• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாதகத்தி நெஞ்சுக்குள்ள 🏵️ 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
3,042
Reaction score
7,960
Location
India
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼
SM ஈஸ்வரி 🥰 🥰 🥰 🥰 🥰
தங்களின்‌ மேலான ஆதரவிற்கு நன்றி மக்களே!

1000017737.jpg 1000018658.jpg 1000018779.jpg



3
“மழச்சோறு வாங்க வந்துருக்கோம்….
மழச்சோறு போடுங்கம்மா…
மழச்சோறு போடுங்க!” ஒட்டு‌மொத்தமாக பிள்ளைகள் குரல் வீதியில் ஓங்கி ஒலித்தது.

“வாச நனையலையே
வானம்‌ மழை‌ பெய்யலையே…
கோலம் அழியலையே
கோடை மழை பெய்யலியே…
காடு நனையலியே…
கனத்த மழை பெய்யலியே” என
ஊரிலுள்ள பொடுசுகளெல்லாம் சேர்ந்து வீடு வீடாகச் சென்று பாட்டுப்பாடி மழைவேண்டி மழைச்சோறு கேட்டு நின்றனர்.

பொழுதடைந்து இருள்கவிழ ஆரம்பித்த நேரம். ஊரில் தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக மழை பொய்த்துப்போக அதற்கான‌ வேண்டுதல்கள் நடந்தவண்ணம் இருந்தன.

அதில் ஒன்றுதான் மழை வேண்டி சிறுபிள்ளைகள் ஒன்று சேர்ந்து வீடு வீடாகச் சென்று மழைச்சோறு கேட்பது. இருபது பிள்ளைகளுக்கு மேல் இருக்க, வீதியெங்கும் ஒரே கும்மாளம்தான். பஞ்சப்பாட்டிற்கு வேண்டுதலாக பாட்டுப்பாடி மழைச்சோறு எடுக்கிறோம் என்பது பிள்ளைகளுக்கு தெரியுமா என்ன? விளையாட்டு போல இதுவும் அவர்களுக்கு ஒரு கொண்டாட்டமே.

“இந்த வீட்ல குண்டு பல்புதான்டா. டேய் முருகேசா! உங்க வீட்ல?” கேட்டது நடேசன் தான்.

“எங்க வீட்லயும் அதுதான்டா!” முருகேசனும் அலுத்துக் கொண்டான்.

“டேய் சித்தா! உங்க வீட்ல?”

“அதே தான்டா!” என்றான்‌ அவனும் சலிப்பாக.

“ஒரு வீட்ல கூட ட்யூப் லைட் இல்லடா!” அலுத்துக் கொண்டே போனிச் சட்டியை தோளில் சுமந்துகொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றனர்.

இப்பொழுது சித்தன் ஒன்பதாம் வகுப்பு படிக்க, அவனுக்கடுத்து இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்து இறந்தபிறகு, அதற்கடுத்தும் இரண்டும் பெண்பிள்ளைகள் வேல்ச்சாமி, ஆவுடைக்கு.

தங்கைகளுக்கும் அவனுக்கும் பத்துவருட இடைவெளி. வீட்டிற்கு ஒற்றை ஆண் வாரிசாகிப்போக, எப்படியும் இன்னோரு‌ ஆண்பிள்ளை பெற்றுவிடும் விடாமுயற்சியில் வேல்ச்சாமியும், ஆவுடையும் இப்பொழுதும். நான்கு பெண் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு ஆண்பிள்ளை எனில், ஆள், அம்பாரி, சேனையில்லாமல் அவன்தான் தனிக்காட்டு ராஜா.
அதுவும் சில வருடங்களாக அக்கா, தம்பியென மட்டுமே இருந்ததால், புனிதாவிற்கு செல்லத்தம்பி சித்தநாதன். அடுத்து பிறந்த தங்கைகளுக்கும் சித்தனுக்குமிடையே வயது வித்யாசம் அதிகம் என்பதால் தங்கைக்கோர்‌ கீதம் பாடும் பாசக்கார அண்ணன்.

அதுவும்‌ இரண்டே வயதான கடைசித் தங்கை பூங்கொடி என்றால் ரொம்பச் செல்லம். எப்பொழுதும் கங்காருக்குட்டி போல சைக்கிளின் முன் அவளை வைத்துக் கொண்டுதான் சுற்றுவான். அவளுக்காகவே சைக்கிள்‌முன் சிறு பிள்ளைகள் உட்காரும் ஒயர் கூடையை அடம்பிடித்து வாங்கி மாட்டினான்‌. அதற்கென விடுமுறை நாட்களில் சாலையோர புளியமரங்களில், புளியம்பழம் அடித்து, அதை பெட்டிக்கடைகளில் விற்று காசு சேர்த்து வாங்கினான். நாலு பெண்களுக்கு மத்தியில் வளர்வதாலோ என்னவோ அன்புக்கு நான் அடிமை‌ ரகம்.

“உம்மகன்கிட்ட கொஞ்சம் பாசமா பேசினா போதும்டீ. இடுப்பு வேட்டியக்கூட அவுத்துக் கொடுத்துட்டு வந்துருவான்.” மகனைப்பற்றிய வேல்ச்சாமியின் கருத்துக்கணிப்பு இது. ஆனால், அவனும் ஒரு‌நாள்‌ ஆத்திரத்தில் அரிவாள் தூக்குவான் என இப்பொழுது சூடம் அணைத்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது தானே?

எல்லார் வீட்டிலும் மழைச்சோறு வாங்கிய பிள்ளைகள், அழகம்மை வீட்டின் முன்னும் நின்றனர்.

இரண்டு நாட்களாக அவள் ஆடுமேய்க்க வரவில்லை. சித்தன் அவளை போனவாரம் பார்த்தது.
வழக்கம்போல் சைக்கிள் எடுத்துவந்து அவளிடம் கொடுத்துவிட்டு இவன்தான் அவளது ஆடுகளையும் பார்த்துக் கொள்வான். ஆசைதீர ஓட்டிவிட்டு வந்து தருவாள். முன்பெல்லாம் கால் எட்டாமல் குரங்கு பெடல் போட்டு ஓட்டுவாள். இப்பொழுது சீட்டில் உட்கார்ந்து ஓட்டுமளவிற்கு வளர்ந்துவிட்டாள்.

முதன்முதலாக பழகிய பொழுது கீழே விழுந்ததில், கல் குத்தி கெண்டைக்காலுக்கு மேல் ஆடுசதையில் ஆழமான காயம்.

சைக்கிள் செயினில் பாவாடை சிக்கி கிழிந்து வேறு போயிற்று. அவளுக்கு இரத்தம் வடிந்த காயத்தைவிட, இருந்த பாவாடையில் ஒன்றும் கிழிந்த பயம்தான் அதிகம். பொன்னுத்தாயிடம் வசவு இன்று உவட்டிப்போகும்‌.

ஓடிவந்தவன் சைக்கிளை நகர்த்திவிட்டு அவளைத் தூக்கிவிட்டான். கால்வழியே வடிந்த இரத்தத்தைப் பாரத்தவன், “அழகி… ரெத்தம் வருது!” என பதற,

“அதெல்லாம் வலிக்கல சித்தா. பாவாடை கிழிஞ்சத நெனச்சாதான் பயமா இருக்கு!” காலைத்தாங்கி நடந்தவளை, கைபிடித்து மரநிழலில் உட்காரவைத்தான். காலை நீட்டிவிட்டு, மண்ணை கைகளில் தெளித்து காயத்தின்‌ மீது தூவிவிட்டான். அவளது ஆடுகளையும் அவனே ஓட்டிவந்து வீட்டில் விட்டுப்போனான்.

அடுத்த வாரமும், காயம் இருந்தாலும், விடாப்பிடியாக சைக்கிள் கற்றுக்கொண்டாள் அந்த இரண்டே நாட்களில்.‌ முள்ளில் சிக்கி பாவாடை கிழிந்ததாகச் சொன்னதற்கு, பொன்னுத்தாயி அவளை கிழித்து தோரணம் தொங்கவிட்டது தனிக்கதை. ஏனெனில் அது அவள் உடுத்தி, அடுத்தடுத்து அவள் தங்கைகளும் உடுத்த வேண்டும் என்ற எதிர்காலத்திட்டத்தோடு, வளரும்பிள்ளைகளுக்கென தாராளமாக தைக்கப்பட்டது.

ஓட்டிப் பழகிய பின்னரும் அவளுக்கு சைக்கிள் ஆசை விடவில்லை. மணிக்கணக்கில் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டமுடியாது. சித்தனை வாராவாரம் சைக்கிள் எடுத்து வரச்சொல்லி தன் ஆசையை தீர்த்துக் கொண்டாள். டைனமோ வைத்த சைக்கிள். எப்பொழுதும் போல் சைக்கிளை எடுத்துவந்து அவளிடம் கொடுத்துவிட்டு, மாடுகள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டு பையன்களோடு சேர்ந்து கிட்டிப்புல் ஆடிக் கொண்டிருந்தான்.

நடேசன்‌ பார்வை மட்டும் ஆட்டத்தில் கவனமில்லாமல் சைக்கிள் சுற்றுபவள் மேலே இருந்தது. எல்லாருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். ஒருவருடம், இரண்டு வருடங்கள் முன்ன பின்ன. அதில் நடேசன் எல்லாரையும் விட சற்று பெரியவன். பிஞ்சிலேயே பூத்து, காய்த்துப்பழுத்து, வெம்பிப்போனவன்.

“நீங்க ஆடுங்கடா! ஆடுமாடெல்லாம் நான் பாத்துக்கறேன். வெள்ளாமக்காட்டுக்குள்ள போச்சுன்னா புடுச்சு கட்டிவச்சுருவாங்கடா” என நல்லவன் போல் ஆடு, மாடுகளை பார்ப்பது போல் மரத்தடியில் ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டான்.

அது ஆண்கள் ஓட்டும் சைக்கிள் என்பதால் அவளது பாவாடை முழங்காலுக்கு மேல் ஏறியிருந்தது.
மொட்டவிழும் பருவத்தில் இருந்தாள் மொட்டுவிட்ட பேதைப்பெண். இன்னும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அறிமுகம் செய்துகொள்ளவில்லை அவளிடம். இறங்கு பொழுதின் எதிர் வெயில்பட்டு, தங்கமென‌ கன்னமும், நுனி மூக்கும் பளபளத்தது. வறுமை வீட்டில்தானே ஒழிய, அவளது வனப்பில் இல்லையென்பதை அவளது உடை தன் பற்றாக்குறையைக் காண்பித்து நிரூபித்தது. நடேசன் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் முருகேசா! உன் மாடு பொன்னம்மா அத்தே சோளக்காட்டுல எறங்கிருச்சுடா. இவன் என்னடா பண்றான்” சித்தன் எச்சரிக்க, முருகேசன் அவசரமாகத் திரும்பிப்பார்த்தான்.

பொன்னம்மாள் வீட்டு சோளக்காடு அது. மூடிவைத்து திங்கத்தெரியாத சனங்கள் இருக்கும் ஊருக்குள், எச்சிக்கையால் காக்கா ஓட்டாத மகராசி பொன்னம்மா. கந்து வட்டிக்கு காசு கொடுப்பவர். பஞ்சத்தை முன்னிட்டு ஊரிலுள்ளவர்களின் அத்தனை பித்தளை அண்டா குண்டாவும் அவரிடம் தான் அடமானமாக தஞ்சமடைந்துள்ளன.‌ மீட்க ஒரு நாள் முன்னப்பின்ன ஆனால் கூட வட்டியை விடாமல் அதற்கும் கணக்குப் பார்த்து, கோவணம் வரை உறுவிட்டுதான்‌ விடுவார்.‌ அவர்‌ காட்டில் மாடு மேய்ந்தது தெரிந்தால் அதோ கதிதான். கல்லு, முள்ளு பார்க்காமல் உயிரை‌ வெறுத்து ஓடினான்‌ முருகேசன்.

சித்தன் நடேசனை திரும்பிப் பார்க்க, ஏதோ தவறாகப் பட்டது. அவன் பார்வை சென்ற திக்கில் இவனது பார்வையும் பயணிக்க, சைக்கிள் ஓட்டியவள் பாவாடை மேலேறியதில் ஆடுதசையில் தழும்பு அழுத்தமாகத் தெரிந்தது.

வேகமாக அவனிடம் வந்தான். “என்னடா‌ பண்ற?” என்றவன் குரல் கோபத்தை சுமந்திருந்தது.

சட்டென சுதாரித்தவன், “அழகம்ம கொப்புங்குலையுமா வளந்துட்டால்ல” என்றான் அத்தனை பற்களையும் காட்டி. சகவயது தோழமையுடன் நடேசன் அவனிடம் அப்படிப் பேச, அக்கா, தங்கையென வளர்ந்தவனால் அப்படி அவளை பார்க்க முடியவில்லை. நடேசன்‌ அவளைப் அப்படிப் பார்ப்பதும் பிடிக்கவில்லை.‌

“அறிவில்ல… கூடவே சுத்துறபுள்ளய தப்பா பாக்குற?”

“டேய்! அது எனக்கு மாமன் பொண்ணு!”

“எனக்கும்தான் அத்தை பொண்ணு!”

“அது அங்க சுத்தி, இங்க சுத்தி ஒனக்கு உறவு. ஆனா, எங்கம்மாவுக்கு ஒன்னுவிட்ட அண்ணம்பொண்ணு அவ. எனக்கு ஒன்னுவிட்ட தாய்மாமன்‌ பொண்ணு. உரிமையிருக்கு பாக்குறேன்” என அவள்‌ மீதான தன் உரிமையை நிலைநாட்ட, சித்தநாதனுக்கு அப்படியே ஓங்கி அவன் கன்னத்தில் ஒன்னு விடவேண்டும்போல் கோபம் கண்ணைக் கட்டியது. ஏனோ, அவன் பேச்சு எட்டிக்காயாய் கசந்தது.

அவனிடம் தன்‌கோபத்தை காட்ட முடியாமல், வேகமாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவளிடம் வந்தான்.

“சித்தா, எப்புடி!” என கெத்தாக கைவிட்டு ஓட்டிக்காண்பித்தாள். ஆசையாக அவள் ஓட்டுவதைப் பார்த்தவனுக்கு சைக்கிளைவிட்டு இறங்கச்சொல்லவும் மனம் வரவில்லை. ஆனால் நடேசன் பார்வை மிளகாய் கடித்ததைப்போல் அவனை எரிச்சலூட்ட,

“அழகி! சைக்கிளவிட்டு எறங்கு மொதல்ல!” என அதட்டினான்.

“ஏன் சித்தா! இன்னும் கொஞ்ச நேரம்.‌” என்றாள் மூச்சுவாங்க ஓட்டிக்கொண்டே.

“அதெல்லாம் வேண்டாம், எறங்கு! டயர்ல காத்தில்ல. எங்கம்மாகிட்ட காத்தடிக்க காசு கேட்டா வசவு விழும்” என கோபமாக சொன்னதில், அவளுக்கும் ரோஷம் வந்துவிட, முகம் சுண்டிப்போயிற்று.

“இந்தா உன் சைக்கிளு. பெரிய இந்த சைக்கிளு. இத்துப்போன சைக்கிள வச்சுக்கிட்டு ரொம்பத்தான் பிகு பண்ற!”

அவன் பிடிக்கும் முன் தள்ளாத குறையாக சைக்கிளை அவனிடம் கொடுக்க கீழே விழுந்துவிட்டது.
குனிந்து தூக்கியவன், “இனிமே என் சைக்கிள தொடாத. ஆசையிருந்தா பொம்பளப்புள்ளைக சைக்கிள வாடகைக்கு எடுத்து ஓட்டு!” என்றான் சிடுசிடுப்பாக. நடேசன் மீது கோபம். அவனிடம் பார்க்காதே என சொல்லமுடியாது. உரிமை பேசுகிறான். கோபத்தை இவளிடம் காட்டினான்.

அவன் வாடகைக்கு எடுத்து ஓட்டு என்றதில் கோபம் வந்தது. தன் நிலையை சொல்லிக்காட்டுவது போலிருக்க, கண்கள் கலங்க, கோபமாக சென்றவள் நடேசன் பக்கத்திலே கல்லில் அமர்ந்தாள். இதுவரை ஒன்றாக ஓடிப்பிடித்து, தொட்டு விளையாண்டவர்கள் தானே. அவனின் கள்ளப் பார்வை புரியவில்லை அவளுக்கு. நடேசன் எப்படி என‌ புருவம் தூக்கி இவனிடமே சாடையில் கேட்க, உள்ளுக்குள் ஆத்திரம்‌ மூண்டது. அவனருகில் உட்கார்ந்தவளை, எப்படி எந்திரிக்கச் சொல்வதென்றும் சித்தனுக்கு புரியவில்லை.

“எந்திரிச்சுப் போயி ஆடுகள ஓட்டிட்டு வா! பொழுது போயிருச்சு. வீட்டுக்கு போகணும்.” அவளிடம் சொல்ல,

“எங்களுக்கு தெரியும்!” என வீம்பாக அப்படியே அமர்ந்திருந்தாள்.

அதற்குள் மாட்டை பிடித்துவந்த முருகேசன், “டேய் நடேசா! ஓம்மாடு அங்க மேயுது பாரு!” என கூப்பிட, இவனிடம் கண்ணடித்து விட்டு அவன் எழுந்து சென்றான். ஒன்றும் பேசமுடியாமல் பல்லைக் கடித்தான்.

முகத்தை உம்மென்று தூக்கிவைத்திருந்தாள்.

“அழகி!”

“...”

“இப்ப எதுக்கு மூஞ்சியத்தூக்கி வச்சுருக்க?” சுள்ளென விழுந்தான்.

“...”

“அது பையனுக ஓட்டுற சைக்கிள் அழகி. உனக்கு தோதுப்படல. ட்ரவுசர், பேன்ட் போட்டுதான் ஓட்ட முடியும்!”

“இத்தன நாளா ஓட்டல?”

“இப்ப நீ வளந்துட்ட.”

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஆமா… இப்பெல்லாம் சீட்ல உக்காந்து ஓட்டுறேன்ல.” சட்டென கோபம் மறைந்து புல்லின் பூவாய் சிறு மகிழ்ச்சி அவளிடம்.

“அதுதான் பிரச்சினையே” என முனுமுனுத்தவன், இவளிடம் எப்படி சொல்வது எனத் தெரியாமல் வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தான்.

“அழகி! இனிமே ஆடுமேய்க்க வரும்போது தாவணி போட்டு வா!” குரலில் கண்டிப்போடு சொல்லியவன் பார்வை தூரத்தில் தெரிந்த மலைமுகட்டில் பதிந்திருந்தது.

“தாவணியா… அது வயசுக்கு வந்தாதானே போடணும்? இப்பவே எதுக்…” என்றவள் அப்படியே பேச்சை நிறுத்தினாள். அவன் சொன்னதன் காரணம் பிடிபட, மாலை நேரக்காற்றோடு சற்று கூச்சமும் முதன்முதலாக பேதையை உரசிச்சென்றது. இவ்வளவு நேரமாக வீம்பில் நெஞ்சை நிமிர்த்தி அமர்ந்திருந்தவள், சட்டென தோள்களை இறக்கி தன்னை குறுக்கிக் கொண்டாள்.

அவளை தனியேவிட்டு, மாடுகளை பிடித்துவரச் சென்றான். அவன் பின் எழுந்து செல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது ஆடுகளையும் சேர்த்து ஓட்டிவந்தான்.

மாடுகளைப் பிடித்துக் கொண்டு அவன் முன்னே செல்ல, ஆடுகளை முன்னேவிட்டு பின்னால் இவள் நடந்துவந்தாள். அதன் பின் அவன் முகம் பார்க்க முடியவில்லை அழகிக்கு. அவனும் பார்க்கவில்லை. தெரு முக்கில் பிரிந்து அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

இந்த வாரம் பெண்கள் ஓட்டும் சைக்கிளை சித்தனே வாடகைக்கு எடுத்துவந்தான். புளியம் பழம் அடித்து விற்று எப்படியாவது காசு சேர்த்துவிடுவான். ஆனால், அவள்தான் ஆடுமேய்க்க வரவில்லை. ஒரு வேளை, தான் சொன்னதால் தாவணியில்லாமல் வர சங்கடப்பட்டு வரவில்லை போல என எண்ணிக்கொண்டான். நினைத்தவுடன் தாவணி வாங்கும் நிலையிலா இருக்கிறது பொழப்பு.

சோட்டாளிகள் மழை வேண்டுதலுக்காக மழைச்சோறு எடுக்க கூப்பிட, அவளைப் பார்க்கும் ஆவலில் அவனும் சேர்ந்துவந்தான்.

அழகம்மை வீட்டின் முன் நிற்க, இங்கு வாங்கவேண்டாமென வெளித்திண்ணையில் அமர்ந்திருந்த அவளின் அப்பத்தா சொல்ல, சிறுசுகள் ஏன் என விளக்கம் கேட்டனர். அவருக்கு கண்ணும், காதும் கொஞ்சம் மந்தம். எது சொன்னாலும் ஊருக்கே கேட்கும்படிதான் கத்தி சொல்வார்.

“நீங்க சின்னப்பயலுகடா. இது தீட்டுவீடு. அதுவும் கன்னித்தீட்டு. இங்க வாங்கக் கூடாது” என்றார். அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் உள்ளிருந்துவந்த கறிக்குழம்பு வாசனை அவர்களை நகரவிடவில்லை.

“டேய் சித்தா! இவங்க வீட்ல ட்யூப் லைட் போலடா?” என்றான் முருகேசன் மூக்கை உறிஞ்சி ரகசியமாக அவன் காதருகில்.

“எப்படிடா சொல்ற?”

“கறிக்கொழம்பு வாசனை வருதுடா. கோழி அடிச்சா நெல்லுச் சோறுதானே ஆக்குவாங்க. சோளச்சோறு ஆக்கமாட்டாங்கடா” என்றவன் நாவில் எச்சில் ஊறியது. குண்டு பல்பு என்பது சோளச்சோறு, ட்யூப் லைட் என்பது அரிசிச் சோறு அவர்களது பாஷையில்.

“விருந்தாளி வந்துருப்பாங்களோ?” என்றான். அதனால்தான் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டு ஆடுமேய்க்க வரவில்லையோ என்ற‌ சந்தேகம் அவனுக்கு.

“அப்படினா கண்டிப்பா கறிக்கொழம்புதான்டா. இங்க வாங்காம போகக் கூடாதுடா!” என நகராமல் நின்றனர்.

“டேய், அடுத்த வீடு போங்கடா! இங்க வாங்காதீங்க. கோயில்ல வச்சு கும்பிடனும்ல?”

“ஏய் கெழவி! எங்கள கறி சோறு வாங்கிவிடாம பண்றியா?”

“கறிக்கி வீங்குன பயலே! அழகம்ம வயசுக்கு வந்துட்டாடா. தீட்டுவீட்ல வாங்கக்கூடாதுடா.”

“அதனால என்ன? துண்டா வாங்கிக்கறோம். கோயில்ல வைக்காம நாங்க திண்ணுக்கறோம்.” வீம்பாக நகராமல் நின்றான் நடேசன்.

வயதிற்கு வந்த பெண்ணிற்கு அத்தை வீடு, மாமன் வீடென தினமும் கறி சோறு ஆக்கிப்போடுவார்கள் எனத்தெரியும். ஆவுடை கூட காலையில் இட்லி கொண்டுவந்து கொடுத்தார். ஆவுடை இப்பொழுது இட்லிகடை வைத்திருக்கிறார். (அந்தக் கதையை அப்பறம்‌ பார்க்கலாம் மக்களே!)

இரண்டு நாட்களாக ஏன் அவள் ஆடுமேய்க்க வரவில்லை என காரணம் புரிந்தது சித்தநாதனுக்கு.
தன் அம்மா, ஏன் இங்கு அடிக்கடி ஏதாவது செய்து எடுத்துவந்தார் என‌வும் புரிந்தது. அக்காவிற்கு செய்திருந்ததால் அவனுக்கு விபரம் பிடிபட,

“வாங்கடா போகலாம்” என்றான். பிள்ளைகள் அரை மனதோடு வீட்டைவிட்டு நகர,

“சித்தா, இங்க கொஞ்சம் வாய்யா!” என பொன்னுத்தாயி அவனை உள்ளே அழைத்தாள். உடன்வந்த பிள்ளைகளை போகச் சொல்லிவிட்டு இவன்‌ உள்ளே சென்றான்.

லாந்தர் விளக்கின்‌ மெல்லிய வெளிச்சத்தில் அழகி ஓரமாக அமர்ந்திருப்பது‌ தெரிந்தது. இவனை‌ ஏறிட்டும் பார்க்கவில்லை.

“இந்த பல்ப கொஞ்சம் மாட்டிவிடுய்யா!” என அவன் கையில் அறுபது வோல்ட் குண்டு பல்பை கொடுத்தார். அவர் இருக்கும் நிலமையில் மேலே ஏற முடியாது. ஆண்பிள்ளை மோகத்தில் இப்பொழுதும் பொன்னுத்தாயி தொந்திக்கணபதிதான். நிறைமாசம். ஒரு‌சாண் வயிற்றுப்பாடுதான் திண்டாட்டமே ஒழிய, வயிற்றுக்கு ஒரு‌சாண்‌ கீழிறங்கிய பாட்டுக்கு அந்த திண்டாட்டமெல்லாம் இல்லைபோல.

விசேஷமென நாட்டாமைக்காரர் வீட்டிலிருந்து வயர் இழுத்து தற்காலிகமாக மின்சார இணைப்பு கொடுத்து வைத்திருந்தார். ஊருக்குள் மின்னிணைப்பு இருந்தாலும், இன்னும் பெரும்பான்மையான வீடுகளுக்கு மண்ணெண்ணெய்‌ விளக்குதான். எத்தனை வீடுகளில் மின்சார இணைப்பு என விரல்விட்டு எண்ணிவிடலாம். மிஞ்சிப்போனால் பதினைந்து தாண்டாது. விசேஷம் எனில் அக்கம்பக்கம் இதுபோல் மின்சாரம் கொடுத்து உதவிக்கொள்வதுண்டு.

அண்டாவை குப்புற கவிழ்த்துப்போட்டு அதன் மீதேறி பல்பை மாட்டினான். சட்டென ஒளிபரவியது. மூலையோரமாக அமர்ந்திருந்தவள் கண்ணில் பட்டாள். இன்னும் குச்சு கட்டவில்லை. வெளியூருக்கு தங்கல் வேலைக்கு தங்கராசு சென்றிருக்க, அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்தபிறகுதான் தாய்மாமனுக்கு சொல்லிவிட வேண்டும்.

விளக்கு எரிந்தவுடன் அனிச்சையாய் நிமிர்ந்து பார்த்தாள். அண்டாவின்மீது நின்றவாறே இவன், அழகியைப் பார்க்க, அவளையும் அறியாமல் மாராப்பை இழுத்துவிட்டு, சட்டென தலையைக் குனிந்துகொண்டாள். அடுத்து நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

சாதாரணமாக எப்பொழுதும் அவனைப் பார்த்தவுடன் சிரிக்கும் இதழ் விரிந்த சிரிப்பை சிரித்திருந்தால் கூட அவனுக்கு எதுவும் தோன்றியிருக்காதோ என்னவோ? சட்டென அவள் தலைகுனிய, அக்கணம் ஏதோ ஒன்று அவனுக்குள்ளும் தடம்புரள, அப்படியே நின்றுவிட்டான்.

உலக்கையை குறுக்கே போட்டு, மஞ்சள் கலர் தாவணி, பாவாடையில்‌ அமர்ந்திருந்தாள். அது அவன் அக்கா புனிதாவுடையதுதான். ரவிக்கையின் அளவு தொளதொளவென இருக்க, இழுத்துப் பிடித்து ஆங்காங்கே ஊக்கு குத்தி வைத்திருந்தாள். வயதிற்கு வந்த பிள்ளைகளுக்கு, மாத்து வாங்கி கட்டுவதுதானே பழக்கம். வாழைக்குறுத்தாக இருந்தவளிடம் ஒரே நாளில் வாழைக்குமரி தோற்றம் வந்துவிட்டிருந்தது. முகம் மட்டும் அதே குழந்தைத்தனம்.

பூஜைக்கேத்த பூவிது..

நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி
சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே
வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பாவாடை கட்டயில
பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள
ஏதோ அச்சம்
நோகாம பாத்துப்புட்ட
வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா
இன்னும் சொச்சம்
அச்சு வெல்லப் பேச்சுல
ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா
கூலி கேக்குற
துள்ளிப்போற புள்ளி மான
மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு
வேப்பங்குச்சி இனிக்கிது.

புத்தியில் ஏதோ ஒன்று குறுகுறுக்க தனை மறந்து நின்றவனிடம்,

பொன்னுத்தாயி, “ஏய்யா… சித்தா! அப்படியே, பரண்ல கெடக்குற பித்தளை பானையும், கொடத்தையும் எடுய்யா! நாளைக்கு பொன்னம்மாக்கா கிட்ட அடகுவச்சுதான் செலவு பாக்கணும்” என்றார்.

தங்கராசு வந்தபிறகுதான் வெளியூர் வேலைக்குச் சென்றவர் எவ்வளவு பணம் கொண்டுவருகிறார் எனத்தெரியும்.‌ கூலிக்கு போனவர் மூட்டை கட்டியா கொண்டுவரப்போகிறார். அவரது வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி மிச்சம்‌ கொண்டுவருவதுதானே. அதை வைத்து விசேஷம் பண்ணமுடியாது. அதுவரை கைச்செலவுக்கும் காசு வேண்டும். வட்டிக்குதான் வாங்கியாகவேண்டும்.

அவர் பாத்திரங்களை இறக்கச் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட, இறக்கியவனிடம் வாங்கிவைக்க ஆளில்லை.

“அழகி! இத வாங்கி வை!” என அழைக்க மேலே அண்ணார்ந்து பார்த்தாள். அவள் அப்படிப்பார்க்க. தொண்டைக்குழியில் சட்டென தண்ணீர் வற்றிப்‌போனது சித்தனுக்கு. மீசை அரும்புகட்டியவனுக்குள்‌ குறும்பாடு‌ ஒன்று எகிறிக் குதித்து வேலி தாண்டியது. மனதை முட்டிமோதி புழுதிகிளப்பியது அவளது மஞ்சள்‌முகம்.

இப்படியெல்லாம் பார்க்கக்கூடாது, நினைக்கக்கூடாதென மனதை மூக்கணாங்கயிறு போட்டு இழுக்க, நடேசனைத் திட்டியவன் மனமோ இப்பொழுது அவன் சொல் பேச்சு கேக்காமல் அழிச்சாட்டியம் பண்ணியது.

“ம்கூம்ம்… நான் எதையும் தொடக்கூடாது சித்தா” என்றதில் சித்தம் தெளிந்தவன்,

“அப்பறம் எப்படி குடத்த எடுக்கறது?” அவன் கையிலிருக்கும் பானையை வாங்கி வைத்தால்தானே அடுத்து அவன் குடத்தை இறக்க. அதற்குள் பொன்னுத்தாயி வந்துவிட, அவர் வாங்கிவைக்க, அடுத்து குடத்தை எடுத்து கொடுத்துவிட்டு இறங்கிக்கொண்டான்.

வாசல்படி தாண்டும் முன் திரும்பி ஒரு பார்வை பார்க்க, அவனையே தொடர்ந்தவள் பார்வை இப்பொழுதும் சட்டென தாழ்ந்து கொண்டது. வாசலுக்கு வந்தவன் சித்தம் கலங்கித்தான் போனான் மூலையில் குத்தவைத்தவளை நினைத்து.

*****
“அம்மா… எல்லாம் எடுத்து வச்சாச்சா?”

“எடுத்துக்கிட்டோம் அழகம்ம. குடும்பக் காட்டுப்பாடு பண்ணதுக்கு காசு கொடுத்தாங்கடி” என்றார் பொன்னுத்தாயி.
காந்திகிராமம்‌ அரசாங்க மருத்துவமனை அதற்கே உரிய சர்வ லட்சணங்களுடன் மூச்சடைக்க வைத்தது.

பிறந்து ஒரு மாதமேயான குழந்தையை பொன்னுத்தாயி தூக்கிக்கொள்ள, தையல் போட்டிருந்த அடிவயிறு இழுத்துப் பிடிக்க, மெதுவாக நடந்துவந்தாள் அன்னக்கிளி.

அம்மாவைப் பார்த்து ஒரு வாரமாக, சிறியவள் தாவிச்சென்று, தூக்கச்சொல்லி இடுப்பைக் கட்டப்போக, சட்டென கைபிடித்து இழுத்து தூக்கிக் கொண்டாள் அழகம்மை.

“வயித்துல அம்மாவுக்கு ஊசி போட்டிருக்கு, வலிக்கும்ல. பெரியம்மா தூக்கிக்கறேன்” என தூக்கி முத்தம் வைத்தாள். இத்தனை நாட்களாக இவளோடிருந்த பழக்கத்தில் சமர்த்தாக இடுப்பில் ஏறிக் கொண்டது.

அன்னக்கிளி முகத்தில் தெளிச்சல் இல்லை. இவளும் கண்டுகொள்ளவில்லை. கட்டியவன் ஜெயிலில் இருக்க, அவன் சம்மதமில்லாமல் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டது அவளை பயமுறுத்தியது. அவளுக்குமே அரைமனதுதான். இன்னொரு பிள்ளையும் எதிர்பார்க்கலாமே, அது ஆண்குழந்தையாக இருந்தால் எனும் நப்பாசை.

அழகம்மை கட்டாயத்தில் தான் ஆப்ரேஷன் நடந்தது. குழந்தை பிறந்த இருபதாம் நாள் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஆஸ்பத்திரி அழைத்துவந்துவிட்டாள். ஜெயிலில் இருப்பவனை நினைத்து இப்பவே அடிவயிறு கலங்கியது அன்னக்கிளிக்கு. பயப்படவேண்டிய நேரத்தில் பயப்படாமல் வயதுக்கோளாறில் புத்தியை கடன் கொடுத்ததற்கு அனுபவித்துதான் ஆகவேண்டுமென தன்னையே நொந்து கொண்டாள். பஸ் ஏறி வீடுவந்து சேர்ந்தனர்.

பூட்டியவீட்டின் திண்ணையில் அலமேலு அமர்ந்திருந்தாள். பொன்னுத்தாயின்‌ இரண்டாவது மகள். இவர்களைப் பார்த்தவுடன் எழுந்துவந்து பிள்ளையை வாங்கிக் கொண்டாள்.

“எப்படீ வந்த?” எனக் கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தாள். ஆரத்தி கரைத்து எடுத்து வந்தவள், பிள்ளைக்கும், பெற்றவளுக்கும் சுற்றிவிட்டு உள்ளே‌ போகச் சொன்னாள். வீதியில் கொட்டியவள், அவளும் வந்து அலமேலுவோடு திண்ணையில் அமர்ந்தாள்.

அவள் விருந்தாட வரவில்லை எனத் தெரியும். தாய் வீட்டிற்கு மகள்கள் விருந்தாட வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுதெல்லாம் மகள்கள் வந்தாலே பொன்னுத்தாயிக்கு என்ன செலவு வரப்போகுதோ என்றுதான் மனம் பதக்கென பதறும்.

“அக்கா, பெரியவ வயசுக்கு வந்துட்டா. மூனாம் நாள் குச்சுக்கட்டணும்னு மாமியா நிக்கிறா” என்றாள்.

“சந்தோஷமான விஷயம்தானடி. அத ஏன் அலுத்துக்கிட்டு சொல்ற?” என்ற அழகம்மையைப் பார்த்த பொன்னுத்தாயிக்கு தொண்டையடைத்தது.

இவளுக்கு எட்டுக்குத்துக்கு இளையவள். மகளுக்கு விசேஷமென சீர்கேட்டு வந்து நிற்கிறாள். பெரிய மகள் பச்சைமரத்திலும் சேர்த்தியில்லாமல், பட்டமரத்திலும் சேர்த்தி இல்லாமல் தனிமரமாய் நிற்க, பெற்ற வயிறு‌ விறகில்லாமல் பற்றியெரிந்தது.

எத்தனை ஆடுகளை விற்றால் சீர்செய்ய முடியுமென அழகம்மை இப்பவே மனக்கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள்.

“ஏன்டீ… ஆம்பளப்பையலா இருக்கான். சீர் செய்ய. அவளும் உங்களமாதிரி தானடீ. அவளையும் கரையேத்தியிருந்தா யாருகிட்டப்போயி நிப்பீங்க? இதுவரைக்கும் செஞ்சது பத்தாதா?”

“என் மாமியாக்காரியும் இதையேதான்‌ சொல்லிக்காட்டுறா. சீர்செய்ய நாதியத்த கழுதைனு. என்னமோ நாங்களா அக்காவ கட்டிக்கொடுக்க வேண்டாம்னு சொன்னோம். எங்கவீட்ல கூட கேட்டாங்கதானே?”

“யாருக்கு கேட்டீங்க? பொண்டாட்டி சாகக் கொடுத்த, உன்னோட சின்ன மாமனாருக்கு கஞ்சிகாச்சி ஊத்த ஆளில்லைனு ரெண்டாந்தாரமா கேட்டீங்க.”

“இத்தன வயசுக்குப்பின்னாடி ரெண்டாந்தாரமாத்தான் போகமுடியும். அதையும் வேண்டாம்னுட்டு எந்த நாட்டு ராசவ எதிர்பாக்குறீங்க?” மனதில் ஈரம் வற்றியவளாய்‌ பேச,

“நாக்குல நரம்பில்லாம பேசாதடீ. அவளும் உங்கள மாதிரி அவ வாழ்க்கைதான்‌ பெருசுன்னு போயிருந்தா தெரிஞ்சுருக்கும். உன் மாமியா‌ சொல்றமாதிரி நாலுபேரும் சீந்துவாரில்லாம நாதியத்துப் போயிருப்பீங்க. பொம்பளைக்கு பொம்பளையா, ஆம்பளைக்கி ஆம்பளையா இவ ஒருத்தி இருக்கப் போயிதான் உங்க பொழப்பு மஞ்சகுளிக்குது.” ஆத்திரத்தில் பொன்னுத்தாயி வார்த்தைகளை கொட்டினார். அட்டையாய் பெரிய மகளை மற்ற மகள்கள் உறிஞ்சுவது‌ பொறுக்கமாட்டாமல் பேச,

“அம்மா! அவளே பிள்ளைக்கு விசேஷம்னு‌ நல்ல சேதியோட வந்திருக்கா. அவகிட்டப்போயி கண்டதையும் பேசுற. போயி உலைய வையி” என அதட்டி பேச்சை நிறுத்தினாள். விட்டால் ஆளுக்கொன்றாகப் பேசி, இறுதியில் வந்தவள் அழுதுகொண்டு தான் செல்வாள்.

சோற்றை ஆக்கி வந்தவளுக்கும், பிள்ளை பெற்றவளுக்கும் சுடச்சுட போட்டு, அவளும் சாப்பிட்டு முடித்து, வந்தவளுக்கு தெம்பு சொல்லி வழியனுப்பி வைத்தாள். பொழுதடைய, ஆடுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தாள்.

தொட்டில் கட்டி குழந்தையை போட்டுவிட்டு, பிள்ளைகளோடு பொன்னுத்தாயி உள்ளே படுத்துக்கொண்டார். வெளித்திண்ணைக்கு, கோணிச்சாக்கை மறைப்பு கட்டி கையைத் தலைக்குக் கொடுத்து அழகம்மை தலைசாய்த்தாள்.

ஓய்ந்து படுக்கவும், காய்ந்து போன நெஞ்சடைத்து கண்கள் கலங்க, ஆதரவாக ஒரு‌கை அவளை மானசீகமாக வளைத்து அணைத்துக் கொண்டது.

நெஞ்சு விம்மியவளை, “ஷ்ஷ்ஷ்… இன்னைக்கி எதுவும் பேசவேண்டாம். அலுத்து தெரியுற. அமைதியா கண்ணமூடித்தூங்குடீ.” ஆதரவாக தலைகோதிக்கொடுக்க, கடைக்கண்ணில் கண்ணீர் வடிய, மூடிய கண்களுக்குள் பதினைந்து வயது சித்தநாதன் பல்வரிசை தெரிய பளிச்சென சிரித்தான். போனால் போகுதென்று இறக்கப்பட்டு உறக்கம் அவளை ஆரத்தழுவிக்கொண்டது.
 




Last edited:

Barathi poorani

மண்டலாதிபதி
Joined
May 12, 2020
Messages
153
Reaction score
103
Location
MCR
சித்தநாதனுக்கு என்ன ஆச்சு? அழகம்மை ஏன் தனியா இருக்கா?.
அவளுக்காக யாரையும் வெட்டிட்டு சிறைக்கு போய்ட்டானா?
 




amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
576
Reaction score
769
Location
Kamuthi
கொஞ்சம் தெளிவு வந்திருக்கு...சித்தன் உயிரோட இருக்கானானு மட்டும் தெரிஞ்சா போதும்😉

அந்த காலத்துல பிள்ளை பெத்தா கஞ்சி ஊத்த முடியுமானு கூட யோசிக்கிறதில்ல வதவதனு பெத்துக்கிடுறது...அதே மாதிரி ஒரு சில இனத்தில கடன் வாங்கியாது சீர் செய்யனும்...இப்ப வரை அது மாறவே இல்ல...இருக்கிறவங்க செய்யட்டும் இல்லாதவங்க முடிந்தத செய்யட்டும்னு வந்தா தான் அவங்க பொருளாதார நிலை சற்று உயரும்..
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top