Hi friends
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன்
SM ஈஸ்வரி
கதை நடக்கும் காலகட்டம் எண்பதுகளின் தொடக்கம் மக்களே!
மழை பொய்த்து வறட்சியின் கொடுங்கோல் ஆட்சிக்காலம் அது. விவசாயம் பொய்த்துப் போக பிழைப்பு தேடி கிராம மக்கள் புலம்பெயர்ந்த காலகட்டம் அது. கைபேசி, கால் பேசி, இன்டர்நெட், இமெயில் மறந்து இக்கதையோடு பயணிப்போம் நண்பர்களே!
உரல், உலக்கை
பஞ்சாரம்
அடைக்கோழி
விதைப்பெட்டி
திருகை கல், ஆட்டு உரல்
2
படுக்கைவிட்டு எழுந்தவள், குடிசை வீடுகளுக்கென இலவசமாக வழங்கப்பட்ட மின்சாரத்திட்டத்தின் கீழ் ஒளிரும், ஒற்றை குண்டு பல்பின் விசையை இருளில் துழாவி ஒளிறவிட, சட்டென கண்கள் கூசியது.
மூலையில் மண்சட்டி ஓட்டில் அடைகூட்டி வைத்திருந்த அடைக்கோழி உடனே சிறகை சிலிர்த்து கொக்கறிக்க, முந்தானை விலக்கி, முகம் பார்க்கும் பால்குடிக்கும் பிள்ளையாய், அதன் அடிவயிற்றிலிருந்து, வெளிச்சம் பார்த்து முழுதாக ஒருநாள் கூட ஆகாத கோழிக்குஞ்சின் தலை, கருப்பு வட்டக்கண்களோடு கோலிக்குண்டு சைசில் எட்டிப்பார்த்தது. உடனே சொன்ன பேச்சு கேக்கமாட்ட என்பதுபோல் அலகு கொண்டு தன் சிறகடியில் தள்ளி காபந்து பண்ணியது தன் பிள்ளையை.
“உம்பிள்ளைகிட்ட யாரும் வரல. சும்மா கெட!” கோழிக்கொரு அதட்டலைப் போட்டாள். குஞ்சு பொறித்த அடைக்கோழிகிட்ட போறதும் ஒன்னுதான், தூங்குற சிங்கத்த உசுப்பி விடுவதும் ஒன்னுதான்.
கண்ணைக் கசக்கி மூக்கும், கண்ணும் ஒரு சேர ஒழுக, அழுத பிள்ளையை வாரியணைத்து, முந்தானையால் கண்ணையும், மூக்கையும் துடைத்தவள், முதுகைத் தட்டிக்கொடுத்து சாமாதானம் செய்தாள். இடுப்பில் வைத்துக் கொண்டே, அடுப்போரமாகக் கிடந்த பருத்திமாரை ஒருபிடி அள்ளி, இரண்டாக மடித்து ஒடித்து, அடுப்பில் திணித்தாள். அதன்மீது சீசாவிலிருந்த சீமைத்தண்ணியை, மூடியைத்திறந்து சிறிதுவிளாவி பற்றவைத்தாள். பால் சட்டியை அடுப்பில் ஏற்றி, இரவில் காய்ச்சிவைத்த பாலை விரல்சூடு பதத்திற்கு மீண்டும் சூடேற்றி, சீனி கலந்து ஆற்றி, உறிஞ்சு டம்ப்ளரில் ஊற்றினாள். பிள்ளையை பாயில் உட்காரவைத்து கையில் கொடுக்க, சமர்த்தாக பிடித்துக் கொண்டது. சரட்டென காற்று சத்தம் வரும்வரை உறிஞ்சுவிட்டு அவள் முகம் பார்த்து சிரிக்க, கன்னம் வழித்து,
“பட்டுக்குட்டி, தங்கப்பிள்ள, எம்பவுனு…” என கொஞ்சியவள் காலைப் பொழுதை உற்சாகமாகத் துவங்கிவைத்தது இரண்டு வயது மழலையின் சிரிப்பு. பக்கத்தில் படுத்திருந்த இன்னொன்று பாயை நனைத்திருக்க, அசையக்கூட இல்லை. நல்ல தூக்கம்.
“பொட்டாட்டம் உக்காந்துக்கோ. வாசலத் தெளிச்சுட்டு வர்றே” என்றவளிடம், என்ன புரிந்ததோ, வயிறு நிறைந்ததில், தலையாட்டி உத்தரவு கொடுத்தது.
கையூன்றி எழுந்தவள், களைந்த தலைமுடியை அவிழ்த்துவிட்டாள். குளத்து கரம்பைமண் தயவில் கூந்தல் இடைதாண்டி கத்தையாகத் துவண்டது.
“நாமளும்தான் என்னென்னவோ தேச்சுப் பாக்குறோம். முடி பொடனியத் தாண்டமாட்டேங்குது. வெறும் கரம்பமண்ண தேக்கிறா. முடி மொழங்காலுக்கு அடிக்குது.“
ஊர்ப்பெண்களின் வயிற்றெரிச்சலை வாரி முடிந்துகொள்ளும் கூந்தலை, சடைப்பின்னி முடியத்தான் நேரமில்லை. ஒரு வேளை மனதில்லையோ என்னவோ? கூந்தலை விரித்து விட்டவள், விரலாலே சிக்கெடுத்து, இரண்டு தட்டுத்தட்டி அள்ளி மீண்டும் கோடாலிக்கொண்டையாக முடிந்தாள்.
முந்தானையை உதறி, சேலைக் கொசுவத்தோடு சேர்த்தெடுத்து இடுப்பில் செருகிக்கொண்டே வெளியே வந்தாள்.
விடிவெள்ளி மட்டும் முளைத்த மையிருட்டு. கோழி கூவும் சத்தத்திற்கு இணையாக ஆங்காங்கே சலக் சலக் என வாசல் தெளிக்கும் சப்தமும், உரலும், உலக்கையும் மோதிக்கொள்ளும் சத்தமும் கலந்துகட்டி பொழுது புலர்ந்ததை முரசறிவித்தது. காலும், கையும் பழக்கமான வேலையில் தன்னால் இயங்க, போனிச்சட்டியில் சாணியைக் கரைத்து வாசலெங்கும் தெளித்துக் கொண்டிருந்தாள்.
“என்னடீ… அழகம்ம… மறுவடியும் பொட்டப்புள்ளையாம்ல?”
“ஆமாத்தே!” கை சாணியை தெளித்துக் கொண்டே வாய் பதில் சொல்லியது.
“சாராயங்காச்சுறவன் வேண்டாம்னு சொன்னா கேட்டீயா? இப்பப்பாரு… காடாறு மாசம், நாடாறு மாசம்கற மாதிரி உள்ள பாதிநாளு, வெளிய பாதி நாளுன்னு இருக்கான். இதுவும் உந்தலையில விழுந்ததுதான். இந்தப்புள்ள பொறந்த நேரமாவது திருந்துறானானு பாக்கலாம்?”
“மனுஷனா இருந்தா, ஒன்னு சொந்த புத்தி வேணும். இல்லைனா… சொல்புத்தி வேணும். ரெண்டும் இல்லாதவனுக்கு புள்ள பொறந்த நேரம் மட்டும் என்னத்தே செய்யப்போகுது?” சடைத்துக் கொள்ள,
“நீ சொல்றதும் சரிதான். முட்டு வீட்லயே சுணங்குன புள்ள முழிச்சா பாக்கப்போகுது. எல்லாம் உன் தலையெழுத்து. ஈசன் எழுதுனத மாத்தியா எழுதமுடியும்?”
“அதுக்குதான் குடும்பக்கட்டுப்பாடு பண்ணச் சொல்லிட்டே.”
“யாத்தே!” என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தவள், “தெரிஞ்சா உன்னய பேயோட்டிருவானேடீ?” அந்த கருக்கலிலும் அவள் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
வாசலை தெளித்து முடித்தவள், தென்னைமாற்றை எடுத்து, உள்ளங்கை கொண்டு விளக்குமாறின் தூரைத்தட்டியவள், பரபரவென வாசலை கூட்ட ஆரம்பித்துவிட்டாள்.
“அவன் ஜெயில்லர்ந்து வர்றன்னைக்குப் பாத்துக்கலாம்த்தே. அதுக்காக அடுத்தும் பொட்டப்புள்ளயா போச்சுன்னா? எங்கம்மா பட்டது பத்தாதா?”
“என்னமோ நீ தைரியமாத்தே சொல்ற. எனக்குதான் அவன நெனச்சா வதக்குங்குது. அந்த கருப்பசாமிதான் ஒனக்குத் தொண. ஆட்டுச்சாணி எடுத்துக்கறே. தட்டுக்கூடை, மொறமெல்லாம் மொழுகனும்” என சாணியெடுக்க வந்தவர் பின்பக்கம் ஆட்டுக் கொட்டத்தினுள் நுழைந்தார். ஆள் அரவத்தில் ஆடுகள் சலசலத்தன.
வாசல் தெளிக்க, வீடு மொழுகவெல்லாம் பசு மாட்டுச்சாணம். முறம், பஞ்சாரம், தட்டுக்கூடை, விதைப்பெட்டி, வாய்ப்பெட்டி மொழுக எல்லாம் ஆட்டு சாணம்தான். அதுதான் நல்ல இறுக்கம் கொடுக்கும்.
கூட்டிப் பெருக்கியவள், வாசலடைக்க கோலம் போட்டாள். அவள் ரசித்து, நிதானமாகச் செய்யும் ஒரே வேலை. தன்னை அலங்கரிக்கின்றாளோ இல்லையோ காலையில் பசேலென வாசல் தெளித்து, வெள்ளை மாவில் வாசலடைக்க கம்பிக்கோலம் போட்டால்தான் அந்தப் பொழுது விடியும் நம் அழகம்மைக்கு. அதற்குள் பிள்ளையும் எழுந்து வந்து நிலைப்படியை பிடித்து நின்றது.
நாலு பக்கமும் மண் சுவர் வைத்து, தென்னங்கூரை வேய்ந்து, அடுப்படி, படுக்கையறை, வரவேற்பரை சகலமும் நானே என எல்லாமும் உள்ளடக்கிய ஒரே அறைதான் வீடு. அதற்கு முன் வாசல், பின்வாசல் என இரண்டும் உண்டு. பின்வாசல் வழியே போனால் ஆட்டுக்கொட்டம். முன்பக்கம் வெளியே இரண்டு பக்கமும் திண்ணை. அவ்வளவே… பெரிதாக எந்த வர்ணனையும் தேவைப்படாத ஓலைக் குடிசை. வீட்டிற்கு பின்னால் சுற்றிலும் தென்னைமட்டை கொண்டு வேலி போடப்பட்ட ஆட்டுக் கொட்டம்.
பாரதியார் கேட்டதுபோல் காணி நிலம் மட்டும்தான். கிணறும், நாலு தென்னைமரமும் இல்லாத, ஊரைவிட்டு சற்று தள்ளிய ஒதுக்குப்புறமான ஒற்றை குடிசை வீடு.
பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, பின்னால் வந்தாள். இவளைப் பார்த்ததும் எல்லா ஆடுகளும் கணைத்து காலை வணக்கம் வைத்தது. ஐம்பது ஆடுகளுக்கு மேலிருக்கும்.
பிள்ளையை இறக்கிவிட்டு ஆடுகளிடம் வந்தாள். தலை தடவி, முகம் தடவ அதிலேயே அவளது ஸ்பரிசம் உணர்ந்த ஆடுகளின் சப்தம் இப்பொழுது குதூகலமாக ஒலிக்க, அதன் மகிழ்ச்சி மற்றவைகளையும் தொற்றிக் கொண்டதுபோல் எல்லா ஆடுகளும் ஒரு சேரக்கத்த, அதுவே காலை நேர பூபாளம் அவளுக்கு.
வெட்டி வைத்திருந்த அகத்திக் குழை, வேப்பங்குழைகளை அள்ளிவந்து போட்டவள், எல்லாவற்றிற்கும் தண்ணீர் வைத்தாள். அதற்குள் கிழக்கு வெளுத்து, வந்தேன் வந்தேன் என கட்டியம் கூறி, இருளைவிரட்டி சூரியனும் தலைகாட்ட, அன்றைய நாள் துவங்கியது அழகம்மைக்கு.
ஆடுகளை கவனித்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த பிள்ளையையும் எழுப்பி, ஈர உடையை மாற்றி, முகம் கழுவிவிட்டு, பிள்ளைகளை இடுப்பில் ஒன்றும், கையில் ஒன்றும் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கினாள். பிள்ளைகளின் காலைப்பசிக்கு பனியாரம் வாங்கிக்கொடுக்க பனியாரக்காரம்மா வீடு நோக்கி நடையை எட்டிப்போட்டாள்.
வழிநெடுக எதிர்ப்பட்டவர்களின் விசாரிப்பிற்கு பதில் சொல்லிக்கொண்டே, கைவீச்சும், கால்வீச்சுமாக நடையை வீசிப்போட…
அதிகாலையிலேயே கிண்ணமும், கையுமாக பொடுசுகள் அடுப்பைச் சுற்றி நிற்க, பனியார வியாபாரம் சூடு பிடித்திருந்தது. பந்து பந்தாக கருப்பட்டி பனியாரம். சுடச்சுட இலையில் கட்டி வாங்கிக்கொண்டாள்.
“கணக்கு வச்சுக்கோ கெழவி!”
“உங்கிட்ட கேட்டனா? இருக்கறப்ப கொடு?” சொல்லிக்கொண்டே சற்று சூடில்லாத பனியாரம் ஒன்றை எடுத்து நின்று கொண்டிருந்த பிள்ளையின் கையில் கொடுத்தார் நயாப்பைசாவுக்கும் கணக்குப் பார்க்கும் பனியாரக்கிழவி.
“கெழவி… நல்ல செழிம்போ? இருக்கறப்ப கொடுங்கற? ஏச்சுப்புட்டா என்ன பண்ணுவ?” பேச்சில் வம்பிழுக்க,
“ஆமாடீ… மூலையில குமுச்சு வச்சுருக்கே. வந்து அள்ளிட்டுப்போ! எங்கிட்ட ஏச்சுதான் நீ கோட்டை கட்டப்போறீயாக்கும். போவாளா…” என ராகம் படித்தது பனியாரக்கிழவி.
“சத்தமா சொல்லாத கெழவி! ஒத்தையாளு. ஒனக்கு என்ன செலவு? ராவோடு ராவா வந்து கழுத்தறுத்துப்போட்டு அள்ளிட்டுப் போயிருவாய்ங்க.”
“இடுப்புல கருக்கருவா சொருகி வச்சுருக்கே. நெல்லறுக்குறமாதிரி அறுத்துப்புட மாட்டே. எவென் வர்றானு பாக்குறே?”
“எமகாதக் கெழவி. நீ செஞ்சாலும் செய்வ?” கிழவியை வம்பிழுக்காமல் வரமாட்டாள். பனியாரம் வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு திரும்ப, வழியில்…
“அழகம்ம…” என்ற அழைப்பில் நடை சற்று தாமதித்தவள்,
“என்ன சின்னாயி?” என,
“தக்காளி காட்டுக்கு களையெடுக்கணும். ஆள் கூட்டி வந்துரு!”
“என்னால வரமுடியாது!”
“ஏன்… கெடபோட போறீயா?”
“இல்ல சின்னாயி. ஆஸ்பத்திரி போகணும். இன்னைக்கு வீட்டுக்கு கூட்டியாரணும்.”
“ஆளுமட்டும் சொல்லிவிடு. காடு ஈரம் காயங்குள்ள கொத்திவிடனும். இல்லைனா மறுபடியும் தண்ணி பாய்ச்சணும்.”
“சொல்லிவிடுறேன். நாலஞ்சாளு சேத்துவிடு!”
“கூலி யாரு கொடுப்பா?”
“கூலியப்பாத்தா வேலைக்காகாது. வேல சீக்கிரம் முடியும்ல?” என கோளாறும் சொல்லிவிட்டு நடந்தாள்.
இவளுக்கோ எப்படியாவது ஆட்களுக்கு வேலை பிடித்து கொடுத்துவிட வேண்டும். இப்பொழுது வேலைக்கு ஆள் கூப்பிட்டவளுக்கோ வேலையும் நடக்கணும். ஆளும் எண்ணிக்கை கொறச்சலா வரணும்.
அழகம்மை யாராயிருந்தாலும் அசரமாட்டாள். மானம், மரியாதை தவிர வேறெதற்கும் அஞ்சவும்மாட்டாள். நான்கு ஆட்கள் வேலைக்கு இரண்டு ஆட்கள் சேர்த்தே பேசிவிடுவாள். அதேமாதிரி சரியாக வேலை செய்யாமல் வெட்டியாக நெட்டி முறிப்பவர்களையும் சேர்த்துக்கொள்ள மாட்டாள். காசுக்குத் தகுந்த வேலை. வேலைக்குத் தகுந்த காசு. அதுதான் அழகம்மை பாணி.
“வெயிலுக்கு முன்னால வரச்சொல்லுடீ?” கத்தி சொன்னவளிடம்,
“ஆட்டும்… ஆட்டும்” என்றாள் நடந்து கொண்டே.
தோட்டத்திற்கு கெடை போடுவதுதான் அவளது தொழில். இரவும், பகலும் நாள்கணக்கிலோ, வாரக்கணக்கிலோ வயல்வெளிகளில் ஆடுகளை பட்டியடைத்துவைத்து அதன் புழுக்கை, கோமியம் எல்லாம் காட்டுக்கு உரமாக்குவதுதான் கெடைபோடுவது. இயற்கை உரம்.
களையெடுக்க, நாற்றுநட, கதிரறுப்பு என தோட்ட வேலைக்கு ஆட்களை பிடித்துவிடும் கங்காணி வேலையும் செய்வாள். அக்கம்பக்கத்து ஊர்களுக்கும் கெடைபோட செல்வதால் உள்ளூரில் வேலை இல்லை என்றால் கூட வெளியூரில் ஆட்களுக்கு வேலை விசாரித்து வருவாள்.
களைக் கொத்தும், தூக்குச் சட்டியில் கஞ்சியுமாக பெண்களும், தோளில் மண்வெட்டியோடு ஆண்களும் கிளம்பி சொந்த தோட்டத்திற்கோ, கூலிக்கோ...
நீ முந்தியோ, நான் முந்தியோ என கதிரவனுடன் பந்தயம்போட்டு அவரவர் பிழைப்பை பார்க்கச்செல்ல,
பிள்ளைகளோடு வந்தவள் பிள்ளையார் கோவில் மேடையில் இரண்டையும் உட்கார வைத்தாள்.
கோவிலை கழுவிவிட்டு பிள்ளையாருக்கு பூக்கட்டி போட்டிருந்தனர். இப்பொழுதெல்லாம் ஊர் நல்ல செழிம்புதான். வருடம் முழுமைக்கும் இல்லை என்றாலும், வருஷத்தில் பாதி நாள் குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை.
கட்டிக் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்து, பெரிய பிள்ளையிடம் ஒரு பனியாரத்தை முழுதாக கொடுத்தவள், சூடாக இருந்த பனியாரத்தை பிய்த்து ஊதி சின்னவளுக்கு ஊட்டிவிட்டாள்.
மேடையில் அமர்ந்தவுடன், அவள் உடல் மட்டும்தான் அங்கிருந்தது. நினைவு அவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டியாய் எங்கெங்கோ சுற்றி வந்தது. மனம் கனத்துப் போக, அதுகொடுத்த அழுத்தம் பெருமூச்சாக வெளிப்பட, குளம்போல் அவள் கண்களும் தளும்பி நிற்க, பிள்ளைகளைப் பார்த்தவள் முயன்று தறிகெட்டோடிய உணர்வுகளுக்கு கடிவாளம் போட்டாள்.
“என்ன அழகம்ம… மாமா ஒழவு காட்டுக்குப் போறேன். கஞ்சி கொண்டுவாரது? அப்படியே நமக்கும் உழவு காடு விசாரிச்சுவிடுறது?”
அவ்வழியே தோளில் கலப்பையோடு, மாடுகளை உழவுகாட்டுக்கு ஓட்டிச் சென்ற நடேசன் உள்குத்து வைத்துப் பேச, ஏதோ சிந்தனை வலையில் சிக்கியிருந்தவள் சட்டென சுயத்திற்கு வந்தாள்.
கிராமங்களில் கேலிப்பேச்சிற்கும், சிலேடைப்பேச்சுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் அதில் விளையாட்டுக்கேலி எது, வினையமான கேலி எது என்றுகூடவா தெரியாது. உள்ளுக்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு,
“மொதல்ல உங்காட்ட நல்லா உழு மாமோய்! தரிசு மண்டிப் போறதுக்குள்ள வேற எவனாவது சாலோட்டிறப்போறான். வந்துட்ட காலங்காத்தால கஞ்சி கேட்டு.” வெடுக்கென பதில் சொல்லியவள் பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, மற்றொன்றை இழுத்துக் கொண்டு வெடுவெடுவென நடந்துவிட்டாள்.
சென்றவளையே நடேசன் பார்வை பின்தொடர, “இன்னைக்கி உனக்கு நல்ல நேரம்டி மாப்ள!” பின்னால் குரல் கேட்க திரும்பிப் பார்த்தான்.
“அந்தப்புள்ள ஏதோ வேற நெனப்புல இருந்துருக்கு. இதோட விட்டுருச்சு. இல்லைனா டங்குவார அத்திருக்கும்.” அந்த வழியே தோளில் மண்வெட்டியோடு போன முருகேசன் எச்சரித்துவிட்டு அவனை கடந்து சென்றான்.
அவள் யோசனை அவளிடம் இல்லாமலிருந்தது நடேசனுக்கு இன்று நல்ல நேரமாய்ப்போயிற்று. இல்லையென்றால் வந்து பாரு என சேலையை வரிந்து கட்டியிருப்பாள். அவள் பேசும் பேச்சில் காது, மூக்கு, கண்ணு, வாயெல்லாம் கருகிப்போயிருக்கும்.
‘எடுபட்ட நாயி! என்ன வார்த்தை கேட்டுட்டான். யாருகிட்ட வாலாட்டி பாக்குறான். ஒட்ட நறுக்கல, எங்கம்மா பொன்னுத்தாயி ஒருத்தனுக்கு முந்தானை விரிக்கல’ என உள்ளுக்குள் பொரிமித் தள்ளியவளுக்கு மனதே ஆறவில்லை.
ஏதோ, சாதாரண கேலிப்பேச்சுதானே என இத்தோடு விட்டுவிட்டால் இடம் கொடுத்தது போலாகிவிடும். நாளை மடத்தையே பிடிக்கப் பார்ப்பான். முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். பிள்ளையை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்ததில் மூச்சு வாங்கியது. கோபத்திலும் தான்.
நடுவீதியில் நடேசன் வீட்டு முன் நின்று அவன் பொண்டாட்டியை அழைத்தாள்.
“யக்கோவ்… வெளிய வா!” அவள் அழைத்ததே எட்டூருக்கு எட்டியிருக்கும்.
“என்னடீ… காலையில?” கேட்டுக்கொண்டே வெளியே வந்தவளிடம்,
“உம்புருஷனுக்கு ஒழுங்கா கஞ்சி காச்சி ஊத்துரியா இல்லையா?"
"அதைப்பத்தி ஒனக்கென்னடி கவலை?"
"தெருவுல போறவ, வர்றவகிட்ட எல்லாம் உம்புருஷன் கஞ்சி கேக்குது. ஒழுங்கா சொல்லி வை. இல்ல மானங்கெட்டு மகிளிபூத்துரும்” என்றவள் திரும்பியும் பார்க்காது நடையைக்கட்ட,
“ஏக்கா! உம்புருஷனுக்கு யார்கிட்ட வாய் கொடுக்கறதுன்னு இல்ல. இவளே ஒரு கொட்டுக்காளி. இவகிட்டப்போயி வம்பு பேசியிருக்கு?” என வீதியில் போனவள் எகத்தாளமாக கேட்க, போவோரும், வருவோரும் நின்றுபார்க்க அவமானமாக போயிற்று நடேசன் பொண்டாட்டிக்கு. இவளிடம் எதிர்த்து கேள்வி கேட்கமுடியாது.
அழகம்மையா! அவகிட்ட வாய் கொடுக்க முடியாது என்பதுதான் ஊருக்குள் பேச்சாக இருக்கும்.
அழகம்மை போட்ட போட்டில், “வரட்டும் இன்னைக்கு. தட்டி காயப்போடுறே. அப்பதான் அடங்குவியான்.” நடேசன் பொண்டாட்டி பல் நறநறத்ததில், அவன் இன்று திருகையில் போட்டு திரிக்கப்படுவது உறுதியாயிற்று.
சாமி வந்தவள் போல மூச்சுவாங்க வந்தவள், பிள்ளையை இறக்கிவிட்டு திண்ணையில் ஒரு காலை மடக்கி குத்துக்காலிட்டு அமர்ந்தாள்.
மூக்குவிடைத்து, கண்கள் பொங்கி கரைகடக்க முயல, வந்த அழுகையை, பக்கத்தில் செம்பில் இருந்த தண்ணீரை எடுத்து அண்ணார்ந்து கடகடவென தொண்டையில் சரித்து அடக்கினாள். கோபத்தை கொட்டிவிட்டாளே ஒழிய ஆதங்கத்தை அடக்க வழி தெரியவில்லை. ஆத்திரத்தில் நெஞ்சுக்கூடு வேகமாக ஏறியிறங்கியது. யாரிடம் கொட்டுவது?
“கலங்கி நிக்கிறாளே! என்ன ஏதுன்னு கேக்கமாட்டீயா? கேக்க நாதியில்லைனுதான கண்ட நாதாரியும் கண்டபடி கேக்குது?” பலதரப்பட்ட உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்தவள் குரல் வேதனையில் தழுதழுத்து பிசிரடித்தது. தொண்டையைச் செறுமிக் கொண்டாள்.
‘...’
“என்ன சிரிக்கிற?”
‘உன்னப்பத்தி தெரிஞ்சும் வாய் விட்டான் பாரு. அதநெனச்சு சிரிக்கிறே. அங்கயே அவன் கையிலிருக்குற சாட்டக்கம்ப புடுங்கி வெளாசிருந்தா நீ பொம்பள!’
“அத… இன்னைக்கி அவன் பொண்டாட்டி செய்வா! நல்லா நாக்கப்புடுங்கற மாதிரி கேட்டுதான் வந்திருக்கே”
‘அப்பறமென்ன… போயி குளிடீ! ஆட்டுக்கவுச்சடிக்குது.'
“ஆடு மேக்கிறவ மேல ஆட்டுக்கவுச்சி அடிக்காம… தாழம்பூவா மணக்கும்?”
‘ரொம்ப சூடா இருக்குற. முகம் கழுவிட்டுப்போயி கூழாவது குடி. பிள்ளைக வயித்தமட்டும் பாத்தியே. உன்னையும் கொஞ்சம் கவனி. ரொம்ப ஓஞ்சு போயிருக்கடீ.’
இளைப்பாற நிழலும், இளைப்பாற்ற தோளும், தலைசாய மடியும் இல்லாமல் ஓய்வு ஒழிச்சல் என்ற சொல்லையே மறந்தவளாக கொஞ்சநஞ்ச ஓட்டமா ஓடியிருக்கிறாள்.
“ஏன்… இப்படியிருந்தா புடிக்கலியோ?”
‘என்னய மட்டும் சொன்னியே? நீ தலைக்கு எண்ணெ வச்சு எத்தன நாளாச்சுடி?”
“சோப்பும், பவுடரும் போட்டு மினுக்குனாத்தான் புடிக்குமோ? சோக்கா வேற எவளையாவது பாத்துட்டியா? பாத்தாலும் பாத்துருப்ப. யாரு கண்டா?” தொண்டையை ஏதோ கவ்விப்பிடித்த உணர்வு.
‘ஆமானு சொன்னா என்னடி பண்ணுவ? அப்படித்தான்னு வச்சுக்கோயேன்.’
அணைகட்டிய கண்ணீர் இப்பொழுது கரகரவென கரை கடந்தது.
பிள்ளைகள் இரண்டும் அவளையே வெறிக்கப்பார்த்து நின்றன.
*****
ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ
ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ
ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா…
ஆடு, மாடு மேய்த்த வாண்டுகள் கோரசாகப்பாட,
“ஏய்… அழகி! இடுப்ப நெழிக்காத! எத்தன தடவ சொல்றது?” அதட்டினான் சித்தன்.
“நீ ஒழுங்கா புடி சித்தா!”
“நானே புடிச்சா நீ எப்புடி ஓட்டிப்பழகுவ? கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழகமுடியும். ஒரே நாள்ல பழகமுடியாது.”
“நீ இன்னைக்குதானே வருவ? இன்னைக்கே பழகிக்கிறேனே?” என பாவமாய் திரும்பிப்பார்க்க,
“சரி ஓட்டு!” சைக்கிளின் கேரியரைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓட, சற்று தூரம் சென்றதும் கையை எடுத்துவிட்டான்.
அன்று தனக்கு நான்காவதாக தங்கை பிறந்த செய்தி கேட்டு பள்ளியிலிருந்து ஓடியவள்தான், ஒரு மாதத்திற்கு பிறகாவது பள்ளிக்கூடம் வருவாள் என எதிர்பார்க்க, அன்றுதான் அவள் பள்ளிவந்த முதலும் கடைசியுமாயிற்று.
பிள்ளை தூக்கும் வாரியம் அடுத்த பிள்ளைக்கு கைமாற, இவளுக்கு கால்நடை வாரியமும், அடுப்படி ராஜ்யமும் ஒதுக்கப்பட்டது. தெருவில் விளையாட வருவது கூட அரிதாகப்போனது.
சித்தனும், உள்ளூரில் ஐந்தாவது முடித்து, அதற்கு மேல் படிக்க பக்கத்து ஊர் பள்ளியில் சேர்ந்துவிட்டான். சனி, ஞாயிறுகளில் ஆடு, மாடு மேய்க்கும் பொழுது பார்த்தால்தான் உண்டு.
அவனுக்கு பள்ளி போய்வர பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் வேல்ச்சாமி. குறுக்கே கம்பி வைத்த ஆண்கள் ஓட்டும் சைக்கிள்.
போனவாரம் மாடு மேய்க்க வந்தவனிடம்,
தனக்கும் சைக்கிள் பழக்கிவிடச் சொல்ல, இந்த வாரம் மாடு மேய்க்க சைக்கிளோடு வந்துவிட்டான்.
சற்று தூரம் ஓட்டிச் சென்றவள், “எப்படி சித்தா! நல்லா ஓட்டுறனா?” திரும்பிப் பார்த்து கேட்க,
“ஏய்ய்ய்! ஏய்ய்ய்! அழகி!” சித்தன் கத்திக் கொண்டே பின்னால் ஓடிவந்து பிடிப்பதற்குள், அவன் பிடிக்கவில்லை எனத்தெரிந்த அடுத்த நொடி,
“சித்தாஆஆஆ!” என அலறிக்கொண்டே தரையில் கிடந்தாள்.
ஒரு விளக்கு திட்டம் - 1978ல் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் இலவசமாக வழங்கப்பட்ட ‘ஒரு ஒளி விளக்கு’ திட்டத்தின் மூலம் குடிசை வீடுகள் அனைத்திற்கும் பத்து ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மண்ணெண்ணெய் விளக்கால் குடிசை வீடுகள் அடிக்கடி தீப்பற்றியதே இதற்கு முக்கிய காரணம்.
திருகை கல் - மாவு திரிக்கப் பயன்படுத்துவது.

Last edited: