பார்வையே ரம்மியமாய் - 4

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#1
பார்வை - 4

அந்த செல்போன் கோபுரத்தைத் தொடர்ந்து கட்ட விடாமல் தடுத்து நிறுத்துவதற்குள் பிரபாகரனின் மூத்த மாமா நடேசனுக்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாற் போல் ஆனது. அவ்வளவு எளிதில் அந்த செல்போன் நிறுவனம் அவர்களுடைய கட்டுமானத்தை நிறுத்த முன் வரவில்லை.

பிரபாவோ 'அது உன் பாடு' எனும் விதமாக எதிலும் தலையிடவே இல்லை. ஆனால் அந்த செல்போன் டவர் அங்கு இருக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். நடேசன் படாதபாடு பட்டு அந்த செல்போன் டவரை எடுக்க வைத்தார். இதற்கே ஒரு மாத காலம் முற்றிலும் கடந்திருந்தது.

தான் பிரபாவுடைய நலன் கருதி செய்த ஒரு செயலை அவன் அவமதித்தது மட்டுமல்லாமல், அதற்காக முன் பின் தெரியாதவர்களிடம் எல்லாம் தன்னைக் கீழிறங்கிப் போகச் செய்துவிட்டானே என்று பிரபாவின் மீது கடுங்கோபத்தில் இருந்தார் நடேசன்.

நடேசன் மட்டுமல்ல மற்ற இரண்டு அக்காவின் கணவர்களும் கூட பிரபாவின் மீது கோபமாகத் தான் இருந்தார்கள். கழிவு நீர் வெளியேற்றம், மழை நீர் சேகரிப்புப் போன்ற விடயங்கள் கட்டமைப்பில் இரண்டாவது மாமாவுக்கும் பிரபாவுக்கும் முட்டிக் கொண்டது.

அவரிடம் தானே பிரபா வீடு கட்டும் பொறுப்பை விட்டுச் சென்றிருந்தான். எனவே அது தொடர்பான கேள்விகளை அவரிடம் தானே கேட்க முடியும். பிரபாவிற்கு அத்தியாவசியமாகத் தோன்றுவதெல்லாம் அவருக்கு அநாவசியமாகத் தோன்றியது காலக் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்.

மூன்றாவது அக்காவின் கணவர் தனக்கெனத் தனியாக ஒரு மெக்கானிக் ஷாப்பை வீட்டுக்கு முன்பாக வைத்துக் கொள்ளப் போவதாகக் கூற, பிரபா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மூன்றாவது அக்காவுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். மற்ற இரண்டு அக்காக்களுக்கும் ஆளுக்கொருப் பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அதைக் காரணமாகக் கூறி, 'பெண் பிள்ளைகள் வளரும் வீட்டில் இதெல்லாம் வேண்டாம். தேவையில்லாதப் பிரச்சனைகள் வரலாம்' எனக் கூறி மறுத்திருந்தான்.

அதோடல்லாமல் 'இந்த இடமும் இன்னும் அந்தளவுக்கு வளர்ச்சியடையவில்லை. உங்களுக்கு டவுனுக்குள் வேறு இடம் பார்க்கலாம் மாமா' என்றும் கூறியிருந்தான். 'அது எனக்குத் தெரியாதா' என்று முறுக்கிக் கொண்டு திரிபவரிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் பிரபாவும் அத்தோடு விட்டுவிட்டான்.

இவ்வாறாக மூன்று மாமன்மார்களும் பிரபாவின் மீது ஏகக் கடுப்போடு இருந்த மிக நல்ல தருணத்தில் தான், சுந்தரவடிவு பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த பெண்ணின் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்து முடித்தார். இரண்டு ஜாதகமும் நன்றாகப் பொருந்தி இருந்தது.

முறைப்படி அதைத் தன் மகள்கள் மற்றும் மருமகன்களிடமும் தெரிவிக்கத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தத் தருணமும் அமைந்தது.

அன்று இரண்டாவது மகள் வயிற்றுப் பேரனுக்குப் பிறந்த நாள். சிறுவனுக்கு நண்பர்களை அழைத்துக் கேக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாட ஆசை. இம்முறை மாமன் வீட்டிலிருக்கும் பொழுது பிறந்த நாள் வந்ததால் அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டது அந்தப் புத்திசாலி வாண்டு.

அவன் விருப்பப்படியே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்த பின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமாக மொட்டை மாடியில் நிலவொளியில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். மெல்ல சுந்தரவடிவு பேச்சைத் தொடங்கினார்.

"மாப்பிள்ளைக எல்லாரும் ஒன்னா இருக்கீக. இங்கனயே நான் விசயத்தை சொல்லிடறேன். நம்ம பிரபாவுக்கு பொள்ளாச்சியிலிருந்து ஒரு வரன் வந்திருக்கு."

"பொள்ளாச்சியாஆஆஆ... அதெல்லாம் சரி வராது அத்தை. ஆரு இங்கனயிருந்து அம்புட்டுத் தொலவு போயாரது? அதெல்லாஞ் சரிப்படாது" சுந்தரவடிவு முடிக்கும் முன்னமே முந்திக் கொண்டார் மூத்த மாப்பிள்ளை.

"ஏங்க செத்த இருங்க. அம்மா என்னதான் சொல்றாகென்டு கேட்போமே" மூத்த உடன்பிறப்புத் தன் கடமையை செவ்வனே செய்து முடித்தது. "ம்க்கூம்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவருடைய மணாளன்.

"கொஞ்சம் தொலவுதேன் மாப்புள. ஆனா நமக்குத் தூரத்து உறவு முறைக்காரவுக அதேன்..." என்று இழுத்தார் சுந்தரவடிவு.

"தூரத்து சொந்தமென்டா எம்புட்டுத் தூரமென்டு தெளிவா சொல்லிப்புடு சித்தி" என்றான் பாண்டி.

"நம்ம மாணிக்கம் அண்ணேன் இருக்காகல்ல அவுகளோட பொஞ்சாதி வழிச் சொந்தம். பொள்ளாச்சிப் பக்கம் பெரிய சமீன்தார் குடும்பமாம். சாரிச்ச வரைக்கும் நல்ல விதமாத்தேன் சொல்றாக.

அதேன் நீங்க எல்லாம் உங்களுக்கு என்னைக்கு உங்களுக்குத் தோதுப்படுமென்டு சொன்னீகன்னா நாம போய் பொண்ணு பார்த்துட்டு வரலாம்" ஒருவழியாக விஷயத்தைச் சொல்லி முடித்துவிட்டார் சுந்தரவடிவு.

"இதுக்கு எதுக்கு அம்புட்டுத் தொலைவு போகணுங்குறேன்? அதேன் என் அக்கா மவ இருக்காள்ல்ல? அவளையே பரிசம் போட்றுவோம்" என்றார் இரண்டாவது மாப்பிள்ளை.

"நீ மட்டும் உன் அக்கா மகளைக் கட்டாம வெளியில நல்ல புள்ளயா பார்த்துக் கட்டிக்கிடுவ. நாங்க மட்டும் கட்டிக்கிடணுமாக்கும். என்ன ஒரு நல்லெண்ணம்" என்று பாண்டி முணுமுணுக்க அவனுக்கு ஒரு முறைப்பான பார்வைப் பரிசாகக் கிடைத்தது இரண்டாவது அக்கா தனத்திடமிருந்து.

"இங்காருங்க அத்தே இந்த சமீன்தார் வூட்டுப் புள்ள எல்லாஞ் சரிப்படாது. உங்க மகனை அப்படியே வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டுப் போயிறுவாக. அப்புறம் உங்க மகன் இருந்தும் இல்லாத மாதிரிதேன் பார்த்திக்கிடுங்க" இலவச ஆலோசனை வழங்கியது மூன்றாவது மருமகன்.

"ஆமாம்மா எனக்கென்னவோ மாமா சொல்றது தான் சரின்னு தோனுது. நாம எதுக்கும் வேற இடமா பார்ப்போமே" என்று சொன்ன பிரபாகரனை வெட்டவா குத்தவா என்பது போல அவனுடைய தாயாரும் தமக்கைகளும் பார்த்து வைக்க, மெல்ல அந்த இடத்திலிருந்து பாண்டியுடன் சேர்ந்து நழுவிவிட்டான் பிரபாகரன்.

இருவரும் சென்ற பிறகு, மூன்று மாப்பிள்ளைகளும் கூட ஒருவர் பின் ஒருவராகக் கீழிறங்கிச் சென்று விட மகள்களுடன் தனித்துப் பேச இடம் கிடைத்தது சுந்தரவடிவுக்கு.

"என்னங்கடி இது இந்தப் பய இந்தப் பாடு படுத்துறான். பொம்பளைப் பிள்ளைக உங்களுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுக்கக் கூட நான் இம்புட்டுக் கஷ்டப்படலை. ஆனா இந்தப் பய என்னைய ஒரு வழி ஆக்காம விட மாட்டான் போலயே.

நானும் கெஞ்சிப் பார்த்துட்டேன். திட்டிப் பார்த்துட்டேன். அழுதுங் கூடப் பார்த்துட்டேன். ஒன்னத்துக்கும் புடி கொடுக்க மாட்டேங்குறான். உங்க அப்பத்தா இருந்திருந்தாலாவதுப் பேசிப் பேசியே அவனை வழிக்குக் கொண்டு வந்துருவாக. மவராசி என்னைய இப்படித் தனியா பொலம்ப வுட்டுட்டு அவியளும் போய்ச் சேர்ந்துட்டாக.

பொண்ணைப் போய் பார்த்ததுக்கப்புறம் புடிக்கலைன்டு சொன்னா கூட ஒத்துக்கலாம். இப்படி போட்டோவைக் கூடப் பார்க்காமப் புடிவாதம் புடிக்கிறவனை என்னதேன் பண்றது?" தன்பாட்டில் புலம்பத் தொடங்கிவிட்டார் சுந்தரவடிவு.

"எம்மா தம்பி போன டிரிப்பு வந்தப்ப சொல்லுச்சே அவுக கேப்டனோ ஆரோ கப்பலுக்குப் போன எடத்துல ஒரு வெளிநாட்டுப் புள்ளய காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டதா. அதேன்மா நம்ம நாலு பேரையும் உக்கார வைச்சு கதை கதையா சொன்னுச்சே, மறந்துட்டீகளாக்கும்?

அந்த மாதிரி நம்ம தம்பியும் ஆராவது வெளி நாட்டுப் புள்ளயைக் காதலிக்குமோ? அதை சொல்ல சங்கடப் பட்டுக்கிட்டுதேன் இப்புடி புடி கொடுக்காம இருக்குதோ?" என்றார் மூத்த மகள் தங்கம்.

"நம்ம தம்பி அப்படியெல்லாம் பண்ணாதுக்கா" என்று ஒருமித்தக் குரலில் கூறினார்கள் இளையவர்கள் இருவரும்.

"அப்படி அவன் யாரையாச்சும் விரும்பினா கூட பரவாயில்லயே. சாம் சாமென்டு நான் கல்யாணம் பண்ணி வைப்பேனே. அப்படி எதாவது இருக்கான்டு நீங்க மூணு பேரும் சேர்ந்து கொஞ்சம் நயமா சாரிச்சு சொல்லுங்கடி. புண்ணியமா போகும் உங்களுக்கு" என்றார் சுந்தரவடிவு.

"ஏம்மா தம்பி அப்படி வெள்ளைக்காரியைக் கட்டிக்கிறதுல உனக்கு வருத்தம் இல்லையா?" சொர்ணத்திடமிருந்து வந்தது இந்தக் கேள்வி.

"எனக்குத் தேவை எல்லாம் அவன் கல்யாணம் முடிஞ்சு குடும்பம், புள்ள குட்டியென்டு சந்தோசமா இருக்கணும். அம்புட்டுத்தேன். வாராவ யாரா இருந்தா என்ன? அவ என்னைய தாங்க வேண்டாம். என் மகனுக்குப் புடிச்சவங்குற ஒரே காரணத்துக்காகவே நான் அவளைத் தங்கத் தட்டுல வைச்சுத் தாங்க மாட்டேனா?" வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அவருடைய அடி மனதிலிருந்து வந்த வார்த்தைகளில் மகள்கள் மூவரும் கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்கள்.

"நீ ஒன்னும் கவலைப்படாதம்மா. அதேன் பாண்டிப்பய கூப்புட்டுப் போயிருக்கான்ல்ல. அவஞ் சொன்னா நம்ம தம்பி கேட்டுக்கும்மா. இல்லாட்டி திரும்ப ஒருக்கா காலையில நாமளே தம்பிக்கிட்ட பேசுவோம்மா" என்று மகள்கள் மூவரும் சேர்ந்துத் தாயாருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தார்கள்.

**********************
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#2
பாண்டியும் பிரபாவும் ஆளில்லா அந்த ரோட்டில் நடை பயின்று கொண்டு இருந்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முதலில் மௌனத்தை உடைத்தது பாண்டிதான்.

"ஏன் மாப்பி ஆரம்பத்துலயிருந்து இந்த சம்பந்தம் வேண்டான்டே சொல்லிக்கிட்டு இருக்க? உனக்குப் புடிக்கலையா? புள்ளவூட்டு போட்டோவைப் பார்த்தியா?" என்று பாண்டி வினவ,

"அதெல்லாம் நான் எந்த போட்டோவும் பார்க்கலை மாப்பி. எனக்கென்னவோ ஆரம்பத்துலேயே இது சரிவராதென்டு தோனிடுச்சு. அவ்வளவு பெரிய வீட்டுப் புள்ள இங்கன எல்லாம் வந்து இருக்குமாடா?

எத்தனை நாள்தான் பாண்டி பணத்துக்குப் பின்னாடியே ஒடுறது? எனக்கு விவசாயந்தேன் என் கனவு, லெட்சியம் எல்லாமே பாண்டி. அதுக்கு எனக்கு ஒத்துழைக்கிற புள்ளயா கட்டுனாத்தேன் வாழ்க்கை சிக்கலில்லாம போகும். இந்தப் புள்ள அதுக்குச் சரிவருமென்டு எனக்குத் தோனலைடா" என்றான் பிரபா.

"இப்ப என்ன, உனக்கு நயன்தாரா வேணாம். தேன்மொழி கனிமொழியென்டு எவளாவது ஒருத்தி வாய்க்கா வரப்புல திரியிறவதேன் வேணுமாக்கும்" நக்கலாக வினவினான் பாண்டி.

பாண்டியின் தோளில் கையைப் போட்டு அவன் கழுத்தோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்ட பிரபா, "இந்த நக்கலுதான வேண்டாங்குறது" என்று கடுப்படிக்க,

"அடேய் விடுறா என்னைய. ஒரு அறியா புள்ளைய கழுத்தை நசுக்கிக் கொன்னுப்புடாத" என்றவாறே ஒருவழியாக பிரபாவின் கிடுக்கிப் பிடியில் இருந்து நழுவிக் கொண்டான் பாண்டி.

"இங்காரு பிரபா இத்தன நாளுந்தேன் சித்தி பொண்ணு பார்த்துச்சு. ஆனா அது சரியில்ல இது சரியில்லையென்டு சொல்லி சித்தியே பாதிய தட்டிக் கழிச்சிரும். அதுவும் மீறி ஒத்து வந்தா உன் மாமனுங்க ஒருக்கா ஃபில்டர் பண்ணுவானுங்க.

எல்லாத்தையும் தாண்டி வந்தா அந்த பொண்ணு வூட்டுக்காரங்களே எங்களுக்குக் கப்பல்ல வேலை பார்க்குற மாப்பிள்ளை வேண்டாமென்றுவாக. இப்படியே போயிக்கிட்டே இருந்தா இதுக்கு முடிவுதேன் என்ன மாப்பி? பொண்ணைப் பார்க்காமலேயே நீயா ஒரு முடிவுக்கு வராதடா.

உனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதா இல்லையா? காலா காலத்துல இதையெல்லாம் நடத்தி முடிச்சுப்புடணும் மாப்பி. அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுப் புத்தியோட பொழச்சுக்க ஆமா" நண்பனின் வாழ்க்கையில் தனக்கிருக்கும் அக்கறையை வார்த்தைகளில் நிரூபித்து இருந்தான் பாண்டி.

பாண்டி சொல்வது ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக பிரபாவுக்கும் தோன்ற, "இப்ப என்னைய என்னதேன் மாப்பி பண்ணச் சொல்லுற?" என்று ஒருவழியாக இறங்கி வந்தான் பிரபா.

"அப்படிக் கேளு. இப்ப நேரா வீட்டுக்குப் போவோம். எப்படியும் சித்தி உனக்கு ஒரு மண்டகப்படி வைச்சிருக்கும். அதைக் காது குளிர கேட்டு ரசிக்கிறோம். அப்புறஞ் சித்தி மனசு குளிர அந்தப் புள்ளயைப் போய் பொண்ணு பார்த்துட்டு வாரோம். நேர்ல பார்த்தும் உனக்குச் சரி வராதென்டு தோனுச்சுன்னா என்ன செய்றதென்டு யோசிப்போம். இப்ப வா முதல்ல வூட்டுக்கு நடையைக் கட்டுவோம்" என்று கூறி பிரபாவையும் இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் பாண்டி.

பாண்டியின் கூற்றைக் கொஞ்சமும் பொய்யாக்காமல் பயங்கர கோபத்துடன் இருந்தார் சுந்தரவடிவு. அது அவர் கதவு திறந்து விடும் வேகத்திலேயே தெரிந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக இருக்கையிலேயே சுந்தரவடிவு ஏதோ பேசத் தொடங்க,

"சித்தி வெயிட். சுப்ரபாதத்தை ஆரம்பிச்சிராத. நான் எல்லாத்தையும் அவங்கிட்ட பேசிட்டேன். அவனும் ஒத்துக்கிட்டான். இப்பப் பேயாமப் போய் அந்தப் புள்ள போட்டோவைக் கொண்டாந்து உன் புள்ள கையில கொடு. அதப் பார்த்துட்டு அவன் ஒரு முடிவு சொல்லட்டும்" என்று கூறி சுந்தரவடிவை உள்ளே அனுப்பி வைத்தான் பாண்டி.

புகைப்படத்தை எடுப்பதற்காக சந்தோஷத்துடன் சுந்தரவடிவு உள்ளே சென்றுவிட, "உன் மாமனுங்களை நம்பிக் கல்யாணத்தை நடத்துற வேலையைத்தேன் தர முடியாது. நிறுத்துற வேலையை நல்லாவே செய்வானுக. அதால இப்போதைக்கு சித்திக்கிட்ட மறுப்பா எதையுஞ் சொல்லி வைக்காதே மாப்பி. நாம பார்த்துக்கலாம்" என்று பிரபாவிடம் சொல்லி வைத்தான் பாண்டி.

புன்னகை முகமாக சுந்தரவடிவு புகைப்படத்துடன் திரும்பி வர, அதை அவரிடமிருந்து கிட்டத்தட்டப் பிடுங்கி முதலில் பார்த்தான் பாண்டி. "சித்தி பரவாயில்லயே நல்லா அம்சமான புள்ளயாதேன் பார்த்திருக்க. காலெண்டருல போட்டிருக்க மகாலெட்சுமி போட்டோ கணக்காவுல்ல இருக்கு இந்தப் புள்ள" என்றான் பாண்டி.

"கண்ணு போடாதடா என் மருமக மேல" என்று சுந்தரவடிவு நொடித்துக் கொள்ள,

"இந்தா மாப்பி, நீ பாரு. பார்த்து ஒரு நல்ல முடிவா எடு. சட்டு புட்டுனு போய் பொண்ணைப் பார்த்துப் பேசி முடிப்போம். சரி சித்த நானும் அப்படியே கெளம்புறேன். வரேன்டா பிரபா" என்று சொல்லிப் பிரபாவிடம் புகைப்படத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டான் பாண்டி.

கையில் புகைப்படத்துடன் தனது அறைக்குள் சென்ற பிரபா, வெகு நேரத் தயக்கத்துக்குப் பின் கவருக்குள் இருந்த புகைப்படத்தை வெளியில் எடுத்துப் பார்த்தான். பார்த்த அடுத்த நொடி பட்டென்று புகைப்படத்தை மறுபுறமாகத் திருப்பிக் கொண்டான். ஏனெனில் அத்தனை அழகாக அந்தப் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் பெண்.

"பிரபா வேண்டான்டா. இந்தப் புள்ளய போய் பார்த்தோம், அந்தப் புள்ளயா பார்த்து நம்மள வேண்டாமென்டு சொன்னாத்தேன் உண்டு. யப்பா என்ன அழகுடா சாமி" பிரபாவின் இதழ்கள் தானாக முணுமுணுத்துக் கொண்டது.

மீனலோசனி குமரப்பன் M.Sc.,

என்று புகைப்படத்தின் பின்புறம் அழகாக, மணிமணியாக எழுதப்பட்ட எழுத்துக்கள் பிரபாவைப் பார்த்து ஏளனமாகக் கைக்கொட்டிச் சிரித்தது.
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#10
மீனலோசனி பிராபாவின் வாழ்க்கையில் வருவாளா?
இடம் பிடிக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன் மணிக்கா 🥰🥰🥰
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top