• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாதகத்தி நெஞ்சுக்குள்ள 🏵️ 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
3,124
Reaction score
8,060
Location
India
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏 🙏 🙏 🙏 🙏
SM ஈஸ்வரி 🥰 🥰 🥰 🥰 🥰

1000017737.jpg


10
அகலவிரிந்து சித்தனை ஏறிட்டுப் பார்த்த விழிகளிரண்டும் அவனை மெள்ள சுருட்டி உள்ளிழுத்துக் கொண்டன. அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்றவளைப் பார்த்தவன் கண்கள், அவளது பதிலை ஆர்வமாக எதிர்பார்த்து, அதிலேயே நிலைத்திருக்க, இவளுக்கு தான் அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.

நடேசன் ஆர்வக்கோளாறாகக் கேட்டதைத்தான் சித்தனும் கேட்டான். கேள்வி ஒன்று‌ தான். ஆள்தான் வேறு.

விளையாட்டாக கேட்டுப் பார்க்கிறானோ என அவனை உறுத்துப் பார்க்க இல்லை என்றது அவனது ஆழ்ந்த பார்வை. நிதானம் பிடபடவே சற்று நேரம் பிடித்தது அழகிக்கு.

முட்டி மோதும் வண்டுக்கு திறக்காத தாழம்பூ, வெட்டும் மின்னலுக்கு திறந்துதானே ஆகவேண்டும்.

அரைக்கால் ட்ரவுசர், வேட்டிக்கு கட்சிதாவி சிலமாதங்களே ஆகியிருக்க, சந்தையில் வாங்கிய சிவப்பு கலர் பனியன், கழுத்தைச் சுற்றிப்போட்ட துண்டு, அரும்புகட்டிய மீசைக்கடியில் புன்னகையோடு குறும்பு கூத்தாட, பின் கழுத்தில் தோளில் இருபக்கமும் கம்பைப்போட்டு, அதில் கையைச் சுற்றிபோட்டிருந்தவன், வள்ளிதிருமணம் கூத்தில் கண்ட வேலவனாய் தோற்றமளித்தான் அழகியின் கண்களுக்கு.

உச்சிகுளிற எண்ணெய் தேய்த்து, நடு வகிடெடுத்து படிய வாரிய தலையில், அவள் எப்பொழுதும் விரும்பி வைக்கும் செவ்வந்தி பூ, காதோரம் இடம் பிடித்திருந்தது. சரம் தொடுத்து பூவைத்துப் பழக்கமில்லை அழகிக்கு. பந்தாக உருண்டுதிரண்டு அன்றே பூத்த செவ்வந்தியை…‌ மூன்றோ, நான்கோ செடியிலிருந்து அப்படியே பறித்து, மொத்தமாக சேர்த்து சென்டாக வைத்துதான் பழக்கம். அதுவே அழகுக்கு அழகு சேர்த்தது. பருவத்திற்கு வந்ததிலிருந்தே நாளொரு‌மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புடம்போட்ட தங்கமாய் மெருகேறியிருந்தவள் ஆலோலம் ஓட்டும் வள்ளியாகத்தான் தெரிந்தாள் சித்தனின் கண்களுக்கு.

“பொன்னுத்தாயி… நீ அழகிக்கு நகையே போட வேண்டாம். எவன் வந்தாலும் பொண்ணு மட்டும் போதும்னு கொத்திட்டுப் போயிருவானுக.”

ஊர்ப் பெண்கள் பார்வைகூட அவள் மீதுதான்‌ எனும் பொழுது, விடலைகளைச் சொல்லவா வேண்டும். கறும்பைக் கண்ட எறும்பாய்ச் சுற்றி வந்தனர்.
இன்று நடேசன் வந்து தைரியமாக அவளிடமே கேட்டதில், அடிக்காத குறையாக அவனை அலறவிட்டவள், கைப்பொருள் நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில், சித்தன் வந்து அதே கேள்வியை கேட்க, கல்லுப்பு போட்ட மண்பானைக் கஞ்சியாய் ருசித்து, குளுந்து கிடந்தது மனது. தனக்குள் கொந்தளிக்கும் இனம்புரியாத உணர்வுக்கு பெயர் வைக்கத்தெரியவில்லை. பதினாறை எட்டிப் பிடிக்கும் பருவம். ஆசை, சந்தோஷம், கோபம், ஆத்திரம் அதோடு காதல் என தனக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வலைகளை நிதானமாக கையாளும் பக்குவப்பட்ட பருவமுமில்லை. சந்நியாசிகளையே‌ சடுதியில்‌ பதம்பார்த்துவிடும் காதல், பருவ வாசலில் நிற்பவர்களை விட்டுவைக்குமா என்ன?

இயற்கையின் கைகளில் பருவமழை பொய்த்தாலும் இளமையில் பருவம் பொய்ப்பதில்லையே? இயற்கை மனிதனுக்குக் கொடுத்த எத்தனையோ கொடைகளில் மிகவும் அழகானது, அற்புதமானது, உணர்வுப்பூர்வமானது அவனுக்குள், அவனுக்காகத் துளிர்க்கும் காதல் உணர்வு. உலகில் மற்ற ஜீவராசிகள் அத்தனையும் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்க, மனிதன் மட்டும் தான் அதற்கு சாதி, அந்தஸ்த்து என விலங்கு போட்டு பூட்டி வைத்திருக்கிறான்.

உன்னதமானது, புனிதமானது என்றெல்லாம் அதை தெய்வீகமாக்கவும் வேண்டாம். காதல் கண்றாவி என அதை காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம்.

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அழகிக்கு உள்ளம் படபடத்தது. நடேசனிடம் பேசியது போல் இவனிடம் எடுத்தெறிந்து பேச முடியவில்லை.

தாவணி போடாமல் வெளியே போகமாட்டேன் என அழகி கூச்சத்தில் வீட்டிற்குள் முடங்க,

ஆவுடையிடம் “நின்னது நிக்க தாவணிக்கு எங்க ஆவுடை போவேன். இவ இந்த அலும்பு பண்றா” என பொன்னுத்தாயி குறை படித்ததில் சித்தனின் சட்டையைக் கொடுத்துதான் போடச்சொன்னாள் ஆவுடை.

முதன்முதலாக மாராப்பு போடும் பொழுதும் அவன் நினைப்பையும் சேர்த்துதானே மடித்துப் போட்டாள்.
“அவன் கேட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நான் கேட்டா, எனக்கு என்ன பதில் சொல்லுவ?” புருவம் தூக்கி மீண்டும் அதே கேள்வியை அழுத்தம் திருத்தமாகக் கேட்க, என்ன செய்வாள்‌ பேதைப் பெண்.

குப்பென‌ முகம் செந்நிறம் அப்பிக்கொள்ள, மேலுதடு நீர்ப்பூத்து, நெஞ்சுக்குழி ஏறியிறங்க, தொண்டை வரண்டு, உள்ளங்கை வியர்த்துவிட்டது. யாராவது பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் ஒரு பக்கம். உள்ளம் பொங்கிய ஆசை மறுபக்கமென தவித்துப் போனாள்.

சடுதியில் நிறம்மாறிய முகத்தைவிட்டு கண்களை அகற்ற முடியாமல் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருக்க, அவஸ்த்தையாய் தவித்து நின்றாள். அவளது பரிதவிப்பே அவளது உள்ளத்தை சொல்லாமல் சொல்ல, அதை‌ அவளது வாய் வார்த்தையாகவும் கேட்கவிரும்பி விடாக்கண்டனாய் அவளையே பார்த்து நின்றான்.


நீதானா நெசம்தானா
நிக்கவைச்சு நிக்கவைச்சு பாக்குற
ஆத்தாடி மடிதேடி அச்சு வெல்லம்
பச்சரிசி கேட்குறே
எனக்கென்ன ஆகுது
இதமாக நோகுது
தொண்டக்குழி தண்ணி
வத்திப் போகுது
நீதானா நெசம்தானா
நிக்க வைச்சு நிக்க வைச்சு பார்க்குறே
ஆத்தாடி மடிதேடி அச்சுவெல்லம்
பச்சரிசி கேக்குற
கூட்டாஞ்சோறு நீ போட
கும்மிப்பாட்டு நான்பாட
சொல்லாம கிள்ளாத
வக்கீலில்ல வாதாட
வெட்கம் வந்து போராட
என்ன சொல்லி நாம் பாட
சொந்தந்தான் மாறாது
ஊத்துத்தண்ணி ஆத்தோட
மோகத்த தூண்டாதிங்க
முந்தானை தாண்டாதிங்க
வாங்க அதை வாங்க என்
மடிமேல உக்காருங்க…


சிட்டுகளிரண்டும் தன்னிலை மறந்து, தனி உலகத்தில் சஞ்சரிக்க,

“என்னாங்கடீ ஆச்சு… எதுக்கு இப்படி எல்லாரும் ஓடுறீங்க.” எங்கேயோ கேட்ட அபாயக்குரலில் சட்டென சுயம் பெற, சுற்றம் உரைத்தது இருவருக்கும். அக்கம் பக்கம் பார்வையைச் சுழற்ற, சிலர் வேகமாக ஊருக்குள் ஓடுவது தெரிந்தது. ஒன்றும் புரியவில்லை இருவருக்கும்.

அழகி, “யாருடைய வீடாவது தீப்புடிச்சுருச்சோ என்னவோ?” என பதட்டமாக கேட்க,

“ஊருக்குள்ள ஏதோ சண்டை போல?” என்றான். அது ஊருக்குள் வழக்காமாக நடப்பதுதான்.

“யாராவது குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்ணுவாங்களா இருக்கும். மொதல்ல சாராயம் காச்சுறத ஒழிக்கணும்.” அழகி எரிச்சலில் முகம் சுழித்தாள்.

“என்னான்னு தெரியலக்கா. ஊருக்குள்ள எல்லாரும் வாந்தி‌, மயக்கம்னு வந்து கெடக்காங்களாம்க்கா” என ஒரு குரல் பதட்டமாகக் கேட்டது.

“என்னடீ சொல்ற?”

“ஆமாக்கா! சித்தா, உன் மாட்டப் புடுச்சுட்டு சீக்கிரம் வாடா. வண்டி கட்டணும்” என அழைக்க, மேய்ச்சலில் நின்ற‌ மாட்டை‌, என்ன விபரமெனத் தெரியாமல் அவசரமாக பிடிக்கச் சென்றான்.

“காலரா ஏதும் வந்துருச்சாடீ?” கேட்டுக்கொண்டே தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், போட்டது போட்டபடி போட்டுவிட்டு
அறக்கப்பறக்க ஊருக்குள் ஓடுவதைப் பார்த்தவர்களோடு சேர்ந்து அழகியுமே ஆடுகளை விட்டுவிட்டு ஊருக்குள் ஓடினாள்.

அடுத்து தங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடப்போகும் கோர சம்பவம் அரங்கேறப்போவதை இருவரும் அறியாமல்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அத்தனையும் நடந்தேறி விட்டது. உணர்ச்சிகளை கையாளத் தெரியாத அதே பதின்பருவத்தின் இறுதியில் நின்றவன்… ஆத்திரமும், கோபமும் கண்ணை மறைக்க, கண் முன் நடந்த அத்தனை இழப்புகளையும் பார்த்திருந்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் இரத்தக்கறை பார்த்துவிட்டான் தன் கைகளில்.

வனாந்தரத்தில் கன்னியிடம் கண்களில் ஆசை பொங்க காதல் படித்தவன், அடுத்த சில மணித்துளிகளில், அதே கண்களில் ரௌத்திரம் மின்ன சம்ஹாரம்‌ பண்ணியிருந்தான்.

படிக்கும் கதையில் அடுத்த கட்டம் எது எனத் தெரிந்துவிட்டால் சுவாரஸ்யம் ஏது? விதி எழுதும் வாழ்க்கைப் பயணம் எனும் புத்தகத்தில் திருப்பங்களுக்குப் பஞ்சமேது.

“அத்தாச்சி... அத்தாச்சி… என்ன முழிச்சுட்டே கனவு காங்குறியா? கோயில் வந்துருச்சுபாரு… இறங்கு!” சுமதியின் உலுக்கலில் தான் சுயநினைவிற்கு வந்தாள் அழகி. எல்லாமே பகல் கனவாகித்தான் போனது. சிவந்த கண்களில், கோவில் கோபுரம் தென்பட, “முருகா” என வாய்விட்டுச் சொல்லியவள், ஆழ்ந்து மூச்சிழுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

வேன் வரவும் வீட்டை விட்டு கிளம்பியவர்கள் வடபழனி‌ முருகன் கோவிலில் இறங்கினர். முருகனை தரிசித்துவிட்டு, மியூசியம் சென்று பார்த்துவிட்டு, பெரியவர்கள் அண்ணா நினைவிடம் பார்த்தே ஆகவேண்டுமென நிற்க, மாலையில் கடற்கரை சென்றனர்.

மண்டபம் வர நன்றாகவே இருட்டிவிட்டது.
மண்டபம் நிரம்பி வழிந்தது பணத்தாலும், பணக்காரர்களாலும். மணமக்கள் மேடையில் நின்றிருந்தனர். ஒருபக்கம் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இவர்கள் உள்ளே வர, முகம் சுழித்தாள் சரண்யா மேடையில் இருந்தவாக்கிலே. கடற்கரை சென்று அலுங்கி நலுங்கி வந்தனர்.
மண்டபம் வந்தவர்களை சித்தன் எதிர்கொண்டு அழைத்துச் சென்றான். மறுநாள் காலை திருமணம் முடித்து மண்டபத்திலிருந்தே கிளம்புவதாக முடிவெடுத்திருந்தனர். எல்லாரும் குளித்துவிட்டு உடைமாற்ற அறைகளைத் தேடிச் சென்றனர். அவர்களுக்கென ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு வந்தான்.

அவசரமாக புனிதா‌ சித்தனிடம் வந்தாள்.
“சித்தா… உடனே வீட்டுக்குப் போகணும்” என பரபரத்தாள்.

“ஏன்க்கா?”

“ஒரு பைய விட்டுட்டு வந்துட்டோம்டா. அதுல தான் மாப்பிள்ளைக்கு போடவேண்டிய நகையும் இருக்கு. பூஜை‌ரூம்ல இருக்கு. மறந்துட்டு வந்துட்டோம். அப்பாவுக்குத் தெரிஞ்சா கத்துவாருடா” என அவசரப்படுத்த,

“மொதல்லயே அதெல்லாம் எடுத்து வைக்க மாட்டீங்களா?”

“மறக்கக்கூடாதுனு துண்டா எடுத்து வச்சதாலதான்டா விடுபட்டுப் போச்சு. அப்பாவுக்குத் தெரியாம போய்ட்டு வரணும் சித்தா. அவரைப் பத்தி தெரியும்ல?”

“சரி… வா!” என்றவன்,

முருகேசனிடம், “பாத்துக்கோடா… குளிச்சுட்டு எல்லாரும் சாப்பிட போங்க. ஏற்கனவே லேட்டாயிருச்சு. உங்களுக்காக எடுத்து வைக்க சொல்லியிருக்கேன்” என பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அக்காவும் தம்பியும் வெளியே வந்தனர்.

அப்பொழுதுதான் புனிதாவின் புகுந்த வீட்டினர் உள்ளே வர, அவர்களை இருவரும் வரவேற்றனர். புனிதாவிற்கு அவனோடு போகமுடியாத நிலமை. அவளது கணவனும் உடனில்லாத நிலையில் இவள் அவர்களுடன் இருந்தே ஆகவேண்டும். அக்காவின் நிலையறிந்தவன்,

“எங்க இருக்குனு சொல்லுக்கா. நானே எடுத்துட்டு வர்றே!”

“கொஞ்சம் பொறு சித்தா! நகை வச்ச இடம் நீ தேடி எடுக்கமாட்ட!” என்றவள் உள்ளே சென்று வரும்பொழுது அழகியோடு வந்தாள்.

யோசனையோடு சித்தன்‌ பார்க்க, “நானும் அழகியும்தான் காலையில அதெல்லாம் எடுத்து வச்சோம். எங்க இருக்குனு இவளுக்குத் தெரியும். நீ எதையாவது விட்டுட்டு வந்துட்டா மறுபடியும் போகமுடியாது” என அவளையும் உடன் அழைத்துப் போகச் சொன்னாள். கையிலிருந்த பையோடு வெளியே வந்தவள், இவனோடு வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் தயங்கி நின்றாள்.‌

“அத்தாச்சி நீங்க போங்க. நான் எப்படி…” என இழுக்க,

“இவங்கள சரியா கவனிக்கலைனா… அந்த மனுஷனுக்கு தந்தி போயிறும் அழகி. அம்பூட்டு தொலைவுல இருக்குற மனுஷன நிம்மதியா விடமாட்டாங்க.”

ஏற்கனவே தங்களை சரியாக மதிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பு உண்டு புனிதா வீட்டினரிடம்.

“பணங்காசு வரவும் நாமெல்லாம் இப்ப கண்ணுக்கு தெரியறதில்லடா!” மகன் வரும்பொழுதெல்லாம் குற்றப்பத்திரிகை வாசிப்பவர்கள், இப்பொழுது இரண்டாவது சம்பந்தத்தோடு ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணில் விளக்கெண்ணய்‌ விட்டு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஏதடா காரணம் சிக்கும், மகனிடம்‌ சொல்ல என பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பார்கள் என்பதே புனிதாவின் பயமெல்லாம்.

புனிதாவின் கணவன் இதையெல்லாம் கண்டுகொள்பவன் கிடையாது. வருவது ஒரு மாதமோ. இரண்டு மாதமோ விடுப்பில். அதில் அவனுக்கு மனைவியும், மக்களுமே முக்கியம். கண்டதையும் தலையில் போட்டுக் கொள்ளமாட்டான்.‌

அவனுக்காகவே எங்கும் தன் புகுந்த வீட்டாரையும் விட்டுக் கொடுக்கமாட்டாள் புனிதா. இடையில் வந்ததுதானே இந்த வசதி. இவர்கள் வசதி பார்த்து பெண் எடுக்கவில்லையே. இருந்தாலும் அடுத்த பணக்கார சம்பந்தம் முன் தன் மகனின் கௌரவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். அது சரண்யாவின் நிச்சயத்தின் பொழுதே புனிதா கண்டு கொண்டாள். அதனால் தான் அவர்கள் வந்ததும் அவர்களை விட்டுச் செல்லமுடியாமல் அழகியை போகச் சொன்னாள்.‌

தனியாக வீட்டிற்கா எனத் தயங்கியவளை,
“என்ன…” என ஒற்றை பார்வைதான் பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் தன்னால் பின்னால் போகச் சொன்னது கால்கள்.

“அக்கா… உன் வீட்டாளுகள மட்டும் பாக்காம நம்மூர்க்காரவங்களையும் பாத்து சாப்பிட வை.”

“இத நீ சொல்லணுமா சித்தா. எத்தன‌ வருஷங்கழிச்சு பாக்குறோம். அம்மாவும் நானும் பாத்துக்கறோம்” என சொல்ல, சித்தனும் அழகியும் வீட்டிற்கு கிளம்பினர். காரைத் திறந்துவிட முன்னால் ஏறிக்கொண்டாள்.

ஓட்டுனர் பக்கமாக வந்தவன், “என்கூட தனியா வர அவ்வளவு பயமா?” என்றான் கதவை சாத்திக் கொண்டே.

“உங்க கூட வர எனக்கென்ன பயம்? நீங்க என்ன கடிச்சா திங்கப்போறீங்க!” வழமைபோல் தன்போக்கில் பேசியவள், அவனைத் சட்டெனத் திரும்பிப்பார்க்க, இதழ் விரிந்த சிரிப்போடு அவளைப் பார்த்தான்.
சொன்னதன் அர்த்தத்தில் நெஞ்சு படபடத்தது.

“அப்பறம்‌ ஏன் யோசிச்ச?” எனக்கேட்க அவளிடம் அமைதி மட்டுமே.

“இன்னும் சரண்யா பேசுனது மறக்கல அப்படித்தான?” என்றான். அவளது மௌனமே அதை ஆமோதித்தது. அதனால் தான் அவனோடு யாருமில்லாத வீட்டிற்கு வரத் தயங்கினாள்.

கதவை சரியாக இழுத்து சாத்தாமலிருக்க, நன்றாக கதவை சாற்றச் சொன்னான். முதன் முறையாக காரில் ஏறியிருக்கிறாள். கார் கதவை பூப்போல கையாண்டாள். அவளது செய்கையைப் பார்த்தவன், அவனே எட்டி கதவை இழுத்துச்சாற்ற, ஒரு நொடி‌ மூச்சே நின்றுவிட்டது அழகிக்கு, அவனது கை அடிவயிற்றை உரசிச் சென்றதில். சட்டென உள்ளிழுத்து அமர்ந்து கொண்டாள். வீடு வரும் வரை அதே அட்டென்ஷனில் விறைப்பாக உட்கார்ந்து வந்தாள்.

வீடு‌வர, வெளியவே காரை நிறுத்திக் கொண்டான் மீண்டும் மண்டபம் செல்ல வேண்டும் என்பதற்காக. இறங்கி வந்தவன், இவள் பக்கமாக வந்து கதவைத் திறந்துவிட்டான்.

உள்ளே வந்தவள், நேராக பையோடு புனிதா சொல்லிவிட்ட அறைக்குச் சென்றாள்.
‘பூஜை ரூம் இங்க இருக்கு. இவ எங்க போறா?’ என யோசித்தான். உள்ளே சென்றவள் ஐந்து நிமிடங்களில் வேகமாக இறங்கிவந்தாள்.

“வாங்க போலாம்” என,

“அதுக்குள்ள எடுத்துட்டியா? பூஜை‌ ரூம்‌ இங்க இருக்கு. நீ என்ன எடுக்கவந்த?” என கேட்க, பதில் சொல்ல முடியாமல் முழித்து வைத்தாள்.

“செல்லியே ஆகணுமா? வாங்க நேரமாகுது. குளிக்கணும் வேற. உப்புக்காத்து பிசுபிசுங்குது” என அவசரப்‌படுத்தினாள்.

“என்ன விளையாடுறியா? இருக்குற வேலைய விட்டுப்புட்டு வந்திருக்கேன். மறந்த சாமான எடுக்காம எங்க போயிட்டு வர்ற?” என விடாப்பிடியாக நிற்க, சொல்லாமல் விடமாட்டான்‌ போலயே என சங்கடத்தில் நெழிந்தாள். இதெல்லாம் வெளிப்படையாக பேசிப் பழக்கமில்லை. அதுவும் ஆணிடம். அவனோ பதில் தெரியாமல் விடமாட்டேன் என்பது போல் நிற்க,

“இதெல்லாம் எப்படி சொல்றது. உங்க வீட்ல இருக்கிற சாமான, எங்க இருக்குனு சொன்னா நீங்க எடுத்துட்டு வரமாட்டீங்களா? இது பொம்பளைங்க சமாச்சாரங்கறதால தான எங்கிட்ட சொல்லிவிட்டாங்க” என்றவள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் முன்னே செல்ல, அதனால் தான் அவள் பையோடு வந்தாளா என இப்பொழுது யோசித்தான்.

“இதுதானா?” என்றான் அசட்டையாக.

காலையிலேயே புனிதாவின் மகளுக்கு மாதாந்திரம் வந்துவிட, அவளுக்குத் தேவையானதை எடுத்து தனியே வைத்தாள்.

அவளோடு அறையில் இருந்தவள், “என்ன அத்தாச்சி இது?” என கேட்க, “வீட்டுக்கு தூரமான வைக்கிற பஞ்சு அழகி.”

“இதெல்லாமா வாங்குவீங்க. எப்படி கடையில போயி‌ கேட்டு வாங்கறது?” இவளுக்கு இதெல்லாம் அரிதான விஷயம்.

“நானெங்க வாங்குனே. இந்த தடவ லீவுல வந்த உங்க அண்ணே மகளுக்கு வாங்கி கொடுத்துட்டுப் போயிட்டாரு. அவளும் இதுக்கு பழகிட்டா. அடுத்து என்ன செய்யப் போறேன்னு தெரியல?” என அங்கலாய்த்தாள். அதை வாங்கிப் பார்த்த அழகி, மீண்டும் அவளிடம் கொடுக்க,

“இங்கேயே வை அழகி. கடைசியா போகும்போது எடுத்துக்கலாம். மத்த சாமானோடு கலந்துறும்” என‌ சொல்ல அங்கேயே மறந்துவிட்டு வந்துவிட்டாள்.

அதை எடுக்க வந்தவள்தான், மாமியார் வீட்டாளுகளைப் பார்த்ததும், அழகிக்கு வைத்த இடம் தெரியுமென அவளை சித்தனோடு அனுப்பி வைத்தாள்.

“அங்கேயே இதுதான்னு சொல்லியிருந்தா, நானே வாங்கி கொடுத்திருப்பேனே. அதுக்காக இவ்வளவு தூரம் வரணுமா?” என கேட்க.

“ஐய்யே…” என முகம் சுழித்தாள்.

“இதுல என்ன இருக்கு?” என அவன் மேலும் பேச, அவளுக்குதான் ஒரு மாதிரியாக இருந்தது. இந்தப் பேச்சை இத்தோடு விட்டால் போதுமென்றிருந்தது.

“கொஞ்சம் உக்காரு. வந்ததுக்கு காஃபி போட்டு குடிச்சுட்டுப் போலாம்!”

“மண்டபத்துல போய் குடிச்சுக்கலாமே.”

“எனக்கு காஃபி நெனப்பு வந்துட்டா குடிச்சே ஆகணும். அப்படியே பழகிருச்சு. உக்காரு. அஞ்சே நிமிஷம். வேணும்னா அதுக்குள்ள குளிச்சுட்டு வந்துரு.” என்றவன் அவள் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அடுப்படி சென்றுவிட்டான்.

அவனோடு‌ தனிமையில் இருப்பதே அவஸ்த்தையாய் இருக்க, குளிப்பதா? வாய்ப்பேயில்லை.

“ஏன்… எம்மேல நம்பிக்கையில்லையா.‌ வந்ததுலருந்து போறதுலயே குறியா இருக்க?” என்றான் அவள் அப்படியே நிற்பதைப் பார்த்துவிட்டு. மேலே போனவளும் அவசரமாக எடுத்து‌ ஓடிவந்ததைத்தான் பார்த்தானே?

அவன் அப்படிக் கேட்டதில் ஒரு மாதிரியாகிவிட்டது. அவன் மீது நம்பிக்கை இல்லாமலா? அதற்காக குளித்துவிட்டு செல்ல முடியுமா? பார்ப்பவர்கள் என்ன‌ நினைப்பார்கள் என யோசித்துக் கொண்டிருந்தவள் நாசியை காஃபி‌மணம் துளைத்தது.

“மொதல்ல உக்காரு!” அவள் முன் ஒரு கப் நீட்டப்பட, சோஃபாவில் அமர்ந்து, வாங்கிக் கொண்டாள்.
ஒரு‌ மடக்கு குடித்தவள், சூடாக தொண்டையில் இதமாக இறங்க, காஃபி‌யின்‌ ருசியில் முகம் கனிவாக, “நல்லாயிருக்கு” என்றாள்‌ புன் சிரிப்போடு.‌ அவளின் களைப்பு தெரிந்துதானே காஃபி‌ போட்டுக் கொடுத்தான்.

ஆனால், அவளோ சூட்டைக்கூட பொருட்படுத்தாமல் வேகமாக தொண்டையில் சரித்தவள், உள்ளே சென்று காஃபி போட்ட பாத்திரங்களையும் படபடவென கழுவிப்போட்டு வந்தாள்.

அவளது சங்கடம் புரிந்தவன் அதற்கு மேல் தாமதப்படுத்தாமல் வெளியே வந்தான். இப்பொழுது காரில் ஏறியவள் பலம் கொண்ட மட்டும் கார் கதவை அடித்துச் சாற்ற, சிரித்துக் கொண்டான்.

மண்டபம் வந்தவள் புனிதாவைத் தேட, அவள் சரண்யா அறையில் இருப்பதை அறிந்தவள் அங்கு சென்றாள்.
பையில் மறைத்து கொண்டுவந்ததை அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு வெளியேற,

“உனக்கு அறிவிருக்கா… அவங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்பி‌ வச்சுருக்க?” என சரண்யா அக்காவைத் திட்டுவது காதில் விழுந்தது.

“இதுல என்னடீ இருக்கு. நம்ம அழகிதான?”

“அதுக்குனு தனியா இருந்து ஏதாவது நடந்து போச்சுன்னா?” அப்பொழுதுதான் சரண்யா பேசுவது புரிய,

“நம்ம அழகி அப்படிப்பட்டவ இல்ல சரண்யா. தப்பா பேசாத?” தங்கையை கோபமாக கண்டித்தாள்.

“இந்தக் காலத்துல யாரையும் நம்பக் கூடாதுக்கா!” வயதுக்கு மீறி சரண்யா பேசுவது பொறுக்க மாட்டாமல் வாசல் வரை சென்றவள்,

“உங்க அண்ணனக் கூடவா சரண்யா?” என்றாள்‌ திரும்பி நின்று அவளை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்து. பொய்யில்லாத நேர்கொண்ட பார்வை.

“யாராயிருந்தா என்ன?” அசட்டையாகக் கூற,

“பட்டணம் உன்னைய ரொம்ப மாத்தியிருக்கு சரண்யா. கல்யாணம் பண்ணப்போறதால பெரிய மனுஷிங்கற நெனப்பு வந்துருச்சுல்ல. ஆனா உனக்கு இன்னும் பக்குவம் வரல. சின்னப்பிள்ளதான்கறத அப்பப்ப ஞாபகப்படுத்தற. தப்பு பண்ணனும்னு நெனச்சுருந்தா நானும் உங்க அண்ணனும் இத்தன வருஷம் காத்திருக்கணும்னு அவசியமில்ல. இதே தனிமை எங்களுக்கு நம்ம ஊர்லயே எத்தனையோ தடவை வாச்சுருக்கு. அதுவும் அந்த வயசுல. என் முந்தானை எப்பவும் எங்கையிலதான் சரண்யா. யார் கையில கொடுக்கணும்கறத நான் தான் முடிவு பண்ணனும்.” இறுதி வாக்கியத்தை குரலில் சற்று அழுத்தம் கொடுத்து எச்சரிக்கும் தொணியில் கூறியவள், வேகமாகத் திரும்ப, கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்து நின்றான் சித்தன்.

அவள் பேசியதில் ஏதோ புரிந்தும் புரியாத நிலை புனிதாவிற்கும், சரண்யாவிற்கும்.

அவர்களுக்கு மட்டுமில்லை. அங்கு மகளிடம் ஏதோ கேட்க வந்த வேல்ச்சாமி காதுகளில் அழகியின் பேச்சு விழ, அவருக்குமே ஒரு எச்சரிக்கை மணியடித்து.
மகன் பிடிவாதமாக அங்கு தோட்டம் வாங்கியதற்கும் அழகியின் பேச்சிற்கும் சம்மந்தமிருக்குமோ என கணக்குப் போட்டது.


****

அனைவருக்கும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்💐 மக்களே! 💐💐💐💐💐
தொட்டது துலங்க, எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏

எல்லாரும் பிசியா இருப்பீங்க. அதனால tag பண்ணி டஸ்டர்ப் பண்ண விரும்பல. நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பா படிச்சுட்டு கமெண்ட் போட்டுருங்க நண்பர்களே!
🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 




Barathi poorani

மண்டலாதிபதி
Joined
May 12, 2020
Messages
163
Reaction score
114
Location
MCR
:love::love::love:வருஷங்கள் முன்ன கேட்ட சித்தனோட கேள்விக்கு இப்ப அழகியோட பதில் கிடைச்சிருச்சு. நீங்க வாசகர்களுக்கு சொன்ன அதே வாழ்த்துதான் அழகிக்கும் சித்தனுக்கும்- எல்லா வளமும் நலமும் பெற்று சந்தோசமா வாழனும். இடைல பகட்டான வேல்சாமியும் பக்குவமில்லாத சரண்யாவும் என்ன கஷ்டப்படுத்தப்போறாங்களோ.
 




Sindhu siva

மண்டலாதிபதி
Joined
May 10, 2023
Messages
242
Reaction score
205
Location
Trichy
ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் சிஸ் .
என் முந்தானை எங்கைல தான் இருக்கு அத யாருக்கு கொடுக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். அப்போ சித்தனுக்காக இவ்ளோ வருஷம் தான் காத்திருந்தாளா??
கண்டிப்பா வருவான்னு அவளுக்கு தெரியுமா?
ஒருவேள வராமலே போயிருந்தா என்ன பண்ணிருப்பா?? Waiting for next எபி
சீக்கிரம் வந்துருங்க sis
 




amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
580
Reaction score
773
Location
Kamuthi
சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் சிஸ்..

இன்னும் முழுசா fb வரல...இந்த சரண்யா வேற ரொம்ப பேசுது..
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,685
Reaction score
7,020
Location
Salem
Waiting for update to see 😌😌😌
முந்தானை முடிச்சு அப்பறம் சித்தன் கையில் eppo போகும் முந்தானை 😉😉😉
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top