• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாஞ்சாலியின் பாத அணிகளை கடவுளாகிய கண்ணன் சுமந்தது ஏன் தெரியுமா.?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
படித்ததை பகிர்கின்றேன்..!

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. `ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். `

தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான்.


துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.

ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், ``அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார்.

அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.

சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது.

`பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்'என்று நடுங்கினார்கள்.

பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள். `இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா?' இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.

பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான்.

ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது.


ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது. அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது.


திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான். பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.

பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள்.

அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி.


யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.

பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார்.


நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.

பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார்.


அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.

``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.

``ஓ, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்துவைத்திருக்கிறேன்’’ என்றான்.

கண்ணன் சொன்னதுதான் தாமதம்... திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா! இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதா?என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.

``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா..." என்றான் கண்ணன். பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன்.

நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன்.

அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’என்று வினவினார்.

பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன.

மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top