்துக்கொள்ள முடியாமல், “ரெண்டு பேரும் ஜெயிலுக்கு போய் குடும்பம் நடத்தட்டும்!” விரக்தியில் சபித்தாள்.

மதுமிதாவை வளர்க்கும் பொறுப்பு இனி மகள் தலையில் விழாதென்று நிம்மதி அடைந்த மீனாக்ஷி, மகளைப் பணயம்வைத்து சதியாட்டம் ஆடிய பல்லவியை தூற்றினாள்.

“இந்த வீணாப்போனவன, நாலு வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சிருக்க வேண்டியதுதானே! என் பொண்ணுக்கு நாங்க பார்த்த மாப்பிள்ளையோட கல்யாணம் நடந்திருக்கும்; அவளும் உயிரோட இருந்திருப்பா!”

தன்னவனை குறைசொன்னதும், சுருக்கென்று குத்த, சுயத்திற்கு வந்தாள் பல்லவி.

“நீங்களும் அந்த வீணாப்போன ஜாதகம், ஜோசியம் எல்லா நம்பாம, அன்பு அனைத்தையும் வெல்லும்னு புரிஞ்சுகிட்டு இவர் சொல்படி நடந்திருந்தா, உங்க பொண்ணு இன்னைக்கு உயிரோட இருந்திருபாளோ என்னமோ!” பதிலடி கொடுத்தாள்.

உணர்ச்சிவசப்பட்டு யமுனா உயிரோடு இருப்பதை சொல்லிவிடப் போகிறாள் என்று அஞ்சியவன், “பல்லவி! இவங்ககிட்ட ஏன் வீண்பேச்சு! வா கிளம்பலாம்!” நாசுக்காய் பேசி தப்பிக்க முயன்றான்.

அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறுகிறான் என்று கர்வம் கொண்ட சுதா, “நீ கல்யாணம் செஞ்சுகிட்டதுனால நான் அமைதியாகிட்டேன் நினைக்காத மாமா! என் அக்கா குழந்தையை உன்கிட்டேந்து எப்படி வாங்குறதுன்னு எனக்கு தெரியும்!” எச்சரித்தாள் சுதா.

மறுபடியும் மதுமிதா பேச்சை எடுக்கும் மகளை தடுக்க நினைத்த மீனாக்ஷி, “அவன் உங்க அக்காவுக்கு செய்த துரோகத்துக்கு தான் மனவளர்ச்சி இல்லாத குழந்தையை பெத்து கொடுத்திட்டு போயிருக்கா மா நம்ம யமுனா; அவனும், அவன உத்தமன்னு ஜால்ரா அடிக்குற இவளும் சேர்ந்து அந்த பைத்தியத்தை வளர்க்குறாங்களோ, இல்லை கூட சேர்ந்து பைத்தியமா சுத்த போறாங்களோ; அது அவங்க பாடு!” இடித்துக் காட்டி கழுத்தை நொடித்தாள்.

மதுமிதாவை பற்றி குறைகூறியதும், “என் அம்மு எனக்காக விட்டுட்டு போயிருக்க பொக்கிஷம் என் மதுமிதா!” குணாவின் நரம்புகள் புடைக்க, அதை உணர்ந்த பல்லவி, அவன் உள்ளங்கையை அழுத்தம் கொடுத்து தடுத்தாள்.

சுதாவை ஏறிட்டவள், “மகள் பெற்றெடுத்த குழந்தையை பாரமா நினைக்குற உங்க அம்மா பக்கத்துல வளருறது மதுமிதாவுக்கு நல்லதா; இல்லை உலகமே எதிர்த்தாலும், என் மனைவி எனக்காக விட்டுட்டுபோன பொக்கிஷம்னு போராடுற இவர்கிட்ட வளருறது நல்லதா! நிதானமா சிந்திச்சு பாரு! அப்போ என் முடிவு சரின்னு நீயே புரிஞ்சிப்ப!”, தீர்கமாய் கேட்டு, புறப்படலாம் என்று தன்னவனுக்கு ஜாடை காட்டினாள்.

பல்லவியின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்து நிற்பவளை கர்வப் புன்னகையுடன் நோக்கினான் குணா.

“தேவையில்லாம என் வாழ்கையில தலையிட்டு உன் நேரத்த வீணாக்காத! அப்புறம் என் மனைவி என்னோட குடும்பம் நடத்தாம ஊர் பிரச்சைனையெல்லாம் இழுத்துட்டு வரான்னு உன் ஆசைநாயகன் கிஷோர் உன்ன விவாகரத்து செஞ்சிடுவான்!” என்று சீண்டியவன்,

பல்லவியின் தோளினை சுற்றிவளைத்து, “உன் விவாகரத்து சம்பந்தமா சட்டரீதியான உதவி ஏதாவது தேவைபட்டா தயங்காம என் மனைவிகிட்ட கேளு. உன் மேல இருக்குற பாசத்துல, ஃபீஸ் கூட வாங்கமாட்டா!” கம்மிய குரலில் சொன்னவன்,

“என்ன திருமதி.பல்லவி குணசேகரன் பி.ஏ.பி.எல்!” நான் சொல்றது சரிதானே!” என்று கண்சிமிட்டினான்.

மென்மையாய் அரவணைத்த அந்த கரங்கள் கொடுத்த நம்பிக்கையை ஒரு நொடியில் சுக்குநூறாய் உடைத்தது அவனின் எள்ளல் பார்வை.



“இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலையா குணா!” காரில் ஏறி அமர்ந்தவள் நொந்துப்போனாள்.

“நம்பிக்கையா!” உரக்க சிரித்தவன், “உன்னையும் அந்த குட்டிச்சாத்தானையும் இந்த ஜென்மத்துல நம்பமாட்டேன்!” தீர்மானமாய் சொல்லி,

“அவங்க முன்னாடி நீ எனக்கு மனைவியா நடிச்ச! பதிலுக்கு நானும் உனக்கு புருஷனா நடிச்சேன்! அவ்வளவுதான்!” என தெளிவுபடுத்தினான்.

இத்தனை அவநம்பிக்கை படைத்தவனிடம் வாதம் செய்வது பயனற்றது என்று தன் வலியை மறைத்தவள், “அது சரி! புருஷனா நடிக்க உங்களுக்கு சொல்லித்தரணுமா; அதான் ஏற்கனவே நிறைய முன்னனுபவம் இருக்கே!” நக்கலாய் பேசி, முகத்தை திருப்பிக்கொண்டாள்.

‘திமிர் பிடித்தவள்!’ மனதில் ஏசியவன், கவனத்தை சாலையில் செலுத்தினான்.

அவர்களை ஆவலாக எதிர்பார்த்திருந்த சாவித்ரி மனோகரிடம், பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்று பல்லவியே மழுப்பலாக பேச, பெண்மானின் நடிப்பை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தான் குணா. மனமுடைந்த சாவித்ரியிடம், அவர்களை விட்டுப்பிடிக்கலாம் என்று மென்மையாக பேசி தேற்றினாள். பல்லவியின் பக்குவத்தையும், குணாவின் அலட்சியத்தையும் கவனித்தவருக்கு, மருமகள் மேல் நம்பிக்கை கூடியது.

அன்றிரவு உறங்க வந்தவர்கள் வழக்கம்போல சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். கட்டாயத்தால் பல்லவியிடம் உறங்கின மதுமிதாவுக்கு அதுவே பழகிப்போனது. பல்லவியின் இதமான அரவணைப்பில் சொகுசாக துயில் கொண்டாள் தாரகை.

மதுமிதாவை காட்டி மாமனை மிரட்டியவளுக்கும் அவ்விளையாட்டு அலுத்துப்போனது; அறையின் சுவற்றோரம் இருந்த குறுகிய சோபாவில் உடம்பை வளைத்து உறங்குவதற்கு அவஸ்த்தைபடும் கணவனை அவளும் அலட்சியம் செய்யவில்லை.

படுத்திருந்த இடம் கொடுத்த அசௌகரியத்தை தாண்டி, அவன் மனதில் உதித்த குழப்பங்கள் அவனை உறங்கவிடாமல் பாடாய்படுத்தியது.

“உண்மையை சொல்லு பல்லவி! மதுமிதா என்னோடதான் இருக்கணும்னு சொல்ற; ஆனா அவள என்கிட்டேந்து பிரிக்க நினைக்கறவங்களோட உறவாடுற; உன் பேச்சுக்கு உடன்படலேன்னா, உடனே யமுனாவ காட்டி பயமுறுத்துற; உன் நோக்கம்தான் என்ன?” விரக்தியில் வினவினான்.

‘இப்படி மூச்சுவிடாமல் கேள்வி கேட்பதற்கு பதில், நம்பி என்னிடம் உண்மையை சொல்லுங்களேன் குணா’ என்று ஏங்கிய மனதின் ஆசையை புறம்தள்ளியவள்,

“அவசியம் தெரிஞ்சுக்கணுமா குணா!” கேட்டு பத்தடி தூரத்தில் சயனித்திருக்கும் அவனை ஆழமாய் பார்த்தாள்.

மனம்திறந்து பேசுவாளோ என்று அவனும் அவளை வெறித்துப் பார்த்தான்.

“அப்போ! இங்க வாங்க!” மெத்தையை தட்டிக்காட்டி வாஞ்சையாக கண்சிமிட்டினாள்.

வம்பு செய்யும் அவள் குறுகுறு விழிகளுக்கு சுட்டெரிக்கும் பார்வையால் பதில்சொல்லி புரண்டுபடுத்தான்.

“உரக்க பேசினா, குழந்தை முழிச்சிடுவாளேன்னு நல்லெண்ணத்துல கூப்பிட்டேன்! நான் வேணும்னா அங்க வரட்டுமா மா…மா…மாமா!” மேலும் சீண்டியவளை அவன் கண்டுகொள்ளக்கூட இல்லை.

மாமனை கடுப்பேத்திய கிளர்ச்சியில் குளிர்ந்தவள் மனஸ்தாபங்களை மறந்தாள். ‘உங்கள் தவத்தை விரைவில் கலைக்கிறேன் கணித பேராசியரே!’ மனதில் சபதம் செய்துகொண்டு தர்மபத்தினியும் நித்திரை கொண்டாள்.



வழக்கம்போல சுதந்திரக் காற்று சுவாசிக்க வெளியே புறப்பட தயாராகி கொண்டிருந்தான் குணா. அறை கதவை வேகமாக திறந்து உள்ளே வந்தவள்,

“புருஷனா நடிக்கறவங்களோட குழந்தையை எல்லாம் என்னாலையும் பார்த்துக்கு முடியாது! எனக்கும் அலுவலகத்துல முக்கியமான வேலையிருக்கு!” படபடவென்று பொறிந்துவிட்டு மதுமிதாவை அவன் கைகளில் திணித்தாள்.

மதுமிதாவை தன் கண்முன்னே திட்டிவிட்டு, மறைவில் அவளை கொஞ்சிக் குலாவுவதை பலமுறை கண்டவனுக்கு, பல்லவியின் செயலில் கோபம் வரவில்லை. கடுகடுக்கும் அவள் முகத்தை ரசித்தவன்,

“அப்போ மதுமிதாவுக்காக தான் என்ன கல்யாணம் செய்துகிட்டேன்னு சொன்னது எல்லாம் வெளிவேஷமா?” நமுட்டு சிரிப்புடன் வம்பிழுத்தான்.

பல்லவியுடன் பொழுதுகளை கழித்து பழகிவிட்ட மதுமிதா, மீண்டும் அவளிடம் போக எத்தனிக்க, குழந்தையை பொருட்படுத்தாது தன்னவனையே சுட்டெரிக்கும் பார்வையால் விழுங்கி கொண்டிருந்தாள் பல்லவி.

குழந்தையை கண்பார்க்க தூக்கியவன், “வக்கீல் அம்மாவுக்கு, நேற்று அவங்க எதிர்பார்த்த ஆதாரம் ஒண்ணும் கிடைக்கலன்னு கடுப்பு டா மதுகுட்டி. நீ பாட்டியோட விளையாடு. நம்ம ரெண்டு பேரும் இன்னும் ஒரே வாரத்துல அமெரிக்கா போயிடலாம், சரியா!” என்றதும்,

மதுமிதாவும் எல்லாம் புரிந்ததுபோல, “மா…மா…மாமா!” என்று அவன் கழுத்தை சுற்றி செல்லம்கொஞ்சினாள். பதிலுக்கு குணாவும் குழந்தையை முத்தமழையில் நனைத்து இமைக்காமல் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பவளை வெறுப்பேற்றினான்.

ஜன்னலோரம் இருந்த மேஜை அருகே வேகநடையிட்டவள், அங்கிருந்து ஒரு தாளினை எடுத்து வந்து, அவன் முகம் அருகே நீட்டினாள்.

“உங்களுக்கு சாதகமா வேலை செஞ்சேன்னு, இத்தனை நேரத்துக்கு உங்க மாமா பொண்ணு என் சீனியர்கிட்ட போட்டு கொடுத்திருப்பா. அவங்களா என்ன வேலையைவிட்டு துரத்துரத்துக்கு முன்னாடி, நானே ராஜினாமா செய்தா கொஞ்ச நஞ்ச மரியாதையாவது மிஞ்சும். அதுக்காகதான் கிளம்புறேன் போதுமா!” எரிந்துவிழுந்தவள்,

“இப்படி என்மேல நித்தியம் சந்தேகப்படாம, விசா வாங்குற வழியப்பாருங்க!” திட்டவட்டமாய் உரைத்தாள்.

தன் காரியம் சாதிக்க, அவள் எந்த நிலைக்கும் இறங்கி வேலை செய்வாளென்று தீர்கமாய் கண்டறிந்தவனுக்கு, அவள் பேச்சில் நம்பிக்கை வரவில்லை.

“உளவு பார்க்க வரவங்களுக்கு எல்லாம் எந்த பிரிவுல விசா எடுக்கணும்னு உங்க சட்டம் சொல்லுது திருமதி.பல்லவி குணசேகரன்!” இளக்காரமாய் கேட்டு நகர்ந்தான்.

பதிலளிக்காமல் அவள் எதிர்திசையில் நகர, விட்டது தொல்லை என்று பெருமூச்சுவிட்டான். போன வேகத்தில் திரும்பி வந்தவள், அவன் எதிரே வந்து நின்றாள். அவன் தாடையை இறுக பிடித்து முகத்தை திருப்பியவள், கன்னத்தில் அழுந்த இதழ்கள் பதித்து,

“உளவு பார்க்க வந்தவள் உம்மா கொடுத்த குற்றத்திற்காக பிணைகைதியா அமெரிக்கா அழைச்சிட்டு போக சிறப்பு பிரிவுல ஒரே நாளுல விசா எடுக்கலாம் மிஸ்டர்.குணா.” அதிகாரமாய் கூறினாள்.

பல்லவி விளையாட்டு காட்டியதை போல, மதுமிதா “மா…மா…மாமா!” என்று சிரிப்பு முத்துக்களை சிந்தினாள்.

குழந்தையின் சிரிப்பில் தோற்றவள், “மதுமிதாவ அத்தைகிட்ட விட்டுட்டு போங்க! நான் மதியத்துக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்!” தாழ்ந்த குரலில் சொல்லி, குழந்தையின் நெற்றியில் முட்டினாள்.

‘நவரச நாயகிே!' கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே ஏசியவன், சட்டை காலரில் அவள் குத்திய அடையாள முத்திரைகளை கவனிக்கவில்லை.

மதுமிதாவை கிழே இறக்கிவிட்டவன், அம்மாவிடம் வெளியே செல்வதாக சொல்லி புறப்பட, குணாவின் தும்பை பூ நிற சட்டை காலரில் அந்த அடையாள முத்திரைகளை கவனித்த கமலாம்மா, பெரும் சிரமத்துடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “தம்பி! வேற சட்டை மாத்திட்டு போ பா!” என்றாள்.

“ஏன்! இதுக்கு என்ன?” மேலும் கீழுமாய் அளந்தவனை, கண்ணாடி முன் நிறுத்தி சட்டை காலரை இழுத்துக்காட்டினாள்.

அடர்சிவப்பு நிற உதட்டுச் சாயத்தைக் கண்டவனுக்கு, நாயகியின் ஆட்டம் புரிந்தது. சினம்கொண்டவன் வாய்திறந்து விளக்கும் முன், கமலாம்மாவுடன் சேர்ந்து, அங்கிருந்த சாவித்ரியும், மனோகரும் புன்முறுவலிட, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அசடுவழிவதை தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

திட்டமிட்டு தன்னவனை சீண்டியவளோ, சாமர்த்தியமாக அறையின் கதவை உள்புறமாக தாளிட்டு கொள்ள, அவள் வெளியே வரும்வரை அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. வேண்டுமென்றே தாமதமாக குளித்துமுடித்து வந்தவளுக்கு, தன்னவனை ஹாலில் கண்டதும் வெற்றிப் புன்னகையில் முகம் மலர்ந்தது.

“நான் ரெடி குணா! கிளம்பலாமா?” புடவையின் மடிப்பை சரிபார்த்தபடி அனைவரின் முன்னிலையிலும் இயல்பாய் வினவினாள்.

“வெளிய போறீங்களா!” சாவித்ரி குழப்பமாய் விசாரிக்க,

“என்ன குணா! அத்தைகிட்ட சொல்லலியா!” என்றவள், “ஆமாம் அத்தை! அலுவலகத்துல என் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு, அப்படியே எனக்கு திருமதி.பல்லவி குணசேகரன்னு புதுசா விசா எடுக்கற வேலையா போயிட்டு வரோம்!” உரிமையோடு பேசி, தன்னவனை பார்வையால் ஊடுருவினாள்.

“அப்படியா! ரொம்ப சந்தோஷம் மா!” நெகிழ்ந்தவள், மருமகளின் கூந்தலில் மல்லிச்சரம் சூட்டி அரவணைக்க,

அறைக்குள் வேகநடையிட்டவன், “பல்லவி!” பெருங்குரலில் அரற்றினான்.

ஒருமணி நேரமாக கோபத்தை அடக்கி அமைதியாக காத்திருந்தவனின் மூளைமட்டும் மின்னல் வேகத்தில் திட்டங்கள் தீட்டியது. தன் தேவைக்காக எதையும் செய்ய துணிந்தவளை இந்தியாவிலேயே விட்டுவிட்டு போனால், யமுனாவின் வாழ்க்கைக்கு ஆபத்தென்று உணர்ந்தவன், அவளை தன்னருகிலே வைத்துக்கொள்ள தீர்மானித்தான்.

குறும்புகளை கண்டு மிரண்ட சிங்கத்திடம் பணிந்து போனால் தலைக்குமேல் ஏறுவான் என்று அறிந்தவள் அதட்டலாக,

“என்ன மிஸ்டர் குணா! அடையாள முத்திரை நல்லா வேலை செய்திருக்கு போலவே!” உரைத்து, “இனி என்கிட்ட சமூக இடைவெளி கடைப்பிடிச்சாலும், இப்படித்தான் நீங்க எதிர்ப்பார்க்காத இடத்துல எல்லாம் அடையாள முத்திரைகள் பூக்கும்” காதலாய் கண்சிமிட்டினாள்.

அவளை வெட்டும் பார்வையில் நோக்கியவன், தன்னருகில் அமரும்படி கண்ணசைத்து, மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.

‘என்னடா இது அதிசயம்!’ என்று யோசனையாய் அவளும் அடக்கவொடுக்கமாக அருகில் அமர்ந்தாள்.

“இதெல்லாம் விசா எடுக்க வேண்டிய விண்ணப்பங்கள். உனக்கு ஈமெயில் செய்யறேன். ஊருக்கு வரணும்னு விருப்பமிருந்தா, அத்தனையும் பூர்த்தி செய்துட்டு, தேவையான பணத்துக்கும் ஏற்பாடுசெய். கையெழுத்து போட்டுத்தரேன்.“ என்றவன்,

அவள் இதழருகே ஒற்றை விரலை சுழற்றி, “உன் வாதத்திறமையை எம்பசில காட்டி திருமதி.பல்லவி குணசேகரன்னு விசா வாங்கிட்டு வா!” சவால்விட்டு எழுந்தான்.

அவன் கரங்களை பிடித்து தடுத்தவள், “என்ன இங்கேயே விட்டுட்டு போனா உங்களுக்கு பிரச்சனைன்னு பயந்துட்டீங்களா மிஸ்டர்.குணா!” அதிகாரமாய் கேட்க,

‘மனவோட்டத்தை கூட இவளிடம் மறைக்க முடியவில்லையே!’ தடுமாறியவன், “பயமா!” ஏளனமாக சமாளித்து, “அது உனக்கிருந்தா என்கிட்ட தனியா மாட்டிக்கணுமான்னு நீ யோசி!” அழுத்தமாய் எச்சரித்து நகர்ந்தான்.

தந்திரங்கள் செய்து தன்வசப்படுத்துகிறாள் அவள்;

தடைகள் விதித்து தட்டிக்கழுக்கிறான் அவன்;

தாயுமானவனுக்கு தொந்தரவுகள் தரும் தலைவிக்கும்,

தாரம் என வந்தவளை தண்டிக்க நினைக்கும் தலைவனுக்கும்,

தனிக்குடித்தனம் தான் தீர்வா இல்லை தொல்லையா - தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…
 




Last edited by a moderator:

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,187
Reaction score
2,380
Location
USA
தொடர்ந்து கதையை படித்து உற்சாகமூட்டும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்:love:🙏

உறவாய் வந்தவர்களிடம் உண்மையை சொல்கிறாள்;

உபத்திரம் செய்பவர்களிடம் சண்டையும் போடுகிறாள்– ஆனால்

உயிராய் நேசிப்பவனிடம் ஊமை நாடகமாடுவது தான் ஏனோ?


சுயமரியாதையா? சுயநலமா?


@ப்ரியசகி @KalaiVishwa @Raman @Shasmi @Shaniff @Mrs beenaloganathan @Chittijayaraman @AkilaMathan @Resh @Priyakutty @chitraravi @Surya*** @Sai deepa @Sasi @Shimoni @DhruvAathavi @Rajiprabha @e anandhi @vapoorani @Vijayasanthi @Viji Ramachandran @Geethazhagan

உங்கள் பாசமென்னும் கருத்து மழையில் நனைய ஆவலுடன் 🦹‍♂️🦹‍♀️போட்டி பள்ளத்தாக்கில் காத்துக்கொண்டிருக்கும்,

உங்கள்
அனாமிகா 50:love:🙏
 




Last edited by a moderator:

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,187
Reaction score
2,380
Location
USA
Nice epi sis...
நன்றிகள் பல தோழி! தொடர்ந்து படித்து ஊக்குவியுங்கள் 🙏 :love:
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
2,877
Reaction score
2,830
Location
Salem
பல்லவி கிட்ட குணா வே பேசி ஜெயிக்க முடியாது இதுல இந்த சுதா லாம் எம்மாத்திரம்....🤭😂

பட் பவி கேட்ட கேள்வி சூப்பர்....😇

குணா அவங்கள நம்பல அதுசரி நம்பற மாதிரியா நம்ம பவி நடந்துக்கறாங்க....
அவர மிரட்டிட்டே இருக்க வேண்டியது....😅

இந்த சாங் அ நம்ம குணா அன்ட் பவி க்கு டெடிகேட் பண்றேன்....😍🤭❤


விசா கிடைக்குமா.... கிடைக்கும்....
அங்க போய் சண்டை போடுங்க....🥰🤭

நைஸ் எபிசோட் டியர்....😍❤
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
15,180
Reaction score
37,610
Age
37
Location
Tirunelveli
Haii Pallavi 🌺🌺🌺🌺


Raja thanthiram anaithum veenagi vittatho🧐🧐🧐🧐

Guna ku ethum issue illaiye🤔🤔🤔

Over a maturity aitaano😂😂😂😂😂

Nalla irukku update 👍
 




Last edited:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,311
Reaction score
1,599
Location
USA
எப்பவும் போல சூப்பர் எபிசோட்🥰🥰🥰

ஐயோ சுதா போச்சா🤭🤭🤭🤭, பவி சொன்னா ஒரு பாய்ண்ட் போதும் நல்ல யோசி அவளோ தான் சொல்லிடேன்....

அடேய் குணா, என்னடா நீ இப்படி இருக்க🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

உன்ன வெச்சிட்டு ஒரு ஊறுகாய் கூட போட முடியாது🙆🏻🙆🏻🙆🏻🙆🏻

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
1,915
Reaction score
3,335
Location
Germany
ரொமண்டிக் லுக் விடாம எப்ப பாரு டெரர் லுக் விட்டுகிட்டு உன்னை எந்த லிஸ்டில சேர்க்கிறதுன்னே தெரியல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இந்த மரக்கட்டைய போய் விழுந்து விழுந்து லவ் பண்றீயேம்மா. 😩😩😩😩

ஒவ்வொரு முறையும் பல்பு வாங்குறது காணாதுபோல இப்ப சவால் வேற விடுறாரு🤣🤣🤣. இதெல்லாம் எங்க பவி செல்லத்துக்கு ஜுஜுபின்னு பாவம் இந்த குணா சாருக்கு தெரியலயே🥱🥱🥱🥱

ஆனாலும் குணாவ பாராட்டியே ஆகனும் எத்தனை முறை பல்பு வாங்கினாலும் சளைக்காம பவிக்குட்டிய சீண்டிறானே👏👏👏
 




Last edited:

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,187
Reaction score
2,380
Location
USA
பல்லவி கிட்ட குணா வே பேசி ஜெயிக்க முடியாது இதுல இந்த சுதா லாம் எம்மாத்திரம்....🤭😂

பட் பவி கேட்ட கேள்வி சூப்பர்....😇

குணா அவங்கள நம்பல அதுசரி நம்பற மாதிரியா நம்ம பவி நடந்துக்கறாங்க....
அவர மிரட்டிட்டே இருக்க வேண்டியது....😅

இந்த சாங் அ நம்ம குணா அன்ட் பவி க்கு டெடிகேட் பண்றேன்....😍🤭❤


விசா கிடைக்குமா.... கிடைக்கும்....
அங்க போய் சண்டை போடுங்க....🥰🤭

நைஸ் எபிசோட் டியர்....😍❤
ரொம்ப சரியா சொன்னீங்க Priyakutty:LOL::LOL::LOL::LOL:
பல்லவி அங்க போனதே சுதாவை கலாய்க்கத் தானே🤭🤭🤭🤭
பவி மிரட்டுறது மட்டும்தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியுதா; குணா எப்படியெல்லாம் வெறுப்பேத்தறான். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் இல்லை; 💁‍♀️💁‍♂️

விசா எல்லாம் அவள் அசால்ட்டா வாங்கிடுவா; அமெரிக்காவுல இவங்க சண்டையில மதுகுட்டி பாடு தான் திண்டாட்டம்.🙆‍♀️👧🙆‍♂️

சூப்பர் பாட்டு தோழி! என்ன ஒண்ணு, அந்த பாட்டுல ஹீரோவுக்கு கொஞ்சமாவது ரொமான்ஸ் வரது. நம்ம குணாக்கு அது கூட இல்ல😆😆

நன்றிகள் பல தோழி:love:🙏
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top