• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,125
Reaction score
4,626
Location
Coimbatore
6

வாணி ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு இருந்தாள். அவள் மனம் ஏனோ தடுமாறி தத்தளித்தது.
‘ என்னவோ மனது பிசைந்தது. எதில் இருந்தோ தப்பியது போலவும் இருந்தது. எதிலோ மாட்டிக் கொண்டது போலவும் மனது கிடந்து துடித்தது. ஆனால் அது எது என்பதுதான் புரியவில்லை.

பொழுது இருட்டி இருந்தாலும் மாநகராட்சியின் தெரு விளக்குகள் நல்ல வெளிச்சத்தை வாரி வழங்கிக் கொண்டுதான் இருந்தன. போக்குவரத்து குறைந்து இருந்தது. ஆனால் இருந்தது


சாலையில் ஒரு வளைவில் வண்டியை திருப்பிய போது வண்டி நிலை தடுமாற சறுக்கி கீழே விழுந்து இருந்தாள் வாணி!

அவள் தரையில் விழுந்து காலில் அடிபடுவதற்குள் அவளைத் தூக்கி நிறுத்தி இருந்தான் அவன்!

சேதம் அடைந்த வண்டியை பதட்டமும் கவலையுமாகப் பார்த்தவள் தன்னைக் காப்பாற்றியவனை முதலில் கவனிக்கவில்லை.

“ போச்சு! அடுத்து இதுக்கு வைத்தியம் பாக்க ஒர்க்க்ஷாப்ல விடணும். அதுக்கு ஒரு தொகை ஆவும். ஓ. டி பார்த்தது இதுக்கு சரியாப் போவும் போலயே? நானே குருவி பிறந்த நாளைக்கு கிஃப்ட் வாங்கி குடுக்கலாம்னு ஓ. டி வாங்கினேன். இப்போ அதுக்கு அர்த்தமே இல்லாம போச்சே? ஒர்க் ஷாப்காரன் என்ன பில்லை தீட்டப் போறானோ தெரியலியே? “

தன் போக்கில் புலம்பியவள் ஸ்கூட்டியை ஓட்ட முடியுமா என ஆராய அது சமத்தாக ஓடக் கூடிய நிலையில் இருந்தது.

“ அப்பாடா! சின்ன சின்ன மைனர் ஒர்க் பார்த்தாப் போதும். அதையும் மாச சம்பளம் வாங்கிட்டு பார்த்துக்கலாம் “ என நிம்மதியாக சொன்னவள் அப்போது தான் பக்கத்தில் நின்ற அவனைப் பார்த்தாள்.


“ தேங்க் யூ ….”
என்று இழுத்த அவளை அவசரமாக இடையிட்டான் அவன்.

“ உதய்!”

வாணி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து அதை விட அதிகம் திடுக்கிட்டுப் போனாள்.
இவனா? மீண்டுமா?
தன்னை இவன் மறந்திருப்பான் என நினைத்து நினைவுகள் மரத்து இருந்த நாட்களை தட்டி எட்டிப் பார்த்தாள். உள்ளே எல்லாம் ரணகளமாய் வலித்து கிடந்தது.

அது காதலா என்றால் அவளுக்கு விடை தெரியாது. ஆனால் ஏதோ ஒரு ஏமாற்றம் வலி இருந்து கொண்டே இருந்ததே?

அவற்றின் மீது இறுக்க இறுக்க மதில்சுவர் கட்டி அதன் வெளியே தன் தினசரி வாழ்வை போராடி வாழ்கிறாள் அல்லவா?

இதற்குத்தான் இதயம் எக்குத்தப்பாக எகியதோ? இந்த சிறு விபத்து நடந்ததில் இருந்தே இதனால்தான் – இவன் அருகே இருந்ததால்தான் உள்ளம் தடதடத்துக் கொண்டு இருந்ததோ? இல்லை இல்லை. வேலை முடிந்து கிளம்பியதில் இருந்தே அப்படித்தானே இருக்கிறது?

இவள் பெப்பெரப்பே என விழிக்க உதய் மெல்ல சிரித்தான்!

அவள் உயிர் உருக்கும் சிரிப்பு அது! அவளின் அந்தப் பத்தொன்பது வயதில் இருந்தே அவள் மதி மயக்கிய சிரிப்பு!

ஒருவழியாக சுதாரித்தவள் “ தேங்க் யூ “ என்று உளறிவிட்டு வண்டியை எடுத்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பதை அறிந்தாள். இனி அவளை அவன் விடப் போவதில்லை என்றும் அறிந்தாள். மனம் தட தடக்க குறையும் இருந்த பயணத்தைத் தொடர போக உதய் அவள் வண்டியின் ஹேண்டில் பாரைப் பிடித்து நிறுத்தி இருந்தான்.பதறிப் போனாள் பேதை.

முதன் முதலில் அவனைப் பார்த்தது நினைவில் ஓடி வந்து சேர்ந்தது அவளுக்கு.


அப்போது வாணி பன்னிரண்டாவது முடித்துவிட்டு கம்யூட்டர் டிப்ளமோ கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து இருந்தாள்.

அவள் மாலை நேர பேட்ச் என்பதால் வீட்டில் நன்கு தூங்கி எழுந்து காலை மதியம் சாப்பிட்டு நடுவே அம்மாவுக்கு உதவிகள் செய்து மெதுவே கிளம்பி வந்து இருந்தாள்.


வீட்டின் அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் கம்யூட்டர் சென்டர் வழியாக செல்லும் பஸ்ஸுக்கு அவள் காத்திருக்க காலநிலை மாறி இருந்தது.

அதுவரை அடித்த இளவெயில் மாறி காற்று தீடீரென சுழன்று அடித்தது.

‘ மழை வரும் போல இருக்கே? வீட்டுக்கு போய் குடை எடுத்துட்டு வருவோமா?’ என்று யோசித்துக் கொண்டே நின்றாள். இவள் வீட்டுக்கு போய் திரும்புவதற்குள் பஸ் போய்விட்டால் என்ன செய்ய? என்ற குழப்பம் வேறு அவளை வாட்டியது.

பேருந்து நிறுத்தம் அருகில் இருந்ததால் மிகச் சரியான நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்புதான் அம்மணி வீட்டை விட்டு கிளம்புவாள்.

அதனால் இவள் மீண்டும் போய் வருவதற்குள் பேருந்து வந்து, போயும் விடும்.

அந்த வழிக்கு அடுத்த பேருந்து இன்னும் ஒருமணி நேரம் கழித்துதான் வரும். அதில் ஏறி இவள் போய் சேர்வதற்குள் அன்றைய வகுப்பு முடிந்து விடும்.

அப்படி பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அந்த கடினமான சூழ்நிலையில் லதா இவளை படிக்க வைக்கிறார். அதை உதாசீனப்படுத்துவது போல இருக்குமே என்ற பயத்தில் நாக்கு வறண்டு போனது

வாணி குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள். மழையில் நனைந்தால் உடை அசிங்கமாகத் தெரியுமோ என கவலை கொண்டாள். அப்படி தெரிந்தது தெரிந்தால் அன்னை டின் கட்டி விடுவார் என்பது உறுதி.

அணிந்து இருந்த மஞ்சள் நிற சுடிதார் டாப்ஸ், சிவப்பு நிற லெகின்ஸ், சிவப்பு நிற துப்பட்டா மழையில் நனைந்தால் ரொம்பவும் தன்னை அசிங்கமாகத் காட்டாது தவிர அப்படி அதிக மழை என்றாள் எங்காவது ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள் வாணி. .
இவள் உடையை _
“ மாரியாத்தவுக்கு கூழ் ஊத்தற டிரஸ் போட்டு வந்திருக்கே?” என கலாய்த்து தள்ளி இருந்தார்கள் தெருவில் அவளைப் பார்த்தவர்கள் எல்லாம்.

சிரித்துக் கொண்டே அனைவரையும் கடந்து இருந்தாலும் ‘ ஊருக்கெல்லாம் அவ்ளோ டிரஸ் அம்மா தச்சு குடுக்குது. நமக்கு ஒரு நல்ல டிரஸ் தச்சு குடுத்தா என்னவாம்?’ என குறை படாமல் இல்லை.


ஆனால் அவள் அழகை அந்த உடை எடுத்துக் காட்டியதை அவள் அறியவில்லை. அதனால்தான் பெரும்பாலும் அவளை பிறர் கேலி செய்தனர் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை.

போதும் போதாததற்கு பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் மேட்ச் என்று நினைத்து அவள் நெற்றியில் வைத்து இருந்த பொட்டு வேறு இப்போது அவளைக் குழப்பியது.

‘ பொட்டு அம்மன் மாதிரி இருக்கோ?’ என்ற சந்தேகம் நடுவே நெஞ்சுக்குள் குறுக்கே மறுக்கே ஓடியது.

இதோ! பஸ் வந்துவிட்டது! வாணி ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். அவள் ஏறியதும் மழை ஊற்றத் தொடங்கியது.

இங்கே தப்பித்து விட்டாள். அடுத்து கம்யூட்டர் சென்டர் ஸ்டாப்பில் இறங்கி நடந்து சென்டர் உள்ளே போகும் வரை மழையில் இருந்து காப்பாற்றப் படுவாளா?

பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அதை கண்ணாடி தடுப்பால் மூடிவிட்டு தீவிர சிந்தனையில் மழையை வெறித்துப் பார்த்துக் கொண்டே போனவளை ரெயின் கோட் அணிந்துகொண்டு பைக்கில் பின்தொடர்ந்து போனான் உதய்!.

அவனிடம் அவள் உடைமை ஒன்று இருந்தது. ஏனோ அதை உடனே அவளிடம் சேர்ப்பித்துவிட வேண்டுமென்ற பேரவா அவனுக்கு.

உதய் போன வாரம் இந்த ஏரியாவை தன் பைக்கில் கடந்த போது பஞ்சர் ஆகி விட்டது. வாணி நின்று கொண்டு இருந்த பேருந்து நிறுத்தத்தின் பக்கத்தில் இருந்த பஞ்சர் கடையில் பஞ்சர் போடப் போன போதுதான் அவன் முதலில் அவளைப் பார்த்து இருந்தான்.

அவள் அழகுதான். ஆனால் அதைவிட அவளது முகத்தில் இருந்த களை அவனை மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கத் தூண்டியது.

அவளைப் பார்ப்பதற்காகவே தினமும் அதே நேரம் அந்த இடத்திற்கு வந்து பக்கத்து பெட்டிக் கடையில் தம்மடித்துக் கொண்டு இருப்பான்.

அவன் தலைவி ஆற அமர பேருந்து வருவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் வீட்டை விட்டு வெளியே வருவாள்.

இது காதலாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பலர் சொல்வது போல வயசு கோளாறாகவும் இருக்கலாம். ஆனால் அவளைப் பின் தொடர்வது பிடித்து இருந்தது அவனுக்கு.

அந்த மாலை வேளையில் அவன் வெட்டி முறிக்க வேண்டிய வேலை ஒன்றும் பெரிதாக இல்லாததால் அவன் வீட்டில் இருந்து கிளம்பி இங்கு அவள் பஸ் ஏறும் வரை உள்ள நேரம், அதன் பின் மீண்டும் வீட்டுக்கு தன் வண்டியை விடும் நேரம் ஆகிய நேரங்கள் உல்லாச வானில் பறப்பான்.

இன்று அவள் பொருள் ஒன்று அவன் வாசம் சிக்கி விட்டது. அதை அப்போதே கொடுத்து இருக்கலாம். அவள் எங்கே படிக்கிறாள், என்ன படிக்கிறாள், எல்லாம் அவனுக்குத் தெரியும் . பேச்சுவாக்கில் கேட்பதாக அங்கே இருந்த பெட்டி கடை டீ கடைகளில் விசாரித்து இருந்தான்.
அவளை குறிப்பிட்டு பேசி இருந்தால் செருப்படிதான் கிடைத்து இருக்கும். ஆனால் அவன் பஸ் நிற்கும் இடம் பற்றி பேசி சுற்றி வளைத்து விஷயத்தைக் கறந்து இருந்தான். அப்படியும் அந்த பஞ்சர் போடுபவர் அவனை கொஞ்சம் சந்தேகமாகத்தான் பார்க்கிறார். அதைக் கண்டும் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு சமாளிப்பதற்குள் நெஞ்சுவலியே வந்துவிடும் போல இருந்தது.

நடத்துநர் அழுத்தமாக விசில் ஒலி எழுப்ப சாலையைத் தேய்த்துக் கொண்டு நின்றது பேருந்து.

மழை இன்னும் விடாமல் பெய்ய, வாணி மழையைத் திட்டிக் கொண்டே எரிச்சலுடன் இறங்குவது அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த உதய் கண்ணில் ஓவியமாக விழுந்தது.

இதோ! வானில் இருந்து இறங்கும் தேவதையாய் அவனை நோக்கி இறங்கி வருகிறாள் அவன் பூ விழியாள்.


ஆனால் அவனை சற்றும் மதியாமல் அவனைத் தாண்டி போகிறாளே?

உதய் தன் தலையை உதறிக் கொண்டான். அவசர அவசரமாக பைக்கில் இருந்து இறங்கி கையில் இருந்த கவருடன் அவளை நெருங்கினான்.

தன்னருகே யாரோ நெருங்கி நடப்பது உணர்ந்து வாணியின் இதயம் படபடத்தது. நிச்சயம் எந்தப் பெண்ணும் தன்னைத் தொடரவில்லை என்பது அவளுக்குத் தெரியும். பஸ்ஸில் இருந்து இறங்கும் போதே கவனித்து இருந்தாள்.

அந்த நிறுத்தத்தில் எந்தப் பெண்ணும் நிற்கவில்லை. அவளுடன் எந்தப் பெண்ணும் இறங்கவில்லை.

தன்னைத் தொடர்பவனால் எந்தத் தீங்கும் இல்லை என்பதையும் அதே உள்ளுணர்வு உரக்கச் சொன்னது.

அப்படி என்றால்….

உள்ளுணர்வு 'தள தள'வென அதகளம் செய்து கொண்டு இருந்தது.


“ பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலுல போறவளே
நீ
தொட்டு வச்ச குங்குமமா
நான்
மண்ணில் வந்து பொறக்கலியே “


மழைக்கு நடுவிலும் நடந்து கொண்டிருந்த பக்கத்து டீ கடையில் எஃப்.எம் பாட அது இவன் மனநிலையை அப்படியே சொல்ல உதய் முகம் ஒளி வீசியது.

வாணி அந்தக் கடையை தாண்டுவதற்குள் “ ஒரு நிமிசம் “ என்றவன் அவள் சுதாரிப்பதற்குள் அவளை அந்த டீ கடையின் மழை மறைவு பகுதியான ஆஸ்பெஸ்டாஸ் சீட் கூரைக்கு அடியில் கூட்டி வந்து இருந்தான்.

மிகவும் சின்ன இருப்பிடத்தில் தகரம் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு அமைக்கப் பட்டு இருந்த அந்தக் கடைக்குள் ஒருவர் மட்டும் நிற்கலாம். வாங்குபவர்கள் வெளியில் நிற்க வேண்டும். காலியான டீ கிலாசையும் டீ காசையும் தவிர, கடைக்காரரிடம் எதுவும் கொடுக்கவேண்டும் என்றால் கடையின் பின்பக்கம் சுற்றிவந்து எட்டி நீட்ட வேண்டும். அப்படி அவர் பழக்கப்படுத்தி இருந்தார்.

அந்தப் பின் பகுதியில் தான் ஒரு ஆள் நுழையும் படியான தகர கதவு இருந்தது.

அதை அடுத்து ஒரு துணி விரிப்பு தடுப்பு இருந்தது. அதற்கும் அடுத்துதான் டீ கடைக்காரர் டீ ஆற்றிக் கொண்டு இருந்தார்.

ஆக பின் கதவுக்கும் டீ கடைக்காரருக்கும் நடுவே அந்தத் துணித் திரை ஒரு சிறிய அறையை உருவாக்கி இருந்தது. பொதுவாக அந்தத் திரை ஓரமாகக் கிடக்கும்.

மழைக்கு முன் புழுக்கமாக இருந்ததால் அந்த சிறிய கதவைத் திறந்து விட்டு இருந்த கடைக்காரர் துணியை இழுத்துவிட்டு இருந்தார்.

மழை வந்ததும் அது கடையை நனைக்காமல் எதிர்திசையில் அடித்ததால் கதவை அப்படியே விட்டு இருந்தார்.

அந்த வழியாக உள்ளே நுழைந்து இருந்தனர் இருவரும்.

அந்த துணி தடுப்பு இவர்களை அனைவரிடமும் இருந்து மறைத்தது.

பாய்லரில் கொதித்துக் கொண்டு இருந்த பாலில் கூட இரண்டு பாக்கெட் பாலை உடைத்து ஊற்றிக் கொண்டு இருந்த கடைக்காரர் இவர்களைக் கவனிக்கவும் இல்லை.

புன்னகையுடன் அவளை எட்டிய உதய்“ வந்து.. இந்த நோட் நீங்க கீழ விட்டுட்டீங்க “ என அவள் கணினி குறிப்பு நோட்டை பத்திரமாக பொதிந்து வைத்து இருந்த கவருக்குள் இருந்து எடுத்து நீட்டினான்.

‘ அடேய் பிக்காலிப் பயலே! இது இல்லனா நான் ஐ ஏ எஸ் ஃபெயில் ஆகிருவேனாடா?’ என்று கேவலமாக அவனைப் பார்த்தாள் வாணி.

இன்னும் அவள் எண்ணவோட்டம் தொடர்ந்து அவனைக் கரித்துக் கொட்டியது.

' ஏதோ இது ஒரு இம்போர்டன்ட் எவிடன்ஸ் மாதிரியும் நீ அதைக் கண்டுபிடிச்ச உளவாளி மாதிரியும் அதையும் ரகசியமா மேலிடத்துல சப்மிட் பண்ற மாதிரி ஒதுக்கமா கூட்டிட்டு வந்து குடுக்கிற?'

அவள் அவனைக் கேவலமாக காறித் துப்புவது கண்களிலேயே தெரிந்தாலும் அவள் அவனைப் பார்த்ததே ஜிவ்வென்று இருந்தது அவனுக்கு.

அவனுடன் அந்த மழையில் பொது இடத்தில் தனித்து இருப்பது தவறு என உணர்ந்த வாணி ஒன்றும் சொல்லாமல் தனது குறிப்பு நோட்டை வாங்கி கொண்டு அங்கிருந்து நகரப் போக அதற்குமுன் தன் கோட்டைக் கழற்றி அவளுக்கு நீட்டி இருந்தான் உதய்.

இவனை எரிச்சலாக பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு சட்டென வெளியேறி நடக்க ஆரம்பித்தாள் வாணி. மழை நின்று தூவானம் அடித்துக் கொண்டு இருந்தது.

அதைக் கொண்டாடிய மனதுடன் முகம் மலர, மழை கோட் கொடுத்தவனை தன்னிச்சையாக திரும்பியவள் அவனது

வா வா மஞ்சள் மலரே
ஒன்னு தா தா கொஞ்சும் கிளியே

என்ற பாடலில் முகம் சுளுக்கிக் கொள்ளும் அளவு முறைத்து விட்டுப் போய் விட்டாள்.

உதய் அதுவரை இருந்த இளமையின் ஈர்ப்பு குறைந்துவிட உரிமையுடன் அவனை முறைத்த அவளை வேறு என்னன்னவோ உணர்ந்தவனாகப் பார்த்துக் கொண்டே நின்றான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top