• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாரிஜாத வாசம் _3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
3

குருவி கூட்டுக்குள் அடைவது போல பூங்குருவி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

வந்ததும் டிவியைப் போட்டு சின்சானை ஓட விட்டாள்.

“ அவனைப் பார்த்து இவ இப்டி இருக்காளோ இல்ல இவளை மாதிரி அரைவேக்காடுகளைப் பார்த்து அவனை அப்படி எடுத்தானோ தெரியலை “

எப்போதும் போல சத்தமாக எரிச்சல் பட்டார் லதா.

அது குருவியின் காதில் நிஜமாகவே விழவில்லை. அதில் இன்னும் கடுப்பானார் லதா.

“அவனுக்கு அஞ்சு வயசுதான் ஆகுது. இந்த எருமை இருவது வயசுல இதைப் பார்த்துகிட்டு என்னை ‘ரோஜா மலரே, ராஜா ராணி ‘இதெல்லாம் பாக்க விட மாட்டேங்குறா!”

பெற்றவளின் புலம்பலில் பிற்பகுதியை விட்டுவிட்டு அதிர்ந்து திரும்பினாள் குருவி.

“ ம்மா! எனக்கு இருவது வயசு இல்லம்மா. பத்தொன்பது தான் ஆச்சு” என்று திருத்தினாள்.

“ ரொம்ப முக்கியம்! இவ்ளோ நேரம் நான் சொன்னதுல உன் மரமண்டைக்கு எட்டுனது இதானா? எல்லா வீட்லயும் சின்னது சூட்டிப்பா இருக்கும். இங்கே சின்னது சொங்கியா இருக்கு!”

வேற எதுவும் கேட்காவிட்டாலும் திட்டியது காதை உடனே எட்டும் அல்லவா பிள்ளைகளுக்கு?

“ சின்னது சொங்கினா பெருசு மங்கியா? இரு. அக்கா வந்ததும் போட்டுக் குடுக்கிறேன்”

சூளுரைத்தாள் குருவி.

“ நான் அவளை எப்ப டி அப்படி சொன்னேன்?”

திடுக்கிட்டு அதிர்ச்சியில் வாயில் விரல்களை வைத்தார் லதா.

“ அந்த பயம்” பெருமிதமாக சொல்லிக் கொண்டாள் குருவி.

“ உன்னைப் பார்த்து எவ டி பயந்தா?”

“ பெத்த தாயை அவ இவன்னு மரியாதை இல்லாம சொல்ல மாட்டேன் மா” குருவி அலட்ட இவருக்கு சுவற்றிலேயே முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

“ எந்தப் புண்ணியவான் உனக்கு வாக்கப்படப் போறானோ? அவனைக் காப்பாத்து ஆண்டவா!”

மேல்நோக்கி வேண்டுதலை வைத்தார் லதா.

அதற்கும் மேல் அவர் அறுவைகளைக் கேட்க அவள் ஒன்றும் சும்மா இல்லையே?

கையில் இருந்த வேகவைத்து தாளித்த சிறுபருப்புடன் டிவியில் ஒன்றி சிரிக்க ஆரம்பித்தாள்.

“ இதெல்லாம் எனக்கே மனப்பாடம் ஆகிடுச்சு. இந்த லூசு இப்பதான் முத முதல்ல பாக்கிற மாதிரி பல்லைக் காட்டுது “

தொலைக்காட்சியில் சீரியல் ரியலிட்டி ஷோக்கள் பார்க்க முடியாத ஆதங்கம் அவருக்கு.

இவர் வயித்தெரிச்சல் மின்வாரியத்தில் கேட்டு விட்டது போல. மின்சாரம் தடைபட்டு டிவி பக்கென்று அணைந்து போனது.

“ நல்லா இருப்பா” என்று கரெண்ட் கட் செய்தவனை வாழ்த்திவிட்டு மகளின் முறைப்பைப் பெற்றுக்கொண்டு மகிழ்ந்தார்.

“ இங்கே யார் பொண்ணு யார் அம்மான்னு தெரியலை “ குருவி கூச்சலிட்டாள்.

ஃப்ரிட்ஜில் வைத்து இருந்த ஆரஞ்சு ஜூசை எடுத்து வந்து மகள் கையில் கொடுத்து அவளை அமைதிப் படுத்தினார் லதா.

“ம்ம்”

சமாதானமாகி விட்டாளாம்!

“ அக்கா வந்ததும் அவ கல்யாணத்தைப் பத்தி ஆரம்பி செல்லம். நானா ஆரம்பிக்க கொஞ்சம் பயமா இருக்கு.

நீ தொட்டது துலங்கக் கூடிய ராசிக்காரிடி! என் தங்கம்ல? செல்லம்ல? “

தாஜா செய்த அம்மாவை அசையாமல் பார்த்தாள் குருவி.

இவள் பிறந்த பின்தான் இவள் அப்பா இறந்தார். அதனால் பொதுவாக இவளை ராசி இல்லாதவள் என்றுதான் நினைப்பார்கள்.

ஏன் அவள் கூட அப்படித்தான் நினைத்து இருந்தாள். இன்னும் மனதின் ஓரம் அப்படி ஒரு எண்ணமும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது உண்டுதான்.

முன்பொருமுறை இது குறித்து தாய் மகள் இருவரும் பேசிய உரையாடல்களை நினைத்துப் பார்த்தாள் குருவி.

லதா தன் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி எல்லோரையும் போல பேச்சின் ஊடே ஊடே சொல்வது வழக்கம்.

அன்றும் ஒரு நாள் சிக்கனம் பற்றி சிறப்பு வகுப்பு ஒன்றை எடுத்துவிட்டு இவளுக்கு தோசை சுட்டுப் போட்டுக் கொண்டே சொன்னார்_

“ பெரியவ பிறந்தப்போ ரொம்ப கஷ்டம். வீட்ல இருக்குற பண்ட பாத்திரமெல்லாம் அடகு வச்சிட்டோம்.

ஏதோ மாப்பிள்ளை மரியாதையை குறைச்சு கொடுத்திட்டார்ன்னு நம்ம தாத்தாகிட்ட கொடுக்கல் வாங்கல் வச்சுக்க கூடாதுன்னு ஒத்தைக் கால்ல நின்னார் உங்கப்பா.

அதனால் தாத்தகிட்ட ஒன்னும் கேக்க முடியலை. தாத்தாவா ஏதாவது செஞ்சாலும் என்னை கொண்டு பொய் திருப்பி கொடுக்க சொல்லுவார் உங்கப்பா.

தாத்தாவும் எவ்வளவோ ஒளிச்சு மறைச்சு நமக்கு உதவி செய்யும். ஆனாலும் ரேசன் அரிசி சாப்பாட்டை மிளகாய் வத்தலை சுட்டு சாப்பிட்டாலும் பத்தாக்குறையாவே இருந்துது “

குருவி இடையிட்டு விட்டாள்.

“ ஒரு பொண்டாட்டி ஒரு பிள்ளையை வச்சு காலம் தள்ள முடியாத அளவு அப்படி என்னத்தைதான் வெட்டி முறிச்சார் எங்கப்பா?”

அவள் கன்னத்தில் இடித்த லதா செல்லமாக முறைத்தார் சின்ன மகளை.

“ அப்பா மில்லுல வேலை செய்தது தெரியும்ல? அந்த மில்லு நல்லாத்தான் ஓடுச்சு. இவர் மேனேஜர். அதான் எங்கப்பா பொண்ணை குடுத்தார். அப்புறம் ஏதோ பிரச்சனையில மில்லை இழுத்து மூடிட்டாங்க.

உங்கப்பாவுக்கு பரம்பரை சொத்து இருந்துச்சு. இன்னும் இருக்கு. எல்லாம் பங்குல கிடக்கு. அது வந்தா உண்டு. வராட்டி இல்ல.

ஆனா அப்போ இதைப்பத்தி யோசிக்க கூட முடியலை. உங்கப்பா வேலை பிரச்சனையில் ரொம்ப நொந்து போய் இருந்தாரு.

அந்த நேரம் எங்கப்பா சாதாரணமா ஒரு கல்யாண வீட்டுக்கு 'மெதுவா வாங்க 'ன்னு சொல்லப் போக இவருக்கு எப்படா வரலாம்ன்னு துடிச்சிட்டு இருந்த ரோசம் ஒடியாந்துட்டு.

‘கல்யாணத்துக்கு மொய் குறைவா வைக்கிறேன்னு சொன்னதால தானே மெதுவா வர சொல்றாரு ‘ அப்டின்னு ஆரம்பிச்சு ஒரே அடியா எங்க அப்பாவை தள்ளி வச்சிட்டாரு “

பெருமூச்சு விட்டார் லதா.


“ ஆமா. உங்க வீர தீர கதைகளை எல்லாம் பெருசா சொல்ல வந்திட்டீங்க. எத்தனை தடவைதான் நானும் இந்த இத்துப் போன கதையைக் கேக்குறது? உங்க பற்றாக்குறை பட்ஜெட் பத்தி ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே? அதை சொல்லுங்க”

“ ஒன்னு போதும்ன்னு சொன்னேன். கேட்டானா உங்கப்பன்?” என்று குருவியை குமட்டிலேயே குத்தினார் லதா.

“ சாப்பிட விடும்மா. அது சரி, எந்த ஒன்னு?”

“ நீ தட்டைப் பாத்து தின்னு. வந்துட்டா பெருசா!”

“ நீ சொல்ல வந்ததை சொல்லு. அப்படியே இட்லிப்பொடி எடுத்து குடும்மா”

முனுமுனுத்துக் கொண்டே செய்தாலும் மகளை மனதுக்குள் கொஞ்சினார் லதா.

‘ எப்டி கிடுக்கு புடுக்குன்னு வீட்டுக்குள்ள ஓடிட்டு இருந்த சின்ன குட்டி? இன்னிக்கு வாயைப் பாரு!’

அம்மா திட்டினால் ரோசம் வராது. அதை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பிறரின் சின்ன கண்டனப் பார்வையை கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதன்படி அம்மாவின் குறைகூறல்களை கண்டு கொள்ளாமல் தோசையை பாத்திகட்டி உள்ளே இறக்கிக் கொண்டு இருந்தாள் குருவி.

“ அதாண்டி, பெரியவ பிறந்தப்ப ரொம்ப கஷ்டம் . அப்போ அப்பா வேலைக்கு போய்கிட்டு இருந்தாலும் பாதி சம்பளம்தான் குடுத்தாங்க. பிள்ளை பேறு பிறந்த வீட்ல பார்த்து தாத்தா ஆறுமாசம் கழிச்சுதான் அனுப்பினார். “

“ ஓ! அப்போ அந்த ஆறு மாச சம்பளமும் மிச்சம் தானே அப்பாவுக்கு?”

“ மிச்சம்தான். ஆனா அதை அவர் கூட வேலை பாக்கிறவங்களுக்கு கொடுப்பார். ஏன்னா அவங்களுக்கு பாதி சம்பளம் தானே? இவர் வீட்ல செலவில்லன்னு சம்பளத்தை தூக்கி கொடுத்திருவாரு”

“ தாத்தா தப்பு பண்ணிட்டாரும்மா”

“ஏண்டி?”

“ கிளியை வளத்து இப்படி குரங்கு கையில குடுத்திட்டார்?”

“ அந்த குரங்கு பெத்த குட்டி தாண்டி நீ”


“ எப்டியோ குரங்குன்னு ஒத்துகிட்டா சரிதான். அப்புறம்?”

“அப்புறம் என்ன? வீடு வாடகை வீடு. உங்க பாட்டி _ அதான் உங்க அப்பாவோட அம்மா …”

“ உன் மாமியாக் கிழவி”

“ அதுதான். அது இங்கேயும் கிராமத்திலேயும் மாறி மாறி இருக்கும். எப்போ வரும்ன்னு தெரியாது. திடீர்ன்னு பொட்டிய கட்டிட்டு வந்து நிக்கும்.

வரும்போது தோட்டத்துல பறிச்ச சின்ன வெங்காயம் வேர்க்கடலை எல்லாம் கொண்டு வரும். ஆனா கூடவே வக்கணை பேசுற வாயையும் கொண்டு வரும்.

உங்க அப்பா, அம்மா முன்னாடி கஷ்டத்தை காட்டக் கூடாதுங்கிறதுக்காக நிரவி செய்வார். ஆனாலும் கிழவி சந்தேகமாகவே பாக்கும் என்னை.

எப்டியோ போய் சேர்ந்து ருச்சு. இருந்து இருந்தா இன்னிக்கு எனக்கு ஒரு ஏந்தலா ( உதவியா) இருந்து இருக்கும். நானும் பொம்பளை பிள்ளைகளை வச்சுகிட்டு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு அலையுறேன். “

“ அடாடாடா. சும்மா இதே புலம்பல். வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு அலையுறேன் ,வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு அலையுறேன், அப்டின்னு . உங்களை யாரு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு அலைய சொன்னது? ஃப்ரீயா அலைய வேண்டியதுதானே? “
“ நீ பேசுவடி! நாளைக்கு நீயும் பொம்பளை பிள்ளைகளை பெத்து பாரு. அப்போ தெரியும் !”

“ நீயும் பாரு. என் பிள்ளைகளை எவ்ளோ ஜாலியா வளக்கிறேன்னு “

லதா சிரித்துக் கொண்டார்.

“ அப்படியே இருக்கட்டும் “

“ஒவ்வொரு தடவையும் கேக்கணுமா மா? அப்புறம் என்ன ஆச்சு?”

“ என் கதையை எத்தனை தடவை சொன்னாலும் திரும்ப திரும்ப கேக்குற நீ. இதுல இந்த சலிப்பு வேறயா?”

“ இந்தக் கதை இதுக்கு முன்ன சொன்னதில்லயே?”

குருவியும் வாயில் தோசையை அடைத்துக் கொண்டு பேசினாள்.

இட்டலிப்பொடியும் நல்லெண்ணையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டே மீண்டும் தன் போக்கில் பேசத் துவங்கினார் லதா.

“ அப்புறம் நீ பிறந்த !”

“ என்னாச்சு? வீட்டு கஷ்டம் எல்லாம் தீர்ந்துருச்சா? “
ஆவலுடன் கேட்டிருந்தாள் குருவி.

“ ம்ம்… அடகு வச்சிருந்த பாத்திரத்தை எல்லாம் வித்திட்டோம் “

“ மா” கால்களை தரையில் உதைத்தாள் மகள்.

“ அப்படி செய்யக் கூடாது மா. பூமாதேவியை மதிக்கணும் “

“ வேற யாரை மிதிக்கிறது?”
“ உனக்கு வரப்போற புருஷனை மிதி”

“ பெத்த தாயா நீ? பெத்த பேய்!”

“ அடிப் போடி”

லதா சிலுப்பிக் கொண்டு காஸ் அடுப்பை அணைத்தார்.

“மா! போதும்னு நான் சொன்னனா?”

“ சரி சொல்லு”

“ சொல்ல மாட்டேன்.”

“ சரி சொல்லாதே. பத்து தோசை பத்தாதோ? இன்னும் வேணும்னா சுட்டு தின்னு “

“ எனக்கு அம்மாவா வந்து வாய்ச்சியே?”

“ எனக்கு புள்ளையா வந்து வாய்ச்சியே?”

லதாவுக்கு குருவியிடம் சரிக்கு சரி பேசுவதில் ஒரு சந்தோசம், நிம்மதி உண்டு. அவள்தான் இவரின் மாமியாரை உரித்துக் கொண்டு பிறந்து இருந்தாள் அல்லவா?
இவரின் மாமியாரை போலவே இவளுக்கும் கண் பழுப்புநிறம்.

மகள் என்ற அன்பும் மாமியார் என்ற வம்பும் குருவியிடம் பேசும்போது லதாவின் வெளிப்படும்.

குருவி அதற்க்கெல்லாம் அலட்டிக் கொள்ள மாட்டாள்.

“ அவளுக்கென்ன? ஏழுரையும் வித்து இடுப்புல சொருகிக்குவா!”
சின்ன மகளைப் பற்றி லதாவின் பெருமித சலிப்பு இது.

குருவி அடுத்து ஒரு பெரிய டம்பளர் ஆரஞ்சு ஜூசை குடித்து விட்டு அமைதி ஆனாள்.

இப்போது தன் முகத்தை ஆவலாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் அன்னையிடம் சமாதானமாக பேச முடிவெடுத்தாள் குருவி.

“ சரி அக்கா கிட்ட பேசறேன். ஆமா மாப்பிள்ளை யாரு?”

“ அதுலாம் நாங்க பார்த்துக்கிடுவோம். சின்ன பிள்ளையா லட்சணமா சொன்னதை செய். போதும் “
வெடுக்கென்று கடித்து வைத்தார் லதா.

“ ஏது? அப்போ சின்ன பிள்ளைகிட்ட எதுக்கு இதெல்லாம் பேச சொல்றீங்க?”

“வாயை மூடிக்கிட்டு சொன்னதை செய்”

லதா எழுந்து சென்றுவிட அடுத்து அக்காவின் அடிதடியை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையுடன் சிறு பயற்றை வாயில் போட்டாள் குருவி.




























.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அம்மாவும் பொண்ணும் பேசிகிட்டது.... 😂

அவங்க அக்கா கல்யாண விஷயம் பேசுறதுல எவ்ளோ பயம்.... Y....🤔

நைஸ் எபி dr... ❤
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
அம்மாவும் பொண்ணும் பேசிகிட்டது.... 😂

அவங்க அக்கா கல்யாண விஷயம் பேசுறதுல எவ்ளோ பயம்.... Y....🤔

நைஸ் எபி dr... ❤
கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி ❤❤❤❤
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top